லோக அதிசயம்

எனக்கு அறிமுகமான ஒருத்தி இருக்கிறாள். அவளுக்கு 3 - 4 வயதிலிருந்தே நாம் Tom & Jerry ஆக விளையாடுவோம். இப்போது கிழவி நான்காம் வகுப்பில் படிக்கிறார்.
நேற்று ஒரு விழாவில் அவள் தோழிகள் புடைசூழ உட்கார்ந்திருந்தாள். அவளின் தோழிகளுக்கும் நான் தோழன்.
நான்கு கால்களுடன் அருகிற்சென்றதும், ”பரிதாபத்துக்குரிய சஞ்சயன் மாமா” என்று இந்நாட்டு மொழியில் அனுதாபித்து ஒரு கதிரையை இழுத்துப்போட்டாள்.
ஒரு பேரரசனைப்போல் உட்கார்ந்திருந்தேன். பேட்டி கண்டார்கள் என்னை. ஏன் கால் முறிந்தது என்பதை படம்கீறிப் புரியவைக்கவேண்டியிருந்தது.
அதன்பின் சீட்டுக்கட்டு விளையாடினோம். மனக்கணக்கு செய்தோம். விடுகதைகள் பரிமாறிக்கொண்டோம்.
அப்போது எனது தலைத் தடவி மயக்கும் அன்பான குரலில் “உனக்கு என்ன வேணும்“ என்றாள் அவள்.
நான் “தேனீர் எடுத்து வரமுடியுமா” என்று சொல்வதற்கு வாயைத்திறந்தேன்.
“இங்கே பாருங்கள், இவரின் தலையில் ஒரு முடி இருக்கிறது என்று மண்டபம் அதிரும்படியாகக் கூவினாள்.
சுற்றியிருந்து, மற்றையவரின் புடவையை கடைக்கண்கால் அளந்தபடி, ஊர் வம்பளந்துகொண்டிருந்த ”ஆன்டி, பாட்டி” மேசைகள் தங்கள் கதையை நிறுத்தி சத்தம்வந்த திசையை நோக்கினர்.
இவளோ அந்த முடியை இரண்டு விரல்களால் பிடித்திருக்க, சுற்றியிருந்து தோழிகள் “ எங்கே, எங்கே” என்று கேட்டபடி அந்த லோக அதிசயத்தை சுற்றியிருந்து, வாயைப்பிளந்தபடியே பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
அதிலொருத்தி “அது வெள்ளை மயிர்” என்ற பரமரகசியத்தையும் போட்டுடைத்தாள்.
“அதை பிடுங்கவா” என்ற அவர்களின் ஆசையை நிறைவேற்றினேன்.
உலகத்தில் மகிழ்ச்சி என்பது கொட்டிக்கிடக்கிறது. அதை கண்டெடுப்பதுதான் வாழ்க்கையாகிறதா?
இருக்கலாம்.

ஊனமறு நல்லழகே , வீரமடி நீ யெனக்கு

1989களில் வயோதிபர்களை பராமரிக்கும் ஒரு அரசநிறுவனமொன்றில் எனக்குத் தொழில். இரவுநேரங்களிலும் வேலை இருக்கும்.
சில வயோதிபர்களுக்கு இரவு என்பதே பகல், பகல் என்பதே இரவு. சிலர் இரவுநேரங்களை வெறுத்தனர். சிலர் அதற்காகவே காத்திருந்தனர். இரவுகளை வெறுத்தவர்கள் தூக்கமற்று புலம்பியபடியே இருளைத் திட்டியபடியே துயிலுக்காக் காத்திருக்க, இரவை கொண்டாடியவர்களோ விடியும்வரை நடந்தனர், ஆடினார்கள், பாடினார்கள் உலாச்சென்றார்கள், என்னை இருத்திவைத்து கதைசொன்னார்கள். இப்படியான இரவின் மனிதர்களை பார்க்கவரும் விருந்தினர்களும் இரவுநேரங்களிலேயே வந்துபோயினர். இருள் இந்த மனிதர்களுக்கு அன்பாளனாய் இருந்தது.
அங்கு ஒரு முதிய பெண் தங்கவைக்கப்பட்டிருந்தார். அவர் உடல் இயக்கமிழந்திருந்தது. முழங்கால்கள் மடிந்து தசைகள் இறுகிப்போயிருந்தன. சுள்ளிகளைப்போன்று மெலிந்த தேகம். எலும்புகள் துருத்திக்கொண்டிருக்கும். முகத்தில் மட்டும் சற்று உணர்விருந்தது. படுக்கைப்புண் ஏற்படாதிருக்க அவரை நாம் ஒரு நாளைக்கு பலதடவைகள் திருப்பி திருப்பி படுக்கவைக்கவேண்டும். மறுமுறை நாம் வரும்வரை அவர் அப்படியே படுத்திருப்பார். அவரால் உணவினை மென்று உண்ணமுடியாதாகையால், நீராகாரமே அவருக்குக் கொடுக்கப்பட்டது. அவ்வப்பொது அவரது கண்களில் தென்படும் ஒளியினையும் இருளினையும் வைத்தே அவரது மனநிலையை நான் அடையாளம் கண்டுகொண்டேன்.
உடல் உணர்வுகளை இழந்திருந்ததாலும் இயற்கை உபாதைகள் அவரது கட்டுப்பாட்டில் இருக்கவில்லை. உடல் கல்போன்று இறுகியிருப்பதால் சுத்தம்செய்வதும் அவருக்கும் சுத்தம் செய்பவருக்கும் பெரும் வேதனையையும் சிரமத்தையும் கொடுத்தது.
அவரைப் பார்ப்பதற்காக ஒரே ஒரு மனிதர் மட்டுமே வருவார். தினமும் இருமுறை வந்தார் அவர். அவருக்கு 85 வயதிருக்கலாம். அந்த வயதிற்கு திடகாத்திரமான உடம்பு. தும்புபோன்ற முடி. அழகாக உடுத்தி கைத்தடியுடன் வருவார். இரவில் அவர் வரும்போது நேரம் 11ஐ நெருங்கிக்கொண்டிருக்கும். பகலில் மதியம் 1மணிபோல் வருவார். குறைந்தது 2 மணிநேரம் அங்கு உட்கார்ந்திருப்பார்.
அந்தப் பெண்ணிற்கு தனியறை கொடுக்கப்பட்டிருந்தது. எம்மைக் கடக்கும்போது வணக்கம் என்பார். அறைக்குள் புகுந்தால் அவர் வெளியேறும் வரையில் எமக்கு அந்த அறையில் வேலை இருக்காது. அனைத்தையும் அவரே பார்த்துக்கொள்வார். மருந்து கொடுப்பது மட்டுமே எமக்கான வேலையாக இருந்தது.
நான் சில நேரங்களில் மருந்துகளுடன் அந்த அறைக்குள் சென்றிருக்கிறேன். அறை இருட்டாகவே இருக்கும். சாரளங்கள் இரண்டும் மூடப்பட்டு திரைச்சீலை இடப்பட்டிருக்கும். பகலில் அவர் வந்துதான் திரைச்சீலைகளை விலத்தி சாரளங்களை திறந்து ஒளியையும் காற்றையும் உள்ளே அழைப்பார். மற்றையவர்களுக்கு அந்த அனுமதி இருக்கவில்லை.
அவரது கட்டில் உயரமானது. நான்கு பக்கமும் சிறியதொரு தடுப்புக்களும், அதற்கேற்ற உயரத்தில் அவருக்கான இருக்கையும் அங்கிருந்தது.
அறைக்குள் வந்ததும், “வந்துவிட்டேன்” என்றபடியே குனிந்து அப்பெண்ணின் நெற்றியில் முத்தமிடுவார். அப்பெண்ணின் கண்கள் மிளிரும்.
கலைந்திருக்கும் முடியினை மிகக் கவனமாக நீவியெடுத்து காதின்பின்புறமாய் சொருகியும், தலையின் பின்புறத்திற்கு நகர்த்தியும் விடுவார். பெண்ணின் முகம் உயிர்த்திருக்கும். புன்னகைக்காமலும் முகத்தில் மகிழ்ச்சியைக் காண்பிக்க முடியுமல்லவா.
காலையும் மாலையும் அப்பெண்ணிற்கு தலை சீவி அலங்காரமும் செய்வது அவரது வேலை. விறைத்து, வறண்டு, முடங்கியிருக்கும் கால்களுக்கு எண்ணை பூசி, பாதங்களை அமத்தியபடியே அவருடன் உரையாடுவார். பதில் ஏதும் வரவேண்டும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதில்லை அவ்வுரையாடல்களில். பழைய சம்பவங்களை விபரிப்பார். அவரே சிரிப்பார். மீண்டும் உரையாடல் தொடரும்.
கை, கால் நகங்களை வெட்டி, நிறமிட்டு, உதட்டுச்சாயமிட்டு, அழகிய தலைச்சோடனைகளிட்டபின்பு கண்ணாடியொன்றைக் கொணர்ந்து அப்பெண்ணிற்கு முன்னால் காண்பிப்பார். அந்நேரங்களில் பெண்ணின் கண்களில் கண்ணீர் வழியும். அன்பாய் ஒரு துணியினால் கண்ணீரை ஒற்றியெடுப்பார்.
ஒரு இளவேனிற்கால மதியம், அப்பெண்ணை வெளியே அழைத்துச்செல்ல அனுமதிகேட்டார். அவரால் உட்கார்ந்திருக்க முடியாது என்ற நிர்வாகியிடம், கட்டிலுக்கு சில்லுகள் உண்டு. வெளியே தார் இடப்பட்ட பாதை. எனவே சற்றுநேரம் அனுமதியுங்கள் என்றார். அனுமதி கிடைத்தது.
எமது நிறுவனத்தைச் சுற்றியிருந்த பாதையில் சற்றுநேரம் கட்டிலை தள்ளிச்சென்று நிறுத்தி அவர் கொண்டுசென்ற உணவினை அப்பெண்ணுக்கு ஊட்டி, தானும் உண்டு மகிழ்ந்தார். அன்று மாலையும் கட்டில் ஊர்வலம் சென்று வந்தது.
ஒரு பனிக்காலத்து நாள் காலை அப்பெண் நிரந்தமாய் துயிலுற்றபோது முதலில் வந்தவரும் அவரே. பலர் வந்தார்கள். சென்றார்கள். அந்நேரத்திலும் அமைதியாய் அறைக்கு வெளியே நின்றிருந்ததைக் கண்டேன். எவருடனும் அவர் உரையாடவில்லை. ஒருவரைத் தவிர ஏனையவர்களும் அவரைக் கண்டுகொள்ளவில்லை.
வேறு இடத்தில் இருந்து அன்று மாலை வந்த அப்பெண்ணின் மகன் மட்டும் இவரைக் கட்டியணைத்து முதுகில் தடவி ஆறுதல் சொன்னார். அப்போது அவர் குழந்தைபோன்று விம்மி விம்மி அழுதார். மகன் அழுதபோது அவனை இவர் அணைத்திருந்தார்.
காரியங்கள் முடிந்தபின் எமது நிறுவனத்திற்கு ஒரு பெரும் ரோஜா பூஞ்செண்டுடன் வந்து அப்பெண்ணினை பராமரித்த அனைவருக்கும் தனிப்பட நன்றி சொல்லிப்போனார். எனது கையையும்பற்றி நன்றி என்றார். அவரது வார்த்தைகளின் உண்மைத்தன்மையை அவரது கண்களில் காணக்கிடைத்த்து.
அன்று இரவு, நிர்வாகியிடம் “மிகவும் வித்தியாசமான கணவர் இவர், இப்படியானவர்களும் இருக்கிறார்களே” என்ற என்னைப் பார்த்து நிர்வாகி “அது அப்பெண்ணின் கணவரல்ல, பெண்ணின் குழந்தையின் தகப்பனும் அல்ல, நெருங்கிய உறவினருமல்ல” என்றுவிட்டு மௌனித்துவிட்டு அவரே தொடர்ந்தார்.
“அப்பெண்ணின் கணவர் இறந்து 3 வருடங்கள் இருக்கும். அப்பெண் இங்கு வந்து 7 வருடங்கள் இருக்கலாம். கடந்த 7 வருடங்களிலும் இவர் இங்கு வராத நாளே இல்லை எனலாம். அப்பெண் மிக வலியான திருமணவாழ்க்கையைக் கடந்தவர். கணவர் இங்கு வந்ததே இல்லை. அப்பெண்ணின் குடும்பத்தில் மகனுக்கு மட்டுமே தெரிந்த உறவு இது” என்றார்.
பல நாட்களாய், நாமிருந்த அறையில் அவர் தந்துபோன ரோஜாக்களின் வாசனையிருந்துகொண்டேயிருந்தது.

