முஸ்தபாவின் ஆடு
காலம் என்னை அவ்வப்போது வேருடன் பெயர்த்து வேறு இடங்களில் பதித்துவிடுகிறது. அப்படித்தான் இப்போதும்.
இந்த உலகத்தில் மிகவும் «சபிக்கப்பட்ட» ஒரு இடத்தில் வாழத்தொடங்கியிருக்கிறேன். மொழி, கலாச்சாரம், மதம், காலநிலை என்று அனைத்தும் எனக்குப் புதியவை. இருப்பினும் மனம் இவ்விடத்தில் துளிர்க்கத்தொடங்கியிருக்கிறது.
நாள் முழுவதும் ஐந்துமுறை பாங்கொலி திறந்துவிட்டிருக்கும் சாரளங்களின் ஊடாக வந்து நேரத்தை புரியவைக்கும்போது வாழ்ந்து முடிந்துவிட்ட 1980களின் ஏறாவூர் வாழ்க்கை நினைவில் வருவதை மறுப்பதற்கில்லை.
அண்மையில் மனதைப் பிசையும் இரண்டு வீடியோக்களைப் பார்க்கக் கிடைத்தது. அதில் இருந்து இன்னும் நான் மீளவில்லை.
சில ஆண்டுகளுக்கு முன் குண்டுவீச்சின் பின் இடுபாடுகளுக்கு இடையில் 24 மணிநேரங்கள் கடந்தபின் ஒரு கைக்குழந்தையை சிரிய யுத்தத்தில் குண்டுவீச்சுகளின் பின் மக்களை மீட்டெடுக்கும் White Helmets அமைப்பினர் மீட்டு எடுக்கின்றனர். பின்பு, அக்குழந்தை “அதிசயக் குழந்தை” என்று அழைக்கப்படுகிறது. இரண்டு ஆண்டுகளின்பின் அக்குழந்தை மீட்டவர்கள் அக்குழந்தையை சந்திப்பதை காண்பிக்கிறது அந்த வீடியோ. அக்குழந்தையை மீட்ட White Helmets போராளி 2016ம் ஆண்டு இறந்துவிட்டிருக்கிறார். அவரது தோழர்கள் அக்குழந்தையை சந்திக்கின்றனர்.
இதேபோன்று இன்னொரு வீடியோவில் West Bank (யோர்டான் ஆற்றின் மேற்குக்கரைப்பகுதி) வாழும் ஒரு பாலஸ்தீனத்து மனிதரை இஸ்ரேலிய இராணுவத்தினர் தடுத்திருக்கும்போது அம்மனிதனின் ஒலீவ் மரங்களை ஒரு மனிதர் இயந்திர வாளைக்கொண்டு வெட்டித்தள்ளுகிறார். அவனது நிலத்தில் இருந்து அவனை அகற்றுவதற்கான தந்திரம் அது.
இராணுவத்தினர்களைக் மீறி ஓடிவந்த அம்மனிதன் வெட்டப்பட்ட மரங்களை அள்ளியணைத்த “ஓ… என் ஒலீவ் மரங்களே” என்று குழந்தையை இழந்துவிட்ட தந்தைபோன்று அரற்றுகிறான். அவன் கண்முன்னேயே ஏனைய மரங்களும் வெட்டப்படுகின்றன. அவன் மண்ணிற் புரண்டு அழுதழுது சபிக்கிறான்.
நேரம் காலை 7மணி. நான் உட்கார்ந்திருந்த வாகனம் 2 மணிநேரங்களாக யெரூசலேம், பேத்லகேம் நகரங்களை நோக்கி தெற்குத்திசையில் ஓடிக்கொண்டிருக்கிறது.
