இன்னொருவர் கடந்து வந்த பாதை

ஊருக்குப் போயிருந்த போது ஏதேட்சையாக சந்தித்த மனிதரெருவரைப்பற்றிய கதையிது.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்தவர் ஆனால் அவர் தமிழில் மட்டக்களப்பு வாசம் பலமாய் வீசியது. ஆண்டுகள் பலவாகிவிட்டதாம் புலத்தினுள்ளேயே புலம் பெயர்ந்து.

அமைதியன முகமும், அதுக்கேற்ற புன்னகையையும் கொண்டிருந்தார். முகத்தில் வயதுக்கு மீறிய முதிர்ச்சுி தெரிந்தது. வயது 20 களின் முடிவில் அல்லது 30 களின் ஆரம்பத்தில் இருக்கும். நான் தங்கியிருந்த ஒரு விடுதியில் முகாமையாளராக தொழில் புரிவதாய்ச் சொன்னார்.

ஓரு நாள் மாலை 10 மணியளவில் ஏதேட்சையாக சந்திக்கக் கிடைத்தது இவரை. பழகி சில நிமிடங்களுக்குள்ளாகவே மிகவும் அன்னியோன்யமாய் பேசினார்.

பலாலி கிழக்கில் காணி, நிலங்களுடன் பெருமையாய் வாழ்ந்திருந்ததாயும், பாதுகாப்புவலையத்துக்குள் அவை உட்பட்டுப் போனதால் தங்களின் குடும்பச் சொத்துக்கள் என்று அவற்றை தம்மால் உரிமைகொண்டாடவோ, விற்பனை செய்யவோ முடியாதிருக்கிறது என்றார்.

விடுதலைப்போராளியாய் வாழ்ந்திருந்திருக்கிறார் மட்டக்களப்பில். உட்கட்சிப் பிரச்சனையின் பின் விடுதலை வெறுத்து ஓதுங்கிக் கொண்டாராம்.

வெளிநாட்டில் வேலை செய்துதங்கைகளுக்கு கலியாணம் முடித்துக் கொடுத்திருக்கிறார். தாயார் தன்னுடன் வசிக்கிறாராம். அவருக்கு இன்னும் கல்யாணகமாகவில்லை  என்றும் அறியக்கிடைத்தது.

பிரான்ஸ்,  நெதர்லாந்து ஆகிய நாடுகளில் இரண்டு வருடம் விசா இன்றி அலைந்திருக்கிறார். அது பற்றி அவர் சொன்ன விடயங்களே என்னை அதிகமாக சிந்திக்கவைத்தது. வாழ்வின் உச்சம் தொட்டாரோ என்னவோ, ஆனால் நிட்சயமாக வேதனையின் உச்சம் தொட்டிருந்தார் இந்த மனிதர்.

பிரான்சில் விசா இல்லாமல் பல தமிழர்களிடம் கள்ளமாய் வேலை செய்த பணம் இன்னும் நிலுவையில் இருப்பதாய் புன்னகையுடன் சொன்னார். மேசன் வேலை, கழுவல் வேலை, கடையில் எடுபிடி வேலை, என்று எத்தனையோ வேலைகள் செய்திருக்கிறார். வேதனை என்னவென்றால் அடிமாட்டு சம்பளத்தை பெற்றுக் கொள்வதற்கும் பல நாட்கள் கைகட்டி, வாய்பொத்தி அலையவேண்டியிருந்ததாம். ”மனிசனுக்கு மதிப்பில்ல அங்க” என்று அவர் சொன்னபோது ஏனோ பலமாய் வலித்தது.

பிரான்ஸ்சில் இன்னொரு குடும்பத்துடன் ஒரு வீட்டில் வாடகைக்கிருந்தாராம்,. அந்த வீட்டில் இரண்டு அறைகள் இருந்ததாயும் அவற்றில் ஒன்றில் அக்குடும்பமும் மற்றயதில் இவருடன் சேர்த்து 5 ஆண்களும் வாழ்ந்திருந்திருக்கிறார்கள்.

வீட்டு உரிமையாளர் இவரை தினமும் குளிக்காதீர்கள் தண்ணீர் ”பில்” அதிகமாய் வருகிறது என்று சொன்னதாயும், தான் அவரிடம், மேசன்வேலை 15 மணிநேரம் செய்து வந்தபின் எப்படி குளிக்காமல் இருப்பது என்று கேட்ட போது அது உங்கட பிரச்சனை என்று அவர் சொன்னதாயும், பின்பு தான் அதிக வாடகை குடுத்த பின்பே தினமும் குளிக்க அனுமதிக்கப்பட்டதாகக் கூறினார்.

எனக்கு இதை நம்பவும் முடியவில்லை, நம்பாமலும் இருக்க முடியவில்லை. இப்படியும் மனிதர்கள் இருப்பார்களா என்பது ஆச்சர்யமாகவும், வேதனையாகவும் இருந்தது.

வெளிநாட்டில் பணத்துக்காய் மனிதர்கள் பிணமாவாதயும், வாழ்கையை மனிதத்துடன் வாழ மறுக்கிறார்கள் என்றும் சொன்னார்.

நெதர்லாந்தில் ஒரு தோட்டத்தில் வேலை செய்ததாயும், வின்டர் குளிரில் வாழ்ந்திருந்த நேரத்தை விட விறைத்திருந்த நேரங்களே அதிகமென்றார்.

ஒரு கட்டத்தில் வெளிநாட்டு வாழ்க்கை வெறுத்து IMO மூலமாக ஊர் திரும்பியிருக்கிறார். 

வெளிநாடு போவதற்கு பட்ட கடனையும், தங்கைகளுக்கு கலியாணத்தையும் செய்ய வெளிநாடு தனக்கு உதவியிருந்தாலும், அது கற்பித்த பாடங்களே தனக்கு பிச்சையெடுத்தென்றாலும் ஊரிலே வாழ் என்று உபதேசம் பண்ணியதாம்.

ஊர் வந்து, ‌ ஹோட்டேல் மனேஜ்மன்ட் படித்து, தற்போது விடுதி முகாமையாளராக வாழ்வதாயும், வருமானம் சிறிது என்றாலும், வலியில்லாத வாழ்க்கை வாழ்வதாய் சொன்ன போது அவரின் முகத்தைப் பார்த்தேன், உண்மையின் உண்மை தெரிந்தது அவர் முகத்தில்.



.

பூவினும் மென்மையான மனிதன்

சிந்துவெளி -மெசப்பெத்தேமியா  நாகரீக நாட்டவர் (ஒருவரின் கணணி திருத்த வேலையாய் அவர் வீடு போயிருந்தேன். அங்கு சந்தித்த ஒருவரைப்பற்றிய கதைதான் இது.

ஈராக் நாட்டு நண்பர் முகம் நிறைந்த புன்னகையுடன் கைகுலுக்கி வரவேற்றார். வீடு அமைதியாயும், அழாகாயும் இருந்தது. வெளியில் மழை அடித்து ஊத்திக்கொண்டிருந்தது.

கணணியின் பிரச்சனை பற்றி கதைத்துக் கொண்டிருக்கும் போது கோட், சூட் போட்டு பெரியதொரு பில்ட்அப் கொடுத்தபடி வந்தமர்ந்தார் இந்தக் கதையின் கதாநாயகன். கைகுலுக்கி அறிமுகமானோம். மிகவும் இலகுவாய் சம்பிரதாயங்கள் இன்றி அவருடன் பழகமுடிந்தது. தலையில் மயிர் என்ற சொல்லுக்கே இடமிருக்கவில்லை, அவரிடம். நமக்கும் அப்படித்தான். அதுதான் நண்பர்களாயினோமோ?

அசாத்தியமானதோர் அமைதியிருந்தது அவர் முகத்தில். மனிதரிடம் குசும்பும், லொள்ளும் தேவைக்கு அதிகமாகவே குடியிருந்தது. மிகவும் கலகலப்பான மனிதராயிருந்தார்.

ஒஸ்லோ மாநகரத்துக்கு வெளியே 150 கி.மீ அப்பால் வசிக்கிறாராம். 18 வருடங்களுக்கு முன்பு புலம் பெயர்ந்தவராம். குடும்பம் இன்னும் பக்தாத் மாநகரத்தில் இருக்கிறதாம். தன் மனைவி மிக அழகானவளாம் (பக்தாத் பேரழகி என்பது அவராயிருக்குமோ?) குழந்தைகளும் அங்கு தான் வசிக்கிறார்களாம் என்றார்.

ஏன் குடும்பத்தை அழைக்கவில்லை என்ற போது, அவர்கள் ஊரில் வாழ்வது தான்  சிறந்தது என்று சொல்லி சற்று மெளனித்தவர்.. தொடர்ந்தார் இப்படி: இந்நாட்டு வாழ்க்கைமுறைகள் தனக்கு ஒவ்வாமல் இருப்பதாயும், வெளிநாட்டுப் பெண்கள் இந்நாட்டு சுதந்திரத்தை தவறாக புரிந்துகொள்வதால் குடும்பங்களுக்கிடையில் ஆயிரம் பிரச்சனைகள் என்றார். தவிர தனது பெற்றோர், மனைவியின் பெற்றோர் ஆகியோருடன் தனது குடும்பம் மகிழ்ச்சியாய் இருக்கிறது என்றார்.

அவரைப்பார்த்தால் குடும்பத்தை அடக்கியாள்பவர் போல் தெரியவில்லை. அவரிடம் கேட்ட வேண்டும் என்று நினைத்த கேள்விகளைக் கூட என்னால் கேட்கமுடியவில்லை. சற்று நேரம் கனத்த மௌனம் நிலவியது.

கணணி திருத்துவதா உன் தொழில் என்றார் என்னைப்பார்த்து. இல்லை இது சைட் பிஸ்னஸ் என்ற போது.. வடிவேலு மாதிரி ஆகா... என்றார். உங்கள் தொழில் என்ன என்றேன். சற்று யோசித்தவர் தனது நண்பரைப்பார்த்து அரபிமொழியில் ஏதோ சொல்லிச் சிரித்தார். பின்பு என்னைப் பார்த்து என்னைப் பார்த்தால் என்ன தொழில் செய்பவன் மாதிரி இருக்கிறது என்றார்?

நானும் அவரின் நோர்ஜிய மொழியறிவு, நடை, உடை, பாவனை ஆகியவற்றைப் பார்த்து நீங்கள் ஒரு வைத்தியர் என்றேன். வீடே அதிரும்படியாக விழுந்து விழுந்து சிரித்தனர் நண்பர்கள் இருவரும். நானும் அசட்டுச் சிரிப்பொன்றை சிரித்து வைத்தேன்.

நான் வைத்தியன் தான் ஆனால் மனிதர்களுக்கோ, மிருகங்களுக்கோ அல்ல என்றார். அப்ப யாருக்கு? என்ற போது பூமரங்களுக்கு என்றார். தான் ஒரு கார்ட்னர் (gartner) என்று சொல்லி, மனிதர்களின் உடைக்கும் தொழிலுக்கும் தொடர்பில்லை நண்பா என்று ஒரு தத்துவத்தையும் உதிர்த்தார்.

தன் வீடு ஒரு பூந்தோட்டம் என்றும். தனது காலைப் பொழுதுகள் இந்த பூமரங்களுடனேயே கழிவதாயும், தனக்கு பூமரங்களின் மொழிபுரியும் என்றும் அவையே தனது நண்பர்கள் என்றும் தொடங்கி, பூமரங்கள் பற்றி ஒரு சிறிய லெக்கசுரும் தந்தார்.  நீ கட்டாயம் பூ மரம் வளர்க்கவேண்டும் என்றும் அது என் வாழ்வை அழகாக்கும் என்றும் சொன்னார். சரி என்று தலையாட்டினேன். எனது மகளை நான் பூக்குட்டி என்றே அழைப்பேன் என்ற போது ஏதொ புரிந்தது போல் ஆழமான புன்னகையை பரிசாகத் தந்தார்.

நான் சற்று கணணியில் மூழ்கி திரும்பிய போது நண்பரின் பூமரங்கள் வாடியிருந்தால் அவற்றிற்கு நீர் ஊற்றிக் கொண்டிருந்தார். நண்பரிடம் ஏதோ அரபி மொழியில் கதைத்துக் கொண்டிருந்தார் (நண்பரை திட்டியிருப்பார் என்று தான் நினைக்கிறேன்)

ஒரு பூமரம் வாடியிருந்தது
அதை எடுத்து வந்தார்
நிலத்தில் பேப்பர் விரித்தார்
தனது கோட்ஐ களட்டி வைத்தார்
சப்பாணிகொட்டி உட்கார்ந்தார்
நண்பரை கத்தி கொணரப் பணித்தார்
குழந்தையை தூக்கி எடுப்பது போல்
மிக அவதானமாய் பூச்சட்டியில் இருந்து
பூங்கன்றினை பிரித்தெடுத்து
புதிய சாடியினுள்
மண்வைத்து
பின்பு
பூங்கன்றை வைத்து
மெதுவாய் பூங்கன்றுடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்.
சற்று நீர் ஊற்றி
யன்னலருகில் வைத்தார்
குனிந்து பூக்களை முத்தமிட்டார்
இலைகளைத் தடவிக்கொடுத்தார்

பூமரங்களை இவ்வளவு புனிதமாய் பார்க்கும் இந்த மனிதரைப் பார்க்க எனக்கு ஆச்சரியமாகவிருந்தது. நேசமுள்ள மனிதர்கள் என்பது இவரைப் போன்றவர்களையா? அப்படியெனின் என்னில் நேசமில்லை என்றே நினைக்கிறேன்.

