நினைவழியா பதின்மம், பகுதி 1

நினைவழியா பதின்மம், பகுதி 1
******

காலம் 1980களின் ஆரம்பம். இலங்கையில் தலைநகரைத் தவிர்ந்த, ஏனைய இடங்களுக்குத் தொலைக்காட்சிச்சேவை ஆரம்பமாகிய நாட்கள். ஊருக்குள் இரண்டு மூன்று வீடுகளில் மட்டும்தான் கறுப்புவெள்ளைத் தொலைக்காட்சிப்பெட்டிகள் இருந்தன. அந்நாட்களில்தான் இங்கிலாந்தில் நடைபெறும் காற்பந்தாட்டப் போட்டிகளை ஒரு வாரம் கடந்தபின் இலங்கையில் காண்பிக்க ஆரம்பித்தார்கள். மான்செஸ்டர் யுனைடட், லிவர்பூல் என்று பிரபலமான அணிகள் எமக்கு அறிமுகமான காலம். அன்றிலிருந்து இன்றுவரை நான் லிவர்பூல் அணியின் ஆதரவாளன்.

ஐந்து குறிச்சிகளாகப் பிரிக்கப்பட்ட ஏறாவூர் ஒரு சிறிய கிராமம். இலங்கையின் கிழக்கே வாழைச்சேனைக்கும் மட்டக்களப்பிற்கும் நடுவே, தமிழர்களும் முஸ்லீம்களும் சிங்களவர்களுமாக வாழ்ந்திருந்தோம். சிங்களவர்களில் பலர் தொழில் நிமித்தம் அங்கு குடியிருந்தனர். பொலீஸ், வைத்தியசாலை ஆகிய இடங்களிலும் வியாபாரிகளாகவும் அவர்கள் வேலைசெய்தனர்.

எனது தாயாருடன் 1965 தொடக்கம் 1980களின் இறுதிவரை ஏறாவூர் வைத்தியசாலையில் பணியாற்றியவர் பிரேமலதா அன்ரி. கணவரின் பெயர் ஸ்ரீசேன. இவர்கள் புகையிரதநிலைய வீதியில் பழைய பொலீஸ் குவாட்டர்ஸ்ஸுக்கு அருகிலும், பழைய புகையிலைச் சங்கத்திற்கு முன்னாலும் வாழ்ந்திருந்தார்கள். இப்போது அக்கட்டிடங்கள் இல்லை. அவர்கள் வீட்டில் ஐந்து ஆண்குழந்தைகளும் இரண்டு பெண்குழந்தைகளும் இருந்ததாக நினைவு. இப்போதும் அவர்களுடன் தொடர்பு இருக்கிறது. எனது அம்மாவையும் வந்து பார்ப்பார்கள்.

அக்குடும்பத்தில் மூத்த ஆண் சரத் அய்யா. தமிழை வாசிக்கப் பேசத் தெரிந்தவர். 1970களிலிருந்தே அவர் ஒரு புரட்சிகர அமைப்பின் ஆரம்பகாலத் தொண்டர். 1980களில் ஏறாவூரில் அரசியல் பேசியவர்களில் நானறிந்த ஒரே ஒரு சிங்களவர். முகப்புத்தகத்தில் இருக்கிறார். அவர் பதிவுசெய்யவேண்டிய பல கதைகள் உண்டு. இதை அவர் நிச்சயம் வாசிப்பார். “சரத் அய்யா! காலம் கடந்துவிடுவதற்கிடையில் நினைவுகளைப் பதிவுசெய்துவிடுங்கள்”. நல்நினைவுகளைப் பதிவுசெய்வது அவசியமல்லவா!

மட்டக்களப்பு வாழைச்சேனைக்குரிய பாதையின் கிழக்கே ஏறாவூரிலிருந்து செங்கலடி வரையில் இரண்டு விளையாட்டுக் கழகங்கள் மட்டுமே இருந்ததாக நினைவு.

அதில் ஒன்று அலிகார் விளையாட்டுக்கழகம் (என்றுதான் நினைவிருக்கிறது). வைத்தியசாலைக்கும் ரயில் பாதைக்கும் நடுவே நாவலடி கடைக்கு அருகாக உட்செல்லும் கிறவல்பாதையின் முடிவில் ரயில் தண்டவாளத்திற்கும் இறைச்சி வெட்டும் கட்டிடத்திற்கும் அருகே அவர்களது மைதானம் இருந்தது. 1960களின் இறுதியில் எனது தந்தை இந்த அணிக்குக் காற்பந்துப் பயிற்சியாளராக இருந்தார் என்று அந்த அணியின் பயிற்சியாளர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.

