சனிமாற்றம் -- படு அமோகமாய் இருக்கிறது

நேற்று முன்மதியம் கடைக்குப்போயிருந்தேன். பெரீய கடை. சூப்பர் மார்கட் என்று வைத்துக்கொள்ளுங்கள். கடையின் ஆரம்பத்தில் இருந்து முடிவுரை சுற்றியபோது கால் வலித்தது. அந்தளவு  ‌பெரிய கடை.

எனக்கு பாணுடன்  சேர்த்து உண்பதற்கு பதப்படுத்தப்பட்ட இறைச்சி தேவைப்பட்டது. அதைத் தேடி எடுத்துக்கொண்டு ஒஸ்லோ முருகனை நினைத்தபடியே பணம் செலுத்தும் இடத்திற்கு நடந்துகொண்டிருந்தேன்.

“ண்ணா, வணக்கமுங்கண்ணா” என்பது போல நோர்வேஜிய மொழியில் ஒருவர் எனக்குப்பின்னால் இருந்து அழைப்பது கேட்டது.

திரும்பிப்பார்த்தேன். ஒருவர் பெரும் புன்னகையை வாயில் நிறுத்தி நின்றிருந்தார்.

புருவத்தை உயர்த்தி என்ன பிரச்சனை என்றபோது…
“எனது பெயர் பவுல். நீங்கள் எங்கள் கம்பனியின் பதப்படுத்தப்பட்ட இறைச்சியை வாங்கியிருக்கிறீர்கள். மிக்க நன்றி. மிக்க மகிழ்ச்சி” என்றவாறு தனது அடையாள அட்டையைக் காட்டினார். அதில் நான் வாங்கியிருந்த இறைச்சி தயாரிப்பு நிறுவனத்தின் பெயர் இருந்தது.


“ம்”

“உங்களுக்கு நேரம் இருந்தால் நான் உங்களிடம் சில கேள்விகளை கேட்கலாமா”


நமக்குத்தான் இப்படியான கேரக்டர்கள் என்றால் கருவாடு சாப்பிடுவதுபோல இன்பம் என்பதால் “ ஆம். அதற்கென்ன கேளுங்கள்” என்று தருமியிடம் கேளும் கேளும் கேட்டுப்பாரும் என்ற சிவாஜி போல் நெஞ்சை நிமிர்த்தி நின்றேன்.

“அய்யா, நீங்கள் பாதையின் நடுவில் நிற்கிறீர்கள். இப்படி ஓரத்துக்கு வாருங்கள். மற்றவர்களுக்கு இடைஞ்சல் இல்லாது நிற்போம்” என்று எடுத்த எடுப்பிலேயே என்னைக் கவிட்டார், சேல்ஸ்மேன். இனி அவரை சேல்ஸ்மேன் என்றே அழைப்போம்.


ஒதுங்கி நின்றுகொண்டேன்.. அவர் குனிந்த தனது பையினுள் இருந்து ஒரு ஐபாட் எடுத்தார். எனக்காக இருக்குமோ என்று நான் ஆசைப்பட்டது உண்மைதான்.

அவர் ஐபாட்ஐ தொட்டார். தொட்டால் பூ மலரும் பாடலைப் போன்று அது மலர்ந்தது. காதலியை தூக்கிவைத்திருப்பது போன்று அதை கவனமாக பிடித்திருந்தார்.  என்னிடம் ஒரு புத்தகம் போன்றதொன்றைத் தந்தார். வாங்கிக்கொண்டேன்.

“அதை சற்று வாசியுங்கள். நான் எனது கேள்விகளை தயார்படுத்துகிறேன்” என்றார்

ஏற்கனவே 2 – 3 நிமிடங்கள் கழிந்திருந்தன. எனக்குள் எரிச்சல்வரும் சமிக்ஞை சற்றுத் தொலைவில் வந்துகொண்டிருந்தது.

நான் வாசித்தேன். அதற்குள் சேல்ஸ்மேன் தனது கணைகளை என்னை நொக்கி ஏவத்தொடங்கினார்.


“வயது”
“49?”
”ஆணா, பெண்ணா?”
“என்ன நக்கலா?”
“இல்லை.. கணிணி அப்படி கேட்கிறது”
“ஆண் என்றுதான் நம்பிக்கொண்டிருக்கிறேன்”
“ம்”
”ஏன் இந்த இறைச்சியை வாங்கினீர்கள்?”
“பசித்தது”
சிரித்துவிட்டு “ஏன் வேறு கம்பனிகளின் இறைச்சியை வாங்கவில்லை?”


சரி.. இதை வைத்துவிட்டு மற்றைய கம்பனியுடையதை எடுக்கவா என்று கேட்க நினைத்தேன். என்றாலும் அடக்கிக்கொண்டேன்.


“எனக்கு இந்த கம்பனியின் இறைச்சி பிடிக்கும்”
“ஏன்?”
“தெரியாது, ஆனால் பிடிக்கும் - உனது மனைவியை உனக்கு பிடிப்பதுபோல” என்றேன். மனிதர் நகைச்சுவையை ரசிப்பார் என்று நினைத்தேன். அவர் கேள்வியில் குறியாய் இருந்தார்.


“சுவை, தரம், இறைச்சி அடைக்கப்பட்டிருக்கும் விதம், விளம்பரம்… இவற்றில் ஒன்றறை நீங்கள் தெரிவு செய்யலாம்.
“சுவை”
”இது மட்டும்தானா?”  குரலில் ஏமாற்றம் தெரிகிறது
“சர்வ நிட்சயமாக அது மட்டும்தான்”
”ஏன் உங்களுக்கு தரம், இறைச்சி அடைக்கப்பட்டிருக்கும் விதம், விளம்பரம் போன்றவை எங்களுடைய தயாரிப்பை வாங்கத்தூண்டவில்லை?”

எனக்கு வடிவேலு ஒரு படத்தில் இசை எங்கிருந்து வருகிறது என்று ஒரு பைத்தியத்தை கேட்டு அதன்பின் அவர் பட்ட அல்லல் நினைவுக்கு வந்தது.

”தெரியாது”
”தரத்தில் நம்பிக்கையில்லையா?”
”நான் அப்படிச் சொல்லவில்லை”
”விளம்பரம் பிடிக்கவில்லையா?”
”என்னிடம் தொலைக்காட்சிப்பெட்டி இல்லை”
”சுற்றுச் சூழலை மாசுபடுத்தும் கழிவுகள் குறைந்த எங்கள் பொலித்தீன் பை பிடிக்கவில்லையா?”

எனக்குள் எரிச்சல்வரும் சமிக்ஞை சற்றுத் தொலைவில இருந்து இப்பொது சற்று அண்மையில் வந்திருந்தது.

” உங்களிடம் உள்ள புத்தகத்தில் உள்ள எங்கள் தயாரிப்புக்களில் எதை வாங்குவீர்கள்?”

