நான் ஏன் விமானம் வாங்குவதில்லை?

நான் அதிகம் விமானத்தில் பயணிப்பதில்லை. வருடத்திற்கு ஒரு முறை ஆகக்கூடியது இருமுறை. இந்த வருடம் இதுவரை ஒன்றும் இல்லை. எனது நண்பர் ஒருவர் இருக்கிறார். பல்பொருள் -அங்காடிக்குச் சென்றுவருவதுபோன்று அடிக்கடி பறப்பார்.

மனிதர் இணையத்தினூடாக விமானப்பயணச்சீட்டுக்கள் வாங்குவதிலும் அதீத திறமைவாய்ந்தவர். எனக்கு இந்தக் கலை இன்னும் கைவசப்படவில்லை. பெரும்பாலும் நான் பயணமுகவரினூடாகத்தான் விமானப்பயணங்களை முன்பதிவு செய்வேன்.

அடுத்தமாதம் எனது பூக்குட்டியின் பிறந்தநாள். எனவே நண்பரிடம் லண்டன்போகவேண்டும் என்றேன். ‘நெற்றில் 100 குறோணருக்கு ரிக்கற்; எடுக்கலாம், தேடிப்பாருங்கள், இல்லையேல் நான் எடுத்துத்தருகிறேன்’ என்றார்.

வீடு வந்து கணிணியை இயக்குகிறேன், நண்பர் மின்னஞ்சலினூடாக ஒரு இணைப்பை அனுப்பியிருந்தார்.
மலைபோல் அதைச்சொடுக்கினேன்.

எங்கிருந்து, எங்கே, எப்போ, எத்தனை மணிக்கு பயணப்படுகிறாய் என்று கேள்விகளுடன் ஒருவழிப்பயணமா அல்லது இருவழிப்பயணமா? பயணிகளின் எண்ணிக்கை எத்தனை என ஆரம்பித்தது எனது விமானப்பயணச்சீட்டுக்கான தேடல்.

எத்தனையோ ஆயிரம் இடங்களில் எனக்கான பயணச்சீட்டினைத் தேடுவதாக ஒரு அறிவிப்பும் கண்ணிற்பட்டது. ‘நன்றி’ என்று மனதுக்குள் சொல்லிக்கொண்டிருந்தபோது முதலாவது விலை கண்ணிற்பட்டது.

5000 குறோணர்கள் என்று அங்கு குறிப்பிட்டிருந்ததால் மார்பு திடுக்கிட்டதல்லாமல் நண்பரில் சற்று எரிச்சல்பட்டுக்கொண்டிருந்துபோது விலைகள் சீட்டுக்கட்டு விடு சரிவதுபோன்று சரிந்து 500, 350, 250 எனக்குறைந்து 250ல் நின்றது.

அதைச்சொடுக்கினேன்.

நீஙகள் 250 குறோணர்களுக்குரிய பயணத்தை தெரிவுசெய்துள்ளீர்கள். அதை உறுதிப்படுத்தவும் என கணிணி கோரியபோது அதனை உறுதிப்படுத்தினேன்.

எனது பெயர், விலாசம், மின்னஞ்சல், தொலைபேசி என எனது சாதகத்தையே கேட்டபின் தொடர்ந்து செல்வதற்கு இங்கே அமத்துங்கள் என்றிந்ததை அமத்தினேன்.

பல கேள்விகள் கணிணியில் தெரிந்தன.

எத்தனை பொதிகள் எடுத்துச்செல்கிறீர்கள். இந்தச் சேவைக்கான கட்டணம் 20 கிலோவிற்கு 400 குறோணர்கள்
அதற்கு எதுவுமில்லை என்று பதிலளித்தேன்.

வரும்போது எத்தனை எடுத்துவருவீர்கள்?

அதற்கும் எதுவுமில்லை என்றேன்.

விமானப்பயணத்தின்போது எங்கே அமரப்போகிறீர்கள் என்பதை தெரிவுசெய்யவும்.

கிடைப்பதை ஏற்றுக்கொள்கிறேன் என்பதை தெரிவுசெய்தேன். (கட்டணம் எதுவுமில்லை)

பயணம்பற்றிய விபரங்களை குறுஞ்செய்தியில் பெறவிரும்புகிறீர்களா?

விமானத்தில் விசேட உணவுப்பொதி வேண்டுமா?

பயணக்காப்புறுதி சேவையைப் பெற்றுக்கொள்ள ஆர்வமாக உள்ளீர்களா?

