“என்ன ஆச்சு.. யாரோ பந்தை அடிச்சாங்க… நான் ஸ்டாப் பண்ணி அடிக்க போனேனா… "

“என்ன ஆச்சு.. யாரோ பந்தை அடிச்சாங்க… நான் ஸ்டாப் பண்ணி  அடிக்க போனேனா… கீழ விழுந்துட்டேனா.. குதிக்கால்ல அடி பட்டிடுச்சு… இந்த இடத்துலதான் அகில்லஸ் இருக்கு. அது ஒண்ணுமில்ல… கொஞ்ச வாரத்தில சரியாகிடும்..”

இன்று எனக்கு நடந்த சம்பவத்துக்கும் ”நடுவில கொஞ்சம் பக்கத்த காணோம்” படத்தில் கதாநாயகனுக்கு நடந்த விபத்துக்கும் சற்று ஒற்றுமை இருக்கிறது. அவரின் டயலாக் எனக்கும் பொருந்துகிறது.

எனக்கும் எனது அம்மாவின் அழகிய ராட்சசனுக்கும் என்றுமே அலைவரிசை ஒத்துவந்ததே இல்லை. விதி அவரையும் என்னையும் 14 வருடங்களே Tom and Jerry போன்று வாழவைத்தது. எனக்கு 14 வயது வந்த போது அவர் விடைபெற்றுக்கொண்டார். நானும் அவரைத் தடுக்கவில்லை. அவரும் என்னுடன் இருப்பதை விரும்பவில்லை போலும்.

எமக்குள் ராஜதந்திர உறவுகள் எப்போதும் மகிழ்ச்சியாக இருந்ததில்லை. ஆனாலும் ஒரு மகிழ்ச்சியான சம்பவம் மிக நன்றாக நினைவில் இருக்கின்றது. அது நாம் பிபிலையில் வாழ்ந்திருந்த காலத்தில் நடந்தது.

அன்றும் அவர் மகிழ்ச்சிதரும் பானம் அருந்தியே வீடு வந்தார். நானும் தம்பியும் வீட்டுக்கு வெளியே பந்தடித்துவிளையாடிக்கொண்டிருந்தோம். பெரிசு வருவதை தூரத்திலேயே அவதானித்த நான் மெதுவாய் பின்வாங்கியபடியே, வீட்டுப் பின்புறமாய் நகர்ந்து கொண்டேன்.

போலீஸ்காரனான எனது தந்தையின் கண்கள் அதை கவனித்துவிட்டன. ஆடியபடியே வந்த துவிச்சக்கரத்தில் இருந்து பாதுகாப்பாய் இறங்கிய பெரிசு, அவரின் ஆதர்ஸ்ச புத்திரனான எனது தம்பியை அழைத்து என்னை அழைத்துவரக் கட்டளையிட்டார். நானும் அவரின் கட்டளையை மீறுவது தற்கொலைக்குச் சமம் என்பதால் அவர் முன் ஆஜரானேன். என் கண்கள் அம்மாவைத் தேடியது. அம்மாவை கண்ணுக்கெட்டிய தூரம் எங்கும் காணவில்லை. சரி.. இன்று எனக்கு ராகுகாலம் என்றபடியே அவர் முன் நிற்கிறேன்

டேய்! புட்போல் விளையாடச் சொல்லித்தருகிறேன் வா! என்றார். எனக்கு தலை சுற்றத்தொடங்கியது. நடுக்கத்துடன் நின்றிருந்தேன். முதலில் பந்தை எப்படி அடிப்பது என்று கேட்டார். காலால் குத்திக்காட்டினேன். இல்லை, அது பிழை இப்படி அடி என்று திருத்தினார். தலையாட்டுவதைத்தவிர வேறு வழி இல்லையாதலால் தலையை ஆட்டினேன்.

பின்பு கால்பந்து விளையாட்டில் பந்து தடுப்பாளர் எப்படி பந்துகளை விழுந்து தடுப்பது என்று பழக்கினார். அவர் விழுந்து பந்தினை பிடிக்க முயன்றபோது ஒரு பெரிய மரம் சாய்வதைப்போன்று விழுந்தெழும்பினார். சிரிப்பை அடிக்கிக்கொண்டு, தம்பியைப் பார்த்தேன். அப்பாவுக்கு  அடிபட்டிருககுமோ என்று அவன் யோசித்துக்கொண்டிருந்தான். அப்பா எழும்பி மீண்டும் தயாராவதற்கு பல நிமிடங்கள் ஆயின. மீண்டும் விழுந்து பிடிக்க முடியன்றார். பந்து அவரைக்கடந்து போனபின்பே அவரால் விழ முடிந்தது:

இப்படித்தான் எனக்கும் கால்ப்பந்தில் பந்து காப்பாளனாக வருவதற்கான விதை, திருவாளர் செல்வமாணிக்கத்தால் விதைக்கப்பட்டது. பிற்காலததில் அவ்வி‌தை விருட்டசமாகி நானும்  பந்துகாப்பானாக விளையாடி இருக்கிறேன். அப்பாவைப்போலவே பல தடவைகள் பந்து என்னைக் கடந்த பின்பு விழுந்திருக்கிறேன். அதற்காக உடன் விளையாடியவர்கள் அழகழகான வார்த்தைகளால் திட்டியிருக்கிறார்கள்.

