நினைவழியா பதின்மம், பகுதி 7

 ஒரு நாள் செங்கலடி நண்பன் ராஜன் “சஞ்சயன் சிகரெட் குடிப்பமா?” என்ற சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த கேள்வியைக் கேட்டான். எனக்கும் ஆர்வம் வந்தது. ஊரில் உள்ள அனைத்துக் கடைகளிலும் உள்ளவர்கள் அம்மாவை அறிந்தவர்களாக இருந்தார்கள். அம்மா பிரபலமான வைத்தியராக இருந்ததால் அப்படி!.

எங்கு சிகரெட் வாங்குவது? என்று கேள்வி எழுந்தது. ஏறாவூரின் எல்லை கடந்து, புதுக்குடியிருப்புக்கு அருகில் இருந்த ஐஸ்கிறீம் கம்பனி வரையில் சென்றோம். அது ஊருக்கு வெளிப்பகுதி. பக்கத்துக் கிராமம். அங்கு 'கோல்ட் லீப்' இரண்டு பைக்கட்டுகள் வாங்கிக்கொண்டோம். எங்கு உட்கார்ந்து குடிப்பது? என்ற கேள்விக்கு ராஜன் “கறுத்தப் பாலத்திற்குக் கீழே இருந்து குடிக்கலாம்” என்றான். அவ்விடம் நோக்கிப் புறப்பட்டுப்போனபோது, அவனது தந்தை உழுவையியந்திரத்தில் அப்பக்கமாகச் செல்வது தெரிந்தது. பயத்தில் அத்திட்டத்தினைக் கைவிடவேண்டி வந்தது. அதுகைவிடப்பட்டதும், “வா... தளவாய் காட்டுக்குள் போவோம்” என்றேன். தயாவின் வீட்டைக் கடக்கும்போது, அவன் வீதியில் நின்றிருந்தான். அவனையும் சைக்கிளில் ஏற்றிக்கொண்டு சென்றோம். வீதியில் தயா நிற்பதாகவும் நானும் ராஜனும் காட்டுக்குள் சென்று புகைப்பதாகவும் யாரேனும் வந்தால் தயா குருவிபோன்று கத்துவதாகவும் ஒப்பந்தமாயிற்று. வீதியருகிருந்து கஜுப்பழங்களைத் தயா பறித்துக்கொண்டிருந்தான். நாம் காட்டுக்குள் புகுந்து சிகரெட் ஐப் பற்றவைத்தோம். இருவருக்கும் புரையேறியது. இருமினோம். கண்ணீர் வந்தது.

தன் முயற்சியில் சற்றும் மனம் தளராத விக்கிரமாதித்தன்போன்று, மீண்டும் மீண்டும் முயற்சித்து புகைக்கக் கற்றுக்கொண்டோம். ஒன்றரை மணிநேரத்தில் பத்துச் சிகரெட்டுக்களை ஊதித்தள்ளிவிட்டு வரும்போது, தயா மரத்தடியில் படுத்திருந்தான். எங்கள் குரல்கள் அடைத்துப்போய் சத்தம் வரவில்லை.

வாயில் சிகரெட் மணம். தயா தங்களின் வீட்டில் இருந்து வெங்காயம் எடுத்துவந்து தந்தான். சப்பித்துப்பி விட்டு வீட்டுக்குப்போனேன். மாலையாகியிருந்தது. அம்மா எனது வாயில் இருந்து சத்தம் வரவில்லை என்பதைக் கண்டுகொண்டு -

”என்ன நடந்தது?” என்றார்.

“மச்ட் ஒன்றில் சத்தம்போட்டதில் குரலடைத்துவிட்டது”

“சரி… நாளைக்குச் சுகமாகிவிடும்“

அம்மாவின் பதிலால் அமைதியாக இருந்தேன். மறுநாள் அம்மா என்னைக் கிணற்றடிக்கு அழைத்தார். அம்மா கிணற்றடிக்கு அழைத்தால், எனது திருகுதாளங்களைக் கண்டுபிடித்துவிட்டார். அதுபற்றி உரையாடப்போகிறார் என்று அர்த்தம்.

