நினைவழியா பதின்மம், பகுதி 3

ஏறாவூர் பொலீசில் அதிகாரியாக கடமையாற்றிய பறங்கியினத்தவர் ஒருவருக்கு செவிப்புலன் மட்டுப்படுத்தப்பட்டதாக இருந்தது. ஊரார் அவரை செவிட்டுப் பொலிஸ் என்று அழைத்தார்கள். நாம் அவரை அங்கிள் என்றோம். அமைதியான மனிதர். அவருக்கு ஒன்பது குழந்தைகள்.


அவரது மூத்தவன் இருபதுகளின் மத்தியிலும் இளையவன் ஓரிடண்டு வயதிலும் இருந்ததுபற்றி அவர் கவலைப்படவில்லை. அவரது சேவையின் காரணமாக எங்கள் அணிக்கு அவர்கள் வீட்டில் இருந்து மட்டும் ஐவர் விளையாடினார்கள். ஒருவன்பற்றி பின்பு எழுதுகிறேன்.

தயா அழைத்தவர்களில் ரோனால்ட்டும், பாமியும் மேலே எழுதிய பொலிசின் மகன்மார், இவர்களுடன் குமார, தயா, நான் புறப்பட்டோம். குமார சந்திரே அய்யாவின் தம்பி.

அன்றைய நள்ளிரவு ஊர் உறங்கிக் கிடந்தது. நாம் ரோலருக்கு எதிர்ப்புறமாய் நின்று பேசிக்கொண்டிருப்பதுபோல் நோட்டம் விட்டுக்கொண்டிருந்தபோது ரோலருக்கு மிக அருகில் வீதி விளக்கு எரிந்துகொண்டிருப்பதை அவதானித்த தயா…

“டேய் பக்கத்தில தேவநாயகத்தின் (அமைச்சர்) வீடு. வோச்சர் முழித்திருப்பான்” என்றான். எங்களின் சிங்கள நண்பர்களுக்கு தமிழ் நன்கு புரியும். எனவே, அருகே நின்றிருந்த குமார தயாவிடம் “ மச்சாங், தங் மொக்கத கரன்னே (மச்சான், இப்ப என்ன செய்வது?) என்று கேட்டு வாய்மூடவில்லை “கிளிங்” என்ற சத்தத்துடன் மின்குமிழ் உடைந்து அணைந்தது. எங்கள் தளபதியின் குறி தவறவில்லை.

வாழைச்சேனை பேப்பர் தொழிற்சாலைக்கு வைக்கோல் எடுத்துச் செல்லும் நீண்ட வாகனமொன்று கடந்துபோனது. அதற்கு அந்நாட்களில் ’ஆளடியன்’ என்று பெயர். அது காரண இடுகுறிப் பெயர்.

ரோலருக்கு அருகில் நின்றிருந்தோம். இன்னும் செக்கன்ட் சோ முடியவில்லை. எனவே, செங்கலடி சந்தியில் இருக்கும் வகுப்புத் தோழனின் பேக்கரிக்குச் சென்று மூன்று தேநீர் வாங்கி ஐவரும் அருந்தினோம். மறுநாளுக்கான பாண் போறணையில் வெந்துகொண்டிருக்கும் வாசனை பேக்கரியையும் கடந்து வீதிவரை வந்துகொண்டிருந்தது. நண்பன் கல்லாவில் அமர்ந்திருந்ததால் ஒரு தேநீருக்கான விலைக்கழிவு கிடைத்தது.

ஏறாவூரில் 500 மீற்றர் தூரத்திற்குள் ஒரு வீதியில் செல்வி, சாந்தி, சாரதா என்று மூன்று திரையரங்குகள் உண்டு. அவற்றில் செக்கன் சோ முடிந்து வருபவர்கள் சென்று முடியும் வரை காத்திருக்க வேண்டியிருந்தது.

படம் முடியும் நேரத்தில் இரண்டு பொலீசார் ஒரு மிதியுந்தில் வந்தாறுமூலைவரையில் ரோந்து செல்வார்கள். அவர்கள் கடந்துபோனார்கள். ரோலருக்கு அருகே சென்றோம்.

