அற்புத வாழ்வும் அழகிய இரண்டு சம்பவங்களும்

இன்று காலை தூக்கத்தில் இருக்கிறேன் தொலைபேசி அலறியது. கண்ணைத் திறக்காமலே கையைத் துலாவி தொலைபேசியை காதில்வைத்து “வணக்கம்” என்றேன்.

மறுபக்கத்தில் கணீர் என்று ஒரு குரல் “சஞ்சயன்” என்றது. குரலைக் கேட்டதும் தூக்கம் பறந்தோடியது. துள்ளி எழுந்து உட்கார்ந்து என்னையறியாமலே “சேர்.. நீங்க தொலைபேசியை வைய்யுங்கள், நான் எடுக்கிறேன் ”என்றேன்.

92வயதைக் கடந்துகொண்டிருக்கும் எனது பேராசான் பிரின்ஸ் காசிநாதரின் குரல் அது.

இந்த மனிதரைப்போல் என்னை புடம்போட்டவர்கள் எவருமில்லை. மனதில் சிம்மாசனமிட்டு அமர்ந்திருக்கும் பெருமனிதர் அவர். அவர் இடத்தை எவராலும் ஈடு செய்யமுடியாது என்பதை காலம் எனக்கு உணர்த்தியிருக்கிறது.

தொலைபேசியில் அவரை அழைத்தேன்.

உடைந்து தளும்பிய குரலில் ‘மை சண்’ என்று ஆரம்பித்து ‘என்னைக் கடனாளியாக்காதே. உன்னைப்போன்ற மாணவர்கள்தான் என் முதுமைக்காலத்தை உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு அப்படி என்ன செய்தேன்? நீங்கள் என்னை தலையில் வைத்துக்கொண்டாட’ என்றார்.

மட்டக்களப்பில் ‘அரங்கம்’ என்று ஒரு பத்திரிகை வெளிவர ஆரம்பித்திருக்கிறது. நண்பர் Seevagan Poopalaratnam நடாத்தும் பத்திரிகை இது. இதுவரை வெளிவந்த ஐந்து வெளியீடுகளில் நான்கு பத்திகள் எழுதியிருக்கிறேன். அவற்றுள் இரண்டு எங்கள் கல்லூரியான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரி பற்றியது. முதலாவது எனது பேராசானைப்பற்றியது. மற்றையது அவர் உருவாக்கிய வழிகாட்டிகள் சங்கம் பற்றியது.

இரண்டிலும் எனது பேராசானின் பெருமைகளை எழுதியிருந்தேன். அது அவரது காதுக்குச் சென்றிருக்கிறது. அதுதான் என்னுடன் உரையாட விரும்பியிருக்கிறார்.

‘சேர், நீங்கள் இல்லையேல் இன்று நான் இல்லை. இன்றறைய எனது வாழ்க்கை உங்களின் பாசறை கற்றுக் கொடுத்ததே. அந்த விழுமியங்களே என்னை இன்றும் வழிநடாத்துகின்றன’ என்றேன்.

‘சஞ்சயன், அடுத்த முறை நீ வரும்போது நான் இருப்பது நிட்சமில்லை. இந்த உலகில் நான் பெற்ற பெரும் பேறு என்னை இத்தனை வருடங்களின் பின்பும் கொண்டாடும் உன்னைப்போன்ற எனது மாணவர்களே. உங்களுக்கு எவ்வாறு நான் எனது நன்றியைச் சொல்வேன். கர்த்தர் உங்களை ஆசீர்வதிக்கட்டும். உன் வாழ்வு மகிழ்ச்சியாக அமையட்டும். பாடசாலையை நினைவில் கொள், மகனே' என்றுவிட்டு தொலைபேசியை வைத்தார்.

இது நடந்து ஏறத்தாழ 16 மணிநேரங்கள் கடந்துவிட்டன. தற்போதும் இதை நினைக்கும்போதெல்லாம் கண் கரைந்து போகிறது, மனதைப்போல்.

எனக்கு மாதா, பிதா, குரு, தெய்வம் என்பவற்றில் நான்காவதில் நம்பிக்கையில்லை. ஆனால் மூன்றாவதில் அதீத நம்பிக்கயிருக்கிறது.

பேராசானே! இன்னும் இரண்டரை மாதங்களில் உங்கள் அருகில் உட்கார்ந்திருந்து காலத்தை இரைமீட்க வருவேன்.

***
இன்று மாலை மீண்டும் மட்டக்களப்பில் இருந்து இன்னுமொரு தொலைபேசி அழைப்பு வந்தது.

எனது வாழ்வினை அர்த்தப்படுத்திய இன்னொரு மனிதர் அவர். ”படுவாங்கரை – போரின் பின்பான வாழ்வும் துயரமும்” என்ற எனது பத்திகளின் தொகுப்பை அவர் இன்றி என்னால் எழுதியிருக்கவே முடியாது.

முன்னாள் போராளி. சற்றேனும் சுயநலமற்ற பரந்த மனம் கொண்ட மனிதர். பல போராளிகளின் வாழ்வில் புலம்பெயர்ந்தவர்களைக் கொண்டு சிறுமாற்றத்தையேனும் ஏற்றபடுத்த உதவிய மனிதர். மிக மிக எளிமையானவர்.
அவரின் சுயதொழில் முயற்சிக்கு நோர்வே நண்பர் ஒருவர் உதவியிருந்தார்.

அவரது மகள் O/L பரீட்சையில் 8A, 1C (அதிசிறப்புச் சித்தி) பெற்றிருக்கிறாள் என்பதே அந்த உரையாடலின் சாரம். மனிதரின் குரலிலிலும், வார்த்தைகளிலும் இருந்த அன்பில் உருகிப்போனேன்.

வாழ்வினை அழகாக்குவது பணமும், புகழும், சொத்துக்களுமல்ல. மாறாக இப்படியான சின்னஞ்சிறு சம்பவங்களே வாழ்விற்கு அர்த்தம் தருபவை.

வாழ்தல் அற்புதம்

பரதம் பேச மறந்த பாவங்கள்

மாற்றம் என்பது காலத்தின் கட்டாயங்களில் ஒன்று, மாற்றம் மட்டுமே மாறாதது அல்லவா?

24.03.2018 நாளை நோர்வே வாழ் தமிழர்களின் கலையுலகு நினைவில் கொள்ளும் என்றே நம்புகிறேன். இன்று Osloவிலுள்ள Freestyle dans கலைக்கூடமான Dans for ever இன் நடன நிகழ்வு நடைபெற்றது. மண்டபம் நிரம்பி வழியுமளவுக்கு ஆர்வலர்கள்.

