முஸ்தபாவின் ஆடு


காலம் என்னை அவ்வப்போது வேருடன் பெயர்த்து வேறு இடங்களில் பதித்துவிடுகிறது. அப்படித்தான் இப்போதும்.

இந்த உலகத்தில் மிகவும் «சபிக்கப்பட்ட» ஒரு இடத்தில் வாழத்தொடங்கியிருக்கிறேன். மொழி, கலாச்சாரம், மதம், காலநிலை என்று அனைத்தும் எனக்குப் புதியவை. இருப்பினும் மனம் இவ்விடத்தில் துளிர்க்கத்தொடங்கியிருக்கிறது.

நாள் முழுவதும் ஐந்துமுறை பாங்கொலி திறந்துவிட்டிருக்கும் சாரளங்களின் ஊடாக வந்து நேரத்தை புரியவைக்கும்போது வாழ்ந்து முடிந்துவிட்ட 1980களின் ஏறாவூர் வாழ்க்கை நினைவில் வருவதை மறுப்பதற்கில்லை.

அண்மையில் மனதைப் பிசையும் இரண்டு வீடியோக்களைப் பார்க்கக் கிடைத்தது. அதில் இருந்து இன்னும் நான் மீளவில்லை.

சில ஆண்டுகளுக்கு முன் குண்டுவீச்சின் பின் இடுபாடுகளுக்கு இடையில் 24 மணிநேரங்கள் கடந்தபின் ஒரு கைக்குழந்தையை சிரிய யுத்தத்தில் குண்டுவீச்சுகளின் பின் மக்களை மீட்டெடுக்கும் White Helmets அமைப்பினர் மீட்டு எடுக்கின்றனர். பின்பு, அக்குழந்தை “அதிசயக் குழந்தை” என்று அழைக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளின்பின் அக்குழந்தை மீட்டவர்கள் அக்குழந்தையை சந்திப்பதை காண்பிக்கிறது அந்த வீடியோ. அக்குழந்தையை மீட்ட White Helmets போராளி 2016ம் ஆண்டு இறந்துவிட்டிருக்கிறார். அவரது தோழர்கள் அக்குழந்தையை சந்திக்கின்றனர்.

இதேபோன்று இன்னொரு வீடியோவில் West Bank (யோர்டான் ஆற்றின் மேற்குக்கரைப்பகுதி) வாழும் ஒரு பாலஸ்தீனத்து மனிதரை இஸ்ரேலிய இராணுவத்தினர் தடுத்திருக்கும்போது அம்மனிதனின் ஒலீவ் மரங்களை ஒரு மனிதர் இயந்திர வாளைக்கொண்டு வெட்டித்தள்ளுகிறார். அவனது நிலத்தில் இருந்து அவனை அகற்றுவதற்கான தந்திரம் அது.

இராணுவத்தினர்களைக் மீறி ஓடிவந்த அம்மனிதன் வெட்டப்பட்ட மரங்களை அள்ளியணைத்த “ஓ… என் ஒலீவ் மரங்களே” என்று குழந்தையை இழந்துவிட்ட தந்தைபோன்று அரற்றுகிறான். அவன் கண்முன்னேயே ஏனைய மரங்களும் வெட்டப்படுகின்றன. அவன் மண்ணிற் புரண்டு அழுதழுது சபிக்கிறான்.

நேரம் காலை 7மணி. நான் உட்கார்ந்திருந்த வாகனம் 2 மணிநேரங்களாக யெரூசலேம், பேத்லகேம் நகரங்களை நோக்கி தெற்குத்திசையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

முஸ்தபா எதுவித சலனமும் இன்றி வாகனத்தை 90ம் இலக்க பாதையில் செலுத்திக்கொண்டிருக்கிறார். எமக்கு இடப்பக்கமாய் கலிலியேக் கடல் (Sea of Galilee) முடிவுறாது தொடர்ந்துகொண்டே வருகிறது. இந்த கலிலியேக் கடலின் மேல்தான் யேசுநாதர் நடந்தார் என்றும், 5000 மக்களுக்கு அவர் இங்குதான் உணவளித்தார் என்று திருவிவிலியம் கூறுகிறது. ஆனால், இன்று இந்த கலிலேயேக் கடலின் வடகிழக்கில் பலர் உணவின்றி நாட்களை கடந்துகொண்டிருக்கின்றனர் என்பது முரண்நகை.

