பங்குனி மாத இலக்கியப் பூங்காவின் போது ஒஸ்லோவில் இருக்கும் ஒரு எழுத்தாளரைப் பற்றி அறியக்கிடைத்தது. முன் பின் அறிமுகமற்ற பெயர். சிறந்த எழுத்தாளர், புத்தகங்கள் வெளியிட்டிருக்கிறார், நோர்வே வாழ்வை எழுதுகிறார் என்றெல்லாம் அறியக்கிடைத்தது.நண்பர் ஒருவர் மூலம் தொடர்பு கொண்டு அறிமகமானேன் அவருடன். அதிர்ந்து பேசாத மனிதராயிருந்தார். அவர் எப்படி 4 புத்தகங்கள் வெளியிட்டார் என்று போசனையோடியது. அவரிடமிருந்து அவரின் பரதேசி, அழிவின் அழைப்பிதழ், நாளை ஆகிய நாவல்களை வாங்கிக் கொண்டேன். பரதேசி சற்று புதிய புத்தகமாயும், ஏனையவை விட அழகான அட்டைப்படத்துடனும் இருந்ததால் அதையே முதலில் வாசிக்கத் தொடங்கினேன்.
தொடர்ந்து செல்வதற்கு முன் ஒரு சிறு ”ப்ளாஸ் பக்” கதை
பல வருடங்களுக்கு
முன்போர் நாள்
புத்தக பசியெடுத்து
600 கீ.மீ பயணம் செய்து
ஒஸ்லோ தமிழ்க்கடையில்
”அண்ணை! தமிழ் புத்தம் இருக்கா” என்ற போது
புழுவைப் பார்ப்பது போல் பார்த்து
”அங்க” என்று ஒரு மூலையை காட்டினார்.
என்னைப் பார்க்காமலே
தமிழ் இலக்கிய உலகமே சிரித்தது
என்னைப் பார்த்து
ஜோதிகா, சிம்ரன் (அப்ப அவ பேமஸ்)
விஜய், மாலை போட்ட சாமி படம்
போன்ற புத்தகங்களால்...
”அண்ண” என்றேன்
மெதுவாய்
”என்ன” என்றார்
வெறுப்புடன்
”புத்தகம்” என்றேன்
"அப்ப, அது என்ன துணியோ" என்றார் நக்கலாய்
பிறகு
ஏதோ நினைத்தவர்
”அதுக்கு பின்னால
விக்காத புத்தகங்கள் இருக்கு
பாக்கிறீங்களா” என்றார் (வியாபாரம் புரிந்தவர்)
பார்த்த போது
புழுதி தட்டிப் போய்
விலை பல தரம் குறைக்கப்பட்டு
தான் ”விற்கப்படவில்லையே” என்ற
கவலை வரிகள்
முகத்தில் தெரிய
கண்ணில் தட்டுப்பட்டது
அ.முத்துலிங்கம் கதைகள் - 2004
புழுதி தட்டிய போது
தும்மினேன்.
உத எடுங்கொ
பெம்தி புறசன்ட் ரபத் தாறன் (50 வீத கழிவு தாறன்)
என்றார்
நொர்வேஜிய மொழியில்.
50 குறோனர் ( 8 US $)
கொடுத்து வாங்கிவந்தேன்
சத்தியமாய்
சொல்கிறேன்
அடுத்து வந்த
இலவச நேரங்கள்
பஞ்சாயிருந்தன
இப்படித் தான் இருந்தது முதன் முதலில் அ.முத்துலிங்கமய்யாவை வாசிக்கக் கிடைத்த போது. குப்பைக்குள் ஒரு குண்டுமணி கிடைத்தது எனக்கு, அன்று.
அதே போல் எதிர்பாராமல் அறிமுகமானவையே இ. தியாகலிங்கத்தின் புத்தகங்கள். யதார்த்தம் உணர்த்தி, சமுதாயச் சீர்கேடுகளை சாடும் ஈழத்து எழுத்தாளனை அவரின் ”பரதேசி” புத்தகம் படிக்கும் வரை இந்தப் பரதேசி அறிந்திராதது வெட்கப்படவேண்டியதொன்று தான். படைப்பாளிக்கு இருக்க வேண்டிய சமூகப் பிரஞ்ஞை இ.தியாகலிங்கத்துக்கு தேவைக்கு அதிகமாகவே இருக்கிறதோ என்று நினைக்கத்தொன்றுகிறது, அவரின் மூன்று நாவல்களையும் படித்ததன் பின்.