இன்றைய நிகழ்வே முதன் முதலில் Oslo தமிழர்களிடத்தில் நடைபெற்ற முழு நீள Freestyle நடன நிகழ்வு என அறிப்பாளர் அறிவிக்கக் கேட்டேன். அது ஏற்றுக்கொள்ளத்தக்கதே.

இந்த நிகழ்வு பல சிந்தனைகளுக்கு களம் அமைத்திருக்கிறது என்பதில் ஐயமில்லை.

அவற்றில் முக்கியமானது எமது சமூகத்தில் பரதநாட்டியம் பெற்றிருந்த இடத்தை இப்போது Freestyle dans வடிவம் தனதாக்கிக்கொள்ள ஆரம்பித்திருக்கிறது என்பதும் எமது இலக்கியங்கள் Freestyle நடனவடிவங்களின் ஊடாக எதிர்காலச் சந்ததியினரிடம் ஆரோக்கியமான முறையில் நகர்த்தப்பட ஆரம்பிக்கப்பட்டுள்ளது என்பதுமாகும்.

Freestyle dans ஊடாக கருத்துக்களை, கதைகளை பார்வையாளர்களுக்கு முன்வைப்பது ஒன்றும் புதிதல்ல. ஆனால் இதுவரை பரதக்கலை, நாடகம், கூத்து மற்றும் இசைவடிவங்கள் ஆகிய கலைவடிவங்கள் மூலமாக மட்டும் முன்வைக்கப்பட்ட இராமாயணத்தை இன்று நான் முதன்முதலாக Freestyle dans வடிவத்தின் ஊடாகப் பார்க்கக்கிடைத்தது. இது மிகவும் பாராட்டப்படவேண்டிய முயற்சி. எனவேதான் நோர்வே தமிழர்களுக்கு இன்றைய நாள் முக்கிய நாளாகிறது என்கிறேன்.

நோர்வேயிலுள்ள உத்தியோகபூர்வ நடனவடிவங்களுள் ஒன்றான Freestyle நடனவடிவத்திலேயே இந்நாடடில் வாழும் இளையோரும் பதின்ம வயதினரும் ஆர்வத்துடன் பங்கு கொள்கின்றனர். நோர்வேயில் விளையாட்டுக்களுக்கு வழங்கப்படும் அதியுயர் விருதான kongepokal (அரசனின் விருது) என்னும் விருதும் இந்நடனத்திற்கு உண்டு.

தவிர 30- 40 ஆண்டுகளாக இச்சூழலில் வாழும் இலங்கைத் தமிழர்களால் வெவ்வேறு நடன வடிவங்களின் மூலம், முக்கியமான பரத்தின் மூலம் எமது வாழ்வியலை, இலக்கியங்களை, இந்நாட்டுமக்களிடம் குறிப்பிடத்தக்க அளவிலேனும் எடுத்துச் செல்ல முடியவில்லை என்பதும் உண்மையே. ஆனால் Freestyle மூலம் இவற்றை இலகுவாக எடுத்துச் செல்வதற்கான சந்தர்ப்பமும் வசதியும் அதிகம் என்றே கருத வேண்டும்.

கலையுலகில் இலங்கைத் தமிழ்ப் பெற்றோர் தங்களின் விருப்பு வெறுப்புகளைக் கடந்து, பிள்ளைகளின் விருப்பு வெறுப்புக்களுக்கு செவிசாய்க்க ஆரம்பித்திருக்கிறார்கள் என்பதை Freestyle dans பாடசாலைகளில் இணையும் பிள்ளைகளின் எண்ணிக்கை எடுத்துக்காட்டுகிறது என்றே எண்ணுகிறேன். எமது சமூகத்தில் இதனை மிகவும் வரவேற்கத்தக்க மாற்றம் என்றே கூறவேண்டும்.

மறுபுறத்தில் இது பரதநாட்டிய ஆசியர்களுக்கு ஒரு பெரும் சவாலைக் கொடுக்க ஆரம்பித்திருக்கிறது அல்லது கொடுக்கும் காலம் அதிக தொலைவில் இல்லை என்பதையும் அவர்கள் உணர்ந்துகொள்ளவேண்டும்.

இந்த சவாலை எவ்வாறு பரதக்கலை ஆசிரியர்கள் கையாளப்போகிறார்கள் என்பது அவ்வாசிரியர்களின் திறமையில் தங்கியிருக்கிறது மட்டுமல்ல பரதக்கலையை கற்கும் மாணவர்களின் எண்ணிக்கையையும் அதுவே நிர்ணயிக்கப்போகின்றது.

இங்கு திறமை என்பது அனுபவமோ, பிரபல்யமான ஆசிரியர் என்பதோ அல்ல. மாறாக அது பரதத்தை எவ்வாறு குழந்தைகளுக்கு பிடித்தவகையில் தயாரித்து, கற்பிக்கப்போகிறார்கள் என்பதிலும், அவர்களது கலைச்சிருஷ்டித்திறமையிலும், ஆசிரியத்துவத்திலுமே தங்கியிருக்கிறது. மிக முக்கியமாக குழந்தைகளுக்கு கலையைக் கற்பிக்கும் முறையிலும் அவர்களைக் கையாளும் திறமையிலுமே இது தங்கியிருக்கிறது.

இதுவரை காலமும் பரதத்திற்கு மாற்றீடாக குழந்தைகளுக்கு வேறு நடனவடிவங்கள் இருக்கவில்லை. எனவே அனைவரும் பரதத்தைக் கற்றனர். தேவைக்கு அதிகமாக அது புனிதப்படுத்தப்பட்டு கொண்டாடப்பட்டது.

ஆனால் காலமாற்றத்தின் தேவைகளை போதுமான அளவு கவனிக்காததன் விளைவே இன்று பலர் Freestyle dans பக்கமாச் சாய்வதற்கு காரணமாயிருக்கிறது என்றும் கொள்ளலாம்.

இப்போது பரதத்திற்கு போட்டியாக Freestyle dans வடிவம் உருவாகியிருக்கிறது. இதற்கு தென்னிந்திய தொலைக்காட்சிகளும், எமது மேற்கத்திய வாழ்க்கையும் முக்கிய காரணிகளாகும்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பது பரதத்திற்கும் பொருத்தமானதல்லவா.

Freestyle dans இன் வருகை இன்னொருவிதத்தில் பரதநாட்டியத்திற்கு எமது சமூகத்தில் இருக்கும் ‘புனிதமான கலை' என்ற அர்த்தமற்ற அந்த்தஸ்த்தினை கேள்விக்குறியாக்கத் தொடங்கியுள்ளது என்றே எண்ணத்தோன்றுகிறது.

