மதியும் அழிந்து செவிதிமிர் அழிந்து

ஏறத்தாள 6 ஆண்டுகளுக்கு முன் முகப்புத்தகத்தினூடாக அறிமுகமாகிய கனடா நண்பர் ஒருவர் “நாடகம் ஒன்று எழுதித்தாருங்கள்” என்ற வேண்டுகோளை முன்வைத்தார்.

நாடகமா? நானா? அதற்கும் எனக்கும் தொடர்பே இல்லையே என்று உண்மையைச் சொன்னாலும் மனிதர் “இல்லை நீங்கள் எழுதும் உரைநடையிலேயே எழுதுங்கள்” என்று எனக்குள்ளும் ஒரு ஆர்வத்தை தூண்டிவிட்டார்.

எதை எழுதுவது என்று யோசித்தபோது “அம்மா” தான் நினைவுக்கு வந்தார். இரண்டு பாத்திரங்களைக் கொண்ட ஒரு நாடகத்தை எழுதத் தொடங்கினேன்.

புலம் பெயர்ந்த மகனாக நான். தனது மூன்று குழந்தைகளையும் வெளிநாட்டிற்கு அனுப்பிவிட்டு தனியே உதவியாளருடன் வாழும் அம்மா. இவர்களுக்கிடையிலான தொலைபேசி உரையாடல்கள், சந்திப்பு போன்றவற்றை உள்ளடக்கியதே அந்த நாடகத்தின் கரு.

நாடகத்தை எழுதத்தொடங்கி 4 – 5 அத்தியாங்களில் எனக்குக்கதையில் விறுவிறுப்பில்லை என்பது புரிந்தது. சில சுவராசியமான உரையாடல்கள், நகைச்சுவையான சம்பவங்கள் என்பதற்கப்பால் என்னால் நகர முடியவில்லை. எனவே அந்த நாடகம் நின்றுபோனது.

நாடகத்தை எழுதித்தா என்று கேட்டவரும் பின்னாலும் முன்னாலும் திரிந்து பார்த்தார். நான் ஆரம்பத்திலேயே என்னிடம் சரக்கு இல்லை என்றது உண்மைதான் என்று அவர் நம்பியிருக்கலாம். விதி அந்த நாடகத்தை தொடங்கிய மாத்ததிலேயே நிறுத்திவிட்டது.

ஒருவர் கேட்டதற்கு ”முயற்சிக்கிறேன்” என்றுவிட்டு அந்த முயற்சியை நிறுத்திவிட்டது எப்போதும் மனதை குடைந்தபடியே இருக்கிறது.

இதுபோலத்தான் மாற்றுத்திறனாளியான ஒரு பெண்ணை 6 -7 வருடங்களுக்குமுன்னான ஒரு பனிக்காலத்து மாலையில் அவரது குடும்பத்துடன் பேட்டிகண்டேன். அதை ஒலிப்பதிவும் செய்திருந்தேன். ஒலிப்பதிவை கேட்டு கேட்டு பத்தியொன்றை எழுதுவதே நோக்கம். அதுவும் நின்றுபோனது. அந்த மாற்றுத்திறனாளியின் தந்தையைக் காணும்போதெல்லாம் மனம் குறுகிப்போகிறது. விதி அவரை அடிக்கடி கண்களில் காட்டிக்கொண்டே இருக்கிறது.

எனக்குக் கற்பனையில் பாத்திரங்களை உருவாக்கி அவற்றிற்கு உயிர் கொடுத்து கதையினுள் நடமாடவைக்கும் கலை கைவரவில்லை. அதை நானும் விரும்பவுமில்லை. எது என்னைச்சுற்றி நடைபெறுகிறதோ அதை சற்று சுவராசியமாக எழுதமுடிகிறது. அம்மாவின் நாடகமும் அப்படித்தான். புனைவு கலப்பதை நான் உண்மையிலேயே விரும்புவதில்லை.

6 வருடங்களுக்கு முன் இருந்த அம்மா இல்லை, இப்போது இருக்கும் அம்மா.