ஏறத்தாழ இன்னும் 2.5 மணிநேரங்களில் யெருசலேத்தை சென்றடையலாம் என்கிறார் முஸ்தபா. எனக்கு தூக்கம் வருகிறது. முன்னிருக்கையில் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டு உறங்க முயற்சிக்கிறேன். கண்ணுக்குள் நோர்வே வாழ்வின் அழகிய பக்கங்கள் ஒளிப்படமாய் வலம்வருகின்றன. அன்பிற்கு அழிவில்லை காண் என்பது உண்மைதான்.

பின்னால் உட்கார்ந்திருக்கும் நண்பர்கள் பாலஸ்தீனத்தைப்பற்றி உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். லஸ்தீனத்தைப்பற்றி மகிழ்ச்சியான செய்தியாக எதையும் கேட்க முடிவதில்லை. சபிக்கப்பட்ட இனம்.

முஸ்தபா பாலஸ்தீனத்தைத் சேர்ந்தவர். மெலிந்த தேகம். நரைத்த சில நாட்களான தாடி., சுருட்டை முடி. வெய்யிலில் புடம்போடப்பட்ட தேகம். எமது சாரதி அவர். என்னைக் கண்ட முதல் நாள், நீ ஆபிரிக்கனா என்ற அவரது கேள்விக்கு கூகிள் ஆண்டவரின் உதவியுடன் நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்று நிறுவினேன். அவரது பார்வை என்னை நம்பவில்லை என்பதுபோலிருந்தது. அல்லா சத்தியமாக உண்மை என்ற பின்பு அவர் நம்பினார் என்றே நினைக்கிறேன்.

அன்று முஸ்தபாவுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது இரண்டு கேள்விகளைக் கேட்டார்.

உனக்கு எத்தனை குழந்தைகள்? எத்தனை மனைவிகள்?

முதலாவது கேள்விக்கான பதிலான “இரண்டு” என்பதை நான் கூறியபோது, முஸ்தபா அதை தனது இரண்டாவது கேள்விக்கான பதிலாக நினைத்துக்கொண்டார். உனக்கு இரண்டு மனவிகளா என்று கேட்டார். அந்தளவு துணிவு எனக்கில்லை என்று கூறியபோது எனக்கும் துணிவில்லை என்றுவிட்டு வெடித்துச் சிரித்தார். அவருக்கு ஏழு குழந்தைகள். முஸ்தபா உனக்கு வீட்டில் வேறு வேலையே இல்லையா என்று கேட்டேன். வெட்கமாய் சிரித்தார்.

பெருஞ்சாலையில் இருந்து விலகியிருந்த ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தி தேனீர் அருந்தினோம். இனிப்பு அதிகமாக இருந்தது. நான் தேனீருக்குள் ரொட்டியை நனைத்து நனைத்து உண்டதை எனது நண்பர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அதன் அருமையை அவர்களுக்கும் கற்றுக்கொடுத்தேன்.

மதியம்போல் நாம் யெருசலேம் நகரத்தை வந்தடைந்தோம். வாகனத்தை நிறுத்திவிட்டு வந்தார் , முஸ்தபா. பழங்காலத்து யெருசலேம் நகரத்து டமாஸ்கஸ் வாயிலின் ஆரம்பத்தில் இராணுவத்தினர் சோதனைகளை மேற்கொண்டபின் நகரத்தினுள் நடந்துகொண்டிருந்தோம்.

இந்த நகரத்தின் உட்புகும் வாயில்கள் அனைத்தும் வலப்புறமாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏன் என்று தெரியுமா என்றார் முஸ்தபா. நாம் அனைவருமே உதட்டைப்பிதுக்கினோம்.

பாதுகாப்புதான் அதற்குக் காரணம் என்ற முஸ்தபா தொடர்ந்தார். ஒரு கோட்டையை வலப்பக்கமாக தாக்கும்போது இடது கையில்தான் அதிகமானவர்கள் ஆயுதங்களை வைத்திருப்பார்கள். இடதுகை பலருக்கு பலவீனமானது. கோட்டையை பாதுகாப்பவர்கள் இடதுபக்கமாக தாக்கவேண்டும் என்பதால் வலதுகையில் ஆயுதங்களை வைத்திருப்பார்கள். எனவே வலதுகையில் ஆயுதம் இருப்பதால் எதிரியை வெல்வது இலகு. அதை எனது மனதினுள் படமாக பதிந்து புரிந்துகொள்வதற்கு சற்று நேரமெடுத்தது. இருப்பினும் அதன் தார்ப்பரியத்தை புரிந்துகொள்ள முடிந்தது.

