குளிர்காலத்து நாட்கள்

இன்று மனுஷ்ய புத்திரனின் அதீதத்தின் ருசி வாசிக்கத்தொடங்கி‌னேன். முன்னுரையில் அவர் குளிர் பற்றி இப்படிக் குறிப்பிடுகிறார். ” கோடைக்கால இரவுகள் நம்மை பரந்த வெளியை நோக்கிச் செலுத்துகின்றன என்றால் இந்தக் குளிர் இரவுகள் நம்மை நம் நினைவுகளின் இதயத்தை நோக்கி திருப்புகின்றன”. இவ் வரிகளை வாசித்ததும் சில நிமிடங்கள் குளிர் பற்றியே சிந்திததுக் கொண்டிருந்தேன். 

மனுஷ்ய புத்திரன் கூறுவது போன்று கோடைகால இரவுகளில் மனம் ஏகாந்தமாய் வெளியே அலைந்து கொண்டிருக்கும். குளிர் கால இரவுகள் சிந்தனையை தூண்டுவதாயும், தனிமையை உணர்த்துவதாயும் இருக்கின்றன. குளிர் நாடொன்றிற்கு இடம் பெயர்ந்த பின்னாலேயே கோடையின் அருமை புரிந்தது. கோடையின் வெம்மை தாங்கமுடியாத நேரங்களில் குளிரின் அருமையும் புரிகிறது. அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது இவ்விடத்திலும் உண்மையாகவே இருக்கிறது.

பனிக்காலங்களில் நிலம் கல்போல் இறுகிப்போகிறது. மணல் கூட கல் போலாகிவிடுகிறது. கோடைக்காலங்கள் இதற்கு எதிர்மாறானவை. குளிர்காலங்களில் நானும் மனதளவில் இறுகிப் போய்விடுகிறேனோ என்று எண்ணத் தோன்றுகிறது எனக்கு. கோடைக்காலங்களில் வந்தமரும் புன்னகையைக் கூட வலிந்தழைத்து இருத்தவேண்டியிருக்கிறது, பனிக்காலங்களில். மனதும் இலகுவாய் இருப்பதில்லை. பனிக்காலங்களில் நாள் பல மணிநேரங்கள் படர்ந்திருக்கும் இருட்டும்  இதற்கு ஒரு முக்கிய காரணமாய் இருக்கலாம். இந்த இருளான பனிக்காலங்களில் பலர் பலத்த மன அழுத்தங்களுக்கு உள்ளாகிறார்கள் என்று கூறப்படுவதில் உண்மை இருக்கத்தான் செய்கிறது.

கோடையில் மனம் கவரும் காட்சிகளைக் கண்டால் நின்று, ரசித்து, அனுபவித்துப் போவேன்.  ஆனால் பனிக்காலத்தில் மனம், சுற்றாடலில் கவனமற்று சென்றடைய வேண்டிய இலக்கு நோக்கி என்னை விரட்டிக்கொண்டிருக்கும். மற்றையவர்களும் குளிருக்குப் பயந்து ஓடுபவர்கள் போல ஓடிக்கொண்டே இருக்கிறார்கள். ஆனால் குழந்தைகள் மட்டும் எப்போதும் போல குளிரைப் பற்றிய எதுவித சிந்தனைகளும் இன்றி தமது குதூகல உலகில் இருந்துகொண்டே இருக்கிறார்கள்.

இலையுதிர்ந்து காய்ந்து போயிருக்கும் மரங்கள், பூக்காத பூமரங்கள், காணாமல் போய் விட்ட குருவிகள், மௌனித்துப் போன மனிதர்கள் என்று குளிர் ஊரையே அமுக்கிப்போடுகிறது, பனிக்காலங்களில். அதற்காக மகிழ்ச்சியான சம்பவங்களோ, மனிதர்களோ இல்லை என்பது தவறு. பனிக்காலத்தை காதலிப்பவர்களும் பலர் இருக்கிறார்கள். ஆனால் என்னால் அவர்களைப்போல் தற்போது குளிர்காலத்தை கடந்து போக முடியாதிருக்கிறது.