மட்டக்களப்பு வீதியின் இருபுறமும் வாகனங்கள் எதுவும் தென்படவில்லை. பதுளை வீதியிலும் அப்படியே.

மெதுவாய் ரோலரை இழுத்தோம் அது அசையவில்லை. சற்றுநேர முயற்சியின் பின் அசைந்தது. அதனை அருகில் இருந்த ஒழுங்கைக்குள் இழுத்து வந்து அந்த ஒழுங்கையின் ஊடாக எல்லை வீதிக்கு வந்து, அங்கிருந்து மைதானத்திற்கு வந்தபோது, சாமம் ஒரு மணி கடந்திருந்தது. வீதியருகே இருந்த பற்றைக்குள் ஒளித்துவைத்துவிட்டுக் கலைந்தோம்.

வீடுவந்தபோது அம்மா வாசலில் குந்தியிருந்தார். வியர்வையில் நனைந்திருந்த என்னிடம் ”எங்கே போனாய்?” என்ற கேள்விக்கு “படித்துவிட்டு வருகிறேன்” என்றேன். “படித்தால் இப்படி வேர்க்குமாக்கும்” என்றார் நக்கலாய். நான் எதுவும் பேசவில்லை..

மறுநாள் மாலை கிறவலின்மீது நீரூற்றி ரோலரை உருட்டியெடுத்தபோது “மாற வெடக் நே” (அதி சிறப்பான வேலை) என்று சிங்களத்தில் பாராட்டினார் சந்திரே அய்யா. இரண்டு நாட்கள் கடந்தபின், எங்கள் கிரிக்கெட் பயிற்சிகள் ஆரம்பித்தன. விளையாட்டு முடிந்தபின், இப்போதும் அவசியமின்றி நீர் ஊற்றிக்கொண்டிருந்தான் தயா. அப்போதும் அவள் அவனைக் கண்டுகொள்ளவில்லை.

மணிக்கட்டை எவ்வாறு திருப்பினால் லெக் ஸ்பின், ஆப் ஸ்பின் போடலாம் என்று சந்திரே அய்யா கற்பித்தார். பந்து சொன்ன சொல்கேட்டுத் திரும்பியபோதெல்லாம் சந்திரே அய்யா துள்ளிக் குதித்தார்.

எனக்கு லெக் ஸ்பின் கைவந்தது. தயாவுக்கு கூக்லி வசப்பட்டது. ரோனால்ட் ஆவ் ஸ்பினில் வல்லவன் ஆனான். தயாவின் தம்பி ராஜன் கீப்பரானான். மைதானம் களைகட்டியது. விளையாடுபவர்களைத் தவிர்த்து மைதானத்தை விட்டு வெளியேறும் பந்துகளை எடுத்துத் தரவும் ஆட்கள் இல்லாத பொழுதில் விளையாடவும் வயதிற்குறைந்தவர்கள் காத்திருந்தனர்.

ஐந்தாறு மாதங்கள் கடும் பயிற்சி தந்தார் சந்திரே அய்யா. அந்நாட்களில்தான் கப்பலில் வேலைசெய்து ஊர் திரும்பிய சேவியர் அண்ணனும் அணியில் இணைந்தார். கமலஹாசன் போன்று மிடுக்கானவர். அந்நாட்களில்தான் திருமணம் முடித்திருந்தார். அவரும் மனைவியும் விளையாட்டுப் பிரியர்கள். மனைவியை முதன் முதலில் விளையாட்டுப்போட்டியொன்றில்தான் கண்டதாக அவர் கூறியது ஞாபகமிருக்கிறது. அவர்கள் இரவுப் பொழுதில் எமது மைதானத்தில் மெது ஓட்டம் ஓடுவதை நாம் கண்டிருக்கிறோம். சேவியர் அண்ணன் இப்போது கனடாவில் இருக்கிறாராம்.

உதயா அண்ணன் என்றும் ஒருவர் இருந்தார். வயதில் மூத்தவர். வாழைச்சேனை காகிதத் தொழிட்சாலையில் வேலைசெய்தார். அவரது வேகப்பந்துக்கு முகம் கொடுப்பது இலகுவல்ல.