நண்பரின் பூமரங்களில் தன்னிடம் இல்லாதவை என்று கண்டவற்றில் பதியம் வைப்பதற்காய் சிலவற்றை எடுத்து கொண்டு விடைபெற்றார் சிந்துவெளி - மெசப்பெத்தேமியா நாகரீக நாட்டு நண்பர்.

இன்றைய நாளும் நல்லதே


.

நிறப்பிரிகை என்னும் குறும் படம்

இணையத்தில் உலாவந்த போது பார்க்கக் கிடைத்த  குறும்படம்.  பெரியவர்களின் அழுக்கான உலகத்தின் தூய்மையையும், குழந்தைகளின் அழுக்கற்ற உலகத்தின் தூய்மையையும் அழகாகக் காட்டுகிறார் இயக்குனர். படத்தின் தொழில்நுட்பங்கள், நடிப்பு என்பனவற்றில் குறைகள் நிறைகள் இருப்பினும், கதையின் கரு முகத்திலறைகிறது. இசையும் தன் பங்கை சிறப்பாகச் செய்திருக்கிறது.
























 .

முடிந்தது விசரனின் வாரம்

விசரனுக்கென ஒதுக்கப்பட்ட வாரம் இன்றுடன் முடிகிறது. உங்களுக்கும் இந்த விசரினின் பினாத்தல்களை கேட்டு அலுத்திருக்கும். அன்பாய் பொறுமைகாத்ததற்கு என் நன்றிகள். முக்கியமாய் எனது நீண்ண்ண்ண்ட சுயவிபரக் கோர்வைரயை வாசித்தவர்களுக்கு. தமிழ்மணத்தின் சரித்திரத்திலேயே இவ்வளவு நீளமாய் சுயவிபரக்கோர்வை எழுதியவன் இந்த விசரனாய்த்தான் இருக்கும்...

இந்த ஒரு கிழமையும் புதியதோர் அனுபவத்தில் திழைத்திருக்க வாய்ப்புத்தந்த தமிழ்மணத்தாருக்கு எனது நன்றிகள்.

பலரின் புதிய அறிமுகங்களும், பாராட்டுகளும் கிடைத்திருக்கின்றன. மகிழ்ச்சி. நம்ம பக்கத்துக்கு ஒரு நாளைக்கு நாலைந்து பேர் வந்து போவதே பெரியகாரியமாயிருந்த நேரத்தில் திடீர் என 500 பேர் வந்து போனதற்கான தடயங்களை அதிகரித்த வாசகர் எண்ணிக்கை காட்டுகிறது. எல்லாப் புகழும் தமிழ் மணத்திற்கே.

 அதிகரித்த வேலைப்பழுவினால் எழுதுவதற்கு நேரமொதுக்கவும் முடியவில்லை. தவிர எழுதக் குந்தியவுடன் எழுத்தும் வழிந்தோடி வருவதில்லை எனக்கு. ஏதோ ‌எழுதும் சக்தி தேங்கிப்போய்விட்டது போலிருக்கிறது. முன்பும் இப்படி உணர்ந்திருக்கிறேன் ஆனால் அது காலப்போக்கில் சரியாகிவிட்டது. இதுவும் அப்படித்தானிருக்கும்.

இந்தக் கிழமை வந்து போனது போல இனியும் வந்து போவீர்கள் என்னும் நம்பிக்கையில்..


மிக்க நன்றியுடன்
விசரன்

வாழ்க தமிழ்

.

காதலித்துப் பார்.........இல்லை, மாட்டேன்

 கவிப்பேரரசுவின் காலில விழுந்து மன்னிப்புக்கேட்டுவிட்டுத் தொடர்கிறேன்
....................................................................................................................................................

உன்னை சுற்றி ஒளிவட்டம் தோன்றும்............ரியலி?
உலகம் அர்த்தப்படும்.......ரபிஷ்
ராத்திரியின் நீளம் விளங்கும்,........ஐ கொட் சிலீபிங் டப்லட்ஸ்
உனக்கும் கவிதை வரும்,.......தட்ஸ் ட்ரூ
கையெழுத்து அழகாகும்,........தாங்ஸ் டூ மை கீ போட்
தபால்காரன் தெய்வம் ஆவான்,...........யூ மீன்...கூகிள் மெயில்?
உன் பிம்பம் விழுந்தே கண்ணாடி உடையும்....இம்பொசிபிள்
கண்ணிரண்டும் ஒளி கொள்ளும்....ஐ டோன்ட் திங்க் சோ
காதலித்து பார்.......சொறி மைட், நோ சான்ஸ்


இதற்காண காரணம் என்ன என்றால் .. பதில் இப்படித்தானிருக்கும்
வாழ்க்கை

.

குப்பையைக் கிண்டியபோது கிடைத்தவை Part 5

குப்பையைக் கிண்டியபோது கிடைத்தவை Part 5
.................................................


தமிழ்மண நட்சத்திரவாரத்தின் புண்ணியத்தில் எனது ப்ளாக் பக்கத்தையும் பார்வையிட வரும் நீங்கள் எனது ஆக்கங்கள் எல்லாவற்றையும் பார்ப்பீர்கள் என்று மனது எதிர்பார்த்தாலும் அது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்பதை நானறிவேன்.


எனவே, தினமும் எனது பதிவுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து அவற்றிற்கான இணைப்பை இப்பகுதியில் இணைக்கலாம் என்றிருக்கிறேன். இதன் மூலம் என் எழுத்துக்களை நீங்களும், உங்கள் கருத்துக்களை நானும் பரிமாறிக்கொள்ளலாம் அல்லவா?
....................................................................


மவுன்ட் ருபஸ் இல் அடியேன்அவுஸ்திரேலியாவில் மவுன்ட் ரூபஸ் மலை ஏறிய கதை.

புண்ணியமூர்த்தி சோ் (மாஸ்டர்)
 எனது மரியாதைக்குரிய ஆசானைப் பற்றியதோர் பதிவு இது

அப்பா
எனது தந்தையார் பற்றிய ஞாபகங்களுக்குள்ளான ஒரு பயணம்.

.

பொறுமை கற்றவர்கள்


நேற்றுக் காலை கணணிதிருத்த வேலையாய் ஓஸ்லோ புறநகர்ப்பபகுதியொன்றிற்கு செல்லவேண்டியிருந்தது.  நிலக்கிழ்சுரங்கரயில் எடுத்து போய் இறங்கி வேலைசெய்ய வேண்டிய இடத்தை நோக்கி நடக்கலானேன்.

எனக்கு முன்னே ஒரு நாற் சந்தி. அதனூடாக செல்லும் போக்குவரத்தை ஒழுங்கமைக்க அமைக்கப்பட்டிருந்த சமிக்ஞை விளக்குகள் தம்மிஸ்டத்துக்கு ஒரு பகுதி வாகனங்களை நிறுத்தி, மற்றவையை அனுப்பும் போது இன்னொரு பகுதியில் பாதையை கடப்பதற்கு நின்ற மக்களையும் அனுப்பிக்கொண்டிருந்தது. சமிக்ஞை விளக்கின் சமிக்ஞைகளை மதிக்காத சிலர் சிவப்பு நிறம் காட்டிக்கொண்டிருந்தபோதும் வீதியை கடந்தனர்.

இந்த பரப்பான சந்திக்கருகில் அமர்ந்திருந்தாள் அவள். பலமுறை கண்டிருக்கிறேன் இவளின் இனத்தவர்களை. ரொம்மானி இனத்தைச்சேர்ந்த நாடோடிகள் இவர்கள். பிச்சையெடுப்பதே அவர்களின் தொழில் போலத் தெரியுமளவுக்கு பிச்சையெடுக்கிறார்கள். உள்ரளூர்பத்திரிகைகளில் இவர்களின் ”கெட்டித்தனங்கள்” பற்றியும் வாசித்திருக்கிறேன்.

காற்றில் கலந்திருந்த குளிரைத் தடுக்க ஒரு மெல்லிய கம்பளி போர்வையுடன், முகத்தை பாவமாக வைத்துக்கொண்டு கையில் இருந்த கோப்பி கப் ஒன்றை குலுக்கிக் கொண்டிருந்தாள். குலுக்கிய அந்த கோப்பிகப்பினுள் மிகப் பரிதாபமான அளவு சில்லறையே தெரிந்தது. என்னைக் கண்டதும் பரிதாபமாய் புன்னகைத்து, ஏதோ சொல்லியபடி, கையை உயர்த்தி கோப்பிக் கப்பை குலுக்கினாள். நான் கடந்து போனேன் அவளைக் கவனிக்காமலே. எனக்கு பின்னால் சில்லறை குலுங்கும் சத்தம் கேட்டது.

மதியம் சாப்பிடப்போகும் போகும் போதும் அவளை கடக்க நேரிட்டது. வெக்கப்படாமல், என் கண்களை அவளின் கண்களுடன் கலக்கவிட்டேன். ஏன் நீ பிச்சையெடுக்கிறாய் என்று கேட்டுக் கொண்டிருந்தது எனது கண்கள். அவளோ அதற்கான பதிலை தனது கையை உயர்த்தி, கோப்பிக் கப்பை குலுக்கிக் காட்டினாள்.

சாப்பிட்டு திரும்பி வந்த போதும் அதே இடத்தில், அதே மாதிரி, அதே கோப்பிக்கப்ஐ குலுக்கிக் கொண்டிருந்தாள்.  இப்பவும் அவளின் கோப்பிக்கப்பினுள் காலையில் இருந்தளவு பணமே இருந்தது. என்னென்று இந்த வருமானத்தில் வாழ்கிறாள் என்று நினைத்துக் கொண்டேன்.

இரவு 11 மணிக்கு மீண்டும் அந்த சந்தியைக் கடக்கிறேன், என்னை நோக்கி புன்னகைத்து அதே கோப்பிக்கப்ஐ குலுக்கிக் கொண்டிருந்தாள்.  இப்பவும் அவளின் கோப்பிக்கப்பினுள் காலையில் இருந்தளவு பணமே இருந்தது.

காலை 10மணியில் இருந்து இரவு 11 மணிவரை 13 மணிநேரங்கள் ஒரே இடத்தில் குந்தியிருந்து,  கோப்பிக்கப்ஐ குலுக்கி உழைக்கும் இவர்களின் பொறுமை பற்றி யோசித்தது மனது. மிகச் சிறந்த பொறுமைசாலிகளாக இருக்கவேண்டும் இவர்கள்.

உனக்கு நல்ல சம்பளம் தருகிறேன் ஒரே இடத்தில் நில் என்றாலும் நான் நிற்கமாட்டேன். நம்மளின் பொறுமை அப்படிப்பட்ட பெருந்தன்மை கொண்டது. வேலையில்லாமல் ஒரு இடத்தில் நிற்பது ‌என்பது இலகுவான விடயமல்ல.

ஆனால் இவர்களோ வெய்யிலோ, மழையோ,  பனியோ, குளிரோ பற்றி கவலைப்படுவதில்லை. கடமையில் கண்ணாயிருக்கிறார்கள். பாராட்டப்படவேண்டியவர்கள்.

வேலைக்குப்போகாத இவர்களிடம் வேலைக்குப்போகும் நாம் கற்றுக்கொள்ளவேண்டியது ஏதோ இருக்கிறது போலிருக்கிறது எனக்கு. உங்களுக்குமா?


.

விசரனின் கவிதைகள்

குப்பையைக் கிண்டியபோது கிடைத்தவை Part 4
.................................................

தமிழ்மண நட்சத்திரவாரத்தின் புண்ணியத்தில் எனது ப்ளாக் பக்கத்தையும் பார்வையிட வரும் நீங்கள் எனது ஆக்கங்கள் எல்லாவற்றையும் பார்ப்பீர்கள் என்று மனது எதிர்பார்த்தாலும் அது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்பதை நானறிவேன்.


எனவே, தினமும் எனது பதிவுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து அவற்றிற்கான இணைப்பை இப்பகுதியில் இணைக்கலாம் என்றிருக்கிறேன். இதன் மூலம் என் எழுத்துக்களை நீங்களும், உங்கள் கருத்துக்களை நானும் பரிமாறிக்கொள்ளலாம் அல்லவா?
....................................................................


நமக்கு இந்த கவிதை எழுதும் சூட்சுமங்கள் எல்லாம் தெரியாது.  ஏதோ நான் அனுபவித்ததை கவிதை வடிவில் எழுத முயற்சித்தன் பலன் தான் இவை.
பி.கு: கவிதைக்குரிய இலக்கணம் இல்லை, அது இல்லை, இது இல்லை என்று யாரும் சண்டைக்குவரப்படாது.. ஆமா.
....................................................................