அம்மாவின் பெயர் மட்டும்தான் அன்றும் இன்றும் ஒன்றாக இருக்கிறது. அவர் பேச்சு, செயல்கள், மனநிலை, உடல்நிலை, உடற்பலம், சிந்தனை, நினைவுச்சக்தி என்று எதுவுமே முன்பு இருந்ததுபோல் இல்லை. வயோதிபம் அவரை விழுங்கிவிட்டது.

ஏறத்தாள இரண்டு வருடங்களாக அம்மாவைப்பார்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. தம்பியும் தங்கையும் இந்தவிடயத்தில என்னைவிட கெட்டிக்காரர்கள். இவ்வருடம் அம்மாவைப் அவர்கள் பார்த்தபின் கேள்விப்பட்ட செய்திகள் மனதை சமாதானப்படுத்துபவையாக இல்லை.

இதற்கிடையில் நோர்வேயில் இருந்து பாலஸ்தீனத்திற்கு இடம்பெயர நேர்ந்தது. அங்குபோனபின் அம்மாவுடனான உரையாடல்கள் அதிகமாயின.

அம்மாவின் மூன்று குழந்தைகளிலும் அம்மாவை வாடி, போடி, கிழவி, பச்சைத்தண்ணி டாக்டர் (அம்மா 35 ஆண்டுக்கள் டாக்டராக இருந்தவர்), அப்பாவின் லவ்வர் என்றெல்லாம் ஆசையாசையான வார்த்தைகளால் கலாட்டா பண்ணுபவன் நான் மட்டுமே. தம்பி மிகவும் சீரியசானவன். அவனுக்கு “அம்மா” என்பது மட்டும்தான் தெரியும். தங்கைக்கும் ஏறத்தாள அப்படியே.

இப்போதெல்லாம் நான் தொலைபேசினால் அம்மா “நீங்கள் யார்” என்பார். விளங்கப்படுத்தவேண்டும். அவரது மனிநிலையைப்பொறுத்து நான் நினைவுக்கு வருவேன். “நான் சஞ்சயன், உங்கள் மகன்” என்றால் சில நேரங்களில் “சஞ்சயனா அது யார்” என்பார். முன்பெல்லாம் மணிக்கணக்காய் உரையாடும் அம்மா, இப்போது இரண்டு நிமிடங்கள் உரையாடுவதே கடினம்.

அண்மையில் அம்மாவிடம் செல், செல் என்று கலைத்தது மனம். எனது மேலதிகாரியிடம் கெஞ்சிக்கூத்தாடி 15 நாட்கள் விடுமுறை எடுத்து, பாலஸ்தீனத்தில் இருந்து, இஸ்ரேல் சென்று, அங்கிருந்து யோர்டான் வந்து இலங்கைக்கு வந்தேன். அம்மாவுக்கு எதுவும் சொல்லவில்லை.

விமான நிலையத்தில் இருந்து வீடுவரும் வழியில் மருமகள் தொலைபேசினாள். அம்மா விழுந்து பலமாக அடிபட்டுவிட்டது, வைத்தியசாலைக்கு எடுத்துச்சென்றிருக்கிறோம்” என்றாள் அவள்.

வீட்டு வந்தபோது “அம்மாவை வீட்டுக்கு அழைத்துவந்திருந்தார்கள். அவர் தனது கட்டிலில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தார். நிலத்தில் குந்தியிருந்து அம்மாவின் கைவிரல்களை நீவிக்கொண்டிருந்தேன். கண்விழித்துப் பார்த்தார்.

கண்கள் ஒளிர, “சஞ்சயன், எப்போ வந்தாய்?” என்றார். எழும்பி கட்டிலில் இரு. நிலம் ஊத்தையாய் இருக்கலாம் என்றபடியே ஒரு நிமிடம் பேசியிருப்பார். அதற்கிடையில் தூக்கம் அவரை மீண்டும் சூழ்ந்துகொண்டது.

