விசர்நாய்க்கு வந்த பல்வலி

நேற்றுமுன்தினம் அன்பு நண்பரொருவருவரின் 50 அகவைக்கான.  கொண்டாட்டங்கள் முடிந்து கட்டிலில் கடுங்களைப்புடன் விழுந்தபோது நேரம் பின்னிரவு 2 மணியிருக்கும்.

சடுதியாய் முளிப்புவந்தபோது மேற்தாடையில் உள்ள வேட்டைப்பல் பயங்கரமாக வலியைத்தந்துகொண்டிருந்தது. வலியின் தீவிரம் கண்வரை நீண்டுசென்றது. என்னிடம் இருந்த வலிநிவாரண மாத்திரைகளில் 4 மாத்திரைகளை விழுங்கினேன். அப்போதும் வலி அடங்கியதாய் இல்லை. எனக்கு பல்வலி வந்தால் நான் கராம்பு சப்புவதுண்டு. அது வலியை குறைத்துவிடும் அல்லது சுகமாக்கும். எனவே கராம்பு சப்பினேன். வலி சற்றுக் குறைந்தாலும் தாங்கமுடியாத அளவிலேயே இருந்தது.

நேரத்தைப்பார்த்தேன் பின்னிரவு 3 மணி என்றது அது. பல்வைத்தியர் காலை 8 மணிக்குத்தான் தொழிலை ஆரம்பிப்பார் என்றது அவரது இணையத்தளம். 5 மணிநேரம் என்னால் இவ்வலியை தாங்கமுடியாதே என்று நினைத்துக்கொண்டிருந்தபோதுதான் அந்த அற்புதமான காட்சி நினைவுக்கு வந்தது.

அது ஒரு ஆங்கிலப்படம். பெயர் மறந்துவிட்டது. Kevin Costner. கதாநாயகனாக நடித்தார் என்றே நினைக்கிறேன். ஒரு குதிரைப்படைச் சிப்பாயுக்கு கடும் பல்வலி கண்டுவிடும். அவர்  அதை தாங்கமுடியாததால் படையில் இருக்கும் ஒரு வைத்தியரிடம் செல்கிறார். வைத்தியர் பல்லை பிடுங்கவேண்டும் என்பதால் அதற்கான நடவடிக்கைகளில் இறங்குவார். ஒரு குதிரை அழைத்துவரப்படும். நோயாளி படுக்கவைக்கப்படுவார். அவரது பல்லை ஒருவித உபகரணத்துடன் இணைத்துவிடுகிறார்கள். பின்பு அந்த உபகரணத்தை குதிரையின் சேணத்துடன் இணைத்தபின் குதிரையை தட்டிவிடுவார்கள். குதிரை பாயும் வேகத்தில் பல் களன்றுவிடும். இத்தனை வலியையும் தாங்குவதற்கு அந்த குதிரைப்படைச் சிப்பாய்க்கு வைத்தியர் பல்லை பிடுங்குவதற்கு முன்பே ஒரு மருந்து கொடுத்திருப்பார்.

அவருக்கு கொடுக்கப்பட்ட மருந்து ஒரு போத்தல் மது. சிப்பாய் அதை குடித்து மதிமயங்கிப்போயிருக்கும்போதுதான் அந்த குதிரை ஓடுவதற்கு பணிக்கப்படும். குதிரை ஓட பல்வாயைவிட்டு வெளியே பறக்கும். அந்த வலியையும் அவர் தாங்கிக்கொள்வார்.

இந்தக் காட்சி மனதில் தோன்றியதும் நான் கொன்யாக் போத்தலை தேடி எடுத்துக்கொண்டேன். பல்வலி தாங்கமுடியாததாய் இருந்தது. இடது பக்க கண்ணை திறந்துவைத்திருக்க முடியாதளவுக்கு விண் விண் என்று வலி தெறித்துக்கொண்டிருந்தது. போத்தலை திறந்து அப்படியே வாயினுள் சிறிது கொன்யாக்விட்டு கொப்பளித்தேன். என்ன அதிசயம் வலி ஓரிரு நிமிடங்களுக்குள் நின்றுவிட்டது.

எனது முதலாம் வகுப்புப் புத்தகத்தில் ” பாலா படம் பார், பாடம் படி” என்று இருந்தது. இதனாலோ என்னவோ எனக்கு பாடம் படிப்பதைவிட படம் பார்ப்பதிலேயே ஆர்வம் இருந்தது, இருக்கிறது. நான் படம் பார்ப்பதற்காக வாங்கிய திட்டுக்களும், பேச்சுக்களும், அடிகளும் அளவில்லாதவை. இப்படி நான் பார்த்த படம் ஒன்றில்தான் நான் குறிப்பிட்டகாட்சி வந்திருந்தது என்பது ஒரு வித முரண்நகை.

வலிகுறைந்தது. ஆனால் அரைமணிநேரத்தின் பின் மீண்டும் விண் விண் என்று வலியெடுத்தது. மீண்டும்  அதே மருத்துவத்தை செய்தேன். வலி நின்றது. இப்படியே காலைவரையில் நேரத்தினை கடத்திக்கொண்டேன். பல்வைத்தியர் உடனேயே என்னை அழைத்தார். அற்புதமான ஒரு இருக்கையில் இருத்தி என்னை படுக்கவைத்தார். எனது தலைக்கு நேரே மேலே ஒரு கணிணி இருந்தது.

பல்லைச்சுற்றி ஊசி போட்டார். சற்றுநேரத்தில் பலவகையான ஆயுதங்களால் பல்லைக் குடைந்து பார்த்தார். கதிரியக்ப்படம் எடுத்தார். படத்தினை தலைக்கு மேலே இருந்த கணிணியில் காட்டியபடியே விளக்கினார். நான் வாயைத்திறந்து பேச முடியாத அளவிற்கு வாயினுள் உபகரணங்கள் இருந்தன. எல்லாவற்றிற்கும் ம் ம் என்றேன். 1 மணிநேரமாக போராடியபின் மீண்டும் ஒருமுறை வந்து இப்பல்லின் பிரச்சனைகளை சரி செய்துகொள். இப்போது நான் செய்திருப்பது தற்காலிக நிவாரணம் என்று கூறி கையில் தனது சேவைக்கட்டணம்  1800 குறோணர்கள் (300 டாலர்கள்) என்ற போது எனது மனம் 1800 குறோணருக்கு நான் 4 போத்தல் கொன்யாக் வாங்கலாமே என்று கணக்குப்பார்த்தது என்பதை நான் மறைப்பதற்கில்லை.

இனிமேல்தான் கதையின் கிளைமாக்ஸ் வருகிறது.

நேற்றுக்காலை அன்பு நண்பரொருவர் தொலைபேசியில் அழைத்தார். எனக்கு பல்வலி இப்போது உரையாட முடியாது நாளை எடுங்கள் என்றேன்.

இன்று எடுத்தார். சுகம் விசாரித்தார். அவரின் பல் பற்றிய அறிவு அபாரமாய் இருந்தது. உனக்கு ஞானப்பல் இருக்கிறதா என்றார். எனக்கு ஞானம் என்று ஒரு நண்பர்தான் இருக்கிறார். அப்படி பல் இருப்பதாக நினைவில்லை என்றேன். மனிதர் விடுவதாயில்லை. சிறுவயதில் பிடுங்கினாயா என்றார். எனக்கு தெத்திப்பல் இருந்து பிடுங்கிய நினைவுண்டு. அதைக் கூறினேன். ”டேய் விசரா! என்று அன்பாக அழைத்தார். ஞானப்பல் வாயின் கடைசிப்பல் என்றார். நான் நாக்கினால் தடவிப் பார்த்தேன் அது அங்கிருந்தது.

கடைசிப்பல் இருக்கிறது என்றேன். அய்யோ என்று அவர் தலையில் அடித்துக்கொள்ளும் சத்தம் கேட்டது. எப்படியோ வாய்க்குள் ஒரு கடைசிப்பல் இருக்கும்தானே என்றபோதுதான் எனது முட்டாளத்தனமான பதில் எனக்கு விளங்கியது.

அப்போது அவர் இன்னொரு கேள்விகேட்டார். உனது வாயினுள் எத்தனை பற்கள் இருக்கின்றன என்றார்.

மனது மேலே 16 கீழே 16 என்று கணக்குப்போட்டது. நான் நாக்கினால தடவித் தடவித் எண்ணத்தொடங்கினேன். 1. 2. 3. 4. 5. 6. 7. 8. 9. 10. 11. 12. 13  வந்ததும் பற்கள் முடிந்துவிட்டன.  மீண்டும் எண்ணினேன். 13 தான் இருந்தது. கீழ்த்தாடையிலும் 13 தான் இருந்தது.

நண்பரிடம் ”மச்சான் எனக்கு எல்லாமா 26 தான் இருக்கு” என்றேன்.

மறுபக்கத்தில் கடும் அமைதி நிலவியது. கடுமையாக சிந்திக்கிறான் என்று நினைத்துக்கொண்டேன்.

சற்று நேரத்தில் நண்பன் இப்படிச்சொன்னான்

டேய் ” விசர்நாய்களுக்குத்தான் 26 பல் இருக்குமாம்”


# நண்பேன்டா

எனது மாமா ஒரு கடுந்தேசியவாதி

எங்கள் சமூகத்தில் எல்லோருக்கும் மாமா என்று ஒருவராவது இருப்பார்கள். மாமா என்னும் உறவு மற்றைய உறவுகளைவிட ஒருவித்தில் ஒரு படி நெருக்கமான உறவாயிருக்கும். மருமக்களை மாமாக்களுக்கு அதிகம் பிடிக்கும். அதைவிட மருமக்களுக்கு மாமாக்களை பிடிக்கும். அதுவும் திருமணமாகாத மாமா என்றால் கதையேவேறு. குசும்பு, குறும்பு வேலைகளுக்கு அவரையே சேர்த்துக்கொள்வோம்.

செல்வநாயகம் என்று எனக்கும் ஒரு மாமா இருந்தார். அவர் திருமணமானவர். பனைமரம்போன்று நெடிந்துயர்ந்தவர். அந்த பனைமத்தின் உச்சியில் பனையோலைகள் குறைவாக இருந்தன. அவர் எனது அம்மாவின் தம்பியல்ல. அப்பாவின் அக்காளை காதலித்து திருமணம்செய்ததால் மாமா ஆகியவர்.

அப்பாவின் அம்மாவும், அப்பாவின் இரு தங்கைகளும், மாமாவின் குடும்பத்துடன் வாழ்ந்தார்களா, இல்லை மாமா அவர்களுடன் வாழ்ந்தாரா என்று எனக்குத்தெரியாது. ஆனால் அவர்கள் எல்லோரும் ஒருவீட்டில்தான் வாழ்ந்தார்கள்.

எனக்கு மட்டும், எனது மாமா மிகவும் நல்லவர்,  மாமிக்கு எப்படியோ தெரியாது. மாமி, மாமாவை ”இஞ்சாரும், வாரும், பொரும்” என்று என்றே அழைத்தார். மாமா, மாமியின் சொல்லைத்தட்டாதவர். மாமி திட்டினால் எருமைாட்டில் மழைத்துளிவிழுந்தது போல உதறித்தள்ளிவிட்டு வெற்றிலையை மென்றுகொண்டிருப்பார். அந்நேரங்களில் நான்  அவரை பரிதாபமாகப் பார்த்தால், கண்ணடித்துச் சிரிப்பார். அவரின் அந்தப் பக்குவம் எனக்கு வரவேயில்லை.

மாமாவுக்கும் மலேசியாவுக்கும் ஏதோ தொடர்பிருந்ததாய் நினைவிருக்கிறது. எனது அப்பாவின் குடும்பம் பல ஆண்டுகள் மலேசியாவில் வாழ்ந்திருந்ததால் அவர்கள் மலாய் மொழியை சற்று பேசக்கூடியவர்களாக இருந்தார்கள். எனக்கு ஏதும் புரியக்கூடாது என்றால், அவர்கள் மலாய்மொழியில் பேசிக்கொண்டார்கள்.

எனது தந்தை, எனக்கு புரியாதவாறு எதையாவது பேசவேண்டும் என்றால் மலாய்மொழி எல்லாம் பேசமாட்டார். சுத்தத்தமிழில் ”டேய்! போடா அங்கால” என்பார். நான் கண்ணாத தேசத்துக்கு ஓடிவிடுவேன்.

எனது மாமா ஒரு கடும் தேசியவாதி அத்துடன் சோசலிவசாதியும்கூட. அதாவது உள்ளூர் பனங்கள்ளை மட்டுமே அருந்துவார்.  மனிதர் வேறு எதையும் வாயில் ஊற்றிக்கொள்ளவே மாட்டார்.

கள்ளுக்கடை வைத்திருப்பவன் வாழவேண்டுமே என்பதற்காக சற்று அதிகமாகவே காலையும் மாலையும் கள்ளை வாங்கிக் குடிக்கும் சோசலிசவாதி அவர்.

மட்டக்களப்புக்கு வந்தாலும் அவரது தேசியபானம் கள்ளுதான். கள்ளு என்பது அவரின் மாலைப்பொழுதினை அழகாக்கும் ஒரு அற்புதபானம். அவருக்கு மாலைப்பொழுதுகள் எப்பொதும் அழகாக இருக்கவேண்டும்.

மாமாவுக்கும் மலாய் மொழிக்கும் ஏதோ ஒரு சம்பந்தம் இருக்கிறது என்று சொன்னேன் அல்லவா. ஒருபின்மாலைப்பொழுதில், ”மாமா! மலாய் மொழி கற்றுத்தாருங்கள்” என்றேன். மாமா குஷியாகிவிட்டார். அவர் அப்போதுதான் தேசியவாதிகளுக்கான கொட்டிலில் இருந்து வந்திருந்தார். மாமி அன்று இடியப்பமும், சொதியும் சமைத்திருந்தார். மாமா இடியப்பத்தை உண்ணும்போதுதான் நான் அந்த சரித்திரமுக்கியத்துவம்வாய்ந்த கேள்வியைக்கேட்டேன்.

மாமா ”வாடா வா .. இந்தக் குடும்பத்திலேயே நீதான் புத்திசாலி” என்று என்னை அழைத்து தனக்கருகில் இருத்தியும்கொண்டார். பின்பு, அவர் தனது தட்டில் இருந்த இடியப்பம் ஒன்றை எடுத்து ”இது என்ன?” என்றார்.
நானும் ”இடியப்பம்” என்றேன்.
”இதுக்கு மலாய் என்ன” என்றார் அவர்.
”தெரியாது” என்றேன் நான்.
”சிக்கல்” என்றார் மாமா.
”ஓ.. இடியப்பத்தை சிக்கல் என்கிறார்கள் மலாய் மொழியில் என்று எனது மூளையில் பதிந்துகொண்டேன்.

மாமியின் வீட்டு குசினி, வீட்டுக்கு வெளியே தனியே ஒரு கொட்டிலில் இருந்தது.  அதற்கப்பால் வேலி. வெள்ளிதோறும் அதை மாமியும், அவரது தங்கைகளும் சாணத்தினால் பூசி மெழுகுவார்கள்.

அன்றிரவு அந்த குசினிக்குள் மாமி நின்றப‌டியே என்னை அழைத்து என்ன சாப்பிடப்போகிறாய் என்றார் மாமாவின் காதல் மனைவி.
நான்  ”சிக்கல்” என்றேன், மலாய் மொழியில்.
மாமிக்கு எதுவும் புரியவில்லை.

ஙே என்று முழுசினார்.

நான் மீண்டும் ”சிக்கல்” சிக்கல்” என்றேன். மாமிக்கு பொறுமை எல்லைமீற எனது காதை திருகியபடியே அப்படிஎன்றால் என்ன என்று கேட்டார். கண்கலங்கிப்போனது. இருந்தாலும் சமாளித்தபடி ”சிக்கல் என்றால் மலாய் மொழியில் இடியப்பம்” என்றேன். மாமி காதை இன்னும் அதிகமாக முறுக்கியபடியே..

 ”யார்.. உன்ட ஆசை மாமா சொல்லித்தந்தாரோ என்றார், மாமி கடும் எரிச்சலில்.

”ஓம்” என்றேன் காதைத் தடவியபடியே

அந்தாளும், அவரின்ட மலாயும் என்று மாமி தனக்குத்தானே புறுபுறுத்துக்கொண்டார்.

அன்றிரவு, மாமா ஏன் எனக்கு பொய் சொன்னீர்கள் என்றேன். அடேய்  இடியப்பத்தைப் பார். அது ஒரே சிக்கல் மாதிரியல்லவா இருக்கிறது. அதுதான் அப்படிச்சோன்னேன் என்று சொல்லிச் சிரித்தார்.

மாமா 60களின் ஆரம்பத்தில் இலங்கைக் கடற்படையில் தொழில்புரிந்தவர். இதற்குச் சாட்சியாக பல புகைப்படங்களை வைத்திருந்தார். எனது அப்பாவும் மாமாவும் நெருங்கிய நண்பர்களாக இருந்தார்கள்: அப்பாவும் மாமாவுக்கு சளைக்காத தேசியவாதி என்பதால் இருவருக்கும் ஒத்துப்போனதோ என்னவோ.

மாமாவிடம் ஒரு சைக்கில் இருந்தது. அதுவும் மாமாவைப்போன்று பழசுதான். மாமாவிடம் இருந்த ஒரே ஒரு அசையாச்சொத்தில் அசையக்கூடியதாய் இருந்தது அது மட்டுமே. அனால் அது அசைந்தால் அதை நிறுத்துவது பெரும்பாடு. மாமாவுக்கு மட்டுமே அந்த சைக்கிலை நிறுத்தும் இரகசியம் தெரிந்திருந்தது.

மாமா சக்கரத்தில் காலைக்கொடுத்துது அதை நிறுத்தும் அழகே தனி. கள்ளுக்கொட்டிலில் இருந்து அதித களைப்பில் புறப்படும் மாமாவை மிகவும் பாதுபாப்பாக அழைத்துவரும் தன்‌மை அந்தச் சைக்கிலுக்கு இருந்தது. மாமா மாமியை எங்காவது அழைத்துச் செல்வது எனின் மாமி சைக்கிலின் கரியரில் ஏறிக் குந்திக்கொள்வார். ஒரு கையால் மாமாவின் தோளின்பின்பக்கத்தை பிடித்துக்கொள்வார். மாமா MGR போன்று விசிலடித்தபடியே சைக்கிலை மிதிப்பா‌ர்.

1970களின் பின் மாமா சுண்ணாகம் சந்தையில் புறோக்கராக இருந்தார். மருதனாமடச் சந்தையிலும் அவர் பிரபலமான பிறோக்கராகவே இருந்தார் என்றே நினைக்கிறேன். மாமா ஒன்றும் பெரிய காசுக்காரர் அல்ல. அவரது தேசியபானத்திற்குத் தேவைக்கு பணம் கிடைத்தாலே அது பெரியவிடயம் என்றளவில்தான் மாமாவின் வருமானம் இருக்கும். வழமையாக மாமா பீடி மட்டுமே பிடிப்பார். வருமானம் சற்று அதிகரித்தால் சுருட்டு வாயில் இருக்கும். மாமாவின் வாயில் சிகரட் இருந்தால் அன்று மாமாவின் காட்டில் அடை மழையடித்திருக்கிறது என்று அர்த்தம்.

