நினைவழியா பதின்மம், பகுதி 10

அந்நாட்களில் எனக்கு 18 வயதிருக்கும் உயர்தரப்பரீட்சை எழுதியிருந்தேன். ஊரில இருந்த பெண்களெல்லாம் தேவைக்கு அதிகமாகவே அழகாகத் தெரிய, நேரமே இல்லாம அவர்கள் பின்னாலும், நண்பர்களின் காதல்களுக்கு உதவியபடியும் ஓடிக்கொண்டிருந்தேன்.


எங்கள் வீட்டில 'தங்கச்சி' என்ற பெயரில் ஒரு பூலான்தேவி இருந்தாள். அவள் பண்ணிய இம்சை கொஞ்ச நஞ்சமல்ல.

அவளுக்கும் எனக்கும் 13 வயது வித்தியாசம். குழந்தைகள் என்றால் உருகும் மனம் அப்போதும் இருந்தது. என்னுடன் சைக்கிளில் அலைவதற்கு அவளுக்கும் பெரு விருப்பம் இருந்தது. இதைவிட, தங்கையை சைக்கிளில் ஏற்றிச் சென்றால் அழகிகளை மற்றையவர்களின் கண்டிப்பு இன்றிப் பார்க்கலாம் ரசிக்கலாம் என்ற நுண்ணரசியலும் இருந்ததால், எனக்கும் ஆட்சேபனை இருந்ததில்லை.

இலங்கை அரசின் அதிரடிப்படையும், சிறப்புப் பொலிசும் ஒரு நாள் தம்பியைக் கைதுசெய்து சில நாட்கள் தங்களது விருந்தினராகத் தங்கவைத்து மிகச் சிறப்பாகக் கவனித்து அனுப்பினார்கள். எங்கள் பாடசாலை அதிபர் பிரின்ஸ் சேர், ஏறாவூர் பன்சலைப் பிக்கு, இன்னும் சில பெரிய இடங்களின் உதவியுடன் அம்மா பெரும்பாடுபட்டு அவனை வெளியில் எடுத்தார்.

அம்மாவின் இளைய புத்திரனில் அதிரடிப்படையின் கண் பட்டதால் ஊரில் இருப்பது உசிதமல்ல என்று அம்மா, அவனை எலிசபெத் மகாராணியிடம் அனுப்பினார். குறைந்த வயதில் இங்கிலாந்து சென்ற அகதிகளில் அவனும் ஒருவன்.

இதனால் இரண்டு நன்மைகள் இருந்தன. ஒன்று அம்மாவின் இளையபுத்திரனின் உயிர் தப்பியது. மற்றையது நானும் அவனும் ஆளையாள் சுட்டுக்கொள்ளவில்லை.

தம்பி சென்றபின் தங்கை டவுன் பாடசாலை ஒன்றில் சேர்க்கப்பட்டாள். அதனால் தங்கையைத் தினமும் பாடசாலைக்கு செல்லும் வாகனத்தில் ஏற்றிவிடுவது எனது வேலையாகிப் போனது.

காலை 7மணியளவில் தங்கை பாடசாலைக்குச் செல்லும் வாகனம் மெயின் வீதியில் ஒரு கடையருகில் வந்து நின்றதும், அவளை அதில் ஏற்றிவிட்டு நானும் வெள்ளைச் சட்டைகளைப் பார்க்கச் செல்வது வழக்கம். என்னைப் போல் கடமையுணர்ச்சியுள்ள சில நண்பர்களும் எனக்காகக் காத்திருப்பார்கள். நாம் கடமை தவறுவதேயில்லை.

தங்கை முதன் முதலில் பாடசாலைக்குச் சென்ற மாதங்கள் ஒரு வித பிரச்சினையுமில்லாமல் கடந்துபோயின. சைக்கிளில் அழைத்து வருவேன். வரும் வழியெல்லாம் பூலான்தேவி தன் வாயையே துப்பாக்கியாக்கி, கேள்விகளைத் தோட்டாக்களாக்கி, என்னைச் சுட்டபடியே‌ வருவாள். வாய் ஓயாமல் கதைக்கும் திறமை அவளிடம் இருந்தது.

