மனித உறவுகளின் விசித்திரங்கள்

மனித உறவுகளின் விசித்திரங்கள் ஆச்சர்யமான‌வை. இவற்றில் பல இயற்கையாக அமைபவை. தாய், தந்தை, மகன், மகள், சதோரங்கள், ஏனைய குடும்பசார் உறவுகள் எல்லாமே இயற்கையானவை எனலாம். காதல், நட்பு என்பதையும் இயற்கையான உறவு என்றாலும் அவை சற்று வித்தியாசமானைவை.

நேற்று முன்தினம் ஒரு படத்தினை  பார்க்கக் கிடைத்தது. மலையாளத்தில் ”ஒரே கடல்” என்றும் தமிழில் ”வண்ண  வண்ண கடல்” என்றும் பெரிடப்பட்ட படம். தமிழ் மொழிபெயர்ப்பில் படம் பலதையும் இழந்த போயிருந்தது போலிருக்கிறது எனக்கு. எனக்கு மலையாளம் புரியாதாகையால் தமிழிலேயே பார்த்து முடித்தேன்.

மீரா ஜஸ்மினின் எளிமையான நடிப்பின் முன் மம்முட்டியின் சற்று மிகைப்படுத்தப்பட்ட நடிப்பு அடிபட்டுப் போகிறது. கல்வித்திமிரும், பணத்திமிரும் கொண்ட கதாநாயகனாக நடிக்கிறார் மம்முட்டி. சாதாரண குடும்பப் பெண்ணாக வருகிறார் மீரா ஜஸ்மீன். மீரா ஜஸ்மீன் திருமணமானவர். மம்முட்டி வயதான பிரம்மச்சாரி. இவர்களுக்கிடையிலான உறவினை விபரிக்கிறது படம். பெண்களின் அன்பைப் புரியாத கதாநாயகன், அன்பையே தேடும் கதாநாயகி, இவர்களுக்கிடையில் மீரா ஜஸ்மினின் கணவன் என நகர்கிறது கதை. சற்றுக் கூட விரசமின்றி படமாக்கியிருப்பதால் படத்தின் கதா பாத்திரங்களுடன் நாமும் இணைத்து போகிறோம்.

காதலும், காமமும், சூழ்நிலைகளும் இருவரையும் இணைத்துவிடுகிறது. மம்முட்டிக்கு காமமே பெரிதாயும், மீரா ஜஸ்மினுக்கு காதலும், காமமும் கலந்ததொரு  உணர்விலும் இருவரும் பழகினாலும் மீரா ஜஸ்மின் தனது பிழையை உணர்ந்து  மம்முட்டியுடனான உறவை தவிர்க்க விரும்பினாலும் அவரின் காதல் அவரை மம்முட்டியை நோக்கியே நகர்த்துகிறது.

இதனால் கர்ப்பமடையும் மீரா ஜஸ்மின், அதை பெரிது படுத்தாத மம்முட்டி, பின்பு வெளிநாடு செல்லும் மம்முட்டி  என செல்லும் கதை மீரா ஜஸ்மினின் பிரசவத்தின் பின் அவர் மனநோயாளியாளிக மாறிம் போது கனக்க ஆரம்பிக்கிறது. மீரா ஜஸ்மின்னின் கணவருடன் மம்முட்டி மீரா ஜஸ்மினை மனநோயாளிகளின் இல்லத்தக்கு அழைத்துப்  போவதும் அதன் பின்பு அவர் மீரா ஜஸ்மினை தன்னையறியாமலே விரும்புவதும் மிகவும் அழகான முறையில் காட்டப்பட்டுள்ளது.

மன நல மருத்தவமனையில் இருந்த திரும்பும் மீரா ஜஸ்மினின் தடுமாற்றங்கள், குழப்பங்கள் எல்லாமே மிகவும் அழகாகக் காட்டப்பட்டுள்ளன. மீண்டும் அவர் கணவருடன் வாழத் தொடங்கும் போது மீண்டும் மம்முட்டியை காணும் போது அவர் தடுமாறுவதும், மனதை கட்டுப்படுத்தப்படும்பாட்டையும் அழகாகவே செய்திருக்கிறார் மீரா ஜஸ்மின்.

இறுதியில் மம்முட்‌டியை கொலை செய்யும் நோக்குடிடன் செல்லும் மீரா ஜஸமின் மம்முட்டியினை கொலை செய்ய முடியாது மம்முட்டியின் கைகளுக்குள் சிறைப்படுவதுடன் படம் முடிகிறது.

பல கேள்விகளுக்கான விடைகளை ரசிகர்களிடமே விட்டிருக்கிறார் இயக்குனர். எனக்கு ஏதோ அது புத்திசாலித்தனமாகவே படுகிறது.

சமூகத்தால் அங்கீகரிக்கப்படாத உறவுகளுக்குள்ளும் உயிரோட்டமான உணர்வுகளும், காதலும் உண்டு அவையும் அங்கீகரிக்கப்பட்ட உணர்வுகளைப் போன்றவை அல்லது அதை விட ஆழமானவை என்று சொல்லிப் போகிறது இந்தப் படம் என்றே  நினைக்கத் தோன்றுகிறது..

காற்றில் ஓர் சருகு

 ”காற்றில் சருகு” இந்த வார்த்தைகளை எனக்கு அறிமுகப்படுத்தியவர் எனது நண்பர் ஒருவர். ஒரு முறை நாம் பேசிக் கொண்டிருந்த போது ஏகாந்த மனநிலையில் இருப்பதை எப்படி எழுதுவது என்று பேசிக் கொண்டிருந்தோம். அப்போது தான் இந்த வார்த்தைகளைச் சொன்னார். ”காற்றில் சருகாய் நான்” அன்றில் இருந்து நான் இவ் வார்த்தைகளை மிகவும் ரசிக்கத் தொடங்கியிருக்கிறேன்.

