உயர உயரப் பறந்து போ

அந்தத் தொப்புட்கொடியை வெட்டுவதற்கு நான்கு வருடங்களுக்கு முன்னதைப்போன்று பயப்படவில்லை நான். ஒரே வெட்டு. தாதியர் அழைத்துப்போய் உதிரத்தையும் சதைகளையும் சுத்தம்செய்து தடுப்பூசி இட்டபின் என்னிடம் தந்தார்கள். எனது இரண்டாவது தேவதையைக் கையில் ஏந்தியிருந்தேன்.

இதற்கு முன்னான நான்கு ஆண்டுகளில் எல்லாவற்றையுமே எனது மூத்தவள் எனக்குப் பழக்கியிருந்தாள். குழந்தைகளுக்கு தாய்ப்பால்லைத் தருவதைத் தவிர மற்றைய எல்லாமே என்னால் செய்யமுடியும். இப்போதும்.

இரண்டு பெண்குழந்தைகளின் தோழனாய், தந்தையாய் வாழ்வதன் பேரின்பம் எப்படியானது என்பது அனுபவித்தவர்களுக்கு மட்டுமே தெரிந்த உணர்வு.

மனிதனின் வாழ்வு 7 ஆண்டுச்சுற்றுக்களைக் கொண்டது என்று வயோதிபரில்லத்தில் தொழில்புரிந்த காலத்தில் 99 வயதைக் கொண்டாடிய ஒரு முதியவர் எனக்குச் சொல்லக்கேட்டிருக்கிறேன்.

இப்போது கடந்தகாலத்தைத் திரும்பிப்பார்த்தால் அது உண்மைதான்போலிருக்கிறது.

புயலடிப்பதற்கு 7 வருடங்கள் இருந்ததை அக்காலத்தில் காலம் என்னிடமிருந்து மறைத்துவிட்டிருந்ததை இன்று புரிந்துகொள்கிறேன்.

அந்த 7 வருடங்களும் எனது வாழ்வின் உச்சம். அனைத்திலும் உச்சமான காலம். இரண்டு குழந்தைகள், சிறந்த வருமானம், சிறந்த வேலை, வாழ்ந்திருந்த நோர்வேஜிய, தமிழ்ச்சமூகங்களில் மரியாதை என காலம் என்னை காற்றில் தூக்கிச்சென்ற காலமது. அக்காலத்தினை ஆரம்பிப்பதுபோல் பிறந்தவள் அவள்.

நான் வேலையால் வரும்போது அக்காளுடன் சாரளத்து கண்ணாடியிணூடாக பார்த்தபடி காத்திருப்பாள். அதற்கப்புறம் அவர்கள் உறங்கும்வரையில் எங்கள் காலம். இன்று என்னை வாழவைக்கும் நினைவுகளும் அவையே.

உடம்பினைத் திருப்பி, நிமிர்ந்து உலகைப்பார்த்தில் இருந்து எழுந்து நின்று, நடைபழகி, மொழிபழகி, ஓடி, பாய்ந்தோடி, நீச்சல் பழகி, மிகக்குறைந்த வயதில் துவிச்சக்கரவண்டியோடப்பழகியதெல்லாமே என்னிடமே என்ற பெருமை எனக்கிருக்கிறது.

இவளின் அக்காளிடம் நான் கற்ற பலவிடயங்கள், வீணே பயப்படாதே என்று எனக்கு கற்பித்திருந்தது. அது இவளுக்கு உதவிற்று.

இருப்பினும் அப்பாவின் கையுக்குள்ளேயே அவளின் பாதுகாப்புணர்வு இருந்திருக்கவேண்டும். எனது கையைவிட்டு, மடியைவிட்டு அவள் அகன்றிருந்த காலங்கள் குறைவுதான். ஆறு ஏழு வயதிலும் என்னுடனேயே ஒட்டிக்கொண்டிருந்தாள்.

அவளின் முதலாவது குழந்தைகள் காப்பக நாளை நினைத்துப்பார்க்கிறேன். அவள் தோழிகளுடன் சென்றுவிட்டாள். நான்தான் ஏங்கிப்போய் நின்றிருந்தேன்.

அதேபோலவே அவளது முதலாவது பாடசாலை நாளும். அன்று காலை அவள் என்னை படுத்தியபாட்டை ஒரு பத்தியாய் எழுதியிருக்கிறேன். அப்படியே அது பசுமையாய் நினைவிருக்கிறது.