ஒரு காலத்தில் கல்லைக் கண்ட நாயின் வேகத்தில் பந்தின் பின் ஓடித்திருந்திருந்திருக்கிறேன். பந்துப் பைத்தியம் என்று நண்பர்கள் திட்டியிருக்கிறார்கள்.

எனது மகளுக்கு காலப்பந்தில் ஆர்வம் வந்த போது நானும் அவளும் வீட்டுக்குள் பந்தடித்து, பந்து கண்ணாடிப்பொருட்களை உடைத்த போது, ”என்ன  சத்தம்” என்று சர்வதிகாரி வினவ, மகள் கண்களால் கெஞ்ச, ”அது நான் அடித்த போதுதான் உடைந்தது” என்று சர்வதிகாரிகாரியின் முன் மண்டியிட்டிருக்கிறேன்.அதற்காக எனக்கு அளவற்ற முத்தங்களை லஞ்சமாக பெற்றுக்கொண்டேன் மகளிடம் இருந்து.

இவையெல்லாம் நடந்து ஆண்டுகள் பலவாகிவிட்டன.  இப்போதெல்லாம் பந்தை நான் கண்ணால் காண்புதேயில்லை. சென்ற வருடத்திற்கு முன்னைய வருடம் நண்பர்கள் அழைத்ததால் கிழமையில் ஒரு நாள், கால்ப்பந்து விளையாடியிருக்கிறேன். எனினும் முன்பொருகாலத்தில் இருந்து ஆர்வம் என்னைவிட்டு அகன்றிருந்ததை உணர்ந்தும்கொண்டேன். சென்ற வருடம் முழுவதும் எனது காலில் பந்து படவேயில்லை. கடந்த 8 மாதங்களாக உடற்பயிட்சி என்பதை  மனதால் மட்டுமே செய்து வந்திருக்கிறேன்.

இப்போதெல்லாம் சற்றுத் தூரம் நடந்தாலே, பல காத தூரம் ஓடிய வந்தியத்தேவனின் குதிரை போன்று வாயில் நுரைதள்ளி இளைக்கிறது.  எனது கட்டிலில் இருந்து எழும்புவதே பெருங்காரியமாய் இருக்கிறது, இப்பொது.

எனது வாழ்க்கை இப்படியாய் இருந்து போது தான் ” நண்பர்களே! நாளை வயது முதிந்தவர்களுக்கான கால்பந்துப்போட்டி நடக்கவிருக்கிறது. எமது கழகம் இரண்டு அணிகளை இப்போட்டிக்கு அனுப்புகிறது. இளைஞர்களே அணிதிரள்வீர், தாக்குதலுக்கு தயாராகுங்கள், TSC sports club வாழ்க” என்ற வீர வசனங்களுடன் வந்தது அந்தக் குறுஞ்செய்தி.

அக் குறுஞ்செய்தியை கவனிக்காது எனது நித்திரையில் கண்ணாயிருந்தேன். சற்று நேரத்தில் உற்ற நண்பர் தொலைபேசினார். சஞ்சயன் ”விளையாடுவதற்கு வீரர்கள் குறைவாக இருப்பதால் நீங்கள் அவசியம் வரவேண்டும்” என்று உத்தரவிட்டு, எனது பதிலை எதிர்பார்க்காமலே தொலைபேசியை வைத்தார் அவர்.

எனது விதியை நொந்தவாறே விளையாட்டு மைதானததில் ஆஜரானேன். என்னை விடுங்கள், தப்பிப்பிழைத்துப் போகிறேன் என்றேன். இல்லை இல்லை பந்து காப்பாளர் இருக்கிறார். நீ தாக்குதல் நடாத்தும் வீரனாக விளையாட வேண்டும் என்று வீர வசனங்கள் பேசினார், பயிற்சியாளர். எனது விதியை நொந்தவாறே, எனது தலையை ஆம் வருகிறேன் என்று தலையை ஆட்டிய போது, கற்பனையில் பல கோல்கள் அடித்துக்கோண்டிருந்தேன். பல வயதான ரசிகைகள் என்னை நோக்கி கையசைத்துக்கொண்டிருந்தார்கள், நான் அவர்களுக்கு கண்ணடித்துக்கொண்டிருந்தேன்.

பயிட்சியாளர் என்னை உதிரி விளையாட்டு வீரனாக விளையாடும்படி கட்டளையிட்டு அகன்றுகொண்டார்.

முதலாவது போட்டியில் 5 நிமிடம் விளையாடக் கிடைத்தது. எனது காலில் அவ்வப்பொது பந்து காலிற்பட்டதாக சிலர் பின்பு குறிப்பிட்டனர். அந்தப்போட்டியின் பின்பு ஏறத்தாள இரண்டு மணிநேரத்தின் பின்பே எனக்கு மீண்டும் சீரான முறையில் முச்சு வரத்தொடங்கியது.

இரண்டாவது போட்டியின் போது பந்துகாப்பாளராக விளையாடும் பாக்கியம் கிடைத்தது. மிகச் சிறப்பாக ஒரு பந்தை விழுந்து தடுத்தேன். அதன் பின் மிகச் சிறப்பாக ஒரு பந்தினை தவறவிட்டேன். எதிர் அணி 1 - 0 என்று முன்னேறியிருந்தது.

