எனக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. எங்கோ கேட்ட குரல்? எங்கு என்று நினைவுக்கு வரவில்லை. தனது கணணி இயங்க மறுக்கிறது உடனே வர முடியுமா என்றார். மாலை வருவதாகச் சொல்லி விலாசம் வாங்கிய போதுதான் அவரை நினைவு வந்தது.
வயதானவர், சுகயீனமானவர், தனிமையில் வசிப்பவர், புகைத்தலையே தனது தொழிலாகக் கொண்டவர், நான் இது வரை காணாத ஒழுங்கீனமான, அழுக்கான வீட்டின் உரிமையாளர் என்று தான் நினைத்திருந்தேன் அவரைப் பற்றி இன்று அவரைச் சந்திக்கும் வரை.
மாலை 7 மணியிருக்கும், இலையுதிர்க்கால இருட்டும், மழையும், காற்றும் தங்களின் சுயத்தை வெளியே காட்டிக் கொண்டிருந்தன. நிலக்கீழ் ரயில் நிலையத்தில் இருந்து அவர் வீடு நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன்.
தனது நாய்கள் இரண்டுடன் ஒருவர் உலா சென்று கொண்டிருந்தார். ஒரு நாய் என்னருகில் வந்து என்னை மணந்து பார்த்து விட்டு கடந்து போனது. நல்ல வேளை காலைத் தூக்கவில்லை அது.
இப்போதெல்லாம் முன்பு ஊரில் இருந்த போது எனக்கு நாய்கள் மீது இருந்த, அல்லது நாய்களுக்கு என் மீதிருந்த வெறுப்புணர்வுகள் இல்லாது போயிருக்கின்றன. தொலைபேசியில் அழைத்தவரின் வீட்டு ஜன்னலில் தட்டினேன். கதவினூடாக எட்டிப் பார்த்தபடியே “என்ன வேண்டும்?“ என்றார் முகத்தை கடுமையாக வைத்தபடியே.
“கணணி திருத்த“ என்று இழுத்தேன். கண்ணைச் சுருக்கி பலமாய் யோசித்தார். பின்பு “அவனில்லையே நீ” என்றார்.
”இல்லை, நான் தான் அவன். நான் தான் முன்பும் உங்கள் கணணி திருத்தியவன் என்றேன். சந்தேகத்துடன் உள்ளே அனுமதிதத்தார்.
தொப்பி, மேலாடை, சப்பாத்து போன்றவற்றறை கழட்டி வைத்துவிட்டு உள்ளே போய் அவரின் அருகில் அமர்ந்து கொண்டேன். வீடு எப்பவும் போலவே கிடந்தது.
அவரோ தொலைக்காட்சிப் பெட்டியில் ”(T) டங்கோ” நடனத்தில் மூழ்கிப் போயிருந்தார்.
செருமினேன்.. அவர் கண்டு கொள்ளவில்லை.
ம்.. ம் என்று கனைத்தேன்.. அதற்கும் எவ்வித கவனத்தையும் அவர் காட்டவில்லை.
இருமினேன் இப்பவும் அவர் கண்டு கொள்ளவில்லை.
திரையில் வெள்ளைத் துடையழகிகள் சுழன்று சுழன்று ஆடிக் கொண்டிருந்தார்கள். திடீர் என இசையின் தாளம் மாறியது.
”இது ஐரோப்பிய நாடோடிகளின் இசையாக்கும்” என்று என்னைப் பார்த்துச் சொன்னார்.
என்னை அழைத்த காரணத்தை சொல்ல முடியுமா என்று அவரின் வெள்ளைத் துடையழகிகள் மீதான கவனத்தை கெடுக்காமல் மெதுவாயக் கேட்டேன்.
உன்னை நான் எப்போ அழைத்தேன்? என்றார். வடிவேலுவின் “ஆஹா” என் காதுக்குள் கேட்டது.
அவரோ மீண்டும் நடனத்தில் ஆழ்ந்து போயிருந்தார்.
நீங்கள் என்னை கணணி திருத்த அழைத்தீர்கள் என்றேன். என்னைப் பார்த்தபடியே பலமாய் சிந்தித்தார். சில நிமிடங்களின் பின் நான் கூறியதை நம்பாதவர் போல் ”அப்படியா”? என்ற போது எனக்கு இன்றைய நாள் நல்லதில்லை என்று உள் மனது சொல்லிக் கொண்டிருந்தது.