வாழ்க்கையை தனக்குப்பிடித்த விதத்தில் வாழ்ந்த மனிதர் அவர். பணம் பணம் என்று பறக்கவில்லை அவர். காலையில் புறப்பட்டால் மதிய உணவுக்கு முன் வீட்டுக்குத்தேவையான அனைத்துப்பொருட்களையும் கொண்டுவருவார்.  அதன்பின் மீண்டும்  கொட்டிலினூடாக சந்தைக்குச் செல்வார். மீண்டும் மதிய உணவுக்கு வருவார். அதன் பின் சிறு உறக்கம். அல்லது பத்திரிகையை மேய்வார். மாலையில் மீண்டும்  சோசலிச கடும்தேசியவாதியாகி விடுவார். ஆடியாடி வந்து மாமியிடம் வாங்கிக்கட்டிவிட்டு சிங்கம் குறட்டைக் கச்சேரியுடன் அமைதியாகிவிடும். மாமா வீட்டுக்குள் படுக்கவே மாட்டார்: அவருக்கென்று திண்ணையில் ஒரு வாங்கு இருந்தது.  மழையோ, காற்றோ, பனியோ சிங்கம் அசையாது.

மாமாவுக்கும் மாமிக்கும் ஒரே ஒரு மகள்தான். எனது மச்சாள் என்னைவிட வயதில் மூத்தவர். எனக்கென்று அப்பாவின்வழியில் இருந்தது இந்த மாமா மட்டுமே. எனவே மாமா ஒன்றுடன் நிறுத்திக்கொண்டது ஒரு சரித்திரத்தவறு என்பதை மாமாவும் மாமியும் அறிந்துகொள்ளவில்லை.

மாமாவுக்கென்று ஒரு மேசை இருந்தது. அதிற்கு இரண்டு லாச்சிகள். அவற்றிற்குள் அவரது பாக்குவெட்டி, அவரது சைக்கிலில் இருந்து களன்று விழுந்த பொருட்கள், சுத்தியல், உளி, அரம், இரும்பத்துண்டுகள், துருப்பிடித்த கத்தரிக்கோல், ஆணிகள், பழைய மணிக்கூடு என்று மாமாவின் சொத்துக்களில் 99 வீதமானவை அதற்குள் இருந்தன. அதிலிருந்து எதைக் கேட்டாலும் ”எடு” என்பார்.  அப்படியான கொடை வள்ளல் அவர்.

மாமா ஒரு வெற்றிலைப்பிரியர். புகையிலையின் தார்ப்பர்யத்தை நான் அறியாத காலத்தில் ஒரு நாள், நான், மாமாவிடம் வெற்றிலை கேட்டேன். சிறுதுண்டு தந்தார். பாக்கு கேட்டேன். தந்தார். சுண்ணாம்பு கேட்டேன். மெதுவாக தடவிவிட்டார். புகையிலை கேட்டேன் மறுத்தார்.

அடம்பிடித்தபோது ஒரு துண்டைத்தந்துவிட்டு, என்னை அங்கால ஓடு என்று கலைத்துவிட்டு, வெளியே புறப்பட்டார். நானும் ‌சப்பத்தொடங்கி சற்று நேரத்திரில் தலைசுற்றி குந்தியிருந்து வாந்தி எடுத்தபோதுதான் மாமி என்னைக் கண்டு விசயத்தைப் புரிந்துகொண்டார். அன்று மாலை மாமி திட்டிக்கொண்டிருந்தார். மாமா ”அவன்தான் கேட்டான்” என்றார்.

”அவன் கேட்டால் நீர் குடுக்கிறதே” என்று மாமி மாமாவை காய்ச்சி் எடுத்தபோது எருமைமாட்டில் மழைத்துளி விழுந்தது போன்ற நிலையிலேயே மாமா இருந்தார். பின்பு என்னை அணைத்து புகையிலை பெரியவர்கள் சாப்பிட மட்டும்தான் என்றார். சரி என்று தலையாட்டினேன் நான். அன்றில் இருந்து இன்றுவரை புகையிலை சப்பியதில்லை நான். இனியும் சப்பப்போவதில்லை.

எனது அப்பா இறந்தபோது அருகில் நின்று அனைத்திற்கும் ஒழுங்குசெய்தார். பின்னிரவில் அப்பாவின் சாம்பல் அள்ளப்போனபோது அருகில் நின்றிருந்ததும் அவரே. 1985இல் இறுதியாக அவரைச்சந்தித்தேன். தோளுக்கு மிஞ்சினால் தோழன் என்று காலம் எம்மை இணைத்துவிட்டிருந்தது. காலம் ஓடியது. தொண்ணூறுகளில் ஒரு நாள், மாமா புற்றுநோய் கண்டு  இறந்துபோனார் என்று ஒரு கடிதம் வந்தது.

 2014ம் ஆண்டு விடுமுறையின்போது மாமியைப் பார்க்கச் சென்றிருந்தேன். மாமியின் வீட்டில் படத்தில் தொங்கிக்கொண்டிருந்தார் மாமா.  காலம் மாமியையும் வயதானவராக்கியிருந்தது. தனது ஒற்றைப்பல்லுடன் மாமி, மாமாவினதும் எனதும் திருவிளையாடல்களை நினைவுபடுத்திக்கொணடிருந்தார். நாம் சேர்ந்திருந்து சிரித்துக்கொண்டிருந்தோம்.

டேய்! ”உன்னால அந்த மனிசன்  தன்ட வாழ்க்கையில ஒரு நான் குடிக்காமல் வீட்ட வந்தது” அது நினைவிருக்கிறதா என்றார் மாமி.
”இல்லையே, அப்படியான ஒரு பாவியா நான்” என்றேன் சிரித்தபடியே.

மாமி அந்தக் கதையை சொல்லத் தொடங்கினார்.

13 - 14 வயதிருக்கும். நான் மாமாவுடன் சுண்ணாகம் சந்தைக்குச் சென்றிருக்கிறேன். மாமாவுடன் அலைந்துதிரிந்தபடியே பொழுது போயிருக்கிறது. ஓரிடத்தில் கோழிகளை விற்றுக்கொண்டிருந்திருக்கிறார் ஒரு வயதான மூதாட்டி. நான் என்னையறியாமலே அங்கிருந்து ஒரு கோழியை மிதிக்க அதன் கால் முறிந்துவிட்டது. மூதாட்டி கோழியை வாங்கு, வாங்கு என்று என்னைப் பிடித்திருக்கிறார். என்னிடம் பணம் இல்லை. பிரச்சனையைக் கண்ட மாமா உதவிக்கு வர, மாமாவை பணம்தா என்று அவர் பிடித்திருக்கிறார். மாமா தன்னிடம் இருந்த பணத்தைக்கொடுத்து  கடனும் கூறி என்னை மீட்டெடுத்து, என்னையும் கோழியையும் வீட்டுக்கு அனுப்பியிருக்கிறார். வீட்டில் கோழி கறியாகியிருக்கிறது. அன்று கையில் காசு இல்லாத காரணத்தினால் மாமா தனது தேசியத்தையும்,சோலித்தையும் மறந்து வீடு வந்தாராம் என்றார் மாமி.

எப்பேர்பட்ட ஒரு சோசலிச தேசியவாதியின் விசுவாசத்தை நான் சோதனைக்குட்படுத்தியிருக்கிறேன் என்று நினைத்துபடியே மாமியிடம் கேட்டேன் இப்படி

”மாமி, அன்று மாமா அந்த கோழிக்கறியபை் பற்றி என்ன சொன்னவர் என்று”

டேய்! அந்தாளுக்கு கள்ளு இல்லாம சாப்பாடே இறங்காதடா என்றார் மாமி

பரலோகத்தில் இருக்கும் என்ட மாமோய்! ... என்னை மன்னிப்பீராக.

கலைகள் கற்பிக்கப்படுகின்றனவா இல்லை விற்கப்படுகின்றனவா?

அண்மையில் ஒரு நண்பருடன் நடந்த உரையாடலின் தொடர்ச்சியாக மனதில் எழுந்து எண்ணங்களை அடிப்படையாக்கொண்டும், பல நாட்களாக மனதில் ஊறிக்கொண்டிருந்த எண்ணங்களையும்  அடப்படையாக வைத்தே இந்தப் பதிவு எழுதப்படுகிறது.

இவைபோன்ற தலைப்புக்களை பேசி, உரையாடும் தேவை எமது சமூகத்துக்கு அவசியம் என்றே கருதுகிறேன். உரையாடல்களுக்கான வெளிகளை ஏற்படுத்திக்கொள்வதானது, நகரங்களுக்கு நடுவே இருக்கும் சோலைகளையும், அழகிய புல்வெளிகளையும் போன்றதே. அவையே எம் சுவாசத்தினை உயிர்ப்பிக்கின்றன.

அண்மையில் ஒரு நண்பருடன் உரையாடியபோது வெளிநாடுகளில் கலைகளைப் பயிற்றுவிப்போர் கலையை வளர்க்கவில்லை, விற்கிறார்கள்  என்பதே எமது உரையாடலின் கருப்பொருளாக இருந்தது.

அவரது கூற்றில் முற்றிலும் உடன்படாவிட்டாலும், அதிகமாக உடன்படவேண்டியிருக்கிறது.

நான் கல்விபயின்ற நாட்களில் 10ம்வகுப்புவரை கணிதப்பாடம் என்றால் எனக்கு கடும் கசப்பாயிருந்தது.  அதே கணிதபபாடத்தை 10ம் வகுப்பில் எனக்கு ஓரிரு மாதங்கள் கற்பித்த ஒரு ஆசிரியர்  நான் அதிகம் விரும்பும் பாடமாக மாற்றயமைத்தார். அதேவேளை சங்கீத வகுப்பில் இருந்து நான் பின்னங்கால் பிடரியில் அடிபட ஓடுவதற்கும் ஒரு ஆசிரியரே காரணமாய் இருந்தார்.

இதேபோலத்தால் வெளிநாடுகளில் எமது சந்ததியினர் தமிழ் கற்பதும், கலைகளைக் கற்பதும்.

”இந்தாளால தான் நான் தமிழ் படிப்பதை நிறுத்தினேன்” என்றும்,  இவரால்தான் நடனம்மீது எனக்கிருந்த ஆசை இல்லாதுபோனது, இவரிடம் படிக்கமுடியாது, இவருக்கு கதைகத்தெரியாது, ஏனோ தானோ என்று படிப்பிப்பார், இப்படி எத்தனையோ கதைகளை நாம் கேட்பதுண்டு. இவற்றில் உண்மையில்லை என்று நாம் யதார்த்தத்தை மறந்துவிடலாகாது.

மாணவர்களின் பல தோல்விகளுக்கு ஆசிரியர்களே காரணகாத்தாவாக இருந்திருக்கிறார்கள், இருக்கிறார்கள்.

ஆசிரியர்களின் கற்பிக்கும்முறை அவர் கற்றுக்கொண்ட காலத்தில் இருந்ததை விட, பல மடங்கு மாறியிருக்கிறது. தவிர பயிலும் மாணவர்களும், அவர்கள் பிறந்து வளர்ந்த நாடும், சூழலும்கூட மாறியிருக்கிறது. இவற்றை கவனத்தில் எடுத்து கற்பிப்பவர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம்.

தான் கற்றதையே தனது மாணவர்களுக்கு அப்படியே மாற்றமின்றி ஒப்புவிப்பதை கற்பித்தல் என்பது மகா தவறு. இதை கிளிப்பிள்ளையும் செய்யுமே.

தனது மாணவர்களின் நிலையறிந்து, குறிப்பறிந்து, ஆவர்மூட்டி, உரையாடி, வழிகாட்டி, ஊக்குவித்து, மாணவனின் சிந்தனையைத் தூண்டி கற்பிக்கும் ஆசிரியனே உண்மையான ஆசிரியராகிறார். இப்படியான எண்ணங்களுடன் ஆசிரியர் கிடைப்பது அரிது. அப்படிக் கிடைத்தால் அது மாணவனின் அதிஸ்டம். கலையின் பேரதிஸ்டம்.

வெளிநாடுகளில் கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களில் எத்தனைபேர் மேற்கூறியவாறு கலைமீதான ஈடுபாட்டுடன் கற்பிக்கிறார்கள்? அப்படியானவர்கள் இல்லை என்று கூறமுடியாது. இருக்கிறார்கள். அவர்களைத் தேடிக்கண்டுபிடித்து குழந்தைகளை ஒப்படைப்பதில் பெற்றோரின் பங்கு அதிமுக்கிய இடத்தைப்பெறுகிறது. இங்கு தவறுநேரும்போது குழந்தையின் கலையார்வம் மட்டுமல்ல, கலையின் வளர்ச்சியும் மட்டுப்படுத்தப்படுகிறது.

கலைமீதான உணர்வு குறைந்து அதுவே வியாபாரமாகிவிடும்போது கலையைக் கற்கும் குழந்தைகளும், கற்பிக்கப்படும் கலையுமே பாதிக்கப்படுகிறது.

கலை வியாபாரமாகிவிடும்போது போலியான விளம்பரங்களும், பகட்டும், தற்பெருமைகளும், குழுவாதங்களும், சக கலைஞர்களையே ஒதுக்கும் குறுஞ் சிந்தனைகள் போன்றவையும் வெளிப்படையாகவே நடைபெற ஆரம்பிக்கின்றன என்பதை மறுப்பதற்கில்லை.

ஒரு ஆசிரியரிடம் உள்ள மாணவர்களின் எண்ணிக்கையை அடிப்படையாகவைத்து நாம் ஆசிரியரின் தரத்தை எடைபோடுவதில் ஏற்பில்லை எனக்கு.

எனது பார்வையில் கலையைக் கற்பிக்கும் ஆசிரியர் என்பவரை நாம் அவரின் படைப்புக்கள், படைப்புக்களின் தரம், நுணுக்கங்கள், கலைபற்றிய அவரது அறிவு, கலை மீதுள்ள பிரக்ஞை, கற்பித்தல் மீதுள்ள ஈர்ப்பு, கற்பிக்கும்விதம், உரையாடும் விதம், சுயவிமசனத்தன்மை, உண்மைத்தன்மை, தொடர்ச்சியான தேடல், அவர்களின் மேடைப்பேச்சுக்கள், கட்டுரைகள், நூல்கள், உரையாடல்கள் என்று பலவிதமான கோணங்களில் இருந்து அறியலாம்.

ஒரு பொருளை வாங்குவதற்கு கடை கடையாக ஏறி இறங்கி பொருளின் தரத்தை ஆராயும் பெற்றோர் தம் குழந்தைகளுக்கு தகுந்த ஆசிரியரை தேர்வுசெய்யும்போது எதுவித விமர்சனமும் இன்றி இருப்பது குழந்தைகள் சிறந்த ஒரு கலைஞர்களாக உருவாவதற்கு மிக முக்கிய தடையாக இருக்கிறது.

மிக முக்கியமாக கலையைக் கற்கும் ஆசிரியர் தனது மாணவனுக்கு அக் கலைமீது தீராத தாகத்தை ஏற்படுத்துபவராக இருத்தல் மிக மிக அவசியம். வெளிநாடுகளில் எமது கலைகள் குறிப்பிட்ட சில எல்லைகளைக் கடந்து மேலும் மேலும் வளராமைக்கு இதுவே மிக மிக முக்கிய காரணியாகிறது. இங்கு பெற்றோருக்கு இருக்கும் பொறுப்பைவிட ஆசிரியரின் பொறுப்பே  அதிகமாகும்.

பல ஆசிரியர்களுக்கு மாணவர்களுடன் மனம்விட்டு உரையாடுவதற்கு நேரம் போதாதிருக்கிறது. கும்பலில் ஒருவராய் மாணவன் கற்பிக்கப்படுதே வளமையாக இருக்கிறது. மாணவனுக்கும் ஆசிரியருடன் உரையாடும் தேவையிருக்கும், ஆசிரியருக்கும் அத்தேவை மாணவனைவிட பல மடங்கு அதிகமாக இருக்குவேண்டும். அப்போதுதான் குரு, சிஸ்யன் என்ற ஆத்மார்த்தமான உணர்வு உருவெடுக்க ஆரம்பிக்கிறது. உரையாடல் என்பது கற்றலின் முக்கிய செயற்பாடு.

உரையாடல் என்பது மிகப்பெரிய கலை. உரையாடலே ஒருவர் மீது இன்னொருவருக்கு நம்பிக்கை, பிடிப்பு, ஆர்வம் போன்றவற்றை ஏற்படுத்துகிறது. இதன் மூலமாகவே நாம் கற்றலுக்கும், தேடலுக்குமான விடைகளைப் பெற்றுக்கொள்கிறோம். இந்த உரையாடல் நிலைக்கு எத்தனை புலம்பெயர் குருக்களும் சிஸ்யர்களும் சென்றிருக்கிறார்கள்?

எத்தனை ஆசிரியர்கள் மாணவர்களுடன் உரையாடுவதற்கு அதிக நேரங்களை செலவிடுகிறார்கள்? கலை வியாபாரமாகும்போது இத்தகைய நிகழ்வுகள் தவிர்க்கமுடியாததாகிவிடுகின்றன என்பது உண்மையே.

வாரத்தில் ஒரு நாள், கும்பலில் கோவிந்தா என்னும் மாணவனுக்கும், ஆசிரியருக்கும் இடையில் ஆத்மார்த்மாக குரு, சிஸ்யன் உணர்வு ஏற்பட இடமேயில்லை. அப்படி அமைந்தாலும் அது ஒரு போலியான குரு, சிஸ்யன்  உறவாகவே அமையும். 

எனது பாடசாலைக்காலங்களில் என்னுடன் உரையாடி, கண்டித்து, அணைத்து, வழிகாட்டி அறிவுரைகூறிய எனது ஆசிரியர்களே எனக்குள் இன்றும் பெருவிருட்சமாய் இருக்கிறார்கள். எனக்குக் கற்பித்த பல ஆசிரியர்கள் என் நினைவுகளில் இல்லவே இல்லை. காரணம் அவர்கள் கற்பித்தல் என்னும் கலையை கற்றிருக்கவில்லை.

இங்கு கற்பிக்கும் ஆசிரியர்களில் எத்தனைபேருக்கு அவர்களது மாணவர்கள்மீதான ஆத்மார்த்தமான உணர்வு இருக்கிறது? ஒரு விரல்விட்டு எண்ணிவிடலாம் அப்படியான உன்னத எண்ணமுள்ள ஆசிரியர்களை. 

ஒரு சிறந்த ஆசிரியரால் மாணவனின் சிந்தனையோட்டத்தை, கலைஆர்வத்தை, அங்கு ஒளிந்திருக்கும் திறமையை அல்லது வெறுப்பை இனங்கண்டுகொள்ளமுடியும். உதாரணத்துக்கு ஒருவருக்கு தான் கற்கும் கலையில் ஆர்வமில்லை, பெற்றோரின் இம்சைக்காவே வந்து போகிறார் எனின், கற்பித்தலின் சிறப்பை அறிந்த ஆசிரியர் அந்த மாணவனுடன் உரையாடி, பெற்றோருடன் உரையாடி ஒரு தீர்க்கமான முடிவை எடுப்பார். ஒரு கலையை விரும்பாத அந்த மாணவன் ஆசிரியரின் உதவியினால் இன்னொரு கலையில் தேர்ச்சிபெறும் நிலை ஏற்படவும் வாய்ப்புண்டு. ஆனால் கலை வியாபாரமாகும்போது ஆசிரியர் வாய்மூடியே இருப்பார். பெற்றோர் விளித்துக்கொள்ளதவரையில் குழந்தையின் நிலை திரிசங்குதான்.

கற்பித்தலை ஒரு கலையாகவே பார்க்கும் ஆசிரியர்கள் மிக மிகக் குறைவு. கற்றுத் தேர்ந்தபின்பும் தொடர்ச்சியாக தங்களை கலைப்புலமையை புதுப்பித்துக்கொள்ளும், கலையின்பால் தேடலையும் உடைய ஆசிரியர்கள் மிக மிகச் சிலர‌ே. அரங்கேற்றமானது தனது கலைவாழ்வின் உச்சம் என்னும் சிந்தனை எத்தனை பரிதாபமானது என்பதனை பல ஆசிரியர்கள் இன்னும் புரிந்துகொள்ளவில்லை. அரங்கு ஏறுதல், என்னும் அந் நிகழ்வானது கலைவாழ்வின் ஆரம்பம் என்பதை பலர் மறந்துவிடுகிறார்கள்.

