இரண்டு கைகளையும் இழந்த முன்னாள் போராளியின் கதை

அன்றொருநாள் நாம் ஒருவரை சந்திப்பது என்று முடிவு செய்திருந்தோம். ஆனால்  எம்மிடம் ‌ அவர் பற்றிய தகவல்கள் எதுவும் இருக்கவில்லை.

அவரை ஒருவர் சைக்கிலில் ஏற்றிச் செல்லும் நேரங்களில் எனது நண்பர் அவரைக் கண்டிருக்கிறார். அவருக்கு இரு கைகளும் இல்லை என்று நண்பர் கூறியவுடன் நான் அவரைச் சந்திக்கவேண்டும் என்றேன். எனது நண்பர் தனது தொடர்புகளை முடுக்கிவிட்டார். சில நிமிடங்களில்  ஒரு கிராமத்தின் பெயரைச் சொல்லி அவர் அங்கு வசிக்கக்கூடும் என்று ஒரு தகவல் வந்தது.

சற்று நேரத்தில் மோட்டார்சைக்கில் குறிப்பிட்ட அந்தக் கிராமத்தை நோக்கி  மட்டக்களப்பில் இருந்து மேற்குப்புறமாக கிறவல் பாதைகளில் பயணித்துக்கொண்டிருந்தது. வறண்டு போன வயல்நிலங்கள், கைவிடப்பட்ட இராணுவமுகாம்கள், பனைமரங்கள்,  ‌காய்ந்த புற்களை மேயும் கால்நடைகள், மட்டக்களப்பு வாவி என்று காட்சிகள் எங்களைக் கடந்துகொண்டிருந்தன.

கடந்த இரண்டு வாரங்களாக மோட்டார்சைக்கிலின் பின்புறத்தில் உட்கார்ந்திருக்கும் போது கடைப்பிடிக்கவேண்டிய யுக்திகள் எனக்கு பழக்கப்பட்டிருந்ததனால் பள்ளம் திட்டிகளில் இருந்து எனது உடலின் முக்கிய பகுதி ஒன்றினை சேதமின்றி பாதுகாத்துக்கொள்ள கற்றுக்கொண்டிருக்கிறேன். நாம் சென்ற பாதைகளினால் சைக்கில் அல்லது மோட்டார் சைக்கில்களில் மட்டுமே பயணிக்கமுடியும்.  மழைக்காலம் என்றால் அதுவும் இல்லை.

கிழக்கின் வசந்தம் இப்பகுதிகளுக்கு வீதிகள் என்னும் பெயரிலாவது இன்னும் வந்து சேரவில்லை என்பதே அப்பட்டமான உண்மை.

ஆங்காங்கே நீர் நிலைகள், வாய்க்கால்கள் தென்படத்தொடங்கின. சிறு மதகுகளில் இருந்து சிறுவர்கள் வாய்க்கால் நீருக்குள் குதித்துக்கொண்டிருந்தார்கள். எருமைகள் சில மேய்ந்து கொண்டிருந்தன. கொக்குகள் எதற்காகவோ காத்திருந்தன.

ஒரிடத்தில் நிறுத்தி நாம் சென்றுகொண்டிக்கும் பாதையை உறுதி செய்துகொண்டோம். வெய்யிலின் உக்கிரம் தாங்கமுடியாததாய் இருந்தது.  ஏறத்தாள  ஒன்றரை மணிநேரத்திற்குப் பின் குறிப்பிட்ட அந்தக் கிராமத்திற்கு வந்த சேர்ந்தோம். இருசிறுவர்கள் சைக்கில் பழகிக்கொண்டிருந்தார்கள். அவர்களிடம் அவரின் அடையாளங்களைக்  கூறியபோது  அவரின் வீட்டை அடையாளம் காட்டினார்கள்.

அவரின் வீட்டிற்குச்சென்று பரஸ்பர அறிமுகம் செய்துகொண்டோம். அவரின் முகத்தில் எம்மைப் பற்றிய  நம்பிக்கை இருக்கவில்லை. வீட்டுக்கதவுக்கு பின்னால் இருந்து ஒரு பெண் எம்மை கவனித்துக்கொண்டிருப்பது தெரிந்தது.

நான் யார்,  நாம் வந்திருப்பதன் நோக்கம் பற்றி அறிவித்தேன். சற்று நேரம் பொதுவாகப் பேசிக்கொண்டிருந்தோம். என்னிடம் அவருக்கு தருவதற்கு தற்போது எதுவுமில்லை என்றும் ஆனால் யாராவது உதவ முன்வந்தால் அவர்களை நேரடியாக அவரிடம் தொடர்பு படுத்துவதாக கூறியதும் அவருக்கு சிறிது நம்பிக்கை வந்திருக்கவேண்டும். மிகவும் அவதானமாகப் பேசத் தொடங்கினார்.

உங்களைப் போன்று பல நாடுகளிலும் இருந்து பலரும் வந்து போயிருக்கிறார்கள். பல உத்தரவாதங்களை தந்திருக்கிறார்கள் ஆனால் இதுவரை  தனக்கு எதுவித உதவிகளும் கிடைக்காதனால் தான் எவரையும் நம்புவதில்லை என்றார். நோர்வேயில் இருந்தும் ஒருவர் வந்து தன்னை பேட்டிகண்டதாகவும்  உங்களுக்கு  செயற்கைக் கை பூட்டலாம் ன்ற உத்தரவாதங்களை  தந்ததாகவும் கூறி அவர் பெயரை நினைவில் நிறுத்த முயற்சித்துக்கொண்டிருந்தார்.

அவருக்கு தற்போது வயது 49 ஆகிறது. 16 வருடங்களுக்கு முன் போலீசார் வீடு புகுந்து வெட்டியதில் கைகளை இழந்துள்ளார். வெட்டுப்பட்ட ஒரு கால் வைத்தியர்களின் திறமையினால் தப்பியிருக்கிறது. முழங்காலில் வெட்டுப்பட்டிருக்கிறது. சாரத்தை முழங்கால்வரை தூக்கி வடுக்களைக் காண்பித்தார்.

