உயிருள்ள கையெழுத்துக்களின் வாசனை

ஒவ்வொரு மனிதனின் கையெழுத்தும் (கையொப்பம் அல்ல) அழகானதாயிருந்தாலும், அசிங்கமாயிருந்தாலும் அது அவனது தனிப்பட்ட அடையாளம். சிறுவயது முதல் இறுதிக்காலம்வரை கையெழுழுத்தில் அதிக மாற்றங்கள் ஏற்படுவதில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கையெழுத்தின் மீது தீராத காதல் இருக்கிறது. அனைவரும் தத்தமது கையெழுத்தை இரகசியமாக காதலித்துக்கொண்டிருக்கிறோம். எழுதப்படும் விடயத்தைப் பொறுத்து அது அழகாகிறது அல்லது அசிங்கமாகிறது. காதலை அறிவித்துப்போகும் எழுத்துக்கள் எப்போதும் அதை எழுதியவருக்கு மிக மிக அழகாகவே இருக்கின்றன.

எனது கையெழுத்து கோழி கிளறிய குப்பைபோல் இருக்கும். எனது அப்பாவின் எழுத்தும் அப்படியே. ஆனால் அம்மாவின் எழுத்து அச்சுப்பதித்தது போல் மிக மிக நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும். சென்ற கிழமை அம்மாவிடம் இருந்து ஒரு வாழ்த்து அட்டை வந்திருந்தது. அதை பார்த்தவுடனேயே அது அம்மாவின் எழுத்து என்று புரிந்து கொள்ளுமளவுக்கு அந்த எழுத்தின் வசீகரம் என்னுள் படிந்து போயிருக்கிறது. எனது கண்களை மூடி அம்மாவின் எழுத்தை நினைப்பேனாயின் அந்து எழுத்துக்கள் எனது மனத்திரையில் தெரியும். அம்மாவுக்கு அடுத்த வருடம் 80 வயதாகிறது. இருப்பினும் அவரின் எழுத்து இன்னும் இளமையாகவே இருக்கிறது. மிக மிக இளமையாக இருக்கிறது.

அம்மா அசிங்கமாய் எழுதினாலும் அழகாக இருக்கும். அத்தனை அழகாக எழுதுவார். அம்மாவின் சகோதரிகள் அனைவரும் மிக மிக அழகாக எழுதுவார்கள். ஆனால் அவர்களால் அம்மாவைப்போல் எழுதமுடியாது.

நான் 2ம் 3ம்  வகுப்புகளை கொழும்பில் இருந்து எனது மாமா வீட்டில் இருந்தே கற்றேன். விடுமுறைக்கு வரும்போதெல்லாம் அம்மா ”பார்த்து எழுதுதல்” என்று ஒரு பயிற்சி வைத்திருப்பார். தினமும் குறைந்தது 2 பக்ககங்கள் எழுதவேண்டும். உறுப்பமைய எழுதுவதற்கென்று அந் நாட்களில் ஒரு கொப்பி இருந்தது. மேலும் கீழும் சிவப்புநிற கோடுகள். அவற்றிற்கு நடுவே நீல நிறத்தில் இரண்டு கோடுகள். ”க” எழுதுவதாயின் இரண்டு நீலக்கோடுகளுக்கும் இடையிலும், ”தி” எழுதுவதாயின் விசிறி மேல் சிவப்புக் கோட்டினை தொட்டுக்கொண்டும், ”கு” எழுதுவதாயின் அது கீழ் சிவப்புக்கோட்டை தொட்டபடியும் இருக்க வேண்டும்.

எனது எழுத்துக்கள் இந்த விதிகளை எப்போதும் மீறியபடியே இருந்தன. அம்மா கையைப்பிடித்து எழுதப் பயிற்சி தருவார். அவருடன் எழுதும் போது எனது எழுத்து மிக மிக அழகாக இருக்கும். ஆனால் தனியே எழுதுவேனாயின் 90 பாகையில் இருக்கவேண்டிய கோடுகள் 30 பாகையில் சரிந்து விழுந்துவிடுவன போலிருக்கும். காலப்போக்கில் அம்மாவும் எனது கையெழுத்தை மாற்றும் எண்ணத்தை மறந்துபோனார். அவ்வப்போது அப்பாவும் முயற்சித்ததாகவே நினைவிருக்கிறது. அவரின் எழுத்து எனது எழுத்தை விட மிக மிக மோசமானது என்பதாலோ என்னவோ அவர் ஏனைய நேரங்களை விட மிகவும் அமைதியாவே நடந்துகொண்டார்.

பாடசாலை நாட்களில் எனக்குத் தமிழ் அறிவித்த சர்மா சேரும், விஜயரட்ணம் சேரும் எனது எழுத்தை காதைமுறுக்கியும், வயிற்றில் கிள்ளியும், பிரம்பால் அடித்தும், ”டேய்! உது என்ன தமிழ் எழுத்தோ?” என்று கேட்டும் பாராட்டியிருக்கிறார்கள். அவர்கள் எனது கட்டுரைகளை எப்படி வாசித்து 30 அல்லது 35 புள்ளிகள் இட்டார்கள் என்று இன்று வரை எனக்குப் புரியவில்லை. வாசிக்கமுடியாததனால் குத்துமதிப்பாக 30, 35 போட்டார்களோ என்ற சந்தேகம் எனக்குண்டு.