எங்கள் விமானச்சேவையின் நுகர்வாளர்சேவை (Customer service) 4 வகைப்படும். முதலாவது 100 குறோணர்கள். இரண்டாவது 200 குறோணர்கள். மூன்றாவது 300 குறோணர்கள். நான்காவது 0 குறோணர்கள் (சேவையின் உள்ளடக்கம் அங்கு குறிப்பிடப்பட்டிருந்தது.) கட்டணம் இல்லாததை தெரிவுசெய்தால் நாம் பதிலளிக்கும் நேரத்தினை எம்மால் குறிப்பிடமுடியாது என்றிருந்தது.

நான்காவதை தெரிவுசெய்தேன்

இப்பயணம்தொடர்பாக நீங்கள் எதும் மாற்றங்களை செய்யும் வசதி உண்டு.

நிட்சயமாகத்தான் சொல்கிறீர்களா?

ஆம்.

விமானம் பிந்தினால், பின்போடப்பட்டால் உங்களுக்குரிய சேவையை விரும்புகிறீர்களா?

விமானம் விழுந்து நொருங்கினாலும் எதுவித சேவையும் வேண்டாம் என்று மனது நினைத்துக்கொண்டது.

அதற்கும் வேண்டாம் என்றேன்.

நிட்சயமாகத்தான் சொல்கிறீர்களா?

ஆம்.

உங்கள் பயணப்பொதியை காப்புறுதிசெய்ய விரும்புகிறீர்களா?

எனது பொறுமை காற்றில் பறந்தது.

கொடுப்பனவை உறுதிசெய்யுங்கள் என்றிருந்ததை அழுத்தினேன்.

நீங்கள் அனைத்துக்கேள்விகளுக்கும் பதிலளிக்கவில்லை. ஏனைய கேள்விகளுக்கும் பதிலளிக்கவும்.

உங்கள் பயணச்சீட்டின் பிரதியை தபாலில் பெறவிரும்புகிறீர்களா? வேண்டாம்.

லண்டனில் வாடகைக்கு வாகனம் வேண்டுமா?

வேண்டாம்

விமான நிலையத்தில் இருந்து லண்டனுக்கு புகையிரத்தில் செல்வதற்கான பயணச்சீட்டினை வாங்கவிரும்புகிறீர்களா?

இல்லை. வேண்டாம்.

விமானநிலையத்தில் இருந்து லண்டனுக்கு பேரூந்தில் செல்வதற்கான பயணச்சீட்டினை வாங்கவிரும்புகிறீர்களா?

இல்லை. வேண்டாம்.

இப்போது அனைத்துக்கேள்விகளுக்கும் விற்பனைத் தந்திரங்களுக்கும், ஏமாற்றுவித்தைகளுக்கும் விடையளித்துவிட்டு கொடுப்பனவை உறுதிசெய்யுங்கள் என்றிருந்ததை அழுத்தவிட்டு பரீட்சை பெறுபேறுக்காக காத்திருப்பவனைப்போன்று காத்திருந்தேன்.

நீங்கள் கட்டணம்செலுத்தும் பகுதிக்கு வந்துள்ளீர்கள்.

உங்கள் பெயர்

விலாசம்

வங்கி அட்டையின் இலக்கம்

இது கடன் அட்டையா அல்லது வங்கிக்கணக்கில் இருந்து நேரடியாகக் கழிபடும் அட்டையா?

அது எப்போது முடிவுறுகிறது

இரகசிய எண்

என்று கேள்விகள் முடிந்தபாடில்லை.

அனைத்து கேள்விகளையும் வென்று முடித்தபோது என் வங்கி அட்டையில் இருந்து 258 குறோணர்கள் கழிந்திருப்பதாய் கணிணி அறிவித்தது.
250 குறோணர்கள்தானே விமானப்பயணச்சீட்டு. ஏன் 8 குறோணர்கள் அதிகமாக எடுத்தார்கள் என்று பர்ர்த்தேன். அது வங்கி அட்டையை பாவித்த பாவத்திற்காக என்றிருந்தது.

ஒரு பயணத்துக்குள் இந்தளவு வியாபாரத்தந்திரங்களா என்று நினைத்துக்கொண்டிருக்கிறேன்.

இந்த கேள்விகளுள் என்னை சிந்திக்கவைத்தது (Customer service) உடன் உரையாடுவதற்கு இடப்பட்டிருந்த கட்டணமே.
சற்று அசந்தால், பயணத்தின்போது நீங்கள் தூங்கினால் எழுப்பிவிடுகிறோம். இந்தச் சேவைக்கான  கட்டணம் 100 டொலர்கள் என்றும் விளம்பரம் செய்வார்கள் போலிருக்கிறது.

