எங்கள் பேராசானை கௌரவித்து நடாத்தப்பட்ட விழாவின் போது நான் பகிர்ந்து கொண்ட அவர் பற்றிய ஞாபகங்கள்.
பார்க்க
www.facebook.com/mccbatticaloa
...............................................
எங்கள் புனிதப் பூமியில் எங்கள் பேரன்பு மிக்க ஆசானுக்கு பாராட்டு விழா.
தூரமாய் பனிவிளையும் பூமியில் இருந்து வாழ்த்தாமல்
அருகிலமர்ந்து
அவர் கைபிடித்து
வாழ்வை வளமாக்கியவரை
வாழத்தி வணங்க
அருள் புரிந்த இறைவனுக்கும் என் நன்றிகள்.
காட்மன் மண்டபம்... எனது போதிமரங்களில் முக்கியமானது.
இதன் பெருமை எம் பாடசாலையில் படித்த அனைவருக்கும் நன்றே ஞாபகமிருக்கும். எறும்புகள் போல் வரிசை வரிசையாய் ஒவ்வொரு திங்களும் நாம் வந்ததும்.. சல சல வென்று எம்மை மறந்து பேசிக் கொண்டிருக்கும் போது
ஒரு மந்திரவாதி உள்நுளைந்து எம்மை ஊமையாக்கிவிடுவது போலிருக்கும் பெருமைக்குரிய எமது பிரின்ஸ்சேர் காட்மன் ஹோலுக்குள் நுளையும் போது.
பசுமையான நினைவுகள் இவை.
இவரின் ”அடி” பற்றி பலரும் பேசுகிறார்கள் ஆனால் அடிக்காமலும் போதிக்க முடியும் அவரால்.
நான் இந்த மனிதரிடம் இருந்து என்னத்தை, எப்படி கற்றுக் கொண்டேன் என்பதையும் இந்த பெருமைக்குரியவர் பற்றிய சில நகைச்சுவையான சம்பவங்கயையும் உங்களுடன் பகிர்ந்து கொள்ளப்போகிறேன்.
இந்த மனிதருக்கும் எனக்குமான உறவு 34 வருடங்களுக்கு முன்னானது.
என்னையும் ஓரளவு மனிதனாக்கியதில் இவருக்கும், புண்ணியமூர்த்தி சேருக்கும் பெரும் பங்குண்டு.
வழிதவறிய போதெல்லாம் ஒருவர் கன்னத்தை மெதுவாய்த் தடவி விடுவார்.. மற்றவர் சத்தமாய் பேசுவார்.
நமக்கு கணக்குப் பாடம் என்றால் ஒரு மாதிரித்தான் அந்தக் காலத்தில். ஒரு முறை செல்வகனேசன் சேர் எனது தகுதிக்கு அதிகமாக 17 மார்கஸ் போட்டார். நமக்கு பாடசாலையில் மட்டுமல்ல வீட்டிலும் கண்டிப்பு அதிகமாய் இருந்த காலம் அது. எனது அப்பா ஒரு போலீஸ் அதிகாரி. நம்மளையும் ஒரு கள்ளன் என்று நினைத்தாரோ என்னவோ.. அடி தாறு மாறாய் விழும்.
ரிப்போட் வீட்டில் கொடுத்து அப்பாவின் சைன் வாங்கிவரவேண்டும் என்பது பெரியவரின் கட்டளை. 70 மேல் எடுக்காட்டி வீட்ட வராதே என்பது மற்றவர் கட்டளை.
17 மார்க்ஸ் உடன் வீட்டில ரிப்போட்டை கொடுப்பது தற்கொலைக்குச் சமம்.
மத்தளத்துக்கு ரெண்டு பக்கமும் அடி மாதிரி ஒரு பக்கம் பின்ஸ் சேர்.. மற்றப்பக்கம் செல்வமாணிக்கத்தார்..
எப்படி தப்பலாம் என்று பலமாய் போசித்தேன்.. இவர்களிடம் மாட்டுப்பட்டு சாவதை விட வீட்டை விட்டு ஓடலாம் போலிருந்தது.
