ஆபிரகாமுடனான ஆண்டவரின் ஒப்பந்தம்

சனிக்கிழமைகளில் நாங்கள் ஒரு பாடசாலை நடாத்துகிறோம். பலநாட்டவர்களும் அங்கு கற்கிறார்கள். எங்கள் பாடசாலையில் என்னை ஆசியர்களுக்கு பற்றாக்குறை ஏற்படும்போது கற்பிக்கக் கேட்பார்கள்.

இன்று முதலாவது பாடம் கணிதம் கற்பிக்கவேண்டியிருந்தது. ஏழாம் வகுப்பு. அந்த வகுப்பு இனிதே முடிந்தது.

அதையடுத்து ஒரு சிறுவனுக்கு வீட்டுப்பாடங்களுக்கு உதவவேண்டியேற்பட்டது. அவன் வகுப்பிற்குள் வரும்போது உதைத்து உதைத்துச்  செல்லும் சிறிய துவிச்சக்கரவண்டியை தோளில் காவியபடி வந்தான்.

துவிச்சக்கர வண்டியை மிகவும் பாதுகாப்பாக வைத்தான். ஜக்கற்ரையும் புத்தகப்பையையும் நாற்காலியில் தொங்கவிட்டான். அவன் உட்காரும்வரையில் காத்திருந்தேன்.

எனது பெயர் சஞ்சயன் என்று அறிமுகப்படுத்திக்கொண்டேன். தனது பெயர் இப்றாகீம் என்றான் சற்று தடுமாறிய நோர்வே மொழியில். விசாரித்ததில் அவர் அர்மேனிய நாட்டில் இருந்து நோர்வேக்கு அண்மையில் குடிபெயர்ந்திருக்கிறான் என்று அறிந்துகொண்டேன். மொழிப்பிரச்சனை வரப்போகிறது என்றது மனது.

என்ன படிக்கப்போகிறாய் என்று கேட்டேன்.

எனக்கு ஆபிரகாம்பற்றி கற்பிக்கமுடியுமா என்றபோது ஆரம்பித்தது பிரச்சனை.

எனக்குத் தெரிந்த ஒரே ஒரு ஆபிரகாம் ஆபிரகாம்  லிங்கன் என்னும் அமெரிக்க சனாதிபதி. எனவே பிரச்சனை இல்லை என்றுதான் நினைத்தேன்.

அவனோ ஒரு புத்தகத்தை எடுத்து மேசையில் போட்டான். அதில் ஆபிரகாமின் படம் போடப்பட்டிருந்தது. அது எனக்குத் தெரிந்த ஆபிரகாம் லிங்கன் இல்லை.

கிறீஸ்தவ மத்ததின் பழைய ஏற்பாட்டில் உள்ள மிகப்பழைய ஆபிரகாம். 

நோர்வேயில் மதக் கல்வி என்பதை கிறீஸ்தவமும், மதங்களும், வாழ்வியல் தத்துவமும், நெறிமுறைகளும் என்ற தலைப்பில் கற்பிக்கிறார்கள்.

நான் இந்துவாகப் பிறந்தவன். இருப்பினும், எனக்கு Oslo முருகனின் அப்பாவின் வரலாறு எப்படியானது என்ற அறிவே இல்லை. இப்போது என்ன செய்வேன் பரலோகத்துப் பிதாவே என்று சிந்தித்தபோது, இப்றாகீம் இதை வாசித்து எனக்கு கற்பிக்க முடியுமா? என்றான்.

பரலோகத்துப் பிதா கண் திறந்துவிட்டார்.

நாம் வாசிக்கத் தொடங்கனோம். இப்றாகீம் என் வாயைப் பார்த்துக்கொண்டிருந்தான்.

ஆபிரகாம் மெசெப்பதேமியா நாட்டில் இருந்தபோது ஆண்டவர்  ஆபிரகாமுடன் ஒரு ஒப்பந்தம் செய்கிறார்.

ஆபிரகாமுக்கு சாரா என்று ஒரு மனைவியுண்டு. அவர்கள் இருவரும் ஆண்டவர் அவர்களுக்குக் கொடுப்பதாக வாக்களித்த கன்னானன் என்ற தேசத்தை நோக்கி நடக்கிறார்கள். அவர்களது பரிவாரங்களும், வேலைக்கார்களும், அடிமைகளும் அவர்களைத் தொடர்ந்து செல்கின்றன.

ஆபிரகாமிற்கும் சாராவிற்கும் குழந்தைகள் கிடைக்கவில்லை. எனவே சாராவின் எகிப்து நாட்டு அடிமையான காகர் என்பவரை ஏப்ரகாம் திருமணம் செய்கிறார். அவர்களுக்கு இஸ்மைல், ஈசாக் என இரண்டு ஆண் குழந்தைகள் கிடைக்கின்றன.

இஸ்லாம் மதம் இஸ்மைலினது சந்ததி என்றும், யுதமதமானது ஈசாக்கினது சந்ததி என்றும் கிறீஸ்தவமதத்தினர் ஆபிரகாமின் சந்தியினர் என்றும் இம்மதங்கள் கூறுகின்றன.

ஆக உலகின் முக்கிய மூன்று மதங்களின் ஏபிரகாமினது சந்ததிகளாக இருக்கிறார்கள் என்று வாசித்து முடித்து இப்றாகீமுக்கு புரியும் வகையில் விளங்கப்படுத்தினேன். புரிந்துகொண்டானா என்று கேள்வி கேட்டு நிட்சயப்படுத்தியும்கொண்டேன்.

