தீராக் காமமும் அன்பான மனிதரும்

இன்று மாலை ஏறத்தாள 6 மணிபோல் ஒரு பேரூந்தில் ஏறிய போது ஒரு சோமாலிய நாட்டவர், அஸ்ஸலாமு அலைக்கும் என்றார். நானும் தலையச் சாய்த்து, நெஞ்சில் கையை வைத்து அலைக்கும் அஸ்ஸலாம் என்று வணக்கம் கூறினேன்.

மேற் கூறியதை பேரூந்தில் உட்கார்ந்திருந்த ஒரு ஒரு தமிழர் கண்டார். அவருக்கு வயது ஒரு 50 - 55 இருக்கும். இதனால் என்னை அவர் ஒரு சோமாலியனாக கருதியிருக்கவேண்டும். எனது நிறத்தின் அழகும் , தலையும்  கூட அவருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்காது.

அவர் அருகில் இடம் இருந்ததால் (கடைசி இருக்கை) அவரருகில் உட்கார்ந்து கொண்டேன்.

நான் அவரை கவனிக்காமலே கண்போன போக்கில் பார்த்துக்கொண்டிருந்தேன். பின்னிருக்கையாதலால்அடிக்கடி குலுங்கிக் கொண்டுமிருந்தேன். சிந்தனையும் குலுங்கியபடி எங்கோ அலைந்து கொண்டிருந்தது, வளமைபோல.

”என்னடி ...சாப்பிட்டு படுத்தாச்சே? என்று ஒரு ரொமான்டிக்கான குரல் கேட்ட போது அவரை முழுவதுமாக் கவனித்தேன்.

நம்ம கதையின் கதாநாயகன் ஒரு சுத்தத் தமிழன், முதிர் இளைஞன், முடி நிரம்ப கரு கரு என்று இருந்தது. வானிலை அறிக்கையில் ஆங்காங்கு மழை பெய்யும் என்பது போல அவரிடம் ஆங்காங்கே வெள்ளை முடி இருந்தது. அழகியதொரு வண்டியும், ஆங்காங்கே சிறு வெள்ளை மயிருடன் கூடிய மீசையும் வைத்திருந்தார். கையில் ஒரு சிவப்பு Nokiaவும் இருந்தது.

அவர் குரலின் டெசிபெல் அளவு தேவைக்கு மிக மிக மிக மிக அதிகமாக இருந்ததனால் சிலர் அவரை திரும்பியும் பார்த்தார்கள். ஆனால் அவரோ ரொமான்டிக் மூட் இல் இருந்ததால் திரும்பிப் பார்த்தவர்களோ, அல்லது அருகில் இருந்த இந்த ஆபிரிக்கனோ அவருக்குத் தெரியவில்லை. அவர் கண்கள் ஏகாந்த, மயக்க உலகில் இருந்தன. வெள்ளையுடைத் தேவதைகள் அவரைச் சுற்றி ஆடிக்கொண்டிருந்தார்கள்.

அவர் பேசியது மட்டுமே எனக்குக் கேட்டது. அதை மட்டுமே பதிந்திருக்கிறேன் இன்று.

இந்த உரையாடலில் அதிகளவு காமம் கலந்திருந்தது. எனவே ”குணா” திரைப்படப் பாடல் போன்று நீங்கள் அங்கங்க மானே, தேனே போட்டுக்கொள்ளுங்கள். அது மட்டுமல்லாது அவ்வப்போது பாக்கியராஜ் ரொமான்ஸ் பண்ணுவது போல சிணுங்குங்கள்.. தேவையான அளவு ரொமான்டிக்கான பின்னணி இசையும் போட்டுக்கொள்ளுங்கள்

இவ்வுரையாடலில் எனக்கு நமது கதாநாயகனின் குரல் மட்டுமே கேட்டது. எனவே இவ்வுரையாடலில் அவரின் பேச்சுக்களை மட்டுமே பதிந்திருக்கிறேன்

”என்னடீ சாப்பிட்டாய்”

”நான் வீட்ட போய்த்தான் சாப்பிடவேணும்”

ஓம் ..ஓம் இப்ப தான் அவனிட்ட போய் ஒரு சின்ன பார்சலும், இங்கத்தய காசு 1000 ரூபாயும் குடுத்திட்டு வாறன். வெள்ளிக்கிழமை உங்க வருவானாம். பிள்ளைகளோட  வாரதால வானில தான் வருவான். உனக்கு ஒரு ரெலிபோணும், உடுப்பும் அனுப்பியிருக்கிறன். (உடுப்புக்களை விபரிக்கிறார் ... அது சென்சார் செய்யப்பட்டுள்ளது)

ரொமான்டிக்கானஒரு முத்தம் Nokiaவினூடாக காற்றில் கலந்து போகிறது.

