நன்றும் தீதும் பிறர் தர வாரா

நேற்று, நோர்வே தமிழ்ச் சங்கத்தின் 38வது ஆண்டுவிழாவில், நிறைந்த அரங்கத்துடன் மேடையேறி ஒஸ்லோ மக்களின் ஏகோபித்த ஆதரவையும் பலத்த பாராட்டையும் பெற்றது "Lankere" என்னும் நகைச்சுவை நாடகம்.

இதில் பங்கேற்ற கலைஞர்கள் மக்களால் வெகுவாகப் பாராட்டப்பட்டுக் கொண்டாடப்பட்டார்கள்.

இளையோரின் மனநிலையையும் அவர்களின் சிந்தனையோட்டங்களையும், பெற்றோரின் மனநிலையையும், சிந்தனைப்பாங்கினையும் சமூகத்திலுள்ள சிந்தனைப் பற்றாக்குறையையும் கருப்பொருளாகக் கொண்டது "Lankere" நாடகம். பெற்றோருக்கும் , இளையோருக்கும் இடையிலான புரிந்துணர்வை ஊக்குவிப்பதே இந்நாடகத்தின் நோக்கம்.

இந் நாடகம் மேடையேறுவதற்கு , மூன்று நான்கு வாரங்களுக்கு முன்னிருந்தே ”இது தேசியத்திற்கு எதிரானது, லங்கர என்னும் கோசத்தை மக்களுக்குள் திணிப்பதற்காக துரோகிகள் தமிழ்ச்சங்கத்தினுள் ஊடுருவி இதனை மேடையேற்றுகிறார்கள் ”,மக்களே சிந்தியுங்கள், துரோகிகளை அடையாளம் காணுங்கள் என்ற ரீதியில் அனைத்து சமூக ஊடகங்களினூடகவும், தொலைபேசிச் செய்திகள் மூலமாகவும் பலத்த பரப்புரையை முடுக்கிவிட்டிருந்தனர் முகம்காட்ட விரும்பாதவர்களின் பிரதிநிதிகள்.

இதற்கு எதிராக சிலரே குரல்கொடுத்திருந்தனர். படைப்பை பார்ப்பதற்கு முன் அதை விமர்சிக்காதீர்கள் என்ற கருத்து முன்வைக்கப்பட்டது. ஆனால் சிலர் இயக்குனரான சுகிர்தா பஞ்சலிங்கத்தின் வீடுதேடிச்சென்று, அழுத்தம் கொடுத்தமையையும் இங்கு குறிப்பிடுவது அவசியமானது.

நாடகம் மேடையேறுவதை தடுப்பதற்கு இவர்கள் கையாண்ட சிறுபிள்ளைத்தனமான செயற்பாடுகள் என்ன என்பதை இயக்குனர் பேசுவதே அதன் பரிமாணத்தையும், அவர் கடந்துகொண்ட சிக்கல்களையும் உணர்த்தும் என நான் கருதுகிறேன்.

அடக்குமுறை மற்றும் உரிமை மீறல்களால் சொந்த நாட்டை விட்டு புலம் பெயர நிர்ப்பந்திக்கப்பட்ட சமூகம் , வளமான ஜனநாயக சூழலில் வாழ்ந்து கொண்டு படைப்பாளர் ஒருவரின் சுதந்திரத்தை நசுக்க முயலும் சிந்தனைபாங்கை எவ்வாறு நோக்குவது?

நாடகத்தினைப் பார்க்காது, இயக்குனருடன் உரையாடாது ஒரு தவறான புரிதலை ஏற்படுத்தும் பரப்புரையை எதுவித சிந்தனையும் இன்றி சமூகஊடகங்களில், கைத்தொலைபேசியூடாக பரப்பிய அனைவரும் தங்களின் செயல்பாடுகள்பற்றிச் சிந்திப்பார்கள் என எதிர்பார்ப்பதைவிட நாம் வேறு என்ன செய்துவிடமுடியும்?

”இப்படியானதொரு சமூகப்பிரக்ஞையற்ற சிந்தனைப் பாங்கினையும் செயற்பாடுகளையுமா” எமது இளையோர்களுக்கு கற்றுக்கொடுக்கப்போகிறோம்?

இதுவா விடுதலைவேண்டிநிற்கும் ஒரு சமூகத்தின் தூர நோக்குப் பார்வை?

இறுதி நாட்களில் மிக முக்கிய கதாபாத்திரம் நாடகத்தில் இருந்து திடீரென்று விலகிக்கொண்டபோது இயக்குனருக்கு ஏற்பட்ட அதிநெருக்கடியான சூழலில் அவர் தனது 13 வயது மகளை குறுகிய காலத்தில் தயார்படுத்தியிருந்தார். அச்சிறுமி ஒரிரு நாட்களே நீடித்த பயிற்சியுடன் மேடையில் தன் நடிப்பாற்றலை வெளிப்படுத்தி பலத்த பாராட்டைப்பெற்றுக்கொண்டது இந்நாடகம்பற்றிய உரையாடலில் மிக முக்கியமாகக் குறிப்பிடவேண்டியதொன்று.

நாடகம் முடிவடைந்தபின் இயக்குனர், இந்நாடகத்திற்கு எதிரான பரப்புரைகளை ஆரம்பித்தவர்களையும், அவற்றை முன்னெடுத்தவர்களையும் நோக்கி முன்வைத்த கேள்வியும் முக்கியமானது.

எனது நாடகம் பற்றிய தவறான கருத்துக்களை முன்வைத்து பரப்புரையை மேற்கொண்டவர்கள் ஏன் ஒருமுறை கூட என்னிடமோ அல்லது நோர்வே தமிழ்ச் சங்கத்திடமோ இந்நாடகத்தின் உள்ளடக்கம் பற்றி உரையாட முடியாமல் போனது? என்று எழுப்பிய வினாவானது அவர்களைச் சிறிதளவாவது சிந்திக்க வைப்பின் அது வளமான சிந்தனையே.

