நினைவழியா பதின்மம், பகுதி 6

தயாவின் இளைய சகோதரி சித்ரா அந்நாட்களில் சிறுமி. எப்போதும் இனிப்பு இனிப்பாக உண்டபடி இருப்பாள். ஒரு இனிப்புக் கடையைக் கொடுத்தாலும், உண்டு முடிக்கும் திறமை அவளுக்கிருந்தது. தோடம்பழ இனிப்புகள் என்றால் அவளுக்கு உலகமே மறந்துவிடும். காணும் போதெல்லாம் அவளின் இனிப்பு இம்மைசையை தாங்க முடியாததால்...


ஒருநாள் சிவப்புநிறமான 'லைப்போய்' சவர்க்காரத்தை எடுத்து, தோடம்பழ இனிப்புப் போன்று வெட்டி வைத்திருந்தேன். அவர்கள் வீட்டுக்குச் சென்றதும் வழமைபோல் இனிப்புக்காறி வந்தாள். இனிப்பு வேண்டுமென்று கேட்டாள். நானும் கொடுத்தேன். அதை அவள் பார்க்கவே இல்லை. வாய்க்குள் போட்டுக்கொண்டு சப்பியவளுக்கு விடயம் புரிந்து, அவள் அன்று முழுவதும் துப்பிக்கொண்டு திரிந்தாள். அண்மையில் ஏறத்தாழ 37வருடங்களின் பின் அவளைச் சந்தித்தபோது, இதை நினைவூட்டிச் சிரித்தாள். எனக்கு வெட்கமாக இருந்தது.

இதேபோல் தயாவின் தம்பி கருணாவிற்கு யாரும் காறித் துப்பினால் அருவருக்கும். இதை நான் அறிந்தபின், அவனைக் காணும் இடமெல்லாம் காறிக்கொண்டிருப்பேன். அவன் அவ்விடத்தைவிட்டு ஓடிவிடுவான். பிற்காலத்தில் அவனும் எங்கள் அணியில் விளையாடினான். இப்போதும் கனடாவில் உள்ள செங்கலடி அணியில் விளையாடுவதாக அறிந்தேன்.

தயாவின் வீட்டிற்கு மிக அருகில் அருளின் வீடு இருந்தது. அவன் டவுணில் எங்களுடன் மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கற்றுக்கொண்டிருந்தான். அச்சுப்போன்ற கையெழுத்து அவனுக்கு. அந்நாட்களில் பாடசாலை பகிஷ்கரிப்புகள், கடையப்புகள் வெள்ளைத்தாளில் சிவப்பு எழுத்தில் சுவரொட்டி மூலம் அறிவிக்கப்படும். பாடசாலையில் சிரேஷ்ட மாணவத் தலைவன் நான் என்பதால், செய்திகளைப் பரப்பும் பொறுப்பும் என் தலையில் விழும். அருகிருக்கும் பாடசாலைகளுக்கும் செய்தி பரப்பவேண்டியிருக்கும். அவை பெண்கள் பாடசாலையாகையால், அந்த வேலை களைப்பைத் தருவதில்லை.

அம்மாவுக்குத் தெரியாமல் வைத்தியசாலைக்கு வரும் விளம்பரங்களை எடுத்து அதன்பின்புறம் சுவரொட்டிகளை எழுதுவோம். அருள்தான் எழுதவேண்டும். மற்றையவர்களின் கையெழுத்து ஒனறுக்கும் உதவாது. சிவப்பு மையும், சற்றே தடிப்பான ஓவியத் தூரிகையும் வாங்கிக்கொண்டு அருளை காட்டுக்குள் அழைத்துப்போய் எழுதுவிப்போம். மாலை விளையாடி முடிந்தபின், 'செகன்ட் சோ' காட்சி பார்த்துவிட்டு, பிள்ளையார் கோயில் வீதியால் வந்து, பிரதான வீதியிலிருக்கும் பேருந்து நிலையத்தில் நின்று நோட்டம் விடுவோம். தயா பசையைப் பூசி தயாராக நிற்பான். சமிக்ஞைகள் கிடைத்ததும் ஒட்டிவிட்டு ஓடிப்போவோம். இப்படி நோட்டீஸ் எழுதிய அருள் ஒரு இயக்கத்திற்குச் சென்றதாகவும் பின்பு இறந்துபோனதாகவும் அறிந்தேன்.