அப்போது தான் இன்றைய நாளின் முக்கிய சம்பவம் நிகழ்ந்தது. பந்து என்னை நோக்கி மிக மெதுவாக உருண்டு வந்தது. என்னருகில் எவருமில்லை. சத்தியமாய் எவருமில்லை. என்னருகில் வந்த பந்தை நிறுத்தி, மிகவும் ஆறுதலாக, எனது கட்டுப்பாட்டக்குள் கொணர்ந்து, சற்றுத் தூரம் பந்தினை தட்டிச்செல்ல முயற்சித்த போது ” குதிக்காலினுள் ஏதோவோரு ஒலி கேட்கவும், நான் அம்மா என்று அலரவும், நடுவர் வியைாட்டை நிறுத்த விசிலை ஊதியபடியே என்னருகே ஓடிவரவும் நேரம் சரியாயிருந்தது. என்னை துக்கிச் சென்று மைதானத்துக்கு வெளியில் கிடத்தினார்கள். முதலுதவி கிடைத்து.

இந் நிகழ்வு நடந்து ஏறத்தாள 6 - 7 மணிநேரங்கள் ஆகிவிட்டன. என்னால் தற்போது நடக்கமுடியாதிருக்கிறது. வலது குதிககால் பகுதி யானைக்கால் போன்று வீங்கியிருக்கிறது.

“என்ன ஆச்சு.. யாரோ பந்தை அடிச்சாங்க… நான் ஸ்டாப் பண்ணி  அடிக்க போனேனா… கீழ விழுந்துட்டேனா.. குதிக்கால்ல அடிபட்டிடுச்சு… இந்த இடத்துலதான் அகில்லஸ்’ இருக்கு. அது ஒண்ணுமில்ல… கொஞ்ச வாரத்தில சரியாகிடும்..!”
அப்பாவின் அழகிய ராட்சசியுடனான ஒரு உரையாடல்

இன்று ஞாயிற்றுக்கிழமை. காலை 06.30 மணியிருக்கும், ஆழ்ந்த தூக்கத்தில், கனவுலகில் இலியானாவுடன் ஒரு குத்துப்பாட்டுக்கு டான்ஸ் ஆடிக்கொண்டிருந்தேன்.

அப்போது தொல்லைபேசி ஒலித்து என் நித்திரையையும், கனவையும் குழப்பியது. யார் அழைத்தது என்று பார்ப்பதற்கு முன்பாகவே அந்த அழைப்பு நின்று போயிற்று. மீண்டும் கண்கள் மூடிக்கொள்ளும் போது தொல்லை பேசி மணியொலித்தது.

எடுத்து ”ஹலோ” என்ற தூக்கக்கலக்கத்தில் கூறினேன்.

மறுபுறத்தில் அப்பாவின் அழகிய ராட்சசி

எங்கள் உரையாடல் இப்படியிருந்தது.

”தம்பி என்னடா காய்ச்சலா?”
”இல்லை”
”அப்ப தடிமலா (ஜலதோஷம்)?”
”இல்லை அம்மா”
”சரி.. சரி .. குளிகைள் எல்லாம் போட்டியா”
”போடுவம்”

எனக்கோ தூக்கம் தாங்கமுடியாதிருந்தது. ஆனால் அவரோ விடுவதாயில்லை.

”டேய், உன்ட தம்பீட மகளுக்கு இன்றைக்கு பிறந்த நாள், மறக்காதே”
அது என் நினைவில் இருக்கவில்லை என்றாலும் ”ஓம் ஓம்” என்று சமாளித்தேன்.  (மதுரா, பெரியப்பாவை மன்னிப்பாயாக)

அம்மா தொடந்தார்..

நேற்று  மச்சாள் வீடு வந்ததையும், அவரின் மகளுக்கு கல்யாணம் நடைபெறவிருக்கும் கதை, ஏனைய பல கதைகளைகள் என்று கூறினார்.

நான் தூங்கியபடியே ம்..ம்..ம் என்று  பதிலளிததுக்கொண்டிருந்தேன்.

அதை அவர் அதானித்திருக்கவேண்டும்

”டேய் என்ன நித்திரயில இருந்து கதைப்பது போல கதைக்கிறாய்” என்றார்
”அம்மா, என்னை நித்திரை கொள்ள விடுங்கோ” என்றேன்

”என்ன நித்திரையோ, நீ 48 வயதாகியும் இன்னும் திருந்தேல்ல, படிக்கிற காலத்திலயும் எழும்பமாட்டாய், அப்பா இருந்திருந்தால் நீ திருந்தியிருப்பாய்” என்று ஒரு பெரிய லெக்கசரே அடித்தார்.

அப்பா என்ன யமனே வந்தாலும் என்னை நித்திரையால் எழுப்புவது முடியாத காரியம் என்பதை அம்மா அறியமாட்டார்.

மீண்டும் அமைதியாக இப்படிச் சொன்னார்.

நண்பர்களே இனித்தான் கிளைமாக்ஸ் வருகிறது. அவதானமாய் வாசியுங்கள்

”தம்பி நேரம் 11 மணியாகிவிட்டது, எழும்புடா, போய் முகம் கழுவி சாப்பிடு ராசா”  என்றார்.
அம்மா இலங்கை நேரத்தையும், நோர்வே நேரத்தையும் குழப்பிக்கொள்கிறார் என்பது புரிந்து.

”ஓம் ஓம்”..  காலைக்கடன்களை முடித்துவிட்டு உங்களுக்கு தொலைபேசி எடுக்கிறேன் என்றேன்.”
” சரி” என்று தொலைபேசியை வைத்தார். (மகன் தனது சொல்லை இப்பவாவது கேட்கிறானே என்று நினைத்துப் பெருமைப்பட்டிருப்பார்)

இப்போது நோர்வேயில் நோர்வேயில் நேரம் 11:15 ஆகிறது. நான் இன்னும் எழும்புவது பற்றி யோசிக்கவே இல்லை.