தனது இளமைக் காலத்தில் இருந்தே ஈரோஸ் இயக்கத்தில் செயலாற்றியிருக்கிறார். இரண்டு மாதங்கள் கிழக்கின் பெருந்தளபதி ஒருவரின் காலத்தில் கைதுசெய்யப்பட்டு ”பங்கரில்” இரு மாதங்கள் வைக்கப்பட்டு பின்பு விடுவிக்கப்பட்டதாகக் கூறினார். விடுதலைக்காய் புறப்பட்ட எனக்கு  எம்மவர்களால் கிடைக்கப்பெற்ற தண்டனையே வலிமிகுந்தது என்ற போது அதை அவரது குரலும், கண்ணும் உறுதிப்படுத்தின.

அவரின் உடற்காயங்கள் ஆறிய காலங்களிக் பின் அவரின் தந்தையே அவருக்கு சகலமுமாய் இருந்திருக்கிறார்.  தற்போது தந்தை பாரிசவாத நோயினால் பாதிக்கப்பட்டபின் உறவினரான ஒரு பெண் இவரை விரும்பித் திருமணம்முடித்திருக்கிறார்.

அங்கவீனமான பின் அவரின் கிராமத்தில் உள்ள குழந்தைகளுக்கு கற்பித்தும்,  தற்போது அங்கவீனமானவர்களின் சங்கத்துக்கு தலைவராகவும், கிராமத்தின் பேச்சாளராகவும் இருந்திருக்கிறார், இருக்கிறார். தனக்கு காலால் எழுதமுடியும் என்று கூறி ” வருகைக்கு நன்றி” என்று எழுதியும் காட்டினார்.

அண்மையில் ஊருக்குள் இராணுவத்தினரின் அநியாயமான கெடுபிடிகள் அதிகமாக இருந்தபோது அது பற்றி  ஊர்மக்களுடன் சேர்ந்து  இராணுவத்தளபதியுடன் பேசிய போது இராணுவத்தளபதி ”இவனுக்கு கையை வெட்டியமாதிரி  நாக்கையும் வெட்டவேணும்” என்று சக இராணுவத்தினரிடம் சிங்களத்தில் கூறியிருக்கிறார். இருப்பினும் தளராது இன்றும் சமூகத்திற்காக உழைத்தபடியே  இருக்கிறார்.

திடீர் என்று அந்த நோர்வேயில் இருந்து வந்து வாக்குறுதி தந்தவரின் பெயரின் முன்பகுதியைக் கூறினார். எனக்குத் தெரிந்த ஒரு நோர்வே பிரபலத்தின்  பெயரையும் அங்க அடையாளங்களையும் கூறி அவரா எனக் கேட்ட போது  ” ஆம் தெரியுமா அவரை உங்களுக்கு?  எனக்கு செயற்கைக்கை பூட்ட உதவுவதாகச் சொன்னார்” என்ற அவரின் குரலில் இருந்த ஆர்வத்திலும், அதன் பின் அவர் செயற்கைக் கை பூட்டுவது பற்றி என்னிடம் உரையாடிய விதத்திலும் அவர் இன்னும் தனக்கு செயற்கைக்கைகள் பூட்டப்படலாம் என்ற நம்பிக்கையை முற்றாக இழக்கவில்லை என்பதை உணர்ந்து‌கொண்டேன்.

அவர்களது அங்கவீனமானவர்களின் சங்கத்தில் ஏறத்தாள 500 அங்கத்தவர் இருப்பதாகவும், இன்னும் பலர் வன்னி முகாம்களில் இருந்து வர இருப்பதாகவும் கூறினார்.  மாதாந்தம் 10ரூபாய் சந்தாப்பணமாகப் பெற்று அதை நுண்கடன் திட்டங்கள் மூலமாக தங்களின் சங்க அங்கத்தவருக்கு வழங்கிவருதாகவும், இன்று வரை தங்களுக்கென்று ஒரு கட்டத்தையும்  அரசு அமைத்துத்தரவில்லை என்றும், ஆனால் ஒரு  மனிதர் 20 பேர்ச் நிலம் தருவதற்கு ஒப்புக்கொண்டுள்ளதாகவும் ஆனால் கட்டடம் அமைப்பதற்கான 20 லட்சம் ரூபாய் என்பது  தம்மால் நினைத்தப்பார்க்கக்கூட முடியாத தொகை என்றும் கூறினார்.  கொழும்பில் உள்ள அங்கவீனமானவர்களின் காரயாலயத்திற்கு சென்று பார்த் போது அவர்களுக்கு அரசு வழங்கியிருக்கும் வசதிகளை தாங்கள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது என்றார்.

அங்கவீனமானவர்களுக்கு கைத்தொழில் முயற்சிகளை அமைத்துக்கொடுக்கவேண்டும், அவர்கள் ஒரு நாளைக்கு குறைந்தது ஒரு நேரமாவது  உணவு உண்ண வேண்டும், அதன் பின்பே நாம் அவர்களிடம் அபிவிருத்தி, கல்வி, ஏனையவிடயங்களைப் பற்றிப் பேசலாம் என்று அவர் கூறியது படுவான்கரை பகுதியில் வறுமையின் கொடுமை பற்றி நான் அறிந்திருந்த தகவல்களை உறுதி செய்தது.

இவர் குடும்பத்திற்கு இரண்டு குடம் குடி நீர் அருகில் கிடைக்கிறது. குளிப்பதற்கும் எனைய தேவைகளுக்கும்  அதிக தூரம் செல்லவேண்டியிருக்கிறது. கிணறு வெட்டுவதற்கான பொருளாதார வசதிகள் அவரிடம் இல்லை. வைத்திய உதவி அருகில் இல்லை. இப்படி பல சிக்கல்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருகிறார் அவர்.

அவருடனான உரையாடலின் பின் ஈரம் ஊறிய மண் போலாயிற்று மனது. பல நேரங்களில் கனமானதொரு மௌனமே எங்கள் மொழியாயிருந்தது. பெருஞ்சிரமப்பட்டு கண்ணீரை அடக்கிக்கொண்டார். மனைவியை அழைத்து அறிமுகப்படுத்தினார். புன்னகைத்தக்கொண்டோம்.