மாலை தனது கையிலும் முதுகிலும் நோகிறது என்றவருக்கு “நீங்கள் விழுந்ததின் காரணமாகவே நோகிறது” என்றேன். “எப்போ விழுந்தேன்?” என்ற கேள்விக்கும் ஆறுதலாகப்பதிலளித்தேன். அவருக்கு அது நினைவில் இல்லை. என்னைப் பார்த்து “வேலையால் எப்போ வந்தாய். முதலில் குளித்துவிட்டு வா” என்றபடியே ஒரு துணியை எடுத்துவந்தார். அதன்பின் அவர் தனது கட்டிலில் படுத்துக்கொண்டார்.

இன்று மதியம் 12 மணியிருக்கும் “தம்பி, நான் வேலைக்குப் போகிறேன்” என்றார். எனக்குத் தூக்குவாரிப்போட்டது. அம்மா இருக்கும் நிலையில் யாருக்கு வைத்தியம் செய்தாலும் நோயாளியின் கதி அதேகதியாகிவிடும். இந்த ஆபத்தில் இருந்து மனிதர்களைக் காப்பாற்றுவதற்காக ஒரு பொய் சொல்லலாம் அல்லவா.

எனவே அம்மா “ இன்றுமாலை உங்களை நான் வேலைக்கு அழைத்துப்போகிறேன். எனக்கும் ஊசிபோடவேண்டும்” என்றதும் “உனக்கு என்ன வருத்தம்” என்று மடக்கினார். “எனக்கு விசர்” என்றேன் நக்கலாய். “இருக்கலாம்” என்றுவிட்டு நடையைக் கட்டினார். அம்மா ஒரு கணம் உயிர்ப்பார். மறுகணம் அயர்ந்துவிடுவார் என்பதற்கு இது ஒரு உதாரணம்.

நான் சிறுவனாய் இருந்தபொழுதுகளில் என்னைக் கலைத்துக் கலைத்துப் பிடித்து, அம்மா உணவூட்டியிருப்பார். வாழைப்பழத்தை உரித்துத் தந்திருப்பார். தண்ணீரில் நான் விளையாடுவதை தடுத்திருப்பார், அல்லவா?

இப்போது, அம்மாவுக்கு முன்னாலும் பின்னாலும் திரிந்து “சாப்பிடுங்கோ அம்மா” என்று கெஞ்ச வேண்டியிருக்கிறது. உண்ணும்போது அதை நினைவூட்டவேண்டியிருக்கிறது. வாழைப்பழத்தை உரித்து கையில் கொடுக்கவேண்டியிருக்கிறது. அதை சிறுபிள்ளை போன்று பொக்கைவாயால் அரைத்து ருசித்து உண்கிறார். உண்டு முடிந்ததும் அவரது வாயை துடைத்துவிடுகிறேன்.

“அம்மா நீங்கள் இன்று குளித்தீர்களா என்றேன்”. பதில் இல்லை. சற்றுநேரத்தின் பின் புதிய ஆடைகளை மாற்றி வந்து “வா போவோம்” என்றார். நான் பத்திரிகை வாசித்த சிறு நேரத்தில் அவர் உடைமாற்றியிருக்கிறார்”. “அம்மா, இன்று பஸ் ஓடவில்லையாம். நாளைக்குப் போவோமா” என்றேன். “அப்ப சரி” என்றுவிட்டு, கதிரையில் அரைமணிநேரம் தூங்கி எழும்பினார். உதவியாளர் வந்து “அம்மா கதிரையில் தூங்குகிறார்” என்று கவலைப்பட்டார். “அவர் என்ன செய்கிறாரோ அதை செய்ய விடுங்கள். இப்போது அவரை எழுப்பினால் அவரது தூக்கம் கலைவதோடு அவர் அந்தரப்படுவார், தடுமாறுவார்” என்று புரியவைத்தேன். தலையைஆட்டினார் அவர்.