அவர்கள் முன்வைத்த அனைத்து சேவைகளையும் ஏற்றுக்கொண்டிருந்தால் விமானப்பயணச்சீட்டு வாங்கும் விலைக்கு விமானத்தையே வாங்கியிருக்கலாம். நமக்குத்தானே அதை பார்க் பண்ணுவதற்கு இடமில்லையே.

உறைபனியும் உறங்காத மனமும்

இதுவும் 1990ம் ஆண்டுப்பகுதியில் ஒரு முதியோர் இல்லமொன்றில் உதவியாளராக பணியாற்றிக்கொண்டிருந்த காலத்தில் நடைபெற்ற கதைதான்.
ஒரு புதிய மனிதரை முதியோர் இல்லத்திற்கு அழைத்துவந்திருந்தார்கள். அன்று வேலைக்கு வந்திருந்தபோது அவரைப்பற்றிய விபரங்கள் கிடைத்தன.
ஒரு பூங்காவில், கொட்டிக்கிடந்த உறைபனியின் குளிரில் விறைத்திருந்த ஒரு மனிதரைப்பற்றி, யாரோ அறிவித்ததால், வைத்தியப்பிரிவினர் அவரை உறைபனியில் இருந்து காப்பாற்றியிருந்தார்கள். அவர் வீதியில் வாழ்ந்திருந்தவர் என்பதை பின்பு அவர் சொல்லக்கேட்டேன்.
அவருக்கு அப்படியொன்றும் பெரிய வயதில்லை. 70 இருக்கும். ஆனால் அவருக்கு 24/7 க்கு மது, சிகரட் வேண்டும். நீண்டு வளர்ந்து பராமரிக்கப்படாத முடி, தாடியுடன் அவர் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் ஆகக் குறைந்தது ஒரு தூசணச்சொல் குடியிருந்தது. கடும்கோபக்காரராய் இருந்தார்.
அவருக்கு நீராடலில் ஏனோ பெரு வெறுப்பிருந்தது. பின்பொருநாள் அவருக்கு சவரம்செய்யவேண்டிவந்தது. அன்றைய நாளைப்போன்று இன்றுவரை எனக்கு யாரும் அழகழகான வார்த்தைகளால் திட்டியதில்லை.
அவருக்கும் முதியோர் இல்லத்திலிருந்த தாதியர்களுக்கும் இடையில் வெகுவிரைவில் முறுகல் நிலை உருவானது.
காரணம் அவரது கை அவர்களின் முதுகுப்புறமாக இடுப்புக்கு கீழுள்ள சதைப்பிடிப்பான இடங்களையும், கழுத்துக்கு கீழ் இருந்த சதைப்பிடிப்பான இடங்களையும் அடிக்கடி பதம்பார்த்ததே.
அதுமட்டுமல்ல அவரது கையின் மனநிலையிலேயே அவரது கண்ணும், வாயும் இருந்தது. அவரது கைக்கும், கண்ணுக்கும், வாய்க்கும் தாதியர்களின் வயதுக்கும் சம்பந்தமிருக்கவில்லை. அருகில் யார் சென்றாலும் மனிதர் சேட்டைவிட்டுக்கொண்டிருந்தார்.
இறுதியல் ஆண்களே அவரை பராமரிக்க நேர்ந்தது. ஏன் ”தேவதைகளை” அனுப்ப மறுக்கிறீர்கள் என்பார். அவரது வேதனையை எவரும் கண்டுகொள்ளவில்லை.
சில நாட்களின் பின்பொருநாள் அவரது நண்பர்கள் இருவர் அவரிடம் வந்தார்கள். அவர்களும் வீதியில் வாழ்பவர்கள் என்பதை அவரது நடையுடைபாவனைகள் உணர்த்தின. அவர்கள் அவருக்கு பதநீர் எடுத்துவந்திருந்தனர். வறண்டிருந்த நிலம் நீரை ஊறுஞ்சிக்கொள்ளும் வேகத்தில் அவர் அவற்றை அருந்தினார். அதன்பின்னான காலத்தில் ஒரு முறை நான் அவர்களைக் கண்டேன்.
