வார்த்தைகளின் அழகும் அசிங்கமும்

அண்மையில் ஒர் நாள், பின் மாலைப்பொழுதில் வானொலியைக் கேட்டபடியே எழுதிக்கொண்டிருந்தேன். வார்த்தைகள் பற்றி  உரையாற்றிக்கொண்டிருந்தார்கள். உரையாடல் சுவராஸ்யமாக இருந்தால்
நான் எழுதுவதை நிறுத்திவிட்டு வானொலியைக் கேட்கலானேன். என்னை மிகவும் கவர்ந்தது அந்த நிகழ்ச்சி. நிகழ்ச்சியின் முடிவில் சுயவிமர்சனம் செய்துகொள்ளவும் துண்டப்பட்டிருந்தேன்.

வார்த்தைகளின் தார்ப்பர்யம் அளப்பெரியது. வார்த்தைகள் மகிழ்ச்சியைத்
தரலாம், துன்பத்தைத் தரலாம், ஊக்கத்தைத் தரலாம், புண்படுத்தலாம்,
நட்பையும் சமாதானத்தையும் ஒற்றுமையையும் ஏற்படுத்தலாம், விரோதத்தை சம்பாதித்துத் தரலாம், எதிரிகளை உருவாக்கலாம், உறவுகளை
ஏற்படுத்தலாம் அல்லது வார்த்தைகளினூடாக உறவுகளை பகைத்தும்கொள்ளலாம்.

மனிதனின் மனம் எவ்வாறான உணர்வுகளைக் கொண்டிருக்கிறதோ அவை அவனது வார்த்தைகளிலும் பிரதிபலிக்கும் என்பது உண்மைதான் போலிருக்கிறது. சிலர் அன்பாகவும் பண்பாகவும் பேசுகிறார்கள். இன்னும் சிலருக்கு அன்பான பண்பான வார்த்தைகள் இருப்பதே தெரியாதிருக்கிறது.  வார்த்தைகளை பிரயோகிக்கத் தெரிந்தவர்கள் பாக்கியசாலிகள். குழந்தைகள் எப்போதும் அன்பாகவே பேசுகிறார்கள். நாம் வளர வளர எமக்குள் வன்மம், குரோதம், பொறாமை போன்ற குணங்களும் எமக்குள் வளர்கின்றனவோ என்று எண்ணத்தோன்றுகிறது.

என் வாழ்விலும் வார்த்தைகள் ஏற்படுத்திய தாக்கங்கள் இருக்கின்றன. என் நாவினை  கட்டுப்படுத்தாதனால் நானும் பலரை இழந்திருக்கிறேன். அதே போல் ஒரு சில வார்த்தைகளினால் மிக மிக நெருங்கியிருந்தவர்கள் அண்மிக்க முடியாத தொலைதூரத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

”யா காவார் ஆயினும், நா காக்க; காவாக்கால், சோகாப்பர், சொல் இழுக்குப்
பட்டு”  என்பது குறள்.

எம்மில் எத்தனைபேர் இதைப் பற்றி சிந்திக்கிறோம்? தொடர்பாடலுக்கான சாதனமே வார்த்தை. அதைத் தவிர்த்து, நாம் மனிதஉறவுகளை தொலைப்பதற்கு அதனைப் பாவித்துக்கொண்டிருக்கிறோம் என்பது வேதனையானதே.

அழகிய அன்பான வார்த்தைகளைக் கேட்கும்போது நாம் உயிர்க்கிறோம். அதே போல் வார்த்தைகள் அசிங்கமானவையாக, அருவருப்பானவையாக மாறும் போது எமது மனம் சுருங்கி புண்பட்டுப்போகிறது. நான் வார்த்தைகளால் உயிர்த்துமிருக்கிறேன், உயிர்ப்பித்துமிருக்கிறேன். அதே போல் சிலரை புண்படுத்தியுமிருக்கிறேன், புண்பட்டுமிருக்கிறேன்.

தற்போதெல்லாம் வார்த்தைகளை மிக மிக அவதானமாகவே பொறுக்கி எடுத்து வசனங்களை கோர்க்கின்றேன் என்றே எண்ணத் தோன்றுகிறது. வார்த்தைகளுக்கும் எனக்குமான உறவு நாளுக்கு நாள் மேம்பட்டுக்கொண்டு வருவதாகவே உணர்கிறேன். இங்கும் வாழ்க்கை அனுபவம் எனனைச் செதுக்கியபடியே இருக்கிறது, தினமும்.

ஒரே ஒரு வார்த்தையினால் அவமானப்பட்டு அசிங்கப்பட்டு பலரின் முன்
நகைப்பிற்கிடமாய் நின்ற கதையொன்று  இருக்கிறது என் வாழ்வில். மறக்கமுடியாத, மறக்கக்கூடாத அனுபவம் அது.

ஏறத்தாள 28 ஆண்டுகளுக்கு முன்பு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய
கல்லூரியில் கல்விகற்ற நாட்கள் அவை. பாடசாலையின் முதன்மை மாணவர் தலைவராக தெரிவுசெய்யப்பட்டிருந்தேன். இளமைத் துடிப்பும், மட்டக்களப்பின் பிரபல பாடசாலையில் senior prefect என்ற செருக்கிலும் வானில் பறந்து திரிந்த காலம்.

ஓர் நாள் அதிபர் என்னை அழைத்து சகல மாணவர்களையும் பொது மண்டபத்திற்கு அழைத்து வா என்று  ஆங்கிலத்தில் கட்டளையிட்டார். மனிதருக்கு தமிழைவிட ஆங்கிலமே பரீட்சயமான மொழி. அது தவிர அவர் ஒழுக்கம் என்பதையே தனது மூச்சாய் நினைத்து பாடசாலையை நிர்வகித்துவந்தார். வாகரையில் இருந்து அம்பாறைவரை
அவரின் பெயர் பிரபல்யமாய் இருந்த காலம் அது. ஆசிரியர்களே அவருக்கு
நடுங்கினார்கள் என்றால் மாணவர்களாகிய எங்கள் நிலையை கேட்கவேண்டுமா என்ன?

நான் ஏனைய  மாணவதலைவர்களை அழைத்து அதிபரின் கட்டளையைக் கூறினேன். அவர்களை மாணவர்களை அழைத்துவரவும் பணித்தேன். சற்று நேரத்தில் வரிசை வரிசையாக மாணவர்கள் வந்து, மண்டபம் நிறைந்துகொண்டிருந்தது. நான் மண்டபத்து வாசலில் நின்றிருந்தேன்.

அந்நாட்களில் இளைஞர்களாகிய எமது வாயில் ஒரு தூஷன வார்த்தை நர்த்தனமாடிக்கொண்டிருந்தது. எதைச் சொன்னலும் அந்த தூஷணவார்த்தையும் அந்தவசனத்தில் இணைந்திருந்தது.

ஒரு மாணவதலைவன் என்னிடம் வந்து இரண்டு மாணவர்கள் சண்டைபிடிக்கிறார்கள் என்றான். என் வாயில் அந்தத்  தூஷண வார்த்தை வந்து, அது எனது வாயைவிட்டு வெளியேறிய போது அதிபர் என்னைக் கடந்துசென்றதை கண்டேன். எனது இதயம் வாயினுள் வந்து
போலிருந்தது எனக்கு. இருப்பினும் அதிபர் எதுவும் பேசாது  சென்றது மனதுக்கு பெருத்த ஆறுதலைத் தர, அப்பாடா என்று நிம்மதிப்பெருமூச்சு விட்டேன்.

அதிபர் மண்டபத்தினுள் நுளையும் போது எப்போதும் மயான அமைதி நிலவும்.
அன்றும் அப்படியே.

மேடையில் அனைத்து ஆசிரியர்களும் அமர்ந்திருப்பார்கள். அதிபர் மேடைக்கு முன் பகுதியில்  இருக்கும் சிறிய பேச்சு மேடைக்கு வந்து கூட்டத்தினை   இப்படி ஆரம்பித்தார்:

”என்ட பள்ளிக்கூடத்தில ஒரு ரவுடி இருக்கிறார். அவருக்கு தான் ஒரு பெரிய
ஆள் என்ற நினைப்பு” இதைக் கேட்டதும் அந்த பரிதாபமான ஜீவன் யார் என்றும், இன்று அவனுக்கு பகிரங்க தண்டணை கிடைக்கப் போகிறது என்றும் எனக்குள் யோசனை ஓடிக் கொண்டிருந்தது. அவனுக்காக பரிதாபப்பட்டேன்.

