முகமட்இன் கழுதை

இருண்டுவிட்டிருந்த மலையுச்சிப்பகுதியில் குளிர் காற்று வீசிக்கொண்டிருந்தது. அங்கிருந்த பாறையொன்றில் நாம் குந்தியிருந்தோம்.

குப்பை பிளாஸ்டிக் குப்பைகள் காற்றின் வழி சென்றுகொண்டிருந்தன. முகமட் தனது சிகரெட்டினை உயிர்ப்பித்து உள்ளே இழுத்து, ஆனந்தித்து, வெளியே விட்டான். அவன் கண்கள் மூடியிருந்தன.

எனக்கு குளிர்கிறது என்றான் இத்தாலிநாட்டு வபிரீசியோ. அதை வழிமொழிந்தான் துருக்கிய அர்கான். நானும், எனக்கும் என்று முணுமுணுத்தேன்.

முகம்மட் தனது கழுதையில் ஏறிக்கொண்டு அதன் வயிற்றில் இரண்டு குதிக்கால்களாலும் இடித்தான். நாளை மதியம் சந்திக்கிறேன் என்றுவிட்டு கழுதையோடு கதைத்தபடியே அதன்மேல் உட்கார்ந்திருந்தான். கழுதை நடக்கத்தொடங்கியது.

அவன் சற்றுத்தொலைவு சென்றதும் அவன் கழுதையில் உட்கார்ந்திருந்தது எமன் எருமையில் சென்றுகொண்டிருப்பது போலிருந்தது.

நாம் நடந்து தங்குமிடத்திற்கு வந்ததும் துருக்கிய அர்கான் தேனீர் வேண்டுமா என்றான். ஆம் என்று தலையை ஆட்டினேன் குளிருக்கு இதமான தேனீருடன் ரொட்டியை நனைத்து நனைத்து வாய்க்குள் போட்டுகோண்டேன். வயிற்றுக்கு இதமாயிருந்தது.

இன்று அந்த மலைப்பகுதிக்கு முகமட் எங்களை அழைத்துப்போயிருந்தான். அவனது பெரியப்பாவின் தோட்டம் அங்கிருந்தது. திராட்சைப்பழங்கள் கொத்துக் கொத்துக்கொத்தாய் தொங்கிக்கொண்டிருந்தன. ஒருபகுதியில் மரக்கறிகள். ஒருபகுதியில் பழங்கள். இன்னொரு பகுதியில் ஒலீவ் மரங்கள். மூன்று மணிநேரமாய் மலையேறி, நடந்து, அலுத்து வந்திருக்கிறோம்.

முகம்மட்க்கு 40 வயதிருக்கலாம். 4 குழந்தைகள். ஒரு மனைவி. எங்களுக்கு மரக்கறி, இறைச்சி, பால், போன்ற தினசரி அவசியமான பொருட்களை வழங்குவது அவனது வேலை. அவனது பெரியப்பா கடைவைத்திக்கிறார்.

இறுதி இன்டிபாடாவின்போது (எழுச்சிக்காலம்) சிலகாலம் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவன். ஒரு வெள்ளிக்கிழமை தொழுகை முடிந்தபின் நடந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டபோது கைதுசெய்யப்பட்டானாம். யசீர் அரபாத்தின் PLO இயக்கத்தின் ஆதவாளன். பெரியப்பாவின் தோட்டத்தைப் பராமரிப்பதும் அவரது கடையைப் பார்த்துக்கொள்வதும் அவனது தொழில்.

பெரியப்பாவின் கடை ஒரு காவற்கோபுரத்திற்கு மிக அருகில் இருந்தது. அந்த வீதியை சில வருடங்களுக்கு முன்பாக வாகன போக்குவரத்திற்குத் தடைசெய்திருந்தார்கள். வீதியின் குறுக்கே பெருங்கற்கள் போடப்பட்டிருந்தன.

