இரக்கமில்லாத தெய்வத்தின் குழந்தைஊருக்கு போகும் சந்தோசத்தில் விமான நிலைய பரிசோதனைகள், கட்டுப்பாடுகள் எல்லாம் முடித்து விமானத்தினுள் ஏறி 30 சீ என்னும் இருக்கையை தேடிப்பிடித்து இருக்கையின் மேலிருந்த பகுதியில தோள்பையை வைக்க முயற்சிக்கும் போது ஹாய் என ஆங்கிலத்தில் யாரோ சொல்வது கேட்டு கண்களை குரல்வந்த திசை நோக்கித் திருப்பினேன்.

என்னைப் பார்த்து புன்னகைத்துக் கொண்டிருந்தாள் ஓரு சிறுமி....
அமைதியே உருவான சாந்தமான அழகிய முகம்
தோளளவு தலைமயிர். அது சுருண்டு அவள் தோளில் வழிந்துகொன்டிருந்தது.
பார்த்துதும் புரிந்தது இலங்கைப் பெற்றோர்களின் குழந்தை என
தாயுடன் வந்திருந்தாள்
வயது 8 அ;லலது 9 தான். அதற்கு அதிகமாயோ, குறைவாயோ இருக்க சந்தர்ப்பம் இல்லை.

என்னைப்பார்த்து ஹாய் என்றாள் மீண்டும்; புன்னகைத்த படியே
என்னையறியாமலே ஹாய் என்றது வாய்
உனக்கு என்ன பெயர் என்றாள் பெரிய மனிசி போல்
சற்றே தனவுவோம் என்று நினைத்து
என் பெயர் என்னவாய் இருக்கும் என்று நீயெ சொல் என்றேன்
தாடையில் விரலால் தட்டியபடியே போசித்தவள்
தெரியாது என்றாள் ஆங்கிலத்தில்

அவளின் தாயோ எமது சம்பாசனையை விரும்பாதவள் போலிருந்தாள்
தாயின் முகத்தில் ஏதோ ஒரு வித அசௌகரீயம் தெரிந்தது
மனம் எச்சரிக்கை மணியடித்ததால் அக் குழந்தையை பார்த்து புன்னகைத்தபடியே இருக்கையில் அமர்ந்து கொண்டேன்.

அவள் இப்போது, என்னருகில் இருந்த பெண்ணை ஹாய் என்றழைத்து பெயர் கேட்டுக் கொண்டிருந்தாள். அம்மனிசியும் அவளின் கேள்விகளுக்கு பதிளளிக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள்.

டீவியை முடுக்கினேன்..சிங்களப் படமொன்றில் மனம் லயிக்கத்தொடங்கயது.
அடகு வைத்த குடும்பத்தின் காணியை மீட்பதற்காய் கொழும்பு சென்று வேலை செயயும் கதாநாயகன்... அவன் குடும்பம், அவனின் ஊமைத்தங்கை, அடவு பிடித்த கிராமத்து முதலாளி என கதை நகர்ந்து கொண்டிருந்தது. (அமைதியாய் ஆர்ப்பாட்டமின்றி படமாககி;யிருந்தனர்).. இறுதியில் முதலாளியின் உயிரைக் காப்பாற்றுகிறான் கதாநாயகன்.. அதற்கு நன்றிக்கடனாய் உறுதியை ஒப்படைக்கிறார் முதலாளி என படம் முடிந்து கொண்டிருக்கும் போது பின் இருக்கையில் இருந்து சத்தம் வந்தது..

அழுதாள், ஆர்ப்பாட்டம் பண்ணினாள் அச் சிறுமி. தாயோ உஷ் உஷ் என அவளை அதட்டிக் கொண்டிருந்தாள். ஆழுகை பெரிதாகி எனது இருக்கையை உலுப்பத் தொடங்கினாள் அச் சிறுமி. தன் பலம் கொண்டளவு ஆட்டினாள். நான் ஆடிக் கொண்டிருந்தேன். பேயாட்டம் ஆட்டினாள். திடீர் என்று அடங்கி அமைதியானாள்.
மனம் ஏதோ அச்சிறுமியையெ சுற்றிவந்தது...

தீடீர் என தன்னைக்கடந்து போன விமானப்பணிப்பெண்ணிடம் தனக்குப் பசிக்கிறது என்றாள் ஆங்கிலத்தில். அவளும் உனக்கு என்ன வேண்டும் என்ற போது அவள் பதில் சொல்லவில்லை. தாயோ சும்மாயிரு என்று சிறுமியை அடக்க முயற்சித்துக் கொண்டிருந்தாள். விமானப் பணிப்பெண் உணவு கொணர்ந்து கொடுத்தாள் தாய் நன்றி எனச் சொன்னது கேட்டது எனக்கு.