நாடகத்தின் மூலக்கருவினை இத்தலைப்பு பிரதிபலிக்கின்றது என்பதை நாடகத்தை மேடையில் கண்ணுற்ற பின்பு பார்வையாளர்கள் உணர்ந்தும் புரிந்து கொண்டுள்ளார் என்பதை அவர்களின் சம்பாசணைகள் தெளிவாக உணர்த்தியுள்ளன.

இவ்வளவு அழுத்தங்களுக்கு மத்தியிலும் நாடகத்தின் மூலக்கருத்தில் எதுவித சமசரமுமின்றி, முன் வைக்கப்பட்ட விமர்சனத்தைப் பிரதிபலிக்கும் வசனங்களையோ காட்சிகளையோ மாற்றியமைக்காது சவால்களை எதிர்த்து ஒரு நாடகத்தை மேடையேற்றுவது என்பது இலகுவானதல்ல. இதுவே ஒரு உண்மைக் கலைஞர்களின் ஆதார்மார்த்தமான, கலை மீதான பற்றைப் பிரதிபலிப்பதாகும்.

யாம் பெற்ற இன்பம்

இந்தப் பத்தி விவாதமேடைக்கானது அல்ல. மாறாக எமது சமூகத்தில் ஒரு உரையாடலை ஏற்படுத்தினால் மகிழ்வேன்.

ஓஸ்லோவில் அன்னைபூபதிபாடசாலை மற்றும் தமிழர்வள ஆலோசனை நிலையம் ஆகிய நிறுவனங்களுக்கும், இந்நிறுவனங்களை விடுதலைப்புலிகளின் காலத்தில் ஆரம்பித்தவர்களுக்கும் இடையில் பெரும் கருத்து முரண்பாடுகள் தோன்றியிருப்பதுமட்டுமல்லாது அவை இப்போது பொதுவெளியில் பேசுபொருளாகவும் மாறியிருக்கின்றன.

இவ்விடயத்தில் அன்னைபூபதி மற்றும் தமிழர்வள ஆலோசனை நிலையங்களில் கல்விகற்ற இளையோரும்  இந்நிறுவனங்கள் தொடர்பாக மாற்றுக்கருத்துக்களை முன்வைக்க முற்படுவதையும் அவதானிக்க முடிவதுடன் இவர்களுடைய கருத்துக்களுக்கு இளையோரிடமிருந்து காத்திரமான ஆதரவும் எழுந்துள்ளதை காண முடிகிறது.

எனது பத்தியின் நோக்கம் இவ் உள்ளக முரண்பாடுகளை ஆராய்வது அல்ல. மாறாக இவ்விடயத்திலுள்ள அறம்சார்ந்த தார்மீகம்பற்றிய எனது மனப்போக்கைப் பதிவதே இதன் நோக்கம்.

இதுபற்றிப் பேசுவதெனின் நான் ஏறத்தாழ 1990களின் நடுப்பகுதியில் இருந்து ஆரம்பிக்கவேண்டும்.

இக்காலகட்டத்திலேயே நோர்வேயில் விடுதலைப்புலிகளின் அமைப்புக்கள் பலமடைந்துகொண்டிருந்தன.

நான் அப்போது நோர்வேயின் வடமேற்குக் கிராமமொன்றில் வாழ்ந்திருந்தேன். அக்கிராமத்திற்கு அருகில் இருந்த வேறு இரண்டுகிராமங்களிலும் பல தமிழர்கள் வாழ்ந்திருந்தார்கள். அங்கு ஒரு தமிழ்ப்பாடசாலை எந்தவித சலசலப்பும் இன்றி ஓடிக்கொண்டிருந்தது.

அன்னைபூபதி பாடசாலையின் கிளையொன்றினை அங்கு ஆரம்பிக்கவேண்டும் என்பதற்காகவே அப்பாடசாலையை இயக்கிய விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்களைக்கொண்டு அச்சிறிய பாடசாலை பிளவுபடுத்தப்பட்டது.

அப்பிளவானது எவ்வளவு பெரிய பிரிவொன்றினை அந்த மூன்று கிராமங்களுக்கும் இடையில் ஏற்படுத்தியது என்பதை அங்குள்ளவர்கள் மட்டுமே அறிவர். இத்தனை ஆண்டுகள் கடந்தபின்பும்;  அப்பிளவின் வீச்சு இப்போதும் அச்சமூகத்தில் தன் தாக்கத்தை நிலைநிறுத்தியபடியே இருக்கிறது.
மேலே குறிப்பிட்டது ஒரு சிறு உதாரணமே. இதேபோன்று புலம்பெயர்ந்த நாடுகள் பலவற்றிலிருந்தும் பல கதைகளைக் கூறலாம்.

மாற்றுக்கருத்தாளர்கள் எவ்வாறு சமூகத்தில் இருந்து ஒதுக்கப்பட்டு, அவமதிக்கப்பட்டு, மலினப்படுத்தப்பட்டு, நகைப்பிற்குட்படுத்தப்பட்டார்கள், நோகடிக்கப்பட்டார்கள் என்றெல்லாம் நாம் மணிக்கணக்காய் உரையாடலாம்.

மாற்றுக்கருத்தாளர்களுடன் உரையாடுவதே கடுங்குற்றமாகப் பார்க்கப்பட்டு காலமது. துரோகி, ஒற்றர் என்ற பட்டங்கள் தாராளமாக விநியோகிக்கப்பட்டதும் அக்காலங்களிற்தான்.

காலம் 2009ஐ கடந்தபோது விடுதலைப்புலிகளுக்குள்ளும் பிளவுகள் ஆரம்பித்தன. ஜனநாயகநீரோட்டத்தில் தம்மை இணைத்துக்கொண்டவர்களில் எத்தனைபேர் தங்களின் கடந்தகாலத்தை, தாம் தமிழ்ச் சமூகங்களிடையே ஏற்படுத்திய பிளவுகளை, அவற்றிற்கான முனைப்புக்களை, மாற்றுக்கருத்தாளிகளை கையாண்ட முறைகள் தொடர்பான சுயவிமர்சனத்தைப் பொதுவெளியில்  முன்வைத்துள்ளார்கள்? இவர்கள் மிக மிக சொற்பமானவர்களே.