விடைபெற்ற போது வீதிவரை வந்து விடைபெற்றார். முழங்கைக்கு மேலாக வெட்டப்பட்ட அவரது கை எனது தோளில் அழுந்தியபோது என்மீது அவருக்கு ஆரம்பத்தில் இருந்த நம்பிக்கையீனம் அற்றுப்போயிருந்ததை அவரது கையின் அழுத்தத்தினூடாக உணர்ந்தேன். அவரின் தோளினைத் தட்டிக்கொடுத்து  மோட்டார்சைக்கிலின் பின்புறத்தில் ஏறி உட்கார்ந்துகொண்டேன்

நாம் புறப்பட்டபோது அவருக்குப் பின்புறமாய் அவர்களின் வீட்டுவாசலில் அவரின் மனைவி நின்றுகொண்டிருந்தார்.

புழுதியை இறைத்தவாறு மோட்டார்சைக்கில் சென்றுகொண்டிருந்தது. தூரத்தே கிழக்குப்புறமாய் இன்றும் வானம் இருட்டிருந்தது.------------
அடுத்த பதிவின் சுருக்கம்.

பலாத்தகாரமாய் இயக்கத்தில்  இணைக்கப்பட்டு, கண்ணிவெடி துப்பரவாக்கும் போது ஒருகாலை இழந்து, மறுகாலில் தற்போதும் பெருங்காயங்களுடன்,  கணவரை இழந்து, ஊமையான தனது மூத்த மகளுடனும், இளையமகளுடனும் வாழும் ஒரு தாய், வருமானமின்றி குழந்தைகளுக்காக பாலில்தொழில் ஈடுபட்டதனால் மீண்டும் தாயாகி அக் குழந்தையை தன்னால் வளர்க்க முடியாத காரணங்களினால் முன்பின் அறியாதவர்களிடம் தத்துக்கொடுத்து வாழும் ஒரு முன்னாள் போரளியின் கதை.


கடலில் காவியமான அப்பாவுக்கு ஒரு கப்பல்

கடந்த இருவாரங்களாக மட்டக்களப்பைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள  சில முன்னாள்  போராளிகளைச் சந்தித்து அவர்களின் இன்றைய  வாழ்க்கைச் சிக்கல்களைத் தீர்க்கும் வகையில், வெளிநாட்டில் உள்ள  சில நண்பர்களின் மூலம் அவர்களுக்கு சிறு கைத்தொழில் முயற்சி ஒன்றினை அமைத்துக் கொடுத்து அவர்கள் முகம் கொடுக்கும் ஒரு சில பிரச்சனைகளையாவது தீர்க்க முயன்றுவருகிறேன்.

எனது நண்பர்கள் சிலரின் பேருதவியினால்  சில குடும்பங்களுக்கு உதவ முடிந்திருக்கிறது.  அவர்களை அழைத்துக் கொண்டு ஒரு சுற்றுலா சென்றிருந்தோம் நேற்று.

மறக்க முடியாத அந்தச் சுற்றுலா பற்றிய பதிவே இது.

...........................


மாமா என்னும் பெயரின் பின்னாலிருக்கும் மகத்துவத்தை நேற்றைய நாள் உணர்ந்து கொண்டேன். 11 குழந்தைகளுடனும் அவர்களின் பெற்றோருடனும் ஒரு சுற்றுலா சென்ரிருந்தோம்.

கதைகள் கன பேசி பின் கையில் தூங்கிப் போன சிறுமி, எனக்கருகிலேயே உட்கார்ந்திருந்த சிறுவன், வாழ்க்கையில் முதன் முதலாக புகையிரதப்பாதையையும், புகையிரதத்தையும் கண்ட அவனின் ஆச்சர்யம் கலந்த உணர்ச்சிகள், கோயிலுக்குச் செல்லும் வீதியில் அமைந்திருந்த சிறு சிறு கடைகளை கடந்த போது அவர்களின் ஏக்கமான பார்வைகள், குழந்தைகளின் 10 ரூபா பெறுமதியான விளையாட்டுப் பொருளையே வாங்கிக் கொடுக்க முடியாது தவித்த பெற்றோர், ஆளுக்கு இரண்டு  விளையாட்டுப்பொருட்களை வாங்கிக் கொள்ளுங்கள் என்றதும், மாமா  எனக்கு அது .. இல்லை இல்லை இது என்று தெரிவு செய்ய தடுமாறிய அவர்களின் குதூகலம் கலந்தமனநிலை, மாமா இன்னும் ஒன்று வாங்கித்தாங்களேன் என்ற போது இல்லை என்று சொல்ல முடியாது தடுமாறிய நான், என்னைத் தடுத்தகுழந்தைகளின் பெற்றோர்,

”எத்தனை கண்ணாடி இருக்கி ஒண்ணையும் வாங்கித்தாறாவு இல்லை அம்மா” என்று மட்டக்களப்புத் தமிழில் தன் தாயைப்பற்றி குறைகூறிய குழந்தை,

கோயிலில் அவர்களது பக்தி, அப்பா ஆமிக்காரனிடம் இருந்து வரணும் என்று கல்லுக் கடவளிடம் வரம் கேட்ட குழந்தை, அதைக் கண்டு அழுத தாய், அரைமணிநேரத்தில்  உணவு தருகிறேன் என்று கூறி ஒன்றரை மணித்தியாங்களின் பின் உணவு தந்த ஹோட்டல் முதலாளி, அதுவரை கொளுத்தும் வெய்யிலில் பொறுமைகாத்த குழந்தைகள்,

கடற்கரையில் இறங்கியதும் அவர்களின் கூச்சமும் அவர்களின் ஓட்டமும்,  குழந்தைகளை கட்டுப்படுத்த முடியாத தாய்மார்.

