பகிரப்படாத குடும்ப ரகசியம்


இன்றைய கதை எங்கள் குடும்பத்து (பரம்பரையின்) பரமரகசியங்களின் ஒன்று. இதில் சம்பந்தப்பட்ட  முக்கிய பாத்திரங்களில் எவரும் இன்று எம்முடன் இல்லை. தவிர இது ஒரு மனிதரின் மகத்தான தியாகத்தின் கதை. எனவே அதை பகிர்வதில் எனக்கு பெருமையிருக்கிறதே அன்றி தவறிருப்பதாய் தெரியவில்லை.

கதையின் தொடக்கத்தினை நாம் தேடிச்செல்லவேண்டுமானால் காலச் சக்கரத்தை பலமாக  பின்னோக்கிச் சுற்ற வேண்டும்.

ஆம் 1933ம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 7ம் திகதி எனது தாயாரும் அவரின் இரட்டைச்சகோதரியும் பிறந்தார்கள். அவர்களுக்கு 7 வயதாயிருந்த போது அவர்களின் தாயார், எனது அம்மம்மா காலமாகிறார். அம்மாவையும், அவரின் சகோதரியையும் அவர்களின் மூத்த அக்கா  கவனித்துக் கொள்கிறார். அவருக்கும் இவர்களுக்கும் 23 வயது வித்தியாசம். ஆம் 23 வயது தான். அவரின் திருமணத்தின் பின் இளைய அக்கா பார்த்துக் கொள்கிறார்.  காலம் உறுள்கிறது. அம்மா 1950களின் இறுதியில் கொழும்பில் வைத்தியராகிறார். அப்பாவை திருமணம் செய்கிறார். ‌ இருவரும் கொழும்பில் உள்ள கம்பஹா என்னுமிடத்தில் தொழில்புரிகிறார்கள். அம்மாவின் இரட்டைச் சகோதரி ”சந்திராராணி” பிற்காலத்தில் எங்களால் ”சந்திரா அன்டி”  என்றழைக்கப்பட்ட சந்திரா அன்டி அம்மாவுடன் தங்கியிருந்து கொழும்பில் கல்விகற்கிறார்.

அப்பாவின் நண்பராக அறிமுகமாகிறார் நம்ம ஹீரோ. அப்பாவின் நெருங்கிய நண்பன். சிங்களவர். நாம் அவரின் பெயரைச் சுருக்கி ”ஜின் மாமா” என்றழைத்தோம். கம்பஹாவில் பெயர் போன குடும்பம். நண்பராக வீட்டுக்கு வந்த... பெயரிலேயே  போதையிருக்கும் ”ஜின் மாமா”வுக்கும் ”சந்திரா அன்டி”க்கும் இடையில் ”கெமிஸ்ரி” எனது அப்பாவுக்கு தெரியாமல் ஓகே ஆகிறது. அம்மாவுக்கு தெரிந்திருக்கலாம் என்றே நினைக்கிறேன். அக்கா தங்கச்சி என்றால் அப்படித்தானே. ஆனால்  அப்பாவுக்கு தெரியாமல் மறைக்கப்படுகிறது.

சந்திரா அன்டி இந்தியா போய் பூனே என்னுமிடத்தில் படித்து மீண்டும் இலங்கைக்கு வருகிறார். ஜின் மாமாவும் சந்திரா அன்டியும் ஆசிரியர்களாகிறார்கள். காதல் விடயம் பரமரகசியமாகப் பாதுகாக்கப்படுகிறது.

யாழ்ப்பாணத்தில் பெரிய பெரியம்மாவும், பெரிய பெரியப்பாவும் சந்திரா அன்டிக்கு கலியாணம் பேச.. தமிழ்ப்படங்களில் வருவது மாதிரி சந்திரா அன்‌டி மாவுக்கு தகவல் சொல்ல அவரும் படத்தில வாறது மாதிரி நண்பர்களுடன் சேர்ந்து கொழும்பில் காதும் காதும் வைத்தால் போல பதிவுத் திருமணம் முடித்த போது தாங்கள் சரித்திரத்தின் ஒரு பெரும்பகுதிக்கான வெடிகுண்டின் திரியை பற்றவைத்திருப்பது அவர்களுக்கு தெரியாது.