அழகான கையெழுத்தையுடைய நண்பன் அருள் என்பவன், அவனின் அழகான கையெழுத்திற்கு விலையாக உயிரையும் கொடுக்க நேர்ந்தது. அப்போது நாம் 11ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தோம். விடுதலை இயக்கங்கள் ஊருக்குள் உலாவத்தொடங்கிய காலம் அது. ஒரு நாள் குறிப்பிட்ட ஒரு இயக்கத்தினருக்கு நோட்டீஸ் எழுதுவதற்கு அருள் உதவினான். நாளடைவில் அவர்களுக்கு நோட்டீஸ் எழுதுவதே அவனது தொழிலாகியது. அந் நாட்களில் ஏறாவூர், செங்கலடி, வந்தாறுமூலை ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்களில் பலதும் அவனது கையெழுத்தில் ஆனவையே. காலப்போக்கில் அந்த இயக்கத்துடன் இணைந்தும் கொண்டான். சில காலங்களின் பின் காற்றில் கரைந்தும் போனான். இன்றும் அவன் எழுதிய சிவப்பு நிற ”பகிஸ்கரிப்பு,  ஹர்த்தால்” எழுத்துக்கள் மங்கலாக மனதில் ஒரு மூலையில் பாதுகாப்பாய் இருக்கிறது.

அவ்வப்போது வரும் பால்யசினேகத்தின் கடிதங்களும் அவனது எழுத்தும் மனதுக்கு என்றென்றும் ஆறுதலைத்தரும் விடயங்கள். அவனது எழுத்துக்களை கண்டதும் மனதுக்குள் ஒருவித பாதுகாப்பு உணர்வு அல்லது அவனருகில் இருந்து உரையாடுவது போலிருக்கும். ஒவ்வொருவரினதும் கையெழுத்துக்கும் உயிரும், அதற்கென்று ஒரு வாசனையும் உண்டு என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையுண்டு.

நான் பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயத்தில் 4ம் 5ம் வகுப்புக்களை கற்ற போது அங்கு சந்திரமோகன் என்று ஒரு மாணவன் இருந்தான். நாம் நெருங்கிய நண்பர்களாக இருந்ததில்லை. 1976ம் ஆண்டு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சேர்க்கப்பட்ட போது அந்த சந்திரமோகனும் என்னுடன் அதே பாடசாலை விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தான். நாம் இருவரும் அடுத்து வந்த மூன்று வருடங்களிலும் அதே விடுதியில் தங்கியிருந்தோம். அப்போதும் கூட நாம் நெருங்கிய நண்பர்களாய் இருந்ததில்லை.

அந் நாட்களில் எனது தாயார் பிபிலை வைத்தியசாலையில் வைத்தியராக தொழில்புரிந்துவந்தார். தந்தையார் பிபிலையில் போலீஸ்அதிகாரியாக இருந்தார். இருவருக்கும் பலத்த செல்வாக்கு இருந்தது. எனவே வாரத்தில் 3 நாட்கள் பதுளையில் இருந்து மட்டக்களப்புக்கு தபால் ஏற்றிவரும் பேரூந்து வண்டியில் எனது தாயார், உணவுப்பொருட்கள், பழங்கள், சீனி, பால்மா போன்ற பொருட்களை ஒரு பெட்டியில்வைத்து அனுப்புவார். அந்தப் பெட்டியில் செ. சஞ்சயன், மட்/ மெதிடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு  என்று முத்து முத்தான எழுத்துக்களை நீலநிற பேனையால் அழகாக எழுதியிருப்பார். அந்தப் பெட்டியினுள் நிட்சயமாக ஒரு கடிமும் இருக்கும். அந்த கடிதத்திற்கு அம்மாவின் வாசனையிருந்தது. அம்மாவின் எழுத்தைக்கண்டதும் மனது காற்றில் சருகாய்ப் போகும்.

அந் நாட்களில் மட்டக்களப்பின் தபால் நிலையம் எமது பாடசாலை விடுதியில் இருந்து 50 மீற்றர் தூரத்திலேயே இருந்தது. நானும் தம்பியும் இந்த உணவுப்பெட்டிக்காக காத்திருப்பது எமது வாரந்த கடமைகளில் ஒன்று. பேரூந்து வந்ததும் மாணவர்தலைவர்களிடம் அனுமதிபெற்று உணவுப்பெட்டியை எடுத்துவருவேன். அவ்வப்போது என்னுடன் நான் மேற் குறிப்பிட்ட சந்திரமோகனும் வருவதுண்டு.

