நினைவழியா பதின்மம், பகுதி 5

தயாவுக்கு, தான் பிபிசி ஆங்கிலச் சேவையில் வேலைசெய்கிறேன் என்று நினைத்திருந்தானோ என்னவோ, ஆங்கிலத்தில் விளையாட்டுக்களை ஒலிபரப்புவதில் பலத்த விருப்பமிருந்தது. அந்நாட்களில் அவனுக்குத் தெரிந்த ஆங்கிலத்தை வைத்து கிரிக்கெட் போட்டிகளை எமக்கு ஒலிபரப்புவான். மதிய வேளைகளில் அருகிருந்த தண்ணீர்த் தாங்கியொன்றின் கீழ் உட்கார்ந்திருக்க, தயா கற்பனையில் உலகக்கோப்பைப் போட்டியை ஒலிபரப்புவதுபோல் , உலகத்தின் கிரிக்கெட் ரசிகர்கள் அனைத்தும், தான் கூறுவதைக் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள் என்ற நினைப்பிலும் கற்பனையில் போட்டிகளை உருவாக்கி ஒலிபரப்பிக்கொண்டிருப்பான். கேட்டுத்தொலைக்கவேண்டிய விதி எங்களுக்கிருந்தது.


இது போதாது என்று அவனது வீட்டுக்கு அருகில் பாழடைந்த அரிசி ஆலையொன்றின் நிலம் சீமெந்தினால் ஆனது. எம்மை அங்கு அழைத்துச்சென்று, தளத்தைச் சுற்றி மிதியுந்து ஓட்டப்போட்டி வைப்பான். அதை ஆங்கிலத்தில் விபரிக்கும்போது எமது பெயர்களைத் தவிர, வேறு எதுவும் எமக்குப் புரியாது. தயாவுக்கும்தான்.

***

ஒரு நாள் எமது வேலிக்கு ஓலை கட்டவேண்டியிருந்தது. புன்னைக்குடாவுக்குச் செல்லும் வீதியில், தளவாய்க்கு அருகில் வீதியோரத்தில் ஒரு சிறுதெய்வக் கோயிலொன்று இருந்தது. அவ்வழியெங்கும் காடும் கள்ளிப்பற்றைகளும் நிறைந்திருந்த காலம். நாம் அந்தக் காட்டுக்குள் முயல் பிடிக்கச் செல்வதுமுண்டு.

இக்காட்டுப் பகுதியில் இருந்த பனைகளில் தயா ஏறி ஓலைகளை வெட்டினான். அவற்றை வீதிக்கு இழுத்துவந்து சேர்த்தோம். அழைத்துச்சென்றிருந்த வண்டிலில் ஓலைகளை ஏற்றிக் கட்டிக்கொண்டிருந்தபோது, ஓலைகளில் மேலிருந்த தயா தடுமாறிச் சாய்ந்து விழுந்தான். அவனின் கஷ்டகாலம் அவன் விழுந்த இடத்தில் பெரும் கள்ளிப் பற்றை இருந்தது. அவனை இழுத்து வெளியே எடுத்தோம். முள்ளம்பன்றிபோன்று வெளியே வந்தான்.

முட்களை அகற்றிக் களைத்த நிலையில், அவனை ஏறாவூர் வைத்தியசாலைக்கு அழைத்து வந்தபோது, அம்மாதான் வைத்தியம் செய்தார். அவனது உடலில் இருந்த முள்ளுகளை அம்மாவும், இன்னொரு வைத்தியரும் ஒரு தாதியும் பல மணிநேரமாக அகற்றிக்கொண்டிருந்தார்கள். அதன்பின்பும் பலகாலமாக முட்கள் அவனுடலில் கிடந்து உபாதைகளைக் கொடுத்துக் கொண்டிருந்தன.

இந்த நாட்களில் லிங்கம் அண்ணன் என்று ஒருவர் அணியில் இணைந்தார் அவரும் கப்பலில் தொழில் பார்த்தவர். கிரிக்கெட் பைத்தியம். வாட்டசாட்டமான உடம்பு. டெனிம் நீளக்காற்சட்டையை அவரிடம்தான் முதன்முதலில் கண்டேன்.

மனிதர் கிரிக்கெட் என்றால் கண்ணை மூடிக்கொண்டு அடிப்பது என்று நினைத்திருந்தார். அவர் எந்தப் பந்தையும் தடுத்தாடிய சரித்திரமே இல்லை. எல்லாப் பந்துகளுக்கும் அடித்தார். ஒரு ரண் இரண்டு ரண் என்றால் ஓட மாட்டார். “பொறுடா, அடுத்தது ஆறுதான்” என்பார். மட்டை நிலத்தில் படாது, குனியவும் மாட்டார். ஆனால், குறி தவறாது. அவருக்கு ஆப் சைட் பந்துகளை கையாளத் தெரிந்திருக்கவில்லை. இதைவைத்தே அவரை மடக்குவோம்.