8 ஆண்டுகள் கடந்துபின்பு இப்போது, ஒருபோதுமில்லாதவாறு விடுதலைப் புலிகள்சார்ந்த அமைப்புக்களின் உள்ளகமுரண்பாடுகள் பொதுவெளியில் வெளிப்படையாகவே பேசப்படுகின்றன.

நான் கூறிய அந்த சிறுகிராமங்களில் வாழ்ந்த மக்கள் அக்காலங்களில் எவ்வாறு பிளவுபடுத்தப்பட்டார்களோ அதே பாணியில் இப்போது விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் பிளவுபட்டு ஒருவரை ஒருவர் விரோதிகளாகப்  பார்க்கத்தொடங்கியுள்ளார்கள்.

காலம் தனது வித்தையைக் காண்பிக்கத்தொடங்கியிருக்கிறது. அதிகாரம், அடக்குமுறை, ஏமாற்று போன்றவற்றால் காலமெல்லாம் ஒரு சமூகத்தை கட்டுப்பாட்டுக்குள் வைத்திருக்க இயலாது என்பதற்கு இதுவும் ஓரு சிறிய உதாரணம்.

இன்றுவரையான காலங்களின் நிகழ்வுகளில் இருந்து நாம் எதையாவது கற்றிருக்கொண்டுள்ளோமா? இல்லை என்றே கூறத்தோன்றுகிறது.
மற்றையவர்களை நோக்கி நாம் குற்றம் சுமத்தும்போது குறைந்தபட்சம் எமது முதுகுப்பையில் கனம் இல்லாது இருக்கவேண்டும் என்பது  குறைந்தபட்டச நடைமுறை வழக்கு.

தவறிழைப்பது மனித இயல்பு. ஆனால் அதுபற்றிய சிறு அக்கறையையேனும் வெளிப்படுத்தாது, தங்களால் அக்காலங்களில் பாதிக்கப்பட்டவர்களுடன், அவமதிக்கப்பட்டவர்களுடன், பிளவுபடுத்துப்பட்ட சமூகங்கள் தொடர்பாக எதுவுமே நடவாததுபோன்று காலத்தை நகர்த்துவது என்பது சமூக அக்கறையுள்ளவர்களின் செயற்பாடு எனக் கருதமுடியுமா?

மேற்கூறியதன் கருத்து தவறிழைத்தவர்கள் எவரும் தவறுகளைச் சுட்டிக்காட்ட முடியாது என்பதல்ல. ஆனாலும் இழைத்த தவறுகள்தொடர்பான பிரக்ஞையின்றி இருப்பது காத்திரமான சமூகப்போராளிகளுக்குரிய மனப்பாங்கு எனக்கொள்ள முடியுமா?

இக்கருத்தை எந்தவொரு அமைப்பைச் சார்ந்தும் நான் முன்வைக்கவில்லை என்பதைக் குறிப்பிட்டுக் கூறவிரும்புகிறேன்.

அதேபோன்று இன்று குற்றம்சாட்டப்படும் பகுதியினரும் கடந்தகாலங்களில் இருந்து கற்றுக்கொள்ளவேண்டியவை ஏராளமாகவே இருக்கின்றன. அவர்களும் சமூக அக்கறையை முன்னிறுத்திய செயற்பாடுகளை நோக்கி மாற்றங்களை உள்வாங்கும் தன்மையுடன் நகருதலும் அவசியம் எனக் கருதுகிறேன்.

இன்றைய புலம்பெயர் சமூக அரசியற் களநிலவரத்தில் 2009க்கு முன்னான காலம்போன்று, மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்புக்களை இயக்கலாம் என்ற எண்ணம் இப்போதும் உயிர்ப்பானது எனக் கருதுவதும், அவ்வாறான எண்ணங்கொண்ட செயற்பாடுகளில் அமைப்புக்களை ஈடுபடுத்த முனைவதும், அவற்றைப் பேண முன்வருகின்ற சிந்தனையை வளர்ச்சிப்போக்காக கருதலாமா?

ஆரோக்கியமான, சுதந்திரமான சுய சிந்தனைகளுடன் வளரும் இளையோரிற்கு, ஜனநாயகத்திற்கு மாறான கருத்துக்களை, செயற்பாடுகளைத் திணிப்பது அவர்களிடத்தில் எம்மைப்பற்றிய தவறான விம்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கும் என்பதையும் நாம் கருத்தில்கொள்ள வேண்டாமா?

சமூக அரசியற் களநிலவரங்களின் வளர்ச்சிப்போக்கிற்கு அமைய சமூகக்கட்டமைப்புக்களும், மக்கள்சார் நிறுவனங்களும் தங்களில் நெகிழவுத்தன்மைகளை ஏற்படுத்தி மாற்றங்களுக்கு தம்மை தகவமைத்துக்கொள்ளாவிடில் அவ்வமைப்புக்கள், மக்கள்சார்ந்த பொதுநிறுவனங்கள் மெதுமெதுவாகத் தங்கள் பலத்தை சமூகத்தில் இழந்துவிடும் என்பதே நடைமுறை யதார்தம் என்பதை நாம் புரிந்துகொள்ளவேண்டும்.

இதற்கு உதாரணமாக, பெரும் பாரிய பலத்துடன் இயங்கிய பல அமைப்புக்கள் 2009க்குப்பின் பலமிழந்துபோனதை எடுத்துக்காட்டாகக் குறிப்பிடமுடியும்.

கடும்போக்குவாதிகளுக்கு இவ்வாறான சமூகசெயற்பாட்டு இயங்குநிலைப்போக்கு ஏற்றுக்கொள்ளமுடியாததாக இருக்கக்கூடும்.