மாலை அம்மா குளித்தீர்களா என்று கேட்டேன். குழந்தைபோன்று “தெரியாதே” என்றார். ஒருவாறு அவரை குளியலறைக்குள் அனுப்பினேன். குளிக்கும் சத்தம் வரவே இல்லை. “அம்மா”, என்று அழைத்து குளியுங்கள்” என்றேன். குளிக்க ஆரம்பித்தார். திடீர் என்று சத்தம் நின்றது. என்னை அழைத்து “உடைகளை எடுத்துத்தா” என்றார். “ஓம் என்றுவிட்டு, சற்று அமைதியாக இருந்தேன் அப்புறமாக அம்மா சவர்க்காரம் போட்டீர்களா?” என்றபின்தான் ”அட குளியலறைக்குள் அம்மாவின் சவர்க்காரம், உதவியாளரின் சவர்க்காரம், எனது சவர்க்காரம் மற்றும் உடைகழுவும் சவர்க்காரம் என நான்குவகை சவர்க்காரம் இருப்பது நினைவுக்கு வந்தது. மறுநாளில் இருந்து அம்மா குளிப்பதற்கு முன் ஒரு சவர்க்காரத்தையே அங்கு வைத்தேன்.

அம்மாவிற்கு காலையில் உடைகள் தோய்த்து காயவிடவேண்டும். இல்லாவிட்டால் அது காலைப்பொழுதே அல்ல. அது அவரது தினசரி நடவடிக்கை. அம்மாவிடம் ஊத்தை உடுப்புகளே இருக்காது. அந்த நேரங்களில் சுத்தமான உடைகளையும் அவர் மேலும் சுத்தப்படுத்துவதற்காக கழுவுவார். இதில் நான் எவரையும் தலையிட வேண்டாம் என்றிருக்கிறேன். அது அவருக்கு மகிழ்ச்சியைக் கொடுப்பதோடு நல்லுணர்வையும் கொடுக்கிறது என்பதே எனது எண்ணம். எனவே அதை தடுக்கவேண்டிய அவசியம்தான் என்ன?

பத்திரிகை வாசிக்கத்தொடங்கினால் தொடர்ந்து வாசிப்பார். அம்மாவைப்போல் வாசிப்பதில் விருப்பமுள்ளவர்கள் குறைவாக இருப்பார்கள். அம்மா என்னையும் தம்பியையும் இருப்பக்கத்தில் இருத்தி கதைசொன்ன நாட்களை நினைத்துப்பார்க்கிறேன். அம்மாவுக்கு இப்போதைய வாசிப்பில் எதேனும் புரிகிறதா என்பதைவிட அவர் தனக்கு மகிழ்ச்சியான எதையோ செய்கிறார் என்று நினைத்துக்கொள்வதே அனைவருக்கும் ஆறுதலானது.

அம்மாவின் குளியலறையில் இருந்து வெளியேறும் கதவுக்கருகில், காலைத் துடைப்பதற்கு ஒரு சற்று மொத்தமான மிதியடி இருக்கிறது. அவர் வழுக்கி விடாதிருப்பதற்காகவே அதை அங்கு வைத்தேன். நான் வருவதற்கு முன் அது அங்கு இருக்கவில்லை.

இப்போது ஒரு நாளைக்கு பத்துத் தடவைக்கு அதிகமாக அதை அந்தக் கதவு வாசலில் வைப்பேன். அம்மா அதை ஒரு பக்கமாய் நகர்த்துவார். மீண்டும் நான் வைத்தபின் விக்கிரமாதித்தன் அம்மாவிடம் வந்துவிடுவான். நானும் இன்னொரு விக்கிரமாதித்தனாகி அதை மீண்டும் கதவின் முன்னால் வைப்பேன்.

நான் சிறு குழந்தையாய் இருந்தபோதும் இப்படியேதும் நடந்திருக்கலாம். கதையில் மாற்றமில்லை. பாத்திரங்கள் மாறியிருக்கின்றன. அவ்வளவுதான்.

புலம்பெயர்ந்த வாழ்வின் வேதனையான பக்கம் இது. அம்மாவை அருகில் இருந்து குழந்தைபோல் தாங்க முடியாதது வேதனையானது. இருப்பினும் அன்பான மருகளும், மருமகனும், அக்காவின் குடும்பத்தாரும் அருகில் இருக்கிறார்கள் என்றாலும் அவர்களும் அவர்கள் வாழ்க்கையை வாழவேண்டுமல்லவா.