கேள்விப்பட்டதும் முதலில் தொலைந்தது அப்பாவின் நட்பு. பிறகு பெரியம்மா பெரியப்பாவுக்கும் சந்திரா அன்‌டிக்குமான உறவு. அப்பா இறக்கும் வரைக்கும் நண்பருடனும் அன்டியுடனும் பேசவேவில்லை. பெரியப்பாவும் அப்படியே. பெரியப்பாவின் மரணத்தின் பின் பெரியம்மா அன்டியுடன் சமாதானமாகினார். இருவரும் ஏறக்குறைய இரண்டுவருடங்கள் ஒரே வீட்டில் வாழ்ந்து இழந்த காலத்தை மீட்டுக் கொண்டனர். பெரியம்மா அதன்பின் இறந்து போனார். அதன்பின் தான்  இறக்கும் வரை தனது இரட்டைச் சகோதரியுடன் அதாவது எனது அம்மாவுடன் வாழ்ந்திருந்தார் அன்டி.

1960களின் இறுதியில் குடும்பங்களின் எதிர்ப்பை மறக்கவும் தங்கள் வாழ்க்கையை  தொடங்கவும் மாமாவும் அன்டியும் எத்தியோப்பியா நாட்டுக்கு ஆசிரியர்களாக புலம் பெயர்ந்தனர்.

அம்மாவும் அப்பாவும் குட்டி போட நானும், தம்பியும் , தங்கையும் இந்த உலகத்தில் வந்து விழுந்திருந்தோம். அன்‌டியும் மாமாவும் இலங்கை வந்தாலும் எங்கள் வீட்டுக்கு வரமுடியாது. அம்மா அன்டியை கொழும்பில் சந்திப்பார்.  பல ஆண்டுகளின் பின் அன்டி யாழ்ப்பாணம் போய் தனது இளைய அக்கா வீட்டுடன் சமாதானமாகினார்.  பெரிய பெரியம்மா தனது வீட்டு கேட்டுக்கு பெரீய பூட்டு போட்டு பூட்டினார் என்று சரித்திரம் ஆதாரத்துடன் சொல்கிறது. எங்கள் வீட்டில் அப்பர் வில்லனாக இருந்தார். ஆனால் அம்மா மூலமாக மாமாவும் அன்டியும் கொடுத்துவிட்ட பரிசுப் பொருட்களை மட்டும் சந்தோசமாகப் பாவித்தார்.

1970களின் நடுப்பகுதியில் அன்டி வந்த போது ஒரு ”டேப் ரெக்கோர்டர்” கொண்டு வந்து அம்மாவிடம் கொடுத்தார்.  அதை அம்மா அப்பாவிடம் கொடுக்க Maxell c 90 கசட் வாங்கி தனிய தனக்கு விருப்பமான ”உள்ளம் உருகுதய்யா” மாதிரியான பாட்டுக்களை போட்டுத் திரிந்தார் அப்பா. இடையிடையே கசட் சிக்கிக்கொள்ளும். மனிதர் குந்தியிருந்து ஒரு பேனையால் சுற்றி சுற்றி சிக்கினை எடுத்தபின் பாட்டைப் போடுவார். பாட்டு ஒரு மாதிரியான சத்தத்துடன் ஆரம்பித்து பிறகு ஒழுங்காய்ப் பாடும். அந்த டேப் ரெக்கார்டர் அவரால் பெரும் பாடுபட்டது.

அப்பா வேட்டைக்கு போவதற்காக ஒரு டோர்ச் லைட் உம் கிடைத்தது, அன்டியிடம் இருந்து.  அதில 12 பற்றரி போடலாம். லைட் அதிக தூரத்துக்கு அடிக்கும். வயலுக்கு இரவில போகும் போது அப்பா அதை ஸ்டைலாக ‌ஆட்டியபடியே போவார்.

ஆனாலும் அப்பாவின் கோவம் குறையவில்லை.  ஆனால் அன்டியை வீட்ட வர அனுமதித்தார். ஆனால் அவர் வந்தால் இவர் நிற்க மாட்டார்.

1980களின் ஆரம்பத்தில் அன்டியுடனும் மாமாவுடனும் சினேகமாகாமலே அப்பா போய்ச் சேர்ந்தார்.

1960 களின் இறுதியில் எத்தியோப்பியாவுக்கு போன மாமாவுக்கும் அன்டிக்கும் குழந்தைகள் கிடைக்கவில்லை. அதிக காலமாக குழந்தைகள் கிடைக்கவில்லை. கடைசிவரைக்கும் கிடைக்கவேயில்லை.

