இரண்டு கைகளையும் இழந்த முன்னாள் போராளியின் கதை

அன்றொருநாள் நாம் ஒருவரை சந்திப்பது என்று முடிவு செய்திருந்தோம். ஆனால்  எம்மிடம் ‌ அவர் பற்றிய தகவல்கள் எதுவும் இருக்கவில்லை.

அவரை ஒருவர் சைக்கிலில் ஏற்றிச் செல்லும் நேரங்களில் எனது நண்பர் அவரைக் கண்டிருக்கிறார். அவருக்கு இரு கைகளும் இல்லை என்று நண்பர் கூறியவுடன் நான் அவரைச் சந்திக்கவேண்டும் என்றேன். எனது நண்பர் தனது தொடர்புகளை முடுக்கிவிட்டார். சில நிமிடங்களில்  ஒரு கிராமத்தின் பெயரைச் சொல்லி அவர் அங்கு வசிக்கக்கூடும் என்று ஒரு தகவல் வந்தது.

சற்று நேரத்தில் மோட்டார்சைக்கில் குறிப்பிட்ட அந்தக் கிராமத்தை நோக்கி  மட்டக்களப்பில் இருந்து மேற்குப்புறமாக கிறவல் பாதைகளில் பயணித்துக்கொண்டிருந்தது. வறண்டு போன வயல்நிலங்கள், கைவிடப்பட்ட இராணுவமுகாம்கள், பனைமரங்கள்,  ‌காய்ந்த புற்களை மேயும் கால்நடைகள், மட்டக்களப்பு வாவி என்று காட்சிகள் எங்களைக் கடந்துகொண்டிருந்தன.

கடந்த இரண்டு வாரங்களாக மோட்டார்சைக்கிலின் பின்புறத்தில் உட்கார்ந்திருக்கும் போது கடைப்பிடிக்கவேண்டிய யுக்திகள் எனக்கு பழக்கப்பட்டிருந்ததனால் பள்ளம் திட்டிகளில் இருந்து எனது உடலின் முக்கிய பகுதி ஒன்றினை சேதமின்றி பாதுகாத்துக்கொள்ள கற்றுக்கொண்டிருக்கிறேன். நாம் சென்ற பாதைகளினால் சைக்கில் அல்லது மோட்டார் சைக்கில்களில் மட்டுமே பயணிக்கமுடியும்.  மழைக்காலம் என்றால் அதுவும் இல்லை.

கிழக்கின் வசந்தம் இப்பகுதிகளுக்கு வீதிகள் என்னும் பெயரிலாவது இன்னும் வந்து சேரவில்லை என்பதே அப்பட்டமான உண்மை.

ஆங்காங்கே நீர் நிலைகள், வாய்க்கால்கள் தென்படத்தொடங்கின. சிறு மதகுகளில் இருந்து சிறுவர்கள் வாய்க்கால் நீருக்குள் குதித்துக்கொண்டிருந்தார்கள். எருமைகள் சில மேய்ந்து கொண்டிருந்தன. கொக்குகள் எதற்காகவோ காத்திருந்தன.

ஒரிடத்தில் நிறுத்தி நாம் சென்றுகொண்டிக்கும் பாதையை உறுதி செய்துகொண்டோம். வெய்யிலின் உக்கிரம் தாங்கமுடியாததாய் இருந்தது.  ஏறத்தாள  ஒன்றரை மணிநேரத்திற்குப் பின் குறிப்பிட்ட அந்தக் கிராமத்திற்கு வந்த சேர்ந்தோம். இருசிறுவர்கள் சைக்கில் பழகிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் அவரின் அடையாளங்களைக்  கூறியபோது  அவரின் வீட்டை அடையாளம் காட்டினார்கள்.

அவரின் வீட்டிற்குச்சென்று பரஸ்பர அறிமுகம் செய்துகொண்டோம். அவரின் முகத்தில் எம்மைப் பற்றிய  நம்பிக்கை இருக்கவில்லை. வீட்டுக்கதவுக்கு பின்னால் இருந்து ஒரு பெண் எம்மை கவனித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

நான் யார்,  நாம் வந்திருப்பதன் நோக்கம் பற்றி அறிவித்தேன். சற்று நேரம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தோம். என்னிடம் அவருக்கு தருவதற்கு தற்போது எதுவுமில்லை என்றும் ஆனால் யாராவது உதவ முன்வந்தால் அவர்களை நேரடியாக அவரிடம் தொடர்பு படுத்துவதாக கூறியதும் அவருக்கு சிறிது நம்பிக்கை வந்திருக்கவேண்டும். மிகவும் அவதானமாகப் பேசத் தொடங்கினார்.