உதவியாட்களைத் தேடலாம், ஆனால், அது அம்மாவின் குழந்தைகளைப்போலிருக்காது அல்லவா? அம்மாவுக்கு இதுவரை கிடைத்த உதவியாளர்கள் அனைவருமே நல்லவர்கள். ஒவ்வொரு முறையும் உதவியாளர் மாறும்போது அது தரும் மனப்போராட்டம் கொஞ்சநஞ்சமல்ல. அம்மாவுக்கு புதிய உதவியாளரைப் பிடித்துப்போகவேண்டும். புதியவருக்கு அம்மாவின் நடைமுறைகள், மனநிலைகள், சுகயீனங்கள், அவரை எவ்வாறு பராமரிப்பது, கையாள்வது என்பவை புரியவேண்டும். அவற்றை அவர் கற்கும் மனநிலையில் இருக்கவேண்டும். அவரது விடுமுறைக்காலங்கள் என்று எத்தனையோ பகுதிகள் பொருந்திவரைவேண்டும். முக்கியமாக அவருக்கு அம்மாவை பிடித்துப்போகவேண்டும். உதவிக்கான ஆள் தேடுதல் என்பது மிகவும் கடினமானது. மருமகளின் தேர்வுகளில் அவர்கள் தப்பி வந்தால் எமக்கு நிம்மதி.

இன்று காலை நேரம். இளவெய்யில் எறிக்கிறது. அம்மா உடுப்புத்தோய்கிறார். இப்போதுதான் எனது அறைக்குள் வந்து கதிரையில் இருந்த சுத்தமான மேலங்கியை எடுத்துப்போனார். அத்தோடு விட்டாரே என்பதால் தூங்குவதுபோன்று பாசாங்கு செய்கிறேன்.

சற்றுநேரத்தில் “தம்பி இந்த உடுப்புக்களை அந்தத் தடியில் காயப்போடு” என்றபடியே எனது அறையின் சாரளத்துச் சீலை தொங்கும் தடியைக் காண்பிக்கிறார். நான் உடைகளை வாங்கி அதில் போடுவதுபோல் பாசாங்கு செய்தேன். குசினிகுள் சென்றார். நான் உடைகளை கொடியில் காயவிட்டேன். குசினிக்குள் எட்டிப்பார்க்கும்போது அம்மா எதையோ கழுவிக்கொண்டிருக்கிறார். உதவியாளர் “நான் கழுவுகிறேன், அம்மா என்று கெஞ்சுகிறார்” அம்மாவுக்கு கோபம் வருகிறது. “எனக்கு கழுவத்தெரியும்” என்று சிறுபிள்ளைபோல் முணுமுணுக்கிறார்.

பாரதப்போரில் சஞ்சயன் சமாதானத்தூதுவனாகச் சென்றதுபோல், இந்தச் சஞ்சயன் அவர்களுக்கிடையில் சாமாதானம் செய்துவைத்து, உதவியாளருக்கு அம்மாவை எப்படிக் கையாள்வது என்று வகுப்பு எடுக்கும்போது, அம்மா பத்திரிகையுடன் கதிரையில் உட்கார்கிறார்.

நான் எழுதியகதைகளை அம்மா வாசித்திருக்கிறார். நன்றாக எழுதுகிறாய் என்ற பாராட்டும், எழுத்துப்பிழை எக்கச்சக்கம் என்ற குற்றச்சாட்டும் கிடைத்திருக்கறது. எனவே அண்மையில் நான் எழுதிய “முஸ்தபாவின் ஆடு” கதையை வாசித்துக் காண்பிக்கவா என்றேன். தலையாட்டிவிட்டு நாற்காலியில் உட்கார்ந்தார். நான் வாசிக்கத்தொடங்கினேன்.