”இப்படியே நீ கேட்டுக்கொண்டிருந்தால் எதிர்காலத்தில் ஒன்றையும் வாங்கமாட்டேன்” என்று சொல்ல நினைத்தாலும் மனம் இடம் கொடுக்கவில்லை.

சேல்ஸ்மேன்ஐ மகிழ்விப்பதற்காக அதில் இருந்த பொருட்களில் 6 – 7 பொருட்களைக் காட்டினேன். அதன் பின்தான் அது எவ்வளவு முட்டாள்தனம் என்று புரிந்தது. மனிதர் அவற்றில் ஒவ்வொன்றுக்கும் பல கேள்விகளை வைத்திருந்தார்.

”இந்தக் கடைக்கு ஒரு மாதத்தில் எத்தனை தடவை வருகிறீர்கள்?”
”நான் இந்தக் கடைக்கு வருவதே இல்லை. இன்று இந்த ஊருக்கு வந்திருப்பதால் இந்தக் ககை;கு வந்தேன். எனது வீட்டுக்கும் இந்தக் கடைக்கும் இடையில் ஏறத்தாள 35 கி.மீ”

”ம் ..  உனது விலாசம் என்ன?”
”கூறினேன்”
கணிணியில் தட்டினார். ”உனது வீட்டில் இருந்து மேற்கே 1 கி.மீ தூரத்தில் எங்கள் பொருட்களை விற்கும் கடை இருக்கிறது. அங்கு வாகனம் நிறுத்துமிடம் இலவசம். இப்போது அங்க காலநிலை 5 பாகை.” என்றார்

”கேள்விகள் முடிந்துவிட்டதா”
”இல்லை இப்போதுதான் ஆரம்பித்திருக்கிறது”
விதி எப்படியெல்லாம் சதி செய்கிறது என்பதை நான் நினைத்துக்கொண்டேன் திடீர் என்று சனிமாற்றம் நினைவுக்கு வந்தது. பழியை அதன்மேல் போட்டுவிடுவோம் என்று எண்ணிக்கொண்டேன்.

”இந்த  இறைச்சி கொள்கலனை கண்டிருக்கிறாயா” என்று கேட்டபடியே ஒரு வட்டமாக கொள்கலனைக் காட்டினார். அது என்னைப்போலவே அடக்கமானவும், அழகாகவும் இருந்தது.

”இல்லையே, இது அழகாகவும் செக்சியாகவும் இருக்கிறது”
மனிதர் மர்மான புன்னகைபுரிந்தார்.

”இது எங்கள் புதிய வெளியீடு”
”அப்படியா, மகிழ்ச்சி, வாழ்த்துக்கள்”
”நன்றி,  இனிமேல் நீ இந்த கொள்கலனை வாங்குவாயா நீ வாங்கியதை வாங்குவாயா?”
”புதியதைத்தான் வாங்குவேன்”
”ஏன்”
”அழகானதாகவும், செக்சியானதாகவும் இருக்கிறது”
சிரித்தார்

”இது குறைந்தளவு சூழல்மாசுபடும் கழிவுப்பொருட்களை கொண்டது”
”ம்”
“இது விலை குறைவு”
”ம்”
“உள்ளடக்கத்தின் நிறையும் அதிகம்
“ம்”

எனக்கு எரிச்சல் வாசல்கதவுவரை வந்திருந்தது. எனது மிகப்பெரிய பலவீனங்களில் முக்கியமானது மனதர்களுடனான உரையாடலகளை முறிப்பது. அது இங்கும் சிக்கலைத்தந்தது. எனவே சிரத்தையில்லாது பதில் சொல்வது போல “ம்.. ம்.. ம்.. “ என்று பதிலளித்தேன். மனிதர் அதற்கொல்லாம் அசைபவராகத்தெரியவில்லை.

கேள்விகள் தொடர்ந்தது

“எங்கள் கம்பனியைப்பற்றி உங்களுககு என்ன தெரியும்?”

கடுப்பு ஏறி தலையில் உச்சியில் நின்று ஆடிக்கொண்டிருந்தது.

“கேள்வி கேட்டே நுகர்வோரை கம்பனியின் பொருட்களை வாங்காது பண்ணும் ஒரே கம்பனி” என்று சொல்வோம் என்று நினைத்தேன். ஆனால் முடியவில்லை.

“உலகப் புகழ்பெற்றது” என்று அள்ளிவிட்டேன்.
“எங்களின் பங்கு தாரராக சேர்ந்துகொள்ள விருப்பமா?”
“விருப்பம். பங்குகளை இலவசமாகத் தருவீர்களா”?
”....:”
“நண்பரே! உங்களின் பொன்னான நேரத்தை எங்களுக்காக செலவிட்டதற்கு நன்றி. உங்கள் தொலைபேசி இலக்கத்தை இந்த இடத்தில் எழுதுங்கள் என்று ஒரு கொப்பியை நீட்டினார்.

அதில் இன்றைய திகதிக்கு கீழ், எனக்கு முன்; ஒரே ஒருவர் பதிலளித்திருந்தார் என்பதற்கு சாட்சியாக அவரது கையெழுத்து இருந்து.  என்னைப்போல  ஒருவன் என்று நினைத்தபடியே தொலைபேசி எண்ணை எழுதினேன்.

ஏறத்தாள 30 நிமிடங்களை தின்றிருந்தார் சேல்ஸ்மேன்.

நன்றி என்று கூறிப்புறப்பட்டேன்.
சற்றுத் தூரம் நடந்திருப்பேன்..

“ண்ணா, வணக்கமுங்கண்ணா” என்பது போல ஒரு குரல் கேட்டது. கேட்காததுபோன்று விரைவாக நடந்தேன். மீண்டும் அருகில் “ண்ணா, வணக்கமுங்கண்ணா” என்பது போல கேட்டது. கேட்காதது போல நடந்தேன்.
எனது தோளில் யாரோ தட்டினார்கள். பயத்துடன் திரும்பிப்பார்த்தேன். சாட்சாத் சேல்மேன்னேதான் நின்றருந்தார்.

”நண்பரே.. உங்களுடைய நேரத்தை செலவளித்ததற்காக எமது கம்பனி உங்களுக்கு 100 குறோணர்களை தந்திருக்கிறது. இந்த அட்டையை பாவித்து அதற்குரிய பணத்தைப் பெற்றுக்கொள்ளுங்கள் என்றார்.
20 நிமிடங்களுக்கு 100 குறோணர்கள் மிக மிக சிறந்த சம்பளம்.
சனிமாற்றம் நன்றாகத்தான் இருக்கிறது.

இலக்கியத்தில் வாழ்பவர்

அவர் 1970 களின் நடுப்பகுதியில் எங்கள் மட்/மெதடிஸ்த மத்திய கல்லூரியில் கற்பித்தவர் என்பதைக்கூட நான் பின்னாளிலேயே அறிந்துகொண்டேன். அவரின் மகன் எனது வகுப்புத்தோழன். அவன், இவரின் மகன் என்பதும் பின்னால் வந்த ஓரு நாளிலேயே அறியக்கிடைத்தது.

