இவரின் தலையெழுத்தும், அவரின் கையெழுத்தும்

இவ்வருடத்தின் ஆரம்ப மாதங்களில் (மாசி மாதமாயிருக்கலாம்) ஒரு நாள், நான் தினமும் பாவிக்கும் குளிசைகளில் ஒரு விதமான குளிசைகள் முடிந்திருப்பதை இரவு 11 மணிபோலத்தான் அறிந்து கொண்டேன். அது வில்லங்கமான குளிசை என்பதை முன்பு ஒரு தரம் அதை தொடர்ந்து போடாமல் விட்டதால் அறிந்து கொண்டிருந்ததால், உடனேயே வாகனத்தை எடுத்து கொண்டு ஒஸ்லோ நகர மையத்தில் 24 மணிநேரமும் திறந்திருக்கும் மருந்துக் கடைக்கு போகலானேன்.

இரவு நேரமாதலால் நகரம் தன்னை உறக்கத்திற்கு தயாராக்கிக் கொண்டிருந்தது. வாகனத்தரிப்பிடத்தில் வாகனத்தை நிறுத்தி மருந்துக் கடையினுள் புகுந்தேன்.

வரிசையில் சிலர் நின்றிருந்தனர். நானும் அவர்களுக்கு பின்னால் நின்று கொண்டேன். மருந்துக்கடையில் சிப்பந்தி ஒருவர் மட்டுமே இருந்ததனால் வரிசை மிக மிக மெதுவாகவே முன்னேறிக்கொணடிருந்தது.

எனக்குப் பின்னால் இருந்த கதவினை யாரோ திறப்பது தெரிந்தது. திரும்பிப் பார்த்தேன். நடுத்தர வயதுள்ள மனிதர் ஒருவர் மிக அழுக்கான, கிழிந்த உடைகளுடன் உள்ளே வந்தார். அவரைப் பார்த்தவுடனேயே புரிந்தது போதைப்பொருளுக்கு அ‌டிமையானவர் என்று. நி்ற்க முடியாது தள்ளாடியபடி எனக்கு பின்னால் வந்து நின்றார். நான் அசௌகரீயம் உணர்ந்தேன். சற்று தள்ளியும் நின்று கொண்டேன்.

அவரோ என்னைப் பார்த்து மாலை வணக்கம் என்றார். விரும்பாவிட்டாலும் சொல்ல வேண்டிய கட்டாயத்தினால் மாலை வணக்கம் என்றேன். அவரே சம்பாசனையைத் தொடர்ந்தார். கடுங்குளிர் தாங்கமுடியாததாயிருப்பதால் இக்கடைக்குள் அடிக்கடி வந்து போவதாகவும், தற்போது மருந்து வாங்க வந்துள்ளதாகவும் சொன்னார்.

ம்ம் என்று சொல்லி சம்பாசனையை தவித்தேன். அவரோ அதைக் கவனிப்பதாக தெரியவில்லை. கதைத்துக் கொண்டேயிருந்தார்.
ம்ம் என்று நேரத்தை போக்காட்டிக் கொண்டிருந்தேன்.

வரிசையில் எனது சந்தர்ப்பம் வந்தது

மருந்துச் சீட்டை வாங்கிய சிப்பந்தி மருந்தை தேடிப்போனார். கடைக்குள் நாமிருவரும் மட்டுமே நின்றிருந்தோம்.

மருந்திற்கான பணத்தை கொடுப்பதற்காக பணப்பையில் இருந்து நோர்வேஜிய பணம் 200 குரோணர்களுக்கான தாள் பணத்தினை எடுத்து கையில் வைத்திருந்தேன். எனக்குப் பின்னுக்கு நின்றிருந்தவர் எனது கையில் இருந்த பணத்தையே பார்த்தபடி நின்றிருந்தார். எச்சரிக்கை மணியடித்தது எனது மனதுக்குள்.

திடீர் என்று என்னைப் பார்த்து உனது கையில் உள்ள பணம் மிகவும் குறைந்தளவில் அச்சடிக்கப்பட்ட தாள்களில் ஒன்று என்றும் அதில் கையெழுத்திடப்பட்டிருப்பதால் அது மற்றைய 200 தாள்களை விட வித்தியாசமானது என்றும் சொன்னார். அந்த 200 தாளில் உள்ளவர் யார் என்று தெரியுமா என்றும் ஒரு கேள்வியைத் தூக்கிப்போட்டார்.