ஆனால் அப்படியானதோர் மனநிலை எனக்கு இன்னும்  அண்மைக் காலங்களில் கிடைக்கவில்லை. ஆனால் எனது கடந்த காலங்களை நினைத்தப் பார்த்தால் நானும் காற்றில் சருகாய் இருந்திருக்கிறேன் பல தடவைகள்.  இனிமையானதோர்  உணர்வு அது. உடலின் பாரத்தை இழந்து, சுற்றாடலின் இருப்பை மறந்து, கடமை மறந்து, கட்டுப்பாடு இழந்து பஞ்சு போன்ற மனத்துடன் ஒரு வித உட்சாகத்துடன் பறப்பது போன்றதோர் உணர்வு அது.

எனது நண்பர் கூறிய அவ் வார்த்தைகள் அப்படியே மேற்கூறிய உணர்ச்சி வடிவங்களுக்குப் பொருந்துகிறது. பெரும்பாலும் இது ஒரு வித மகிழ்ச்சியின் நிலையே.

இன்றுஒரு கடையினுள் சென்றிருந்த  போது சில காலங்களுக்கு முன்பு சந்தித்த ஒருவரைக் கண்டேன்.

அவரின் முகத்தில் செழுமை கூடியிருந்தது, சற்று சதை பிடித்திருந்தார் பார்த்ததும் புரிந்தது தம்பிக்கு கலியாணம் ஆகியிருக்கிறது அதுவும் அண்மையில் என்று. அவரை சற்று தள்ளியிருந்து அவதானித்தேன். கடையில் எம்மைத் தவிர வேறு எவருமில்லை என்றே கூறலாம். அவர் ஏகாந்த உலகத்தில் நடந்து திரிவதை உணர்ந்தேன். அவரது உலகம் வேறேதோவாய் இருந்தது. என்னையும் அவர் கவனித்ததாய்  இல்லை. அவருக்கு எத்தனை இனிமையான அனுவங்களை நினைத்துப்பார்க்க வேண்டியிருக்கும் என்பது புரிந்ததால் அமைதியாய் சற்று நேரம் நின்றிருந்தேன். அப்பொழுதும் அவர் காற்றில் சருகாய் நின்றிருந்ததனால் அருகில் சென்று ”  எப்படி இருக்கிறீர்கள் என்றேன்” அண்ணை நீங்களோ? என்றார்.

என்ன கலியாணம் முடிஞ்சுது போல என்றேன். ஏகத்துக்கும் வெட்கப்பட்டார். ஒரு மாதத்திற்கு முன் தான் கலியாணம் நடந்தது என்றார். உங்களைப் பார்த்தாலே தெரிகிறது... பூக்கள் வாட முதல் அழகாக இருப்பதில்லையா .. அது மாதிரி என்று சொல்ல நினைத்தேன் எனறாலும் அடக்கிக்கொண்டு சற்று உரையாடி விடை பெற்றேன்.  அவர் காற்றில் சருகாய் தெருவில் நடந்து போனார்.

நானும் காற்றில் சருகாய் பறந்து திரிந்த காலம் ஒன்று இருந்தது. 30 வருடங்களுக்கு முன் காதலை அறிவித்து அதற்கு சம்மதம் கிடைத்த நாட்கள் அவை. எவரை சைக்கிலில் ஏற்றினாலும் எல்லோரும் பஞ்சு போல் இருந்தார்கள். அவர்கள் எதோதோ பேசினார்கள். நான் எதோதோ நினைத்தபடி அநிச்சையாய் பதிலளித்தேன். சைக்கில் தன்பாட்டில் ஓடிக்கொண்டேயிருந்தது. பசி, தூக்கம், அம்மா, தம்பி, தங்கை எம்மி என்று எங்கள் வீட்டில் இருந்த தாய் எல்லோரும் எனது சுற்றாடலில் இருந்து மறைந்து போயினர். நான் உடற் பாரம் இழந்தேன், கண்களில் ஏதோ மயக்க நிலை தெரிந்தது, அவள் மட்டுமே இந்த உலகத்தில் இருந்தாள். நித்தமும் என்னை நோக்கி சிரித்தபடியே உலாவினாள். சில நாட்கள் பூமியைத் தொடாத ”காற்றில் சருகாய்” இருந்திருந்தேன்.

எனது நண்பர்களும் காற்றில் சருகாய் இருந்த‌தை காலங்களில் அவர்ளிடம் எதையும் சாதித்துக் கொள்ளும் ரகசியத்தையும் அறிந்திருந்தேன். கணிதம் கற்பிக்கவென சென்ற நண்பன் தன் மாணவியுன் காதலாகி கசிந்து உருகி நின்ற போது அவனே தினமும் படத்துககு டிக்கட்டும்,  உண்பதற்கு மரவள்ளி சீவலும், கீரை வடையும் வாங்கித் தந்தான். வெய்யில் மண்டையை பிழக்கும் போது அவளை  அவளை அவனுக்கு நினைவூட்டுவேன்.. அடுத்த 10 நிமிடத்தில் சா்பத் வாங்கித் தந்தபடியே அவளைப் பற்றி பேசிக் கொண்டிருப்பான். நானும் கேட்பது போல் நடித்தடிபடியே சர்பத்தை ருசித்துக் கொண்டிருப்பேன். அவனை மறக்காமல் கணிதம் கற்பிக்க அழைத்துப் போய் அழைத்து வருவதை மட்டும் நான் மறக்கவில்லை. (தொழில் நேர்மையாகவும் இருக்கலாம் அது).

