முகமட்இன் கழுதை

இருண்டுவிட்டிருந்த மலையுச்சிப்பகுதியில் குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. அங்கிருந்த பாறையொன்றில் நாம் குந்தியிருந்தோம்.

குப்பை பிளாஸ்டிக் குப்பைகள் காற்றின் வழி சென்றுகொண்டிருந்தன. முகமட் தனது சிகரெட்டினை உயிர்ப்பித்து உள்ளே இழுத்து, ஆனந்தித்து, வெளியே விட்டான். அவன் கண்கள் மூடியிருந்தன.

எனக்கு குளிர்கிறது என்றான் இத்தாலிநாட்டு வபிரீசியோ. அதை வழிமொழிந்தான் துருக்கிய அர்கான். நானும், எனக்கும் என்று முணுமுணுத்தேன்.

முகம்மட் தனது கழுதையில் ஏறிக்கொண்டு அதன் வயிற்றில் இரண்டு குதிக்கால்களாலும் இடித்தான். நாளை மதியம் சந்திக்கிறேன் என்றுவிட்டு கழுதையோடு கதைத்தபடியே அதன்மேல் உட்கார்ந்திருந்தான். கழுதை நடக்கத்தொடங்கியது.

அவன் சற்றுத்தொலைவு சென்றதும் அவன் கழுதையில் உட்கார்ந்திருந்தது எமன் எருமையில் சென்றுகொண்டிருப்பது போலிருந்தது.

நாம் நடந்து தங்குமிடத்திற்கு வந்ததும் துருக்கிய அர்கான் தேனீர் வேண்டுமா என்றான். ஆம் என்று தலையை ஆட்டினேன் குளிருக்கு இதமான தேனீருடன் ரொட்டியை நனைத்து நனைத்து வாய்க்குள் போட்டுகோண்டேன். வயிற்றுக்கு இதமாயிருந்தது.

இன்று அந்த மலைப்பகுதிக்கு முகமட் எங்களை அழைத்துப்போயிருந்தான். அவனது பெரியப்பாவின் தோட்டம் அங்கிருந்தது. திராட்சைப்பழங்கள் கொத்துக் கொத்துக்கொத்தாய் தொங்கிக்கொண்டிருந்தன. ஒருபகுதியில் மரக்கறிகள். ஒருபகுதியில் பழங்கள். இன்னொரு பகுதியில் ஒலீவ் மரங்கள். மூன்று மணிநேரமாய் மலையேறி, நடந்து, அலுத்து வந்திருக்கிறோம்.

முகம்மட்க்கு 40 வயதிருக்கலாம். 4 குழந்தைகள். ஒரு மனைவி. எங்களுக்கு மரக்கறி, இறைச்சி, பால், போன்ற தினசரி அவசியமான பொருட்களை வழங்குவது அவனது வேலை. அவனது பெரியப்பா கடைவைத்திக்கிறார்.

இறுதி இன்டிபாடாவின்போது (எழுச்சிக்காலம்) சிலகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவன். ஒரு வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்தபின் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோது கைதுசெய்யப்பட்டானாம். யசீர் அரபாத்தின் PLO இயக்கத்தின் ஆதவாளன். பெரியப்பாவின் தோட்டத்தைப் பராமரிப்பதும் அவரது கடையைப் பார்த்துக்கொள்வதும் அவனது தொழில்.

பெரியப்பாவின் கடை ஒரு காவற்கோபுரத்திற்கு மிக அருகில் இருந்தது. அந்த வீதியை சில வருடங்களுக்கு முன்பாக வாகன போக்குவரத்திற்குத் தடைசெய்திருந்தார்கள். வீதியின் குறுக்கே பெருங்கற்கள் போடப்பட்டிருந்தன.

பெரியப்பாவின் வீட்டிற்கு காவற்கோபுரத்தினைக் கடந்துசெல்லவேண்டும். அங்கு கடும் சோதனையுண்டு. கேள்விகள் உண்டு. கேலிகள், அவமானப்படுத்தல் உண்டு. இவன் சிறைமீண்ட செம்மலாகையால் இராணுவத்தினரிடம் பெரும் புகழும், அவர்களின் கழுகுக்கண்களும் இவன்மேல் இருந்தது.

ஒருமுறை யாரோ இளம் விடலைகள் காவற்கோபுரத்திற்கு கல்லெறிந்துவிட்டு ஓட, அவ்வழியால் வந்தான் முகமட். நேரமும், சந்தர்ப்பமும் பிழை. புழுதியில் பிரட்டியெடுத்து உதைத்து மூக்கை உடைத்து இரத்தம் வழிய வழிய அனுப்பினார்கள். கத்தியபடி வந்தான். அரபு மொழில் ஏதோ கத்தினான். அவர்களை சபித்திருப்பான் என்றே நினைக்கிறேன்.

தண்ணீரால் முகத்தைக்கழுவிட்டு புழுதியைத் தட்டிவிட்டுக்கொண்டான். இதற்கிடையில் விபரம் அறிந்த பெரியப்பா அவசர அவசரமாக வந்துகொண்டிருந்தார். சற்றுநேரத்தில் ஒரு வாகனத்தில் வைத்தியசாலைக்கு ஏற்றிப்போனார்கள்.

அன்று மாலை விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் சந்தித்தோம். வாயில் இருந்து ராகி (மதுபான வகை) வாசனை வந்தது. சர்வரோக நிவாரணியல்லவா.

மறுநாள் காலை ஒரு சாலைவிபத்து. 14 மாணவிகளை ஒரு வாகனம் மிதித்துவிட்டிருந்தது. அங்கு தற்செயலாக நின்றிருந்தானாம் என்றான். கச்சல் கோப்பியுடன் நடந்ததை விபரித்தான். ஒரு பெண்ணுக்கு காலை அகற்றிவிட்டார்களாம். இருவருக்கு பாரதூரமான காயங்கள். மற்றையவர்கள் சிறுகாயங்களுடன் தப்பிவிட்டார்கள் என்றான். கிராமத்தினுள் எது நடந்தாலும் இவனுக்கு அது தெரியவரும். சமூகத்தில் அக்கறையுள்ளவன்.

அன்று வெள்ளிக்கிழமை. வழமைபோல் தொழுகையின் பின் ஆர்ப்பாட்டம். கல்லெறி, கண்ணீர்ப்புகைக்குண்டு, துப்பாக்கிச்சூடு. எதிர்பாராத நேரத்தில் கண்ணீர்ப்புகைக்குண்டு எமக்கருகில் விழுந்தது. முதுகுப்பையில் இருந்த வாயு தடுப்பு முகமூடியை அணிவதற்கிடையில் எனது கண்களுக்குள் புகை புகுந்தது. என்னை அகற்றிவிட்டு நண்பர்கள் மற்றையவர்களுக்கு முதலுதவியளித்தக்கொண்டிருந்தார்கள்.

அன்று மாலை கண்கள் எரிய எரிய, கண்ணீர்வழிய வழிய உடகார்ந்திருந்தேன். நணபர்கள் கைச்சல் கொப்பியை உறுஞ்சிக்கொண்டிருந்தார்கள். கழுதையில் பேரரசன் பவனிவருவதுபோன்று சிரித்தபடியே வந்தான் முகமட்.

“எங்களுக்கு இது பழக்கமானது. நீ ஏன் அங்கு வந்தாய்” என்ற கேள்விக்கு “புதினம் பார்ப்பதற்கு” என்றேன். விழுந்து விழுந்து சிரித்தான். “இனி என்னுடன் வா. பாதுகாப்பான இடத்தில் உன்னை நிறுத்துகிறேன். அங்கிருந்து புதினம்பார்.” என்றுவிட்டு கழுதையில் முதுகில் இருந்த பையில் இருந்த பழங்களை எம்முடன் எம்முடன் பகிர்ந்துகொண்டான். தோலை கழுதைக்குக் கொடுத்தான். அது மறுப்பேதும் சொல்லவில்லை.

கழுதையின் முதுகில் இருந்த ஒரு பையில் இருந்து ராகி போத்தலை எடுத்து நீட்டினான். முகமட் கடைதிறந்துவிட்டான் என்றான் அர்கான். நடமாடும் கடை என்று திருத்தினான் முகமட்.

மாலைநேரத்து குளிருக்கு ராகி இதமாக இருந்தது. கண் எரிச்சலின் வலி மறையத்தொடங்கியது. தனக்கு ஐந்தாவது குழந்தை கிடைக்கப்போகிறது என்றான். உனக்கு மகன்தான் பிறப்பான் என்றேன். எனக்கும் மகன்தான் வேண்டும் என்றான். நீ வீட்டுக்கு போனாலே உன் மனைவி கர்ப்பமைடைகிறாள் என்றான் அருகில் இருந்த அர்கான், நாம் அனைவரும் சிரித்தபடியே ரொட்டியும் கடலைக்கறியும் உண்டோம்.

பெரியப்பாவுக்கு மூத்திரக்கடுப்பு என்பதால் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். நாளை மாலை அவரைப் பார்க்கவேண்டும். அவரது வீட்டுக்கான வேலைகள் உண்டு. சற்றுநெரத்தில் மாலைநேரத்து தொழுகை முடிந்ததும் கடைக்குச் சென்று, கடையை மூடி அங்குள்ள பையனை வீட்டுக்கு அனுப்பவேண்டும். பணத்தை பெரியம்மாவிடம் கொடுப்பதற்காக எருமைகளின் காவலரணை கடந்துசெல்லவேண்டும், நான் வருகிறேன் என்றுவிட்டு எழுந்தான்.

“தேனீர் அருந்திவிட்டுச் செல்” என்றான் அர்க்கான். “துருக்கியர்களுக்கு வேறு வேலை இல்லை. எப்போதும் தேனீர்தான்” என்றபடியே தேனீரை அருந்திவிட்டு புறப்பட்டான்.

“கழுதையேற்றம் கற்றுக்கொள்ளவேண்டும் முகமட் ”என்றேன். “கழுதைகளுக்கு அது ஒன்றும் பெரியவிடயமில்லை” என்று தனது நகைச்சுவையைக் காட்டிவிட்டு, கழுதையின் வண்டியில் குதிக்காலால் குத்தினான். அது நடக்கத்தொடங்கியது. மீண்டும் ஒரு குத்து. அது மெதுவாய் ஓடத்தொடங்கியது. அப்போதும் அந்தக் காட்சி எமன் மெதுவாக ஓடுவதுபோலவே இருந்தது. என்னை ராகி மயக்கியிருந்தது. அர்க்கான் என்னை அழைத்துப்போய் கண்களை கழுவிவிட்டபின் படுக்கவைத்தான். விடியும்வரை எதுவுமறியாதிருந்தேன். அதிகாலை என்னை எழுப்பும் பாங்கொலியும் என்னை அன்று எழுப்பவில்லை. 9மணிபோல் எழுப்பினேன். கண்னெரிவு குறைந்திருந்தது.

நேற்றைய பின்னிரவு ஒரு வெடிச்சத்தம் கேட்டதாம்.

காலையில் இராணுவத்தை தாக்கவந்த ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார் என்றன செய்திகள்.

கழுதையில் வந்தது சந்தேகமே இல்லாமல் யமன்தான்.

இந்த வெள்ளிக்கிழைமை முகமட்இன் மகன் கல்லெறிய ஆரம்பிப்பான்.

இன்னும் 8 மாதங்களில் இன்னொரு முகமட் மீண்டும் பிறக்கக்கூடும்.

தொலையும் காலம்

அம்மாவை அவரது வயோதிபம் முழுவதுமாக உள்ளே இழுத்துக்கொண்டுவிட்டது. இறுதியாக ஒன்றரை வருடங்களுக்கு முன் சந்தித்த அம்மா இப்போது இல்லை. நினைவுகள் சில கணங்களுக்கு ஒரு முறை அறுந்து அறுந்து வருகின்றன. ஒரு கணம் மகிழ்ச்சியாயும் மறு கணம் அயர்ச்சியாயும் அவரது மனநிலை மாறிக்கொண்டிருக்கிறது.

சில நாட்களுக்கு முன் தொலைபேசினேன். என்னை மறந்துபோய் இருந்தார். “உங்கள் மகன் சஞ்சயன்” என்று நினைவூட்டினேன். சஞ்சயன் அவரது நினைவில் இல்லை. சற்று நேரம் உரையாடியபின் “எப்போ வருவாய்” என்றார் பெருத்த எதிர்பார்ப்பான, குழந்தைத்தனமான குரலில். கண்கலங்கிப்போனது எனக்கு.

இன்று தொலைபேசினேன். என்னை நினைவிருந்தது. அவரது வயது அவரது நினைவில் இல்லை. எனக்கு எத்தனை வயது என்றார். எனது வாய் சும்மா இருக்குமா.

“உங்களுக்கு 30 வயது” என்றேன்.
“அவ்வளவுதானா” என்றார் ஆச்சர்யத்துடன். “இல்லையம்மா, உங்களுக்கு 85 வயது” என்றேன். “அவ்வளவு வயதாகிவிட்டதா” என்று ஆச்சர்யப்பட்டார்.

தம்பியையும் தங்கையையும் மறந்துபோயிருந்தார். எப்படி நினைவூட்டினாலும் அவர்கள் அவர் நினைவில் இல்லை. அவரை தினமும் சந்திப்பவர்களின் பெயர்களும் நினைவில் இல்லை. அவருடன் வாழும் உதவியாளரின் பெயரும் நினைவில் இல்லை.

இரண்டாம் தடவையாக இன்று தொலைபேசினேன். அப்போது மகிழ்ச்சியாக துள்ளலான மனநிலையில் சம்பாசனையை ஆரம்பித்தார். “இன்று வருகிறாயா” என்றார். “இல்லையம்மா, விரைவில் வர முயற்சிக்கிறேன்” என்றபோது, “அவசரமில்லை ஆறுதலாக, உனக்கு வசதியான போது வா. உன்னைக் கவனித்துக்கொள்” என்றார்.

அவரைச் சிந்திக்கவைக்கும் எதனைக்கேட்டாலும் அவர் குளம்பிவிடுவிடுகிறார் என்பதை அறிந்திருக்கிறேன். என்ன சாப்பீட்டீர்கள் என்று கேட்காமல் சோறு சாப்பிட்டீர்களா என்று கேள்வியை மாற்றினால் மகிழ்ச்சியாக “ஆம்” என்பார்.

அம்மாவை மறதியைத் தவிர அவரது வயதுக்கெற்ற வேறு எந்த நோயும் அதிகம் பாதிக்கவில்லை என்பது மனதுக்கு ஆறுதலான விடயம்.
அம்மா மட்டுமே அவரது சந்ததியில் மிஞ்சியிருக்கிறார். அதுவும் அவரது பிரக்ஞையில் இல்லை.

நேற்று முன்தினம் தங்கையுடன் உரையாடியபோது “அம்மாவின் நிலை எனக்கு வரமுன் நான் விடைபெறவேண்டும்” என்றாள்.

தங்கையின் மனநிலை எனக்கும் வந்துவிட்டது என்றே நினைக்கிறேன்.

அம்மா வின் 85ம் பிறந்தநாள் இன்று. பிறந்தநாள் வாழ்த்துக்கள் அம்மா.