இவ்வருடம் ஊருக்குச் சென்று எனது பாடசாலையின் முன்னைநாள் அதிபருடன் உரையாடியபோது பலரையும் நினைவூட்டி உரையாடிக்கொண்டிருந்தோம். அதிபர், தானாகவே இவரை நினைவூட்டி ”மிக முக்கிய மனிதர்” என்று அடையாம்காட்டியதும் இவரையே.

அவர் எனக்கு 6ம் 7ம் வகுப்புக்களில் தமிழ் கற்பித்திருக்கலாம்.அது என் நினைவில் இல்லை. எனது தமிழாசான்கள் லீவு எடுத்த ஒரு நன்னாளில் அவர் எனக்கு தமிழ் கற்பித்திருக்கலாம்.அதற்கான சந்தர்ப்பங்கள் மிக அதிகம்.ஆனால் இதுவும் என் நினைவில் இலலை.

சில ஆண்டுகளுக்கு முன்னான அழகியதொரு நாளில் ஓருதடவை அவருடன் ஒருமுக்கிய விடயம் காரணமாக உரையாடியிருக்கிறேன். கிழன்ற சிங்கத்தின் குரல். அனுபவமான வார்த்தைகள், அழகு தமிழ், இதுவே அவர். அவருடனான எனது உறவு ஒரே ஒரு தொலைபேசி உரையாடல் மட்டுமே.

மித்ரவை உனக்கு தெரியுமா? என்றார். ஆண்டுகள் பல கடந்திருந்தாலும் பெயரில் புத்தரசோகம் இழையோடிக்கிடந்தது. பெயர் நினைவில் இருக்கிறது. முகம் நினைவில் இல்லை என்றேன். மறுபுறம் அமைதியாய் இருந்தது சில கணங்கள்.

இவ்வளவுதான் அப்பெரும் மேதையுடனான எனது உறவு.. இருப்பினும் அவரைப்பற்றி பலர் கூறக்கேட்டிருக்கிறேன். பலர் எழுதி வாசித்திருக்கிறேன். அவருடன் இணைந்து செயற்பட்டவர்கள் அவரைப்பற்றி கூறக்கேட்டிருக்கிறேன். பழகும் பாக்கியம் கிடைக்கவில்லை
கட்டாயம் சந்திக்கவேண்டும் என்ற இலக்கிய ஆளுமைகளில் இவரும் ஒருவர்.

இனி எங்கள் எஸ். போ அய்யா இல்லை.

வாழ்க்கை என்னிடம், நான் உன்னிஸ்டப்படி நடப்பவனல்ல என்று கூறியபடியே நடந்துகொண்டிருக்கிறது. நான், அதன் பின்னே நடந்துகொண்டிருக்கிறேன்.

எஸ். போ அய்யாவுக்கு எனது அஞ்சலிகள்.

Putin அடித்த அமெரிக்க அசைலம்,


இரவு ஒரு அற்புதமான நண்பரைச் சந்தித்தேன். மிகவும் கலகலப்பானவன். அவனுடன் இணைந்தாவே காலம் மகிழ்ச்சியாக கரைந்துவிடும். எமக்கிடையிலான அறிமுகம் கிடைத்து ஒரு 4 - 5 வருடங்கள்தான் இருக்கும்.அடிக்கடி பறந்து திரிபவன் அவன். விமானி போன்றவன்.

ஒஸ்லோவிலதான் அறிமுகமானோம். வாய்க்குள் நூளையாத பெயரைக்கொண்டவன் அவன். பெயர் ஜக். ஆங்கிலத்தில் Jack என்று எழுதுவான்.

இவனுடைய பெயரில் எனக்கு அறிமுகமான ஒரு தம்பி இருந்தான். அவன் நோர்வேக்கு வருவதற்கு அவனது உறவினர்கள் ஒரு நோர்வேஜியப்பெண்ணுக்கு அவனை திருமணம் செய்வதுபோன்று ஒரு திருவிளையாடலை நடத்தியே அழைத்துவந்தனர்.  தம்பிக்கு அந்தப் பெண்ணைக் கண்டால்  கறுத்த முகமும் சிவந்துவிடுமளவுக்கு வெட்கம் வரும். அவள்  அவனிடம் இருந்து லட்சங்களை கறந்துகொண்டே இருந்தாள் இவனுக்கு வீசா கிடைக்கும்.வரையில்.

வீசா கிடைத்ததும் தம்பி பேசாமல் இருந்திருககலாம். உறவினர்களுடன் ஏதோ மனஸ்தாபமாகிவிட்டது.  நடந்தது பொய்க்கல்யாணம் என்று  போலீசுக்கு உறவினர்கள் அறிவிக்க, தம்பி இப்போது இலங்கையில்.

ஆனால் அங்கு அவன் சென்று 4 ஆண்டுகளுக்குள் வக்கீலாக கற்றுத்தேறிவிட்டான். கல்யாணமாகி ஒரு குட்டியும் போட்டிருக்கிறான். இங்கிருந்து  ஊர்க்கு செல்லும் உறவினர்கள் அடக்கியயே வாசிப்பதாகவும் கதையுண்டு. எல்லாம் விதி.

கூற வந்ததை மறந்துவிட்டு தம்பியின் கதையை கூறிக்கொண்டிருக்கிறேன். மன்னியுங்கள்.

பல காலங்களின் பின் சந்தித்ததால்  நண்பரை  எனது மாளிகைக்கு அழைத்துவந்தேன். எனது வசந்தமாளிகையில் சொகுசு இருக்கை  ஒன்று கூட இல்லை. இருப்பது ஒரே ஒரு கட்டில். ஆனால் அதை சொகுசு இருக்கையாக மாற்றலாம். மாற்றினேன்.

எனக்கு உணவுதயாரிப்பது என்பது நேரத்தை வீணாக்குவது போன்றது. அந்த நேரத்தை மிச்சப்படுத்தி தூங்கலாம் என்பது எனது நம்பிக்கை. எனவே அவ்வப்போது கடையில்  உணவு வாங்குவேன். அல்லது டின் மீன்னையும் பாணையும் சாப்பிட்டுவிட்டு சரிந்துவிடும் மனிதன் நான். இன்று அதிஸ்டவசமாக நண்பரை சந்திப்பதற்கு முன் உணவு வாங்கியிருந்தேன். இறால் நூடில்ஸ். இருவருக்கும் அது காணுமாய் இருக்கலாம் என்று நம்பிக்கை இருக்கிறது. .

பலதையும் பேசி,  மிக்சரை கொறித்துக்கொண்டு சிரித்துக்கொண்டிருக்கையில் ஒரு குறுஞ்செய்தி வந்தது.மிக மிக கடுப்பேத்தும் செய்தி. அதற்குப்பின் 100க்கு அதிகமான குறுஞ்செய்திகள் பரிமாறப்பட்டன. அனைத்தும் எறிகணைத்தாக்குதல் போன்றதே. உயிரிழப்பு இல்லாவிட்டாலும்  இருபக்கத்திலும் மனச்சேதம். இதையும் பார்த்துக்கொண்டிருந்தான் நண்பன்.