இப்போதெல்லாம் காற்றில் சருகாய் நான் என்பது சாத்தியபடாமலே இருக்கிறது. ஏன் என்று தெரியவில்லை. காதலித்தால் தானா காற்றில் சருகாகலாம்?  இருக்கலாம். இனியும காதல் வருமா? வரலாம் வராமலும் போகலாம்.

அது இப்படியிருக்க அன்றொரு நாள் உற்ற நண்பர் என்னை வீட்டுக்கழைத்தார். பலதையும் பேசியபடியே இருந்ததால் நேரம் ஓடிக் கொண்டிருந்தது. மாலையாகி இருட்டுவும் தொடங்க மழையும் பெய்தது. நண்பர் மிகவும் குசியாகிப் போனார். டேய் ரெண்டு கொன்யாக் எடுப்போம் மழைநேரத்துக்கு தூக்கும் என்றார். நண்பனை மறுத்துப் பேசுவதா? எனவே நானும் மறுக்கவில்லை.  கொண்யாக் வந்தது. ஒன்று, இரண்டு, மூன்று என்று உள்ளே போக நண்பர்களாய் இருந்த நாம் உற்ற நண்பர்களானோம்.  சற்று நேரத்தின் பின் விடைபெற்றுக்கொண்டோம். நான் வீடு நோக்கி நடக்கலானேன்.

மழை நின்று போயிருந்தது. நள்ளிரவுச் சூரியன் சற்றே தூரத்தில் நின்றிருந்தான். எனது மனம் ஏகாந்தத்தில் இருந்தது. உடலின் பாரத்தை இழந்து, சுற்றாடலின் இருப்பை மறந்து, கடமை மறந்து, கட்டுப்பாடு இழந்து பஞ்சு போன்ற மனத்துடன் ஒரு வித உட்சாகத்துடன் பறப்பது போன்றதோர் உணர்வினை உணர்ந்தேன். ஓ .. நானும் காற்றில் பஞ்சாயிருக்கிறேனோ?


இன்றைய நாளும் நல்லதே.

குதறப்பட்ட எனது இரண்டவது பூமி

இன்று (22.07.2011) மதியம் 15:20  மணி போல் நான் நின்றிருந்த கட்டடமே அதிருவது போல் ஒரு சத்தம் கேட்டது.  நெஞ்சின் அதிர்வுகள் அடங்க முதலே பலர் கட்டடத்தினை விட்டு வெளியே ஓடுவதையும், கூடிக் கூடிக் கதைப்பதையும் கண்டேன். நெஞ்சின் அதிர்வு அடங்க மறுத்துக் கொண்டிருந்தது. 20 வருடங்களுக்கு முன்னான சில ஒலிகளை மனம் நுகர்வதை அறிந்தேன்.

மஞ்சல் ஆம்பியூலன்ஸ் வண்டிகள் ஒலியெழுப்பியவாறு நான் நின்றிருந்த கட்டடத்தை கடந்து கொண்டிருக்க போலீஸ் வாகனங்களும், தீயணைப்புப்படை வாகனங்களும் அதை பின் தொடர்ந்து கொண்டிருந்தன.

வெளியில் வந்தேன். அருகில் நின்றிருந்த ஆபிரிக்க நண்பரின் முகத்தில் கலக்கம் குடியிருந்தது. என்ன நடந்தது என்றார் என்னிடம்.  தெரியாது என்றேன். என்ன நடக்கின்றது என்று அறிய முடியாமையினால் மீண்டும் எனது கந்தோருக்குள் நுளைந்து  நோர்வே பத்திரிகைகளின் இணையத்தளத்தை ‌பார்த்த போது, நோர்வே பாராளுமன்ற அலுவலகங்களுக்கு அருகாமையில் பாரிய குண்டு வெடிப்பு என்றிருந்தது.  எனது கந்தோரில் இருந்து ஏறத்தாள 500 மீற்றர்களும் இல்லை இவ்வடத்திற்கு.

சற்று நேரத்தில் படங்களை வெளியிட்டார்கள்.  வானொலியில் அறிவித்தார்கள். ஊரோ அல்லோகல்லப்பட்டது. அனைவரும் வீதியில் நின்று  எங்கே என்ன நடக்கின்றது என்று அறிய முற்பட்டுக் கொண்டிருக்க போலீஸ் அனைவரையும் கலைந்து செல்ல ‌வேண்டினார்கள்.

மாலை 6 மணி போல் வானொலியில் நோர்வே தொழிற்கட்சி  இளைஞர்களின் பெரும் கூட்டம் ஒன்றில் போலீஸ் உடையில் வந்த ஒருவர் துப்பாக்கிச் சூடு நடாத்தியதாக அறிவிப்பு வந்தது.

சற்று நேரத்தில் புகையிரதச் சேவை ”மர்ம பார்சல்” ஒன்றின் காரணமாக நிறுத்தப்பட்டுள்ளதாக இணையத்தில் அறியக்கிடைத்தது.

15:20 மணிபோல் மனதுக்குள் புகுந்து கொண்ட அசெளகரீயமான உணர்வு அதிகமாககிக் கொண்டே போனது.

இப்போது நேரம் 21:00 மணி.

தொழிட்கட்சி இளைஞர்களின்  கூட்டத்தில் போலீஸ் உடையில் வந்தவர் ஒருவர் ஏறத்தாள 30 இளைஞர்களை  சுட்டுக் கொலை செய்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. போலீசார், போலீஸ் உடையில் வந்தவரை கைது செய்துள்ளனர்.

இரத்தவங்கி உடனடியாக இரத்தம் தேவைப்படுவதாக அறிவித்திருக்கிறது. அனைத்து விதமாக கூட்டங்கள், சந்திப்புக்கள் தடை செய்யப்பட்டுள்ளன. பாதைகள் தடுக்கப்பட்டு ஒஸ்லோவின் பாதுகாப்பில் இராணுவத்தினர் ஈடுபடுத்தப்பட்டுள்ளார்கள். எங்கும் பதட்டம் படிந்து போயிருக்கிறது.