சில நிமிடங்களின் பின் ஆம் ஆம் எனது கணணி வேலை செய்யவில்லை அது தான் அழைத்தேன் என்றும், இது தான் அந்தக் கணணி என்றும் ஒரு புதிய கணணியைக் காட்டினார்.
நான் கணணியைத் இயக்குவதற்காக அதைத் திறந்த போது என்னை இடைமறித்து தான் கணணியை என்னைப் போல் திறந்து பின்பு தானியங்கிக் கருவியால் இயக்கியதாகவும் கூறினார். தானியங்கியா? கணணிக்கா என்று கேட்டேன். மேசையில் இருந்த தொலைக்காட்ச்சிப் பெட்டியின் தானியங்கியை எடுத்துக் காட்டினார். எனக்கு சிரிப்பதா அழுவதா என்று புரியவில்லை. மனக்கண்ணில் ”ஒரு மனிசனுக்கு எத்தின கண்டம்டா” என்று வடிவேலு கூறும் டயலாக் கேட்டது”
அய்யா! அது உங்கள் தொலைக்காட்சிப் பெட்டியின் தானியக்கி. கணணியினுடையதல்ல என்றேன். மிகவும் நிதானமாக ” அப்படியா” என்றார்.
கணணியை எவ்வாறு இயக்குவது என்று மிகவும் நிதானமாக விளக்கிக் கூறினேன். எதைச் சொன்னாலும் 3 - 4 தடைவைகள் திரும்ப திரும்பக் கேட்டார். அப்போது தான் அவர் ஞாபகமறதியினால் மிகவும் சிரமப்படுகிறார் என்பது புரிந்தது. படம் கீறி விளக்கங்கள் எழுதிக் கொடுத்தேன். சரி நீங்களே இனி கணணியை இயக்குங்கள் என்றதும் அவர் மீண்டும் தொலைக்காட்ச்சிப் பெட்டியின் தானியக்கிக் கருவியை எடுத்த போது என்னை பொறுமையை சிரமப்படுத்தி வரவழைக்க வேண்டியதாயிற்று.
அவருக்கு படங்கள் மூலம் விளக்கிய ஆவணத்தைக் காட்டினேன். அதை பார்த்த பின்பும் அவருக்கு புரியவில்லை. அவர் ஏதோ அந்த தொலைக்காட்சிப் பெட்டியின் தானியக்கிக் கருவியை விடுவதாயில்லை
நாளை மாலை சீனியர் சிடிசன்களின் ஒரு கூட்டத்திற்கு தனது கணணியை எடுத்துப் போக வேண்டும் எதை எதை எடுத்தப் போவது என்றார். மின்சார இணைப்பு, கணணி கொண்டு சென்றால் காணும் என்றேன். மின்சார இணைப்பை எப்படி களட்டுவது என்று தனக்கு தெரியாது, எனவே அதை இப்போதே களட்டி வை என்று கட்டளையிட்டார். அப்படியே செய்தேன்.
சற்று நேரம் அமைதியாய் கடந்து போனது. பின்பு ஏன் மின்சார இணைப்பை களட்டினாய்? நான் என்படி கணணியை இயக்குவது என்றார் என்னைப் பார்த்து. எனது பொறுமை எல்லையைத் தாண்டிக் கொண்டிருந்தாலும் அவரின் நிலமை புரிந்ததால் அமைதியாக நீங்கள் தான் களட்டி வைக்கச் சொன்னதாகச் சொன்னேன். அதை அவர் நம்புவதாக இல்லை. நீ பொய் சொல்கிறாய் என்று சினந்தார். எனது சினமும் எல்லையை நெருங்குவதை உணர்ந்தாலும் அடக்கிக் கொண்டேன்.
மீண்டும் மின்சார இணைப்பை பொருத்தி வைத்தேன். ”திருப்தி” என்று தலையாட்டினார். அதன் பின் தனது கணணி இயங்கவில்லை அதை இயக்கித் தர முடியுமா என்று ஆரம்பத்தில் கூறிய பிரச்சனையையே மீண்டும் கூறினார்.
அய்யோ! என்று கத்த வேண்டும் போலிருந்தது எனக்கு. மெதுவாய் மீண்டும் அரம்பத்தில் இருந்து விளக்கிக் கூறினேன். அவரின் கண்கள் என்னை நோக்கியிருந்தாலும் மனது எங்ககோ சஞ்சரித்திருந்தது.