பூலான்தேவியின் லிப்ஸ்டிக்

இன்று ஒஸ்லோவில் கடும் வெய்யில். நானே சற்றுக் கருகிவிட்டேன் என்றால் பாருங்களேன்.
நண்பரின் குடும்பத்துடன் ராஜேஸ்வைத்தியாவின் இசைநிகழ்வுக்கு சென்றுகொண்டிருந்தேன்.
கால் முறிந்து நாலுகாலாகிவிட்ட எனக்கு முன் இருக்கை. பின்னால் ஒரு பதின்ம வயதுப் பூலான்தேவியுடன் நண்பரின் பூலாந்தேவியும், ஒரு 6 வயதுக் கொள்ளைக்காரனும் உட்கார்ந்திருந்தார்கள்.
வாகனம் காற்றைக் கிழித்துக்கொண்டிருந்தது. நண்பருக்கு ஐஸ்கிறீம் தாகமெடுத்தது. என்னிடம் சைகையால் கேட்டார். நான் கண்களால் சம்மதித்து புன்னகைத்தேன்.
வாகனத்தை வீதியருகே இருந்த எரிபொருள் நிரப்பும் நிலையத்தினுள் நிறுத்தி, 5 ஐஸ்கிறீம்களுடன் வந்தார், நண்பர்.
'ஏனப்பா 5 வாங்கினீங்க' என்றார் நண்பரின் பூலான்தேவிகுரல் சூடாக இருந்தது.
'உனக்கு, மகளுக்கு, மகனுக்கு, இந்த நாலுகால் மனிசனுக்கு, எனக்கு' என்றார் நண்பர், அப்பவியாய்.
'எனக்கு வேணாம்' என்றாள் பதின்மவயதுப் பயஙகரவாதி அலட்சியமான குரலில்.
'ஏன்?' என்றார் நண்பர் கடுப்பான குரலில்.
'லிப்ஸ்டிக் அழிந்துவிடும்' என்றாள் அவள்.
நண்பரின் கடுப்பு ஆத்திரமாக மாற, அவர் பல்லை நெருமிக்கொண்டு 'உனக்கென்ன பிரச்சனை?' என்றார் தனது பூலான்தேவியிடம்.
அவர் அங்கும் இங்கும் பார்த்தபடியே முழுசினார். நண்பரின் ஆத்திரம் எல்லை கடந்தது. ..... ..... (தணிக்கை)
பயந்துபோன பூலான்தேவி பயந்து பயந்து இப்படிச் சொன்னார்.
'லிப்ஸ்டிக்'
டேய், எனக்கும் சின்னவனுக்கும் இரண்டு இரண்டு ஐஸ்கிறீம். உனக்கு ஒன்று என்று பிரச்சனையைத் தீர்த்தேன், நான்.
மாமா, give me five என்றான் கொள்ளைக்காரன்.
'செத்த கிளிக்கு கூடு எதற்கு' என்று நண்பன் கூறிய திருக்குறள், பூலான் தேவியின் காதில் விழாதிருந்திருக்கக்கடவதாக.
நண்பன் சொந்த வீட்டில் அகதியாகாமல் இருக்க என்னப்பன் ஒஸ்லோ முருகன் அருள்புரியவேண்டும்.

குழந்தையுலகப் பரவசங்கள்

பல வருடங்களின் பின் ஒரு கைக்குழந்தையைத் தூக்கும் பாக்கியம் அண்மையில் வாய்த்தது.
பெண்குழந்தைகளிடத்தில் வார்த்தைகளால் கூறிவிடமுடியாத அன்பிலான ஈர்ப்பு இருப்பதாய் உணர்பவன் நான். சலனமற்ற, ஆழமற்ற சிற்றாற்றில் ஆறுதலாக, தன்பாட்டில் வழிந்தோடும் நீரோட்டத்தின் பாதுகாப்புணர்வு போன்ற அவர்களது பார்வையில் எப்போதும் அன்பு உயிர்த்திருப்பதைக் கண்டிருக்கிறேன். அவர்கள் அருகிலிருக்கும்போது மனம் உணரும் அமைதியையும், பாதுகாப்புணர்வையும் பிரக்ஞை பூர்வமாக உணர்ந்துபார்த்தால் மட்டுமே அவற்றின் ஆழத்தை உணரமுடியும்.
ஆண்குழந்தைகளிடத்தில் எப்போதும் எறும்புகளைப் போன்றதொரு அவசரம் இருக்கும். அடுத்த கணத்திற்குள் உலகை ஆராய்ந்து முடித்துவிடவேண்டும் என்ற பரபரப்பான அவரசம் அது. காத்திருப்பது என்பது அவர்களைப்பொறுத்தவரையில் அர்த்தமற்றது. அவர்கள் சுற்றாடலும் பரபரப்பாகவே இருக்கும்.
பெண்குழந்தைகளிடத்தில் இந்தப் பரபரப்பு இல்லை. அவர்களுக்கு வேண்டியளவு நேரமிருக்கிறது. நேரத்தை மறந்தவர்கள் அவர்கள்.
ஆண்குழந்தைகளின் அருகாமையில் குறும்புத்தனம் செய்யவே மனம் விரும்பும். ஆனால் பெண்குழந்தைகளிடத்தில் அமைதியாய் உட்கார்ந்திருந்து, அவர்களுடன் உரையாடி, அவர்களின் ஆயிரம் கேள்விகளுக்கு அவர்களின் புரிதலுக்குட்பட்ட வகையில் பதிலளித்து, சிரித்து விளையாடும்போது காற்றில் சருகாய் உணரும், மனம்.. அற்புதமான தாலாட்டுணர்வு அது.
குழந்தை உலகத்தின் வாசல், நம்பிக்கையுணர்வு. அது பாதுகாப்புணர்வின் அடிப்படையில் மிக மிக நுண்ணிய அவதானங்களைக் கொண்டு உருவாக்கப்படுவது.
குழந்தைகளின் நம்பிக்கையைப்பெற்றவர்களுடனான உரையாடல்களில் நெகிழ்ச்சி, அருகாமை, சிரிப்பு, அழுகை, கோபம் அனைத்திலும் எல்லை கடந்த பாதுகாப்புணர்வு இருக்கும். ஆனால் நம்பிக்கையற்ற மனிதர்களுடனான அவர்களின் உரையாடல்கள் சடங்குகளைப்போன்ற செயற்கைத்தன்மையும் மன இடைவெளியும் உடையவை.
எனது சிறுவயது முதலே குழந்தைகள் என்றால் பெரும் பிரியம் இருக்கிறது. எனது பேரதிஸ்டம் அவர்களுக்கும் என்னை பிடித்துப்போகிறது. என்னவென்று இத்தனை குழந்தைகளையும் வசீகரிக்கிறாய் என்பார்கள், நண்பர்கள். நான் அவர்களை வசீகரிக்கவில்லை. வசீகரீக்கப்பட்டிருக்கிறேன். அவ்வளவே.
குழந்தைகளின் உலகத்தில் முட்டாளாய் இருப்பது அறிஞர்கள் அவையில் உட்கார்வதிலும் பெருமையானது, உயிர்ப்பானது.
குழந்தைகளிடத்தில் பேசுவதற்கு எவ்வளவோ இருக்கிறது. அதிலும் பெண்குழந்தைகளிடத்தில் ஆயிரம் கதை இருக்கும். அவர்களின் கதையுலகினுள் புகுந்து அங்கு வாழ்ந்துபாருங்கள். வாழ்வின் அயர்ச்சிகளை கணப்பொழுதில் நீக்கும் கதைகள் அவை.
அன்றொரு நாள் ஒருத்தியுடன் உரையாடிக்கொண்டிருந்தேன். அன்றுதான் முதன் முதலில் சந்தித்தோம். “ஒரு இரகசியம் சொல்கிறேன்” என்றுவிட்டு “அம்மாவின் வயிற்றுக்குள் ஒரு தங்கை இருக்கிறாள்” என்றாள். அவளது அப்பனிடம் ” வாழ்த்துக்கள்” என்றபோது ஆச்சர்யப்பட்டார். வைத்தியருக்கும், தனக்கும், மனைவிக்கும் மட்டும் தெரிந்த இரகசியம் எப்படி எனக்குத் தெரிந்தது என்று அவருக்குப் புரியவில்லை. நானும் இரகசியம் காத்தேன்.
கடந்த சனிக்கிழமை நிகழ்வின் இடைவேளையில் ஒன்பதே மாதமான மகளுடன் வந்த நண்பரிடமிருந்து அவளை வாங்கிக்கொண்டேன். கவனமாகப் பிடித்துக்கொள்ளவேண்டும் என்றது உள்மனது. இரண்டு கைகள் நிறைய பூக்களை அள்ளிக்கொள்வதுபோன்ற மெதுமையுடன் எனது கைகளுக்குள் ஏந்திக்கொண்டேன். மனது சுற்றியிருந்த உலகை மறந்துபோனது.
மென்மையான, பட்டுப்போன்ற, குளிர்மையான, உறுதிகொள்ளாத தேகம். உந்தி உதைக்கும் பிஞ்சுக் கால்கள். தலைக்கு பாதுகாப்பாக ஒரு கையை பிடித்துக்கொண்டேன். கண்களில் “யார் இது” என்ற கேள்வியுடன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தாள். அவளை ஏந்திக்கொண்டபின் நான் நெகழ்ந்துபோயிருந்தேன்.
மெதுவாய் முட்டு முட்டு என்று முட்டினேன். முகத்தில் இருந்த கேள்வி மறைந்து புன்னகை தெரிந்தது. உயர்த்திப் பிடித்தபோது முகத்தில் சிரிப்பு வந்தது. வயிற்றில் கொஞ்சினேன். அவ்வளவுதான். நாம் நண்பர்களானோம். பிஞ்சுக்கைகளினால் காதைப்பிடித்து இழுத்தாள். முகத்தில் தட்டினாள், கால்களால் உதைத்து உன்னினாள். நான் தாலாட்டப்பட்டுக்கொண்டிருந்தேன்.
ஒரு கொட்டாவியின் பின் மார்பில் சாய்ந்து கொண்டாள். நான் பாடலொன்றை முணுமுணுக்கத்தொடங்கினேன். எனக்குத் தெரிந்த ஒரே ஒரு பாடல் அதுதான். 1996ம் ஆண்டு முதன் முதலாய் தந்தையானபோது தானாவே உருவாகிக்கொண்ட பாட்டு அது. இளையமகளுக்கு மிகவும் பிடித்த பாட்டு. இன்றும் அவள் என்னை அப்பாட்டுக்காக கேலி செய்வாள்.
அப்பாட்டில் அதிக வசனங்கள் ஏதும் இல்லை. ”அப்பாட செல்லம், அக்காட செல்லம், அப்பம்மாவின் செல்லம்” என்று குழந்தைக்கு தெரிந்த அனைவரையும் பாட்டுக்குள் இழுத்துவருவேன். அவ்வளவுதான்.
எனது பாடலில் குழந்தை மிரண்டதோ என்னவோ எழுந்து உட்கார்ந்து என்னுடன் உரையாடத்தொடங்கினாள். மொழியற்ற ஆனால் பரஸ்பரம் புரிந்த ஒரு உரையாடல் அது.
இடையிடையே அவளது முகம் எனது முகத்துடன் மோதியபோது என்னை ஆசீர்வதிப்பதுபோன்று சிரித்தாள்.
Navaratnam Paraneetharan வந்து மகளை வாங்கிக்கொண்டார். பரணியில் பொறாமையாக இருந்தது.