கொலைஞர்கள் பலவிதம்
நான் உயிர்வாழ்வாழ்கிறேன் என்பதற்கான அறிவிப்பு இது.


அப்பாவும் சைக்கிலும் நானும்
அப்பாவுக்கும், எனக்கும், எனது சைக்கிலுக்கும் இடையில் இருந்த பந்தம்.

போர் போர் போர்
குருஷோத்திர வாழ்க்கை

.

தாயிலும் மேலான தாய்



மாற்றான் குழந்தைகளை தன் குழந்தைகள் போல் நடத்துபவர்களை தாயிலும் மேலான தாய் என்று அழைப்பதில் தவறில்லையே. அதிலும் தான் சிங்களவராய் இருந்தாலும் எம்மை வளர்த்து ஆளாக்கிய விதம் அவரின் பெருந்தன்மையைக் கூறும்.
ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு மேலாக எங்கள் குடும்பத்துடன் வாழ்ந்தவர். 1962 இல் இருந்து 2001 இல் என் மடியில் உயிர் விடும் வரை தன்னலனை மதியாது எங்கள் குடும்பத்தின் நலனை மட்டுமே விரும்பிய உன்னதமானதோர் தாய்..

1962
ம் ஆண்டுகளில் அப்பாவும், அம்மாவும் கொழும்பில் வாழ்ந்திருந்த காலங்களில் சுகயீனமுற்ற எனது மூத்த சகோதரியை அம்மா வேலைக்குப் போகும் போது கவனித்துக் கொள்வதற்காக அப்பாவின் நண்பரினால் (அப்பாவின் நண்பர் பின்பு எங்கள் சித்தப்பாவாக மாறியது ஒரு பெரிய கதை..அதைப் பற்றிப் பிறகு பார்ப்போம்) அறிமுகப்படுத்தப்பட்டவர். சில மாதங்களின் பின் எனது சகோதரி சிறு வயதிலேயே போய்ச்சேர்ந்த பின்பும் எங்களுடனேயே தங்கிவிட்டவர்.
நான் 1965 புரட்டாதி 30இல் இந்த பூலோகத்தில் இறக்கி விடப்பட்ட போது எனக்கு இந்த பூலோகத்திற்கான guide ஆக அறிமுகப்படுத்தப்பட்டவர். (ஏன்டா இங்க வந்தம் எண்டு நான் இப்ப நினைப்பது வேறு ஒரு கதை)
ம்மா, ப்பா என்னும் ஒலிகள் (வார்த்தைகள்) எழுப்ப நான் பழகிய காலத்திலேயே, அவவை ம்மி (மம்மி அல்ல) என அழைத்தாக கூறக் கேள்விப்பட்டிருக்கிறேன் அதுவே பிற்காலத்தில் (ம்மி) என மாறியிருக்க வேண்டும்.

ஞாபகங்களை
ரீவைண்ட் பண்ணிப்பார்க்கும் போது எம்மியைப் பற்றி முதலில் ஞாபகத்தில்
இருப்பது ... கிட்டத்தட்ட 5 - 6 வயதிருக்கும் அப்ப என நினைக்கிறேன். வீட்டில் ஒரு கரும்பலகை இருந்தது. தினமும் காலையில் வேலைக்கு போக முன் எங்கள் வீட்டின் சர்வாதிகாரி (வேற யார் கொப்பர் தான்) கரும்பலகையில் தமிழ் எழுத்துக்களை எழுதி என்னை அவர் எழுதியதன் மேல் பத்துத் தரம் எழுதச்சொல்லுவார். மாலை வேலையால் வந்து 10 தரம் எழுதியிருக்கா எண்டும் பார்ப்பார்.

இப்பிடி
ஒரு நாள் எழுதச் சொல்லிவிட்டு போனார் சர்வாதிகாரி. நானும் ஏதோ ஒன்று, இரண்டு தடவை எழுதிவிட்டு விளையாட்டின் ருசியில் கரும்பலகையை மறந்து விட்டேன்.

வந்தார்
வில்லன்.
பார்த்தார் கரும்பலகையை

கரும்பலகையில்
பத்துத்தடவை எழுதிய அடையாளம் இல்லை.

(ராணுவ) நீதிமன்றம்
கூடுகிறது

நீதிபதி அவர் தான்.. அவர் மட்டும் தான்
அம்மாவும், எம்மியும் பார்வையாளர்கள் என்ற போர்வையில் வந்திருக்கும் எனது கட்சிக் காரர்கள்
நான் கு(சு)ற்றவாளி
விசாரணை ரம்பிக்கிறது

டேய் என்னடா உனக்கு சொல்லியிருக்கிறன்?
எத்தின தரம்டா எழுதி
னீ.?

பத்துத்
தரம்...(உள்ளுக்குள் உதறுகிறது)

(அம்மா உண்மையை சொல்லுடா என்கிறா கண்களால்)
மீண்டும் நீதிபதியின் கடுமையான குரல்

டேய் பொய் சொல்லாத, உரிச்சுப்போடுவன்.. எத்தின தரம்டா எழுதினனீ..?
என் நாக்கு வறண்டு, கண்ணீர் முட்டி வழிய தட்டுத்தடுமாறி மீண்டும் பத்....பத்து என்றேன்

தீர்ப்பு சொல்லாமலே தண்டனையை நிறைவேற்றத் தொடங்கினார்

விஜய் இன் படங்களில் வாற மாதிரி ஓரே நேரத்தில் ஒரு கை வந்து என்னை இழுத்து எடுக்க, மற்ற கை சுவரில் இருந்த பிரம்பை எடுத்து என்ட குண்டியில சிலம்பாட்டம் ஆடிவிட்டது. அம்மா, எம்மி என்ற கத்தலுடன் கையை விடுவித்துக் கொண்டு எம்மியிடம் ஓடுகிறேன். கலைத்துக் கலைத்துக் குத்தும் குளவி மாதிரி மனிசன் பின்னால கலைத்துக் கலைத்து அடிக்குது.

எம்மியும்
.... மாத்தையா (ஐயா) விடுங்க... விடுங்க....... தம்மி பாவம் என்று தனக்குத் தெரிந்த தமிழில் சொன்ன படியே என்னைக் கட்டிபிடித்திருந்தார்.



அப்பா அடித்த அடிகளில் ஒன்றிரண்டு எம்மியிலும் படுவதை கண்ட அப்பா.. அடிப்பதை நிறுத்தி
டேய் போய் எழுதுடா என்றார்.
அன்றிலிருந்து அடியில் இருந்து தப்பிக்க எம்மியிடம் ஓடலானேன். அதையும் தாண்டி அடிவாங்கினால்....எம்மி எண்ணெய் பூசி சுகப்படுத்திவிடுவார்..

இதை விட ஒருதரம் ஏறாவூர் காளி கோயிலுக்கு விளையாடப் போய் கட்டெறும்புகளிடம் அறம்புறமாக கடிபட்டு வீங்கி வந்த போதும் எண்ணெய் தேய்த்து, விசம் இறங்கி உடம்பு வீக்கம் வத்தும் வரை பார்த்துக் கொண்டதும் அவர் தான்.

அந்த காலத்தில் (1969, 1970 சின்ன பென் டோர்ச் (ஒரு விரலளவு இருக்கும்) அது பயங்கர பேமஸ். வீட்டில வாங்கித் தருவதை எப்படியோ கெட்டி்த்தனமாய் துலைத்துவிடுவேன். பிறகு என்ன.. எம்மிக்கு ஐஸ் வைத்தால் புதுசு வரும்.

தம்பி சிறு குழந்தை என்பதால் போட்டிக்கு ஆள் இருக்கவில்லை. கதாநாயகனுக்கு கடைக்கும் மரியாதை மாதிரி மரியாதை கிடைத்தது. (அப்பா மட்டுமே வில்லனாய் இருந்தார்) எம்மியின் புண்ணியத்தில் சிங்களம் தளதண்ணியாய் வாயில் வந்தது. தம்பி என்னும் பெயர் மாறி பெரிய தம்பியாகியிருந்தேன் தம்பி பிறந்து 2, 3 ஆண்டுகளில். எது வேண்டுமானாலும் கிடைத்தது. ஆனால் திரத்தித் திரத்தி பெரிய தம்பி சாப்பிடுங்க, சாப்பிடுங்க என்பது மட்டும் இம்சையாய் இருந்தது.

அம்மாவுக்கும், அப்பாவுக்கும் அரசாங்க வேலை. அடிக்கடி மாற்றலாகி இடம் மாற நேரிடும். பிபிலைக்கு இடம் மாறிய போது அங்கு தமிழ் பாடசாலை இல்லாததால் வந்தது பிரச்சனை. இந்த அறிவாளியை எங்கு படிக்க வைப்பது என்று ‌பலமாய் யோசித்து இறுதியில் கொழும்பிலுள்ள தாய்மாமன் வீட்டில் இருந்து படிப்பது என்று முடிவாகியது. நான் கொழும்பு போவதை எம்மி விரும்பவில்லை. நானும் தான். 8 வயதில் வீட்டாரைப் பிரிந்து இருப்பது பற்றி நான் அறிந்திருக்காவிட்டாலும் பயத்தில் அழுது அடம்பிடித்து ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தேன். எம்மியும் எனக்கு சாதகமாகவே கதைத்துக் கொண்டிருந்தார்
நம்மட கதையை யாரு கேட்டா (இந்த காலத்திலயே கேக்கிறாங்க இல்ல)..சர்வாதிகாரியின் முடிவுகளில் மாற்றமிருக்குமா என்ன? கொழும்பு போவதற்கு முன் எம்மியின் பாயில் அழுதழுது படுத்திருந்தேன். எம்மியும் அழுது கொண்டிருந்தார். அடுத்த நாள் காலை பஸ் ஸ்டான்ட்இல் சர்வாதிகாரி தன் கண்களாலேயே என்னை அடக்கிக்கொண்டிருந்தார். அவரின் கண்களும் கலங்கியிருந்திருக்கும்.. மனிசன் வெளியில் காட்டியிருக்க மாட்டார். எம்மியின் முத்தங்களுடன் கொழும்பு போயிறங்கிய போது தான் வாழ்க்கை முதன் முதலில் வலித்தது.

மாமா குடும்பத்தினர் அன்பானவர்கள் தான். இருந்தாலும் சொந்த வீடு போல வருமா? வருடத்திற்கு மூன்று முறை வீடு வருவேன். ஆகா.. என்ன ம‌ரியாதை கிடைக்கும் தெரியுமா?

எம்மியின் அன்பில் உருகிய காலம் அது. என்னைக் கண்டதும் எம்மி  சொல்லும் முதல் வார்த்தை ”புத்தா கெட்டுவெலா நே” என்பதாகும்.. அதாவது மகன் மெலிந்து விட்டாரென்பதாகும். மாமா என்ன என்னை கொலைப்பட்டினியா போட்டார், கொழும்பில்... நான் மெலிய? ஆனால் எம்மி எப்போது கொழும்பில் இருந்து வந்தாலும் இதையே மறக்காமல் சொல்லிக் கொண்டிருந்தார்.

எள்ளுருண்டையில் இருந்து பல் வகை வாழைப்பழங்கள், பல்வ‌கை உணவுகள் என நான் வீட்டிலிருக்கும் ஒரு மாதமும்  நமக்கு திருவிழா தான். மெலிந்தவனை தெம்பாக்குகிறேன் என்று அவ செய்த இம்சை கொஞ்சமா நஞ்சமா?

ஒரு முறை காய்ச்சல் வந்து கன நாள் படுத்திருந்தேன். அந்த நாட்களில் ஒரு நாள் வீடே அல்லோகலப்பட்டது. எம்மி அறம்புறமாய் கட்டளைகளை பிறப்பித்துக் கொண்டிருக்க யார் யாரோ வந்து பந்தல் போட்டார்கள். உள்ளூர் மந்திரவாதிகள் வந்து மந்திரித்தார்கள், புத்தபிக்குகள் விடிய விடிய பிரித் ஓதினார்கள். அடுத்த நாள் மந்திரித்த தண்ணீரில் குளிப்பாட்டினார்கள்.. காய்ச்சல் தன் பாட்டில் போனது ஆனால் எம்மியோ எல்லாம் மந்திரத்தின மகிமை தான் என சொன்னார். எனக்கு கண்ணூறு பட்டிருந்ததாம் அது தான் காய்ச்சல் வந்ததாம்.