எத்தனையோ வருடங்களின் பின் இப்படியான ஒரு பதட்டமான நாளை அனுபவிக்கிறேன்.  காலம் செப்பனிட்டுவிட்டது என்று நினைத்திருந்த நினைவுகள் எல்லாம் வானத்தில் வட்டமடிக்கும் தும்பிகளை (helicopter) கண்டதும் உயிர்தெழுவதையும், அசௌகரீயம் மனதுக்குள் பாம்பு போல் நெளிவதையும் உணர முடிகிறது.

முதலாவது பயங்கரவாதத் தாக்குதலினால் அமைதியான ஒஸ்லோவின் இறுதி நாள் இன்று என்று ஆகியிருக்கிறது.  எத்தனையோ மகிழ்ச்சியான நாட்களை இங்கு அனுபவித்திருக்கிறேன். எவ்வித பயமுமின்றி எங்கும் உலாவரக்கூடிய நகரம். மகிழ்ச்சியான மனிதர்கள். அமைதியான, அழகான நகரம்.

எனது இரண்டாவது பூமி குதறப்பட்டிருக்கிறது. அமைதியான, மகிழ்ச்சியான நகரத்தை கற்பழித்துப் போயிருக்கிறார்கள் பாவிகள்.  எங்கள் ஒஸ்லோவின் அழகு மீண்டும் புதுப்பிக்கப்படும் என்பதில் எனக்கு ஐயமில்லை. ஆனால் இன்றைய நாளின் ரணங்கள் ஆறப் போவதில்லை. அவ் ரணங்களின் வலிகளை அனுபவிக்கப் போவது எமது குழந்தைகளே. புலத்திலும் எதிர்காலக் குழந்தைகளுக்கு ரணங்களை பரிசளித்துப் போகும் துர்ப்பாக்கிய நிலையில் இருக்கிறார்கள் வெளிநாட்டவர்கள். பாவம் குழந்தைகள்.

நேற்றுத் தான் ”வலியை ஏற்றுக்கொள் .. அப்போது தான் வாழ்கிறாய்” என்னும் தொனியில் ஒரு பதிவு எழுதினேன். அவ் வார்த்தைகளின் உண்மை மீண்டும் நிரூபிக்கப்பட்டிருக்கிறது.

அதே வேளை நான் இந் நாட்டினை மிகவும் நேசிக்கிறேன் என்பதை இன்றைய சம்பவம் எனக்கு பூடமாகப் போதித்துப் போவது போலவும் இருக்கிறது. உங்களுக்கும் அப்படியானதாயிருக்கலாம். இருந்தால்  மகிழ்ச்சி.


இன்றைய நாள் மற்றைய நாட்களைப் போல் நல்லதாக இல்லை.

நிம்மதி இழந்த என் ஒஸ்லோவுக்கு இது சமர்ப்பணம்.


.

வலியின் வலிகளும், சுகங்களும்

”வலியை ஏற்றுக்கொள் .. அப்போது தான் வாழ்கிறாய்”. சற்று முன் இணைய வானொலியில் இவ் வார்த்தைகளைக் கேடடேன். எத்தனை உண்மையான வார்த்தைகள். அதைக் கேட்ட நேரம் முதல் மனதுக்குள் இதே வார்த்தைகள் ஆடிக்கொண்டேயிருக்கும் சுவர்க்கடிகாரத்தின் ஊசல் போல் மனதினுள் ஆடிக்கொண்டே இருக்கின்றன.

ஒரு தாய் பிரசவ வலியினூடாகவே முழுமையாக வாழ்கிறாள். தந்தைக்கு இவ்வாறான இயற்கையான வலிகள் இல்லை எனினும் அவனும் வலிகளினூடாகவே தந்தை என்னும் நிலையை உணர்கிறான் என்பது உண்மைதானே.  அவன் குழந்தை விழும் போது , அழும் போது, வாழ்வில் துயருரும்போது தந்தைக்கு வலிக்கிறது. எனவே தந்தையும் வலியினூடாகவே வாழ்கிறான்.

அபியும் நானும் என்னும் திரைப்படத்தின் ஒரு பாடலில் ஒரு வரி இப்படி எழுதப்பட்டிருக்கிறது ”தந்தைக்கும் தாயமுதம் சுரந்தம்மா என் தங்கத்தை மார்போடு அணைக்கையிலே” எத்தனை அற்புதமான வரிகள்.  நானும் இந்த வரிகளின் உண்மையை அணுவணுவாக அனுபத்திருந்திருக்கிறேன்.  அந் நாட்களை மீண்டு கொள்ளும் போது  என் குழந்தைகள் ஏதோவொரு வலியை உணரும் போது நானும் அவ் வலியினை சேர்ந்தே உணர்ந்து, வாழ்ந்திருந்ததே நினைவில் சுவையாய் நிற்கிறது. இங்கும் வலியை ஏற்றுக்கொள் .. அப்போது தான் வாழ்கிறாய் என்பது நிறுவப்படுகிறது, வாழ்வியலில்.

நட்பு எப்போது இனிக்கிறது? வலியினை பகிரும் போது தானே. மகிழ்ச்சியினை பகிரும் கணங்கள் எனோ மகிழ்ச்சி என்னும் காற்றில் கரைந்து போவதாயே உணருகிறேன். ஆனால் வலியினை பகிரும் கணங்கள் நட்பின் ஈரலிப்பை அப்படியே உணர்த்தி நிற்கும்.

