நினைவழியா பதின்மம், பகுதி 9

 பதின்ம வயதுப் பரவசங்கள் - 9

******

ஏறாவூர்ப் புகையிரநிலையத்திற்கு எதிரே தொடங்கி வலப்புறமாகச் சென்று, இடதுபுறமாகத் திரும்பி பதுளைவீதியில் விழும்வரை உள்ளதுதான் எல்லை வீதி (Boundry Road). பதுளைவீதி நோக்கிச் செல்லும்போது, TC குடிமனைகளைக் கடந்து, சற்றுத்தூரத்தில் இடப்பக்கமாக வெறும் காணி ஒன்று இருந்தது.

மட்டக்களப்பின் மணிக்கூண்டுக் கோபுரத்துக்கு அருகில் இருந்த பழைய பேரூந்து நிலையத்தில், 1980களின் ஆரம்பத்தில் விலைமாதர்கள் சிலர் நிற்பார்கள். வெற்றிலை குதப்பிய உதட்டுடன், கடுமையான நிறப் புடவைகளுடன், மார்பின் பெரும்பகுதி வெளித்தெரிய, அதீத ஒப்பனையுடன் அவர்களது நடையுடைபாவனைகள் எங்களை விட, வயதிற் பெரியவர்களைக் குறிவைப்பதாய் இருக்கும்.

சிலவேளை எங்களுக்கு எதுவும் தெரியாது என்று அவர்கள் நினைத்திருக்கலாம். நாங்கள் பிஞ்சில் முற்றி வெடித்திருந்தோம் என்பதை அவர்கள் அறிந்திருக்க முடியாது.

மேலே குறிப்பிட்டவர்களுள் ஒருவர், நான் குறிப்பிட்ட அந்த வெற்றுக்காணியில் ஒரு குடிசையமைத்துக் குடியிருந்தார். தகரத்தினாலான கூரை. பெயர் தங்கம்மா அல்லது தங்கமுத்து என்றுதான் நினைவிருக்கிறது. அவர் வந்தால் ’தாகம் தீர்க்கும் தங்கம் வருகிறார்’ என்று எங்களுக்குள் ரகசியமாகப் பேசிச் சிரிப்போம்.

ஒரு நாள் மட்டக்களப்பு டவுனுக்கு தயாவும் நானும் படம் பார்க்கச் சென்றிருந்தோம். டிக்கட் வரிசையில் நின்றபோது, வயதில் மூத்த சிலருடன் எமக்கு முறுகல் ஏற்பட்டது. அவர்களின் பலம் அதிகம் என்பதாலும், அவர்களின் நகரம் என்பதாலும், தந்திரோபாயமாகப் பின்வாங்கிக்கொண்டோம். வீடு வரும்போது… “அவனுகளுக்கு பாடம் படிப்பிக்கணும்” என்றான் தயா. நானும் ஆமோதித்தேன்.

காலம் புதிர்மிக்கது என்பதை அன்றொருநாள் மாலை எமது மைதானத்தில் விளையாடிக்கொண்டிருந்தபோது உணர்ந்தேன். மட்டக்களப்பில் இருந்து வந்த புகையிரதத்தில் இருந்து மூவரை இறக்கித் தண்டவாளத்தின் ஓரமாக நடத்திக்கொண்டு வந்தனர் தங்கம்மாவும் இன்னும் ஒரு பெண்ணும்.

மிகுதியைப் புரிய எங்களுக்கு பல்கலைக்கழக அறிவு தேவையாக இருக்கவில்லை. இருந்தாலும், விளையாட்டின் மும்முரத்தில் அவர்களில் கவனம் செல்லவில்லை.

மைதானத்தின் ஓரமாகவே தண்டவாளம் இருந்தது. அவர்கள் தண்டவாளத்தின் ஓரமாகச் சென்று, தங்கம்மாவின் குடிசைக்குச் செல்லும் பாதைக்குத் திரும்பியபோதுதான், தயா “டேய் அண்டைக்கு தியேட்டரில எங்களுடன் சண்டைபிடிச்ச ஆக்களடா” என்று கத்தினான். உற்றுப் பார்த்தோம். அவர்களேதான். 30 - 35 வயதானவர்கள்.

தயா "கூய்.. கூய்..." என்று கத்தினான். நாங்களும் இணைந்துகொண்டோம்.

தங்கம்மா சற்றேனும் கலவரப்படவே இல்லை. இப்படி எத்தனையைக் கண்டிருப்பார் அவர். ஆண்கள் மூவரும் கலவரப்படுவதும் தங்கமுத்திடம் பேசுவதும் தெரிந்தது. தங்கம்மா தனது ராஜதந்தரத்தினால் அவர்களை அமைதிப்படுத்தியிருக்கவேண்டும். அவர்கள் தங்கம்மாவை முன்னால் அனுப்பிவிட்டுப் பின்னால் நடந்தார்கள். அந்த மூவரும் எம்மை அடையாளம் காணவில்லை.

“டேய் ஏறுடா” என்று என்னைச் சைக்கிளில் ஏற்றிக்கொண்டான் தயா. நானும் வருகிறேன் என்று தொத்திக்கொண்டான் இன்னொருவன். மேலும் மூன்று சைக்கிள்களில் இன்னும் அறுவர் ஏறிக்கொள்ள, நாம் தங்கம்மாவின் வீட்டிற்கு வேறு ஒரு வழியினால் வந்து காட்டுப்பகுதியினுள் நின்றுகொண்டோம்.