நிலவே என்னிடம் நெருங்காதே நீ நினைக்கும் இடத்தில் நானில்லை

நோர்வேயின் பட்மின்டன் விளையாட்டுக்கான பாராளுமன்றக் கூட்டம் என்று கருதப்படும் சந்திப்பில் உட்கார்ந்திருக்கிறேன்.
வெளியே கடும் வெய்யில். எனவே சாரளங்களை மூடிவிட்டிருக்கிறார்கள்.
எனக்கு முன்னே உள்ள இருக்கையில் ஒரு வயதான பெரியவர் இருக்கிறார். வெய்யிலுக்கு ஏற்றவாறு காற்சட்டை, டீ சேட் உடன் ரகுவரனின் உயரத்தில் அவர் நடக்கும்போது இராணுவ அதிகாரிபோன்று தோன்றுகிறார். அடிக்கடி தேனீர் குடிக்கிறார். பழங்களை விழுங்குகிறார் கிடைக்கும் உணவுகளை வயிற்றினுள் எதுவித சங்கடமுமின்றி இறக்கிக்கொள்கிறார். அடிக்கடி எனது தலையைப்போன்ற அவரது தலையைச் சொறிந்தும்கொள்கிறார்.
அடிக்கடி கதிரையை சற்று பின்னே தள்ளி வசதியாக இருக்கிறார். அவர் கதிரையைத் தள்ளும்போதெல்லாம் எனக்கு அருகில் வருவது தவிர்க்கமுடியாததாகிறது.
இதெல்லாம் ஒரு பிரச்சனையே இல்லை.
ஆனால் 5 நிமிடத்திற்கு ஒருதடவை வலது பக்கமாக சரிந்து இடது பிட்டத்தை உயர்த்தி ...... பிர்ர்ர்ர்ர் என்ற பேரோலியுடன் காற்றை அசுத்துப்படுத்துகிறார். நேரே பின்னால் இருக்கும் இந்த அப்பாவியின் முகத்திலடிக்கிறது அக்காற்றும் அதன் வாசனையும்.
இதையும் தாங்கிக்கொள்ளலாம்.
பிட்டத்தை மீண்டும் கதிரைையில் பாதுகாப்பாக வைத்து சமப்படுத்திக்கொண்டபின், மெதுவாய் என்பக்கமாய்த் திரும்பி “தெய்வீகமாய் புன்னகைத்து, கண்ணைச் சிமிட்டுவதைத்”தான் என்னால் தாங்கிக்கொள்ள முடியாதிருக்கிறது.
பாவி போகும் இடமெல்லாம் பள்ளமும் திட்டியாயுமாய் இருக்கிறதே.