நிலத்தின் மனிதர்கள்

பாலஸ்தீனத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது. எமது விடுதலைப்போராட்டம் ஆரம்பக்காலங்களில் அவர்களது விடுதலைப்போராட்டத்துடன் கைகோர்த்திருந்திருந்தது என்பதையும் மறுக்கமுடியாது. யசீர் அரபாத் என்னும் பெயரின் மகத்துவத்தையும் நாம் மறந்திருக்கமுடியாது.
எனது பாலஸ்தீனத்து நண்பனுடன் வாகனத்தில் பயணித்துக்கொண்டிந்தேன். ரொபின் (பாலஸ்தீனக் கிறீஸ்தவ மதத்தவர்) அரபு மற்றும் ஹீபுரூ (யூதர்களின் மொழி) மொழிகளைச் சரளமாகப் பேசக்கூடியவன்.
மலைப்பகுதியின் வெம்மையான காற்று முகத்திலடித்துக்கொண்டிந்தது. இறுதி மழைத்துளி நான்கு மாதங்களுக்கு முன்தான் பெய்தது, இன்னும் 3 மாதங்களின் பின்தான் மீண்டும் மழை, இன்று வெக்கை தாங்கமுடியவில்லை என்றபடியே தண்ணீர்ப்போத்தலை எடுத்து அண்ணாந்து குடித்தான், ரொபின்.
நான் ஊர்ப்புதினங்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நீண்ட கறுப்புக் காற்சட்டை, வெள்ளை மேலாடை, கறுப்பு கோட், நெற்றியின் இருபக்கங்களிலும் சுருண்டு தொங்கும் சுருட்டை மயிர், உச்சந்தலையில் வெள்ளை நிற கிப்பாவுடன் (சிறு தொப்பி) ஒரு யூத இனதவர் தன் மனைவி மற்றும் 5 குழந்தைகளுடன் நடந்துகொண்டிருந்தார். நாம் அவரைக் கடந்தபோது அவரது பார்வை இறுக்கமாகவே இருந்தது.
குழந்தைகள் இன்று ஒரு கறுப்பனைக் கண்டோம் என்று நண்பர்களிடம் என்னைப்பற்றி கூறி மகிழ்ந்திருக்கக்கூடும்.
மீண்டும் ரொபின் தண்ணீரை தொண்டைக்குள் கவிட்டான். அதன் பின் “இந்த வீதியில் இறுதியில் உள்ள மாடிக்குடியிருப்பில் ஒரு இரும்புப் பெண் இருக்கிறார். உனக்கு அதிஸ்டம் இருப்பின் அவரை நீ காணலாம்” என்றபடியே வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருந்தான்.
வீதியின் நடுப்பகுதியில் வானத்தின் வேகத்தைக் குறைத்தபடியே, மேலே உள்ள சாரளத்தில் இருந்து கையசைக்கும் முதியவரைக் கவனி, என்றான்.
இவனது வாகனம் அவருக்கு பழக்கமானதாக இருக்க வேண்டும். தலைமுடியினை மறைத்த உடையுடன் அவர் கைசைத்துக்கொண்டிருந்தார். இவன் கண்ணாடியில் யாரும் வானகத்தை கவனிக்கிறார்களா எனப் பார்த்தான். எதிரே இருந்த காவலரனில் இருந்து அவதானிப்பது தெரிந்தது.
“கை காட்டாதே, பார்க்கிறார்கள்” என்றான். எதுவும் நடவாததுபோன்று நாம் அவ்வீதியை கடந்துகொண்டோம்.
அம் மூதாட்டிக்கு 80 வயதிருக்கலாம். வாழ்க்கை முகத்தில் தனது அனுபவத்தை சுருக்கங்களாக பதிந்திருந்தது. இரும்புக் கம்பிவேலியிட்டு தனது சாரளத்தை மறைத்துவைத்திருந்தார். அதைக்கடந்து துப்பாக்கிக்குண்டுகளும் ஏதேனும் திரவப்பொருட்கள் மட்டுமே செல்லமுடியும்.
ரொபின் வாகனத்தை திருப்பி எமது முகாமுக்குச் செலுத்தும்போது ஒரு கதை சொல்லத் தொடங்கினான்.
இந்த முதியவர் தங்கியிருக்கும் கட்டிடம் முன்பு பாலஸ்தீனர்களுக்கு சொந்தமானதாக இருந்தது. இந்தக் பகுதியும் அவர்களுக்குச் சொந்தமானதாக இருந்தது. இந்தப்பெண் அங்கு தனது குடும்பத்துடன் வாழ்ந்திருந்தார். 5 பெண்குழந்தைகள், 3 ஆண்குழந்தைகள். கணவன் தோல்பதனிட்டு அதில் கைத்தொழில் செய்பவர். வீட்டுக்கு கீழே அவரது கடை இருந்தது. அது முன்னொருகாலத்தில் மிகப்பிரபலமான கடைத்தெரு. அவர்களது வீட்டுக்கான வாயில் அக்கடைத்தெருவிலேயே இருந்தது.
அரபு மொழியில் இன்டி(f)பாடா (Intifada - انتفاضة) என்று ஒரு சொல் உண்டு. இதை ஈழத்தமிழுக்கு மொழிபெயர்த்தால் “பொங்கு தமிழ்” எனலாம். அதாவது எழுச்சி, மக்கள் எழுச்சி எனப்பொருள்படும்.
முதலாவது intifada (1987–1991)வின்போது கணவர் சுடப்பட்டு இறந்தபின் குழந்தைகளை வளர்த்து ஆளாக்கியிருக்கிறார். 2005ம் ஆண்டிளவில் அவரது வீடு அமைந்திருந்த கட்டிடத்தின் ஒரு பகுதியை வாங்கிவிட்டோம். இது எங்களுக்குச் சொந்தமானது என்றபடியே இரண்டு யூத இனத்துக்குடும்பங்கள் அந்த கட்டத்திற்கு குடிவந்தன. இராணுவமும் அவர்களுக்கு உதவியாக இருந்தது. அவர்களுடைய சொத்துரிமைப்பத்திரம் செல்லுபடியாகாது என நீதிமன்றம் தீர்மளித்த பின்பும் அவர்கள் அங்கு வாழ்ந்தனர். இராணுவப்பாதுகாப்பு பலமானது. காவலரண் உருவாகியது. அதைச்சுற்றி ஓரு குடியேற்றம் உருவாகத்தொடங்கிற்று. இருபகுதியினரும் மற்றைய பகுதியினரை கொலைசெய்துள்ளனர். பழைய ஆகமத்தில் குறிப்பிடப்படும் ஆப்பிரகாமின் சமாதியில் இரு இனத்தவர்களும் மற்றய இனத்தவர்களை கொன்றுகுவித்த கதையொன்று இருக்கிறது. அதை இன்னொருநாள் எழுதுகிறேன்.
இவரை அங்கிருந்த எழுப்புவதற்கு பகீரத முயற்சிகள் நடந்தன. பேரம் பேசப்பட்டது. வெற்றுக் காசோலை கொடுக்கப்பட்டது. இவரது வீட்டுக்கான வழங்கல் பாதைகளை அடைத்தார்கள். கடும் தொந்தரவு கொடுத்தார்கள். மனிதக்கழிவுகளை வீசினார்கள். எண்ணிலடங்கா தொல்லைகளைக் அனுபவித்தபின்னும், இது எனது நிலம், எனது வீடு, இங்குதான் வாழ்வேன், இறப்பேன் என்றுவிட்டு வீட்டுக்குள் அடைபட்டுக்கிடக்கிறார். வெளியே செல்லவேண்டும் எனின் வேறு வழியால் செல்லவேண்டும். சாரளத்தினருகே உட்கார்ந்திருப்பது அவர் பொழுதுபோக்கு. ரொபின் அவருக்கு அவ்வப்போது உதவுபவன். என்னை அவரிடம் அழைத்துப்போகக் கேட்டேன். நிட்சயமாக என்றிருக்கிறான்.
பாலஸ்தீனர்களின் பிரபலமான அந்த கடைத்தெரு இன்டிபாடாவின் பின் இராணுவத்தினால் மூடப்பட்டுவிட்டது. வியாபாரிகள் நட்டப்பட்டார்கள். 800 குடியேறிகளுக்கு 1000 இராணுவத்தினர் பாதுகாப்பு கொடுக்கிறார்கள். குடியேறிகளின் பகுதிக்குள் வாழும் பாலஸ்தீனர்களின் வாழ்க்கை மிகச் சிரமமானது. அவர்களுக்கென்று சில பாதைகள் மட்டுமே உண்டு. அவற்றை மட்டுமே அவர்கள் பாவிக்கலாம். சில பாதைகளில் வாகனங்கள் செல்ல முடியாது. இராணுவக்கெடுபிடி அதிகம். இரண்டு நிடமிடங்களில் கடந்துவிடும் பாதை தடைசெய்யப்பட்டுள்ளதால் 15 நிமிடம் சுற்றி, மிகவும் உயரமான,கடும் பள்ளமான பாதைகளால் அவர்கள் பயணிக்கவேண்டும். வயதானவர்களுக்குக் கூட சலுகைகள் ஏதும் இல்லை.
இப்படியான சிரமங்கள் இருப்பதால் இப்பகுதி பாடசாலைகளுக்கு தரமான ஆசிரியர்கள் கிடைப்பதில்லை. இராணுவக்கட்டுப்பாட்டிற்கும், ஏனைய சிரமங்களுக்கும் பயந்து எவரும் அப்பாடசாலைகளை தெரிவுசெய்வதில்லை. வைத்தியசாலைகளும் அப்படியே. இஸ்ரேலிய வைத்தியசாலைக்கு பாலஸ்தீனர்கள் செல்லமுடியாது.
இப்படியான காரணங்களினால் இப்பகுதியில் உள்ள பாலஸ்தீனர்களின் சொத்துக்கள் விலை மிகவும் குறைவாகவே இருக்கும். வாடகைக்கும் விடமுடியாது. பாலஸ்தீனர்கள் வெளிநாட்டவர்களுக்கு சொத்துக்களை விற்க முடியாது என்ற சட்டம் மிகவும் கடுமையாக பாலஸ்தீன சுயாதீன அரசினால் அமுல்செய்யப்படுகிறது. இதற்குரிய முக்கிய காரணம் பினாமிகளின் பெயரால் அவற்றை யூதர்கள் அதீத விலைக்கு கொள்வனவு செய்து சிறிது காலத்தின்பின் தங்களின் பெயருக்கு மாற்றிக்கொண்டபின் அங்கு குடியேறுவதும், அதைத்தொடர்ந்து இராணுவ உதவியுடன் குடியேற்றம் ஆரம்பமாவதுமாகும்.
காலப்போக்கில் ஏழ்மையும், அடக்குமுறையும் இவர்களை இடம்பெயரச்செய்கிறது. குறிப்பிட்ட காலத்திற்கு அதிகமாக மனிதர்கள் குடியிருக்காத வீடுகள்களை இஸ்ரேலிய அரசு தனது சொத்தாக்கிக்கொள்கிறது.
பாலஸ்தீனர்களின் நிலத்தில் எவ்வாறு அவர்கள் வீடுகளை அரசுடைமையாக்கலாம் என நீங்கள் நினைக்கலாம். குடியேறிகள் வாழும் பகுதி பாலஸ்தீனர்களின் நிலமானாலும் அது இஸ்ரேலிய அரசின் கட்டுப்பாட்டிற்குரியது.
இவையனைத்தும் நன்கு திட்டமிடப்பட்ட நில ஆக்கிரமிப்புப் திட்டங்களே.
இத்தனையையும் எதிர்த்து தனது நிலத்திற்காகவும், நாட்டுக்காகவும் ஒரு பெரும் அரச இயந்திரத்தை எதிர்த்து வாழும் அந்த மூதாட்டியின் மெதுமெதுப்பான சுருக்கங்களைக்கொண்ட கைகளை பற்றிக்கெள்ளவேண்டும். எனது அம்மாவின் கையைப் போலிருக்கக்கூடும் அது.

ஒரு இயத்திரத்துப்பாக்கியின் காதல்

நேற்றுமுன்தினம் மாலை 10 மணியிருக்கும். நோர்வே நண்பருடன் முகப்பத்தக உரையாடலின் ஊடாக உரையாடிக்கொண்டிந்தேன்.

திடீர் என பக்கத்துவீட்டில் இருந்து தானியங்கித் துப்பாக்கிச் சத்தம் கேட்டது. எமது கட்டட அபாயச்சங்கு ஒலிக்க ஆரம்பித்தது.

பாய்ந்தோடி நிலக்கீழ் பதுங்கு குழிக்குள் புகுந்தேன். திடீர் என மின்சார நிறுத்தப்பட்டு பதுங்குகுழி இருட்டானது. ஒரு குண்டுவெடித்தது. எமது கட்டடம் அதிர்ந்து ஓய்ந்தது.

அந்த இருட்டில் எனது முதுகினை யாரோ சுரண்டினார்கள். திருப்பினேன். இருட்டில் எதுவும் தெரியவில்லை. ஒரு கை என்கையைப்பிடித்து மறுகையால் ஒரு நீரருந்தும் ஒரு கிண்ணத்தை எனது கையில் திணித்தது. வாங்கி மணந்து பார்த்தேன். ராகி என்னும் மதுபானவகை.

யாரடா இத்தனை ரணகளத்திலும் பாயாசம் அருந்துவது என்று நினைத்தபோது மின்விளக்குகள் எரிந்தன.

பின்னால் எனது துருக்கிய தோழன் அர்கான் சிரித்துக்கொண்டே “மகிழ்ச்சியான மாலையாக அமையட்டும்” என்று தனது கிண்ணத்தை தலைக்கு தூக்கிக்காண்பித்தான்.

அவனுடன் வெளியில் வந்தேன். பாலஸ்தீனத்து நகரகாவலர்களும், இராணுவமும் அங்கு நின்றிருக்க அவரது வாகனங்கள் சிவப்பு நீல வெள்ளை நிற அபாய விளக்குகள் ஒளிர நின்றிருந்தன. வீதி முழுவதும் சனத்திரள். கூச்சல் அடங்கியபின் என்ன விடயம் என்றேன் அருகில் நின்றிருந்த பாலஸ்தீனத்து நகரகாவலரிடம்.

இரண்டு குடும்பங்களுக்கிடையில் காதற்பிரச்சனை, இருவர் துப்பாக்கிக்காயங்களுடன் வைத்தியசாலையில். குண்டு வெடித்து ஒரு வாகனம் சேதம் இது பெரிய பிரச்சனை இல்லை, நீங்கள் அச்சப்படத்தேவையில்லை என்றார்.

எனனது? துப்பாக்கி சரமாரியாக வெடிக்கிறது, ஒரு குண்டும்வெடிக்கிறது, இருவர் வைத்தியசாலையில், ஒரு வாகனம் சேதப்பட்டிருக்கிறது இது சின்னப்பிரச்சனையா என்று கேட்பதற்கு அருகில் நின்றிருந்து துருக்கிய அர்கானைத் தேடினேன். இன்னொருவருக்கு “மகிழ்ச்சியான மாலையாக அமையட்டும்” கையிலிருந்த கிண்ணத்தைக் காண்பித்துக்கொண்டிருந்தான்.

அடேய், ஒரு காதலுக்கு இத்தனை ஆர்ப்பாட்டமா.அது அநியாயமில்லையா?

என்ட Oslo முருகா, இந்த ஊரில் இந்தப் பாவியை காதற்வயப்படவைத்துவிடாதே.

ஒரு சீனவெடிக்கே பயந்தவன் நான்.

2018இலும் முடிவுறாத ஓயாத அலைகள் 3

அவசர அவசரமாக மட்டக்களப்பிற்கு வந்துபோகவேண்டியிருந்தது. ஒரு மதியப்பொழுது மட்டும் தங்கியிருப்பதாய் திட்டம்.
2012ம் ஆண்டில் இருந்து இன்றுவரை பல திட்டங்களுக்கு உறுதுணையாய் இருக்கும் நண்பர்கள் படுவான்கரையின் எதிர்க்கரையான எழுவான்கரைக்கு அழைத்துப்போயினர்.
நாம் அமர்ந்திருந்த மோட்டார் சைக்கில் கிறவற்பாதையில் சென்று, மணற்பாதையூடாகச் சென்றது. இரண்டுமுறை வாகனத்தை நிறுத்தி வழிகேட்டோம்..
ஒரு இந்திய அரசின் வீட்டுத்திட்ட வீட்டின் முன் நாம் இறங்கிக்கொண்டபோது ஒருவர் வந்தார். வைரம்பாய்ந்த அவரது முகத்தில் அன்பான வரவேற்பு தெரிந்தது.
அவரது பொய்க்கால் மணலில் புதைந்து புதைந்து நடந்தபோதுதான் அதன்மீது எனது கவனம் சென்றது. வீட்டைச்சுற்றி 7-8 கோழிகள் மேய்ந்துகொண்டிருந்தன. வீட்டின் உள்ளே அழைத்துப்போனார். உட்கார்ந்தோம்.
சக்கரநாட்கலியில் அவரது மனைவி உட்கார்ந்திருந்தார். சற்றுநேரம் மிகவும் கடினமான அமைதியுடன் கடந்துபோனது.
இருவரும் முன்னாள் போராளிகள் 1999ம் ஆண்டு ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் தனது காலை இழந்திருக்கிறார். அதன்பின் இறுதியுத்தத்தில் அதேகாலில் மீண்டும் காயப்பட்டு முழுக்காலையும் இழந்திருக்கிறார்.
அவரது மனைவிக்கு 1999ம் ஆண்டு ஓயாத அலைகள் - 3 நடவடிக்கையில் காயப்பட்டு இடுப்புக்கு கீழ் இயங்காதிருக்கிறார். இவர்களுக்கு 12 வயதில் ஒரு பெண்குழந்தையுண்டு.
இவர்களது வீட்டைச்சுற்றி மணல். கழிப்பறைக்குச் செல்வதாயினும் கணவரின் உதவிவேண்டும். அவரால் மட்டுமே சக்கர நாற்காலியை மணலினூடாகச் தள்ளிச்சென்று அவர் கழிப்பறைகுச் செல்வதற்கு உதவ முடியும். கணவர் இரவு வேலைக்குச் சென்றால் அவர் வரும்வரையில் கழிப்பறைக்குச் செல்வதற்கு இவர் காத்திருக்கவேண்டும்.
தொழில் எதுவுமில்லை. அவ்வப்போது இரவுவேலை கிடைக்கிறது.வீதியோரத்தில் செவ்விளநீர் விற்றிருக்கிறார். மாநகரசபை வந்து தடுத்திருக்கிறது. பின்பு கடற்கரையில் இருந்து மீன்வாங்கிவந்து விற்றிருக்கிறார். அதையும் மாநகரசபை பெருந்தன்மையுடன் தடுத்திருக்கிறது.
தனது குடும்பத்தின் நிலையை விளக்கிக்கூறியபின்பும் இரங்கினார்கள் இல்லை என்றார்.
2009ம் ஆண்டின்பின் 4-5 இடங்களில் வாடகை வீட்டில் வாழ்ந்தபின் இப்போது வீட்டுத்திட்டத்தினால் வீடு கிடைத்திருக்கிறது. இவர்கள் இந்த வீட்டுக்கு குடிவந்தபோது சக்கரநாற்காலியில் உட்காந்திருந்தவரின் அக்கா 3 கோழிக்குஞ்சுகளை பரிசாகக் கொடுத்திருக்கிறார். இன்று அவை ஏறத்தாள 10ஆக பெருகியுள்ளன. அவற்றின் முட்டைகளே அவர்களது வருமானம்.
அண்மையில் உடம்பில் இருந்து காயங்களின் ஊடாக துர்மணமுடைய நீர் வழிந்திருக்கிறது. வைத்தியசாலைக்குச் செல்லும் வசதி இன்மையால் பல நாட்கள் சிரமப்பட்டிருக்கிறார். இறுதியாக உயிராபத்து து என்ற நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு காப்பாற்றப்பட்டிருக்கிறார்.
அவரது தனது கால்களைக் காண்பித்தார். அவை யானைக்கால் நோயினால் பாதிக்கப்பட்டவைபோன்று மாறியிருக்கிறன்றன. அவரது முடிகொட்டி மீளவும் வளர்ந்துகொண்டிருக்கிறது.
ஏறத்தாள 20 வருடத்து விழுப்புண்களின் வாழ்வியற்வலியை அவர்கள் இருவரது முகத்திலும் காணமுடிந்தது.
“அண்ணர், 2009ம் ஆண்டு வைகாசிமாதமும் எங்களுக்குரிய கொடுப்பனவை வங்கிக்கு அனுப்பியிருந்தார்”, அதன்பின் இன்றுவரை நாம் படாத பாடில்லை” என்றபோது மாவீரர் நாட்களுக்கு அதிவிலையுயர்ந்த வாகனங்களில் வந்து விளக்கேற்றி விசுவாசிக்கும் அண்ணின் பெயர் சொல்லும் தம்பிகளை நினைத்துகொள்வதைத் தவிர என்னால் என்ன செய்துவிட முடியும்.
நண்பர்களே! இவர்களின் வாழ்க்கையை உங்களால் மேம்படுத்த முடியும். சுயதொழில் முயற்சிக்கு உதவ விரும்புபவர்கள் உட்பெட்டியில் தொடர்பு கொள்ளுங்கள். வழமைபோன்று நாம் உங்களையும் அவர்களையும் இணைப்பதோடு விலகிக்கொள்வோம் எதுவித பணக்கொடுக்கல் வாங்கல்களும் எம்மூடாக நடைபெற மாட்டாது. ஆனால் உங்களுக்கான அனைத்து உதவிகளையும் செய்துதருகிறோம்.
இனியாவது ஓயாத அலைகளை முடித்துவைக்கவேண்டிய பொறுப்பு எமக்குண்டல்லவா?
இதனைப் பகிர்ந்து, உதவிகள் கிடைக்க உதவினால் மனம் மகிழ்வோம்.
நன்றி

மதியும் அழிந்து செவிதிமிர் அழிந்து

ஏறத்தாள 6 ஆண்டுகளுக்கு முன் முகப்புத்தகத்தினூடாக அறிமுகமாகிய கனடா நண்பர் ஒருவர் “நாடகம் ஒன்று எழுதித்தாருங்கள்” என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.

நாடகமா? நானா? அதற்கும் எனக்கும் தொடர்பே இல்லையே என்று உண்மையைச் சொன்னாலும் மனிதர் “இல்லை நீங்கள் எழுதும் உரைநடையிலேயே எழுதுங்கள்” என்று எனக்குள்ளும் ஒரு ஆர்வத்தை தூண்டிவிட்டார்.

எதை எழுதுவது என்று யோசித்தபோது “அம்மா” தான் நினைவுக்கு வந்தார். இரண்டு பாத்திரங்களைக் கொண்ட ஒரு நாடகத்தை எழுதத் தொடங்கினேன்.

புலம் பெயர்ந்த மகனாக நான். தனது மூன்று குழந்தைகளையும் வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு தனியே உதவியாளருடன் வாழும் அம்மா. இவர்களுக்கிடையிலான தொலைபேசி உரையாடல்கள், சந்திப்பு போன்றவற்றை உள்ளடக்கியதே அந்த நாடகத்தின் கரு.

நாடகத்தை எழுதத்தொடங்கி 4 – 5 அத்தியாங்களில் எனக்குக்கதையில் விறுவிறுப்பில்லை என்பது புரிந்தது. சில சுவராசியமான உரையாடல்கள், நகைச்சுவையான சம்பவங்கள் என்பதற்கப்பால் என்னால் நகர முடியவில்லை. எனவே அந்த நாடகம் நின்றுபோனது.

நாடகத்தை எழுதித்தா என்று கேட்டவரும் பின்னாலும் முன்னாலும் திரிந்து பார்த்தார். நான் ஆரம்பத்திலேயே என்னிடம் சரக்கு இல்லை என்றது உண்மைதான் என்று அவர் நம்பியிருக்கலாம். விதி அந்த நாடகத்தை தொடங்கிய மாத்ததிலேயே நிறுத்திவிட்டது.

ஒருவர் கேட்டதற்கு ”முயற்சிக்கிறேன்” என்றுவிட்டு அந்த முயற்சியை நிறுத்திவிட்டது எப்போதும் மனதை குடைந்தபடியே இருக்கிறது.

இதுபோலத்தான் மாற்றுத்திறனாளியான ஒரு பெண்ணை 6 -7 வருடங்களுக்குமுன்னான ஒரு பனிக்காலத்து மாலையில் அவரது குடும்பத்துடன் பேட்டிகண்டேன். அதை ஒலிப்பதிவும் செய்திருந்தேன். ஒலிப்பதிவை கேட்டு கேட்டு பத்தியொன்றை எழுதுவதே நோக்கம். அதுவும் நின்றுபோனது. அந்த மாற்றுத்திறனாளியின் தந்தையைக் காணும்போதெல்லாம் மனம் குறுகிப்போகிறது. விதி அவரை அடிக்கடி கண்களில் காட்டிக்கொண்டே இருக்கிறது.

எனக்குக் கற்பனையில் பாத்திரங்களை உருவாக்கி அவற்றிற்கு உயிர் கொடுத்து கதையினுள் நடமாடவைக்கும் கலை கைவரவில்லை. அதை நானும் விரும்பவுமில்லை. எது என்னைச்சுற்றி நடைபெறுகிறதோ அதை சற்று சுவராசியமாக எழுதமுடிகிறது. அம்மாவின் நாடகமும் அப்படித்தான். புனைவு கலப்பதை நான் உண்மையிலேயே விரும்புவதில்லை.