முஸ்தபா எதுவித சலனமும் இன்றி வாகனத்தை 90ம் இலக்க பாதையில் செலுத்திக்கொண்டிருக்கிறார். எமக்கு இடப்பக்கமாய் கலிலியேக் கடல் (Sea of Galilee) முடிவுறாது தொடர்ந்துகொண்டே வருகிறது. இந்த கலிலியேக் கடலின் மேல்தான் யேசுநாதர் நடந்தார் என்றும், 5000 மக்களுக்கு அவர் இங்குதான் உணவளித்தார் என்று திருவிவிலியம் கூறுகிறது. ஆனால், இன்று இந்த கலிலேயேக் கடலின் வடகிழக்கில் பலர் உணவின்றி நாட்களை கடந்துகொண்டிருக்கின்றனர் என்பது முரண்நகை.
ஏறத்தாழ இன்னும் 2.5 மணிநேரங்களில் யெருசலேத்தை சென்றடையலாம் என்கிறார் முஸ்தபா. எனக்கு தூக்கம் வருகிறது. முன்னிருக்கையில் சாய்ந்து கண்ணை மூடிக்கொண்டு உறங்க முயற்சிக்கிறேன். கண்ணுக்குள் நோர்வே வாழ்வின் அழகிய பக்கங்கள் ஒளிப்படமாய் வலம்வருகின்றன. அன்பிற்கு அழிவில்லை காண் என்பது உண்மைதான்.
பின்னால் உட்கார்ந்திருக்கும் நண்பர்கள் பாலஸ்தீனத்தைப்பற்றி உரையாடிக்கொண்டிருக்கிறார்கள். லஸ்தீனத்தைப்பற்றி மகிழ்ச்சியான செய்தியாக எதையும் கேட்க முடிவதில்லை. சபிக்கப்பட்ட இனம்.
முஸ்தபா பாலஸ்தீனத்தைத் சேர்ந்தவர். மெலிந்த தேகம். நரைத்த சில நாட்களான தாடி., சுருட்டை முடி. வெய்யிலில் புடம்போடப்பட்ட தேகம். எமது சாரதி அவர். என்னைக் கண்ட முதல் நாள், நீ ஆபிரிக்கனா என்ற அவரது கேள்விக்கு கூகிள் ஆண்டவரின் உதவியுடன் நான் இலங்கையைச் சேர்ந்தவன் என்று நிறுவினேன். அவரது பார்வை என்னை நம்பவில்லை என்பதுபோலிருந்தது. அல்லா சத்தியமாக உண்மை என்ற பின்பு அவர் நம்பினார் என்றே நினைக்கிறேன்.
அன்று முஸ்தபாவுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது இரண்டு கேள்விகளைக் கேட்டார்.
உனக்கு எத்தனை குழந்தைகள்? எத்தனை மனைவிகள்?
முதலாவது கேள்விக்கான பதிலான “இரண்டு” என்பதை நான் கூறியபோது, முஸ்தபா அதை தனது இரண்டாவது கேள்விக்கான பதிலாக நினைத்துக்கொண்டார். உனக்கு இரண்டு மனவிகளா என்று கேட்டார். அந்தளவு துணிவு எனக்கில்லை என்று கூறியபோது எனக்கும் துணிவில்லை என்றுவிட்டு வெடித்துச் சிரித்தார். அவருக்கு ஏழு குழந்தைகள். முஸ்தபா உனக்கு வீட்டில் வேறு வேலையே இல்லையா என்று கேட்டேன். வெட்கமாய் சிரித்தார்.
பெருஞ்சாலையில் இருந்து விலகியிருந்த ஒரு இடத்தில் வாகனத்தை நிறுத்தி தேனீர் அருந்தினோம். இனிப்பு அதிகமாக இருந்தது. நான் தேனீருக்குள் ரொட்டியை நனைத்து நனைத்து உண்டதை எனது நண்பர்கள் ஆச்சரியமாகப் பார்த்தார்கள். அதன் அருமையை அவர்களுக்கும் கற்றுக்கொடுத்தேன்.
