நினைவழியா பதின்மம், பகுதி 11

 பதின்ம வயதுப் பரவசங்கள் - பகுதி 11

******

அருளைப்பற்றி எழுதியிருந்தேன் அல்லவா! அவன் விடுதலை இயக்கம் ஒன்றில் சேர்ந்து சற்றுக்காலத்திலேயே கொல்லப்பட்டான். அவனைப்பற்றிய சில கதைகள் இருக்கின்றன.

ஆள் பெரிய உயரமில்லை. மெல்லிய உடம்பு. அடிக்கடி ஆஸ்துமா, நெஞ்சுவலியால் அவதிப்படுவான். நகைச்சுவையுணர்வு உடையவன்.

எங்கள் ஊரில் தங்கம்மா என்ற பெயரில் ஒரு விலைமாது இருந்தார் என்பது உங்களுக்குத் தெரியும். அவரைப்பற்றி பல கதைகள் உண்டு. விடலைப் பருவத்தில் விலைமாது என்றால் ஒரு வித குறுகுறுப்பு ஏற்படுவதுண்டல்லவா.

அருளின் வீட்டுக்கு அருகில்தான் ஒரு காணிக்குள் தங்கம்மா தகரக்கொட்டகை ஒன்று அமைத்து அதனுள் தனது ராஜ்யத்தை நடாத்திவந்தார். அந்த வீட்டைக் கடக்கும்போது யார் உள்ளே போகிறார்கள் வருகிறார்கள் என்று கவனிப்போம். சில நாட்கள் மரங்களுக்கு பின்னால் ஒளிந்திருந்து வேவு பார்ப்பதும் உண்டு.

ஒரு நாள் அருள், முல்லை மலர் மேலே மொய்க்கும் வண்டு போலே என்ற பாடலை மாற்றி அதில் தங்கம்மாவையும் முருகையாவையும் இணைத்து கொச்சையாகப் பாடினான்.

பாட்டில் வந்த முருகையாவை நாம் அறிவோம். எனவே, என்ன நடந்தது என்று விசாரித்தபோது, கலவியைக் கண்டதாகச் சொன்னான். அதன்பின் முருகையா அண்ணன் வரும்போதெல்லாம் அந்தப் பாடலை பாடுவோம். அவருக்கு கட்டுக்கடங்காத கோபம் வரும். 'வழிசல் காவாலி நாய்கள்' என்று திட்டுவார். ஆனாலும் ஒன்றும் செய்ய முடியவில்லை அவரால்.

***

சிங்கள நண்பனான சுமணஸ்ரீக்கு சந்திரஸ்ரீ என்று ஒரு அண்ணன் இருந்தார். சற்று அதீதமாகவே உணர்ச்சிவசப்படும் மனிதர். சகோதரர்கள் இருவரும் இரு துருவங்கள். நீரும் நெருப்பும் வாத்தியாரை வென்றவர்கள்.

சுமணஸ்ரீ குழப்படி என்றாலும் படிப்பில் படு கெட்டி. இலங்கையின் விவசாயத்துறையில் மிக முக்கிய பதவியில் இருப்பதாக அறிந்தேன். அண்ணன் அப்படியில்லை.

ஒரு நாள் ஊருக்குள் கடும் மழை. செல்வி தியேட்டரில் சுமணஸ்ரீயுடன் படம்பார்க்கக் காத்திருக்கிறோம். அவனது அண்ணர் குடையுடன் தியேட்டருக்குள் வருகிறார். இதைக் கண்ட சுமணஸ்ரீ நாற்காலியில் இருந்து சரிந்து நிலத்தில் குந்திக்கொண்டான். படம் தொடங்கியதும் எழுந்து உட்கார்ந்தான். அவனது அண்ணன் எமக்கு இரண்டு வாங்குகளுக்கு முன்னால் இருக்கிறார்.

படத்தில் திடீரென்று மழைவரும் காட்சி… பெரு மழை அடித்து ஊற்றுவதாகக் காண்பிக்கிறார்கள். சுமணஸ்ரீயின் அண்ணன் திடீர் என்று தன்னிடம் இருந்த குடையை விரித்துப் பிடித்தார். அருகிருந்த பலர் சிரிக்க சிலர் கூ... என்று கத்திய பின்தான், அவருக்கு தனது முட்டாள்தனம் புரிந்தது.