Freestyle dans இல் பரீட்சைகள் இல்லை, விலையுயர்ந்த உடையலங்காரங்கள் அவசியமில்லை, அரங்கேற்றம் இல்லை, பட்டங்கள் இல்லை, ஆண் வேடத்திற்கு பெண் தேவை என்ற நியதியில்லை. மாறாக அங்கு குழந்தைகள் தங்களின் மனம் லயித்து நடனத்தை கொண்டாடுகிறார்கள் என்பதே உண்மை. அது மட்டுமல்ல ஆண் பெண் இருபாலாரும் வரையறைமீறாது கலைபடைக்கின்றனர்.

ஆணும் பெண்ணும் இணைந்து நடனமாடுவது என்பது Freestyle dans ல் மிகச் சாதாரண விடயம். பரத நாட்டியத்தில் இதற்கான சாத்தியம் மிகக் குறைவு.

காலத்திற்கு ஏற்ற தலைப்புக்களை மிக இலகுவாக Freestyle dans ஊடாக படைக்கமுடிகிறது. இத்தனை வருடங்களானபின்பும் இந்து மதத்தைக் கடந்து பரதம் அதிக தூரம் வந்துவிடவில்லை என்பதை நாம் ஏற்றுக்கொள்ளத்தானே வேண்டும். இதற்கான காரணிகள் ஆராய்ந்து தீர்த்துக்கொள்வதே இப்போது அவசியமானது.


இன்றைய நிகழ்வில் எடுத்துக்கொள்ளப்பட்ட தலைப்புக்களான குடும்ப வன்முறை அதனூடான பாதிப்புக்கள், பாடசாலையில் நடைபெறும் கேலிவதை, மிரட்டல் போன்றவற்றை நாம் ஏன் இதுவரை பரதத்தின் ஊடாக படைக்க முன்வரவில்லை என்பதை இன்றைய நிகழ்வு சிந்திக்கத்தூண்டியுள்ளது. உரியவர்கள் சிந்திப்பார்கள் எனக்கொள்வோம். எதை எமது சமூகம் விதைத்ததோ அதை அறுவடைசெய்கிறோம் என்றும் நாம் இதை நோக்கலாம்.

எனவே Freestyle நடன ஆசிரியர்களும், ஏனைய கலையாசிரியர்களும் பரதக்கலை ஆசிரியர்களிடத்தில் கற்றுக்கொள்ள பல விடயங்கள் உண்டு.

இன்றைய நிகழ்வில் நோர்வேயின் முக்கிய பரதக்கலை ஆசிரியர்கள் மூவர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டமையும், Dans for ever கலைக்கூடத்தின் ஆசிரியைகள் அனைவரும் பரதக்கலையை அரங்கேற்றம் வரையில் கற்றுத்தேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.

இசையில், இந்திய இசையும் Jazz இசையும் இணைந்து IndoJazz இசையை உருவாக்கிக்கொண்டதைப்போன்று, பரதமும் Freestyle dansம் புதியதோர் நடனவடிவத்தினை உருவாக்கிக்கொள்ளக்கூடும்.

குழந்தைகள் மெய்மறந்து கொண்டாடும் எக்கலையும் எனக்குக் கலையே.

மாணாக்கரிடத்தே ஆர்வத்தை உண்டாக்குபவனே ஆசிரியன் என்றும் எங்கோ வாசித்திருக்கிறேன்.யார் யார் ஆசிரியர்கள் என்பதை காலம் காண்பிக்கும் என்பதில் எனக்கு ஐயமில்லை.

இன்றைய நிகழ்வினை தயாரித்து வழங்கிய அனைவரும் பாராட்டுக்குரியவர்கள்.

மனதுக்கு நம்பிக்கை தந்த ஒரு மாலை.

அன்பால் ஆட்கொல்லாதே

ரூபன் சிவராஜா நேற்று ஒரு கவிதை எழுதியிருந்தார். அதை வாசித்தபின் மனது கொட்டித் தீர்த்த வார்த்தைகள் இவை.

முதலில் கவிதையைப் பார்ப்போம்.

******

அந்தப் பூச்செடி
பச்சையாய் என்னுள் படர்கிறது

உன் தொடுதலின் ஸ்பரிசத்தையும்
கண்ணின் ஒளியையும்
உதட்டில் உதிரும்
சொற்களின் குளுமையையும்
உறிஞ்சி
மீண்டும் மீண்டும்
துளிர்க்கிறது
கிளையாய் சடைக்கிறது

துளிவிதையில்
பெருங்காடொன்றை விரிக்கிறது
ஒற்றைச் செடி காடாகும்
விந்தை!

******

இதுதான் ஒரு மனிதனுக்கான வாழ்வின் நிலத்தடி நீர்.
இதைவிட பேரின்ப வாழ்வேனும் உண்டா?

ஒரு மனிதன் உயிர்ப்புடன் இருப்பதற்கு சுவாசமும் உணவும் போதுமானது அல்ல என்பதை வாழ்ந்த அனுபவமுள்ளவர்களால் புரிந்துகொள்ள முடியும். மனிதன் ஒரு சமூக மிருகம். அவனால் தனித்து வாழ்ந்துவிட முடிவதில்லை. இங்கு தனித்து எனப்படுவது இன்னொருவருடன் சேர்ந்து வாழ்வது என்று மட்டும் பொருள்படாது. இன்னொரு மனிதன் மீதான நட்பு, அன்பு, காதல்,கருனை, கரிசனை என்று பலதையும் கொண்டது அது.

இந்த உலகில் அறுதி வறுமையானவர்கள் யார்? வருமானம் இல்லாதவர்கள் என்று மட்டும் வரையறுத்துவிடாதீர்கள். இவர்களுடன் ஒப்பிடுகையில் கனிவான பார்வைக்கு, இனிமையான வார்த்தைகளுக்கு, இன்னொரு மனிதனின் அன்பான ஸ்பரிசத்திற்கு ஏங்கும் மனிதர்களே மிகவும் கொடும் வறுமைக்கு உட்பட்டவர்கள். இந்த உலகில் இவர்களைவிட வறுமையாக வாழ்பவர்கள் வேறுயாரேனும் இருக்கமுடியமா? பசி, பிணி ஆகியவற்றிலும் கொடுமையானவை இவை. மற்றையவர்களின் வறுமையை பணம் ஈடுசெய்துவிடக்கூடும். ஆனால் இவர்களின் வறுமையை எது ஈடுசெய்யும்?