முதலில் தங்கம்மாவும் மற்றைய பெண்ணும் குடிசைக்குள் நுழைகிறார்கள். அவர்களின் பின்னே வந்தவர்களில் இருவர் தயங்கித் தயங்கி உள்ளே செல்ல, ஒருவர் வீதியில் நின்றபடி ஒரு சிகரெட்டைப் பற்றவைக்கிறார். அது முடிய இன்னொன்றைப் பற்றவைக்கிறார். அவர் முகத்தில் பதட்டமும் அவசரமும் தெரியகிறது. வீட்டிற்கு முன்பாக அங்குமிங்குமாக நடக்கிறார். அவர் உடலில் ஊறிய காமம் புகை புகையாக வெளியேறிக்கொண்டிருந்தது.

சற்றே பொறுத்த நாம், குடிசையை நோக்கி கற்களால் எங்கள் தாக்குதலைத் தொடுக்க, அவை தகரங்களில் விழுந்து பெருஞ்சத்தமெழுப்பின.

தங்கம்மாவின் பொறுமை காற்றில் பறக்க… வெளியே வந்து “பு... மக்களே... கடுக்குது என்றா வாறதானே” என்று கத்தினார். நண்பர்கள் "கூ… கூ ..." என்றார்கள்.

அவர் உடை கலைந்திருந்தது. நாம் அவரது உழைப்பைக்கெடுத்துவிட்டோம் என்ற கோபம். உள்ளே நின்றிருந்த இருவரும் அவசர அவசரமாய்ப் பதட்டப்பட்டு வெளியே வந்து, வீதிக்குச் சென்று நண்பருடன் நின்றுகொண்டார்கள்.

நாம் இரண்டாகப் பிரிந்து பின்புறத்தால் வீதிக்கு வந்து தங்கம்மாவின் வீட்டில் இருந்து யார் புறப்பட்டாலும் எம்மைக் கடந்து செல்லவேண்டிய நிலைக்கு அவர்களைத் தள்ளினோம். விளையாட்டு முடிந்து வந்த சில நண்பர்களும் சேர்ந்துகொள்ள எங்கள் பலம் தூக்கலாகவே இருந்தது.

மாலைக் கருக்கல் ஆகும்வரை தங்கம்மா வெளியே வரவில்லை. இருளத்தொடங்கியதும் வெளியே வந்து அவர்களைக் காட்டுப்பக்கமாக அழைத்துப்போனார். அங்கு பாழடைந்த ஒரு அரிசி ஆலை இருந்தது.

அங்கும் அவர்களை நாம் விட்டுவைக்கவில்லை. மீண்டும் வீட்டுக்குள் புகுந்தார்கள். அங்கும் தகரத்தில் கற்கள் சரமாரியாக விழுந்தன. வெறுத்துப்போய் வீதிக்கு வந்து நின்றுகொண்டார்கள் மூவரும்.

இரவு எட்டு மணிபோல் தங்கம்மா எங்களைத் தூஷணத்தால் திட்டியடிபடி அவர்களை ரயில்நிலயத்திற்கு அழைத்துப்போனார். அவர்கள் போகும் வழியில் நின்று “டேய் தியேட்டரில வைத்து அடிக்கவா வந்தீங்க?” என்று தயா கேட்டான். அவர்கள் தலை நிமிரவில்லை.

ரயில்நிலையத்துத் தண்டவாளத்தில் நாம் இரும்புத் துண்டொன்றால் தாளமிட்டுக்கொண்டிருந்த போது, இரவு 9 மணிபோல் மட்டக்களப்புக்கு மாகோயாச் சந்தியில் இருந்து வரும் ரயில் வந்தது.

அது அதிகமாக மிருகங்களை ஏற்றியிறக்கும் ரயில். அந்த ரயிலில் மனிதர்கள் மிகவும் குறைவாகவே இருப்பார்கள். பல பெட்டிகள் காலியாகவே இருக்கும். அவர்கள் ரயிலில் காலியான ஒரு பெட்டியில் ஏறிக்கொண்டார்கள்.

ரயில் மட்டக்களப்பை அடைய ஆகக் குறைந்தது 45 நிமிடங்கள் எடுக்கும். அங்கும் விடியும்வரை எவரும் ஏறமாட்டார்கள்.

கலவிக்குக் குறுக்கே நிற்பது பெரும் பாவம் என்பதையும் காமத்தின் தாற்பரியத்தையும் தங்கம்மா போன்றவர்களின் வாழ்க்கை எத்தனை வலிகளைக் கொண்டது என்பதையும் ஒரு நேர உணவுக்காக அவர்கள் படும்பாட்டையும் காலம் பிற்காலத்தில்தான் எனக்கு உணர்த்திற்று.

தங்கம்மாவிடம் எங்களை மன்னியுங்கள் என்று கேட்பதற்கு அவர் உயிரோடு இல்லை.

'விடுதலை விரும்பிகள்' மங்களகரமாக அவரது நெற்றியில் துப்பாக்கியால் பொட்டுவைத்து அனுப்பிவிட்டார்கள்... என்றுதான் யாரோ சொன்னார்கள்.

தொடரும்...

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்