எப்படித் தப்பலாம் என்று யோசித்த போது ஒரு புதிய ஐடியாவும் கிடைத்தது.
மெதுவாய் ஒரு பேனை எடுத்து 17 ஐ 77 என் மாற்றினேன். 12 வயதில் கள்ள வேலை ஒழுங்காக செய்ய வராது தானே..
தேவைக்கு அதிகமாக 7 என்பதை அமத்தி எழுதியிருந்ததை அப்பா கண்டார். என்னடா மாத்தியிருக்கிற மாதிரியிருக்கு என்றார்
நான் இல்யே என்றேன் அப்பாவியாய்.
போலீஸ் மூளையை பாவித்து எல்லா பாடங்களினதும் கூட்டுத் தொகையைப் பார்த்தார்.. அது 60 ஆல் பிழைத்தது..
பிறகு என்ன நடந்தது என்பது.. ஒரு சோகமான கதை.
அப்பா அடித்ததோடு விடிருந்தால் சந்தோசப்பட்டிருப்பேன. பொறு, நான் பிரின்ஸ்சேரிட்ட சொல்லுறன் என்று சொன்னார். அவர் அப்படிச் சொன்னதால் விடுமுறை முழுவதும் என்னால் நிம்மதியாய் விளையாட முடியவில்லை. பிரின்சேர் எனது சொக்கையை தடவுவது போலெல்லாம் கனவு வந்தது. தினமும் உயிர் போய் வந்தது.
லீவு முடிந்து பாடசாலை தொடஙகிய போது பிரின்சேருக்கு ஒரு கடிதம் போட்டார் அப்பா. ஒரு நாள் மதியம் போல் இன்விடேசன் வந்தது officeஇல் இருந்து. செல்லராஜா அண்ணண் தான் இன்விடேசனை கொண்டு வந்தார். நமக்கு இப்பவே செத்தால் என்ன என்ற மாதிரி இருந்தது.
ஒப்பிஸ் வாசலில் நிற்கிறேன்.
கை நடுங்குது..
கால் நடுங்குது..
இதயத் துடிப்பு வெளியில் கேட்டது...
தொண்டை வறன்டது,
கண் இருண்டது.
எனக்குப் பிறகு வந்தவனெல்லாரையும் உள்ளே கூப்பிட்டு அறைந்து அனுப்புகிறார் பெரியவர். நம்மளை மட்டும் கூப்பிடவே இல்லை.
கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்தின் பின் சஞ்சயன் நாளைக்கு மத்தியானம் வா என்றார் என்னைப் பார்க்காமலே
சரி சேர் என்று சொல்லிப் போனேன். அன்றைய தினம் எனக்கு நித்திரை வரவில்லை. இப்படி நாலு நாட்கள் என்னை அழைப்பதும் திருப்பி அனுப்புவதுமாய் இருந்தார் சேர். உயிர் போய் போய் வந்தது எனக்கு. ஐந்தாவது நாள் மாலை தனது வீட்டுக்கு வரக் கட்டளையிட்டார்.
நானும் போய் நின்றேன். வெளியில் வந்து உட்கார்ந்து மிகவும் அமைதியாய் கதைத்தார். என்னடா நாலு நாளும் உயிர் போயிருக்குமே என்றார் எல்லாவற்றையும் நேரில் பார்த்தவர் போல்.
பின்பு, மகன் களவு செய்யக்கூடாது என்று தொடங்கி கனக்க கதைகள் சொன்னார். கடைசியாhய் போய் உன்ட மனச்சாட்சிய கேள் நீ செய்தது சரியா என்றார். மனிதர் கொல்லப் போகிறார் என்று எதிர் பார்த்துப் போன எனக்கு அவர் அடிக்காமல் விட்டது பெரிய ஆச்சரியமாய் இருந்தது.
அன்றிரவு எனக்கு ஒருவித ஞானம் பிறந்திருந்தது.