அதிபர் ஒழுக்கம் பற்றி உரையாற்றியபடியே என்னை நோக்கி ” சஞ்சயன்,  மேடைக்கு முன் ஒரு மேசையை எடுத்துப் போடு” என்றார்
ஆங்கிலத்தில்.

நானும் ஒரு மேசையை எடுத்துப்போட்டுவிட்டு திரும்பவும் எனது இடத்தை நோக்கி நடக்க முற்பட்டபோது ”சஞ்சயன், இந்த மேசை யாருக்காக போடப்பட்டது என்று தெரியுமா?" என்றார். நான் "இல்லை சேர்". என்றேன்.


”இந்தப் பள்ளிக்கூடத்து senior prefect சஞ்சயனுக்குத் தான்” என்றார்.
எனக்கு கீழ் இருந்த நிலம் திடீர் என்று இல்லாது போனது போல் இருந்தது.  மொனமாய் ஓடின சில கணங்கள். ”மேசையின் மேல் ஏறி நில்” என்று கட்டளை வந்தது.  அவரின் கட்டளையை மீறுவது தற்கொலைக்குச் சமனானது என்பதால் தலையைக் குனிந்தபடியே ஏறி நின்றேன்.

இவர் உங்கள் எல்லோருக்கும் முன்மாதிரியாக இருக்கவேண்டியவர். ஆனால் இவர் கதைக்கிற பாஷை காதால் கேட்க முடியாத பாஷை  என்றார்.

சகலம் புரிந்தது எனக்கு

பொது மண்டபம் முழுவதும் மாணவர்கள். ஆயிரத்துக்கும் மேற்பட்ட கண்கள்
என் நெஞ்சைத் துளைக்கின்றன. மண்டபத்தில் எனக்குப் பின்னால் அமர்ந்திருந்த ஆசியர்களின் கண்களும் என் முதுகை சல்லடை போடுவது போல உணர்ந்தேன். வியர்வையால் நனைந்திருந்தது உடம்பு. அவமானத்தால் கூனிக் குறுகி நடுங்கிக் கொண்டிருந்தேன். அருகில் நின்றிருந்து முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு பிரச்சனை என்ன என்பது புரிந்திருக்காவிட்டாலும் மேசையின் மீது  சிலைபோல நின்றிருந்த  என்னை ஆ என்று வாயைத் திறந்தபடியே அண்ணாந்து பார்த்தபடியே நின்றிருந்தார்கள். எனக்கு அவ்விடத்திலேயே உயிர்போகாதா என்னுமளவுக்கு அவமானத்தை உடலெல்லாம் உணர்ந்து கொண்டிருந்தேன்.

அன்றைய கூட்டம் முடிவடைந்த பின்பும் இறங்கிப் போ என்ற கட்டளை
கிடைக்கவில்லை. ஏனைய நாட்களில் அதிபரே முதலில் மண்டபத்தை விட்டு
வெளியேறுவார். அன்று அவர் நின்றிருக்க ஆசிரியர்கள் வெளியேறினார்கள். அவர்களில் சிலர் என்னை நிமிர்ந்து பார்த்து ஏளனமாய் சிரித்துப்போனார்கள். மாணவர்கள் வெளியேறிக்கொண்டிருந்த போது என்னால் தண்டிக்கப்பட்ட பல மாணவர்கள்  என் நிலையைப் பார்த்து மகிழ்ச்சியுடன் கடந்துபோனார்கள். இகழ்ச்சித்தும் போனார்கள்.

அனைவரும் வெளியேறிய பின் ”எனது கந்தோருக்கு வா” என்று ஆங்கிலத்தில் கட்டையிட்டுவிட்டு அகன்றார் அதிபர்.

அவமானத்தின் கனத்தை அணு அணுவாக உணர்ந்து கொண்டிருந்தேன். மெதுவாய் என்னை சுதாரித்துக்கொண்டு அதிபரின் அலுவலத்திற்கு செல்லலானேன். மண்டபத்தில் இருந்து அவரின் அலுவலகத்திற்கு செல்ல வேண்டும் என்றால்  பல வகுப்புக்களைக் கடந்து செல்லவேண்டும்.  அனைத்து மாணவர்களும் என்னையே பார்த்து நகைப்பது போலிருந்தது. குனிந்ததலை நிமிராது அவமானத்தை சுமந்தபடியே அதிபரின் அலுவலகத்தை வந்தடைந்தேன்.

உள்ளே வா என்று  ஆங்கிலத்தில் கட்டளை வந்தது.  நடுங்கியபடியே உள்ளே ‌ செல்கிறேன்.

உன்னை நினைத்து வெட்கப்படுகிறேன் சஞ்சயன் என்றார். குனிந்த தலையை நிமிர்த்த முடியாது நின்றிருந்தேன். இந்தப் பாடசாலையின் முதன்மை மாணவன் நீ. முன்மாதிரியாக இருக்கவேண்டியவன். தவறுகளை நீயே செய்து கொண்டு எவ்வாறு அதே தவறுகளை செய்பவர்களை திருத்தப்போகிறாய்? உனது தாயார் உனது பழக்கவழக்கங்களை அறிந்தால் எவ்வளவு வேதனைப்படுவார்? இப்படி அடிமனதை உலுக்கும் கேள்விகளால் என்
மனச்சாட்சியின் கதவினை தட்டிக்கொண்டிருந்தார். அவர் கடும் கோபத்தில் இருப்பதை அவர் குரல் காட்டிக்கொண்டிருந்தது.

சற்று நேரத்தின் பின் ”எனது கந்தோரை விட்டு வெளியேறு” என்றார் கோபமான ஆங்கிலத்தில். நான் குனிந்த தலையுடன் அவரின் அலுவலகத்தைவிட்டு வெளியேறினேன்.


இந் நிகழ்வின் பாதிப்பு என்னை விட்டு இலகுவில் அகலவில்லை. அதன் பின் அந்த தூஷன வார்த்தை என் நுனி நாக்கு வரை வந்திருக்கிறது இருப்பினும் அதை வெளியேறவிடாது விழுங்கிக்கொள்வேன்.

சினம் கண்களை மறைத்து, நான் தன்னிலை இழந்த நேரங்களில் இப்போதும் துஷணம் பேசுவதுண்டு. ஆனால் நிதானத்தை மீளப்பெற்றவுடன் வெட்கித் தலைகுனிந்திருப்பேன்.

ஏறத்தாள 20 ஆண்டுகளின் பின்னான ஒர் நாள் எனது அதிபரை சந்திக்கிறேன்.
இன்னும் என் பெயரை மறக்காது ”சஞ்சயன் வா வா ” என்றார்ஆங்கிலத்தில்.
பலதையும் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது மேலே எழுதிய கதையை அவருக்கு நினைவுபடுத்தினேன். கண்களைச் சுருக்கியபடியே சிரித்தார்.  சில கணங்கள்  மௌனமாய் கழிந்தன.

என்னை நிமிர்ந்துபார்த்தபடியே நான் ஆசிரியனாய் வெற்றிபெற்றிருக்கிறேன்
என்பதை அறிவிக்கிறாய் என்றார். அவரின் கண்கள் கலங்கியிருந்தன.  சுற்றாடலின் மௌனம் எங்களை  தாலாட்டிக்கொண்டிருக்க
வார்த்தைகளால் உயிர்த்திருந்தோம் நாமிருவரும்.

இன்றைய நாளும் நல்லதே

எங்கள் பேராசான் பிரின்ஸ் காசிநாதருக்கு இது சமர்ப்பணம்.

அப்பாவின் வாரிசும், அப்பாவும்

செல்வமாணிக்கத்தார் ஒரு கறாரான போலீஸ் அதிகாரி. வீட்டில் இருந்த வாரிசுடன் அவருக்கும், அவருடன் அவரின் வாரிசுக்கும் ”அலைவரிசை” அதிகமாக ஒத்துவந்ததில்லை. நான் வளர்ந்த போது அவர் இல்லை. ஒரு வேளை தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்று நண்பனாய் மாறி இருப்பாரோ என்னவோ?