குளிருடனான எனது முதல் அனுபவம் மிகவும் கொடியது. நோர்வே வந்து இரண்டாவது நாள் வெப்பநிலை - 40 என்று காட்டிக்கொண்டிருந்தது. மூன்று நாட்களுக்கு முன்பு தான் +40 இல் இருந்து இடம் பெயர்ந்திருந்தேன். நான் நின்றால் குளிர்ந்தது. இருந்தால் குளிர்ந்தது. படுத்தால் குளிர்ந்தது. என்ன செய்தாலும் குளிர்ந்தது. 

அந் நாட்களில் குளியல் மற்றும் கழிப்பறையிலேயே நாம் ஐவர் ஒன்றாய்த் தூங்கினோம். அங்கு மட்டும் தான் தேவையான அளவு வெப்பம் ஹீட்டர் மூலம் கிடைத்தது, தவிர அங்கு நிலத்திலும் ஹீட்டர் இருந்தது. அந்த ஆரம்ப நாட்களின் பின் நான் குளிருடன் மிகவும் நட்பாகிப்போனேன்.

அந் நாட்களில் சிலி நாட்டு மனிதர் ஒருவர் நட்பானார். அவரும் அகதி, நானும் அகதி. நாம் பேசிக்கொள்வதற்கு மொழி இருக்கவில்லை. அவருக்கு தமிழ் தெரியாது. எனக்கு லத்தீன் தெரியாது. எனக்கு தெரிந்திரிருந்த கொஞ்சநஞ்ச ஆங்கிலமும் அவருக்குத் தெரியாது. ஆனால் எப்படியோ பேசிக்கொண்டோம். அவர் தான் குளிருடன் என்னை நட்பாக்கினார். 

தினமும் காலை உணவு முடிந்ததும் மதிய உணவுக்கு காத்திருப்பது, அதன் பின்பு மாலையுணவுக்கு காத்திருப்பது என்பது தான் எமக்கு இருந்த வேலை. சிலர் இவ்வுணவு இடைவேளைகளில் தூங்கி எழுந்தனர். சிலர் சீட்டுக்கட்டுடன் அலைந்தனர். சிலர் பார்த்த படத்தையே திரும்ப திரும்ப பார்த்தனர்.

ஒரு நாள் என்னை அந்த சிலி நாட்டு நண்பர் நடந்து போய் வருவோம் என விரலால் நடப்பது போல சைகைகாட்டி அழைத்தார். அன்று ஏறத்தாள 1 மணிநேரம் நடந்தோம். ஆளையாள் அடிக்கடி பார்த்துச் சிரித்துக்கொண்டோம். தண்ணீர் தாகமெடுத்த போது  வெள்ளை மா போன்றிருந்த உறைபனியை வாய்குள் போட்டுக்கொண்டேன். காலப்போக்கில் எமது நடைப்பயணங்கள் 2, 3 மணி நேரமாக மாறிய போதும் எமக்குள் பேச்சுவார்த்தை நடக்கவில்லை. அப்போதும் ஒருவரை ஒருவர் பார்த்துச் சிரித்துக்கொண்டோம். அந்த நண்பர் பனிச்சறுக்குதலிலும் தேர்ச்சிபெற்றிருந்தார். அவரிடம் பனிச்சறுக்கு பழகிய முதல் நாள் நான் நிமிர்ந்து நின்ற நேரத்தை விட விழுந்து கிடந்த நேரமே அதிகமாயிருந்தது. ஆனால் குளிரை மறந்திருந்தேன்.

வடக்கு நோர்வேயில் கல்விகற்றிருந்த நாட்களில் தொடர்ந்து 5 நாட்கள் பனியிலேயே கூடாரமடித்து தங்கியிருக்க நேர்ந்தது. அப்போதும் குளிர் பற்றி நான் பெரிதாக அலட்டிக்கொள்ளவில்லை.

எனக்குக் குழந்தைகள் என்றாகிய பின் எனது குழ‌ந்தைகள் காவியாயுடனும், அட்சயாவுடனும் பனிக்காலங்களில் பல மணி‌நேரம் குளிருக்குள் நின்றபடியே விளையாடியிருக்கிறேன். அந் நாட்களில் குளிர் அழகாயிருப்பது போலிருந்தது.

