பிரபாகரன் மாவீரனா?


நேற்று மாலை சமூக ஆய்வாளர் B. A Kathar மாஸ்டரின் கலந்துரையாடலில் கலந்து கொள்ளக்கிடைத்தது. எனக்குள் இருந்த சில கருத்துக்களுக்கு ஒத்த கருத்துக்களை கொண்டிருந்தார் அவர்.  புலிகளின் தியாங்கள் மறைக்கப்படுவதோ, மறக்கப்படவோ கூடாது என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. தவிர விடுதலைக்கு வித்திட்ட அனைவரினதும் சார்பில் சிறுபான்மை இனத்தவர்கள் இணைந்து  தற்கால, இடைக்கால, நீண்டகால வேலைத்திட்டங்களை முன்னெடுக்க வேண்டியது எமது கடமை என்பது அவரது முக்கிய கருத்தாக இருந்தது. நுனிப்புல் மேயும் அரசியல்வாதிகள் சமூக ஆய்வாளர் B. A Kathar  போன்ற புத்திஜீவிகளிடம் இருந்து கற்பதற்கு எவ்வளவோ இருக்கிறது என்பதே எனது கருத்து.

கார்த்திகை 26 ம் திகதி உள்ளடக்கிய வாரம் வருகிறது. அவ் வாரம் தமிழர்களிடத்தில் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் பிறந்த திகதி என்பதை விட, மாவீரர்களின் வாரம் என்னும் அடையாளத்தையே கொண்டிருக்கிறது. ஏன் இந்த திகதியை தெரிவு செய்தார்கள் என்ற விவாதத்திற்கு நான் வரவில்லை. விடுதலைக்கு தம்மை அர்ப்பணித்தவர்களின் தியாகத்தை போற்றும் ஒரு நாளாகவே அதை நான் பார்க்கிறேன். எனினும் பல ஆண்டுகளாய் என் மனதை நெருடும் ஒரு விடயமும் அதில் அடங்கியுள்ளது.

மாவீரர்கள் என்பதனை வரையறை செய்பவர்கள் யார்? விடுதலைப் புலிகளா? அப்படியாயின் ஏன் இன்னும் தமிழனின் விடுதலைப்போராட்டத்தை உலகெங்கும் அடையாளப்படுத்திய பிரபாகரனுக்கும் அவரது தளபதிகளுக்கும் ஏன்  இன்னும் மாவீரர் பட்டம் சூட்டப்பவில்லை? என்னைப் பொறுத்தவை விடுதலைப்புலிகளின் வீரத்துக்கும், தியாகத்துக்கும் இணையானவர்கள் எங்கும் இல்லை என்பதே எனது கருத்து. அவர்களின் அரசியல், சமுதாய அணுகுமுறைகளில் எனக்கும் மற்றும் பலரைப் போலவே  விமர்சனங்கள் இருக்கின்றன. அது வேறு, அவர்களின் வீரத்தையும், தியாகத்தையும் மதிப்பது வேறு.

மாவீரர்கள் என்னும் பதத்தினை தமிழ்பேசும் இலங்கையர்கள் நாம் நான் வரையறுக்கவேண்டும். எம் இனத்தின் விடுதலைக்கு வித்தான அனைவரும் எனது பார்வையில் மாவீரர்களே.  *சிவகுமாரனில் இருந்து இறுதியாய் முள்ளிவாய்காலில் சாய்ந்த கடைசித்தோழன் வரையில் அனைவரும் இதற்குள் அடங்குவர். விடுதலைப்போராட்டத்தின் ஆரம்பத்தில் விடுதலைக்கு தங்களை அர்பணித்தவர்கள் எவராய் இருந்தாலும், எந்த இயக்கத்தை சேர்ந்தவராய் இருந்தாலும், எந்த கொள்கைளை பின்பற்றியவராக இருந்தாலும் அவரின் இலட்சியம் தமிழ்பேசும் மக்களின் விடுதலையாய் இருந்தது. எனவே அவர்களும் மாவீரர்களே.

சகோதர யுத்தங்களினால் எம்மை நாமே அழித்துக்கொண்ட போது கொலையுண்டவர்களுக்கு துரோகி பட்டம் சூட்டுவது எந்த வகையில் நியாயமாகிறது? எமது விடுதலைப்போரின் இநத முடிவுக்கு முக்கிய கா‌ரணமாய் அரசியல் சாணக்கியத்தனமின்னை கூறப்படுகறது. விடுதலையின் மீது பற்றுடன் தூரப்பார்வையுடன் அரசியல் பேசிவர்கள் என்னவானார்கள் என்று எமக்குத் தெரியும். அவர்கள் துரோகிப்பட்டம் சுமத்தப்பட்டு இல்லாதொழிக்கப்பட்டார்கள்.  உண்மையில் அவர்கள் துரோகிகளா?  அவர்களின் குடும்பங்களின் வேதனைகளைப் பற்றி எப்போதாவது சிந்திருப்போமா? எட்டப்பன் என்றும், துரோகி என்றும் எள்ளி நகையாடி தூற்றித் தள்ளிய எமது இன்றைய நிலை என்ன? சக இயக்கங்கள் இல்லாதொழிக்கப்பட்ட போது  இல்லாது போன உயிர்கள் அனைத்தும் துரோகிகளா? சற்று நேரம் உங்கள் மனச்சாட்சியுடன் பேசிப்பாருங்கள் புரியும்.

ரணங்களை கிளருவது எனது நோக்கமல்ல. எனினும் தவறுகளை உணர்ந்து, திருத்தி, நிமிர்ந்து கைகோர்க்க வேண்டிய காலமிது. ஏனவே விடுதலைப்போராட்டத்தில் தங்கள் உயிரைத் தியாகம் செய்த அனைவரும் மாவீரர்களே என அறிவிக்கவேண்டிய கடமை விடுதலைப் புலிகளின் அமைப்புக்களுக்கும். அவர்களின் போராட்டத்தை முன்னெடுப்பவர்களுக்கு உண்டு. இவ்வாறான அறிவிப்பு பலரின் ரணங்களை குணப்படுத்துவது மட்டுமல்லாமல் தமிழர்களின் ஒற்றமைக்கு பலம் சேர்க்கும்.

கார்த்திகை 27ம் திகதியை தியாகிகளின் நாளாக ஒற்றுமையாய் கொண்டாடுவோம்.

பல ஆண்டுகளுக்கு முன் கேட்ட ஒரு கவிதையின் வரிகள் இது. நமக்கு எதையோ சொல்லிப்போகிறதாய் உணர்கிறேன்.

இந்த பிரபஞ்சத்தில் உள்ள எல்லா உயிரினங்களும்
சூரியனைப் பார்த்து கையசைத்து மகிழும் போது
எமக்கு மட்டும் ஏனிந்த ஒளி வெறுப்பு
வாருங்கள் நாமும் கையசைத்து மகிழ்வோம்


 * சிவகுமாரன் என்று குறிப்பிடப்பட்டுள்ள இடத்தில் இவ் ஆக்கத்தை  வெளியிட்ட போது செல்வகுமாரன் என்று எழுதப்பட்டிருந்தது. பின்னூட்டம் ஒன்றில் இத் தவறு சுட்டிக்காட்டப்பட்ட பின்பு சிவகுமாரன் என்று மாற்றப்பட்டது.  (30.10.2011 - 06: 49 AM)