“காலம் என்னை அவ்வப்போது வேருடன் பெயர்த்து வேறு இடங்களில் பதித்துவிடுகிறது. அப்படித்தான் இப்போதும்.” என்றுவிட்டு நிமிர்ந்தேன். அம்மா முகட்டைப் பார்த்தபடியே தூங்கிப்போயிருந்தார். மாலைபோல் கதையைக் கேட்டுவிட்டு “ஏறாவூர் ஆளா அவர்” என்றார் பச்சைக்குழந்தைபோல. “ஆம்” என்பதைத் தவிர வேறு எதைச்சொல்லிவிட முடியும் என்னால்.

இன்னொரு நாள் நான் இணையத்தில் எதையோ தேட ஆரம்பிக்கும்போது வந்தார். அருகில் நின்றபடியே கணிணியில் இருந்து Google என்பதை வாசித்துவிட்டு, இது என்ன என்ற அவரது கேள்விக்கு, இவர்தான் இப்ப கடவுள். இவருக்கு தெரியாதது இல்லை என்றேன். “க்கும்” என்றொரு நக்கலை உதிர்த்துவிடு நகர்ந்துகொண்டார்.

சில நாட்களுக்குமுன் விழுந்ததால் பிட்டத்தில் இரத்தம் கண்டியிருக்கிறது. மிகவும் வலிக்கிறது என்றிருந்தார் வைத்தியர். உட்காரும் போது அவருக்கு வலிக்கிறது. “ஏன் எனக்கு வலிக்கிறது” என்று தன்னைத்தானே கேட்டபடியே உட்கார்கிறார். நான் “நீங்கள் விழுந்தால் உங்களுக்கு வலிக்கிறது” என்றேன். “சும்மா போ. பொய்சொல்லாதே” என்றுவிட்டு உலகப்பிரச்சனைகளை தீர்க்கும் ராஜதந்திரியின் கவனத்தோடு பத்திரிகையில் மூழ்கிப்போகிறார்.

அம்மா எப்படி விழுந்தார் என்பது உதவியாளருக்குத் தெரியாது. அம்மா அலறிய சத்தம் கேட்டு அவர் ஓடியிருக்கிறார். கீழ்வீட்டாருக்கும் அலறிய சத்தம் கேட்டிருக்கிறது. அம்மாவைப்பொறுத்தவரையில் விழுந்து மறுகணமே என்ன நடந்தது என்பது அவருக்குத் தெரியாது. கேட்டால், ஏதேனும் தொடர்பற்ற பதிலைத் தருவார். இப்படி பல சம்பவங்கள் நடக்கலாம். அவருக்குரிய உதவியைச் செய்வதற்கு எமக்கு அவர்பற்றிய தகவல்கள் வேண்டும்.

பல ஆண்டுகளாக அம்மாவுடன் கணிணியூடாக உரையாடுவதற்கு வசதி இருக்கிறது. உதவியாளர் அதனை இயக்கிவிடுகிறார். உலகில் எங்கிருந்தும் அம்மாவுடன் உரையாடலாம். ஆனால் இப்போது அம்மா இன்னொரு நிலைக்குச் சென்றிருக்கிறார். அம்மாவை 24/7 நேரமும் கண்ணாணிக்கவேண்டும். அவர் தனியே தனது அறைக்குள் என்ன செய்கிறார். விழுந்தாரா? அப்படியாயின் எப்படி விழுந்தார்? எதையாவது குடித்தாரா? என்ன குடித்தார், உதவியாளார் வீட்டில் இல்லாத சில நிமிடங்களில் என்ன நடந்தது என்று அறியவேண்டிய நிலை உருவாகியிருக்கிறது. அம்மா நடமாடும் பகுதிகளில் ஒளிப்பதிவுக் கருவிகளை பொருத்தவேண்டும். உதவியாளருக்கு அதுபற்றி தெளிவாக அறிவுத்தவேண்டும். இது அம்மாவுக்கான பாதுகாப்பினைவிடவும் எங்களுக்கும் ஒருவித மன ஆறுதலையும், அம்மாவின் நிலையை நேரடியாகக் காணவும், ஆபத்துக்களை, விபத்துக்களைத் தடுப்பதற்கும் உதவியாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