அன்றில் இருந்து இன்று வரை களவு மூளை என்னிடம் வருவதேயில்லை. அப்படி வந்தாலும் அதை கொல்லும் வழி கற்றிருக்கிறேன்.. இவரால்.
வாழ்க்கையில் ஒன்று பட்டால் உண்டு வாழ்வு என்பதை அறிவித்தவரும் நம்மட சேர் தான்.
நாம் ஹொஸ்டலில் வாழ்திருந்த காலம் அது..
77, 78ம் ஆண்டுகளாயிருக்கலாம், மூட்டைப் புச்சினளின் தொல்லை தாங்க ஏலாமல் இருந்தது.
ஒரு வெள்ளி இரவு வந்தார் எல்லோரையும் அழைத்தார். நாளையுடன் மூட்டை இருக்காதொன்றார். என்ன நம்ம சேர் ஜோக் அடிக்கிறாரோ என்று யோசித்தேன்.
நாளை காலை பாய், கட்டில்கள், பெட்சீட் எல்லாம் வெளியில் கொண்டு வரவேண்டும் என்றும் தான் நாளை காலை 8 மணிக்கு வருவதாயும் சொல்லிப்போனார்.
அந்த சனிக்கிழமை மூட்டைப்புச்சிகளுக்கு பயங்கரமாய் விடிந்தது.
மருந்து அடித்தார்.
இரும்பு பிரஸ் மாதிரி ஒன்றால் முட்டைகளை கிளீன் பண்ணிணார்,
சுடுதண்ணி காச்சி காச்சி ஊற்றினோம்.
பாய்களை சுருட்டி நிலத்தில் அடிக்க கொட்டுண்டு ஓடிய மூட்டைகளை செருப்பால் மிதித்து இழுத்துக் கொன்றோம்..
பெட்சீட் கழுவினோம்
சேர்.. எல்லோரையும் கலைத்து கலைத்து வேலைவாங்கினார்.
அன்றுடன் ஒழிந்தது மூட்டையின் தொல்லை
ஒன்றாய்ச் சேர்ந்தால் எதையும் சாதிக்கலாம் என்பதை நான் அறிந்தது இங்கு தான்.
நீதி என்பது எல்லோருக்கும் சமம் என்பதையும் இவர் தான் கற்பித்தார். ராஜன் செல்வநாயகத்தின் மகனின் கதை இது.
நாம் மாணவர் தலைவர்களாக உலாவந்த காலத்தில்
ராஜன் செல்லநாயகத்தின் மகன் தினமும் இடைவேளையின் போது
வெளியில் போய் வருவது தெரியவர மெதுவாய் சேரின் காதில் போட்டு வைத்தேன்.
அடுத்த நாள் இன்னொருத்தனை வேவு பார்க்க அனுப்பி செய்தியை உறுதிப்படுத்திக் கொண்டார்.
பிறகு என்னையும், வேவு பார்க்க போனவனயும் (ராஜ்மேனன் என்று நினைக்கிறேன்) அழைத்து ராஜன் செல்லநாயகத்தின் மகனை அழைத்து வரச் சொல்கிறார்.
நாமும் அவனை அழைத்து வருகிறோம்..
அவன் வந்தவுடன் அண்ணண்மார் நீ வெளியில போறாய் என்று சொல்கிறார்கள் உண்மையா என்றார்.
அவனோ பரிதாபமாய் முகத்தை வைத்துக் கொண்டு இல்ல சேர் என்றான்.
சரி நீ போ என்றார் அவனைப் பார்த்து. எனக்கு அவன் இலகுவாய் தப்பியது கோபத்தை ஏற்படுத்தியது
அவரின் கந்தோரை விட்டு அவன் போகும் வரை சற்றே பொறுத்தவர்
ராஜன் செல்லநாயகத்தின் மகனை மிகவும் அன்பாக கூப்பிட்டு மிக பாசமாய் அப்பாவை பற்றி, அம்மா பற்றி, அவங்கட புதுக் கார் பற்றியெல்லாம விசாரித்து விட்டு சொன்னார்..