6 வருடங்களுக்கு முன் இருந்த அம்மா இல்லை, இப்போது இருக்கும் அம்மா.

அம்மாவின் பெயர் மட்டும்தான் அன்றும் இன்றும் ஒன்றாக இருக்கிறது. அவர் பேச்சு, செயல்கள், மனநிலை, உடல்நிலை, உடற்பலம், சிந்தனை, நினைவுச்சக்தி என்று எதுவுமே முன்பு இருந்ததுபோல் இல்லை. வயோதிபம் அவரை விழுங்கிவிட்டது.

ஏறத்தாள இரண்டு வருடங்களாக அம்மாவைப்பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தம்பியும் தங்கையும் இந்தவிடயத்தில என்னைவிட கெட்டிக்காரர்கள். இவ்வருடம் அம்மாவைப் அவர்கள் பார்த்தபின் கேள்விப்பட்ட செய்திகள் மனதை சமாதானப்படுத்துபவையாக இல்லை.

இதற்கிடையில் நோர்வேயில் இருந்து பாலஸ்தீனத்திற்கு இடம்பெயர நேர்ந்தது. அங்குபோனபின் அம்மாவுடனான உரையாடல்கள் அதிகமாயின.

அம்மாவின் மூன்று குழந்தைகளிலும் அம்மாவை வாடி, போடி, கிழவி, பச்சைத்தண்ணி டாக்டர் (அம்மா 35 ஆண்டுக்கள் டாக்டராக இருந்தவர்), அப்பாவின் லவ்வர் என்றெல்லாம் ஆசையாசையான வார்த்தைகளால் கலாட்டா பண்ணுபவன் நான் மட்டுமே. தம்பி மிகவும் சீரியசானவன். அவனுக்கு “அம்மா” என்பது மட்டும்தான் தெரியும். தங்கைக்கும் ஏறத்தாள அப்படியே.

இப்போதெல்லாம் நான் தொலைபேசினால் அம்மா “நீங்கள் யார்” என்பார். விளங்கப்படுத்தவேண்டும். அவரது மனிநிலையைப்பொறுத்து நான் நினைவுக்கு வருவேன். “நான் சஞ்சயன், உங்கள் மகன்” என்றால் சில நேரங்களில் “சஞ்சயனா அது யார்” என்பார். முன்பெல்லாம் மணிக்கணக்காய் உரையாடும் அம்மா, இப்போது இரண்டு நிமிடங்கள் உரையாடுவதே கடினம்.

அண்மையில் அம்மாவிடம் செல், செல் என்று கலைத்தது மனம். எனது மேலதிகாரியிடம் கெஞ்சிக்கூத்தாடி 15 நாட்கள் விடுமுறை எடுத்து, பாலஸ்தீனத்தில் இருந்து, இஸ்ரேல் சென்று, அங்கிருந்து யோர்டான் வந்து இலங்கைக்கு வந்தேன். அம்மாவுக்கு எதுவும் சொல்லவில்லை.

விமான நிலையத்தில் இருந்து வீடுவரும் வழியில் மருமகள் தொலைபேசினாள். அம்மா விழுந்து பலமாக அடிபட்டுவிட்டது, வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றிருக்கிறோம்” என்றாள் அவள்.

வீட்டு வந்தபோது “அம்மாவை வீட்டுக்கு அழைத்துவந்திருந்தார்கள். அவர் தனது கட்டிலில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். நிலத்தில் குந்தியிருந்து அம்மாவின் கைவிரல்களை நீவிக்கொண்டிருந்தேன். கண்விழித்துப் பார்த்தார்.

கண்கள் ஒளிர, “சஞ்சயன், எப்போ வந்தாய்?” என்றார். எழும்பி கட்டிலில் இரு. நிலம் ஊத்தையாய் இருக்கலாம் என்றபடியே ஒரு நிமிடம் பேசியிருப்பார். அதற்கிடையில் தூக்கம் அவரை மீண்டும் சூழ்ந்துகொண்டது.

மாலை தனது கையிலும் முதுகிலும் நோகிறது என்றவருக்கு “நீங்கள் விழுந்ததின் காரணமாகவே நோகிறது” என்றேன். “எப்போ விழுந்தேன்?” என்ற கேள்விக்கும் ஆறுதலாகப்பதிலளித்தேன். அவருக்கு அது நினைவில் இல்லை. என்னைப் பார்த்து “வேலையால் எப்போ வந்தாய். முதலில் குளித்துவிட்டு வா” என்றபடியே ஒரு துணியை எடுத்துவந்தார். அதன்பின் அவர் தனது கட்டிலில் படுத்துக்கொண்டார்.

இன்று மதியம் 12 மணியிருக்கும் “தம்பி, நான் வேலைக்குப் போகிறேன்” என்றார். எனக்குத் தூக்குவாரிப்போட்டது. அம்மா இருக்கும் நிலையில் யாருக்கு வைத்தியம் செய்தாலும் நோயாளியின் கதி அதேகதியாகிவிடும். இந்த ஆபத்தில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு பொய் சொல்லலாம் அல்லவா.

எனவே அம்மா “ இன்றுமாலை உங்களை நான் வேலைக்கு அழைத்துப்போகிறேன். எனக்கும் ஊசிபோடவேண்டும்” என்றதும் “உனக்கு என்ன வருத்தம்” என்று மடக்கினார். “எனக்கு விசர்” என்றேன் நக்கலாய். “இருக்கலாம்” என்றுவிட்டு நடையைக் கட்டினார். அம்மா ஒரு கணம் உயிர்ப்பார். மறுகணம் அயர்ந்துவிடுவார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

நான் சிறுவனாய் இருந்தபொழுதுகளில் என்னைக் கலைத்துக் கலைத்துப் பிடித்து, அம்மா உணவூட்டியிருப்பார். வாழைப்பழத்தை உரித்துத் தந்திருப்பார். தண்ணீரில் நான் விளையாடுவதை தடுத்திருப்பார், அல்லவா?

இப்போது, அம்மாவுக்கு முன்னாலும் பின்னாலும் திரிந்து “சாப்பிடுங்கோ அம்மா” என்று கெஞ்ச வேண்டியிருக்கிறது. உண்ணும்போது அதை நினைவூட்டவேண்டியிருக்கிறது. வாழைப்பழத்தை உரித்து கையில் கொடுக்கவேண்டியிருக்கிறது. அதை சிறுபிள்ளை போன்று பொக்கைவாயால் அரைத்து ருசித்து உண்கிறார். உண்டு முடிந்ததும் அவரது வாயை துடைத்துவிடுகிறேன்.

“அம்மா நீங்கள் இன்று குளித்தீர்களா என்றேன்”. பதில் இல்லை. சற்றுநேரத்தின் பின் புதிய ஆடைகளை மாற்றி வந்து “வா போவோம்” என்றார். நான் பத்திரிகை வாசித்த சிறு நேரத்தில் அவர் உடைமாற்றியிருக்கிறார்”. “அம்மா, இன்று பஸ் ஓடவில்லையாம். நாளைக்குப் போவோமா” என்றேன். “அப்ப சரி” என்றுவிட்டு, கதிரையில் அரைமணிநேரம் தூங்கி எழும்பினார். உதவியாளர் வந்து “அம்மா கதிரையில் தூங்குகிறார்” என்று கவலைப்பட்டார். “அவர் என்ன செய்கிறாரோ அதை செய்ய விடுங்கள். இப்போது அவரை எழுப்பினால் அவரது தூக்கம் கலைவதோடு அவர் அந்தரப்படுவார், தடுமாறுவார்” என்று புரியவைத்தேன். தலையைஆட்டினார் அவர்.

மாலை அம்மா குளித்தீர்களா என்று கேட்டேன். குழந்தைபோன்று “தெரியாதே” என்றார். ஒருவாறு அவரை குளியலறைக்குள் அனுப்பினேன். குளிக்கும் சத்தம் வரவே இல்லை. “அம்மா”, என்று அழைத்து குளியுங்கள்” என்றேன். குளிக்க ஆரம்பித்தார். திடீர் என்று சத்தம் நின்றது. என்னை அழைத்து “உடைகளை எடுத்துத்தா” என்றார். “ஓம் என்றுவிட்டு, சற்று அமைதியாக இருந்தேன் அப்புறமாக அம்மா சவர்க்காரம் போட்டீர்களா?” என்றபின்தான் ”அட குளியலறைக்குள் அம்மாவின் சவர்க்காரம், உதவியாளரின் சவர்க்காரம், எனது சவர்க்காரம் மற்றும் உடைகழுவும் சவர்க்காரம் என நான்குவகை சவர்க்காரம் இருப்பது நினைவுக்கு வந்தது. மறுநாளில் இருந்து அம்மா குளிப்பதற்கு முன் ஒரு சவர்க்காரத்தையே அங்கு வைத்தேன்.

அம்மாவிற்கு காலையில் உடைகள் தோய்த்து காயவிடவேண்டும். இல்லாவிட்டால் அது காலைப்பொழுதே அல்ல. அது அவரது தினசரி நடவடிக்கை. அம்மாவிடம் ஊத்தை உடுப்புகளே இருக்காது. அந்த நேரங்களில் சுத்தமான உடைகளையும் அவர் மேலும் சுத்தப்படுத்துவதற்காக கழுவுவார். இதில் நான் எவரையும் தலையிட வேண்டாம் என்றிருக்கிறேன். அது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு நல்லுணர்வையும் கொடுக்கிறது என்பதே எனது எண்ணம். எனவே அதை தடுக்கவேண்டிய அவசியம்தான் என்ன?

பத்திரிகை வாசிக்கத்தொடங்கினால் தொடர்ந்து வாசிப்பார். அம்மாவைப்போல் வாசிப்பதில் விருப்பமுள்ளவர்கள் குறைவாக இருப்பார்கள். அம்மா என்னையும் தம்பியையும் இருப்பக்கத்தில் இருத்தி கதைசொன்ன நாட்களை நினைத்துப்பார்க்கிறேன். அம்மாவுக்கு இப்போதைய வாசிப்பில் எதேனும் புரிகிறதா என்பதைவிட அவர் தனக்கு மகிழ்ச்சியான எதையோ செய்கிறார் என்று நினைத்துக்கொள்வதே அனைவருக்கும் ஆறுதலானது.

அம்மாவின் குளியலறையில் இருந்து வெளியேறும் கதவுக்கருகில், காலைத் துடைப்பதற்கு ஒரு சற்று மொத்தமான மிதியடி இருக்கிறது. அவர் வழுக்கி விடாதிருப்பதற்காகவே அதை அங்கு வைத்தேன். நான் வருவதற்கு முன் அது அங்கு இருக்கவில்லை.

இப்போது ஒரு நாளைக்கு பத்துத் தடவைக்கு அதிகமாக அதை அந்தக் கதவு வாசலில் வைப்பேன். அம்மா அதை ஒரு பக்கமாய் நகர்த்துவார். மீண்டும் நான் வைத்தபின் விக்கிரமாதித்தன் அம்மாவிடம் வந்துவிடுவான். நானும் இன்னொரு விக்கிரமாதித்தனாகி அதை மீண்டும் கதவின் முன்னால் வைப்பேன்.

நான் சிறு குழந்தையாய் இருந்தபோதும் இப்படியேதும் நடந்திருக்கலாம். கதையில் மாற்றமில்லை. பாத்திரங்கள் மாறியிருக்கின்றன. அவ்வளவுதான்.

புலம்பெயர்ந்த வாழ்வின் வேதனையான பக்கம் இது. அம்மாவை அருகில் இருந்து குழந்தைபோல் தாங்க முடியாதது வேதனையானது. இருப்பினும் அன்பான மருகளும், மருமகனும், அக்காவின் குடும்பத்தாரும் அருகில் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களும் அவர்கள் வாழ்க்கையை வாழவேண்டுமல்லவா.

உதவியாட்களைத் தேடலாம், ஆனால், அது அம்மாவின் குழந்தைகளைப்போலிருக்காது அல்லவா? அம்மாவுக்கு இதுவரை கிடைத்த உதவியாளர்கள் அனைவருமே நல்லவர்கள். ஒவ்வொரு முறையும் உதவியாளர் மாறும்போது அது தரும் மனப்போராட்டம் கொஞ்சநஞ்சமல்ல. அம்மாவுக்கு புதிய உதவியாளரைப் பிடித்துப்போகவேண்டும். புதியவருக்கு அம்மாவின் நடைமுறைகள், மனநிலைகள், சுகயீனங்கள், அவரை எவ்வாறு பராமரிப்பது, கையாள்வது என்பவை புரியவேண்டும். அவற்றை அவர் கற்கும் மனநிலையில் இருக்கவேண்டும். அவரது விடுமுறைக்காலங்கள் என்று எத்தனையோ பகுதிகள் பொருந்திவரைவேண்டும். முக்கியமாக அவருக்கு அம்மாவை பிடித்துப்போகவேண்டும். உதவிக்கான ஆள் தேடுதல் என்பது மிகவும் கடினமானது. மருமகளின் தேர்வுகளில் அவர்கள் தப்பி வந்தால் எமக்கு நிம்மதி.

இன்று காலை நேரம். இளவெய்யில் எறிக்கிறது. அம்மா உடுப்புத்தோய்கிறார். இப்போதுதான் எனது அறைக்குள் வந்து கதிரையில் இருந்த சுத்தமான மேலங்கியை எடுத்துப்போனார். அத்தோடு விட்டாரே என்பதால் தூங்குவதுபோன்று பாசாங்கு செய்கிறேன்.

சற்றுநேரத்தில் “தம்பி இந்த உடுப்புக்களை அந்தத் தடியில் காயப்போடு” என்றபடியே எனது அறையின் சாரளத்துச் சீலை தொங்கும் தடியைக் காண்பிக்கிறார். நான் உடைகளை வாங்கி அதில் போடுவதுபோல் பாசாங்கு செய்தேன். குசினிகுள் சென்றார். நான் உடைகளை கொடியில் காயவிட்டேன். குசினிக்குள் எட்டிப்பார்க்கும்போது அம்மா எதையோ கழுவிக்கொண்டிருக்கிறார். உதவியாளர் “நான் கழுவுகிறேன், அம்மா என்று கெஞ்சுகிறார்” அம்மாவுக்கு கோபம் வருகிறது. “எனக்கு கழுவத்தெரியும்” என்று சிறுபிள்ளைபோல் முணுமுணுக்கிறார்.

பாரதப்போரில் சஞ்சயன் சமாதானத்தூதுவனாகச் சென்றதுபோல், இந்தச் சஞ்சயன் அவர்களுக்கிடையில் சாமாதானம் செய்துவைத்து, உதவியாளருக்கு அம்மாவை எப்படிக் கையாள்வது என்று வகுப்பு எடுக்கும்போது, அம்மா பத்திரிகையுடன் கதிரையில் உட்கார்கிறார்.

நான் எழுதியகதைகளை அம்மா வாசித்திருக்கிறார். நன்றாக எழுதுகிறாய் என்ற பாராட்டும், எழுத்துப்பிழை எக்கச்சக்கம் என்ற குற்றச்சாட்டும் கிடைத்திருக்கறது. எனவே அண்மையில் நான் எழுதிய “முஸ்தபாவின் ஆடு” கதையை வாசித்துக் காண்பிக்கவா என்றேன். தலையாட்டிவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தார். நான் வாசிக்கத்தொடங்கினேன்.

“காலம் என்னை அவ்வப்போது வேருடன் பெயர்த்து வேறு இடங்களில் பதித்துவிடுகிறது. அப்படித்தான் இப்போதும்.” என்றுவிட்டு நிமிர்ந்தேன். அம்மா முகட்டைப் பார்த்தபடியே தூங்கிப்போயிருந்தார். மாலைபோல் கதையைக் கேட்டுவிட்டு “ஏறாவூர் ஆளா அவர்” என்றார் பச்சைக்குழந்தைபோல. “ஆம்” என்பதைத் தவிர வேறு எதைச்சொல்லிவிட முடியும் என்னால்.

இன்னொரு நாள் நான் இணையத்தில் எதையோ தேட ஆரம்பிக்கும்போது வந்தார். அருகில் நின்றபடியே கணிணியில் இருந்து Google என்பதை வாசித்துவிட்டு, இது என்ன என்ற அவரது கேள்விக்கு, இவர்தான் இப்ப கடவுள். இவருக்கு தெரியாதது இல்லை என்றேன். “க்கும்” என்றொரு நக்கலை உதிர்த்துவிடு நகர்ந்துகொண்டார்.

சில நாட்களுக்குமுன் விழுந்ததால் பிட்டத்தில் இரத்தம் கண்டியிருக்கிறது. மிகவும் வலிக்கிறது என்றிருந்தார் வைத்தியர். உட்காரும் போது அவருக்கு வலிக்கிறது. “ஏன் எனக்கு வலிக்கிறது” என்று தன்னைத்தானே கேட்டபடியே உட்கார்கிறார். நான் “நீங்கள் விழுந்தால் உங்களுக்கு வலிக்கிறது” என்றேன். “சும்மா போ. பொய்சொல்லாதே” என்றுவிட்டு உலகப்பிரச்சனைகளை தீர்க்கும் ராஜதந்திரியின் கவனத்தோடு பத்திரிகையில் மூழ்கிப்போகிறார்.

அம்மா எப்படி விழுந்தார் என்பது உதவியாளருக்குத் தெரியாது. அம்மா அலறிய சத்தம் கேட்டு அவர் ஓடியிருக்கிறார். கீழ்வீட்டாருக்கும் அலறிய சத்தம் கேட்டிருக்கிறது. அம்மாவைப்பொறுத்தவரையில் விழுந்து மறுகணமே என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியாது. கேட்டால், ஏதேனும் தொடர்பற்ற பதிலைத் தருவார். இப்படி பல சம்பவங்கள் நடக்கலாம். அவருக்குரிய உதவியைச் செய்வதற்கு எமக்கு அவர்பற்றிய தகவல்கள் வேண்டும்.

பல ஆண்டுகளாக அம்மாவுடன் கணிணியூடாக உரையாடுவதற்கு வசதி இருக்கிறது. உதவியாளர் அதனை இயக்கிவிடுகிறார். உலகில் எங்கிருந்தும் அம்மாவுடன் உரையாடலாம். ஆனால் இப்போது அம்மா இன்னொரு நிலைக்குச் சென்றிருக்கிறார். அம்மாவை 24/7 நேரமும் கண்ணாணிக்கவேண்டும். அவர் தனியே தனது அறைக்குள் என்ன செய்கிறார். விழுந்தாரா? அப்படியாயின் எப்படி விழுந்தார்? எதையாவது குடித்தாரா? என்ன குடித்தார், உதவியாளார் வீட்டில் இல்லாத சில நிமிடங்களில் என்ன நடந்தது என்று அறியவேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. அம்மா நடமாடும் பகுதிகளில் ஒளிப்பதிவுக் கருவிகளை பொருத்தவேண்டும். உதவியாளருக்கு அதுபற்றி தெளிவாக அறிவுத்தவேண்டும். இது அம்மாவுக்கான பாதுகாப்பினைவிடவும் எங்களுக்கும் ஒருவித மன ஆறுதலையும், அம்மாவின் நிலையை நேரடியாகக் காணவும், ஆபத்துக்களை, விபத்துக்களைத் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மருந்து கொடுக்க வேண்டிய நேரம் வருகிறது. மருந்து மற்றும் குடி நீருடன் அருகிற்சென்று “மருந்து குடியுங்கள்” என்கிறேன். “எனக்குத் தெரியும்” என்று கறாரான பதில் வருகிறது. மருந்தை அவர் முன்னே வைத்துவிட்டு நகர்ந்துகொள்கிறேன். மறுநிமிடமே மீண்டும் ”அம்மா மருந்து குடிக்கவில்லையா” என்று கேட்டபடியே மருந்தைக் காண்பித்தேன். எதுவித எதிர்ப்பும் இன்றி மருந்து உள்ளிறங்கியது. இவ்வாறு என்னைக்குப்பின்னால் திரிந்து மருந்தூட்டியிருப்பாரல்லவா?

