வாசிப்பனுபவம் ******
தேவதைகளின் பாதணிகள்
-----
கண்ணீர் தந்த இடைஞ்சலுக்கு இடையே, ‘தேவதைகளின் பாதணிகள்’ வாசித்து முடித்தேன்.
உண்மைகளைப் பொய் போலவும், பொய்களை உண்மை போலவும் மாற்றி, உண்மையான பாத்திரங்களை ஒளித்துப் பெயர் மாற்றி, பொய்யான பாத்திரங்களில் உண்மைகளை ஒளித்து, உறவுகளோ நட்புகளோ அடையாளம் கண்டுபிடித்துவிடக் கூடாதென்று, புனைந்து புனைந்து எழுதப் படும் இலக்கியங்களுக்கு நடுவே, உண்மைகளை மட்டுமே உள்ளடக்கமாகக் கொண்டு, அகங்காரமற்ற, அன்பையே தேடித் திரிகிறது சஞ்சயன் எழுத்துக்கள்.
மகளைப் பெற்றவர்களில் நானும் ஒருவன் என்பதால், இந்தப் புத்தகத்தின் உணர்வுகள், என்னை 7000 கிலோமீட்டர்கள் இடைவெளியில் வாழும் என் மகளின் நினைவுகளோடு, மீண்டும் பின்னோக்கிய வாழ்வில் தள்ளி கலங்கடிக்கச் செய்தன.
மகள்களின் நினைவுகளால் நிரம்பிய பக்கங்களில்,
மெல்லிய மனங்கொண்ட எல்லா நேர்மையான மனிதர்களும், தங்களின் கோபத்தால் சந்திக்கும் ஒரே பிரச்சினைகள் பனிப் படலங்களைப் போல் பின்னணியில் தெரிகின்றன.
வாழ்க்கை, வெற்றி தோல்விகளுக்கு சம்பந்தமில்லாதது.
பெற்றோரோ, பிள்ளைகளோ உறவைப் பேணுவதில் முழு வெற்றியையோ, முழு தோல்வியையோ எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும் அடைவதற்கு வாய்ப்பே இல்லை என்பது என் அனுபவப் புரிதல்.
என் இளம் வயதில் பனிப் பிரதேசங்களில் வாழ்ந்த ஐரோப்பியர்களின் கதைகளால் கலங்கியிருக்கிறேன். இதில் அங்கு வாழ்ந்த தமிழர்களுக்காகக் கலங்கினேன்.
அனுபவங்களே வேறுபடும். கலக்கங்கள் அனைவருக்கும் பொதுவானதே. சஞ்சயனைப் போல் அவரவர் கலக்கங்களை எழுதுவதே இலக்கியம். அடுத்தவர் கலக்கங்களை எழுதுதலை தொழிலாகக் கொண்டவர்களே எழுத்தாளர்கள்.
இந்தப் புத்தகத்தில் என்னை மிகவும் கவர்ந்த புள்ளிகள்:
° ஒரே மூச்சில் படிக்க வைத்த எழுத்து நடை.
° புனைவற்று தன் வாழ்வை சமூகத்தின் முன் வைத்தல்.
° தன் அறிவையோ, திறனையோ, உயர் கலியாண குணங்களையோ முன்னிறுத்தாத அகங்காரமற்ற எழுத்துகள்.
° தன் நியாயங்களை மட்டுமே பேசாத நடுநிலையான சுயபரிசோதனை.
° கவித்துவமான அத்தியாய தலைப்புகள்.
° வாசகரின் நினைவலைகளை ஆரவாரமின்றி தூண்டும் ஆசிரியரின் நினைவுகள்.
° குடும்ப உறவுகளின் ஊடான உள்ளார்ந்த மெல்லிய ஆய்வுகள்.
வாசிப்பில் உண்மைகளோடு வாழ்வது என்பது, நமக்கு வாழாமலே இலவசமாய்க் கிடைக்கும் இன்னொரு வாழ்வு.