நாம் இருவரும் எப்போதும் எலியும் பூனையுமாயே இருந்தோம். பூனை இல்லாத நேரங்களில் மட்டும் எலிக்கு கொண்டாட்டமாய் இருந்தது. சிறு வயதில்  அவர் வீட்டுக்கு வந்தவுடன் கேட்கும் முதற் கேள்வி வாய்ப்பாடு பாடமாக்கியாச்சா என்பது தான்.  5ம் , 10ம்வாய்பாட்டைத் தவிர ஏனையவை அனைத்தும் அப்பாவையும் என்னையும் பரம எதிரிகளாக்கிய காலம் அது.

நித்திரை என்றால் கேள்வி கேட்கமாட்டார் என்பதால்
ஒரு நாள் அவர் வருவது தெரிந்து ஓடிப்போய் கட்டிலில் படுத்துக்கொண்டேன். கண்களையும் இறுக்கமாக மூடிக்கொண்டு துங்குவதாக பாவனை செய்தேன். அருகில் வந்தவர்... தனக்கு தானே பேசிக்கொள்வது போல ”நித்திரையான ஆட்களின் பெருவிரல் ஆடும்” என்றார். நானும் எனது பெருவிரலை ஆட்டினேன். அதன் பின் அவர் பிரம்பால் என்னையாட்டுவித்தார்.

அக்கரைப்பற்றில் இருந்த காலத்தில் அப்பாவுடன் மாலையில் மீன் பிடிக்கச் செல்வேன். என்னுடன் தலைமயிர் மிகவும் ஐதான ஒரு உமை நண்பனும் (பெயர் ஞாபகத்தில் இல்லை) வருவதுண்டு. கடலுடனான என் உறவு ஏற்பட அப்பா தான் காரணம். ராவணன் மீசை, அடம்பன் கொடி, மணல் வீடு, நண்டு பிடிக்க என்று எல்லாவற்றையும் அப்பாதான் அறிமுகப்படுத்தினார். ஏங்கள் ஒப்பந்தத்தின்படி கடற்கரையில் அப்பா மீன் பிடிக்க, நான் பக்கத்தில் இருக்கலாம், அது தவிர அவரின் கண்ணின் எல்லைக்குள் இருத்தல் வேண்டும் அதாவது திறந்த வெளிச் சிறைச்சாலை போல. ஓரு நாள் நானும் அந்த நண்பனும் தூரம் போய்விட, அப்பாவோ எங்களை கடல் இழுத்துக் கொண்டது என நினைத்து பல மணிநேரம் ஆட்களை வைத்து தேடி வீட்டிற்கு வந்த போது நானும் அந்த நண்பனும் ஆமை பிடித்து அதன் மேல் மெழுகுவர்த்தி கொழுத்திவிளையாடிக் கொண்டிருந்தோம்.

அவரின் மனவேதனையும், துக்கமும், ஆற்றாமையும் என்னைக் கண்டவுடன் கோபமாக மாற….டேய் பெரியதம்பி இங்க வாடா என்றார் லவுட்ஸ்பீகர் சவுண்டில். அவரின் கத்தல் கேட்டு சமாதானம் பேச அம்மாவும், எம்மியும் வெளியே ஓடி வரவும் நான் இனி அங்கு இருந்தால் உயிருக்கு உத்தரவாதமில்லை என எண்ணி ஓடத்துவங்கவும் சரியாய் இருந்தது. அன்று ஓடிய ஓட்டத்தை நினைத்தால் இன்றும் களைக்கிறது) அப்பா என்னை பிடித்தது வேறு கதை.

அப்பா அக்கரைப்பற்றில் இருந்த காலத்தில் கிட்டத்தட்ட தினமும் மீன் பிடிக்கப் போவார்.  ஆனால் ஒரே ஒரு நாள் மட்டும் ஒரு மீன் கிடைத்தது. அதுவும் அவர் கடைசியாய் மீன்பிடித்த நாள். அந்த மீனை உடனே வெட்டி இரையாய் போட்டுப்பார்த்தார். கடல் பதிலே சொல்லவில்லை. நான் இயற்கைக்கும் ரோஷம் வரும் என்றறிந்தது அன்று தான்.

அப்பா பல project கள் செய்தார். பிபிலையில் மாணிக்கக்கல் தோண்டினார். கரும்புத்தோட்டம் வைத்தார், கோழி வளர்த்தார், ஆடு வளர்த்தார்,  வயல் செய்தார். என் கண்முன்னேயே வயலுக்குள் மேய்ந்த இரண்டு மாடுகளை சுட்டுத்தள்ளினார். ஆனால் எதிலும் அவர் பணம் சம்பாதிக்கவில்லை. அவரது பெயரில் மாணிக்கம் என்று இருந்தால் மட்டும் காணுமா மாணிக்கக்கல் தோண்டுவதற்கு? என்று அவரைக் கேட்டிருப்பேன் இன்று அவர் இருந்திருந்தால்.

இவற்றை விட வேட்டைக்குப் போனார், மயில் வளர்த்தார்.  கதிர்காமத்திற்கு யாத்திரை சென்றார். ஒரு முறை சோமபானம் அருந்தி தனது தொழில் இட மாற்றல் உத்தரவை இரத்துச் செய்த உள்ளூர் அரசியல்வாதியை பொது இடத்தில்வைத்துத் திட்டினார்.  அதனால் அப்பாவை வேலையில் இருந்து சில காலங்கள் நிறுத்தி வைத்தார் அந்த அரசியல்வாதி. பின்பு காட்டுப்பகுதிக்கு மாற்றல் உத்தரவும் வாங்கிக் கொடுத்தார். அதன் பின் அப்பா எந்த அரசியல்வாதியையும் திட்டவில்லை.

ஒரு நாள் போலீஸ்நாய் கொண்டுவரப்பட்டுள்ளதாகவும் அதை பார்க்கவும்  அழைத்துப்போனார். அந்த நாய் குரைத்த ஒலி உடம்பையே உலுக்கியது, நெஞ்சு அதிர்ந்தது. பின்பு பல தடவை எனக்கும் அப்படி ஒரு நாய் வேண்டும் என்று கேட்டும் நாய் கிடைக்கவில்லை. ஒருவேளை  தனது வீட்டில் இரண்டு நாய் எதற்கு என்று நினைத்தாரோ என்னவோ? 1980 களின் ஆரம்பத்தில் தம்பி ஒரு நாய் வளர்த்தான்.  ஏறக்குறைய அதுவும் போலீஸ்நாய் தான். ஆனால் என்ன, வெடிச்சத்தம் கேட்டால் வீட்டுக்குள் வந்து கடடிலின் கீழ் படுத்துவிடும். சூழல் அமைதியானதும் வெளியே வரும். அமைதி விரும்பிய போலீஸ்நாய் என்று நினைக்கிறேன். பின்பொருநாள் பாம்பு கடித்து இறந்து போனது அமைதி விரும்பிய போலீஸ்நாய்.

பிபிலையில் வாழ்ந்திருந்த காலத்தில் 1977இல் அவரின் சைக்கில் டைனமோவை நான் எனது மேதாவித்தனமான விஞ்ஞான ஆராய்ச்சிக்காக உடைத்த போதும் அப்பா என்னைத் துரத்திப் பார்த்தார். ஆனால் அன்று நான் தான் வென்றேன். ஆனால் இரவு படுக்கைக்கு வீடு திரும்பிய போது வாசலில் அவர் வில்லன் போல் நின்றிருந்ததால் சமாதான ஒப்பந்தம் அம்மாவின் முன் கைச்சாத்திடப்பட்டது. பின்பு பல வருடங்கள் அந்த சைக்கிலுக்கு டைனமோ இருக்கவே இல்லை, இப்பவும் என் சைக்கிலுக்கு டைனமோ இல்லை. அப்பா ஏதும் சாபம் போட்டாரோ என்னவோ.

1978  இல் சூராவளி அடித்த போது தம்பியை தேடி பிபிலையில் இருந்து மட்டக்களப்புக்கு நடந்து போய் வந்தார்.

ஒரு முறை முள்ளுக்காவடி எடுத்தார் பயமாய் இருந்தது. அம்மா திருநீறு பூசிவிட்டார். மறு முறை கதிர்காமத்தில் பறவைக்காவடி எடுத்தார், பார்த்ததும் மயங்கி விழுந்தேன். தண்ணீர் தெளித்து, எழுப்பி அப்பாவிடமே திருநீறு வாங்கி வந்து பூசிவிட்டார்கள். அப்பா தொங்கியபடியே பார்த்துக்கொண்டிருந்தார்.