பெரியப்பாவின் வீட்டிற்கு காவற்கோபுரத்தினைக் கடந்துசெல்லவேண்டும். அங்கு கடும் சோதனையுண்டு. கேள்விகள் உண்டு. கேலிகள், அவமானப்படுத்தல் உண்டு. இவன் சிறைமீண்ட செம்மலாகையால் இராணுவத்தினரிடம் பெரும் புகழும், அவர்களின் கழுகுக்கண்களும் இவன்மேல் இருந்தது.

ஒருமுறை யாரோ இளம் விடலைகள் காவற்கோபுரத்திற்கு கல்லெறிந்துவிட்டு ஓட, அவ்வழியால் வந்தான் முகமட். நேரமும், சந்தர்ப்பமும் பிழை. புழுதியில் பிரட்டியெடுத்து உதைத்து மூக்கை உடைத்து இரத்தம் வழிய வழிய அனுப்பினார்கள். கத்தியபடி வந்தான். அரபு மொழில் ஏதோ கத்தினான். அவர்களை சபித்திருப்பான் என்றே நினைக்கிறேன்.

தண்ணீரால் முகத்தைக்கழுவிட்டு புழுதியைத் தட்டிவிட்டுக்கொண்டான். இதற்கிடையில் விபரம் அறிந்த பெரியப்பா அவசர அவசரமாக வந்துகொண்டிருந்தார். சற்றுநேரத்தில் ஒரு வாகனத்தில் வைத்தியசாலைக்கு ஏற்றிப்போனார்கள்.

அன்று மாலை விளையாட்டு மைதானத்திற்கு முன்னால் சந்தித்தோம். வாயில் இருந்து ராகி (மதுபான வகை) வாசனை வந்தது. சர்வரோக நிவாரணியல்லவா.

மறுநாள் காலை ஒரு சாலைவிபத்து. 14 மாணவிகளை ஒரு வாகனம் மிதித்துவிட்டிருந்தது. அங்கு தற்செயலாக நின்றிருந்தானாம் என்றான். கச்சல் கோப்பியுடன் நடந்ததை விபரித்தான். ஒரு பெண்ணுக்கு காலை அகற்றிவிட்டார்களாம். இருவருக்கு பாரதூரமான காயங்கள். மற்றையவர்கள் சிறுகாயங்களுடன் தப்பிவிட்டார்கள் என்றான். கிராமத்தினுள் எது நடந்தாலும் இவனுக்கு அது தெரியவரும். சமூகத்தில் அக்கறையுள்ளவன்.

அன்று வெள்ளிக்கிழமை. வழமைபோல் தொழுகையின் பின் ஆர்ப்பாட்டம். கல்லெறி, கண்ணீர்ப்புகைக்குண்டு, துப்பாக்கிச்சூடு. எதிர்பாராத நேரத்தில் கண்ணீர்ப்புகைக்குண்டு எமக்கருகில் விழுந்தது. முதுகுப்பையில் இருந்த வாயு தடுப்பு முகமூடியை அணிவதற்கிடையில் எனது கண்களுக்குள் புகை புகுந்தது. என்னை அகற்றிவிட்டு நண்பர்கள் மற்றையவர்களுக்கு முதலுதவியளித்தக்கொண்டிருந்தார்கள்.

அன்று மாலை கண்கள் எரிய எரிய, கண்ணீர்வழிய வழிய உடகார்ந்திருந்தேன். நணபர்கள் கைச்சல் கொப்பியை உறுஞ்சிக்கொண்டிருந்தார்கள். கழுதையில் பேரரசன் பவனிவருவதுபோன்று சிரித்தபடியே வந்தான் முகமட்.

“எங்களுக்கு இது பழக்கமானது. நீ ஏன் அங்கு வந்தாய்” என்ற கேள்விக்கு “புதினம் பார்ப்பதற்கு” என்றேன். விழுந்து விழுந்து சிரித்தான். “இனி என்னுடன் வா. பாதுகாப்பான இடத்தில் உன்னை நிறுத்துகிறேன். அங்கிருந்து புதினம்பார்.” என்றுவிட்டு கழுதையில் முதுகில் இருந்த பையில் இருந்த பழங்களை எம்முடன் எம்முடன் பகிர்ந்துகொண்டான். தோலை கழுதைக்குக் கொடுத்தான். அது மறுப்பேதும் சொல்லவில்லை.