இருப்பினும் காலமும், சமூகமும் யதார்த்தவாதிகளுக்கு சார்பாகவே எப்போதும் இருந்துவந்துள்ளது என்பதையாவது இவர்கள் புரிந்துகொள்ளவேண்டும் என்பதே எனது பேரவா.

------------------
இப்பத்தியின் தலைப்பானது முரண்நகையாக இருக்கவேண்டும் என்பதற்காகவே வைக்கப்பட்டது. யாம் என்பது எமது சமூகத்தைக் குறிக்கிறது

வாழ்க்கை என்னும் மாயம்


வாழ்க்கை எப்படி நகரப்போகிறது என்பதை, காலம் இரகசியமாக வைத்துக்கொள்கிறது.

வருடத்தில் சில வாரங்களில் எனது மனதும், உடலும், களைத்து ஓய்ந்துவிடும். எதுவும் இயங்காது. மனமும் ஒருவித இருளில் வெளிச்சத்தை தேடியபடியே மிதந்துகொண்டிருக்கும். ஏறத்தாழ கடந்த 10 வருட அனுபவமிது.

இப்படியான நாட்கள் சடப்பொருட்களைப்போன்றவை. வாழும்போதும் கடந்தபின்பும் திரும்பிப்பார்த்தால் அங்கு உயிரிருப்பதில்லை.
இப்படியானதொரு வாரத்தை சில நாட்களுக்குமுன் கடந்துகொண்டேன். சிறு அசைவிற்கே சுருங்கும் தொட்டாச்சிணுங்கிபோல அல்லது அசைவைக் கண்ட ஆமையோல் என்னை உள் இழுத்துக்கொண்டேன். எவரையும் அருகில் அனுமதிக்கவில்லை, நானும் வெளியே எட்டிப்பார்க்கவில்லை.

இருபத்திநான்கு மணிநேரத்தில் பெரும் பகுதி படுக்கையில் கழிந்தது. மிகுதி தொலைபேசியைக் கிண்டுவதில் கடந்தது. எனது உலகத்தினுள் தொலைபேசி அழைப்புக்கள்கூட அனுமதிக்கப்படவில்லை.

சிலவேளைகளில் பல பக்கங்கள் வாசித்தபின்தான் புரியும், வாசிப்பில் மனம் லயிக்கவில்லை என்பது. மீண்டும் ஆரம்பத்தில் இருந்து வாசிப்பேன். இப்போதும் வேதாளம் முருக்கையேறியிருக்கும்.

இப்படியான காலத்தை அதன்படியே கடந்துவிடுவதே சிறந்தது என்று அனுபவம் கற்றுத்தந்திருக்கிறது. கருக்கல் வெளிச்சம் ஒளிர்வதுபோன்று இந்தக் கடினமான காலமும் மெதுமெதுவாக மறைந்துபோகும். காலம் இதையும் நிர்ணயித்திருக்கும்.

இப்படியான கருக்கல் வெளிக்கும் ஒருநாள், வானம் நீலமாயும் காற்று வெப்பமாயும் இருந்தது. என்னை வருத்தி வெளியே அழைத்துப்போனேன். நகரத்தின் சாலையோரமாக நடந்துகொண்டிருந்தேன். புத்தனுக்கு ஞானம் தந்த காட்சிகள்போன்று சாலையெங்கும் வாழ்க்கை வியாபித்திருந்தது.

மண்டியிட்டபடி, தலையை நிலத்தில் முட்டுக்கொடுத்தபடியே பிச்சை கேட்ட கிழக்கைரோப்பிய பெண்.

வீதியோரப் பூங்காவில் பதநீர் கதகதப்பில் தன்னை மறந்திருக்கும் இந்நாட்டின் குடிமகன்.
காப்பிக்கடையின் இருக்கையில் இருந்தபடியே கண்மூடி காப்பியை உறுஞ்சும் இளைஞன்

அவ்வப்போது காதலியின் உதட்டினை சுவைக்கும் காதலி. காதலனின் காதலைவிட தன் காதல் அதிகம் என காண்பிக்கும் அவளது அணைப்பு.
நடக்க முடியாது தடுமாறும் துணைவரின் கையைப்பற்றியவாறு மெதுமெதுவாக நடந்துபோகும் வயதான பெண்.

அழகுசாதனக் கடையின் முன் மயங்கிநிற்கும் பதின்மவயதினர்

தனது நாயுடன் உரையாடி, அதனை அணைத்து, அதனை தடவிக்கொடுக்கும் ஒரு மனிதன்.

வீடற்ற ஒரு மனிதனின் வீதியோரத்து வாழ்க்கை.

கறுப்புக்கண்ணாடியுடன் அலட்சியமாக உலகத்தைப் பார்த்தபடியே தனது விலையுயர்ந்த வாகனத்திலேறும் செல்வந்தன்.

வீதியோரத்தில் அநாதரவாய் இறந்து கிடக்கும் பறவை

பேரூந்திற்காய் காத்திருக்கும் மனிதர்கள்

அழுக்கான உடையுடன், தன்னுடன் பெரிதாய் உரையாடியபடியே உலகத்தை பரிகசிக்கும் உளநலமற்ற மனிதன்

பலத்த சிரிப்புடன் கடந்துபோகும் நண்பர்கள் குழாம்

காதலனின் உதட்டினை கவ்வும் சுவைக்கும் காதலி. காதலனின் காதலைவிட தன் காதல் அதிகம் என காண்பிக்கும் அவளது அணைப்பு.

தனது நாயுடன் உரையாடி, அதனை அணைத்து, அதனை தடவிக்கொடுக்கும் ஒரு மனிதன்.

தந்தையின் கையைப்பற்றியபடியே நடைபயிலும் ஒரு குழந்தை. அவள் விழுந்துவிடாதிருக்கவேண்டும் என்று பதைபதைத்துக்கொண்டு அவளுடன் பயணிக்கும் தந்தை.

