
ஒரு தலை ராகம், பயணங்கள் முடிவதில்லை, கிளிஞ்சல்கள் என காதல் படங்களின் வழியாக எங்கள் ஊரிலும் வழிந்தோடிக் கொண்டிருந்தது, காதல். என்னையும் ஒருத்தி பெரும்பாடுபடுத்தினாள். அது வெறொரு கதை. அது பற்றி 60 வயதின் பின்பே எழுதுவதாக இருக்கிறேன். (அது வரைக்கும் நீ இருப்பியா என்றெல்லாம் நீங்க நக்கல் பண்ணக் கூடாது.. ஆமா)
இந்தக் கதையின் நாயகன் எனது நட்பு வட்டத்தினுள் இருந்தார். பிரச்சனையில்லாவன். என்னுடன் ஒப்பிட்டுப்பார்த்தால் அவன் மிக மிக அமைதியானவன். நம்மளை விட நிறத்தில் ரொம்பவே அழகானவன். பார்த்தாலும் பையன் அழகானவன் தான். சலூனுக்கு போனால் காது மூடி ”பொபி” கட் தான் வெட்டுவான். மிக அழகாக உடுத்துவான்.
அவனுக்கு இருந்த பிரச்சனை, வில்லன்கள் மாதிரி உடம்பை வளர்த்திருந்த அவனது எண்ணிக்கையில்லா அண்ணண்மார் தான். மூத்தண்ணண், பெரியண்ணண், சின்னப் பெரியண்ணண், நடு அண்ணண், சின்னண்ணண், குட்டியண்ணண், அண்ணண் என்று அவனின் அப்பா ஈவுஇரக்கமின்றி பெத்துத் தள்ளியிருந்தார். நம்ம கதாநாயகன் தான் கடைக்குட்டி.
அவர்கள் வீட்டில் எல்லோரினதும் சைக்கிலும் நிறுத்தப்படிருந்தால் அதுவொரு சைக்கல் கடை மாதிரியே இருக்கும். நம் நண்பனிடமும் ஒரு அழகிய சைக்கில் இருந்தது. அதை மிக அழகாகவே வைத்திருந்தான்.
நாங்கள் ஊரில் இருந்த பாவடைபோட்ட புள்ளிமான்களை ரசிக்கும் நேரங்களில் எமக்கு சைக்கிலோடும் சாரதி இவனாய்த் தான் இருக்கும். எப்பவும் தனது எண்ணிக்கையில்லா அண்ணண்மார் கண்ணில்படுகிறார்களா என்று பார்ப்பதிலேயே அவனது நேரம் போய்க் கொண்டிருந்தது. அவனின் கஸ்டகாலமோ அல்லது அவனின் அப்பாவின் விடாமுயற்சி்யின் பலனோ என்னவோ அவன் எங்கு திரும்பினாலும் அவனின் அண்ணண்களாகவே இருந்தனர். கோயிலுக்கு போனால் அப்பாவும் அம்மாவும் இருப்பார்கள். தியட்டருக்கு போனால் குறைந்தது ஒரு அண்ணண், மற்ற தியட்டருக்கு போனால் அடுத்த அண்ணண், விளையாடப் போனால் அங்கு இன்னொரு அண்ணண். சும்மா ரோட்டில சைக்கில் ஓடினால் அங்கும் இரண்டு அண்ணண்மார் அவனைக் கடந்து போவார்கள்.
இப்படியாய் கடந்து கொண்டிருந்தது அவனின் 16 வயது. அந்த நேரத்தில் அருகிலிருந்த கிராமத்தில் குடியிருந்தாள் மிக மிக மிக ஒரு தேவதை. அவளை இவன் பல தடவைகள் முன்பும் கண்டிருக்கிறான். அந்த நேரங்களில் இவனின் ஹோர்மோன்கள் விளித்துக் கொள்ளவில்லை. ஆனால் 16 வயதில் பேயாட்டம் ஆடியது அவனது ஹோர்மோன்கள்.