இப்போ நோர்வே வந்து 25 வருடங்களின் பின்பும் குளிரை நான் வெறுக்கவில்லை. ஆனால் முன்பு போல ரசிக்கும் தன்மை சற்றே குறைந்திருக்கிறது. வயது தான் காரணமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

குளிரின் போதுதான்  வெம்மையின் சுகம், கம்பளியின் அருமை, பானத்தின் இதம், உடல்களின் ஸ்பரிசம், தேனீரின் சுவை, நெருப்பின் அருகாமை என்பனவற்றின் அருமை புரிகிறது.

இதை எழுதிக்கொண்டிருக்கிறேன், நேரம் நள்ளிரவினைக் கடந்திருக்கிறது. ஒஸ்லோவின் காலநிலை   -14 என்று இணைத்தளமொன்று கூறுகிறது.

நாளைய நா‌ளுக்கு தேவையான கம்பளியினாலான காலுறை, குளிரைத் தாங்கும் உள்ளுடுப்புக்கள், கையுறை, குளிர் தாங்கும் மேலாடை, அதற்கு மேல் அணியும் இன்னொரு மேலாடை, நீளக் காட்சட்டை, கழுத்தைச் சுற்றும் கம்பளிச் சால்வை, ஜக்கட், கம்பளியினாலான தொப்பி, பனிக்காலத்துச் சப்பாத்து ஆகியன கண்ணில் படுகின்றனவா என்று பார்க்கிறேன். மனது நிம்மதியடைகிறது. மின் விளக்கினை அணைத்த பின் அட்சயா தந்த கரடிப்பொம்மையை எடுத்தணைத்துக் கொள்வேன். நினைவுகளும் குளிரை மறக்கவைத்துப் போகும் என்பதனையும் அறிந்திருக்கிறேன்

இன்றைய இரவு எல்லோருக்கும் அழகானதாயிருக்கட்டும்.

இன்றைய நாளும் நல்லதே

7 comments:

  1. இங்கயும் நல்ல குளிர் , 2 to 3 C வரை கூடப் போகும் !!!!

    ReplyDelete
  2. 2 to 3 C இல நமக்கு வேர்க்குமுள...

    ReplyDelete
  3. பதிவு அன்றாட நிகழ்வை சொல்கிறது. வெயிலின் அருமை புரிந்திருக்கும்.இது இருந்தால் அது வேண்டும் அது இருந்தால் இதுவேண்டும்.பூமி சுழல்வதுபோல மனசும் சுழன்றுகொண்டே இருக்கும் இங்கும்(கனடா +8..+2 )இக்குஇடையில் அசாதாரண நிலை காணபடுகிறது சென்ற கிழமைவாட்டி எடுத்து குளிர்

    ReplyDelete
  4. -14 ல் எங்க அழகான இரவு.ஆனாலும் ஐஸ்ல் கால் புதைய நடக்க,முகம் விறைக்க மூக்கைக் காணேல்ல எண்டு தேடக் குளிர்தான் பிடிச்சிருக்கு.பதிவை வாசிக்க இன்னும் குளிராவெல்லோ இருக்கு !

    ReplyDelete
  5. இப்போ எங்களுக்குக் கோடை காலம் என்று பெயர். ஆனால் காணாமப்போன கோடைகாலத்தைத் தேடிக்கொண்டிருக்கிறோம்.

    ஆனாலும் - எல்லாம் போவதில்லை. எப்பவாவது -5 போகும். அது அபூர்வம். ஆனால் அண்டார்ட்டிக் அடிச்சு விரட்டி அனுப்பும் காற்றுதான் பெரிய கொடுமை.

    ReplyDelete
  6. பனிக்கால இரவில் மனதை நெருடும் பதிவு ஆரம்பத்தில் வந்து கஸ்ரப்பட்ட உங்கள் காலத்துடன் ஒப்பிடும் போது இப்போது வந்த நாங்கள் அதிஸ்டசாலிகள் தான் வீட்டில் வெப்பத்தை அதிகம் ஆக்கிவிட்டு போர்த்துக்கிட்டு தூங்க முடியுது. 
    என்றாலும் பாரிஸில் இந்த முறை குளிர் அதிகம் தான் -8 அதிகாலை வேலைதான் கொடுமை என்ன செய்வது போகவேனுமே. காப்பியுடன் ஓட்டம் தான்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்