என்னிடம் புதுப்பித்து்கொள்வதற்கு எதுவும் இல்லை. கலை எனக்கு வசப்பட்டிருக்கிறது என்னும் அதீத ஞானச்செருக்குடையவர்களையும் ஆசிரியர்களாகக் கொண்ட மாணவர்கள் இருக்கிறார்கள். இப்படியான நேரங்களில் அம் மாணவர்களைவிட அந்த ஆசிரியரிலேயே பரிதாமமேற்படுகிறது.

கற்பித்தலை கற்றுக்கொள்ளாத ஆசிரியர்களிடம் கற்கும் மாணவர்களை இன்னொரு ஆசிரியரிடம் மாற்றுவதில் எவ்விதத் தவறுமில்லை. இதில் குருபக்தி என்று சம்பிரதாய சகதிகளை பூசும் ஒருசாராரும் இருக்கத்தான் செய்கிறார்கள். இறந்துகொண்டிருப்பவனின் உயிரைக்காப்பாற்ற முடியாத குடும்பவைத்தியரிடம் இருந்து வேறு வைத்தியரிடம் நாம் செல்வதில்லைாயா, அதுபோலத்தான் இதுவும். அங்கு மனிதனின் உயிர். இங்கு கலையின் உயிர். அவ்வளவே.


குழந்தைகளை கலைகளை கற்றுதேர்ச்சியடையாமைக்கு, எவ்வித சுயவிமர்சனமும் இன்றி வாராந்தம் ஏற்றி இறக்கும் பெற்றோர்களும் ஒரு காரணம். உங்கள் குழந்தைகள் கற்பிக்கப்படும் விதத்தை, குழந்தையின் மனநிலைகளை, கொடுக்கப்படும் பயிட்சிகளை இப்படி பல விடயங்களில் பெற்றோரின் அசமந்தப்போக்கும் குழந்தைகளின் கலைமீதான ஆர்வத்தை மழுங்கடிக்கின்றன.

உரையாடல் என்பதை அறியாத, உரையாடலை விமர்சனமாகப் பார்க்கும் கலைஞர்களே எம்மத்தியில் அதிகம். ஒரு விடயத்தை பொதுத்தளத்தில் உரையாடும்போது உரையாடும் நபர்கள் எதிராளிகளாகமாறி வாதம்புரிவதை காணக்கூடியதாக இருக்கிறது. வாதத்திற்கும்
உரையாடலுக்கும் இடையில் மிகப்பெரிய வித்தியாசம் உண்டு. போரும் சமாதானமும் போன்றதானது அது. உரையாடைல் புரிந்துணர்வை அடிப்படையாகக் கொண்டது. வாதம் தன் கருத்தே சரி என்னும் ஒருவித சர்வதிகாரப்போக்கினையுடையது.

சுயவிமர்சனம், தன்னடக்கம் என்பன ஒரு கலைஞனை உயர்த்தும் ஏணிப்படிகள். ஆனால் தூரதிஸ்டவசமாக சுயவிளம்பரம் என்னும் மாயைக்குள் பல கலைஞர்கள் சிக்கிவிடுகிறார்கள். இதனால் இவர்களின் வளர்ச்சி தடைப்பட்டுப்போவது மட்டுமன்றி இவர்களை நம்பியிருக்கும் மாணவர்களின் வளர்ச்சியும் மட்டுப்படுத்தப்படுகிறது. இப்படியான குருவிடம் இருந்து அவரது மாணவர்கள் ஆரோக்கியமற்ற சில பலவற்றையும் பழகிக்கொள்கவதன் மூலம் இது தொடர்சக்கரமாக மாறிவிடுகிறது.
கலை என்பது வெளிநாடுகளில் பகட்டுக்கும், தற்பெருமைக்கும், பணத்துக்கும் விலைபோய்க்கொண்டிருக்கிறது. இதற்கு முக்கிய காரணமாக கலைகளைக் கற்பிக்கும் ஆசிரியர்களையும், ஆசிரியரின் கற்பிக்கும் திறமைபற்றிய விமர்சனம் பெற்றோரிடம் இல்லாமையுமே ஆகும்.

பல ஆசிரியர்களிடம் கலையை கற்பிக்கவேண்டும், வளர்க்கவேண்டும் என்னும் சிந்தனையைவிட, கலையை பணமாக்கிக்கொள்வதில் அவர்கள் பலத்த ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதே உண்மை. இப்படிப்பட்டவர்களது படைப்புக்களில் பாரிய மாற்றங்களோ, புரட்சிகரமான சிந்தனைகளோ இருக்கமாட்டாது. அரைத்த மாவையே அரைத்துக்கொண்டிருப்பார்கள். இப்படியானவர்க‌ளே பெருங்கலைஞர்களாக உலாவருகிறார்கள் என்பதே முறண்நகை.

பெருமளவில் வெற்றிபெற்ற கலைஞர்களின் சிறப்பான பண்புகளை எடுத்துநோக்கினால் அவர்களிடத்தில் மாணவர்களுடன் இயல்பாக பழகும் தன்மையிருக்கும். கர்வமற்று மாணவர்களின் நிலையறிந்து கற்பிப்பார்கள். கற்பித்தல் பற்றிய விளிப்புணர்வு இருக்கும். தமது கலையை நேசிப்பார்கள் முக்கியமாக வியாபாரமாக்கமாட்டார்கள். மாணவர்களின் எண்ணிக்கையைவிட மாணவர்களின் தரத்திற்கே அவர்கள் முன்னுரிமை இருக்கும். தனது மாணவர்களின் பெற்றோருடன் மாணவனின் வளர்ச்சி பற்றிய ஒரு புரிந்துணர்வுடனான தொடர்ச்சியான உரையாடல் இருக்கும். முக்கியமாக ஒரு வழித்தொடர்பாடல் (mono dialogue) இருக்காது, மாணவர்களின் கருத்துக்களை, பெற்றோரின், சமுகத்தின் கருத்துக்களை உள்வாங்கிக்கொள்பவராய், தன்னை செம்மைபடுத்திக்கொள்பவராய் இருப்பார். சக கலைஞர்களுடன் சுமூகமாக உரையாட, கருத்துப்பகிரக் கூடியவர்களாக இப்பார்கள். விமர்சிப்பவர்களை நண்பர்களாக ஏற்கும் வளர்ந்த மனநிலையும், மிக முக்கியமாக கலை, சமுகம் பற்றிய பிரக்ஞையும் இருக்கும்.
இவர்களின படைப்புக்கள் உயர்ந்த தரமுடையவையாக இருக்கும். பல பல வித்தியாசமான கற்பனைகளில், தலைப்புக்களில், மரபுசார்ந்து, புதிய சிந்தனைகளைக் கலந்து இவர்களது நிகழ்வுகள் அமையும்.

பெற்றோரின் விருப்பத்திற்காகவோ, ஆசிரியரின் கட்டாயத்திற்காகவே, போலியான பெருமைகளுக்காகவோ அன்றி, கலைமீதுள்ள பற்றின் காரணமாக கலையைக் கற்றுக்கொண்டு, தொடர்ச்சியான தேடலுடன் உள்ள ஒரு சிஸ்யனை ஒரு ஆசிரியர் உருவாக்குவார் எனின் அவரே சிறந்த ஆசிரியன் என்பேன் நான்.

இது பற்றி உரையாடலாமே நாம்.

ஐம்பதிலும் ஆசை வரலாம் ... தப்பே இல்ல

எனது ஒஸ்லோ முருகன் சத்தியமாக இது 110 % உண்மைக் கதை.


முன்பின் அறியாத ஒருதொலைபேசி இலக்கத்தில் இருந்து  நோர்வேஜியமொழியிலான ஒரு குறுஞ்செய்தி இப்படிக்கூறியது

சஞ்சயன்! உன்னை அந்தப் பெண்ணுக்கு மிகவும் பிடித்திருக்கிறது ;)

எனது நிறத்தையுடடைய ஒரு பெருங்கவி கூறியது போன்று ”கழுத்துக்கும் தொண்டைக்கும் இடையே உருவம் இல்லாதொரு உருண்டை உருளத்தொடங்கியது” குறுஞ்செய்தியின் இறுதில் இருந்த கண்சிமிட்டும் சித்திரம் என் நெஞ்சுக்குள் சிமிட்டத்தொடங்கியது.

யாராக இருக்கும்? என்று மண்டையைப் பிய்த்துக்கொண்டுதேடினேன். பதில் கிடைத்தாயில்லை. அவள் யார்? எப்படி இருப்பாள்? கறுப்பா வெள்ளையா மஞ்சலா? எந்த இனத்தவள்? அ. முத்துலிங்கம் அய்யாவின் கதைகளில் வரும் குறிப்பிட்ட ”அந்தப் பகுதி” மட்டும் பெருத்த ஆபிரிக்க அழகியா? இல்லை பாரசீகத்துப் பைங்கிளியா? இல்லை பளிங்குபோன்ற வெள்ளைத் தேவதையா? அல்லது அற்புத அழகிகளைக்கொண்ட இனத்தவளான ஒரு தமிழிச்சியா?

தனியே வாழும் ஒருவனுக்கு, அதுவும் 47 வயது இளைஞனுக்கு இப்படி ஒரு குறுஞ்செய்தி வந்தால் அவன் நிலை எப்படி இருக்கும் என்று நினைத்துப் பாருங்கள். ஐந்து முறை அதிஸ்டலாபச்சீட்டு விழுந்தவனை விட மகிழ்ச்சியான மனநிலையில் இருந்தேன் நான்.

கற்பனை எகிறிப்பாய்ந்தது.

என் சாப்பாட்டை ஊறுகாய்தான் சுவையாக்குகிறது என்பதை அறிந்த சமயற்கலை வல்லுனன் நான்.  
வரப்போவது ஒரு அழகிய தமிழ் ராட்சசியாக இருந்தால், புட்டும் கருவாட்டுப்பிரட்டலும், இடியப்பமும் சொதியும், சோறும், பற்பல கறிகள், வறுவல்கள், பொரியல்கள், ரசம், பாயசம் .. நினைக்கவே வயிறு நிறைந்தது போன்றிருந்தது.

நமக்குத்தானே சாப்பாட்டில் இதுதான் வேண்டும் என்ற நியதியில்லையே.
எதையும் கொட்டிக்கொள்ளும் பன்றி நான். எனவே ”பின் பக்கம்” பெருத்த ஆபிரிக்க அழகி கிடைத்தாலும் அவளுக்காக அவளின் சாப்பாட்டையும், அவளையும் ரசிக்கமாட்டேனா, என்ன?. அந்தளவுக்கு நான் ஒன்றும் மட்டமான ரசிகன் அல்லவே.

ஒருவேளை வருபவள் தென்கிழக்காசிய நாட்டைச் சேர்ந்த, சாண்டில்யனின் ”கடற்புறா” கதாநாயகி, மஞ்சலளகியைப் போன்றவளாக இருந்தால், தவளை பாம்பு கரப்பொத்தான் போன்றவற்றையும் ஒரு கைபார்க்கலாம், என்று கற்பனையோடிக்கொண்டிருந்தது.

அவள் யார் என்பதை அறியவேண்டும் என்ற வேகத்தில் கணிணியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டேன். (கண்மணியை எடுத்து மடியில் வைத்துக்கொண்டேன் என்று நீங்கள் வாசித்தால் அதற்கு கம்பனி பொறுப்பல்ல)

நோர்வேயில் தொலைபேசி எண் இருப்பின் இணையத்தின் மூலமாக பெயர், விலாசம் போன்றவற்றைத் தெரிந்துகொள்ளலாம். எனவே அவளை அங்கு தேடுவோம் என்று நினைத்தபடியே, அவளின் தொலைபேசி இலக்கத்தை எழுதி ”தேடு” என்று தட்டிவிட்டேன்.

கணிணி அவளைத் தேடுவதற்கு பாவித்த கணப்பொழுதினுள் அவள் பெரும் பணம்படைத்தவளாக இருப்பாளோ? அப்போ  நாம் கரையேறிவிடலாம் என்றெல்லாம் கற்பனைக்குதிரை கடிவாளத்தை அறுத்தெறிந்தபடியே காற்றில் கடுகிக்கொண்டிருந்தது.

கணிணி, அந்தப் பெயரில் உள்ளவர், தனது பெயர் விலாசத்தை வெளியிடவிரும்பவில்லை என்று குண்டைத்தூக்கிப்போட்டது. யானை மிதித்த தக்காளிபோன்றாயிற்று மனம்.

இலக்கம் இருக்கிறதே, நேரடியாகவே பேசலாமே என்று ஆறுதல் சொல்லிற்று தோல்வியை ஏற்கவிரும்பாத மனம்.

எப்படி ஆரம்பிப்பது? என்ன சொல்வது? என்றெல்லாம் சிந்தித்தேன்.
”ஹீம் ... நான் சஞ்சயன் பேசுகிறேன். நீங்கள் யார் பேசுவது?” என்று எனது அழகிய குரலால் இரண்டு தடவைகள் பயிற்சி செய்து பார்த்துக்கொண்டேன். குரலில் சற்று அன்பு, ஆண்மை கலந்து பேசிப்பார்த்தேன். திருப்தியாய் இருக்கவில்லை. மீண்டும் மீண்டும் வார்த்தைகளையும், குரலின் அளவு, ஆண்மையின் அளவுகளை மாற்றிப்பார்த்து இறுதியில் இப்படித்தான் பேசுவது என்று முடிவுசெய்துகொண்டேன்.

தொலைபேசி எடுக்குமுன் குளியலறைக்குள் சென்று கண்ணாடியின்முன் நின்று பேசிப்பார்த்தேன். எனது அழகிய வண்டி வெளியே தெரிந்தது. அதை எக்கிப்பிடித்தபடியே மீண்டும் சொல்லிப்பார்த்தேன். குரலும், நானும் அழகாய் தெரிந்தது போலிருந்தது எனக்கு.

கதிரையில் அமர்ந்துகொண்டேன். தொலைபேசியை எடுத்தேன். குறுஞ்செய்தியை மீண்டும் மீண்டும் இரண்டுதடவைகள் வாசித்தேன். ”உன்னை அந்தப் பெண்ணுக்கு மிகவும் பிடித்திருக்கிறது” என்ற வார்த்தைகள் அன்றொரு நாள் எஸ். ராமகிருஸ்ணனின் ”காற்றில் யாரோ நடக்கிறார்கள்” வாசித்தபோது காற்றில் எப்படி நடப்பது என்று தோன்றிய சந்தேகத்தை தீர்த்துவைத்தது.

அந்த இலக்கத்துடன் தொடர்பு கொண்டேன்.

மணி அடித்தது, மணி அடித்தது, மணி அடித்துக்கொண்டே இருந்தது.
எவரும் எடுக்கவில்லை. மனம் பொறுமையற்று அலைந்தது. மீண்டும் அழுத்தினேன் அந்த இலக்கத்தை.

மணி அடித்தது, மணி அடித்தது, தொடந்து அடித்துக்கொண்டே இருந்தது. வெறுப்பில் தொலைபேசியை துண்டிக்க நினைத்துபோது மறுகரையில் பெண்ணின் குரல் கேட்டது.

நீங்கள் யார் பேசுவது என்றேன். பெயரைச் சொன்னாள் அப் பெண். சரி என்னை யாருக்கோ பிடித்திருப்பதாய் சொன்னீர்களே அது யார்? என்றேன் ஆண்மையும், அதிகாரமும் அன்பும் கலந்து.


க்ளுக் க்ளுக் என்று சிரிக்கும் சத்தம் கேட்டது மறுபக்கத்தில் இருந்து. ”ஓ அதுவா. என் வீட்டில் உன்னைச் சந்தித்த எனது நண்பிதான் அது” என்றது தொ(ல்‌)லைபேசி.


இவ்விடத்தில் சிறியதொரு flashback



இன்று காலை நிம்மதியாய் தூங்கிக்கொண்டிருந்தேன். அப்போது தொலைபேசி சிணுங்கியது. எடுத்தேன்.

நீதானா கணிணி திருத்துவது என்று ஒரு பெண்குரல் கேட்டது. ஆம் என்று கூறியபோது, மதியம் வீட்டுக்கு வா. கணிணி திருத்தவேண்டும் என்று கட்டளையிட்டார் அப் பெண். விலாசத்தை வாங்கிக்கொண்டேன்.

நான் அவா் வீடு சென்ற போது அவரும் அவரின் அழகிய நண்பியும் அங்கிருந்தார்கள். அவர்களுடன் பேசியபடியே கணிணியை திருத்தினேன். கேக், தேனீர், பழங்கள் என்று அந்தப் பெண்ணிண் நண்பி என்னை பலமாய் கவனித்தார். அவரது ஐபோன் பிரச்சனையையும் அவரருகில் உட்கார்ந்திருந்து தீர்த்துவைத்தேன்.

எங்கள் பேச்சு வாழ்க்கை பற்றித் திரும்பியது. அவர் தனியே வாழ்கிறேன் என்றார். நானும் அப்படியே என்றேன். அவருக்கு வாசிப்பில் நாட்டுமுண்டு எனக்கும் அப்படியே. நாம் எங்களை மறந்து உரையாடுவதைக் கண்ட  நண்பி எங்களை தனியேவிட்டுவிட்டு ‌தனது நாயுடன் வெளியே சென்றார். நாம் உரையாடிக்கொண்டிருந்தோம். எனக்கு மீண்டும் ஒருமுறை தேனீர் ஊற்றித்தந்தார் அவர்.

கணிணி திருத்தி முடித்தேன். நாயுடன் சென்ற நண்பி வீடு திரும்பியபின் நான் வீடுசெல்லப் புறப்பட்டேன். இருவரும் வாசல்வரை வந்து வந்து வழியனுப்பினார்கள். நண்பியோ எனது ஆஸ்தான கணிணி திருத்துபவன் நீதான் என்பது போல் கன்னத்தில் முத்தமிட்டு வழியனுப்பினார்.

வீட்டுக்கு வெளியே நின்றபடியே கைகாட்‌டி விடைபெற்றேன்.

வீட்டுக்குள் இருந்து 70 வயதான அவ்விருவரும் கைகாட்டியபடியே, பொக்கைவாயால் சிரித்துக்கொண்டிருந்தார்கள்.

நான் பனிகொட்டிய நிலத்தில் வழுக்கிவிழாமல் நடப்பதற்கு முயன்றபடியே நடக்கத்தொடங்கினேன்.

ஒரு கோயில் ஒரு மோதகம் ஒரு ராப்பிச்சை இவற்றுடன் மேற் சட்டையின்றி செக்சியாக .....

நண்பர் Ranjakumar Somapala S  தனது முகப்புத்தகத்தில்,   

மோதகம் சாப்பிட Sanjayan Selvamanickam போல குளித்து முழுகி, வேட்டி கட்டி, அங்கவஸ்திரம் தரித்துக்
கோயிலுக்குப் போகத் தேவையில்லை.

அவுஸ்திரேலியா நோர்வேயை விட நல்ல நாடு”
என்று அறிக்கை விட்டிருக்கிறார்.  


அவரின் சரித்திரமுக்கியத்துவம்வாய்ந்த அறிக்கைக்கு Sanjayan Selvamanickam ஆகிய நான் வழங்கும் பதில் அறிக்கை இது.
 ---------------------------------


Ranjakumar Somapala S நேற்றையுடன் பிள்ளையார் கதை முடிந்துவிட்டது என்று பயங்கர பீலிங்ஸ்ல இருக்கிறேன். வேணா.... நான் பாவம் அண்ணே.