வேறு எவரும் அவரைத் தேடவும் இல்லை. நட்புப்பராட்ட வரவும் இல்லை.
வெகுவிரைவில் படுத்த படுக்கையானார். இயற்கை உபாதைகளை கடந்துகொள்வதற்கும் அவருக்கு உதவி தேவைப்பட்டது. அந்நேரங்களில் உதவிக்கு வந்த தாதியர்களையும் அவர் கை விட்டுவைக்கவில்லை. எனவே எவரும் அவரிடம் செல்லமறுத்தனர். காலையில் அவரிடம் செல்லும்போதெல்லாம் அவர் மலத்திலும் சலத்திலும் ஊறியிருப்பார்.
அவருக்கு இருந்தது காமமா இல்லை சேட்டைக் குணமா என்று சிந்தித்துப்பார்க்கிறேன். திட்டவட்டமாக எதையும் கூறமுடியாதிருக்கிறது. தான் மலத்திலும் சலத்திலும் கிடப்பதற்கு தனது கைகளின் துருதுருப்பே காரணம் என்பது அவருக்கு புரிந்திருக்க முடியாததல்ல. ஆனாலும் அவரால் அதை கைவிட முடியவில்லையே. ஆக, அது காமமா? அவ்வயதிலும் இத்தனை காமம் சாத்தியமா? அல்லது அது அவரை மீறீய சேட்டைக்குணமா?
எனக்கும் அவருக்கும் கூறும்படியான உறவு இருக்கவில்லை. எனினும் காலப்போக்கில் அவரை அதிகமாக நான்தான் தினமும் காலையில் பராமரித்தேன். உணவூட்டினேன், இளவேனிற்காலத்தில் சக்கரநாற்காலியில் இருத்தி அழைத்துச்சென்றிருக்கிறேன். அவரிடம் இருந்த உடைகளில் அவருக்குப்பிடித்தமான ஒரு கம்பளி துணியில் தயாரிக்கப்பட்ட சேட் இருந்தது. அது மண்நிறமானது. பழுப்புவெள்ளை நிறத்தில் சட்டங்கங்கள் இடப்பட்டிருந்து. அவருக்கு எப்போதும் அது தேவையாய் இருந்தது. இது இல்லாத நாட்களில் இரவு உடையுடனேயே முழு நாளையும் கழித்தார்.
அன்றொருநாள் காலை, அவரைப் பராமரித்து, அவரது படுக்கையில் முதுக்கு இரண்டு தலையணைகளை வைத்தபின் அவரை உட்காரவைத்தேன். காலையுணவினை உண்டபின், காப்பி வேண்டும் என்றார். எடுத்துவந்து கொடுத்தேன். சிறுகுழந்தைபோல் கண்ணை மூடிச் சுவைத்துக்குடித்தார்.
நான் வேறு ஒருவரை பராமரிக்கச்சென்றுவிட்டு மீண்டும் வந்தபோது உட்கார்ந்திருந்தபடியே போய்விட்டிருந்தார்.
தாதிகள் அந்த மரணத்தைப்பற்றி அலட்டிக்கொள்ளவில்லை.
அன்று அவரது நண்பர்கள் அவரைச் சந்திக்க வந்திருந்தார்கள். அவர் இறந்துவிட்டார் என்று அறிவிக்கப்பட்டபின், அவர்களை உடலங்களைப் பாதுகாக்கும் அறைக்கு அழைச்செல்ல எனக்கு உத்தரவு வந்தது. அவர்களுக்குப் பின்னால் கதவருகில் நான் நின்றிருந்தேன்.
மனிதர் அத்தனை குளிரிலும் கவலையேதுமின்றி அமைதியாய் தூங்கிக்கொண்டிருந்தார்.
இத்தனை வருடங்களின்பின் ஏன் அவர் நினைவில்
வந்தார் என்பதற்கு என்னிடம் பதில் இல்லை.
வாழ்க்கையை அசைபோட பதில் அற்ற கேள்விகளும் அவ்வப்போது அவசியம்தான்.