1980கள் வரைக்கும் எத்தியோப்பியாவிலேயே  வாழ்ந்திருந்தார்கள். அப்போது தான் அந்த பரம ரகசியம் நடந்தது. ஆபிரிக்காவைப் போல அதுவும்  இருட்டான ஒரு கதை. வலி நிறைந்தது.

மாமாவும் அன்டியும் அங்கு வாழ்ந்திருந்த காலங்களில் அவர்களின் வீட்டில் வேலைக்கு வந்திருந்த பெண்ணுக்கும் மாவுக்கும் மூன்று குழந்தைகள் பிறந்திருக்கின்றன. குழந்தைகள் மேல் பெரும் அன்புள்ள அன்டி அவர்களை மிகவும் அன்பாகவே நடாத்தியிருக்கிறார்.  அவருக்கு சந்தேகமே வரவில்லை.

காலம் உருண்டோட மாமா சுகயீனமுறுகிறார். தனது இறுதிக் காலத்தில் தனது இருண்ட  ஆபிரிக்க இரகசியத்தை அன்டியிடம் சொல்கிறார்.  அதே நேரத்தில் அவர்களின் வேலைக்கான உத்தரவு ரத்து செய்யப்பட பிஜி (Fuji) தீவுகளுக்கு வேலைக்குப் போக வேண்டியேற்படுகிறது. ஆனால் தன்னுடன் மாமாவின் அந்த ஆபிரிக்க மனைவி போன்றவரையும், அவர்களது மூன்று குழந்தைகளையும் அழைத்துப் போகிறார், அன்டி. தன்னுடனேயே தங்கவைத்துக் கொள்கிறார்.

மாமாவின் உடம்பு நிலை மோசமாக நியூசிலாந்தில் வைத்தியத்திற்காக போன இடத்தில் மாமா இறந்து போக அன்டி  தன்னுடனேயே அந்த மூன்று குழந்தைகளையும் அவர்களின் தாயாரையும் அழைத்துக் கொண்டு மீண்டும் பியூஜி (Fuji) தீவுக்கு போய் தள்ளாத வயதிலும் ஆசிரியராய் தொழில் புரிந்து அந்தக் குழந்தைகளை வளர்த்து கற்பித்து அமெரிக்காவில் கல்வி கற்ற வைக்கிறார்.

இன்னும் சில காலத்தின் பின் அக்குழந்தைகள் வளர்ந்து தங்கள் தாயை பார்த்துக் கொள்ள, தனது இறுதிக் காலத்தை தனது சகோதரிகளுகளுடன் கழிக்க இலங்கை வருகிறார் சந்திரா அன்டி.

இதற்கிடையில் அவரின் அண்ணணையும் (எனது மாமா), இளைய அக்காவையும்(எனது சின்ன பெரியம்மா), அத்தானையும்(எனது பெரியப்பா)
எனது அப்பாவையும் காலம் கரைத்துவிட்டிருந்தது.

பெரியம்மா தனது பெரீய வீட்டில் தனியே இருந்தார். இலங்கை வந்ததும் அவருடன் போய் தங்கினார்.  எனது அம்மாவும் அங்கு போய் வருவார். 2004ம் ஆண்டு விடுமுறைக்கு  நானும் எனது குடும்பத்துடன் அங்கு போய் தங்கியது ஒரு மறக்கமுடியாத இனிமையான அனுபவம். இந்தப் பதிவில் இருக்கும் படம் அந் நாட்களில் எடுக்கப்பட்ட்தே.

பெரியம்மா இறந்ததும் எனது அம்மாவுடன் வந்து தங்கினார். அடிக்கடி தனது குழந்தைகளுடன் தொலைபேசியிலும், மின்னஞ்சலிலும் பேசிக் கொண்டார்.  அந்த மூன்று குழந்தைகளை விட இத்தியோப்பியாவில் இன்னுமொரு குழந்தையின் கல்விக்கும் அவரின் வாழ்க்கைக்கும் உதவியிருந்தார் என்பதை பல வருடங்களுக்கு முன் என்னிடம் சொல்லியிருந்தார்.