மாலை 8மணிக்கு அம்மா உறங்கப்போவார். அதற்கான ஆயத்தங்கள், சம்பிரதாயங்கள் என்று பல உண்டு. எனது அறைக்குள் வந்து “சாப்பிட்டாயா” கேட்டுவிட்டு. உடைகளை மடித்துவைப்பார். அவற்றை எடுத்து மீண்டும் மீண்டும் மடித்துவைப்பார். அலுமாரியை ஆராய்வார். தனது தலைமுடியை மெல்லிய வெள்ளிக்கம்பியாலான பின்னைலைப்போன்று பின்னிக் கட்டுவார். தலையணை தலைமாட்டில் இருக்கும், ஆனால் அம்மா நடுக்கட்டிலில் சுருண்டு படுப்பார். நடுச்சாமத்தில் இருட்டில் எழும்பியிருப்பதையும் கண்டிருக்கிறேன். சில நேரங்களில் என்னைக் கண்டால் “உங்கள் பெயர் என்ன என்பார்” “சஞ்சயன்” என்றால்,“ஆம், மறந்துவிட்டேன்” என்பதுடன் மீண்டும் கட்டிலில் சரிந்து மறுகணமே ஆழ்ந்து தூங்கிவிடுவார்.

அவரது கட்டிலின் நேர்த்தியை நீங்கள் மிகப்பிரலமான விடுதிகளிலும் காணமுடியாது. அத்தனை நேர்த்தியாக இருக்கும். எனது கட்டிலைக் காண்பித்து “அதை அழகாக விரித்துவிட்டுப் படு” என்பார். அவரது உடைகள் உள்ள தட்டுகளில் அவற்றை மிக நேர்த்தியாக, ஒரு ஒழுங்குடன் வைத்திருப்பார். எனக்கு அந்தக்கலை இன்னும் கைவரவில்லை.

இன்று காலை எதையே தேடியலைந்துகொண்டிருந்தார். நான் எதுவும் கேட்கவில்லை. என்னிடம் வந்து “தம்பி நெருப்புப்பெட்டியை கண்டாயா” என்றார். எனது வாய் “ஏன் அம்மா, சிகரட் குடிக்கப்போகிறீர்களா” என்றது. அவர் நகைச்சுவையை புரியும் மனநிலையில் இருக்கவில்லை. “அதை கழுவவேண்டும்” என்றார். நானும் அதை தேடுவதுபோல் பாசாங்கு செய்யவேண்டியிருந்தபோதுதான் நெருப்புப்பெட்டியின் ஆபத்து புரிந்தது. அம்மா நெருப்புப்பெட்டியைக் கண்டு, சிந்தனையின்றி அதை பற்றவைத்தால்? எனவே உதவியாளரிடம் அம்மாவின் கண்களில் நெருப்புப்பெட்டியை காட்டாதீர்கள் என்று வேண்டியிருக்கிறேன். இப்படி ஆபத்தான பொருட்கள் இன்னும் பல வீட்டில் இருக்கலாம்.

அம்மாவின் பரம்பரையில் அவர்மட்டுமே மீதமிருக்கிறார். அவரின் இளைய அக்காவின் மகளின் மகளுக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள். அவளுக்கு இப்போது மூன்றரை மாதங்கள். அம்மாவை தனது குழந்தையைப்போன்று கவனிப்பது பிறந்த குழந்தையின் தாயாராகிய எனது மருமகள். இன்று நான்கு சந்ததியினரும் ஒன்றாகச் சந்தித்தனர். அம்மா அவர்கள் நின்றிருந்த இரண்டு மணிநேரமும் உயிர்ப்புடன் இருந்தார். குழந்தையுடன் கதைத்தார், குழந்தையை மிக நிதானமாக வாரி எடுத்து தாலாட்டினார். தளர்திருக்கும் அவரது கையில் எங்கிருந்து அத்தனை பலம் வந்தது என்பதை நான் அறியேன். அம்மா மிக மகிழ்ச்சியாக இருந்தார். அவரைச் சுற்றி அவருக்கு அறிமுகமானவர்கள், சிறுகுழந்தை, அவரது அக்காவின் மகள், மகளின் மகளும் கணவர் இவர்களுடன் அம்மாவின் மூத்த புத்திரனாகிய நான்.

இதில் இருந்து ஒன்றை மட்டும் நன்கு புரிந்துகொண்டேன். அம்மாவைச் சுற்றி அவருக்கு அறிமுகமானவர்கள் இருப்பின் அவரது நோயின் பாதிப்பு அவரை குறைவாகவே பாதிக்கிறது. புலம் பெயர் வாழ்வு கொடுத்த சுமைகள் இவை. இல்லை எனின் அம்மாவின் குழந்தைகள், அவர்களின் குழந்தைகள் என அவரைச்சுற்றி எப்போதும் நாம் இருந்திருப்போம்.

ஆரம்பத்தில் கூறிய அந்த நாடகத்தினை எழுதிமுடிக்குமளவுக்கு என்னிடம் கதைகள் இப்போது இருக்கிறன்றன. அது அப்படியொன்று விறுவிறுப்பான நாடகமாக இருக்காது. ஆனால் நினைவுகளை இழக்கும் ஒரு மனிதரின் கதையைப்பற்றியதாக இருக்கும் அது.

அம்மாவின் இன்றைய மனநிலை, அவரது நடவடிக்கைகள், அவர் அசையும் விதம், நடக்கும் தன்மை, தன்னை மறந்திருக்கும் நிலை, குழப்பமான மனநிலையில் அவர் அந்தரிக்கும் காட்சி, அவரது கோபதாபங்கள், வந்துபோகும் உற்சாகமனநிலை, தடுமாற்றங்கள், குழந்தைகள்போலான கேள்விகள், அவர் தனது பொருட்களை வாஞ்சையுடன் பாவித்துவிட்டு அவற்றை மீண்டும் வைக்கும் அழகு, தனக்கு தானே உரையாடும் பாங்கு என்று பல நுணுக்கங்களை அந்த நாடகத்தில் காண்பிக்காவிட்டால் நாடகத்திற்கு உயிர் இருக்காது. அப்படியானதொரு நாடகத்திற்கான நடிகர்களை இனம்கண்டு தயாரித்து, இயக்கி, உயிர்கொடுக்க யாராவது இருந்தால் மகிழ்ச்சிதான்.

அம்மாவைப்பற்றி எத்தனையோ கதைகள் எழுதியிருக்கிறேன். வாழ்வின் அந்திமக்காலத்தில் மனிதர்கள் நகர்தலை, அசைதலை, உரையாடலை, உணவை மெது மெதுவாகக் குறைத்துக்கொள்வதுபோன்று அம்மாவும் ஆரம்பித்துவிட்டார். இனி அவரைப்பற்றி எழுதுவதற்கு கதைகள் குறைவாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் அவை பேசியதைப் பேசலாகவே இருக்கலாம். ஒரு கதைசொல்லி பேசியதை பேசக்கூடாதல்லவா?
-----------------------------------------------------------------------------------------------------
நடு 2018 இதழ் 10 ஆடி ஆவணி புரட்டாசி இதழில் வெளிவந்த பத்தி.

இத்தாலிய மொக்கா கோப்பியும், இலங்கையின் இழுத்த தேனீரும்

இன்று மதியம் பிராங்கோ என்னைக் கண்டதும் "அமீகோ எப்போ வந்தாய்" என்றபடியே "வா கோப்பி குடிப்போம்" என்றான்.

இத்தாலியர்களின் கோப்பியில் எனக்கு காதல் இல்லை என்றாலும் நட்புக்காக "வா போவோம்" என்றேன்.

தனது அறைக்கு அழைத்துப்போனான். குண்டுவெடிப்பின் அதிர்வில் உடைந்திருந்த கண்ணாடியை போலித்தீனால் மறைத்திருந்ததை அவதானித்தேன். எனது பார்வையைக் சென்ற இடத்தைக் கண்டதும் "நீ இல்லாதபோது நடந்தது என்றான்".

அண்மையில் இத்தாலிக்குச் சென்றுவந்தபோது புதுவிதமானதோர் கோப்பித் தயாரிப்பு இயந்திரத்துடன் வந்திருந்தான். அதை எடுத்து அதன் கீழ்ப்பகுதியினுள் தண்ணீரை நிரப்பினான். அதற்கு மேல் மிக நுண்ணிய ஓட்டைகளைக்கொண்ட 2 செமீ உயரமான, 5 செ.மீ விட்டத்தையுடைய ஒரு வட்டமான கொள்கலளினுள் கோப்பித்தூளை இட்டு தண்ணீருக்கு மேலே வைத்தான். அதற்கு மேலே கோப்பியை சேகரிக்கும் பகுதியை வைத்தபோது அதனுள் கோபுரம்போன்றதொரு வடிவமைப்பு இருந்தது. அந்தக் கோபுரத்தின் உச்சியில் ஓட்டையொன்றும் இருந்தது. வாயு அடுப்பை பற்றவைத்தான். நீலநிறக்கதிர்கள் எரியத்தொடங்கின.

நீர் கொதித்து, நீராவி கோப்பித்தூளை ஊடறுத்து, நீராவியில் கலந்தகோப்பியை கோபுரத்தின் உச்சியில் இருந்த ஓட்டையின் ஊடாக கொள்கலனுக்குள் நிரப்பியது.

இத்தனையும் நடந்து முடிய ஏறத்தாள 15 - 20 நிமிடங்கள் சென்றிருக்கும். ஏதோ கடலுக்கு கீழ் இருந்து எண்ணை எடுப்பதுபோன்ற அவதானத்துடன் அவன் கோப்பி தயாரித்துக்கொண்டிருந்தான்.

எனக்கு நேரம் செல்லச் செல்ல காதால் புகைவரத்தொடங்கியது. "கெதியில் கோப்பியைத் தா. இன்றைய மாலை உணவுக்கு ரொட்டி, பால், பேரீச்சம்பழம் வாங்கச் செல்ல செல்வது எனது முறை. நீண்ட தூரம் நடக்கவேண்டும் " என்றேன் சற்று எரிச்சலான குரலில்.

கோப்பியை ஒரு சிறு குப்பிபோன்ற ஒரு குவளையில் ஊற்றினான். அதை ஒரு மிடக்கில் குடித்துவிடலாம். அத்தனை சிறியளவு கோப்பி.

கோப்பியை வாயில் வைத்தேன். இதைவிட வேப்பம்பழம் உண்ணலாம்போன்றிருந்தது.

பல்லைக்கடித்தபடியே விழுங்கினேன்.

எப்படி இருக்கிறது மொக்கா கோப்பி என்றவனிடம் "போடா மொக்கா, நீயும் உன் மொக்கா கோப்பியும்" என்று சொல்ல நினைத்ததை அடக்கிக்கொண்டு எங்கள் ஊரில் இழுத்த தேனீர் என்று ஒரு பானம் உண்டு. நாளை எனது அறைக்கு வா. இழுத்த தேனீர் தருகிறேன் என்றுவிட்டுப் புறப்பட்டேன்.

இரவு ரொட்டியும் பாலும் பேரீச்சம்பழமும் உண்ணும்போது உனது இழுத்த தேனீரைப் பருகுவதற்கு ஆவலாய் இருக்கிறேன் என்றான். மற்றையவர்கள் என்ன வென்றார்கள். அவர்களுக்கு கண்ணடித்து விடயத்தை விளக்கினேன்.

மறுநாள் காலை 10 மணிக்கு எனது அறைக்கு வெளியே ஐவர் நின்றிருந்தார்கள். பிராங்கோ ”இழுக்கும் தேனீர் போடு” என்றபடியே படியில் குந்திக்கொண்டான்.

நானும் சுடுநீரில் தேயிலையை இட்டு, சாயம் வடித்தபின் இப்படித்தான் தேனீரை இழுப்பது என்றேன். அனைவரும் என்னைப் பார்த்தார்கள்.

ஒரு கோப்பையில் இருந்த தேனீரை இன்னொரு கோப்பைக்கு உயரத்தில் இருந்து ஊற்றினேன். அதை மீண்டும் மற்றைய கோப்பைக்கு ஊற்றினேன்.

பிராங்கோ இதுதான் இழுத்து இழுத்து போடும் தேனீர் என்று அவனை பரிசகித்தார்கள், நண்பர்கள். நான் குறும்புத்தனமாய் சிரித்தேன்.

பிராங்கோவின் கண்களில் கொலைவெறி தெரிந்தது.

யமனும் பாலஸ்தீனத்து பல்வைத்தியரும்

சாமம்போல் பல்வலித்தது. வலி அதிகரித்தபோது இரண்டு குளிசைகளை விழுங்கிக்கோண்டேன்.

காலை மீண்டும் பல்வலி. இன்று காலையுணவு உண்ணும் இடத்திற்குச் செல்லவில்லை.
இத்தாலிய நண்பன் பிராங்கோவை அழைத்து“பல்லில் பிரச்சனை” என்றேன்.

வாகனம் இருக்கிறதா என்று பார்த்துவிட்டுவருகிறேன் என்றவன் இரண்டு மணிநேரத்தின் பின் ஒரு எலும்புக்கூடு வாகனத்தில் வந்து என்னை ஏற்றிக்கொண்டான்.

நான் அவன் அருகில் உட்கார்ந்து கீழே குனிந்தபோது வாகனத்தின் கீழ்ப்பகுதினூடாக வீதிதெரிந்தது. பயத்தில் காலை அகட்டி வைத்துக்கொண்டேன். கடும் கரிய புகை வானத்தின் பின்பகுதியால் வெளியேறிக்கொண்டிருந்தது.

ஒரு மணிநேரத்தின்பின் ஒரு இடத்தில் நிறுத்தினான். அருகில் இருந்து கட்ட்டத்தினுள் அழைத்துப்போன்போது கடந்த 50 வருடங்களாக சுத்திகரிக்கப்படாத இடம்போன்றிருந்தது அது. இடிந்த கட்ட்டம், எங்கும் குப்பையும் அழுக்கும். இரண்டாவது மாடியில் பல் வைத்தியர் நின்றிருந்தார்.
அரபி மொழியில் வரவேற்றார். இடது மார்பில் கையைவைத்து மரியாதை செலுத்தினேன். என்ன பிரச்சனை என்றார் ஆங்கிலத்தில். விளக்கினேன். ஒரு கதிரியக்கப்படம் எடுத்தார். அதைப்பார்த்து தலையாட்டிக்கொண்டார்.

வாய்க்குள் ஒரு குறடு ஒன்றை கொண்டுசென்றபோது கையால் தடுத்து “அய்யா! எனக்கு பல்வைத்தியர் என்றால் யமனைக் கண்டது போன்று பயம், தயவு செய்து விறைப்பூசி போடுட்டுவிட்டு குறட்டை வாய்குள் வைய்யுங்கள்” என்றேன்.

இது சின்ன வேலை. நோகாது. பயப்படாதே. கவலைப்படாதே என்று விட்டு தோளில் தட்டினார். நான் விடவில்லை. இல்லை, ஊசிபோட்டுவிட்டு கைவைய்யுங்கள் என்றேன். அப்போது மின்சாரம் நின்றுபோய் பல்வைத்தியரின் கந்தோர் இருட்டானது. என்னை சற்றுப்பொறுக்கச்சொன்னார். நான் சகுனம் பார்ப்பதில்லை. எனவே இதையிட்டு கவலைப்படவில்லை.

அரைமணிநேரம் சாய்ந்திருந்தேன். வெக்கை தாங்க முடியாத்தாய் இருந்தது. வைத்தியரின் குறடு கறள்பிடித்திருப்பதுபோன்று தோன்றியது. எடுத்துப்பார்த்தேன். நான் எதிர்பார்த்ததை விட நன்றாக இருந்தது அது. டாக்டருக்கு ஏறத்தாள 50 வயதிருக்கும். அவரது வைத்தியசாலைப்பொருட்களுக்கு அவரின் வயதில் 50 வீதமாவது இருக்கும் என்றே தோன்றியது. உதவியாளினியைத் தவிர்த்து.

சில நாட்களாக களற்றிய பற்கள் ஒரு பக்கத்தில் அனாதரவாகக் கிடந்தன. அவற்றைப் பார்க்க பார்க்க பயமாக இருந்து.

மின்சாரம் வந்ததும் வைத்தியர் வந்தார். குறட்டை வாய்குள் வைத்தபோது தடுத்தேன். ஊசி என்ற என்னை கடுமையாகப் பார்த்தார். இதற்கெல்லாம் இங்கு ஊசிபோடுவதில்லை என்றுவிட்டு வாய்க்குள் குறட்டைத் திணித்து வாயை அகலமாகத் தற என்றார்.
நான் அதிர்ந்துபோய் என்ன நடக்கிறது என்று உணர்வதற்கிடையில் குறட்டால் பல்லைஆட்டிப் பார்த்தார். உண்மையில் எனக்கு வலிக்கவில்லை. டாக்டரில் பலத்த நம்பிக்கை வந்தது.

குறட்டை வெளியே எடுத்து, துளையிடும் கருவியை வாய்க்குள் வைத்து துளையிட ஆரம்பித்தார். வலி தாங்கக்கூடியதாக இருந்தது. கண்ணை இறுக மூடிக்கொண்டு தாங்கிக்கொண்டிருந்தேன்.
திடீர் என்று அறை இருட்டானது. மின்சாரம் நின்றுபோயிற்று. துளையிடும் கருவி பல்லினுள் பொறுத்து இறுகிக்கொண்டது.
டாக்டர் அதை இழுத்தார். வலி உயிர்போனது. கத்தினேன். எனது அலரலில் பயந்த டாக்டர் துளையிடும் கருவியை வெளியே இழுத்தார். அது வரவில்லை. எனக்கு உயிர்போகும் வலி. உயிர் பிரிகிறது போன்று வலி. அத்துடன் பயமும் பீடித்துக்கொண்டது. உயிரைக்கொடுத்து அலரினேன்.
கதவைத்திறந்தபடியே ஒடிவந்தான் பிராங்கோ.
இவ்வளவும் நடப்பதற்கிடையில் டாக்டர் துளையிடும் கருவியை மீண்டு மிகுந்த பலத்துடன் இழுத்தார். இழுத்தது மட்டுமல்ல என்னைப்பார்த்து ” எவ்ரிதிங் ஈஸ் பpனிஸ்ட்” என்றுவிட்டு துளையிடும் கருவியோடு வெளியே வந்த பல்லையும் காண்பித்தார்.

எனது வாய்க்குள் இரத்த ஆறு ஓடிக்கொண்டிருந்தது. பஞ்சை வைத்து, கடி என்றார்.

வலிகுறைந்து நான் சாதாரண நிலையை அடைய 15 நிமிடங்கள் ஆகியிருக்கும். அவருக்குரிய பணத்தைக் கொடுத்துவிட்டு அவரது கையைக்குலுக்கியபோது “இது சின்னப்பிரச்சனை. இனி நோகாது. பயப்படாதீர்கள்” என்ற அவரிடம் இனி வருவதில்லை என்று தீர்மானித்தபடியே வெளியே வந்தேன்.

வாகனத்தில் என்னை ஏற்றிக்கொண்ட பிறாங்கோ, டாக்டர் உனக்கு மருந்து வாங்கிக் கொடுக்கச்சொன்னார் என்றுவிட்டு ஒரு பைக்குள் இருந்து ராகி மதுபானப் போத்தலைக் காண்பித்தான்.

நண்பேன்டா.. என்றது மனது.

உயர உயரப் பறந்து போ

அந்தத் தொப்புட்கொடியை வெட்டுவதற்கு நான்கு வருடங்களுக்கு முன்னதைப்போன்று பயப்படவில்லை நான். ஒரே வெட்டு. தாதியர் அழைத்துப்போய் உதிரத்தையும் சதைகளையும் சுத்தம்செய்து தடுப்பூசி இட்டபின் என்னிடம் தந்தார்கள். எனது இரண்டாவது தேவதையைக் கையில் ஏந்தியிருந்தேன்.

இதற்கு முன்னான நான்கு ஆண்டுகளில் எல்லாவற்றையுமே எனது மூத்தவள் எனக்குப் பழக்கியிருந்தாள். குழந்தைகளுக்கு தாய்ப்பால்லைத் தருவதைத் தவிர மற்றைய எல்லாமே என்னால் செய்யமுடியும். இப்போதும்.

இரண்டு பெண்குழந்தைகளின் தோழனாய், தந்தையாய் வாழ்வதன் பேரின்பம் எப்படியானது என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உணர்வு.

மனிதனின் வாழ்வு 7 ஆண்டுச்சுற்றுக்களைக் கொண்டது என்று வயோதிபரில்லத்தில் தொழில்புரிந்த காலத்தில் 99 வயதைக் கொண்டாடிய ஒரு முதியவர் எனக்குச் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

இப்போது கடந்தகாலத்தைத் திரும்பிப்பார்த்தால் அது உண்மைதான்போலிருக்கிறது.