எனது கோபத்தை அவன் நன்கு அறிந்தவன் என்பதால் அவன் சாப்பாட்டில் கவனமாக இருந்தான்.இடையிடையே என்னைப் பார்த்துச் சிரித்தான். எனக்கு அவனைப்பார்த்து சிரிப்பதா,  கோபமாகவே இருப்பதா என்று தெரியவில்லை. மரியாதைக்காக தலையை மட்டும் ஆட்டினேன்.

தூக்கம் வருவதுபோலருந்தது. அதற்குப்பின் இன்று மதியம் 13:25வரை இந்த பூலோகத்தில் என்ன நடந்தது என்பது எனக்கு நினைவில் இல்லை. ”நடுவில கொஞ்சம் பக்கத்தைக் காணோம்”  படத்தைப் போன்று.

இடையில் ஒரு முறை எழும்பியதாய் நினைவிருக்கிறது. அதன் பின்பும் தூங்கிவிட்டேன்.

இதன் பின்புதான் அந்த உலக அரசியலையே உலுக்கிப்போடும் அந்த மிக முக்கியமான கனவு எனக்கு வந்தது.

நோர்வே www.vg.no என்னும் பத்திரிகை சுவிஸ் நாட்டை ரஸ்யப்படைகள் கைப்பற்றி அங்கிருந்து ஏனைய நாடுகளையும் கைப்பற்றிவருகிறார்கள் என்று செய்தி போட்டிருந்தது.

நான் எனது  சுவிஸ் நண்பர்களை நினைத்துக்கொண்டேன்.  இருவரில் பரிதாபமே வரவில்லை. ஒருவர் கவிஞி மற்றையவர் கடலில் கப்பல் என்று கதை எழுதியவர்.

ஒரிரு நாட்களில் அமெரிக்கப்படைகள் நேட்டோ படைகளுடன்  சேர்ந்து சுவிசை மீட்டு எடுக்கின்றன. எனது நண்பர்களான கவிஞியையும், இத்தாலிக்கு கப்பல் விட்டவனும் தப்பிவிடுறார்கள்.

Putinஐ காணவில்லை என்று  பத்திரிகைள் எழுதுகின்றன. இணையத்தளங்கள் எங்கே இருக்கலாம் என்று ஊகித்து எழுதுகின்றன. தமிழ் ஊடகங்கள் அவர் இலங்கையில் என்று எழுதுகின்றன.

பூட்டினைக் காணவில்லை.  சத்தியமாகக் காணவில்லை. சதாம் உலகத்தைக் கலக்கியது போன்று பூட்டினும் மாயமாய் மறைந்துவிட்டார். அமெரிக்கப் படைகள்  அரிசியில் கல்லெடுப்பதுபோன்று தேடிவருகிறார்கள்.

நானும் சண்டை இல்லை என்று நிம்மதியாக தூங்கி எழும்பி வாழ்க்கையை ஓட்டுகிறேன்.

ஒரு நாள் காலை எனது குளியலறைக்குள் நின்று சவரம்செய்கிறேன். எனது குளியலறை திரைக்குப் பின்னால் ஒருவர் ஒளிந்திருப்பது தெரிந்தது ”யார் நீ” என்று கேட்கிறேன்.

”தோழர்.. நான் தான் Putin. நீங்கள் தான் என்னைக் காப்பாற்றவேண்டும்” என்று காலில் விழுகிறார்.விளடிமீர் பூட்டின்.

அவரே தொடர்ந்தார். நான் அமெரிக்காவில் அசைலம் அடிக்கப்போகிறேன். எனக்கு அமெரிக்காவுக்கு செல்வதற்கு ஒரு பாஸ்போர்ட் தேவை. அதை செய்து  தந்தால் நீங்கள் என்ன கேட்டாலும் தருவேன்” என்கிறார்.

அவர் குரல் நடுங்குகிறது.  என்னிடம் இருந்த வெட்காவை எடுத்துக் கொடுத்ததேன். மனிதரின் நடுக்கம் குறைந்து சற்றுநேரத்தில் நின்றுபோகிறது.

நான் அவர் உண்மை பேசியதாக நம்புகிறேன். அவர்மேல் பரிதாபம் வருகிறது.

”பாஸ்போட் செய்து தந்தால் என்ன தருவாய் என்று சொல்” என்கிறேன்.

”ஒரு அணுகுண்டும் அதை போடுவதற்கு ஒரு விமானமும் தருகிறேன்” என்கிறார்.

செத்தான்...  கோத்தா என்று நினைத்துக்கொள்கிறேன்.

சரி என்று கூறி, எனது பாஸ்போட்டுக்கு தலையை மாற்றிக்கொடுக்கிறேன்.
மாற்றி எடுப்பதற்கு சில வாரங்கள் ஆகின்றன. அதற்குள் பூட்டின் தமிழ்ச் சாப்பாடுகளை சாப்பிடவும் சமைக்கவும் கற்றுக்கொள்கிறார்.  கொத்துரொட்டி போடவும் முடிகிறது அவரால். எனக்கு சாப்பாட்டு பிரச்சனை தீர்ந்துபோகிறது.

புட்டினை  உருமாற்றி ஒஸ்லோ விமனநிலையத்தினூடாக  வாஷிங்கடன் அனுப்பியாவிட்டது.

பூட்டின்க்கு சஞ்சயன் செல்வமாணிக்கம் என்ற பெயரில்  அமெரிக்காவில் அசைலம் கிடைத்துவிட்டது. அவர் அங்கு ஒரு  தமிழ்க்கடையில் கொத்துரொட்டி போடுகிறார். அவரின் ரொட்டி வீசும் அழகில் மயங்கி வாஷிங்டன் நகரத்து மக்கள் தமிழக்கடைக்கு வெளியே காத்துக்கிடக்கிக்கிறாாகள். "பூட்டின் ரொட்டீ" அங்கு மிகப் பரபலமாகிறது.

பூட்டின் எனக்குக் கொடுத்த வாக்கினை காப்பாற்றிவிட்டார். இப்போது  என்னிடம் ஒரு அணுகுண்டும் ஒரு விமானமும் உணடு. ஆனால் விமானி இல்லை.

அணுகுண்டை ராஜபக்சேயின் கட்டிலுக்கு நேரே போடுவது என்று முடிவெடுக்கிறேன். நேற்று என்னைச் சந்தித்த நண்பரை விமானியாக அழைப்போம் என்று நினைத்தபடியே அவனுக்கு தொலைபேசுகிறேன்.

ரிங் போகிறது.

”யெஸ் ...  Danielsஇன் மகன் Jackபேசுகிறேன்” என்றார் நண்பர்....

கனவு கலைந்துவிட்டது.

கனவு உண்மை.  சாமி சத்தியமாக உண்மை

சற்று வெங்காயம் தாளித்து போட்டிருக்கிறேன் வாசனைக்காக.. அவ்வளவுதான்
கோவிக்காதீர்கள்.