அமைதியாய் சாப்பிட்டாள் பின்பு திடீர் என மீண்டுமொரு முறை ஆர்ப்பாட்டம் பண்ணி ஓய்ந்தாள்.
என்னுடன் கொண்டுவந்திருந்த சிலுவைராஜ் சரித்திரம் வாசிக்கத் தொடங்கினேன் மனம் அதில் லயிக்க மறுத்தது. எனது ஐம்புலன்களில் சில எனது இருக்கைக்கு பின்னால் இருக்கும் சிறுமியின் நடவடிக்கைகளையே கவனித்துக் கொண்டிருந்தன.

தாய் பெரும்பாடுபட்டுக்கொண்டிருந்தாள் அவளைக் கட்டுப்படுத்த. மாமா அடிப்பார் என்று சொன்னதும் கேட்டது.. புன்னகைத்துக் கொண்டேன்.
உணவு பரிமாறினார்கள்.. நான் அதை விழுங்கி முடிய முன் மீண்டுமொருமுறை உரு வந்து போனது அச் சிறுமியிடம். சற்று நேரத்தில் இடத்தை விட்டு எழும்பியவள் பெரிய மனிசி போர் நடந்து போய் விமானப் பணிப்பெண்ணிடம் ஏதோ கேட்டாள்... அவளுக்கு இவளை கவனிக்க நேரமிருக்கவில்லை. திரும்பி வந்து கொண்டிருந்தாள சிறுமி.

ஒரு குழந்தையைக் கண்டதும் சற்றே தயங்கியவள் குழந்தையுடன் ஏதோ விளையாடினாள். அதன் பின் தனது இருக்கையில் வந்தமர்ந்து தாயுடன் ஏதோ தர்க்கப்பட்டாள், ஆங்கிலத்தில்.
வார்த்தைகள் தெளிவாய் இருக்கவில்லை
சம்பந்தமில்லா வார்த்தைகளை கோர்த்து வசனமாக்கிக் கொண்டிருந்தாள்
தாய்க்கு அவை புரிந்தன போலிருந்தது
"படு" என்று தாய் சொன்னபோது தான் புரிந்தது
அவர்கள் தமிழர்கள் என்று.

அவள் அடங்குவதாய் இல்லை. அடிக்கடி கத்திக் கொண்டிருந்தாள் அல்லது பெரிதாய் அழுது தீர்த்தாள். பலரும் முகம் சுழித்தனர் விமானத்தின் அமைதி அவளிலேயே தங்கியிருந்தது. தாய் கட்டப்படுத்த முயற்சித்தாள். தாயின் கட்டுப்பாட்டை அவள் கவனித்ததாய் தெரிவில்லை.

உதவி.. உதவி!
என்னை விடு
தனிமையில் விடு
போகப் போகிறேன
உதவி உதவி
என்னை விடு
....
.......;
என்றாள் அச் சிறுமி ஆங்கிலத்தில்

எனக்கு அது கவிதை போலிருந்தது. தன் வலியைத் தான இப்படிக் கூறுகிறாளோ என்று யோசித்தேன்.

அலுத்திருக்குமோ அவளுக்கு வாழ்கை, அவளின் உலகத்தை புரிந்து கொள்ளாத எங்களைப் போன்றவர்களினால்?

என்னுடன் எதுவுமே பேசாமலே அவள் எனக்கு எதையோ போதித்துக் கொண்டிருந்தாள்.

நெஞ்சு கனத்து, மனம் முழுவதும் அசௌகரீயம் உணர்ந்தேன்.

கண்ணை மூடித் தூங்க முயற்சித்தேன்.. அத் தாயின் துயரம் எத்தகயது என்பதை மனது யோசித்துக் கொண்டிருந்தது. சித்தசுவாதீனமற்ற குழந்தையை பெறுவது எத்தனை வேதனையாய் இருக்கும் என்பதை என்னால் புரிந்துகொள்ள முடிந்தது. தினம் தினம் வேதனையில் வெந்து போகும் நெஞ்சமாயிருக்கும் அத்தாயின் மனதும் தந்தையின் உயிரும். உயிரைப்பிழியும் சோகமது. எவருக்கும் அது கிடைக்காதிருந்தால் நன்றாயிருக்குமே என்று எண்ணியது மனது.