எங்கும் வெளியில் போய்வந்தால் சிரட்டைகளை கொளுத்தித் தணலாக்கி ஒரு கையில் உப்பு, காய்ந்தமிளகாய் இன்னும் ஏதோ எல்லாம் எடுத்து சாமிக்குத் தீபம் காட்டுவது போல எனக்கும் தம்பி தங்கைக்கும் காட்டி சிரட்டைத் தணலில் கொட்டுவார். அது பெரிதாய் வெடித்துச் சத்தம் போட்டால் என்னில் யாரோ பெரிய கண்வைத்திருக்கிறார்கள் என்று அர்த்தம். (அப்ப நீங்க வைத்த கண்ண யார் சுத்திப் போடுறது என்று யாரும் கேட்டால் நமக்கு கெட்ட கோவம் வரும்)

வீட்டில் எம்மியின் ஆட்சி தான் நடக்கும். எனது தேவைகள் மேலிடத்தில் மறுக்கப்பட்டால் கண்ணைக் கசக்கிக்‌ கொண்டு எம்மியிடம் போவேன். மறுபரீசீலனை செய்து எனது தேவையை மேலிடம் தீர்க்கும். அவ்வளவு பவர் இருந்தது எம்மிக்கு எங்கள் வீட்டில்.

1981 இல் அப்பாவின் மறைவுக்குப் பின் நான் சர்வாதிகாரியாகப் பதவியுயர்த்தப்பட்டேன். சகலமும் ”லொக்கு புத்தா” (பெரிய மகன்) வாக மாறியிருந்தது. கண்டிப்பு கலந்த ஒரு அதிகாரத்துடன் என்னை கவனித்துக் கொண்டார். எனது நண்பர்கள் கூட்டமும் அவரிடம் சற்று அவதானமாகவே நடந்து கொண்டது.

1983 ம் ஆண்டு, ஜூலை கலவரம் நடக்கிறது.. வெலிக்கடைச் சிறையில் தமிழர்களைக் கொலை செய்த செய்தி வெளிப்பட்டு ஊரெல்லாம் கலவரப்பட்டுக் கொண்டிருக்க.. எனது கோவமும், ஆற்றாமையும் அவரின் மேல் பாய்ந்தது. அவரின் படுக்கையை கலைத்தெறிந்தேன். தாறுமாறாய்ப் பேசினேன்.

அமைதியாய் என்னைப்  பார்த்தவர் சொன்னார் அரைகுறைத் தமிழில் .. தம்பீ.. அது நானில்லை என்று.
அடுத்த நாள் காலை படிக்க எழுப்பிவிட்டு கோப்பி போட்டுத் தந்ததும் அவர் தான்.

அடுத்து வந்த ஆண்டுகளில் தம்பியை ஆமி பிடித்துக்கொண்டு போன போது... ஏறாவூர் புத்த பிக்குவை துணைக்கழைத்து ஆமிகொமான்டரையும் ஒரு கை பார்த்து, தம்பியை வெளியே எடுக்க  முன்னின்றவர்களில் அவரும் ஒருவர்.

வீட்டுக்கு பின்னால் தோட்டம் செய்வார், கோழிகளும் வளர்ப்பார். எப்போதும் ஏதோ செய்தபடியே இருப்பார். அவரின் ஈரப்பிலாக்காய், அன்னாசி, மாம்பழக் கறிகளின் சுவை இன்றும் என் நாவில் இருக்கிறது.
1985ல் இந்தியா சென்று அதன் பிறகு வெளிநாடே வாழ்க்கையென்றாகிய போது  எடுத்த முதல் சம்பளத்தில் ஒரு பகுதியை அவருக்கும் அனுப்பியிருந்தேன். அடுத்தடுத்த கிழமைமைகளில் சிங்களத்தில் வந்திருந்தது ஒரு கடிதம்.. தட்டுத்தடுமாறி வாசித்தேன்.

பெரிய மகனே! தயை செய்து எனக்குப் பணம் அனுப்பாதே. நீ சுகமாயும், சந்தோசமாயும் இரு. நான் மகிழ்ச்சியாய் இருக்கிறேன். என்றிருந்தது அதில்.

இறுதிவரை பணம் என்பதை எதிர்பார்க்காதவர். தனக்கென்று எதையும் சேர்த்துவைக்காத புனிதமான ஜீவன். தனது தங்கை இறந்ததும் அவரின் ஒரே மகனை வளர்த்து ஆளாக்கியதும் அவர் தான்.
எனது குழந்தைகளை வாஞ்சையுடன் கவனித்துக் கொண்டார். வயதான காலத்திலும் கூட. அவர்களும் தயக்கமின்றி ஒட்டிக்கொண்டார்கள் அவருடன். பெருமையாய் இருந்தது எனக்கு.

2001ம் ஆண்டு ஒரு நாள் வீடே கல்யாணக்களையில் மயங்கியிருந்தது (அடுத்த நாள் தங்கையின் கல்யாணம்)

அவரும் அங்கிருந்தார்

மாலை நேரமிருக்கும். அவர் குசினிக்கு போவதைக் கண்டேன். பெரிதாய் ஏதோ விழுந்த சத்தம் கேட்டு ஓடினேன், குசினிக்குள் தலையில் இரத்தக்காயத்துடன், நினைவு தப்பிக்கொண்டிருந்தவரைத் தம்பியுடன் சேர்ந்து தூக்க, அம்மா வந்து நாடி பிடித்துப் பார்த்து, அழைத்த அம்பியூலன்ஸ் அரைமணிநேரம் தாமதமாய் வந்த போது குழந்தையாய் செயலற்றுக்கிடந்தார் என் மடியில்.
வண்டியில் ஏற்றி தம்பி முன்னிருக்க

என் மடியில் தலைவைத்து எம்மி படுத்திருக்க அம்மா அவருக்கருகில் அமர்ந்திருந்தார்

5 கிலோமீற்றரை 50 நிமிடமாய் கடந்து கொண்டிருந்தது வண்டி. நாடி பிடித்துப் பார்க்கும் அம்மாவின் முகம் கண்டு, மெதுவாய் நானும் நாடி பிடித்துப் பார்த்தேன். தூரமாய் கேட்டது நாடித் துடிப்பு. ஆஸ்பத்திரியை அடைந்தபோது தூரமாயிருந்த நாடித்துடிப்பும் தொலைந்திருந்தது.
வைத்தியர் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், மரணத்தை. அவருக்கு முன்பே அம்மா "எம்மி இல்லையடா" என்றிருந்தார் கலங்கிய கண்களுடன்.
தனியே விடப்பட்டோம் அம்மாவும் நானும், எம்மியுடன். அமைதியாய் இருந்தது அவர் முகம். அவரின் கால் பற்றி அமைதியாய் நின்றிருந்தார் அம்மா. இறுதியாய் கால் தொட்டுக் கும்பிட்டு வெளியில் போனார். நானும் அமைதியாய் வெளியில் வந்தேன்.
நாளை கல்யாணம் என்னும் நிஜம் முகத்தில் அடித்தது. தம்பியிடம்  ஆஸ்பத்திரியில் அனுமதித்துள்ளதாகப் பொய் சொல்லி அனுப்பினேன். தங்கையிடமும், மற்றவர்களிடமும் அப்படியே சொன்னேன். எம்மியின் வீட்டுக்குச் செய்தி போனது. வந்தார்கள் அவர்களும். எம்மி திருமணம் நிறுத்தப்படுவதை விரும்பமாட்டார் என்பதும் பலரின் வாதமாய் இருந்தது (எம்மியின் வீட்டார் உட்பட). எனக்குச் சம்மதமாயிருக்கவில்லை அது
எனினும் பல நியாயங்கள் நியாயமாய் பட்டன.

ஒரு பக்கம் மணவீடு

மறு பக்கம் மரணவீடு
உண்மை தெரிந்தவர்களோ மிகச் சிலர்
எதிரிக்கும் வரக்கூடாத சோகமது

அடுத்தநாள் அம்மா அமைதியாய் நின்றிருந்தார். ஒரே நேரத்தில் மணவீட்டையும், மரணவீட்டையும்

ஒருங்கிணைக்கும் பாரம் என்னில் விழுந்திருந்தது
நல்ல வேளை, தங்கையின் கேள்விகளுக்குப் பதிலளிக்கும் தேவை எனக்கு வரவில்லை. திருமணம் இனிதே முடிந்தது. இதற்கிடையில், (திருமணத்திலன்று) திருமண மண்டபத்திற்கு முன்னால் நடந்த வாகனவிபத்தொன்றில் காயப்பட்டவரை, நேற்று எம்மியைக் கொண்டு சென்ற அதே ஆஸ்பத்திரிக்குத் தம்பி எடுத்துச் சென்றிருக்கிறான். அங்கு எம்மியைத் தம்பி தேடி.. உண்மையறிந்து அவரைத் தேடி அவரின் வீடு போயிருக்க மரண வீட்டிற்கான எல்லா ஒழுங்கும் செய்து மனம் ரணமாய் இருக்க, களைத்து வீடு திரும்பிய போது நான் நன்றாக நடிப்பதாகச் சொல்லி நக்கலடித்தவரின் கன்னம் கணப் பொழுதில் பழுத்துக்கிடந்தது, என்னால். (வார்த்தையால் கொல்லும் மனிதர்களும் உண்டு இவ்வுலகத்தில்)

மறு நாள் அவரின் வீடு போய் இரு நாள் தங்கி இறுதிக்கிரியைகளின் போது "யாரும் ஏதும் பேச விரும்புகிறீர்களா?"என்ற போது ”எல்லோருக்கும் ஒரு தாய், ஆனால் எமக்கு மட்டும் இருவர்”
என்று சொல்லி முடிக்க முதல் உடைந்தழுதேன். தம்பியும், தங்கையும் சேர்ந்தழுதார்கள்.

எல்லாம் முடித்து நிதானித்துச் சிந்தித்த போது என்னைத் தேற்றுவதற்காகவே என் மடியில் உயிர் விட்டாரோ? எனக் கேட்கிறது என் மனம். இறந்தும் இறக்காதிருக்கிறதோ அவரின் ஈகும் குணம்?

எங்கள் எம்மிக்கு இது சமர்ப்பணம்.


.

குப்பையைக் கிண்டியபோது கிடைத்தவை Part 3

தமிழ்மண நட்சத்திரவாரத்தின் புண்ணியத்தில் எனது ப்ளாக் பக்கத்தையும் பார்வையிட வரும் நீங்கள் எனது ஆக்கங்கள் எல்லாவற்றையும் பார்ப்பீர்கள் என்று மனது எதிர்பார்த்தாலும் அது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்பதை நானறிவேன்.

எனவே, தினமும் எனது பதிவுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து அவற்றிற்கான இணைப்பை இப்பகுதியில் இணைக்கலாம் என்றிருக்கிறேன். இதன் மூலம் என் எழுத்துக்களை நீங்களும், உங்கள் கருத்துக்களை நானும் பரிமாறிக்கொள்ளலாம் அல்லவா?

 ...................................................................

இத்தால் சகல சோமாலிய நாட்டவருக்கும் சஞ்சயன் என்னும் நான் அறியத்தருவது என்னவென்றால்..

நம்ம நிறம் கொஞ்சம் கறுப்புத்தான்.. (கணிணிப் பாசையில் சொன்னால் #000000. அதாவது இதைவிட கறுப்புக்கு இடமில்லை) இதை சாட்டாக வைத்து ஓஸ்லோ மாநகரில் உள்ள எல்லா சோமாலிய நாட்டவரும், என்னைத் தங்கள் ஊரவன் என்று உரிமை கொண்டாடுவதை கண்டிப்பதற்காக நான் விட்ட அறிக்கை (ஹி ஹி)

கணக்கு கணக்குவிடுகிறது

கணிதப்பாடத்துக்கும் எனக்கும் நட்பு என்றும் இருந்ததில்லை. அது பற்றிய ஒரு பதிவு தான் இது.

ஊரெங்கும் வாழும்..... வலி

 தமிழ்மண நட்சத்திரவாரத்திற்காக (ஜூலை 19 - 26. 2010) எழுதப்பட்ட ஆக்கம் இது
................................................................................................




என்னைச் சுற்றி என்ன நடக்கிறது என்று சிந்திக்க சற்று நிதானிக்க வேண்டியிருக்கிறது. எப்பொழுதும் ஏதாவது நடந்து‌ கொண்டேயிருக்கிறது
நன்மையாயும்
தீமையாயும்

கடந்து போன ஒரு வருடத்தைத் திரும்பிப் பார்க்கிறேன்..

இடப்பெயர்வுகள்,
தொழிற்பெயர்வுகள்,
பயணங்கள்,
சுகயீனங்கள்,
நல்லதும் கெட்டதுமான சந்திப்புகள்,
சம்பவங்கள்
கடந்து போன, கடந்து கொண்டிருக்கும் வலிகள்

அப்பப்பா..

இன்றைய நாளும் அப்படிப்பட்டதே. மறக்கமுடியாத நாட்களுக்குள் ஒரு நாளாய் மாறியிருக்கிறது.

இரண்டு நாட்களாய் தொலைபேசியில் அழைத்துக் கொண்டிருந்தார் ஒருவர். இன்று காலையும் அழைத்தார்.

இவரை முன்பு ஒரு தரம் ஒரு கடையில் சந்தித்திருக்கிறேன். அமைதியாய் நின்றிருந்தார் அந்தக் கடையில். ஒரிரு வார்த்தைகள் பரிமாறிக் கொண்டோம்.. அவ்வளவு தான்.