பதில் அற்றவை


1990ம் ஆண்டுப்பகுதியில் ஒரு முதியோர் இல்லமொன்றில் இரவுநேர உதவியாளராக பணியாற்றிக்கொண்டிருந்த காலம்.
அங்கு முதலாம் உலகமகாயுத்தத்தில் விமானியாக பங்கு கொண்ட ஒருவர் தங்கியிருந்தார். அந்நாட்களில் அவரின் வயது 100ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. அவரின் தோல் உடம்புடன் ஒட்டியிருக்கும். நரம்புகள் ஒரு பெருமரத்தின் வேர்கள் மண்ணில் புடைத்துப் படர்ந்திருப்பதைப்போலவும் நாணலின் மென்மையுடன், தும்பு போன்ற கனமற்ற மென்மையான முடியும் அவருக்கிருந்தது.
பகலில் தூங்கி இரவில் விழித்திருக்கும் மனிதர், அவர்.
என்னைக் கண்ட அன்று «நீ எந்த நாட்டைச்சேர்ந்தவன்» என்றார். «ஸ்ரீலங்கா» என்றதும் சிந்தனையில் ஆழ்ந்தார். அவரிடம் இருந்த சுழழும் பூமியில்; காண்பித்தபோது «சிலோன்» என்று அவர் கூறியபோது ஆரம்பித்தது எங்கள் நட்பு.
சாமம் சாமமாய் பேசிக்கொண்டிருப்போம். அவர் பேசியபடியே சற்று அயர்ந்துவிடுவார். சற்று நேரத்தில் மீண்டும் பேசுவார். அந்நாட்களில் என்னிடம் பேச எதுவுமிருக்கவில்லை. அவரது அனுபவம் அவருக்கு பேசுவதற்கு பலதையும் கொடுத்திருந்தது. உறுண்டோடும் நூற்பந்தைப்போன்று அவர் பேச்சும் நீண்டுகொண்டே இருக்கும்.
சில நேரங்களில் சக்கரநாற்காலியில் இருத்தி அவரை ஒடுக்கமான நீண்ட விறாந்தைகளின் ஊடாக அழைத்துப்போகச் சொல்வார். இரவில் தனிமையில், நோய்மையில் அரற்றும் மனிதர்களின் அறைகளைக் கடந்து செல்வோம். முதுமை கொடுமையானது ஆனால் நான் கொடுத்துவைத்தவன். சுகதேகியாய் இருக்கிறேன் என்பார்.
முதுமையின் வாசனை நிரம்பிய அவரது அறையினுள் அவரின் படுக்கையின் அருகே உட்கார்ந்திருப்பேன். அவர் படுக்கையில் சாய்ந்திருந்தபடியே பேசிக்கொண்டிருப்பார்.
எப்போதும் ஒருவிடையத்தை பேசி முடிக்கமாட்டார். உண்ணும்போது கறிகளைக் தொட்டுக்கொள்வதுபோல பல கதைகளை பேசிக்கொண்டிருப்பார். அவற்றிற்கிடையே உள்ள தொடர்பை ஊகிப்பது எனது திறமையைப்பொறுத்தது என்று அவர் நினைத்திருக்கக்கூடும்.
எனக்காக அவர் தனது மாலையுணவின் இனிப்பினை சேமித்து வைத்திருப்பார். அவர் புளிப்புச் சுவையின் பிரியர்.
முதுமை மனிதர்களை பேசவைக்கிறது. பேசவேண்டிய அவசியம் அவர்களை பேரவா போன்று பற்றிக்கொள்கிறது. வாழ்கை முடிந்துபோவதற்கிடையில் பேசி முடித்துவிடவேண்டும் என்று அவசரப்படுகிறார்கள். யாராவது பேசி முடித்திருக்கிறார்களா?
அவரின் மனைவி;, ஒரு மகன், போர்க்காலவாழ்வு, காயங்கள், பிற்காலத்தில் இன்னொரு பெண்ணில் ஏற்பட்ட காதல், நிராசைகள், மனையின் இழப்பு, மகனின் இழப்பு, முதிர்ந்த வயதுக்காதலின் சுவை, வலி என்று வாழ்க்கையைப்பேசிக்கொண்டிருப்பார். அவருடைய வாழ்வின் அத்தியாயங்களை என்னுடன் பகிர்ந்துவிட்டு, நீ சிறியவன். பொறுத்திரு என்பார்.
காலம் உனக்கும் கற்பிக்கும் என்ற அவரது வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை இன்று உணரமுடிகிறது.
ஒருநாள் இரவு வேலைக்கு வந்தபோது மனிதர் விடைபெற்றுவிட்டார் என அறியக்கிடைத்தது. அவரது அறைக்குள் சென்றேன். ஒரு சில மணிநேரங்களுக்குள்ளேயே அந்த அறையில் இருந்து அவரது பொருட்கள் அகற்றப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு இன்னொருவருக்கு தயாராக இருந்தது.
இருப்பினும் என்னால் அவரது வாசனையை நுகர முடிந்தது.
இன்று ஏறத்தாழ 27 ஆண்டுகளின் பின் அவர் ஏன் நினைவிற்கு வந்தார் என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. இருப்பினும் அவரது வெண்முடியின் மென்மையை, அவரது கையில் வியாபித்திருந்த கருநீல நரம்புகளை, விரல்களில் இருந்த சுருக்கங்களை ஏன் அவரது வாசனையைக்கூட உணர முடிகிறதே?
ஏன்? எப்படி?
சில கேள்விகளுக்கு பதில் இல்லை. அவற்றிற்கான பதில் கிடைக்காதிருப்பதே வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தருகிறது.