அவரின் மிடுக்கான உடையும், மிடுக்கான நடையும், அன்பான பழக்கமும் அவருக்கு பல நண்பர்களை தேடிக் கொடுத்தது. வாழ்க்கை பற்றிய அவரது பார்வை விசாலமானது. அம்மாவுடன்  சிறு சிறு சண்டைகள் பிடிப்பாராம் என்பார் அம்மா. அம்மாவை சோதியக்கா என்றே அழைத்தார்.

சில ஆண்டுகளுக்கு முன் அம்மாவின் தொலைபேசி அழைப்பின் ஊடாக அவருக்கு மார்ப்புப் புற்றுநோய் என அறியக் கிடைத்தது. மருத்துவம் நடந்தது. திடீர் என ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அம்மா வந்து பார்த்துப் போ என்றார்.

புறப்பட்டுப் போய் நேரே களுபோவில ஆஸ்பத்திரிக்குப் போனேன். நான் அவரைத் தேடிய போது எனக்கு முதல் அவர் என்னைக் கண்டு கையை மேல் தூக்கி ஆட்டி ஆட்டி என்னை அழைத்தார். சிரித்தபடியே அருகில் அழைத்து கட்டிலில் உட்கார் என்று சைகை காட்டினார். ஒட்சிசன் உட் போய்க் கொண்டிருந்தது. பேச முடியவில்லை அவரால்.

வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றும் வேலைகள் நான் வரமுதலே நடந்து கொண்டிருந்தது. அன்று மாலை மாற்றப்படுவதாக அறிந்தேன்.

தனக்கு வேர்க்கிறது விசிறியால் விசுக்கி விடச் சொன்னார். விசுக்கிக் கொண்டிருந்த போது கஸ்டப் பட்டு ஒட்சிசன் செல்லும் பிளாஸ்டிக் கருவியை அகற்றி ”எப்படி இருக்கிறார்கள் உன் குழந்தைகள்” என்று கேட்க முதலே களைத்துச் சரிந்தார். அருகில் இருந்து கையை தடவியபடியே இருந்தேன்.  அம்மா வந்தார். அருகில் அமர்ந்து கொண்டார். அப்பா இறக்கும் போதும் நான் அம்மாவின் அருகில் நின்றிருக்கிறேன். அம்மாவின் முகம் அன்று இருந்ததைப் போலிருந்தது.

புதிய ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டார். அம்மாவிடம் கோப்பி வேணும் என்றாராம். அம்மா எடுத்துப் போன போது மயக்கமாகியிருந்தார்.  அடுத்த நாள் காலை அவரிடம் சென்ற போது இன்னும் சற்று நேரம் தான் என்றார் டாக்டர். அன்டி மயக்கத்திலும் அழகாயிருந்தார்.

அவரருகில் தனியே அமர்ந்திருக்கும் சந்தப்பம் கிடைத்தது. அவரின் முகத்தில் ஒரு வித அசாத்திய அமைதியிருந்தது.  அகத்தின் அழகு முகத்தில் தெரியும் என்பது உண்மை தான். எனது சிந்தனை அவரின் வாழ்க்கையைப் பற்றியதாயிருந்தது.

மதியம் போல் பலரும் சுற்றி நிற்க மெதுவாய் தனது பாரத்தை இறக்கி விடைபெற்றுக் கொண்டார். அம்மா சற்று நேரம் அருகிலேயே நின்றிருந்தார்.

எத்தனை வலி மிகுந்த வாழ்க்கையை அவர் கடந்திருக்கிறார். குடும்பத்தை எதிர்த்து கல்யாணம், உறவுகளுடனான பிரிவு. இவற்றை சாதாரணமெனலாம். ஆனால் தனது கணவரின் பச்சைத் துரோகத்தை அதை எப்படித் தாங்கினார்? என்பதே எனது கேள்வியாய் இருந்தது. எப்படி தனக்கு துரோகம் செய்தவளையும் அவரின் குழந்தைகளையும் தன் குழந்தைகளாக வரித்துக் கொள்ள முடிந்தது? ஏன் கணவரை உதறித் தள்ளவில்லை? எமது அழைப்பையும் மறுத்து அந்தக் குழந்தைகளைகளுக்கு பல ஆண்டு காலம் வழிகாட்டிய பின்பே எம்மிடம் வந்தார்.  ஏன் இப்படி எல்லாம் செய்ய வேண்டும்? என்னால் அவரைப் போல் செய்ய முடியுமா எனக் கேட்டுக் கொண்டேன். இல்லை, நிட்சயமாய் இல்லை என்றே பதில் வந்தது.