“ஐஸ்கிறீம் கொம்பனிக்குப் பக்கத்தில் ஒரு கடையில் நேற்று இரண்டு சிகரெட்பெட்டிகளை வாங்கியிருக்கிறாய்”
தமிழ் பகுதியில் மட்டும் அல்ல, அம்மாவை ஏறாவூரில் உள்ள முஸ்லீம் பகுதிகளிலும் அனைவரும் அறிவர் என்பதை, நான் கவனத்தில் எடுக்கவில்லை என்பது புரிந்தது.

தலையைக் குனிந்தபடி நின்றிருந்தேன்.

“அப்பா இல்லாததால் செல்லம் தந்தது பிழை. ஒரு நாளும் அடிக்கேல்ல. பார் அந்தக் கடைக்கார முதலாளி இவ்வளவு தூரம் வந்து சொல்விட்டுப் போகிறார். அப்பாவையும் தனக்குத் தெரியும் என்றார். “தம்பியின் நண்பர்கள் சரியில்லை அம்மா” என்றும் அவர் சொன்னதாகச் சொன்னார்.

“யாரோட போய் சிகரெட் வாங்கின நீ?”

தயாவைச் சொன்னால் அம்மா அவனின் அம்மாவிடம் சொல்வார். அவன் கதி அதோ கதியாகிவிடும். ராஜன் என்று சொல்லவே முடியாது. அத்தனை நெருக்கமான குடும்ப நண்பர்கள். சுமணஸ்ரீயை மாட்டிவிட்டேன்.

“ஓ... அவனா? ஆளைக் காணட்டும்” என்றார்.

இந்த இடத்தில் நீங்கள் ஒன்றைக் கவனிக்க வேண்டும். அந்தக் கடைக்காரர் ஒரு முஸ்லீம். இரண்டு மூன்று கி.மீற்றர்கள் நடந்துவந்து அம்மாவிடம் சொல்லிவிட்டுப்போயிருக்கிறார். கோள் சொல்வதல்ல அவர் நோக்கம். ஊரின் ஒரு பையன் கெட்டுவிடக் கூடாது என்பதற்காக அவர் செய்த செயலை இன்று நினைக்கும்போது மனது நெகிழ்ந்துவிடுகிறது.

தமிழர், சிங்களவர், முஸ்லீம்கள் என்று அக்காலத்தில் பாகுபாடு இருந்ததில்லை. அனைவரின் குழந்தைகளையும் அனைவரும் பார்த்துக்கொண்டார்கள். வழி தவறுபவர்களை நல்வழிப்படுத்த வேண்டும் என்ற நல்லெண்ணம் இருந்தது. ராணுவம் கைதுசெய்து அழைத்துச் சென்றவர்களை மீட்க உதவிய பிக்குகளும் எங்கள் ஊரில் இருந்தார்கள். காளிகோயிலில் சாமியாடிய ஒரு இஸ்லாமியரையும் அறிவேன். தமிழர்களும் இஸ்லாமியர்களும் ஒன்றாகக் சென்றுவந்த தர்க்காக்களும் இருந்தன.

போரும், அரசியலும் இன்று ஊரையும் மக்களின் மனங்களையும் பிளவுபடுத்தியிருக்கிறது. இது எவருக்கும் நல்லதல்ல.

அன்று மாலையே சுமணஸ்ரீயிடம்சென்று “ராசா வீட்டுப்பக்கம் வந்துவிடாதே” என்று எச்சரித்து வைத்தேன்.

“அய் மச்சாங்?” (ஏன் மச்சான்?) என்றான் பரிதாபமாக

“மகே அம்மா உம்பவ மரய்” (என் தாயார் உன்னைக் கொலைசெய்துவிடுவார்) என்றேன்.

தொடரும்

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்