மகன்.....நாளைக்கு நீ வெளியில போகேக்க சப்பாத்து போட்டுட்டு போங்க
இல்லாட்டி அப்பா எனக்கு பேசுவார் என்று
ஆகா.. மனிசன் கொக்கி போடுது என்பது அப்ப தான் எனக்கு புரிந்தது
இல்ல சேர் நான் சப்பாத்தோட தான் போற நான் என்றான் கள்ளன்.
எம்மை பார்த்து வெற்றிச்சிரிப்பு சிரித்தவர் மெதுவாய் எழும்பி கள்ளனுக்கு ரெண்டு அறை விட்டார்
பிறகு ராஜன் செல்லநாயகத்துக்கு போன் போட்டு உன்ட பெடியன் ஒழுங்கா இருக்காட்டி வெளிய கலைச்சுப்போடுவன் என்றார் ஆங்கிலத்தில்...
டிசிப்ளின் என்பதற்கு எனது டிக்சனரியில் இன்னொரு பெயர் இருக்கிறது.....அது பிரின்ஸ் சேர்..
அது பற்றிய ஒரு கதை
நாம் விடுதியில் இருந்த காலத்தில் வெள்ளிக் கிழமைகளில் ஆனைப்பந்தி கோயிலுக்குப் போவோம். எம்மை அழைத்துப் செல்பவர்களில் வேணு கோபால் அண்ணண் முக்கியமானவர்.
அவர் அப்ப ப்ரீபெக்ட்
நாம் கோயிலில் இருந்து திரும்பும் போது எமக்கு முன்னால் வின்சன்ட் ஹொஸ்டலில் தங்கியிருக்கும் அக்காமாரும் எமக்கு முன்னால் வரிசையில் போவார்கள்.
வேணு அண்ணண் வயதுக் கோளாரால், நாம் ஹோஸ்டலுக்குள் திரும்பும் போது..
அக்காவ கொண்டுபோய் விடுறதோ எண்டு கேளுங்கோடா என்பார் எம்முடன் வரும் சிறுவர்களிடம் அக்காமாரும் சிரித்துவிட்டு போவார்கள்.
வேணு அண்ணணின் கஸ்டகாலம் யாரோ இதைப்பற்றி பெரியவரிடம் சொல்ல..
ஒரு வெள்ளிக்கிழமை ஹொஸ்டல் மதிலுக்கு பின்னால் ஒளிந்திருந்தார்.
வேணு அண்ணணும் அக்காமாரை கொண்டுபோய் விடுறதோ என்று நக்கலாய் கேட்க
வேணுகோபால்! அவங்களுக்கு வழி தெரியும் போக? நீங்க இங்கால வாங்க என்றார். என்ட பள்ளீல உன்ன மாதிரி ஒரு காவாலி என்று சொல்லிச் சொல்லி அடித்தார். அதற்குப் பிறகு வேணு அண்ணண் வின்சன்ட் பக்கம் தலைவைத்துப் படுப்பதில்லை.
சிரமதானத்தின் வியர்வை இனிக்கும் என்னும் இரகசியம் கற்பித்தவரும் இவர் தான்.
எத்தனை எத்தனை சிரமதானங்கள் செய்திருப்போம் சேரின் தலைமையில். ரோட்டில் குப்பை துப்பரவு செய்தலில் இருந்து மாந்தீவு தொழுநோயாளர் வைத்தியசாலை வரை சிரமதானம் செய்திருக்கிறோம்.