விழலுக்கு துலாமிதிக்கிறோமா?


கலை கற்பதற்கும், ரசனைக்குமுரியது. ஒரு படைப்பு பொதுவெளியில் முன்வைக்கப்படும்போது அதுபற்றிப் பேசவும், உரையாடவும் விமர்சிக்கவும்படுகிறது.
விமர்சனங்கள் பொதுவெளியில் முன்வைக்கப்படும்போது அவற்றிற்கான எதிர்வினைகளும் பொதுவெளியிலேயே முன்வைக்கப்படவேண்டும். மூடிய நான்கு சுவர்களுக்கிடையில் அல்ல. அப்போதுதான் அவை படைப்பு முன்வைக்கப்பட்ட சமூகத்தைச் சென்றடைகின்றன.
படைப்புகள் சமூகப்பிரக்ஞையுடன் உருவாக்கப்படவேண்டும் என்பது அடிப்படை அறம்.
அது கவனிக்கப்படவில்லை அல்லது போதாமையாக உள்ளது என்று பொதுவெளியில் சுட்டப்படுவதை மறுத்துரைக்கும் உரிமை படைப்பாளிக்கு உண்டு. இதுவும் பொதுவெளிக்குரியதொன்றே.
ஒரு படைப்பின்மீது விமர்சனங்கள் முன்வைக்கப்படும்போது, அப்படைப்பாளி தனது சுயவிமர்சனத்தினுாடாக அவை ஏற்றுக்கொள்ளத்தக்கவை, சமூகம்பற்றியபுரிதலில் மேலதிக சிந்தனையைச் செலுத்தியிருக்கவேண்டும், படைப்பானது இன, மத, பால் மேலாதிக்கச்சிந்தனையிலிருந்து படைக்கப்பட்டிருக்கிறது அல்லது சமூகச்சிந்தனையின்றி செதுக்கப்பட்டுள்ளது என்பதை உணரும்போது அவைபற்றிய தமது கருத்துக்களை பொதுவெளியில் முன்வைப்பதே விருத்திமனப்பான்மையுடைய படைப்பாளியின் செயற்பாடாக இருக்கமுடியும்.
அதுவே படைப்பாளியின் உண்மைத்தன்மையையும் பக்குவத்தினையும் படைப்பையும் காலங்கடந்தும் பேசவைக்கும் செயல்.
நான்கு சுவர்களுக்கிடையே நடைபெறும் சம்பாசணைகளின்போதும் தனிப்பட்ட உரையாடல்களையும் அடிப்படையாகக்கொண்டு 'அந்த விமர்சனத்தை ஏற்றுக்கொண்டேன்“ என்பதும் அதையே பொதுவெளியில் பேச மறுப்பதும் தனது சமூகப்பிரக்ஞையற்ற, மேலாதிக்கச்சிந்தனையுடைய படைப்புக்களை இலகுவாகக் கடந்துகொள்ளும் நடவடிக்கைகள் மட்டுமல்ல பொறுப்புக்கூறலில் இருந்து தப்பித்துக்கொள்ளும் சுயவிமர்சனமற்ற முயற்சிகளே இவை.
விமர்சனத்தின்மீதான படைப்பாளியின் விளக்கம், ஒரு தனிப்பட்ட மனிதனுக்கானதல்ல. அது படைப்பு முன்வைக்கப்பட்ட பொதுத்தளத்திற்குரியது. எனவேதான் பொதுதளத்தில் பதிலளிப்பது அவசியமாகிறது.
எமக்கென்றாரு தரமுள்ள கலையிலக்கியத்தளத்தை உருவாக்குவோம் என்று மேடைகளிலும் ஒலிவாங்கியைக் காணும்போதெல்லாமும் உரக்கப்பேசுவதாலும் கவிதைபாடுவதாலும் அங்கதங்களை எழுதுவதாலும் பயனில்லை.
நாம் அதை தெளிவான சிந்தனையோடு வடிவமைக்கவேண்டும். வடிவமைப்பில் பங்குகொள்ளவேண்டும், கற்பதற்கும் உரையாடுவதற்கும் விசாலமான உரையாடல்களை உருவாக்கவேண்டும்.
விசாலமான சிந்தனையின் அடிப்படையில் இயங்கும் கருத்தாடுதலுக்கான வெளியை உருவாக்கி, அதனை சுயாதீனமாக இயங்கவிடுவதும் அதேவேளை வியாபாரிகளிடம் அவதானமாக இருப்பதும் அவசியமாகிறது.
இதிலெல்லாம் பங்குகொள்வதை மறுத்தபடியே ஈழத்தமிழ் கலையிலக்கியத்தினை வளர்க்கவேண்டும் என்பதெல்லாம் விளலுக்கு துலா மிதிக்கும் நடவடிக்கைகளே.