முதல் சந்திப்பை நன்றாக ஞாபகம் வைத்திருந்தார். தனது கணணி மக்கர் பண்ணுவதாயும் வந்து பார்க்க முடியுமா என்றார்.
ஓம் என்ற போது
விலாசம் தந்தார்

வாகனத்தை நிறுத்தி மாடிக் குடியிருப்பை நெருங்கும் போது
யாரோ ஜன்னலில் தட்டுவது கேட்டது. நிமிர்ந்து பார்த்தேன் ‌. முன்றாம் மாடியில் இருந்து கைகாட்டிக் கொண்டிருந்தார்.

கதவருகே காத்திருந்தேன். கீழிறங்கி வந்து
வணக்கமண்ணா
என்றார்.. கொழும்புத் தமிழில்

எனக்கு முதன் முதலில் புதிய மனிதர்களை சந்திக்கும் போது மனம் சில வேளைகளில் ”கவனம்” என்று எச்சரிக்கும் அல்லது தனது புலனாய்வை நிறுத்தி மௌனித்திருக்கும். இன்று மௌனித்திருந்தது.

மனிதரை பார்த்ததும் எதோ பிடித்துப்போயிற்று எனக்கு. ஏதோ எழுத்தில் கூறமுடியாத ஒரு அமைதியும் வேறு எதோவும் குடியிருந்தது அவர் முகத்தில்.

வயது 30களின் நடுவிலிருக்கும் போலிருந்தது அவர் தோற்றம்

மெதுவாய் மேலே அழைத்துப்போனார்.
அமைதியாய் ஆர்ப்பாட்டமின்றி, மிகச் சுத்தமாய் இருந்தது வீடு. வெளிச்சத்தை அள்ளி எறிந்து கொண்டிருந்தது சூரியன், வெளியில்.

பிரச்சனை விளக்கிளார். மிக விரைவில் தீர்வும் கிடைத்தது.
ரொம்ப நன்றிண்ணா என்றார்.

என்ன குடிக்கிறீர்கள் என்றார். மறுக்க முடியாததாய் இருந்தது மனிதரின் வேண்டுகோள்.

குளிர் தண்ணீர் என்றேன்
மறுத்து
சூப்பர்... பால் தேத்தண்ணி தருகிறேன் குடியுங்கள் என்றார். ஓம் என்றேன்

தேத்தண்ணி, பிஸ்கட், வாழைப்பழம் சகிதம் வந்தமர்ந்தார் முன்னால்.
பேச்சு எங்கெங்கோ போய் இறுதியில் வாழ்வில் வந்து நின்றது

தம்பி தனியவோ இருக்கிறீங்கள் என்றேன். குடும்பம் எங்‌கே? என்று கேள்விகளை அடுக்கிய போது மௌனமானார் அவர்.

ஏதோ புரிவது போலிருந்தது எனக்கு.

மெதுவாய் என் கை பிடித்து
வேண்டாம் அண்ணே.. வேறேதும் பேசுவோம் என்றார்.. உடைந்த குரலில்

புரிந்து சற்று மெளனித்து, சரி என்றேன்.

மீண்டும் வாழ்வியலே பேச்சின் உள்ளடக்கமாக இருந்தது
வெளிநாட்டின் வாழ்வும், அதன் ரணங்களும் அவருக்கு புரிந்திருப்பதாய் பட்டது அவரின் வார்த்தைகளினூடாக.
அவர் மனம் ரணமாயிருந்ததும் புரிந்தது.
வெளிநாட்டில் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் பலமாய் பாதிக்கப்படுவதாயும், அது பற்றி யாரும் பேசுவதில்லை எனறும் சொன்னார். ஆண்களை மட்டுமே குற்றம் சுமத்துவதாயும் சொன்னார்.

மௌனமாய் உட்கார்ந்திருந்தேன். அவர் வேதனையின் வலி அந்த அறை முழுவதும் மெதுவாய் படர்ந்து கொண்டிருந்து. அவர் கேள்வியின் உண்மையும், ஆழமும் என்னைப் பலமாய் தாக்கியிருந்ததால் நான் ஏதும் பேசும் நிலையில் இருக்கவில்லை..

பணத்தின் குணமும் அதன் பலமும் பற்றிக் கதைத்தார். பகட்டான வாழ்வின் பலிகடாக்களாக பலர் உள்ளனர் என்றார்.
என் மெளனமே பதிலாகக் கிடைத்தது அவருக்கு.
இன்னும் என்னென்னமோ கதைத்துக்கொண்டிருந்தார். சீழ் கட்டியிருக்கும் மனதில் இருந்து வெளியேறத் துடிக்கும் சீழ் போலிருந்தது அவர் வார்த்தைகள்.
கசப்பும், வலியும், இழப்பும் நிறைத்திருந்தது மனிதரின் வார்த்தைகளை.

குரல் வர வர உடைந்து கொண்டிருந்தது. கண்ணீரைக் கட்டுப்படுத்த பெருமுயற்ச்சி செய்யது கொண்டிருந்தார். அணையுடைத்து ஓடித் தொடங்கியது கண்ணீர்.

வாழ்வின் அனுபவம் எனக்கு அடுத்து என்ன நடக்கப்போகிறது என்பதை ஏற்கனவே தெரிவித்திருந்தது.

நினைத்த மாதிரியே உடைந்தது சோகம் நிறைந்தது அவர் மனக்குடம்.
ஆறாய் பெருகியது கண்ணீர்..
குழந்தையாய் உடைந்து விம்மி விம்மி அழுதார்

உங்களுக்கு புரியாது அண்ணே...
ரொம்ப கஸ்டப்பட்டுட்டேன்
கடந்த வந்த பாதை வலி நிறைந்தது என்றார்

கண்ணீர் வெள்ளமாய் ஓடிக்கொண்டிருந்தது

மனிதர் கடந்து கொண்டிருக்கும் கணங்களை நானும் கடந்திருக்கிறேன்
சோகத்தை பகிர ஒரு காதும், தோளும்
வழிந்தோடும் கண்ணீரும்
பலம் பல தரும் என்பதை நன்கறிவேன்.

என் காதுகளையும், கண்களையும் அவருடன் பேசவிட்டேன்.
பேசி முடித்து
மெளனித்திருந்தார் பல நிமிடங்கள்..
நானும் ஏதும் பேசவில்லை
அறையை ஆட்கொண்டிருந்த மௌனம் அவருக்கு சற்று தெம்பைத் தந்திருந்தது

இப்போது

கண்துடைத்து, மூக்கு சிந்தி
நிதானமாகி
அவர் நிமிர்ந்த போது
சீழ் எடுத்த புண்ணாய் ஆறியிருந்தார் மனிதர்.

அவர் ”மன்னியுங்கள்” என்ற போது

கைபிடித்து
புரியும் அய்யா புரியும்
என்றேன்

கலங்கிய கண்ணால்
நன்றி என்றார்

மாம்பழம் சாப்பிடுங்கள் என்று பாக்கிஸ்தான் மாம்பழம் கொண்டு வந்து வெட்டியும் தந்தார். தேனாய் இனித்தது.
ருசித்துத் சாப்பிட்டோம் மாம்பழம்

வெளிக்கிட்ட போது
முதுகில் தட்டி நன்றி என்றார்
புன்னகைத்து
ஏதும் உதவி தேவை என்றால் தயங்காமல் கேளுங்கள் என்றேன்
நீங்களும் தான் என்றார்
புன்னகைத்து

வாசல் வரை வந்து வழியனுப்பினார்

மனிதம் புசித்ததால்
நிரம்பியிருந்தது மனது

மெதுவாய் இறங்கிக் கொண்டிருந்தேன் படிகளில்

வாழ்வின் சோகங்கள்
தூணிலும் இருக்கும் துரும்பிலும் இருக்கும்
என்பது
மனதுக்கு ஆறுதலாயிருந்தாலும்
ஏனோ வலித்தது.....

.

மரணமும் நானும்

 தமிழ்மண நட்சத்திரவாரத்திற்காக (ஜூலை 19 - 26. 2010) எழுதப்பட்ட ஆக்கம் இது
................................................................................................
















தினமும் கடந்து போகும் கடைத்தெரு தான் அது. இந்த இடத்தை பல தடவைகள் கடந்து போயிருக்க்கிறேன். இருப்பினும் இன்றைய நாளைப் போல் அவ்விடம் என்னைக் கவர்ந்ததில்லை. மாலையிருட்டு நேரம், கடும் பனிக்குளிரில் வாகனத்தில் அந்த இடத்தை கடந்து கொண்டு போயிருந்த போது தான் பிரகசமான வெளிச்சத்தில் அக் கடையில் வைத்திருந்த கடும் கறுப்பு நிறத்தில், வெள்ளி நிறத்திலான கைப்பிடி போட்டு,  பட்டுப் போன்ற வெள்ளைத் துணியில் அலங்காரம் செய்யப்பட்டு மினுங்கிக் கொண்டிருந்தது அந்த சவப்பெட்டி. சில கணங்களில் கண்ணில் இருந்து அந்தக் கடை மறைந்து விட்டாலும் சிந்தனையில் இருந்து மறையவில்லை. மரணம் என்னைக் குடைய ஆரம்பித்தது.

அது ஒரு சவப்பெட்டிக் கடை. இந்தக் கடையையும்  இடத்தையும் பல தடவைகள் கடந்து போயிருக்க்கிறேன். ஏதுமொரு சிந்தனையும் இன்றி அதைப் பார்த்தும் சென்றிருக்கிறேன். இருப்பினும் இன்றைய நாளைப் போல் அந்தச் சவப்பெட்டி என்னைக் கவர்ந்ததில்லை.
பிரகசமான வெளிச்சத்தில் அக் கடையில் கடும் கறுப்பு நிறத்தில், வெள்ளி நிறத்தினாலான கைப்பிடி போட்டு,  பட்டுப் போன்ற வெள்ளைத் துணியினால் உட்புறம் அலங்காரம் செய்யப்பட்டு அழகாக மினுங்கிக் கொண்டிருந்தது அந்த சவப்பெட்டி. ஆனால் யாரொருவரையும் அக்கடையில் காணவில்லை.வெள்ளை நிற கோன் வடிவிலான பிளாஸ்டிக் பூக்கள் அழகாக அருகில் வைக்கப் பட்டிருந்தது. திடீரென்று  "ஒவ்வொருவரிடமிருந்தும் கண்ணுக்குப் புலனாகாத பாதை ஒன்று சுடுகாட்டை நோக்கிப் போய்க் கொண்டிருக்கிறது" என்று ஒருவர் சொன்ன ஞாபகம் வந்தது. அந்தக் கடையைத் தாண்டி விட்ட போதும் அந்தத் திகில் நெஞ்சோடு உறைந்து விட்டது.
மரணத்தில் தன் வாழ்க்கையை நிறுவிக் கொண்ட கடை அது!

நானும் ஒரு நாள் இப்படியானதோர் பெட்டியில் படுத்திருப்பேன் என்னும் எண்ணமே மனதுக்குள் ஒரு விதமாக பாரமான பயத்தைத் தந்தது. பட்டு வேட்டி, சேட், உத்தரியம் போட்டு, வீபூது பூசி, சந்தனப் பொட்டு வைத்து அதற்குள் நான் மாப்பிள்ளை போல் படுத்திருக்கக் கூடுமோ? யார் யார் உண்மையில் எனது பிரிவிற்காக அழுவார்கள்? மனம் பட்டியலிட்டது... மிகச் சிலரே ஞாபகத்தில் வந்தார்கள். யார் யார் ...அப்பாடா சனியன் தெலைந்தது என்று நிம்மதியாய் மனதுக்குள் சிரித்து, வெளியில் அழுவார்கள் எனற பட்டியலிலும் சிலர் வந்து போயினர். கடமைக்காக வரும் சிலரும் வந்து பார்த்து விட்டுப் போவார்கள்.

எல்லோரும் கொஞ்ச நாட்களில் மறந்தும் போவார்கள்.

நான் எப்படி இறப்பேன்.....?
நித்திரையிலேயே அப்படியே?
விமானம் விழுந்து நொருங்கி?
நடந்து போகும் போது திடீர் என்று?
இன்டர் நெட்டில் எதையோவது பார்த்துக்கொண்டிருக்கும் போது?
பாத்ரூமில் வழுக்கி விழுந்து?
புற்று நோயால்?
மட்டக்களப்பில் நிலக்கண்ணி வெடியில் அம்பிட்டு?
யாராவது என்னை மண்டையில போட்டு?
நோய் வாய்ப்பட்டு படுக்கையில் கிடந்து?

இந்த நினைப்பே பயமாயிருக்கிறது. மரணம் நிகழப்போகிறது என்று தெரியும் போது எப்படி இருக்கும்? பயமாய் இருக்குமோ? தப்ப ஏலாது என்று தெரிந்த பின்பும் தப்ப வழிதேடுமோ? சாமிக்கு, நான் தப்பினால் .......என்று நேர்த்திகடன் வைப்‌பேனோ?