2009ம் ஆண்டு கடலில் காவியமான அப்பாவுக்காய் வீட்டில் இருந்தே இரண்டு கப்பல்கள் செய்து வந்து கடலில் விட்ட மூன்று வயதுச் சிறுவன், அலைக்குப் பயந்து என் கழுத்தை கட்டிக்கொணட சிறுமி. என்னுடன்  மண்வீடு கட்டியபடியே கடலுடன் நட்பாகிப் போன அக் குழந்தை, பின்பு என்னுடன் கழுத்தளவு நீரில் நின்றபடியே ”அம்மா இங்க பாரு.. இங்க பாரு” என்று கத்திய அவளின் குதூகலம். கடலைவிட்டு வெளியேற விரும்மாத சிறுவர்கள்,

மதிய உணவினை சிந்தாது சிதறாது அமர்ந்திருந்து உண்ட அவர்களின் பக்குவம், ஜஸ்கிறீம் கடையில் எதை வாங்குவது என்று தடுமாறிய அவர்களின் மனது, தடுமாறிய குழந்தைகளுக்கு விலையான ஜஸ்கிறீம்களை காட்டிய கடைக்காரர், இரகசியமாய் இரண்டாம் ஜஸ்கிறீம் கேட்ட குழந்தைகள்.

ஊரில் சின்ன வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய், கடற்கரையில் 2 கிலோ நூறு ரூபாய் என்றதும் வாங்கிக்கொண்ட பெற்றோர்.

மாலை வீடு திரும்பிய போது  கடற்குளிப்பின் அசதியல் தூங்கி வளிந்த குழந்தைகள்,  பெரியோரின் நகைச்சுவைப் பேச்சு,  மன அழுத்தங்களை மறந்து ஒரு நாளை களித்த அவர்களின் மகிழ்ச்சி,

விடைபெறும்போது ”அண்ணா  நன்றி” என்று வாய்க்கு வாய் கூறிய பெற்றோர். கண்கலங்கி நின்ற பெற்றோர். மாமா ”பெயித்து வாறன்” என்று மண்ணின் மொழியில் விடைபெற்ற குழந்தைகள் என்று நேற்றையை நாள் எத்தனையோ வருடங்களின் பின் மிகுந்த மகிழ்ச்சியைத் தந்திருந்தது.


சில குறிப்புகள்:

தன்னை அறிந்தவர்கள் யாரும் இந்தச் சுற்றுலாவில் இருந்தால் அதனால் தனக்கும் தன் குழந்தைக்கும் மேலும் சிக்கல்கள் வரலாம் என்று எனது அழைப்பை அன்பாய் மறுத்த ஒரு பெண்.

பெற்றோர்கள், சகோதரர்கள், தங்கையின் கணவன் என்று  தனது குடும்பத்தில் இருந்து ஐவரை இழந்த பெண் கடலில் இறங்க காட்டிய பயம். தன் குழந்தையின் கையை இறுகப்பற்றியபடியே காலாளவு நீரில் தன் தங்கையின் கையை பற்றியவாறு குழந்தையை குளிக்கஅனுமதித்தார் அவர்.

இடுப்புக்குக் கீழ் இயங்கமுடியாத கணவரை குழந்தைபோல் பராமரித்த அவரது மனைவி, அவர் தனது கணவரை இயற்கை உபாதைகளை கழிக்க அழைத்துச் சென்ற போது தனது குழந்தைகளை பார்த்துக்கொள் என்று 9 வயதுச்சிறுமியிடம் கூறிய போது அவள் காட்டி பெறுப்புணர்ச்சி. முன்று குழந்தைகளையும் மாறி மாறி கடலில் குளிப்பாட்டிய அந்தத் தாய். ஓய்வே இல்லாது குடும்பத்துக்காய் உழைக்கும் அவரது மனம்.

பயணம் முழுவதையும் ஒழுங்குபண்ணித் தந்து சாரதியாய், எதையும் முகம் சுளிக்காது சிரித்த முகத்துடன் செய்து தந்த மனிதரும் அவரது ஆளுமையும்.

இப்படி பல பலஅனுபவங்களுடன் கடந்து போன நேற்றைய நாளை மிகவும் மிகவும் இனியது.

ஒளி மறுக்கப்பட்ட விடிவெள்ளிகள்

நேற்றை அனுபவங்களை உள்வாங்கிக் கொள்வதே பெருங்காரியமாய் இருந்தது, நேற்றிரவு.


இன்று காலை என்னை அழைத்துச் செல்வதற்காய் வந்திருந்தவரின் மோட்டார் சைக்கிலின் பின்னால் அமர்ந்திருந்தேன்.

மோட்டார்சைக்கில் நகர்ப்புறத்தைத் கடந்து கிறவல் பாதையில் ஓடிக்கொண்டிருந்தது. வெய்யிலும் வெம்மையான காற்றும் முகத்திலடிக்க சுற்றாடலை அவதானித்துக்கொண்டிருந்தேன். கோடைகாலமாகையால் வறண்டுபோன வயல்களும், எலும்பும்தோலுமான கால்நடைகளும், வெயிலை பொருட்படுத்தாது தத்தம் கடமைகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்த மனிதர்களும், வீதியோரத்து கடைகளும் என்று காட்சிகள் கடந்துகொண்டிருந்தன. மனம் எதிலும் லயிக்கவில்லை. என்னை அழைத்துச் சென்றவர் அடிக்கடி தொலைபேசியில் பேசிக்கொண்டிருந்தார்.

ஓரிடத்தில் மோட்டார்சைக்கிலை நிறுத்தி ஓய்வு எடுத்துக்கொண்டோம். கொண்டு சென்ற குளிர் நீர் அமிர்தமாய் இருந்தது. இன்று நாம் மூன்று முன்னாள் போராளிகளை சந்திப்பதாக இருந்தது. முதலாமவரின் வீடு அருகில் இருப்பதானவும் என்னை இவ்விடத்தில் நிற்கும்படியும் கூறி என்னை அழைத்துவந்தவர் அந்த பெண்போராளியின் வீட்டுக்குச் சென்றார்.  என்னை அழைத்துச் செல்லாததன் காரணம் அந்து போராளியும் அவர்களின் குடும்பத்தாரும் முன்பின் அறியாத என்னைக் கண்டால் இராணுவப் புலனாய்வுப்பிரிவினர் என்று கருதலாம், எதையும் பேசப் பயப்படலாம் என்று அவர் அறிந்திருந்தார்.

