ஓர்பால் விருப்புக்கொண்டவனின் நெஞ்சுரம்

தமிழனான ஒரு பதின்மவயது இளைஞன் தன் பாலியல் நிலையை வீடியோ பதிவின் மூலம் கூறியதைக் காணக்கிடைத்தது. அவ் இளைஞனின் நெஞ்சுரத்துக்கு முதலில் எனது வாழ்த்துக்கள். தான் ஒரு ஓர்பால் விருப்புக்கொண்டவன் என்பதனை அவ்வயதுக்கே உரிய உணர்ச்சிகளுடனும், போராட்டங்களுடனும் பேசியது தமிழ் கூறும் நல்லுலகுக்கு புதியது.

இளைஞனின் மனப்போராட்டங்களை சிந்தித்துப்பாருங்கள். தனித்து நின்று சமூகத்தால் பேசப்பயப்படும், ஒதுக்கப்படும், ஏளனப்படுத்தப்படும் விடயத்தை பேசுவதற்கு எத்தனை நெஞ்சுரம் வேண்டும். தாய்தந்தையரின் மனநிலைகளுடன் அவனது உள நிலை நடாத்தும் போராட்டதில் எத்தனை எத்தனை உணர்ச்சிகள் கலந்திருக்கும்? அன்பில் இருந்து, அவமானம், கோபம், ஏமாற்றம், தோல்வி, தாழ்வு மனப்பான்மை, சுயகௌரவம் என்று ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது.

அவ் இளைஞனின் மனநிலையை சிந்தித்துப்பார்க்கிறேன். மூச்சு விட முடியாத ஒரு பெட்டிக்குள் இருந்து அதை உடைத்துக்கொண்டு வெளிவந்து சுதந்திரமாய் சுவாசிப்பதைப் போல் உணர்வான் என்றே நம்புகிறேன். ”இது நான்” என்னும் அவனின் சுய இருப்பின் கூவல் அவனின் முதுகுக்குப்பின்னால் பேசியவர்களை வாயடைத்துப் போகச்செய்திருக்கும். எல்லாவற்றையும் விட ரகசியத்தின் சுமையை இறக்கிவைத்த மனதின் ஆறுதலே அவனுக்கு பெரிதாயிருக்கும் என்றே எண்ணுகிறேன். உலகத்தையே வென்றது போலிருக்கும் அவனுணர்வுகள்.

ஓர்பால் விருப்புடைய குழந்தைகளைப் பெற்றவர்களின் மன நிலை மிகவும் பரிதாபமானது. குழந்தையை தவறாக வளர்த்துவிட்டோ‌மா என்பதில் இருந்து அவமானம், ஏமாற்றம், தாழ்வுமனப்பான்மை என்று அவர்களின் உளநிலை மிகவும் வேதனைக்குரியதாயிருக்கும். யாருடன் இதைப் பற்றி பேசலாம்? எவ்வாறு பேசலாம்? அல்லது பேசாமலே இருப்போமா? என்று போராடிக்கொண்டீடயிருப்பார்கள். அவர்கள் வளர்ந்த காலத்தில் இப்படியான விடயங்கள் வெளியில் பேசப்படாதிருந்ததால் அவை பற்றிய எவ்வித கருத்துக்களும் இல்லாதிருக்கலாம் அவர்களிடம். எவ்வாறு இதைப் பற்றி தமது குழந்தைகளுடன் பேசுவது என்பதே ‌பெரும் திண்டாட்டமாயிருக்கும் அவர்களிடம்.

சமுதாயத்தில் அப் பெற்றோர்களின் நிலை எப்படியிருக்கும் என்று சிந்தித்துப்பாருங்கள். அதுவும் எங்கள் சமுதாயத்தில் ”கலாச்சார காவலர்கள்” என்பவர்களின் விமர்சனங்கள் இப் பெற்றோரை உயிருடனே கொல்லும் சக்தியுடையவை.  மிகவும் சொற்பமானவர்களே இப் பெற்றோருக்கு ஆறுதலாக இருப்பார்கள். எண்ணிக்கையில் சொற்பமாக இருந்தாலும் அவர்களின் ஆறுதலான வார்த்தைகள்  அப் பெற்றோருக்கு மலைபோன்ற பலத்தைத் தரும் என்பதில் ஐயமில்லை.

எமது ஊரில் இப்படி நடைபெறுவதில்லை என்று பேசும் பலர் இருக்கிறார்கள். அவர்கள் பேசுவது முற்றிலும் பிழை. ஓர்பால் விருப்புடையவர்கள் எங்கும் இருக்கிறார்கள். பேசக்கூடாத விடயம், பேசத் தயங்கும் விடயங்களை மூடிபோட்டு நிறுத்த முயற்சிப்பது ஆரோக்கியமான விளைவுகளைத்தராது. தவிர்த்து, நாம் அவற்றைப் பற்றிப் பேச, உரையாட வேண்டும்.

இப்படியானவர்கள் மனப்பிறழ்வு கொண்டவர்கள், நோயாளிகள், வன்புணர்ச்சிக் காமுகர்கள் என்று பேசுபவர்களும் இருக்கிறார்கள். இப்படியான கருத்துக்களைக் கொண்டவர்கள் சம மனிதர்களை புரிந்து கொள்ளமுடியாதவர்களே. எனக்கு ஒரு பெண் மீது காதல் வருகிறது. அதே போல் அவனுக்கு இன்னொரு அவன் மீதும், அவளுக்கு இன்னோரு அவள் மீதும் காதல் வருகிறது. இதில் என்ன பிழையிருக்கிறது? பாலியல் நிலை அல்லது பாலியல் தன்மை என்பது ஒருவரின் தனிப்பட்ட உரிமை. அது பற்றி விமர்சிக்க உரிமையில்லை.

ஓர்பால் விருப்புடையவர்கள் தனியே உடல் இச்சைகளை மட்டுமே நோக்காக் கொண்டவர்கள் என்னும் பிழையானதே. தனியே உடல் இச்சைகளை மட்டுமே நோக்காக் கொண்டவர்கள் எப்படிப்பட்ட பாலியல் நிலையைக் கொண்டவர்களிடமும் இருக்கிறது என்பதே உண்மை. ஒர்பால் விருப்புடையவர்களில், அன்பின் ஈர்ப்பால் இணைந்து வாழ்பவர்கள் மிகக் குறைவு என்னும் கருத்தும் ஏற்புடையதல்ல.

சற்று வித்தியாசமானவர்கள் என்பதால் அவர்களை சமூகத்தில் இருந்து ஒதுக்காமல் அவர்களையும் புரிந்துகொள்ள முயற்சிப்போம்.


பி.கு:
நோர்வே வாழ் நண்பர் தியாகலிங்கம் ஓர்பால் விருப்பை அடிப்படையாகவைத்து ”திரிபு” என்னும் நாவலை எழுதி வெளியிட்டிருக்கிறார். புலம்பெயர் இலக்கியவுலகில் இது முக்கியமான நாவலாக இருக்கும் என்றே எண்ணுகிறேன். 12.02.2012 ‌ ஒஸ்லோவில் நூல் அறிமுகவிழா நடை பெறுகிறது. நாவலை வாசிப்பதற்கு ஆவலாயிருக்கிறேன்.


இன்றைய நாளும் நல்லதே

இருட்டில் கரையும் மனிதர்கள்

சில நாட்களுக்கு முன்பொரு நாள் மாலை நேரம் வெளிநாட்டவர் செறிந்து வாழும் புறநகர்ப்பகுதியினூடாக நடந்து கொண்டிருந்தேன். நேரம் 9 மணியிருக்கும். பனி பெய்துகொண்டிருந்தது. பனிசுத்திகரிப்பு வாகனங்கள் பாதையை சுத்திகரிக்க மனிதர்கள் தத்தமது வீடுகள் நோக்கி நகர்ந்து கொண்டிருந்தனர். பனியில் பட்டுத்தெறித்த மங்கிய மஞ்சல் நிற வீதி விளக்கின் வெளிச்சம், பனிக்கால கும்மிருட்டை விரட்ட முயற்சித்துக்கொண்டிருந்தது.
எனது வாழ்க்கை நிலை பற்றி சிந்தித்தபடியே, சுய பரிதாபத்துடன் நடைபாதையில் நடந்து கொண்டிருந்தேன். 

ஒருவர் என்னைக் கடந்து போனார். உள்ளுணர்வின் தூண்டலினால் திரும்பிப் பார்த்தேன். அவரும் திரும்பிப் பார்த்தார். பின்பு ”அண்ணே நீங்களா என்றார்”. எனது நினைவுவங்கியில் அவர் பற்றிய எதுவித இருப்பும் இருந்ததாய் தெரியவில்லை. எனவே ”யாரய்யா நீங்க” என்றபடியே அருகில் சென்று அவரின் முகத்தைப் பார்த்தேன். பரீட்சயமான முகமாயிருந்தது. ஆனால் பெயர் நினைவில் இருக்கவில்லை. ”அங்கே வாருங்கள் பேசுவோம்” என்று கூறியபடியே எனது பதிலை எதிர்பார்க்காமல் நடக்கத் தொடங்கினார். அவரின் வேகத்துக்கு என்னால் ஈடுகொடுக்கமுடியவில்லை. வீதியில் ஒளி குறைந்த ஒரு சந்தில் நின்றிருந்தார். அருகில் சென்று உரையாடினேன், அவருடன்.

சில மாதங்களுக்கு முன் அவரை ஒரு கடையில் சந்தித்திருக்கிறேன். அதன் பின் அதே கடையில் அவரை சிலதடவைகள் சந்திருந்தது நினைவிற்கு வந்தது. ”எப்படி இருக்கிறீர்கள்?” என்ற போது, சில நாட்களுக்கு முன் அவரை போலீசார் கைது செய்ய வந்தபோது ஓடித்தப்பி தற்போது வேறு ஒரு இடத்தில் வாழ்ந்து வருவதாகச் சொன்னார். இருட்டிய பின்பே வெளியே திரிவதாகவும், தற்போது வேலைக்கு சென்றுகொண்டிருப்பதாகவும்  கூறினார்.

