ஈழத்தின் சோகமும் ஈழத்தமிழனின் அலட்சியமும்

நமது வாழ்க்கையின் வேதனைகள் தான் பெரியவை என்று நினைத்திருப்போம் நாம் அனைவரும். ஆனால் இன்னொருவரின் வேதனைகளை அறியக்கிடைக்கும் போது தான் எமது பிரச்சனைகள் அவர்களுடைய பிரச்சனைகளுடன் ஒப்பிடும் போது மிகவும் சிறியவையாகத் தோன்றும். இருப்பினும் காலப் போக்கில் மற்றவரின் பிரச்சனை மறந்து போய் எமது பிரச்சனை மீண்டும் பூதாகாரமாய் இருக்கும் இல்லையா?

அண்மையில் ஒரு நாள் இணையத்தில் மட்டக்களப்பில் உள்ள ஒரு நண்பருடன் உரையாடியோது ”இங்கே பல முன்னாள் போராளிகள், காயப்பட்டவர்கள் வாழ்வாதாரம் இன்றி இருக்கிறார்கள், உதவிசெய்ய யாரும் இருந்தால் கூறுங்கள்” என்றார் எனது நண்பர். விபரங்களை அனுப்புங்கள் முயற்சிக்கிறேன் என்றேன். மறுநாளே விபரங்கள் மின்னஞ்சலில் வந்திருந்தன.

முன்னாள் பெண்போராளிகள் முவர். ஒருவர் விதவை, 4 வயதுக்குழந்தையுடன் அகதிமுகாம் ஒன்றில் வாழ்கிறார். மற்றயவர் 3 குழந்தைகளின் தாய், கணவரால் நடமாட முடியாது. வருமானம் இல்லை. மூன்றாமவர் கணவர் முள்ளிவாய்க்காலில் காணாமல் போனவர், 3 வயதுக் குழந்தையின் தாய்.

மற்றைய போராளிகளில் ஒருவர் முதுகெலும்பு பகுதியில் செல் துண்டுகள் இருப்பதனால் முதுகெலும்புப் பகுதி பாதிக்கப்பட்டிருக்கிறார். அடிக்கடி வலிப்பு வருகிறது இவருக்கு. இன்னொருவரும் முதுகெலும்பு பாதிப்படைந்ததால் இயங்க முடியாதிருக்கிறார். இன்னும் ஒருவர் யுத்த காலத்தின் போது கை ஏலும்புகள் முறிந்து போனதால் கை இயங்காதிருப்பவர், இரண்டு குழந்தைகளின் தந்தை.

இப்படி பல சோகங்களை பட்டியலிட்டிருந்தது அந்த மின்னஞ்சல். மின்னஞ்சலை வாசித்தும் சற்று நேரம் மனது ஸ்தம்பித்துப்போனது.

முன்பும் ஒரு முறை உடல் அவயவங்களை விற்று வாழ்வாதாரத்தை தேடும் போராளிகளைப் பற்றி எடுதியிருந்தேன். அண்மையில் வாழ்வாதாரமின்றி தற்கொலை செய்து கொண்ட இரு முன்னாள் போராளிகளைப் பற்றி  இணையத்தில் செய்தி வந்திருந்ததை எம்மில் பலர் அறிவார்கள்.

இவை தவிர அடுத்த நேர உணவு என்ன என்று தெரியாது வாழும் எத்தனையோ குடும்பங்கள், குழந்தைகள் ஊரில் இருக்கிறார்கள்.

அண்மையில் முல்லைத்தீவிற்கு சென்றிருந்த நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது இங்கு பல சக்கரநாட்காலிகள் தேவை என்றார். அவரும் விபரங்களை அனுப்பியிருந்தார். 18.000 ருபா இருப்பின் ஒரு சக்கரநாட்காலி ஒழுங்கு செய்து கொடுக்கமுடியும் என்கிறார் அவர்.

மட்டக்களப்பு மாவட்டத்தின் 2010ம் ஆண்டின் புள்ளிவிபரப்படி ஏறத்தாள 50000 குடும்பங்கள் மாதாந்தம்1000க்கு ரூபாய்க்கு  உட்பட்ட வருமானத்தில் வாழ்கிறார்கள் என்றிருந்தது. 1000 ரூபாய் என்பது எவ்வளவு? 15 டொலர், 7பவுன்ஸ், 8யூரோ, 50 குறோணர்கள்
நாம் விரும்பினால் அங்குள்ள ஒரு குடும்பத்தின் வருவாயை 15 டொலர், 7பவுன்ஸ், 8யூரோ, 50 குறோணர்கள். மூலமாக இரட்டிப்பாக்கலாம். வெளிநாடுகளில் வாழ்பவர்களின் ஒருநாள் கைச்செலவு கூட இதை விட பல மடங்கு அதிகமாக இருக்கும் அல்லவா? 