அப்பா பயங்கரமான முருகபக்தர். வீட்டில் கந்தசஸ்டிக்கவசம் பாடமாக்கு என்பார், தம்பி புத்தகம் பார்க்காமல் மனனம் செய்து பாடினான். எனனால் முதல் 10 வரிகளை கடந்து கொள்ள முடியவில்லை. தன் வாரிசுகளில் 50% ஆவது உருப்படும்போல தெரிகிறது என்று திருப்திப்பட்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

ஒரு முறை தவனைப்பரீட்சையில் கணிதத்திற்கு 18 மார்க்ஸ் எடுத்து போது வீட்டில் அப்பா ருத்திரத்தாண்டவம் ஆடுவார் என்பதால் 18 ஐ 78 என்று ரிபோட்இல் மாற்றினேன். அப்பாவுக்கு சந்தேகம் வந்து எல்லா பாடங்களினதும் கூட்டுத்தொகையைப் பார்த்தார் அது 60 ஆல் பிழைத்தது. பிறகு என்ன நடந்தது என்பது ஒரு சோகமான வரலாற்றுச் சம்பவம்.

பந்தடிக்க, கிறிக்கட் பந்து போட, கீப்பருக்கு நிற்க என்றெல்லாம் பழக்கியதும், ”டேய்! விளையாடு ஆனா படிக்கோணும்” என்று சொல்லியதும் அவர் தான். அவரின் சட்டப்படி மாலை 4 மணிக்கும் 6 மணிக்கும் இடையில் வீட்டில் நிற்க அனுமதியில்லை. அது விளையாட்டு நேரம். ஆனால் 6 மணிக்கு கையில் புத்தகம் இருக்கவேண்டும். இல்லேயேல் அவர் என்னில் விளையாடுவார்.

பதின்மவயில் ஒரு நாள் தியட்டருக்குள் குந்தியிருந்து போது அப்பா இரண்டு வரிசைகளுக்கு பின்னால் அமர்ந்திருக்கிறார் என்று நண்பன் சொன்னதால் கதிரையில் படுத்திருந்தே படம் பார்க்க நேர்ந்தது.  மனிதர் என்னை அன்று கண்டிருந்தால் அவ்விடத்திலேயே என் தோலை உரித்திருப்பார்.

அவர் பொலன்னருவையில் வேலைசெய்த நாட்களில் சைக்கிலுக்கு புதிய ரிம், டயர், செயின், மட்காட்,அது இது என எல்லாவற்றையும் மாற்றித்தந்தார். அன்று தான் முதன் முதலில் அவரை டபிள் ஏற்றிப் போனேன். 100 கிலோ மனிதர் சைக்கிலில் இருந்தபோதிலும் சைக்கில் பஞ்சு போல் உறுண்டோடியது.

கனகலிங்கம் சுருட்டு மட்டும் தான் குடிப்பார். சந்தோச பானம் அருந்தினால் மட்டுமே பிரிஸ்டல் சிகரட் வாய்க்கு வரும். காலையில் கனகலிங்கம் சுருட்டு இல்லாவிடில் கக்கூஸ் போகவராது. அங்குமிங்குமாய் அலைவார்.

அந்தக் காலத்தில், தான் யாழ்ப்பாணத்தில் மரதன் ஒட்ட சம்பியன் என்றார், நம்ப முடியவில்லை என்னால். லொள்லுக் கேள்வி கேட்டால் ஆபத்து என்பதால் அடக்கியே வாசித்தேன். பின்பொருநாள் மாமியிடம் கேட்டேன் அது உண்மையா என்று. ”ஓம், ஓம் அவன் அப்ப நல்லா ஓடுவான்” என்றார். பாட்டியும் அதையே சொன்னார் எனவே அவர் யாழ்ப்பாணத்தில் மரதன் ஒட்ட சம்பியன் தான். நானும் ஓரளவு நீண்ட தூரம் ஓடியதற்காண காரணம் அது தான் போலிருக்கிறது.

நாம் யாழ்ப்பாணம் செல்லும் நேரங்களில்அவரின் பால்ய நண்பர் ஒருவர் மானிப்பாயில் இருந்து  ஒரு பெரிய பிளாஸ்டிக் கொள்கலனில் பனைமரத்துப் பால் எடுத்துவருவார். அவரின் வயிறு பானைபோலிருக்கும். பனைமரத்துப் பால் குடித்தால் வெறிக்கும் என நானறிந்தது அங்கு தான்.

தமிழில் அரைகுறையாய் எழுவார், ஆங்கில பாடதிட்டத்தில் படித்த பாதிப்பு . எழுத்து வேலை எல்லாம் ஆங்கிலத்தில் தான் இருக்கும். கோழி கிளறியது போல எழுத்து. ஒன்றும் புரியாது. அப்பாவின் கையெழுத்தில் ஒரு கடிதம் கூட இன்று என்னிடமில்லை என்பது நெஞ்சை நெருடுகிறது. அவரின் எழுத்துரு ஞாபகத்தில் இருக்கிறது. அப்பாவின் படங்களும் என்னிடமில்லை. அப்பாவின் அழகியராட்சசியிடம் நிட்சயம் இருக்கும்.

1981 இல் யாழ்ப்பாணம் போயிருந்தேன். வீட்டு முற்றத்தில் கிட்டிப்பொல் விளையாடியதனால் அப்பாவின் மூத்த அக்காவுக்கும் எனக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள்  முறிந்தது. அன்றிரவே ஏறாவூருக்கு புறப்பட்டு அடுத்தநாள் வீடு வந்து சேர்ந்த போது அப்பாவை மாரடைப்பு என மட்டக்களப்பு ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தார்கள். நான் அங்கு சென்றபோது அப்பா  மயக்கத்தில்  நெஞ்சை உயர்த்தி உயர்த்தி காற்றைத் தேடிக் கொண்டிருந்தார். அருகில் இருந்த அம்மா என்னை அணைத்துக் கொண்டார். சற்று நேரத்தில் என் கண்முன்னேயே அப்பா மூச்சடங்கிப்போனது.

நான் 1980 மார்கழி மாதத்தில் க.போ.த சாதரண தரத்திற்கான பரீட்சை எழுதியிருந்தேன். பரீட்சைக்கு முன் அப்பா ”ஒழுங்கா பரீட்சை எழுது, இல்லாட்டி தெரியும் தானே” என்று ஒரு பன்ஞ்ச் டயாலாக் சொல்லியிருந்தார்.  நான் ஆங்கிலப் பரீட்சை எழுதிய பின்பு அப்பாவின் அந்த பன்ஞ்ச் டயலாக் அடிக்கடி கனவில் வந்தபடி இருந்தது. ஆங்கில பரீட்சைத்தாளில் நான் பார்த்த accident பற்றி கட்டுரை எழுதுமாறு கேட்கப்பட்டிருந்தது. அதை நான் 30 % ஆங்கிலத்திலும் 70 வீத தமிழிலும் எழுதியிருந்தேன். அது தவிர அனது ஆங்கிலப்புலமை மெச்சும்தன்மையானதாகவும் இருக்கவில்லை. எனவே எனக்கு மிகச் சாதாரண சித்தி அல்லது  சித்தியடைவில்லை என்றே பெறுபேறுகள் வரும் என்பதை அறிந்திருந்தேன். ஆங்கிலத்தில் கல்விகற்ற அப்பா, அவரின் மூத்தவாரிசு ஆங்கிலத்தில் சித்தியடைவில்லை என்றால் எப்படி இருந்திருக்கும் என்ற கற்பனை செய்து பாருங்கள்.  என் நிலமை பீரங்கி வாசலில் கூடு கட்டிய குருவி மாதிரி இருந்தது அந் நாட்களில்.

ஆனால் அப்பா பரீட்சை பெறுபேறுகள் வருமுன்பே முக்திப்பேறு அடைந்ததனால் இன்றும் நான் உயிருடன் இருக்கிறேன். அப்பா இருந்திருந்தால் என்னை கொன்று போட்டிருப்பார் என்பதில் சந்தேகமே இல்லை.

இறப்பதற்கு சிறிது காலத்திற்கு முன் அம்மாவிடம் இவனுக்கு என்னை மாதிரியே கோபம் வருகிறது என்றாராம். நான் அவரிடமிருந்து பழகிய நல்லபழக்கம் அதுவொன்று தான் போலிருக்கிறது. அவரின் சோமபானம் அருந்தும் பழக்கத்தையும், சுருட்டையும் ஏன் பழகாமல் விட்டேன் என்பதற்கு என்னிடம் பதிலிருக்கிறது. பதிலில் அப்பா இருக்கிறார்.