அவர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர். நோர்வேயில் வதிவிட அனுமதியும், அகதி அந்தஸ்தும் மறுக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேறும்படி அறிவிக்கப்பட்டவர். முன்பு நான் சந்திக்கும் போதே இது பற்றி அவர் கூறியிருந்தார். இருப்பினும் தனது மூன்றாவது விண்ணப்பம் பரிசீலனையில் இருப்பதால் அந் நாட்களில் அவருக்கு வதிவிட அனுமதியிருந்தது. அவரின் நண்பர்களாக சில மலையத்தவர்களும் அவருடன் இருந்தார்கள். அவர்களில் சிலரர் வதிவிட அனுமதி மறுக்கப்பட்டவர்கள். எனவே தொடர்ந்து ஒரேயிடத்தில் தங்குவதை தவிர்த்து வந்தார்கள். அவர்கள் அனைவரும் தொழில் அனுமதிப்பத்திரம் இல்லாதவர்களாகையால் இரகசியமாகவே தொழில் புரிந்தனர். அவர்களின் சம்பளங்களும் உரிமைகளும் சராசரிச் சம்பளத்தை விட மிகவும் குறைவானதாகவும், எவ்வித உரிமைகள் அற்றதாகவுமே இருந்தன. இப்படியான தொழில்களை தெரிவு செய்வதை விட அவர்களுக்கு வேறு வழியிருக்கவில்லை.

நான் குறிப்பிடும் நண்பர் அவரது குடும்பச்சொத்தான வீட்டை ஈடுவைத்த பணத்திலேயே இங்கு வந்துள்ளார். அவருக்கு 30 - 33 வயதிருக்கலாம். திருமணமாகாதவர். தனது சகோதரியின் திருமணத்திற்கு முன் வீட்டை மீட்டு கொடுக்கவேண்டும் என்பதில் கருத்தாயிருந்தார். வீட்டையே இன்னும் மீட்கவில்லை, அதற்கிடையில் நாட்டைவிட்டு வெளியேறும்படி உத்தரவு வந்திருக்கிறது. ஊரிலேயே இருந்திருக்கலாம் வீடாவது மீதமிருந்திருக்கும் என்றார். சகோதரியின் திருமணம், தனது வாழ்க்கை, தாயாரின் உடல்நிலை என்று அவரின் பேச்சு அலைந்துகொண்டிருந்தது. மன அமைதியை முற்றிலும் இழந்து அமைதியற்றவராயிருந்தார்.

தற்போது ஒரு இடத்தில் தொழில் புரிவதாகவும் மிகவும் கடினமான வேலை, சம்பளம் மிகக் குறைவு என்றும், தன்னை போலீஸ் தேடுவதை ஏனையவர்கள் அறிவதை அவர் விரும்பாதிருந்தார். சில இடங்களில் சிலருக்கு இரண்டு, மூன்று மாதங்கள் சம்பளம் கொடுக்கப்படாமல் அவர்கள் போலீசில் காட்டிக்கொடுக்கப்பட்டு அவரவர்களின் நாடுகளுக்கு திருப்பியனுப்பப்பட்டுள்ளதை அவர் அறிந்திருந்தார். நானும் இது பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன். நான் அறிந்த சம்பவத்தில் 6 மாத சம்பளம் கொடுக்கப்படாமலே அவர் காட்டிக்கொடுக்கப்பட்டதாகப் பேசிக்கொண்டார்கள்.

நோர்வேயில் இருப்பது ஆபத்தானது என்பதால் போர்த்துக்கல் சென்று அந்நாட்டு வீசா பெற்றுக்கொண்டால் மீண்டும் இங்கு திரும்பவரலாம் என்று ஒருவர் கூறுவதாகவும் அது பற்றி ஏதும் எனக்கு தெரியுமா என்றார். இல்லை, ஆனால் விசாரித்துப் பார்க்கலாம் என்றேன். ஆனால் போர்த்துக்கல் வீசா எவ்வாறு கிடைக்கும் என்று எனது கேள்விக்கு அவரிடம் பதில் இருக்கவில்லை. மாறாக ஒரு பாக்கிஸ்தானியர் 30000 குறோணர்கள் தந்தால் போர்த்துக்கல் வீசா பெற்றுத்தருவதாகக் கூறுகிறார், என்றார். என்ன செய்யப்போகிறீர்கள் என்றதற்கு ஒரு  பெருமூச்சொன்றே பதிலாய்க் கிடைத்தது. மௌனத்தில் கடந்து போனது சில கணங்கள். வேறு வழி இருப்பதாகத் தெரியவில்லையே என்ற போது அவர் குரல் தளுதளுத்திருந்தது. என்னால் ஏதும் பேச முடியவில்லை. ”ஏதோ யோசித்துச் செய்யுங்கள்” என்று கூறி விடைபெற்றுக்கொண்டேன். கும்மிருட்டினுள் கரைந்து போனார் அவர். இருட்டு அவருக்கு பழக்கப்பட்டது போல் இருந்தது. இருட்டும் அவரை விழுங்கிக்கொண்டது.

வீசா, தங்குமிட அனுமதி, இந் நாட்டுப் பிரஜை, நிரந்தரத் தொழில் என்று பல வசதிகள் உள்ள நான் எனது வலிகள் தாங்கமுடியாதவை என்று புலம்பிக் கொண்டிருக்கும் போது, வாழ்வாதாரமே இன்றி, இருட்டின் துணையுடன் வாழும் அவர், எனக்கு எதையோ உணர்த்திப்போனது போலிருந்தது. அது பற்றி சிந்தித்தபடியே வீதி வெளிச்சத்தில் நடக்கத் தொடங்கினேன்.

இன்றைய நாளும் நல்லதே!

ரகசியத்தின் ரகசியம்

மனிதர்களுடன் பழகும்‌போது மனம் திறந்து பழகுவது என்பது இலகுவானதன்று. என்னால் நண்பர்கள் எல்லோரிடமும் எல்லாவற்றையும் பகிர்ந்து கொள்ளமுடிவதில்லை. என்னுடன் பழகும் பலர் தங்கள் வேதனைகளை, சோதனைகளை, இ‌ரகசியங்களை என்னுடன் பகிர்ந்து கொள்கிறார்கள். சிலர் பழகி சில நிமிடங்களிலேயே அவர்களது மனப்பாரங்களை என் முதுகில் ஏற்றிவிடுகிறார்கள். அவர்களின் மனப்பாரங்கள் என்றும் எனக்கு சுமையாய் இருந்ததில்லை. பகிர்பவருக்கும், பகிரப்பட்ட எனக்கும் அது ஒருவித ஆறுதலையே தருகிறது.

அண்மையில் ஒரு வயதான நோர்வஜியப் பெண் ஒருவர் கணணி திருத்த அழைத்தார். அவருக்கு 70 வயதிருக்கலாம். அவரின் கணணி திருத்தவேலை ஏறத்தாள 10 நிமிடங்களில் முடிந்ததும் ´தேனீர் அருந்திப் போ´ என்றார். அந்த தேனீர் அருந்தி நான் அவரிடம் இருந்து புறப்பட ஏறத்தாள ஒன்றரை மணிநேரமாகியது. விடுமுறைக்கு ஒரு நாட்்டுக்கு சென்றிருந்த அவரின் மகள், பாலியற் துஸ்பிரயோகத்தின் பின் கொலைசெய்யப்பட்டு சாலையோரத்தில் வீசப்பட்டிருந்த கதையை அவர் பகிர்ந்து கொண்டார். இருபது வருடங்களுக்கு மேலாகியும் அந்நினைவுகளில் இருந்து விடுபட முடியாதிருக்கிறார். நெருங்கிய உறவினரைத் தவிர வேறு ஒருவரிடமும் இதைப் பற்றி பேசியதில்லை என்றும் பேசினால் அவர்களின் ஆயிரம் குறுக்குக் கேள்விகளுக்கு பதில் கூறமுடியாதிருக்கிறது என்றார்.

என்னுடன் பேசுபவர்களிடம் நான் கதை புடுங்குவதில்லை. அதே போல் அவரிடமும் எதுவும் பேசாதிருந்தேன். ம் ம் என்பதைத் தவிர எதையும் கூறத்தோன்றவில்லை எனக்கு. அவரையே பார்த்திருந்தேன். கண்கலங்கி முமுக்கதையையும் கூறிய போதும் என்னால் ஏதும் பேசத் தோன்றவில்லை. அமைதியாய் உட்கார்ந்திருந்தோம். பல வேளைகளில் மௌனத்தின் மொழி பேசப்படும் வார்த்தைகளை விட ஆழமானதாய் இருக்கும் என்பதை அங்கு உணர்ந்தேன்.

நானும் என் ரகசியங்களை சிலரிடம் பகிர்ந்ததுண்டு. சிலரைப் பார்த்ததும் இவரை நம்பலாம் என்று மனதுக்குள் ஒரு நம்பிக்கை எம்மையறியாமலே வந்து உட்கார்ந்துவிடுகிறது. நெருக்கமான நட்போ, உறவோ அற்ற ஒரு சிலருடன் எனது வாழ்க்கையின் சில பக்ககங்களை பகிர்ந்திருக்கிறேன். அவர்களைப் பற்றி என் மனது கணித்தது சரி என்பது போலவே அவர்களின் நடவடிக்கைகளும் இருக்கின்றன.

ரகசியங்களுக்குள் இருக்கும் சுமை மிகப் பெரியது. அதை சுமந்து திரிபவர்களை அது மழைநீரில் கரையும் மணலைப் போன்று மெது மெதுவாக அரித்துக்கொண்டேயிருக்கிறது. நானும் எனது ரகசியங்களை என்னுள்ளேயே சுமந்துதிரிந்த காலங்களில் அந்தச் சுமையை உணர்ந்திருந்தேன். முதல் முதல் ஒருவரிடம் அதை பகிர்ந்து கொண்ட அன்று உடலின் பாரம் காற்றைப்போலிருந்தது. தூக்கமற்று அலைந்த மற்றைய நாட்களைவிட நன்றாகத் தூங்கினேன், அன்று.
மற்றவர்களின் ரகசியங்களை அறிந்துகொள்வதற்கான ஆாவம் மனிதர்களுக்கிடையில் வற்றாத கிணற்றின் ஊற்றைப்போன்று ஊறிக்கொண்டே இருக்கிறது. தங்கள் ரகசியங்களை மற்றவர்கள் அறியக்கூடாது என்று நினைப்பதும், சிலர் மற்றவர்களின் ரகசியங்களை அறியத் துடிப்பதும் ரகசியத்தின் விசித்திரங்கள். ரகசியங்களின் பொழுது இரவாயிருக்குமோ என்றும் எண்ணத் தோன்றுகிறது.