”இல்லடீ, நகை அனுப்பேல்ல. இப்ப தங்கம் விக்கிறவிலைக்கு எனக்கு கட்டாது”
”என்ட தங்கத்துக்கு நான் பிறகு வாங்கித் தருவனடீ”
” உனக்கு மூக்குத்தி வடிவாயிருக்கும்”
” ஓம் ஓம் கட்டாயம்”   (  மூக்குத்தியை விட ஏதும் பெரிய நகையாக கேட்டிருப்பாரோ? )

”இல்ல இல்ல கட்டாயம் சீட்டு எடுத்தவுடன் வாங்கித தாறன்.. ஓம் ஓம் சத்தியமா வாங்கித் தாறன்”
”இந்த மாதம் சீட்டுக்கு பேட்டி போட்டு எடுக்கிறாங்கள். நல்ல கழிவு.ஆக்கள்  ஊருக்கெல்லே போயினம். அது தான்.”

பேருந்து முக்கியஒரு தரிப்பிடத்தை வந்தடைந்ததால் பலர் இறங்கிக் கொள்ள நம்மவர் எனக்கு முன்னால் இருந்த ஜன்னலோர இருக்கைக்கு மாறிக்கொள்கிறார்.

பேச்சு சற்று திசை மாறி ரொமான்டிக்கான பாதையில் பயணிக்கிறது.  முத்தத்தின் சத்தத்தை அவரின்  Nokia தாங்குமோ என்று பயந்து கொண்டிருந்தேன் நான். நல்ல வேளை அந்தப் பெண் அருகில் இல்லை.

பேச்சு மிகவும் ரொமான்டிக்காக சென்றுகொண்டிருந்ததால் நாகரீகம் கருதி சில இருக்கைகளுக்கு அப்பால் சென்று உட்காந்து கொண்டேன். அவரோ தனது உரையாடல் ஒலியினை  குறைத்துக்கொள்ளமாட்டேன் என்று அடம்பிடித்துக் கொண்டிருந்தார்.

காதலில் காமம் இல்லாவிட்டால்  எப்படி? அன்பின் உச்சமான வெளிப்பாடு அ தல்லவா?. அதற்கு மட்டும் அவர் விதிவிலக்காக முடியுமா என்ன?
அவர் சுற்றாடலேயே மறந்திருந்தார்.

காமம் எங்கும் இருக்கிறது, எதிலும் இருக்கிறது, நீர் ஊறிய மண்ணின் கனம் போல் காமத்தை மனிதர்கள் சுமந்து கொண்டுதிரிகிறார்கள். காமம் வடிந்தோடி அடங்கும் போது மனம் நீர் காய்ந்த மண்ணைப் போல் இலகுவாகிறார்கள். அவர் காமத்தின் கனம் அவரின் பேச்சில் தெரிந்தது. அன்பு  நிறைந்திருந்தது அவரின் காமத்தில். பேசிய கெட்ட வார்த்தைகளில் கெட்ட நெடி அற்று அதை அன்பில் குழைதது, குளைந்து குளைந்து பேசிக்கொண்டிருந்தார்.

அவர்களின் உரையாடல் அவர்களின் பிரிவையும், தாபத்தையும், காமத்தையும் வெளிச்சமிட்டுக் காட்டிக்கொண்டிருந்தது. அவர்களின் அன்பின் தேடலுக்கும், அதன் பின்னான விடயங்களுக்கும் அவரின் வயதுக்கும் தொடர்பில்லாதிருந்தது. காதலுக்கும், காமத்துக்கும் வயதில்லை என்பது எனது காதுகள் வழியே நிரூபித்துக் கொண்டிருந்தார், அவர்.

சற்று நேரத்தில் அவர்கள் பேச்சு வீசா எடுப்பது பற்றி மாறியது.