கிழக்கின் சமர்க்களத்தில் தங்கிவிட்ட மனது

மட்டக்களப்பு நகரத்தினுள் இரண்டு ஆண்கள் பாடசாலைகள் உண்டு. ஒன்று புனித மைக்கல் கல்லூரி மற்றையது எங்கள் மெதடிஸ்ற் மத்திய கல்லூரி.
புனித மைக்கல் கல்லூரியின் வணக்கத்துக்குரிய பிதா வெபர் அவர்களின் பெயரையே மட்டக்களப்பின் விளையாட்டுமைதானத்திற்கு வைத்திருக்கிறார்கள். இதைவிட வேறென்ன பெருமையை எம்மால் அவருக்குக் கொடுத்திட முடியும்?
70 களிலும் 80களிலும் வெள்ளையுடுத்திய அந்தப் பெருமனிதரைக் கண்டிருக்கிறேன்.
Rev. Father Harold John Weber S.J அமெரிக்காவில் உள்ள New Orleans, Louisiana என்னும் இடத்தில் பிறந்து 1947இல் மட்டக்களப்புக்கு இடம்பெயர்ந்து 50 ஆண்டுகள் புனித மைக்கல் கல்லூரியில் கடமையாற்றியவர்.
19.4.1998 அன்று அவர் இறந்தபோது நடைபெற்ற இறுதிஊர்வலத்தைப்போன்றதொரு ஊர்வலத்தை மட்டக்களப்பு கண்டதில்லை. அத்தனை பிரபலமானவர் அவர்.
நாம் முத்தவெளியில் (வெபர் அரங்கில்) காற்பந்தாடிய நாட்களில் ஒரு முஸ்லீம் மாணவரை தினமும் 800 மீற்றர் ஓடுவதற்கு பயிற்றுவிப்பார். அக்காட்சி இன்றும் என் நினைவுகளில் உண்டு. பின்னாட்களில் அம்மாணவன் இலங்கையின் முன்னணி வீரனாக வந்தார் என்றே நினைவிருக்கிறது.
Basketball இல் புனித மைக்கல் கல்லூரியை கொடிகட்டிப்பறக்க வைத்தவர் Rev.Fr.Eugene Hebert S.J. இவருக்கு Rev. Fr. Basketball என்று இன்னொரு பிரபலமான பெயரும் உண்டு.
70களின் நடுப்பகுதியிலும் 80 முதற்பகுதியிலும் மெய்வல்லுனர்போட்டிகளிலும் நாம் புனிதமைக்கல் கல்லூரியை வெற்றிகொள்வதைவிட அவர்களே எம்மை வெற்றிகொண்டார்கள். காற்பந்தாட்டத்திலும் அப்படியே. அக்காலத்தில் கிறிக்கட்போட்டிகள் குறைவாகவே நடைபெற்றன.
விளையாட்டு என்று வந்துவிட்டால் எமக்கு முன்னணி எதிரிகளாக இருப்பது இவர்களே. இது மனதில் படிந்துபோய்விட்ட விடயம். இப்போதும் அப்படியே.
இதை மறைக்கவேண்டிய அவசியம் என்ன இருக்கிறது? நான் எப்போதும் மெதடிஸ்ற்மத்திய கல்லூரியின் மாணவனே. அதிலும் பிரின்ஸ் காசிநாதரின் சந்ததி என்ற தலைக்கேறிய பெருமை எனக்குண்டு.
மற்றைய உலக நாடுகளுடன் ஒப்பிடும்போது பாடசாலைகளுக்கும் இலங்கைவாழ் தமிழர்களுக்கும் இடையே, உலகத்தில் எங்குமே இல்லாத ஒரு ஆத்மார்த்தமான பிணைப்பு உண்டு என்பதை அவதானித்திருக்கிறீர்களா?
'எமது பாடசாலை' என்றவுடன் வாழ்க்கையின் அயர்ச்சியில் இருந்து மீண்டு உயிர்ந்து எழும் பழையமாணவர்கள் எத்தனை எத்தனை. இதற்கான காரணம் என்ன?
பதில் தேவையற்ற கேள்விகளில் இதுவுமொன்று.
நாம் புலம்பெயர்ந்து வந்தபோது பாடசாலைகளையும் பெயர்த்துக்கொண்டு வந்திருக்கிறோம். வருடாந்தம் எமது பாடசாலைகளின் பழையமாணவர்கள் காற்பந்து, கிறிக்கற் என்று மோதிக்கொள்கிறார்கள். 40, 50, 60 வயதுகளிலும் தூக்கமுடியாத உடலைக் காவியோடி, வாயாலும் மூக்காலும் புகைதள்ளியபடி, இதோ நான் விழுந்து சாகப்போகிறேன் என்ற நிலையிலும் வேர்த்து விறுவிறுத்து, பாடசாலைக்காய் உயிரைக்கொடுத்து, ஓர்மத்துடன் விளையாடுபவர்களைக் கண்டிருக்கிறேன். நானும் விளையாடியிருக்கிறேன். தோல்விகளின் வலி அந்நாட்களைவிட இப்போதுதான் அதிகமாக இருக்கிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.
இன, மத, மொழிவேறுபாடுகளைக்கடந்து மாணவர்களும் பாடசாலையென்றவுடன் ஓரணியில் நிற்கும் விந்தையென்ன? எது எம்மை இவ்வாறு பிணைத்துப்போடுகிறது?
காலம், பல நாட்டவர்களைச் சந்திக்கும், அவர்களுடன் பழக்கும் சந்தர்ப்பத்தைத் எனக்குத் தந்தருக்கிறது. அவர்களிடம் இதைக்கேட்டிருக்கிறேன். இதிலென்ன இருக்கிறது. அது பாடசாலை. அக்காலம் முடிந்துவிட்டது என்று மிகச் சாதாரணமாக்க கூறுவார்கள். எனக்கு நெஞ்சு வலிக்கும்.
ஊருக்குள் வரும்போதெல்லாம் எனது பாடசாலையினுள் நடப்பது, நான் வாழ்ந்தலைந்த கட்டங்களைத் தொட்டுணர்வது, எங்காவது எங்கள் நினைவுச்சின்னங்களைக் காணும்போது என் ஆத்மா மகிழ்வதும், தாயின் அரவணைப்பில் இருப்பதைப்போன்ற உணர்வுகளையும், வாழ்க்கையின் வலிகளையும் செப்பனிடும் உணர்வையும் தரவல்லது.
பேராசான்களை தேடிச்சென்று, அருகமர்ந்து உரையாடி, நினைவாடி, உயிர்த்துத் திரும்பும் நாட்கள் வாழ்வின் முக்கிய நாட்களாகிவிடுகின்றன.
அறிமுகமில்லாத ஒரு மனிதக் கூட்டத்தில் அல்லாடும்போது “நானும் மட்டக்களப்பு சென்றலில் படித்தவன்” என்பவருடன் பிணைப்பும், பாதுகாப்புணர்வும் ஏற்படுகிறதே, ஏன்? எப்படி?
இப்படியான உணர்வுகளுடன் வாழ்ந்துகொண்டிருக்கும் எனக்கு Big match காய்ச்சல் வருடத்தில் ஒருதடவை வரும்.
இவ்வாரத்தின் சனிக்கிழைமையும் ஞாயிற்றுக்கிழமையும் அக்காய்ச்சல் தூக்கியடித்தது.
போர்க்காலத்தில் நண்பர்களின் கடிதங்கள் மூலமாகவே ஊரில் நடப்பவை தெரியவரும்.
பின்பு தொலைபேசி அழைப்பு போதுமாய் இருந்தது.
கைத்தொலைபேசி வந்ததும் குறுஞ்செய்தி நேரஞ்சல் தகவல்களை அறிவித்தது.
இப்போது பழைய மாணவர்கள் பாடசாலைக்கான மீடியா குழுமம் ஆரம்பித்து நேரஞ்சல் செய்கிறார்கள். காலைக்கடன்களைக் கழித்தபடியே விக்கட் விழுந்ததும் ஆர்ப்பாரிக்க முடிகிறது.
நேற்று, ஒரு பவுன்டறி (4) ஓட்டத்தினை சற்று ஆர்ப்பாட்டமாகக் கொண்டாடினேன். சுரங்க ரயிலில் இருந்தவர்கள் என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தார்கள். ‘கழுதைக்குத் தெரியுமா கற்பூரவாசனை?’
இவ்வாரத்தின் சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் பட்மின்டன் சம்மேளனத்தின் நோர்வே தழுவிய கூட்டமொன்றில் பங்குபற்ற வேண்டியிருக்கிறது. அவ்வப்போது நேரஞ்சலையும், மெசேஞ்சரையும் பார்த்துக்கொண்டிருந்தேன்.
நேரஞ்சல் தடைப்பட்டால் நெஞ்சு அடித்துக்கொள்கிறது. நண்பர்களுக்கு செய்தி அனுப்பிக்கேட்கிறேன். பதட்டப்படுகிறேன். நகம் கடிக்கிறேன். எழுந்து அங்கும் இங்கும் நடக்கிறேன். மீண்டும் நேரஞ்சல் ஆரம்பிக்கும்வரை நிம்மதியற்றுப்போகிறது.
ஆனால், இவைதான் வாழ்வின் உச்சக்கணங்கள் என்று நினைக்கத்தொன்றுகிறது. எத்தனை கோடிகளைக் கொட்டிக்கொடுத்தாலும் ,இவ்வனுபவங்களைப் பெறமுடியாதல்லவா?
2010ம் ஆண்டு நடைபெற்ற மிகவும் விறுவிறுப்பான போட்டியில் நாம் தோற்றதுபற்றி ஒரு பதிவு எழுதியிருந்தேன். எனக்கு எழுத்து மனதை ஆற்றும் தோழன். இன்றும் அப்படியே.
கடந்த ஆண்டுகளில் எங்கள் பாடசாலை மாணவர்களும் பழையமாணவர் சங்கமும் உயிர்ப்புடன் இயங்குவதால் நாம் பல வெற்றிகளைப் பெற்றிருக்கிறோம்.
நேற்று முதலில் பந்தெடுத்தாடிய புனித மைக்கல் கல்லூரி 98 ஓட்டங்களுக்கு சகல ஆட்டவீரர்களையும் இழந்தபின் ஆடிய எம்மவர்கள் 200 கடந்தபின் இன்று ஆட்டத்தைக் கைமாற்றிக்கொடுத்தார்கள். இருப்பினும் புனித மைக்கல் கல்லூரியினர் மிகவும் சிறப்பாக விளையாடி வெற்றிதோல்வியற்ற சமநிலையில் போட்டியை முடித்தனர்.
போட்டிகளைப்போன்றே போட்டிகளின் பின்னான உரையாடல்கள் சுவராஸ்யமானவை. சிலர் இது எமக்கு தோல்வி என்றனர். சிலர் போட்டியின் உத்திகளை மாற்றி விளையாடியிருக்கலாம் என்றனர். இன்னும் பல வாரங்களுக்கு இது உரையாடி அலசி ஆராய்ந்து, மனங்களை ஆற்றிக்கொள்வோம். இப்படியான big match களின் பின்புலத்திலுள்ள தத்துவமே இவைதானே. தோல்விகளும், வெற்றிகளும் எம்மை இணைக்கின்றன.
எத்தனையாண்டுகள் புலம்பெயர்ந்திருப்பினும் மனதுக்கு மிக நெருக்கமான இப்படியான நாட்களைப்போன்ற உயிர்ப்பான நாட்களை இங்குள்ள வாழ்க்கை தருவதில்லை.
இதேபோலத்தான் இங்குள்ள பலர், தங்கள் ஊர்களில் உள்ள பாடசாலைகள், சங்கங்கள், விளையாட்டுக்கழகங்களில் உயிரையே வைத்திருக்கிறார்கள். அவற்றிற்காக இங்கிருந்து இயங்குகிறார்கள்.
எனது புலப்பெயர்வு என்பதானது மனரீதியாக நடைபெறவில்லை என்பதை உணரத்தலைப்பட்டிருக்கிறேன். 20 வருடத்து வாழ்க்கை தரும் உயிர்ப்பான அனுபவங்களை 30 வருட வாழ்க்கையனுபவம் தரவில்லை. நான் புலம்பெயர்ந்தபோது மனம் புனிதப்பூமியிலேயே தங்கிவிட்டது என்பதுதான் இதன் காரணமா?

பீரங்கி வாசலில் வீடு கட்டுவது எப்படி?

எனக்கு சஹீர் என்று ஒரு நண்பர் இங்கு இருக்கிறார். மனிதர் ஒரு வைத்தியக்கலாநிதி.
மச்சானை அவர் மச்சாங் என்றும், கதிரையை புட்டுவம் என்றும் சிங்களத்தமிழில் உச்சரிப்பார்.
அவர் படித்தது சிங்கள மொழியில். அவரது தமிழால் அவர் எம்மிடம் படும்பாடு கொஞ்ச நஞ்சமல்ல.
இன்று எங்கள் பாடசாலையில் கோடைகாலத்திற்காக மகிழ் நாள். அவர் எங்கள் பாடசாலையின் இயக்குனர். எனவே அவரை இன்று சந்திக்கவேண்டும்.
சுரங்க ரயிலால் இறங்கி மெதுவாக நடந்து காலநிலையை ரசித்தபடி ஒரு கல்லில் உட்கார்ந்திருந்தேன்.
மகிழ் நிகழ்வு ஆரம்பிக்க ஒரு மணிநேரம் இருந்தது. எனவே, எனது துரோணரின் 'பதின்' வாசித்துக்கொண்டிருந்தேன்.
எனக்குப் பின்னால் உஷ் உஷ் என்று சத்தம் கேட்டது. திரும்பிப் பார்த்தேன் ஒரு நோர்வேஜியர் என்னை நோக்கி வந்துகொண்டிருந்தார்.
வந்தவரே ஆரம்பித்தார்.
'நீங்கள்தானா சஹீர்?'
'இல்லை, அவரைத் தெரியும்' 'சற்றுப்பொறுப்பீர்களானால் அவரைச் சந்திகலாம்' என்றேன்.
கல்லில் உட்கார்ந்துகொண்டார்.
ட்ரம்ப்பற்றி தனது கருத்தைச் சொன்னார். நான் வாயைத் திறக்கவே இல்லை.
நேற்று காற்பந்தாட்டம் பார்த்தாயா என்றபோது இல்லை என்றேன்.
அவர் கோடையில் மலையேறிச் சென்று மீன்பிடிப்பவர் என்றார்.
இதுவரை அவர் பிடித்த மீன்களின் படங்களைக் காண்பித்தார்.
அவரது நாயும் ஒரு வேட்டைநாய். படத்தில் நாயின் நாக்கு வெளியே விழுந்துவிடுவதுபோன்று தொங்கிக்கொண்டிருந்தது. ஆனால், இவர் வாயை மூடியிருந்தார்.
நேரம் ஓடிககொண்டிருந்தது. அரை மணிநேரமாகியபின்பும் அவர் பேச்சை நிறுத்துவதாயில்லை.
எனக்கு எப்போ சஹீர் வந்து காப்பாற்றுவார் என்றிருந்தது. சஹீருக்கு தொலைபேசினேன். அரைமணிநேரத்தில் வருவேன் என்று வயிற்றில் புளியைக் கரைத்தார்.
அப்போது அவரே 'உங்கள் நண்பர் சஹீரும் மீன்பிடிப்பாரா' என்று கேட்டார்.
எனக்குள் இருந்த சினம் 'அவர் மீன்பிடிப்பாரோ தெரியாது ஆனால் மீன் மீனாக விழுங்குவார்' என்றபோது, இல்லை அவர் மீன்பிடிப்பார் என்று உறுதியான குரலில் கூறினார்.
'அவர், என்னைவிட மகா சோம்பேறி, மீன் பிடிக்கவே மாட்டார்' என்றபோது, “இங்கே பார், நான் விற்பனைக்காக இணையத்தில் பதிந்திருந்த மீன்பிடி உபகரணங்களை வாங்கப்போகிறார்” என்று கூறி சஹீர் அனுப்பிய மின்னஞ்சலைக் காண்பித்தார்.
அதில் மின்னஞ்சலை அனுப்பியவர் சஹீர் காலீட் என்றிருந்தது.
எங்கள் சஹீர்இன் தகப்பனாரின் பெயர் புகாரி.
பீரங்கி வாசலில் வீடு கட்டுவது என்பது இதுதான்.