பலர் தங்களின் அளப்பெரிய தியாகங்களைக் கூட அவர்களின் மரணங்கள் வரை அல்லது அதற்குப் பின்னும் இரகசியமாகவே வைத்திருக்கிறார்கள். தங்களின் ஏமாற்றங்களை, ஏற்படுத்தப்பட்ட பச்சைத் துரோகங்களை ”அன்பு” என்னும் வார்த்தைகளினூடாக ஏற்றும், மன்னித்தும் வாழ்ந்து போகிறார்கள். இவர்களைப் போன்றவர்களால் தான் உலகத்தில் அன்பு இன்னும் வாழ்ந்துகொண்டிருக்கிறது என்பேன் நான். பார்க்க பகிரப்படாத குடும்பரகசியம். என்னால், அவர்களைப் போல் துரோகங்களை மன்னித்து மறக்கும் தன்மை இன்றுவரை இல்லாதிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

ரகசியங்களிலும் பல விதங்கள் இருக்கின்றனவோ என்றே எண்ணத் தோன்றுகிறது. ரகசியங்கள் குழந்தைப்படருவத்தில் இருந்து நாம் முதியவர்களாகி இறக்கும் வரையில் எப்போதும் உருவாகக்கூடியவை. எனக்கும் எனது மகள் காவியாவுக்கும் ஒரு ரகசியம் இருந்தது. நாம் வாழ்திருந்த மலைப்பிரதேசத்தில் எமது வீட்டில் இருந்து 10 நிமிட நடைத் தூரத்தில் ஒரு நீர் அருவியும், அதில் இருந்து வழிந்தோடும் சிறிய ஆறும் இருந்தது. வீட்டிற்கு அருகில் இருப்பதால் மகள் தனியே அங்கு போய்விடுவாள் என்ற பயம் தாயாருக்கு. எனவே அடிக்கடி அங்கு போவதை நாம் தவிர்க்கவேண்டியதாயிற்று. என்னுடன் தனியே வெளியே வரும் போதெல்லாம் அடிக்கடி அங்கு செல்வோம். அம்மாவிடம் சொல்வதில்லை என்று எமக்குள் ஒப்பந்தம். ஆற்றருகில் குந்தியிருந்து கல் வீசுவதில் இருந்து என் கையை இறுகப்பற்றியவாறே நீர் பருகுவதும், கால் நனைப்பதும் என்று சில காலம் எமது ரகசியம் காப்பாற்றப்பட்டிருந்தது. பின்பொருநாள் அது ரகசியமற்றுப் போனது.

எனது பதின்மவயதில் இருந்து பல இரகசியங்கள் என்னுடன் இன்றும் வந்துகொண்டேயிருக்கின்றன. அவையொன்றும் ராணுவ ரகசியங்கள் அல்ல.  எனது நண்பன் ஒருவனுக்கு எமது ஆசி‌ரியை ஒருவரில் பருவக்கவர்ச்சி வந்தது தொடக்கம், தான் ”கப்பலில் வேலைக்கு” போவதை காதலி விரும்பாததால் அதை அவளிடம் சொல்லாதே என்ற நண்பனின் ரகசியங்கள் வரை இன்றும் பல பதின்மகாலத்து ரகசியங்கள் என்னுள் இருக்கிறன்றன.

ரகசியங்களில் சில ரகசியங்கள் வெளியில் பகிரப்படவே முடியாதவையாகவும் இருக்கின்றன. உற்ற நண்பர்களிடமும் பகிரமுடியாமலும் அவற்றின் கனம் தாங்கமுடியாலும் பலர் இருக்கிறார்கள். அண்மையில் திருநங்கைகளின் வாழ்வு பற்றிய ” வாடாமல்லி” புத்தகம் படிக்கக்கிடைத்தது. திருநங்கைகளை உள்ளடக்கிய குடும்பங்களின் மனநிலையை, அவமான எண்ணங்களை, பாசத்துக்கும் சமுதாயத்திற்கும் இடையிலான போராட்டத்தை மிகவும் அற்புதமாக எழுதியிருந்தார் சு. சமுத்திரம்.

இதே போன்றதே ஓர்பால் உறவும். இதுபற்றி வெளிநாடுகளில் வாழும் எம்மவர்களி‌டையேயே விரிவான பார்வை இல்லாதவிடத்து இலங்கையில் இந்தியாவில் இவர்களின் நிலையை நினைத்துப்பார்க்கவே முடியாதிருக்கிறது. இப்படியான ஒரு ரகசியத்தை வாழ்நாள் முழுவதும் சுமந்து திரிபவரின் மனநிலைகள், இதைப்பற்றி அறிந்த குடும்பத்தவரின் மனநிலைகள் பற்றி பலரும் சிந்திப்பதேயில்லை. ஒருபால் உறவு என்பதை ஏதோ கொலைக்குற்றம் போன்றல்லவா நாம் பேசித்திரிகிறோம். அவர்களும் மனிதர்கள் என்பதையும் மறந்து போகிறோம். நாம் பேச விரும்பாத, பேசத் தயங்கும் விடயங்களை பேசும் போதும், சமுதாய மாற்றங்களை உள்வாங்கும் போதும் இப்படியான ரகசியங்களைச் சுமந்த வாழ்பவர்களின் வாழ்வு சற்று இலகுவாகிப்போகும் என்றே எண்ணுகிறேன்.

சில உறவுமுறைகளும் ரகசியங்களை சுமக்கமுடியாமல் சுமந்துகொண்டிருக்கின்றன. சட்டத்தின் பார்வையில் சரியாக இருப்பினும் சமுதாயத்தின், கலாச்சாரத்தின் பார்வையில் தவறு என்பதால் தங்களின் உறவுகளை ரகசியமாகப் பேணுபவர்களும் இருக்கிறார்கள். இதற்கு உதாரணமாய் நான் அறிந்த, தன் தந்தை வழி வந்த ஒருவரை காதலித்த பெண்ணும், அந்த ஆணும் அனுபவித்த துன்பங்களும், ஏளனங்களும், அலட்சியப்படுத்தல்களும் இருக்கின்றன.

யுத்தகாலத்தில் தமக்கேற்பட்ட அவமானங்களை வெளியில் பேசமுடியாது, அவ் இரகசியங்களின் கனம் தாங்காது மனநோய் கண்டவர்களும், மனஉளைச்சல் கொண்டவர்களும் எம்முடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். சமூகத்தின் மேல்மட்ட மனிதர்களின் வாழ்வில் கூட துரோகம், பொய், ஏமாற்று, கொலை என்று பலவித ரகசியங்கள் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.
எல்லோரிடத்திலும் ரகசியங்கள் உண்டு. ரகசியங்களை காப்பாற்றுவதும் ஒரு வித ரகசியம் தான். எம்மில் பலர் மனதின் பாரத்தை யாரிடமாவது இறக்கி வைப்பதற்காக அலைந்துகொண்டிருக்கிறோம். எங்களின் பாரங்களை யாரிடமாவது இறக்கிவைத்து,  தாங்கொணா கனத்துடன் அலையும் மற்றவரின் சுமைகளையும் இறக்கிவைக்க முயலுவோம், வாருங்கள்.

இன்றைய நாளும் நல்லதே!


விதிக்கப்பட்ட பயணங்களும் ஒரு பயணியும்

பயணங்கள் என்பது தவிர்க்க முடியாதவை. சிறு பயணங்கள், குறும் பயணங்கள் தொடக்கம் நீண்ட பயணங்கள் என்று மனிதர்கள் தினமும் பயணித்துக்கொண்டே இருக்கிறார்கள். எனது பயணங்களில் எனக்கு 5 - 6 வயதான காலங்களில் பெற்றோருடன் புகையிரதத்தில் பயணம் செய்ததே, எனது நினைவுகளில் உள்ள முதற் பயணமாகும். எனது பெற்றோர்கள் அரச ஊழியர்களாக இருந்ததால் வருடத்தில் மூன்று தடவைகள் இலவசமாக புகையிரத்தில் பயணிக்கலாம்  என்ற அரச சலுகை இருந்தது. அச் சலுகையை நாம் பயன்படுத்திக்கொள்ளும் போது  புகையிரத்தில் உள்ள தூங்கும் வசதியுள்ள அறையிலேயே பயணிப்போம்.

எப்போதும் நான் மேலே உள்ள படுக்கையில் படுக்கவே விரும்புவேன். அப்பா தனது ”சுந்தரலிங்கம் சுருட்டுடன்” ஜன்னலோரத்தில் இருப்பார். அம்மாவிடம் தம்பியிருப்பான். அப்பா தண்ணீர் எடுப்பதற்காக இறங்கினால் புகையிரதம் புறப்படும் வரை தண்ணீர் பிடித்தபடியே இருப்பார். புகையிரதம் புறப்பட்டு வேகமெடுக்குமுன் ஓடிவந்து ஏறுவார். அந்நேரங்களில் அப்பாவை விட்டு விட்டு புகையிரதம் சென்றுவிடுமோ என்று பயந்திருப்பேன். ஆனால் அம்மா மட்டும் இதைப் பற்றி கவலைப்படாது தனது வேலைகளில் மூழ்கியிருப்பார். கடதாசித் துண்டுகளை சிறிய சிறிய துண்டுகளாகக் கிழித்து ஓடும் புகையிரதத்தின் ஜன்னலினூடாக  பறக்கவிட்டபடியே கடந்த போன அந்தப் பயணங்கள் மிக அழகானவை.

பாடசாலை நாட்களில் இலங்கைச் சுற்றுலா சென்ற பயணம் இன்றுவரை பசுமையாய் நினைவிருக்கிறது. ஹட்டன் குளிரில் அதிகாலையில் குளித்ததும், மலைநாட்டு பஸ்பயணத்தின் போது எடுத்த வாந்திகளும், பொலன்நறுவை சிலைகளும், குண்டசாலை விவசாயப்பண்ணையும் என்று அந்த சுற்றுலா என் மனதில் தனது நினைவுகளைச் செதுக்கியிருக்கிறது. ஓடிச்செல்லும் ஆற்றின் கரையில் முளைத்திருக்கும்  பசுமையான புற்களைப் போல் பயணங்கள் எனக்குள் பலவிதமான அனுபவங்களை தந்து போயிருக்கின்றன.