ஏறக்குறைய 30 வருடங்களுக்கு முன்னான நினைவுகளிவை….இதை எழுதும் எழுத்தில் வர்ணிக்கமுடியாததோர் சுகமான உணர்வு என்னை ஆட்கொள்கிறது.

அருகில் உட்கார்த்தி, கதைத்துப் பேசி, இம்சை பண்ண ஆசையிருந்தால் மட்டும் காணுமா? அதற்கு அப்பாவுமல்லவா இருக்க வேண்டும். உங்களருகில் அப்பா இருந்தால் நீங்கள் மகா அதிஸ்டசாலி.

உங்களின் அப்பாவின் நினைவுகளை ஆறுதலாக மீட்டுப்பாருங்கள் உங்களுக்கும் புரியும். அப்பா  இருந்தால் அவரை அருகில் அமர்த்தி ஞாபகங்களை அவருடன் சேர்ந்து பகிர்ந்து பாருங்கள் வாழ்வின் இரகசியம் புரியும்.

இல்லாத அப்பாவுக்கு இது சமர்ப்பணம்.

இன்றைய நாளும் நல்லதே

உயிருள்ள கையெழுத்துக்களின் வாசனை

ஒவ்வொரு மனிதனின் கையெழுத்தும் (கையொப்பம் அல்ல) அழகானதாயிருந்தாலும், அசிங்கமாயிருந்தாலும் அது அவனது தனிப்பட்ட அடையாளம். சிறுவயது முதல் இறுதிக்காலம்வரை கையெழுழுத்தில் அதிக மாற்றங்கள் ஏற்படுவதில்லை. ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கையெழுத்தின் மீது தீராத காதல் இருக்கிறது. அனைவரும் தத்தமது கையெழுத்தை இரகசியமாக காதலித்துக்கொண்டிருக்கிறோம். எழுதப்படும் விடயத்தைப் பொறுத்து அது அழகாகிறது அல்லது அசிங்கமாகிறது. காதலை அறிவித்துப்போகும் எழுத்துக்கள் எப்போதும் அதை எழுதியவருக்கு மிக மிக அழகாகவே இருக்கின்றன.

எனது கையெழுத்து கோழி கிளறிய குப்பைபோல் இருக்கும். எனது அப்பாவின் எழுத்தும் அப்படியே. ஆனால் அம்மாவின் எழுத்து அச்சுப்பதித்தது போல் மிக மிக நேர்த்தியாகவும், அழகாகவும் இருக்கும். சென்ற கிழமை அம்மாவிடம் இருந்து ஒரு வாழ்த்து அட்டை வந்திருந்தது. அதை பார்த்தவுடனேயே அது அம்மாவின் எழுத்து என்று புரிந்து கொள்ளுமளவுக்கு அந்த எழுத்தின் வசீகரம் என்னுள் படிந்து போயிருக்கிறது. எனது கண்களை மூடி அம்மாவின் எழுத்தை நினைப்பேனாயின் அந்து எழுத்துக்கள் எனது மனத்திரையில் தெரியும். அம்மாவுக்கு அடுத்த வருடம் 80 வயதாகிறது. இருப்பினும் அவரின் எழுத்து இன்னும் இளமையாகவே இருக்கிறது. மிக மிக இளமையாக இருக்கிறது.

அம்மா அசிங்கமாய் எழுதினாலும் அழகாக இருக்கும். அத்தனை அழகாக எழுதுவார். அம்மாவின் சகோதரிகள் அனைவரும் மிக மிக அழகாக எழுதுவார்கள். ஆனால் அவர்களால் அம்மாவைப்போல் எழுதமுடியாது.

நான் 2ம் 3ம்  வகுப்புகளை கொழும்பில் இருந்து எனது மாமா வீட்டில் இருந்தே கற்றேன். விடுமுறைக்கு வரும்போதெல்லாம் அம்மா ”பார்த்து எழுதுதல்” என்று ஒரு பயிற்சி வைத்திருப்பார். தினமும் குறைந்தது 2 பக்ககங்கள் எழுதவேண்டும். உறுப்பமைய எழுதுவதற்கென்று அந் நாட்களில் ஒரு கொப்பி இருந்தது. மேலும் கீழும் சிவப்புநிற கோடுகள். அவற்றிற்கு நடுவே நீல நிறத்தில் இரண்டு கோடுகள். ”க” எழுதுவதாயின் இரண்டு நீலக்கோடுகளுக்கும் இடையிலும், ”தி” எழுதுவதாயின் விசிறி மேல் சிவப்புக் கோட்டினை தொட்டுக்கொண்டும், ”கு” எழுதுவதாயின் அது கீழ் சிவப்புக்கோட்டை தொட்டபடியும் இருக்க வேண்டும்.

எனது எழுத்துக்கள் இந்த விதிகளை எப்போதும் மீறியபடியே இருந்தன. அம்மா கையைப்பிடித்து எழுதப் பயிற்சி தருவார். அவருடன் எழுதும் போது எனது எழுத்து மிக மிக அழகாக இருக்கும். ஆனால் தனியே எழுதுவேனாயின் 90 பாகையில் இருக்கவேண்டிய கோடுகள் 30 பாகையில் சரிந்து விழுந்துவிடுவன போலிருக்கும். காலப்போக்கில் அம்மாவும் எனது கையெழுத்தை மாற்றும் எண்ணத்தை மறந்துபோனார். அவ்வப்போது அப்பாவும் முயற்சித்ததாகவே நினைவிருக்கிறது. அவரின் எழுத்து எனது எழுத்தை விட மிக மிக மோசமானது என்பதாலோ என்னவோ அவர் ஏனைய நேரங்களை விட மிகவும் அமைதியாவே நடந்துகொண்டார்.

பாடசாலை நாட்களில் எனக்குத் தமிழ் அறிவித்த சர்மா சேரும், விஜயரட்ணம் சேரும் எனது எழுத்தை காதைமுறுக்கியும், வயிற்றில் கிள்ளியும், பிரம்பால் அடித்தும், ”டேய்! உது என்ன தமிழ் எழுத்தோ?” என்று கேட்டும் பாராட்டியிருக்கிறார்கள். அவர்கள் எனது கட்டுரைகளை எப்படி வாசித்து 30 அல்லது 35 புள்ளிகள் இட்டார்கள் என்று இன்று வரை எனக்குப் புரியவில்லை. வாசிக்கமுடியாததனால் குத்துமதிப்பாக 30, 35 போட்டார்களோ என்ற சந்தேகம் எனக்குண்டு.

அழகான கையெழுத்தையுடைய நண்பன் அருள் என்பவன், அவனின் அழகான கையெழுத்திற்கு விலையாக உயிரையும் கொடுக்க நேர்ந்தது. அப்போது நாம் 11ம் வகுப்பில் படித்துக்கொண்டிருந்தோம். விடுதலை இயக்கங்கள் ஊருக்குள் உலாவத்தொடங்கிய காலம் அது. ஒரு நாள் குறிப்பிட்ட ஒரு இயக்கத்தினருக்கு நோட்டீஸ் எழுதுவதற்கு அருள் உதவினான். நாளடைவில் அவர்களுக்கு நோட்டீஸ் எழுதுவதே அவனது தொழிலாகியது. அந் நாட்களில் ஏறாவூர், செங்கலடி, வந்தாறுமூலை ஆகிய பகுதிகளில் ஒட்டப்பட்ட நோட்டீஸ்களில் பலதும் அவனது கையெழுத்தில் ஆனவையே. காலப்போக்கில் அந்த இயக்கத்துடன் இணைந்தும் கொண்டான். சில காலங்களின் பின் காற்றில் கரைந்தும் போனான். இன்றும் அவன் எழுதிய சிவப்பு நிற ”பகிஸ்கரிப்பு,  ஹர்த்தால்” எழுத்துக்கள் மங்கலாக மனதில் ஒரு மூலையில் பாதுகாப்பாய் இருக்கிறது.