பாவிகளின் பரியாரியார்கள்

எனது கால் முறிந்து ஒரு மாதமாகிறது. சந்திர மண்டலத்தில் நடமாடும் மனிதர்களின் காலணியென்றைப்போன்ற மிக மொத்தமான, உயரமான, பிளாஸ்டிக் காலுடன் நடமாடித்திரிகிறேன். காண்பவர்களின் கண்களில் நான் தென்படுகிறேனோ இல்லையோ கால் தென்பட்டுவிடுகிறது.

எனக்குப் பல குழந்தைகளைப் பழக்கம். அவர்கள் எனது காலைப்பார்த்து அனுதாபிக்கும்போது அம் முகங்களில் இருக்கும் உண்மையான சோகம், வலிக்கிறதா என்று கேட்கும் அவர்களின் குரலில் எனக்கு வலிக்கக் கூடாது என்று இருக்கும் ஆதங்கம், ஓ.. .பரிதாபத்திற்குரியவனே என்று இந்நாட்டு மொழியில் என்னை அணைத்து முத்தமிட்டு ஆறுதலளிக்கும் அவர்களின் அற்புதமான மனம் என்று பலதும் எனக்குத் தரும் மனஆறுதலையும் பலத்தையும் அவர்கள் அறியமாட்டார்கள். எதையும் எதிர்பார்க்காதது அவர்களின் அன்பு.

அன்றொருநாள், ஒருத்தி தூரத்தே இருந்தபடியே என்னைக் கண்டு கையசைத்தாள். அருகிற்சென்றதும் ஒரு கதிரையை இழுத்துப்போட்டுவிட்டு “உட்கார்” என்று கட்டளையிட்டாள். அப்புறமாய் தேனீர், சிற்றூண்டி, உணவு என்று அனைத்தையும் எடுத்துவந்து தந்து என்னுடனேயே அமர்ந்திருந்தாள். அவளுக்கு அப்படியொன்றும் வயசில்லை. 9 வயதிருக்கலாம். பெரும் கரிசனையுடன் என்னைக் கவனித்துக்கொண்டாள்.

அவளை ஒருவாரத்தில் குறைந்தது ஒருமுறையாவது சந்திக்கும் வாய்ப்புகள் அதிகம். காணும்போதெல்லாம் அருகே வந்து

“எப்படியிருக்கிறாய்?
வலிக்கிறதா?
கால் சுகமாக இன்னும் எத்தனை நாள் எடுக்கும்?
எத்தனை நாட்களுக்கு ஊன்றுகோலுடன் நடப்பாய்?”
என்று பல கேள்விகளுடன் வருவாள்.

அவளைக் கண்டதுமே மனம் நெகிழ்ந்துபோகும். அது தரும் பெரும் ஆறுதலை எப்படி எழுதுவது என்று எனக்குப் புரியவில்லை. சில சம்பவங்களைப் புரிவதற்கு அந்த அந்த சூழ்நிலைகளில் எம்மைப் பொருத்திப் பார்த்தாலும் அவற்றின் தார்ப்பர்யத்தை உணரமுடிவதில்லையல்லவா. அவற்றைப் புரிய அந்த அந்த மனிதர்களின் வாழ்க்கையை வாழவேண்டும். அது சாத்தியமில்லையல்லவா. அப்படித்தான் இதுவும்.

அன்று Oslo அம்மன் கோயிற் திருவிழா. ஒரு பெரிய கட்டிடத்தின் மூன்றாம் மாடியிற்தான் கோயில். மாடிப்படிகளை ஊன்றுகோலின் உதவியுடன் ஏறிக்கொண்டிருந்தபோது நண்பிகளுடன் மேலே இருந்து கலகல என்ற சத்தத்துடன் துள்ளியபடியே இறங்கிக்கொண்டிருந்தாள்.

என்னைக் கண்டதும் “நில்லுங்கள்” என்று நண்பிகளை நிறுத்தி, அவர்களை விலகச்செய்து, என் பின்னால் வந்தவர்களுக்கு “இவருக்கு கால் சுகமில்லை, அவரை முதலில் ஏறவிடுங்கள்” என்று கட்டளையிட்டு நிறுத்தி, எனது மெய்காவலாளிபோன்று பாதுகாப்பாக அழைத்துச் சென்றாள். அதன்பின் அவளது தோழிகளும் எனக்குத் தாதிகளாயினர்.

“தண்ணி வேணும் என்றேன்”. நால்வர் ஓடிப்போய் ஒரு குவளையில் தேனீருடன் வந்தார்கள். நான் உட்கார்ந்திருந்த இடத்திற்கு அன்னதானம் வந்தது, இனிப்புவகைகள் வந்தன, தேனீர் வந்தது ஒரு சக்கரவர்த்தியைப்போன்று நான் உட்கார்ந்திருக்க அத்தனையும் நடந்தது. என்னைச் சுற்றியிருந்தார்கள். அவர்களின் கையில் இனிப்புகள். இடையிடேயே “வலிக்கிறதா” என்ற கரிசனையான விசாரிப்பு.

தாயார் வந்து அவளை அழைத்தார். நண்பிகளுடன் மறைந்துபோனாள். நான் உடகார்ந்திருந்த இடத்தின் ஒரு மூலையில் உட்கார்ந்திருந்த ஒரு பாட்டியம்மா என்னைப் பார்த்து “யார் அது, மகளா என்றார்” இல்லை என்று தலையையாட்டினேன்.

அங்கேயே உட்கார்ந்திருந்தேன். உள்ளங்கையை குவித்தபடி ஒடிவந்து, திருநீறு அணிவித்தாள். சென்றுவருகிறேன் என்றுவிட்டு அவளது இரண்டு கைகளுக்குள்ளும் என்னையடக்கி முத்தமிட்டு விடைபெற்றாள்.

அப்போதும் எங்களைப் பார்த்துக்கொண்டிருந்த அந்தப் பாட்டியம்மா “அம்மாளாச்சி இவளை அனுப்பி நீறு பூசியிருக்கிறா, கெதியில் சுகம் வரும்” என்றார்.

நான் குடியிருக்கும் வீட்டின் உரிமையாளருக்கு மூன்று பெண் குழந்தைகள். சிறியவளுக்கு 8 – 9 வயதிருக்கும். என்னைக் ஊன்றுகோலுடன் கண்ணுற்ற நாளன்று என்னை பேட்டி கண்டாள். அவளுடைய வயதுக்கேற்ற வகையில் நான் விடயத்தை புரியவைத்தாலும் அவளால் அதை புரியமுடியாதிருந்திருக்க வேண்டும். அப்படியென்றால் “உனது காலில் புற்றுநோயா” என்ற அவளது சந்தேகத்தையும் “இல்லை” என்று தீர்த்துவைத்தேன். குழந்தைகள் எப்படியெல்லாம் கண்டதையும் கேட்டதையும் தொடர்புபடுத்திச் சிந்திக்கிறார்கள் என்பதற்கு இவள் ஒரு உதாரணம்.

தமிழ் உணவகத்தில் உட்கார்ந்திருந்து எழுதிக்கொண்டிருந்தேன். தந்தையுடன் கடைக்கு வந்த சிறுவன் ஒருவன் அங்குமிங்கும ஒடியபடியே விளையாடிக்கொண்டிருந்தான். வயது மூன்று நான்கு இருக்கும். எனது கால் அவனுக்கு ஆச்சர்யத்தைக் கொடுத்திருக்கவேண்டும். வருவதும் பார்ப்பதும் போவதுமாய் இருந்தான்.

கையைக் காண்பித்து வாருங்கள் என்றேன். மூன்றாம்முறை வந்தான். அருகில் இருந்த கதிரையில் காலைத்தூக்கி வைத்தேன். சுற்றிப் பார்த்தான்.

“என்ன இது?” மனதைக் கொள்ளைகொள்ளும் மழழைத்தமிழ்.
“சப்பாத்து”
“பெரிய சப்பாஆஆத்து”

இப்போதுதான் எனது மறுகாலைக் கண்டான். அவனது கண்கள் எனது கால்களில் தங்கின.

அப்பாவிடம் சென்று அப்பாவை அழைத்து வந்து காண்பித்தான். அப்பா எனக்கு சற்று அறிமுகமானவர். அவர் உரையாடத் தொடங்கினார். இவன் காலிலேயே கண்ணாயிருந்தான்.

“எனக்கும் இப்படி சப்பாத்து வேணும்”

என்ன பதில் சொல்வதில்லை என்று எனக்குப் புரியவில்லை. தந்தையார் சிரித்தார்.

சுதாரித்துக்கொண்டு அவனிடம் “மாமாவின் காலுக்கு சுகயீனம்” என்றேன்.

நோர்வேஜிய மொழியில் “காய்ச்சலா” என்றான்.

தர்மசங்கடமான நிலை. பயலுக்கு காய்ச்சல் வந்தால் அப்பாவிடம் சப்பாத்துக் கேட்பானே என்று சிந்தனை ஓடியது.

“இல்லை, என்றும் நான் தவறி விழுந்ததால் கால் முறிந்தது” என்று கூறினேன்.

அதன் பின்பும் அவனிடம் ஆயிரம் கேள்விகள் இருந்தன. தந்தையுடன் புறப்பட்டபோது ”மந்து குடிங்க” என்றது மட்டும் இன்னும் என் காதுகளில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

எனது நண்பர் சஹீரும், மனைவியும் இருவருமே வைத்தியர்கள்.அவர்களுக்கு 3 குழந்தைகள். கடைக்குட்டி அமாராவுக்கு 5-6 வயதிருக்கும். அவள் என்னுடன் அதிகம் விளையாடுவதில்லை. அவள் சில நாட்களுக்கு முன் எங்கள் பாடசாலை மகிழ் நிகழ்வில் சந்தித்தபோது அவளின் கண் எனது காலில் இருந்தது. அவளது தாயார் “அமாரா, சஞ்சயன் மாமாவுக்கு கால் உடைந்துவிட்டது” என்றுபோது நான் அவர்களுக்கு அருகில் நின்றிருந்தேன். என் காலை எட்டிப் பார்த்தாள். முகத்தில் இருந்த புன்னகை மறைந்துபோனது. தாயின் அருகே நின்றபடியே “ஏன் காலை உடைத்தாய்?” என்ற அவளது கேள்விக்கு நான் “உனது அப்பா அடித்த்தால் கால் உடைந்துவிட்டது” என்றேன். தாயை நிமிர்ந்து பார்த்தாள்.