பயணங்களின் போதுதான் நான் அதிகமாகமாய் கற்றுக்கொள்கிறேன். என்னை என்னால் புரிந்து கொள்ளமுடிகிறது. எனது பலங்களும் பலவீனங்களும் கற்பிக்கப்படுகின்றன. 1985ம் ஆண்டில் ஒரு நாள் ஒரு புகையிரத நிலையத்தில் இரவைக் கழிக்க நேர்ந்தது. தனியே சிங்களவர்கள் மட்டும் வாழும் இடம். நானும் இன்னுமொரு வளர்ந்த தமிழரும் மட்டுமே தமிழர்கள். அவருக்கு ஏறத்தாள 50 - 55 வயதிருக்கலாம். அங்கு தங்கியிருந்த ஏனையவர்கள் சிங்களவர்கள். இரவு 10 மணிபோல் போலீஸ் வந்து எவரும் புகையிரத நிலையத்தில் தங்கயிருக்க முடியாது என்றும் வெளியே செல்லுமாறும் பணிக்கப்பட்டோம். எங்கு செல்வது என்று எமக்குப் புரிவவில்லை. சிங்களவர்கள் புத்தவிகாரைக்குச் சென்றனர். நாம் இருவரும் மட்டும் புகையிரதநிலையத்துக் வெளியே நின்றிருந்த போது புகையிரதநிலைய கடைநிலை ஊழியர் ஒருவர் எம்மை தனது வீட்டுக்கு அழைத்துப் போனார்.

கனத்த இருட்டில் ஒரு ஒற்றையடிப்பாதையூடாக அவர் முன்னே நடக்க நான் இரண்டாவதாயும், மற்றையவர் மூன்றாவதாயும் நடந்து கொண்டிருந்தோம். எனக்கு சிங்களம் தெரிந்திருந்ததால் நானே அவருடன் பேசிக்கொண்டிருந்தேன். மற்றயவரோ சிங்களம் என்பதை மருந்துக்கும் அறியாதவராய் இருந்தார். அவருக்கு அந்த சிங்களவர் மேல் நம்பிக்கை இருக்கவில்லை. இருப்பினும் வேறு வழி இல்லாததால் எம்மை பின்தொடந்துகொண்டிருந்தார். சிங்களவங்கள் இரவைக்கு பூந்து வெட்டினாலும் வெட்டுவாங்கள் என்று சந்தேகப்பட்டார். அவரை நான் அறுதல் படுத்தவேண்டியிருந்தது.

சிறிது நடையின் பின் அவரின் ஓட்டைக் குடிசைக்கு வந்தோம். அவர் தனியே வாழ்ந்திருந்தார். குடிசையின் அருகே தண்ணீர் கிடங்கு இருப்பதால் இரவில் அவதானமாக நடமாடவும் சொன்னார். அப்படியானதோர் இடத்தில் நான் அதற்கு முன்பும், அதற்குப் பின்பும் தங்கவில்லை. ரொட்டி சுட்டுத் தந்தார். அமிர்தமாய் இருந்தது எனக்கு.  மற்றையவரை நோக்கி பெருவிரலை வாய்க்குள் விடுவது போல சைகையில் கேட்க, மற்றவர் தலையாட்ட அவர்கள் இருவரும் இருட்டுக்குள் கரைந்து போயினர். நான் நூளம்புகளுடன் தூங்கிப்போனேன். திடீர் என இருவர் பேசுவது கேட்க தூக்கம் கலைந்து பார்க்கலானேன். அவர்கள் இருவரும் குசையின் வெளியே எதையோ குடித்தபடி  ஒருவர் தமிழிலும் மற்றையவர் சிங்களத்திலும் சில ஆங்கில சொற்களுடனும் தமது நட்பின் அன்னியோன்யத்தை பகிர்ந்து கொண்டிருந்தார்கள்.ஒரே பீடியையும் பகிர்ந்து கொண்டார்கள். அங்கு ஒரு ஐக்கிய இலங்கை உருவாகிக்கொண்டிருந்தது.

மறுநாள் காலையில் ரொட்டியும், பிளேன் ‌ டீயும் கிடைத்து. தன்னிடம் இருந்த சிறியதையும் அவர் பகிர்ந்துகொண்டது எனக்கு ஆச்சர்யமாக இருந்தது.  அவரின் உபசரிப்பில் உண்மையின் வாசனை இருந்தது.

நாம் விடைபெற்றுக்கொண்ட போதும் அவர்கள் இருவரும் நண்பர்களாக இருந்தனர். நேற்றிவு அவருக்கு இருந்த சந்தேகங்கள் தீர்ந்திருந்தது போலிருந்தது. அவர் ” இந்த மனிசன் நல்ல மனிசன்” என்று அந்த சிங்களவரைப் பார்த்த கூறியபோது இருவரும் புன்னகைத்துக்கொண்டனர்.

இன்றும், என்னுள் இருக்கும் மறக்கமுடியாத பயணமாக இருக்கிறது அந்த இரவும், அவ்விரவின் நிகழ்வுகளும். உபசரிப்பது என்பது மனது சம்பந்தப்பட்டது என்பதை உணர்த்திய பயணம் அது.

பதின்மக்காலத்தில் ஒரு முறை நண்பனின் குடும்ப நண்பர் ஒருவருடன் அயித்தியமலை கோயில் திருவாழாவிற்குச் சென்றிருந்தோம். காட்டுப்பிரதேசத்தில் அமைந்திருக்கும் கோயில். பல மணிநேர பயணம். எம்மை அழைத்தச் சென்றவர் போன்றதொரு நகைச்சவையாளனை நான் இன்றுவரை சந்தித்ததில்லை. மிகவும் உயர்ந்த பதவியில் இருந்தார். அவருக்கு ஜீப்  ‌கொடுத்திருந்தார்கள். சாரதியும் இருந்தார். எமக்கும் அவருக்கும் ஏறத்தாள 20 வயது வித்தியாசம் இருக்கும். இருப்பினும் அவரது நகைச்சுவையான பேச்சும், செயல்களும் அவரது வயது வித்தியாசத்தை இல்லாது செய்திருந்தது. அந்த இரண்டுநாட்களும் வயிறு வலிக்க வலிக்கச் சிரித்தோம். அந்த இரண்டுநாட்களையும் நானும் எனது நண்பனும் இன்னும் மறக்கவில்லை. பிற்காலங்களில் அவர் கடந்து வந்த வேதனைகளை, துன்பமான வாழ்க்கையைப் பற்றி வேறு சிலர் கூறிய போது நகைச்சுவையால் தனது வலிகளை மறந்தும் மற்றையவர்களை மகிழ்ச்சிப்படுத்தியும் போகிறார் அவர் என்று புரிந்து கொண்டேன். அந்தப் பயணமும் வாழ்க்கையின் வலிகளை கடக்கும் வழிகளைத் கற்றுத் தந்தது.

 பயணங்கள் திட்டமிட்டவையாக இருக்கவேண்டும் என்ற அவசியமில்லை. திடீர் திடீர் பயணங்கள், எதிர்பாரத பயணங்கள் விறுவிறுப்பைத் தருவது மட்டுமல்ல மனதுக்கு பல விதமான அனுபவங்களைத் தரக்கூடியவை.

ஒரு நாள் மதியம் எனது குழந்தைகளுடன் விளையாடிக்கொண்டிருந்தபோது தொலைபேசியில் அறிமுகமானவர் ஒருவரின் குழந்தை சுகயீனம் கொண்டுள்ளதாகவும்,  உதவிக்கு வருமாறும்  கேட்டக்கொள்ளப்பட்டேன். அவர்கள் வீடு சென்றபோது வைத்தியர் குழந்தையை மிக அவசரமாக வைத்தியசாலையில் அனுமதிக்க வேண்டும் என்றார். குழந்தையுடனும்,  தகப்பனாருடனும் அவசர சிகிச்சைக்கான ஹெலிகாப்படரில் பயணப்படவேண்டிவந்தது. அந்தப் பயணம் ஏறத்தாள 10 நிமிடங்கள் மட்டுமே. இருப்பினும் உயிருக்கு போராடும் குழந்தைக்கு முன் தந்தையின் நிலை எப்படி இருக்கும் என்பதை அறிந்து கொண்டேன். தன்நிலை மறந்து, சுய நிலை இழந்து, உணர்ச்சிகளின் கொந்தளிப்பில், பேச்சிழந்து, வாய் குளறி,  கண்ணீர் வழிந்தோட மகனின் பெயரை அரற்றியபடியே நின்றிருந்தார் அவர்.  நெஞ்சை உலுக்கிய பயணம் அது.


இயற்கையுடனான ஒரு அலாதியான அனுபவத்தை தந்த பயணம் நான்  வடக்கு நோர்வேயில் கல்விகற்றிருந்த நாட்களில் நடந்தது. ”இயற்கையும் புகைப்படக்கலையும்” என்னும் துறையில் கல்விகற்றுக்கொண்டிருந்த காலம் அது.

வட துருவத்தில் பனிக்காலங்கள் மிகவும் கடினமானவையாக இருக்கும். ஒரு முறை 5 நாட்கள் நாம் மலைப்பகுதியில் பயணிக்க நேர்ந்தது. எமது குழுவில் ஏறத்தாள 15 பேர். 15  பனியில் சறுக்கும் வண்டிலை இழுக்கும் நாய்கள். மனிதர்களுக்கும் நாய்களுக்கும் 5 நாட்களுக்கு தேவையான பொருட்களுடன் புறப்பட்டோம். பனிச்சறுக்கும்,  பனிநாய்கள் இழுக்கும் வண்டில் ஓட்டமும், பனியில் அவசர நேரங்களில் உயிரைக் காப்பாற்றிக்கொள்வது எப்படி என்ற வகுப்புக்களும், திறந்த வெளியில் லாவூ என்னும் கூடாரத்தினுள் குளிர்ப்பையினுள் உறங்குவதும், ஐஸ் படிந்து போன ஆற்றில் மீன் பிடிப்பது எப்படி என்றும் புதிய புதிய, வாழ்வில் மறக்கமுடியாத இயற்கையனுபவங்களை தந்த பயணம் அது.  