இப்படியானதொரு நிலை எல்லா மனிதர்களின் வாழ்விலும் வந்துபோயிருக்கும். அதிஸ்டசாலிகள் அதனை கடந்துகொள்கிறார்கள். மற்றையவர்களை அது ஒரு பிறழ்வுநிலைக்கு தள்ளிப்போகிறது. பிறழ்வுநிலை மனமானது மன அயர்ச்சி, மன அழுத்தம், சுயஇரக்கம், இயலாமை என்னும் ஒரு இருண்ட காலத்தினுள் இம்மனிதர்களை முழ்கடிக்கும்போது இவற்றில் இருந்து விடுபட்டு மீள்வது இலவல்ல.

இன்று ரூபனின் கவிதையை வாசித்தத்ததும் முதலில் நினைவிற்கு வந்தவர் கதிரவன். இவர்தான் யூமா வாசுகின் ”மஞ்சல் வெய்யில்” நாவலின் கதாநாயகன்.

தனது வேலைத்தளத்தில் உள்ள ஒரு பெண்ணை காதலிக்கிறார். அவளே அவரின் உயிர்ப்பான வாழ்வின் ஒரே ஒரு பாத்திரம். அவரின் நினைவு, கனவு எல்லாமே அவளாகவே இருக்கிறாள். ஒருநாள் தனது காதலை அவர் அவளிடம் தெரிவித்துவிடுகிறார். அவள் அவரை தான் காதலிக்கவில்லை என்றுவிடுவாள்.

அதன்பின் அம்மனிதர் படும் வலி உயிரைப்பிழிவதுபோலிருக்கும். கதிரவனின் ஏக்கம், ஏமாற்றம், சுயபரிதாபம், கனவு, காமம், தனிமை, வாழ்வு மீதான வெறுப்பு, நிராசை என்பன எவ்வாறு அவனது உயிரின் உயிர்ப்பை உறுஞ்சிவிடுகின்றன என்பதை அதை அத்தனை உணர்வுடன் எழுதியிருப்பார் யூமா வாசுகி. நான் அவன் இறந்துபோகட்டும் என்று விரும்பினேன். அவளின் காதலுக்காய் அன்புக்காய் அவன்பட்ட பாடு அத்தகையது.

”மஞ்சல் வெய்யில்” வாசித்தபின் சில நாட்கள் மனது கதிரவனின் பின்னாலேயே அலைந்துகொண்டிருந்தது. அவனின் நண்பனாக அவனை அணைத்து ஆறுதல் சொல்ல விரும்பினேன். அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இருக்கவில்லை என்பது எல்லாவற்றிலும் கொடுமையானது. கதிரவன்தான் உலகின் வறுமையான மனிதனாகத் தோன்றினார்.

ஒரு மனிதனை நாம் எதிர்கொள்ளும்போது கண்ணில் கனிவான பார்வையிருப்பின், உதட்டில் சொற்களின் குளிர்மையிருப்பின் அது மனிதர்களை உயிர்ப்பிக்கும் என்பதை நான் கூறித்தான் நீங்கள் அறியவேண்டியதில்லை.

கனிவான பார்வையும், குளிர்மையான வார்த்தையும் எத்தனை எத்தனை மனக்காயங்களுக்கு களிம்பு தடவிவிடக்கூடியவை என்பதை எம்மில் எத்தனை பேர் சிந்தித்து நடந்திருக்கிறோம் நடக்கிறோம்?

இதையே மனப்பிளவுகளுக்கு மருந்தாக உபயோகித்திருக்கிறோமா? எம்மால் ஏன் இன்னொரு மனிதனை அன்புடனும், குளிர்மையுடனும் அணுகமுடியாதிருக்கிறது? இதுவும் ஒரு வறுமை நிலையல்லவா?

நானும் இவற்றை கடந்துவந்தவன்தான். காலம் பலதையும் கற்றுத்தந்திருந்தாலும் இப்போதும் தடக்கிவிழுந்தபடியேயே நடந்துகொண்டிருக்கிறேன். வாழ்வு நெடுக கற்றல் என்பது இதுதானோ.

