போர்க்குற்றவியல் நாள்

போர்க்குற்றவியல் நாள்

இன்று (18.05.2010)போர்க்குற்றவியல் நாள் ஒஸ்லோவில் அனுட்டிக்கப்பட்டது. முள்ளிவாய்காலில் நடைபெற்ற போர்க்குற்றங்களே முதன்மைப்படுத்தப்பட்டன.


ஐ.நா அதிகாரிகளின் புள்ளிவிபரத்தின் படி ஏறத்தாள 40000 மக்கள் கொல்லப்பட்டார்கள். இது தவிர பல விடுதலைப்புலிகள் சரணடைந்த நிலையில் சுட்டுக் கொல்லப்பட்டார்கள். இதுவே இந்த நாள் இன்று அனுட்டிக்கப்படுவதற்கான காரணங்கள் போல் எனக்குத் தெரிகின்றன.

என்னைப் பொறுத்தவரை எனக்கு
போர்க்குற்றவியல் நாள் என்னும் வார்த்தை சில பல சிந்தனைகளை எனக்குள் ஏற்படுத்தியதை ம‌றுப்பதற்கில்லை. அவற்றை பகிர்ந்து கொள்ளவே இதை எழுதுகிறேன்.. இதை பிரசுரிப்பதற்கான நேரம் இதுவா எனலாம் பலர். எனது பதில் ஆம்! என்பதே.
மாற்றுக் கருத்து இருப்பதி்ல் தவறில்லை என்றே நினைக்கிறேன்.

......................


எனக்குள்ளான ரணங்களை மற்றவர்களுடன் சேர்ந்து ஆற்றிக்கொள்வதற்காகவும், உயிரிழந்த சக உறவுகளை நினைவு கூர்ந்து கொள்ளவும் ஒஸ்லோவி்ல் நடைபெற்ற நிகழ்வுக்கு போயிருந்தேன். நிகழ்வின் பெயர்
போர்க்குற்றவியல் நாள் என்பது அங்கு போன பின்பே தெரிந்தது.

போர்க்குற்றவியல் நாள்.......
மெதுவாயும் ஆறுதலாயும் உள் மனதால் மீண்டுமொரு முறை உச்சரியுங்கள்
போர்க்...........குற்ற........
....வியல்...........நாள்.......


போர்க்குற்றவியல் நாள்
போர்க்குற்றவியல் நாள்

உணர்ந்தாயா அச் சொல்லின்
உக்கிரம்..
சோகம்..
வேதனை
ஏக்கம்..
காழ்புணர்ச்சி ..
முக்கியமாய் சுயமழிந்த நிலை


மேற் கொண்டு நீ வாசிக்க முதல்

உன்னை நீ சார்ந்த அமைப்புக்களில் இருந்து ஒரு நிமிடம் விடுவித்துக்கொள்....
இழப்பின் காழ்ப்பணர்ச்சியையும், ஆக்ரோஷத்தையும் சற்றே தள்ளி வை...
உணர்ச்சிகளை சற்றே உதறு...
சற்றே.....மனிதம் பருகு

செய்தாயா?

சரி

நான் கேட்கும் கேள்வி என் மீது உனக்கு தீராத வெறுப்பை ஏற்படுத்தலாம்..
பறவாயில்லை
உறவுக்கு இல்லாத உரிமையா..
திட்டு
காறி உமிழ்
ஏதும் பட்டம் தா
அடி
வெடி வை
என்னவும் செய்

ஆனால் எனக்காக நான் கேக்கும் கேள்வியை
ஆறுதலாய்
மனட்சாட்சியுடன் பேசி
பதில் தா

வேண்டாம் வேண்டாம்
பதில் தராதே...தேடு
தேடி எடுத்து
உன் வாரிசிடம் கொடு
அது காணும் எனக்கு

போர்க்குற்றவியல் என்றும் சொல் சிங்களவனுக்கு மட்டுமா?
எம்கைகள் மட்டும் என்ன இரத்தக்கறையற்றதா?

ஆழமாய் பேசவும் வேண்டாம், விவாதிக்கவும் வேண்டாம் நாம்
இப்போதைக்கு
இது பற்றி

ஆனால்
எமக்குள் நாமே செய்து கொண்ட போர்க்குற்றங்கள்....
தவிர
போர்க்குற்றம் என்னும் சொற்பதத்துக்குள் வராத குற்றங்கள்
எத்தனை எத்தனை

நண்ப...
வா சுயவிமர்சனம் கற்போம்

உறவே..
உன் வலி நானறிவேன்.. நன்கு அறிவேன்
நானும் உன்னைப் போல் மௌனமாய் அழுபவன் தான்.....
இருப்பினும்

மரத்தால் விழுந்தவனை மிதித்ததாம் மாடு
என்பது போல் பேசுகிறேனென்கிறாயா?

இல்லையய்யா... இல்லை
சத்தியமாய் இல்லை
ஏதும் பேசாமல் துயிலும்
என் உயிர்த் தோழனுக்காக
பேசுகிறேன்

அவனும் மாவீரன் தான் உன்னவன் போல்
ஆனால்
உறங்குகிறான்
எம்மால் சூட்டப்பட்ட
துரோகி
என்னும் பட்டத்தோடு

எப்படியிருக்கும் அவன் தாய் மனம்?
அவள் வலி உணர்

இறுதியாய் இரு விண்ணப்பங்கள்

அவனையும் ”மாவீரன்” என்று உரத்துச் சொல்
பெருந்தன்மையாய்

துன்பியல் நிக‌ழ்த்தப்பட்டதால் புலம் பெயர்ந்திருப்பவனிடம்
நேர்மையாய்ச் சொல்
மன்னித்துக்கொள் ”நானா” (அண்ணன்)
என்று

நண்ப....

எழு
மண்ணைத்தட்டு
பக்கத்தில் உள்ளவனையும்
கைகொடுத்து எழுப்பு
நடந்து போ
மனிதத்துக்குள்
எதிரியென்று ஓரினமில்லை
என உணர்த்தி
கைகுலுக்கு
தட்டிவிடப்பட்டால்
புன்னகைத்து மீண்டும்
கையை நீட்டு
எம் தேசத்தில்
மாண்டு போன மனிதம்
மீண்டு எழும்வரை.


வலி மறந்து
மனிதம் படைப்போம்
வா
.

மாற்றம் ஒன்றே நிட்சயமானது2 comments:

 1. அப்ப முஸ்லீங்கள் மட்டக்கிளப்பு அம்பாறையில ஒரு தமிழரையும் கொல்ல இல்லையோ

  காத்தான்குடியில புலிகள் கொன்றது கருணா பிள்ளையான் தலைமையிலதானாமே அவர்கலை காப்பத்துகிறீர்களே அத்தாவுலாதானாமே கருனாவ காப்பத்திபோனவர்

  காத்தான்குடியில எஸ் ரி எப்போட நின்ற ஊர்காவல்காரர் தமிழரோ

  எத்தனை பேர் இப்படி தமிழர் என்று சொல்லிகொண்டு அரசாங்க பரப்புரைக்கு வந்திருக்கிறீர்கள்

  எஸார், நீங்க வேறெ யாரு

  ReplyDelete
 2. யார் சொன்னது இல்லை என்று நண்பரே. நஞ்சற்ற நெஞ்சு வேண்டும் என்றார் என் நண்பரொருவர். அதையே நானும் யாசிக்கிறேன்

  அன்புடன்
  சந்தேகத்துக்கே இடமில்லாத சுத்தமான தமிழன்

  ReplyDelete

பின்னூட்டங்கள்