அம்மாவும் எனக்கு தொலைபேசி எடுத்ததையும், நான் மீண்டும் அவருடன் பேசுவேன் என்றதையும் மறந்திருப்பார்.

வாழ்க, அப்பாவின் அழகிய ராட்சசியின் மறதி!
.................................

முன்பொருமுறை அப்பாவின் அழகிய ராட்சசியுடன்  நடைபெற்ற  இன்னுமாரு உரையாடல் இந்த இணைப்பில் இருக்கிறது.

என்னைத் தேடி ... ஒரு யாத்திரை

15.06.2012 எனது வாழ்வில் மறக்கமுடியாத நாள். அன்று காலை தூக்கத்தில் இருந்து விளித்துக்கொண்‌டபோதே உடலஙெ்கும் ஒருவித உற்சாகமும் விறுவிறுப்பும் படர்ந்திருந்தது.

நேற்றைய இரவு, எனது பாதயாத்திரையின் கடைசி இரவு, நேற்றைய நாள் மிக நீண்டதாக இருந்தது. ஏறத்தாள 42 கி.மீ தூரம் நடந்திருந்தேன். என்றுமில்லாதவாறு உட்சாகமாயும் இருந்தேன். கடந்த சில நாட்களாக என்னுடன் இணைந்து நடந்துகொண்டிருக்கும் Frank என்னும் நெதர்லாந்து நண்பரும் ”உன்னால் தான், 42 கிமீ நடந்திருக்கிறேன் என்று கூறிக்கொண்டேயிருந்தார். கேட்பதற்கு மகிழ்ச்சியாய் இருந்தது.

நேற்றிரவு, இருவரும் மிகச் சிறப்பான ”ஸ்டேக்” என்னும்  உணவினை உண்டோம். சற்று வைன் எடுத்துக்கொண்டோம். எங்களுக்குள் பெருமை ஊறி ஊறி வழிந்து கொண்‌டிருந்தது.  இருவரும் கடந்து வந்த நாட்களை நினைவுறுத்தினோம். ஒன்று இரண்டல்ல, 750 கி.மீற்றர்களை கடந்திருக்கிறோம். உடல்வலிகள், களைப்புக்கள், அலுப்புக்கள் என்று 23 நாட்களும் ,அனைத்தையும் கடந்து வந்திருக்கிறேன். ஸ்பெயின் நாட்டின் Pampalona என்னும் நகரத்தில் இருந்து Santiago De Compostela என்னும் இடத்திற்கு  நடந்து வந்துகொண்டிருக்கிறோம். இன்னும் 18 கி.மீ கடந்தால் நடைப்பயணம் முடிவுறுகிறது.

நாளை காலை 6 மணிக்கு ஒருவரை ஒருவர் எழுப்பவேண்டும், என்று பேசிக்கொண்டோம். ப்ராங்க் தன் காதலியிடம் ” ஒரு இலங்கைத் தமிழ் ”விசரன் (Mad man)” என்னை என்று 42 கி.மீ நடக்கவைத்தான் என்று என்னைப் பார்த்து கண்ணடித்தபடியே தொலைபேசியில் கூறிக்கொண்டிருந்தார். அவருக்கு இரவு வணக்கம் கூறி எனது அறையினுள் புகுந்துகொண்டேன்.

உடம்பில் ஊறியிருந்த அற்ரினலீன் குறைந்ததாயில்லை. மீதமிருந்த 18 கீ.மீற்றரையும் கடந்திருக்கலாமோ என்று எண்ணினேன். தூக்கம் தொலைந்திருக்க ”ஏன் இந்த நடைப்பயணத்தைத் தொடங்கினேன் என்று சிந்தனையோடியது.

கடந்து போன சில ஆண்டுகளாக சில பிறழ்வுகளை அனுசரித்து வாழவேண்டியதாயிருக்கிறது. எனது வாழ்க்கை இப்படித்தான் இருக்கவேண்டும் என்பதற்காக சில வழமைக்கு மாறான முடிவுகளை எடுக்கவேண்டியிருந்திருக்கிறது. இனியும் அப்படியேயே இருக்கும் என்பதையும், நான் நன்கு உணர்ந்துமிருக்கிறேன். கடந்த காலத்தை கடந்து கொள்வது இலகுவாயில்லை, நிகழ்காலமும் அப்படியே.

மன அழுத்தங்களுடன், இடிந்துபோன கற்பனைகளுடன் தனியே, தனிமையுடன் வாழ்வது என்பது இலகுவல்ல. எல்லாவற்றையும் புதிதாய் நிறுவிக்கொள்ளும் அவசியமுமிருக்கிறது. மிக முக்கியமாய் என்னுடன் நான் சமரசப்பட வேண்டியிருந்தது, இருக்கிறது. மன அழுத்தங்களில் இருந்து வெளிப்படவேண்டியிருந்தது.