இடையிடையே என்னை இடைமறித்து ஐரோப்பிய நாடோடிகளின் இசை பற்றி ஏதோதோ கூறினார். இசையைப் பற்றி எதுவுமறியாத ஞானசூன்யம் நான். எனக்கு அவர் கூறிய எதுவுமே புரியவில்லை. மரியாதைக்காக புரிந்தது என்று தலையாட்டிக் கொண்டிருந்தேன்.
நான் புறப்படுவதற்காக எனது உடைகளை அணிந்து கொண்டு தொப்பியை போட்டுக் கொண்டதன் பின்பும் அவர் என்னைக் கவனிப்பதாய் இல்லை.
”அய்யா! நான் புறப்படுகிறேன்” என்றேன். எங்கே போகிறாய்? என்றார் தொலைக்காட்சிப் பெட்டியில் இருந்து கண்களை அகற்றாமலே.
எனது வீட்டுக்குத் தான் என்றேன். சரி என்பது போல தலையாட்டினார். எனக்கு நீங்கள் பணம் தர வேண்டும் என்றேன். ஏன் என்றார்?
கணணி திருத்தித் தந்தேன், அதற்குரிய பணம் என்றேன். அவரோ அதை சட்டைசெய்யாமலே.... நான் கணணி திருத்துபவனுக்காக காத்திருக்கிறேன் என்ற படியே தொலைக்காட்சிப் பெட்டியின் தானியக்கிக் கருவியால் கணணியை இயக்க முயற்சிக்கத் தொடங்கினார்.
எனக்கேதோ கணணி அவரை தூஷணத்தால் திட்டுவது போல இருந்தது.
வெளியே வந்தேன் குளிர் காற்று முகத்தில் அடித்தது. வீடு வந்து கதவை திறக்க முற்பட்ட போது வீட்டுத் திறப்பை நான் எங்கோ மறந்துவிட்டு வந்திருப்பது புரிந்தது.
அய்யோ!!!!!!!!!!!!!!!!!!!!!
வெறுப்பின் உச்சமும் மரணத்தின் போதனையும்
இறந்தவர்களுக்கு இறுதிச் சடங்குகளை ஒழுங்கமைக்கும் ஒரு நிறுவனத்தின் இரு கணணிகள் பல நாட்களாகவே திருத்துவதற்காக தரப்பட்டிருந்தது. நான் அவற்றை திருத்தி வைத்திருந்தும் உரிமையாளர் வராததால் எனது அலுவலகத்தில் அவை இறந்த உடலங்களைப் போல் இயக்கமின்றிக் கிடந்தன. நேற்று அவற்றின் உரிமையாளர் திடீர் என்று விழித்துக் கொண்டார். கணணி திருத்தியாயிற்றா என்று குறுந்தகவல் அனுப்பினார். ஆம், அவை உங்களின் வருகைக்காக காத்திருக்கின்றன என்றேன். நாளை 12:30 மணி போல் வருவதாய் ஒப்பந்தம் செய்தபடியே 11:29 மணிக்கு வந்து என்னையும் சவப்பெட்டிகளை ஏற்றிச் செல்லும் வாகனத்தில் ஏற்றிச் சென்றார். ஏனோ வாகனத்தின் பின் பகுதியை திரும்பிப் பார்க்க பயமாயிருந்தது. எதுவும் பேசாமல் வாகனத்தை ஓட்டிக்கொண்டிருந்தார் அவர். எம்மைச் சுற்றியிருந்த சூழல் மயானஅமைதியில் ஆழ்ந்து கிடந்தது. மரணமானவர்கள் போல நாம் பேசாதிருக்கிறோம் என எனது சிந்தனை ஓடிக்கொண்டிருந்தது.
அலுவலகத்திற்கு வந்த பின் கணணிகளை இறக்கி எடுக்கவும், உள்ளே எடுத்துச் சென்று பூட்டவும் உதவினார். அமைதியாய் மயானத்திற்குச் சென்றவர்கள் வீடு திரும்பும் போது மெதுவாய் பேசிக் கொள்வது போல எங்கள் சம்பாசனைகள் மெதுவாய் தொடங்கின. சற்று நேரத்தின் பின் மரணவீட்டில் நடக்கும் அரட்டை போன்று அரட்டத் தொடங்கிவிட்டோம் இருவரும்.