அன்பால் ஆட்கொல்லாதே

நோய்மை என்னும் தத்துவவாதி

நோய்மையில் விழும்போது எம்மருகே ஒரு தத்துவவாதியும் புகையின் கால்களுடன் வந்து உட்கார்ந்துகொள்கிறான். நோய்மையானது மறந்துபோன பலதையும் இந்த தத்துவவாதியின் ஊடாக நினைவூட்டத்தொடங்குகிறது.
உணவைக் கட்டுப்படுத்தியிருக்கலாம், உடற்பயிற்சி செய்திருக்கலாம் என்பவை போன்ற பல காலம் கடந்த ஞானங்களை உணர்ந்துகொண்டிருப்போம். நோயுறும் மனிதனுக்கு வைத்தியம் முக்கியம், எனினும் அவனைப் புரிந்துகொண்ட வைத்தியரும் அவசியம். நோயுற்ற மனிதன் முன்னிலும் அதிகமாக பேசுகிறான் விழைகிறான். வலியை, பயத்தை, நோயை, சுகப்படுவேனா என்ற சந்தேகத்தை என்று, பேசுவதற்கு அவனுக்குள் பலவிடயங்கள் இருக்கின்றன. நோயுற்றவனுக்குள் பேசமுடியாத வலிகளும் இருக்கும். எல்லோருடனும் பகிரமுடியாத வலியாகவும் இருக்கும் அது. சிலர் அதனை அழுது அழுது வடித்துக்கொள்கிறார்கள். சிலர் முணுமுணுத்துக் கடந்துகொள்கிறார்கள். இன்னும் சிலர் தங்களுக்குள்ளேயே புதைத்துக்கொள்கிறார்கள். 1980களில், மட்டக்களப்பு மெதடிஸ்ற் மத்திய கல்லூரியில் கல்வி கற்றுக்கொண்டிருந்த காலம். அந்நாட்களில் அங்கு வழிகாட்டிகள் (Pathfeinders) என்று ஒரு சங்கம் இருந்தது. எங்கள் அதிபர் பிரின்ஸ் காசிநாதரின் சிந்தனை வடிவம் அது. ‘நீ சமூகத்தினால் உருவாக்கப்பட்டவன். எனவே சமூகத்திற்கு எப்போதும் பிரதியுபகாரமாயிரு’ என்பதுதான் அந்தச் சங்கத்தின் நோக்கம். மட்டக்களப்பு நகரம் அமைந்துள்ள புளியந்தீவுக்குச் சற்று அப்பால் மாந்தீவு என்று ஒரு தீவு உண்டு. அது மனிதர்களின் குடியிருப்பற்ற தீவு. அந்தத்தீவுக்கும் வேறுபகுதிகளுக்கும் எதுவித தொடர்பும் கிடையாது. அங்கு சமூகத்தினால் ஒதுக்கப்பட்ட சில மனிதர்கள் வாழ்ந்திருந்தனர். ஒரே ஒரு படகுமட்டும் அவசியம் எனின் அங்கு சென்றுவரும். இலங்கையில் அமைந்திருந்த மிகச்சொற்பமான தொழுநோயாளிகளுக்கான வைத்தியசாலை அங்கு அமைந்திருந்தது. எதுவித வசதிகளும் இல்லாத வைத்தியசாலை. தொழுநோய்கண்டவர்களுக்கு மீட்சி இருக்காத நாட்கள் அவை. நோய்த்தொற்று ஏற்பட்டதும் அங்கு வருபவர்கள், நோய்முற்றி, அங்கங்கள் உருக்குலைந்து, அழுகி கோரமான மனிதவுடல்களுடன் இறுதியாய் மூச்சடங்கும்வரை அங்குதான் வாழவேண்டும். அவர்களுக்கான சவச்சாலையும் அங்குண்டு. நோய்மைக்கு இன, மத, மொழி வேறுபாடுகிடையாதல்லவா. முதல் நாள் நாம் அங்கு அழைத்துப்போகப்பட்டபோது வாவியைக் கடக்கும்வரை மனதில் இருந்த குதூகலமான மனநிலை அங்கு வாழ்ந்திருந்த மனிதர்களைக் கண்டபோது அகன்று போனது. உருக்குலைந்த கை கால்விரல்கள், மூக்கு, வாய், கோரமான முகங்கள் என்பன எம்மை அதிர்ச்சியான ஒரு மனநிலைக்குள் தள்ளியிருந்தது. 40 வருடங்களின் பின்பும் அந்தக் காட்சி இன்றும் நினைவிலிருக்கிறது. மாந்தீவினுள் புத்தவிகாரை, மசூதி, கோயில் இருந்தது என்றே நினைவிருக்கிறது. நோய்மையில் இருந்தும், மனவலிகளில் இருந்தும் விடுபட அவர்கள் இறைஇல்லங்களை நாடியிருக்கக்கூடும். கையறுநிலையில் மனிதர்களுக்கு அனுமானுஷ்யசக்திகளில் அதீத நம்பிக்கை எற்பவதுண்டல்லவா. வருடக்கணக்கில் ஒரு சிறு இடத்தினுள் அங்கங்கள் அழுகி உருக்குலைய உருக்குலைய ஒரு சிறு இடத்தில் வாழ்ந்து முடிந்த அந்த மனிதர்களின் மனநிலைகள் எப்படி இருந்திருக்கும் என்று நினைத்துப்பார்க்கிறேன். எத்தனை வேதனையான வாழ்க்கையாக இருந்திருக்கும் அது. மனிதனுக்கு இன்னொரு மனிதனின் அன்பு, ஸ்பரிசம், அரவணைப்பு என்பன எத்தனை முக்கியமானது என்பதை காலம் எனக்கு கற்பித்திருக்கிறது. மாந்தீவு மனிதர்களை நினைத்துப்பார்க்கிறேன் எத்தனை எத்தனை ஆண்டுகள் இன்னொரு மனிதனின் அன்பு, அரவணைப்பு, ஸ்பரிசமின்றி வாழ்ந்து கழித்திருப்பார்கள். எத்தனை கொடுமையான நிலை இது. இதைவிட வறுமையான வாழ்க்கையேதுமுண்டா? தொழுநோய்பற்றி வைத்தியர் ஒருவர் உரையாற்றினார். எமது அச்சங்கள் அகன்றபின் சிரமதானம் ஆரம்பிக்கப்பட்டது. குப்பைகளை அகற்றினோம், கான்களை, தங்குமிடங்களை சுத்தப்படுத்தினோம். அதன்பின்பு 2 – 3 தடவைகள் அங்கு சென்றுவந்தபின் அங்கிருந்தவர்களுடன் ஒருவித உறவு ஏற்பட்டிருந்தது. எமது வருகைக்காக அவர்கள் காத்திருந்தார்கள். நாம் அங்கு செல்வதற்கு காத்திருந்தோம். அவர்களின் கண்களில் வாஞ்சை ஒளிந்திருந்து எம்மை பார்த்துக்கொண்டிருந்து. எம்முடன் உரையாடுவதற்காக காத்திருந்தார்கள். தமிழும் சிங்களமும் தெரிந்திருந்ததால் அவர்களுடன் உரையாடியிருக்கிறேன். என்ன பேசினோம் என்பது நினைவில் இல்லை. அண்மையில் கொழும்புக்கு அருகே உள்ள Hendala தொழுநோயாளர் வைத்தியசாலையில் ஒருவர் 70 வருடங்களாக வாழ்ந்திருந்ததாக அறியக்கிடைத்தது. அந்த மனிதரின் வாழ்க்கைக்குள் என்னைப் பொருத்திப்பார்க்கிறேன். எத்தனை கொடுமையானதாக அவருடைய வாழ்வு இருந்திருக்கும். எத்தனை கொடியது சில மாந்தர்களின் யாக்கை. இன்று நான் முழங்கால் அறுவைச் சிகிச்சையின்பின் படுத்திருக்கிறேன். உடல்வலிக்கு மருந்து, பசித்தால் உணவு, குளிருக்கு வெப்பம் என்று எல்லாம் இருக்கின்றன. இருப்பினும் ஒரு அந்தரங்க வலி இருந்துகொண்டே இருக்கிறது. அது என்ன என்று எழுதத்தெரியவில்லை. கால் முன்பைப்போன்று இயங்குமா? மீண்டும் சத்திரசிகிச்சை அவசியமா? முன்பைப்போன்று நடப்பேனா? ஓடலாமா? விளையாடலாமா என்றெல்லாம் மனதுக்குள் பல பயங்கள் இருக்கின்றன. இன்றைய நாள் மாந்தீவில் அலைந்துகொண்டிருக்கிறது. எத்தனை எத்தனை மனிதர்களின் வேதனைகளை எத்தனையோ பத்து ஆண்டுகளாய் தனக்குள் புதைத்திருக்கிறது அந்த நிலம். நோயாளிக்கு நோயாளி என்ன பேசிக்கொண்டிருப்பார்கள்? யாருடைய வலியை யார் கேட்பது? முடிவு தெரிந்தபின் வாழ்வது எத்தனை கனமானதாக இருந்திருக்கும்? அருகில் இருந்தவர் மறையும்போது மற்றையவரின் மனம் என்ன பாட்டைப்பட்டிருக்கும்? என்னால் நினைத்துப்பார்க்கவே முடியாதிருக்கிறது. 1980களில் ஒருமுறை மலேரியா காய்ச்சலால் பீடிக்கப்பட்டு பல நாட்களின் பின் எழுந்தேன். எழுந்த முதல்நாள் என்னால் நிற்க முடியவில்லை. பயந்துபோனேன். அழுதேன்.
எனது அம்மா ஒரு வைத்தியர். அன்பாகவும் ஆறுதலாகவும் மலேரியா காய்ச்சல் வந்தால் இப்படித்தான் இருககும். இன்னும் சில நாட்களுக்கு உனக்கு மிகுந்த ஆறுதல் தேவை. ஆனால் அடுத்த கிழமை நீ நடக்கலாம். சைக்கில் ஓடலாம் என்று விளங்கப்படுத்தி உற்சாகமூட்டினார். அம்மா மடியில் படுக்கவைத்துக்கொண்டு நான் துயிலும்வரையில் உரையாடிக்கிகொண்டிருப்பார். பாதுகாப்பான மனநிலையில், பயம் அகன்று உறங்கிப்போவேன். எஸ். ராவின் துயில் நாவல் நோய்மைபற்றிப் பேசும் ஒரு அற்புதநாவல். அதில் ஒரு பாத்திரம் தான் சந்திக்கும் நோயாளிகளின் அந்தரங்க வலிகளை தனது பேச்சால் வடிந்தோடச்செய்வார். நோய்க்கும், மீட்சிக்கும் இடையில் மனிதர்கள் படும் எல்லையில்லாத துயர்களையும், நோயும் மதமும்பற்றிய ஆழமான கேள்விகளையும் எழுப்பும் ஒரு நாவல் துயில். நோய்மைபற்றி வாசிக்க விரும்புகிறீர்களா. துயில் அவற்றில் முக்கியமானது. இரண்டாம் தடவையாக துயில் கையில் இருக்கிறது.

