பதில் அற்றவை


1990ம் ஆண்டுப்பகுதியில் ஒரு முதியோர் இல்லமொன்றில் இரவுநேர உதவியாளராக பணியாற்றிக்கொண்டிருந்த காலம்.
அங்கு முதலாம் உலகமகாயுத்தத்தில் விமானியாக பங்கு கொண்ட ஒருவர் தங்கியிருந்தார். அந்நாட்களில் அவரின் வயது 100ஐ நெருங்கிக்கொண்டிருந்தது. அவரின் தோல் உடம்புடன் ஒட்டியிருக்கும். நரம்புகள் ஒரு பெருமரத்தின் வேர்கள் மண்ணில் புடைத்துப் படர்ந்திருப்பதைப்போலவும் நாணலின் மென்மையுடன், தும்பு போன்ற கனமற்ற மென்மையான முடியும் அவருக்கிருந்தது.
பகலில் தூங்கி இரவில் விழித்திருக்கும் மனிதர், அவர்.
என்னைக் கண்ட அன்று «நீ எந்த நாட்டைச்சேர்ந்தவன்» என்றார். «ஸ்ரீலங்கா» என்றதும் சிந்தனையில் ஆழ்ந்தார். அவரிடம் இருந்த சுழழும் பூமியில்; காண்பித்தபோது «சிலோன்» என்று அவர் கூறியபோது ஆரம்பித்தது எங்கள் நட்பு.
சாமம் சாமமாய் பேசிக்கொண்டிருப்போம். அவர் பேசியபடியே சற்று அயர்ந்துவிடுவார். சற்று நேரத்தில் மீண்டும் பேசுவார். அந்நாட்களில் என்னிடம் பேச எதுவுமிருக்கவில்லை. அவரது அனுபவம் அவருக்கு பேசுவதற்கு பலதையும் கொடுத்திருந்தது. உறுண்டோடும் நூற்பந்தைப்போன்று அவர் பேச்சும் நீண்டுகொண்டே இருக்கும்.
சில நேரங்களில் சக்கரநாற்காலியில் இருத்தி அவரை ஒடுக்கமான நீண்ட விறாந்தைகளின் ஊடாக அழைத்துப்போகச் சொல்வார். இரவில் தனிமையில், நோய்மையில் அரற்றும் மனிதர்களின் அறைகளைக் கடந்து செல்வோம். முதுமை கொடுமையானது ஆனால் நான் கொடுத்துவைத்தவன். சுகதேகியாய் இருக்கிறேன் என்பார்.
முதுமையின் வாசனை நிரம்பிய அவரது அறையினுள் அவரின் படுக்கையின் அருகே உட்கார்ந்திருப்பேன். அவர் படுக்கையில் சாய்ந்திருந்தபடியே பேசிக்கொண்டிருப்பார்.
எப்போதும் ஒருவிடையத்தை பேசி முடிக்கமாட்டார். உண்ணும்போது கறிகளைக் தொட்டுக்கொள்வதுபோல பல கதைகளை பேசிக்கொண்டிருப்பார். அவற்றிற்கிடையே உள்ள தொடர்பை ஊகிப்பது எனது திறமையைப்பொறுத்தது என்று அவர் நினைத்திருக்கக்கூடும்.
எனக்காக அவர் தனது மாலையுணவின் இனிப்பினை சேமித்து வைத்திருப்பார். அவர் புளிப்புச் சுவையின் பிரியர்.
முதுமை மனிதர்களை பேசவைக்கிறது. பேசவேண்டிய அவசியம் அவர்களை பேரவா போன்று பற்றிக்கொள்கிறது. வாழ்கை முடிந்துபோவதற்கிடையில் பேசி முடித்துவிடவேண்டும் என்று அவசரப்படுகிறார்கள். யாராவது பேசி முடித்திருக்கிறார்களா?
அவரின் மனைவி;, ஒரு மகன், போர்க்காலவாழ்வு, காயங்கள், பிற்காலத்தில் இன்னொரு பெண்ணில் ஏற்பட்ட காதல், நிராசைகள், மனையின் இழப்பு, மகனின் இழப்பு, முதிர்ந்த வயதுக்காதலின் சுவை, வலி என்று வாழ்க்கையைப்பேசிக்கொண்டிருப்பார். அவருடைய வாழ்வின் அத்தியாயங்களை என்னுடன் பகிர்ந்துவிட்டு, நீ சிறியவன். பொறுத்திரு என்பார்.
காலம் உனக்கும் கற்பிக்கும் என்ற அவரது வார்த்தைகள் எவ்வளவு உண்மையானவை என்பதை இன்று உணரமுடிகிறது.
ஒருநாள் இரவு வேலைக்கு வந்தபோது மனிதர் விடைபெற்றுவிட்டார் என அறியக்கிடைத்தது. அவரது அறைக்குள் சென்றேன். ஒரு சில மணிநேரங்களுக்குள்ளேயே அந்த அறையில் இருந்து அவரது பொருட்கள் அகற்றப்பட்டு, சுத்தப்படுத்தப்பட்டு இன்னொருவருக்கு தயாராக இருந்தது.
இருப்பினும் என்னால் அவரது வாசனையை நுகர முடிந்தது.
இன்று ஏறத்தாழ 27 ஆண்டுகளின் பின் அவர் ஏன் நினைவிற்கு வந்தார் என்பதற்கு என்னிடம் பதில் இல்லை. இருப்பினும் அவரது வெண்முடியின் மென்மையை, அவரது கையில் வியாபித்திருந்த கருநீல நரம்புகளை, விரல்களில் இருந்த சுருக்கங்களை ஏன் அவரது வாசனையைக்கூட உணர முடிகிறதே?
ஏன்? எப்படி?
சில கேள்விகளுக்கு பதில் இல்லை. அவற்றிற்கான பதில் கிடைக்காதிருப்பதே வாழ்க்கைக்கு அர்த்தத்தைத் தருகிறது.

3 comments:

  1. அவர் வாழ்க்கையின் அனுபவம் குறித்து உங்களிடம் சொல்லிய பகுதியினை உங்கள் வாழ்க்கையில் நீங்கள் அடைந்திருக்கும் வேளை, அவர் நினைவும் வந்திருக்கலாம் என்று தோன்றுகிறது

    ReplyDelete
  2. சிலரின் தனிமை பல கதைகள் சொல்லும். கேட்க நேரம் இன்றித்தான் நாம் பலர்!

    ReplyDelete

பின்னூட்டங்கள்