அவ்வப்போது வரும் பால்யசினேகத்தின் கடிதங்களும் அவனது எழுத்தும் மனதுக்கு என்றென்றும் ஆறுதலைத்தரும் விடயங்கள். அவனது எழுத்துக்களை கண்டதும் மனதுக்குள் ஒருவித பாதுகாப்பு உணர்வு அல்லது அவனருகில் இருந்து உரையாடுவது போலிருக்கும். ஒவ்வொருவரினதும் கையெழுத்துக்கும் உயிரும், அதற்கென்று ஒரு வாசனையும் உண்டு என்பதில் எனக்கு அசைக்கமுடியாத நம்பிக்கையுண்டு.

நான் பதுளை சரஸ்வதி கனிஸ்ட வித்தியாலயத்தில் 4ம் 5ம் வகுப்புக்களை கற்ற போது அங்கு சந்திரமோகன் என்று ஒரு மாணவன் இருந்தான். நாம் நெருங்கிய நண்பர்களாக இருந்ததில்லை. 1976ம் ஆண்டு மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சேர்க்கப்பட்ட போது அந்த சந்திரமோகனும் என்னுடன் அதே பாடசாலை விடுதியில் சேர்க்கப்பட்டிருந்தான். நாம் இருவரும் அடுத்து வந்த மூன்று வருடங்களிலும் அதே விடுதியில் தங்கியிருந்தோம். அப்போதும் கூட நாம் நெருங்கிய நண்பர்களாய் இருந்ததில்லை.

அந் நாட்களில் எனது தாயார் பிபிலை வைத்தியசாலையில் வைத்தியராக தொழில்புரிந்துவந்தார். தந்தையார் பிபிலையில் போலீஸ்அதிகாரியாக இருந்தார். இருவருக்கும் பலத்த செல்வாக்கு இருந்தது. எனவே வாரத்தில் 3 நாட்கள் பதுளையில் இருந்து மட்டக்களப்புக்கு தபால் ஏற்றிவரும் பேரூந்து வண்டியில் எனது தாயார், உணவுப்பொருட்கள், பழங்கள், சீனி, பால்மா போன்ற பொருட்களை ஒரு பெட்டியில்வைத்து அனுப்புவார். அந்தப் பெட்டியில் செ. சஞ்சயன், மட்/ மெதிடிஸ்த மத்திய கல்லூரி, மட்டக்களப்பு  என்று முத்து முத்தான எழுத்துக்களை நீலநிற பேனையால் அழகாக எழுதியிருப்பார். அந்தப் பெட்டியினுள் நிட்சயமாக ஒரு கடிமும் இருக்கும். அந்த கடிதத்திற்கு அம்மாவின் வாசனையிருந்தது. அம்மாவின் எழுத்தைக்கண்டதும் மனது காற்றில் சருகாய்ப் போகும்.

அந் நாட்களில் மட்டக்களப்பின் தபால் நிலையம் எமது பாடசாலை விடுதியில் இருந்து 50 மீற்றர் தூரத்திலேயே இருந்தது. நானும் தம்பியும் இந்த உணவுப்பெட்டிக்காக காத்திருப்பது எமது வாரந்த கடமைகளில் ஒன்று. பேரூந்து வந்ததும் மாணவர்தலைவர்களிடம் அனுமதிபெற்று உணவுப்பெட்டியை எடுத்துவருவேன். அவ்வப்போது என்னுடன் நான் மேற் குறிப்பிட்ட சந்திரமோகனும் வருவதுண்டு.

நான் 1976 - 1979 ஆண்டுகளிலேயே விடுதியில் வாழ்ந்திருந்தேன். அதன் பின்னான காலங்களில் சந்திரமோகனுடன் எனக்குமான தொடர்பு முற்றிலுமாக அற்றுப்போனது. அவனை மறந்தும்போனேன்.

ஏறத்தாள 27 வருடங்களின் பின்னான ஒரு நாளில் (2006ம் ஆண்டளவில்), ஓர் நாள் எனது  தாயாருடன் உரையாடிய போது ” சந்திரமோகனை உனக்கு நினைவிருக்கிறதா” என்று கேட்டார். எனது நினைவு வங்கியில் இருந்து சிரமத்தின் பின் அவனை அடையளம் கண்டுகொண்டேன். ”ஆம்” பதுளையிலும், மட்டக்களப்பிலும் என்னோடு படித்தவன், ஏன் கேட்கிறீர்கள்?” என்றேன்.

அப்போது எனது தாயார் கூறிய பதில் என்னை இன்றுவரை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியபடியே இருக்கிறது.

மட்டக்களப்பில் இருந்து எனது தாயார் ‌கொழும்பின் புறநகர்ப் பகுதியான மொறட்டுவைக்கு இடம் பெயர்ந்து ஏறத்தாள 20 வருடங்களாகின்றன. அவர் ராஜயோகம் என்றும் ஒரு ஆச்சிரமத்தில் அங்கத்தவராக இருக்கிறார். இவ்வாச்சிரமம் உலகம் முழுவதும் பிரபல்யமாக இருக்கிறது. இலங்கையிலும் மிகப் பிரபல்யமாக இருக்கிறது.

எனது தாயாரின் ஆச்சிரமத்தில் எனது தாயாரின் எழுத்து அழகானதால், அவரையே தினமும் அன்றைய நிகழ்ச்சி நிரல், நற்சிந்தனை ஆகியவற்றை ஒரு கரும்பலகையில் எழுதுமாறு கேட்கப்பட்டதால் அவரும் மகிழ்ச்சியாக எழுதிவந்திருக்கிறார். இது தொடர்ந்தும் நடைபெற்று வந்திருக்கிறது. 

ஒரு நாள் கொழும்பில் உள்ள வேறொரு ராஜயோக ஆச்சிரமத்தினர் எனது தாயாரின் ஆச்சிரமத்திற்கு வந்திருக்கிறார்கள். அவர்களுடன் சந்திரமோகனும் வந்திருக்கிறான். எனது தாயாரின் எழுத்துக்களை கரும்பலகையில் கண்டவுடன் இது சஞ்சயனின் அம்மாவின் எழுத்து என்று உள்ளுணர்வு கூறியதால், இதை யார் எழுதியது? என்று விசாரித்து பார்த்ததில் அது எனது தாயாரின் எழுத்து என்று அறிந்து எனது தாயாருடன் தொடர்புகொண்டு அறிமுகப்படுத்திக்கொண்டிருக்கிறான்.

இதை எனது தாயார் கூறிய போது என்னால் நம்பமுடியவில்லை. ஏறத்தாள 30 வருடங்களுக்கு முன்னான காலத்தில் அவ்வப்போது கண்ட ஒரு கையெழுத்தை அடையாளமாகவைத்து எனது தாயாரை அடையாளம் கண்டது எனக்கு ஆச்சர்யமாக இருக்கிறது. இதை நினைக்கும் போதெல்லாம் மனமெல்லாம் ஒரு வித பரவசத்தை உணரும். 
அம்மாவின் எழுத்திற்கு இத்தனை சக்தியா என்று நினைப்பதுண்டு. அதேவேளை சந்திரமோகனின் நினைவுச்சக்தியையும் பாராட்டாமல் இருக்கமுடியவில்லை. ஆனால் சந்திரமோகனிடம் எனது மற்றும் வேறு சில வகுப்புத் தோழர்களின் எழுத்துக்களை கொடுத்து அவை யாருடைய எழுத்துக்கள் என்று கேட்கவேண்டும் என்று மனது உந்திக்கொண்டே இருக்கிறது. அவனால் அவற்றை அடையாளம் காணமுடியாது என்றே நிட்சயமாக நம்புகிறேன்.

அந்த எழுத்து எனது தாயாரின் எழுத்து என்று அவனுக்கு அறிவித்தது எது?

சில கேள்விகளுக்கு பதில் தேடக்கூடாது. இந்தக் கேள்வியும் அப்படியானதே.

இன்றைய நாளும் நல்லதே
எனது அப்பாவின் அழகிய ராட்சசிக்கு இது சமர்ப்பணம்.

எங்களை மறக்காதீங்க நாங்களும் குழந்தைகள்தான்

அண்மையில் நெருங்கிய நண்பர் ஒருவரின் மகளின் பிறந்த நாள் விழாவுக்குச் சென்றிருந்தேன். குழந்தையின்  ஒரு வயதினை அவர்களின் நெருங்கிய உறவினர்களுடனும், உற்ற நண்பர்களுடனும்  சிறியதொரு மண்டபத்தில் அடக்கமாகக் கொண்டாடிக்கொண்டிருந்தார்கள். 