வைக்கோல்பட்டறை நாயாவதே நமக்கு முக்கியம்

குணா கவியழகனின் படைப்புக்கள் ஆராய்ச்சிக் கட்டுரைகளா? அவர் உண்மைச் சம்பங்களை தொட்டுச்செல்லும் புனைவுகளைத்தானே எழுதுகிறார். அதற்காக அவர் உண்மையை மட்டும்தான் எழுதவேண்டும் என்று கோருவது படைப்பாளிக்கு கட்டளை இடுவது போன்றாகாதா? அது முறையா?

எனவே ஒரு ஆய்வுக்கட்டுரையை விமர்சிக்கிறேன் என்ற ரீதியில் குணா கவியழகனின் படைப்புக்களில் உள்ள ஒவ்வொரு காட்சியையும் நான் அணுகமாட்டேன்.

கதை, கதை நகர்த்தப்பட்ட விதம், பாத்திரப்படைப்பு என்று நூலைப்பற்றிய பலதையும் பேசாமல் சரித்திர நிகழ்வுகளை சரியாகக் குறிப்பிடப்படவில்லை என்பதை அடிப்படையாக்கொண்டு புலிகளுக்கு சார்பான கருத்துக்களை முன்வைக்கிறார் என்பது தகுந்த விமர்சனப் பார்வையாகுமா?

ஆதாரபூர்வமான சரித்திர நிகழ்வுகளை முன்வைத்து ஒரு படைப்பை உருவாக்குவது எனின் அதை இப்படைப்புக்களை விமர்சிப்பவர்கள் எழுத முனையலாம் அல்லவா?

குணா கவியழகன் என்ன வேற்றியக்கத்தவரா புலிகளை விமர்சித்து கதையெழுத? வெளிவந்த அவரது படைப்புக்கள் அவரது நிலைபாட்டையும், கருத்தியலையும் தெளிவாகக் கூறுகின்றன. இவற்றின் பின்னணியில்தானே நாம் அவரது ஏனைய படைப்புக்களையும் வாசிக்கிறோம்.குணா கவியழகன் பாரிசில் ஆற்றிய உரையையும் அவரின் பின்னணியில் இருந்துதானே நோக்கவேண்டும். அந்த உரைக்கு கிடைத்திருக்கும் வாதப்பிரதிவாதங்களையும் கவனத்தில்கொள்வது அவசியம்.

நல்ல வேளை சாண்டில்யனுக்கு எம்மைப்போன்றதொரு விமர்சகர்கூட்டம் இருக்கவில்லை. இல்லையேல் மனிதர் தற்கொலை செய்துகொண்டிருக்கக்கூடும்.

புலத்து ஈழத்தமிழர்களுக்கு “புலி சார்பு அல்லது புலி எதிர்ப்பு” என்றதொரு கொடிய நோய் பீடித்திருக்கிறது.

எதையும் இந்தக் கண்ணோட்டத்திலேயே புலத்துச் சமூகம் அணுகமுயல்கிறது. இது ஆரோக்கியமானது எனக் கொள்ளலாமா?

மனிதர்களைப் பார்த்து நட்பாக புன்னகைப்பதுகூட இவ்வாறான கண்ணோட்டத்திலேயே என்பதை நன்கு அறிவோம்.

சார்பு மற்றும் எதிர்ப்பு நிலையானது நண்பர்களாவதில் இருந்து, நூல்வெளியீடுகளில் மட்டுமல்ல மரணவீட்டிலும் தொடர்வதாகவே தென்படுகிறது.

வேதனை என்னவென்றால் முன்னைநாள் புலிகள்தான் இப்போது மும்மரமாக மோதிக்கொள்கிறார்கள். மாற்றியக்கங்களும் அவ்வப்போது இந்நோயால் பாதிக்கப்படுவதுண்டு. ஆனால் இவர்கள் இப்போது மௌனித்து சிறுபான்மையாகிவிட்டார்கள்.
அண்மையில் ஒரு மனிதரின் இறுதிச் சடங்கில் உட்கார்ந்திருந்தேன். அங்கும் புலிக்காய்ச்சல் கடுமையாக வீசிக்கொண்டிருந்தது. ஓரிரு மனிதர்களைத் தவிர்த்து.

ஒருவர் சமூகத்திற்கு நன்மையை செய்யினும் அது விமர்சிக்கப்படவேண்டும் என்பதற்காகவே விமர்சிக்கப்படுகிறது.