”விசா வந்திட்டுதே?”
” ம்ம் அப்ப நீ கொல்லன்டுக்கு வா, நான் அங்க வந்து சந்திக்கிறன்”
” 2 மாத விசாவே தந்திருக்கிறாங்கள்”
”சீச் சீ .. அங்க வந்திட்டு அசூல் அடிக்கலாம்,  இறங்கேக்க பாஸ்போட்ட கிழிச்சு கக்கூசுக்குள்ள போட்டுட்டு போ”
”உன்ட பெயரை மாத்திப் பதி, ஸ்பான்சர் பண்ணியவர்ட பெயரை சொல்லாத”

இடையிடையே மானே, தேனே, முத்தம் என்று மனிதர் ஜாலியாக இருக்கிறார்.

தனது சகோதரங்களுக்கு காசு அனுப்ப வேண்டும் என்றார்.  அண்ணணின் மகளுக்கு கலியாணமாம். ஒரு லட்சம் கொடுத்திருக்கிறார்.
”அதுகளும் சொந்தங்கள் தானே, கொடுக்கத்தானே வேணும் என்ற போது அவரின் மனத்தை ஓரளவு புரிந்து கொண்டேன்.

”சரி, ஒரு உம்மமா தந்துட்டு வைய்யடி”  என்று  ஆரம்பத்த பேச்சு  பேரூந்தின் இறுதித்தரிப்பு  வந்த பின்பும், அவர் என் கண்ணில் இருந்து மறையும் வரையும் தொடந்து கொண்டிருந்தது.

Nokia connecting people  என்பது உண்மை. சத்தியமாக உண்மை.

மனம் ஒரு பெரும் புதைகுழி. மனிதர்கள் மனதுக்குள்அன்புக்காக ஏங்கிக் கொண்டும், கனவுகளை சுமந்து கொண்டும், ஏக்கம், கற்பனை, வாழ்க்கை பற்றிய எதிர்பார்ப்பு, நிரைசைகள், தோல்விகள் இப்படி எத்தனையோ பல ரகசியங்களை சுமந்து கொண்டு எம்மிடையே அலைந்து கொண்டிருக்கிறார்கள். மனம் அவர்களின் எண்ணங்கள் அனைத்தையும் தனக்குள் புதைத்துக்கொள்கிறது, எதுவும் பேசாமல்.

நாம்  சிலவற்றை பேசுவதில்லை. காமமும் பேசாப்பொருட்களில் ஒன்று எமது சமுதாயத்தில். ஆனால் அந்தக் காமம் இல்லாவிட்டால் நானும் இல்லை, நீங்களும் இல்லை என்பதை நாம் மறந்துவிடுகிறோம்.

இந்த மனிதருடனான அனுபவம் சற்று அசௌகரீயமமாக இருந்தது என்பது உண்மைதான். இருப்பினும் இந்த அனுபவம் காதல், காமம் ஆகியவற்றிற்கு இடம், பொருள், ஏவல் இல்லை என்பதையும்,  அன்பின் இயக்கத்திலேயே உலகம் இயங்கிக்கொண்டிருக்கிறது என்பதையும் புரியவைத்தது.

எஸ். ரா காமம் பற்றி தனது நூலில் ” அங்கு, காமம் வற்றாத நதியைப் போல எல்லாத் திசைகளிலும் வழிந்தோடிக்கொண்டிருந்து” என்னும் தொனியில் எழுதியிருந்தார்.   அது உண்மைதான் போலிக்கிறது.

6 comments:

  1. லண்டனில் ரிச்மண்ட் பார்க் போயிருக்கிறீர்களா? போகாதவர்கள் யாழ்ப்பாணம் பழைய பூங்காவின் நூறு மடங்கையும், சென்னை கிண்டி சரணாலயத்தின் ஐம்பது மடங்கையும் நினைவு படுத்திக் கொள்ளுங்கள். நூற்றுக்கணக்கான மான்கள் (அதிலும் பெண் மான்கள் மருளும் விழிகளுடன்) தம் பாட்டுக்கு மேய்ந்து கொண்டிருக்கும். ஆசையாய் தொடப்போகும் குழந்தைகளுக்கு அஞ்சியே விலகி ஓடிக் கொண்டிருக்கும்.. ஒரு நாள் தனியே நடக்க விரும்பி, பார்க்கினுள் சென்ற நான், மான்களை ரசித்தபடியே சென்ற போது மான்களைப் பற்றிய சிறு அறிவிப்பொன்று கண்ணில் பட்டது. "ஜூன், ஜூலை மாதங்கள் மான்கள் கூடும் காலம், இக்காலப் பகுதியில் அவற்றிற்கு அருகில் செல்வதை தவிருங்கள். மேலும்,அவை இக்காலத்தில இடையூறு செய்பவர்களை மணிக்கு 60 மைல் வேகத்தில் வந்து தாக்கக்கூடிய வாய்ப்பு இருப்பதால் உங்கள் குழந்தைகளை கவனித்துக் கொள்ளுங்கள்." படித்தபோது மிக அதிர்ச்சியாயிருந்தது.. காமம் வெறியாகி தலைக்கேறியதால் மூர்க்கம் கொண்டலைந்த மனிதரை நான் கண்டிருக்கிறேன். காமம் இந்த மருளும் மான்களைக் கூட விட்டு வைக்கவில்லையா என்று காமத்தின் வலிமையை வியந்தபடி நடந்தேன்..

    ReplyDelete
  2. ஹீ ஹீ, உங்களுக்குக் காது நல்ல நீளம். (கழுதைக் காது?)

    ReplyDelete
  3. வாசித்தேன். ஒருபுறம் நீங்கள் குறிப்பிடும் காமம், இவ்விடத்தில் புலம் பெயர்தலின் வலியை மறக்க செய்யும் ஒரு வலி நிவாரணியாகதான் படுகிறது..."காதல் மொழியும் கடவுச்சீட்டும்" என நான் இதற்கு தலைப்பிடுவேன்...குடிபெயர்வு குறித்த உரையாடலும் அதனை சார்ந்த சம்பாஷனைகளும் அத்தனை காதலிலும், காமத்திலும் அதில் ஊடாக இருப்பது எமக்கு ஒரு வித அசௌகர்யத்தைதருகிறது....
    நீங்கள் தணிக்கை செய்யாமல் இருந்தால் இதன் இலக்கியத் தரம் நிச்சயம் கூடி இருக்கும்..ஏனெனில் எம்மைப் போன்றவர்கள் இம்மாதிரி நிகழ்வுகளில் இருந்து ( உதாரணமாக நான் கொழும்பு விமான நிலையத்தில் இடைதங்கலாக இருந்தபொழுது கடவுசீட்டு பரிசோதனை என்ற பெயரில் தமிழ் பேசும் மக்களை அதிகாரிகள் கேள்விக் கேட்பதும், அதற்கு நம்மவர்கள் பதில் சொல்லிவிட்டு, பின்பு தரிப்பிடத்தில் வந்து அந்த அதிகாரிகளை பகடி செய்வதும் - குண்டன் பூதக் கண்ணாடி வைத்து அந்தப் பார்வை பாக்கினம்...தூக்கிவேறு பாக்கினம்... ) அறிந்துக் கொள்வதற்கு ஏராளமான விடயங்கள் உள்ளன....நல்ல பதிவு ...பாராட்டுக்கள்.

    ReplyDelete
  4. ஓட்டுக்கேட்டாளும் உருப்படியாக சிந்திக்கும் எண்ணம் போலும் அலைபேசியில் அல்லாடும் வாழ்க்கை அதில் காமமும் ஒரு துளிதான் ! மனங்கள் பல
    விரதங்கள் ஊடே ஓடுகின்றது காமமும் ஒரு விரதம் தான்!

    ReplyDelete
  5. தொலைபேசியில் இப்படி எல்லாம் கதைப்பவர்கள் நேரில் எப்படி என்று வீட்டிலும் ஒரு முறை பாருங்கள்.

    ReplyDelete
  6. உணர்வுகள் பிரவாகம் தானே..இடம் பொருள் காலம் இதையெல்லாம் தாணண்டியும் காமம் ஓடிக்கொள்கிறது..
    காதலில் காமம் தவறில்லைஈகாமத்திற்காகவே தேர்ந்த காதலும் அன்பும் தான் அசிங்கமாகிப்போகிறது.அருமையான அவதானிப்புபுபுபு

    அன்புடன் அதிசயா
    காதல் இங்கும் ஒளிந்திருக்கும்..!!!!

    ReplyDelete

பின்னூட்டங்கள்