ஒரு முறை தமிழருக்கும் முஸ்லீம்களுக்கும் இடையில் பெருங்கலவரம் வெடித்து ஏறாவூர் மக்கள் செங்கலடிப்பக்கமாக இடம்பெயர்ந்தார்கள். செங்கலடிப் பாடசாலை, கொம்மாந்துறைப் பாடசாலை, வந்தாறுமூலை பல்கலைக்கழகம் எல்லாம் அகதி முகாம்களாயின. எம்மிலும் மூத்தவர்கள் ஒருங்கிணைந்து வழிநடாத்தினார்கள். வீடு வீடாகச் சென்று உணவுப்பொட்டலம் சேகரிக்கும் வேலை எமக்குக் கிடைத்தது. இரவு செங்கலடிச் சந்தியில் கத்தி, கோடரி, திருக்கை வால், அலவாங்குடன் காவல் நின்றிருந்தனர் சிலர். நாம் நண்பனின் பேக்கரி இரண்டாம் மாடியில் 304 விளையாடிக்கொண்டிருந்தோம். இரண்டு நாட்களில் எல்லாம் சுமூகமாயிற்று.

ஒரு மனிதரை அவரது சிரிப்பின் காரணமாக அவரைப் பல காலங்களாக நினைவில் வைத்திருக்கிறீர்களா? நான் வைத்திருக்கிறேன். சுகாதாரத்துறை உத்தியோகத்தர் என்று நினைவு. சாரதா தியேட்டருக்கு முன்னால் வகுப்புத் தோழன் புஸ்பராஜாவின் கடைக்கு வருவார். திருமணம் முடித்து பல வருடங்களாக குழந்தைகள் கிடைக்கவில்லை அவருக்கு. மிகவும் ஜாலியான மனிதர். அவருக்கு ஒரு பிரச்சினை இருந்தது. சிரிக்கத் தொடங்கினால் நிறுத்தத்தெரியாது. ஐந்து பத்து நிமிடங்கள் சிரித்துக்கொண்டே இருப்பார். சிரிப்பு முடிவதுபோலிருக்கும் ஆனால், முடிந்த இடத்தில் மீண்டும் தொடங்கும். சிரிப்பின் ஒலி விசித்திரமானது, எமக்குச் சிரிப்பைத் தரும்.

சாரதா தியேட்டரின் வாசலில் மரவள்ளிக்கிழங்கு, கடலை பொரித்து விற்கும் வண்டிக்கு அருகே தயாவும் நானும் நிற்கிறோம். அன்று படம் பார்ப்பதாகத் திட்டம். அவரும் நண்பரும் பக்கத்தில் நின்று பேசிக்கொண்டிருக்கிறார்கள்.

“இண்டைக்கு மத்தியானம் வீட்ட ஒரு டெஸ்ட் எழுதினேன்” என்கிறார் அந்த விசித்திரமான சிரிப்பொலியைக் கொண்டவர்

“என்ன டெஸ்ட்?“ இது மற்றையவர்.

சிரிக்கத் தொடங்கியபடி “அதுக்கு ரிசல்ட் வர ஒரு மாதமாகும்” என்று கண்ணைச் சிமிட்டுகிறார்.

“ஓ… இப்ப விளங்குது… ”

அவர்களின் கதையைப் புரியுமளவுக்கு நாம் முத்தியிருந்தோம்.

தயாவின் காதுக்குள் “டேய், இந்தாள் பகலில டெஸ்ட் எழுதியிருக்கு” என்றேன். அவன் சிரித்தான்.

மைதானத்திற்கு அருகில் உள்ள வீதியால் அவர் செல்லும் போது “அண்ணை, ரிசல்ட் என்ன?” என்று கத்திவிட்டு, எதுவும் தெரியாதது போல் விளையாடுவோம்.

அவர் பரீட்சையில் சித்தியடைந்தாரா? இல்லையா? என்பது எனக்குத் தெரியாது.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்