பழைய நகரம் முஸ்லீம்களின் பகுதி, யூதர்களின் பகுதி, ஆர்மேனியர்களின் பகுதி, கிறீஸ்தவர்குளின் பகுதி எனப் பிரிக்கப்பட்டிருந்தாலும் பல சமூகங்கள் தங்களின் வணக்கத்தலங்களை இங்கு கொண்டிருக்கிறார்கள்.

நாம் எத்தியோப்பிய திருச்சபையின் தேவாலயத்திற்கு அருகில் நின்றிருந்தோம். பலர் அழுவதுபோன்று சத்தம் வந்தது. பயப்படாதீர்கள், இப்படித்தான் எத்தியோப்பியர்கள் ஜெபிப்பார்கள் என்றார் முஸ்தபா.

நான் உள்ளே செல்லவில்லை. இங்கு ஒரு பாதாளச் சுரங்கம் உண்டு. அது கடைத்தெருவில் முடிவடைகிறது. அதனூடாக செல்வோமா என்றபோதும் மறுத்துவிட்டேன்.

யேசுதாதர் சிலுவையை சுமந்துசென்ற பாதையின் வழியே நடந்துகொண்டிருந்தபோது, தண்ணீர் விடாய்கிறது என்றேன், முஸ்தபாவிடம். எனக்குப்பிடித்தமான எலுமிச்சை மற்றும் மின்ட் இலைகளுடன் சீனிகலந்த நீராராகம் வாங்கும் கடைக்கு அழைத்துப்போனார். 38பாகை வெய்யிலின் வெம்மையை அவ்வருமையான நீராராகம் தீர்த்து மனதுக்கு புத்துணர்ச்சியைத் தந்தது.

உன்னுடன் ஒருவிடயம் பேசவேண்டும் என்றார் முஸ்தபா. “சொல்லுங்கள்“ என்றுவிட்டு வசதியாக உட்கார்ந்துகொண்டேன். ஒரு சிகரட்ஐ எடுத்து பற்றவைத்துக்கொண்டார். ஆழமாக உள்ளிழுத்து புகையை ஊதினார்.

“எங்கள் குடும்பத்தில் நானும் தம்பியும் , நான்கு சகோதரிகளும் மட்டுமே. தம்பி பல வருடங்களுக் முன் காணாமல்போய்விட்டார். அவன் தென்னமெரிக்கா சென்றுவிட்டதாக அறிகிறோம். அவன் குடும்பத்துடன் அதிகம் ஒட்டுவதில்லை. ஆனால் அம்மாவுக்கு அவனைப் பார்க்கவேண்டுமாம். எங்கள் குடும்பத்திடம் ஆட்டு மந்தை இருக்கிறது. அம்மா அவரது அந்திமக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்”.

“ம்”

“நான் அண்மையில் தம்பியின் பெயரை இணையத்தில் தேடியபோது பெரூ நாட்டு இணையத்தளத்தளம் ஒன்றில் அவனது பெயர் காணப்பட்டது. அந்த இணையத்தளத்தை தொடர்புகொள்ளவேண்டும். எனக்கு கணிணிபற்றி அதிகம் தெரியாது. எனக்கு உதவ முடியுமா?” என்றார் முஸ்தபா.

“விபரத்தைத் தாருங்கள். முயற்சிப்போம்” என்றேன்.

அடுத்தடுத்த நாட்களில் இணையத்தளத்தின் விபரத்தினைப்பெற்று என்னால் முடிந்ததைத் செய்தேன். பின்பொருநாள் எனக்கு வந்த மின்னஞ்சலையும் முஸ்தபாவுக்குக் கொடுத்தேன்.