இரண்டாவது எமது கழகம். 1980களில் எமக்கென்று ஒரு இடமோ பெயரோ இருக்கவில்லை. கிடைக்கும் இடங்களில் விளையாடிக்கொண்டிருந்தோம். அப்படித்தான் சிங்கள மகாவித்தியாலயத்தின் மைதானத்திற்கும் சென்றோம். காலப்போக்கில் அங்கு விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களை வெருட்டிக் கலைத்துவிட்டு, அவ்விடத்தைச் சிங்கள, முஸ்லீம், தமிழ் விடலைகளாகிய நாம் கைப்பற்றிக்கொண்டோம்

தொலைக்காட்சியில் காற்பந்துப் போட்டிகளைப் பார்த்ததன் விளைவாகவும் மூவினத்தவரும் இணைந்து விளையாடியதாலும் எமது அணிக்கு மான்செஸ்டர் யுனைடட் போன்று ’ஏறாவூர் யுனைடட்’ என்று பெயர் வைத்துக்கொண்டோம்.

கிரிக்கெட் விளையாடவே ரப்பர் பந்து வாங்க முடியாத இந்தக் கழகம், இன்னும் சில ஆண்டுகளில் மட்டக்களப்பின் பிரபல அணிகளை வென்று சாதனை படைக்கும் என்று காலம் விதித்திருந்ததை நாம் அன்று அறிந்திருக்கவில்லை.

‘அய்யா’ என்றால் சிங்களத்தில் அண்ணன் என்று அர்த்தம். சந்திரே அய்யா பகற்பொழுதில் ஊர்ச் சந்தையில் கறாரான வியாபாரி. மாலையில் எமது கிரிக்கெட் பயிற்சியாளர். கையில் எப்போதும் ஸ்போர்ட்ஸ் ஸ்டார் புத்தகத்துடன் வலம்வருவார். துலிப் மென்டிஸ்இன் ரசிகன். அந்நாட்களில்தான் இலங்கை சர்வதேச கிரிக்கெட் ஆட்டங்களுக்குள் உள்வாங்கப்பட்டது. வானொலியல் போட்டிகளின் நேரடி ஒலிபரப்பைக் கேட்டுக்கொண்டிருப்பார்.

எமது மைதானம் வெறும் மணலினாலானது. கிரிக்கெட் விளையாடப் பந்தெறிந்தால், அது விக்கட்ஐத் தவிர்த்து அனைத்துப் பக்கங்களிலும் சென்றது. காற்பந்தாடினாலும் எப்போது எப்படிப் பந்து செல்லும் என்று பந்துக்கும் தெரியாது, எமக்கும் தெரியாது.

இதனைக் கண்ட சந்திரே அய்யா ”மல்லிலா… மெஹெம செல்லங்கரன்ட பா, அபி மே கிறவுன்ட் எக ஹதா கமு” (தம்பிகளா! இப்படி விளையாட முடியாது, இந்த மைதானத்தை நாம் திருத்தி எடுப்போம்) என்று பெரும் புரட்சிக்கு வித்திட்டார்.

அன்றைய நாள் 40 - 42 வருடங்களின் பின்னான இன்றும் நினைவிருக்கிறது. மாலை மங்கிய இருளில் வீதிவெளிச்சக் கம்பத்தின் கீழ்க் குந்தியிருந்து திட்டமிட்டோம். தயாதான் ஒரு ஆர்கிடெக்ட் போன்று முதன் முதலில் திட்டத்திற்கான வரைபை முன்மொழிந்தான். அவன் கண்களில் பெருங்கனவு தெரிந்தது.

இரயில் தண்டவாளத்திற்கும் எமது மைதானத்தின் மேற்கு எல்லைக்கும் இடையில் உள்ள செடிகளை அகற்றி, மணற்திட்டுக்களைச் சமப்படுத்த வேண்டும். மைதானத்தின் நடுவே சிங்கள மகா வித்தியாலயத்திற்கு நேரெதிரே கிரிக்கெட் பிட்ச் தயாரிக்க வேண்டும். இரயில் இலாகாவினரின் வீடுகளுக்கு அருகாமையில், ஒரு காற்பந்தாட்ட கோல் போஸ்ட்டும் மற்றையது சிங்கள மகாவித்தியாலயத்தின் வாசலுக்கு நேரெதிரேயும் நடப்படவேண்டும் என்றான். சந்திரே அய்யா அதை ஆரவாரத்துடன் ஆமோதித்தார்.

தயாவின் இந்த மைதானப் புரட்சிக்குப் பின்னால் எனக்கு மட்டும் தெரிந்த அரசியற் காரணம் இருந்தது.

பதின்மவயதில் வேறென்ன அரசியற் காரணம் இருக்கப்போகிறது.

அவளுக்கு 16 வயது. அலரிப் பூவின் மென்மையும் அழகும் கொண்டவள். சிங்கள மகாவித்தியாலயத்து அதிபரின் மூத்த மகள்.

தொடரும்...


No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்