மருந்து கொடுக்க வேண்டிய நேரம் வருகிறது. மருந்து மற்றும் குடி நீருடன் அருகிற்சென்று “மருந்து குடியுங்கள்” என்கிறேன். “எனக்குத் தெரியும்” என்று கறாரான பதில் வருகிறது. மருந்தை அவர் முன்னே வைத்துவிட்டு நகர்ந்துகொள்கிறேன். மறுநிமிடமே மீண்டும் ”அம்மா மருந்து குடிக்கவில்லையா” என்று கேட்டபடியே மருந்தைக் காண்பித்தேன். எதுவித எதிர்ப்பும் இன்றி மருந்து உள்ளிறங்கியது. இவ்வாறு என்னைக்குப்பின்னால் திரிந்து மருந்தூட்டியிருப்பாரல்லவா?

மாலை 8மணிக்கு அம்மா உறங்கப்போவார். அதற்கான ஆயத்தங்கள், சம்பிரதாயங்கள் என்று பல உண்டு. எனது அறைக்குள் வந்து “சாப்பிட்டாயா” கேட்டுவிட்டு. உடைகளை மடித்துவைப்பார். அவற்றை எடுத்து மீண்டும் மீண்டும் மடித்துவைப்பார். அலுமாரியை ஆராய்வார். தனது தலைமுடியை மெல்லிய வெள்ளிக்கம்பியாலான பின்னைலைப்போன்று பின்னிக் கட்டுவார். தலையணை தலைமாட்டில் இருக்கும், ஆனால் அம்மா நடுக்கட்டிலில் சுருண்டு படுப்பார். நடுச்சாமத்தில் இருட்டில் எழும்பியிருப்பதையும் கண்டிருக்கிறேன். சில நேரங்களில் என்னைக் கண்டால் “உங்கள் பெயர் என்ன என்பார்” “சஞ்சயன்” என்றால்,“ஆம், மறந்துவிட்டேன்” என்பதுடன் மீண்டும் கட்டிலில் சரிந்து மறுகணமே ஆழ்ந்து தூங்கிவிடுவார்.

அவரது கட்டிலின் நேர்த்தியை நீங்கள் மிகப்பிரலமான விடுதிகளிலும் காணமுடியாது. அத்தனை நேர்த்தியாக இருக்கும். எனது கட்டிலைக் காண்பித்து “அதை அழகாக விரித்துவிட்டுப் படு” என்பார். அவரது உடைகள் உள்ள தட்டுகளில் அவற்றை மிக நேர்த்தியாக, ஒரு ஒழுங்குடன் வைத்திருப்பார். எனக்கு அந்தக்கலை இன்னும் கைவரவில்லை.

இன்று காலை எதையே தேடியலைந்துகொண்டிருந்தார். நான் எதுவும் கேட்கவில்லை. என்னிடம் வந்து “தம்பி நெருப்புப்பெட்டியை கண்டாயா” என்றார். எனது வாய் “ஏன் அம்மா, சிகரட் குடிக்கப்போகிறீர்களா” என்றது. அவர் நகைச்சுவையை புரியும் மனநிலையில் இருக்கவில்லை. “அதை கழுவவேண்டும்” என்றார். நானும் அதை தேடுவதுபோல் பாசாங்கு செய்யவேண்டியிருந்தபோதுதான் நெருப்புப்பெட்டியின் ஆபத்து புரிந்தது. அம்மா நெருப்புப்பெட்டியைக் கண்டு, சிந்தனையின்றி அதை பற்றவைத்தால்? எனவே உதவியாளரிடம் அம்மாவின் கண்களில் நெருப்புப்பெட்டியை காட்டாதீர்கள் என்று வேண்டியிருக்கிறேன். இப்படி ஆபத்தான பொருட்கள் இன்னும் பல வீட்டில் இருக்கலாம்.