அன்று யெரூசலேம் நகரத்தின் பல இடங்களை சுற்றிக்காண்பித்தார். பெத்லகேம் நகரத்தில் உள்ள பாலஸ்தீனத்தையும் யெரூச-5லேம் நகரத்தையும் பிரிக்கும் பெருச் சுவருக்குச் சென்றிருந்தபோது அச்சுவரில் Ahed Tamimi இன் படத்தை பிரேசில் நாட்டுக் கலைஞர் ஒருவர் வரைந்துகொண்டிருந்தார். படத்தின் உயரம் 4-5 மீற்றர் இருக்கும். அக்கலைஞர் தனது முகத்தை மூடியிருந்தார். காரணம் அருகில் இருந்த பாதுகாப்பரணில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்தினர் தன்னை அடையாளம் காணக்கூடாது என்பதலாம். Ahed Tamimi பற்றி இணையத்தில் தேடிக்கொள்ளுங்கள். இன்றைய பாலஸ்தீனப் பெண்களில் குறிப்பிடத்தக்கவர்.

அந்த மதில் முழுவதும் பாலஸ்த்தீனத்துப் போராட்டத்தின் கதைகளை, சுலோகங்களை, வசனங்களை, படங்களை, சித்திரங்களைக் கொண்டிருந்தது. அருகில் இருந்த The Walled Off Hotel அருங்காட்சியகத்தில் இந்த மதில்கட்டப்பட்டதன் சரித்திரம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.

முஸ்தபாவின் நண்பரின் வீடும் அவரின் தாயாரின் வீடும் எதிரெதிரே இருந்தனவாம். இப்போது மதிலுக்கு அப்பால் தாயும், இங்கு மகனும் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் சந்திக்கவேண்டும் எனின் ஒன்றரை மணிநேரம் பயணிக்க வேண்டும். பல இராணுவச்சோதனைச்சாவடிகளைக் கடக்கவேண்டும். 5 நிமிடத்தூரத்தில் இருந்த வைத்தியசாலைக்கு செல்வதென்றாலும் அப்படியே. இஸ்ரேல் நாட்டு வைத்தியசாலைக்கு பாலஸ்தீனத்தவர்கள் செல்லமுடியாது. நண்பர் கரடுமுரடான அரபிமொழியில் பேசிக்கொண்டிருந்தார். முஸ்தபா மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்.

அங்கிருந்து புறப்பட்டபோது பேத்லகேம் நகரத்து சோதனைச்சாவடியில் எங்கள் வாகனம் சோதனையிடப்பட்டது. முஸ்தபாவைப் பார்ப்பதற்குப் பாவமாக இருந்தது. அவரது அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டபின், அவரை அழைத்து விசாரித்தார்கள். அதன்பின் நாம் விசாரிக்கப்பட்டோம். வெளியேற அனுதித்தார்கள்.

அன்று முன்னிரவு சாக்கடலில் (Dead sea) குளித்தோம். உப்பின் அடர்த்தி அதீதமாகையால் எவரும் அங்கு நீந்தலாம் (மிதக்கலாம்). இது கடல் மட்டத்தில் இருந்து 430 மீற்றர்கள் பதிவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகத்தில் மிகவும் பதிவான பகுதி இதுவாகும்.

முஸ்தபாவின் கதையை நிதானமாகச் சொல்லிக்கொண்டு வந்தார். 1967ம் ஆண்டு இடப்பெயர்வு, லெபனானில் அகதி வாழ்க்கை, தாயார், தனது குடும்பம் என பலதையும் பேசினார். நானும் தலையை ஆட்டியபடி அவ்வப்போது கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இரவு சாமம்போல் வீதியோரத்தில் வாகனத்தை நிறுத்தி பாலஸ்தீனத்தின் கருங்கோப்பி வாங்கிக் குடித்தார். எனக்கு பசித்தது. ரொட்டியும் கடலையும், அரைத்த தக்காளியும், தயிரும் கிடைத்தது. இதைவிட இங்கு வேறு என்ன உணவை எதிர்பார்க்கலாம். பசியின்போது எந்த உணவும் ருசியானதே. இன்னிப்பான தேனீருடன் இரவு உணவு முடிந்தது. அன்றிரவு படுக்கையில் விழுந்தபோது நேரம் சாமம் 1 மணி. முஸ்தபா வீடுபோய்ச் சேர்வதற்கு இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது.

ஒருவாரம் சென்றிருக்கும், முஸ்தபா என்னை காலையிலிருந்து தேடுகிறார் என்றனர் நண்பர்கள். அவரைத்தேடிப்போனேன். கையில் கோப்பியுடன் உட்கார்ந்திருந்தார். என்னைக் கண்ணுற்றதும் ஓடிவந்து அணைத்துக்கொண்டார்.