புயலடிப்பதற்கு 7 வருடங்கள் இருந்ததை அக்காலத்தில் காலம் என்னிடமிருந்து மறைத்துவிட்டிருந்ததை இன்று புரிந்துகொள்கிறேன்.

அந்த 7 வருடங்களும் எனது வாழ்வின் உச்சம். அனைத்திலும் உச்சமான காலம். இரண்டு குழந்தைகள், சிறந்த வருமானம், சிறந்த வேலை, வாழ்ந்திருந்த நோர்வேஜிய, தமிழ்ச்சமூகங்களில் மரியாதை என காலம் என்னை காற்றில் தூக்கிச்சென்ற காலமது. அக்காலத்தினை ஆரம்பிப்பதுபோல் பிறந்தவள் அவள்.

நான் வேலையால் வரும்போது அக்காளுடன் சாரளத்து கண்ணாடியிணூடாக பார்த்தபடி காத்திருப்பாள். அதற்கப்புறம் அவர்கள் உறங்கும்வரையில் எங்கள் காலம். இன்று என்னை வாழவைக்கும் நினைவுகளும் அவையே.

உடம்பினைத் திருப்பி, நிமிர்ந்து உலகைப்பார்த்தில் இருந்து எழுந்து நின்று, நடைபழகி, மொழிபழகி, ஓடி, பாய்ந்தோடி, நீச்சல் பழகி, மிகக்குறைந்த வயதில் துவிச்சக்கரவண்டியோடப்பழகியதெல்லாமே என்னிடமே என்ற பெருமை எனக்கிருக்கிறது.

இவளின் அக்காளிடம் நான் கற்ற பலவிடயங்கள், வீணே பயப்படாதே என்று எனக்கு கற்பித்திருந்தது. அது இவளுக்கு உதவிற்று.

இருப்பினும் அப்பாவின் கையுக்குள்ளேயே அவளின் பாதுகாப்புணர்வு இருந்திருக்கவேண்டும். எனது கையைவிட்டு, மடியைவிட்டு அவள் அகன்றிருந்த காலங்கள் குறைவுதான். ஆறு ஏழு வயதிலும் என்னுடனேயே ஒட்டிக்கொண்டிருந்தாள்.

அவளின் முதலாவது குழந்தைகள் காப்பக நாளை நினைத்துப்பார்க்கிறேன். அவள் தோழிகளுடன் சென்றுவிட்டாள். நான்தான் ஏங்கிப்போய் நின்றிருந்தேன்.

அதேபோலவே அவளது முதலாவது பாடசாலை நாளும். அன்று காலை அவள் என்னை படுத்தியபாட்டை ஒரு பத்தியாய் எழுதியிருக்கிறேன். அப்படியே அது பசுமையாய் நினைவிருக்கிறது.

ஒருமுறை விளையாடியபோது கையை முறித்துக்கொண்டாள். இரண்டுமுறை கையை வெட்டிக்கொண்டபோதும் அவள் வைத்தியருடன் அலட்டிக்கொண்டிருந்தாள். வைத்தியர் தையலிட்டபோது எனக்கு வலித்தது.

அப்பா எனக்கு ”இளவரசிகளின் அறைபோன்று எனது அறையை அலங்கரித்துத்தருவாயா” என்று அவளின் ஆசையை நிறைவேற்றினேன். இளவரசிகளின் படங்கள் ஒட்டிய சுவர் அலங்காரம், அதேபோன்ற மின் விளக்குகள், கட்டில், ரோசா நிறத்தில் மேசை கதிரைகள், அழகான நிலவிரிப்பு, அழும், பேசும், உணவு உண்ணும் பொம்மைகள் என்று அவள் கேட்டதெல்லாவற்றையும் முடியுமானளவு கொடுத்தேன்.

அவளது அந்தக் கட்டிலில் அவளுக்குச் சொன்ன கதைகளுக்கு எண்ணிக்கையில்லை. கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்திருக்க கதைகேட்டுக்கொண்டிருப்பாள். சிறுபிராயத்திலேயே வாசிக்கும் பழக்கம் அவளிடம் குடிவந்தது. இப்போதும் வாசிக்கிறாள். தள்ளியிருந்து ரசிக்கிறேன் அதையும்.

அந்நாட்களில் வேலைநிமித்தமாக வெளிநாட்டுப்பயணங்கள் அதிகம். இருவருக்குமான உடைகளும் தலைச்சோடனைகளுமே வாங்கிவருவேன். வேறு சிந்தனையே என்னிடம் இருக்காது.

அப்போதுதான் ஊழிக்காலம் தொடங்கியது. வாழ்க்கை நினைக்காத கோணங்களில் வளைந்துபோனது. குழந்தைகளைப் பிரிந்து ஒரு பையில் எனது உடைகளுடன் Osloவுக்கு இடம்பெயர்ந்தேன்.

குழந்தைகள் இருவரையும் தனியே அழைத்துச்சென்று கடற்கரையில் இருத்தி நான் இடம்பெயரப்போவதையும், அவர்களிடம் அடிக்கடி வருவேன் என்பதையும் கூறியபோது மூத்தவள் புரிந்துகொண்டாள். இளையவளுக்கு அதன் தாக்கம் புரிந்திருக்கவில்லை என்றுதான் அன்று நினைத்தேன்.

ஏறத்தாழ 10 வருடங்களின்பின் இவ்வருடம் அவளது சிறுபிராயத்துத் தினக்குறிப்பொன்று கண்ணில்பட்டது. அதில் ”அப்பா நீ Osloக்கு சென்றிருக்கக்கூடாது” என்று எழுதியிருந்ததைக் கண்டு ஒரு வாரமாய் அழுதுகொண்டிருந்தேன்.

8 வயதில் இங்கிலாந்திற்குச் சென்றவளுடன் தொடர்புகள் குறைந்துபோயின. அந்நாட்கள் மிகக்கொடுமையானவை.

இந்நாட்களில்தான் தோல்வியுற்ற தந்தை என்ற எண்ணமும் மன அழுத்தமும் தற்கொலையெண்ணங்களைத் தந்திருந்தகாலங்களில் என்னை மீட்டுக்கொள்ள எனக்குதவியவர்களை நினைத்துப்பார்க்கிறேன். அற்புதமானதொரு தோழமையது. அந்நாட்களில் காலம் செய்த ஒரே ஒரு நன்மை நல்ல நண்பர்களை அறிமுகமாக்கியதே.

இப்போது, அவள் சுயமாய் வளர்ந்திருக்கிறாள். சில ஆண்டுகளுக்கு முன்பு “அப்பா உன்னிடம் வருகிறேன்” என்றுவிட்டு வந்தாள். வானகமொன்றில் அவள் விரும்பிய இடமெங்கும் அழைத்துப்போனேன். எமக்கிடையிலான இடைவெளி அகலத்தொடங்கியபோது அவள் மீண்டும் பயணமானாள்.

அவள் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கும் சென்றோம். எமது பழைய வீட்டை பார்ப்பதற்கு அழைத்துச்செல் என்றவளை, வாழ்ந்திருந்த இரண்டு வீடுகளுக்கும் சென்றேன்.

என்னைப்பற்றி அவளிடம் பல நினைவுகள் வாழ்ந்திருந்தன என்பதை அவளது கதைகளில் இருந்து புரிந்துகொண்டேன்.

இப்படித்தான் அக்காளும் சில ஆண்டுகளுக்கு முன் “மறுவாரம் வருகிறேன்” என்றுவிட்டு வந்தாள். 8 நாட்களில் 6000 கிலோமீற்றர்கள் என்னுடன் சுற்றினாள்.

இந்தச்சம்பங்களின்பின் நாம் சற்று நெருங்கியிருக்கிறோம் என்றே எண்ணத்தோன்றுகிறது. இழந்த காலத்தினை மீட்டெடுத்துக்கொண்டிருக்கிறோம் என்றே எண்ணுகிறேன்.

விவாகரத்துக்களின் பெருஞ்சோகமே குழந்தைகள் பெற்றாரைப் பிரிவதே. புத்திரசோகம் மிகவும் கொடுமையான அனுபவம். எதிரிக்கும் கிடைக்கக்கூடாத அனுபவமது.

இதனாலோ என்னவோ குழந்தைகள் என்றால் கரைந்துபோகும் மனம்வாய்த்திருக்கிறது. Osloவில் எனக்கிருக்கும் வளர்ந்த நண்பர்களைவிட குழந்தைத் தோழமைகளே அதிகம்.

அவர்கள் எவருக்கும் தெரியாத உண்மையொன்றிருக்கிறது. என்னையுயிர்ப்பித்தவர்கள் அவர்கள் என்பதே அது. அவர்களில் சிலர் இப்போது பதின்மவயதைக் கடந்துகொண்டிருக்கிறார்கள் ஒருவன் பதின்மவதுக்குள் இப்போதுதான் புகுந்திருக்கிறான்.

அவர்களை ரசிப்பதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. இவர்களில் சிலரை எனது குழந்தைகளைப்போலவே கருதுகிறேன். ஏறத்தாள தினமும் இவர்களுடன் கழிந்த மகிழ்ச்சியான காலங்கள் தந்த பரிசு இது.

அக்காள் 3 வருட சுற்றுச் சூழல் பாதுகாப்பு கல்வியைமுடித்துவிட்டு 4ம் வருடத்தில் படித்துக்கொண்டிருக்கிறாள். “நீங்க என்ன படிக்கவிரும்புகிறீர்கள்?” என்றேன் இளையவளிடம். “நுண் நரம்பியல்” என்றாவளிடம் “ஏன் அதைத் தெரிவுசெய்கிறாய்?” என்றபோது:

“உனக்கு மறதி அதிகம். அதுதான்” என்றுவிட்டுச் சிரித்தாள்.

அன்றொருநாள், எனது காற்சட்டை பெரிதாக இருக்கிறதாகவும், இந்தக் காற்சட்டைக்கு பொருத்தமில்லாத பாதணியை அணிவதாகவும், எனக்கு உடைத்தேர்வில் சற்றும் கவனமில்லை எனவும் திட்டினாள். வாங்கி வைத்துக்கொண்டேன். மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த கோடைகாலத்திலும் நாம் ஒன்றாக சிலநாட்களைக் கழிக்கும் சந்தர்ப்பம் வந்தது. அந்நாட்களில் அவள் வளர்ந்துவிட்டிருந்ததை உணரமுடிந்தது.. என்னைக் கவனித்துக்கொண்டாள். மறந்தவற்றை நினைவூட்டினாள். கேட்டதைச் செய்துதந்தாள். அடிக்கடி “என்னை சிறுகுழந்தைபோல் நடாத்தாதே” என்றும் என்னைக் கண்டித்தாள்.

உண்மைதான். இன்றும் சில மணிநேரங்களில் அவளுக்கு 18வயதாகிறது. அவள் இனி குழந்தையில்லைத்தான்.

இருப்பினும் எனக்கு அவள் என்றென்றும் சிறு குழந்தைதானே.

அப்பாவின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் அட்சயா குட்டிக்கு.

முஸ்தபாவின் ஆடு


காலம் என்னை அவ்வப்போது வேருடன் பெயர்த்து வேறு இடங்களில் பதித்துவிடுகிறது. அப்படித்தான் இப்போதும்.

இந்த உலகத்தில் மிகவும் «சபிக்கப்பட்ட» ஒரு இடத்தில் வாழத்தொடங்கியிருக்கிறேன். மொழி, கலாச்சாரம், மதம், காலநிலை என்று அனைத்தும் எனக்குப் புதியவை. இருப்பினும் மனம் இவ்விடத்தில் துளிர்க்கத்தொடங்கியிருக்கிறது.

நாள் முழுவதும் ஐந்துமுறை பாங்கொலி திறந்துவிட்டிருக்கும் சாரளங்களின் ஊடாக வந்து நேரத்தை புரியவைக்கும்போது வாழ்ந்து முடிந்துவிட்ட 1980களின் ஏறாவூர் வாழ்க்கை நினைவில் வருவதை மறுப்பதற்கில்லை.

அண்மையில் மனதைப் பிசையும் இரண்டு வீடியோக்களைப் பார்க்கக் கிடைத்தது. அதில் இருந்து இன்னும் நான் மீளவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் குண்டுவீச்சின் பின் இடுபாடுகளுக்கு இடையில் 24 மணிநேரங்கள் கடந்தபின் ஒரு கைக்குழந்தையை சிரிய யுத்தத்தில் குண்டுவீச்சுகளின் பின் மக்களை மீட்டெடுக்கும் White Helmets அமைப்பினர் மீட்டு எடுக்கின்றனர். பின்பு, அக்குழந்தை “அதிசயக் குழந்தை” என்று அழைக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளின்பின் அக்குழந்தை மீட்டவர்கள் அக்குழந்தையை சந்திப்பதை காண்பிக்கிறது அந்த வீடியோ. அக்குழந்தையை மீட்ட White Helmets போராளி 2016ம் ஆண்டு இறந்துவிட்டிருக்கிறார். அவரது தோழர்கள் அக்குழந்தையை சந்திக்கின்றனர்.

இதேபோன்று இன்னொரு வீடியோவில் West Bank (யோர்டான் ஆற்றின் மேற்குக்கரைப்பகுதி) வாழும் ஒரு பாலஸ்தீனத்து மனிதரை இஸ்ரேலிய இராணுவத்தினர் தடுத்திருக்கும்போது அம்மனிதனின் ஒலீவ் மரங்களை ஒரு மனிதர் இயந்திர வாளைக்கொண்டு வெட்டித்தள்ளுகிறார். அவனது நிலத்தில் இருந்து அவனை அகற்றுவதற்கான தந்திரம் அது.

இராணுவத்தினர்களைக் மீறி ஓடிவந்த அம்மனிதன் வெட்டப்பட்ட மரங்களை அள்ளியணைத்த “ஓ… என் ஒலீவ் மரங்களே” என்று குழந்தையை இழந்துவிட்ட தந்தைபோன்று அரற்றுகிறான். அவன் கண்முன்னேயே ஏனைய மரங்களும் வெட்டப்படுகின்றன. அவன் மண்ணிற் புரண்டு அழுதழுது சபிக்கிறான்.

நேரம் காலை 7மணி. நான் உட்கார்ந்திருந்த வாகனம் 2 மணிநேரங்களாக யெரூசலேம், பேத்லகேம் நகரங்களை நோக்கி தெற்குத்திசையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

முஸ்தபா எதுவித சலனமும் இன்றி வாகனத்தை 90ம் இலக்க பாதையில் செலுத்திக்கொண்டிருக்கிறார். எமக்கு இடப்பக்கமாய் கலிலியேக் கடல் (Sea of Galilee) முடிவுறாது தொடர்ந்துகொண்டே வருகிறது. இந்த கலிலியேக் கடலின் மேல்தான் யேசுநாதர் நடந்தார் என்றும், 5000 மக்களுக்கு அவர் இங்குதான் உணவளித்தார் என்று திருவிவிலியம் கூறுகிறது. ஆனால், இன்று இந்த கலிலேயேக் கடலின் வடகிழக்கில் பலர் உணவின்றி நாட்களை கடந்துகொண்டிருக்கின்றனர் என்பது முரண்நகை.

ஏறத்தாழ இன்னும் 2.5 மணிநேரங்களில் யெருசலேத்தை சென்றடையலாம் என்கிறார் முஸ்தபா. எனக்கு தூக்கம் வருகிறது. முன்னிருக்கையில் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டு உறங்க முயற்சிக்கிறேன். கண்ணுக்குள் நோர்வே வாழ்வின் அழகிய பக்கங்கள் ஒளிப்படமாய் வலம்வருகின்றன. அன்பிற்கு அழிவில்லை காண் என்பது உண்மைதான்.

பின்னால் உட்கார்ந்திருக்கும் நண்பர்கள் பாலஸ்தீனத்தைப்பற்றி உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். லஸ்தீனத்தைப்பற்றி மகிழ்ச்சியான செய்தியாக எதையும் கேட்க முடிவதில்லை. சபிக்கப்பட்ட இனம்.

முஸ்தபா பாலஸ்தீனத்தைத் சேர்ந்தவர். மெலிந்த தேகம். நரைத்த சில நாட்களான தாடி., சுருட்டை முடி. வெய்யிலில் புடம்போடப்பட்ட தேகம். எமது சாரதி அவர். என்னைக் கண்ட முதல் நாள், நீ ஆபிரிக்கனா என்ற அவரது கேள்விக்கு கூகிள் ஆண்டவரின் உதவியுடன் நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்று நிறுவினேன். அவரது பார்வை என்னை நம்பவில்லை என்பதுபோலிருந்தது. அல்லா சத்தியமாக உண்மை என்ற பின்பு அவர் நம்பினார் என்றே நினைக்கிறேன்.

அன்று முஸ்தபாவுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது இரண்டு கேள்விகளைக் கேட்டார்.

உனக்கு எத்தனை குழந்தைகள்? எத்தனை மனைவிகள்?

முதலாவது கேள்விக்கான பதிலான “இரண்டு” என்பதை நான் கூறியபோது, முஸ்தபா அதை தனது இரண்டாவது கேள்விக்கான பதிலாக நினைத்துக்கொண்டார். உனக்கு இரண்டு மனவிகளா என்று கேட்டார். அந்தளவு துணிவு எனக்கில்லை என்று கூறியபோது எனக்கும் துணிவில்லை என்றுவிட்டு வெடித்துச் சிரித்தார். அவருக்கு ஏழு குழந்தைகள். முஸ்தபா உனக்கு வீட்டில் வேறு வேலையே இல்லையா என்று கேட்டேன். வெட்கமாய் சிரித்தார்.

பெருஞ்சாலையில் இருந்து விலகியிருந்த ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தி தேனீர் அருந்தினோம். இனிப்பு அதிகமாக இருந்தது. நான் தேனீருக்குள் ரொட்டியை நனைத்து நனைத்து உண்டதை எனது நண்பர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அதன் அருமையை அவர்களுக்கும் கற்றுக்கொடுத்தேன்.

மதியம்போல் நாம் யெருசலேம் நகரத்தை வந்தடைந்தோம். வாகனத்தை நிறுத்திவிட்டு வந்தார் , முஸ்தபா. பழங்காலத்து யெருசலேம் நகரத்து டமாஸ்கஸ் வாயிலின் ஆரம்பத்தில் இராணுவத்தினர் சோதனைகளை மேற்கொண்டபின் நகரத்தினுள் நடந்துகொண்டிருந்தோம்.

இந்த நகரத்தின் உட்புகும் வாயில்கள் அனைத்தும் வலப்புறமாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏன் என்று தெரியுமா என்றார் முஸ்தபா. நாம் அனைவருமே உதட்டைப்பிதுக்கினோம்.

பாதுகாப்புதான் அதற்குக் காரணம் என்ற முஸ்தபா தொடர்ந்தார். ஒரு கோட்டையை வலப்பக்கமாக தாக்கும்போது இடது கையில்தான் அதிகமானவர்கள் ஆயுதங்களை வைத்திருப்பார்கள். இடதுகை பலருக்கு பலவீனமானது. கோட்டையை பாதுகாப்பவர்கள் இடதுபக்கமாக தாக்கவேண்டும் என்பதால் வலதுகையில் ஆயுதங்களை வைத்திருப்பார்கள். எனவே வலதுகையில் ஆயுதம் இருப்பதால் எதிரியை வெல்வது இலகு. அதை எனது மனதினுள் படமாக பதிந்து புரிந்துகொள்வதற்கு சற்று நேரமெடுத்தது. இருப்பினும் அதன் தார்ப்பரியத்தை புரிந்துகொள்ள முடிந்தது.

பழைய நகரம் முஸ்லீம்களின் பகுதி, யூதர்களின் பகுதி, ஆர்மேனியர்களின் பகுதி, கிறீஸ்தவர்குளின் பகுதி எனப் பிரிக்கப்பட்டிருந்தாலும் பல சமூகங்கள் தங்களின் வணக்கத்தலங்களை இங்கு கொண்டிருக்கிறார்கள்.

நாம் எத்தியோப்பிய திருச்சபையின் தேவாலயத்திற்கு அருகில் நின்றிருந்தோம். பலர் அழுவதுபோன்று சத்தம் வந்தது. பயப்படாதீர்கள், இப்படித்தான் எத்தியோப்பியர்கள் ஜெபிப்பார்கள் என்றார் முஸ்தபா.