ஒரு பெரும் தளபதியின் மனைவி ஏழ்மையின் காரணமாக, தயவு செய்து எனது குழந்தைகளையாவது தத்தெடுங்கள் என்று வெளிநாட்டு அமைப்பாளர்களை கேட்ட கதையும் இருக்கிறது. அவர்களுக்குக் கூட சிறு உதவி கூட சென்றடையவில்லை என்பதே உண்மை.

பெரும் பொருளாதார வசதி படைத்த பல அமைப்புக்கள் கூட வாய் மூடி இருப்ப‌து பெரும் சோகம்.
மேற் கூறியவற்றைப் பற்றி சிந்தனையோடிய போது,  எனக்கே என்னில் கோபம் வந்தது. அடுத்ததாக தகவல் அறிந்தவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த அமைப்புக்கள் என்ற அனைவரின் மீதும் தார்மீகமான கோபம் இருக்கிறது, எனக்கு.
வறட்டுக் கொளரவத்துடன், வறட்டு அரசியலுடன், யதார்த்தம் மறந்து, பதவிகளுக்காகவும், பணத்துக்காகவும் முன்னாள் போராளிகளைத் தானும் கவனிக்காதவர்களை என்னென்று சொல்வது?  
மூன்றாவதாக எதுவுமே தெரியாதவர்கள் போல் ஊரையும், அதன் வேதனைகளையும் மறந்திருப்பவர்களும் விமர்சிக்கப்படவேண்டியவர்களே.

எத்தனை காலம் தான் இப்படியே இருக்கப்போகிறோம். வெளிநாடுகளில் வாழும் குடும்பங்களில் 50 வீதமான குடும்பங்கள் இலங்கையில் உள்ள ஒரு குடும்பத்திற்கு மாதாந்தத உதவியாக, அல்லது தொழில் அபிவிருத்தி உதவியாக ஒரு சிறு உதவியினைச் செய்தால் ஏறத்தாள 350.000 குடும்பங்களை முன்னேற்ற முடியதா?

நான் ஏதோ யதார்த்தம் உணராமல் கதைப்பதாக நீங்கள் நினைக்கலாம். இல்லவே இல்லை. யுத்தகாலத்தில் புலம் பெயர் மக்களிடையே இருந்த கட்டமைப்புக்கள் எல்லாம் இன்று அவர்களின் நம்பகத்தன்மையை இழந்து, வலுவிழந்துகொண்டு வருவதை நாம் அவதானிக்கக் கூடியதாகவே இருக்கிறது. இதற்கான  காரணங்கள் என்ன? இவற்றைப் பற்றி திறந்த மனதுடன் எவரும் பேசத் தயாராய் இல்லை. போலிக் கௌரவங்களும், பதவிகளும், பணத்தாசையும் சுயவிமர்சனம் செய்து கொள்ளவதை மறுக்கிறது. 
இப்படியான சிக்கல்களை களைவோம் எனின்  எம்மால் எமது மக்களுக்கு உதவ முடியும். அவர்களின் வாழ்வையும் ஓரளவாவது வளமுறச் செய்ய முடியும்.

கடந்த காலங்களை படிப்பினையாகக் கொண்டு முன்நோக்கி நகர வேண்டிய அவசியம் எமக்கு இருக்கிறது. இனியாவது யதார்த்தம்
எது?அரசியற் பிரச்சாரம் எது? என்பதை நாம் அறிந்து கொண்டு, சுயவிமர்சனத்துடன் நகரவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். எதிர்காலச் சந்ததியிடம் புலத்தின் தொடர்புகளை கையளித்து அவர்களை வழிநடாத்த வேண்டிய கடமை எமக்கிருக்கிறது.

வாழ்வாதாரமே இல்லாதிருப்பவனிடம் எதைப் பேசினாலும் அவனது சிந்தனை முழுவதும் அன்றைய உணவினைப் தேடிக்கொள்வதில்  மட்டுமே இருக்கும் என்பதை நான் கூற வேண்டிய அவசியமில்லை. 
எனவே வெளிநாடுகளில் அரசியலை முன்னெடுப்பவர்கள் அதை முன்னெடுக்கட்டும். 
ஆனால் மிக மிக முக்கியமாக உதவிகளை முன்னெடுப்பவர்கள், ஒருங்கிணைப்பவர்களின் தேவையும், உழைப்புமே இன்று எமது மக்களுக்கு இன்றியமையாதவை. 
அவையே எமது சந்ததிகள் வளமுள்ளதாய், கல்வியறிவுள்ளதாய்  உருவாகுமா என்பதனைத் தீர்மானிக்கும். வாழ்வாதாரமுள்ள, கல்வியறிவுள்ள சமுதாயத்தை உருவாக்குவதன் முலம் எமது விடுதலைக்கான பாதையையும் நான் வடிவமைத்துக்கொள்ளலாம்.

