நினைவழியா பதின்மம், பகுதி 4

 பதின்ம வயதுப் பரவசங்கள் -4

******

சிங்கள நண்பர்கள் இடம்பெயர்ந்தார்கள். முஸ்லீம் நண்பர்களுடனான தொடர்பு குறைந்தது. கலவரங்கள் அதிகமாகின. ராணுவம் ஊருக்குள் திரியத் தொடங்கியது. கைதுகளும், தாக்குதல்களும் ஆரம்பமாகின. இயக்கங்களுக்கு ஆட்களைத் திரட்டினார்கள். திடீரென காணாமற்போன நண்பர்கள் ஆறேழு மாதங்களின் பின் முறுகிய உடம்புடனும், இடுப்பில் கட்டிய ஆயுதங்களுடனும் இரவு நேரங்களில் வந்து போனார்கள்.

மைதானத்தில் புதியவர்களும் இளையவர்களும் இணைந்து கொண்டார்கள். ஊரைப் பயம் பீடித்தது. பயந்து பயந்து விளையாடினோம் ஒரு வாரவிடுமுறையில் செங்கலடியில் அவர்களது மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது ராணுவம் ஒருவரை துரத்திக்கொண்டுவர, அவர் மைதானத்தின் நடுப்பகுதியின் ஊடாக ஓடினார். ராணுவம் தங்களின் ஏ. கே 47ஐ இயக்கியது. சுதாரித்துக்கொண்டு நிலத்தில் படுத்துக்கொண்டோம்.

அந்நாட்களில் ஒருநாள் இரவு தயாவும் நானும் 'செக்கன்ட் சோ' படம் பார்த்துவிட்டு வரும்போது, சிங்கள மகாவித்தியாலயத்திற்கு முன்பாக இருந்த சிவகுருநாதன் அய்யா வீட்டு இளநீர் கண்ணிற் பட்டது. சில காலமாகவே அவரது வீட்டின் மரத்தில் ஏறி இளநீரை வெட்டிக் குடித்துவிட்டு, நாம் மறைந்து விடுவதுண்டு. மரங்களின் கீழிருந்த இளநீர்க் கோம்பைகளைக் கண்ட சிவகுருநாதன் அய்யாவுக்கு கள்ளர்களைப் பிடிக்கவேண்டும் என்று தோன்றியிருக்கிறது. அப்படியான பொழுதில்தான் எமக்கும் தாகமெடுத்திருந்தது. கம்பிவேலியால் புகுந்து நான் சென்றி பார்க்க, தயா மரத்தில் ஏறி இரண்டு இளநீரை விழுத்தியபோது, “யார்டா அது...?" என்ற குரலுடன், அவரது டோர்ச் லைட் வெளிச்சம் முகத்தில் பாய்ந்தது. தயா குதித்து சாரத்தினால் தலையை மூடிக்கொண்டு ஓடினான். நான் சாரமணிந்திருக்கவில்லை. தவிர, ஓடுவதற்கிடையில் என் முகத்தைக் கண்டுவிட்டார். “டொக்டர் அம்மாவின் மகன்” என்று அவர் கத்தவும் நான் கம்பிவேலியால் பாய்ந்து ஓடவும் சரியாக இருந்தது. மறுநாள் தனது மனைவி மூலமாக அம்மாவிடம் விடயத்தை அறிவித்தார். நான் அந்தப் பக்கம் போகவே இல்லை என்று சாதித்தேன். அம்மா என்னை நம்பவில்லை.

சிவகுருநாதன் அய்யாவை நான் ஊரில் இருந்து புறப்படும்வரை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்துக்கொண்டேன். பிற்காலத்தில் எங்கள் அணியில் காற்பந்தாடிய வல்வெட்டித்துறையைச் சேர்ந்த சிங்கமொன்று சிவகுருநாதன் அய்யாவின் மகளைத் திருமணம் செய்து கொண்டார். அதுவும் காதல்திருமணம்தான். அதற்குப் பதினைந்து ஆண்டுகளின்பின் அய்யாவின் மகன் எனது தங்கையைத் திருமணம் செய்தார். அதுவும் அப்படித்தான்.

