அப்பாவின் சைக்கில்


செயின் அறுந்து,
டயர் தேய்ந்து,
நெளிந்த மட்காட்டுடன்
வால்டியூப் உருகி
காற்றுப் போயிருந்த சைக்கிலைக் காட்டி
டேய் பெரிய தம்பி
இது இனி
உனக்குத் தான்  என்றார் அப்பா
(அப்படியே கட்டிப்பிடிக்க ஆசையாக இருந்தாலும் பயம் தடுத்தது)

அம்மாவிடம் ஓடி
கெஞ்சிக் கூத்தாடி
காசு வாங்கி
ஏறாவூர் பிள்ளையார் கோயிலடி
பம்மியடியானின் சைக்கில் கடையில்
பழைய செயின் போட்டு
புது வால் டியூப் போட்டு
பெடலுக்கு சன்னம் வைத்து
பச்சை, மஞ்சல், நீல நிறத்தில்
றிம்முக்கு பூ போட்டு
மெயின் றோட், கோயிலடி சுற்றி
அவள் வீட்டருகிலும் ஒரு சுற்றுச் சுற்றி
பால்ய சினேகங்களிடம்
காட்டி விட்டு
வந்த போது
இருட்டத் தொடங்கியிருந்தது
ஏன்டா இவ்வளவு நேரம் என்றார்
அப்பா, வ‌ழமை போல

அடுத்து வந்த புதுவருட கைமுழுத்தக் காசில்
பம்மியடியானிடம் கொடுத்து
கழுவிப் பூட்டி
16 மைல் சைக்கில் ஓடி
பாடசாலை போய் வந்த போது
எனக்கும் சைக்கிலுக்கும்
நெருக்கம் கூடியிருந்தது

சந்திரா ஆன்டி, தம்பிக்கு
புதிய பிளையிங் பிஜின்
சைக்கில் வாங்கிக்‌ கொடுத்த போது
இருந்த எரிச்சல்
அதை கள்ளமாய்
ஓட்டிப் பார்த்து
எனது சைக்கில்
better என்றறிந்த போது
கரைந்து போயிருந்தது

பின்பொரு நாள்
அப்பாவை
டபிள் ஏத்திக் கொண்டு போகும் போது
தம்பி இது 1965 இல்
பொன்னையாவிடமிருந்து
150 ரூபாவுக்கு வாங்கினது
ஒரு ஒட்டும் (welding)
ஓட்டேல்ல
கவனமா பாவி
என்ற போது
நானும், சைக்கிலும் இன்னும் நெருங்கியிருந்தொம்

1980 இல்
அப்பா
கிட்டத்தட்ட 500 ரூபாய்க்கு
புது ரிம்
மட்காட்
செயின் பெட்டி
ஜப்பான் செயின்
ரிம்முக்கு பூ
ஹான்டிலில் புத்தகம் வைக்க சின்ன கரியர்
எல்லாம் வாங்கித் தந்தார்

பம்மியடியான் தான்
பூட்டித் தந்தார்
காற்றில் சருகாய் மாறியிருந்தேன்
அடுத்து வந்த காலங்களில்

மஞ்சல் துணி கொண்டு
தினம் தினம் துடைத்தேன்
கண்ணாடி பூட்டி அழகு பார்த்தேன்
மட்காட்ஐ களட்டி
ரேசிங் சைக்கிலாக்கினேன்
பெயின்ட் அடிப்பித்தேன்
இந்தியன் பிரேக் கட்டை மாத்தி
ஜப்பான் பிரேக் கட்டை போட்டேன்

ஒரு நாள்
அப்பா தன்னை கோயிலடியில்
இறக்கி விடு என்ற போது
100 கிலோ தாண்டும் அப்பா
பஞ்சாய் இருந்தார்
சைக்கில் பாரில்

அடுத்த வருடம்
அப்பா
மாரடைப்பால் போய்ச் சேர்ந்த போது
ஐரிட்டயும்,
கடைக்கும்
அதுக்கும்
இதுக்கும்
ஓடியதும்
அந்தச் சைக்கிலில் தான்

தயாவுக்கு
சைக்கில் ரேஸ் ஓட
சைக்கில் கொடுத்த போது
முதல் 3 மைலுக்கும் முதலாவதாய் வந்து
முடியும் போது கடைசியாய் வந்தான்.
ஏன்டா என்ற போது
சைக்கில் சரியில்லை
என்றான் (ஆடத் தெரியாதவனுக்கு ......போல)

ஆனால் அடுத்த முறை தம்பி ஓடி
மூன்றாவதாய் வந்தான்

16 வயதில்
பால் இனக்கவர்ச்சி வந்த போது
ரோட்டு, கோயில், பஸ் ஸ்டான்ட்
என்று ஓடி
அவளைப் பார்த்துருகி
நின்றதும்
அதே சைக்கிலில் தான்

டியூசனுக்கு போனதும்
சந்தைக்கு போனதும்
படத்துக்கு போனதும்
தங்கையை பள்ளிக்கூடம் கூட்டிக் கொண்டு போனதும்
தம்பிக்கு சைக்கில் பழக்கியதும்
83ம் ஆண்டு சிங்கள நண்பர்களுடன் ஏறாவூரிலிருந்து மூதூர் வரை போனதும்
பாரில் ஒருவன், ஹான்டிலில் ஒருவன், பின்னால் ஒருவன் இவை தவிர நான்
இப்படி புன்னைக்குடா போய் குளித்ததும்
அந்தச் சைக்கிலில் தான்

சைக்கிலில் ஒட்டியிருந்த
புலி ஸ்டிக்கரை
அம்மா பயத்தில் களட்டி எறிந்த போது
அம்மாவுக்கும் எனக்கும்
சண்டை வந்தது

1985 இல்
சைக்கிலைப் பூட்டி வை
களவெடுக்கிறாங்களாம் என்று
அம்மா சொன்ன போது
ஒம் என்று சொல்லி
பூட்ட மறந்து
காலையில்
ஓரெல்லாம் தேடி
ஓய்ந்து
பொலீஸ் ஸ்டேசன் போய்
என்ட்றி போட்டு
நடந்து
வீட்ட வந்த போது
கனத்துக் கிடந்தது
மனமும் காலும்

சோர்ந்து போய்
கதிரையில் விழுந்திருந்த போது
புன்னகைத்துக் கொண்டிருந்தார்
சுவரிருந்த அப்பா

6 comments:

  1. அப்பாவின் சைக்கில்
    கனத்துக் கிடந்தது
    மனமும் காலும்

    ReplyDelete
  2. "இன்றைய நாளும் நல்லதே"
    இப்ப திருப்தியா எஸ். சக்திவேல்? ... ஸப்பா இந்த கங்காரு நாட்டுத் தமிழனின் இம்ச தாங்கமுடியலப்பா..

    ReplyDelete
  3. அருமை.
    வாழ்த்துகள்.

    ReplyDelete
  4. சாதாரண சைக்கிள்தான்.ஆனால் அது ஒரு வாழ்க்கை !

    ReplyDelete
  5. நீங்கள் மட்டும் சரியாகாகக் காய் நகர்த்தினால் "சைக்கிள் காவியம்" என்று இதை விளம்பரப்படுத்தலாம் !!

    ReplyDelete
  6. ஒரு குடும்ப வாழ்க்கையின் வரலாற்றை சுமந்து ஓடிய சைக்கிளின் நினைவுகள் எல்லா மனிதர்களின் சைக்கிள்களையும் நினைக்க வைக்கிறது.

    ReplyDelete

பின்னூட்டங்கள்