பாழாய்ப் போன யாரோ எனது தங்கைக்குக் கள்ளத் தீன் உண்ணும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியிருக்கிறார்கள். இவளுக்கும் ருசி பிடித்துக்கொண்டது. ஆனால், காசுக்கு எங்கேபோவது என்னும் பிரச்சினை வந்தபோதுதான் அவள் பூலான்தேவியாக மாறினாள்.

அன்றும் சைக்கிளில் ஏற்றிவந்தேன். அவளை அழைத்துச் செல்லவேண்டிய வாகனம் நிறுத்தப்படும் கடையருகே வந்ததும் வழமை போல் இறங்கிக் கொள்வாள், நாமும் நமது கடமையைச் செய்யலாம் என்று நினைத்திருந்தேன். ஆனால், அவளோ நான் இறங்கமாட்டேன் என்று அடம் பிடித்தாள்.

அன்பாய்ச் சொன்னேன், மறுத்தாள்.

செல்லமாய் கூறிப்பார்த்தேன், தலை அங்கும் இங்கும் ஆட்டினாள். கெஞ்சினேன், அதற்கும் அவள் அசையவில்லை.

சற்று மெதுவாக உஷ்ணத்துடன் சொல்லவேண்டியதாயிற்று, அதையும் மறுதலித்தாள்.

"இறங்கிப் போடீ, இல்லாட்டி அம்மாட்ட சொல்லுவேன்" என்றேன். நக்கலாகச் சிரித்தபடி மறுத்தாள்.

பயங்கரமாய் வெருட்டினேன், கண்களைக் குளமாக்கி அழுதபடி இருந்தாளே தவிர மசியவில்லை.

எனக்கு நேரம் போய்க்கொண்டிருந்தது. வெள்ளைச் சீருடையணிந்த பெண்களுக்கான பஸ்கள் எல்லாம் போய்விடும்... என்ற கவலையில் இரத்த அழுத்தம் கூடியது.

”சரி... அண்ணா இண்டைக்கு 10 சதம் தாறன் இறங்கிப் போங்கோ” என்றேன். பூலான்தேவி சிரித்தபடியே கையை நீட்டினாள். நானும் முதன் முதலாய் லஞ்சம் கொடுத்தேன். துள்ளிக் குதித்து ஓடினாள்.
எனக்கு முன்னிருந்த கடமையுணர்ச்சியின் அவசரத்தில் இதை நான் பெரிதாய் எடுக்கவுமில்லை, ஞாபகத்தில் வைக்கவுமில்லை

அடுத்தநாளும் வந்தது. அன்றும் அழுதாள். நானும் 10 சதம் வெட்டினேன்.

இப்படித் தொடங்கிய கொள்ளை 20 – 30 சதம் என அதிகரித்து, காலப்போக்கில் 50 சதமாகியது.

இதை எவ்வாறு அம்மாவிடம் சொல்வது? “ நீயே அவளை டவுண் பாடசாலையில் அழைத்துச்சென்று, விட்டு விட்டு வா” என்றால்... சகலதும் சிக்கலாகிவிடும் என்பதால் அடக்கியே வாசித்தேன்.

அந்நாட்களில் பொலீஸ்காரன் பெண்டாட்டியான எனது அம்மா பணம் வைக்கும் பெட்டியில் இருந்து தினமும் 2 - 3 ரூபா திருடுவது எனது வழக்கமாய் இருந்தது. தினமும் படம் பார்க்கவும் இதர செலவுகளுக்கும், அது போதும்.

அந்தப் பணத்தில் 50 சதத்தை பூலான்தேவி தினமும் பகல்கொள்ளையடித்துக் கொண்டிருந்தாள். இது பலத்த பொருளாதார சிக்கலை மட்டுமல்ல, நண்பர்கள் மத்தியில் மானப்பிரச்சினையையும் ஏற்படுத்தியது. அதைப் பல வழிகளில் முயன்றும் நிறுத்த முடியவில்லை.

1985 இன் இறுதியில், நான் ஊரில் இருந்து புறப்படும் வரை, பூலான்தேவி என்னிடம் தினமும் கொள்ளையடித்தபடியே இருந்தாள்.

தொடரும்...

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்