இருபது ஆண்டுகளுக்கு முன் காளிகோயில் திருவிழாவின்போது அவர்முன் போய்நின்று “லிங்கமண்ணை” என்றேன். நிமிர்ந்து கண்களைச் சுருக்கிப் பார்த்தார். “மறந்திட்டீங்க போல” என்றேன். “டேய் சஞ்சயன்" என்று வந்து கட்டிக்கொண்டார்.

இந்த நாட்களில் ஊருக்குள் மினி தியேட்டர்கள் முளைத்தன. ஓலையால் கொட்டில்போட்டு, தென்னங்குற்றிகளை நட்டு, அதன்மேல் பலகைகளை அடித்திருப்பார்கள். வீடியோ டெக்கில் படம் ஓடும். புதிய படங்கள் எல்லாம் தியேட்டருக்கு வருமுன், மினி தியேட்டர்களில் ஓடின. ஒரு தலை ராகம், சலங்கை ஒலி எல்லாம் அங்குதான் பார்த்தோம். இப்படியான மினித் தியேட்டர்களுக்குப் பெண்களும் வருவார்கள்.

ஒருநாள் தயா, சுமணஸ்ரீ, நான் படம் பார்க்கப்போனோம். பயணங்கள் முடிவதில்லை என்ற மோகனின் படம் என்றே நினைவிருக்கிறது. சுமணஸ்ரீயை வர்ணிப்பதற்கு 'கொசப்பு' அல்லது 'வழிசல்' என்ற வார்த்தைகள் போதும். நாமும் அவனுக்குக் குறைவில்லை. ஆனால், அவர்தான் எங்கள் குரு. விளையாடுவதில் ஆர்வமில்லாத ஆனால், எங்கள் அணியில் அங்கத்துவன். அடிக்கடி கொழும்பு, காலி என்று சென்றுவருவதால் அவனுக்கு எங்களை விட உலகம் தெரிந்திருந்தது.

தயா வாங்கின் ஒரு ஓரத்திலும், அவனுக்கு அடுத்ததாய் நானும், அதற்கு அடுத்ததாய் சுமணஸ்ரீயும் உட்கார்ந்திருந்தோம். மொழி சிங்களம் என்றாலும் சுமணஸ்ரீக்கு எஸ்.பி. பாலசுப்ரமணியத்தின் பாட்டுகளில் விருப்பம் இருந்ததால், அவனும் படம்பார்க்க வந்திருந்தான்.

படம் தொடங்கியது. நேரம் இரவு ஒன்பது மணியிருக்கும். சற்று நேரத்தின்பின் இரண்டு பெண்கள் உள்ளே வந்தார்கள். ஒருவர் சுமணஸ்ரீக்கு அருகிலும் மற்றையவர் முன்னால் இருந்த வாங்கிலும் உட்கார்ந்துகொண்டார்கள்.

அங்கு இடைவேளையெல்லாம் விடமாட்டார்கள். அவசியமானவர்கள்மட்டும் எழுந்து, காட்டுக்குள் போய்வரவேண்டியதுதான். சற்று நேரத்தில் சுமணஸ்ரீ எழுந்துபோனான். அவன் போனதும், சற்று வசதியாகத் தள்ளி உட்கார்ந்து கொண்டேன். அருகே அந்தப் பெண். அப்போது எதிரே உட்கார்ந்திருந்த பெண்ணும் அவருக்கு அருகிருந்த ஆணும் எழுந்து போனார்கள்.

மோகன் பூர்ணிமாவுக்காக அழுது... அழுது பாடிக்கொண்டிருந்தபோது, எனது காலில் யாரோ சுரண்டுவதுபோலிருந்தது. தவறுதலாகப் பட்டிருக்கும் என்று நினைத்து காலை சற்று ஒதுக்கிக்கொண்டேன். மீண்டும் சுரண்டுப்பட்டு தொடையிலும் சுரண்டப்பட்டது. கணப்பொழுதில் உச்சி வியர்த்து பதின்மவயதின் உடல் முறுகியது. இதயம் அடித்துக்கொண்டது. தயாவைப் பார்த்தேன். படத்தில் மூழ்கியிருந்தான்.

