சிலுவை சுமப்போம் வாருங்கள்

Nothing is/was permanent except change, and those who looked at the future and lived for the future would pass, while those who looked at the past would fail in their life.

வலையுலாத்திய போது கண்ணில் பட்டது மேலே உள்ள வாக்கியம். எனக்கும் எனதுறவாகிய உனக்கும் இன்றைய நிலையில் (வைகாசி 2009) பொருந்தக்கூடியது என்பதால் சுட்டுவிட்டேன்.

பலரின் விரக்திப் பார்வைகள், கதைகள், எமுத்துக்கள், வேதனையைத் தந்தாலும் இப்படியே வாழ முடியாது, வாழக் கூடாது என்பதே யதார்த்தம். எனவே தான் இதை எழுதுவதன் மூலம் நானே எனக்கு சூடுபோட்டுக் கொள்கிறேன், சூட்டின் வடு நான் விட்ட தவறை எனக்கு நான் கரைந்து போகும் வரை உணர்த்திக்கொண்டே இருக்கட்டும்.
உனக்கும் தான்.

பக்திப்பரவசத்திலும், வெற்றிகளின் பெருமிதத்திலும், ஆணவத்திலும் அன்று நாம் யதார்த்தம் உணரவில்லை. எதிரிப் பிணங்களின் எண்ணிக்கையில் புன்னகைத்தோம், நெஞ்சை நிமிர்த்தி ஆணவத்துடன் நடந்தோம்.
யதார்த்தம் புரிந்து எம்மை உரிமையுடன் விமர்சித்தவனை தேசத்துரோகியென்றோம், மீண்டும் மீண்டும் உரிமையுடன் விமர்சித்தவனை மௌனமாக்கினோம். அவனோ வேதனைப் புன்னகையுடன் கரைந்தான்.

யார் தேசத்துரோகி? நானா, நீயா, அல்லது அவனா?
வா மண்டியிடுவோம் அவன் தாயின் பாதங்களில்
நிட்சயம் மன்னிப்பாள்
தாயல்லவா அவள்.

புலத்தில் உயர்ந்த தொடர்மாடி வீட்டில் இருந்து கொண்டு புதிய காரில் பயனித்து, மது சுவைத்து, ருசித்து யதார்த்தம் உணராமல், சுயவிமர்சனமற்று, சொல்லப்பட்ட எல்லாவற்றிற்கும் மந்தைகள் போல் தலையசைத்து, உனது, எனது கருத்தை ஒரு நாளேனும் மேலிடத்திற்கு சொல்லாத நான், நீ, நாம்
இன்று மண்கவ்வி வெட்கித்தலைகுனிந்து நிற்கும் இந் நேரம் கூட மீண்டுமொருமுறை யதார்த்தமுணராமல் இருக்க முனைவது இழிவு.

கேள் சோதரனே கேள்! இம் முறையாவது காது கொடுத்துக் கேள்,
பகிர்… உனது கருத்தைப் பகிர்…
என்னுடன், அவனுடன், அவர்களுடன் பகிர், விமர்சிக்க்கப்பட்டாயானால் உள்ளெடுத்து வளர்
ஆனால் விமர்சித்தவனை வெறுக்காதே.
அவன் விமர்சிப்பதே உன் மேலுள்ள
தோழமையினால் தான்.¨

புதிய தலைமையில் கால்பதிக்க நினைக்கும் சிறுசுகளே, பெருசுகளே சிறியதோர் விண்ணப்பம்
குட்டையை கலக்கி மீன் பிடிக்காதீர்.
சுயநலமற்றதும், ஆயுதகலாச்சாரமற்றதுமான தலைமையைத் தாருங்கள்.

ஒதுக்கப்பட்டவர்களே! தேசத் துரோகிகள் என அழைக்கப்பட்டவர்களே! அமைச்சர்களே, முதலமைச்சர்களே! முன்னாள் அமைச்சர்களே! உரிமையுடன் அன்பான வேண்டுகோள்.

நீங்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம், சொல்லொணாத்துன்பம் கண்டிருக்கலாம், கணப் பொழுதில் உயிர்தப்பியிருக்கலாம்…..
அதன் வலியுணர்ந்தவர் நீங்கள்.

உனது சகோதரனை அதே வலியை உணரச் செய்வது அல்லது அவனுக்கு வலிக்கும் போது நீ மௌனமாயிருப்பது உனது பெருந்தன்மைக்கு அழகல்ல.

பழிவாங்கி வேதனையின் சுழர்ற்சியை தெடராதீர்.

சகோதரா! நிமிர்ந்துபார் காதைக் கூர்மையாக்கு…. பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட ஒரு கவிதையின் ஓர் வரி இது.

“இந்த பிரபஞ்சங்களின் உள்ள எல்லா உயினிங்களும்
சூரியனைப் பார்த்து கையசைத்து மகிழும் போது
எமக்கு மட்டும் ஏனிந்த ஒளி வெறுப்பு
வாருங்கள் நாமும் கையசைத்து மகிழ்வோம்”
-----
இறுதியாக ஓர் வேண்டுகோள் எனதும், உனதும் வாரிசுக்கு என்னையும், உன்னையும், போல் சுயவிமர்சனமின்றி காகம் போல் கரைய கற்றுத்தராதே.
-----
எழு
மண்ணைத்தட்டு
பக்கத்தில் உள்ளவனையும்
கைகொடுத்து எழுப்பு
நடந்து போ
எதிரியென்று ஓரினமில்லை
என உணர்த்தி
கைகுலுக்கு
தட்டிவிடப்பட்டால்
புன்னகைத்து மீண்டும்
கையை நீட்டு
எம் தேசத்தில்
மாண்டு போன மனிதம்
மீண்டு எழும்வரை.

2 comments:

  1. I wish not approve on it. I assume polite post. Expressly the designation attracted me to read the sound story.

    ReplyDelete
  2. Nice post and this fill someone in on helped me alot in my college assignement. Thanks you on your information.

    ReplyDelete

பின்னூட்டங்கள்