ஏழுகடல் அரசன்

எனது பேராசான் ஆங்கிலத்தில் ஏழு கடல் கடந்து கரைகண்டவர். ஆங்கிலத்தை வாழைப்பழத்தில் ஊசியேற்றுவதுபோன்று கற்பிப்பார். அப்படியும் ஆங்கிலத்தை கற்காத கபோதிகள் சிலர் எங்கள் வகுப்பில் இருந்தனர்.

கடைசியாக எழுதிய வசனத்தை மீண்டும் மீண்டும் இருதடவைகள் வாசிக்கவும். தயவு செய்து அதனை மீண்டும் ஒரு முறை வாசிக்கவும்.

அன்று பாடசாலையில் நின்றிருந்தேன். நேர அட்டவணை, அடுத்த பாடம் ஆங்கிலம் என்றிருந்தது. பாலசிங்கம் டீச்சர் வரவேண்டும் ஆனால் வரவில்லை. வகுப்பிற்கு ஆசிரியர் வரவில்லை என்றால் அதிபரிடம் அறிவிக்கவேண்டும் என்று கட்டளையை இட்டிருந்தார் எமது அதிபர்.

அவரது கட்டளையை மீறுவது வீதியில் விழுந்திருக்கும் தக்காளியை பாரவூர்தி மிதித்ததற்கு சமம். எனவே எமது பாடசாலையில் எந்தத் தக்காளியும் வீதியில் கிடப்பதில்லை.

மாணவர் தலைவன் அதிபரிடம் விடயத்தைக் கூறவென்று கிளம்பினான். சென்றவன் திரும்பிவந்து பிரின்ஸ் சேர் ஆங்கிலம் கற்பிக்க வருகிறார் என்றான்.

எனக்கு அதிபரின் பெயரைக் கேட்டாலே வயிற்றைக் கலக்கும். அவரே வரப்போகிறார் என்றதும், பேதி கண்டது.

மெதுவாய் பின்பகுதியால் புறப்பட்டு மதில் ஏறிக் குதித்து வீட்டிற்கு ஏகினேன். வீடு சென்றதும் பயம் பிடித்துக்கொண்டது. பிரின்ஸ் சேர் நான் புறப்பட்டுவிட்டேன் என்பதை அறிந்தால் வீடுவரை வரக்கூடியவர்.  எனவே வீட்டில் நிற்பதும் நடுவீதியில் தக்காளியாய் கிடப்பதும் ஒன்றுதான்.

எனவே தங்கையிடம் பிரின்ஸ் சேர் வந்து கேட்டால் நான் பாடசாலை சென்றுவிட்டார் என்று பதில் சொல் என்றுவிட்டு எங்கள் வீட்டுக்கு அருகே இருந்த ஒரு மரத்தருகே சைக்கிளை வைத்துவிட்டு உட்கார்ந்திருந்தேன்.

பாம்பின் கால் பாம்பறியும் என்பதுபோல் எனது பேராசான் தனது Honda C50 மோட்டார் சைக்கிலில் வந்துகொண்டிருந்தார். நான் மரத்தினடியில் விழுந்து படுத்துக்கொண்டு மனிதர் என்ன செய்கிறார் என்று எட்டிப்பார்த்தேன்.

நான் நின்றிருந்த மரத்தடியில் Honda C50 நின்றது. நான் மூச்சை இறுகப்பிடித்துக்கொண்டேன். அவருக்கு கேட்டுவிடக் கூடாதல்லவா.

சத்தம் எதுவுமில்லை. மெதுவாய் தலையை நிமிர்த்திப் பார்த்தேன். மனிதர் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு எனது வீடுநோக்கி  நடந்து சென்றுகொண்டிருந்தார்.

அவரின் மோட்டார் சைக்கிள் சத்தம் என்னை உசார்ப்படுத்திவிடும் என்பது அவருக்குத் தெரியும். எனது ஆசானல்லவா.

வீட்டிற்குச் சென்று ஏதோ கேட்கிறார். தங்கையிடம் பேசிவிட்டு மீண்டும் நடந்துவந்து மோட்டார் சைக்கிளில் ஏறிப் புறப்பட்டார்.

நான் மீண்டும் வீட்டுச் சென்று தங்கைக்கு 50 சதம் கொடுத்துவிட்டு கட்டிலில் சாய்ந்தேன்.

சற்று நேரம் கழித்து கண் விழித்தேன். எதிரே பிரின்ஸ் சேர் நின்றிருந்தார். தங்கை வாயைப் பொத்தி சிரித்துக்கொண்டிருந்தாள்.

சேர்.... அடிக்காதீங்க என்று கத்தியபடி எழும்பினேன்.

கனவு.

பாடசாலைப் பருவம் கடந்து 32 வருடமாகிவிட்டது என்பது கொசுறுச் செய்தி.