கணவரை தண்டிக்கவும், தனது சோகம் மறக்கவும் அன்பெனும் ஆயுதத்தை கையிலெடுத்தாரோ அவர்? எத்தனையோ நாட்கள் இது பற்றி யோசித்திருக்கிறேன். ஒவ்வொரு முறையும் அவரின் மேலான மரியாதை கூடிக் கொண்டே போகிறது.

மரணச்சடங்கின் போது மாமாவின் வீட்டாரையும் பல ஆண்டுகளின் பின் காணக்கிடைத்தது. அவர்களுக்கு இது பற்றி ஏதும் தெரிந்திருக்கலாம் என்றே நம்புகிறேன்.  அதுவே எனது விருப்பமாயும் இருக்கிறது.

 எல்லாம் முடிந்து வீடு வந்த போது மேசையில் இருந்த ஒரு படத்தில் மிக அழகாய் சிரித்துக் கொண்டிருந்தார், சந்திரா அன்டி. முகத்தில் என்றுமில்லாத சாந்தமிருந்தது. இப்படியும் மனிதர்கள் இருக்கிறார்கள்.


மேலிருக்கும் படத்தில் இடமிருந்து வலமாக எனது அம்மா, பெரிய பெரியம்மா, சந்திரா அன்டி.


இது எனது சந்திரா அன்டிக்குச் சமர்ப்பணம்..

12 comments:

 1. great lady. அவர்கள் குடும்பத்தில் பிறந்ததற்காய் நீங்க பெருமைப்படலாம்.

  ReplyDelete
 2. தெய்வமாகி விட்ட் பின்பும் அவர் எங்களுக்கு ஒரு கதாநாயகி .. இப்படியான் தியாகிகளால் தான் இன்னும் உலகம் இயங்குகிறது. கணவனின் குழந்தைகளை தன் குழந்தைகளாக...பெரும் தியாகி. அருமையான் கதை. இதய் எழுத உங்களுக்கு கிடைத்த் பாக்கியம். .

  ReplyDelete
 3. வாசித்து முடித்ததும் மனது கனத்தது. சந்திரா அன்ரியின் நினைவுகள் உங்களிடமிருந்து எங்களுக்கு இப்போது :(

  ReplyDelete
 4. மகாவம்சத்தை இப்படி சுருக்கலாமா? பெரியதாக எழுதப் பாருங்கள். தமிழுக்கு நல்ல நாவலொன்று கிடைக்கும்.

  ReplyDelete
 5. இள வயதில் லலிதா-ராகினி-பத்மினி சகோதரிகள் போல் இருந்திருப்பார்களோ? அந்தப் படத்தையும் போட்டு எங்கள் மனங்களைக் குளிர்வித்திருக்கலாமே?

  ReplyDelete
 6. சந்திரா ஆன்றி பெண் இனத்துக்கே பெருமை சேர்த்துள்ளார்!!!

  ReplyDelete
 7. SANJAYAN KEEP IT UP THIS WONDERFUL WORK, WELL DONE.....................
  I HOPE SHARMA SIR WILL PROUD OF YOU
  ALL THE BEST

  ReplyDelete
 8. என்ன சொல்வது, நான் இவரை பார்கவில்லை , ஆனால் நீங்கள் சந்திரா ஆண்டி என்று அழைப்பது தெரியும். அவர்கள் இவளவு தியாகம் செய்துள்ளார் என்பது வியப்பு , உண்மையில் தியாகி

  ReplyDelete
 9. திரை படங்களில் தான் இப்பிடி பார்த்திருப்போம் அனால் நிஜ வாழ்வில்??? சந்திரா அன்ரி போல் மனித தெய்வங்களை இந்த நூற்றாண்டில் பார்க்க முடியுமா? இல்லை எங்களால் தான் இப்பிடி வாழ முடியுமா? நிச்சயமாக முடியவே முடியாது. அவரின் ஆத்மா நல்லபடியாகவே சாந்தி அடைந்திருக்கும். எங்களுடன் பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி.

  ReplyDelete
 10. Wonderful lady. You must be really proud to have an aunty like her.
  She had a beautiful heart .

  ReplyDelete
 11. பின்னூட்டங்களுக்கு மிக்க நன்றி நண்பர்களே.

  ReplyDelete
 12. சந்திரா aunty க்கு கடலளவு மனது.

  ReplyDelete

பின்னூட்டங்கள்