காதலும் வலிக்கும் போது தானே இனிக்கிறது. பதின்மக்காலங்களில்  ஏக்கங்களுடன் அலைந்த காலங்களே நினைவில் அதிக பாரத்துடன் பதிந்து போயிருக்கிறது. நிறைவேறாக் காதலின் நினைவுகளுடன் வாழ்பவர்கள் அதன் வலியை சுகிப்பதாகவே அறிகிறேன். சுயபரிதாபத்தின் சுகங்களுக்குள் இது அடங்கக் கூடும். 

எந்தவொரு வெற்றியை அடைவதற்கும் ‌ வலிகளைத் தாங்கித் தானே ஆக வேண்டும். உதாரணமாக ஓட்டப் போட்டியில் தசைகள் வலிக்க வலிக்க ஓடிய பின்பே வெற்றியினை சுவைக்க முடிகிறது.  இங்கும் வலியை ஏற்றுக்கொள் .. அப்போது தான் வாழ்கிறாய் என்பது உண்மையாகிறது.

ஏதோ திசையறியா காட்டில் அலைந்தருந்த நேரத்தில் இவ் வாசகங்கள் ஏனோ வாழ்க்கையின் நியதியினை போதித்துப் போயிருக்கிறது, எனக்கு. தவிர நான் பயணிக்கும் திசை சரியானது என்றும் உணர்த்திப் போயிருக்கிறது.

வாழும் வார்த்தைகள் இவை என்றால் அது மிகையில்லை.


இன்றைய நாளும் நல்லதே!


.

கடற்கரையில் டூ பீ்ஸ் நமீதா

நண்பர் ஒருவரிடம் தற்போது இளவேனில் காலம்  என்பதால் ஒரு சிறு சுற்றுலாவுக்கு ஒழுங்கு செய்யலாமே என்றேன். Google க்குள் தலைகீழாக நின்று சுற்றுலா பற்றித் தேடியலுத்து மாலையே தொலைபேசினார். அவரிடம் தொடர்ந்து பேசினால் நான் விரும்பாத இடத்துக்கு அழைத்துப்போவாரோ என்ற நிலை நெருங்கிக் கொண்டிருந்ததால், நாம் மீன் பிடிக்கப் போனால் என்ன என்றேன்.
”உமக்கு தலைக்கு வெளியில தான் ”இல்லை”” என்றார் அன்பாய்.

மறுநாள், மீண்டும் Google க்குள் தலையைவிட்டு தேடியபோது அவரிடம் ஓஸ்லோவை சுற்றி மீன் பிடிப்பதற்கான 9 இடங்கள் இருந்தன. அதில் இடத்தை தேர்வு செய்வதை என்னிடம் தந்தார். ஆண்கள் தனியே போவது என்றே நாம் பேசியிருந்தோம். அவரின் நண்பர்களுக்கும்  அழைப்பு விடுக்கப்பட, விடுக்கப்பட்ட அழைப்பு உடனேயே பாதகமான பதிலுடன் திரும்பிவந்தது. குடும்பசகிதமாக வருவதானால் தாம் வருவதாக அவர்களுக்கு கட்டளையிடப்பட்ட விதத்தில் எழுதப்பட்டிருந்தது அதில். நாம் மகிழ்ச்சியாக இருக்கத் தானே அழைத்தோம். ஏன் இப்படி புரியாமல் பேசுகிறார்கள் என்று  எமக்குப் புரியவில்லை. இருப்பினும் அவர்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டோம்.

எனக்கு  சனக்கூட்டமான இடத்தில் மீன் பிடிப்பது சம்மதமில்லை. எனவே ஒஸ்லோவில் இருந்து ஏறத்தாள 60 - 70 கிமீ அப்பாலிருந்த இரு அமைதியான இடத்தை தேர்ந்தெடுத்தேன். மீ்ண்டும் கூகிலாண்டவரின் உதவியுடன் நாம் செல்லவிருக்கும் இடத்தினை படங்களின் மூலம் பார்த்து வழியினையும் குறித்தக்கொண்டோம்.

காலை 8 மணிக்கு குறிப்பிட்ட ஒரு இடத்தில் கூடி பின்பு ஊர்வலமாய் செல்லலாம் என்பதால் குறிப்பிட்ட இடத்தில் கூடினோம். 4 குடும்பங்கள். அனைவரும் நாமிருவர் நமக்கிருவர் விதிகளை மீறியவர்களாய் இருந்தார்கள். நாம் கூடிய இடத்திலேயே அவர்களின் கும்மாளம் ஆரம்பித்தது. எல்லோரும் நேரத்தை புனிதமாக மதிப்பவர்களாகையால் நாம் ஏறத்தாள 2 மணிநேர தாமதத்துடன் ஊர்வலத்தை ஆரம்பித்து. குறிப்பிட்ட இடத்தை அடைந்த போது நேரம் 11ஐ நெருங்கியிருந்தது.

வாகனங்களை விட்டு இறங்கியதும் குழந்தைகள் கடற்கரைக்கு ஓட, தாய்மார் ” அப்பா, பிள்ளைகள் தண்ணீக்குள்ள போகுதுகள்” என்ற போது ஒரு கணவர் என்னை தண்ணியடிக்கவும் விடமாட்டாய் பிள்ளைகளை தண்ணீக்குள் போகவும் விடமாட்டாய் என்றபோது பதிலாய் கிடைத்த பார்வையின் உக்கிரம் தாங்காமல் அடங்கிக் கொண்டார்.

தூண்டில்கள் ஆயத்தம் செய்யப்பட்டன. அவற்றில் பல புதிய தூண்டில்கள். நண்பரிடம் ஒரு தூண்டில் கடனாக வாங்கி ஒரு கற்குவியலின் மீது நின்று கொண்டு துண்டிலை வீச ஆரம்பித்தேன்.