சிறிய குழந்தைகளின் ஆடல் பாடல் என்று விழா களைகட்டியிருந்தது. புதிதாய் பூத்த பூக்களைப் போன்று குழந்தைகள் அங்கும் இங்கும் ஓடிக்கொண்டிருந்தார்கள். ஒரு பெண் குழந்தை 6 வயதிருக்கும் அவளுக்கு. நட்பாகிப் போனாம் நானும் அவளும். அவளாலும் ஏனைய குழந்தைகளாலும் அழகாகிப்போனது எனது நேற்றைய மாலைப் பொழுது.

விழா முடிந்து வீடு வந்துசேர்ந்தேன். விரைவாய் தூங்கியும் போனேன். காலை எழும்பி அண்மையில் சேகரித்து வைத்திருந்த Podcast களை கேட்டபடியே சிந்தித்துக் கொண்டிருந்தேன். 

சக மனிதனை மனிதனாய் மதித்தல் பற்றி ஒருவர் உரையாற்றிக்கொண்டிருந்தார். அவர் ஒரு மனிதன் மனிதனாக மதிக்கப்படுவதே அவனது அடிப்படையான மனிதவுரிமை என்றும், மற்றைய மனிதனின் துயரத்தை யார் ஒருவர் உணர்ந்து அவர்களுக்கு உதவுகிறார்களோ அவர்கள் இறைவனுக்குச் சமமானவர்கள் என்னும் தொனியில் இருந்தது.

நேற்றைய விழாவில் என் கவனத்தை இரு விடயங்கள் ஈர்த்தன. முதலாவது  மாற்றுத்திறணாளியான ஒரு இளைஞன் அவ் விழாவில் கலந்துகொண்டது. அவரை காண்பவர்களால் அவர் ஒரு மாற்றுத்திறணாளி என்பதை அவரின் நடையுடை பாவனைகளினூடாக அறியக்கூடியதாகவிருந்தது.

இரண்டாவது, பிறந்த நாள் கொண்டாடும் குழந்தையின் தாய்வழிப் பாட்டனார் தனது பேத்தியின் பிறந்த நாளினை, போரில் பெற்றோரினை இழந்த அல்லது சிறையில் வாழும் பெற்றோரினைக் கொண்ட எறத்தாள 350 குழந்தைகள் வாழும் குழந்தைகள்காப்பகம் ஒன்றில், அவர்களுக்கு ஒரு நேர உணவு வழங்கி  தனது பேத்தியின் பிறந்தநாள் மகிழ்ச்சியினை கொண்டாடிய ஒளிப்படம் ஒன்றைக் காண்பித்தார். அவர்களுக்கு அன்று மிகச் சிறப்பான உணவு அன்று வழங்கப்பட்டிருந்தது.

அவர் அந்த குழந்தைகள் காப்பகத்தைப் பற்றிப் பேசிய போது மிகவும் உணர்ச்சிவசப்பட்டவராகக் காணப்பட்டார். பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு உதவவேண்டியது எமது கடமை என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்தினார். வெளிநாட்டு பிறந்தநாள்விழாக்களின் போது நாம் எமது உறவுகளை நினைத்து அவர்களுக்கு ஒரு வேளை சிறந்த உணவினை வழங்க முன்வரவேண்டும் என்பது அவரின் கோரிக்கையாய் இருந்தது. குழந்தைகள் காப்பகங்களில் தினமும் மிகச் சிறந்த உணவு வழங்கப்படும் என்று எதிர்பார்க்க முடியாது. இருப்பினும் மாதத்தில் ஒரிரு முறையாவது அவர்களும் மகிழ்ச்சியாக உணவருந்த நாம் உதவவேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

விழாவில் கலந்து கொண்ட எத்தனை உள்ளங்களை அவரது செய்தி சென்றடைந்தது என்பது கேள்விக்குறியே. இருப்பினும் பெரியவரின் கோரிக்கையில் பலத்த நியாயம் இருப்பதாகவே எனக்குப்படுகிறது.

வெளிநாட்டு வாழ்க்கையின் விழாக்கள் பற்றி பல பக்கங்கங்கள் எழுதலாம். வாரத்திற்கு குறைந்தது 2 - 3 விழாக்கள் என்பது சர்வசாதாரணம். இவ் விழாக்களில் ஆடம்பரங்களுக்கும் பஞ்சமில்லை. ஆடை அணிகலன்களில் இருந்து, உணவு, சோமபானம், விழாமண்டபம், நிகழ்ச்சிகள் எல்லாவற்றிலும் ஆடம்பரம் மிதமிஞ்சியிருக்கும்.

600 பேருக்கு அழைப்புவிடுக்கப்பட்டு 400 மட்டுமே கலந்து கொண்டு குறைந்ததது 150 பேருக்கான உணவு குப்பையில் கொட்டப்பட்ட கதையும் உண்டு.

இப்படியான விழாக்களுக்கு மத்தியில் அந்தப் பெரியவரின் செய்கை ஒரு சிலரையாவது சிந்திக்கத் தூண்டியிருக்குமானால் மகிழ்ச்சியே. யார், மற்றைய மனிதனின் வேதனையறிந்து தாமாகவே முன்வந்து உதவுகிறார்களோ அவர்களின் மனிதம் மதிக்கப்படவேண்டியது. அதே போல் அவர்களின், முன்பின் அறியா மனிதனையும் சக மனிதனாக மதித்து நடாத்தும் தன்மையும் பாரட்டப்படவேண்டியது, போற்றப்படவேண்டியது. மற்றயவர்களின் பசியை நாம் உணர்வது என்பது இலகுவல்ல. அதற்கு மற்றவர்களை உண்மையான மனதுடன் புரிந்து கொண்டால் மட்டுமே இது சாத்தியமாகிறது.

எல்லோராலும் இப்படி மற்றவர்களை புரிந்து கொள்ளமுடியாது என்பதை நாம் ஏற்றுக்கொண்டுதான் ஆகவேண்டியிருக்கிறது.

அந்த மாற்றுத்திறனாளி இளைஞனை நான் ஆரம்பத்தில் இருந்தே அவதானித்துக்கொண்டிருந்தேன். உள்ளே வருவதும் வெளியே செல்வதும், அங்கும் இங்கும் நடப்பதுமாய் இருந்தான். வெளியே நின்றிருந்த வளர்ந்த இளைஞர்கள் பலர் அவனை கவனித்ததாகவோ, அவனுடன் பேசியதாகவோ தெரியில்லை. ஆனால் அவர்கள் அந்த இளைஞன் பற்றி ஏதோ குசுகுசுத்துக்கொண்டிருந்தார்கள்.

இவர்களின் குசுகுசுப்பு பற்றி அவன் கவலைப்பட்டதாயில்லை. அவனோ இறுகிய முகத்துடன் அவனது உலகில் உலாவிக்கொண்டிருந்தான். அவன் தனியே உலாவித்திரிந்தது எனது  மனதை சற்று பிசைந்தது. வளர்ந்தவர்கள் எவரும் கூட அவனிடம் பேசியதாகத் தெரியவில்லை. நானும் ஏனோ அவனுடன் பேச்சுக்கொடுக்கவில்லை.

சற்று நேரத்தின் பின் அந்த இளைஞனைக் காணவில்லை. ஆச்சர்யமாக இருந்தது. அப்போது தான் அவதானித்தேன் அவனைச் சுற்றி சில இளைஞர்கள் நின்றிருந்தார்கள். அந்த இளைஞனின் குழந்தைத்தனமான உலகில், அவர்களும் அவனுடன் சேர்ந்து பயணித்துக்கொண்டிருந்தததை அவர்களை கடந்து சென்ற போது அறிய முடிந்தது. சிறுமிகள் இருவர் அவனுடன் விளையாடிக்கொண்டிருந்தார்கள். அந்த இளைஞனின் முகத்தில் இருந்த இறுக்கம் அகன்று மகிழ்ச்சி குடிவந்திருந்தது. அவனது நடவடிக்கைகளில் குதூகலமும் விளையாட்டும் தெரிந்தன.

இளைஞர்கள் கூட்டங்கள் இப்படியான மாற்றுத்திறணாளி மனிதர்களை இலகுவில் தங்களுடன் இணைத்துக்கொள்ளச் சங்கடப்படுவார்கள். ஆனால் இந்த இளைஞர்களோ எவ்வித தயக்கமும் இன்றி அந்த இளைஞனின் உலகில் அவனுடன் குதூகலித்துக்கொண்டிருந்தது மனதுக்கு மிகவும் ஆறுதலாயிருந்தது மட்டுமல்ல அந்த இளைஞர்கள் மீது பெருமதிப்பும் ஏற்பட்டது.