“நீ அப்பாவை அழைத்துக் கேள்” என்றார் அவர்.

“அப்பா இங்கே வாருங்கள்“ என்று கத்தினாள்.

அவர் திருப்பிப்பார்க்கவே இல்லை.

மீண்டும் மீண்டும் கத்தியபோது அவர் வந்தார்.

அவரிடம் “ஏன் மாமாவின் காலை உடைத்தாய்?” என்று இறுக்கமான குரலிற் கேட்டாள்

அவரும், இவர் எனது இனிப்பை எடுத்தார் என்றபோது

ஒருவருக்கும் அடிக்கக்கூடாது என்று அதிகாரமான குரல் கட்டளையிட்டாள். தந்தையும் தலையாட்டினார்.

முன்பொருநாளும் இல்லாதவாறு அன்று என்னுடன் விளையாடினாள்.

புறப்படும்போது என்னிடம் வந்து என்னை அணைத்து முத்தமிட்டு விடைபெற்றபோது வலித்தால் அப்பாவுக்கு தொலைபேசு அவர் மருந்துதருவார் என்றாள்.

இவளின் இந்த அன்பைக் கடந்தும் வலிக்குமா என்ன?

நான் வாதையால் துவண்டுகிடக்கும் காலங்களை எண்ணிப்பார்க்கிறேன். எனது குழந்தைகள், நண்பர்களின் குழந்தைகள், முன்பின் அறியாத குழந்தைகள் என குழந்தைகள் என் கைபிடித்து, நிமிர்த்தி, ஆசுவாசப்படுத்தி, ஆறுதற்படுத்தி மீண்டும் உயிர்ப்பித்திருக்கிறார்கள்.

அவர்களது அன்பும், ஆதரவும், நம்பிக்கையும், உரிமையான கோபமும், விளையாட்டும், சேட்டையும் மனம் சோர்ந்திருப்பதற்கானதல்ல என்கின்றன.

உண்மையும் அதுவல்லவா.

மணற்குளிப்பு

இன்று வெய்யில். ஒரு சிறுவர்களுக்கான விளையாட்டிடத்தைக் கடந்தபோது நீண்ட தலைமுடியுடைய சின்னஞ்சிறு சிறுமியொருத்தி தோழியொருத்தியுடன் மணல் குளித்துக்கொண்டிருந்தாள்.
இருவரையும் நீராட்டப்போகும் தகப்பன்களை நினைத்துப் பார்த்தேன்.
பெரு வாழ்வு வாழ்கிறார்கள் அவர்கள்.
இருவரையும் வீட்டுக்கு அழைப்பதே பெரும்பாடு.
அப்புறமாய் நீராட்ட அழைப்பது அதைவிட பெரும்பாடு.
இதற்கிடையில் இவர்களுக்கு தூக்கம் வந்துவிடும்.
தலையில் உள்ள மண்ணை முதலில் அகற்ற முயலவேண்டும். இங்கு ஆரம்பிக்கும் சண்டை.
சீப்பை எடுத்து மணலை அகற்ற முயலும்போது தூங்கிவிழுவார்கள்.
அப்பனுக்கு திட்டுவிழும். அடியும்தான்.
கெஞ்சிக்கூத்தாடி பேன் இழுக்கும் சீப்பால் மணலை முழுவதுமாய் அகற்றி முடியும்போது ஒருமணி நேரம் கடந்திருக்கும்.
முழுகவைத்து, தலைமுடியினை காயவைத்துப் படுக்கைக்கு அழைத்துப்போகும்போது அவளது தூக்கம் கலைந்து. அப்பனுடன் ஆடிப்பாடியபின் களைத்து மார்பில் உறங்கி மறுநாள் எழும்பும்போது அப்பனின் மார்பிலும் தலையணையெங்கும் மணலாயிருக்கும்.
மீண்டும் சீப்பைக் கையிலெடுக்க வேண்டியதுதான்.

ரௌத்திரம் பழகு

நடு இதழ் 09 சித்திரை வைகாசி ஆனி 2018 இல் பிரசுரிக்கப்பட்ட பத்தி.
.
.
வாழ்க்கை புதிரானது. எப்போது எப்படி திரும்பும் என்பதைக் கடைசிக்கணம் வரையில் மறைத்தே வைத்திருக்கிறது. வாழ்க்கையின் சில சந்தர்ப்பங்கள் விசித்திரமானவை. அவற்றைத் தொகுத்துப்பார்த்தால் சில உண்மைகள் விளங்கும். சிலவேளைகளில் ஞானத்தை போதிப்பதும் இந்த விசித்திரமான சந்தர்ப்பங்களே.

அப்போது எனக்கு 17 வயதிருக்கும். இரண்டு பட்டப்பெயர்கள் எனக்கிருந்தன. பிரபலமான பட்டம் “ஊத்தை”, மற்றையது மிகச்சிலருக்கு மட்டுமே தெரிந்த எனது தாயார் வைத்த பட்டம் “சோடாப்போத்தல்”. (சோடாப்பொத்தலை திறந்ததும் சுர்ர்ர் என்றுவிட்டு அடங்கிவிடுமல்லவா)

மட்டக்களப்பின் காற்பந்தாட்ட சரித்திரம் அறிந்தவர்களுக்கு 1970 களின் இறுதியில்’சிலிப் ஜெயா’ என்றொரு பிரபலமான ஆட்டக்காரர் இருந்தார் என்பது தெரிந்திருக்கும். நான் ’சிலிப் ஜெயா’ இன் சிலிப் அடிகளுக்காகவே அவரது விளையாட்டைப்பார்ப்பேன். காலப்போக்கில் அது எனக்கும் தொற்றிக்கொண்டது. பந்துடன் வருபவரை பந்து காலுடன் இருக்கும்போது ஒரு சிலிப் அடி விட்டால் அவ்வளவுதான். அவர் மண்கவ்வுவார். ஆனால் காலில் பந்து இல்லாதபோது அடிக்கவே கூடாது.

எமது ஏறாவூர் ஐக்கிய (Eravur United) அணியின் முதன்மை வீரன் என்னுடன் நண்பனாக இருந்தான். எமது அணியில் இருந்து சிங்கள, முஸ்லீம், தமிழ் ஆட்டக்காரர்களில் இவனும் முக்கியமானவன்.

ஒருநாள் பயிற்சியின்போது விளையாட்டு சூடாகியது. நாம் எதிர் எதிர் அணி. உயிரைக்கொடுத்து விளையாடிக்கொண்டிருக்கிறோம். பந்துடன் வருகிறான் அவன். என்னைக் கடந்தால் நிட்சயம் கோல்தான் என்ற நிலை.

’சிலிப் ஜெயா’ அண்ணன் கைகொடுத்தார். நான் எழுந்துகொண்ட பின்னும் பையன் எழுந்துகொள்ளவில்லை. நண்பர்களின் உதவியுடன் எழுந்தான். மீண்டும் மீண்டும் அவன் வர, நானும் ’சிலிப் ஜெயா’ அண்ணையை உதவிக்கு அழைத்துக்கொண்டிருந்தேன். 5-ம் முறை இனி சிலிப் அடித்தால் கொல்லுவேன் என்றான். நடுவர் அது சிலிப், பிழையில்லை என்றார். இது அவனுக்கு ஆத்திரத்தை அதிகரித்தது. நான், “என்னில் கைவைத்துப் பார்” என்றேன். “பொறு வைத்துக்காட்டுகிறேன்“ என்றான் அவன்

எனக்கு சினம் தலைக்கேறி ஆடியது. கறுவிக்கொண்டே விளையாடினேன். 5-ம் முறையும் பந்துடன் வந்தான். “சிலிப்” அடித்தேன். விழுந்தெழும்பி நெஞ்சை நிமிர்த்தியபடி வந்தான். என் நெஞ்சில் அவன் நெஞ்சு முட்டியதான் தாமதம், இருந்த அத்தனை எரிச்சலும் சினமும் கைகளுக்குள் புகுந்தது. ஒரே ஒரு தள்ளுத்தான். விழுந்தவனை சிலரும் என்னை சிலரும் பிடித்துக்கொண்டார்கள். அவ்வளவுதான் அந்த நட்பு.

பாடசாலை நாட்களில் தலைமை மாணவத்தலைவனாகவும் எமது இல்ல விளையாட்டுப்போட்டிகளுக்கு தலைவனாகவும் இருந்த பொற்காலத்துக் கதையொன்று இருக்கிறது.

எனது கணிப்பின்படி எமக்கும் மற்றைய இல்லத்திற்கும் இடையில் ஏறத்தாள 25 புள்ளிகளின் அடிப்படையில் வெற்றி தோல்வி நிர்ணயிக்கப்படும் என கணிக்க முடிந்திருந்தது. சைக்கிள் ஒட்டப்போட்டியில் வென்றால் 25 புள்ளிகள் கிடைக்கும். ஒருவன் இருந்தான், அவனுக்கு சைக்கிள் ஓட மட்டுமே தெரியும். வேறு ஒன்றும் தெரியாது.

ஆனால் அவனிடம் இருந்த சைக்கிள் இரும்புக்கடைக்கு உதவுமே அன்றிப் போட்டிக்கு உதவாது. எனவே நான் சைக்கிள் தருகிறேன் என்றும் அவன் ஒடுவது என்றும் ஒப்பந்தமானது. எனது சைக்கிளைக் களட்டிப்பூட்டினேன். போட்டியன்று காலை 5 மணிக்கு வீட்டில் இருந்து புறப்பட்டு பாடசாலைக்கு வந்தபோது நேரம் 6.30.

8.00 மணிக்குப் போட்டி ஆரம்பமாகும். சைக்கிள் ஓடுபவனைக் காணவில்லை. போட்டிக்கான சைக்கிள்கள் வரிசையில் நின்றன. விசில் அடித்தார் புண்ணியமூர்த்தி சேர். சைக்கிள்கள் பறந்தன. அப்போது மூச்சிரைக்க ஓடிவந்தான் எனது வீரன். சைக்கிலைத் தா ஓடுகிறேன் என்றான்.

எனக்குச் சினம் கொப்பளித்தது, அப்படியே மேலாடையில் பிடித்து இழுத்துச் சென்று ஒரு மூலைக்குள் நிறுத்தி காது புளிக்குமளவுக்கு திட்டி அவனை உலுக்கி எடுத்தேன். நண்பர்கள் அவனை பிரித்தெடுத்து காப்பாற்றினார்கள். அதிபருக்கு கதை சென்றபோது, அழைத்து, விசாரித்தார். “உனது கோபத்தை புரிந்துகோள்கிறேன். ஆனாலும் அவன் சக மாணவன். இனி இப்படிச் செய்யோதே” என்று எச்சரித்து அனுப்பினார்.