முதலாவது போட்டியில் செங்கலடி அணியிடம் தோற்றோம். அடுத்தது அலிகார் அணியுடன். அதுவும் தோல்வி. நலிந்தவனை போட்டிக்கு அழைப்பது வழக்கமான ஊரில் நாம் தோற்றுக் கொண்டே இருந்தோம்.

ஓராண்டின்பின் வெற்றி எமதாகத் தொடங்கியது. எம்மை அழைத்தவர்கள் தோற்றார்கள். நாம் அழைத்தவர்களும் தோற்றார்கள். மெதுவாக மட்டக்களப்புக் காற்றில் பரவியது எமது அணியின் பெயர்.

வாழைச்சேனையிலிருந்து மட்டக்களப்புவரை அனைவரையும் வென்றாகிவிட்டது. மட்டக்களப்பு மாநகர சபையின் அணி மட்டுமே பாக்கி.

கட்டளைத் தளபதிபோன்று நின்று தமிழும் சிங்களமும் கலந்து உரையாற்றினார் சந்திரே அய்யா. இன்னும் ஒரு வாரத்தில் மாநகர சபை அணியுடன் அவர்களின் கோட்டையான வெபர் ஸ்டேடியத்தில் போட்டி. இம்முறை வெல்ல வேண்டும் என்றார்.

வெள்ளிக் கிழமை மாலைக் கருக்கலில் பந்து தொலைந்துபோகும் வரை பயிற்சியெடுத்தோம். அன்றிரவு அனைவரும் செக்கன்ட் சோ பார்த்தோம். நாளைய போட்டியைப் பற்றியே பேச்சாயிருந்தது. என்னால் அன்றிரவு உறங்க முடியவில்லை.

மறுநாள் மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் போட்டி தொடங்கியது. அவர்கள் பந்து தடுக்க நாம் தடுத்தாடுவதாகவும் நடுவர் தீர்மானித்தார்.

ரோனால்ட்டும் தயாவின் தம்பி ராஜனும் களமிறங்கினார்கள்.

ரோனால்ட் 80களின் ஆரம்பத்தில் இந்திய அணியில் விளையாடிய தமிழ்நாட்டு வீரரான ஸ்ரீகாந்தின் பெரும் ரசிகன். அன்று ஆட்டமிழக்காமலே ஆடினான். தனது கதாநாயகனைப் போன்று ஆப் பக்கத்தில் வந்த பந்துகளை நான்கு, ஆறு என்று அடித்துத் தள்ளினான். மாநகர சபையின் அணி அவனை ஆட்டமிழக்கச்செய்ய பெரும்பாடு பட்டது. நான் இருபது ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தேன்.

கணிசமான ரன்களுடன் ஆட்டம் கைமாறியது. தயா புயல்போல் பந்து வீசினான். சந்திரே அய்யா வெளியிலிருந்து பந்து தடுக்கும் அணியை வழிநடாத்தினார். கீப்பரான ராஜன் அசாதரணமாய் பந்துகளைப் பிடித்தான். முழு அணியும் உயிரைக் கொடுத்து விளையாடியது.

1984 என்று நினைக்கிறேன். முதன் முதலாக ஒரு குக்கிராமத்து அணி மட்டக்களப்பு மாநகர சபையின் அணியினை வென்றது.

அன்றைய மாலைப் பொழுது ஏறாவூர் வைத்தியசாலைக்கும் ரயில் பாதைக்கும் அருகிருந்த நாவலடி தேநீர்க்கடையில் அருந்திய தேநீரின் சுவை வாழ்வில் மறக்க முடியாதது. பிற்காலத்தில் காற்பந்திலும் குறிப்பிடத்தக்க வெற்றிகள் கிடைத்தன.

சனிக்கிழமைகளில் ஒரு மிதியுந்தில் மூவர் நால்வர் என புன்னைக் குடாவுக்கு கடல்குளிக்கச் செல்வோம். காலை சென்று இரண்டு மூன்று மணிவரை கும்மாளமிட்டு வருவோம். மாலை மீண்டும் விளையாட்டு.

இப்படி வாழ்வினை தோழமையின் ஈரலிப்பில் வாழ்ந்திருந்தபோதுதான் ஊருக்குள் 'போர்' உலா வந்தது.

தொடரும்...

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்