ஒரு காப்பிக் கடையினுள் உட்கார்த்திருந்தவாறு தேனீரினை உறுஞ்சியபடி கண்ணுற்ற காட்சிகளை, மனது செரித்துக்கொண்டிருந்தது வீதியில் கண்டவர்களுடன் ஒப்பிடும்போது எனதுஎவாழ்க்கை அப்படியொன்றும் மோசமானது அல்ல என்பது ஆறுதலாயிருந்தது.

களைத்திருந்த மனதும் உடலும் சற்று ஆறியிருப்பதாய் உணர்ந்துகொண்டேன். மனதில் நம்பிக்கை துளிர்த்திருந்தது. தூரத்திலிருந்த சூரியனின் மாலைநேரத்து மஞ்சள்;ஒளியும், வெம்மையும் எதையோ உணர்த்திக்கொண்டிருந்தன.











ஆசான்களைக் கொண்டாடுவோம்


நேற்று (10.05.2017) ஆசிரியர் தினம்.

எனது முதல் ஆசான் எனக்கு நடைபழக்கிய எனது தாயாராகத்தான் இருக்கமுடியும். இப்போது அவருக்கு வயது 84. நேற்று அவருடன் தொலைபேசினேன்.

முதுமையின் உலகில் மிதந்துகொண்டும் அலைந்துகொண்டும் இருக்கிறார் அவர். காலத்தோடு அவருக்கிருக்கும் கணக்கு அது.

எனது மகள்களின் பெயர்களையும் காலம் அவரிடம் இருந்து பறித்துக்கொண்டுவிட்டது என்பது வேதனையான உண்மை.

ஆனால் என் பேராசான் அவர் நினைவில் இருந்து இன்னும் மறையவில்லை. அவருடன் பேசும்போது சுகம் விசாரித்ததாகச்சொல் என்றார்.

அது இருக்கட்டும்.

எனது ஆசான்களில் அசைக்க முடியாத தனியிடத்தை மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரின் முன்னைநாள் அதிபரான எனது பேராசான் பிரின்ஸ் சேர் (பிரின்ஸ் காசிநாதர்) பெற்றிருக்கிறார்.

அவர் தனது 92வது வயதில், தன்னந்தனியே வாழ்கிறார். மட்டக்களப்பில் அவர் வாழும் வீதியின் பெயர் Love lane.

அவருடன் தொலைபேசினேன். என்னை அவர் இன்றுவரை மறக்கவில்லை என்பதை அவர் பேச்சு எடுத்துக்காட்டியது.

தளர்ந்த சிங்கத்தின் குரலில் பேசினார்.

தொலைபேசியின் ஊடாக அவர் மூச்சு பெரிதாகக் கேட்டுக்கொண்டிருந்தது.

சஞ்சயன், எனக்கு 92 வயதாகிவிட்டது. அண்மையில் தன்னிலை மறந்து வீதியில் அலைந்து திரிந்ததாக என்னை அறிந்தவர்கள் இப்போது கூறக்கேட்கிறேன் என்று அவர் கூறியபோது...

”ஆம், அன்று மாலையே அச்செய்தி எனக்குக் கிடைத்தது. உங்கள் மாணவர்கள் உங்களை தாங்கிக்கொண்டார்கள்“ என்றேன்.

”மிக மோசமான கண்டிப்புடைய ஒரு ஆசிரியனில் இத்தனை கரிசனம் காட்டும் என் மாணவர்களின் அன்பில் திக்குமுக்காடிப்போகிறேன்.“ என்றார்.

விரைவில் high jump போட்டியில் வென்றுவிடுவேன் என்று தனது முதுமையின் அந்திமத்தை அவருக்கேயுரிய நகைச்சுவையுடன் குறிப்பிட்டார். சிரிக்க முடியாத நகைச்சுவை அது.

உனது தம்பி, தங்கை, தாயார் ஆகியோருக்கு எனது அன்பைத் தெரிவி என்றபோது, நெகிழ்ந்து கரையத்தான் முடிந்தது.

எமது உரையாடல் முடியும்போது, மகன், முற்பிறப்பில் நீ எனது மகனாய் இருந்திருக்கவேண்டும். உனது அன்பிற்கும், என் மீதான உன் கரிசனைக்கும் ஆண்டவர் உன்னை ஆசீர்வதிக்கட்டும், என்று கூறியபோது அவர் கரம்பற்றி ஆறுதலாய் இருக்கத்தோன்றியது.

ஆசிரியன் என்பவன் காலம் கடந்தவன். அவனே உலகின் பெரும் படைப்பாளி.

என்னையும் வழிப்படுத்திய இன்றும் வழிப்படுத்திக்கொண்டிருக்கும் அனைத்து ஆசிரியர்களுக்கும் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்.

நீவிர் இன்றி அடியேன் இல்லை.

விலங்குப்பண்ணையின் மேலிடம்


அது ஒரு மிகப்பெரிய விலங்குப்பண்ணை.

அங்கு திடீர் என ஒரு விளம்பரம்.

எமது பண்ணையின் வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள சில மிருகங்கள் நோயுற்றிருப்பதால், நாம் எமது கலைநிகழ்வின் மூலமாக «நோய் நிவாரண நிதி» சேகரிக்கிறோம். வருக வருக. வந்து ஆதரவு தருக.

இதைக் கண்ட கிழக்குக் கழுதையொன்று “கிழக்கில் எந்தப் பகுதியில் உதவப்போகிறோம்?“ என்று

குறுஞ்செய்தி,
முகப்புத்தக உரையாடற்தளம்,
மெசேஞ்சர்,
மின்னஞ்சல்,
தொலைபேசி

ஆகியவற்றின் ஊடாக, பணிவுடன் கேட்டிருந்தது.

வாரங்கள் கடந்ததே தவிர மேலிடத்தில் இருந்து பதில் ஏதும் இல்லை.