காலத்தைக் காயும் மனசு

இன்று (29.06.2014) எங்கள் பாடசாலையான மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் 200 ஆண்டு சேவை நிறைவுநாள். மட்டக்களப்பில் பெருவிழா நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. அங்கு நின்றிருந்து தோழமைகளின் தோளில் கைபோட்டு, பால்யத்து நினைவுகளில் நனைந்தெழும்பவும், என் ஆசிரியர்களை சந்தித்து பேசி மகிழவும் நினைத்திருந்தேன். நினைப்பது எல்லாம் நடப்பதில்லை என்ப‌தை வாழ்க்கை மீண்டும் நிறுவிப்போயிருக்கிறது.

இன்று காலை முகப்புத்தகத்தினுள் நுழைந்தபோது விறைத்து நிற்கும் சாரணீயர்கள், பெரும் புன்னகையுடன் பாடசாலைச் சீருடையுடன் வீதியெங்கும் வரிசையாய் நிற்கும் மாணவர்கள், பாடசாலையின் முன்னாலிருக்கும் அழகிய பந்தல், விழா மண்டபத்தின் அழகு, விழா நடைபெறும்போதான படங்கள், மகிழ்ச்சியாய் கைகோர்த்திருக்கும் பழைய மாணவர்கள், எனது பேராசான் பிரின்ஸ் Sir பாடசாலையின் விழாவில் உரையாற்றும் புகைப்படம் என்று பல பல புகைப்படங்களைப் பார்க்கக் கிடைத்தது. அந்நிமிடத்தில் இருந்து  வாழ்நாளில் இனி‌யொருபோதும் கிடைக்கமாட்டாத ஒரு அற்புதமான நாளை இழந்திருக்கிறேன் என்னும் எண்ணம் என்னை பற்றிக்கொண்டிருக்கிறது. மனம் நீர் நிரம்பிய மண்ணைப்போல் கனத்திருக்கிறது. என் நினைவுகள் அனைத்தும் வெய்யில் நிறைந்த மட்டக்களப்பின், வெபர் விளையாட்டரங்கிற்கு முன்னாலிருக்கும் சீனிப் பனையின் அருகில் உள்ள Cartman மண்டபத்தையும், அதைச் சூளவுள்ள உயிரோட்டமான கட்டடங்களிலும் நின்றலைகிறது.

ஆண்டு 1976, மாதம் தை. இற்றைக்கு 38 வருடங்களுக்கு முன் பதுளை சரஸ்வதி மகாவித்தியாலத்தில் இருந்து மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு மாற்றப்பட்டு, நான் ஆறாம் வகுப்பிலும், தம்பி 2ம் வகுப்பிலும் சேர்க்கப்படுறோம். அதே நாள் பாடசாலையின் விடுதியிலும் சேர்க்கப்படுகிறேன். அம்மா மட்டுமே எங்களை பிபிலையில் இருந்து அழைத்து வந்திருந்தார். ஒரு நாள் எங்களுடன் விடுதியில் தங்கியுமிருந்தார். அந்த நாளின் எனது மனநிலையை இன்றும் உணரக்கூடியதாய் இருக்கிறது. புதிய மனிதர்களைக் கண்ட பயமும் வெருட்சியும் கலந்த உணர்வு. புதிய பாடசாலை என்றும் பயமும் சற்று மகிழ்ச்சியும் கலந்த மனநிலை, புதிய சூட்கேஸ் (புத்தகப்பை) எதனையும் ஆச்சர்யமாய் பார்த்த மனம், நாட்டு ஓட்டினால் வேயப்பட்டிருந்த ஒற்றைமாடிக் கட்டடம், வெள்ளையுடுப்புடன் நின்றிருந்த மாணவர்கள், அவர்களை தன் கண்ணிணால் மட்டும் ஒரு மந்திரவாதியைப்போல் கட்டடிப்போட்ட ஒரு வெள்ளைக்காரனைப்போன்ற ஒரு மனிதர் என்று அன்றைய நாள் அப்படியே மனதுக்குள் படிந்துபோயிருக்கிறது.

அன்றைய நாளில் இருந்து இன்றுவரை எனது நிழலைப்போன்று என் வாழ்க்கை முழுவதும் என்னை தொடர்ந்துகொண்டிருக்கிறது எனதருமைக் கல்லூரி. இந்த நிழல் நான் வாழும்வரை என்னைத் தொடர்ந்துகொண்டிருக்கும் என்பதை நான் உணர்ந்தகொண்டிருக்கிறன். தகிக்கும் வெம்மையின் நடுவே நிழலில் அடைக்கலமாவது எத்தகையதோ, அத்தகையது வாழ்வின் வெம்மையில் என் கல்லூரியின் நினைவுகள்.

1960 - 1970வதுகளின் மத்தியில் கிறீஸ்தவ பாடசாலையாக இருந்தாலும் ஏனைய மதங்களுக்கு சம உரிமை அல்லது அதிக உரிமையளித்து மதங்களுக்கிடையிலான ஒற்றுமையின் அவசியத்தை உணர்த்திய பெருமை எனது கல்லூரிக்கும், பிரின்ஸ் Sir க்குமே உரித்தானது. எமது சமூகக் கட்டமைப்பில் இதை செயற்படுத்துவது என்பது இலகுவானதல்ல. இருப்பினும் செயற்படுத்தி காட்டிய பெருமையும் எனது கல்லூரிக்குண்டு. எனது புனிதப் பூமியில், நான்கு மதங்களுக்கும் தனித்தனியே வழிபாடுசெய்வற்கு ஒழுங்குகளும், இஸ்லாமிய மாணவர்கள் 5 முறை தொழுவதற்கு மசூதிக்கு சென்றுவரவும் அனுமதியிருந்தது.

இன்றும் மூதூர், வாகரை பகுதியில் இருந்து அம்பாரை வரையிலான தென்கிழக்குப் பகுதிவரை எமது கல்லூரிக்கு இருக்கும் பெரும் மரியாதையே மேற்கூறியதற்குச் சாட்சி. தென்கிழக்கு மாகாணத்தில் பெருங் கல்லூரிகள் அற்ற அக்காலத்தில் விழுதுவிட்ட பெரு விருட்சம்போல் இன மத பேதமின்றி அனைவரையும் ஏற்றுக்கொண்டது எனது கல்லூரியும் அதன் விடுதியும்.