அம்மாவின் பரம்பரையில் அவர்மட்டுமே மீதமிருக்கிறார். அவரின் இளைய அக்காவின் மகளின் மகளுக்கு ஒரு மகள் பிறந்திருக்கிறாள். அவளுக்கு இப்போது மூன்றரை மாதங்கள். அம்மாவை தனது குழந்தையைப்போன்று கவனிப்பது பிறந்த குழந்தையின் தாயாராகிய எனது மருமகள். இன்று நான்கு சந்ததியினரும் ஒன்றாகச் சந்தித்தனர். அம்மா அவர்கள் நின்றிருந்த இரண்டு மணிநேரமும் உயிர்ப்புடன் இருந்தார். குழந்தையுடன் கதைத்தார், குழந்தையை மிக நிதானமாக வாரி எடுத்து தாலாட்டினார். தளர்திருக்கும் அவரது கையில் எங்கிருந்து அத்தனை பலம் வந்தது என்பதை நான் அறியேன். அம்மா மிக மகிழ்ச்சியாக இருந்தார். அவரைச் சுற்றி அவருக்கு அறிமுகமானவர்கள், சிறுகுழந்தை, அவரது அக்காவின் மகள், மகளின் மகளும் கணவர் இவர்களுடன் அம்மாவின் மூத்த புத்திரனாகிய நான்.

இதில் இருந்து ஒன்றை மட்டும் நன்கு புரிந்துகொண்டேன். அம்மாவைச் சுற்றி அவருக்கு அறிமுகமானவர்கள் இருப்பின் அவரது நோயின் பாதிப்பு அவரை குறைவாகவே பாதிக்கிறது. புலம் பெயர் வாழ்வு கொடுத்த சுமைகள் இவை. இல்லை எனின் அம்மாவின் குழந்தைகள், அவர்களின் குழந்தைகள் என அவரைச்சுற்றி எப்போதும் நாம் இருந்திருப்போம்.

ஆரம்பத்தில் கூறிய அந்த நாடகத்தினை எழுதிமுடிக்குமளவுக்கு என்னிடம் கதைகள் இப்போது இருக்கிறன்றன. அது அப்படியொன்று விறுவிறுப்பான நாடகமாக இருக்காது. ஆனால் நினைவுகளை இழக்கும் ஒரு மனிதரின் கதையைப்பற்றியதாக இருக்கும் அது.

அம்மாவின் இன்றைய மனநிலை, அவரது நடவடிக்கைகள், அவர் அசையும் விதம், நடக்கும் தன்மை, தன்னை மறந்திருக்கும் நிலை, குழப்பமான மனநிலையில் அவர் அந்தரிக்கும் காட்சி, அவரது கோபதாபங்கள், வந்துபோகும் உற்சாகமனநிலை, தடுமாற்றங்கள், குழந்தைகள்போலான கேள்விகள், அவர் தனது பொருட்களை வாஞ்சையுடன் பாவித்துவிட்டு அவற்றை மீண்டும் வைக்கும் அழகு, தனக்கு தானே உரையாடும் பாங்கு என்று பல நுணுக்கங்களை அந்த நாடகத்தில் காண்பிக்காவிட்டால் நாடகத்திற்கு உயிர் இருக்காது. அப்படியானதொரு நாடகத்திற்கான நடிகர்களை இனம்கண்டு தயாரித்து, இயக்கி, உயிர்கொடுக்க யாராவது இருந்தால் மகிழ்ச்சிதான்.

அம்மாவைப்பற்றி எத்தனையோ கதைகள் எழுதியிருக்கிறேன். வாழ்வின் அந்திமக்காலத்தில் மனிதர்கள் நகர்தலை, அசைதலை, உரையாடலை, உணவை மெது மெதுவாகக் குறைத்துக்கொள்வதுபோன்று அம்மாவும் ஆரம்பித்துவிட்டார். இனி அவரைப்பற்றி எழுதுவதற்கு கதைகள் குறைவாகவே இருக்கும். அப்படி இருந்தாலும் அவை பேசியதைப் பேசலாகவே இருக்கலாம். ஒரு கதைசொல்லி பேசியதை பேசக்கூடாதல்லவா?
-----------------------------------------------------------------------------------------------------
நடு 2018 இதழ் 10 ஆடி ஆவணி புரட்டாசி இதழில் வெளிவந்த பத்தி.

No comments:

Post a Comment

பின்னூட்டங்கள்