இதில் இருந்து கழுதை சிலவற்றைப் புரிந்துகொண்டது.
  • All animals are equal but some animals are more equal than others"
  • கழுதைகள் பேசுவதற்கு அருகதையற்றவை
  • கிழக்கு வியாபாரத்திற்கு உகந்த இடம்
  • மேலிடத்திடம் கேள்விகேட்பது தேசியத்திற்கு விரோதமானது
George Orwell ஒரு தீர்க்கதரிசி

மெதுவாய் மங்கும் காலம்

அம்மா எனக்கு பிறந்தநாள் வாழ்த்து அட்டைகள் அனுப்பத்தொடங்கியது, நான் கொழும்பில், எனது மாமாவீட்டில் தங்கியிருந்து கல்விகற்கத்தொடங்கியபோதுதான். காலம் 1972. அந்நாட்களில் தமிழ்ப்பாடசாலைகள் இல்லாத பிபிலையில் பணிபுரிந்துகொண்டிருந்தனர் அம்மாவும் அப்பாவும்.

அன்று தொடக்கம் தொடர்ந்து எனது பிறந்த நாளுக்கு வாழ்த்து அட்டை வரும். இறுதியாக கடந்த ஆண்டும் அனுப்பியிருந்தார்.

அம்மாவின் எழுத்து அத்தனை அழகு. 84 வயதிலும். அச்சுக்கோர்த்தது போன்று எழுதுவார். எழுத்தைக் கண்டதும் அது அம்மாவிடம் இருந்துதான் வந்திருக்கிறது என்பது புரியும்.

பிறந்தநாளுக்கு ஒரு மாதத்திற்கு முன்பே வாழ்த்து அட்டை அனுப்பிவிட்டு வந்ததா? வந்ததா? என்று கேட்டபடியே இருப்பார்.

பிறந்தநாள் அன்று கட்டாயமாக அவரே தொலைபேசுவார். வாழ்த்துவார். “சந்தோசமாக இரு“ என்பார்

இந்தவருடம் வாழ்த்து அட்டை ஏதும் வரவில்லை. அம்மா தொலைபேசவும் இல்லை.

நானே தொலைபேசினேன். சற்று நேரம் உரையாடியதும் அம்மா எனது பிறந்தநாளை மறந்திருப்பது புரிந்தது. நானும் அதனை நினைவூட்டி அவரை சங்கடப்படுத்த விரும்பவில்லை. உரையாடல் முடிந்தபின்பு அம்மாவின் மடியில் தலைசாய்த்திருக்கவேண்டும் போலிருந்தது.

அம்மா தன்னைச்சுற்றியிருக்கும் உலகத்தை மெது மெதவாக மறந்துகொண்டிருக்கிறார். முதுமை அவரை மெது மெதுவாக விழுங்கிக்கொண்டிருப்பது என்னைப் பயங்கொள்ளவைக்கிறது.

ஆனால், அம்மாவோ கவலையைப்பற்றி கவலைகொள்ளாதிருக்கக் கற்றுக்கொண்டுவிட்டார்.

முதுமை வரமா? சாபமா?

பறக்கும் கம்பளம்


சில வாரங்களுக்கு முன், எனக்கு நன்கு அறிமுகமாகிய ஒரு தம்பதியினருடன் அவர்களது மகளைக் காணக்கிடைத்தது. அவளுக்கு மாயா என்றொரு அற்புதப் பெயர். இரண்டுவயது. முத்துப்போன்ற பற்கள். நிறைந்த சொக்கு, தீர்க்கமான கண்கள், நெளி நெளியான, மினுங்கும், வாசனையுடைய பட்டுப்போன்ற தலைமுடி.

ஒரு தேனீர்க்கடையினுள்தான் அவளைக் கண்டேன். குழந்தைகளின் அருகில் செல்லும்போது கிடைக்கும் பரிசுத்தமான அலைவரிசையை மனது உணர்ந்துகொண்டிருக்க, அவளருகே உட்கார்ந்திருந்து, அவளுடன் விளையாடிக்கொண்டிருந்தேன். முன்னே உட்கார்ந்திருந்த அவளின் தாய் தந்தையர் மறைந்துபோனார்கள். அதன்பின் உலகமும் மறைந்துபோனது. எமக்கான ஒரு அற்புத உலகம் திறந்துகொண்டது. அப் புதிய உலகில் ஏறத்தாழ 50 வயது வித்தியாசமுடைய அவளும் நானும் மட்டுமே இருந்தோம்.

இப்படியான ஒரு அனுபவம் அண்மையில் எனக்கு வாய்திருக்கவில்லை. அதனை அனுபவித்து பல ஆண்டுகள் ஆகிவிட்டன. எனது குழந்தைகள் இருவரும் பெண்குழந்தைகளே. அவர்களுக்கிடையில் 4 வயது இடைவெளியுண்டு. மூத்தவளுக்கு 20 வயதாகிறது இப்போது.
எனது பால்யத்துக்காலம் தொடக்கம் குழந்தைகள் என்றால் எனக்கு மிகவும் பிடிக்கும். ஆனாலும் நான் தந்தையான பின்பே குழந்தைகளுடனான எனது உறவு முற்றிலும் வேறுபடத் தொடங்கியது. குழந்தைகளைப் பார்ப்பது, ரசிப்பது, அவர்களுடன் பழகுவது, அவர்களுடன் விளையாடுவது, அவர்களை தூக்குவது என்று அனைத்திலும் மனதினை அமைதிப்படுத்தும ஒரு மென்மையான குதூகலப்படுத்தும் ஒரு உணர்வு உண்டு என்பதை கண்டுகொண்டிருக்கிறேன். நான் என்னை முற்றிலும் மறந்துபோகும் நிலை அது.