எந்த ஆசிரியரைக் குறிப்பிடுவேன்? அத்தனை அத்தனை அற்புதமான ஆசிரியர்கள். 33 - 35 வருடங்கள் தொடர்ந்து ஒரே கல்லூரியில் கற்பித்த என் தமிழாசான் சர்மா ‌Sir, பாடசாலையே வாழ்வு என்று வாழ்ந்த புண்ணியமூர்த்தி ஆசிரியர், கிருஸ்ணபிள்ளை, ருத்திரமூர்த்தி, இந்திரானி ஆசிரிகைகள், சங்கீத ஆசிரியர் மகாலிங்கம், பாடசாலக்கு மிக அருகிலேயே குடியிருந்த (இன்றும்  அங்கேயே குடியிருக்கும்) சிங்கள  ஆசிரியை, உப அதிபர்கள் ஆனல்ட் Sir, அருளன்னராஜா, அருளானந்தம் ஆகியோர், விளையாட்டு ஆசிரியர்களாய் பாடசாலையை தேசிய ரீதியில் நிமிரவைத்த சௌந்தராஜன், கமல்ராஜ் ஆசியர்கள், ஆங்கில ஆசிரியை பாலசிங்கம், தமிழாசான் விஜரட்ணம், விவசாய ஆசிரியர்கள் தேவராஜன், குணரட்ணம் ஆகியோர், விடுதி பெறுப்பாளர் சுந்தரலிங்கம் அண்ணண், கிளாக்கர் செல்வராஜா அண்ணண், ஆசிரியராயும், விடுதிப்பொறுப்பாளராயும், எமது விடுதலைப் போராட்டத்தின் ஆரம்பகாலத்தில் தன்னை இணைத்து இன்று இல்லை என்றாகிவிட்ட காத்தான்குடி கபூர் மாஸ்டர், பாடசாலையின் மௌலவி, பாடசாலை தொட்டுவிடக்கூடிய தூரத்தில் வாழ்ந்திருந்த பீடில்ஸ் டீச்சர் இப்படி நினைவுக்குள் முத்துக்குளிக்கும் போது பெயர்கள் தொடர்ந்து வந்துகொண்டே இருக்கிறது. பெயர் எழுதாவிட்டாலும் அல்லது மறந்துவிட்‌டிருந்தாலும் எங்களை செதுக்கிய எத்தனையோ பெருந்தகைகள் பாதம்பட்ட புனிதப்‌பூமி அது.

சாரணீயம், சிரமதானம், வழிகாட்டிகள் சங்கம் (pathfinders), Rotaract, Leo கழகங்கள், கையெழுத்துப்பத்திரிகைகள், தாளலய நாடகம், நாடகங்கள், வாசிகசாலை, பன்றிப் பண்ணை, கால்பந்து, கிறிக்கட், மெய்வல்லுனர் விளையாட்டுக்கள், இல்ல விளையாட்டுப்போட்டிகள், சுற்றுலாக்கள், அணிவகுப்புக்கள், பாடசாலை பரிசளிப்பு விழாக்கள், மதம்சார்ந்த விழாக்கள் என்று எத்தனை எத்தனை நினைவுகளையும், வாழ்வுக்கு அவசியமான நெறிகளையும், விழுமியங்களையும் கற்றுத்தந்த இடம் எனது பாடசாலை.

திங்கள்தோறும் நடைபெறும் அசெம்பிளி கூட்டங்களில் கூறப்பட்ட அறநெறி மற்றும் விழுமியம் சார்ந்த கதைகள் இன்றும் நினைவில் இருக்கின்றன. ”கப்பல் மூழ்கும் வேளையிலும் தலைமைமாலுமியின் கட்டளைக்காக காத்திருந்த மாலுமியின் விசுவாசம்பற்றிய” கதை, ஒற்றுமையை விளக்குவதற்கு கூறப்பட்ட ”ஒற்றைக் கம்பின் பலவீனமும், பலகம்புகளின் பலமும் கதை, பகலில் லாம்புடன் மனிதர்களைத்தேடிய ஞானியின் கதை,  ஆப்ரஹாம் லிங்கனின் கதை, எடிசனின் கதை, சீசரை கத்தியால் குத்திய புரூட்டஸ் கதை, சாமாரியன் கதை என்று 8 வருடங்கள் ஒவ்வொரு திங்கட்கிழமையும் கேட்ட கதைகள் ஏராளம். அவற்றில் இருந்து கற்றுக்கொண்ட அறநெறிகள், வாழ்வியற் கருத்துக்கள் என்று எத்தனை எத்தனை நினைவுகளை பாடசாலை எனக்குத் தந்திருக்கிறது.

விடுதியில் வாழ்ந்திருந்த காலங்களில் வீட்டில் இருந்து எனக்கு சிறிய சுருள் ஒன்றில் சீனி கொண்டுவந்துதரும் தோழமை,  பசித்திருக்கும்போது பள்ளிவாசலில் இருந்து கொணர்ந்து தரப்படும் இஸ்லாமிய நண்பனின் கஞ்சி, பொழுதுவிடியுமுன்னான காலைப்பொழுதில் கிறீஸ்தவ, இந்து மாணவர்களுக்கிடையில் நடக்கும்  பூப்பறித்து மாலைகட்டும்போட்டி, விடுதியில் முழுநிலவின்று இரவுப்பொழுதில் நடக்கும் விளையாட்டுக்கள், முட்டைப்பூச்சிகளுடனான யுத்தம், இரண்டு இறைச்சித்துண்டுகளுடன் உணவுண்ட இனிமையான காலங்கள், மூன்றிலெரு துண்டுப் பாண்,  சிற்றூண்டிச்சாலையில் வைத்த கடன், சிற்றூண்டிச் சாலையை நடாத்திய மனிதர், வெற்றீயீட்டிய கால்ப்பந்துபோட்டிகளின் பின்னான Cap collection நிகழ்வு, விளையாட்டு ஆசிரியரையும், அதிபரையும் தோளில் தூக்கி நகரமெங்கும் சுற்றியது இப்படி எத்தனையோ  நிகழ்வுகள் பசுமரத்து ஆணிபோல் நெஞ்சில் அறையப்பட்டிருக்கிறது. மூச்சு நின்றுபோகும்போது மட்டுமே மறையக்கூடிய நிகழ்வுகள் அவை.

விடுதியில் சித்திரக்கதைப்புத்தகங்களுக்கு பலத்த கிராக்கி இருந்தது. இதை அவதானித்த ராஜேந்திரன் (ஞானம்) அதையே வியாபார உத்தியாக்கி, சித்திரக் கதைப்புத்தகங்களை வாடகைக்குவிட்டான். சில நாட்களின் பின் பலரும் அதே தொழிலை ஆரம்பித்ததனால் அனைவரின் வியாபாரமும் படுத்துப்போனது. பாடசாலையில் நடக்கும் பிஸ்கட் சீட்டு, இடைவேளை நேரங்களில் விற்பனையாகும் பாலைப்பழம், கஜூப்பழம், மிளகாய், உப்பு தூவிய மாங்காய், இரால்வடை, ஜஸ்பழம் இவையெல்லாம் பால்யத்தின் பசுமையான நினைவுகள்.