மதியம்போல் நாம் யெருசலேம் நகரத்தை வந்தடைந்தோம். வாகனத்தை நிறுத்திவிட்டு வந்தார் , முஸ்தபா. பழங்காலத்து யெருசலேம் நகரத்து டமாஸ்கஸ் வாயிலின் ஆரம்பத்தில் இராணுவத்தினர் சோதனைகளை மேற்கொண்டபின் நகரத்தினுள் நடந்துகொண்டிருந்தோம்.
இந்த நகரத்தின் உட்புகும் வாயில்கள் அனைத்தும் வலப்புறமாகவே அமைக்கப்பட்டிருக்கின்றன. ஏன் என்று தெரியுமா என்றார் முஸ்தபா. நாம் அனைவருமே உதட்டைப்பிதுக்கினோம்.
பாதுகாப்புதான் அதற்குக் காரணம் என்ற முஸ்தபா தொடர்ந்தார். ஒரு கோட்டையை வலப்பக்கமாக தாக்கும்போது இடது கையில்தான் அதிகமானவர்கள் ஆயுதங்களை வைத்திருப்பார்கள். இடதுகை பலருக்கு பலவீனமானது. கோட்டையை பாதுகாப்பவர்கள் இடதுபக்கமாக தாக்கவேண்டும் என்பதால் வலதுகையில் ஆயுதங்களை வைத்திருப்பார்கள். எனவே வலதுகையில் ஆயுதம் இருப்பதால் எதிரியை வெல்வது இலகு. அதை எனது மனதினுள் படமாக பதிந்து புரிந்துகொள்வதற்கு சற்று நேரமெடுத்தது. இருப்பினும் அதன் தார்ப்பரியத்தை புரிந்துகொள்ள முடிந்தது.
பழைய நகரம் முஸ்லீம்களின் பகுதி, யூதர்களின் பகுதி, ஆர்மேனியர்களின் பகுதி, கிறீஸ்தவர்குளின் பகுதி எனப் பிரிக்கப்பட்டிருந்தாலும் பல சமூகங்கள் தங்களின் வணக்கத்தலங்களை இங்கு கொண்டிருக்கிறார்கள்.
நாம் எத்தியோப்பிய திருச்சபையின் தேவாலயத்திற்கு அருகில் நின்றிருந்தோம். பலர் அழுவதுபோன்று சத்தம் வந்தது. பயப்படாதீர்கள், இப்படித்தான் எத்தியோப்பியர்கள் ஜெபிப்பார்கள் என்றார் முஸ்தபா.
நான் உள்ளே செல்லவில்லை. இங்கு ஒரு பாதாளச் சுரங்கம் உண்டு. அது கடைத்தெருவில் முடிவடைகிறது. அதனூடாக செல்வோமா என்றபோதும் மறுத்துவிட்டேன்.
யேசுதாதர் சிலுவையை சுமந்துசென்ற பாதையின் வழியே நடந்துகொண்டிருந்தபோது, தண்ணீர் விடாய்கிறது என்றேன், முஸ்தபாவிடம். எனக்குப்பிடித்தமான எலுமிச்சை மற்றும் மின்ட் இலைகளுடன் சீனிகலந்த நீராராகம் வாங்கும் கடைக்கு அழைத்துப்போனார். 38பாகை வெய்யிலின் வெம்மையை அவ்வருமையான நீராராகம் தீர்த்து மனதுக்கு புத்துணர்ச்சியைத் தந்தது.
உன்னுடன் ஒருவிடயம் பேசவேண்டும் என்றார் முஸ்தபா. “சொல்லுங்கள்“ என்றுவிட்டு வசதியாக உட்கார்ந்துகொண்டேன். ஒரு சிகரட்ஐ எடுத்து பற்றவைத்துக்கொண்டார். ஆழமாக உள்ளிழுத்து புகையை ஊதினார்.