வாழ்க்கை என்பது இலகுவல்ல.அது பெரும் புரியாத புதிர். எந்நேரமும் எதுவும் நடக்கலாம். வாழ்க்கை என்னை பல விதங்களிலும் ஆழ இழுத்து, புறட்டியெடுத்து, ஒரு கரையில் தனிமையில் தூக்கியெறிந்திருக்கிறது. விளித்தெழுந்த கணங்களில் தனிமை என்னும் குளிரில்  தனியே, தன்னந் தனியே நடுங்கிக்கொண்டிருந்திருக்கிறேன். நான் தனிமைமையை உணரும் தருணங்கங்கள், மிகவும் வலிமிகுந்தவை மட்டுமல்ல, என்னை மிகவும் பலவீனமாய் உணரும் தருணங்களும் அவையே. சுய பரிதாபம் என்னை வெற்றிகொள்ளும் தருணங்கள் எல்லாம் நான் தனிமையை உணர்ந்தவையகவே இருந்திருக்கின்றன.

சில பிறள்வுகளை ஏற்றுக்கொண்டு அவற்றுடன் பூசலி்ன்றி வழவேண்டியிருக்கிறது. அதன் பிரதிபலனே இந்த தனிமை. எனவே இந்தத் தனிமை என்பது நான் வரவழைத்துக் கொண்டது. எனவே அதனுடன் சமரசமாகவேண்டிய அவசியம் எனக்கிருக்கிறது. சமரசம் என்று பேசுவது இலகு.சமரசம் பற்றி ஏனையவர்களுக்கு அறிவுரை வழங்குவதும் இலகு. ஆனால் அதுவே எனது வாழ்வில் என்றாகும் போது பெருத்த சிரமமாயிருக்கிறது.

எனது தவறுகளை உணர்ந்துமிருக்கிறேன். அதேவேளை உறவுகளுக்கும், கலாச்சாராத் தழைகளுக்கும் கட்டுப்பட்டு என் மனதுக்கு ஒவ்வாததோர் வாழ்க்கையை வாழவும் நான் விரும்பவில்லை. அப்படியானதேர் வாழ்க்கையில் அர்த்தம் இருப்பதாகவும்  என்னால் ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது.

இளமை கழிந்து, வயோதிபத்தை எதிர்நோக்கி இருக்கும் காலம் என் முன்னே விரிந்து கிடக்கிறது. எனது முடிவுகள் எனது வாழ்க்கையின் போக்கை முற்றிலும் மாற்றியமைத்திருக்கிறது என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

இப்படியான சிந்தனையோடிய நாட்களில் தான் இந்தப் பாதயாத்திரையின் எண்ணம் தோன்றிற்று. 
ஆம், என்னுடன் நான் சமரசமாவதற்காகவே இந்த நடைப்பயணத்தை ஆரம்பித்தேன்.
இந்த பாதயாத்திரையின் போது பல பல மணிநேரங்கள்  தன்னந்தனியே என்னுடன் உரையாடிபடியே நடந்திருக்கிறேன். இரவுகளில் வானத்தைப் பார்த்தபடியே படுத்துக்கிடந்திருக்கிறேன். பல நேரங்களில் மனதின் ஆற்றாமை கண்களினூடாக வழிந்தோடியிருக்கிறது. என்னை நானே வெற்றி கொள்வதற்காய் எனது சக்தியெல்லாம் திரட்டி  13 -14 மணிநேரங்கள் தொடர்ந்து நடந்திருக்கிறேன். அந்நேரங்களில் கிடைத்த ஓர்ம உணர்வானது மனதிற்கு பெருத்த ஆறுதலைத் தந்தது. அந்த உணர்விற்காகவே அந்த வலியை விரும்பினேன்.

நாளையுடன் நடைப்பயணம் முடிவடைகிறது. ஆனால் என் மனது ஆறியிருக்கிறதா, என்னுடன் நான் சமரசமாயிருக்கிறேனா, பழிக்குப்பழி உணர்வுகள் அடங்கியிருக்கிறதா என்று என்னை நானே கேட்டுக்கொண்டேன். ‌அதற்காக இன்னும் பல பல ஆயிரம் கி.மீற்றர்கள் நீ நடக்கவேண்டியிருக்கலாம் என்கிறது மனது.

ஆனால் இழந்துபோயிருந்த சுயமதிப்பும், சுய நம்பிக்கையும் மீண்டிருக்கிறது. என்னாலும் முடியும் என்னும் நம்பிக்கை உண்டாகியிருக்கிறது. மன அழுத்தம் குறைந்திருக்கிறதா என்பதற்கு காலம் தான் பதில் சொல்லவேண்டும்.

வாழ்க்கையென்பது அத்தனை இலகுவல்ல நண்பர்களே. சாண் ஏற முழம் சறுக்கும் விளையாட்டுத்தான் அது. எமது சமூகத்தில், வாழ்க்கைச் சிக்கல்களை கடந்துகொள்வது என்பதும் இலகுவல்ல. நக்கல், குத்தல் கதைகளும், கற்பனைக்கதைகளும், தாமேதோ பரிசுத்தமானவர்கள் என்பவர்களும் வாழும் சமூகமல்லவா எம்முடைய சமூகம். மெது மெதுவாய் இவற்றையும் கடந்து போகக் கற்றுக்கொண்டிருக்கிறேன்.

15.06.2012 அன்று காலை நண்பர் Frank எழுவதற்கு முன்பாகவே நான் எழுந்து கொண்டேன். Frank இன் கதவைத் தட்டி எழுப்பிய பின், எனது காலில் இருந்த காயங்களுக்கு மருந்திட்டபின்  நடப்பதற்கு ஆயத்தமானோம்.