அது சரி .. நான் குளித்து முழுகி, வேட்டி கட்டி, அங்கவஸ்திரம் தரித்துக் கோயிலுக்கு கோயிலுக்கு செல்கிறேன் என்றெல்லாம் நீங்களே முடிவு எடுக்கிறீங்க ... நாங்கெல்லாம் அதிகமான நேரங்களில் குளித்து, வேட்டி கட்டி, அங்கவஸ்திரம் தரித்துக் கோயிலுக்கு செல்வதில்லை.

நான் கோயிலுக்கு வருகிறேன் என்று பிள்ளையார் அறிந்தால் அவரே தனக்கு படு பயங்கரமாக அபிஷேகத்தை ஒழுங்குசெய்து கொள்கிறார். அந்த அபிஷேகத்தின் போது அவருக்கு நீராட்டம், பாலாபிஷேகம், தேன்அபிஷேகம், ப(ழ)ல smoothie அபிஷேகங்கள் நடக்கும். அப்புறம் செம செக்சியாக வேட்டி, அங்கவஸ்திரம் அணிந்து அங்கு வரும் பல பக்தகேடிகளுக்கு அருள்வளங்குவது போல சீன் போடுவார் அவர்.

நம்மூரில் இரவுநேரத்தில்தான் பூஜை ( I mean சுவாமிக்கு செய்யும் பூஜை). நான் சாப்பிட மட்டுமே அங்கு செல்வேன். அதாவது பூஜைமுடிந்து 15 நிமிடத்தின்பின். அப்போதுதான் சாப்பாடு தயாராக இருக்கும். ஆனால் பக்தர்கள் சாப்பிடத்தொடங்கியிருக்கமாட்டார்கள்.

இப்போதெல்லாம் ”எங்கே அந்த ராப்பிச்சை” என்று பக்கதர்கள் கேட்குமளவுக்கு நான் பிரபல்யம் அடைந்திருக்கிறேன். குழந்தைகள் என்னை மோதக மாம்ஸ் என்று அழைக்கிறார்கள். விடுமுறையின் போது வாங்கிவந்த காஸ்ட்லியான புடவைகளை கட்டிவரும்ஆன்டிமார் பாவம் இந்த அழகான இளைஞன் என்று கடைக்கண்ணால் பார்க்கிறார்கள் (பிள்ளையார் குமட்டுக்குள் சிரிக்கிறார்). கோயில் ஜயா இராப்பிச்சைக்காக தனியே ஸ்பெசலாக மோதகம் தொடக்கம் பஞ்சாமிர்தம்வரை எடுத்து வைக்கிறார். சிலவேளைகளில் வீட்டுக்கு கொண்டுசெல்ல கட்டியும் தருகிறார். சாப்பிட்டு முடிந்ததும் பால் டீ வேறு தருகிறார்கள்.

இந்த பால் டீ போடுபவர்பற்றி ஒருசுவையான கதையிருக்கிறது. டீ போடுபவர் Mr & Mrs சிவபெருமானின் இளைய மகனாகிய முருகனின் பிரதரில் படுபயங்கரமான பக்தர். இடுப்புக்கு மேல் ஒரு சிறு துணியும் இன்றி படு செக்சியாக நிற்பார். அவரளவுக்கு என்னால் மேலாடை இன்றி, அதுவும் பல ஆன்டிமார் முன்னிலையில் எனது one packஐ காட்டியபடி நிற்பது கூச்சமாய் இருக்கிறது. அவருக்கும் one bag மன்னிக்கவும் one packதான் ஆனாலும் மனிதர் நெஞ்சை திறந்துகாட்டிக்கொண்டு‌ செம செக்சியாக நிற்பார். இவருக்கு முன்று முறை heart attack வந்திருக்கிறது. பல பல தாக்குதல்களை (attack) சமாளித்தவர் என்பதால் நான் அவரை கேர்னல் என்று அழைக்கத்தொடங்கியிருக்கிறேன். கோர்னல் எவருக்கும் பயப்படமாட்டார் திருமதி கேர்னலைத்தவிர்த்து. கோனலும் நானும் படு பயங்கரமான நண்பர்ளாகிவிட்டோம். நேற்று ஒரு பெட்டி நிறைய மோதகத்தை எனக்காக ஒளித்துவைத்திருந்தார் என்றால் பாருங்களேன்.

சரி மீண்டும் எங்கள் கதைக்கு வருவோம்..

ஆரம்பத்தல் மோதகம் மட்டுமே கிடைத்தது. இப்போது நான் வீடுசெல்லும் போது வடை, தோசை, சம்பல், கடலை, சுண்டல், சாதம், பொங்கல் என்று என்னால் தூக்கமுடியாத அளவுக்கு ராப்பிச்சை போடுகிறார்கள். சாமி சத்தியமாக என் வீட்டில் சமைத்து ஒரு மாதமாகிவிட்டது.

இவ்வளவு வசதி உங்கள் ஊரில் இருக்கிறதா? இரண்டு நாட்களுக்கு முன் செய்து, காய்ந்து கருவாடாய்ப்போன மோதகத்தை பல டாலர்கள் ‌கொடுத்து கடையில்வாங்கிவிட்டு, இலங்கையில் மனிதவுரிமை மீறல் நடைபெறவே இல்லை என்று கூறும் மேர்வின் டீ சில்வாவைப் போல ”அவுஸ்திரேலியா நோர்வேயை விட நல்ல நாடு” என்று அறிக்கை விடுகிறீர்கள்.

அண்ணை!  நீங்கள் அறிக்கைவிடப்படாது. அப்புறம் என்னவாகும் என்று தெரியும்தானே (அட ....  அடுத்த பதிவுக்கு தலைப்புகிடைத்துவிட்டது)

பி.கு: இதை எழுதும்போது 3 மோதகங்கள் சாப்பிட்டேன். இன்னும் 7 - 8 சேமிப்பில் இருக்கிறது.

எப்பூடீடீ?

அண்ணை! மீண்டும் முருக்கைமரத்தில் ஏறாதீங்கோ - வ. ஜ. ச ஜெயபாலனுக்கு இரண்டாவது பகிரங்கக் கடிதம்

அண்ணைக்கு  இன்னுமாரு வணக்கம்!

உங்களின் முகப்புத்தக நண்பர்கள் எதிர்பார்த்தது போலவும் நான் எதிர்பார்த்தது போலவும் நீங்கள் இம்முறையும் உங்களின் அறிக்கைகளை கோழைபோன்று அழித்துவிட்டீர்கள்.
உங்களின் புழுகுமூட்டைகளுக்கு காட்டமான பதில்கள் மற்றும் உங்களை திணறவைத்த, பதில்சொல்ல முடியாத கேள்விகளை கேட்கும்போது உங்களின் தாக்குதல் அறிக்கைகளை அழித்துவிட்டு சமரசக் கரங்களை உங்களுக்கு சாதகமான முறையில் உயர்த்தியபடி ”இனி பேச ஒன்றும் இல்லை, கொளரவமாக விலகிக்கொள்வோம்” என்று அறிக்கைவிட்டிருக்கிறீர்கள்.

நான் கேட்ட ஒரு கேள்விக்கும் உங்களால் பதில்சொல்ல முடியவில்லையே. பிறகு எப்படி நாம் கொளரவமாக விலகிக்கொள்வது?

இத்துடன் உங்கள் ”தோழமையுடன் ஒரு குரல்” புத்தகத்தை எழுநா வெளியிட்டிருக்கிறது என்பதற்கான ஆதாரமாக புகைப்படத்தினையும் இணைத்திருக்கிறேன். விரும்பினால் பார்த்துக்கொள்ளுங்கள்.

இதை இவ்விடத்தில் நிறுத்திக்கொண்டு, அடுத்த விடயத்துக்குப் போவோம்.

இன்று யாழ் இணையத்தில் இருந்த உங்களின்  பதிவில் இருந்த வசனங்களை இங்கு தருகிறேன்

//பனையால் விழுந்த என்மீது சஞ்சயன் போன்றோர் ஓயாமல் தொடுத்த தாக்குதல்களால் சினப்பட்டு  ^^மறைமுக அரசு ஆதரவாளர்களரும் கோமாளியுமான சஞ்சயன்^^ என்று எழுதியமைக்கு வருந்துகிறேன்.//

அண்ணை! யாரவது ஒரு பெருமரியாதைக்குரிய ஒரு மனிதர் நீங்கள் கூறியதை எனக்குக் கூறியிருந்தால் நான் மனவருத்தப்பட்டிருப்பேன். கூறியது நீங்கள்தானே. எனவே மனவருத்தப்படுவதற்கு ஒன்றும் இல்லை. கவலைப்படாதீர்கள். Take it easy அண்ண‌ை.

தவிர,  இன்றைய உங்களின் பின்வாங்கல் அறிக்கையில் பனையால் விழுந்த உங்களை நான் ஓயாமல் தாக்கினேன் என்றிருக்கிறீர்கள் அல்லவா. அண்ணை! சத்தியாமாக உங்களுக்கு வயதாகிவிட்டதால் அடிக்கடி நினைவுதப்புகிறதோ என்று எண்ணத்தோன்றுகிறது.

நான் எங்கே, எப்போது, எப்படி உங்களை ஓயாமல் தாக்கினேன் என்பதை சற்று விளக்கமாக, ஆதாரங்களுடன் கூறமுடியுமா?

ஒரு உண்மை தெரியுமா அண்ணை! உங்களின் ‌கைதுபற்றி, உங்களை விமானநிலையத்தில் இருந்து அழைத்துவந்த நோர்வேஜிய நண்பரிடம் யார் சொன்னது என்று அவரிடமே கேட்டுப்பாருங்கள்.

உங்களுடன் தொலைபேசியில் உரையாடி,  அவருக்கு  தொடர்ந்தும் உங்களின் நிலமைபற்றி தினமும் அறிவித்தது யார் என்று கேளுங்கள். இதை உங்களின் பாரியாரும் அறிவார்.

இலங்கையில் உள்ள நோர்வேஜிய தூதுவருக்கு செய்தியை அறிவித்தவர் யார் என்பதையும் கேட்டுப்பாருங்கள். அதன் பின்புலத்தில் யார் இருந்தார்கள் என்றும் கேட்டுப்பாருங்கள்.

நோர்வேயில் உள்ள சில முக்கிய தமிழர்கள் மூலம் நீங்கள் வாய்கிழியக் கிழியக் பாராட்டும் உங்கள் நண்பர் ஏரிக் சூல்ஹைம் அவர்களுக்கு செய்தி அனுப்பியது யார் என்றும் விசாரியுங்கள்.

நீங்கள் நோர்வே வந்திறங்கியபோது உங்களின் தமிழ் நண்பர்கள் யாராவது அங்கிருந்தார்களா? உங்களின் பாரியாரும், அந்த நோர்வேஜிய நண்பரும், நானும் தான் அங்கிருந்தோம். இதை உங்களால் மறுக்கமுடியுமா?

இவ்வளவும் கவிஞன் ஜெயபாலன் மீது இருந்த மரியாதையின் காரணமாகவே செய்யப்பட்டது. உங்களின் திருகுதாளங்கள், சில்மிசங்கள் என்பவற்றை ஊரே அறியும். இருப்பினும் உங்கள் கவிதைமேல் ஒரு மரியாதை இருந்தது. உங்களிடமும் மரியாதை இருந்தது.

ஆனால் இப்போது உங்களைப்பற்றி ஒருவித மரியாதையான எண்ணமும் இல்லை. உங்களுடன் அறிமுகமானதையிட்டும் வெட்கப்படுகிறேன்.

நீங்கள் ஒரு போலியான சமூகப்போராளி என்பதை நீங்களே உங்கள் அறிக்கைகள் மூலம் உலகத்துக்கே எடுத்துக்கூறியிருக்கிறீர்கள்.

உங்களைப்போன்ற பிரபல்யம் மீது தீராக் காமம் கொணடவர்கள் எங்கள் சமூகத்தின் சாபங்கள்.

தேவை ஏற்படின் மட்டக்களப்பில் இருகைகளையும் இழந்த ஒரு போராளிக்கு நோர்வே அரசின் உதவியுடன் கைகளைபூட்டித்தருகிறேன் என்று நீங்கள் பிலிம் காட்டியதைப்பற்றியும் நாம் பொதுவெளியில் பேசிக்கொள்வோம்.

உங்கள் வில்லத்தனங்களை திரைப்படத்துறையுடன் நிறுத்திக்கொள்ளுங்கள் எங்கள் சமூகத்தை உங்களின் வில்லத்தனத்திற்கு ஆடுகளமாக்காதீர்கள்.



நன்றி

தோழமையுடன்
சஞ்சயன்

அண்ணை! இனியாவது பொய் சொல்லாதீங்கோ - வ. ஜ. ச ஜெயபாலனுக்கு பகிரங்கக் கடிதம்

பேரன்புமிக்க வ.ஜ.ச ஜெயபாலன் அண்ணருக்கு!

அண்ணை!

எனது நண்பர் ஒருவர் சற்றுமுன் தொலைபேசியில ”அண்ணரின் அறிக்கையை வாசித்தாயா” என்று பேச்சை ஆரம்பித்து, இன்றைய (05.12.13) உங்கள் முகப்புத்தக செய்தியை பதிவு / அறிக்கையை அறியத்தந்தார்.

இதுதான் உங்கள் பதிவு / அறிக்கை:

என்னுடைய தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பான கட்டுரைகளை எழுநா தோழமையுடன் ஒரு குரல் என்ற பெயரில் வெளியிட்டது அறிந்ததே. நெடுநாட்க்களாக முடக்கப்பட்டிருந்த மேற்படி புத்தகம் தொடர்பாக நான் கண்டனக் குரல் கொடுத்ததும் நீங்கள் அறிந்ததே.

தற்போது பாதுகாப்பு பிரச்சினையை காரணம்காட்டி அந்த கட்டுரை தொகுப்பை வெளியிடும் முயற்ச்சியை எழுநா கைவிட்டுள்ளது. இந்தியாவில் அந்த புத்தகத்தை வெளியிட விரும்பும் பதிப்பகத்தார் என்னுடன் தொடர்புகொள்ளவும்.

இவை நிற்க,

சிலவாரங்களுக்கு முன் இந்தியாவில் இருந்து எழுநா சார்பில் ”டிஸ்கவரி புக்பேலஸ்” என்னும் நிறுவனம் சில புத்தகங்களை அனுப்பியிருந்தது.

அதில் ஒரு புத்தகத்தில் வ.ஐ.ச ஜெயபாலன் என்று இருந்தது. சற்று உற்றுப்பார்த்தேன், சத்தியமாக உங்கள் பெயர்தான் அது. உங்களை நன்கு அறிவேன் என்பதால் புத்தகத்தின் தலைப்பையும் பார்த்தேன். அது இப்படி இருந்தது. ”தோழமையுடன் ஒரு குரல்”  ”முஸ்ஸீம் தேசியமும் தமிழ்-முஸ்ஸீம் உறவுகளும்”

இப்பவும் அந்தப் புத்தகத்தை எனக்கருகில் வைத்திருந்தபடியேதான் இதையும் எழுதுகிறேன். அத்துடன் உங்களின் புத்தகம் நோர்வேயில் உள்ள பலரிடம் உண்டு என்பதையும் அறியத்தருகிறேன்

அண்ணை!  உங்களின் இன்றைய அறிக்கையையும் வாசித்தேன். புத்தகத்தையும் பார்த்தேன். எனக்கு ஒன்றும் புரியவில்லை. நீங்கள் இந்தப் புத்தகத்தை எழுநா வெளியிட மறுப்பதாக எழுதுகிறீர்கள். ஆனால் என் கண்களுக்கு முன்னால் ஒருவித நீல நிற முன்னட்டையுடன் நீங்கள் கூறும் புத்தத்தை எழுநா வெளியிட்டுள்ளது என்று இருக்கிறது.

அண்ணை! நீங்கள் திரைப்படத்துறையில் இருப்பதால்  என்னிடம் இருப்பது கமரா கொப்பியாக இருக்குமோ என்னும் சந்தேகமும் வருகிறது.

அண்ணை! இதுவும் இந்த இடத்தில் நிற்கட்டும்.

காலச்சக்கரத்தை ஒரு சில மாதங்களுக்கு முன்னான பகுதிக்கு பின்நோக்கி மெதுவாகச் சுளற்றுங்கள்.

நீங்கள் போர்க்குற்றவாளிகளின் / பேரினவாதிகளின் சிறைசென்று மீளுமுன், இந்தியாவில் இருந்தபடியே ”யாழ்பாணத்தில் நடக்கவிருக்கும் ஒரு புத்தகவிழாவில், எனது புத்தகமான ”தோழமையுடன் ஒரு குரல்” புத்தகம் அறிமுகம் செய்யப்படுவதை குறிப்பிட்ட ஒரு நபர் தடுக்கிறார்” என்று ”அறிக்கை”விட்டீர்களே, அது நினைவிருக்கிறதா?

அதிக அறிக்கைகளை அடிக்கடி வெளியிடுபவரல்லவா நீங்கள். சிலவேளைகளில் மறந்திருக்கும். அதுதான் நினைவூட்டுகிறேன்.

மேற்குறிப்பிட்ட அந்த அறிக்கைக்கு பதிலளித்த சரிநிகர் சிவகுமார்  உங்களின் கருத்து பிழையானது என்று அவர் தந்திருந்த பதிலினைத்தொடர்ந்து நீங்கள் அப்பதிவினை முகப்புத்தகத்தில் இருந்து நீக்கியிருந்ததையும் உங்களுக்கு இவ்விடத்தில் நினைவூட்டவிரும்புகிறேன்.

அன்று நீங்கள் முகப்புத்தகத்தில் கூறியது பச்சைப் பொய் என்பதை பலரைப்போல் நானும் அறிந்திருந்தேன். உங்கள் ”அறிக்கையின்”  உண்மையை அறிந்த பலரும் கண்டனம் அல்லது மறுப்பு தெரிவித்திருந்தார்கள் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.

இதுவும் இவ்விடத்தில் நிற்கட்டும்.

அடியேனும் எழுநாவினூடாக ஒரு புத்தகத்தினை சென்ற வருடம் வெளியிட்டிருந்தேன். எனவே  ஒரு புத்தகத்தை அவர்கள் வெளியிடமுன், வெளியிட்டபின் எவ்வாறு நடந்துகொள்வார்கள் என்பதுபற்றியும், அவர்கள் எந்தளவுக்கு தொடர்புகளை பேணுவார்கள் என்பது பற்றியும் நானும் மிக மிக நன்கு அறிவேன்.

இதுதவிர, புத்தகம் வெளிவந்ததும் ”டிஸ்கவரி புக் பேலஸ்” நிறுவனத்தினர் எழுத்தாளர்களுக்கு புத்தகங்களை அனுப்பிவைப்பார்கள் என்பதையும் நான்மிக நன்கு அறிவேன். உங்களுக்கும் அவர்கள் புத்தகத்தை அனுப்பியிருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இலங்கையில் நீங்கள் இப் புத்தகத்தை சிலரிடம் காட்டியிருக்கிறீர்கள் என்று அறியவும் கிடைத்தது. எனவே புத்தகம் உங்களை வந்தடைந்திருக்கிறது.

இதுவும் இவ்விடத்தில் நிற்கட்டும்.

உங்களிடம் சில கேள்விகளை கேட்கவிருக்கிறேன்.

கேள்வி 1:

இவ்விடத்தில் கேள்வியினை கேட்க முதல் உங்கள் முகப்புத்தக அறிக்கையில் நீங்கள் என்ன எழுதியிருக்கிறீர்கள் என்பதை மீண்டும் நினைவூட்டுகிறேன்.