எனது குழந்தைகளில் மட்டும் இவற்றை நான் உணர்ந்ததில்லை. நான் பழகும் அனைத்துக் குழந்தைகளிலும் இந்த பரிசுத்தமான உணர்வினை அனுபவிக்கிறேன். குழந்தைகளின் நம்பிக்கையை பெறுவது என்பது இலகு அல்ல. முதல் முறை அவர்களைக் காணும்போது நாம் எவ்வாறு அவர்களைக் கையாள்கிறோம் என்பதில் தங்கியிருக்கிறது எதிர்காலத்து உறவு. இதை நான் உணர்ந்தபோது ஒரு குழந்தை என்னைக் கண்டால் பயந்து ஓடத்தொடங்கியிருந்தது.

வடக்கு நோர்வேயில் கல்விகற்றுக்கொண்டிருந்த காலத்தில் எனது ஆசிரியர்கள் சிலரின் வீடுகளுக்கு அருகில் ஒரு வருடம் தங்கியிருந்தேன். அங்கிருந்த ஒரு ஆசிரியருக்கு ஒரு பெண் குழந்தை. அவளுக்கு அப்போது 2 வயதிருக்கும். முதல் நாள் அவளைக்கண்டபோது அவளுக்கு பின்புறமாக நின்றுபாஆஆஆஎன்று சத்தமிட்டேன். பயந்து அழுதபடி வீரிட்டுக் கத்தியபடியே திரும்பிப்பார்த்தாள். அதன் பின் என்னைக் கண்டாலே அழத்தொடங்கினாள். அந்த ஒரு வருடமும் என்னைக் கண்டதும் அழுதாள். அங்கிருந்த ஏனைய ஆசிரியர்களுக்கும் சிறிய குழந்தைகள் இருந்தார்கள். அவர்களுடன் நான் நட்பாயிருந்தேன். ஆனால் அந்த பெண்குழந்தை மட்டும் என்னுடன் நட்பாகவே இல்லை. அதன்பின் நான் குழந்தைகளை பயமுறுத்துவதை நிறுத்திவிட்டேன்.

இப்போது என்னுடன் நட்பாகாத குழந்தைகளே இல்லை. குழந்தைகளுடனான நட்பு வாழ்வின் மிகவும் வலிமிகுந்த காலத்தை கடந்துகொள்ள உதவியது. உதவிக்கொண்டிருக்கிறது. வளர்ந்தோருடனான எனது நட்பு மிகவும் மட்டுப்படுத்தப்பட்டது. விரல்விட்டு எண்ணலாம் எனது நண்பர்களை. ஆனால் எனக்கு பல குழந்தைகள் நட்பாக இருக்கிறார்கள்.

அவர்களில் பலர் என்மீது காட்டும் நம்பிக்கை வாழ்வின் மீதான பிடிப்பினை தக்கவைத்துக்கொள்ள உதவியிருக்கிறது. எங்கு என்னைக் கண்டாலும் எதுவித முன் கற்பிதங்களும் இன்றி தூய்மையான அன்புகலந்த புன்னகையுடன் ஓடிவந்துசஞ்சயன் மாமாஎன்னும் அவர்களது அன்பின் கரைந்துபோகும் நேரங்கள் வாழ்க்கையின் மீது நம்பிக்கையையும் புத்துணர்ச்சியையும் தந்திருக்கின்றன.

குழந்தைகளுடனான உரையாடல்கள் எப்போதும் அழகானவை. கருப்பொருள்களும் அப்படியே. ஆண் குழந்தைகளின் கருப்பொருள்களும் பெண் குழந்தைகளின் கருப்பொருள்களும் வெவ்வேறானவையாகவே இருக்கும். ஆண் குழந்தைகள் விளையாட்டு, திரைப்படங்கள், கணிணி என்று உரையாட விரும்புவார்கள். இவர்களை மென்மையான மனித உறவு, இயற்கை, சூழல் என்று பேசவைப்பதற்கு முயற்சிப்பேன். ஆனால் பெண் குழந்தைகள் பொம்மைகள், நிறங்கள், சித்திரம், உணவு, நட்பு, புத்தகங்கள் என்று பேசினாலும் இயற்கை, சூழல் என்பவற்றில் அதிக கவனமாய் இருப்பார்கள்.

குழந்தைகளிடம் இருந்து நான் கற்றுக்கொண்டது அதிகம். பெரியவர்களிடம் இல்லாத மனிதநேயத்தை, உதவும் மனப்பான்மையை, மிருங்களிடம் அவர்கள் காட்டும் நட்பை, இயற்கையின் மீதான அவர்களது கவனம், விருப்பம் என்பவை என்னை சிந்திக்கவைத்திருக்கின்றன. வாழ்க்கை மீதான அயர்ச்சி வளர்ந்த மனிதர்களான எம்மை வாழ்க்கையின் மகிழ்ச்சியான பக்கங்களை அனுபவிப்பதை தடுக்கிறதோ என்று நான் எண்ணுவதுண்டு. அப்படியும் இருக்கலாம்.

குழந்தைகளிடம் நான் கண்டுகொண்டு இன்னுமொரு அழகிய பழக்கம்சிரிப்பு. ஒரு சம்பாசனையின்போது எத்தனை முறை அவர்கள் சிரிக்கிறார்கள், புன்னகைக்கிறார்கள் என்பதை அவதானியுங்கள். அதேபோல் வளர்ந்தவர்களுடனான உரையாடலில் அவர்கள் எத்தனை முறை சிரிக்கிறார்கள் என்று பாருங்கள். குழந்தைகள் ஒரு நாளைக்கு 400 முறையும் வளர்ந்தோர் 25 முறையும் சிரிக்கிறார்கள் என்று வாசித்திருக்கிறேன். சிரிக்கும்போது எமது மனமும் இலகுவாகின்றது. சுற்றாடலையும் நாம் மகிழ்வாக்குகிறோம். இங்கும் குழந்தைகள் எமக்கு கற்பிக்கிறார்கள். குழந்தைகளின் சிரிப்பின் ஒலிகூட மனதுக்கு அற்புதமானதொரு மருந்து. அந் நேரங்களில் அவர்களின் முகத்தில் ஏற்படும் மாற்றங்கள் வானவில்லைப்போன்று அழகாயிருக்கும்.