இந்த இரண்டு பகுதியினரில் ஒரு பகுதியினர் கோயிலைக் கட்டினால், மற்றைய பகுதி அதை இடிக்கும் அல்லது இன்னொரு கோயிலை, மற்றைய கோயிலுக்கு எதிர்ப்புறமாகக் கட்ட முனைவதுடன் அங்கு பணிபுரியும் ஐயருக்கும் சம்பளத்தை அதிகமாக் கொடுத்து இரகசியமாக அழைக்கும்.
சமூகத்திற்கு எது அவசியமானதென்பதைத் தவிர்த்து, வைக்கோல் பட்டறை நாயாவதே நமக்கு முக்கியமாகியிருக்கிறது.

இவற்றையெல்லாம் கடந்து இணைந்து செயற்படும் பகுதியினரும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் அவர்கள் மிகச் சொற்பமானவர்களே.

இப்போதைய புலம்பெயர் இலக்கியத்தில், இலக்கிய விமர்சமும்கூட சார்பு, இந்த சார்பற்ற நிலைகளை பின்பற்றியதாகவே உள்ளது.

அண்மையில் ஒசுலோவில் நடந்தேறிய ஒரு நாடகத்தினை, ஒரு ஊடகவியலாளர் முகப்புத்தகத்தில் பினாமியாக மாறி விமர்சித்திருந்தார் . சிலருக்கு தங்கள் சொந்தப்பெயரில் விமர்சனங்களை முன்வைக்கும் துணிவில்லை என்பதையும் புரிந்துகொள்ளவேண்டும்.

ஆனால் இவர்கள் விமர்சனங்களை முன்வைக்கும்போது ஆகக் குறைந்தது விமர்சிக்கப்படும் நூலையாவது வாசித்திருக்கவேண்டும். வெறுமனே முகப்புத்தக நேரலையைப் பார்த்துவிட்டுக் காய்ச்சலின் அகோரத்தில் பினாத்துவதுதான் வேதனை.

இதுதான் இப்போதைய புலத்து இலக்கியப்போக்கு.

இதைத்தானா எதிர்கால சந்ததிக்கு கற்றுத்தர விழைகிறோம்?

இதுபோலத்தான் அண்மையில் ஓசுலோவில் நடந்த இன்னுமொரு இலக்கிய நிகழ்விலும் காய்ச்சலின் காரணமாக அந்நிகழ்வு சென்றடையவேண்டிய பரப்பு வேண்டுமென்றே மட்டுப்படுத்தப்பட்டது.

நமக்கு பீடித்திருக்கும் கொடும் நோயின் காரணமாக நாடு, இனம், தேசியம் என்பது எல்லாமே பலமிழந்துவிட்டன.

எழுத்தாளர் சுஜாதாவின் அறிவியல்புனை (Science fiction) கதையொன்றில் ஒரு சமூகத்தைக் கட்டுப்படுத்தும் நஞ்சில் இருந்து அச் சமூகத்தைக் காப்பாற்றுவதற்காக, நச்சின் வீரியம் பலமிழப்பதற்காக, நீரின் விகித்தை அதிகரிப்பதாகவும் அதன் மூலமாக நஞ்சின் அடர்த்தி குறைந்து அச் சமூகம் மீள்வதாகவும் எழுதியிருப்பார்.

அதுபோலத்தான் இன்று முகப்புத்தகத்தில் ஒரு செய்தி வாசித்தேன்.

ஈழத்தில் புலிகள் இயக்கத்து முக்கிய பிரமுகர் ஒருவரது குழந்தையின் பிறந்தநாளில் புளொட், டெலோ, ஈபிஆர்எல்எப் மற்றும் மாற்றுக்கருத்துக்கொண்ட பலரும் கலந்து சிறப்பித்து அக்குழந்தையை வாழ்த்தினராம்.

இந் நிகழ்வு எமக்கு ஒரு முக்கிய செய்தியை கூறமுயல்கிறது என்றே எனக்குத் தோன்றுகிறது.


செத்துப்போக பயமாக இருக்கிறது


அப்பாவும் அடியேனும், நாயும் கல்லும் போன்றவர்கள். பல காலமாக நாம் சந்தித்துக்கொள்ளவில்லை. அவர் நினைத்தமாத்திரத்தில் புறப்பட்டு வருவார். வந்தவேகத்தில் திரும்பியும் விடுவார். என்னிடம் வந்து பல ஆண்டுகளாகிவிட்டன.

தம்பி, தங்கையை அவர் அவ்வப்போது சந்திப்பதாக கதையிருக்கிறது.

நேற்று பின்மாலைப் பொழுதில் திடீர் என்று வந்தார். வெளியில் -21 குளிர். மனிதர் இதை எப்படி தாங்குகிறாரே, என்றும் வராதவர் வந்திருக்கிறாரே என்றும் நினைத்துக்கொண்டிருக்கும்போதே...

”என்டா .. தம்பிக்கு அடித்தாயாமே” என்று வழக்காடுமன்றத்தை ஆரம்பித்தார்.

குற்றம்சாட்டப்பட்ட ஒரு அப்பாவிக்கு ஆகக்குறைந்தது தன்பக்கத்து விளக்கத்தினை கொடுக்கும் உரிமையாவது இருக்கவேண்டும் அல்லவா?

அவர் கேட்ட கேள்வியின் கடைசி எழுத்து ”மே” அவரது வாயால் வெளியே வந்து எனது காதினுள் புகுந்து மூளைக்குச் செல்லுமுன்

சடார் என்று ஒரு சத்தம். அடியும் நுனியும் நடுங்கி, வியர்த்து எழும்பினேன்.

கனவு.

அப்பா, இத்தனை வயதுக்கு பிறகு, எத்தனையோ பத்து ஆண்டுகளுக்கு அப்பால் கனவில் வந்து ....... இதெல்லாம் நியாயமில்லை... ஆமா.

இப்ப பாருங்க உலகமே என்னைப் பார்த்துச் சிரிக்கிறது.

கனவில வந்தால் வேறு எத்தனையோ கதைக்கலாம் அல்லவா.

செத்துப்போகவே பயமாக இருக்கிறது. நீங்கள் அங்கேயும் இருப்பீர்களா?

பிற்குறிப்பு: நேற்று தம்பியுடன் கதைத்தபோது அவனை உறுக்கி அடக்கியது என்னவோ உண்மைதான்.

தாகத்தின் வாசனை


தாகத்தின் வாசனை

******

முகப்புத்தகத்தில் Rooban Sivarajah நேற்று ஒரு கவிதை எழுதியிருந்தார். அதை வாசித்தபின் மனது கொட்டித் தீர்த்த வார்த்தைகள்தான் இந்தப் பதிவு.

முதலில் கவிதையைப் பார்ப்போம்.