இப்போது மடியில் இருந்த உள்ளங்கை சுரண்டப்பட்டது. அப்போது சுமணஸ்ரீ வந்து உட்கார்ந்தான். காதுக்குள் நடந்தைச் சொன்னேன். "நீயும் உள்ளங்கையை சுரண்டு" என்றுவிட்டு, தயாவுக்கு அருகில் இடம்மாறி உட்கார்ந்துகொண்டான். மறுமுறை எனது கை சுரண்டப்பட்டதும், நானும் சுரண்டினேன். முதன் முதலில் ஒரு பெண்ணின் கையைத்தொடுகிறேன். அது சூடாக இருக்கிறது. மனம் கட்டற்று அலைகிறது. நெஞ்சு அடித்துக்கொள்கிறது. மேலும் இரண்டுமுறை உள்ளங்கையில் சுரண்டிவிட்டு, அப்பெண் எழுந்து நடந்தாள். சுமணஸ்ரீ குமட்டுக்குள் ஏன் சிரித்தான் என்று எனக்குப் புரியவில்லை.

படம் முடிந்து வெளியில் வந்தோம். சந்தியில் வீதி வெளிச்சத்தில் அப்பெண் நின்றிருப்பது தெரிந்தது. அவரைக் கடந்து சையிக்கிளில் சென்றபோது... கெட்டவார்த்தைகளால் என்னைத் திட்டினார்.

பொலிஸ் நிலையச் சந்தியில் உள்ள கடையொன்றில் நின்று, தேநீர் அருந்திக் கொண்டிருக்கையில், தயாவிடம் விடயத்தைச் சொன்னேன். “அடேய்! அது அப்படியான 'கேஸ்'! வாறியா? என்று உன்னை மறைமுகமாகக் கேட்டிருக்கிறாள். நீயும் சுரண்டி, வாறன்... என்று சொல்லியிருக்கிறாய். ஆனால், போகவில்லை. அதுதான் அவள் திட்டியிருக்கிறாள்” என்றான்.

சுமணஸ்ரீ “ஏ படுவ ஹரி நா… மச்சாங்” (அந்தச் சரக்கு சரியில்லை மச்சான்) என்றான். அன்று புதிதாக ஒரு விடயம் கற்றுக்கொண்டேன்.

மினிதியேட்டர்களில் 'பலான' படங்களும் ஓடும். ஆனால், அது இரகசியமாகச் சாமவேளையில் ஓடும். சுமணஸ்ரீக்கு எப்படியோ செய்தி வந்துவிடும். சுமணஸ்ரீயின் புண்ணியத்தில் கற்றதும் ; பெற்றதும் நிறைய உண்டு என்பதில் மறைப்பதற்கு எதுவுமில்லை.

***
போர் உலா வந்த காலத்தில் சிங்கள மகாவித்தியாலயத்தின் அதிபர் தன்மகளை டவுனுக்குப் படிக்க அனுப்புவதை நிறுத்தினார். தயாவுக்கு செலவு மிச்சம். மதிய வெய்யிலிலும் மைதானத்தில் நின்றிருப்பான். அப்போதும் அந்த இரண்டு பொலிசாரும் அவளின் வீட்டின் அருகால் ரோந்து போயினர். அவள் அவர்களையும் நிமிர்ந்து பார்க்கவில்லை.

சில காலங்களின்பின், ஒரு மதியப்பொழுதில் தயா அவசர அவசரமாக வீட்டுக்கு வந்து, “ வா, வா அவசரம்” என்று அழைத்தான். அவனின் சைக்கிளில் ஏறிக்கொண்டேன். மைதானத்தின் அதனருகே இருந்த மதகோடு சைக்கிளை நிறுத்திவிட்டு உட்கார்ந்து கொண்டான்.

சிங்கள மகாவித்தியாலய அதிபரின் வீட்டுப் பொருட்கள் ஒரு பாரவூர்தியில் ஏற்றப்பட்டுக்கொண்டிருந்தன.

அவர்களும் இடம்பெயர்கிறார்கள் என்று புரிந்தது. அன்றும் தயாவுக்குத் தண்ணீர் விடாய்த்தது. இருவரும் தண்ணீர் அள்ளிக் குடித்தோம்.

அப்போது வெளியே வந்த அவள், எங்களிடம் “அபி கமட யனவா” (நாங்கள் ஊருக்குப் போகிறோம்) என்றாள். கதாநாயகன் எதுவும் பேசவில்லை.

அவர்களின் பொருட்களை ஏற்றிய
பாரவூர்தி புறப்பட்டபோது, மைதானத்தில் குந்தியிருந்தோம். தயா நிலத்தைப் பார்த்திருந்தான். அவன் கண்கள் கலங்கியிருந்தன.

2022ஆம் ஆண்டின் இறுதியில் கனடா சென்றபோது, தயாவின் அம்மா என்னை அழைத்து, அருகே இருத்தி “மகன்… அவன் இப்பவும் தனிய இருக்கிறான். நீதான் புத்தி சொல்லனும். நீ சொன்னாக் கட்டாயம் கேட்பான்” என்றார். நான் எதுவும் பேசவில்லை. பெற்ற மனம் பித்தல்லவா.


No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்