நிமிடங்கள் மிகவும் மெதுவாகவே கடந்துபோய்க்கொண்டிருந்தது. கடந்து ‌ சென்ற மனிதர்கள் சந்தேகக்கண்ணுடன் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள். ராணுவத்தினர் தண்ணீர் வண்டி ஒன்றினை ஓட்டிப்போயினர். ஒரு இ.போ.ச பஸ் புழுதியை இறைத்தபடியே கடந்து போனது. வீதியெங்கும் கிறவல் தூசு செம்மஞ்சலாக பறந்துகொண்டிருந்தது.

தூரத்தில் இருந்து  எனது நண்பர் கையைக் காட்டி அழைத்தார். அவரை நோக்கி நடக்கலானேன்.  வேலிகளுக்கப்பால் இருந்து சந்தேகமான பார்வைகள் என்னை துளைத்துக் கொண்டிருந்தன.

ஒரு கழிமண் குடிசையின் முன் நின்றிருந்தேன். முத்தத்தில் கல் அடுப்பில் சோறு பொங்கிக்கொண்டிருக்க, வளவுக்குள் ஆட்டுக் குட்டிகள் மூன்றும் கோழிகள் சிலவும் ஓடிக்கொண்டிருந்தன.

ஒரு பெண் எமக்கு பிளாஸ்டிக் கதிரைகளை எடுத்துத் தந்தார். அவரும்  அவற்றில் ஒன்றில் அமர்ந்து கொண்டார். அவரின் இரு முழங்கைகளும் பல அறுவைச்சிகிச்சைகளை சந்தித்திருக்கின்றன என்பதை தழும்புகளும், இடம்மாறி இருந்த முழங்கை மூட்டுகளும் காட்டின.

நான் என்னை அறிமுகப்படுத்திக்கொண்டேன். அவரது கண்களில் சந்தேகம் இருந்தது. சந்தேகம் வேண்டாம் நான் உங்கள் வாழ்பனுபங்களை அறிந்துகொள்ளவே தொடர்புகொண்டேன் என்றேன். அவர் நம்ப மறுத்தார். இறுதிவரை நம்பமறுத்தார். இறுதி நாட்களில் நடந்த சிலதை மட்டும் மிகவும் அவதானமாக வார்த்தைகளை தேர்தெடுத்து தேர்தெடுத்துக் கூறினார். தெரிந்தோ தெரியாமலோ ஒரு நம்ப முடியாத தகவலையும் பகிர்ந்து கொண்டார்.

அவர் 2009ம் ஆண்டு மே மாதம் 8ம் திகதியளவில் பலருடன் ஒருவராகக் காயப்பட்டிருந்த போது அவரையும் ஏனைய காயப்பட்டிருந்த 12 புலிகளையும் காப்பாற்றிய புலிகளின் புலனாய்வுப்பிரிவினர் இவர்களை இராணுவத்தினரிடம் அழைத்துப்போய் ஒப்படைத்துவிட்டு மீண்டும் யுத்தப்பிரதேசத்துக்குள் சென்றார்கள் என்றார். அதிர்ந்து போன நானும் என்னுடன் வந்திருந்து நபரும் இச் செய்தியை மீண்டும் மீண்டும் கேட்டு உறுதி செய்து கொண்டோம். அவர் பேசுவதற்கு விரும்பவில்லை ன்பதை அவரின் முகத்தில் இருந்த பயம் காட்டிக்கொண்டிருந்தது.

அவரின் பயத்தை கண்ட நான் பறவாயில்லை, நீங்கள் விரும்பும் போது தொடர்பு கொள்ளுங்கள் நாம் அப்போது பேசுவோம் என்றேன். தலையை ஆட்டி சம்மதம் தெரிவித்தார். நாம் புறப்பட்டோம்.

வெய்யில் தனது உக்கிரத்தை ஊருக்குள்ளும் காற்றிலும் காட்டிக்கொண்டிருந்தது. கொண்டுவந்திருந்த நீர் முடியும்தறுவாயில் இருந்தது. இன்று மேலும் இருவரைச் சந்திக்கும் திட்டம் இருந்ததால் நீரை மிச்சப்படுத்திக்கொண்டேன்.

மோட்டார் சைக்கில் மேற்கு நோக்கி சென்று கொண்டிருந்தது. தார்ப்பாதைகள், சீமெந்துப்பாதைகள், கிறவற்பாதைகள் என்றில்லாமல் ஒற்றையடிப்பாதைகளினூடாகவும், வெட்டை வெளிகளினூடாகவும்  ஒரு மணிநேரம் ஓடிய பின் ஒரு மரத்தடியில் சற்று இளைப்பாறிய பின் மீண்டும் ஒரு அரை மணிநேரப் பயணம். ஒரு வீட்டு முற்றத்தில் ஒருவர் அமர்ந்திருந்தார். ஒருவரை ஒருவர் அறிமுகப்படுத்திக்கொண்டோம். அருகிலேயே அவரின் உறவினர்கள், தாயார் நின்றிருந்தார்கள்.

தெளிந்த முகம். தெளிவான வார்த்தைகள், வசீகரமான முகம், மீசை என்றிருந்தார்.பொது விடயங்களைப்பற்றி பேசிக் கொண்டிருந்தோம். தாயார் இடையிடையே பேச்சில் கலந்து கொண்டார்.  பத்துவருடங்களுக்கு முன் இயக்கத்துக்குச் சென்றவர் இருமாதங்களுக்கு முன் தான் வீடு திரும்பியிருக்கிறார். தாயார் அவர் வீரச்சாவடைந்ததாகவே நினைத்திருந்திருக்கிறார். இத்தனை வருடங்களும்.