உங்களைப் போன்று பல நாடுகளிலும் இருந்து பலரும் வந்து போயிருக்கிறார்கள். பல உத்தரவாதங்களை தந்திருக்கிறார்கள் ஆனால் இதுவரை  தனக்கு எதுவித உதவிகளும் கிடைக்காதனால் தான் எவரையும் நம்புவதில்லை என்றார். நோர்வேயில் இருந்தும் ஒருவர் வந்து தன்னை பேட்டிகண்டதாகவும்  உங்களுக்கு  செயற்கைக் கை பூட்டலாம் ன்ற உத்தரவாதங்களை  தந்ததாகவும் கூறி அவர் பெயரை நினைவில் நிறுத்த முயற்சித்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு தற்போது வயது 49 ஆகிறது. 16 வருடங்களுக்கு முன் போலீசார் வீடு புகுந்து வெட்டியதில் கைகளை இழந்துள்ளார். வெட்டுப்பட்ட ஒரு கால் வைத்தியர்களின் திறமையினால் தப்பியிருக்கிறது. முழங்காலில் வெட்டுப்பட்டிருக்கிறது. சாரத்தை முழங்கால்வரை தூக்கி வடுக்களைக் காண்பித்தார்.

தனது இளமைக் காலத்தில் இருந்தே ஈரோஸ் இயக்கத்தில் செயலாற்றியிருக்கிறார். இரண்டு மாதங்கள் கிழக்கின் பெருந்தளபதி ஒருவரின் காலத்தில் கைதுசெய்யப்பட்டு ”பங்கரில்” இரு மாதங்கள் வைக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டதாகக் கூறினார். விடுதலைக்காய் புறப்பட்ட எனக்கு  எம்மவர்களால் கிடைக்கப்பெற்ற தண்டனையே வலிமிகுந்தது என்ற போது அதை அவரது குரலும், கண்ணும் உறுதிப்படுத்தின.

அவரின் உடற்காயங்கள் ஆறிய காலங்களிக் பின் அவரின் தந்தையே அவருக்கு சகலமுமாய் இருந்திருக்கிறார்.  தற்போது தந்தை பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டபின் உறவினரான ஒரு பெண் இவரை விரும்பித் திருமணம்முடித்திருக்கிறார்.

அங்கவீனமான பின் அவரின் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கற்பித்தும்,  தற்போது அங்கவீனமானவர்களின் சங்கத்துக்கு தலைவராகவும், கிராமத்தின் பேச்சாளராகவும் இருந்திருக்கிறார், இருக்கிறார். தனக்கு காலால் எழுதமுடியும் என்று கூறி ” வருகைக்கு நன்றி” என்று எழுதியும் காட்டினார்.

அண்மையில் ஊருக்குள் இராணுவத்தினரின் அநியாயமான கெடுபிடிகள் அதிகமாக இருந்தபோது அது பற்றி  ஊர்மக்களுடன் சேர்ந்து  இராணுவத்தளபதியுடன் பேசிய போது இராணுவத்தளபதி ”இவனுக்கு கையை வெட்டியமாதிரி  நாக்கையும் வெட்டவேணும்” என்று சக இராணுவத்தினரிடம் சிங்களத்தில் கூறியிருக்கிறார். இருப்பினும் தளராது இன்றும் சமூகத்திற்காக உழைத்தபடியே  இருக்கிறார்.

திடீர் என்று அந்த நோர்வேயில் இருந்து வந்து வாக்குறுதி தந்தவரின் பெயரின் முன்பகுதியைக் கூறினார். எனக்குத் தெரிந்த ஒரு நோர்வே பிரபலத்தின்  பெயரையும் அங்க அடையாளங்களையும் கூறி அவரா எனக் கேட்ட போது  ” ஆம் தெரியுமா அவரை உங்களுக்கு?  எனக்கு செயற்கைக்கை பூட்ட உதவுவதாகச் சொன்னார்” என்ற அவரின் குரலில் இருந்த ஆர்வத்திலும், அதன் பின் அவர் செயற்கைக் கை பூட்டுவது பற்றி என்னிடம் உரையாடிய விதத்திலும் அவர் இன்னும் தனக்கு செயற்கைக்கைகள் பூட்டப்படலாம் என்ற நம்பிக்கையை முற்றாக இழக்கவில்லை என்பதை உணர்ந்து‌கொண்டேன்.