மனம் வருந்தியிருக்கும் குழந்தையை, அழும் குழந்தையை, ஏதோ ஒன்றிற்காக அச்சப்படும், ஏங்கித் தவிக்கும் குழந்தையை ஆறுதல்படுத்தியிருக்கிறீர்களா? குழந்தையின் மனதோடு ஒன்றிப்போய் அதன்வலியை உணாந்து அணைத்து, அறுதல்படுத்தி, நம்பிக்கையூட்டி அவர்களை அமைதிப்படுத்தும்போது அவர்களின் மனதில் ஏற்படும் ஆறுதலான அமைதியின் ஓசையை உணர்ந்திருக்கிறீர்களா? ஒரு மனிதனை உயிர்ப்பிப்பதற்கு ஒப்பான அற்புதமான உணர்வு அது. விக்கி விக்கி அழும் குழந்தை மூச்சை ஒவ்வொரு முறையும் விக்கி விக்கி உள்ளே இழுக்கும்போது உங்களின் மூச்சும் திணறுகிறது எனில் நீங்கள் பெருவாழ்வு வாழ்கிறீர்கள் என்று அர்த்தம். குழந்தைகளை தேற்றுவது என்பது ஒரு கலை. தாய்மார்களுக்கு அது இயற்கையாக அமைந்திருக்கிறது. சில அப்பாக்களுக்கும்தான்.

குழந்தைகளின் முன்னால் எப்போதாவது முட்டாளாக நடித்திருக்கிறீர்களா? அது ஒரு பெரும் கலை. இந்தப் பெரிய மனிதனுக்கு ஒன்றுமே தெரியவில்லை என்று அவர்களை நினைக்கவைக்கவேண்டும். உங்களுக்குத் தெரியாததை கற்பிக்க முனையும் அவர்களுடைய மனது மகிழ்ச்சியில் நிறைந்திருக்கும். தம்மை ஒரு பெரிய மனிதாக நினைத்தபடி எமக்கு கற்பிக்கும் அவர்களது சொல்லாடல்கள், செய்கைகள், முகபாவனைகள் என்று அந்த உலகம் பெரியது.

ஒரு முறை 5 வயதான ஒருத்தியிடம் ஒரு சிவப்புப் பூ ஒன்று இருந்தது. நான் அவளிடம்ஏன் பச்சை நிறமான பூவைத்திருக்கிறீர்கள் என்றேன். தலையில் கையை வைத்தபடியேஉங்களுக்கு ஒன்றும் தெரியாது என்றாள்.” அதன்பின்னான அந்த மாலைப்பொழுதில் நான் நிறங்களை அவளிடம் இருந்து கற்றுக்கொண்டேன். அந்த மாலைப்பொழுது அழகானதாய் மாறிப்போனது. கடந்துபோன காற்றும் சற்று நிதானித்து எங்களை பார்த்தபடியே கடந்துபோயிருக்கும்.

குழந்தைகளுக்கு கதை சொல்வது எனக்குப்பிடிக்கும். பெண்குழந்தைகளுக்கு ஒருவித கதைகளும், ஆண் குழந்தைகளுக்கு இன்னொருவித கதைகளுமே பிடிக்கின்றன. குடும்ப உறுப்பினர்கள், அமைதியான மிருகங்கள், நிறங்கள், இயற்கை, அமைதியான நீரோட்டம் போன்ற சம்பவங்கள் உள்ளடங்கிய கதைகளை பெண்குழந்தைகளக்கு பிடிக்கும். ஆனால் ஆண் குழந்தைகளுக்கு விறுவிறுப்பான கதைகள், அரக்கர்கள், மூர்க்கமான மிருகங்கள், ஓடுதல், பாய்தல், வேகம் என்ற கதைகளை; பிடிக்கும். என்னிடம் பெண்குழந்தைகளுக்கான கதைகள் அதிகம் உண்டு. அதில் பல என்னால் உருவாக்கப்பட்டவை. என் குழந்தைகளை அரக்கர்களிடம் இருந்தும் பூதகணங்களிடம் இருந்து பறக்கும் கம்பளத்தில் காப்பாற்றி அழைத்து வந்திருக்கிறேன். வாய்பிளந்திருந்து கதை கேட்டிருப்பாள்கள் என்னவள்கள்.

குழந்தைகளை உறங்கவைப்பதும் எனக்குப் பிடிக்கும். எந்தக் குழந்தையும் மனம் அமைதியில்லாதபோது அல்லது நம்பிக்கையில்லாதவர்களின் கையில் உறங்காது. உங்கள் கையில் ஒரு குழுந்தை உறங்கிப்போகிறது என்றால் நீங்கள் அதிஸ்டசாலி. மெதுவாய் தாலாட்டுப்பாடி அல்லது ஒரு ஆறுதலான ஒலியெழுப்பி குழந்தைகளை தூங்கவைக்கும்போது என் மனமும் ஒருநிலைப்படுவதை நான் உணர்ந்திருக்கிறேன். தூக்கத்தின் மயக்கத்தில் பாரமாகிப்போகும் இமைகளையும், தூங்கிப்போனபின் முகத்தில் வந்தமரும் பேரமைதியும், சீராக மூச்சும்அப்பப்பா அது ஒரு அற்புதமான அனுபவம்.

குழந்தைகளின் உலகம் அற்புதமானது. அதற்குள் நுழையும் தகுதி எமக்கு உண்டா இல்லையா என்பதை குழந்தைகள் அறிவார்கள். நாம் அவர்களின் உலகத்திற்குள் அனுமதிக்கப்பட்டால் அதைவிட பேரதிஸ்டம் வேறெதுவும் இல்லை. இந்த விடயத்தில் நான் பெரும்பேறு பெற்றவன்.


பேரின்ப முக்தியடைய விரும்புபவரா நீங்கள். அப்படியாயின் நீங்கள் தேடும் முக்தி உங்கள் வழிபாட்டுத்தலங்களில் இல்லை.