இறுதி யுத்தத்தின் பின் புனர்வாழ்வு முடிந்த பின் ஒரு பாதிரியார் இவரை பாதுகாத்திருக்கிறார். அவரிடம் இவர் தனது தாயாரின் விலாசத்தை கொடுக்க மறுத்திருக்கிறார். காரணம் தன்னால் அவர்களுக்கு இனி எவ்வித உதவியும் இல்லை, தவிர தன்னை பாதுகாப்பதில் பலத்தை சிரமத்தை குடும்பத்தவர்கள் எதிர்கார்ப்பார்கள் என்று நினைத்ததனால் குடும்பத்தவருடன் தொடர்பு கொள்ளவில்லை அவர். பாதிரியாரின் பலத்த அழுத்தத்தின் பின் பாதிரியார் விலாசத்தைப் பெற்று குடும்பத்தினருக்கு ஒரு கடிதம் எழுதிய பின் குடும்பத்தினர் வன்னி சென்று இவரை அழைத்துவந்திருக்கின்றனர். இதைக் கூறியபோது அத் தாயின் அழுகை கலந்து தளுதளுத்த குரல்ஒலி என் உயிரை ஊடுருவிப்பாய்ந்தது.

சற்று நேரத்தின் பின் அத்தாய் ”தம்பி, உன்ட கண்ணை ஒரு தரம் அண்ணைக்கு காட்டு” என்றார். அவர்கள் பயந்திடுவார்கள் என்றார் அவர். நான் நீங்கள் விரும்பினால் அகற்றுங்கள் என்றேன். அப்போது அவர் தன் கண்ணை மூடியிருந்த துணியினை அகற்றினார்.

நான் சொல்வதை நம்பினால் நம்புங்கள்.  அவர் இரண்டு செக்கன்களின் பின் கண்ணை மீண்டும் கறுப்புத் துணியால் மூடிக்கொண்டார். என்னால் ஒரு செக்கன் கூட அவரின் கண்கள் இருந்த இடத்தைப் பார்க்க முடியவில்லை. இரண்டு கண்கள் இருந்த இடங்களிலும் 3 - 4 சென்டிமீற்றர் அளவுக்கு இரு குழிகள் இருந்தன. கண்கள் இல்லாத  அவரது உருவம் பயங்கரமாக இருந்தது:. படங்களில் இப்படியான காட்சிகளைக் கண்டிருக்கிறேன். ஆனால் என் முன்னே அதுவும் இரண்டு அடிகளுக்குள் அப்படியான காட்சியைக் கண்டதும் அதிர்ந்துபோனேன். சுதாரித்தக்கொள்ள சில நிமிடங்களாயின. ” பார்த்தீங்களா அண்ணை .. அது தான் சொன்னேன் என்றார் அவர்”  2008ம் ஆண்டு ஒரு செல் அவரின் கண்களை பறித்துப்போயிருக்கிறது.

சற்று நேரம் அங்கு பேச்சு இருக்கவில்லை. மெதுவாய் அவரின் கையைப் பற்றிக்கொண்டேன். அவரும் ஆதரவாய் னது கையைப் பற்றிக் கொண்டார்.. பார்வையின் மொழியோ, பேசும் மொழியோ எதுவும் அங்கிருக்காவிடினும் எம் கைகளின் ஸபரிசங்கள் பேசிக்கொண்டன. எம் வாழ்வுக்காய் போரா‌டிய ஒரு இளைஞன், வாழ்வின் வசந்த காலத்தில் இருக்கவேண்டிய வயது அவருக்கு, ஆனால் வாழ்வையே தொலைத்துவிட்டுவந்து நிற்கிறார். தொழில் இல்லை, வருமானமில்லை, தந்தையில்லை, தாயாரின் மற்றும் தங்கையின் குடும்பத்தினர் மட்டுமே இருக்கிறார்கள்: அவரின் எர்காலத்தை சற்று சிந்தித்துப்பார்த்தேன். அவருக்கு ஒரு 25 வயதிருக்கலாம். மிகுதிக் காலத்தை எப்படி கழிக்கப் போகிறார் என்று எனக்குப் புரியவில்லை. அவரின்  வாழ்க்கையை பதிவு செய்யும் நிலையில் நான் இருக்கவில்லை. என்னால் அங்கு நிற்கமுடியாதிருந்தது. எனவே மீண்டுமொருநாள் அவரிடம் வருவதாகக் கூறி புறப்பட்டேன்.

இன்னும் ஒருவரை சந்திக்கவேண்டியிருந்தது. மனமோ  கலங்கிப் போயிருந்தது. அந்தச் சந்திப்பையும் பின்போட்டுக்கொண்டேன். மோட்டார் சைக்கில் வயல்,  வறண்டுபோயிருந்த வாய்க்கால்கள், கிறவற்பாதைகளினூடாக கிழக்குப் பக்கம் நோக்கி ஓடிக்கொண்டிருந்தது. கிழக்குப் பக்கத்து வானம் இருட்டியிருந்தது.


அனுபவங்கள் தொடரும்.....


................................................................................................................................

நீங்கள் யாரேனும் நேரடியாக உதவிதேவைப்படுபவர்களுக்கு உதவிரும்பினால் கீழ்க்காணும் மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்க.
adsayaa@gmail.com

அன்றும் போராளி இன்றும் போராளி

அனுபவங்கள் ஜீரணிக்கப்படுவதற்கு முன்பே அவற்றை பதிவிடுவது என்பதில் எனக்கு  என்றும் விருப்பம் இருந்ததில்லை. அனுபவங்களை மீண்டும் மீண்டும் எனக்குள் அசைபோட்ட  பின்பே அனுபவங்களை பதிவுகளாக பதிந்திருக்கிறேன். அதையே நானும் விரும்புகிறேன்.

ஆனால் இன்றைய பதிவு அப்படியில்லை,  மனம் என்னை கலைத்துக்கொண்டேயிருக்கிறது, எழுது எழுது என்று.

எனது விடுமுறையில் இலங்‌கை வந்து  தற்போது மட்டக்களப்பில்  தங்கியிருக்கிறேன். மட்டக்களப்பு எனது ஊர்.