மகிழ்ச்சிபொங்க, தம்பியுடன் தொடர்பு கிடைத்திருக்கிறது. தாயாருடன் தம்பி உரையாடியதாகவும் விரைவில் அவர் இங்குவருகிறார் என்றும், நான்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதால் என்னை பிரத்தியேகமான விருந்திற்கு அழைக்கும்படி தாயார் கட்டளையிட்டிருப்பதாகவும் சொன்னார்.

பல ஆண்டுகளாகக் காணாமற்சென்ற எனது மகன் வந்திருக்கிறான். மந்தையில் உள்ள கொழுத்த ஆட்டை அடியுங்கள். சிறந்த உணவுகளைப் பரிமாறுங்கள் என்ற திருவிவிலியத்தின் கதை நினைவிற்கு வந்தது.

என்னையும் விருந்துக்கழைத்த அந்தத்தாயின் கைகளை கண்களில் ஒற்றிக்கொள்ளவேண்டும்.

வாழ்தல் என்பது: பெயர்த்தலும் நடுதலும்

“Life begins at the end of your comfort zone. என்றும், Osloவின் வடக்குத்திசை நோக்கி நகர்ந்தவொரு பேரூந்தில் சில 10 நிமிடங்கள் பயணித்தபின் இறங்கிக்கொண்டேன். ”ஒரு வெள்ளைக் கோடு ஆகாயத்தைப் பிளந்துகொண்டிருந்தது” என்றும் முடிந்திருந்தது ஒன்றரை மாதத்திற்கு முன் நான் எழுதிய "வேதாளத்தின் விக்கிரமாதித்தன்" என்னும் பதிவு.

ஒவ்வொரு மனிதனும் தனது வாழ்வில் ஒரு முறையேனும் இடம்பெயர்ந்திருப்பான் என்றே நம்புகிறேன். இடப்பெயர்வு என்பது சாமான்யமானதல்ல. ஒரு மரத்தினை பெயர்த்து வேறு இடத்தில் நடுவதற்குச் சமமானது. சில மரங்கள் ஒரு இடப்பெயர்வையே தாங்கமாட்டாது. சில மரங்களை நீங்கள் விரும்பிய இடங்களுக்கு மாற்றி மாற்றி நடலாம். அது தன்போக்கில் வாழ்ந்திருக்கும். இடப்பெயர்வு அதற்கொன்றும் பொருட்டல்ல, நாடோடிகள் போன்றவை அவை.

கொழும்பின் புறநகரான ராகமையில் பிறந்ததில் இருந்து இதுவரை 20 ஊர்களிலும் மூன்று நாடுகளிலும் வாழ்ந்திருந்திருக்கிறேன். அதாவது ஒரு இடத்தில் சராசரி 2.8 வருடங்கள்.

நான் ஒரு நாடோடி என்பது மெது மெதுவாகப் புரியத்தொடங்கியிருக்கிறது.

எனது நினைவில் இருக்கும் முதலாவது இடப்பெயர்வு ஏறாவூரில் இருந்து அக்கரைப்பற்றிற்கானது. அப்பா லொறியில் பொருட்களை ஏற்றியது சற்று நினைவில் இருக்கிறது. அம்மாவுடன் அக்கரைப்பற்றிற்கு பேரூந்தில் சென்றதும் நினைவிருக்கிறது.

கடந்த ஆவணி 15ம் திகதிவரையில் இறுதியானது 10வருடங்களுக்கு முன் வடமேற்கு நோர்வேயின் ஒரு கிராமத்தில் இருந்து Osloவிற்கு இடம்பெயர்ந்ததே.

ஒரு பயணப்பொதியில் எனது சொத்துக்கள் அடைந்து கிடைந்தன. Osloவிற்கு வந்த முதல் சிலநாட்கள் தங்குவதற்கு இடம் கிடைக்கவில்லை. எனது வாகனத்திலேயே தங்கினேன். அதன்பின் தனது இரண்டு கரங்களாலும் என்னை அரவணைத்து, ஆறுதற்படுத்தி, வாழ்வில் பற்றினையேற்படுத்தி, நண்பர்களைத் தந்து, மனச்சோர்வை நீக்கி மீண்டும் என்னை இயக்கிய பெருமை இந்த நகரத்திற்கு உண்டு.