அதன்பின்பு ஆபிரகாமுக்கும் ஆண்டவருக்கும் இடையிலான ஒப்பந்தம்பற்றி வாசித்தபோது அந்த ஒப்பந்தத்தின்படி ஆண்டவர் ஆபிரகாமினது சந்ததியின் கடவுளாகிறார். அவர்களுக்கு ஒரு நாட்டை தருவதாக உறுதிமொழி கொடுக்கிறார், அதற்குப்பதிலாக ஆபிரகாமும் அவரது சந்ததியினரும் அவர்களது ஆண் குழந்தைகளுக்கு சுன்னத்து செய்யவேண்டும் என்று ஒப்பந்தமாகிறது.

நோர்வே மொழியில் சுன்னத்து என்பதை omskjæring என்கிறார்கள். என்னருகில் இருந்த இப்றாகீமுக்கு இது புரியவில்லை.

சுன்னத்து (omskjæring) என்றால் என்ன என்றான் என்னருகில் இருந்த இப்றாகீம்.

அவனுக்கு 12 வயது. இவனுக்கும் சுன்னத்து செய்திருப்பார்கள் என்பது நிட்சயம். ஆனால் அவனுக்கு இதை எப்படி புரியவைப்பது?

படம் கீறிக் காண்பிக்கலாம் அல்லது Google இல் இருந்து ஏதேனும் வீடியோ காண்பிக்கலாம்.
ஆனால் பையன் சின்னவன். இது சற்று பலான விடயம்.

எப்படி புரியவைப்பது என்று யோசித்தபோது இப்றாகீம் மீண்டும் சுன்னத்து என்றால் என்ன என்றான் இரண்டாம் தடவையாக.

முதலில் படம் கீறிக் காண்பித்துப் பார்ப்போம் என்று நினைத்தேன்.

180 பாகையில் ஒரு 7 செ. மீ நீளக் கோடு கீறினேன்.

‘இப்றாகீம், இது penis’ என்றேன்.

சிதம்பர சக்கரத்தைப் பார்ப்பது போல அதைப்பார்த்து தலையை ஆட்டினான்.

கோட்டின்  6 செ. மீ தூரத்தில் மேலிருந்து கீழாக 90 பாகையில் ஒரு சிறுகோடு வரைந்து,  ‘இப்படி penis நுனியில் வெட்டுவார்கள்’ என்றேன்.

இப்றாகீமுக்கு எனது வரைபடம், ஒரு சிறிய சிலுவை சரிந்து விழுந்திருப்பது போன்று தெரிந்திருக்க வேண்டும்.
அவன் புரியவில்லை என்பதுபோன்று வாயைப் பிதுக்கிக் காண்பித்தான்.

மீண்டும் அதையே கீறிக் காண்பித்தேன். சற்று சிந்தித்தவன் penis என்றால் என்ன? என்று பெரியதொரு கேள்வியைக் கேட்டான்.

இனியும் எனது ஓவியத்திறமையை நம்பமுடியாது என்பதால் youtube க்குள் புகுந்து சுன்னத்து என்று  தேடினேன். பல பலான படங்கள் திரையில் தெரிந்தபோது இப்றாகீமின் கண்கள் ஆச்சர்யத்தால் விரிந்திருந்தன.

அவனது கண்கள் மேலும் விரிவடையமுன், ஒரு வீடியோவை இயக்கினேன். அதில் ஒரு சிறுவனுக்கு சுன்னத்து நடைபெற்றது.

அதைக் கண்ட இப்றாகீம் புரிந்தது புரிந்தது என்று தலையாட்டி தனக்கும் இது நடந்ததாகச் சொன்னான்.

அவனது கதையில் ஆழ்ந்திருந்தபோது youtube வீடியோ முடிந்து தானாகவே அடுத்த வீடியோ இயங்கியது. அதில் பலான விடயம் ஆரம்பித்ததை நான் கவனிக்கவில்லை. இப்றாகீமின் கவனம் கணிணியில் செல்வதை அவதானித்து திரும்பினேன். அய்யோ…

பாய்ந்து கணிணியின் திரையை மூடிவிட்டு அவனைப் பார்த்தேன். இப்றாகீம் அசட்டுத்தனமாய் சிரித்தான். நான் அதைவிட அசட்டுத்தனமாய் சிரித்தேன்.

அடுத்த சனிக்கிழமை ….  Oslo வாழ் தமிழர் ஒருவர் அர்மேனிய நாட்டிவர்களால் நயப்புடைக்கப்பட்டார் என்று செய்தி வந்தால்.. அது உண்மையாகவும் இருக்கலாம்.

வாத்தியாராக இருப்பது ஒன்றும் இலகுவல்ல.

ஒரு விதத்தில் இப்றாகீமில் எனக்கு பொறாமையாக இருக்கிறது. இந்தச் சிறிய வயதில் எத்தனை மதங்களையும் அவற்றின் வரலாற்றையும் அவன் கற்கிறான்.

எனது சமயக்கல்வி  “ஐந்து கரத்தனை யானை முகத்தனை” என்பதுடன் நின்றுபோனது ஒரு பெரும் வரலாற்றுச் சோகம்.