இல்லை என்று தலையை ஆட்டினேன்.

அவரின் பெயர் Kristian Birkeland (1867 -1917), அவர் நோர்வேயின் முக்கிய பௌதீகவியல் அறிஞர் என்றும், அவர்  Sam Eyde என்னும் பௌதீக அறிஞருடன் சேர்ந்து காற்றில் இருந்து நைதரசனை பிரித்தெடுக்கும் Birkeland-Eyde முறையை கண்டுபிடித்தவர் என்றும் சொல்லி, அவரைப் பற்றி (Kristian Birkeland) ஒரு பெரிய லெக்கசர் அடித்தார்.

எனக்குள் அந்த மனிதரைப் பற்றி நல்ல அபிப்பிராயம் வந்திருந்தது இந்த சில நிமிடங்களுக்கு. அதனால் பேச்சுக் கொடுத்தேன். Kristian Birkeland பற்றி இன்னும் அதிகமான தகவல்கள் தந்தார். Kristian Birkeland இன் மனைவி ஒரு மனநோயாளியாக இருந்ததாகவும், 1906 ஆம் ஆண்டிலேயே அணுவை பிரிக்கலாம் என்று கூறியவர் என்றும் சொன்னார்.

இதற்கிடையில் மருந்துக்கடை சிப்பந்தி வந்து மருந்தைத் தந்தார். நானும் கையிலிருந்த 200 தாளை கொடுத்து மருந்தினைப் பெற்றுக் கொண்டேன்.

கடையிலேயே தண்ணீர் வாங்கி குளிசையை போட்டுக்கொண்டேன். நண்பரும் மருந்து வாங்கி புறப்பட நானும் புறப்பட நேரம் சரியாயிருந்தது.

என்னையறியாமலே உங்களுக்கு இவ்வளவும் எப்படித் தெரியும் என்றேன். நிமிர்ந்து என்னைப் ஊடுருவிப் பார்த்தார்.

அவரைப்பற்றி நான் பல்கலைக்கழகத்தில் பௌதீகவியல் கற்ற பேது கற்றிருக்கிறேன் என்று சொல்லி எனது பதிலை எதிர் பார்க்காமல் வெளியே போய், இரவின் இருட்டில் கரைந்து போனார்.

வெளியில் வந்தேன். கடும் குளிரும், கசப்பான யதார்த்தமும் முகத்திலடிக்க; உருவத்துக்கும், மனிதரிடமுள்ள உள்ளடக்கத்துக்கும் தொடர்பே இல்லை என்பதை வாழ்க்கை மீண்டும் நிறுவிப்போனது.

அன்றைய நாளும் நல்லதே!
----------------

பி.கு: அன்றிலிருந்து இன்று வரை கையெழுத்து அச்சிடப்பட்ட 200  குரோணர் தாள் கிடைக்கிறதா என்று தேடிக்கொண்டிருக்கிறேன்.... கிடைக்குதே இல்லை.


.

6 comments:

  1. உருவத்துக்கும், மனிதரிடமுள்ள உள்ளடக்கத்துக்கும் தொடர்பே இல்லை

    .அனுபவங்கள் பாடம் சொல்லி செல்கின்றன.

    ReplyDelete
  2. தாரிணிOctober 08, 2010 10:18 am

    சஞ்சயன்
    உருவத்துக்கும், மனிதரிடமுள்ள உள்ளடக்கத்துக்கும் தொடர்பு இல்லை என்பதை உங்களின் அனுபவத்தால் நீங்களும் உணர்ந்து எங்களையும் உணர வைத்துள்ளீர்கள். நன்றி.
    நல்ல ஒரு அனுபவம்.
    - தாரிணி

    ReplyDelete
  3. அகத்தின் அறிவு முகத்தில் தெரியாது. சுவையான பதிவு

    ReplyDelete
  4. நூறாவது பதிவை நோக்கி முன்னேறும் உங்களுக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
  5. இது தெரிய இவளவு காலம் தேவைபட்டதா

    ReplyDelete
  6. உங்களின் வருகைக்கும் பின்னூட்டங்களுக்கும் நன்றி நண்பர்களே.

    ReplyDelete

பின்னூட்டங்கள்