இது நடந்து இரண்டு நாட்களுக்கு பின் எம்முடன் நின்றிருந்த சுமணஸ்ரீயை அவனது அண்ணன் “வீட்ட போ” என்று வெருட்டினார். இருவருக்கும் வாய்த்தர்க்கம் ஏற்பட்டு சண்டையளவுக்கு சென்றபோது, சுமணஸ்ரீ ”போடா… தியேட்டருக்குள்ள மழைக்கு குடைபிடிச்ச ஆள்தானே நீ” என்று சொல்ல, நாங்கள் பெரிதாகச் சிரிக்க அண்ணன் ஆடிப்போய் விட்டார். அவர் எதுவும் பேசாது “வீட்ட வா”என்று கறுவிக்கொண்டு கலைந்தார்.

***

ஒரு முறை சித்திரைப் புத்தாண்டுக்கு விளையாட்டுப்போட்டி ஒன்றை ஒழுங்குசெய்தோம். சைக்கிள் ஓட்டப்போட்டி, மரதன், கயிறுஇழுத்தல் இன்னும் பல விளையாட்டுக்கள் என்று திட்டமிடப்பட்டது.

“மச்சான் நான் சைக்கிள் ஓட்டப்போட்டியில் வென்று காட்டுகிறேன்" என்றான் தயா. நானும் மடையன்போன்று அதை நம்பி எனது தம்பியின் புதிய பிளையிங் பிஜன் சைக்கிளைக் கடன்பெற்றுக் கொடுத்தேன்.

முதல் நான்கு கி.மீற்றர்களுக்கும் முதலாவதாக வந்த தயா அதன்பின் களைத்துப்போனான். சைக்கிளையும் ஆளையும் பின்னால் சென்ற லொறியில் ஏற்றிவந்தோம்.

அந்த விளையாட்டுவிழா இன்னும் நினைவிருக்கிறது. எமது அணியில் கவிஞர் புரட்சிக் கமாலின் மகன் அப்துல்ஹை விளையாடினார். அழகன். அழகாக உடுத்துவார். வேகமான ஓட்டக்காரன். அவருக்கு அப்துல் ஹமீட் போன்ற குரல்வளமும் இருந்தது. பிற்காலத்தில் இலங்கை ஒலிபரப்புச் சேவைக்கும் தேர்வுக்காக சென்று வந்தவர். அவர்தான் அந்த விளையாட்டுப்போட்டியை ஒலிபரப்பினார். அவரின் அழகுக்கும் திறமைக்கும் தமிழ் ரசிகைகள் சிலர் இருந்தார்கள் என்பது கொசுறுத் தகவல்.

எங்கள் மைதானத்தில்தான் விளையாட்டுவிழா நடைபெற்றது.

எங்கள் வீட்டில் ஒரு புகைப்படம் இருக்கிறது. அது 1960களின் இறுதியில் ஏறாவூர் பொலீஸ் நிலையத்தில் எனது தகப்பனார் பணிபுரிந்த காலத்தில் எடுக்கப்பட்டது. அந்நாட்களில் நடைபெற்ற ஒரு அழகுராணிப் போட்டியில் எனது ஒன்றுவிட்ட அக்கா பங்குபற்றிய புகைப்படம் அது.

ஆம்… ஏறாவூரில் 1960களின் இறுதியில் அழகுராணிப்போட்டி நடந்திருக்கிறது. ஆதாரம் இருப்பதால் நீங்கள் நம்பத்தான் வேண்டும்.

இந்தக் கதையை நான் அறிந்திருந்ததால், எங்கள் அணியின் தலைவரிடம் “எங்கட விளையாட்டுப் போட்டியின் முடிவில் அழகுராணிப் போட்டி வைப்போம்" என்றேன்”

தயா ஆமோதித்தான். தயாவின் அழகி ஊரின் அழகிகளை நிச்சயம் தோற்கடிப்பாள் என்று அவனுக்கு தெரிந்திருந்தது. உண்மையும் அதுதான்.

ஆனால், சிங்களவரான எங்கள் அணியின் தலைவர் சந்திரே அய்யா, “அய்யோ, உங்கட ஆக்கல் என்னைய சுட்டுபோடுறது” என்றார் தனக்குத் தெரிந்த தமிழில்.

தொடரும்...

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்