“எங்கள் குடும்பத்தில் நானும் தம்பியும் , நான்கு சகோதரிகளும் மட்டுமே. தம்பி பல வருடங்களுக் முன் காணாமல்போய்விட்டார். அவன் தென்னமெரிக்கா சென்றுவிட்டதாக அறிகிறோம். அவன் குடும்பத்துடன் அதிகம் ஒட்டுவதில்லை. ஆனால் அம்மாவுக்கு அவனைப் பார்க்கவேண்டுமாம். எங்கள் குடும்பத்திடம் ஆட்டு மந்தை இருக்கிறது. அம்மா அவரது அந்திமக் காலத்தில் வாழ்ந்துகொண்டிருக்கிறார்”.
“ம்”
“நான் அண்மையில் தம்பியின் பெயரை இணையத்தில் தேடியபோது பெரூ நாட்டு இணையத்தளத்தளம் ஒன்றில் அவனது பெயர் காணப்பட்டது. அந்த இணையத்தளத்தை தொடர்புகொள்ளவேண்டும். எனக்கு கணிணிபற்றி அதிகம் தெரியாது. எனக்கு உதவ முடியுமா?” என்றார் முஸ்தபா.
“விபரத்தைத் தாருங்கள். முயற்சிப்போம்” என்றேன்.
அடுத்தடுத்த நாட்களில் இணையத்தளத்தின் விபரத்தினைப்பெற்று என்னால் முடிந்ததைத் செய்தேன். பின்பொருநாள் எனக்கு வந்த மின்னஞ்சலையும் முஸ்தபாவுக்குக் கொடுத்தேன்.
அன்று யெரூசலேம் நகரத்தின் பல இடங்களை சுற்றிக்காண்பித்தார். பெத்லகேம் நகரத்தில் உள்ள பாலஸ்தீனத்தையும் யெரூச-5லேம் நகரத்தையும் பிரிக்கும் பெருச் சுவருக்குச் சென்றிருந்தபோது அச்சுவரில் Ahed Tamimi இன் படத்தை பிரேசில் நாட்டுக் கலைஞர் ஒருவர் வரைந்துகொண்டிருந்தார். படத்தின் உயரம் 4-5 மீற்றர் இருக்கும். அக்கலைஞர் தனது முகத்தை மூடியிருந்தார். காரணம் அருகில் இருந்த பாதுகாப்பரணில் உள்ள இஸ்ரேலிய இராணுவத்தினர் தன்னை அடையாளம் காணக்கூடாது என்பதலாம். Ahed Tamimi பற்றி இணையத்தில் தேடிக்கொள்ளுங்கள். இன்றைய பாலஸ்தீனப் பெண்களில் குறிப்பிடத்தக்கவர்.
அந்த மதில் முழுவதும் பாலஸ்த்தீனத்துப் போராட்டத்தின் கதைகளை, சுலோகங்களை, வசனங்களை, படங்களை, சித்திரங்களைக் கொண்டிருந்தது. அருகில் இருந்த The Walled Off Hotel அருங்காட்சியகத்தில் இந்த மதில்கட்டப்பட்டதன் சரித்திரம் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
முஸ்தபாவின் நண்பரின் வீடும் அவரின் தாயாரின் வீடும் எதிரெதிரே இருந்தனவாம். இப்போது மதிலுக்கு அப்பால் தாயும், இங்கு மகனும் வாழ்கிறார்கள். ஒருவரை ஒருவர் சந்திக்கவேண்டும் எனின் ஒன்றரை மணிநேரம் பயணிக்க வேண்டும். பல இராணுவச்சோதனைச்சாவடிகளைக் கடக்கவேண்டும். 5 நிமிடத்தூரத்தில் இருந்த வைத்தியசாலைக்கு செல்வதென்றாலும் அப்படியே. இஸ்ரேல் நாட்டு வைத்தியசாலைக்கு பாலஸ்தீனத்தவர்கள் செல்லமுடியாது. நண்பர் கரடுமுரடான அரபிமொழியில் பேசிக்கொண்டிருந்தார். முஸ்தபா மொழிபெயர்த்துக்கொண்டிருந்தார்.