திடீர் என்று மரணத்துக்கு நாள் குறிக்கப்பட்டு வாழ்பவர்கள் ஞாபகத்தில் வந்தார்கள்.. ஐயோ! எவ்வளவு பயங்கரமான வாழ்வு அது. மரணத்தை வரவேற்கும் மனம் எவ்வளவு பண்பட்டதாய் இருக்க வேண்டும்? அவர்கள் எதைப்பற்றி சிந்திப்பார்கள்? மரணத்தைப் பற்றியா அல்லது வாழும் காலத்தைப்பற்றியா? நீ இந்த நிமிடத்தில் மரணமடைவாய் என்று கூறப்பட்டவன் நிலை எப்படியிருக்கும்? தினம் தினம் பயந்து பயந்து மரணித்துக்கொண்டிருப்பானா? அல்லது மரணத்தை மறந்து உங்களையும், என்னையும் போல ‌காலத்தை ஓட்டிக்கொண்டிருப்பானா?

நான் மரணித்துத் தான் இது தான் மரணம் என்று அறிய வேண்டியதில்லை. இன்று வரை மரணம் தன்னை எனக்கு  பல விதத்தில் அடையாளப்படுத்தியிருக்கிறது, இனி மேலும் அடையாளப் படுத்தும் முன்னரை விட அதிகமாக.

முதல் முறை அது எனக்கு அறிமுகமாகிய போது அது பிண நாற்றம் அடித்துக்கொண்டிருந்தது. .அடி வயிற்றை பிசைந்து வாந்தி வந்தது. என்னால் அங்கு நிற்க முடியவில்லை ஆம் ஒரு மரணத்தை புதினம் பார்க்கப் போயிருந்தேன். இறந்து 3 நாட்களாகியும் யாருக்காகவோ காத்துக் கொண்டிருந்தது அந்த உயிரற்ற உடலம். ஏதோ ஒரு வித பதார்த்தம் சொட்டு சொட்டாய் கிடத்தப் பட்டிருந்த வாங்குக்குக்  கீழே வழிந்துகொண்டிருந்தது. ஒருவர் ஒரு கையால் வேப்பமிலையால் கொசுக்களை கலைத்துக் கொண்டு மறுகையால் கைலேஞ்சியை மூக்கில் வைத்திருந்தார்.எக்கச்சக்கமான ஊதுபத்திகள் புகைந்து கொண்டிருந்தன. ஊதுபத்திகளையும் தாண்டி பிணம் நாறிக் கொண்டிருந்தது. பிணத்தை தூக்குபவர்கள் வேலிக்குள் மறைந்து எதையோ ஊத்தி ஊத்தி குடித்துக் கொண்டிருந்தார்கள். வர வேண்டியவர் வந்தாரா இல்லையா என்பது எனது ஞாபகத்தில் இல்லை. ஆனால் மாலை நேரம் மட்ட ரகமான பெட்டி ஒன்றினுள் அதனை வைத்து அவசர அவசரமாகத் தூக்கினார்கள்...சுடலை வரை மணத்துக்கொண்டு வந்தார் மரணித்தவர். செத்தாப்பிறகும் கஸ்டப்படுத்துறான் என்று யாரோ சொன்னதும் கூடக்  கேட்டது. முழு ஊர்வலமும் மூக்கை பொத்திக் கொண்டு நடந்தது.

மறு முறை மரணம் என்னுடன் தன்னை சின்ன பெரியம்மா மூலமாக அறிமுகப்படுத்திக் கொண்டது. மட்டகளப்பில் இருந்து யாழ்ப்பாணம் போய் வீட்டு வாசலை அடைந்ததும் அக்கா என்று கொண்டு அம்மா ஆரம்பிக்க... சோதி அன்டி என்று பெரியம்மாவின் மகளும் (அக்கா) சேர, வந்திருந்த பல பெண்டுகள் அவசர அவசரமாய் அம்மாவுடனும், அக்காவுடனும் சேர்ந்து கொண்டார்கள். நான் பெரியம்மாவின் மகனைத்  தேடினேன். அண்ணன் மாதிரியாக இருந்த நண்பன் அவன். சோகமாய் பெரியப்பா அருகில் நின்றிருந்தான். அம்மா வந்து பெரியம்மாவினருகே அழைத்துப் போனா. தன்னைச் சுற்றி நடக்கும் எதையும் சட்டைசெய்யாமல் நிம்மதியாய் படுத்திருந்தார் பெரியம்மா. தொட்டுப்பார்‌த்தேன் குளிர்ந்து போயிருந்தார்.
இரவு நேரம் ஓரு கூட்டம் சீட்டுக் கட்டுடன் குந்தியிருக்க, இன்னொரு கூட்டம் வெத்திலை தட்டுடன் குந்தியிருந்தது. பெரியப்பா மட்டும் ஓடியாடிக் கொண்டிருந்தார். நானும் அண்ணரும் பிளேன் டி பரிமாறிய பின் பச்சைக் கோடு போட்ட நெல்லுச்சாக்கின் மேல் படுத்துக் கொண்டோம். அம்மா பெரியம்மாவுக்கு பக்கத்தில் தூங்கி வழிந்துகொண்டிருந்தா. காலையில் அண்ணணை குளிப்பாட்டி முரண்டு பிடிக்கப் பிடிக்க மொட்டையடித்தார்கள். பார்க்க சிரிப்பாயும், பாவமாயும் இருந்தது. வழமையாய் நடக்கும் எல்லாம் முடிந்து வீடு வந்த அண்ணனை மறு தினம் சாம்பல் அள்ள சாமம் போல அழைத்துப் போனார்கள். வரும் போது அழுதபடி வந்தான்.பக்கத்தில் வந்து படுத்துக் கொண்டான்.  அடுத்து வந்த ஒரு கிழமையில் வீடு வழமைக்கு மாறியிருக்க பெரியம்மா மட்டும் படத்தில் சிரித்துக் கொண்டிருந்தார்.

மரணம் தன்னை அறிமுகப்படுத்திய இரண்டு முறையும் அது என்னை பெரிதாய் பாதிக்கவில்லை. ஆனால் மூன்றாம் முறை சற்று அதிகமாகவே தனது வீரியத்தை காட்டிற்று. அப்பா மாரடைப்பினால் தனது இறுதி நிமிடங்களை கடந்து கொண்டிருந்த தருணம் அது. அப்போது தான் நான் ஆஸ்பத்திரியிலிருந்த அப்பாவின் கட்டிலை வந்தடைந்திருந்தேன். மூச்சை கஸ்டப்பட்டு உள் இழுத்துக் கொண்டிருந்தார். நெஞ்சு கட்டிலை விட்டு மேலெழும்பி, மேலெழும்பி காற்றை தேடிக் கொண்டிருந்தது. அம்மா கண்ணீர் வழிய என்னை அணைத்துக் கொண்டிருந்தார். சற்று நேரத்தில் வைத்தியர் வந்து நெஞ்சில் அடித்தார், அமத்தினார். ஆனால் அப்பாவோ விடைபெற்றிருந்தார்.
அப்பாவுக்கும் எனக்குமான உறவு அப்படி ஒன்றும் சொல்லி கதைக்க கூடிய அளவில் இருந்ததில்லை. அப்பா இறந்து பல மணி நேரங்கள் நான் அழவில்லை. அப்பா வீட்டில் பட்டு வேட்டி சகிதம் புது மாப்பிள்ளையைப் போல் படுத்திருந்தார். வீடு திருவிழா மாதிரி பந்தல் போட்டு களை கட்டியிருந்தது. என்னை ஏனோ செத்தவீட்டுக்கு வந்திருந்த ”அவள்”  பாதித்துக் கொண்டிருந்தாள்.அப்பாவின் தாயார் தனது மகனுக்கு பக்கத்தில் கதிரை போட்டு உட்கார்ந்து அப்பாவின் கையை தடவிக் கொண்டிருந்தார். அடுத்த நாள் நான் தான் கதாநாயகன். தலையை வழிக்க மறுத்தேன். அதிசயமாய் ஒப்புக் கொண்டார்கள். ஐயர் கையில் தர்ப்பை போட்டு பக்கத்தில் இருத்திக் கொண்டார்.
முதல் முறையாகக் கண்ணீர் வழியத் தொடங்கியது அப்போது தான். பந்தம் ஒன்று போனதன் வலி கண்கள் வழியாக வழிந்தது. யார் யாரோ வந்திருக்க பொற்சுண்ணம் இடித்து, முட்டி தூக்கி, சுடுகாடு வரை நடந்து, முட்டி உடைத்து, கொள்ளி வைத்து திரும்பிப் பார்க்காமல் வீடு வந்து சேர்ந்த போது தான் அது இன்னும் கடுமையாக வலித்தது. பெரும் கேவலாகத் தொடங்கிய அழுகை அம்மாவைக் கண்டதும் பெரும் குரலெடுத்தது.அன்று அம்மாவின் கையுக்குள் அடங்கிக் கொள்ளும் வரை அழுது தீர்த்தேன். அடுத்து வந்த பல இரவுகளில் அப்பா கனவில் என்னை அடித்துக் கொண்டிருந்தார். இப்போது அவர் கனவில் வருவதுமில்லை; அடிப்பதுமில்லை.

அடுத்தடுத்த முறைகளில் மரணம் லைட் போஸ்ட் இல் சமூக விரோதி என்றும்; துரோகி என்றும் தன்னை காட்டிக்கொண்டிருந்தது. இது எத்தகைய ஒரு தண்டனை! அந்த மனிதனின் இறுதிக் கணங்கள் எத்தகைய உணர்வு நிறைந்ததாக இருந்திருக்கும்! சரியோ தவறோ இறந்தபின்னும் மற்றவர்களால் தீர்மானிக்கப் பட்ட அவமானத்தை தனக்கும் தன் பந்தங்களுக்கும் விட்டுச் செல்லும் மனம் எத்தகைய துன்பம் நிறைந்ததாக இருந்திருக்கும்! கடசிக் கணங்களில் அது எதை நினைத்திருக்கும்? பிள்ளைகளை? கணவனை அல்லது மனைவியை? தன் பக்கக் குற்றத்தை அல்லது நியாயத்தை? இல்லையென்றால் புதினம் பார்க்க வந்தவர்களைக் காப்பாற்ற மாட்டீர்களா என்ற பரிதாப கண்களோடு பார்த்திருந்திருக்குமோ? துன்பம் முழுவதையும் முகத்தில் ஏற்றித் தன் உயிரைக் கெஞ்சியிருக்குமோ? தன் குடும்பம் இனி என்னவாகும் என்ற எண்ணமொன்றே மனம் முழுக்க வியாபித்திருந்திருக்குமோ? சில நாட்கள் அது மனதில் நிழலாடிய வண்னமே இருந்தது.

பிறிதொரு நாளில் மரணங்களை  உடல் சல்லடையாக்கப்பட்டு, இரத்தம் வழிய அநாதரவாய் ரோட்டுக்கரையில் கிடக்கவும் கண்டிருக்கிறேன். அப்போது மரணத்தை எல்லொரும் முண்டியடித்துக் கொண்டு புதினம் பார்த்தார்கள். நானும் தான். சொல்லிக் கொள்ளவே அவகாசம் இல்லாமல் விடை பெற்றுக் கொண்டவர்கள் அவர்கள். ஏதோ ஒரு விதத்தில் அவர்கள் கொடுத்து வைத்தவர்கள் என்றே தோன்றுகிறது.

பின்பொரு நாள் மட்டக்களப்பு பஸ் ஸ்டான்ட் இல் வாழ்ந்திருந்த ஒரு சித்தசுவாதீனமற்ற ஒருவர் இறந்த போது, குப்பை தூக்கும் வண்டியில் கொண்டு போய் சுடலையில் போட்டார்கள் என்று சொல்லக்கேட்டிருக்கிறேன். தூக்கிப் போடக் கூட ஆளில்லாமல் போகும் நிலை எவ்வளவு பரிதாபமானது!
மரணம், எப்படிப் பார்த்தாலும் தனது வீரியத்தை ஏதோவொரு விதத்தில் ஒவ்வொரு முறையும் காட்டிக் கொண்டே தான்  இருக்கிறது.
சில முக்கியமற்றும்; சில புறக்கணிக்கப் பட்டும்; சில ஆ அப்படியா என்றபடியும்; அது தன்னைச் சொல்லிக் கொண்டிருக்கிறது.சில வியப்புக் குறிகளுடனும்,சில  கேள்விக்குறிகளுடனும் பல கமாக்களுடனும், இன்னும் சில மேற்கோட்குறிகளுடனும் நம்மை அது கடந்து போய்க் கொண்டிருக்கிறது. நமக்கும் ஒருநாள் அது நேரப்போகிறது என்பதை நம்மோடு ஒப்பிட்டுப் பார்த்துக் கொள்ளாதவரை நமக்கு அது புதினமாகவே இருக்கிறது.
இதன் பின் பல காலம் மரணம் என்னிடம் வரவேயில்லை.
திடீர் என இரு முறை மரணம் நட்பை பறித்துக் கொண்டு சென்றது. மாலை மகிழ்ச்சியோடு என்னுடன் உரையாடிக்கொண்டிருந்த புது மாப்பிள்ளையான நண்பன் காலையில் விடைபெற்றிருந்தான். அவன் மனைவியின் கதறல் இன்று வரை காதில் ஒலிக்கிறது. அவவின் வாழ்வுக்கான கதறலும் அதற்குள் அடங்கியிருக்குமோ என்று இப்போது தோன்றுகிறது.
கண்ணீர் விட்டுத்தான் பிரிவின் துயர் அடங்கும் என்றில்லை. எனக்கு தனிமையும், அமைதியும், சிந்தனையும் கூட பிரிவின் துயரை ஆற்றித் தந்திருக்கிறது.