என்னுடைய தமிழ் முஸ்லிம் உறவு தொடர்பான கட்டுரைகளை எழுநா தோழமையுடன் ஒரு குரல் என்ற பெயரில் வெளியிட்டது அறிந்ததே. நெடுநாட்க்களாக முடக்கப்பட்டிருந்த மேற்படி புத்தகம் தொடர்பாக நான் கண்டனக் குரல் கொடுத்ததும் நீங்கள் அறிந்ததே.

தற்போது பாதுகாப்பு பிரச்சினையை காரணம்காட்டி அந்த கட்டுரை தொகுப்பை வெளியிடும் முயற்ச்சியை எழுநா கைவிட்டுள்ளது. இந்தியாவில் அந்த புத்தகத்தை வெளியிட விரும்பும் பதிப்பகத்தார் என்னுடன் தொடர்புகொள்ளவும்.


அண்ணை! உங்கள் ”தோழமையுடன் ஒரு குரல்” என்னும் புத்தகத்தை எழுநா  ”பாதுகாப்பு காரணங்களைக்காட்டி வெளியிட மறுத்திருக்கிறது என்று நீங்கள் இன்று (05.12.13) கூறுகிறீர்கள் அல்லவா? ஆக இன்றைய தினம்வரையில் அப்புத்தகம் இன்னும் வெளிவரவில்லை என்பதுதானே உங்கள் கருத்து.

அப்படியாயின் சில காலங்களுக்குமுன் நீங்கள் ”யாழ்பாணத்தில் நடக்கவிருக்கும் ஒரு புத்தகவிழாவில் எனது புத்தகமான ”தோழமையுடன் ஒரு குரல்” புத்தகம் அறிமுகம் செய்யப்படுவதை குறிப்பிட்ட ஒரு நபர் தடுக்கிறார்” என்று அறிக்கைவிட்டதற்கான காரணம் என்ன?

உங்கள்  அறிக்கையின்படி, இன்றுவரையில் வெளிவராத அந்தப் புத்தகத்தை யாழ்ப்பாணத்தில் சில மாதங்களுக்கு முன் நடந்த எழுநாவின் புத்தக அறிமுகவிழாவில் அறிமுகப்படுத்துவதை ஒருவர் தடுத்தார் என்று நீங்கள் எப்படி‌க் கூறலாம்? வெளிவராத புத்தகத்தை யாரேனும் அறிமுகம் செய்வார்களா?

கேள்வி புரியும் என்று நினைக்கிறேன். (உங்களுக்கா புரியாது)

கேள்வி 2:

அப் புத்தகம் அன்று வெளிவந்திருந்தது என்றால் இன்றைய (05.12.13) அறிக்கையை நீங்கள் வெளியிடவேண்டிய அவசியம் என்ன?

கேள்வி 3:

நெடுநாட்களாக முடக்கப்பட்டிருந்த மேற்படி புத்தகம் தொடர்பாக நான் கண்டனக் குரல் கொடுத்ததும் நீங்கள் அறிந்ததே”  நீஙகள் இந்த கண்டனக் குரலைக் கொடுத்தபோது சரிநிகர் சிவகுமார் அதற்கு நெத்தியடியாக தந்த பதிலின்பின், நீங்கள் உங்களின கண்டனத்தை முகப்புத்தகத்தில் இருந்தே அழித்திருந்ததை மீண்டும் உங்களுக்கு நினைவூட்டுகிறேன். ஆக உங்களுக்கு சிவகுமாரின் பதில் உண்மையை விளக்கியிருக்கிறது. எனவே அதை அழித்தீர்கள். ஆனால் இன்று மீண்டும் அதேமாதிரியான கண்டனத்தை வெளியிடுகிறிர்கள்.


கேள்வி 4

எழுநா உங்களின் புத்தகத்தை வெளியிடும் முயற்சியை கைவிட்டுள்ளது என்கிறீர்களே. அதற்கான ஆதாரத்தை நீங்கள் முன்வைத்திருக்வேண்டுமல்லவா?

அண்ணை! மேற்கூறியவற்றைப் கோர்த்துப்பார்க்கும்போது நீங்கள் வெளியிட்ட அறிக்கைகள் எவ்வளவு மலிந்த, கீழ்த்தரமான எண்ணங்களை உள்ளடக்கியவை என்பதை நான் கூறவேண்டியதில்லை. உங்களின் பிரபல்பயம், அனுதாபம் தேடும் ஆடுகளங்களுக்கு சமூகத்தினையும், சமுகத்தில் இயங்கும் இலாபநோக்கற்ற நிறுவனங்ளையும், அங்கு இயங்கும் மனிதர்களையும் பாவிக்காதீர்கள்.

இனங்களுகளுக்கிடையில் ஒற்றுமையை பேசுகிறீர்கள்.  முதலில் உங்கள் எழுத்துடனும், உண்மையுடனும், மனதுடனும் ஒற்றுமையாயிருங்கள்.

அண்ணை! உங்களின் நேர்மையற்ற ஆடுகளங்களை இன்றுடன் நிறுத்திக்கொள்ளுங்கள். பெரியமனிதர் என்று வைத்திருந்த அத்தனை மரியாதையையும் அழித்துக்கொண்‌டிருக்கிறீர்கள். உங்களை அறிந்தவர்கள் முன் நகைக்கிடமாகியிருக்கிறீர்கள்.

அண்ணை! சாதாரணமாக பகிரங்கமாக குற்றம் சுமத்துபவன் நான் அல்லன். அது அநாகரீகமானது என்பதை அறிவேன். ஆனால் நீங்கள் அளவுக்கதிகமாக  எல்லைகளை மீறியிருக்கிறீர்கள். எத்தனை எத்தனை பொய்களை அள்ளி அள்ளி வீசியிருக்கிறீர்கள். இப்போது சமூக அமைப்புக்களையும் கேவலப்படுத்துகிறீர்கள். எனவே நானும் எனது எல்லைகளை மீறவேண்டியிருக்கிறது.

உங்களைப்போல் பிரபல்யத்துக்காக சமூகப்போராளியாகும் மனிதர்களாலேயே எம் சமூகம் இப்படி இருக்கிறது. உங்களைப்போன்றவர்களுக்கும் ஜால்ராக்கள் இருக்கத்தான் செய்கின்றன என்பதுதான் கசப்பான யதார்த்தம்.

உங்களின்  சிறைமீண்ட அறிக்கைக்கு கருத்து தெரிவித்தபோது நாம் இது பற்றிப் நேரில்பேசுவோம் என்ற தொனியில் எழுதியிருந்தீர்கள்.  மறு கணம் என்னை நீங்கள் உங்கள் முகப்புத்தகத்தில் இருந்து தடைசெய்திருந்தீர்கள்.

ஆனால் யாழ்ப்பாணத்தில் ஊடகச்சுதந்திரம்பற்றிப் பேசினீர்கள்.

அன்று உங்களுக்கு கூறிய பதிலையே நான் இன்றும் கூறுகிறேன். ”வாருங்கள் எங்கும் எதிலும் பேசிக்கொள்ளலாம்”

முடிந்தால் பதில்தாருங்கள்.

தயவு செய்து ஒரு வேண்டுகோள்!

தமிழ்த் திரைப்படங்களின் கிளைமாக்ஸ் நேரங்களில் எதுவும் நடக்கலாம் என்பது போல எனது முகப்புத்தத்தை ”யாரோ hack செய்திட்டாங்கள்” அது, நான் எழுதாத பதிவு / அறிக்கை என்று சொல்லிவிடாதீர்கள், முகப்புத்தகம் தாங்காது.


தோ‌ழமையுடன்
சஞ்சயன்


மரத்திலான வீடு ஒன்றில் ஒரு சிறுக்கி

நான் வாழ்வது மரத்திலான வீடு ஒன்றில். அதுவும் கீழ்மாடியில். மேல்மாடியில் வீட்டின் உரிமையாளர்கள் வாழ்கிறார்கள்.

முன்பொரு காலத்தில் எங்கள் வீடும் மரத்திலான இரு மாடிகளைக்கொண்ட வீடாக இருந்தது.

நான் இப்போது வாழும் வீட்டில் 3 சிறுக்கிகள் இருக்கிறார்கள்.  3, 5, 11 வயது அவர்களுக்கு. 3 வயதுக்காறிக்கு நடப்பது என்றால் என்ன என்றே தெரியாது போன்று எப்பொழுதும் ஓடிக்கொண்டே இருப்பாள்.

முன்பு எங்கள் வீட்டிலும் எனது இளையமகள் பூக்குட்டியும் நடப்பது என்பதை மறந்திருந்த காலமொன்று இருந்தது.

இன்று காலை  பலத்த தலைவலியுடன் எழும்பியபோது இன்றைய காலைப்பொழுது மிகவும் கனத்துடனுடம், சோர்வுடனும் விடிந்திருந்ததை உணர்ந்தேன்.

அந்தநேரம்பார்த்து மேல் வீட்டில்வாழும் சின்னஞ்சிறிய சிறுக்கி எனது  கட்டிலுக்கு நேரே மேலே அவர்களது வீட்டினுள் ஓடித்திரியும் சத்தம் தெளிவாகக்கேட்டது. தகப்பனும் அவள் பின்னால் ஓடித்திரிந்தார். பலத்த சிரிப்புச் சத்தமும் கேட்டது.

தடால் என்று ஒரு பெருஞ்சத்தம் கேட்டு அடுத்தநொடி அவள் வீரிட்டழும் சத்தமும் கேட்டது. தகப்பன் அவளை துக்கிஅணைத்திருக்கவேண்டும் அழுகைச் சத்தம் சற்றுநேரத்தில் அடங்கியும்விட்டது.

எனது நினைவுகள் விளித்துக்கொண்டு பெருவேகத்துடன் நர்த்தனமாடத்தொடங்கின. என் தலைவலி காணாதுபோயிற்று. காற்றில் மிதந்துகொண்டிருந்தேன். அவ்வப்பொது கண்கள்பனித்தன, நெஞ்சு விம்மிற்று.

பெண்குழந்தைகளுக்கு தந்தையாய் இருக்கக்கிடைக்கும் பாக்கியம் பெரும்பாக்கியம். அற்புதமான அனுபவம்.

எனது வாழ்வின் குழந்தைகளுடனான  காலங்களின்போது நான் வாழ்க்கையின் இனிமையினை திகட்டத் திகட்டத் தின்று தீர்த்த நாட்கள் அவை.

பெண்குழந்தைகளிடம் எப்போதும் அழகும், தந்தையுடனான அட்டகாசமும் தேவைக்கு அதிகமாய் இருக்கும். அவர்களின் அட்டகாசங்களுக்கு ஈடுகொடுப்பதற்கு உங்களிடம் உள்ள குழந்தைத்தனத்தை நீங்கள் மீட்டுக்கொள்ளவேண்டும். முட்டாளாய் நடிக்கவும் அதை ரசிக்கவும் தெரிந்திருக்கவேண்டும்.

என்னைக் குழந்தையாயும், அவர்களைத் தந்தையாயும் நினைத்து மூத்தவளும் இளையவளும் காட்டிய கூத்துக்கள், யானையாய் அவர்கள் இருவரையும் தூக்கித் திரிந்தநாட்கள், உப்பு  மூட்டை விளையாட்டு, பொம்மைகனை நீராட்டி உடைமாற்றி, தள்ளுவண்டியில் தள்ளியபடியே சென்ற உலாக்கள், மிதி வண்டிப்பயணங்கள், காட்டுக்குள் இருந்த எங்கள் இரகசிய நீரோடை, என்காதில் குசுகுசுக்கப்பட்ட மந்திரச்சொற்களுக்கு ஏமாந்த சோணகிரியாய் நான் நடத்த நாட்கள், படுக்கையில் இருந்தபடியே என்னை அழைத்து கட்டியணைத்து ” நீ தான் உலகிலேயே சிறந்த அப்பா” என்னும் மந்திரச்சொற்கள், சுகயீனம் என்றால் என்நெஞ்சிலேயே உறங்கிப்போகும் அவர்கள். அவர்களின் சீரான மூச்சில் எனது என் மனம் முழுவதும் அமைதியை உணர்வது..

இப்படி எத்தனை எத்தனையே நினைவுகளை மீட்டுத் தந்தது மேல்வீட்டுச் சிறுக்கியின் காலடி ஓசை.

இன்றைய நாள் அழகாக ஆரம்பித்திருக்கிறது.

உங்களுக்கும் அழகாய் இருக்கக் கடவதாக.

வெறிகாரர்களும், வெறிகாறிகளும் ஒரு கதைசொல்லியும்

நானும் எத்தனையோ குடிகாரர்கள், வெறிகாரர்கள், வெறிகாறிகளைக் கண்டிருக்கிறேன். அவர்களுடன் பழகியிருக்கிறேன்.

1980ல் செங்கலடியில் முதலாவது அனுபவம் கிடைத்தது. அன்று அந்த நண்பன் குடித்தது பிளேன் டீ நிறத்தில் இருந்த தென்னஞ்சாராயம்.  ஆனால் எடுத்த வாந்தியோ ஈஸ்மன்கலர் சித்திரமாய் இருந்தது.

பின்பு 1986 இல்  இந்தியாவில் இரண்டு, முன்று புதிய குடிகாரர்களுடன் தினமும் இரவில் மொட்டைமாடியில் பெரும்பாடுபட்டிருக்கிறேன். அவர்களில் ஒருவன் எனது மடியில் படுத்திருந்தே குடித்தான். சிரித்தான். காதலில் உருகினான், அழுதான். வாந்தியெடுத்தான். நான் தினமும்  அவனையும் கழுவி, மொட்டைமாடியையும் கழுவிய நாட்கள் அவை.

பின்பு நோர்வே வந்தபின்னும் வெறிகார்களுக்கும் எனக்குமான உறவு மிகவும் நெருக்கமாக இருந்திருக்கிறது. போத்தலும் கிளாசும் போன்று. 

எத்தனையோ இம்சையரசர்களை சந்தித்திருக்கிறேன். பழகியிருக்கிறேன். மணிக்கணக்காக அலட்டல் கதைகளை  கேட்டுமிருக்கிறேன். வாந்திகளை சுத்தப்படுத்தி, தலைக்கு தேசிக்காய் தேய்த்து குளிப்பாட்டியுமிருக்கிறேன்.

தங்களை TMS, பாலசுப்ரமணியம், ஜேசுதாஸ் என்று நினைத்த கழுதைகளின் பாட்டுக்கச்சேரிகளை எனது விதிய‌ை நொந்தபடியே கேட்டிருக்கிறேன்.

சோமபானம் தந்த வீரத்தால் போலீசுக்குச் சென்றவர்களை மீட்டு அழைத்துவந்திருக்கிறேன். அந்த வீரர்களின் அழகிய ராட்சசிகள் உண்மையான ராட்சசிகளாகமாறியதையும் கண்டிருக்கிறேன்.

கடும் பனிக்காலத்தில் சாரத்தைக் (கைலி) களற்றி காது குளிர்கிறது என்பதனால் தலையில் சுற்றியபடியே தெருவில் அழகிய அங்கங்கள் ஆட ஆட நடந்த பெருமனிதர்களோடும் பழகியிருக்கிறேன்.

ஒரு மாலைப்பொழுதில் 99 பெண்களுக்கு முத்தமிடடுவிட்டேன் என்று கூறி, பினபு 100 பெண்ணைத் தேடித்திரிந்தவரை சமாளித்து வீட்டுக்கு அழைத்துவந்திருக்கிறேன்.

ஒரே ஒரு விஸ்க்கிப்போத்தலால் ஈழத்தின் அரசியல் பிரச்சனைக்கு தீர்வு கண்ட பெரும் அரசியல்வாதிகளையும் சந்திக்கக்கிடைத்திருக்கிறது.

குடியும் குடித்தனமுமாய் இருந்து போய்ச்சேர்ந்த நண்பனை  சுடுகாடுவரை அழைத்தும்போய் அவன் எரிந்துருகியதையும் கண்டுமிருக்கிறேன்.

ஆனால், நேற்று ஒருவர் சற்று பதத்தில் இருந்துபோது காட்டிய கூத்து கொஞ்ச நஞ்சமல்ல.

நேற்றைய மனிதர் என்னை 
கடித்துக் குதறி,
சப்பி,
மென்று,
தின்று,
குற்றுயிராக்கிவிட்டார்.

என்ட ஒஸ்லோ முருகன் சத்தியமாகச் சொல்கிறேன்

நேற்றைய மனிதர்போன்று எவரையும் நான் சந்தித்ததில்லை. இன்று காலை எழும்பியபோது காது வலித்தது, தலையணையில் சிவப்பாய் ஏதோ இருந்தது. ரத்தமாய் இருக்குமோ?

அல்ப்பமான ஒரு கிளாஸ் பழரசத்தைக் குடித்துவிட்டு இவ்வளவு அழிச்சாட்டியம் பண்ணுவதெல்லாம் அநியாயம்.  குடிகாரர்களின் சரித்திரத்துக்கே இழுக்கு. அதுவும் ஒரு தொலைபேசியினூடாக இரண்டரை மணிநேரமாக  இந்த அழகான அப்பாவியை இம்சைப்படுத்துவதெல்லாம் ரொம்ப ரொம்ப அநியாயம்.

மறுபிறவியல் ஒரு சொட்டு சோபானமும் கிடைக்காதிருப்பதாக என்று அவரை நான் சபிக்கிறேன்.

#நண்பேன்டா!

ராசு அன்டி - நினைவுக் குறிப்புகள்


இன்று காலை விமானநிலையத்தினுள் புகுந்து கொண்டபின்புதான் எனது தொலைபேசியை வாகனத்தினுள் மறந்துவிட்டிருப்பதை உணர்ந்துகொண்டேன்.

அது ஒரு புதுமையான ஆனால் பயங்கர அனுபவம். இன்னும் 3 நாட்களுக்கு எனக்கு தொலைபேசி இருக்காது. எதுவித தொடர்பிலக்கங்களும் என் நினைவில் இல்லை, அம்மாவுடையதைத் தவிர்த்து.

அத்துடன் எனது தொலைபேசியின் உறையினுளே எனது வங்கி அட்டையும் உள்ளதை நினைத்துப் பார்த்த போது மனது சற்றே நடுங்கத்தான் செய்தது. ஒரு பிச்சைக்காரனின் மனநிலையில் நான் இருந்தேன். பெருவெளியில் தனித்து  நிற்கும் பயம் போன்றதொரு உணர்வு மெதுவே எனக்குள் ஊறத்தொடங்கியது. நெஞ்சு அடித்துக்கொண்டது. ஒருவித அசௌகரீயத்தை உணர்ந்தேன்.  பாதுப்பற்றது போன்றதான உணர்வு அதிகரித்தது.

கையில் சிறிது பணம் இருந்தது. பயனத்தை ரத்துச்செய்துவிட்டு அடுத்த விமானத்தில் புறப்படுவோமா என்று சிந்தித்தேன். சிலவேளை அவ்விமானத்தில் இடம் கிடைக்கவில்லை என்றால், அல்லது பயணச்சீட்டின் விலை பல படமடங்கு அதிகமாக இருந்தால் என்று சிந்தனையோடியது.

நாளை எனது இளையமகளுக்கு பிறந்தநாள். கட்டாயமாக அவளைப் பார்க்க விருப்புகிறேன். பல வருடங்கள் அவள் என்னுடன் வாழாவிட்டாலும்  இன்றுவரை அவளின் பிறந்தநாளன்று அவளைச் சந்திக்க கிடைத்திருக்கிறது. இம்முறையும் நான் அதற்காகவே புறப்பட்டேன்.மனதைத் திடப்படுத்திக்கொண்டேன். பயணிப்பது என்று முடிவு செய்து, விமானத்தில் ஏறி லண்டன் வரும்வரை என்னை மறந்து தூங்கிப்போனேன். நல்லவர்கள் செல்லுமிடமெல்லாம் மழைபெய்கிறது என்கிறார்கள். லண்டனில்  நான் இறங்கியபோது மழை பெய்யவில்லை ஆனால்  துறிக்கொண்டிருந்தது.