அவளோ ஒரு மேட்டுக் குடி குடும்பத்துப் பெண். சற்று செருக்கும் இருந்தது. அவளின் அப்பாவுக்கும் இவனின் அப்பாவுக்கும் இருந்தது ஒரே ஒரு ஒற்றுமைதான். இருவரும் குட்டி போடுவதில் மகா கில்லாடியாக இருந்தனர். அவளுக்கு 3 - 4 மிக மிக மிக மிக அழகிய அக்காமார் இருந்தனர். அவர்களின் வீட்டைச்சுற்றி பெரியதொரு மதில் இருந்தது. அருகில் ஒரு கிறவல் ஒழுங்கையும் இருந்தது. ஊரில் இருந்த இளசுகள் அந்தத் தெருவால் தினமும் ஒரு தடவையாவது போய்வரா விட்டால் பைத்தியம் பிடித்தவர்கள் போலானார்கள்.
அவர்களின் மித மிஞ்சிய அழகால் அவர்களுக்கு சற்று செருக்கு இருக்கத் தான் செய்யதது (இருக்காதா பின்ன?). பகிடி என்னவென்றால் பிற்காலத்தில் ரோந்து செல்லும் இராணுவா்தினரும் அவர்களின் வீட்டைக் கடக்கும் போது மிக மிக மிக மெதுவாகவே கடந்து போனார்கள்.
இவர்களின் வீட்டில் இருந்து ஒரு வித காதல் கதைகளும் கிளம்பவில்லை. ஆனால் 70களின பின் பகுதியில் அவர்கள் வீட்டில் இருந்து ஒரு காதல் கதை ஒன்று கிளம்பியதாக ஒரு நண்பர் சொல்லக் கேட்டேன். அவர் தான் கதையின் நாயகனாகவும் இருந்தார். அவர் மிகவும் அழகானவர், படிப்பில் கெட்டி, வானொலியில் பேசக் கூடய குரல். ஆனால் அவர் இஸ்லாமியராக இருந்தார். எனவே அந்தக் காதல் கனவாகியது என்றார் அவர்.
அந்த வீட்டில் இருந்த கடைக்குட்டியுடன் எனது நண்பனுக்கு காதல் உருகி உருகி ஓடத் தொடங்கியது. ஆனால் பிரச்சனை என்னவென்றால் அவளுக்கு இவர் உருகுவது முதலில் தெரியவில்லை.
இவனுக்கு காதல் நோய் கண்டது 1980 இல் என்றே ஞாபகம் இருக்கிறது. நாட்கள் வாரங்களாயின, வாரங்கள் மாதங்களாயின, மாதங்கள் ஆண்டுகளாயின.... ஒரு வித முன்னேற்றமும் இல்லை அவளிடம் இருந்து.
இவன் தினம் தினம் முன்னேறினான், தேவைக்கு அதிகமாய் முன்னேறினான. பைத்தியமாய் அலைந்தான். இரவு 10 மணிக்கு வந்து ” டேய் வாடா ஒருக்கா வா அவளைப் பார்த்திட்டு வருவோம் என்பான்”. ஏதோ இவர் போகாவிட்டால் அவள் நித்திரைக்கு போகமாட்டாள் என்பது போல. அங்கு போனால் அவளின் வீடும் அந்த ஓழுங்கையும் இரவினுள் தொலைந்திருக்கும். இவனுக்கு அதன் பின் தான் நித்திரையே வரும்.
காலையில், அதுவும் நாம் பாடசாலைக்கு பஸ் ஏறுவதற்கு முன்பு ஒரு தரம் அவளின் வீட்டு மதிலை பார்த்து வருவான். அவள் எந்த பஸ்ஸில் ஏறுகிறாள் என்பதை பஸ்ஸின் படியில் தொங்கிவரும் நண்பர்கள் அறிவிப்பார்கள். அவரும் ஏறிக் கொள்வார். அவள் திரும்பியும் பார்க்க மாட்டாள். ஆனால் இவர் பார்த்துக்கொண்டேயிருப்பார்.