கழுதையின் முதுகில் இருந்த ஒரு பையில் இருந்து ராகி போத்தலை எடுத்து நீட்டினான். முகமட் கடைதிறந்துவிட்டான் என்றான் அர்கான். நடமாடும் கடை என்று திருத்தினான் முகமட்.

மாலைநேரத்து குளிருக்கு ராகி இதமாக இருந்தது. கண் எரிச்சலின் வலி மறையத்தொடங்கியது. தனக்கு ஐந்தாவது குழந்தை கிடைக்கப்போகிறது என்றான். உனக்கு மகன்தான் பிறப்பான் என்றேன். எனக்கும் மகன்தான் வேண்டும் என்றான். நீ வீட்டுக்கு போனாலே உன் மனைவி கர்ப்பமைடைகிறாள் என்றான் அருகில் இருந்த அர்கான், நாம் அனைவரும் சிரித்தபடியே ரொட்டியும் கடலைக்கறியும் உண்டோம்.

பெரியப்பாவுக்கு மூத்திரக்கடுப்பு என்பதால் வைத்தியசாலையில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார். நாளை மாலை அவரைப் பார்க்கவேண்டும். அவரது வீட்டுக்கான வேலைகள் உண்டு. சற்றுநெரத்தில் மாலைநேரத்து தொழுகை முடிந்ததும் கடைக்குச் சென்று, கடையை மூடி அங்குள்ள பையனை வீட்டுக்கு அனுப்பவேண்டும். பணத்தை பெரியம்மாவிடம் கொடுப்பதற்காக எருமைகளின் காவலரணை கடந்துசெல்லவேண்டும், நான் வருகிறேன் என்றுவிட்டு எழுந்தான்.

“தேனீர் அருந்திவிட்டுச் செல்” என்றான் அர்க்கான். “துருக்கியர்களுக்கு வேறு வேலை இல்லை. எப்போதும் தேனீர்தான்” என்றபடியே தேனீரை அருந்திவிட்டு புறப்பட்டான்.

“கழுதையேற்றம் கற்றுக்கொள்ளவேண்டும் முகமட் ”என்றேன். “கழுதைகளுக்கு அது ஒன்றும் பெரியவிடயமில்லை” என்று தனது நகைச்சுவையைக் காட்டிவிட்டு, கழுதையின் வண்டியில் குதிக்காலால் குத்தினான். அது நடக்கத்தொடங்கியது. மீண்டும் ஒரு குத்து. அது மெதுவாய் ஓடத்தொடங்கியது. அப்போதும் அந்தக் காட்சி எமன் மெதுவாக ஓடுவதுபோலவே இருந்தது. என்னை ராகி மயக்கியிருந்தது. அர்க்கான் என்னை அழைத்துப்போய் கண்களை கழுவிவிட்டபின் படுக்கவைத்தான். விடியும்வரை எதுவுமறியாதிருந்தேன். அதிகாலை என்னை எழுப்பும் பாங்கொலியும் என்னை அன்று எழுப்பவில்லை. 9மணிபோல் எழுப்பினேன். கண்னெரிவு குறைந்திருந்தது.

நேற்றைய பின்னிரவு ஒரு வெடிச்சத்தம் கேட்டதாம்.

காலையில் இராணுவத்தை தாக்கவந்த ஒரு தீவிரவாதி சுட்டுக்கொல்லப்பட்டார் என்றன செய்திகள்.

கழுதையில் வந்தது சந்தேகமே இல்லாமல் யமன்தான்.

இந்த வெள்ளிக்கிழைமை முகமட்இன் மகன் கல்லெறிய ஆரம்பிப்பான்.

இன்னும் 8 மாதங்களில் இன்னொரு முகமட் மீண்டும் பிறக்கக்கூடும்.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்