நான் 1976 - 1979 ஆண்டுகளிலேயே விடுதியில் வாழ்ந்திருந்தேன். அதன் பின்னான காலங்களில் சந்திரமோகனுடன் எனக்குமான தொடர்பு முற்றிலுமாக அற்றுப்போனது. அவனை மறந்தும்போனேன்.

ஏறத்தாள 27 வருடங்களின் பின்னான ஒரு நாளில் (2006ம் ஆண்டளவில்), ஓர் நாள் எனது  தாயாருடன் உரையாடிய போது ” சந்திரமோகனை உனக்கு நினைவிருக்கிறதா” என்று கேட்டார். எனது நினைவு வங்கியில் இருந்து சிரமத்தின் பின் அவனை அடையளம் கண்டுகொண்டேன். ”ஆம்” பதுளையிலும், மட்டக்களப்பிலும் என்னோடு படித்தவன், ஏன் கேட்கிறீர்கள்?” என்றேன்.

அப்போது எனது தாயார் கூறிய பதில் என்னை இன்றுவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியபடியே இருக்கிறது.

மட்டக்களப்பில் இருந்து எனது தாயார் ‌கொழும்பின் புறநகர்ப் பகுதியான மொறட்டுவைக்கு இடம் பெயர்ந்து ஏறத்தாள 20 வருடங்களாகின்றன. அவர் ராஜயோகம் என்றும் ஒரு ஆச்சிரமத்தில் அங்கத்தவராக இருக்கிறார். இவ்வாச்சிரமம் உலகம் முழுவதும் பிரபல்யமாக இருக்கிறது. இலங்கையிலும் மிகப் பிரபல்யமாக இருக்கிறது.

எனது தாயாரின் ஆச்சிரமத்தில் எனது தாயாரின் எழுத்து அழகானதால், அவரையே தினமும் அன்றைய நிகழ்ச்சி நிரல், நற்சிந்தனை ஆகியவற்றை ஒரு கரும்பலகையில் எழுதுமாறு கேட்கப்பட்டதால் அவரும் மகிழ்ச்சியாக எழுதிவந்திருக்கிறார். இது தொடர்ந்தும் நடைபெற்று வந்திருக்கிறது. 

ஒரு நாள் கொழும்பில் உள்ள வேறொரு ராஜயோக ஆச்சிரமத்தினர் எனது தாயாரின் ஆச்சிரமத்திற்கு வந்திருக்கிறார்கள். அவர்களுடன் சந்திரமோகனும் வந்திருக்கிறான். எனது தாயாரின் எழுத்துக்களை கரும்பலகையில் கண்டவுடன் இது சஞ்சயனின் அம்மாவின் எழுத்து என்று உள்ளுணர்வு கூறியதால், இதை யார் எழுதியது? என்று விசாரித்து பார்த்ததில் அது எனது தாயாரின் எழுத்து என்று அறிந்து எனது தாயாருடன் தொடர்புகொண்டு அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறான்.

இதை எனது தாயார் கூறிய போது என்னால் நம்பமுடியவில்லை. ஏறத்தாள 30 வருடங்களுக்கு முன்னான காலத்தில் அவ்வப்போது கண்ட ஒரு கையெழுத்தை அடையாளமாகவைத்து எனது தாயாரை அடையாளம் கண்டது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இதை நினைக்கும் போதெல்லாம் மனமெல்லாம் ஒரு வித பரவசத்தை உணரும். 
அம்மாவின் எழுத்திற்கு இத்தனை சக்தியா என்று நினைப்பதுண்டு. அதேவேளை சந்திரமோகனின் நினைவுச்சக்தியையும் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. ஆனால் சந்திரமோகனிடம் எனது மற்றும் வேறு சில வகுப்புத் தோழர்களின் எழுத்துக்களை கொடுத்து அவை யாருடைய எழுத்துக்கள் என்று கேட்கவேண்டும் என்று மனது உந்திக்கொண்டே இருக்கிறது. அவனால் அவற்றை அடையாளம் காணமுடியாது என்றே நிட்சயமாக நம்புகிறேன்.

அந்த எழுத்து எனது தாயாரின் எழுத்து என்று அவனுக்கு அறிவித்தது எது?

சில கேள்விகளுக்கு பதில் தேடக்கூடாது. இந்தக் கேள்வியும் அப்படியானதே.

இன்றைய நாளும் நல்லதே
எனது அப்பாவின் அழகிய ராட்சசிக்கு இது சமர்ப்பணம்.

2 comments:

  1. அருமை அருமை!!!!கையெழுத்திற்கு இத்தனையா?ஃ!வாழ்த்துக்கள் சொந்தமே!
    ஒரு மரணவிரும்பியின் கடைசி நிலாச்சந்திப்பு!!! ..!!!!

    ReplyDelete
  2. நீங்கள் பதுளையில் படித்தீர்களா? உங்கள் எழுத்துக்களை வசிக்க கிடைத்தது மகிழ்ச்சி...

    ReplyDelete

பின்னூட்டங்கள்