***

அந்தப் பூச்செடி
பச்சையாய் என்னுள் படர்கிறது
உன் தொடுதலின் ஸ்பரிசத்தையும்
கண்ணின் ஒளியையும்
உதட்டில் உதிரும்
சொற்களின் குளுமையையும்
உறிஞ்சி
மீண்டும் மீண்டும்
துளிர்க்கிறது
கிளையாய் சடைக்கிறது
துளிவிதையில்
பெருங்காடாென்றை விரிக்கிறது
ஒற்றைச் செடி காடாகும்
விந்தை!

***

இதுதான் ஒரு மனிதனுக்கான வாழ்வின் நிலத்தடி நீர்.


இதைவிட பேரின்ப வாழ்வேனும் உண்டா?

கனிவான பார்வைக்கு, இனிமையான வார்த்தைகளுக்கு, இன்னொரு மனிதனின் அன்பான ஸ்பரிசத்திற்கு ஏங்கும் மனிதர்களை நினைத்துப் பார்க்கிறேன்.

ஒரு மனிதன் உயிர்ப்புடன் இருப்பதற்கு சுவாசமும் உணவும் போதுமானது அல்ல என்பதை வாழ்ந்த அனுபவமுள்ளவர்களால் புரிந்துகொள்ள முடியும். மனிதன் ஒரு சமூக மிருகம், அவனால் தனித்து வாழ்ந்துவிட முடிவதில்லை. இங்கு தனித்து எனப்படுவது இன்னொருவருடன் சேர்ந்து வாழ்வது என்று மட்டும் பொருள்படாது. இன்னொரு மனிதன் மீதான நட்பு, அன்பு, காதல்,கருணை, கரிசனை என்று பலதையும் கொண்டது அது.

இந்த உலகில் அறுதி வறுமையானவர்கள் யார்? வருமானம் இல்லாதவர்கள் என்று மட்டும் வரையறுத்துவிடாதீர்கள். இவர்களுடன் ஒப்பிடுகையில் கனிவான பார்வைக்கு, இனிமையான வார்த்தைகளுக்கு, இன்னொரு மனிதனின் அன்பான ஸ்பரிசத்திற்கு ஏங்கும் மனிதர்களே மிகவும் கொடும் வறுமைக்கு உட்பட்டவர்கள். இந்த உலகில் இவர்களைவிட வறுமையாக வாழ்பவர்கள் வேறுயாரேனும் இருக்கமுடியமா?

பசி, பிணி ஆகியவற்றிலும் கொடுமையானவை இவை. மற்றையவர்களின் வறுமையை பணம் ஈடுசெய்துவிடக்கூடும். ஆனால் இவர்களின் வறுமையை எது ஈடுசெய்யும்?

இப்படியானதொரு நிலை எல்லா மனிதர்களின் வாழ்விலும் வந்துபோயிருக்கும். அதிஸ்டசாலிகள் அதனை கடந்துகொள்கிறார்கள். மற்றையவர்களை அது ஒரு பிறழ்வுநிலைக்கு தள்ளிப்போகிறது. பிறழ்வுநிலை மனமானது மன அயர்ச்சி, மன அழுத்தம், சுயஇரக்கம், இயலாமை என்னும் ஒரு இருண்ட காலத்தினுள் இம்மனிதர்களை மூழ்கடிக்கும்போது இவற்றில் இருந்து விடுபட்டு மீள்வது இலகுவல்ல.

இன்று ரூபனின் கவிதையை வாசித்ததும் முதலில் நினைவிற்கு வந்தவர் கதிரவன். இவர்தான் யூமா வாசுகியின் ”மஞ்சல் வெய்யில்” நாவலின் கதாநாயகன். தனது வேலைத்தலத்தில் உள்ள ஒரு பெண்ணை காதலிக்கிறார். அவளே அவரின் உயிர்ப்பான வாழ்வின் ஒரே ஒரு பாத்திரம். அவரின் நினைவு, கனவு எல்லாமே அவளாகவே இருக்கிறாள். ஒருநாள் தனது காதலை அவர் அவளிடம் தெரிவித்துவிடுகிறார். அவள் அவரை தான் காதலிக்கவில்லை என்றுவிடுவாள்.

அதன்பின் அம்மனிதர் படும் வலி உயிரைப்பிழிவதுபோலிருக்கும். கதிரவனின் ஏக்கம், ஏமாற்றம், சுயபரிதாபம், கனவு, காமம், தனிமை, வாழ்வு மீதான வெறுப்பு, நிராசை என்பன எவ்வாறு அவனது உயிரின் உயிர்ப்பை உறிஞ்சிவிடுகின்றன என்பதை அத்தனை உணர்வுடன் எழுதியிருப்பார் யூமா வாசுகி. அவன் இறந்துபோகட்டும் என்று விரும்பினேன். அவளின் காதலுக்காய் அவன்பட்ட பாடு அத்தகையது.

”மஞ்சல் வெய்யில்” வாசித்தபின் சில நாட்கள் மனது கதிரவனின் பின்னாலேயே அலைந்துகொண்டிருந்தது. அவனின் நண்பனாக அவனை அணைத்து ஆறுதல் சொல்ல விரும்பினேன். அவனுக்கு நெருங்கிய நண்பர்கள் என்று யாரும் இருக்கவில்லை என்பதுதான் எல்லாவற்றிலும் கொடுமையானது.

ஒரு மனிதனை நாம் எதிர்கொள்ளும்போது கண்ணில் கனிவான பார்வையிருப்பின், உதட்டில் சொற்களின் குளிர்மையிருப்பின் அது மனிதர்களை உயிர்ப்பிக்கும் என்பதை நான் கூறித்தான் நீங்கள் அறியவேண்டியதில்லை.

கனிவான பார்வையும், குளிர்மையான வார்த்தையும் எத்தனை எத்தனை மனக்காயங்களுக்கு களிம்பு தடவிவிடக்கூடியவை என்பதை எம்மில் எத்தனை பேர் சிந்தித்து நடந்திருக்கிறோம், நடக்கிறோம்?

இதையே மனப்பிளவுகளுக்கு மருந்தாக உபயோகித்திருக்கிறோம்? எம்மால் ஏன் இன்னொரு மனிதனை அன்புடனும், குளிர்மையுடனும் அணுகமுடியாதிருக்கிறது? இதுவும் ஒரு வறுமை நிலையல்லவா?

நானும் இவற்றை கடந்துவந்தவன்தான். காலம் பலதையும் கற்றுத்தந்திருந்தாலும் இப்போதும் தடக்கிவிழுந்தபடியேயே நடந்துகொண்டிருக்கிறேன். வாழ்வு நெடுக கற்றல் என்பது இதுதானோ.