லண்டனில் இறங்கியதும் நோர்வேஜியப்பணத்தை கொடுத்து இங்கிலாந்து பணத்தை மாற்றிக்கொண்டபோதுதான் உணர்ந்தேன் எனது கையில் இருக்கும் பணத்தின் அளவை. இதற்கு முன் இந்தளவு குறைந்த அளவு பணத்துடன் என்றும் நான் பயணித்ததில்லை. எப்போதும் வங்கியில் பாவிக்கும் மட்டை அட்டை இருப்பாதால் பயம் இருந்ததில்லை, முன்பு.

நேற்று மாலை அம்மா, தொலைபேசியில் ”ராசா … ராசுவின் கணவர் இறந்துவிட்டார். நீ லண்டன்போகும் போது  ராசுவை எனக்காக சந்திக்கவேண்டும்” என்றார். தாய் சொல்லல்லவா, எனவே தட்டமுடியாது. சரி என்றேன். அப்போதுதான், அம்மாவின் நெருங்கிய தோழி ராசு அன்டி தானே எனக்கு உலகப்புகழ்பெற்ற சஞ்சயன் என்று பெயரை வைத்தவர் என்பது நினைவுக்கு வந்தது.

பாரதப்போரில்தான் சஞ்சயன் இருந்தான் என்று நேற்று மாலைவரை நினைத்திருந்தேன். நேற்றைய இலக்கியப் இலக்கியப்பூங்கால் பேராசிரியர் ரகுபதி, சிலப்பதிகாரத்திலும் ஒரு சஞ்சயன் இருந்தான் என்றும், அவன் மன்னிடம் வந்தபோது பல நூறு பெண்கள், நூற்றுக்கணக்கான விகடகவிகள், ஆயிரக்கணக்கான போர்வீர்ர்களுடன் வந்தான் என்று கூறி எனது பெயரின் மகிமையை நோர்வேயின் தமிழ்கூறும் நல்லுலகிற்கு எடுத்துக்கூறிக்கொண்டிருந்தார். நான்  நெஞ்சை நிமிர்த்தி உட்கார்திருந்தபடியே அவரின் விளக்கங்களை ரசித்துக்கொண்டிருந்தேன்.

இரயில் டிக்கட் எடுத்தபோது நான் எதிர்பார்க்காத விலைகேட்டார்கள். திடுக்கிட்டு இவ்வளவு விலையா என்றேன். ஆம் என்று கூறி எனது கையில் இருந்த பணத்தை லபக் என்று உருவி பையில் போட்டுக்கொண்டார் பயணச்சீட்டுவழங்கும் அதிகாரி.

எனது மறதியை திட்டியபடியே புகையிரதத்தில்,சுரங்க ரயிலில், மீண்டும் புகையிரத்தில் என்று ஏறி இறங்கி இறுதியாக ஒரு வாடகை மோட்டார்வாகனத்திலும் ஏறி இறங்கியபோது அம்மாவின் தோழியியான ராசு அன்டியின் வீடு என்முன்னே நின்றிருந்தது.

ராசுஅன்டி பற்றிய  நினைவுகள் 70களின் நடுப்பகுதியில் இருந்தே ஆரம்பிக்கின்றன. கொழும்பு வெள்ளவத்தையில் இருந்தது அவர் வீடு. அது பெரிய வீடு. மாமா ஒரு பெரிய வைத்தியர். சாதாரண  வைத்தியர் அல்ல. மனநலவைத்தியர். அவரது வீட்டைப்போன்று மாமாவும் பெரியவர். அவர்களிடம் ஒரு வோல்க்வெகன் மோட்டார் வாகனம் இருந்தது. அதை கரோலிஸ் என்னும் சிங்களவர் ஓட்டுவார். அவர் அதை ஓட்டாத நேரங்களில் அதை கழுவிக்கொண்டிருப்பார். நாங்கள் அவரை கரோலிஸ் மாமா என்று அழைத்தோம். எங்களுக்கு அவ்வபோது ஜஸ்சொக் வாங்கித்தருவார் அவர்.

ராசு அன்டியின் வீட்டில் சிங்கம் போல ஒரு நாய் இருந்தது. அதன் கூடு ‌கொழும்பு மிருகக்காட்சிச்சாலையில் உள்ள சிங்கத்தின் கூட்டைப்போன்று மிகப்பெரியது. அந்த நாய்க்கு ராசு அன்டி ”சிக்கோ” என்று பெயர் வைத்திருந்தார். அது குரைத்தால் நெஞ்சு அதிரும். நான் கூட்டுக்கு சற்றுத் தள்ளி இருந்து அதற்று ”நெளிப்பு” காட்டுவேன். அப்போது அது அதிகமாகக் குரைக்கும்.  சிக்கோவைப் போன்றே தமிழ்பட நடிகரும், இயக்குனருமான ராஜ்கிரன் படங்களில் எலும்பு சப்புவார் என்று எனக்கு பின்புதான் தெரியவந்தது.

”சிக்கோ” என்னைக் கண்டால் மிகப் பலமாய் குரைத்து,  தனது கூட்டில் காலைவைத்தபடியே குரைக்கும். அது தமிழ்ப்படங்களில் நம்பியார் வரும் காட்சிகளைவிட மிகப்பயங்கரமாக இருக்கும். ராசு அன்டி ”சிக்கோ” என்று அதட்டினால், அது நாய் போல வாலைஆட்டும். அன்டியுடன் நான் சிக்கோவுக்கு உணவுவைப்பேன். அது வாலைஆட்டியபடியே, குனிந்து  சாப்பாட்டாடில் மூழ்கியிருக்கும்போது அதன் முதுகை டக் என்று தடவிவிட்டு ராசு அன்டியின் பின்னால் நின்றுகொள்வேன்.

ராசு அன்டியின் வீட்டில்தான் நான் முதன் முதலில் இரண்டு பெரிய வட்டங்களில் நாடா சுற்றியிருக்கு‌ம் அந்த டேப்ரெக்கொர்டர்ஜ கண்டேன். அன்டி அதில் பக்திப்பாடல் போடுவார். அவர்கள் வீட்டிலேயே கசட் பிளேயர், தொலைக்காட்சிப்பொட்டி ஆகியவற்றை முதன் முதலாகக் கண்டேன். ராசு அன்டி என்னை பேசவைத்து ஒலிப்பதிவு செய்து போட்டுக்காட்டினார். வெட்கமாக இருந்தது எனது இனிமையாக குரலைக்கேட்டபோது.

மாமாவின் அப்பாவும் அங்குதான் வசித்தார். நாம் அவரை பாட்டா என்று அழைத்தோம். அவர் ஒரு பெரிய கணிதமேதையாக இருந்தவர் என்பார்கள். எப்போதும் சாய்மனைக்கதிரையில் உட்கார்ந்திருந்தபடியே எதையாவது எழுதிக்கொண்டிருப்பார். வெள்ளைத்தும்பு போன்றிருக்கும் அவரின் தலைமயிரும் தாடியும். அவருக்கும் எறும்புக்கும் நடைப்போட்டி வைத்தால் எறும்பு வென்றுவிடும் அளவுக்கு மிக வேகமாக நடப்பார் பாட்டா.

அவரிடம் ஒரு அட்டவணை இருந்தது. அது வட்டமாக இருக்கும். அதில் ஒரு பெரிய வட்டமும், சிறிய வட்டமும் இருந்தது. பிறந்த திகதியை அந்த அட்டவணையில் உள்ள சக்கரத்தில் குறிப்பிடும்போது அந்த அட்டவனை நீங்கள் வாரத்தில் எந்த நாளில் பிறந்தீர்கள் என்பதைக் காட்டும். அதைவைத்தே தாத்தா வீட்டுக்கு வரும் எல்லோருக்கும் அவர்கள் வாரத்தில் எந்த நாளில் பிறந்தார்கள் என்று கூறிக்கொண்டே இருந்தார். அவரிடம் இருந்து அட்டவணையைக் கேட்டேன். மனிதர் அசையவே இல்லை.

ராசுஅன்டி அழகானவர். மிக மிக அழகானவர். நீண்ட தலைமுடி இருந்தது அவருக்கு. மாமாவும் அன்டியும் காதலித்து திருமணம் செய்தவர்கள். அவர்களுக்கு குழந்தை கிடைத்தபோது அவர்கள் திருமணமாகி 20 ஆண்டுகள் கடந்திருந்தன. ராமாயணத்தில் வரும் படகோட்டித் தலைவனின் பெயரை தனது மகனுக்கு வைத்தார் ஆன்டி. எனது பெயரையும், மகளின் பெயரையும் வைத்துப்பார்க்கும் போது  ராசுஅன்டி இலக்கியங்களில் ஆர்வமுடையவர் என்று எண்ணத்தோன்றுகிறது.

ராசுஅன்டி கலைநயம் மிக்கவர். அவர் வீடு மிக மிக அழகாக இருக்கும். சமயலறையில் குளிர்சாதனப்பெட்டி இருந்தது. பல விதமான சமயலறைச் சாதனங்கள் இருந்தன. பல நாடுகளின் அலங்காரப் பொருட்கள் அவர் வீட்டில் இருந்தது. விலையுர்ந்த இருக்கைகள் இருந்தன.

1980களுக்குப் பின் ராசுஅன்டியை நான் ஒரே ஒரு தடவை அதுவும் 18 – 19 ஆண்டுகளுக்கு முன் லண்டனில் சந்திது்திருந்தேன். அப்போது அன்டி முன்பைப் போலவே அழகாக இருந்தார்.

வாடகை வாகனத்தில் இருந்து இறங்கிக்கொண்டேன். ராசு அன்டியின் வீட்டு ஜன்னலின் ஊடாக அவரின் வீட்டு மேசையில் இருந்த அனுதாப அட்டைகள் தெரிந்தன. அன்டியின் வீட்டில் அழைப்பு இருக்கவில்லை. ஒரு கைபிடி இருந்தது. அதனைத் தட்டினேன். பதில் இல்லை.

மீண்டும் தட்டினேன். எனது தலையை சரிசெய்துகொண்டேன். உடையை சீர்செய்துகொண்டேன்.  எனக்குள் ஒரு குழந்தையின் குதூகலம் வந்திருந்தது. ராசுஅன்டியுடன் அன்டியின் அக்காவும் இருப்பதாய் அம்மா நேற்று கூறியிந்தார். அன்டியின் அக்கா கனடாவில் இருந்து மரணவீட்டிற்காக வந்திருந்தார்.

கதவருகே யாரோ நடமாடுவது தெரிந்தது. மெதுவாய் கதவினை ராசுஅன்டி திறந்தார்.  என்னைப் பார்த்து நீயார்? என்று கேட்பார் என்று எதிர்பார்த்திருந்தேன். வா வா என்றார். எனக்கு பெருத்த ஏமாற்றமாகிவிட்டது.

என்னைத்தெரியுமா என்றேன். ராசு அன்டி சிரித்தார். உள்ளே வா என்றார்.
உள்ளே நுளைந்தபோது அன்டியின் அக்கா நெற்றியில் கையைவைத்து கண்ணைச்சுருக்கி  ”யார் என்றார்”. அவரைப்பார்த்து தெரியுமா என்னை என்றேன், அவராவது தெரியாது என்பார் என்ற நப்பாசையில்.
அம்மாவின் சிரிப்பு அப்படியே இருக்கிறதே, எப்படி இருக்கிறாய் சஞ்சயன் என்றார் ராசுஅன்டியின் அக்கா.
 
ராசுஅன்டியின் அக்காவும், ராசுஅன்டியும் வெள்ளவத்தையில் அருகருகே குடியிருந்தனர். அந்நாட்களில் ராசுஅன்டியின் அக்காவின் கணவருடன் ராசுஆன்டியின் அக்காவாகிய அன்டிக்கு முறுகல்நிலை இருந்தது. மாமா குடியும் குடித்தனமுமாயும் சற்றே குதிரையில் பந்தயம் கட்டுபவராயும் இருந்தார். இதுதான் பிரச்சனையின் சாரம். மாமாவுடன் அன்டி கதைப்பதில்லை. ஆனால் நேரத்துக்கு சாப்பாடு மேசையில் இருக்கும். மாமா  ஜாலியான மனிதர். சாப்பாட்டுவிடயத்தில்  ஆன்டியுடன் கோபிப்பதில்லை. வஞ்சகம் இல்லாது அன்டியின் சாப்பாட்டை ஒருகைபார்ப்பார். பின்பு மீண்டும் பத்திரிகையுடன் ஒதுங்கிவிடுவார். மாலையில் தேனீர் மேசையில் இருக்கும். மாமா ராஜவாழ்க்கை வாழ்ந்தார். அன்டி எப்போதும் ஓடியாடி வேலைசெய்துகொண்டிருப்பார். அவருக்கு ஆஸ்துமா இருந்தது போலான நினைவிருக்கிறது.

மாமாவுக்கும் அன்டிக்கும் இரண்டு பையன்கள். வெளிநாட்டில் படித்துக்கொண்டிருந்தார்கள். நான் அங்கு சென்றால் அவர்களின் வீட்டுக்கு அருகே ரமணண் என்று ஒரு பையன் இருந்தான். நாம் இருவரும் அருகில் உள்ளவர்களை சேர்த்து கிறிக்கட் விளையாடுவோம்
.
ஒரு நாள் நான் அடித்த பந்து அன்டியின் பக்கத்துவீட்டில் உள்ள கூரையில் தங்கிவிட்டது. அதை எடுப்பதற்காக கூரையில் ஏறியபோது அருகில் இருந்த வீட்டுப் பெண் கூச்சலிட்டு ஊரைக்கூட்டி, ஓடு உடைவதற்கு நான்தான் காரணம் என்றார்.  மாமாதான்  அவருடன் சமாதானப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு எம்மை மீட்டார். அதற்கு கப்பமாக நாங்கள் பந்துவீச மணிக்கணக்காய் மாமா அவுட் ஆகாமலே சில நாட்கள் கிறிக்கட் விளையாடினார். இந்த ஆன்டியின் வீட்டில்தான் நான் விளாம்பழ ஜாம்முடன் பாண் சாப்பிடப்பழகினேன். இன்றும் அப்பழக்கம் இருக்கிறது.

ராசுஅன்டியின் வீட்டின்னுள்ளே சென்று உட்கார்ந்துகொண்டேன். ராசு அன்டி என்முன்னால் உட்கார்ந்திருந்தார். அவரை முதுமையும், நோய்மையும் உருக்குலைந்திருந்தது. முகம் தோல்காய்ந்து சுருங்கிய பேரீச்சம்பழம் போன்று சுருங்கியிருந்தது. கண்கள் குழிவிழுந்திருந்தன. ஆனால் ராசு அன்டியின் குரலில் வசீரம் குறையவில்லை. ராசு அன்டி கூனத்தொடங்கியிருந்தார். தலைமுடி உதிர்ந்திருந்தது. மிக மிக மெதுவாய் நடந்தார். அடிக்கடி உட்காந்துகொண்டார்.

ராசுஅன்டியின் அக்கா அப்போதும் நாம் இருந்த அறைக்கதவை கடந்துவந்திருக்கவில்லை.  அன்றைய காலத்தில் பாட்டா நடந்து திரிந்த வேகத்தில் இன்று அன்டி நடந்து கொண்டிருந்தார்.

மாமாவின் இறுதிக்காலங்கள் பற்றி பேசிக்கொண்டிருந்தோம். ராசுஅன்டி அடிக்கடி எழுந்துசென்று மாமாவின் படத்துக்கு முன்னாலிருந்து விளக்கில் எண்ணை இருக்கிறதா என்று பார்த்துக்கொண்டிருந்தார்.

ராசுஅன்டியின் அக்காவின் ஞாபகசக்தி அவரைவிட்டு விடைபெற்றுக்கொண்டிருப்பதை உணரமுடிந்தது. 86 வயதாகிறது அவருக்கு. எங்கே இருக்கிறாய் என்று அடிக்கடி கேட்டுக்கொண்டே இருந்தார். இடையிடையே அம்மா, அப்பா, எங்கள் குடும்பத்தினர் அவரின் நினைவில் வந்து திடீர் என்று மறைந்துபோயினார்கள். நானும் இயன்றவரையில் அவரின் நினைவுக்கு நினைவூட்ட முயற்சித்துக்கொண்டிருந்தேன். எனது அம்மம்மாவின் அக்காவின் மகன் ஒருவர் 70 களில் இங்கிலாந்து வந்து, ஊரைமறந்துபோனவர். அவருடன் எனது அம்மாவுக்கு மட்டும் தொடர்புண்டு. அவர் இங்கிலாந்து அரச பரம்பரை குடும்பத்தில் உள்ள ஒருவரை திருமணம் செய்திருப்பதாக ஒரு கதையுண்டு. எல்லோரும் அதை நம்புகிறார்கள். என்னைத் தவிர.

ராஜபரம்பரையில் உள்ள எனது ராஜகம்பீர மாமாவை நான் இன்னும் சந்தித்ததில்லை. அம்மா நான் அவரைச் சந்திப்பதை விரும்பவில்லை. அன்றொருநாள் ”நீ அவனிடம் விசர்க்கேள்வி கேட்பாய்”, அவன் அரச குடும்பத்தை சேர்ந்தன். அவனுக்கு அது பிடிக்காதுபோகலாம் என்றார். நான் அவரைச் சந்திக்கும் பொன்நாளுக்காய் காத்திருக்கிறேன்.

இந்த ராஜபரம்பரை மாமாவை ராசுஅன்டியின் அக்காவுக்கு நினைவிருந்தது. அவன் இப்போ அரசகுடும்பத்தவன் என்றார். பல்லைக் கடித்துக்கொண்டு ஓம் ஓம் அன்டி அவர் அரச பரம்பரை என்றால் என்ட அம்மாவும், எனது சகோதர சகோதரிகளும், நானும் கூட அரச பரம்பரை என்றேன் எள்ளலான குரலில். அன்டி  வார்த்தைஏதும் பேசாது தலையை ஆட்டி ‌ஆட்டி அதை ஆமோதித்தார். அவருக்கு  என் எள்ளல் புரியவில்லை.

அவனை, உனது அம்மா இங்கிலாந்து வந்த போது போய் சந்தத்தபோது ”சோதி அக்கா, என்னைப் பார்க்க வந்தீர்களே” என்று பெரிதாய் அழுதானாமே என்றார். ஆன்டி. நான் வார்த்தைஏதும் பேசாது தலையை ஆட்டி ‌ஆட்டி அதை ஆமோதித்தேன்.

திடீர் என்று ”நீ எங்கே இருக்கிறாய்” என்றார், மறுபடியும். இம்முறை ராசுஅன்டிக்கு கோபம் வந்தது. ” அக்கா, உனக்கு மறதி கூடீட்டுது” என்றார். நான் நோர்வேயில் என்றேன்.

அன்டி இருமினார். மீண்டும் மீண்டும் இருமினார். ராசு அன்டி ”தண்ணீர் குடி” என்றார். அன்டி தண்ணீர் குடிப்பதற்கு எழுந்து தண்ணீர்குடிக்கச் சென்றவர், குசினியில் இருந்தபடியே ” எங்க என்னுடைய செருப்பு” என்று கூவவது கேட்டது. ராசு அன்டி தலையை ஆட்டியபடியே அவரை நோக்கி நடந்தார். அப்போதுதான் கவனித்தேன் அன்டியின் ஒரு செருப்பு, ஆன்டி உட்காந்திருந்த இடத்தில் இருப்பதை. அதை எடுத்துப்போய் கொடுத்தேன். எங்கே இருந்தது என்றார். பதில் சொன்னேன். ”வயது பொயிட்டுதுடா” என்றார். எனது வயதான காலத்தை நினைத்துப் பார்த்தேன். குலை நடுங்கியது.