அங்கிருந்து புறப்பட்டபோது பேத்லகேம் நகரத்து சோதனைச்சாவடியில் எங்கள் வாகனம் சோதனையிடப்பட்டது. முஸ்தபாவைப் பார்ப்பதற்குப் பாவமாக இருந்தது. அவரது அடையாள அட்டை பரிசோதிக்கப்பட்டபின், அவரை அழைத்து விசாரித்தார்கள். அதன்பின் நாம் விசாரிக்கப்பட்டோம். வெளியேற அனுதித்தார்கள்.
அன்று முன்னிரவு சாக்கடலில் (Dead sea) குளித்தோம். உப்பின் அடர்த்தி அதீதமாகையால் எவரும் அங்கு நீந்தலாம் (மிதக்கலாம்). இது கடல் மட்டத்தில் இருந்து 430 மீற்றர்கள் பதிவாக இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. உலகத்தில் மிகவும் பதிவான பகுதி இதுவாகும்.
முஸ்தபாவின் கதையை நிதானமாகச் சொல்லிக்கொண்டு வந்தார். 1967ம் ஆண்டு இடப்பெயர்வு, லெபனானில் அகதி வாழ்க்கை, தாயார், தனது குடும்பம் என பலதையும் பேசினார். நானும் தலையை ஆட்டியபடி அவ்வப்போது கேள்விகளைக் கேட்டுக்கொண்டிருந்தேன். இரவு சாமம்போல் வீதியோரத்தில் வாகனத்தை நிறுத்தி பாலஸ்தீனத்தின் கருங்கோப்பி வாங்கிக் குடித்தார். எனக்கு பசித்தது. ரொட்டியும் கடலையும், அரைத்த தக்காளியும், தயிரும் கிடைத்தது. இதைவிட இங்கு வேறு என்ன உணவை எதிர்பார்க்கலாம். பசியின்போது எந்த உணவும் ருசியானதே. இன்னிப்பான தேனீருடன் இரவு உணவு முடிந்தது. அன்றிரவு படுக்கையில் விழுந்தபோது நேரம் சாமம் 1 மணி. முஸ்தபா வீடுபோய்ச் சேர்வதற்கு இன்னும் ஒரு மணிநேரம் இருக்கிறது.
ஒருவாரம் சென்றிருக்கும், முஸ்தபா என்னை காலையிலிருந்து தேடுகிறார் என்றனர் நண்பர்கள். அவரைத்தேடிப்போனேன். கையில் கோப்பியுடன் உட்கார்ந்திருந்தார். என்னைக் கண்ணுற்றதும் ஓடிவந்து அணைத்துக்கொண்டார்.
மகிழ்ச்சிபொங்க, தம்பியுடன் தொடர்பு கிடைத்திருக்கிறது. தாயாருடன் தம்பி உரையாடியதாகவும் விரைவில் அவர் இங்குவருகிறார் என்றும், நான்தான் எல்லாவற்றிற்கும் காரணம் என்பதால் என்னை பிரத்தியேகமான விருந்திற்கு அழைக்கும்படி தாயார் கட்டளையிட்டிருப்பதாகவும் சொன்னார்.
பல ஆண்டுகளாகக் காணாமற்சென்ற எனது மகன் வந்திருக்கிறான். மந்தையில் உள்ள கொழுத்த ஆட்டை அடியுங்கள். சிறந்த உணவுகளைப் பரிமாறுங்கள் என்ற திருவிவிலியத்தின் கதை நினைவிற்கு வந்தது.
என்னையும் விருந்துக்கழைத்த அந்தத்தாயின் கைகளை கண்களில் ஒற்றிக்கொள்ளவேண்டும்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்