'ஆளை விடு நான் சாகப்போகிறேன்' என்று அடம்பிடித்துப் போய் சேர்ந்த நண்பனையும் பெற்றிருந்தேன். குடி, தனிமை, நோய் என தானே வரித்துக்கொண்ட பாவங்களுடன் வாழ்ந்த பாவப்பட்ட ஜீவன் அது. வொட்கா கொம்பனிக்காரன் அவனுக்கு சிலை வைத்திருந்திருக்க வேண்டும். செத்தவீட்டை நண்பர்களின் உதவியோடு நடத்தியும், அவனைப் பற்றி எழுதியும் அந்த வேதனையை கடந்து கொண்டேன்.

பெற்ற மகனை திடீர் நோய்க்கு பறி கொடுத்த ஒரு மச்சாளின் துயரம் பார்த்து குழந்தையின் மரணத்திற்குள் இருக்கும் வீரியம் அறிந்து கொண்டேன். ‌வேதனை என்னவென்றல் உயிருடன் இருக்கும் பெற்றோர்களும் அவர்களின் குழந்தையுடன் மரணிக்காமல் மரணித்துப் போவது தான்.அது ஒரு பெருந்துயர்!

எம்முடன் ஏறத்தாள 40 வருடங்கள் வாழ்ந்திருந்தார் ”எம்மி”  என்று எம்மால் செல்மாக அழைக்கப்பட்ட சிறியானி புஞ்சி நோனா என்னும் சிங்களப் பெண். எம்மைப் பொறுத்தவரை அவர் எமக்கு தாயிலும் மேலான தாய்.  எமக்காகவே வாழ்திருந்தவர். அவரின் இறுதி மூச்சு எனது மடியில் தான் போனது. எத்தனையோ நாட்கள் அவரின் தாலாட்டுடன் அவரின் மடியில் உறங்கியிருக்கிறேன், ஆனால் அவரோ தனது இறுதி உறக்கத்தை என் மடியில்  உறங்கி என்னை ஆறுதல் படுத்தினார்.  இறுதி நிகழ்வின் போது யாரும் ஏதும் கூறவிரும்புகிறீர்களா என பெரியவர்கள் கேட்ட போது அதுவும் நான் எனது 37வது வயதில் குழந்தைபோல் அழுதபடியே எல்லோருக்கும் ஒரு தாய் எமக்கு மட்டும் இ‌ரண்டு தாய்கள் என்று சொல்லி முடிக்க முதலே உடைந்து அழுதேன். சில மரணங்கள் இப்படித்தான். யாதொரு காரணமும் இன்றி ஏனோ வாழ்க்கையில் வந்து, அன்பினைக் காட்டி, பின் மறைந்து போகும். எம்மி எமக்கு அப்படி வாய்த்தவர்.

மரணம் சுவராசியமாயும் நடக்கும் என்று எங்கோ வாசித்தேன். ஆம்,  காலையில் வீட்டு ‌திண்ணையில் உட்கார்ந்து செய்தித்தாள் வாசித்தவர் ரோட்டால் போன லொறி டயர் வெடித்த சத்தத்தில் மாரடைத்து மரணித்தாராம். கேட்க சுவராசியமாய்த்தான் இருக்கிறது. அவருக்கு விதி லொரி டயர் வடிவத்தில் வந்திருக்கிறது.
நடைப் பிணங்களை கண்டிருக்கிறீர்களா? இறந்தும் நடந்து திரிபவர்கள். அவர்களை நான் கண்டிருக்கிறேன்.  ஊரிலேயே பெரிய மனிதர்களில் ஒருவர் அவருக்கு 5 ஆண் பிள்ளைகள். அதிலொருவன் என் நண்பன்.பெயர் பாஸ்கரன். பேக்கரி வைத்திருந்தாரன் அவன். ஆமி சுட்டு ஒருவன், ஆமி பிடித்து ஒருவன், போராளியாய் ஒருவன், சிறையில் ஒருவன், என ஒவ்‌லொருவராய் மறைந்து போக மனிதர் ஆடித் தான் போனார். சற்றே திமிர் கலந்த நடை ஆட்டம் கண்டது, மற்றவர்களுடனான பேச்சு குறைந்தது, நாளடைவில் தேவை என்றால் மட்டுமே பேசினார். ஏறத்தாள 20 வருடங்களின் பின் அவரைச் எனக்குச் சந்திக்கக் கிடைத்தது. மௌனமே உருவாய் கடையின் கல்லாவில் மனிதர் அமர்ந்திருந்தார். ஆனால் "அவர்"  அங்கிருக்கவில்லை என்பது தெளிவாகவே தெரிந்தது. என்னை அறிமுகப்படுத்தி 'ஞாபகம் இருக்கா ஐயா' என்றேன். உற்று உற்றுப் பார்த்தார்.. இல்லை என்று தலையை குறுக்கும் நெடுக்குமாக ஆட்டினார்.  பாஸ்கரனின் நண்பன் என்றேன்.... சற்றே உற்றுப் பார்த்து வாயைக் குறுக்காக விரித்தார்.பற்கள் தெரிந்தன.அது சிரிப்பென்று புரிந்து கொண்டேன்.ஆனால் அதில் உயிர் இருக்கவில்லை. உயிரற்ற உடல் ஒன்று சிரித்தது என்பது மட்டும் தெளிவாகத் தெரிந்தது எனக்கு.

இடைக்கிடை மரணம் மகா பசி கொள்ளும். அப்போது அதன் வீரியம் தனி ‌மனிதனை மட்டுமல்ல ஐம் பூதங்கள் உட்பட முழு உலகத்தையும் ஆட்டிப் போடும். சுனாமி என்னும் ஆழிப்பேரலை, நில நடுக்கங்கள்,பூகம்பம், வெள்ளப் பெருக்கு, காட்டுத் தீ, இன அழிப்புக்கள், மனிதம் மறந்து போன போர்கள்.... என  எல்லாம் மரணத்தின் மகா பசிக்கு விருந்து வைப்பவை. இதிலுள்ள விசித்திரம் என்னவென்றால் இயற்கைக்கு வரும் மரணப் பசியை விட சில மனிதர்களுக்கு வரும் மரணத்தின் மேலான பசியே பெரும் பசியாயிருப்பது தான்.

மரணத்தின் ஒலியை அல்லது ஓலத்தைக் கேட்டடிருக்கிறீர்களா? நான் கேட்டிருக்கிறேன். நாம் பால்ய காலத்தில் விளையாடித் திரிந்த மைதானமொன்றின் அருகில் மாடு வெட்டும் இடமிருந்தது. கத்தி கழுதில் விழ முதல் மாடு கத்தும் ஓலம் இதயத்தை சல்லடை போடும். வெளியில் காத்திருக்கும் மாட்டுகளின் அவலச் சத்தமும் மனதை அலைக்கழிப்பவை.  சாவை அறிந்து கத்தும் கதறல் அது.
‌அவை தவிர மரணத்தின் ஓலத்தை நான் கோயிலிலும் கேட்டிருக்கிறேன். பலியிடப் போகும் உயிர்களின் கதறலும், ஓலமும் பக்தர்களுக்கும் கடவுளுக்கும் கேட்காமலிருப்பது விசித்திரம் தான்.உயிர்களைக் காப்பாற்றும் கடவுளுக்கு உயிரை பலியிடும் விசித்திரம் அது!

மரணங்களில் தான் எத்தனை விதம்! பரிதாபமான முறையில் ஒரு மரணம் நிகழுமாயின் அது பரிதாப மரணமாயும்; அநியாயமாய் மரணம் நிகழுமாயின் அது அநியாயச் சாவு என்றும், சிறப்பாய் வாழ்ந்து, நோய் நொடி இன்றி வயதான காலத்தில் நிகழும் இயற்கையான மரணம் சந்தோசமான சாவு எனவும்; எதிர்பாராத திடீர் மரணம் அகாலமரணம் என்றும்; இவை தவிர வீர மரணம், தற்கொலை, கொலை,கருணைக் கொலை... என. இப்படி மரணத்திலும் பல வகை இருப்பது மரணத்திற்கு தெரியுமோ என்னவோ? ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம் எதுவும் மரணிக்கலாம், மரணத்தை தவிர்த்து
உலகம் சுற்றுகிற சுற்றில் சக பயணிகளான நாமெல்லாம் எப்போது எங்கெங்கு எப்படியெல்லாம்  தூக்கியெறியப் படுவோமோ தெரியவில்லை. ஆனால் அந்த நாட்களும் வந்தே தீரும் என்பதில் ஐயமில்லை.

இப்போதெல்லாம் மரணித்த பின் என்ன நடக்கிறது என்று அறிகிற ஆவல் என்னையும் தொத்திக் கொண்டிருக்கிறது.  ஆனால் விபரம் தொரிந்தவர்கள் தான் எவருமில்லை, என் சந்தேகங்களை தீர்க்க. ஒரே குழப்பமாக இருக்கிறது. ஆனால் அது பற்றி அறியக்கிடைக்கும் நாள் தினமும் என்னை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பது மட்டும் மிகத் தெளிவாய்த் தெரிகிறது.

.

குப்பையைக் கிண்டியபோது கிடைத்தவை Part 2

தமிழ்மண நட்சத்திரவாரத்திற்காக (ஜூலை 19 - 26. 2010) எழுதப்பட்ட ஆக்கம் இது
......................................................................................................................................................................

தமிழ்மண நட்சத்திரவாரத்தின் புண்ணியத்தில் எனது ப்ளாக் பக்கத்தையும் பார்வையிட வரும் நீங்கள் எனது ஆக்கங்கள் எல்லாவற்றையும் பார்ப்பீர்கள் என்று மனது எதிர்பார்த்தாலும் அது நடைமுறைக்குச் சாத்தியமில்லை என்பதை நானறிவேன்.

எனவே, தினமும் எனது பதிவுகளில் சிலவற்றை தேர்ந்தெடுத்து அவற்றிற்கான இணைப்பை இப்பகுதியில் இணைக்கலாம் என்றிருக்கிறேன். இதன் மூலம் என் எழுத்துக்களை நீங்களும், உங்கள் கருத்துக்களை நானும் பரிமாறிக்கொள்ளலாம் அல்லவா?
 ...........................................................

ஞானி என்றழைக்கப்பட்ட மனிதம்
1975இல் எனது 10வது வயதில் அறிமுகமாகிய துடிப்பான ஒரு மனிதருடனான என் ஞாபகங்கள் இவை. எனது வாழ்வில் மறக்கமுடியாத மனிதர் இவர்.

இரக்கமில்லாத தெய்வத்தின் குழந்தை
ஓரு விமானப்பயணத்தின் போது சந்தித்த ஒரு சிறுமியுடனான நினைவுகள். இவளைச்  சந்தித்த பின் கடவுளுக்கு இரக்கமில்லை என்பது நிரூபணமாயிற்று.


.



சுயத்தை சுத்தப்படுத்தும் முயற்சி

 தமிழ்மண நட்சத்திரவாரத்திற்காக (ஜூலை 19 - 26. 2010) எழுதப்பட்ட ஆக்கம் இது
................................................................................................



அதிகமாய் மனிதர்கள் என்னைக் காயப்படுத்துவதில்லை... நானும் அதையே முயற்சிக்கிறேன் என்று தான் நினைக்கிறேன். ஆனால் சிலருக்கு மட்டும் கடவுள் மற்றவரை காயப்படுத்து என்று அருள் கொடுத்திருக்கிறாரோ என்னவோ அந்தளவுக்கு பாடாய்ப் படுத்துவார்கள்.

(ஒரு ஊர் தளபதிக்கு அந்த ஊர் ஜனாதிபதி மாதிரி என்று வைத்துக் கொள்ளுங்களேன்)

எனக்கும், வேறு சிலருக்கும் அந்த அருள் கிடைத்திருக்கிறது என்றே எண்ணத் தோன்றுகிறது  எங்கள் நடவடிக்கைகள்.

நாம்,
ஆளை ஆள் கண்டால்
நாயும் கல்லும்
என்பதற்கு
உதாரணமாய் இருக்கிறோம்.
மனிதனாய் அவர் கல்லை எடுக்க நான் நாயாயும் ..
அப்புறமாய்
நான் மனிதனாகி கல்லைத் தூக்க அவர் நாயாய் ஓடுவதும்.
மனது வெந்துவிடும் வேதனைய்யா அது.