ராசுஅன்டியிடம் கரோலிஸ் மாமாவைப்பற்றிக்கேட்டேன். உனக்கு அவரை நினைவிருக்கிறதா என்றார். அவர் கெகாலையில் இருப்பதாகச் சென்னார். மாமாவின் மரணம் பற்றி அறிவித்தபோது அழுதாராம் என்றார்.
முதுமை ராசுஅன்டியிடம் மட்டும்  குடிவந்திருக்கவில்லை, அவரது வீட்டிலும் ஒரு வித முதுமை தெரிந்தது. வீட்டில் இருந்த பொருட்கள், படங்கள், கலைப்பொருட்கள், தளபாடங்கள் அனைத்திலும் முதுமை தெரிந்தது. வீட்டின் சுவர்கள்கூட முதுமையின் மொழியினை பேசிக்கொண்டிருந்தன.
சுவரில் ஒரு கறுப்புவெள்ளை படததில் மிக இளமையாக ராசு அன்டியும், மாமாவும் சிரித்துக்கொண்டிருந்தனர். ஏறாளமாக புகைப்பட ஆல்பங்கள் தூசுபடிந்துபோய் கிடந்தன. சுவற்றில் பன்னிரெண்டு ராசிகளின் படங்களும் ஒரு பெரிய நெசவுவேலைப்பாட்டில் நெசவுசெய்யப்பட்டிருந்தது. பழைய புத்தகங்கள் புத்தகஅலுமாரியில் இரைந்து கிடந்தன. இதில் உள்ள ஏதாவது தமிழ்ப் புத்தகங்கள் நூலக நிறுவனத்திற்கு பயன்படுமா என்று சிந்தனையோடிதையும் மறைப்பதற்கில்லை.

ராசுஅன்டி சாப்பிடு என்றார். மறுக்கமுடியவில்லை. புட்டும் கத்திரிக்காய் பெரித்துக் குழம்பும், பருப்பும் ருசியாக இருந்தது. உணவினை சூடுகாட்டும் இயந்திரத்துக்கருகில் சாயிபாபாவின் படம் இருந்தது. நான் அவரைப்பார்த்தேன். அவரோ என்னை பார்க்க விரும்பாதது போன்று, எதுவும் பேசாது எங்கோ பார்த்துக்கொண்டிருந்தார். ராசு அன்டி சாயிபாபா பக்தை என்பதை புரிந்துகொண்டேன்.  வயதானவர்களை கலாப்பது அழகல்ல என்பதால் வாய்நுனிவரை வந்ததை அடக்கிக்கொண்டேன்.

இதற்கிடையில் ராசுஅன்டியின் அக்கா மேலும் நாலைந்து தடவைகள் நீ எங்கே இருக்கிறாய் என்று கேட்டுவிட்டார்.  ராசுஅன்டியும் எங்களது சம்பாசனையில் கலந்துகொள்ள ராசுஅன்டியின் அக்கா ”உனது குழந்தைகள், மனைவி எப்படி இருக்கிறார்கள்?” என்று நான் விரும்பாத ஒரு சிக்கலான கேள்வியை எடுத்துப்போட்டார்.

நான் தனியே வாழ்வதையும், அவர்கள் வேறு நாட்டில் வாழ்வதையும் விளக்கிக்கூறுவது சிக்கலானது என்பதால் சிரித்து சமாளிப்போம் என்று நினைத்தேன். எனது சிரிப்பில் ராசுஅன்டி சமாதானமாகியது போலிருந்தது. ஆனால் ராசு அன்டியின் அக்கா மீண்டும் அதே கேள்வியை கேட்டார்.
உனது மூளையின் ஒரு பகுதி அதிவேகக் கணிணியின் வேகத்தில் பதில்களை தயா‌ரிக்க இன்னொரு பகுதி அப் பொய்கள் பிடிபடுமா என்பதை கணித்துக்கொண்டிருந்தன. இவர்கள் நான் சென்றதும் அம்மாவுடன் உரையாடுவார்கள். உண்மையை சொன்னால் பலருக்கு மனவருத்தம். உடனே ஒரு உண்மையான பொய்யை மனக் கணிணி கணித்துச் சொல்லியது.
அவர்கள் இருக்கிறார்கள். சுகமாக இருக்கிறார்கள். என்றேன். அப்போது தொலைபேசி மணியடித்தது. ராசுஅன்டி வெளியேசென்று தொலைபேசியில் பேசினார்.

நான் ராசுஅன்டியின் அக்காவுடன் நின்றிருந்தேன். அவரோ கேள்விகளை அடுக்கடுக்காக வீசிக்கொண்டிருந்தார்.  பிள்ளைகளின் பெயர், வயது, படிப்பு அவர்கள் வெள்ளையா கறுப்பா என்று குடைந்தபடி இருந்தார். நானும் சமாளித்துக்கொண்டிருந்தேன்.

திடீர் என அவர்கள் எங்கே இருக்கிறார்கள் என்றார். அவருக்கு பொய்சொல்வது மனதுக்கு சங்கடமாயிருந்ததால் அவர்கள் இங்குதான் இங்கிலாந்தில் அவர்களின் தாயாருடன் இருக்கிறார்கள் என்றேன். மனது அடுத்த கேள்வி என்னவாயிருக்கும் என்று அவரின் முகத்தைப்பார்த்தபடி இருந்தது.

ராசுஅன்டி மீண்டும் வந்து உட்கார்ந்துகொண்டார். நான் துலைந்தேன் இன்று, இவர்களுக்கு முழுக்கதையும் சொல்லவேண்டிய நிலை வரப்போகிறது என்பதால் உண்மைக்கதையை மனதுக்குள் பயங்கரமாய் எடிட் செய்துகொண்டிருந்தேன்.

ஆனால், ஒஸ்லோ முருகன் என்னைக் கைவிடவிடவில்லை. ராசுஅன்டியின் அக்கா எல்லாவற்றையும் மறந்துபோய் மீண்டும் எனது அரச பரம்பரை மாமாவை அம்மாவைக் கண்டதும் அழுத கதையை ஆரம்பித்தார். நானும் என்பாகத்துக்கு அரச பரம்பரையினர் அழக்கூடாதே என்று அள்ளிவிட்டுக்கொண்டிருந்தேன். அன்டி வேறு உலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்தார்.

அன்டியின் மாமாவைப்பற்றி விசாரித்தேன். அவர் மூத்தோர் கவனிப்பகத்தில் ஜாலியாக இருப்பதாயும், அவருக்கு இரத்த அழுத்தம் இருப்பதால் அவர் உப்பு உண்ணுவதில்லை என்றும், ஆனால மிகவும் தேகாரோக்கியமாக இருப்பதாயும் கூறினார். மாமாவுக்கு எத்தனை வயது என்றேன். ”92 முடியுது” என்றார், அன்டி. ஏறத்தாள 35 – 40 வருடங்களுக்கு முன் அவுட் ஆக ஆக, ஆவுட் ஆகாமலேயே கிறிக்கட்விளையாடிய அவரது அட்டகாசம் நினைவுக்கு வந்தது. அவரை பார்க்கும் ஆசையும் ஏற்பட்டது.

இடையிடையே தொலைபேசியில் மாமாவின் மரணத்தை கேள்விப்பட்டவர்கள் தொடர்புகொண்டு உரையாடினார்கள். ராசுஅன்டியின் அக்கா  மேலும் இரண்டுமாதங்களுக்கு ராசுஅன்டியுடன் தங்கியிருப்போவதாகக் கூறினார். ராசுஅன்டியை நினைக்க பாவமாய் இருந்தது.
 
தொலைபேசி உரையாடல் முடிந்ததும் மாமாவின் படத்தினருகே சென்று விளக்கு எரிகிறதா என்று பார்த்தார், ராசுஅன்டி. என்னிடம் எண்ணைய் இருக்கிறதா என்று கேட்டு உறுதிசெய்துகொண்டார். நான் புறப்படவேண்டும், ஒரு வாடகை வண்டியை அழைத்துத்தாருங்கள் என்றேன். ராசுஅன்டி தொலைபேசியை நோக்கி நடந்தார். அவரின் அக்கா நூற்றி ஓராவது தடவையாக நீ எங்கே இருக்கிறாய் என்றார்.

வாடகை வண்டி வந்ததும் புறப்பட்டேன் ராசுஅன்டியின் அக்கா கதிரையில் இருந்தபடியே அணைத்து இரு கன்னத்திலும் முத்தமிட்டார். மனது ஏனோ கனத்தது. வாசலருகில் ராசு அன்டியும் அணைத்துமுத்தமிட்டார். திரும்பி ராசுஅன்டியின் அக்காவைப்பார்த்தேன். அவர் மெதுவாக கதிரையில் இருந்து எழும்பிக்கொண்டிருந்தார். இவர் வாசலுக்கு வருவதற்கு இன்னும் இரண்டு நாட்களாகுமாகையால் கையைக்காட்டி விடைபெற்றுக்கொண்டேன்.

லண்டனின் செல்வச்செளிப்பான குடியிருப்புப் பகுதியினூடாக வாடகை வண்டி ஓடிக்கொண்டிருந்தது. ராசு அன்டியின் வெள்ளவத்தைவீடு, மாமா, பாட்டா, ராசுஅன்டியின் மகன், கரோலிஸ்மாமா, ராசு அன்டியின் கார், சிக்கோ, மாமாவின் சமாதானப் பேச்சும், அவரின் அவுட் ஆடாகத கிறக்கட் ஆட்டமும், விளாம்பழ ஜாமும் என்று பல நினைவுகள் மனத்திரையில் கறுப்பு வெள்ளை நிறத்தில் ஓடிக்கொண்டிருந்தன.

சஞ்சயன் என்று பெயர்வைத்து என்னைப் பெருமைப்படுத்திய ராசு அன்டிக்கு இது சமர்ப்பணம்.
 
 இதை எழுதி இரண்டுநாட்களின்  பின்பான ஒரு காலைப்பொழுதில் அம்மா தொலைபேசினார். ”ராசா! தேவி அன்டி நேற்றிரவு காலமாகிவிட்டார்” என்று கூறியபோது, மெளனமாக இருப்பதைவிட வேறெதுவும் செய்யமுடியவில்லை.

உயிர்த்திருந்தாலன்றி உயிர்வாழ்வதில் அர்த்தமில்லை

எப்போது மட்டக்களப்பிற்குச் சென்றாலும் எனது பாடசாலையான மெதடிஸ்த மத்திய கல்லூரியைத் தரிசிக்கவும், எங்கள் காலத்து அதிபரான பிரின்ஸ் சேர்ஐ  சந்திக்கவும் தவறுவதில்லை, நான்.

எனது பாடசாலைக்கு எனது நெஞ்சில் மிக முக்கியமானதோர் இடமிருக்கிறது. அதேபோல் எனது அதிபரிலும் பெருமரியாதையிருக்கிறது. எனது பேராசான் அவர். மட்டக்களப்பின் சரித்திரத்தின் மிக முக்கிய மனிதர்களில் ஒருவர் அவர் என்பதை பல பெரியவர்கள் கூறக்கேட்டிருக்கிறேன். இன்றும் Price G. Casinader இன் மாணவன் என்பதில் எனக்கு ஏகத்துக்கும் பெருமையிருக்கிறது. என்னைச் செதுக்கிய உளி அவர். அது எனது பாக்கியம்.

எமக்கிடையிலான உறவு 1976ம் ஆண்டு பதுளை சரஸ்வதி மகாவித்தியாலயத்தில் இருந்து ‌மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரிக்கு இடம்பெயர்ந்த நாட்களில் இருந்து இன்றுவரை தொடர்கிறது. இனியும் தொடரத்தான் போகிறது.

இம் முறை ஊருக்குச் சென்றிருந்த போதும் அவரைத் தேடிச்சென்றேன். வீடு பூட்டியிருந்தது. அருகில் விசாரித்தேன் தெரியாது என்றார்கள். அவரின் வீட்டு தொலைபேசி இலக்கத்திற்கு தொலைபேசினேன். நீண்ட நேரத்தின் பின் தொலைபேசியை எடுத்தார். மனிதர் களைத்திருப்பது அவரின் பேச்சில் தெரிந்தது. சேர், நான் சஞ்சயன் கதைக்கிறேன், உங்களை பார்க்க வந்திருக்கிறேன், உங்களை சந்திக்கலாமா என்றேன். Why not  என்று ஆங்கிலத்தில் பதில் வந்தது.

88 வயதில் இருதய சத்திரசிகிச்சை, கண் சத்திர சிகிச்சை, ஏனைய வயயோதிபத்தின் நோய்களுடன், தனிமையில் அவர் தனது வாழ்வின் அந்திம காலத்தைக் கடந்து கொண்டிருக்கிறார், எனது பேராசான். ஒரு வருடத்தின் பின் அவரைக் காணப்போகிறேன் என்னும் மகிழ்ச்சி இருந்தாலும் மனிதரிடம் எனக்கு ஒரு வித பயம் இன்னும் இருக்கத்தான் செய்கிறது என்பதை உணர்ந்துகொண்டிருந்தேன்.

சற்று நேரத்தில் கதவினைத் திறந்தவர் ”என்னடா உனக்கு இன்னும் மயிர் முளைக்கவில்லையா” என்றார் அவருக்கே உரிய நகைச்சுவையுடன்.  நான் இன்னும் சின்னப்பிள்ளை சேர். அது தான் இன்னும் தலைமயிர் முளைக்கவில்லை என்றேன் சிரித்தபடியே. அப்ப நானும் சின்னப் பிள்ளைதான்  என்றார் தனது தலையைத் தடவியபடியே. இருவரும் சிரித்துக்கொண்டோம். அவரிடம் கற்றுக்கொண்டவற்றில் நகைச்சுவையும் அடங்கும்.

”இருங்க மகன்” என்றபடியே சாய்மனைக்கதிரையில் சாய்ந்துகொண்டார்.. அவருக்கருகில் உட்கார்ந்துகொண்டேன். அருகில் இருந்த பழைய காற்றாடியை இயக்கினார். அதை அவரை நோக்கி திருப்பிவிட்டேன். கனிந்த கண்களினூடே புன்னகைத்தார். வீட்டுக் கூரைக்குள் எலியொன்று ஓடி ஒளிந்ததைக் கண்டேன்.

”என்னமோ புத்தகம் எழுதினாயாம், என்று  சொன்னார்களே, எனக்கொன்று தா  என்றார் உரிமையான அதிகாரத்துடன். எடுத்துக் கொடுத்தேன். சற்றுநேரம் அட்டைப் படத்தையே பார்த்துக்கொண்டிருந்தார். அவருக்கு தமிழ் அப்படி இப்படித்தான் என்பதால் அவர் புத்தகத்தை வாசிப்பார் என்று நான் எதிர்பார்க்கவில்லை. ”என்ன விசயத்தை எழுதியிருக்கிறாய்” என்றார். முன்னாள் போராளிகளின் இன்றைய வாழ்க்கைத்துயரங்கள் என்றேன். தலையை மேலும் கீழும் ஆட்டினார்.

”நீ எங்கள் பாடசாலையின் வழிகாட்டிகள் சங்கத்தில்” இருந்தாயா? என்றார். பெருமையுடன்  ”ஆம்” என்றேன். அதன் ஆங்கிலப் பெயர் தெரியுமா? என்றார். நெஞ்சை நிமிர்த்தி ”Pathfinders Club” என்றேன். அவரின் கண்கள் ஒளிகொண்டன. ”வழிகாட்டிகள் சங்கம்” ”வழிகாட்டிகள் சங்கம்” என இருமுறை தனக்குள் சொல்லிக்கொண்டார்..

அடுத்து வந்த ஒரு மணிநேரமும் அவரின் நினைவுகள் வழிகாட்டிகள் சங்கத்தினை ஆரம்பித்த காலத்தின் கதைகளில் இருந்து, அதனூடாக சமுதாயம் பெற்ற நன்மைகள்பற்றியும், மாணவர்கள் சமூகசேவையினை கற்றுக்கொண்டது பற்றியும், அவரின் மனதினைக் கவர்ந்திருந்த ஒரு இஸ்லாமிய மாணவரையும் பற்றிப் பேசினார். சாதீயம், இனம், மொழி கடந்த சேவை மனப்பான்மை வழிகாட்டிகள் சங்கத்திடம் இருந்ததையும் பல கதைகளினூடே கூறிக்கொண்டிருந்தார். அவர் கண்கள் பெரும் ஒளிகொண்டிருந்தன, கனவுலகில் பேசிக்கொண்டிருப்பதுபோன்று பேசிக்கொண்டிருந்தார்.

அவருடன் உரையாடும் போது அவரின் பழைய கதைகளை அவரின் அனுமதியுடன் நான் ஆவணப்படுத்துவதுண்டு. அவ்வப்போது பல அரிய முக்கிய தகவல்கள் கிடைக்கும் அன்றும் அப்படித்தான்.

அப்போது அவரின் முன்வீட்டில் வசிப்பவர் வந்தார். அவரும் இவரது மாணவர். ”என்ன சேர்..  இண்டைக்கு பெரிய சத்தமாய் இருக்கிறது, சந்தோசமாய் இருக்கிறீங்க போல” என்றார் அவர்.

எனது முக்கிய மாணவர்களில் ஒருவன் நோர்வேயில் இருந்து வந்திருக்கிறான். அவனுடன் பேசும்போது நான் உயிர்க்கிறேன். இன்றும் அப்படித்தான் என்றார் ஆங்கிலத்தில். எத்தனை பெரிய வார்த்தைகள் அவை. நெஞ்சு விம்மி, கண்கள் கலங்கின. அதை அவர் கவனித்திருக்கவேண்டும். உண்மைதான் சஞ்சயன் உன்னுடன் கதைப்பது மனதுக்கு ஆறுதல் தரும் என்றார். நான் கண்களைத் துடைத்துக்கொண்டேன்.

எனது வாழ்க்கை இப்படியான சில பொழுதுகளில் மிக மிக அழகாகவிருக்கிறது. நான் மனதுக்குள் பெருமையை உணர்ந்துகொண்டிருந்தேன்.

மாலை மீண்டும் வருவதாய்க் கூறி புறப்பட்டேன். எத்தனை மணிக்கு வருவாய் என்றார். அவரின் கேள்வியில் அவரின் தனிமையின் வீரியம் புரிந்தது எனக்கு. 7 மணிபோல் வருகிறேன் என்று கூறிப் புறப்பட்டேன்.

மாலை குறிப்பிட்ட நேரத்துக்கு வரமுடியாது போனதால் தொலைபேசியில் அறிவித்தேன். பறவாயில்லை உனது வேலை முடிந்ததும் வா என்றார். 8 மணிபோல் அவரைச் சந்தித்தபோது சிற்றூண்டியுடன் காத்திருந்தார், மனிதர். அதற்கிடையில் பழைய மாணவர் சங்கத்தலைவரையும் அழைத்து அறிமுகப்படுத்தினார். அடுத்தவருடம் பாடசாலையின் 200 வது ஆண்டு நிறைவுவி‌ழா. மிகச்சிறப்பாக நடாத்தவேண்டும் என்றார். இன்றும் பாடசாலையின் நினைவுகளிலேயே அவரின் அதிக நேரங்கள் கழிகின்றன என்பதை அறியக்கூடியதாய் இருந்தது.

அனைவரும் சென்ற பின் உன்னிடம் ஒரு விடயம் கேட்கவேண்டும் என்றார். கேளுங்கள் என்றேன். நான் பாடசாலை பழையமாணவர் சங்கத்தின் தலைமைப்பதவியை ராஜனாமா செய்யவேண்டும் என்று பலரிடம் சொல்லித்திரிந்தாயாமே என்றார். ஆம். நீங்கள் கூறுவதில் சற்று உண்மையிருக்கிறது. ஆனால் முழுவதும் உண்மையல்ல என்றேன்.