எல்லாவிதமான பயணங்களும் மகிழ்ச்சியாக அமைந்திருந்தன என்றில்லை. ஒரு முறை  பயணத்தின் போது புகைப்படம் எடுத்ததற்காக கைது செய்யப்பட்டேன். என்னை மிகவும் வருத்திய பயணம் அது. வழக்கை போலீசாரே மீளப்பெற்ற பின்பே மனம் அமைதியாயிற்று. மன அமைதியற்ற பயணங்கள் எவ்வளவு கொடுமையான அனுபவத்தை தரும் என்பதை நான் அறிந்து கொண்டதும் அந்தப் பயணத்தின் போது தான்.

தினமும் பயணங்களுடனேயே வாழ்ந்து கொண்டிருக்கிறேன். நிலக்கீழ்தொடரூந்து பயணங்கள் தினம் தினம் புதிய அனுபவங்களை  தந்து போகிறது. அண்மையில் ஒரு நாள் நிலக்கீழ்தொடரூந்தில் பயணித்துக்கொண்டிருந்தேன். ஒரு சிறுமி தாயின் பின்னால் மறைந்திருந்து என்னைப் பார்த்து பார்த்து நட்பாய் புன்னகைத்தபடியே நின்றிருந்தாள். அவள் யார் என்று எனக்குப் புரிய சற்று நேரமெடுத்தது. சில வாரங்களுக்கு முன்பு ஒரு விழாவின் போது முன்பின்னறியாத என்னுடன் நட்பாகி பல மணிநேரங்களாக என்னிடம் வருவதும் போவதும், விளையாடுவதுமாய் இருந்தவள் அவள். எனது மடியில் அமர்ந்து தனது தொலைபேசியில் படம் வேறு எடுத்தாள், அவ் விழாவின் போது. அவளைப் பார்த்துப் புன்னகைத்தேன். கண்ணைச்சுருக்கி, அழகாய் வெக்கப்பட்டு, மெதுவாய் புன்னகைத்து தாயின் பின் மறைந்து கொண்டாள். அவளாள் அன்றைய பயணமும் பேரின்பப் பயணமாகிப்போனது.

பயணங்கள் எப்போதும் எதையாவது கற்பித்தபடியே என்னை தன்னுடன் அழைத்துப் போய்க்கொண்டேயிருக்கின்றன.  நானும் காற்றில் பறக்கும் சருகினைப்போல் வாழ்க்கைப் பயணத்தில் பயணித்துக்கொண்டிருக்கிறேன். எனது பயணங்கள் முடியும் வரை நான் பயணித்தக்கொண்டே இருக்கவேண்டும் என்று விதிக்கப்பட்டிருக்கிறது, எனக்கு.
எனக்கு மட்டுமல்ல, உங்களுக்கும் தான்.

உங்கள் பயணங்கள் அழகாயிருக்கக் கடவதாக!

கட்டிப்புடி வைத்தியம்

அண்மையில் ஒரு நாள் காலை நோர்வேயின் மிகப்பெரிய வைத்தியசாலைக்கு செல்ல வேண்டியேற்பட்டது. எனக்கு மிகவும் பழக்கமுள்ள சிறு குழந்தையொன்று கடந்த சில நாட்களாக அங்கு அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுகிறாள். அவளைப் பார்ப்பதற்காகவே வைத்தியசாலைக்கு சென்றிருந்தேன்.

பால்ய காலத்தில் இருந்து வைத்தியசாலைகளுடன் எனது உறவு நெருக்கமாய் இருந்திருக்கிறது. இதற்கு எனது தாயார் வைத்தியராக இருந்தது முக்கிய காரணமாயிருக்கலாம். கடந்த சில வருடங்களாக நானும் ஏதோ ஒரு விதத்தில் தவறாது வருடத்துக்கு ஓரிரு தடவைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுக்கொண்டேயிருக்கிறேன். ஆக புலம் பெயர்ந் பின்பும் வைத்தியசாலைகளுடனான உறவு தொடர்ந்து கொண்டேயிருக்கிறது.

வைத்தியசாலைக்கு பார்வையாளராயோ, நோயாளியாயோ, தொழில் நிமித்தமோ செல்லும் போது ஏற்படும் உணர்வுகள் வித்தியாசமானவை. பார்வையாளனாய் செல்லும் நேரமே எனக்கு சிரமமானதாய் இருக்கிறது. இந் நேரங்களில் எனது சிந்தனைகள் காணும் காட்சியை அடிப்படையாக வைத்து மாறிக்கொண்டேயிருக்க, அதற்கேற்ப மனநிலையும் மாறிக்கொண்டிருக்கும். ஒரு குழந்தை பிறக்கும் நிகழ்வில் இருந்து மரணம் வரை மகிழ்ச்சியான நேரங்களும், வேதனையான வேதனையான நேரங்களும் வைத்தியசாலைகளில் உண்டல்லவா?

எனது நினைவில் இருக்கும் முதல் வைத்தியசாலை பயணம் கொழும்பில் நடந்தது. அப்போ எனக்கு 7 வயதிருக்கும். எனது தாயாருக்கு தாடையில் ஒரு சத்திரசிகிச்சை செய்திருந்தார்கள். வைத்தியசாலைக்கு தாய்மாமாவுடன் சென்றிருந்தேன். எனது தாயார் அயர்ந்து தூங்கிப்போயிருந்தார். நானோ அவர் இறந்துவிட்டார் என்று ஆர்ப்பாட்டம் பண்ணியதும் என்னை சமாதானப்படுத்த எனது தாயை அவர்கள் எழுப்பவேண்டியிருந்தது. இன்றும் அவ் வைத்தியசாலையின் வாசனைக‌ளும், பளுப்பு நிற துருப்பிடித்த கட்டில்களும், உயரத்தே தூசு படிந்த சிலந்திவலைகளுடன் இருந்த காற்றாடிகளும் மங்கிப்போன சித்திரங்கள் போன்று இன்னும் நினைவில் இருக்கின்றன.

எனது தந்தை மாரடைப்பின் காரணமாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு நாள் மதியம் போல் அப்பாவை பார்ப்பதற்குச் சென்றிருந்தேன். ஏறாவூரில் இருந்து பஸ் எடுத்து மட்டக்களப்பு சென்று ‌வைத்தியசாலைக்குள் புகுந்து அப்பாவின் வார்ட்க்குள் நுளைகிறேன் அப்பாவை சுற்றி டாக்டர்களும், தாதிகளும் நின்றிருந்தனர். அம்மா அப்பாவின் கால்மாட்டில் நின்றிருந்தார். அம்மாவிடம் சென்ற போது அம்மா என்னை அணைத்துக்கொண்டார். அப்பாவோ மூச்சு விடுவதற்கு சிரப்பட்டபடியே தலையை மேல் நோக்கி துக்கியபடி சுவாசிப்பதற்கு காற்றை தேடிக்கொண்டிருந்தார். அம்மா, அப்பா எங்களை விட்டு போகப்போகிறார் என்றார். டாக்டர்கள் அப்பாவின் நெஞ்சில் கையைவைத்து அவரை மூச்சு எடுக்கவைக்க முயற்சித்துக்கொண்டிருந்தார்கள். அப்பாவோ இயக்கமின்றி படுத்திருந்தார். டாக்டர்களின் பதட்டத்தை அவர் பொருட்படுத்தியதாகத் தெரியவில்லை. துருப்பிடித்த காற்றாடி ஒன்று எங்கள் தலைக்கு மேல் சுற்றிக்கொண்டிருக்க, அம்மா அப்பா போயிட்டார்டா என்றார். எனக்கு புரிந்தது. வைத்தியசாலை ஊழியர் ஒருவர் அப்பாவின் பெருவிர‌ல்களை சேர்த்துக் கட்டி வெள்ளைத் துணியால் அப்பாவை முழுவதுமாக மூடினார்கள்.

இது தான் மரணத்தை நெருங்கியிருந்து பார்த்த சம்பவம். அதன் பின் பல நாட்கள் அப்பா மூச்சு எடுப்பதற்காய் நெஞசை உயர்த்தி உயர்த்தி காற்றை தேடிய காட்சி மனதில் ஓடிக்கொண்டிருந்தது.

இன்று வைத்தியசாலையில் அக் குழந்தைக்கு அறுவைச்சிகிச்சை என்று கூறப்படட்டிருந்ததனால் குழந்தை சோர்ந்து போயிருந்தாள். குழந்தையின் தாய் பெரும் பதட்டத்தில் இருந்தார். குழந்தையை பராமரிக்கும் தாதியர்கள் இருவர் அத் தாயையும் ஒரு குழந்தைபோல் பராமரித்ததை கண்டபோது நம்மூர் அரச மருத்துவமனை தாதிகளின் ஞாபகம் வந்து போன போது மனதுக்குள் ஏதோ நெருடிக்கொண்டிருந்தது. நோயுற்றவருக்கும், அவரின் உறவுகள், நட்புகளுக்கும் வைத்தியரின், தாதியர்களின் அன்பான வார்த்தைகளும், அவர்களின் துயரங்களை, சந்தேகங்களை கேட்டு, ஆறுதலாய் பதிலளிக்கும் தன்மையும் அவர்களின் துயரின் கனத்தை இலகுவாக்கிப்போகிறது. எத்தனை பெரிய படிப்பை மேற்கொண்டிருந்தாலும் ஒரு வைத்தியனால் நோயாளியின் மனதை புரிந்துகொள்ளாவிடின் அவர் ஒரு சிறந்த வைத்தியராகவே கடமையாற்றவே மு‌டியாது போகிறதல்லவா?.