மட்டக்களப்பில் இருந்து மேற்கே ஏறத்தாள 25 கிலோமீற்றர்களுக்கப்பால் இருந்த ஒரு சிறிய கிராமத்திற்கு, சில ஆண்டுகளுக்கு முன்பு ஒரு  சிறிய பாலர் பாடசாலை கட்டுவதற்கு என்னாலான  உதவிகளைச் செய்திருந்தேன். அதனைக் காண்பதற்காகவும்,  சில நண்பர் மூலமாக கோரப்பட்ட உதவிகளை ஆராய்வதற்காகவும், நகரத்திற்கப்பால் எம்மவர்களின் வாழ்வு எப்படி இருக்கிறது என்பதை அறியும் ஆவலும் என்னை இங்கு அழைத்துவந்திருந்தது.ஆனால் விதிவசமாய் நான் சந்தித்த, புனர்வாழ்வு பெற்ற ஒரு சில முன்னாள் போராளிகளிகள் மற்றும் மனிதர்களின் சோகம் என்னை கடந்த சில நாட்களாக ஆட்டிப்படைத்துக்கொண்டிருக்கிறது.
  • பாலியற்தொழிலில் ஈடுபடவேண்டிய சூழ்நிலையில் வாழும்  முன்னாள் பெண்போராளிகள்,
  • ஏழ்மையினால் குழந்தைகளுக்கு ஒரு வேளை உணவு வழங்கமுடியாது முகாம்களில் தவிக்கும்  முதுகெலும்பு பாதிக்கப்பட்ட முன்னாள் பெண் போராளி, 
  • தொடைக்கு மேற் பகுதியுடனேயே காலை இழந்து மனைவி குழந்தைகளை  காப்பாற்றுவதற்காக வீதியோரத்தில் சுண்டல் விற்கும் முன்னாள் போராளி,
  • திருமணமாகி  பத்தே மாதத்தில், கடல் மோதலொன்றில் காணாதுபோன கேர்ணல் தரத்திலான தனது கணவன்,  இன்னும் உயிருடன் இருப்பார், என்னும் நம்பிக்கையுடன் தனது 4 வயதுப் பெண்குழந்தையுடன், வாழ்வாதாரம் இன்றி  தம்பி தங்கையுடன் முகாமில் தவிக்கும் முன்னாள் பெண் போராளி்,
  • இரு கைகளையும் தோள்மூட்டு்ன் இழந்த தனது முன்னாள்  போராளியான மகனை பராமரிக்கும் வயதான தந்தை, 
  • இருகண்களையும் இழந்த முன்னாள்  ‌போராளி,
  • குழந்தைப்போராளியாய் இயக்கத்தில் இணைக்கப்பட்டு இறுதிப் ‌ ‌போரில் பெற்றோர் சகோதரர்களை இழந்த முன்னாள் போராளி
எனது கடந்த சில நாட்கள் இப்படியான சில மனிதர்களுடன்  கடந்து போயிருக்கிறது. அவர்களின் கதைகளைக் கேட்டு கனத்துப்போயிருக்கிறது மனது.

தன்னெதிரே துள்ளித்திரிந்த குழந்தையை அணைதவாறு அழும் பெண் போராளியிடம் ஆறுதலாக ஒரு வார்த்தையும் பேச முடியாது மௌனமாய் கடந்து போன கணங்கள் மிகவும் கொடுமையானவை.

புனர்வாழ்வு பெற்றிருந்தாலும் அவர்களின் வாழ்வில் அமைதியில்லை மகிழ்ச்சி என்பது எள்ளளவும் இல்லை.  எப்பொழுதும் கண்காணிக்கப்படுகிறார்கள்.  எவ்வித கொடுப்பனவுகளும் அவர்களுக்கு கொடுக்கப்படுவதில்லை. தொழில் வாய்ப்புக்கள் குறைவு. கூலி வேலைகளும் இவர்களுக்கு  கிடைப்பதில்லை. வயல் வேலைகள்கூட அறுவடை இயந்திரங்கள் அறிமுகப்படுத்தப்பட்டிருப்பதால் குறைந்துபோயுள்ளது.

இவ்வாறு இருப்பவர்களிடம் அவுஸ்திரேலியாவுக்கு அழைத்துப்போகிறோம் என்று பணம் பிடுங்கும் மனிதர்களுக்கும் குறைவில்லை.  அரசியல் பழிவாங்கல்கள், முன்பிருந்த இயக்கமோதல்கள், காட்டிக்கொடுப்புக்கள், பழிவாங்கல்கள் .... அப்பப்பா எப்படி இதையெல்லாம் கடந்து வாழ்கிறார்கள் என்று யோசிக்கத்தோன்றுகிறது.

நான் சந்தித்திருப்பது ஒரு சிலரையே. இப்படியான போராளிகள் வடக்கு கிழக்கு எங்கும் நிறைந்திருக்கிறார்கள்.

2012 ம் ஆண்டிலும் மலசலகூடம், படுவான்கரைப் பகுதியில் குடி நீர் வசதி இன்றி பல கிராமங்கள் இருக்கின்றன. வாகரைக்காடுகளில் உள்ள வேடுவர்களை சந்திக்க அழைத்துபோகிறேன் என்றிருக்கிறார் அவர்களுடன்  தொடர்புடையவர் ஒருவர்.

கோயில் கொடுப்பனவாகிய 1500,- ரூபாயுடன் 20 குழந்தைகளுக்கு கற்பிக்கும் ஒரு ஆசிரியை,

350 ரூபாய் வருமானத்திற்காக ஒரு நாள் முழுவதும் விறகு பொறுக்கி, பல மைல்கள் சைக்கிலில் பயணித்து விறகு விற்பனை செய்யும் 70 வயது கடந்த முதியவர்,

பாவனையில் இல்லாத பழைய வீதிகளில் இருக்கும் கருங்கட்களை கல்லாலும், கைகளாலும் தொண்டி எடுத்து தனது மூன்றாவது மகளுக்கு திருமணம் நடாத்த முற்படும் ஒருவர்,

இவர்களை சந்தித்த போது வெட்கித் தலைகுனிந்திருந்தேன்  புலம்பெயர்ந்த தமிழனாய்.

நாம் என்ன செய்திருக்கிறோம் இவர்களுக்கு?

மனம் பொறுக்காது சில நண்பர்களிடம் அவசர உதவி தேவையானவர்கள‌ை அறிமுகப்படுத்தி அவர்களை நேரடியாகவே உதவுங்கள் என்று கேட்டுக்கொண்ட போது உடனேயே உதவிக்கரங்களை நீட்டிய  நெஞ்சங்களுக்கு நன்றி  சொல்ல வார்த்தைகளில்லை என்னிடம்.