அம்மாவின் 84வது அட்டகாசம்

நான் ஏன் அம்மாவைப்போல் இல்லை என்று சிந்திப்பதுண்டு.

அம்மாவின் எழுத்து முத்து முத்தானது. எனது எழுத்து கோழிக்கிளறல்.
அம்மா அதிகம் பேசமாட்டார். நான் உணவைக் கண்ட பெருங் காகக்கூட்டத்திற்கு சமமானவன்.
பலரின் மனதில் அம்மா சிம்மாசனமிட்டு உட்கார்ந்திருக்கிறார். நான்.... அது வேண்டாமே.
அம்மா மிக நிதானமானவர். நான் அவசரக்குடுக்கை.
அம்மா தாவரபட்சணி. நான் வாய்க்குள் எது செல்கிறதோ அதை விழுங்கும் விலங்கு.
அம்மா கடவுள் பக்தியுள்ளவர். நான் அப்படி இல்லை.
அம்மாவிற்கு கோபம் வருவது மிக மிக அரிதானது. எனக்கு கோபம் வராத நாட்கள் மிக மிக அரிதானவை.
இப்படி அம்மாவிற்கும் எனக்கும் ஏகத்திற்கும் வித்தியாசங்கள் இருக்கின்றன.
அம்மாவின் மூன்று குழந்தைகளில் அம்மா எனக்காகத்தான் அதிகம் வருந்தியிருப்பார், அழுதிருப்பார்.
நான் உருப்படுவேனோ என அம்மாவிற்கும் எனது பேரசான் பிரின்ஸ்சேருக்கும் 1980களில் பெரும் சந்தேகம் இருந்தது. இப்போதும் இருக்கும் என்றே நினைக்கிறேன்.
நான் முதன் முதலில் கடிதம் எழுதியது அம்மாவிற்குத்தான். இரண்டாம் வகுப்பில் இருந்து 9ம் வகுப்புவரையில் விடுதியில் தங்கியிருந்ததால் பல நூறு கடிதங்கள் எழுதியிருக்கிறேன். அம்மா, இப்போதும், அந்நாட்களைப்போன்று எனது எழுத்துப்பிழைகளை திருத்திக்கொண்டேதான் இருக்கிறார்.
அம்மாவின் மனதில் எவரும் சமம். அனைவரையும் கண்ணியமாகவும் அன்பாகவுமே நடாத்துவார். எவரது மனதையும் அவர் காயப்படுத்தியதில்லை.“
அம்மாவின் கீழ் தொழில்புரிந்த ஒரு தொழிலாளியை பதின்மவயதுத் திமிரில் பெயர்கொண்டு அழைத்தேன். அன்று மாலை கிணற்றடியில் பெரியவர்களை இப்படி அழைப்பது சரியா? என்று மட்டும்தான் கேட்டார். அன்றிலிருந்து இன்றுவரை வயதில் மூத்தவர்களைப் பெயர்கூறி அழைக்க முடிவதில்லை என்னால்.
காதலிக்கிறேன் என்றதும் திருமணம்பேசிச் சென்றதும் அவரே. விவாகரத்துவரை வாழ்க்கை சென்றிருக்கிறது என்று கூறியபோது அமைதியாகக் கேட்டுக்கொண்டிருந்தார். நான் அவர் மடியில் தலைவைத்தபடியே அழுதுகொண்டிருந்தேன். உனக்கு எது சரியெனத்தோன்றுகிறதோ அதைச்செய் என்றுவிட்டு முடியில்லாத தலையைக் கோதிவிட்டார்.
எந்த மனிதரையும் முற்கற்பிதங்களுடன் அம்மா அணுகுவதில்லை. ஏறாவூரில் எங்கள் வீட்டினுள் எவரும் வரலாம் செல்லலாம். தூர திசையில் இருந்து வந்திருந்த அம்மாவிலும் பல வயதுகூடிய அம்மாவின் மூத்த சகோதரிக்கு, நான் எனது மூர்க்க குணத்தைக் காண்பித்தபோது «அவரின் உலகம் அப்படியானது. பேசாமல் இரு. அவரை மாற்ற முடியாது. அவரால் எங்கள் வீட்டையும் மாற்றமுடியாது» என்றார். அவருக்கு மனித மனங்களைவிட முக்கியமானது எதுவுமில்லை. அம்மாவிடம் இருந்து கற்றுக்கொண்ட சிலவற்றில் இது மிக முக்கியமானது.