”நாளை” என்றும் நாவலில் நிறபேதம், அகிம்சை பற்றி அதிகமாகவே அவர் பேசுகிறார். சில இடங்களில் தனது மனதுக்குள் இருக்கும் கருத்துக்கள் எல்லாவற்றையும் ஏதோ ஒரு விதத்தில் கதைக்குள் புகுத்தியிருக்கிறாறோ என்னும் சந்தேகம் வருவதை என்னால் தவிர்க்கமுடியவில்லை. அனுபவங்களின் அனுபவங்கள் தான் அவரை அப்படி எழுதத் தூண்டினவோ என்னவோ?
”பரதேசி” நாவல் புலம்பெயர் வாழ்வின் யதார்த்தத்தை அப்படியே பேசுகிறது. எதிர்பார்ப்புகளுக்கும் யதார்த்தத்திற்குமிடையிலான போராட்டத்தையும், அதன் ரணங்களையும் அப்படியே கூறுவதல்லாமல் நாவலின் கரு பலரின் புலம்பெயர் வாழ்வின் நாற்றத்தினை மூக்கை பொத்திக்கொள்ளாமல் படம் பிடிக்கிறது,ஆண் பெண் பேதமின்றி. ”விரல்களைத் தாண்டி வளர்ந்ததைக் கண்டு நகங்களை நாமும் நறுக்குவதுண்டு” என்ற ஒரு பாட்டின் வரிகள் தான் ஞாபகத்தில் வந்தது எனக்கு பரதேசியை வாசித்த போது. பரதேசி, பலருக்கு உபதேசம் செய்கிறது என்பது தான் உண்மை. கதையின் பாத்திரங்களை மாற்றிப் பார்த்தாலும் அதுவும் பல உண்மைகளைச் சொல்லுவது என்பதுவும் பரதேசியின் சிறப்புகளில் ஒன்று.
”அழிவின் அழைப்பிதழும்” புலத்தின் சீழ் தான். தனிமனிதனின் மனப்போராட்டங்களையும், எம் கலாச்சராத்தின் சுமைகளையும், நோர்வேயின் கலாச்சராத்துடன் மோதவிட்டு கதை புனைந்திருக்கிறார் இ.தியாகலிங்கம். இளைஞர்களாய் வந்தவர்களின் பாலியல் தேவைகளை அடிப்படையாக வைத்து எழுதப்பட்ட நாவல் இது. தடுமாறி விழுந்து, நிதானித்து எழும் போது எழமுடியாதவாறு வாழ்வின் யதார்த்தத்தினால் அடிபட்டுப்போகும் ஒருவனின் கதை இது. ஒருவனின் தலையெழுத்து எவ்வாறு, அவன் விரும்பாவிட்டாலும் மற்றவர்களை பாதிக்கிறது என்பதையும் பேசுகிறது இந் நாவல்.
இ. தியாகலிங்கத்தின் கதைகள் புலம்பெயர் படைப்பாளிகளினால் தொடப்படாத, அவர்கள் தொடப் பயப்ப்டும் விடயங்களைப் பேசுகின்றன. அழிவின் அழைப்பிதழின் பின்னாலிருக்கும் தனிமனித போராட்டங்களை இளமையில் இங்கு வந்த எல்லோரும் கடந்து வந்திருப்பார்கள் தவிர, தங்களை அந் நாவலில் ஒரு சில இடங்களில் ஆவது அவர்கள் அடையாளம் காண்பார்கள் என்பது என் கருத்து.
இ.தியாகலிங்கத்தின் ”வரம்” என்னும் சிறுகதைத் தொகுப்பை நான் இன்னும் வாசிக்கத் தொடங்கவில்லை. ஒரு பானைச் சோற்றுக்கு ஒரு சோறு பதமல்லவா. இவரின் இரண்டு கவிதைத் தொகுப்புகள் அச்சில் இருக்கின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது. இவர் முகப்புத்தகத்தில் ”காரை நகரான்” என்னும் பெயரிலும், பதிவுலகத்தில்
http://karainagaran.blogspot.com/ என்னும் தளத்திலும் எழுதிவருகிறார். புதியதோர் படைப்பாளியுடனும், அவரின் படைப்புக்களுடனும் ஒரு விசரனுக்கு அறிமுகம் கிடைத்திருக்கிறது. மிக்க மகிழ்ச்சி.
.
நிறைய புத்தகங்கள் வாசித்து மகிழ வாழ்த்துக்கள்!
ReplyDeleteபுத்தகங்களுடனான உங்களின் வாழ்வை, எங்களூர் நடையில் அழகாகச் சொல்லியிருக்கிறீங்கள்.
ReplyDeletewishes.
ReplyDeletemullaiamuthan
-kaatruveli-ithazh