இருவரும் நடக்கலானோம். 18 கிலோ மீற்றர்கள். ஒரு மணிநேரத்திற்கு 4 கிலோமீற்றர்கள் என்றால் 4,5 மணிநேரத்தில்  யாத்திரை முடிவடையும் என எண்ணியிருந்தோம். எம்மால் அமைதியாக நடக்கமுடியாதிருந்தது:  அவரை நானும், என்னை அவரும் முந்தியபடி நடந்துகொண்டிருந்தோம். உணவிற்கு கூட நடையை நிறுத்தவிரும்பவில்லை நாம். மழையும் குளிரும் எம்மை தொடந்து கொண்டிருந்தது.

Santiago De Compostela  நகரம் கண்ணில் தென்படத் தொடங்கியது. ஓட்டமும் நடையுமாய் நடந்துகொண்டிருந்தோம். நகரம் நெருங்க நெருங்க எமது நடையும் வேக‌மெடுத்தது. உடல்வலிகள் மறைந்துபோயிருக்கு நடையும் ஓட்டமுமாய் முன்னேறிக்கொண்டிருந்தோம்.

நகரத்தின் வீதிகளினூடே நடந்த போது ஏற்பட்ட மனதின் உணர்வுகளை வார்த்தைகளில் கூறுவது இலகுவல்ல. வெற்றிகொள்ளமுடியாத ஒன்றை வெற்றிகொண்ட மனநிலை அது.

எனது குழந்தைகளின் நினைவுகள் மனமெங்கும் நிறைந்திருந்தன. உணர்ச்சிகளின் உச்சத்தில் கண்கள் கலங்கி வழிந்தோடிக்கொண்டிருக்க, முகத்திலடித்த மழையில் அவை கழுவுப்பட்டுப் போயின. குழந்தைகளை அருகில் அமர்த்தி இந்தப் பயணத்தைப் பற்றிச் உரையாடி மகிழவேண்டும் என்று நினைத்துக்கொண்டேன்.

எமது நடை குறுகிய வீதிகளூடாக Santiago De Compostela  என்னும் பழம்பெரும் தேவாலயத்தை வந்தடைந்தது. பாதயாத்தீகர்களின் சம்பிரதாயப்படி எமது வரவைப் பதிந்து கொண்டபின், எமக்கு எமது யாத்திரையை நிறைவு செய்ததற்கான சான்றிதழ் வழங்கப்பட்டது.

இருவரும் சிறந்ததொரு விடுதியில் தங்கிக்கொண்டோம். Frank ப்ராங்க் நாளை அவர் பயணமாவதால் விடைபெற்றுக்கொண்டார்.

இன்றை நாளின் நினைவாக வலது கையில் குழந்தைகளின் பெயர்களான காவியா, அட்சயா என்று பச்சை குத்திக்கொண்டேன். முழங்கையில் இருந்து மணிக்கட்டுவரையில் சுற்றியிருந்த மெல்லிய பிளாஸ்டிக் பேப்பரினூடாக ‌இரத்தம் கசிந்துகொண்டிருந்து. அதனூடாக இரத்தமும் கறுப்பு நிறமும் கலந்த எழுத்துக்கள் தெரிந்தன. மனம் காற்றில் சருகாய் இருந்தது.

அன்று மாலை மீண்டும் தேவாலயத்தினுள் சென்றமர்ந்து கொண்டேன். பேரமைதி சூழ்ந்திருந்தது அங்கு. அவ்வமைதி என்னையும் அரவணைத்துக்கொண்டபோது, நானும் என்னை மறந்து உட்கார்ந்திருந்தேன்.

அமைதியின் பரிசுத்தம் என்னை மெது மெதுவாய் ஆட்கொண்டிருந்தது.
நான் இன்னும் என்னுடன் சமரசமாகிக் கொள்ளவில்லை என்றது மனது.

மீண்டுமொருமுறை யாத்திரை செல்லவேண்டும் என்று எனக்கு நானே சொல்லிக்கொண்டேன்.

வாழ்க்கையைத் தேடும் முன்னாள் போராளிள்

நேற்று ஞாயிற்றுக்கிழமையாதலால் அவசரப்படவேண்டியதில்லை, மதியம் 12 மணிக்கு முதல் ஒரு வேலையும் இல்லை என்பதால் தூக்கத்தின் சுகத்தினை அனுபவித்துக்கொண்டிருந்தேன். அப்போது தான் அந்தத் தொலைபேசி அழைப்பு வந்தது.

அண்ணண் நான் ______ கதைக்கிறேன் என்றார். எனக்குப் அவர் கூறிய பெயர் நினைவில் இருக்கவில்லை. ஆனால் அந்தக் கணீர் என்ற குரல் நினைவில் இருந்தது. எனவே அது யார் என்று புரிந்து கொண்டேன்.

அவர் ஒரு பெண்போராளி, 30 வயதுகள் இருக்கலாம். சென்றவருடம் இலங்கை சென்றிருந்தபோது அவரைச் சந்தித்திருந்தேன். கணவ‌ன் முள்ளிவாய்கால் காலங்களின்போது காணாதுபோனவர். இன்றுவரை எதுவித தகவலும் இல்லை. தற்போது அவருக்கு 5 வயதில் ஒரு மகன் இருக்கிறார். படுவான்கரைப்பகுதில் உள்ள ஒரு கிராமத்தில் வாழ்ந்திருந்தார். நான் அவரைச் சந்தித்தபோது.குடும்பத்தினரின் தொடர்பின்றியும், உதவியின்றியும் வாழவேண்டிய நிர்ப்பந்ததின் மத்தியில் பலத்த சிரமத்துடன் வாழ்ந்திருந்தார்.