எல்லாமாக ஆறு தூண்டில்கள் மீன் வேட்டையில் இறங்கியிருக்க, எனக்கருகில் கணவனின் தூண்டிலை திமிங்கலம் இழுத்தால் கணவனைக் காப்பாற்றுவதற்காக நிற்பது போல் நின்றிருந்தார் ஒரு நண்பரின் மனைவி. இன்னொரு மனைவியோ இவனை திமிங்கிலம் இழுத்தால் மகிழ்ச்சி என்பது போல் கரையில் வேறெங்கோ பார்த்தபடி வாய்க்குள் எதையோ அரைத்தபடி நின்றிருந்தார்.

நண்பர் முதல் தரம் தூண்டிலை வீச அது அவருக்கு அருகில் இருந்த மனைவின் கூந்தலில் சிக்கியது. ”தள்ளி நில்லடி” என்றார் நண்பர்.
”எறியுற தூண்டில கடலக்குள்ள எறியுங்க, எனக்கேன் தூண்டில் போடுறீங்க” என்றார் தர்ம பத்தினி
”உனக்கு தூண்டில் போட்டத போல ஓரு மோட்டு வேலை இனி ஒரு ஜென்மத்திலயும் செய்ய மாட்டேன்” என்று நண்பர் கூறியது நல்ல வேளை அவர் மனைவிக்கு கேட்டவில்லை.

அடுத்த  முறை தூண்டிலை நண்பர் எறிய அது அவருக்கு முன்னால் 4 அடி தள்ளி விழுந்தது. நண்பரின் முகத்தில் பெருமிதம் பொங்க மனைவியைப் பார்த்து ”எப்படீ” என்று கண்ணால் கேட்க அவர் ” உதுக்கு தூண்டில் தேவையே, கையாலயே தூக்கிப் போடலாமே” என்றார். கணவனின் சுய நம்பிக்கை கீழே விழுந்த முட்டை போலாகியது.

சில முயற்சிகளின் பின் நண்பர் தூரத்திற்கு எறியப் பழகிக் கொண்டார். மனைவியோ ஒவ்வொரு முறையும் நண்பர் தூண்டிலை எறியும் போதும் ”ஏனப்பா! இன்னும் மீண் பிடிபடேல்லயோ” என்று ஏகத்துக்கும் நண்பரை உசுப்பிக் கொண்டிருக்க, நண்பர் ரொம்பவும் சூடாகி ”இந்தா நீ பிடி” என்று சொல்லி தூண்டிலை மனைவியிடம் கொடுத்துவிட்டு நகர, அங்கு நின்றால் என்னை கடலுக்குள் குதிக்க வைத்துவிடுவார் நண்பரின் மனைவி என்பதால் நானும் நண்பருடன் சேர்ந்து வேறு இடத்திற்கு மாறினோம்.

நானும் நண்பரும் நான்கு அடி வைக்க முதல் நண்பரின் மனைவி ”இங்காருங்கோ, இங்காருங்கோ! மீன், மீன் என்று கத்தியதால் திரும்பிப் பார்த்தேன். தூண்டில் ராமனின் நாண் ஏற்றிய வில்லு போல வளைந்திருப்பது தெரிந்தது. நண்பரின் மனைவி பெரும் பாடு பட்டு துண்டிலை இழுத்துக் கொண்டிருக்க எனக்கும் சந்தேகம் வர அவரிடம் இருந்து தூண்டிலை வாங்கிக் கொண்டேன். நண்பரின் மனைவி ”இண்டைக்கு பின்னேரம் இடியப்பமும் மீன் தலை சொதியும் வைக்கலாம்” என்றபடியே அருகில் இருந்த கத்தியை எடுத்து மீனை வெட்ட ஆயத்தமானார். நானோ தூண்டிலுடன் போராடி அதை கரைக்கு இழுத்த போது அது பெரும் பாசி ஒன்றை இழுத்து வந்திருந்தது. ”என்ட மீனை நீங்கள் விட்டு விட்டீர்கள்” என்று அவர் சொல்ல... நண்பர் ”எனப்பா இரவைக்கு இடியப்பமும் பாசிச் சொதியும் வைக்கலாமே” என்றார். மனைவி ஆச்சரியமாய் அடங்கிப் போனார்.

தூண்டில் எறிவதிலேயே நேரம் போய்க் கொண்டிருந்தது. ஒரு மீனும் அகப்பட்டதாயில்லை. இதற்கிடையில் ஒரு உள்ளூர் நோர்வேஜியன் வந்தார். வந்து  சில நிமிடங்களில் ஒரு மீன் பிடித்தார். நான் மூன்று மணிநேரமாக நிற்கிறோம் அவன் இப்போது தான் வந்தான் அவனுக்கு மீன் பிடிபடுவது நியாயமில்லாதது என்று நண்பர் தனது மனநிலையை காட்டிக் கொண்டிருந்தார்.

அப்போது எமக்கருகால் ஒரு நோர்வஜிய மனிதரும் அவருடன் இரு துண்டு உடுப்புடன் நமீதாவை மிஞ்சிய கவர்ச்சியுடன் தமது சிறிய கப்பலில் சென்றனர். அப் பெண் எம்மைப் பார்த்து கையசைத்து ”ஹாய்” என்ற போது தேவைக்கு அதிகமாய் உணர்ச்சிவச்பட்ட நண்பனின் மாலைப் பொழுதை நினைத்து நினைத்து நானும்  நண்பரும் சிரித்துக்கொண்டு பரிதாபப்பட்டடோம்.