ஏன் இப்படி நடக்கிறது? குழந்தையின் பிழையா? அல்லது பெற்றோர்களின் பிழையா? அக்குழந்தை என்ன பாவம் செய்தது இப்படிப் பிறக்க? பாவ புண்ணியங்களின் நிலுவைவைத் தான் தெய்வம்; இப்படிக் காட்டுகிறதா?..
அது உண்மையெனில் அது தெய்வமேயில்லை, எனக்கு.

யோசனைகளை ஒதுக்கி கண்களை மூடி தூங்க முயற்சித்தேன்..
பின்னாலிருந்து அச் சிறுமி மெது குரலில் பாடிக் கொண்டிருந்தாள்
என்னைத் தாலாட்ட யோசித்தாளோ என்னவோ?

அயர்ந்து கொண்டு போகும் போது எனது கதிரை பலமாய் உசுப்புப்பட திடுக்கிட்டு முளித்தேன்.. மீண்டும் உரு வந்திருந்தது தேவதைக்கு.

மனது அவளுடன் பேசு என்றது. சற்று நேரம் ஒரே போராட்டமாய் இருந்தது மனதுக்குள்.. கதைப்பதா வேண்டாமா என்று.
மெதுவாய் எழுந்து.. மண்டியிட்டேன் அவளின் இருக்கைக்கருகில்
பார்த்து புன்னகைத்தவள், பூப்போன்ற கரங்களினால் தன் முகம் மூடி மெதுவாய் இருவிரல் நகர்த்தி நான் இன்னமும் இருக்கிறேனா என்று பார்த்தாள். நான் அப்போதும் அங்கு நின்றிருந்தேன்.

தாய் மன்னித்துக்கொள்ளுங்கள் உங்களை இவள் குழப்பியிருந்தால் என்றார். இல்லை என்று சொல்லிப் புன்னகைத்தேன. அவர் முகம் பார்க்காமலே. அவரின் கண்களைச் சந்திக்கும் தைரியம் என்னிடம் இருக்கவில்லை. அது ஏன் என்றும் புரியவில்லை

அய்யா உங்கட பெயர் என்ன என்றேன் தமிழில் சிறமியைப் பார்த்து
பதில் வரவில்லை
அவளின் பெயரை தாய் சொன்னார்
அழகான பெயர் என்றென்
சிரித்தாள்
இப்பவும் இரண்டு விரல்களுக்குள்ளால் என்னைப் பார்த்துக் கொண்டிருந்தாள். உங்களுக்கு எத்தனை வயது என்றேன்..
நான்கு என ஆங்கிலத்தில் சொல்லி கல கலவென்று சிரித்தாள்..
பொய் என்றேன் நான்
8 வயது என்றார் தாய்.

தயக்கம் நீங்கி நீட்டிய என் கையைத் தொட்டாள். என் மூக்கை தொட்டு பின் விரலை இழுத்துக் கொண்டவள் பலமாய் சிரித்தாள். உஷ்ஷ் எல்லோரும் துங்குகிறார்கள் சத்தம் போடாமல் கதைப்போம் என்றேன். பலமாய் சிரித்தாள் இதற்கும். உஷ்ஷ் என்றாள் தாய் இப்ப.

சம்பாசித்தோம் மூவரும். கொழும்பிலுள்ள அப்பம்மாவிடம் போவதாயும், தாம் கனடாவாசிகள் என்றும் அறியக் கிடைத்தது. என்னிடமும் இரு இளவரசிகள் இருப்பதாயும், அவர்களில் ஒருவருக்கு கிட்டத்தட்ட உன் வயது தான். அவர் பெயர் பூக்குட்டி என்றேன். இப்பவும் புன்னகைத்தாள் அவள்
கொழும்பில் என்ன செய்யப்பொகிறாய் என்றேன் சிறுமியிடம்
சொக்லேட் என்ற வார்த்தை மட்டும் புரிந்தது அவளின:; நீண்ட பதிலில் இருந்து. புன்னகைத்து.. அப்ப ஐஸ்கிறீமும் விருப்பமா என்றேன்.. கண்களால் சிரித்து பலமாய் தலையாட்டினாள்.

இருப்பக் கொள்ளாமல் தவித்துக் கொண்டிருந்தாள். வாருங்கள் நடந்து போவோம் என்றேன்.. அதற்கும் சிரிப்பையே பதிலாய் தந்தாள்.

மெதுவாய் முதுகைத் தடவி ஆறதலாய் ததைத்துக் கொண்டிருந்த போது தாயின் மடியில் தூங்கிப் போனாள். உருவரவில்லை அவளுக்கு அப்போது.
தூங்கியிருக்குமோ அதுவும்?