நான் உள்ளே செல்லவில்லை. இங்கு ஒரு பாதாளச் சுரங்கம் உண்டு. அது கடைத்தெருவில் முடிவடைகிறது. அதனூடாக செல்வோமா என்றபோதும் மறுத்துவிட்டேன்.

யேசுதாதர் சிலுவையை சுமந்துசென்ற பாதையின் வழியே நடந்துகொண்டிருந்தபோது, தண்ணீர் விடாய்கிறது என்றேன், முஸ்தபாவிடம். எனக்குப்பிடித்தமான எலுமிச்சை மற்றும் மின்ட் இலைகளுடன் சீனிகலந்த நீராராகம் வாங்கும் கடைக்கு அழைத்துப்போனார். 38பாகை வெய்யிலின் வெம்மையை அவ்வருமையான நீராராகம் தீர்த்து மனதுக்கு புத்துணர்ச்சியைத் தந்தது.

உன்னுடன் ஒருவிடயம் பேசவேண்டும் என்றார் முஸ்தபா. “சொல்லுங்கள்“ என்றுவிட்டு வசதியாக உட்கார்ந்துகொண்டேன். ஒரு சிகரட்ஐ எடுத்து பற்றவைத்துக்கொண்டார். ஆழமாக உள்ளிழுத்து புகையை ஊதினார்.

“எங்கள் குடும்பத்தில் நானும் தம்பியும் , நான்கு சகோதரிகளும் மட்டுமே. தம்பி பல வருடங்களுக் முன் காணாமல்போய்விட்டார். அவன் தென்னமெரிக்கா சென்றுவிட்டதாக அறிகிறோம். அவன் குடும்பத்துடன் அதிகம் ஒட்டுவதில்லை. ஆனால் அம்மாவுக்கு அவனைப் பார்க்கவேண்டுமாம். எங்கள் குடும்பத்திடம் ஆட்டு மந்தை இருக்கிறது. அம்மா அவரது அந்திமக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்”.

“ம்”

“நான் அண்மையில் தம்பியின் பெயரை இணையத்தில் தேடியபோது பெரூ நாட்டு இணையத்தளத்தளம் ஒன்றில் அவனது பெயர் காணப்பட்டது. அந்த இணையத்தளத்தை தொடர்புகொள்ளவேண்டும். எனக்கு கணிணிபற்றி அதிகம் தெரியாது. எனக்கு உதவ முடியுமா?” என்றார் முஸ்தபா.

“விபரத்தைத் தாருங்கள். முயற்சிப்போம்” என்றேன்.

அடுத்தடுத்த நாட்களில் இணையத்தளத்தின் விபரத்தினைப்பெற்று என்னால் முடிந்ததைத் செய்தேன். பின்பொருநாள் எனக்கு வந்த மின்னஞ்சலையும் முஸ்தபாவுக்குக் கொடுத்தேன்.

அன்று யெரூசலேம் நகரத்தின் பல இடங்களை சுற்றிக்காண்பித்தார். பெத்லகேம் நகரத்தில் உள்ள பாலஸ்தீனத்தையும் யெரூச-5லேம் நகரத்தையும் பிரிக்கும் பெருச் சுவருக்குச் சென்றிருந்தபோது அச்சுவரில் Ahed Tamimi இன் படத்தை பிரேசில் நாட்டுக் கலைஞர் ஒருவர் வரைந்துகொண்டிருந்தார். படத்தின் உயரம் 4-5 மீற்றர் இருக்கும். அக்கலைஞர் தனது முகத்தை மூடியிருந்தார். காரணம் அருகில் இருந்த பாதுகாப்பரணில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்தினர் தன்னை அடையாளம் காணக்கூடாது என்பதலாம். Ahed Tamimi பற்றி இணையத்தில் தேடிக்கொள்ளுங்கள். இன்றைய பாலஸ்தீனப் பெண்களில் குறிப்பிடத்தக்கவர்.

அந்த மதில் முழுவதும் பாலஸ்த்தீனத்துப் போராட்டத்தின் கதைகளை, சுலோகங்களை, வசனங்களை, படங்களை, சித்திரங்களைக் கொண்டிருந்தது. அருகில் இருந்த The Walled Off Hotel அருங்காட்சியகத்தில் இந்த மதில்கட்டப்பட்டதன் சரித்திரம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

முஸ்தபாவின் நண்பரின் வீடும் அவரின் தாயாரின் வீடும் எதிரெதிரே இருந்தனவாம். இப்போது மதிலுக்கு அப்பால் தாயும், இங்கு மகனும் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் சந்திக்கவேண்டும் எனின் ஒன்றரை மணிநேரம் பயணிக்க வேண்டும். பல இராணுவச்சோதனைச்சாவடிகளைக் கடக்கவேண்டும். 5 நிமிடத்தூரத்தில் இருந்த வைத்தியசாலைக்கு செல்வதென்றாலும் அப்படியே. இஸ்ரேல் நாட்டு வைத்தியசாலைக்கு பாலஸ்தீனத்தவர்கள் செல்லமுடியாது. நண்பர் கரடுமுரடான அரபிமொழியில் பேசிக்கொண்டிருந்தார். முஸ்தபா மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்.

அங்கிருந்து புறப்பட்டபோது பேத்லகேம் நகரத்து சோதனைச்சாவடியில் எங்கள் வாகனம் சோதனையிடப்பட்டது. முஸ்தபாவைப் பார்ப்பதற்குப் பாவமாக இருந்தது. அவரது அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டபின், அவரை அழைத்து விசாரித்தார்கள். அதன்பின் நாம் விசாரிக்கப்பட்டோம். வெளியேற அனுதித்தார்கள்.

அன்று முன்னிரவு சாக்கடலில் (Dead sea) குளித்தோம். உப்பின் அடர்த்தி அதீதமாகையால் எவரும் அங்கு நீந்தலாம் (மிதக்கலாம்). இது கடல் மட்டத்தில் இருந்து 430 மீற்றர்கள் பதிவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகத்தில் மிகவும் பதிவான பகுதி இதுவாகும்.

முஸ்தபாவின் கதையை நிதானமாகச் சொல்லிக்கொண்டு வந்தார். 1967ம் ஆண்டு இடப்பெயர்வு, லெபனானில் அகதி வாழ்க்கை, தாயார், தனது குடும்பம் என பலதையும் பேசினார். நானும் தலையை ஆட்டியபடி அவ்வப்போது கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இரவு சாமம்போல் வீதியோரத்தில் வாகனத்தை நிறுத்தி பாலஸ்தீனத்தின் கருங்கோப்பி வாங்கிக் குடித்தார். எனக்கு பசித்தது. ரொட்டியும் கடலையும், அரைத்த தக்காளியும், தயிரும் கிடைத்தது. இதைவிட இங்கு வேறு என்ன உணவை எதிர்பார்க்கலாம். பசியின்போது எந்த உணவும் ருசியானதே. இன்னிப்பான தேனீருடன் இரவு உணவு முடிந்தது. அன்றிரவு படுக்கையில் விழுந்தபோது நேரம் சாமம் 1 மணி. முஸ்தபா வீடுபோய்ச் சேர்வதற்கு இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது.

ஒருவாரம் சென்றிருக்கும், முஸ்தபா என்னை காலையிலிருந்து தேடுகிறார் என்றனர் நண்பர்கள். அவரைத்தேடிப்போனேன். கையில் கோப்பியுடன் உட்கார்ந்திருந்தார். என்னைக் கண்ணுற்றதும் ஓடிவந்து அணைத்துக்கொண்டார்.

மகிழ்ச்சிபொங்க, தம்பியுடன் தொடர்பு கிடைத்திருக்கிறது. தாயாருடன் தம்பி உரையாடியதாகவும் விரைவில் அவர் இங்குவருகிறார் என்றும், நான்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதால் என்னை பிரத்தியேகமான விருந்திற்கு அழைக்கும்படி தாயார் கட்டளையிட்டிருப்பதாகவும் சொன்னார்.

பல ஆண்டுகளாகக் காணாமற்சென்ற எனது மகன் வந்திருக்கிறான். மந்தையில் உள்ள கொழுத்த ஆட்டை அடியுங்கள். சிறந்த உணவுகளைப் பரிமாறுங்கள் என்ற திருவிவிலியத்தின் கதை நினைவிற்கு வந்தது.

என்னையும் விருந்துக்கழைத்த அந்தத்தாயின் கைகளை கண்களில் ஒற்றிக்கொள்ளவேண்டும்.

வாழ்தல் என்பது: பெயர்த்தலும் நடுதலும்

“Life begins at the end of your comfort zone. என்றும், Osloவின் வடக்குத்திசை நோக்கி நகர்ந்தவொரு பேரூந்தில் சில 10 நிமிடங்கள் பயணித்தபின் இறங்கிக்கொண்டேன். ”ஒரு வெள்ளைக் கோடு ஆகாயத்தைப் பிளந்துகொண்டிருந்தது” என்றும் முடிந்திருந்தது ஒன்றரை மாதத்திற்கு முன் நான் எழுதிய "வேதாளத்தின் விக்கிரமாதித்தன்" என்னும் பதிவு.

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் ஒரு முறையேனும் இடம்பெயர்ந்திருப்பான் என்றே நம்புகிறேன். இடப்பெயர்வு என்பது சாமான்யமானதல்ல. ஒரு மரத்தினை பெயர்த்து வேறு இடத்தில் நடுவதற்குச் சமமானது. சில மரங்கள் ஒரு இடப்பெயர்வையே தாங்கமாட்டாது. சில மரங்களை நீங்கள் விரும்பிய இடங்களுக்கு மாற்றி மாற்றி நடலாம். அது தன்போக்கில் வாழ்ந்திருக்கும். இடப்பெயர்வு அதற்கொன்றும் பொருட்டல்ல, நாடோடிகள் போன்றவை அவை.

கொழும்பின் புறநகரான ராகமையில் பிறந்ததில் இருந்து இதுவரை 20 ஊர்களிலும் மூன்று நாடுகளிலும் வாழ்ந்திருந்திருக்கிறேன். அதாவது ஒரு இடத்தில் சராசரி 2.8 வருடங்கள்.

நான் ஒரு நாடோடி என்பது மெது மெதுவாகப் புரியத்தொடங்கியிருக்கிறது.

எனது நினைவில் இருக்கும் முதலாவது இடப்பெயர்வு ஏறாவூரில் இருந்து அக்கரைப்பற்றிற்கானது. அப்பா லொறியில் பொருட்களை ஏற்றியது சற்று நினைவில் இருக்கிறது. அம்மாவுடன் அக்கரைப்பற்றிற்கு பேரூந்தில் சென்றதும் நினைவிருக்கிறது.

கடந்த ஆவணி 15ம் திகதிவரையில் இறுதியானது 10வருடங்களுக்கு முன் வடமேற்கு நோர்வேயின் ஒரு கிராமத்தில் இருந்து Osloவிற்கு இடம்பெயர்ந்ததே.

ஒரு பயணப்பொதியில் எனது சொத்துக்கள் அடைந்து கிடைந்தன. Osloவிற்கு வந்த முதல் சிலநாட்கள் தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. எனது வாகனத்திலேயே தங்கினேன். அதன்பின் தனது இரண்டு கரங்களாலும் என்னை அரவணைத்து, ஆறுதற்படுத்தி, வாழ்வில் பற்றினையேற்படுத்தி, நண்பர்களைத் தந்து, மனச்சோர்வை நீக்கி மீண்டும் என்னை இயக்கிய பெருமை இந்த நகரத்திற்கு உண்டு.

இந்த நகரத்தினுள்ளும் இரண்டு இடங்களில் வாழ்ந்திருக்கிறேன். நகரத்தின் மையப்பகுதியின் இரைச்சல் தாளாது, ஒதுக்குப்புறமான ஒரு பகுதிக்கு நகர்ந்துகொண்டேன். அங்குதான் கடந்த ஆறுவருடங்களாக வாழ்ந்திருந்தேன்.

பதின்மகாலத்தின்பின் நான் வாழ்ந்திருந்த ஒவ்வொரு ஊரையும் எனது சட்டைப்பைபோன்று நன்கு அறிவேன். சென்னையில் 15 மாதங்கள் வாழ்ந்திருந்தேன். அந்நாட்களில் அந்நகரத்தின் அனைத்துப்பகுதிகளையும், அங்கிருந்த திரையரங்குகளையும், பேரூந்து இலக்கங்களையும் அறிந்திருந்தேன். புதிதாய் வருபவர்களுக்கு ஊரைச் சுற்றிக்காண்பிக்கும் வழிகாட்டியாக என்னை அனுப்புவார்கள் நண்பர்கள்.

இப்போது Osloவும் அப்படியாகிவிட்டது. ஒவ்வொரு நகரமும் தனக்குள் இரகசியங்களைப் மறைத்திருக்கும். அவற்றை அறியும்போது நாமும் அந்நகரத்துடன் அந்நியோன்யமாகிவிடுகிறோம். ஒரு நகரத்தினுள் இருக்கும் இரகசியங்களுக்கு அளவில்லை. எதையெடுத்தாலும் அதற்கென்றொரு இருண்ட பகுதியுண்டு.

Osloவில் செல்வச்செழிப்பான பகுதிகளின் இருண்ட பகுதிகளில் இருந்து வறுமையான பகுதிகளின் ஒளிமிகுந்த மனிதர்கள்வரை பலரை காலம் எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

போதைப்பொருள் விற்பனையாளர், வீடுவரை மதுவினை கொணர்ந்து தருபவர், வீடு திருத்துபவர், குறைந்த விலையில் விற்பனைவரியின்றி வாகனம் திருத்துபவர், வீட்டுவேலைசெய்யும் கிழக்கு ஐரோப்பியர்,விசா அற்ற மனிதர்கள், இசைக்கலைஞர்கள், வீதியோர விற்பனையாளர்கள், பால்வினைத்தொழிலாளிகள், ஓர்பாலினத்தவர், நாசிகள், விளையாட்டரங்குகள், பூங்காக்கள், காட்டுப்பாதைகள், கலையரங்கங்கள், திரையரங்குகள், கடற்கரைகள், ஆற்றோரங்கள், ஆளரவமற்ற இரயில் நிலையங்கள், பிச்சைக்கார்கள் என அனைத்தையும் இந் நகரம் எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்நகரத்திற்கு வந்தபின்பே அதிகம் எழுதத்தொடங்கினேன். ஆரம்பகாலங்களில் சந்தித்த மனிதர்களின் கதைகளை எல்லாம் எழுதிவைத்திருக்கிறேன். அவற்றை வாசிக்கும்போது எனக்கே ஆச்சர்யமாக இருக்கும். இப்படியான மனிதர்களையெல்லாம் சந்தித்திருக்கிறேனே, ஏன் அவை நினைவில் இல்லையென்று.

ஆரம்ப காலங்களில் அதிக தமிழ் நண்பர்கள் இருக்கவில்லை. காலப்போக்கில் நட்புப்பட்டியலில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களாகவே இருந்தார்கள்.

கணிதம் கற்பித்ததாலும்,பொது அமைப்புக்களில் இயங்கியதன் காரணமாகவும் எனக்கு பல குழந்தைகளுடன் அறிமுகமுண்டு. அவர்கள் உலகத்தில் வயதை மறந்து என்னை இணைத்துக்கொள்ளும் கலையும் வாய்த்திருக்கிறது. இது வாழ்க்கையின் அயர்ச்சியைப் போக்கிக்கொள்ள உதவும் ஒரு காரணி.

தனியே வாழ்வது என்பது இலகுவானதல்ல. இதை உணர்ந்த சிலர் என்னை தங்கள் குடும்பத்தவனாக நடாத்தியிருக்கிறார்கள். அத்தனை அன்பான மனிதர்களைத் தந்திருக்கிறது இந்த நகரம்.

தனியே இருக்கிறாயே, ஏன் திருமணம் செய்தால் என்ன என்று எனக்கு திருமணம் பேசிய நண்பர்களும் உண்டு. அவர்களிடம் நாய் வாலை நிமிர்த்தமுடியாது என்று கூறித் தப்பிக்கொண்டேன்.

முன்கோபமும், நேருக்குநேரே கருத்தைச் சொல்வதும் எனது சுபாவம். அரசியற்கொள்கை, தேசியம், குறுந்தேசியம், புலிப்பினாமிகள் என்று உரையாடியும், பொருதியும் இருக்கிறேன். எதையும் நேர் நேரே கூறிவிடுவதால் பலருடன் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது.

இப்படி மனக்கசப்பாகிப்போனவர்களுடன் எதிர்பாராத விதமாக நெருங்கிப் பழகியபின் அவர்கள்பற்றிய எனது கருத்தையும், என்னைப்பற்றிய அவர்களுடைய கருத்தையும் காலம் மாற்றிவிட்டிருக்கிறது.

மனித உறவுகளுக்கு முன்கற்பிதங்கள் ஆபத்தானவை.

எனது தவறுகளைத் தவறு என்று பொதுவெளியில் கூறி, மன்னிப்புக்கோரும் மனம் எனக்கு வாய்த்திருக்கிறது. வயதும், காலமும் ஆசான்களல்லவா.

தவறுகளை ஏற்பதும், திருந்துவதும், என்னையே மாற்றிக்கொள்வதும் அவசியமாய் இருக்கிறது. தவறுகளற்ற மனிதர்களுடன் உறவாடுவது என்பது எனக்குச் சிரமமானது. தினம் தினம் தவறுகளில் இருந்து கற்கும் சாதாரணமானவன் நான். இப்படியான ஒருவனால் தவறுகளே செய்யாத புனிதமானவர்களுடன் நட்பாயிருப்பதும் சிரமமானதே.

வாழ்ந்திருங்கள் புனிதர்களே!

துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியும்! அன்புக்கு அழிவில்லை காண் என்றானல்லவா அந்த மீசைக்காரன்.

நிறுவனங்களுக்காக தம்மை அர்ப்பணிக்கும் மனிதர்களையும், ஒற்றுமையே பலம் என்னும் நிறுவனங்களையும் இங்குதான் கண்டேன். உண்மைத்தன்மையுடன் சமூகத்திற்காக சேர்ந்தியங்கினால் பலதையும் சாதிக்கலாம் என்பதை அனுபவித்து அறிந்துகொள்ள முடிந்ததும் இங்குதான்.

பல அரச நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், வேற்றினத்தவர்களின் சமூகங்கள், விளையாட்டுக் கழகங்கள், பாடசாலைகள், மதநிறுவனங்கள் என்று பலருடனும் இந்த 10 வருடகாலத்தில் இணைந்தியங்கியிருக்கிறேன். மனமகிழ்ச்சியான நிகழ்வுகளேயே மனம் நிரம்பியிருக்கிறது.

ஒஸ்லோவின் இயற்கையை நெருங்கி அனுபவித்திருக்கிறேன். ஒஸ்லோ கடல் நீரேரி, தீவுகளுக்கான பயணங்கள், மீன்பிடித்தல், கப்பலில் பயணித்தல், மலையேற்றம், மலைப்பகுதியில் நடத்தல், பனிச்சறுக்கு, துவிச்சக்கரவண்டிப் பயணங்கள் என்று இந்நகரத்தைச் சுற்றி நேரகாலமின்றி அலைந்து, அமிழ்ந்து, ஆறியிருக்கிறேன். ஒஸ்லோவின் சுற்றுலாத்தளங்கள் உள்ளங்கை நெல்லிக்கனி.

எனது வாழ்வில் இருமுறை ஒஸ்லோ நகரத்தில் வாழ்ந்திருக்கிறேன். முதல் முறை 4 வருடங்கள், இரண்டாவது முறை 10 வருடங்கள். பல பல அனுபவங்களையும் கற்றல்களையும் தந்திருக்கிறது இந் நகரம்.

காலமானது, சஞ்சயா, தற்போதைக்கு இந்த 14 வருடங்களும் உனக்குப் போதுமானது, அங்குள்ள பெரு மக்கள் இனியாவது நிம்மதியாக இருக்கவேண்டுமல்லவா, என்றிருக்கிறது.

அது அப்படி சொன்னது மட்டுமல்லாது என்னை மத்திய கிழக்கில் 3 நாடுகளின் எல்லைப்பகுதிக்கு இடம்பெயர்த்திருக்கிறது. வேர் பிடித்து வளரவேண்டும். வளர்வேன்.