கடல்குளித்த குழந்தைகளுக்கு பசியெடுக்க உணவு தயாரிப்பு நடந்து, உணவு உண்ட பின்பும் மீன் அகப்பட்டதாய் இல்லை. இதற்கிடையில் ஒரு பெண் மட்டும் தூண்டில் இல்லாமல் மீன் பிடிக்கும் இடங்களுக்கு அலைந்து கொண்டிருந்தார். தன்னை மீன்கள் கண்டால் தாவி வந்து காலடியில் விழும் என்று நினைத்தாரோ என்று நண்பரும் நானும் பேசிக்கொண்டோம். சிலருக்கு ஏனோ அதீத சுயநம்பிக்கை இருக்கிறது.

முன்பொரு காலத்தில் எனது தந்தையார்  நாம் அக்கரைப்பற்றில வாழ்ந்திருந்த காலங்களில் மீன் பிடிக்க முயற்சித்தார். ஏறத்தாள ஒரு வருடமாய் ”மீண்டும் முருக்கை மரத்தில் ஏறிய விக்கிரமாதித்தன்” போல் தினமும் மீன் பிடிக்கப் போவார். வெறுங்கையுடன் திரும்பிவருவார். இறுதியாக நாம் அங்கிருந்து புறப்படுவதற்கு முன்னான நாள் கடல் அவர் மேல் இரக்கப்பட்டு ஒரு மீனைக்கொடுத்தது. அவரின் மகிழ்ச்சிக்கு அளவிருக்கவில்லை. எனக்கு  எப்படி தூண்டிலை தலைக்கு மேலால் சுற்றி வீசுவது என்று லெக்சர் வேறு அடித்தார்.  உங்களின் தூண்டிலை தலையைச் சுற்றி தூர வீசுங்கள் என்று சொல்ல நினைத்தாலும் அடக்கிக் கொண்டேன், அன்று.

நாம் புறப்படுவதற்கு முன் நண்பரின் மனைவி ஒரு மீன் பிடித்தார். அதைக் கண்டவுடன் அவர் நடுங்கத் தொடங்கிவிட்டார். ஒரு விதமாக அம் மீனை கரைக்கு இழுத்து கழுத்தை வெட்டினேன். நண்பரோ ”நல்லா கழுத்தை வெட்டுறான்” என்றார்.

அடுத்து எனக்கு இரு மீன்கள் பிடிபட்டன. திடீர் என எனது மவுசு ஏறியது. குழந்தைகள் என்னை சூழ்ந்து கொண்டார்கள். சிலர் அதை மீண்டும் கடலில் விடக் கேட்டார்கள். சிலர் விரிந்த கண்களுடன் மீனை சுத்தப்படுத்துவதைப் பார்த்து ”இவர் ஒரு மோசமான மாமா, பாவம் மீன்” என்றார்கள்.  நண்பர் ஒருவர் மீன்களை எடுத்துப் போய் பொரிக்கலானார்.

மாலை ஏழு மணிபோல்  3 பொரித்த மீன்களைனை ஏறத்தாள 15பேர் பிரித்து உண்டோம். எதையோ சாதித்தது போலிருந்தது. மகிழ்ச்சியான நாள். வீடு திரும்பிக் கொண்டிருந்த போது மீண்டும் மீன் பிடிப்பதற்கான நாளை யோசித்துக்கொண்டிருந்தோம் நண்பரும் நானும்.

 அது சரி ”கடற்கரையில் டூ பீ்ஸ் நமீதா நமீதா” எங்கே என்று நீங்கள்  கேட்கப்படாது ஆமா.. அது தான் அந்த கப்பலில் வந்தாங்க என்று சொல்லியிருக்கிறனே .....  Cool ..  cool
 எஸ்கேப்....

.

ரயிலில் நடக்கும் ரகசியங்களும் இன்னும் சிலவும்

இன்றும் நிலக்கீழ் ரயிலின் தாலாட்டுப் போன்ற அசைவில் என்னை மறந்திருந்தேன். கையில் சேகுவேராவின் மோட்டார் சைக்கில் குறிப்புகள் இருந்தும் மனம் அதில் லயிக்க மறுத்தது. வாசிக்க வேண்டும் என்று நான் விரும்பினாலும் மனது என் விருப்பத்திற்கு எதிராக இயங்கிக்கொண்டிருந்ததால் புத்தகத்தை முடிவிட்டு சுற்றாடலை அவதானித்துக் கொண்டிருந்தேன்.

எனக்கு முன் இருக்கையில் ஒருவர் தன்னை மறந்து ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தார். நான் பார்த்துக் கொண்டிருக்கும் போதே அவரின் வலது ஆள்காட்டி விரல் மூக்குக்குள் நுளைந்து, சுரங்கம் தோண்டியது. அந்த விரலை தன்னை மறந்த நிலையில்அப்படியே வாய்க்குள் வைத்தார், சூப்பினார். மனிதருக்கு 35 வயதிருக்கும். மிக அழகாய் உடுத்திருந்தார். மனிதர்களால் நிரம்பியிருக்கும் நிலக்கீழ் ‌தொடரூந்தில் இப்படி செய்கிறாரே என்று யோசித்துக் கொண்டிருக்கையில் கண்ணை மெதுவாய் நிமிர்த்தி தன்னை யாராவது கவனிக்கிரார்களா என்று பார்த்தார். நான் அவரைப் பார்த்துக் கொண்டிருப்பதை அவர் பார்க்க முதல் கண்களை தாழ்த்திக் கொண்டேன். தன்னை எவரும் கவனிக்கவில்லை என்று ஆறுதல்பட்டிருப்பாரோ?

இப்படித்தான் நிலக்கீழ் ‌தொடருந்தில் மூக்கு குடைவதில் இருந்து சில குறிப்பிட முடியாத இடங்களை கண்மூடி சொறிந்து  தன்மை மறப்பவர்கள் வரை காணக் கிடைக்கிறது.