இந்த நகரத்தினுள்ளும் இரண்டு இடங்களில் வாழ்ந்திருக்கிறேன். நகரத்தின் மையப்பகுதியின் இரைச்சல் தாளாது, ஒதுக்குப்புறமான ஒரு பகுதிக்கு நகர்ந்துகொண்டேன். அங்குதான் கடந்த ஆறுவருடங்களாக வாழ்ந்திருந்தேன்.

பதின்மகாலத்தின்பின் நான் வாழ்ந்திருந்த ஒவ்வொரு ஊரையும் எனது சட்டைப்பைபோன்று நன்கு அறிவேன். சென்னையில் 15 மாதங்கள் வாழ்ந்திருந்தேன். அந்நாட்களில் அந்நகரத்தின் அனைத்துப்பகுதிகளையும், அங்கிருந்த திரையரங்குகளையும், பேரூந்து இலக்கங்களையும் அறிந்திருந்தேன். புதிதாய் வருபவர்களுக்கு ஊரைச் சுற்றிக்காண்பிக்கும் வழிகாட்டியாக என்னை அனுப்புவார்கள் நண்பர்கள்.

இப்போது Osloவும் அப்படியாகிவிட்டது. ஒவ்வொரு நகரமும் தனக்குள் இரகசியங்களைப் மறைத்திருக்கும். அவற்றை அறியும்போது நாமும் அந்நகரத்துடன் அந்நியோன்யமாகிவிடுகிறோம். ஒரு நகரத்தினுள் இருக்கும் இரகசியங்களுக்கு அளவில்லை. எதையெடுத்தாலும் அதற்கென்றொரு இருண்ட பகுதியுண்டு.

Osloவில் செல்வச்செழிப்பான பகுதிகளின் இருண்ட பகுதிகளில் இருந்து வறுமையான பகுதிகளின் ஒளிமிகுந்த மனிதர்கள்வரை பலரை காலம் எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

போதைப்பொருள் விற்பனையாளர், வீடுவரை மதுவினை கொணர்ந்து தருபவர், வீடு திருத்துபவர், குறைந்த விலையில் விற்பனைவரியின்றி வாகனம் திருத்துபவர், வீட்டுவேலைசெய்யும் கிழக்கு ஐரோப்பியர்,விசா அற்ற மனிதர்கள், இசைக்கலைஞர்கள், வீதியோர விற்பனையாளர்கள், பால்வினைத்தொழிலாளிகள், ஓர்பாலினத்தவர், நாசிகள், விளையாட்டரங்குகள், பூங்காக்கள், காட்டுப்பாதைகள், கலையரங்கங்கள், திரையரங்குகள், கடற்கரைகள், ஆற்றோரங்கள், ஆளரவமற்ற இரயில் நிலையங்கள், பிச்சைக்கார்கள் என அனைத்தையும் இந் நகரம் எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது.

இந்நகரத்திற்கு வந்தபின்பே அதிகம் எழுதத்தொடங்கினேன். ஆரம்பகாலங்களில் சந்தித்த மனிதர்களின் கதைகளை எல்லாம் எழுதிவைத்திருக்கிறேன். அவற்றை வாசிக்கும்போது எனக்கே ஆச்சர்யமாக இருக்கும். இப்படியான மனிதர்களையெல்லாம் சந்தித்திருக்கிறேனே, ஏன் அவை நினைவில் இல்லையென்று.

ஆரம்ப காலங்களில் அதிக தமிழ் நண்பர்கள் இருக்கவில்லை. காலப்போக்கில் நட்புப்பட்டியலில் பெரும்பான்மையானவர்கள் தமிழர்களாகவே இருந்தார்கள்.

கணிதம் கற்பித்ததாலும்,பொது அமைப்புக்களில் இயங்கியதன் காரணமாகவும் எனக்கு பல குழந்தைகளுடன் அறிமுகமுண்டு. அவர்கள் உலகத்தில் வயதை மறந்து என்னை இணைத்துக்கொள்ளும் கலையும் வாய்த்திருக்கிறது. இது வாழ்க்கையின் அயர்ச்சியைப் போக்கிக்கொள்ள உதவும் ஒரு காரணி.

தனியே வாழ்வது என்பது இலகுவானதல்ல. இதை உணர்ந்த சிலர் என்னை தங்கள் குடும்பத்தவனாக நடாத்தியிருக்கிறார்கள். அத்தனை அன்பான மனிதர்களைத் தந்திருக்கிறது இந்த நகரம்.