விடுதியில் வாழ்ந்திருந்தபோது சிறுநீர் கழிக்க நடுச்சாமத்தில் எழுப்பும் பேய்க்கு பயந்த தோழன். அவன் சிறுநீர் கழிக்கும்பொது அம்போ என்று விட்டு விட்டு ஓடும் நாம். நனைந்த சாரத்துடன் பயத்தில் கத்தியபடியே ஓடிவரும் அவன். சனி மதியம் தண்ணீர்த் தொட்டியருகே உடுப்புத்தோய்த்து குளிக்கும் திருவிழா, வைகாசி வெய்யிலுக்கு வரண்டுபோகும் கிணறு, மாநகரசபையின் வாசல் உள்ள தண்ணீர் பைப். Life boy  தேய்த்து நுரை தள்ளி குளிக்கும் நாம், அவ்வப்போது பார்க்கும் எம்.ஜி.ஆரின் படங்கள், ஞாயிறு மாலை விடுதிக்கு வரும் தும்புமிட்டாய் விற்பனையாளன், விடுதிக்கு அருகிலிருக்கும் வீட்டில் இருந்து களவெடுத்த கோழி, அன்றைய கோழிக்கறி, விடுதியைவிட்டு ஓடுபவர்களை பிடித்துவரும்போது இருக்கும் பெருமிதம் இப்படி ஆயிரம் இருக்கிறது பட்டியலிட.

எனது பால்யத்தை நான் நன்கு அறிவேன். பதுளையில் இருந்த காலத்தில் நான் தேவைக்கு அதிகமாகவே பிஞ்சிலே பழுத்திருந்தேன். பீடி பிடிக்கும் பழக்கம் இருந்தது, காவாலித்தனமான பேச்சு, பாடசாலைக்கு கட் அடிப்பது, சிறு சண்டித்தனம், எதிலும் கவனமற்ற தன்மை, கடைசி வாங்கில் முதல் மாணவன் என்ற பல பெருமைகளுடனேயே இப்பாடசாலைக்கு வந்துசேர்ந்தேன்.

 பாடசாலையில் அனுமதிக்கப்பட்ட முதல்நாளே எனது ஆங்கில புலமையை பரிசோதித்தார் எனது அதிபர் Prince Sir. அவர் வாயில் தமிழ் பெரும்பாடுபட்டது, படுகிறது இப்போதும். ஆங்கிலமே அவர். எனது தாயார் வைத்தியர் என்பதால் எனக்கு ஆங்கிலம் தெரிந்திருக்கும் என்று அவர் நினைத்தது மகா தவறு என்பதை அவர் அன்று உணர்ந்திருக்கவேண்டும். அவர் எதைக்கேட்டாலும் நான் yes அல்லது no  என்னும் இரண்டு சொற்களைவைத்து சாமாளித்துக்கொண்டேன். அதன் பின் அவர் பல ஆண்டுகள் என்னுடன் ஆங்கிலத்தில் பேசுவே இல்லை.

இருப்பினும் என்னைக் கண்ட முதலாவது நாளேஅவர் என்னை மிக நன்றாக எடைபோட்டிருக்கவேண்டும் என்றே இப்போது எண்ணத்தோன்றுகிறது. கொல்லன் பட்டறையில் இரும்பை சூடாக்கி, சுற்றியலால் அடித்து, நெளித்து, சீர்செய்து, மீண்டும் குளிர்நீரில் இட்டு, அதன்பின் மீண்டும் சுடுகாட்டி வாட்டி எடுத்து நிமிர்த்துவதுபோல் என்னை ஒரளவு நிமிர்த்தியெடுக்க அவர்க்கு 8 ஆண்டுகள் தேவைப்பட்டன. அந்தக்காலத்தில் திருடன், கையெழுத்து மாத்துபவன், கடைசிவாங்குத் தளபதி, சிங்கள ஆசிரியைக்கு ” நான் முட்டாள்” என்று ஏப்ரல் முதலாம் திகதி ஒட்டியவன் என்று பெரும் பெருமைகளுடன் அவரின் கந்தோருக்கு அடிக்கடி சென்று ”முகம்வீங்கி” அங்கிருந்து வந்திருக்கிறேன்.

கள்ளனை போலீசாக்கினால் திருட்டு குறையும் என்று நினைத்தாரோ என்னவோ என்னை மாணவர் தலைவன், தலைமை மாணவர் தலைவன், விடுதியின் தலைமை மாணவ தலைவன் என்று பதவிகளைத் தந்து பண்படுத்தினார். பாடசாலையின் முதலாவது Rotaract  கழகத்தின் தலைவராகவும் வலம் வந்திருக்கிறேன்.

இந்தப் பதவிகளின் மோகம் என் கண்களை மறைத்தபோது ஒரு நாள் ஒரு சிறிய மாணவனிடம் ”உனது அக்கா வடிவானவள்(அழகானவள்), கடிதம் தருகிறேன் கொண்டுபோய் கொடு” என்றேன். அது அவரின் காதுக்கு போனபோது என்னை அழைத்து கன்னத்தில் அறைந்து ” பாடசாலையால் கலைத்துவிடுவேன்”  என்று கூறியனுப்பினார்.

இதேபோல் கணிதப்பாடத்து புள்ளிகள் 17 என்றிருந்ததை 77 என்று மாற்றியதை அனைத்து பாடங்களின் கூட்டுத்தொகையையும் கூட்டிப்பார்த்து கண்டுபிடித்தார். அன்றுதான் குற்றவாளியை தண்டிக்காது அவனின் மனச்சாட்சியுடன் பேசவைத்தால் அவன் திருந்துவான் என்னும் இரகசியத்தையும் எனக்கு கற்பித்தார். அன்று அவர் அடிக்காமல் ஒரு மணிநேரம் பேசினார். நான் தலைகுனிந்தபடியே அழுதுகொண்டிருந்தேன்.

 பிற்காலத்தில் இராணுவம் என்னை தேடியகாலங்கலில் நான் பாடசாலையில் நின்றிருந்தேன் என்று பொய்கூறி என்னைக் காப்பாற்றிய ஒரு சம்பவமும் உண்டு.

ஒரு பாடசாலையானது ஒரு மாணவனை எவ்வாறு மாற்றியமைக்கிறது என்பதை நான் நன்றாக உணர்ந்திருக்கிறேன். எனது வாழ்க்கையே அதற்கு உதாரணம். பாடசாலைகளே மாணவர்களின் அறநெறிகள், விழுமியங்களுக்கான அளகோல் என்பது எனது கருத்து.

எனது பால்யத்தை நான் நன்கு அறிவேன். இவன் உருப்படுவானா என்று ஊருக்குள் பலருக்கும் சந்தேகமிருந்தது, பெற்றோர் உட்பட. இருப்பினும் எனக்கு அதிஸ்டம் என் பாடசாலையினூடும், எனக்குக்கிடைத்த ஆசிரியர்களூடாகவும் வந்தது.