அவர்களது அங்கவீனமானவர்களின் சங்கத்தில் ஏறத்தாள 500 அங்கத்தவர் இருப்பதாகவும், இன்னும் பலர் வன்னி முகாம்களில் இருந்து வர இருப்பதாகவும் கூறினார்.  மாதாந்தம் 10ரூபாய் சந்தாப்பணமாகப் பெற்று அதை நுண்கடன் திட்டங்கள் மூலமாக தங்களின் சங்க அங்கத்தவருக்கு வழங்கிவருதாகவும், இன்று வரை தங்களுக்கென்று ஒரு கட்டத்தையும்  அரசு அமைத்துத்தரவில்லை என்றும், ஆனால் ஒரு  மனிதர் 20 பேர்ச் நிலம் தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஆனால் கட்டடம் அமைப்பதற்கான 20 லட்சம் ரூபாய் என்பது  தம்மால் நினைத்தப்பார்க்கக்கூட முடியாத தொகை என்றும் கூறினார்.  கொழும்பில் உள்ள அங்கவீனமானவர்களின் காரயாலயத்திற்கு சென்று பார்த் போது அவர்களுக்கு அரசு வழங்கியிருக்கும் வசதிகளை தாங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்றார்.

அங்கவீனமானவர்களுக்கு கைத்தொழில் முயற்சிகளை அமைத்துக்கொடுக்கவேண்டும், அவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு நேரமாவது  உணவு உண்ண வேண்டும், அதன் பின்பே நாம் அவர்களிடம் அபிவிருத்தி, கல்வி, ஏனையவிடயங்களைப் பற்றிப் பேசலாம் என்று அவர் கூறியது படுவான்கரை பகுதியில் வறுமையின் கொடுமை பற்றி நான் அறிந்திருந்த தகவல்களை உறுதி செய்தது.

இவர் குடும்பத்திற்கு இரண்டு குடம் குடி நீர் அருகில் கிடைக்கிறது. குளிப்பதற்கும் எனைய தேவைகளுக்கும்  அதிக தூரம் செல்லவேண்டியிருக்கிறது. கிணறு வெட்டுவதற்கான பொருளாதார வசதிகள் அவரிடம் இல்லை. வைத்திய உதவி அருகில் இல்லை. இப்படி பல சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருகிறார் அவர்.

அவருடனான உரையாடலின் பின் ஈரம் ஊறிய மண் போலாயிற்று மனது. பல நேரங்களில் கனமானதொரு மௌனமே எங்கள் மொழியாயிருந்தது. பெருஞ்சிரமப்பட்டு கண்ணீரை அடக்கிக்கொண்டார். மனைவியை அழைத்து அறிமுகப்படுத்தினார். புன்னகைத்தக்கொண்டோம்.

விடைபெற்ற போது வீதிவரை வந்து விடைபெற்றார். முழங்கைக்கு மேலாக வெட்டப்பட்ட அவரது கை எனது தோளில் அழுந்தியபோது என்மீது அவருக்கு ஆரம்பத்தில் இருந்த நம்பிக்கையீனம் அற்றுப்போயிருந்ததை அவரது கையின் அழுத்தத்தினூடாக உணர்ந்தேன். அவரின் தோளினைத் தட்டிக்கொடுத்து  மோட்டார்சைக்கிலின் பின்புறத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டேன்

நாம் புறப்பட்டபோது அவருக்குப் பின்புறமாய் அவர்களின் வீட்டுவாசலில் அவரின் மனைவி நின்றுகொண்டிருந்தார்.

புழுதியை இறைத்தவாறு மோட்டார்சைக்கில் சென்றுகொண்டிருந்தது. தூரத்தே கிழக்குப்புறமாய் இன்றும் வானம் இருட்டிருந்தது.------------
அடுத்த பதிவின் சுருக்கம்.

பலாத்தகாரமாய் இயக்கத்தில்  இணைக்கப்பட்டு, கண்ணிவெடி துப்பரவாக்கும் போது ஒருகாலை இழந்து, மறுகாலில் தற்போதும் பெருங்காயங்களுடன்,  கணவரை இழந்து, ஊமையான தனது மூத்த மகளுடனும், இளையமகளுடனும் வாழும் ஒரு தாய், வருமானமின்றி குழந்தைகளுக்காக பாலில்தொழில் ஈடுபட்டதனால் மீண்டும் தாயாகி அக் குழந்தையை தன்னால் வளர்க்க முடியாத காரணங்களினால் முன்பின் அறியாதவர்களிடம் தத்துக்கொடுத்து வாழும் ஒரு முன்னாள் போரளியின் கதை.


1 comment:

  1. யதார்த்தம் என்னவென்று புரியாமல் "மீண்டும் போர் வெடிக்கும்" என்னும் காகிதப் புலிகளும், புலிகள் அமைப்பாகாச் செய்த தவறுகளைச (மட்டும்) சுட்டிக்காட்டி தங்கள் இராணுவ அறிவை சிலாகிக்கும் ஆய்வாளார்களும் ஞாபகத்திற்கு வந்து போகிறார்கள்.

    ReplyDelete

பின்னூட்டங்கள்