நாம் நோயுறும் போது தான் எமது பதவி, பணம், பலம், கௌரவம், ஆணவம் அனைத்தையும் கடந்ததொரு இயலாமையை உணருகிறோம்.  பலருக்கும் ‌அவர்கள் நோய்மையுறும் போது ஒரு வித ஞானம் பிறக்கிறது. அதனாலோ என்னவோ வைத்தியசாலையில் அருகில்  உள்ளவரிடம் எம்மையறியாமல் ஒரு வித உறவை ஏற்படுத்திக்கொள்கிறோம். நோய்களைப்பற்றி பேசுகிறோம், ஒருவரை ஒருவர் ஆறுதல் படுத்திக்கொள்கிறோம். மொழிபுரியாத இரு நோயாளிகள் நட்புக்கொள்வதும், அவர்கள் ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வதும் நடக்கத்தான் செய்கிறது. அதுவும் அவர்களை நோய்மையின் வலிகளில் இருந்து மீட்டும் போகிறது போலவே உணர்கிறேன்.

1970 களின் இறுதியில் எனது தாயார் பிபிலை வைத்தியசாலையில் வைத்தியராகத் தொழில் புரிந்துகொண்டிருந்தார். நானும் தம்பியும் மட்டக்களப்பில் விடுதியில் தங்கியிருந்து பாடசாலைக்குச் சென்றுகொண்டிருந்தோம். பிபிலயைில் இருந்து 15 - 20 மைல் தூரத்தில் ஒரு தமிழ் முதியவர் சிங்களவர்களின் பிரதேசத்தில் ஒரு அம்மன் கோயில் கட்டி அதற்காகவே வாழ்ந்திருந்தார். அம் முதியவர் ஒரு முறை நோய்வாய்ப்பட்ட போது எங்கள் வீட்டிலேயே பல நாட்கள் தங்கியிருந்து அம்மாவிடம் சிகிச்சைபெற்றார். நான் விடுமுறைக்குச் சென்ற போது அவர் எப்போதும் தனக்குத் தானே பேசிக்கொண்டும், தேவாரங்களை பாடிக்கொண்டும் இருப்பார். என்னையழைத்து அம்மன் தனக்கு கனவில் தோன்றி தனக்கு ஒரு ”கோயில் கட்டு” என்று கட்டளையிட்டு, அதன் பின் அவர் எப்படி அந்த கோயிலை கட்டி முடித்தார் என்னும் கதையை தினமும் திரும்ம திரும்ப கூறிக்கொண்டேயிருப்பார். அவர்க்கு யாருடனாவது பேசவேண்டும் என்ன ஆசையிருந்து அதனால் தான் அக்கதையை திரும்ப திரும்ப சொல்லிலிக்கொண்டிருந்தாரோ என்று எண்ணத் தொன்றுகிறது. நோயாளிகளின் தனிமை மிகக் கொடியது.  தனிமை பல வித விகாரமான எண்ணங்களை ஏற்படுத்தவதால் நோய்மையின் வலியை, நிர்க்கதியான நிலையை தனிமை பல மடங்கு அதிகரித்துப்போகிறது போலவே உணர்கிறேன். அதனாலாயே நோயாளிகள் தனிமையை வெறுக்கின்றார்.

அதன் பின்னான காலங்களில் அவர்கள் குடும்பமும் எங்கள் குடும்பமும் மிகவும் நட்பாக இருந்தன. அப் பெரியவர் இறந்த போது அம்மாவும் நானும் மரணச்சடங்கில் கலந்து கொண்டோம். இன்று அம்மாவிடம் அவரைப்பற்றிக் கேட்டேன். அவருக்கும் அச் சம்பவம் சற்று நினைவில் இருந்தது. ஆனால் அவர்களுடனான தொடர்புகள் அற்றுப்போய்விட்டதாகக் கூறினார்.  நோய்யுறும் போது ஏற்படுத்தப்படும் உறவுகள் மேலோட்டமான உறவுகள் போலல்லாமல் ஆழமான உறவுகளை உடையதாக இருக்கின்றன என்றே எண்ணத்  தோன்றுகிறது.

வட மேற்கு நோர்வேயில் வாழ்ந்திருந்த காலங்களில் மனதுக்கு பிடித்தமான ஒரு வைத்தியர் இருந்தார். அவரிடம் பேசுவதே நோய்மையை குறைப்பது போலுணர்வேன். பல தமிழர்களும் அவரையே வைத்தியராகக் கொண்டிருந்தனர். 
 
ஒஸ்லோவுக்கு இடம் பெயர்ந்த பின் அண்மைக் காலங்களில் நானும் மன, உடல் உபாதைகளுடன் அடிக்கடி வைத்தியர்களை நாடிச் சென்று கொண்டிருக்கிறேன். இன்று வரை மனதுக்கு பிடித்தமான வைத்தி‌யர் கிடைக்கவில்லை. ஏனோ மனது நோயாளிகளின் மனதை உணர்ந்து, புரிந்து மருத்துவம் செய்யும் மருத்துவர்கள் அருகிக்கொண்டே போகிறார்கள் என்றே எண்ணத் தோன்றுகிறது. என் கணிப்பு பொய்த்துப்போகட்டும்.
 
 
 

எனக்குள் நோய்கள் பற்றிய சில சிந்தனைகளையாவது தூண்டிவிட்ட எஸ்.ராவின் ”துயில்” நாவலுக்கு நன்றி.

காலச்சக்கரத்தின் தடங்கள்

2010 மார்கழி மாத ஆரம்பத்தில் ஒரு மாலைநேரம், எதையும் சமைத்துண்ணும் நிலையில் நான் இருக்கவில்லை. மெதுவாய் ஜன்னலால் எட்டிப்பார்த்தேன். இருவர் தமக்குள் ஏதோ பேசியபடியே கடந்து போயினர். அவர்கள் பேசும் போது அவர்கள் வாயிலிருந்து குளிரின் காரணமாக ஆவி பறந்து கொண்டிருந்தது. எனவே வெளியில் சற்றுக் குளிர்  என்று அனுமானித்துக்கொண்டேன். 10 நிமிட நடையில் ஒரு தமிழ் உணவகம் இருக்கிறது. அங்கு போய் ஏதேனும் வாங்கிக் கொள்வோம் என நினைத்தபடியே குளிருக்கேற்ற உடைகளுடன் புறப்பட்டேன்.

நான் ஒரு புல்வெளியை கடந்தே செல்லவேண்டும் என்பதனால் அதை நோக்கி நடக்கலானேன். புல்வெளியினை சப்பாத்துக் கால்கள் மிதித்தபோது மனது ”நிலம்” இறுகிவிட்டது என்று அறிவித்தது. பனிக்காலங்களில் நிலம் கல் போல் இறுகிப்போவது வழமையானதொன்று. இவ்வருடம் இதுவே முதற்தடவையாக நான் அதை உணர்கிறேன். இது பற்றி சிந்தித்தபடியே நடந்து கொண்டிருந்தேன். திடீர் என்று மனதுக்குள் இன்னும் ஒரு மாதத்தில் ‌நான் நோர்வே வந்து இருபத்தியைந்து வருடங்களாகப்போகின்றன என்பதனை உணர்ந்தேன்.

எனது வாழ்வின் பெரும் பகுதி எனக்குச் சொந்தமில்லாத ஓர் நாட்டில் கழிந்திருக்கிறது என்று கூறவிரும்பினாலும், அப்படிக் கூறமுடியாதிருக்கிறது. காரணம் நான் இந்த நாட்டை எனது நாடாகவே நினைப்பது என்பதாயிருக்கவேண்டும்.

இருபத்தியைந்து வருடங்கள் என்பது நீண்ட காலம். ஒரு மனிதன், இருபத்தியைந்து வருடங்கள் கடந்து விடுவதற்கிடையில் பல விதமான பருவங்களை கடந்த விடுகிறான். எனது வாழ்வும் அப்படியானதே. வாழ்வு பற்றிய கவலை அற்ற காலங்களில் இருந்து, இன்று அது பற்றிய பல சிந்த‌னைகளுடனுடம், கிடைக்காத பதில்களுடனும் வாழும், இந் நாள் வரை, நான் கடந்த வந்த காலங்களை திரும்பிப் பார்க்கிறேன். ஒரு ரயில் பயணத்தில் கடந்து போன நிகழ்வுகள் போல் பலதும் தெளிவின்றியும், சில மிகத்தெளிவாயும் தெரிகின்றன.

இருபத்தியைந்து வருடங்கள் என்னை செதுக்கி விட்டிருக்கிறது. செதுக்கப்பட்ட நான், சில இடங்களில் மட்டும், எனக்கு அழகாகவே தெரிகிறேன். சில இடங்கள், எனக்கே என் மீது எரிச்சலை ஏற்படுத்துகின்றன. பல இடங்களில் மனதுடன் சமரசம் செய்து கொள்ளவேண்டியிருக்கிறது. அதிலும் சில சமரசங்கள் எனக்கு ஏற்பில்லாதவை.

மற்றவர்களுக்கு நான் ”அழகாய்” தென்படுகிறேனா என்று  கவலைப்படுவதில் எதுவித அர்த்தமும் இருப்பதாய் தெரியவில்லை, எனக்கு. இதையும் உணர்த்தியது கடந்து போன இருபத்தியைந்து வருடங்களே. எனது வாழ்வை வாழ்வது நான் மட்டுமே, மற்றவர்கள் அல்லவே. எனவே மற்றவர்களுக்கு நான் ஏன் அழகாய் இருக்கவேண்டும். எனக்கு நான் அழகாய் இருப்பதே முக்கியம் போல் இருக்கிறது.

கடந்து வந்த வாழ்க்கை என்னும் வெளியினைத் திரும்பிப் பார்க்கையில் எனது மகா முட்டாள்தனங்களும், எனது பலவீனங்களுமே ”இன்றைய வாழ்வின் போராட்டங்களுக்கு” காரணங்கள் என்று புரிந்து கொள்வது கடினமாயில்லை. சாண் ஏற முழம் சறுக்கினாலும், மனதானது ஒரு வித அமைதியை உணர்வதை மறுப்பதற்கில்லை.

வாழ்வின் பிற்காலங்கள் என்று சொல்லப்படும் 50 வயதினை நான் நெருங்கிக்கொண்டிருக்கிறேன். அதற்கு இன்னும் சில வருடங்கள் தான். ஆனால் வயதை உணரும் நிலையில் என் மனது இல்லை. அது எப்போதும் போல ”குதூகல வயதில்” இருப்பது போன்றே உணருகிறேன், அப்படியே செயற்படுகிறேன் போலவும் இருக்கிறது. அதுவே பல சமயங்களில் என்னை மகிழ்ச்சியாய் வைத்திருக்கிறது.