உனக்கு உன் கருத்தை வெளியிட முழு உரிமையும் இருக்கிறது. அதை நான் மதிக்கிறேன். ஆனாலும் அதற்கான காரணத்தை அறிய விரும்புகிறேன் என்றார். பாடசாலையின் பழையமாணவர் சங்கத்தில் இருந்த இழுபறிநிலமைகள் பற்றி நான் வைத்திருந்த கருத்துக்களையும், அவற்றை நிவர்த்திசெய்வதற்காக உங்களை தலைமைப்பதவியை தவிர்த்து பழையமாணவர் சங்கத்தின் அதியுயர் மேலாளராக (Patron) இயங்கும்படியுமே நான் கூறியிருந்தேன் என்றேன். இது பற்றி சில வருடங்களுக்கு முன் அவருடன் உரையாடியதையும் நினைவூட்டிய போது ” தற்போது உன்னைப் புரிந்து கொள்கிறேன்” என்றார். எனது மனம் பெரும் ஆறுதலை உணர்ந்துகொண்டிருந்தது.

நுளம்புக்கடியினை பொறுத்துக்கொண்டு ‌அவருடன் உரையாடிக்கொண்டிருந்தேன். இருவரும்  மகிழ்ச்சியானதொரு மாலைப்பொழுதினை உணர்ந்துகொண்டிருந்தோம்.

பேராசானுக்கு உதவியாய் இரவுப்பொழுதுகளில் தங்கும் ஒருவர் வந்தார். அவர் கையில் எனது படுவான்கரை புத்தகம் இருந்தது. இது உங்களுக்கு எப்படிக்கிடைத்தது என்றேன் அவரிடம். அய்யா தந்தார் என்றார்.

இவர் படுவான்கரையைச் சேர்ந்தவர். நீ உண்மை எழுதியிருக்கிறாயா என்று பார்ப்பதற்காக அவரிடம் கொடுத்திருக்கிறன் என்றார் பேராசான்
”எப்படி எழுதியிருக்கிறான்” என்றார் அவரின் உதவியாளரை நோக்கி.
”உண்மையை பயமில்லாமல் எழுதியிருக்கிறார்” என்றார் அவர்.
என்னட்ட படிச்சவன் அவன். வேற என்னத்தை எழுதுவான் என்று வெடித்துச் சிரித்தார்:
நான் பெருமையில் மிதந்துகொண்டிருந்தேன்.

மறுநாள் காலை மீண்டும் வருவதாய்க: கூறிப் புறப்பட்டேன்.  இரவு முழுவதும் எனது மனம் அவரையே நினைத்துக்கொண்டிருந்தது.

கடந்த வருடம் மட்டக்களப்பில் தங்கியிருந்து ”படுவான்கரை” புத்தகத்திற்கான தகவல்களை திரட்டியபோது அறிமுகமானார் ஒரு முன்னாள் போராளி. ஒரு காலை முற்றாக இழந்தவர். இரு குழந்தைகள், மனைவி, தாயார் என அவரின் குடும்பம் இருந்தது. வறுமையில் அடிபட்டுப்பொயிருந்தார்.

அவருக்கு அறிமுகமாகிய ஒரு தொழிலுக்கு முதலீடாக 70.000 இலங்கை ரூபாய் பெறுமதியான ஒரு இயந்திரம் வழங்கியிருந்தேன். இன்று அவர் வறுமையில் இருந்து மீண்டு, ஒரு ஆட்டோ, சிறு தொழிட்சாலை ஆகியவற்றின் உரிமையாளராக முன்னேறியிருக்கிறார். அவரை நினைத்து நான் பெருமைப்படுவதுண்டு.

மறுநாள் அவரை அழைத்து எனது பேராசானிடம் அறிமுகப்படுத்தினேன். சற்றுநேரத்தின் பின் அவர் விடைபெற்றுக்கொண்டார்.

அவர் விடைபெற்றதும், ஆங்கிலத்தில் My son  என்றழைத்த போது அவர் குரல் தழுதளுத்திருந்தது. ஒரு இருதயமில்லாதனவைப்போல் எனது மாணவர்களை நான் கண்டித்திருக்கிறேன், அடித்திருக்கிறேன், நீயும் அதற்கு விதிவிலக்கல்ல. ஆனால் இன்று எனது அந்திமக்காலத்தில் என்னை நீங்கள் உயிர்ப்பித்துக்கொண்டிருக்கிறீர்கள். உங்களுக்கு நான் எவ்வாறு நன்றி சொல்வது? என்றார்.

எனக்கு நீ, லட்சம் லட்சமாக பணம் தந்திருந்தாலும் இன்று நீ செய்த செயல் அதற்கீடாகாது. எனது வழிகாட்டிகள் சங்கத்தின் பலாபலன்களை நான் 30 ஆண்டுகளின் பின்பும் கண்டுகொண்டிருக்கிறேன். ஒரு ஆசிரியனுக்கு இதை விட வேறு என்ன பெருமை இருக்கமுடியும். உன்னால் எங்கள் பாடசாலைக்குப் பெருமை, எனக்குப் பெருமை என்றார். நான் பேசும் நிலையில் இருக்கவில்லை. மங்கலாகத் தெரிந்துகொண்டிருந்தார் எனது பேராசான், கலங்கிய கண்களினூடே.

உன்னை எனக்கு நன்கு நினைவிருக்கிறது. பிரளிக்காரன் (குழப்படிக்காரன்)  நீ. நீ எப்ப‌டி வருவாய் என்பதில் எனக்கு பலத்த சந்தேகம் இருந்தது. நீ சமுதாயம் பற்றிய பிரக்ஞையுடன், சக மனிதனை நேசிக்கும் மனிதனாய் இருப்பது, நான் ஒரு ஆசிரியனாய்  ‌வெற்றிபெற்றிருக்கிறேன் என்பதைக் காட்டுகிறது என்றார்.

தேவைக்கு அதிகமான புகழ்ச்சிதான் என்றாலும், என்னை அணுவணுவாக செதுக்கி உருவாக்கிய பெருமனிதர் அவர். எதுவும் கூறமுடியாதிருந்தது. உடல் முழுவதும் ஒருவித பெருமையை உணர்ந்துகொண்டிருந்தேன்.

அவரின் கடும் கண்காணிப்பில் இருந்தவர்களில் நானும் ஒருவன். ஒரு காலத்தில் கள்ளனுக்கு போலீஸ் வேலை கொடுப்பது போன்று என்னை தலைமை மாணவத் தலைவனாக அறிவித்திருந்தார். என்னை வழிநடத்தியவர்களில் மிகப்பெரிய பங்கு இவருக்குண்டு.

பலதையும் உரையாடிக்கொண்டிருந்தோம். இன்றைய சமுகக்கட்டமைப்பில் மனிதநேயத்தை வளர்க்கும் செயற்பாடுகள் இல்லையென்பது அவரது பலத்த வேதனையாக இருந்தது. பாடசாலைகள் சிரமதானத்தை மறந்துவிட்டன, சமுதாயம் எங்கே சென்றுகொண்டிருக்கிறது என்று என்னைப்பார்த்துக்கேட்டார். அவரைப்போன்று என்னிடமும் அதற்கான பதில் இருக்கவில்லை.

நான் புறப்படவேண்டிய நேரம் நெருங்கிக்கொண்டிருப்பதைக் அறிவித்தேன்.

மகன், வாழ்க்கை, என்னை பாலைவனங்களுக்குள்ளாலும், ரோஜாத் தோட்டங்களினுள்ளாலும் அழைத்துப்போயிருக்கிறது. ஒரு ஆசிரியனாய் என் வாழ்க்கை கழிந்ததையிட்டு பெருமைப்படுகிறேன். நான் எனது கடைசிக் நாட்களை எண்ணிக்கொண்டிருக்கிறேன் என்பதை நான் அறிவேன். அடுத்தமுறை நீ வரும்போது நான் இருப்பது சந்தேகமே. எனதருமை மாணவனே! கர்த்தர் உன்னையும் உன் குடும்பத்தையும் ரட்சிப்பாராக என்றார்.

அப்படி பேசாதீர்கள். அடுத்தவருடம் எங்கள் பாடசாலையின் 200வது வருடம் என்றேன். நாம் அப்போது மீண்டும் சந்திப்போம் என்றேன். அருகே அழைத்து கைகளைப் பற்றிக்கொண்டு என்னை ஊடுருவிப்பார்த்தார்.  பார்வையின் கூர்மை என்னை பேச்சிழக்கச் செய்தது. அமைதியாய் நின்றிருந்தேன்.

மகன்! நான் களைத்துவிட்டேன். எனது நாட்கள் நீண்டு செல்கின்றன. ஆண்டவனின் இறுதியழைப்புக்காக காத்திருக்கிறேன். உனக்கு ஒரு அறிவுரை கூறுகிறேன். அது எனது வாழ்வின் அனுபவத்தின் பிழிவில் இருந்து நான் அறிந்துகொண்டது.

”உயிர்த்திருந்தாலன்றி உயிர்வாழ்வதில் அர்த்தமில்லை” என்று கூறி, புரிகிறதா என்றார். அவர் கைகளை அழுத்தியபடியே புரிகிறது சேர், மிக நன்றாகப் புரிகிறது என்றேன்.
Good bye, my son  கடவுள் உன்னை ஆசீர்வதிக்கட்டும் என்றார்  ஆங்கிலத்தில்.  அவரின் கணீர் என்ற குரல் நெஞ்சை ஊடுருவிப்பாய்ந்தது, என்றும் போல்.


மீண்டும் ஆரம்பத்தில் இருந்தாஆஆஆ?

இரண்டு நாட்களாக சொகுசுப் பேரூந்தில் ஒரு நகரத்திற்குச் சென்று வர வேண்டியிருந்தது. மாலை ஏறினால் காலை பயணம் முடிவடையும். ஏறத்தாள 10 மணி நேரப் பயணம்.

சிவனே என்று 80களின் காதற்பாடல்களுடன் என்னை மறந்திருந்தேன். தலையில்மாட்டியிருந்த headphoneக்குள் ஒரு விதமான ஒலி வரத்தொடங்கியது. சற்று நேரத்தில் அந்த ஒலியின் இம்சை தாங்கமுடியாது போகவே headphone களற்றினேன். அப்பொது அந்த ஒலி எனக்கு பின்னாலிருந்த ஆசனத்தில் இருந்து வந்துகொண்டிருந்தது.

திரும்பிப் பார்தத்தேன். ஒரவா் தனது வாயைப் பிளந்துவிட்டபடியே கச்சேரி செய்துகொண்டிருந்தார். அவரின் தொண்டைக்குழியின் ஆரம்பத்தில் உள்நாக்கு பயங்கரமாய் அதிர்ந்துகொண்டிருந்தது. நான் சற்று எட்டிப்பார்த்திருந்தால் இரைப்பையும் தெரிந்திருக்கும்.

அன்றைய இரவினைப் பொன்றதொரு சித்திரவதையான இரவினை நான் அனுபவித்ததில்லை. சில நேரங்களில் உயிர்பிரிவது போலான அதி பயங்கர ஒலிகளையும் எழுப்பினார்

அது ஒரு அதி பயங்கர இரவு.

எனது headphone வெளியில் இருந்து வரும் ஒலிகளை தடைசெய்யும் தன்மையுடையது. அவருடைய உயிரின் ஒலி அதையும் கடந்து வந்து எனது காதைக் குடைந்துகொண்டிருந்தது.

ஒரு முறை சாரதியும் அவரை எழுப்பி நீங்கள் அனைவரினதும் நித்திரையை குழப்புகிறீகள் என்றார். 2 நிமிடங்கள் அமைதியானவா் அதன் பின்  முன்பைவிட  அதிபயங்கரமாக வாசித்தார்.

என் பொறுமை காற்றில் பட படத்துக்கொண்டிருந்தது. கையில் மண்ணெண்ணையும் நெருப்பெட்டியும் இருந்திருந்தால் அவரின் வாய்க்குள் ஊற்றி தட்டிவைத்திருபேன். அந்தளவுக்கு கடுப்பேத்தினார் அவா்.

காலையில் என்னைப்பார்த்து இரண்டு கேள்வி கேட்டார்
நன்றாக உறங்கினீா்களா?
பயணம் சுகமாக இருந்ததா?

அதுதான் அன்றைய நாளின் அதிபயங்கரமைான கொடுமை.

சென்ற வேலையை முடித்தபின் மீண்டும் சொகுசுப் பேரூந்தில் ஏறிக் குந்தியிருந்து, பாடலின் இனிமையில் உறங்கிப்போனேன்.

திடீா் என முழிப்பு வந்தது. நேற்றைய இரவின் ஒலி பின்னால் இருந்து வந்துகொண்டிருந்தது.

திரும்பிப்பார்த்தேன். திறந்திருந்ததொண்டைக் குழியின் ஊடாக குதம்வரை தெரிய நேற்றைய மனிதரை கொன்றுதின்ற மனிதா் ஒருவா் குறட்டைவிட்டுக்கொண்டிருந்தார்
 

வடிவேலுவின் ”மீண்டும் ஆரம்பித்தில் இருந்தா?” என்று டயலாக் காதில் அசரீரியாய் ஒலித்தது.

பொய்யற்ற ஓர் அழைப்பு

சில வாரங்களுக்கு தொலைபேசியில் என்னை அழைத்தார், சில மாதங்களுக்கு முன் அறிமுகமான நண்பர். அவரைப் பற்றி ஒரு ஆக்கம் எழுதியிருந்தேன். (பார்க்க விழுதுகளைத் தொலைத்தவர்கள்). அன்று கணணி வாங்குவுதற்கு அறிவுரை கேட்டிருந்தார். இன்று கணணி வாங்கி விட்டதாயும் அதை பாவிக்கும் விதம் பற்றி கற்பிக்கவே என்னை அழைத்தார்.

அவர் மொராக்கோ நாட்டவர், ஆனால் சுவீடனில் கடந்த 45 வருடங்களுக்கு மேலாக சுவீடனில் வாழ்ந்து தற்போது நோர்வேயில் வாழ்கிறார்.

வீட்டு வாசலில் நின்று வரவேற்றார். எனது ஜக்கட்டை பெரிய தலைவர்களின் ஜக்கட்ஐ சிப்பந்திகள் களட்டி எடுப்பது போல களட்டி எடுத்தார். நன்றி என்ற போது, நெஞ்சில் கை வைத்து தலைசாய்த்து எனது நன்றியை ஏற்றுக் கொண்டார்.

கணணியை காட்டிய படியே என்ன குடிக்கிறீர்கள் என்றார் மிகவும் மரியாதையாய். தேத்தண்ணி என்றேன். கணணியை எடுத்து இயக்கினேன். அறைக்குள் இருந்து புரியாத மொழியில் பேசிக்கொண்டு வந்தார் அவரின் மனைவி. அருகில் வந்து கையை பிடித்து குலுக்கினார்.  பின்பு தேத்தண்ணி போட்டுத் தந்தார். அதன் பின் அவர் நான் அங்கு நின்ற 3 மணிநேரமும் அவரின் அறையை விட்டு வெளியே வரவில்லை.

தனது மனைவி வந்திருக்கும் விருந்தினருடன் பேசாமல் தனது அறைக்குள்ளேயே இருந்தது அவருக்கு அசௌகரீயமாக இருந்திருக்க வேண்டும். என்னிடம் அதற்கு மன்னிப்புக் கேட்டார். நான் அது பறவாயில்லை, அது அவரின் கலாச்சாரமாக இருக்கும் என்றேன். ஆம் அது தான் எனது பிரச்சனை என்றார். மனைவி தனக்கு உணவு சமைக்கும், வேலைக்கு போகும் நேரத்தை விட மிகுதியாயிருக்கும் பல மணிநேரங்களை இறைவணக்கத்துக்கே செலவிடுவது இவருக்கு பிடிக்கவில்லை என்பதை அவரின் வார்த்தைகளினூடாக அறிய முடிந்தது.

இருப்பினும் தன் மனைவியை தான் அவளின் இஸ்டத்துக்கு விட்டிருப்பதாகவும், அவள் மிகவும் உண்மையாகவும், பண்பாகவும் இருப்பதாகவும், அவர் தெற்கு மொறாக்கோவை சேர்ந்த மிகவும் வறுமையான குடும்பத்தை சேர்ந்தவர் என்றும் சொன்னார்.

தனக்கு இவரை மணமுடிக்க தீர்மானித்த போது பல மிக இளமையான பெண்களை தனக்கு மணமுடிக்க பலர் முன்வந்ததாயும், அவற்றில் பலர் தனது பணத்தில் குறியாயிருந்ததாகவும் ஆனால் தனது மனைவியின் குடும்பத்தினர் மட்டும் நேர்மையாய் இருந்தார்கள் என்றும் சொன்னார்.

மொறாக்கோவில் பணம் இருக்கும் கிழவர்கள் வயதில் குறைவான பெண்களை திருமணம் முடிக்கிறார்கள் என்றும், பெண்ணிண் தகப்பன் வறுமையினால் இதற்கு சம்மதிப்பதாயும், ஆனால் அந்தக் கிழவர்கள் இறக்கும் போது பெண்கள் இரண்டு, முன்று குழந்தைகளுடன் மீண்டும் தகப்பிடம் தஞ்சம் புகுவதை அந்த பெண்களின் தகப்பன்மார் புரிந்து கொள்கிறர்கள் இல்லை என்பதும் அவரின் ஆதங்கமாய் இருந்தது.

தன்னிடம் மொறாக்கோவில் இரண்டு வீடுகள் இருப்பதாயும், அவை வெறுமனே இருப்பதாயும் சொன்னார். அவற்றில் பிரான்ஸ் நாட்டவர்கள் தங்கியிருந்ததாயும் ஆனால் அந்த பிரான்ஸ் நாட்டவரின் வேலைக்காரர்கள் தனது தளபாடங்களை களவெடுப்பதால் தற்போது வாடகைக்கு விடுவதில்லை என்றும், தான் மட்டும் வருடததில் ஒரு தடவை  அங்கு போகிறார் என்றும் தனது சொத்துக்கள் பற்றி என்னிடம் பகிர்ந்து கொண்டார்.

கூகில் மப் (Google maps) இல் ஆவரின் வீட்டைக் காட்டினேன். சிறு குழந்தைபோல் குதூகலித்தார். இது எப்ப‌டி சாத்தியம் என்றார்? விளக்கினேன். புரிந்ததோ புரியவில்லையோ தெரியாது ஆனால் தலையாட்டினார்.

என்னை மெராக்கோவுக்கு வரச் சொன்னார். தனது வீட்டில் நான் விருந்தாளியாக  தங்கியிருக்கவேண்டும் என்றார். நான் சிரித்தேன். அவரின் வார்த்தைகளில் பொய்யில்லை என்பது மட்டும் எனக்குத் தெரிந்தது. தனது நாட்டின் சிறப்புக்களை விளக்கிக் கூறிக்கொண்டிருந்தார்.

நான் புறப்பட்ட போது எனது ஜக்கட்டை மாட்டிவிட்டார். எனக்கு இவ்வாறு ஜ்க்கட் மாட்டிவிடப்பட்டது முதல் அனுபவம் என்பதால் நானும் பல தடவைகள் நன்றி சொல்லி விடைபெற்றேன். உனக்குத் தந்த அழைப்பை நீ எற்றுக் கொள்வாய் என நம்புவதாகச் சொன்னார். நான் புன்னகைத்தேன். அப் புன்னகையின் அர்த்தம் நான் வருகிறேன் என்பதா அல்லது வரமாட்டடேன் என்பதா என்பது எனக்குப் புரியாதிருந்தது.


இன்றைய நாளும் நல்லதே