சஞ்சயனோடு நானும் வாழ்ந்தேன்.
***
நினைவு மறந்த கதை
------
நான் வாழ்வில் முதன்முதலாக சந்தித்த நினைவழிவு (Dementia) நோய் பாதிக்கப் பட்டவர் என் அப்பாவைப் பெற்ற ஆயா(அப்பாயி).
அதன்பிறகு நான் படித்த, அந்த நோயினால் பாதிக்கப்பட்டவர், ‘வோல்காவிலிருந்து கங்கை வரை’ எழுதிப் புகழ்பெற்ற பேரறிஞர் ராகுல் சாங்கிருத்யாயன் அவர்கள்.
சஞ்சயன் எழுதியுள்ள இந்தப் புத்தகம், அவரது தாயாரின் நீண்டகால நினைவழிவு நோயினால் ஏற்பட்ட, அன்பும், அங்கதமும் நிறைந்த பல் வேறு நிகழ்வுகளை உள்ளடக்கியது.
உண்மைகளையே அடிப்படையாகக் கொண்ட சஞ்சயனின் எழுத்து நெகிழ்த்தி அழ வைப்பதைப் போலவே, குலுங்கிக் குலுங்கி சிரிக்கவும் வைக்கிறது.
சஞ்சயனின் குறும்பும், குதர்க்கமும் புத்தகத்தைப் படித்து முடித்த பின்னரும் என் நினைவுகளில் சிரிப்பலைகளை எழுப்புகிறது.
பெற்றோர்களைப் பிள்ளைகளும், பிள்ளைகளைப் பெற்றவர்களும் அணுக வேண்டிய முறைமைகளை இந்தப் புத்தகம் நமக்கு விளையாட்டாகவே கற்பிக்கிறது.
சஞ்சயனின் நையாண்டிக்காகவே இந்தப் புத்தகத்தை நான் இன்னொரு முறை படிப்பேன்.
***
தினம் ஒவ்வொன்றும் பெருங்கனவு
------
தமிழர்களுக்குக் கிடைத்த ஓர் அற்புத மாமருந்து இந்தப் புத்தகம்.
என் தாயார் 73 வயதில் வாய் புற்றுநோயால் அவதிப்பட்டு காலமானார்.
இந்தப் புத்தகத்தை நான் படிக்கத் தொடங்கியதும், நானே புற்றுநோய்க்கு ஆளாகி, போராடி மீண்ட உணர்வை எனக்குத் தந்தது.
எந்த நோயையும் எதிர்த்துப் போராட தேவைப்படும் தன்னம்பிக்கையை, தன் வாழ்க்கையை ஒளிவு மறைவின்றி எடுத்துக்கூறி நமக்கு வழிகாட்டுகிறார் ஆசிரியர் ‘விஜித்தா கனகரட்ணம்'.
ஓர் ஐரோப்பிய புதிய அலை திரைப்படத்தைப் போன்ற உள்ளடக்கம் இருப்பினும், விறுவிறுப்பான கதையைப் போலவே உண்மை நிகழ்வுகளைச் சொல்வது பெருஞ்சிறப்பு. தன் கதைகளுக்கு செய்ததை விட, இந்தக் கதைக்கு செய்நேர்த்தியும், வடிவமைதியும் கொடுத்து மெருகூட்டியிருக்கிறார் சஞ்சயன்.
ஆனால் இதைக் கதையென்றே இவர்கள் வகைப் படுத்தியிருக்கிறார்கள். அதனால் கதையாகவே படித்தாலும், இப்புத்தகம் நிச்சயம் சமூகப் பயன் தரும்.
எனக்குத் தெரிந்த வரை இதுபோன்ற புத்தகம் தமிழுக்குப் புதிது.
_______________________________
இம்மூன்று சிறு புத்தகங்களும் என்னுள் பெரும்பயன் விளைவித்திருக்கின்றன.
நன்றி சஞ்சயன் Sanjayan Selvamanickam