தனியே இருக்கிறாயே, ஏன் திருமணம் செய்தால் என்ன என்று எனக்கு திருமணம் பேசிய நண்பர்களும் உண்டு. அவர்களிடம் நாய் வாலை நிமிர்த்தமுடியாது என்று கூறித் தப்பிக்கொண்டேன்.

முன்கோபமும், நேருக்குநேரே கருத்தைச் சொல்வதும் எனது சுபாவம். அரசியற்கொள்கை, தேசியம், குறுந்தேசியம், புலிப்பினாமிகள் என்று உரையாடியும், பொருதியும் இருக்கிறேன். எதையும் நேர் நேரே கூறிவிடுவதால் பலருடன் மனக்கசப்பு ஏற்பட்டிருக்கிறது.

இப்படி மனக்கசப்பாகிப்போனவர்களுடன் எதிர்பாராத விதமாக நெருங்கிப் பழகியபின் அவர்கள்பற்றிய எனது கருத்தையும், என்னைப்பற்றிய அவர்களுடைய கருத்தையும் காலம் மாற்றிவிட்டிருக்கிறது.

மனித உறவுகளுக்கு முன்கற்பிதங்கள் ஆபத்தானவை.

எனது தவறுகளைத் தவறு என்று பொதுவெளியில் கூறி, மன்னிப்புக்கோரும் மனம் எனக்கு வாய்த்திருக்கிறது. வயதும், காலமும் ஆசான்களல்லவா.

தவறுகளை ஏற்பதும், திருந்துவதும், என்னையே மாற்றிக்கொள்வதும் அவசியமாய் இருக்கிறது. தவறுகளற்ற மனிதர்களுடன் உறவாடுவது என்பது எனக்குச் சிரமமானது. தினம் தினம் தவறுகளில் இருந்து கற்கும் சாதாரணமானவன் நான். இப்படியான ஒருவனால் தவறுகளே செய்யாத புனிதமானவர்களுடன் நட்பாயிருப்பதும் சிரமமானதே.

வாழ்ந்திருங்கள் புனிதர்களே!

துன்ப நினைவுகளும் சோர்வும் பயமுமெல்லாம் அன்பில் அழியும்! அன்புக்கு அழிவில்லை காண் என்றானல்லவா அந்த மீசைக்காரன்.

நிறுவனங்களுக்காக தம்மை அர்ப்பணிக்கும் மனிதர்களையும், ஒற்றுமையே பலம் என்னும் நிறுவனங்களையும் இங்குதான் கண்டேன். உண்மைத்தன்மையுடன் சமூகத்திற்காக சேர்ந்தியங்கினால் பலதையும் சாதிக்கலாம் என்பதை அனுபவித்து அறிந்துகொள்ள முடிந்ததும் இங்குதான்.

பல அரச நிறுவனங்கள், சமூக நிறுவனங்கள், வேற்றினத்தவர்களின் சமூகங்கள், விளையாட்டுக் கழகங்கள், பாடசாலைகள், மதநிறுவனங்கள் என்று பலருடனும் இந்த 10 வருடகாலத்தில் இணைந்தியங்கியிருக்கிறேன். மனமகிழ்ச்சியான நிகழ்வுகளேயே மனம் நிரம்பியிருக்கிறது.

ஒஸ்லோவின் இயற்கையை நெருங்கி அனுபவித்திருக்கிறேன். ஒஸ்லோ கடல் நீரேரி, தீவுகளுக்கான பயணங்கள், மீன்பிடித்தல், கப்பலில் பயணித்தல், மலையேற்றம், மலைப்பகுதியில் நடத்தல், பனிச்சறுக்கு, துவிச்சக்கரவண்டிப் பயணங்கள் என்று இந்நகரத்தைச் சுற்றி நேரகாலமின்றி அலைந்து, அமிழ்ந்து, ஆறியிருக்கிறேன். ஒஸ்லோவின் சுற்றுலாத்தளங்கள் உள்ளங்கை நெல்லிக்கனி.

எனது வாழ்வில் இருமுறை ஒஸ்லோ நகரத்தில் வாழ்ந்திருக்கிறேன். முதல் முறை 4 வருடங்கள், இரண்டாவது முறை 10 வருடங்கள். பல பல அனுபவங்களையும் கற்றல்களையும் தந்திருக்கிறது இந் நகரம்.