இதை தான் எனது தாயார் ”இனியாவது வளர்ந்தவர்கள் போல் நட” என்று அடிக்கடி குறிப்பிட்டுக்கொண்டே இருக்கிறாரோ என்னவோ? நான் வளர்ந்த குழந்தையாய் இருக்கவே விரும்புறேன்.  அதுவே மகிழ்ச்சியையும் தருகிறது. பணம், பதவி, பொருள் தராமுடியாதவொரு ஆத்மதிருப்தியை இந்த ”வளர்ந்த குழந்தை”  நிலை தந்து போகிறது.

குழந்தைகளுடன் குழந்தையாய் போகிறேன். அவர்களின் உலகினுள் அவர்களுடன் கைகோர்த்துச் செல்லும்போது மட்டுமே அதன் அற்புதம் விளங்குகிறது. ”குழந்தைப்பருவத்தின் அழகான வானவில் நிறங்களை உன்னோடு என்றும் வைத்திரு, உன் முதுமை வானவில் போன்று அழகாயிருக்கும்” என்னும் என்று எங்கோ வாசித்ததன் உண்மையும் புரியத்தொடங்கியிருக்கிறது.

கௌரவம், அந்தஸ்துக்கள், படோபகாரங்கள், வீண் ஆடம்பரங்கள் இவை எல்லாம் எவ்வளவு முட்டாள் தனமானவை என்பதை அறிந்து நிமிரும் போது வாழ்க்கை, நிம்மதியான தூக்கத்தின் பெறுமதி மேற்கூறியவையின் முன்னால் தூசுக்குச் சமானம் என்பதை உணர்த்திப் போகிறது.

இந்த இருபத்தியைந்து வருட காலத்தில் ஆரம்ப ஆண்டுகளைத் தவிர்த்து இன்று வரை இரட்டைக்கலாச்சார வாழ்க்கைமுறைமையையுடனேயே வாழ்ந்துவருகிறேன். அதன் பலன்களை அனுபவித்துமிருக்கிறேன். அவலங்களையும் உடலெங்கும் உணர்ந்துமிருக்கிறேன். தற்போது நான் உணர்வுரீதியாக ஒரு முழுத் தமிழனும் இல்லை, அதே வேளை ஒரு நோர்வேஜியனுமில்லை. கடந்த இருபத்தியைந்து ஆண்டுகளில் புதிதாய் முளைத்த ”நோர்வேஜியதமிழர்” என்னும் இனத்தைச் சேர்ந்தவனாகவே நான் என்னை அடையாளம் காண்கிறேன். நான் இலங்கையில் வாழ்ந்திருந்த காலத்தை விட இந்நாட்டில் வாழ்ந்த காலங்களே அதிகம். எனவே நான்  ”நோர்வேஜியதமிழனாகவே” இனியும் இருக்கப்போகிறேன் என்பது புரிந்துமிருக்கிறது.

இந்த நோர்வேஜியதமிழனாய் இருப்பது, நோர்வேயிலேயே சிக்கலாய் இருக்கிறது. ஏனைய தமிழர்களுடனேயே கலாச்சார மோதல்கள் வந்த போகின்றன. இங்கே இப்படியான நிலை என்றால், இலங்கைக்கு செல்லும் போதெல்லாம் தற்போது ஒரு அன்னியனாகவே உணருகிறேன். ஏன், எனது குடும்பத்தாருக்கும் எனது சிந்தனையோட்டங்கள் ஒரு அன்னியன் என்னும் நிலையை எற்படுத்தியிருந்தாலும் ஆச்சர்யப்படுவதற்கில்லை. எனது தா‌யாரோ 1930களில் பிறநது இன்றும் இலங்கையில் வாழ்பவர். நானோ 2011 இல் மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பில் வாழ்பவன். எனது கருத்துக்களும், பிரச்சனைகளை அணுகும் முறையும் எனது தாயாரினால் ஏற்கமுடியாதிருக்கிறது. எமக்கிடையில் முன்பிருந்த கருத்தொற்றுமை தற்போதில்லை. மேற்கத்திய கலாச்சாரத்தின் நன்றும் தீதும் இப்படி பல கலாச்சார மோதல்களை ஏற்படுத்திக்கொண்டேயிருக்கின்றன.

தற்போதெல்லாம்  இருபத்தியைந்து ஆண்டுகளுக்கு முன்பு என்னிடம் இருந்த கலாச்சார விழுமியங்கள், உணர்வுநிலைகள் ‌அன்று இருந்ததைப் போன்று அதே அழுத்தத்துடன் என் மனதில் இல்லை. முன்பெல்லாம் திருநீறு இன்றி நான் வெளியில் செல்வதில்லை. ஆனால் தற்போது இறுதியாக எப்பொது திருநீறு அணிந்தேன் என்பதே ஞாபகமில்லாதிருக்கிறது. புனிதமான காதல், அதன் பின்னான வாழ்வு என்பன பற்றி வாழ்ந்தறிந்ததால் அவை பற்றிய யதார்த்தமான புரிதலையடைந்திருக்கிறேன். மேற்கத்திய, மேலோட்டமான உறவு முறைகள் போலவே எனது உறவு முறைகளும் இருக்கின்றனவோ என்று அஞ்சவேண்டியிருக்கிறது. ”நன்றும் தீதும் பிறர் தர வாரா”.

காலப்போக்கில் மேற்கத்திய சிந்தனாமுறை, செயல்முறைகள் என்னுள் பலமாகவே ஊடுருவியிருப்பதை அவதானிக்க முடிகிறது. முன்பு, எனது சிந்தனைமொ‌ழி தனித் தமிழில் இருந்து,  தற்போது அது, தமி‌ழ் கலந்த இந்நாட்டு மொழியாய் மாறியிருப்பதை உணர்கிறேன். ஆனால் தமிழ் மீதான ஆர்வமும் பற்றும் மட்டும் தினமும் அதிகரித்தப்போகிறது. அது மனதுக்கு பெரும் ஆறுதலாயிருக்கிறது

அண்மைக் காலங்களில் தாய்மொழியை, இரட்டைக்கலாச்சாரத்தை, சிந்தனை மொழியை எவ்வாறு, எதனடிப்படையில் வரையறுப்பது போன்ற வாத விவாதங்களை நண்பர்கள் பேசிக்கொள்வதால், அவர்களிடத்திலும் இந்தச் சிக்கல் இருப்பதை அறிவிக்கிறது.

இவையெல்லாம் சேர்ந்து, நான் ”ஒரு சுத்தத் தமிழன்” என்னும் அடையாளத்தை இழந்துவரும் ஒரு மனிதன், எனக் காட்டுகிறது என்னும் சிலரின் வாதத்தில் ஏற்பில்லை, எனக்கு. மாற்றங்களை ஏற்றுக்கொண்டு அவற்றுடன் பதார்த்தமாய்  வாழ்வதும், கால, சமுதாய மாற்றங்களுக்கு ஏற்ப எம்மை மாற்றியபடியே வாழும் ஒரு நோர்வேஜியத்தமிழனாயே என்னை அடையாளம் காண விரும்புகிறேன்.

இவன் ஒரு புலன் பெயர்ந்த தமிழன் என்று யாரும் திட்டலாம். அது உங்கள் கருத்து. மேற் கூறியது எனது கருத்து.


Yo boys i am telling story .. soup story, flop story


தலையங்கத்தைப் பார்த்துவிட்டு இது ஒரு கொலைவெறிக் கதை என்று மட்டும் நினைக்காதீர்கள்.

2012 புதுவருடத்தின் முதல் தினமே காய்ச்சல், வயிற்றோட்டம், காதுக்குத்து என்று படு அமர்களமாய் இருந்ததால் படுக்கையில் இருந்து எழும்புவதே பெரும் பிரச்சனையாயிருந்தது.  நண்பனின் நீர் கொழும்பு  வீட்டு ”எலுமிச்சை ஊறுகாய்” யின் ருசி சுவையற்றுப்போயிருந்த வாயிற்கு அமிர்தமாயிருந்தது. நண்பர் ஒருவரிடம் ”இடியப்பமும் புளிச்சொதியும்” செய்து தரக் கேட்டேன். செய்து தந்தது மட்டுமல்ல ‌கொண்டுவந்தும் தந்தார்.

அம்மாவுடன் தொலைபேசினேன். குரலிலேயே  எனக்கு சுகயீனம் என்று அறிந்து கொண்டார்.
”என்னடா சுகமில்லையா” என்றார் சோகமான குரலில். ”ம்” என்று தொடங்கிய  எமது சம்பாசனை கொத்தமல்லி, ஹோர்லிக்ஸ், மைலோ என்று சென்ற போது
”அம்மா! அதெல்லாம் என்னட்ட இல்லை. ரெண்டு பனடோல் போட்டிருக்கிறன்” என்றதோடு முடிந்து போனது.

அதன் பின் தொடர்ந்து மூன்று நாட்களாக என்னை தொலைபேசியில் அழைத்து சுகம் விசா‌ரிக்கிறார். அந் நேரங்கிளில் அந்த ”கொத்தமல்லி, ஹோர்லிக்ஸ், மைலோ” சமாச்சாரங்களை, என் அப்பாவின் அழகிய ராட்சசி மறந்ததாகத் தெரியவில்லை. நானும் பன‌டோலை வைத்து அவரின் ஏக்கங்களை தீர்த்துக்கொண்டிருக்கிறேன்.

இன்று 3ம் திகதி, இன்றும் தொலைபேசியில் அழைத்தார். பழைய கொத்தமல்லிக்கே சம்பாசனை ‌சென்ற போது ”எனக்கு தற்போது காச்சல் இல்லை” என்றேன். அப்ப சரி ”ஆறுதலாய் படுத்திரு” என்று கடுப்பேத்தினார்.

பின்பு இப்படி சம்பாசித்தோம்

 ”இன்று என்ன திகதி”
”3 ம்திகதி”
”திகதி ஞாபகம் இருக்கா?”
”.....”
”அப்பா இறந்த நாள்”
” ஓம் என்ன மறந்துவிட்டேன்” (நமக்கு என்ன நான் நினைவில் நிற்கிறது)
”31 வருஷங்களாயிட்டுதடா” என்றார் மிகவும் சோகமான குரலில்.