அவள் எங்கு படித்தாள், என்ன படித்தாள், எங்கு டியுசன் எடுத்தாள், எத்தனை மனிக்கு டியுசன் ஆரம்பிக்கிறது முடிகிறது, எந்த பஸ்ஸில் போகிறாள், எந்த கோயிலுக்கு இன்று போவாள், நாளை என்ன செய்வாள் என்று எல்லாவற்றையும் ஞாபகம் வைத்திருக்க தனது அறிவைப் பாவித்துக்கொண்டான். எம்மையும் இம்சைப்படுத்தினான்.
50 சதவீம் முன்னேறிய அவனது காதல் அந்த 50 வீதத்தை விட்டு 3-4 ஆண்டுகளாக நகரவே இல்லை (அவளின் 50 வீதம் சேர்ந்தால் தானே காதல் 100 வீதமாகிறது)
இவனும் "சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன் மீண்டும் முருக்கை மரத்தில் ஏறி” என்னும் கதையைப்போன்று அவளைச் சுற்றித் சுற்றிக் காதலித்தான். 1985 ம் ஆண்டு என நினைக்கிறேன். கல்லைப் போன்ற அவள் மனம் மெதுவாவாகக் கரைகிறது போல் இருந்தது எமக்கு.
இவன் கால்கள் நிலத்தில் படாமலே நடந்தான், சைக்கில் டயர் வீதியில் படாமலே சைக்கிலோடினான். இதை சாட்டாக வைத்து நாங்கள் இலவசமாகக் சாப்பிட்டோம், படம் பார்த்தோம். அவனும் மகிழ்ச்சியாய் இருந்தான், நாங்களும் மகிழ்ச்சியாய் இருந்தோம்.
நாங்கள் அவர்களை பார்க்கவில்லை என அவர்கள் நினைக்கும் போதெல்லாம் இருவரும் பார்த்துப் புன்னகைத்தார்கள், வெட்கப்பட்டார்கள். இதெல்லாம் சகஜமய்யா என்பது போலவும் நாங்கள் பார்க்காதது போல இருந்தோம்.
ஒரு நாள் கடிதம் பரிமாறப்பட்டதாக கதைவந்தது. ”டேய் என்னடா கடிதம் வந்ததாக வதந்தி வருகிறதே” என்றேன். பயல் வாயைத் திறந்து பதில் சொல்லவில்லை. மௌனம் சம்மதம் என்று நினைத்துக் கொண்டேன்.
மட்டக்களப்பு நகரத்தில் இருந்த மாதா தேவாலயத்தில் சந்தித்துக் கொண்டார்கள் என்று ஒரு கதை வந்தது. (நகரத்தில் அண்ணண்மாரின் தொல்லை இல்லை). நானும் வாழ்க வளர்க என்று மெளனமாய் இருந்தேன். இடையில் பரீட்சைகள் காரணமாகவும், எனது காதல் காரணமாகவும் எமது நட்பின் நெருக்கம் சற்றுக் குறைந்திருந்தது
நான் கல்வி உயர்தரப்பரீட்சை எடுத்து பரீட்சை முடிவுகளுக்காக காத்திருந்த நாட்களில் திடீர் என ஒரு நாள் மதியம் மட்டக்களப்பு நகரத்துப் பேரூந்து நிலையத்தில் அவனைச் சந்தித்தபோது அவன் முகம் வாடிப் போயிருந்தது. மழையில் நனைந்த சேவல் போலிருந்தான். ”என்னடா” என்றேன். கண்கலங்கி வாய் துடித்தது அவனுக்கு. வா என்றழைத்துக் கொண்டு தேத்தண்ணிக் கடைக்குள் புகுந்தேன்.