காலமானது, சஞ்சயா, தற்போதைக்கு இந்த 14 வருடங்களும் உனக்குப் போதுமானது, அங்குள்ள பெரு மக்கள் இனியாவது நிம்மதியாக இருக்கவேண்டுமல்லவா, என்றிருக்கிறது.

அது அப்படி சொன்னது மட்டுமல்லாது என்னை மத்திய கிழக்கில் 3 நாடுகளின் எல்லைப்பகுதிக்கு இடம்பெயர்த்திருக்கிறது. வேர் பிடித்து வளரவேண்டும். வளர்வேன்.

நான் வாழும் ஒரு பகுதியில் போர்நடைபெறுகிறது, மறுபகுதியில் பெரும் போர் மேகங்கள் சூழ்ந்திருப்பதால் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறார்கள், மறுபகுதியில் விடுதலைவேண்டி போராடும் ஒரு இனக்குழு. அவர்களின் பாரம்பர்ய நிலத்தில் மொழி, மதம், கலாச்சாரம் ஆகியவற்றுடன் சற்றும் பரீட்சயமின்றி வாழத்தொடங்கி ஒன்றரை மாதங்களாகின்றன. தினமும் காலையில் பாங்கோசைங்கோசையுடன் விழிக்கிறேன். அது எங்கள் ஏறாவூரை நினைவூட்டுகிறது.

இங்குள்ள மக்களின் வாழ்க்கையை ஒப்பிடுகையில் நோர்வே வாழ்க்கையை எவ்வாறு கூறுவேன். மலைக்கும் மடுவுக்குமான இடைவெளி. இல்லை, இவற்றை ஒப்பிடவே முடியாது. எனது அதிஸ்டம் நான் நோர்வேயில் வாழ்ந்தது. இப்போது இங்கு வாழக்கிடைத்தது. இதுவும் பலதையும் கற்றுத்தரும் என்பதில் ஐயமில்லை. கற்றல் அழகானது.

வறுமையினால் கழுதையில் பயணிக்கும் மனிதர்களின் மத்தியில் வாழ்வதும், ஒரு ரொட்டிக்காக காத்திருக்கும் மனிதர்களைக் காண்பது என்பதும் பலவித கற்றல்களை மனதுக்குக் கொடுக்கிறது. அதுமட்டுமல்ல, அவர்களது சுதந்திரப்போராட்டம் நசுக்கப்படும் முறையை எழுத்தில் வடிக்கமுடியாது. அத்தனை கொடுமையான வேதனை அது.

மனிதக்குழுக்களுக்கு தனித்தனியான அரச சட்டங்கள், ஊர்கள், பாதைகள், சலுகைகள், மதில்களால் பிரிக்கப்பட்ட நிலப்பரப்புக்கள். நில அபகரிப்புக் கொடுமையைப்பற்றி எவ்வளவோ எழுதலாம், 20 வருடங்களுக்கு மேலாக ஒரு குறிப்பிட்ட நிலப்பரப்பை விட்டு வெளியேற அனுமதிக்கப்படாத மக்கள் என பல அடக்குமுறைக்குள் வாழும் மனிதர்கள் இவர்கள்.

இங்கு இயங்கும் சர்வதேசத் தொண்டு நிறுவனமொன்றில் தன்னார்வலனாக இணைந்திருக்கிறேன். காலப்போக்கில் ஒரு வேலை கிடைக்கும் சந்தர்ப்பம் உண்டு. இல்லை என்றால் காலம் வேறு எங்கும் அழைத்துச் செல்லலாம், அல்லது ஒஸ்லோ முருகன் இந்த ஆசாமியை மீண்டும் தனக்கருகில் அழைத்துக்கொள்ளவும் கூடும்.

அவசர அவசர தீர்மானங்களினாலும், விடுமுறைக்காலம் என்பதாலும் நண்பர்களிடம் எதையும் பேசிப்பிரியும் சந்தர்ப்பம் இருக்கவில்லை. மன்னிக்க.

மறக்க முடியாத வாழ்வியல் அனுபவங்களைத் தந்த பழம்பெரும் கிறிஸ்டியானியா நகரத்திற்கு எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.

Life begins at the end of your comfort zone என்பது உண்மைதானே.






அன்புக்கு அழிவில்லை காண்.