அந்த விழா எதை எதையோ எனக்கு போதித்துப் போனது என்றால் அது மிகையில்லை.

இன்றைய நாளும் நல்லதே.

எங்கும் எவரும் தனிமையில் இல்லை

இன்று காலை நிலக்கீழ் தொடரூந்தில் எதையோ சிந்தித்தபடி பயணித்துக்கொண்டிருந்தேன். எனக்கருகில் ஒரு குழந்தையின் மழழைச் சத்தம் கேட்டது.நிமிர்ந்து பார்த்தேன். ஒரு சீனக் கண்களுடன் ஒரு ஆண் குழந்தை தனது பாட்டியுடன் ம‌ழழை மொழியில் ஏதேதோ பேசியபடி வியையாடிக்கொண்டிருந்தது. ஏறத்தாள ஒரு வயதிருக்கலாம் அவனுக்கு. சொற்கள்  அற்ற ஒரு வித மழழைமொழியில் மழழை ஒலிகளால் பாட்டியுடன் உரையாடிக் கொண்டிருந்தான். பாட்டியும் தன்னை மறந்து குழந்தையாய் மாறி குழந்தையுடன் பேசியபடியே விளையாடிக்கொண்டிருந்தார். குழந்தை பாட்டியின் இரு காதுகளையும் ஆட்டினான். இழுத்தான். பாட்டியின் முகத்தை முத்தத்தால் ஈரமாக்கினான். பாட்டி ஏகாந்தமான உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தார். தொடரூந்து தனது கடமையில் கண்ணாயிருந்தது. நான் இவர்களை ரசித்துக்கொண்டிருந்தேன்.

குழும உணர்வு, இன உணர்வு, மொழி உணர்வு என்பன யாவும் ஒரு வித சொந்தம் - உறவு என்ற பதத்தையே குறிக்கின்றன. நான் இக் குழுவை, குழுமத்தை, மொழியை, இனத்தை, நாட்டைச்சேர்ந்தவன். உறவு முறைகளும் ஒரு வித குழும உணர்வு தானே. எனது குடும்பம், எனது சந்ததி, உறவுகள் என்று எம்மை நாம் எங்கெல்லாம் மற்றவர்களுடன் இனைத்துக்கொள்கிறோமோ அங்கெல்லாம் இந்த சொந்தம் (belonging) உருவாகிறது.

எனக்கும் இப்படியான சில சொந்தங்கள் இருக்கின்றன. அண்மையில் யாத்திரை சென்றிருந்த போது சில இடங்களில் நான் தனிமையை உணர்ந்த நேரங்களில் என்னருகில் மேற்குறிப்பிட்ட எந்த சொந்தமும் இருக்கவில்லை. பெரும் வெளியில் தனியே அலைவது போலிருந்தது மனநிலை. ஒரு வித அநாதரவான உணர்வை உணர்ந்தேன். ஒரு வித பயம், வெறுமை, பிடிப்பின்மை போன்ற தனிமையுணர்வுகளை உணரக்கூடியதாகவிருந்தது.

அந் நேரங்களில் ஒரு நோர்வேஜியர் ஒருவரைச் சந்தித்தால் மனம் குழும உணர்வை உணர்ந்தது. தனிமையுணர்வுகள் அகன்று போயின. சாதாரணமாய் இயங்க முடிந்தது. நோர்வேஜியர் இல்லாதவிடத்து  சுவீடன்நாட்டவர்கள் அல்லது டென்மார்க் நாட்டவர்கள் எனினும் கூட  அவர்களுடன் நோ‌ர்வேஜிய மொழியில் உரையாட முடிவதால் அந்த குழும எண்ணம் உருவாகி மனதை ஆறுதல்படுத்தியது.

கால்பந்து விளையாட்டுக் குழுக்களின் ரசிகர்கள், ஒரே பாடசாலையில் கல்விகற்றவர்கள், ஓரே ஊரைச் சேர்ந்தவர்கள், இப்படி மனிதர்கள் குழும உணர்வினை உணர்வதன் மூலமாக தங்களை மற்றவர்களுடன் இணைத்து ஒரு வித குடும்ப உணர்வினைப் பெற்றுக்கொள்கிறார்கள். குடும்ப உறவுகள், ஏனைய மனித உறவுகள் கூட ஒருவித குழும உணர்வுதான்.

சிலர் இந்த குழும உணர்வுகளுக்கு அப்பாற்பட்டு வாழவும் செய்கிறர்கள். அவர்களின் வாழ்வு தனிமையிலும், வெறுமையிலும் கழிந்து போவதாகவே உணரமுடிகிறது. சிலர் வாழ்வின் அனுபவங்களினால் இப்படியான குழும உறவுகளை தவிர்த்து தனிமையில் வாழ்ந்தாலும் அவர்களும் பல இடங்களில் தம்மை மற்றவர்களுடன் இணைத்து  குழும உணர்வு தரும் பாதுகாப்புணர்வை உணர்ந்துகொண்டிருக்கிறார்கள்.

ஒஸ்லோவில், பிச்சைக்காரர்கள் கூடும் இடம், போதைவஸ்துப்பாவனையாளர்கள் கூடுமிடம், வெளிநாட்டவர்கள் கூடுமிடம்,  மதுபான நிலையங்கள்,  ஓரினச்சேர்க்கையாளர்கள் கூடுமிடம் என்று பல இடங்கள் இருக்கின்றன. சமுதாயத்தில் தமக்கென்று ஒரு இடமில்லாத பலர் தம்மை இப்படியான இடங்களில் அடையாளப்படுத்திக்கொள்வதன் மூலம்  குழும உணர்வு கொடுக்கும் பாதுகாப்புணர்வை பெறுகிறார்கள் என்றால் அது மிகையில்லை. அவர்கள் எவரும் தனிமையில் இல்லை என்பதையெ இந்த பாதுகாப்புணர்வு உணர்த்திப்போகிறது.

இந்த பாதுகாப்புணர்வை உணராதவர்களே தனிமையில் சிக்கித்தவிக்கிறார்கள். வாழ்க்கை அவர்களை புறட்டிப்போட்டு பந்தாடிக்கொண்டே இருக்கிறது.

குழும உணர்வுக்காக  பலர் பல வித செய்கைகளைச் செய்கிறார்கள், அவை மிகச் சிறந்த மனிதத்தன்மையான செயல்களில் இருந்து குழும உணர்வுக்காக இன்னொரு மனிதனின் உயிரை பறிப்பது வரை விரிந்து கிடக்கிறது.

அதேவேளை குழும உணர்வு இல்லாது போகும் போது மனிதர்களிடையே ஒற்றுமையும் இல்லாது போகிறது.  இதற்கு உதாரணமாக  புலம்பெயர்ந்து வாழும் இலங்கைத் தமிழ்ர்களை எடுத்துக்கொள்ளலாம். 2009ம் ஆண்டு  வைகாசி மாதத்துக்கு முன்பு ஒரே குழுமமமாக இருந்த பெரும்பான்மை புலம் பெயர் தமிழர்கள் இன்று அவர்களின் குழும அடையாளத்தை இழந்ததனால், அவர்களுக்கிடையில் பலவிதமான சிக்கல்களுடனும், பூசல்களுடனும் வாழ்வதை அவதானிக்க முடிகிறதல்லவா?

அந்த தொடரூந்தில் அமர்ந்திருந்த குழந்தையும் பாட்டியும் குடும்பம் என்னும் குழும உறவின் பாதுகாப்புணர்வில் தம்மை மறந்து வாழ்ந்து கொண்டிருந்தார்கள். அதே தொடரூந்தில் குடும்பம் என்றும் குழும உறவு அற்ற சிலரும் இருக்கலாம். குடும்ப உறவில் மட்டும் தான் குழும உறவு  தந்து போகும் பாதுகாப்புணர்வும், நம்பிக்கையும் இருக்குமென்பதில்லை.

மனிதர்கள் எங்கொல்லாம் இன்னொரு மனிதனிடம் பாதுகாப்பையும், நம்பிக்கையையும் உணர்கிறார்களோ அங்கு தனிமை தோற்றுக்கொண்டேஇருக்கிறது. அப்படியே இருக்கக் கடவதாக.

இன்றைய நாளும் நல்லதே