நான் எதிர்பார்த்தது போன்றே விளையாட்டுப்போட்டியில் 25 புள்ளிகளால் தோற்றோம். அன்றும் அவனை ஒரு கைபார்த்தேன். அன்றும் நண்பர் மீண்டும் அவனைக் காப்பாற்றிஅழைத்துப்போகவேண்டியிருந்த்து.

மிக அண்மையில் நண்பருடன் இலத்திரனியற் கடையொன்றிற்குச் சென்றிருந்தேன்.

நண்பர் ஒரு பொருளைத் தேடிக்கொண்டிருந்தார். அவருக்கு உதவியபோது நண்பர் தேடிய பொருள் எனது கண்ணிற்பட்டது. அதன் பெட்டி உடைக்கப்பட்டிருந்ததால் அது வெளியே கிடந்தது. பெட்டியும் அருகிற்கிடந்தது.

நாம் அப்பொருளை கையில் எடுத்துப் பார்த்துக்கொண்டிருக்கும்போது அவ்விடத்தைக் கடந்த விற்பனையாளினி ”இவ்வாறு பெட்டிகளை உடைப்பது தவறு” என்றார்.

மிக மரியாதையுடன் “இப்பெட்டி உடைக்கப்பட்டு இருந்தது” என்றோம். இல்லை நீங்கள் தான் உடைத்தது என்றபோது வாக்குவாதம் ஆரம்பித்தது. எம்மைச் சுற்றிப் பலர். நாம் கறுப்பர் வேறு. சிறுமைப்படுத்தப்பட்டதால் சினம்தலைக்கேறிற்று.

முகாமையாளரை அழைத்து கமரா மூலமாகப் பார்த்து தீர்ப்பை வழங்குங்கள் என்று கத்தினேன். அங்கிருந்த சிலரும் அதனை ஆமோதிக்க, முகாமையாளருக்கு அழைப்புவிடுக்கப்பட்டு அவர் வந்தார்.

கமராவைப் பார்த்தார். “நீங்கள் உடைக்கவில்லை. மன்னியுங்கள் என்றார்”. மன்னிப்பை விற்பனையாளினிதான் கேட்கவேண்டும் நீங்கள் இல்லை என்றதும். விற்பனையாளினி மறுத்தார். நானும் எனது வேண்டுகோளில் இருந்து சற்றும் மசியவில்லை. வாக்குவாதம் பலத்தபோது போலீசை அழையுங்கள் என்றேன். விற்பனையாளினி கருகிய முகத்துடன் மன்னியுங்கள் என்றார்.

முப்பது வயதுகளின் ஆரம்பத்தில் மிகப்பிரபல்யமான வேலைத்தளத்தில் முக்கிய பொறுப்பில் அமர்த்தப்பட்டேன். வேலைநேரக் கட்டுப்பாடு இல்லை. வீட்டில் இருந்து வேலைசெய்யலாம். கைநிறைந்த சம்பளம், வெளிநாட்டுப் பயணங்கள் பெயர், புகழ் என்று வாழ்க்கை தன்பாட்டுக்கு ஓடிக்கொண்டிருந்த்து.

காலப்போக்கில் எனக்கு வேலைப்பழு அதிகமானது. பொறுப்புகள் அதிகமாயின. மேலதிகாரி ஒருவருக்கான வேலைகளையும் நானே செய்யவேண்டியிருந்தது. எனக்கு மேலே இருந்தவர் சிக்கலான ஆசாமி. நிறுவனத்தில் எவருக்கும் அவரை பிடிக்காது.

என் தகமைக்கு மேற்பட்ட செயற்பாடுகளைச் செய்வதற்கு என்னிடம் தகமை இல்லை எனவே நீங்கள் ஒரு மேலதிகாரியை வேலைக்கு அமர்த்துங்கள் என்று கூறி ஒன்றரைவருடங்களின் பின் ஒருவரை வேலைக்கு அமர்த்தினார்கள். இனிவரும் காலத்தில் எனக்கு என்ன வேலை என்பதை நான் எனது முன்னைநாள் மேலதிகாரியுடன் வாய்மூல ஒப்பந்தத்தின் ஊடாக வரையறைப்படுத்தியிருந்தேன். இதை அவர் புதியவரிடம் குறிப்பிடவில்லை. இதனால் சிக்கல் ஏற்பட்டது. நோர்வேயில் தொழிலாளர்களுக்குரிய உரிமைகள் பல நடைமுறையிலுள்ளது அவர்களுக்காக தொழிட்சங்கங்கள் எப்போதும் உதவிக்கு நிற்கும்.

எனவே, எனது சிக்கலைப் பேசித்தீர்ப்பதற்காகத் தொழிற்சங்கம், எனது புதிய பழைய மேலதிகாரிகள், என்னை முதன் முதலில் வேலைக்கு அமர்த்திய அதிகாரி என்று வட்டமேசைக்கூட்டம் ஆரம்பித்தது. ஏறத்தாழ மூன்றாவது சந்திப்பின்போது உன்னுடன் நான் ஒருவித ஒப்பந்தமும் எழுதவில்லை. நீ பொய் சொல்கிறாய், அப்படி ஒரு ஒப்பந்தம் இருந்தால் காண்பி என்றார் எனது முன்னைநாள் அதிகாரி. வாய்மூலமான ஒப்பந்தம் இருந்தது என்பதையும் மறுத்தார்.

எனது காதுகளுக்குள்ளால் புகைவந்து, மேசையில் ஒரு கையால் குத்தி, மனட்சாட்சியில்லாதவன் என்று திட்டிவிட்டு வந்து வேலையை ராஜனாமா செய்தேன். என்னை வேலைக்கமர்த்தியவர் தனியே அழைத்து வாழ்த்தி அனுப்பியபோது இனியாவது மனிதர்களை நம்பதே என்றார்.

அன்று ஆரம்பித்தது வாழ்க்கையின் இறங்குமுகம்., நான் ஒஸ்லோ-வில் (Oslo-வில்) குடிபுகுந்தேன். 18 வருட நோர்வே வாழ்வின் சேமிப்பாக ஒரு சிறு பையில் எனது பொருட்கள் கிடந்தன. 3 வருடங்கள் மன அழுத்தத்தில் தன்னந்தனியே கிடந்தேன். அதன்பின் சில நண்பர்கள் கிடைத்தார்கள்.

அந்நாட்களில் செய்யாத ஒரு குற்றத்திற்காகவும் அவர்களுக்கு வேண்டாத ஒருவருக்கு சார்பாக நின்றேன் என்பதாலும் அந்த நட்பு ரணகளமானது. பேச்சுவார்த்தைக்கு போனபோது தர்க்கம் அதிகரித்து சினம் தலைக்கேற என் குற்றத்திற்கான ஆதாரத்தை முன்வைய்யுங்கள் என்றுபோது ஒருவர் தாக்கினார். போலீஸ் வந்தது.

அந்த நட்புகள் அப்படியே போயின.

சில வருடங்களின் பின் மீண்டும் சிலருடன் இணைந்து இயங்கினேன். போலி கௌரவத்திற்காக வெளிநாட்டில் இருந்து வந்த கலைஞர்கள் எம்முடன் சேர்ந்தியங்கும் சகதோழர்களை அவமதித்ததை பொறுப்பாளர்கள் கண்டிக்காததையிட்டு வாக்குவாதம் எழுந்து, என் மனது தோழன் சிறுமைப்பட்டதை ஏற்கவில்லை. எனது சினம் கட்டுக்காடங்காததால் பலத்த வாய்த்தர்க்கத்துடன், முகப்புத்தக வாதப்பிரதிவாதங்களுடன் அந்தச் செயற்பாடும் முடிந்தது. எனது கையும் மோசமானது என்பதையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

இன்னுமொரு செயற்பாட்டுத் தளத்தில் இயங்கினோம். இது பலகாலம் பிரச்சனை இன்றி இயங்கியது. சாதிக்கவும் முடிந்தது. அச்செயற்பாட்டின் அவசியத்தை நோர்வே தமிழர்களுக்கிடையில் ஓரளவு புரியவைத்த மகிழ்ச்சியும் பெருமையும் உண்டு. தற்போது உடல்நலத்தின் காரணமாகவும், வேலைப்பழுவின் காரணமாகவும் அதில் இருந்து ஓய்வு பெற்றிருக்கிறேன். நண்பர்கள் அதைத் தொடர்கிறார்கள். ஐந்து கண்டங்களிலும், குறிப்பாக இலங்கையிலும் இயங்குகிறது அந்நிறுவனம்.

சரிந்துகிடந்த இன்னொரு பொதுநிறுவனத்தை உற்ற நண்பர்களுடன் இணைந்து இரவு பகலாக உழைத்து நிறுத்தியாகிவிட்டது. புதிய புதுப்பொலிவுடன் அது நிமிர்ந்து நிற்கிறது. அதன் செயற்பாடு பலதளங்களில் விரிந்து செல்கிறது. இங்கும் மனச்சாட்சிக்கு ஏற்பில்லாத தளங்களில் சினத்தின் மிகுதியால் பொருதியிருக்கிறேன் என்பதே உண்மை. இவன் கொதியன் என்பதை புரிந்த நண்பர்கள் இருப்பதால் இதுவரை பாதகமில்லை.

புதிதாய் அனைத்து வெளிநாட்டு மாணவருக்கும் மேலதிக பாட உதவி வழங்கும் ஒரு பாடசாலை ஆரம்பிப்போம் என்றார்கள் நண்பர்கள். அது இயங்கத்தொடங்கி இரண்டு வருடங்கள் ஆகிறது.

அன்பான பல நண்பர்களின் உதவியினால் 2012 இல் இருந்து ஏறத்தாழ நூற்றிஎண்பதுக்கும் அதிகமான போராளிகள், அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கு உதவ முடிந்திருக்கிறது. இதுபற்றியதொரு காணொளியே நண்பர் ஞானதாஸ் தயாரித்துத் தந்தார். 2016ம் ஆண்டு மாவீரர் தினத்தில் வெளியிட்டோம். இன்றுவரை 50.000 பார்வையாளர்களைக் கடந்திருக்கிறது அது.

இதுவரை காலமும் நான் சினத்தின் வசப்படாது இயங்கும் திட்டம் இதுவொன்றுதான் என்று நினைக்கிறேன். தவிர எனது மனதுக்கு மிகவும் அமைதியையும், பெருமையையும் தரும் விடயம்.

ஏன் இவற்றை எழுதுகிறேன் என்று நீங்கள் நினைக்கலாம். காரணமிருக்கிறது. சற்றுப்பொறுங்கள்.

மேலே பிரச்சனை இன்றி இயங்கியதொரு செயற்பாட்டுத்தளம் என்று கூறியிருந்தேன் அல்லவா. அங்கு கடந்தவாரம் எனது சினத்தை அடக்கத்தெரியாத காரணத்தினால் பெரும் பூகம்பம் வெடித்தது.