அந்த சிலரைக் கண்டால் மட்டும் எனக்கு இன்னமும் bp ஏகத்துக்குமாய் எகிறி.. தோலை பிய்த்துக்கொண்டு ரத்தம் வந்துவிடுமோ என்ற பயமேற்படுகிறது. பாரத்தை இறக்கிவைத்து ஆறுதலாய் இருப்போம் என்றால்... மனக்குரங்கு ஈகோ என்னும் மரத்தில் தாவித்திரிகிறது கொப்புக் கொப்பாய்.

சில வேளை அவர்கள் ராமர் side ஆகவும் நான் ராவணன் side ஆகவும் இருந்தோமோ முற்பிறப்பில்? என்ற சந்தேகமும் வருகிறது.
இந்தப் பிறவியிலும் நான் தான் ராவணன்.. (ஆதாரங்கள் தேடுபவர்கள் ராமாயணம் படியுங்கள்)

45 வருட வாழ்பனுபவத்தில் நெற்றியில் சில கோடுகள் வந்து குந்திவிட்டன.
அது முதிர்ச்சி வந்து விட்டதற்கான அறிகுறி என்பதை என்னால் தற்போது ஏற்றுக் கொள்ள முடியவில்லை
காரணம்
முதிர்ச்சி வந்தால் வெறுப்பு வராதாமே?
(அப்ப நான் யூத்?.. இருக்கலாம்)

மனசே ரிலாக்ஸ் படித்தேன்.. அவர் சொல்வது நன்றாகத்தானிருக்கிறது வாசிக்கும் போது மட்டும்.
நிஜவாழ்வில் அதை நான் விரும்பினாலும் குறிப்பிட்ட சில ஜீவன்களுக்கு மட்டும் என்னால் அன்பு காட்டவே முடியாதிருக்கிறது. குரூரம் வற்றாத ஊற்றாய் ஊறி ஊறி வருகிறது அவர்கள் குரல் கேட்டாலே..

மனிதனா நீ என்று கேட்கிறது மனச்சாட்சி? மெளனமே எனது பதில்.. மௌனம் சம்மதத்திற்கு அறிகுறியல்லவா?
என் மனச்சாட்சி என்னால் கொலை கொலைசெய்யப்படுகிறது இவர்களைக் காணும் போது மட்டும்.
 ஆக ஒரு கொலைகாரன் என்பதும் புரிந்து தான் இருக்கிறது இந்த 45 வருட அனுபவத்தில்.

பால்யத்தில் உலகத்தையே திருத்த முற்பட்ட முட்டாளாய் இருந்தேன். மனிதர்களை வெறுத்தவர்களுக்கு உபதேசம் பண்ணியிருக்கிறேன். தற்போது முட்டாளாய் முட்டாள்களுடன் இருக்கிறேன். உபதேசம் பக்கமே தலைவைப்பதில்லை.
நிர்வாணமான ஊரில் உடையுடன் நடமாடினால் சிக்கல் அல்லவா.. அது தான். (நீ மட்டும் என்ன சுத்தமானவனா என்று சண்டைக்கு வராதீர்கள்.. நான் சுத்தமானவனில்லை என்பதைக் சொல்வதற்காகவே நான் இதை எழுதிக்கொண்டிருக்கிறேன்)

எனக்கு போதி மரமாய் இருந்து தேவைக்கு அதிகமாகவே போதித்திருக்கிறார்கள், நான் ”வெறுப்பவர்கள்”. மேலதிகமாய் போதிப்பவர்கள் இனியும் எனக்கு வேண்டாம் என்கிறது மனது. வயதாகிவிட்டது இனியும் படித்து என்னத்தை வெட்டிக்கிழிக்கப் போகிறேன். முதியோர் கல்வி என்றும் ஒன்று இருக்கிறது தான்.. அந்த நேரம் வரும்போது அதைப்ப்ற்றிச் சிந்திக்கலாம்.

என்ன தான் கோபதாபமிருந்தாலும்
எனக்கு என்னை அறிய உதவிய இந்த போதிமரங்களுக்கு
நன்றி சொல்லாமல் இருக்க முடியவில்லை..

எந் நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்., உய்வில்லையாம் செய் நன்றி கொன்ற மகர்க்கு என்கிறதல்லவா குறள்?

ஏற்கனவே சேர்த்து வைத்திருக்கும் பாவத்துக்கு அளவில்லை. .அத்தோடு இது சேர்ந்தால் மீண்டும் ஒரு பாவப்பட்ட ஒரு பூமியில் பிறக்க வைத்து விடுவார்கள் மேலுள்ளவர்கள்.. வேண்டாமய்யா வில்லங்கம்.

வெறுப்பு எங்கு இருக்கிறது, எப்படி வாழ்கிறது, எப்படி வித்திடுகிறது? தெரிந்தால் சொல்லுங்கள்.. அறிய ஆவலாயிருக்கிறேன்.
வீட்டில், ஊரில், நகரத்தில், நாட்டில் என்று வெறுப்பு தன்னிஸ்டத்துக்கு வளர்ந்து திரிகிறது போலிருக்கிறது. அதனாலோ என்னவோ நம்மில் பலர் நிம்மதியை தொலைத்திருக்கிறோம்.

நீருயர வரம்புயரும், வரம்புயர நெல்லுயரும் என்பது போலிருகுகிறது வெறுப்பும். உங்களுக்கும் அப்படியாய்த்தான் இருக்கும்.. மனதுடன் பேசிப்பாருங்கள்.

எனது இறந்தகாலத்தை திரும்பிப் பார்க்கிறேன். பலருடன் வெறுப்பிருந்திருக்கிறது எனக்கு. முதலில் ஞாபகம் வருபவர் ஒரு நண்பன் (பெயர் மறந்து விட்டது) பள்ளிக்கூடத்தில் பிஸ்கட் சீட்டு போட்டதால் வந்தது வெறுப்பு (சீட்டு என்றாலே பிரச்சனை தான்). ஒரு நாளைக்கு 2பிஸ்கட் குடுத்தால் வெள்ளிக்கிழமை 8 திரும்பிவரும். நண்பர் 7 தான் தந்தார். அதிலும் 2 உடைந்திருந்தது.
(1) பேச்சுவார்த்தை முற்றி கைகலத்த போது நண்பனுக்கு உதவியாய் பிராந்திய வல்லரசுகள் உதவிக்கு வந்ததால் சில சிராய்புக்களுடன் தப்பி வாழ நேர்ந்தது எனக்கு.

வெறுப்பைக்காட்டுவதில் தான் எத்தனை விதங்கள்
வார்த்தையால்
கண்ணால்
முகபாவனையால்
செய்கைகளால்
குரலால்
ஏன் மௌனத்தினாலும் வெறுப்பை உமிழ முடிகிறதே எமக்கு. தலைசிறந்த நடிகர்கள் வெறுப்பை உமிழ்பவர்கள்

மிருகங்களுக்கும் வெறுப்பு வருகிறது. எங்கள் வீட்டு நாய்க்கும் புனைக்கும் இடையில் ”கெமிக்கல்” ஒத்து வந்ததில்லை ஒரு நாளும். நாய் பல் வைத்தியரிடம் பல்லை காட்டுபவன் மாதிரி உர்ர்ர்ர்ர் என்று சத்தமிட்டு பல்லைக்காட்ட, பூனையோ பாம்பு போல சீறும். பின்பு இரண்டும் ஆளுக்கு ஆள் குண்டியைக் காட்டிக்கொண்டு வந்த வழியே திரும்பிப்போகும்.

நம்ம வீட்டு நாய் பக்கத்துதெருவுக்கு போனாலும் இனம் தன்னினத்தை வெறுப்பதை பார்க்கலாம் அல்லது கேட்லாம்.

இப்படி வெறுப்பு அங்கும் தனது இருப்பை நிறுவியிருக்கிறது.

சிலருக்கு வெறுப்பு முத்திப்போய் அடி தடி, ஆஸ்பத்திரி என்றும் முடியும்.
சிலர் ஜெயிலுக்கும் அனுப்பப்படுவார்கள்..
கொலையிலும் முடிவதுண்டு

வெறுப்பு மோதலாகி பிறகு காதலாகி கசிந்து கண்ணீராயும் ஓடும் தமிழ்ப்படங்களில்

சில பெரிசுகளுக்கு வெறுப்பின் மேல் விருப்பு வருவதால் உலகமாகாயுத்தங்களும், பிராந்திய, உள்நாட்டு யுத்தங்களும் வந்து போகும்

வெறுப்புகளிலும் பல வகைகள் இருக்கின்றன..

நான் சிறுனாயிருந்த போது சிவாஜி ரசிகர்களை வெறுத்தேன்.
77 எலெக்சனில் ராஜதுரையை வெறுத்தேன் (காசி அண்ணணுக்காய்.... ஆனால் இருவரும்  ஒரே கட்சி என்பது தான் அதில் முக்கிய பாயின்ட்)
சர்மா சேரின், பிரின்ஸ்சேரின் அடியை வெறுத்தேன்
80 களில் பெண்கள் பஸ்ஸை முந்தாமல் போகும் கிழட்டு ட்ரைவரை வெறுத்தேன்
பதன்ம வயதில் அப்பரை வெறுத்தேன்

இவை பெரிய பிரச்சனையைத் தராத கடந்து போகும் வெறுப்புகள்

ஆனால்
உரிமைப்பிரச்சனை
காணிப்பிரச்சனை
காதல் பிரச்சனை
பணப்பிரச்சனை
குடும்பப்பிரச்சனை போன்ற வெறுப்புக்கள்
ஒரு சந்ததியில் இருந்து அடுத்ததுக்கும் மாறக் கூடிய சக்தி பெற்றவை
வெறுப்பு
சந்ததி விட்டு சந்ததி மாறும் போது
வெறுப்பின் காரணம் தெரியாமலே
ஒருவர் மற்றவரை வெறுக்கும் கூத்தும் நடக்கும்

வெறுப்பு நட்பையும் உருவாக்கும் என்பதை அறிந்ததுண்டா?
எதிரியின் எதிரி எனக்கு நண்பன் என்னும் கூற்று அதை நிருபிக்கிறதே.

வெறுப்பு எப்போது தோன்றியிருக்கும்?
அதற்கு எனன வயதிருக்கும்?

எனக்குத் தெரிந்த ஒரு வெறுப்புக்கு வயது, இந்த வருடத்துடன் 2010 ஆகிறது
என்ன புரியவில்லையா?
பிறந்திருந்த யேசுவை கொல்ல அந்த மன்னன்
ஆட்கள் அனுப்பிய
கதையைத் தான் சொல்ல வருகிறேன்.

இதைவிட வயதானது வெறுப்பு என்கிறது ”வல்காவிலுருந்து கங்கைவரை” என்னும் புத்தகம்.. அதில் இருக்கும் வெறுப்பு ஏறத்தாள கி.மு 4500 ஆண்டுகளுக்கு முன்னானது..

மனிதர்களுக்கும் மிருகங்களுக்கும் மட்டும் தான் வெறுப்பு வரும் என்றில்லை
சமயங்களுக்கும், அரசுகளுக்கும் வரும், இயற்கைக்கும் வரும்

மதம் மாறாத சமணர்களை கழுவிலேற்றியதும்
வாளா? பைபிளா? என்று கேட்டதும்
சமயம் தானே.

பொஸ்னியா, ருவான்டா, ...... போன்ற சில நாடுகளின் அரசுகளும் வெறுப்பை தன் மக்கள் மீது காட்டியிருக்கின்றன. 2ம் உலகமகா யுத்தம் இதைவிடக் கொடியது.

இயற்கை தனது வெறுப்பை இயற்கைச்சீற்றங்களாக வெளிக்காட்டிக்கொள்கிறது

இப்படி எங்கும் இருக்கும் வெறுப்பை
நான் மட்டும் எப்படி என்னிடம் வராதே என்பது?
இயற்கையை மீறுவது போலாகாதா, அது?

வெறுப்பினால்
(2) மனிதம் கொன்று மிருகம் வளர்த்திருக்கிறேன்
இன்று வரை.. இனியும் நடக்கலாம்

நான் சுகமாயில்லை என்பதை அறிந்துகொள்ளுமளவுக்கு நான் சுகமாயிருக்கிறேன்
என்பதே போதுமானதாயிருக்கிறது எனக்கு..

எனவே
மிருகம் கொன்று
மனிதம் வளர்த்து
சற்றே சுயத்தை சுத்திகரிக்க முயற்சிக்கிறேன்
அதன் முதற் படி தான் இது

தயக்கமென்ன தோழா?
நான் நிற்கும் முதற்படியில்
எக்கச்சக்கமாய் இடமிருக்கிறது
யாரும் ஏறிநிற்கலாம்

புரிந்ததா ஏதும்?

---------------------------------------------
(1)  சஞ்சயன் மகாபாரதத்தில் பேச்சுவார்த்தைக்கு போனவன். நம்ம பெயரும் சஞ்சயன் தானே
(2)  இரவல் வாங்கிய வார்த்தைகள்

.