நாம் ஒற்றுமையாய் இணைந்து செயற்பட வேண்டிய காலம் இது. என்பதை நாம் மறத்தலாகாது.8 comments:

 1. துயர்! ஈழ சகோதரர்கள் என உருகி உணர்ச்சி பேச்சுகள் கதைக்கும் தமிழக உணர்வாளர்களும் உண்மை நிலையை புரிந்து கொள்ள வேண்டும்

  ReplyDelete
 2. உண்மையில் இதில் கருசனை காட்ட வேண்டிய பாராளமன்ற உறுப்பினர்கள் கூட   கொஞ்சம் கருசனை இன்றி இருப்பதும் கோடிட்டுக்காட்ட வேண்டிய அமைப்புக்கள் எல்லாம் முன்வரவேண்டும்.

  ReplyDelete
 3. எங்களுக்கு இப்படி ஒரு கதியாவென்று மனம் கலங்க வைக்கிறது பதிவு.எனக்குத் தெரிய குழுக்களாக இணைந்து வெளியில் சொல்லிக் கொள்ளாமலேயே சிலர் உதவி செய்துகொண்டுதானிருக்கிறனர் இப்போதும்.ஆனால் போதுமானாதாயில்லையே.அதோடு இதிலும் ஊழல் நடப்பதால் உதவி செய்ய நினைப்பவர்களும் பின்னுக்கு நிற்கிறார்கள் !

  ReplyDelete
 4. இலங்கையில் வாழ்வாதாரமுள்ள கல்வியறிவுள்ள தமிழ்சமுதாயத்தை உருவாக்கினால் இப்போ இலங்கை தமிழர் துன்பங்களை வைத்தே பணம் சம்பாதித்த புலம்பெயர் தமிழர்களின் நிலை என்னாவது?

  ReplyDelete
 5. பதிவைப் படித்து விட்டு தலைப்பால் கருத்து சொல்லாமல் போய் விட்டேன்.ஆனாலும் மனம் பதிவையே அசை போட்டுக்கொண்டு இருந்ததால் மீண்டும் வந்து இந்த பின்னூட்டம்.

  தானும் உதவ மாட்டேன்,உதவுபவர்களையும் உள்ளே விடமாட்டேன் என்ற இலங்கை அரசின் நுண்ணியல் அரசியலே மொத்த பிரச்சினைக்கும் காரணம்.

  வெளி தலையீடு தேவையில்லையென்றால் இலங்கை அரசு பிரச்சினைகளை முழு மனதுடன் தீர்க்க முன் வரவேண்டும்.இல்லையென்றால் அனைத்துலகம் சார்ந்தும் முக்கியமாக புலம்பெயர் தமிழர்கள்,தமிழகம்,சிங்களவர்கள் சார்ந்த முழு நம்பிக்கை பெற்று வட,கிழக்கின் பிரச்சினையை தீர்ப்பதோடு இலங்கையென்ற நாட்டின் பிரச்சினைகளை தீர்க்க முன் வரவேண்டும்.

  இவை தவிர்த்து சீனாவுக்கு ஓடி ஆதரவு தேடுவதும்,அதற்கு பயந்த இந்திய வெளியுறவுக்கொள்கை மீதான இரட்டை நிலை அரசியல் இலங்கைக்கு நீண்ட தீர்வை கொண்டு வராது என்பதோடு தற்போது விசுவரூபமெடுக்கும் பிரச்சினைகளை தீர்க்கவும் உதவாது.

  குஜராத் என்ற இந்திய இறையாண்மை கட்டமைப்புக்குள் உதவுவதில் முதல் நின்ற தமிழகத்திற்கு அக்கரையில் இருக்கும் தமிழ் மொழியாளனுக்கு கரம் கொடுப்பதும் பிரச்சினைகளில் பங்கு கொள்வதும் பெரிய பிரச்சினையல்ல.

  பாரம் சுமக்கும் தமிழர்களுக்கு தோள் கொடுக்க நினைத்தும் இயலாத சூழலுக்கான வருத்தங்களுடன்.

  ReplyDelete
 6. //தானும் உதவ மாட்டேன் உதவுபவர்களையும் உள்ளே விடமாட்டேன்//

  சனத்தின் பணத்தை சுருட்டி ஏப்பம் விட்டவனின் சக்கரை கயிற்றை தமிழக நண்பர் விழுங்கிவிட்டார் என்பது தெளிவாகிறது.

  ReplyDelete
 7. அனானி சகோதரா!முகம் காட்டு.தமிழ் பேசு.

  ReplyDelete
 8. மிகவும் யோசிக்க வேண்டிய விடயம்!!!

  ReplyDelete

பின்னூட்டங்கள்