அதன் பின் யாருக்கோ உணவும், உடையும் கொடுக்க ஒழுங்கு செய்துள்ளதாகக் கூறினார்.
இத்துடன் எமது சம்பாசனை நின்று போயிற்று.

அம்மா கூறிய 31 வருடங்களாயிற்று என்ற கூறியது மெது மெதுவாய் மனதுக்குள் ஊறிக் கொண்டேயிருந்தது.

இன்றும் அந்த நாள் அப்படியே நினைவில் நிற்கிறது. 3ம் திகதி தை மாதம் 1981.

அப்பாவுக்கும் எனக்கும், அவர் இறக்கும் வரை ஏனோ ”கெமிஸ்ரி” வோர்க் அவுட் ஆகாதிருந்தது . 3 - 4 வயதிலிருந்தே நான் என்ன செய்தாலும் அவருக்கு அதில் ஒரு கடும் விமர்சனம் இருந்தது. அவரின் அந்த விமர்சனத்தில் எனக்கு பலத்த கடும் விமர்சனங்கள் இருந்தன. 

நான் ”மா” விற்கப் போனால் காற்றடித்தது, ”உப்பு” விற்கப்போனால் மழைபெய்தது. இது அந்த மனிதருக்கு புரியவில்லை.  காற்றடிக்காது போது, ‌மழை பெய்யாதபோதும் போ என்றார் அவர். இப்ப‌டியாக ஆரம்பித்த எமது ராஜாங்க உறவு, விமர்சனங்கள் கண்டனங்கள் ஆக மாறி, பிற்காலத்தில் ”ரணகளங்களாவும்” மாறியது என்பது உண்மை. (ரணகளம் எனக்குத் தான் அவருக்கில்லை என்பதை அறிக)

1980ம் ஆண்டு 10ம் வகுப்புத் தேர்வெழுதிய பின்பு மார்கழி மாதமளவில் சில நாட்களுக்கு என்னை அம்மா ”திக்” விஜயம் அனுப்பினார்.  தம்பியும் மார்கழி விடுமுறை என்பதால் ஊர் மாற்றம் செய்யப்பட்டான். எமது அந்த விஜயம் வடக்கு நோக்கியிருந்தது. சில வாரங்கள் உடுவில், சுண்ணாகம், ரொட்டியாலடி, மருதனாமடம் என்னும்  நிலப்பரப்பில் வாழ விதிக்கப்பட்டிருந்தது எனக்கு. அங்கு என்னிலும் ஒரு வயது முத்த ஒன்றுவிட்ட அண்ணண் ஒருவர் இருந்ததால் அவர், அவரின் நட்புகள் என்று காலம் மகிழ்ச்சியாய் ஓடியது.



அப்பாவின் அக்காவும், அம்மாவின் அக்காவும் யாழ்பாணவாசிகள். நான் மட்டக்களப்புவாசி. எனது க‌தை, பேச்சுக்கள், பழக்கவழக்கங்கள் சரியில்லை என்று நான் யாழ்ப்பாணம் சென்று திரும்பும் காலங்களில் அம்மாவுக்கு கடிதங்கள் வரும். அதை திருட்டுத்தனமான வாசித்து மறுமுறை அங்கு போகும் போது மாமிக்கும், பெரியம்மாவுக்கும் முன்பை விட சற்று ”பிரஷர்” ஏற்றிவிட்டு திரும்புவேன். மிக வேகமாக அவர்களின் ”அறிக்கை” கடிதங்கள் வரும் மட்டக்களப்புக்கு.

உடுவிலில் இருந்து மருதனாமடம் செல்லும் பாதையில் சற்று வயதான ஒரு மனிதரிடம் ” வாணர்! மழை வருமோ ” என்றால் அவர் அடை மழைபோல ததூஷணத்தால் திட்டுவார் என்று அறியக்கிடைத்ததும் அந் நாட்களில்தான். பின்பு தினமும் அவரிடம் மழைவருமோ என்று கேட்டுவிட்டு ஓடிவோம். ”டேய், உன்ட அப்பாட்ட சொல்லுவன்? என்று வாணர் கத்திய போது போது ” அதுக்கு நீங்க 250 மைல் நடக்ககோணும் என்று கத்திவிட்டு ஓடிப்போய் அண்ணணிண் சைக்கில் பாய்ந்தேறி பறந்த நாட்கள் இனிமையானவை.

1981ம் ஆண்டு தைமாதம் இரண்டாம் திகதி மாமியுடனான ராஜாங்க உறவுகள், அவர் என்னை எதற்காகவோ திட்டியதால் முறிந்துபோனது. மானஸ்தனான நான் இரவுப்புகையிரதத்தில் ஏறிக்குந்திக் கொண்டேன். புகையிரதநிலையத்துக்கு வரும் வழியில் வாணரிடம் ”வாணர்! மழைவருமோ?” என்று கேட்டேன். அவர் அதற்கு, அவரின் மொழியில் பதில் சொன்னார். எனது அண்ணரும் நானும் விழுந்த விழுந்து சிரித்தோம்.

மஹோ சந்தியில் இறங்கி மட்டக்களப்பு புகையிரத்தை எடுத்து வீடு வந்து சேர்ந்தேன். வீடு அமைதியாயிருந்தது. தம்பி யாழ்ப்பாணத்தில் என்பதால் வீட்டில் தங்கை மட்டுமே இருந்தாள். அவளுடன் எம்முடன் வாழ்ந்திருந்த எம்மியும் வீட்டிலிருந்தார்.

அப்பாவுக்கு சுகமில்லை, மட்டக்களப்பு பெரியாஸ்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். அம்மா அங்கே நிற்கிறார் என்று அறியக் கிடைத்தது.

அப்பாவுக்கு, வைத்தியர்கள் ராட்சச ஊசிகள் போடுவது போலவும் அவர் என்னை விடுங்கோ.. விடுங்கோ.. நான் அவனுக்கு இனி அடிக்கமாட்டேன் என்று கத்துவது போலவும் கற்பனையோடியது.

ஆஸ்பத்திரிக்கு செல்வதானால் டவுனுக்கு செல்ல வேண்டும். டவுனில் புதிய படங்கள் ஓடும் என்று சிந்தனையோடியதால் 5 ரூபாய் பெற்றுக்கொண்டு  படம் பார்க்க வெளிக்கிட்டேன்.

எனது அப்பா ஆங்கிலமொழியில் கற்றவர், தமிழெழுத்துக்களும் என்னைப்போல் அவரிடம் செல்ல அஞ்சின. அவர் ஒரு நாளும் என்னை ”ஊறுப்பமைய எழுது” என்று கூறாததன் ரகசியமும் இது தான்.

தமிழ் சரளமாகப் பேசுவார். ஆனால் எழுத்து என்றால் ஆங்கிலம் தான் அவர் பாஷை. எனக்கு இதில் ஒரு வித ஆட்சேபனைகளும் இருக்கவில்லை, அவர் எனது ஆங்கிலத்தில் தலையிடும் வரை. அம்மாவுக்கும், அப்பாவுக்கும்  ஆங்கிலம் கைவந்த கலை என்றால் எனக்கும் அது அப்படியே ஆகவேண்டும் என்று ஏதும் விதிகள் இருக்கிறதா என்ன? நமக்கு தமிழ்தான் கைவந்த மொழியாக இருந்தது. ஆங்கிலத்தில் 30 - 40 புள்ளிகளை எடுப்பதே குதிரைக்கொம்பாய் இருந்த காலம் அது.

இதை விட அப்பாவுக்கு கணிதத்தில் அதிக விருப்பமிருந்தது. கணக்கு தெரியாவிடில் உன்னை கணக்கிலெடுக்கமாட்டார்கள் என்னும் கோட்பாட்டை பின்பற்றுபவர் அவர். நமக்கு கணக்கு என்றால் காத தூரம் ஓடும் சக்தி இருந்தது.

10ம் வகுப்புத் தேர்வில், ஆங்கிலப் பரீட்சைத்தாளில் ஒரு accident  பற்றி கட்டுரை எழுதச்சொல்லியிருந்ததை பார்த்தவுடனேயே எனக்கு  accident  ஆகிவிட்டது. இருந்தாலும் ஒரு விதமாக கட்டுரையை எழுதி முடித்தேன். பல இடங்களில் ‌ஆங்கிலச் சொற்களுக்குப் பதிலாக அவற்றை தமிழில் உச்சரித்து எழுதினேன். உதாரணமாக: அந்த வாகனம் மலையில் இருந்து உருண்டு உருண்டு விழுந்தது என்பதை.. " That car fall down and ரோலிங் ரோலிங் from the மவுண்டன்" என்று எழுதினேன். பையனுக்கு சொற்கள் தெரிந்திருக்கிறதே என்றாவது வினாத்தாளை திருத்துபவது நினைப்பார் என்று நினைத்தேன். அவர் நான் நினைத்தது போல் நினைக்கவில்லை என்று பெறுபேறுகள் வந்து போது புரியும் என்பது அன்று எனக்கு தெரிந்திருக்கவில்லை

அப்பாவைப் பார்த்துவிட்டு படம் பார்க்கப் போகலாம் என்பதால் கூல் பாருக்குள் சென்று ”பலூடா” அருந்திவிட்டு வைத்தியசாலைக்குச் சென்றேன். அப்பாவின் கட்டிலைச்சுற்றி மறைப்பு செய்திருந்தார்கள். அப்பாவைச் சுற்றி வைத்தியர்களும் தாதிகளும் நின்று கொண்டிருந்தார்கள். அம்மா கால்மாட்டில் நின்றிருந்தார்.

அப்பா காற்றைத் தேடி தேடி தலையை உயா்த்திக்கொண்டிருந்தார். வைத்தியரான என் அம்மா  என்னை அணைத்தபடியே ”அப்பா எங்களைவிட்டு போகப்போறார்டா” என்றார். சில நிமிடங்களில் அப்படியே நடந்தது.


பி.கு: அந்த வருடம் எனக்கு ஆங்கிலத்தில் ”சித்ததியடையவில்லை” என்றும், கணிதப்பாடத்தில் ”மிகச் சாதாரண சித்தி” என்றும் பெறு பெறுகள் வந்தன.

அப்பா இருந்திருந்தால் என்று நினைக்கவே பயமாயிருந்தது .........