எங்கள் வீட்டில் 40 வருடங்களுக்கு மேலாக சிங்களப் பெண் ஒருவர் வாழ்ந்திருந்தார். ஈன்றதாயிலும் அன்பாய் எங்களை வளர்த்ததும் அவரே. அவரது குடும்பமும் எங்கள் குடும்பமும் மிகவும் நெருக்கமானவர்கள். அம்மாவிலும் அதிக கண்டிப்பானவர் அவர்.
அவர் கீழே விழுந்து காயப்பட்டு, அவரை அவசரகால வண்டியில் வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும்போது, அவரின் கால் அம்மாவின் மடியிலும், தலை எனது மடியிலும் இருந்தது. அவர் உயிர்பிரிந்தபோதும் அப்படியே. அன்று அம்மா அவரின் பாதங்களைப்பற்றி வணங்கியது இன்றும் நினைவில் இருக்கிறது.
அம்மாவைக் கலாய்ப்பதில் என்னை வெல்ல யாரும் இல்லை. அவரை எப்படி வம்பிற்கிழுப்பது என்பது எனக்குத் தெரியும். சிலவேளைகளில் «வாயைப்பொத்து» என்பார். «ஆ… ஆ… சோதிக்கு கோபம் வந்துவிட்டது» என்றால் பொக்கைவாய் சிரிக்கும். «போடா அங்கால» என்பார்.
அம்மாவுடன் சில மாதங்கள் வாழக்கிடைத்தபோது «அம்மாவின் அட்டகாசங்கள்» என்னும் தலைப்பில் அம்மாவுடனான அனுபவங்களை எழுதியிருந்தேன். அதை அவ்வப்போது வாசித்துவிட்டு «எழுத்துப்பிழையின்றி எழுதப்பழகு» என்பார்.
எனது தம்பியின் குடும்பத்தவர், தங்கை குடும்பத்தவர்போன்று நான் அம்மாவுடன் தொடர்பில் இருப்பதில்லை. அவரே எனக்கு நேரகாலம் இன்றி தொலைபேசுவார். அதிகாலை 4 மணிக்கு தொலைபேசி வரும். «அம்மா, நேரம் அதிகாலை 4 மணி» என்றால்… இங்கு நேரம் காலை 8 மணி என்பார் அப்பாவியாக. தொடர்ந்து நான்கு கேள்விகள் கேட்பார்.
சுகமாக இருக்கிறாயா?
சந்தோசமாக இருக்கிறாயா?
என்ன சாப்பிட்டாய்?
எப்போ இங்கு வருவாய்?
அம்மாவிற்காக முதல் மூன்று கேள்விகளுக்கும் பொய்களை பதிலாகக் கூறியிருக்கிறேன். நான்காவதற்கு பொய்கூற முடிவதில்லை.
நேற்று முன்தினமும் இதையே கேட்டார். ‘வருகிறேன்’ என்றிருக்கிறேன்.
அம்மாவின் சந்ததியில் அம்மாவே எஞ்சியிருக்கிறார். அம்மாவை முதுமை முழுவதுமாக விழுங்கிவிட்டது. நினைவுகள் அறுந்து அறுந்து அல்லாடுகின்றன. அயர்ச்சி அவரை ஆட்கொண்டிருக்கிறது. பேச்சில் தொடர்பு அற்றிருக்கிறது. தனது இரட்டைத் தங்கையை அடிக்கடி நினைவுகூர்வார். அப்பாவும் அவ்வப்போது வந்துபோவார்.
தனது பேரக்குழந்தைகளின் பெயர்கள் தெரிந்திருந்தாலும் அவ்வப்போது நினைவூட்ட வேண்டியிருக்கிறது. யாருடைய குழந்தைகள் அவை என்பதிலும் குழப்பம் உண்டு. அவருடைய செயற்பாடுகளில் சிறு மாற்றம் ஏற்படினும் அவர் தடுமாறுகிறார். முன்பைப்போன்று எனக்கு தொலைபேசவும் மறந்துவிடுகிறார்.
அம்மா காலத்துடன் கரைந்துகொண்டிருக்கிறார்.
84வயது என்பது இலகுவல்ல.
அப்பாவின் அழகிய ராட்சசிக்கு அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.