என்னிருக்கையில் வந்தமர்ந்தேன்.. மனம் முழுக்க அச் சிறுமியே வியாபித்திருந்தாள்.. தூங்க முயற்சித்தேன் முடியவில்லை. கணணியை எடுத்து இதை எழுதி முடித்து கணணியை நிறுத்த யோசிக்கிறேன். நித்திரை குழம்பி உரு வந்திருந்திருந்தது அவளுக்கு. பெரிதாய் கத்திக் கொண்டிருந்தாள். மீண்டும் அருகிலமர்ந்து, கைபிடித்து, பெயர் சொல்லி அம்மா தூஙகுங்கள் என்றேன். கை அவள் முதுகை மெதுவாய் தட்டிக் கொண்டிருந்தது...தாய் அவளின் தலையைக் கோதிவிட்டார்.

வானத்தில் பறந்தபடியே தூங்கிப் போனாள் தெய்வங்கள் என்று அழைக்கப்படும் உயிரற்ற தெய்வங்களினால் சபிக்ப்பட்ட தேவதை.

மீண்டும் என்னிருக்கையில வந்தமர்ந்தேன்..
மனம் சற்று ஆறியிருந்தது. அவனை தூங்க வைத்ததாலா?

தூங்கி எழுந்து திரும்பிப் பார்த்தேன் அசாத்தியமான சாந்தத்தை கொண்டிருந்தது அவள் முகம். முகத்தில் களைப்பும் தூக்கமும் வழிந்தோட தாயின் மடியில் தலைவைத்து படுத்திருந்தாள். கம்பளி குளிரை உள்ளே விடாமல் தடுத்துக் கொண்டிருந்தது.

சிறிது நேரத்தில் எழும்பியவள மீண்டும் ஒரு முறை உரு ஆடினாள. திரும்பிப் பார்ததேன் பார்த்துச் சிரித்துவிட்டு மீண்டும் ஆரம்பித்தாள் கத்த..
சில நிமிடங்களில் அடங்கியவள்... என் தோளைத் தட்டுவதும், நான் திரும்பினால் ஒளிவதுமாய் விளையாடிக் கொண்டிருந்தாள்.

ஏதோ பல நாள் பழகிவர்களைப் போல் விளையாடிக் கொண்டிருந்தோம். சுற்றியிருந்தவர்களின் கண்கள் எங்களையே பார்திருப்பது புரிந்தது. அவள் அவர்களைப் பற்றி கவலைப்பட்டதாய் தெரியவில்லை. உங்கள் பார்வையெல்லாம் பழகிவிட்டது என்று நக்கல் பண்ணுவது போலிருந்தது அவளின் நடவடிக்கைகள்.

என்னைக் காணும் போதெல்லாம் சிரிக்கிறாள், விளையாடுகிறாள், ஏதொவெல்லாம் சொல்கிறாள் ஆனால் அவள் மொழி மட்டும் புரியவில்லை. இருப்பினும் அவள் கண்களின் மொழி உணர்ந்து உயிர்த்திருக்கிறேன்.

இன்னும் சற்று நேரத்தில் பிரிந்துவிடப் போகிறோம். முன் பின் தெரியாத ஒரு சிறுமி தந்ததோர் இனிமையான பயணம் மனதில் பதிந்திருக்கிறது. எனக்கு அவள் எதையோ கற்பித்திருக்கிறாள் என்பது மட்டும் சர்வநிட்சயமாய்த் தெரிகிறது ஆனால் கற்றுத் தெளிந்தேனா இல்லையா என்பது தெளிவில்லாமல் இருக்கிறது வழமை போல்.

பிரியும் போது அவள தலைகோதி சென்று வாருங்கள் என்று சொல்ல நினைத்திருக்கிறேன்..

இன்றைய நாளும் நல்லதே.

5 comments:

 1. உங்களின் எழுத்து நடை உங்களை அசாதரணமானவனாய் தெரிவிக்கிறது. அக்குழந்தைப்போலவே நானும் ...உணர்கிறேன்.வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. மிக்க நன்றி சரவணன்

  ReplyDelete
 3. என் மனம் ஏதொ இனம் புரியாத கவலை, சிந்தனகளால் சூழ்ந்து விட்டது!

  ReplyDelete
 4. சரியாகப் பிடிபடவில்லை. ஆனால் மனதிற்குள் ஏதோ குடைகிறது.

  ReplyDelete
 5. Doctor,
  இவ்வகையான குழந்தைகள் பிறப்பதின் காரணம் என்ன? படைப்பாளியின் குற்றமா? அல்லது தயாரிப்பாளர்களுடையதா?

  ReplyDelete

பின்னூட்டங்கள்