மக்கா ...  ஊருக்கு போனன் அங்க ஒரு பிரச்சனையும் இல்லை என்று அறிக்கைவிடும் அறிவுஜீவிகளே!!

முக்கிய பெரு வீதிகளுக்கும், மாடிவீடுகளுக்கும் அப்பால் வாழ்பவர்களையும் சென்று அவர்களுடன் பேசி, உறவாடிப்பாருங்கள், அவர்களின் உயிரோசை உங்களுக்குக் கேட்கலாம்.

.......


நீங்கள் யாரேனும் நேரடியாக உதவிதேவைப்படுபவர்களுக்கு உதவிரும்பினால் கீழ்க்காணும் மின்னஞ்சலுடன் தொடர்பு கொள்க.
adsayaa@gmail.com


தமிழன் முன்னேறியிருக்கிறானா?

அண்மையில் எனது நண்பரின் குடும்பநண்பரான சிங்களவர் ஒருவரை  கொழும்பில் சந்திக்க நேர்ந்தது.

90களில் மட்டக்களப்பின் பிரபல தளபதியொருவர் பலவந்தமாக  இயக்கத்தில் ஆட்களை சேர்த்த காலத்தில் அவர்களிடம் இருந்து தனது மூத்த மகனைக்காப்பாற்ற, கொழும்பில் இருந்த மேற் கூறிய சிங்களவரின் வீட்டில் தங்கவைத்திருக்கிறார்கள் எனது நண்பரின் பெற்றோர்.  அதற்கு முன்னான காலத்திலிருந்தே அவர்கள் நண்பர்களாய் இருந்திருக்கிறார்கள்.

பலதையும் பேசிக்கொண்டிருந்தோம். அவரின் வீதியில் பல தமிழர்கள்  வாழ்கிறார்கள். அனைவரும் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர்கள். யுத்தகாலத்தில் அவர்களுக்குத் தேவையான உதவிகளை பெரும்பான்மை சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பதனால் அவரால் செய்து கொடுக்கமுடிந்திருக்கிறது.  பலரை போலீஸில் இருந்து வெளியே எடுத்துவிட்டிருக்கிறார். வெளிநாட்டு வீசாக்களுக்கு போலீஸ் அத்தாட்சிப்பத்திரம் பெற்றுக்கொடுத்திருக்கிறார். மிகவும் கெடுபிடியான நாட்களில் தனது வீட்டிலும் இளைஞர்களை தங்கவைத்து உதவி புரிந்திருக்கிறார்.

மனிதனுக்கு மனிதத்தன்மையே முக்கியம். இனம், மொழி, மதம் கடந்து மனிதன் மனிதத்தன்மையுடன் வாழவேண்டும் என்றார்.

நாம் பேசிக்கொண்டிருக்கும் போது என்னிடம் இப்படி ஒரு கேள்வி கேட்டார்:

தனது வீட்டிற்கு முன்னால் வயதான தமிழ்த் தம்பதியர் வாழ்ந்து வருவதாகவும், அவர்கள் தன்னிடம் பேசும் போது கூட அவர்களின் முகங்களில் ஒருவித மகிழ்ச்சியும் தெரிவதில்லை என்றும், ஏனைய தமிழர்களுடன் முகம்கொடுத்து பேசுவதில்லை என்றும், ஒரு நாள் அவர்கள் தாம் யாழ்ப்பாணத்தில் உயர்ந்த சாதி என்றும் ஏனையவர்கள் தாழ்ந்தவர்கள் என்று கூறியதாகவும் அதன் போது அவர் அவர்களுடன் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டு தனக்கு அவர்கள் கருத்தில் உடன்பாடில்லை என்று கூறியதாகவும் கூறினார்.

அதன் பின் என்னிடம் நீ அவர்களின் கருத்தை ஆதரிக்கிறாயா? என்றார். நான் இல்லை  என்றும், ஆனால் அவர்களை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது என்றும் கூறினேன். காரணம், அவர்களின் சிறுபிராயக் காலங்களில் (40 - 50 களில்) இது ஒரு பெரும் பிரச்சனையாக இருந்தது. அவர்களும் அதே சிந்தனையில் வளர்ந்தவர்கள் என்பதால் அவர்களும் இப்படி இருக்கிறார்கள்  என்றும் அவர்களின் சிந்தனையோட்டத்தை இந்த வயதில் மாற்றிக்கொள்வது கடினம் என்றும் கூறினேன். அதற்கு அவரோ இப்பிரச்சுனை இப்போதும் வடக்கில் பெரும்பிரச்சனையாக இருக்கிறதாமே என்றார்.
நான் மௌனமாய் உட்கார்ந்திருந்தேன்.

பின்பு 50 - 60 களில் தீண்டாமைக்கொடுமையினால் தமிழர்கள் புத்தசமயத்தை தழுவி கல்விகற்றது,  தீண்டாமைக் கொலைகள், கல்விமறுப்பு ‌போன்றவையும் இடம்பெற்றது என்றேன்.

ஏஹம உனாத?  அப்படியும் நடந்ததா? என்று ஆச்சர்யப்பட்டார். ஆம் என்பது போல் தலையாட்டினேன்.

சற்று நேரத்தின் பின் அவரே, வெளிநாடுகளில் இப் பிரச்சனை இருக்கிறதா என்றார். இல்லை என்று என்னால் கூறமுடியாது ஆனால் நாம் விரும்பத்தாகத அளவுக்கு அங்கும் இப்பிரச்சனை இருக்கிறது, ஆனால் இரண்டாம் சமுதாயத்தினர் இதை பெரிதுபடுத்துவதில்லை என்பது எனது கருத்து என்றேன்.

பொஹோம சந்தோசய், ஏகதமய் மனுஸ்யகம,  (மிக்க மகிழ்சி அது தான் மனிதம் என்றார்)

அவரிடம் இருந்து வெளியேறிய போது தமிழன் முன்னேறியிருக்கிறானா? என்று நான் என்னைக் கேட்டுக்கொண்டேன். மனம் ஏனோ மகிழ்ச்சியடைய
மறுத்தது.