இன்று எனக்குள் இருக்கும் அறநெறிசார் விழுமியங்களின் அத்திவாரம் எனது பாடசாலையே இட்டதே. ”நீ ஒரு சமூகப் பிராணி, எனவே என்றும் சமூகத்திற்கு பிரதியுகாரமாய் இரு” என்னும் கருத்தியல்களின் அடிப்படையிலேயே எங்கள் பாடசாலையின் வழிகாட்டிகள் சங்கம் (Pathfinders), சாரணியம், சிரமதான‌ம், Rotaract, Leo கழகங்கள் என்பன இயங்கின.


வாழ்க்கையின் அயர்ச்சியில் மயங்கிப்போயிருந்தாலும், 49 வயதிலும், பாடசாலையுடனான மிக நெருக்கமான, ஆத்மார்த்தமான தொடர்பு பேணப்பட்டுக்கொண்டே வருகிறது. ஊருக்குச் செல்லும் காலமெல்லாம் எங்கு செல்ல மறந்தாலும் பாடச‌ாலைக்கும், அதிபரின் வீட்டுக்கும் செல்வதை மட்டும் மறந்ததில்லை. காலமானது ஆசான் (அதிபர்) மாணவன் என்னும் உறவை மெதுவாக மாற்றிவிட்டிருக்கிறது. இப்போது, ஆசானிடத்தில் முன்பிருந்த பயம் கலைந்து, பக்தியும் ஆத்மார்த்தமான நட்புணர்வும் ஏற்பட்டிருக்கிறது. அவருக்கும், ஆசான் மாணவன் என்னும் உறவைக்கடந்துவர முடிந்திருக்கிறது. அதன் காரணமாக பாடசாலை, சமூகம், காலக்காற்றாடி சுளற்றிவிட்ட நாட்களின் நினைவுகள், தனது கனவுகள், நி‌ராசைகள், ஆதங்கங்கள், சரி பிழைகள், கடந்துவிட்ட வாழ்க்கை, நோய்மை, தனிமை என்று ஒரு நண்பனைப்போன்று என்னுடன் உரையாட முடிகிறது,  எனக்கும் தயக்கங்கள் இன்றி எதையும் பேசிப் பரிமாறிக்கொள்ளவும் முடிகிறது.

இன்று மதியம், நண்பரொருவருக்கு தொலைபேசினேன். நிகழ்வைப்பற்றி பேசிக்கொண்டிருந்தோம். நிகழ்வு மிகச் சிறப்பாக நடந்ததாயும், அனைவருக்கும் மகிழ்ச்சி என்றும் அறியக்கிடைத்தது. என் மனதுக்குள் ஏதோவொன்று அடைத்த, இழக்கக்கூடாத‌ ஒரு நாளை இழந்துவிட்டதுபோன்று உணர்ந்தேன். நண்பர் தொடர்ந்தார் ” சஞ்சயன் வருவானா” என்று எனது அதிபரான Prince Sir நேற்று விசாரித்தாக அவர் சொன்னபோது என் கண்கள் கலங்கி, தொண்டை அடைத்து குரல் தளும்பினாலும், மனது, காற்றில் சருகாய்மாறி பறந்துகொண்டிருந்தது.
மாதா பிதா குரு தெய்வம்  என்பவற்றில் நான்காவதில் நம்பிக்கை இல்லை எனக்கு. ஆனால் மூன்றாவதில் அதீத நம்பிக்கை இருக்கிறது.

வாழ்க்கை அற்புதமானது.

முதற் பனியின் அழகும் குளிரும்

வழியில் என்னை நிறுத்தி எதைவிற்றாலும் நான் வாங்குவதில்லை. தலையிடியைத் தவிர.

இன்று, முதற்பனியின் குளிரில் விறைத்தபடியே நடந்துகொண்டிருந்தேன்.  திடீர் என்று உடைகள் தோய்ப்பதற்கான சவர்க்காரம் தேவை என்ற நினைவுவரவே அருகில் இருந்த கடைக்குள் புகுந்துகொண்டேன்.

வாசலில் இரு அழகிகள் எதையோ விற்றுக்கொண்டிருந்ததை கடைக்கண்ணால் கவனித்தபடியே உள்ளே புகுந்து, வெளியே வருகிறேன் என்னை நோக்கி தேவலோகத்துக் குரல்லொன்று மிதந்து வந்தது. நிமிர்ந்துபார்த்தேன்.

வாவ்.. அத்தனை அழகு அவள்கள். ஒருத்தி இந்நாடு. மற்றையவள்  பாரசீகத்து பேரளகி.  முகத்தில் இருந்து கண்களை எடுக்கவே முடியவில்லை.

நாம் விற்கும் அதிஸ்டலாபச்சீட்டினை வாங்கினால் உனக்கு   ஐபோன் கிடைக்கலாம் என்றாள், ஒருத்தி.

எனது மைன்ட்வாய்ஸ், அழகிகளே நீங்கள் நஞ்சதைத் தந்தாலும்  நான் வாங்கி உண்பேனே..

அவள்களுடன் பேச்சை தொடர்வதற்காய் ”ஐபோன் என்றால் என்ன?”  என்றேன்.

” தெரியாதா, அது ஒரு வித தொலைபேசி” என்றாள் ஒருத்தி

மற்றையவள் புத்திசாலி.”உனது  கையில் இருப்பதைப்போன்ற தொலைபேசி” அது என்று மடக்கினாள்.

”ஹி ஹி..”

இருவரிடமும் இருந்து ஒவ்வொரு அதிஸ்டலாபச் சீட்டை வாங்கிக்கொண்டேன்.

நன்றி, நன்றி என்றாள்கள்.  கண்களைச் சுருக்கிச் சிரித்தாள்கள். அவள்களின் கண்கள் ஒளிகொண்டிருந்தன. எனது மனம் துள்ளியது.

கடலைபோடத்தொடங்கினேன். கடலையில்  பெரும் கில்லாடிகளாய் இருந்தாள்கள் அவள்கள்.

பெயர், ஊர், பொழுதுபோக்கு என்று பேச்சு ஓடியது. என்ன சாம்பூ வைக்கிறாய் என்று அவள்கள் கேட்கமுதல் புறப்படுவோம் என்று நினைத்தபடியே.” சென்று வருகிறேன்” என்றேன். சரி சென்று வாருங்கள் என்றாள்கள்.

எனக்கு மனதுக்குள் ஒரு கேள்வி குறுகுறுத்துக்கொண்டே இருந்தது. பெண்களிடம் வயதை கேட்பது அழகல்ல. எனவே கேள்வியை மாற்றிக்கேட்டேன்.

நீங்கள் என்ன படிக்கிறீர்கள்?

நான் 2ம் வகுப்பு, இவள்  முதலாம்வகுப்பு.

ஒருத்தியின் தலையைக் கோதிவிட்டேன். மற்றையவளின் கன்னத்தை தடவிட்டேன்.

சிரித்தாள்கள்.

அந்த நான்கு கண்களினூடே ஒரு அற்புதமான காலத்தின் வாசனையை நுகரத்தொடங்கினேன்.

கண்கள் கலங்கிவிட, கைகையைக் காண்பித்தபடியே புறப்பட்டேன். வெளியே குளிர் காத்துக்கிடந்தது.