உளவாளிகளும்( தமிழர்களான முன்னாள் போராளிகள்), உள்ளூர் பெரிசுகளும் அவரைக் குறிவைத்து, சந்தர்ப்பத்துக்காய் காத்திருப்பதை அறிந்த ஒரு நண்பர்தான் அவரை எமக்கு அறிமுகப்படுத்தினார்.

நான் அங்கு நின்றிருந்த நாட்களில்அவருக்கு பிரச்சனைகள் அதிகரித்ததால் அவர் உடனடியாக இடம் பெயரவேண்டியேற்பட்டது. கிழக்கு மாகாணத்தில் ஒரு தனிமனிதரின் முயற்சியினால் நடாத்தப்படும் ஒரு ஆநாதரவானவர்கள் வாழும் இல்லத்தில் அவர் வாழத் தொடங்கினார்.

எனது நோர்வே நண்பர் ஒருவர் அவரின் மாதாந்த செலவீனங்களைப் பொறுப்பேற்றுக்கொண்டார். இடையிடையே எனது நண்பர்கள் மூலமாக அவரைப்பற்றி அறிந்து கொள்வேன். கடந்து 4 - 5 மாதங்களாக அவரின் வாழ்வு நிம்மதியாக ஓடிக்கோண்டேயிருந்தது.

இன்று தொலைபேசியில் வந்ததும் அவர்தான். எப்படி இருக்கிறீர்கள்?, மகன் எப்படி? வாழ்க்கைநிலை எப்படி என்று பேசிக்கொண்டிருந்தோம்.

அவர் தங்கியிருக்கும் இடம் மிகவும் சிறியது. அங்கு பல அநாதரவான பெண்கள் தங்கியிருக்கிறார்கள். பல குழந்தைகளும் தங்கியிருக்கிறார்கள். மிகுந்த இடப்பற்றாக்குறை இருக்கிறது. சாதாரண ஒரு வாழ்விற்கான இடமல்ல அது. தற்காலிகமான பாதுகாப்பிற்காக இருக்கக்கூடிய இடமே அன்றி, நிரந்தர இடமல்ல அது என்றார். 

அண்ணண்! எதிர்காலத்தை நினைத்தால் பயமாயிருக்கிறது. என்ன செய்வது என்று புரியவில்லை, குழப்பமாயிருக்கிறது, மகனைப் படிப்பிக்கவேண்டும் என்று கூறினார். மனது கனத்துப் போனது எனக்கு.

அவரின் வாழ்வில் 15 ஆண்டுகளுக்கு மேலான காலத்தினை விடுதலைக்காக பொடுத்திருத்திருக்கிறார். கல்விகற்கும் காலத்தில் இயக்கத்தில் இணைந்ததால் கல்வித்தகைமைகள் எதுவுமில்லை. இயக்ககட்டடைப்பில் உயர் பதவியில் இருந்தால் தொழிற்பயிற்சியோ, அனுபவமோ இல்லை. தெரிந்ததெல்லாம் இயக்கமும், போரியல்வாழ்வும், போரியல்அறிவும் மட்டுமே.

போரின் பின்னான இன்றைய வாழ்வியற் சூழலுக்குள் அவரால் இயங்கமுடியாதிருக்கிறது. மிவவும் தடுமாறிக்கொண்டிருந்தார். உங்களால் என்ன செய்ய முடியும் என்று கூறுங்கள் அதற்கான முயற்சிகளை செய்து பார்ப்போம் என்றேன்.

என்ன செய்வது என்று தெரியவில்லை, ஆனால் பயமாயிருக்கிறது என்றபோது, அவரின் சுயநம்பிக்கை, ‌நான் அவரைச் சந்திததபோதிருந்ததை விட பலமடங்கு குறைந்திருந்ததை அவதானித்தேன். 30 வயதுகளின் ஆரம்பத்தில் கணவன் இன்றி, தொழில் இன்றி, 5 வயதுக் குழந்தையுடன், குடும்பத்தாரினது உதவியின்றி, சமூகத்தின் அரவணைப்பின்றி ஒரு தற்காலிக இடமொன்றில், இன்னும் பலருடன் வாழும் அவரின் மனநிலை எப்ப‌டியிருக்கும் என்று உணரக்கூடியதாகவிருந்தது.


நலிந்த மக்களுக்கு வாழ்வாதரத்தை ஏற்படுத்திக்கொடுக்க விரும்பும் தமிழ்ர்களின் உதவியினால் பல குடும்பங்கள் சுயதொழில் செய்து வாழ்வதற்கான உதவிகளைப் பெற்றுக்கொண்டதை அவர் அறிவார். எனவே உங்களால் ஏதும் தொழில் செய்யமுடியுமாயின் கூறுங்கள், அதற்கான முதலீட்டுக்கான உதவிகளைப் பெற முயற்சிப்போம் என்றேன், அவரிடம். என்ன தொழில் செய்வது? எப்படிச் செய்வது? அது பற்றிய அறிவே எனக்கில்லையே என்றார்.

நான் நன்கறிந்த ஒரு முன்னாள் போராளி சுயதொழில் செய்கிறார். அவரிடம் உங்களுக்கு தொழில் கிடைக்கலாம் ஆனால் நாளொன்றுக்கு போக்குவரத்துக்கு 3 மணிநேரம் வேண்டும், உங்களால் முடியுமா, என்றேன். குழந்தையின் சிறுவர் பாடாசலையில் நேரப்பிரச்சனைகள் வரும் என்றும், தொழிட்சாலைக்கு அருகிற்கு வீடு மாறுவது என்றாலும் 1 லட்சம் முற்பணமாகக் கொடுக்கவேண்டும் என்றும், வாடகை ஏறத்தாள  5000 வரலாம் என்றும் கூறினார்.