இவன் அவளைச் சுற்றிய நாட்களில் மட்டக்களப்பு நகரத்தில் இருந்த ஒரு மேட்டுக்குடிப் பையனும் அவளைச் சுற்றியிருக்கிறான். இவனுடன் ஐக்கியமானவள் சற்று நாட்களின் பின் இவனின் தராதரங்களை அவனுடன் ஒப்பிட்டுப் பார்த்து, பின்பு அவனுடன் ஐக்கியமாகிவிட்டாள். அதை இவனால் தாங்க முடியவில்லை. உடைந்து அழுதான். இருவரும் தேத்தண்ணியும் போண்டாவும் சாப்பிட்டு வெளியே வந்தோம். அவன் சற்று ஆறியிருந்தான்.
அதன் பின் ஊர்ப் பிரச்சனைகள் காரணமாக நான் இந்தியாவுக்கு அனுப்பப்பட்டேன். இந்தியாவில் இருந்த ஒன்றரை ஆண்டுகளின் இறுதியில் அவனைக் கண்ட போது, இந்தியாவில் ஒரு மிக மிக மிக அழகான பெண்ணைக் கண்டிருப்பதாகவும், காதல் 50 சத வீத வெற்றியளித்துள்ளதாகவும் சொன்னான். அப்ப மீதி 50 என்ற போது... என்னை அடித்து விடுவது போலப் பார்த்தான். அடங்கிக் கொண்டேன்.
தற்போது இந்தியாவில் பிள்ளை குட்டிகளுடன் வாழ்கிறான் என அறியக்கிடைத்தது. ஆனால் அவனின் இரண்டாவது காதல் 100 வீதமாகியதா என்பது தெரியவில்லை. தெரிந்தும் இனி ஒன்றும் செய்வதற்கில்லை.
பி.கு:
அந்த நண்பனுக்கும், ஏறாவூருக்கும், மட்டக்களப்புக்கும் இடையே ஓடித்திரிந்த இலங்கை போக்குவரத்துச் சபை பேரூந்துகளுக்கும், பேரூந்துகளை அழகாக்கிய எங்கள் தேவதைகளுக்கும், தேவதைகளுக்கு அழகாகத்தெரிந்த எங்களுக்கும் இது சமர்ப்பணம்.
கதை மிக நல்லா உள்ளது. சுவாரசியம் மிகுந்து உள்ளது. மொத்தத்தில் நல்லா படைப்பு.
ReplyDeleteகதை நன்னா இருக்கு. உங்கள் காதல் கதையும் கதைத்து விடுங்கோ. 2012 ல் உலகம் அழிய போகிறதாம்!
ReplyDeleteம்!!! ம்!!1 அருமையான காதல் கதை. சொல்லபட்ட விதம் மிகவும் அழகு. சரி இது இருக்கட்டும் இனி உங்கள் காதல் கதையை சொல்லதொடங்குங்கோ. யார் அந்த தேவதை? அந்த தேவதை தான் இப்போது தங்கள் மனைவியா? உங்களுக்கு 60 வருவது இருக்கட்டும், அதை வாசிக்க நாங்களும் இருக்க வேணுமெல்லோ? என்ன நான் சொல்றது?
ReplyDelete"நனைந்த சேவல்போல இருந்தான்" நல்ல உவமைத் தொடர். கண்டுபிடித்த தமிழறிஞர் சஞ்சயன் வாழ்க. நல்ல படைப்பு. பாராட்டுக்கள். "தேவதைகளுக்கு அழகாகத் தெரிந்த எங்களுக்கும் இது சமர்ப்பணம்" என்னும் சொல்லாடல்தான் கொஞ்சம் ஓவராகப் படுகிறது.
ReplyDeleteஅந்த நாள் ஞாபகம் நெஞ்சிலே வந்ததே நண்பனே நண்பனே நண்பனே !!!!!
ReplyDelete99 % உண்மைக் கதை .
This comment has been removed by a blog administrator.
ReplyDelete