சிங்கள மாகாவித்தியாலய அதிபரின் மகள் எப்போது பாடசாலைக்குச் செல்வாள்? எப்போது வருவாள்? எந்த எந்த தினங்களில் அவளுக்கு மேலதிக வகுப்புகள் இருந்தன? எப்போது பன்சலைக்குச் செல்வாள்? என்று அவளது தந்தைக்கே தெரியாத பல விடயங்கள் தயாவுக்குத் தெரிந்திருந்தன. போயா தினங்களில் நாங்கள் மதம்மாறிப் பன்சலைக்குச் சென்றோம். மறுநாள் மீண்டும் மதம்மாறி காளிகோயிலுக்குச் சென்றோம்.

அவ்வப்போது பாடசாலைக்குச் செல்லும் பேருந்தில் எம்முடன் வருவான். புட்போட்டில் தொங்கிக்கொண்டிருப்பான். அல்லது என்னுடன் உரையாடுவதுபோல் அவளைப் பார்த்தபடியிருப்பான்.

அப்படியான 1985ஆம் ஆண்டின் கார்த்திகை மாதத்தில் ஒரு நாள் மாலை நண்பர்கள் சூழ, ஏறாவூர் புகையிரத நிலையத்தில் நின்றிருந்தேன். கையில் ஒரு சிறு பை.

அம்மா தனது இளைய மகனை ராணுவம் பிடித்து அடித்து உதைத்தபின், அவனை இங்கிலாந்துக்கு அனுப்பினார். காலப்போக்கில் மூத்த மகன்பற்றிய பயமும் அம்மாவுக்கு வந்திருந்ததால், என்னை இந்தியாவுக்கு அனுப்பும் ஒழுங்குகளைச் செய்திருந்தார். எனது காதலியும் தானும் சிலவேளை மேற்கல்விக்காக இந்தியா வரலாம்... என்றிருந்தாள். அதற்கப்புறமும் என்னால் ஊரிலிருக்க முடியுமா?

மட்டக்களப்பிலிருந்து கொழும்பு செல்லும் தபால் ரயில் ஏறாவூரை வந்தடைந்தது. ரயில் நிலையம் என்பதும் இரண்டு சம்பவங்கள் நினைவுக்கு வருகின்றன.

***

அந்நாட்களில் ரயில் நிலையத்தின் மத்திய பகுதியில் மட்டும்தான் வெளிச்சம் இருக்கும். ஆனால், ரயிலோ பத்து பதினைந்து பெட்டிகளுடன் நீண்டு நிற்கும். என்ஜின் நிற்கும் பிளாட்பாரம் பகுதியில் வெளிச்சம் இருக்காது. இவ்விடத்தில்தான் எங்கள் மைதானம் இருந்தது. ரயில் புறப்பட்டால் கடைசி ஆறேழு பெட்டிகள் எங்கள் மைதானத்தைக் கடக்கும்போது ரயில் வேகமெடுத்திருக்கும். இறங்கவோ ஏறவோ முடியாது.

ஏழு மணிக்கு கொழும்பு செல்லும் தபால் ரயில் ஏறாவூருக்கு வரும். ஒரு ரயில்பெட்டி நிறைய தயிர் ஏற்றுவார்கள். அதற்கு கால்மணிநேரமாவது தேவை. இந்த நேரத்தில் மைதானப் பகுதியின் ஊடாக இருண்டிருக்கும் பிளாட்பாரத்திற்கு வந்து நின்று கொள்வோம். ரயில் புறப்பட்டு வேகமெடுத்ததும், எடுத்துவந்த பிரம்புகளைக் கைளில் எடுத்து, ரயில் ஜன்னலில் கைவைத்திருப்பவர்களுக்கும் கதவுகளில் தொங்கிக்கொண்டிருப்பவர்களும் அடிப்போம். அவர்கள் பாடசாலையில் வாத்தியாரிடம் அடிவாங்கியதுபோல் துடிப்பார்கள். நாங்கள் சிரித்துக்கொண்டு மைதானப்பக்கமாய் ஓடுவோம்.