110 சதவீதமும் தவறு என்னுடையதே. தவறான இடத்தில் நியாயமான ஒரு காரணத்திற்காக சினத்தின் வயப்பட்டேன். எனது தவறு என்பதில் ஐயமேயில்லை. கேள்வி கேட்ட இடம் தவறானது.

இதுவும், உதவிக்குச் சென்று உபத்திரவம் வாங்கிவந்த கதைதான். ஆனாலும் ஒன்றில் மட்டும் திமிருடனான பெருமை இருக்கிறது. எனது தவறுகளுக்கு மன்னிப்புக்கேட்டிருக்கிறேன். சிலர் ஏற்றுக்கொண்டார்கள். சிலர் பதிலே அனுப்பவில்லை. சில பெரியவர்கள் மன்னிப்புகேட்டிறியாதவர்கள் அல்லவா. இவர்களையும் புரிய முடிகிறது. எனது சினம் அந்தளவிற்கு அவர்களை பாதித்திருக்கிறது.

நான் முகத்துக்கு அஞ்சி அடங்கிப்போகும் மனிதனில்லை. பிடிக்காததை பிடிக்கவில்லை என்றும், உங்களில் தவறு உண்டு என்று கூறக்கூடிய நெஞ்சுரம் என்னிடம் உண்டு. ஆனால் என்ன எனது சினக்கட்டுப்பாட்டின்மையினால் எனது நியாயங்கள் அடிபட்டுப்போகின்றன. ஆனாலும் மனது நிம்மதியாகத்தான் இருக்கிறது. புரிந்தவர்கள் மட்டும் அருகிலிருந்தால் போதும்.

சில வருடங்களுக்கு முன், மட்டக்களப்பில் எனது பேராசான் ஒருவருக்காக விழா எடுத்திருந்தோம். அவர்தான் அந்த நிகழ்வின் நாயகன். அன்று மாலை நான் ஆற்றவிருக்கும் அவருக்கு உரையை வாசித்துக் காண்பித்தேன். நான் எழுதிய ஒன்று அவரையும் இன்னொருவரையும் சாடியிருந்தது பாடிசாலையின் நன்மைக்காக.

“அதனை அகற்று” என்றார். “நான் முடியாது” என்றேன். கறாரான குரலில் “அகற்று” என்றபோதும் நான் அதை அகற்றினேனில்லை.

மட்டக்களப்பின் முக்கியஸ்தர்களும், எமது பாடசாலையின் பழையமாணவர்களும் நின்றிருந்த அந்த நிகழ்வில் எனது உரை முடிந்து, உணவு உண்ணும் நேரம், என்னைத் தேடி வந்து “உனக்குத் திமிர் அதிகம்” என்றார் எனது பேராசான்.

“எனது பேராசானுக்கும் திமிர் மிக அதிகம். நானும் அதை அவரிடமே கற்றேன். மனதுக்கு நேர்மையாய், உண்மையாய் நட என்றிருக்கிறார் அவர்” என்றேன்.

கண்களை ஊடுருவிப்பார்த்துவிட்டு நான் கூறியதை ஆமோதிப்பதுபோன்று தலையை ஆட்டியபடியே, முதுகில் தட்டிவிட்டு நகர்ந்தார். அதே விருந்துபசாரத்தில் எனது பால்யத்து ஆசிரியையொருவர் “பலரும் இத்தனை வருடங்களாகச் சொல்லப் பயந்ததை சொல்லியிருக்கிறாய், நீ அவரின் மாணவன் என்பதை நிரூபித்திருக்கிறாய், வாழ்த்துக்கள்” என்றார்.

நான் எங்கும் எதற்காகவும் சோரம்போவதில்லை என்பது எனக்கு முக்கியமானது. ஆனால், நான் சினத்தின் வயப்படுவதால் இழந்தவை ஏராளம், ஏராளம்.

எனக்கு, சினம் மட்டுமல்ல, எல்லையற்ற பிடிவாதமும் உண்டு. எந்தளவிற்கு விட்டுக்கொடுப்பேனோ அந்தளவிற்கு பிடிவாதமுண்டு. உடும்பும் இந்தவிடயத்தில் என்னிடம் கற்றுக்கொள்ளலாம்.

பிடிவாதம் சாதக பாதகங்களைக் கொண்டது. சினம் அப்படியானதல்ல.

2014ம் ஆண்டு ஸ்பெயின் (Spain) நாட்டில் நடைப்பயணம் சென்றிருந்தேன். அது 850 கி.மீ நீளமானது. முதல் நாள் 18, மறுநாள் 22, மறுநாள் 25 என்று நடக்கும் தூரம் அதிகரித்து என்னை நானே தினமும் வெல்லவேண்டும் என்ற போட்டி எனக்குள் உருவானது. நடைப்பயணம் முடிவதற்கு இன்னும் இரண்டு நாட்களும், 68 கி.மீ மட்டுமே இருந்தன.

காலை 07.00 மணிக்கு நடக்கத்தொடங்கினேன். 10, 20, 30, 40 கி.மீ கடந்தாகிவிட்டது. இதுவரை ஆக்க்கூடியது 42 கி.மீ நடந்திருந்தேன். எனவே அதைக் கடந்துவிட வேண்டும் என்றது மனது. இரவு 09.00 மணிபோல் 50 கி.மீ கடந்திருந்தேன். நடைப்பணத்தின் முடிவுக்கு இன்னும் 18 கி.மீ இருந்தது. இரவு 11 யின் போது 52 கி.மீ கடந்திருந்தேன். கடைசி இரண்டு மணிநேரமும் இரண்டு கி.மீ மட்டுமே நடக்க முடிந்திருந்தது. ஒவ்வொரு அடியும் கனதியாக இருந்தபோதிலும் மனது விடாதே விடாதே என்று என்னை நகர்த்திற்று. அன்றிரவு என்னால் தூங்க முடியவில்லை. உடல்முழுவதும் அட்ரினலீன் சுரந்துகொண்டிருந்த்து. என் வாழ்க்கையில் என்னை இகழ்ந்த, நகைத்த அனைவரையும் வெற்றிகொண்டதுபோன்று உணர்ந்துகொண்டிருந்தேன். என்னில் பல மடங்கு சுயநம்பிக்கை வந்திருந்தது.

அன்பான மனிதர்களுக்கும், குழந்தைகளுக்கும் என்னை மறந்து உதவும் மனமுண்டு என்னிடம்..

என்னையும், எனது சுயத்தையும் தொடர்ந்து இகழவோ, கேலிசெய்யவோ, அல்லது என்னை மனச்சாட்சியின்றி உபயோகித்துவிட்டு தூக்கி எறியும் மனிதர்களையோ என்னால் இலகுவில் மன்னிக்க முடிவதில்லை.

அவர்கள், “தங்கள் தவறுக்கு வருந்துகிறோம்” என்று கூறும் வரையில் நாம் எதிரிகளே என்பது எனது கருத்து. இதனால் பலருடனான பகையின் ஈரம் காய்வதே இல்லை. இந்த யுத்தக் களத்தில் யுத்தத்தின் தர்மம் மட்டுமே செல்லுபடியானது. அதாவது எதிரியை அடிபணியவைப்பது. இங்கு நான் சற்றேனும் இரக்கம் காண்பிப்பதில்லை. இந்த யுத்தக்களத்தில் நான் தாவரபட்சினி அல்ல.

ஒரு நண்பர், என்னிடம் பழிவாங்கும் தன்மையிருக்கிறது என்பார். அது உண்மையாகவும் இருக்கலாம். நான் அமைதியாக இருக்கும்போது என்னைச் சீண்டுபவர்களை, நியாமற்ற அநியாய நியாயவாதிகளை, முகமூடியுடன் தாக்குபவர்களுக்கெல்லாம் சாம பேத தண்டத்தை போன்று வேறு வைத்தியம் இல்லை. தோழமைக்கென எதையும் செய்யும் உளப்பாங்கு உண்டு. ஆனால் துரோகங்களையும், அகங்காரங்களையும், தொடர் இழிதல்களையும் பொறுக்கும் பண்பு இன்னும் உருவாகவில்லை. அது உருவாகவும் வேண்டாம் என்றே தோன்றுகிறது.

என்னால் எனது தவறு என்பது உணரப்படும்போது ஆணவத்தைக் கடந்து யாரிடமும் மன்னிப்புக்கோர முடிகிறது. தவறை உணரும் கலை வாய்திருப்பது ஒரு பெரும் ஆறுதல்தான். ஆனாலும் எனது சினத்தினால் உடைந்த உறவுகள் ஏராளம்.

இவற்றையெல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது ஒன்று மட்டும் புரிகிறது

எனக்கு சினமடக்கும் கலை கைவரவில்லை. எனக்கு நான் உண்மையாய் இருக்கவேண்டும் என்னும் தீக்கோழி நான்.

நாலைந்து வருடங்களுக்கு ஒருமுறை ஏதோவொன்று இடிந்து விழுகிறது. இந்த அனுபவங்கள் சில விடயங்களைப் புரியவைக்கத்தொடங்கியிருக்கிறது.

01 இணைந்து தொழிற்படும் சந்தர்ப்பங்களில் சுயமரியாதையை விட்டுக்கொடுத்தாலே அன்றி 4இணைந்து செயற்படமுடியாது.

02 எங்கும் சில அசௌகரீயங்களை, மனட்சாட்சிக்கு விரோதமான செயல்களை அனுசரிக்கவேண்டும்.

03 பலவற்றை காணும்போது காணாததுபோலவும் கடந்துவிடவேண்டும்

04 போலிகளை அங்கிகரீக்கவும் தெரியவேண்டும்

05 முகத்துக்கு முன்னே சிரிப்பவர்கள் எல்லோரும் நண்பர்கள் அல்லர்.

06 உயிர் நண்பரும் தனக்கு அவசியம் எனின் கட்சிதாவத் தயாராக இருப்பார்

07 மனிதர்களை நம்பாதே

08 எதையும் நேரடியாகப் பேசாதே.

09 இவர்களுடன் மல்லுக்கட்டுவது இரத்தக்கொதிப்பை அதிகமாக்கி உடல் நலத்தைக் கெடுக்கும்.

இவைகளில் எதுவுமே எனக்கு ஒவ்வாதவை.

எனவே, எங்கு நான் பிரச்சனையின்றி இயங்கியிருக்கிறேன் என்பதை அறிந்து, அப்படியான வழியில் இயங்குவதே அமைதியான மனநிலையைத் தரும்போலிக்கிறது. மரியாதை, கௌரவம், பணம், புகழ் என இழந்தவை எத்தனையோ இருப்பினும், மனதுக்கு மிக நெருங்கியதொன்று மிஞ்சியிருக்கிறதல்லவா? அது போதும்