மரணத்தைப் பற்றி பேச்சுத் திரும்பிய போது தன்னிடம் மரணம் பற்றி உணர்ச்சிகள் இல்லை என்பதை விட அவை மரத்து விட்டன என்றும், தினமும் சந்திக்கும் ஒரு பொருளைப் போன்றிருக்கிறது மரணம் என்றார்.
எனக்கு மரணவீட்டில் இருக்கும் அமைதி பயத்தைதத் தரும் என்றேன். சிரித்தார். மரணம் அவருக்கு நண்பனாயிருக்கிறது போலிருந்தது அந்தச் சிரிப்பு. என்னால் அதை ரசிக்க முடியவில்லை.
மறக்க முடியாத அனுபவம் ஒன்றைச் சொல்லுங்கள் என்றேன். சற்றே யோசித்தார்.
சில மாதங்களுக்கு முன் ஒரு இளைஞன் தற்கொலை செய்து கொண்டானாம். தன்னிடம் அந்த இறுதிச்சடங்கிற்கான பொறுப்பு ஒப்படைக்கப்பட்ட போது அவ் இளைஞனின் பெற்றோருடன் ஏற்பட்ட அனுபவம் மறக்க முடியாதது என்றார்.
அவர்கள் இருவரும் மனோதத்துவ பேராசிரியர்கள். இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள். தான் அவர்களை அழைத்து மரண அறிவித்தலை பத்திரிகையில் இடுவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்ட போது இரு பெற்றோரினதும் பெயர்களையும், அவர்களின் நெருங்கிய உறவினர்களின் பெயர்களையும் எழுதிய போது அவ் இளைஞனின் தாயார், தந்தையின் பெயரையும், அவரின் உறவினர்களின் பெயரையும் அழித்துவிட்டு பிரசுரிக்கச் சொன்னாராம். தந்தையும் அப்படியே செய்தாராம். பிரச்சனையை தவிர்ப்பதற்காக தான் இரு வித மரண அறிவித்தல்களையும் ஒரே பத்திரிகையில் அருகருகே அச்சிட நேர்ந்தது என்றார்.
அதே பெற்றோர் மரணச்சடங்கின் போது அருகருகே உட்கார மறுத்ததையும், தேவாலயத்தின் இரு வேறு பகுதிகளில் உட்கார்ந்திருந்தது பற்றியும் கூறினார். குரோதம் என்பது என்ன என்பதற்கு இவர்கள் இருவரும் தகுந்த உதாரணமாயிருந்தார்கள் என்பது வேதனையானது ஆனால் அதுவே உண்மை என்பதை அந்த மரணச்சடங்கில் கலந்து கொண்டவர்கள் அறிந்து கொண்டது வேதனையானது என்பதை அவரது கதைகளில் இருந்து புரிந்து கொண்டேன்.
குழந்தையின் மரணத்தில் கூட தமக்கிடையிலான குரோதத்தை மறைக்காத வண்ணம் நடந்து கொள்ளும்படியாக அவர்களுக்கிடையில் ஏதோ நடந்திருக்கிறது என்றேன். உண்மைதான், ஒரு காலத்தில் உருகி உருகி காதலித்திருப்பார்கள் என்றார். என்னால் எதும் பதில் கூறமுடியாதிருந்தது. தலையை மட்டும் ஆட்டினேன். ஒரு மனிதனின் இறப்பிலும் ஏன் தன் கோபதாபங்களை காட்டி மனிதத்தைக் கொல்கிறார்கள் என்ற போது அவர் எனக்கு எதையோ போதிக்கிறார் என்பது புரிந்தது.
நானும் ஒரு சிலர் மேலிருக்கும் அதீத வெறுப்பின் காரணமாய் எனது மரணவீட்டிற்கு அவர்கள் வருவதை நான் விரும்பவில்லை என்றும் அப்படி வந்தால் அவர்களைக் திருப்பி அனுப்ப ஒழுங்குகள் செய்துவிட்டே இறப்பேன் என்றும் கூறி இருக்கிறேன். அவர்கள் மீதான வெறுப்பு இன்றும் குறைந்தாயில்லை. அது தினமும் அதிகரித்துக் கொண்டே போகிறது.
ஆனால் இன்றைய நண்பரின் கருத்தினைக் கேட்டபின் மனதுக்குள் ஏதோ நெளிவது போலிருக்கிறது. புரிந்ததா நட்பே.
இன்றைய நாளும் நல்லதே!
.
Subscribe to:
Posts (Atom)