எனக்கு அறிமுகமான ஒருவரின் தாயார் கொழும்பில் தனியே வாழ்கிறார்.  அங்கு தங்கியிருக்க அவர்கள் ‌அனுமதித்தால் அந்த முதியவருக்கும் உதவியாயிருக்கும், உங்கள் குழந்தைக்கும் கல்விகற்பதற்கு அவர்கள் உதவ நான் முயற்சி செய்கிறேன். எனவே  அவர்களிடம் கேட்கவா என்றதுக்கு, குழந்தையின் விளையாட்டுக்கள், குழப்படிகளை தாங்கிக்கொள்வார்களோ என்னவோ என்று பயந்தார்.

நான் கேட்பதற்காய் கோவித்துக்கொள்ளாதீர்கள், மனதில்பட்டதை கேட்கிறேன் என்றபடியே, வெளிநாட்டில் திருமண ஒழுங்குகள் ஏதும் செய்யும் வாய்ப்புக்கள் ஏற்பட்டால் அது பற்றி உங்கள் கருத்து என்ன என்றேன். 
சற்று அமைதி நிலவியது எமது உரையாடலில். ”அண்ணண்! அவர் சாகவில்லை என்றே நம்புகிறேன். கட்டாயம் எங்காவது இருப்பார். அப்படி அவர் இருந்து என்னைத் தேடிவந்தால் என்ன செய்வேன். அவர் பாவமல்லவா என்றார்”

என்னால் எதுவும் பேச முடியவில்லை. அமைதியாகவிருந்தேன்.

சுயதொழில் தொடங்குவதற்கான அறிவுரைகள் வழங்கும் இரு நண்பர்களின் தொடர்புகளைக் கொடுத்து அவர்களுடன் தொடர்புகொள்ளுங்கள். அதன் பின் மீண்டும் பேசுவோம் என்று கூறி தொலைபேசி உரையாடலை முடித்துக்கொண்டேன்.

அதன் பின் இன்றைய காலைப்பொழுது முழுவதும் அவரைப்பற்றிய நினைவாகவே இருந்தது. நான் அவரைச் சந்தித்தபோது அவர் மீது மிகுந்த மரியாதை உருவாகியிருந்தது. வயது குறைந்து பெண்ணாலும் அவர் வகித்த பதவியும், விடுதலையுணர்வும், வன்னித் தலைமை மீது அவர் காட்டிய விசுவாசமும், முள்ளிவாய்காலில் ஒரு கைக்குழந்தையுடன்அவர் கடந்து வந்த வலிகளும் எனக்கு அவர் மீது பெரு மரியாதையை உருவாக்கியிருந்தது.

இயக்கம் இருந்த காலங்கள் மறைந்து, இன்றைய காலத்தில், முன்னைய போராளிகள் சமூகத்தில் ஏனையவர்களுடன் சமமாக வாழும் நிலை இல்லாதிருப்பதன் காரணங்கள் என்ன என்று சிந்தனை கட்டற்று ஓடிக்கொண்டேயிருந்தது.

எங்கள் சமூகம் ஏன் இப்படியிருக்கிறது? எத்தனை எத்தனை வளங்களைக் கொண்டிருக்கிறது எமது பலம்பெயர் சமூகம்? அப்படியிருந்தும் ஏன் பலரும் நாம் கடந்து வந்த பாதையை திரும்பிப்பார்க்கின்றோம் இல்லை?  டாம்பீகமான விழாக்கள், சுற்றுலாக்கள், அதீத சௌகரீயங்கள் என்று சுயநலமாய் சிந்திக்கும் ஒரு மனிதக்கூட்டமாய் நாம் மாறிப்போனதற்கான காரணம் என்ன? சக மனிதின் வலிகளைப் புரிந்துகொள்ளாமுடியாத அளவுக்கு நாம் மாறக் காரணம் என்ன?


சிந்திக்க சிந்திக்க கேள்விகள் தொடர்ந்துகொண்டே இருந்தன.

போரின் முன்னும் பின்னும், போராளிகள் பற்றி புலம்பெயர் சமூகம் கொண்டிருக்கும் முறன்பாடான நிலையானது விசித்திரமாக இருக்கிறது. போர்க்காலங்களில் போற்றிப் புகழப்பட்டவர்கள் இன்று தமது இருப்புக்காக கையெந்தும் நிலையில் இருக்கிறார்கள். இருப்பினும் எவரும் இவர்கள் பற்றி சிந்திக்கும் நிலையில் இல்லை. மக்கள் அமைப்புக்கள் என்று கூறிக்கொள்ளும் பெருமனிதர்கள் உட்பட.

இன்று முழுவதும் இன்று உரையாடிய பெண்ணிண் குழந்தையின் முகம் நினைவிலாடிக்கொண்டேயிருக்கிறது. சக தமிழனாய் அவனின் முகத்தை சந்திக்கும் தைரியம் எனக்குண்டா என்று என்னையே கேட்டுக்கொண்டிருக்கிறேன்.

நீங்களும் அதே கேள்வியினை கேட்டுக்கொள்வீர்கள் என்றே நம்புகிறேன்.