ஒருமுறை விளையாடியபோது கையை முறித்துக்கொண்டாள். இரண்டுமுறை கையை வெட்டிக்கொண்டபோதும் அவள் வைத்தியருடன் அலட்டிக்கொண்டிருந்தாள். வைத்தியர் தையலிட்டபோது எனக்கு வலித்தது.

அப்பா எனக்கு ”இளவரசிகளின் அறைபோன்று எனது அறையை அலங்கரித்துத்தருவாயா” என்று அவளின் ஆசையை நிறைவேற்றினேன். இளவரசிகளின் படங்கள் ஒட்டிய சுவர் அலங்காரம், அதேபோன்ற மின் விளக்குகள், கட்டில், ரோசா நிறத்தில் மேசை கதிரைகள், அழகான நிலவிரிப்பு, அழும், பேசும், உணவு உண்ணும் பொம்மைகள் என்று அவள் கேட்டதெல்லாவற்றையும் முடியுமானளவு கொடுத்தேன்.

அவளது அந்தக் கட்டிலில் அவளுக்குச் சொன்ன கதைகளுக்கு எண்ணிக்கையில்லை. கண்கள் ஆச்சர்யத்தில் விரிந்திருக்க கதைகேட்டுக்கொண்டிருப்பாள். சிறுபிராயத்திலேயே வாசிக்கும் பழக்கம் அவளிடம் குடிவந்தது. இப்போதும் வாசிக்கிறாள். தள்ளியிருந்து ரசிக்கிறேன் அதையும்.

அந்நாட்களில் வேலைநிமித்தமாக வெளிநாட்டுப்பயணங்கள் அதிகம். இருவருக்குமான உடைகளும் தலைச்சோடனைகளுமே வாங்கிவருவேன். வேறு சிந்தனையே என்னிடம் இருக்காது.

அப்போதுதான் ஊழிக்காலம் தொடங்கியது. வாழ்க்கை நினைக்காத கோணங்களில் வளைந்துபோனது. குழந்தைகளைப் பிரிந்து ஒரு பையில் எனது உடைகளுடன் Osloவுக்கு இடம்பெயர்ந்தேன்.

குழந்தைகள் இருவரையும் தனியே அழைத்துச்சென்று கடற்கரையில் இருத்தி நான் இடம்பெயரப்போவதையும், அவர்களிடம் அடிக்கடி வருவேன் என்பதையும் கூறியபோது மூத்தவள் புரிந்துகொண்டாள். இளையவளுக்கு அதன் தாக்கம் புரிந்திருக்கவில்லை என்றுதான் அன்று நினைத்தேன்.

ஏறத்தாழ 10 வருடங்களின்பின் இவ்வருடம் அவளது சிறுபிராயத்துத் தினக்குறிப்பொன்று கண்ணில்பட்டது. அதில் ”அப்பா நீ Osloக்கு சென்றிருக்கக்கூடாது” என்று எழுதியிருந்ததைக் கண்டு ஒரு வாரமாய் அழுதுகொண்டிருந்தேன்.

8 வயதில் இங்கிலாந்திற்குச் சென்றவளுடன் தொடர்புகள் குறைந்துபோயின. அந்நாட்கள் மிகக்கொடுமையானவை.

இந்நாட்களில்தான் தோல்வியுற்ற தந்தை என்ற எண்ணமும் மன அழுத்தமும் தற்கொலையெண்ணங்களைத் தந்திருந்தகாலங்களில் என்னை மீட்டுக்கொள்ள எனக்குதவியவர்களை நினைத்துப்பார்க்கிறேன். அற்புதமானதொரு தோழமையது. அந்நாட்களில் காலம் செய்த ஒரே ஒரு நன்மை நல்ல நண்பர்களை அறிமுகமாக்கியதே.

இப்போது, அவள் சுயமாய் வளர்ந்திருக்கிறாள். சில ஆண்டுகளுக்கு முன்பு “அப்பா உன்னிடம் வருகிறேன்” என்றுவிட்டு வந்தாள். வானகமொன்றில் அவள் விரும்பிய இடமெங்கும் அழைத்துப்போனேன். எமக்கிடையிலான இடைவெளி அகலத்தொடங்கியபோது அவள் மீண்டும் பயணமானாள்.