ஒருமுறை ரயில்நிலைய அதிபரின் தந்தையுடன் எமக்கு முரண்பாடு ஏற்பட்டது. அவருக்கு தானொரு இளைப்பாறிய பொலிஸ் அதிகாரி என்ற கர்வம் இருந்தது. நாம் வீதியில் நிற்பதும், சத்தமாகக் கதைப்பதும், அவர் வரும்போது எழுந்து நின்று மரியாதை செய்யாததும் பிடிக்கவில்லை. “நீங்கள் ரவுடிகள், பொலிஸில் பிடித்துக்கொடுப்பேன்” என்பார். எனது தாயாரை அவர் நன்கு அறிவார். என்னைப் பற்றி ஆயிரம் கோள் சொல்வார். அம்மா மரியாதைக்காக கேட்டுக்கொண்டிருந்துவிட்டு, “ஏன்டா, அந்தாளோட தனவுறீங்க” என்பார். அம்மாவை அவர் நன்கு அறிந்ததால் என்னிடம் ஆங்கிலத்தில் கேள்விகள் கேட்பார். அல்லது ஆங்கிலத்தில் ’கியூ’ என்னும் சொல்லுக்கு எழுத்துக்கூட்டச் சொல்வார். எனக்கும் எமது அணியில் இருந்த எவருக்கும் அவரைப் பிடிக்காது. ஆனால், பொலிஸ் செல்வாக்குள்ளவர் என்பதால் எதுவும் செய்ய முடியவில்லை. எனவே, அவரது மகனைக் குறிவைத்தோம்.

இரவு நேரங்களில் ரயில்நிலையத்தினுள் ரயில் நுழையும் வேளை ரயில் நிலையத்தில் மின்சாரம் நின்றுபோகத் தொடங்கியது. ரயில் புறப்பட்ட சில நேரங்களில் மின்சாரம் மீண்டும் வந்தது.

ரயில் வரும்போது பிளாட்பாரத்தில் நின்று ஒருவிதமான சத்தமெழுப்புவேன். வாசலுக்கு அருகே ஒதுக்குப் புறமாயிருந்த மின்சார கட்டுப்பாட்டுப் பெட்டியில் இருக்கும் மெயின்சுவிட்சை தயா சற்று பின்னோக்கி இழுத்துவிடுவான். பார்த்தால் மெயின்சுவிட் இயங்கிக்கொண்டிருப்பதுபோலிருக்கும் ஆனால், இயங்காது. பல வாரங்கள் இது தொடர்ந்தது. ரயில் நிலைய அதிபரால் காரணத்தைக் கண்டுபிடிக்க முடியவே இல்லை. பிற்காலத்தில் அவரது தந்தையை ஒரு இயக்கம் கொலைசெய்தது. அத்துடன் எமக்கிடையிலான யுத்தமும் ஓய்ந்தது

***

ரயில் புறப்படுவதற்கு தயாரானது. தயா இறுக அணைத்துக்கொண்டான். அப்துல் ஹை (கவிஞர் புரட்சிக் கமாலின் மகன்), குமார, சந்திர ஸ்ரீ, ராஜன், பாமி, செங்கலடி நண்பர்கள் என்று ஒவ்வொரு தோழர்களாக அணைத்துக்கொண்டார்கள். நண்பர்களிடமிருந்து விடைபெற்று ஏறிக்கொண்டேன். ரயில் புறப்பட்டபோது அதனுடன் சற்றுத்தூரம் ஓடிவந்தான் தயா.

மைதானத்தைப் புகையிரதம் கடந்தபோது, மீளமுடியாத நீண்ட பயணமாக அது இருக்கப்போகிறது என்பதையோ வாழ்வின் அற்புதமான காலங்களையும் தோழமைகளையும் இழக்கப்போகிறேன் என்பதையோ நான் உணர்ந்திருக்கவில்லை. இருட்டைக் கிழித்துக்கொண்டு புகையிரதம் வேகமெடுத்தது.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்