அன்றொரு ‌நாள் இரவு 11 மணிபோல் வீடு நோக்கி வந்து கொண்டிருக்கிறேன். இருவர் தம்மை மறந்து  ஏகத்துக்குமாய் முத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள். பயப்படாதீர்கள்....  ஆணும் பெண்ணும் தான். வயது 20க்குள் இருக்கும். அவர்களின் வேகம் என் அடிவயிற்றை கலக்கிக் கொண்டிருந்தது. இருப்பினும் நிலமை மோசமாசதற்குள் அவர்கள் இறங்கிக் கொண்டார்கள்.  தொடரூந்தால் இறங்கும் போதும் முத்த மழை முடிந்ததாயில்லை. அருகில் இருந்தவர் அர்த்தத்துடன் புன்னகைத்தார். நானும் சிரித்தேன்.

நான் தொடருந்தில் பயணிக்கும் போது புன்னகைக்கும்  மனிதர்கள், தனக்குத் தானே பேசிக் கொள்பவர், யாரையோ திட்டிக் கொண்டிருப்பவர்,  தன்னை மறந்து அழுபவர்கள்  என்ற பலரையும் கண்டிருக்கிறேன். ஒவ்வொரு தொடருந்தும் எத்தனை எத்தனை கதைகளை சுமந்து கொண்டு மௌனமாய் ஓடிக்கொண்டிருக்கிறது, வாழ்க்கையைப் போல.

புகையிரத நட்புகள் அல்லது இரயில் சினேகங்கள் என்று கூறப்படும் நிகழ்வுகளுடன் எனக்கும் சில அனுபவங்கள் உண்டு. அதன் சுவைகளையும் சுமைகளையும் அறியக் கூடியதாயிருக்கிறது.

நானும் சில வருடங்களுக்கு முன் ஒருத்தியை சந்தித்தேன். 15 நிமிட பயணத்துக்குள் நண்பர்களாகிப் போனோம். அவளின் பார்வையும், துருதுருக்கும் கண்ணும், மொழியின் இனிமையும் அவளை மறக்க முடியாதாக்கியிருக்கிறது.

ஏறத்தாள தினமு்ம் அவளை சந்திப்பேனா என்ற நம்பாசையுடன் தான் தொடரூந்தில் ஏறுகிறேன். இன்று வரை மீண்டும் நாம் சந்தித்துக் கொள்ளவில்லை.  நாம் சந்திக்கும் சந்தர்ப்பம் இல்லை என்றும் சொல்வதற்கில்லை.

அவள் அப்படி ஒன்றும் பெரிய பெண் இல்லை. அவளுக்கு 4 - 5 வயதிருக்கலாம். பனிக்காலத்தில் ஒரு நாள் காலை  நான் நின்றிருந்த புகையிரத நிலையத்தில் நின்றிருந்தாள், தனது தமிழ்ப் பெற்றோருடன். அழகான உடை. பனிக்கால உடையில் அவளின் அழகு பெரும் அழகாயிருந்தது. அழகான தொப்பி, அதற்கேற்ற பனிக்காலத்து மேலாடை, பனிக்கரடியின் கால்கள் போன்ற அழகான சப்பாத்து, கையிலே சிறு பை என நின்றிருந்தாள். புகையிரதம் வர நாம் ஏறிக் கொண்டோம். அதிஸ்டவசமாய் எனக்கு உட்காருவதற்கு இடம் கிடைக்க, அவள் என்னருகில் தன் தந்தையின் கால்களை கட்டிப்பிடித்தபடியே நின்றிருந்தாள்.

மெதுவாய் அவளைத் தொட்டு என்னருகே சிறு இடம் கொடுத்து உட்காரச் சொன்னேன். அம்மாவை நிமிர்ந்து பார்த்தாள். அனுமதி கிடைத்ததும் அருகிலே உட்கார்ந்து கொண்டாள்.

புகையிரதம் பனியினுள் ஓடிக் கொண்டிருந்து. நாம் நண்பர்களாகிக் கொண்டிருந்தோம். அவளின் பெயர் கேட்டபோது ”கிளவ்டியா” என்று சொன்னாள். எனது நண்பர்கள் இருவருக்கு இதே பெயரில் குழந்தைகள் இருப்பதால் அப் பெயரை இலகுவாய் நினைவில் நிறுத்த முடிந்தது. தான் குழந்தைகள் காப்பகத்திற்கு போவதாயும், தனது உணவுப் பெட்டியினுள் ஒரு சாக்லேட் உண்டு என்றும், அப்பாவுடன் மாலை வீடு வருதாயும் மழழைத் தமிழும் நோர்வேஜியன் பாஷை கலந்தும் சொல்லிக் கொண்டிருந்தாள். அவளின் அழகிலும், ‌மழழை மொழியிலும் என்னை இழந்து போயிருந்தேன். அவளின் பெற்றோர் இடையிடையே எம்மை பார்த்து சிரித்தபடி இருந்தனர்.

அவள் இறங்கும் போது கையைக் காட்டியபடியே இறங்கிப் போனாள். புகையிரதம் நகர ஜன்னலினூடாக கையைக் காட்டினேன். அழகாய் புன்னகைத்து கையசைப்பது தெரிந்தது.

கடந்த முன்று வருடங்களாக, நான் தினமும் பயணிக்கும் தொடரூந்தில்  அவளைச் சந்திக்கலாம் என்று நப்பாசை ஏனோ எனக்குள் இருந்து கொண்டேயிருக்கிறது. ஏன் என்ற காரணத்தை தேடுவதை தவிர்த்து, அந்த ஏகாந்தத்துடன் தினமும் பயணிக்கிறேன்.


இன்றைய நாளும் நல்லதே.


..