அவள் பிறந்து வளர்ந்த கிராமத்திற்கும் சென்றோம். எமது பழைய வீட்டை பார்ப்பதற்கு அழைத்துச்செல் என்றவளை, வாழ்ந்திருந்த இரண்டு வீடுகளுக்கும் சென்றேன்.

என்னைப்பற்றி அவளிடம் பல நினைவுகள் வாழ்ந்திருந்தன என்பதை அவளது கதைகளில் இருந்து புரிந்துகொண்டேன்.

இப்படித்தான் அக்காளும் சில ஆண்டுகளுக்கு முன் “மறுவாரம் வருகிறேன்” என்றுவிட்டு வந்தாள். 8 நாட்களில் 6000 கிலோமீற்றர்கள் என்னுடன் சுற்றினாள்.

இந்தச்சம்பங்களின்பின் நாம் சற்று நெருங்கியிருக்கிறோம் என்றே எண்ணத்தோன்றுகிறது. இழந்த காலத்தினை மீட்டெடுத்துக்கொண்டிருக்கிறோம் என்றே எண்ணுகிறேன்.

விவாகரத்துக்களின் பெருஞ்சோகமே குழந்தைகள் பெற்றாரைப் பிரிவதே. புத்திரசோகம் மிகவும் கொடுமையான அனுபவம். எதிரிக்கும் கிடைக்கக்கூடாத அனுபவமது.

இதனாலோ என்னவோ குழந்தைகள் என்றால் கரைந்துபோகும் மனம்வாய்த்திருக்கிறது. Osloவில் எனக்கிருக்கும் வளர்ந்த நண்பர்களைவிட குழந்தைத் தோழமைகளே அதிகம்.

அவர்கள் எவருக்கும் தெரியாத உண்மையொன்றிருக்கிறது. என்னையுயிர்ப்பித்தவர்கள் அவர்கள் என்பதே அது. அவர்களில் சிலர் இப்போது பதின்மவயதைக் கடந்துகொண்டிருக்கிறார்கள் ஒருவன் பதின்மவதுக்குள் இப்போதுதான் புகுந்திருக்கிறான்.

அவர்களை ரசிப்பதிலும் ஒரு மகிழ்ச்சி இருக்கத்தான் செய்கிறது. இவர்களில் சிலரை எனது குழந்தைகளைப்போலவே கருதுகிறேன். ஏறத்தாள தினமும் இவர்களுடன் கழிந்த மகிழ்ச்சியான காலங்கள் தந்த பரிசு இது.

அக்காள் 3 வருட சுற்றுச் சூழல் பாதுகாப்பு கல்வியைமுடித்துவிட்டு 4ம் வருடத்தில் படித்துக்கொண்டிருக்கிறாள். “நீங்க என்ன படிக்கவிரும்புகிறீர்கள்?” என்றேன் இளையவளிடம். “நுண் நரம்பியல்” என்றாவளிடம் “ஏன் அதைத் தெரிவுசெய்கிறாய்?” என்றபோது:

“உனக்கு மறதி அதிகம். அதுதான்” என்றுவிட்டுச் சிரித்தாள்.

அன்றொருநாள், எனது காற்சட்டை பெரிதாக இருக்கிறதாகவும், இந்தக் காற்சட்டைக்கு பொருத்தமில்லாத பாதணியை அணிவதாகவும், எனக்கு உடைத்தேர்வில் சற்றும் கவனமில்லை எனவும் திட்டினாள். வாங்கி வைத்துக்கொண்டேன். மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த கோடைகாலத்திலும் நாம் ஒன்றாக சிலநாட்களைக் கழிக்கும் சந்தர்ப்பம் வந்தது. அந்நாட்களில் அவள் வளர்ந்துவிட்டிருந்ததை உணரமுடிந்தது.. என்னைக் கவனித்துக்கொண்டாள். மறந்தவற்றை நினைவூட்டினாள். கேட்டதைச் செய்துதந்தாள். அடிக்கடி “என்னை சிறுகுழந்தைபோல் நடாத்தாதே” என்றும் என்னைக் கண்டித்தாள்.

உண்மைதான். இன்றும் சில மணிநேரங்களில் அவளுக்கு 18வயதாகிறது. அவள் இனி குழந்தையில்லைத்தான்.

இருப்பினும் எனக்கு அவள் என்றென்றும் சிறு குழந்தைதானே.

அப்பாவின் அன்பான பிறந்தநாள் வாழ்த்துக்கள், என் அட்சயா குட்டிக்கு.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்