ஒரு சமுதாயத்தின் அடிப்படையே பொது நலம் என்பதையும் இவர் தான் கற்பித்தார் எனக்கு
நகைச்சுவையுனர்வையம் கற்பித்தது அவர் தான்
எங்களுடன் படித்த ரமேஸ் எதுக்கெடுத்தலும் ஒரு "டக்" போட்டுத்தான் கதைப்பான்.. டக் எண்டு வாறன். டக் எண்டு போறன். இப்படி ஏகப்பட்ட டக் போடுவான். ஒரு நாள் ஆங்கில வகுப்பு நடக்கிறது... பிரின்ஸ் சேர் ரமேஸ்ஐ எதையோ வாசிக்கச் சொல்ல. ஓம் சேர் டக்கெண்டு வாசிக்கிறன் என்றான்... மனிதர் கரும்பலனையில் duck என்று எழுதி இனி இது தான் உனக்கு பெயர் என்றார். அவன் சொன்ன டக் வேற இந்தாள் சொன்ன டக் வேற.. அனறிலிருந்து இன்று வரை ரமேஸ் என்றும் பெயர் மறக்கடிக்கப்பட்டு டக் என்று அழைக்கப்படுகிறான்
இப்படி குசும்பு வேலையும் செய்வார்..
1984. கள்ளனுக்கு பொலீஸ் வேல குடுக்குற மாதிரி எனக்கு சீனியா பீரீபெக்ட பதவியை தூக்கித் தந்தார்.
சீனியா ப்ரீபெக்ட் என்றால் கேக்கவா வேனும். சென்றல்ல சீணியர் ப்ரீபெக்ட் என்றால் மற்றைய பள்ளிக் கூடஙகளில் இருந்து விளையாட்டப் போட்டிக்கு, வேறு நிகழ்ச்சிகளுக்கு அழைப்பு வரும். கெப்பர் தலைக்கேறியது எனக்கு. சிறுசளை வெருட்டித் திரிந்தேன். அட்டகாசம் கொஞ்சம் கூடுலாக இருந்தது. சேர் இதை கவனித்திருக்கவேண்டும்.. வாழ்க்கையிலேயே மறக்க முடியா அதிர்ச்சி வைத்தியம் தந்தார் ஒரு நாள்.
ஒரு திங்கட் கிழமை.. அசம்பிளி தொடங்க முதல் சேர் வருவதை கவனிக்காமல் பலமாய் கதைத்துச் சிரித்ததை கண்டார் சேர்
இதைக் கண்டுவிட்டு காணாதது மாதிப் போய் அசம்பிளியை துடங்கினார்.
பிறகு இந்த பள்ளீல எல்லாருக்கும் ஒரே ரூல்ஸ் தான் என்றும் இப்ப நான் வரும் போது ப்ரீபெக்ட் அண்ணண் கதைத்துக் கொண்டிருந்தார் என்றும்
மற்றவர்களுக்கு முன்மாதிரியாய் இருக்கவேண்டியவர் இப்படி செய்வது பிழை என்றும் சொல்லி அப்ப அந்த அண்ணண் இந்த மேசையில ஏறப் போறார் நீங்கள் வடிவாகப் பார்க்கலாம் அவரை என்றார் சொல்லி என்று கீழே இருந்த மேவையகை; காட்டினார்.
நான் தலை குனிந்தபடியே ஏறி நின்றேன் அசம்பிளி முடியும் வரை.
வாழ்வில் நான் மறக்க விரும்பாத நாட்களில் அதுவும் ஒரு ஒன்று.
பதவி வரும் போது பணிவு வரவேண்டும் என்பதை மனிதர் எனக்கு உணர்த்திய விதம் என்றைக்கும் மறக்காது.
பல பொறுப்பான பதவிகள் வகித்திருக்கிறேன்.. பாராட்டுக்களும் கிடைத்திருக்கின்றன.. அவற்றிற்கெல்லாம் எனது மத்திய கல்லூரியும் இந்தப் பெரிய மனிதருமே காரணம்.
இறுதியாய்
சில நாட்களுக்கு முன் தொலைபேசியில் உரையாடிய போது சொன்னார்.. டேய் நீங்கள் செய்யும் உதவிகளை என்னால திருப்பிச் செய்ய முடியாது, என்னைக் கடனாளி ஆக்குகிறீர்கள் என்று.
அவருக்கு நான் சொல்லிக் கொள்ள விரும்புவது இது தான்
கடனாளி நீங்கள் இல்லை.. நாங்கள் தான் கடனாளிகள்..
என்றென்றும்.
No comments:
Post a Comment
பின்னூட்டங்கள்