நான் வாழும் ஒரு பகுதியில் போர்நடைபெறுகிறது, மறுபகுதியில் பெரும் போர் மேகங்கள் சூழ்ந்திருப்பதால் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள், மறுபகுதியில் விடுதலைவேண்டி போராடும் ஒரு இனக்குழு. அவர்களின் பாரம்பர்ய நிலத்தில் மொழி, மதம், கலாச்சாரம் ஆகியவற்றுடன் சற்றும் பரீட்சயமின்றி வாழத்தொடங்கி ஒன்றரை மாதங்களாகின்றன. தினமும் காலையில் பாங்கோசைங்கோசையுடன் விழிக்கிறேன். அது எங்கள் ஏறாவூரை நினைவூட்டுகிறது.

இங்குள்ள மக்களின் வாழ்க்கையை ஒப்பிடுகையில் நோர்வே வாழ்க்கையை எவ்வாறு கூறுவேன். மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி. இல்லை, இவற்றை ஒப்பிடவே முடியாது. எனது அதிஸ்டம் நான் நோர்வேயில் வாழ்ந்தது. இப்போது இங்கு வாழக்கிடைத்தது. இதுவும் பலதையும் கற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை. கற்றல் அழகானது.

வறுமையினால் கழுதையில் பயணிக்கும் மனிதர்களின் மத்தியில் வாழ்வதும், ஒரு ரொட்டிக்காக காத்திருக்கும் மனிதர்களைக் காண்பது என்பதும் பலவித கற்றல்களை மனதுக்குக் கொடுக்கிறது. அதுமட்டுமல்ல, அவர்களது சுதந்திரப்போராட்டம் நசுக்கப்படும் முறையை எழுத்தில் வடிக்கமுடியாது. அத்தனை கொடுமையான வேதனை அது.

மனிதக்குழுக்களுக்கு தனித்தனியான அரச சட்டங்கள், ஊர்கள், பாதைகள், சலுகைகள், மதில்களால் பிரிக்கப்பட்ட நிலப்பரப்புக்கள். நில அபகரிப்புக் கொடுமையைப்பற்றி எவ்வளவோ எழுதலாம், 20 வருடங்களுக்கு மேலாக ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாத மக்கள் என பல அடக்குமுறைக்குள் வாழும் மனிதர்கள் இவர்கள்.

இங்கு இயங்கும் சர்வதேசத் தொண்டு நிறுவனமொன்றில் தன்னார்வலனாக இணைந்திருக்கிறேன். காலப்போக்கில் ஒரு வேலை கிடைக்கும் சந்தர்ப்பம் உண்டு. இல்லை என்றால் காலம் வேறு எங்கும் அழைத்துச் செல்லலாம், அல்லது ஒஸ்லோ முருகன் இந்த ஆசாமியை மீண்டும் தனக்கருகில் அழைத்துக்கொள்ளவும் கூடும்.

அவசர அவசர தீர்மானங்களினாலும், விடுமுறைக்காலம் என்பதாலும் நண்பர்களிடம் எதையும் பேசிப்பிரியும் சந்தர்ப்பம் இருக்கவில்லை. மன்னிக்க.

மறக்க முடியாத வாழ்வியல் அனுபவங்களைத் தந்த பழம்பெரும் கிறிஸ்டியானியா நகரத்திற்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

Life begins at the end of your comfort zone என்பது உண்மைதானே.






அன்புக்கு அழிவில்லை காண்.

லோக அதிசயம்

எனக்கு அறிமுகமான ஒருத்தி இருக்கிறாள். அவளுக்கு 3 - 4 வயதிலிருந்தே நாம் Tom & Jerry ஆக விளையாடுவோம். இப்போது கிழவி நான்காம் வகுப்பில் படிக்கிறார்.
நேற்று ஒரு விழாவில் அவள் தோழிகள் புடைசூழ உட்கார்ந்திருந்தாள். அவளின் தோழிகளுக்கும் நான் தோழன்.
நான்கு கால்களுடன் அருகிற்சென்றதும், ”பரிதாபத்துக்குரிய சஞ்சயன் மாமா” என்று இந்நாட்டு மொழியில் அனுதாபித்து ஒரு கதிரையை இழுத்துப்போட்டாள்.
ஒரு பேரரசனைப்போல் உட்கார்ந்திருந்தேன். பேட்டி கண்டார்கள் என்னை. ஏன் கால் முறிந்தது என்பதை படம்கீறிப் புரியவைக்கவேண்டியிருந்தது.
அதன்பின் சீட்டுக்கட்டு விளையாடினோம். மனக்கணக்கு செய்தோம். விடுகதைகள் பரிமாறிக்கொண்டோம்.
அப்போது எனது தலைத் தடவி மயக்கும் அன்பான குரலில் “உனக்கு என்ன வேணும்“ என்றாள் அவள்.
நான் “தேனீர் எடுத்து வரமுடியுமா” என்று சொல்வதற்கு வாயைத்திறந்தேன்.
“இங்கே பாருங்கள், இவரின் தலையில் ஒரு முடி இருக்கிறது என்று மண்டபம் அதிரும்படியாகக் கூவினாள்.
சுற்றியிருந்து, மற்றையவரின் புடவையை கடைக்கண்கால் அளந்தபடி, ஊர் வம்பளந்துகொண்டிருந்த ”ஆன்டி, பாட்டி” மேசைகள் தங்கள் கதையை நிறுத்தி சத்தம்வந்த திசையை நோக்கினர்.
இவளோ அந்த முடியை இரண்டு விரல்களால் பிடித்திருக்க, சுற்றியிருந்து தோழிகள் “ எங்கே, எங்கே” என்று கேட்டபடி அந்த லோக அதிசயத்தை சுற்றியிருந்து, வாயைப்பிளந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அதிலொருத்தி “அது வெள்ளை மயிர்” என்ற பரமரகசியத்தையும் போட்டுடைத்தாள்.
“அதை பிடுங்கவா” என்ற அவர்களின் ஆசையை நிறைவேற்றினேன்.
உலகத்தில் மகிழ்ச்சி என்பது கொட்டிக்கிடக்கிறது. அதை கண்டெடுப்பதுதான் வாழ்க்கையாகிறதா?
இருக்கலாம்.

ஊனமறு நல்லழகே , வீரமடி நீ யெனக்கு

1989களில் வயோதிபர்களை பராமரிக்கும் ஒரு அரசநிறுவனமொன்றில் எனக்குத் தொழில். இரவுநேரங்களிலும் வேலை இருக்கும்.
சில வயோதிபர்களுக்கு இரவு என்பதே பகல், பகல் என்பதே இரவு. சிலர் இரவுநேரங்களை வெறுத்தனர். சிலர் அதற்காகவே காத்திருந்தனர். இரவுகளை வெறுத்தவர்கள் தூக்கமற்று புலம்பியபடியே இருளைத் திட்டியபடியே துயிலுக்காக் காத்திருக்க, இரவை கொண்டாடியவர்களோ விடியும்வரை நடந்தனர், ஆடினார்கள், பாடினார்கள் உலாச்சென்றார்கள், என்னை இருத்திவைத்து கதைசொன்னார்கள். இப்படியான இரவின் மனிதர்களை பார்க்கவரும் விருந்தினர்களும் இரவுநேரங்களிலேயே வந்துபோயினர். இருள் இந்த மனிதர்களுக்கு அன்பாளனாய் இருந்தது.
அங்கு ஒரு முதிய பெண் தங்கவைக்கப்பட்டிருந்தார். அவர் உடல் இயக்கமிழந்திருந்தது. முழங்கால்கள் மடிந்து தசைகள் இறுகிப்போயிருந்தன. சுள்ளிகளைப்போன்று மெலிந்த தேகம். எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும். முகத்தில் மட்டும் சற்று உணர்விருந்தது. படுக்கைப்புண் ஏற்படாதிருக்க அவரை நாம் ஒரு நாளைக்கு பலதடவைகள் திருப்பி திருப்பி படுக்கவைக்கவேண்டும். மறுமுறை நாம் வரும்வரை அவர் அப்படியே படுத்திருப்பார். அவரால் உணவினை மென்று உண்ணமுடியாதாகையால், நீராகாரமே அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவ்வப்பொது அவரது கண்களில் தென்படும் ஒளியினையும் இருளினையும் வைத்தே அவரது மனநிலையை நான் அடையாளம் கண்டுகொண்டேன்.
உடல் உணர்வுகளை இழந்திருந்ததாலும் இயற்கை உபாதைகள் அவரது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. உடல் கல்போன்று இறுகியிருப்பதால் சுத்தம்செய்வதும் அவருக்கும் சுத்தம் செய்பவருக்கும் பெரும் வேதனையையும் சிரமத்தையும் கொடுத்தது.
அவரைப் பார்ப்பதற்காக ஒரே ஒரு மனிதர் மட்டுமே வருவார். தினமும் இருமுறை வந்தார் அவர். அவருக்கு 85 வயதிருக்கலாம். அந்த வயதிற்கு திடகாத்திரமான உடம்பு. தும்புபோன்ற முடி. அழகாக உடுத்தி கைத்தடியுடன் வருவார். இரவில் அவர் வரும்போது நேரம் 11ஐ நெருங்கிக்கொண்டிருக்கும். பகலில் மதியம் 1மணிபோல் வருவார். குறைந்தது 2 மணிநேரம் அங்கு உட்கார்ந்திருப்பார்.
அந்தப் பெண்ணிற்கு தனியறை கொடுக்கப்பட்டிருந்தது. எம்மைக் கடக்கும்போது வணக்கம் என்பார். அறைக்குள் புகுந்தால் அவர் வெளியேறும் வரையில் எமக்கு அந்த அறையில் வேலை இருக்காது. அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்வார். மருந்து கொடுப்பது மட்டுமே எமக்கான வேலையாக இருந்தது.
நான் சில நேரங்களில் மருந்துகளுடன் அந்த அறைக்குள் சென்றிருக்கிறேன். அறை இருட்டாகவே இருக்கும். சாரளங்கள் இரண்டும் மூடப்பட்டு திரைச்சீலை இடப்பட்டிருக்கும். பகலில் அவர் வந்துதான் திரைச்சீலைகளை விலத்தி சாரளங்களை திறந்து ஒளியையும் காற்றையும் உள்ளே அழைப்பார். மற்றையவர்களுக்கு அந்த அனுமதி இருக்கவில்லை.
அவரது கட்டில் உயரமானது. நான்கு பக்கமும் சிறியதொரு தடுப்புக்களும், அதற்கேற்ற உயரத்தில் அவருக்கான இருக்கையும் அங்கிருந்தது.
அறைக்குள் வந்ததும், “வந்துவிட்டேன்” என்றபடியே குனிந்து அப்பெண்ணின் நெற்றியில் முத்தமிடுவார். அப்பெண்ணின் கண்கள் மிளிரும்.
கலைந்திருக்கும் முடியினை மிகக் கவனமாக நீவியெடுத்து காதின்பின்புறமாய் சொருகியும், தலையின் பின்புறத்திற்கு நகர்த்தியும் விடுவார். பெண்ணின் முகம் உயிர்த்திருக்கும். புன்னகைக்காமலும் முகத்தில் மகிழ்ச்சியைக் காண்பிக்க முடியுமல்லவா.
காலையும் மாலையும் அப்பெண்ணிற்கு தலை சீவி அலங்காரமும் செய்வது அவரது வேலை. விறைத்து, வறண்டு, முடங்கியிருக்கும் கால்களுக்கு எண்ணை பூசி, பாதங்களை அமத்தியபடியே அவருடன் உரையாடுவார். பதில் ஏதும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதில்லை அவ்வுரையாடல்களில். பழைய சம்பவங்களை விபரிப்பார். அவரே சிரிப்பார். மீண்டும் உரையாடல் தொடரும்.
கை, கால் நகங்களை வெட்டி, நிறமிட்டு, உதட்டுச்சாயமிட்டு, அழகிய தலைச்சோடனைகளிட்டபின்பு கண்ணாடியொன்றைக் கொணர்ந்து அப்பெண்ணிற்கு முன்னால் காண்பிப்பார். அந்நேரங்களில் பெண்ணின் கண்களில் கண்ணீர் வழியும். அன்பாய் ஒரு துணியினால் கண்ணீரை ஒற்றியெடுப்பார்.
ஒரு இளவேனிற்கால மதியம், அப்பெண்ணை வெளியே அழைத்துச்செல்ல அனுமதிகேட்டார். அவரால் உட்கார்ந்திருக்க முடியாது என்ற நிர்வாகியிடம், கட்டிலுக்கு சில்லுகள் உண்டு. வெளியே தார் இடப்பட்ட பாதை. எனவே சற்றுநேரம் அனுமதியுங்கள் என்றார். அனுமதி கிடைத்தது.
எமது நிறுவனத்தைச் சுற்றியிருந்த பாதையில் சற்றுநேரம் கட்டிலை தள்ளிச்சென்று நிறுத்தி அவர் கொண்டுசென்ற உணவினை அப்பெண்ணுக்கு ஊட்டி, தானும் உண்டு மகிழ்ந்தார். அன்று மாலையும் கட்டில் ஊர்வலம் சென்று வந்தது.
ஒரு பனிக்காலத்து நாள் காலை அப்பெண் நிரந்தமாய் துயிலுற்றபோது முதலில் வந்தவரும் அவரே. பலர் வந்தார்கள். சென்றார்கள். அந்நேரத்திலும் அமைதியாய் அறைக்கு வெளியே நின்றிருந்ததைக் கண்டேன். எவருடனும் அவர் உரையாடவில்லை. ஒருவரைத் தவிர ஏனையவர்களும் அவரைக் கண்டுகொள்ளவில்லை.
வேறு இடத்தில் இருந்து அன்று மாலை வந்த அப்பெண்ணின் மகன் மட்டும் இவரைக் கட்டியணைத்து முதுகில் தடவி ஆறுதல் சொன்னார். அப்போது அவர் குழந்தைபோன்று விம்மி விம்மி அழுதார். மகன் அழுதபோது அவனை இவர் அணைத்திருந்தார்.
காரியங்கள் முடிந்தபின் எமது நிறுவனத்திற்கு ஒரு பெரும் ரோஜா பூஞ்செண்டுடன் வந்து அப்பெண்ணினை பராமரித்த அனைவருக்கும் தனிப்பட நன்றி சொல்லிப்போனார். எனது கையையும்பற்றி நன்றி என்றார். அவரது வார்த்தைகளின் உண்மைத்தன்மையை அவரது கண்களில் காணக்கிடைத்த்து.
அன்று இரவு, நிர்வாகியிடம் “மிகவும் வித்தியாசமான கணவர் இவர், இப்படியானவர்களும் இருக்கிறார்களே” என்ற என்னைப் பார்த்து நிர்வாகி “அது அப்பெண்ணின் கணவரல்ல, பெண்ணின் குழந்தையின் தகப்பனும் அல்ல, நெருங்கிய உறவினருமல்ல” என்றுவிட்டு மௌனித்துவிட்டு அவரே தொடர்ந்தார்.
“அப்பெண்ணின் கணவர் இறந்து 3 வருடங்கள் இருக்கும். அப்பெண் இங்கு வந்து 7 வருடங்கள் இருக்கலாம். கடந்த 7 வருடங்களிலும் இவர் இங்கு வராத நாளே இல்லை எனலாம். அப்பெண் மிக வலியான திருமணவாழ்க்கையைக் கடந்தவர். கணவர் இங்கு வந்ததே இல்லை. அப்பெண்ணின் குடும்பத்தில் மகனுக்கு மட்டுமே தெரிந்த உறவு இது” என்றார்.
பல நாட்களாய், நாமிருந்த அறையில் அவர் தந்துபோன ரோஜாக்களின் வாசனையிருந்துகொண்டேயிருந்தது.

பூலான்தேவியின் லிப்ஸ்டிக்

இன்று ஒஸ்லோவில் கடும் வெய்யில். நானே சற்றுக் கருகிவிட்டேன் என்றால் பாருங்களேன்.
நண்பரின் குடும்பத்துடன் ராஜேஸ்வைத்தியாவின் இசைநிகழ்வுக்கு சென்றுகொண்டிருந்தேன்.
கால் முறிந்து நாலுகாலாகிவிட்ட எனக்கு முன் இருக்கை. பின்னால் ஒரு பதின்ம வயதுப் பூலான்தேவியுடன் நண்பரின் பூலாந்தேவியும், ஒரு 6 வயதுக் கொள்ளைக்காரனும் உட்கார்ந்திருந்தார்கள்.
வாகனம் காற்றைக் கிழித்துக்கொண்டிருந்தது. நண்பருக்கு ஐஸ்கிறீம் தாகமெடுத்தது. என்னிடம் சைகையால் கேட்டார். நான் கண்களால் சம்மதித்து புன்னகைத்தேன்.
வாகனத்தை வீதியருகே இருந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தினுள் நிறுத்தி, 5 ஐஸ்கிறீம்களுடன் வந்தார், நண்பர்.
'ஏனப்பா 5 வாங்கினீங்க' என்றார் நண்பரின் பூலான்தேவிகுரல் சூடாக இருந்தது.
'உனக்கு, மகளுக்கு, மகனுக்கு, இந்த நாலுகால் மனிசனுக்கு, எனக்கு' என்றார் நண்பர், அப்பவியாய்.
'எனக்கு வேணாம்' என்றாள் பதின்மவயதுப் பயஙகரவாதி அலட்சியமான குரலில்.
'ஏன்?' என்றார் நண்பர் கடுப்பான குரலில்.
'லிப்ஸ்டிக் அழிந்துவிடும்' என்றாள் அவள்.
நண்பரின் கடுப்பு ஆத்திரமாக மாற, அவர் பல்லை நெருமிக்கொண்டு 'உனக்கென்ன பிரச்சனை?' என்றார் தனது பூலான்தேவியிடம்.
அவர் அங்கும் இங்கும் பார்த்தபடியே முழுசினார். நண்பரின் ஆத்திரம் எல்லை கடந்தது. ..... ..... (தணிக்கை)
பயந்துபோன பூலான்தேவி பயந்து பயந்து இப்படிச் சொன்னார்.
'லிப்ஸ்டிக்'
டேய், எனக்கும் சின்னவனுக்கும் இரண்டு இரண்டு ஐஸ்கிறீம். உனக்கு ஒன்று என்று பிரச்சனையைத் தீர்த்தேன், நான்.
மாமா, give me five என்றான் கொள்ளைக்காரன்.
'செத்த கிளிக்கு கூடு எதற்கு' என்று நண்பன் கூறிய திருக்குறள், பூலான் தேவியின் காதில் விழாதிருந்திருக்கக்கடவதாக.
நண்பன் சொந்த வீட்டில் அகதியாகாமல் இருக்க என்னப்பன் ஒஸ்லோ முருகன் அருள்புரியவேண்டும்.

குழந்தையுலகப் பரவசங்கள்

பல வருடங்களின் பின் ஒரு கைக்குழந்தையைத் தூக்கும் பாக்கியம் அண்மையில் வாய்த்தது.
பெண்குழந்தைகளிடத்தில் வார்த்தைகளால் கூறிவிடமுடியாத அன்பிலான ஈர்ப்பு இருப்பதாய் உணர்பவன் நான். சலனமற்ற, ஆழமற்ற சிற்றாற்றில் ஆறுதலாக, தன்பாட்டில் வழிந்தோடும் நீரோட்டத்தின் பாதுகாப்புணர்வு போன்ற அவர்களது பார்வையில் எப்போதும் அன்பு உயிர்த்திருப்பதைக் கண்டிருக்கிறேன். அவர்கள் அருகிலிருக்கும்போது மனம் உணரும் அமைதியையும், பாதுகாப்புணர்வையும் பிரக்ஞை பூர்வமாக உணர்ந்துபார்த்தால் மட்டுமே அவற்றின் ஆழத்தை உணரமுடியும்.
ஆண்குழந்தைகளிடத்தில் எப்போதும் எறும்புகளைப் போன்றதொரு அவசரம் இருக்கும். அடுத்த கணத்திற்குள் உலகை ஆராய்ந்து முடித்துவிடவேண்டும் என்ற பரபரப்பான அவரசம் அது. காத்திருப்பது என்பது அவர்களைப்பொறுத்தவரையில் அர்த்தமற்றது. அவர்கள் சுற்றாடலும் பரபரப்பாகவே இருக்கும்.
பெண்குழந்தைகளிடத்தில் இந்தப் பரபரப்பு இல்லை. அவர்களுக்கு வேண்டியளவு நேரமிருக்கிறது. நேரத்தை மறந்தவர்கள் அவர்கள்.
ஆண்குழந்தைகளின் அருகாமையில் குறும்புத்தனம் செய்யவே மனம் விரும்பும். ஆனால் பெண்குழந்தைகளிடத்தில் அமைதியாய் உட்கார்ந்திருந்து, அவர்களுடன் உரையாடி, அவர்களின் ஆயிரம் கேள்விகளுக்கு அவர்களின் புரிதலுக்குட்பட்ட வகையில் பதிலளித்து, சிரித்து விளையாடும்போது காற்றில் சருகாய் உணரும், மனம்.. அற்புதமான தாலாட்டுணர்வு அது.
குழந்தை உலகத்தின் வாசல், நம்பிக்கையுணர்வு. அது பாதுகாப்புணர்வின் அடிப்படையில் மிக மிக நுண்ணிய அவதானங்களைக் கொண்டு உருவாக்கப்படுவது.
குழந்தைகளின் நம்பிக்கையைப்பெற்றவர்களுடனான உரையாடல்களில் நெகிழ்ச்சி, அருகாமை, சிரிப்பு, அழுகை, கோபம் அனைத்திலும் எல்லை கடந்த பாதுகாப்புணர்வு இருக்கும். ஆனால் நம்பிக்கையற்ற மனிதர்களுடனான அவர்களின் உரையாடல்கள் சடங்குகளைப்போன்ற செயற்கைத்தன்மையும் மன இடைவெளியும் உடையவை.
எனது சிறுவயது முதலே குழந்தைகள் என்றால் பெரும் பிரியம் இருக்கிறது. எனது பேரதிஸ்டம் அவர்களுக்கும் என்னை பிடித்துப்போகிறது. என்னவென்று இத்தனை குழந்தைகளையும் வசீகரிக்கிறாய் என்பார்கள், நண்பர்கள். நான் அவர்களை வசீகரிக்கவில்லை. வசீகரீக்கப்பட்டிருக்கிறேன். அவ்வளவே.
குழந்தைகளின் உலகத்தில் முட்டாளாய் இருப்பது அறிஞர்கள் அவையில் உட்கார்வதிலும் பெருமையானது, உயிர்ப்பானது.
குழந்தைகளிடத்தில் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. அதிலும் பெண்குழந்தைகளிடத்தில் ஆயிரம் கதை இருக்கும். அவர்களின் கதையுலகினுள் புகுந்து அங்கு வாழ்ந்துபாருங்கள். வாழ்வின் அயர்ச்சிகளை கணப்பொழுதில் நீக்கும் கதைகள் அவை.
அன்றொரு நாள் ஒருத்தியுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அன்றுதான் முதன் முதலில் சந்தித்தோம். “ஒரு இரகசியம் சொல்கிறேன்” என்றுவிட்டு “அம்மாவின் வயிற்றுக்குள் ஒரு தங்கை இருக்கிறாள்” என்றாள். அவளது அப்பனிடம் ” வாழ்த்துக்கள்” என்றபோது ஆச்சர்யப்பட்டார். வைத்தியருக்கும், தனக்கும், மனைவிக்கும் மட்டும் தெரிந்த இரகசியம் எப்படி எனக்குத் தெரிந்தது என்று அவருக்குப் புரியவில்லை. நானும் இரகசியம் காத்தேன்.
கடந்த சனிக்கிழமை நிகழ்வின் இடைவேளையில் ஒன்பதே மாதமான மகளுடன் வந்த நண்பரிடமிருந்து அவளை வாங்கிக்கொண்டேன். கவனமாகப் பிடித்துக்கொள்ளவேண்டும் என்றது உள்மனது. இரண்டு கைகள் நிறைய பூக்களை அள்ளிக்கொள்வதுபோன்ற மெதுமையுடன் எனது கைகளுக்குள் ஏந்திக்கொண்டேன். மனது சுற்றியிருந்த உலகை மறந்துபோனது.
மென்மையான, பட்டுப்போன்ற, குளிர்மையான, உறுதிகொள்ளாத தேகம். உந்தி உதைக்கும் பிஞ்சுக் கால்கள். தலைக்கு பாதுகாப்பாக ஒரு கையை பிடித்துக்கொண்டேன். கண்களில் “யார் இது” என்ற கேள்வியுடன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளை ஏந்திக்கொண்டபின் நான் நெகழ்ந்துபோயிருந்தேன்.
மெதுவாய் முட்டு முட்டு என்று முட்டினேன். முகத்தில் இருந்த கேள்வி மறைந்து புன்னகை தெரிந்தது. உயர்த்திப் பிடித்தபோது முகத்தில் சிரிப்பு வந்தது. வயிற்றில் கொஞ்சினேன். அவ்வளவுதான். நாம் நண்பர்களானோம். பிஞ்சுக்கைகளினால் காதைப்பிடித்து இழுத்தாள். முகத்தில் தட்டினாள், கால்களால் உதைத்து உன்னினாள். நான் தாலாட்டப்பட்டுக்கொண்டிருந்தேன்.
ஒரு கொட்டாவியின் பின் மார்பில் சாய்ந்து கொண்டாள். நான் பாடலொன்றை முணுமுணுக்கத்தொடங்கினேன். எனக்குத் தெரிந்த ஒரே ஒரு பாடல் அதுதான். 1996ம் ஆண்டு முதன் முதலாய் தந்தையானபோது தானாவே உருவாகிக்கொண்ட பாட்டு அது. இளையமகளுக்கு மிகவும் பிடித்த பாட்டு. இன்றும் அவள் என்னை அப்பாட்டுக்காக கேலி செய்வாள்.
அப்பாட்டில் அதிக வசனங்கள் ஏதும் இல்லை. ”அப்பாட செல்லம், அக்காட செல்லம், அப்பம்மாவின் செல்லம்” என்று குழந்தைக்கு தெரிந்த அனைவரையும் பாட்டுக்குள் இழுத்துவருவேன். அவ்வளவுதான்.
எனது பாடலில் குழந்தை மிரண்டதோ என்னவோ எழுந்து உட்கார்ந்து என்னுடன் உரையாடத்தொடங்கினாள். மொழியற்ற ஆனால் பரஸ்பரம் புரிந்த ஒரு உரையாடல் அது.
இடையிடையே அவளது முகம் எனது முகத்துடன் மோதியபோது என்னை ஆசீர்வதிப்பதுபோன்று சிரித்தாள்.
Navaratnam Paraneetharan வந்து மகளை வாங்கிக்கொண்டார். பரணியில் பொறாமையாக இருந்தது.

நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை

நோர்வேயின் பட்மின்டன் விளையாட்டுக்கான பாராளுமன்றக் கூட்டம் என்று கருதப்படும் சந்திப்பில் உட்கார்ந்திருக்கிறேன்.
வெளியே கடும் வெய்யில். எனவே சாரளங்களை மூடிவிட்டிருக்கிறார்கள்.
எனக்கு முன்னே உள்ள இருக்கையில் ஒரு வயதான பெரியவர் இருக்கிறார். வெய்யிலுக்கு ஏற்றவாறு காற்சட்டை, டீ சேட் உடன் ரகுவரனின் உயரத்தில் அவர் நடக்கும்போது இராணுவ அதிகாரிபோன்று தோன்றுகிறார். அடிக்கடி தேனீர் குடிக்கிறார். பழங்களை விழுங்குகிறார் கிடைக்கும் உணவுகளை வயிற்றினுள் எதுவித சங்கடமுமின்றி இறக்கிக்கொள்கிறார். அடிக்கடி எனது தலையைப்போன்ற அவரது தலையைச் சொறிந்தும்கொள்கிறார்.
அடிக்கடி கதிரையை சற்று பின்னே தள்ளி வசதியாக இருக்கிறார். அவர் கதிரையைத் தள்ளும்போதெல்லாம் எனக்கு அருகில் வருவது தவிர்க்கமுடியாததாகிறது.
இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.
ஆனால் 5 நிமிடத்திற்கு ஒருதடவை வலது பக்கமாக சரிந்து இடது பிட்டத்தை உயர்த்தி ...... பிர்ர்ர்ர்ர் என்ற பேரோலியுடன் காற்றை அசுத்துப்படுத்துகிறார். நேரே பின்னால் இருக்கும் இந்த அப்பாவியின் முகத்திலடிக்கிறது அக்காற்றும் அதன் வாசனையும்.
இதையும் தாங்கிக்கொள்ளலாம்.
பிட்டத்தை மீண்டும் கதிரைையில் பாதுகாப்பாக வைத்து சமப்படுத்திக்கொண்டபின், மெதுவாய் என்பக்கமாய்த் திரும்பி “தெய்வீகமாய் புன்னகைத்து, கண்ணைச் சிமிட்டுவதைத்”தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியாதிருக்கிறது.
பாவி போகும் இடமெல்லாம் பள்ளமும் திட்டியாயுமாய் இருக்கிறதே.

கிழக்கின் சமர்க்களத்தில் தங்கிவிட்ட மனது

மட்டக்களப்பு நகரத்தினுள் இரண்டு ஆண்கள் பாடசாலைகள் உண்டு. ஒன்று புனித மைக்கல் கல்லூரி மற்றையது எங்கள் மெதடிஸ்ற் மத்திய கல்லூரி.
புனித மைக்கல் கல்லூரியின் வணக்கத்துக்குரிய பிதா வெபர் அவர்களின் பெயரையே மட்டக்களப்பின் விளையாட்டுமைதானத்திற்கு வைத்திருக்கிறார்கள். இதைவிட வேறென்ன பெருமையை எம்மால் அவருக்குக் கொடுத்திட முடியும்?
70 களிலும் 80களிலும் வெள்ளையுடுத்திய அந்தப் பெருமனிதரைக் கண்டிருக்கிறேன்.
Rev. Father Harold John Weber S.J அமெரிக்காவில் உள்ள New Orleans, Louisiana என்னும் இடத்தில் பிறந்து 1947இல் மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து 50 ஆண்டுகள் புனித மைக்கல் கல்லூரியில் கடமையாற்றியவர்.
19.4.1998 அன்று அவர் இறந்தபோது நடைபெற்ற இறுதிஊர்வலத்தைப்போன்றதொரு ஊர்வலத்தை மட்டக்களப்பு கண்டதில்லை. அத்தனை பிரபலமானவர் அவர்.
நாம் முத்தவெளியில் (வெபர் அரங்கில்) காற்பந்தாடிய நாட்களில் ஒரு முஸ்லீம் மாணவரை தினமும் 800 மீற்றர் ஓடுவதற்கு பயிற்றுவிப்பார். அக்காட்சி இன்றும் என் நினைவுகளில் உண்டு. பின்னாட்களில் அம்மாணவன் இலங்கையின் முன்னணி வீரனாக வந்தார் என்றே நினைவிருக்கிறது.
Basketball இல் புனித மைக்கல் கல்லூரியை கொடிகட்டிப்பறக்க வைத்தவர் Rev.Fr.Eugene Hebert S.J. இவருக்கு Rev. Fr. Basketball என்று இன்னொரு பிரபலமான பெயரும் உண்டு.
70களின் நடுப்பகுதியிலும் 80 முதற்பகுதியிலும் மெய்வல்லுனர்போட்டிகளிலும் நாம் புனிதமைக்கல் கல்லூரியை வெற்றிகொள்வதைவிட அவர்களே எம்மை வெற்றிகொண்டார்கள். காற்பந்தாட்டத்திலும் அப்படியே. அக்காலத்தில் கிறிக்கட்போட்டிகள் குறைவாகவே நடைபெற்றன.
விளையாட்டு என்று வந்துவிட்டால் எமக்கு முன்னணி எதிரிகளாக இருப்பது இவர்களே. இது மனதில் படிந்துபோய்விட்ட விடயம். இப்போதும் அப்படியே.
இதை மறைக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? நான் எப்போதும் மெதடிஸ்ற்மத்திய கல்லூரியின் மாணவனே. அதிலும் பிரின்ஸ் காசிநாதரின் சந்ததி என்ற தலைக்கேறிய பெருமை எனக்குண்டு.
மற்றைய உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது பாடசாலைகளுக்கும் இலங்கைவாழ் தமிழர்களுக்கும் இடையே, உலகத்தில் எங்குமே இல்லாத ஒரு ஆத்மார்த்தமான பிணைப்பு உண்டு என்பதை அவதானித்திருக்கிறீர்களா?
'எமது பாடசாலை' என்றவுடன் வாழ்க்கையின் அயர்ச்சியில் இருந்து மீண்டு உயிர்ந்து எழும் பழையமாணவர்கள் எத்தனை எத்தனை. இதற்கான காரணம் என்ன?
பதில் தேவையற்ற கேள்விகளில் இதுவுமொன்று.
நாம் புலம்பெயர்ந்து வந்தபோது பாடசாலைகளையும் பெயர்த்துக்கொண்டு வந்திருக்கிறோம். வருடாந்தம் எமது பாடசாலைகளின் பழையமாணவர்கள் காற்பந்து, கிறிக்கற் என்று மோதிக்கொள்கிறார்கள். 40, 50, 60 வயதுகளிலும் தூக்கமுடியாத உடலைக் காவியோடி, வாயாலும் மூக்காலும் புகைதள்ளியபடி, இதோ நான் விழுந்து சாகப்போகிறேன் என்ற நிலையிலும் வேர்த்து விறுவிறுத்து, பாடசாலைக்காய் உயிரைக்கொடுத்து, ஓர்மத்துடன் விளையாடுபவர்களைக் கண்டிருக்கிறேன். நானும் விளையாடியிருக்கிறேன். தோல்விகளின் வலி அந்நாட்களைவிட இப்போதுதான் அதிகமாக இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
இன, மத, மொழிவேறுபாடுகளைக்கடந்து மாணவர்களும் பாடசாலையென்றவுடன் ஓரணியில் நிற்கும் விந்தையென்ன? எது எம்மை இவ்வாறு பிணைத்துப்போடுகிறது?
காலம், பல நாட்டவர்களைச் சந்திக்கும், அவர்களுடன் பழக்கும் சந்தர்ப்பத்தைத் எனக்குத் தந்தருக்கிறது. அவர்களிடம் இதைக்கேட்டிருக்கிறேன். இதிலென்ன இருக்கிறது. அது பாடசாலை. அக்காலம் முடிந்துவிட்டது என்று மிகச் சாதாரணமாக்க கூறுவார்கள். எனக்கு நெஞ்சு வலிக்கும்.
ஊருக்குள் வரும்போதெல்லாம் எனது பாடசாலையினுள் நடப்பது, நான் வாழ்ந்தலைந்த கட்டங்களைத் தொட்டுணர்வது, எங்காவது எங்கள் நினைவுச்சின்னங்களைக் காணும்போது என் ஆத்மா மகிழ்வதும், தாயின் அரவணைப்பில் இருப்பதைப்போன்ற உணர்வுகளையும், வாழ்க்கையின் வலிகளையும் செப்பனிடும் உணர்வையும் தரவல்லது.
பேராசான்களை தேடிச்சென்று, அருகமர்ந்து உரையாடி, நினைவாடி, உயிர்த்துத் திரும்பும் நாட்கள் வாழ்வின் முக்கிய நாட்களாகிவிடுகின்றன.
அறிமுகமில்லாத ஒரு மனிதக் கூட்டத்தில் அல்லாடும்போது “நானும் மட்டக்களப்பு சென்றலில் படித்தவன்” என்பவருடன் பிணைப்பும், பாதுகாப்புணர்வும் ஏற்படுகிறதே, ஏன்? எப்படி?
இப்படியான உணர்வுகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் எனக்கு Big match காய்ச்சல் வருடத்தில் ஒருதடவை வரும்.
இவ்வாரத்தின் சனிக்கிழைமையும் ஞாயிற்றுக்கிழமையும் அக்காய்ச்சல் தூக்கியடித்தது.
போர்க்காலத்தில் நண்பர்களின் கடிதங்கள் மூலமாகவே ஊரில் நடப்பவை தெரியவரும்.
பின்பு தொலைபேசி அழைப்பு போதுமாய் இருந்தது.
கைத்தொலைபேசி வந்ததும் குறுஞ்செய்தி நேரஞ்சல் தகவல்களை அறிவித்தது.
இப்போது பழைய மாணவர்கள் பாடசாலைக்கான மீடியா குழுமம் ஆரம்பித்து நேரஞ்சல் செய்கிறார்கள். காலைக்கடன்களைக் கழித்தபடியே விக்கட் விழுந்ததும் ஆர்ப்பாரிக்க முடிகிறது.
நேற்று, ஒரு பவுன்டறி (4) ஓட்டத்தினை சற்று ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடினேன். சுரங்க ரயிலில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ‘கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை?’
இவ்வாரத்தின் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் பட்மின்டன் சம்மேளனத்தின் நோர்வே தழுவிய கூட்டமொன்றில் பங்குபற்ற வேண்டியிருக்கிறது. அவ்வப்போது நேரஞ்சலையும், மெசேஞ்சரையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
நேரஞ்சல் தடைப்பட்டால் நெஞ்சு அடித்துக்கொள்கிறது. நண்பர்களுக்கு செய்தி அனுப்பிக்கேட்கிறேன். பதட்டப்படுகிறேன். நகம் கடிக்கிறேன். எழுந்து அங்கும் இங்கும் நடக்கிறேன். மீண்டும் நேரஞ்சல் ஆரம்பிக்கும்வரை நிம்மதியற்றுப்போகிறது.
ஆனால், இவைதான் வாழ்வின் உச்சக்கணங்கள் என்று நினைக்கத்தொன்றுகிறது. எத்தனை கோடிகளைக் கொட்டிக்கொடுத்தாலும் ,இவ்வனுபவங்களைப் பெறமுடியாதல்லவா?
2010ம் ஆண்டு நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான போட்டியில் நாம் தோற்றதுபற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். எனக்கு எழுத்து மனதை ஆற்றும் தோழன். இன்றும் அப்படியே.
கடந்த ஆண்டுகளில் எங்கள் பாடசாலை மாணவர்களும் பழையமாணவர் சங்கமும் உயிர்ப்புடன் இயங்குவதால் நாம் பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம்.
நேற்று முதலில் பந்தெடுத்தாடிய புனித மைக்கல் கல்லூரி 98 ஓட்டங்களுக்கு சகல ஆட்டவீரர்களையும் இழந்தபின் ஆடிய எம்மவர்கள் 200 கடந்தபின் இன்று ஆட்டத்தைக் கைமாற்றிக்கொடுத்தார்கள். இருப்பினும் புனித மைக்கல் கல்லூரியினர் மிகவும் சிறப்பாக விளையாடி வெற்றிதோல்வியற்ற சமநிலையில் போட்டியை முடித்தனர்.
போட்டிகளைப்போன்றே போட்டிகளின் பின்னான உரையாடல்கள் சுவராஸ்யமானவை. சிலர் இது எமக்கு தோல்வி என்றனர். சிலர் போட்டியின் உத்திகளை மாற்றி விளையாடியிருக்கலாம் என்றனர். இன்னும் பல வாரங்களுக்கு இது உரையாடி அலசி ஆராய்ந்து, மனங்களை ஆற்றிக்கொள்வோம். இப்படியான big match களின் பின்புலத்திலுள்ள தத்துவமே இவைதானே. தோல்விகளும், வெற்றிகளும் எம்மை இணைக்கின்றன.
எத்தனையாண்டுகள் புலம்பெயர்ந்திருப்பினும் மனதுக்கு மிக நெருக்கமான இப்படியான நாட்களைப்போன்ற உயிர்ப்பான நாட்களை இங்குள்ள வாழ்க்கை தருவதில்லை.
இதேபோலத்தான் இங்குள்ள பலர், தங்கள் ஊர்களில் உள்ள பாடசாலைகள், சங்கங்கள், விளையாட்டுக்கழகங்களில் உயிரையே வைத்திருக்கிறார்கள். அவற்றிற்காக இங்கிருந்து இயங்குகிறார்கள்.
எனது புலப்பெயர்வு என்பதானது மனரீதியாக நடைபெறவில்லை என்பதை உணரத்தலைப்பட்டிருக்கிறேன். 20 வருடத்து வாழ்க்கை தரும் உயிர்ப்பான அனுபவங்களை 30 வருட வாழ்க்கையனுபவம் தரவில்லை. நான் புலம்பெயர்ந்தபோது மனம் புனிதப்பூமியிலேயே தங்கிவிட்டது என்பதுதான் இதன் காரணமா?