வாயிலும், நினைவிலும் புக மறுத்த பெயருடன் அறிமுகமாகினார் இன்றைய நண்பர், சில நாட்களுக்கு முதல்.
தனக்கு ஒரு கணணி வாங்குவதற்கும், பின் அதை பாவிப்பதெப்படி என்று கற்றுத் தரவும் எனது உதவியினைக் கேட்டார். நானும் சரி உங்களுக்கு வசதியான நேரத்தில் கடைக்குப் போவோம் என்று சொல்லி உரையாடலை முடித்துக் கொண்டேன்.
அவரின் பேச்சு சுவிடடிஸ் மொழி போல் இருந்து. எனவே அவர் சுவீடன் நாட்டவர் என்று நினைத்துக் கொண்டேன்.
இன்று காலை மீண்டும் தொடர்பு கொண்டார். எனக்கும் வசதியாக இருந்ததால் குறிப்பிட்ட ஒரு இடத்தைச் சொல்லி அங்கு வரச்சொல்லி சந்தித்துக் கொண்டோம்.
பார்த்ததும் புரிந்தது அவர் சுவீடன் நாட்டவரல்ல என்று. சந்தேகத்தை கேட்டதும் தான் மொராக்கோ நாட்டவன் என்றார். எனது மனம் முன்பொருதரம் மொராக்கோ நாட்டவரொருவருடன் நடந்த கசப்பான அனுபவத்தால் எச்சரிக்கை மணியை பெரிதாய் மனதுக்குள் அடித்தது.
கடைக்கு போகும் வழியில் மனிதர் மிகவும் சகஜமாக பேசிக் கொண்டு வந்தரார். சில நிமிடங்களில், அவர் பேச்சு எனது எச்சரிக்கை உணர்வை அகற்றிவிட்டிருந்தது. என்னையறியாமலே நட்பாகிப் போனேன் அவருடன்.
தான் 50 வருடங்களுக்கு முன்பு சுவீடனுக்கு வந்ததாயும், வளர்ந்த குழந்தைகள் உண்டு என்றும், அண்மையில் பெரிதோர் இதய அறுவைச்சிகிச்சை செய்திருப்பதாயும் சொன்னார். அவர் பேச்சில் தனது பிள்ளைகள் தன்னை கவனிக்காவிட்டாலும் பறவாயில்லை ஆனால் அவர்களுக்கு தொலைபேசியில் பேசக்கூட நேரமில்லை என்று சொல்லி வேதனைப்பட்டார். 15 ஆண்டுகளுக்கு முன்பு தொழில் நிமித்தம் நோர்வேக்கு இடம் பெயர்ந்ததாயும். ஒஸ்லோவின் மேட்டுக்குடி மக்களிடையே பிரபலமானதோர் ஒரு உணவகத்தில் சிப்பந்தியாக தொழில் புரிந்ததாயும் சொன்னார்.
வெளிநாட்டு வாழ்கை தன்னை ஒரு முழு மொராக்கோ நாட்டவனாக அல்லாமலும், ஒரு சுவீடன் நாட்டவனாக அல்லாமலும் ஆக்கவிட்டதென்றும், அதனால் தான் மிகுந்த சிரமமடைகிறார் என்றும் சொன்னார். தனிமையின் பாரம் உணர்ந்திருந்தார் மனிதர்.
எனக்கு அவரின் கூற்றினையும், அதன் ஆதங்கத்தையும் முழுவதுமாக புரியக்கூடியதாக இருந்தது. நான் அவரைப் போல் 50 வருடங்கள் வெளிநாட்டில் வாழாவிடனும், எனது 23 ஆண்டுகள் போதுமானவையாக இருக்கிறது அவரை புரிந்து கொள்ள.
சில வருடங்களுக்கு முன் தனிமையின் கொடுமையினாலும், குடும்பத்தாரின் நிர்ப்பந்தத்தினாலும் ஒரு மொராக்கோ நாட்டு பெண்ணை திருமணம் புரிந்ததாயும் ஆனாலும் கலாச்சார வேறுபாடுகள் காரணமாக திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமானதாயில்லை என்றார். இது தவிர மது, புகைத்தல், தொழில் அழுத்தம், உணவுக்கட்டுப்பாடின்மை ஆகியவற்றால் மாரடைப்பு வந்ததாயும் தற்பொது அறுவைச்சிகிச்சையின் பின் தேறி வருவதாகவும் சொன்னார்.
வெளிநாட்டு வாழ்வில் பணத்தைத் தவிர வேறான்றும் கிடைப்பதில்லை என்பதனை பல வெளிநாட்டவர்கள் உணர்கிறார்கள் இல்லை என்றும், வெளிநாட்டவர்கள் தமது சுய மரியாதையில் தொடங்கி கலாச்சாரம், பண்புகள், விழுமியங்கள், இன மத உணர்வுகள் போன்றவற்றை தொலைத்து அர்த்தமற்றதொரு வாழ்க்கை வாழ்வது போல் உணர்வதாகவும் சொன்னார்.
எனக்கும் அவரின் கருத்துக்களில் பாரிய மாற்றுக் கருத்து இல்லாததால் மெளனமாய் கேட்டுக்கொண்டிருந்தேன். அவரும் பேசியபடியே இருந்தார்.
கடையில் புதிய கணணி வாங்கினோம். கற்பிப்பதற்கான நாட்களை குறித்துக் கொண்டோம்.
வரும் வழியில் ஒரு நிலக்கீழ் சுரங்க ரயில் நிலயத்தில் இறங்கிக் கொண்டார். எனது கைகளை இறுப்பற்றி உன்னுடன் பேசியது மிக ஆறுதலாக இருந்தது என்று சொல்லி, மீண்டும் நன்றி சொல்லி படிகளில் இறங்கி மறைந்து போனார்.
எத்தனையோ நாட்கள் என்னைக் குடைந்து கொண்டிருந்த அதே கேள்விகளை இம் மனிதரும் கடந்து வந்திருக்கிறார் என்பதும், நாம் ஒரே பதில்களையே கொண்டிருக்கிறோம் என்பதும் எனக்கு எதையோ அறிவித்தது.
ஆனால் மனதோ வழமை போல் எனது சிந்தனைகளும் பதில்களும் சுகமானவையா அல்லது சுகயீனமானவையா என்று கேள்வி கேட்டுக்கொண்டிருந்தது.
புரிந்ததா ஏதும் உங்களுக்கு?
.
// வெளிநாட்டவர்கள் தமது சுய மரியாதையில் தொடங்கி கலாச்சாரம், பண்புகள், விழுமியங்கள், இன மத உணர்வுகள் போன்றவற்றை தொலைத்து அர்த்தமற்றதொரு வாழ்க்கை வாழ்வது போல் உணர்வதாகவும் சொன்னார்.//
ReplyDeletethanks for sharing. what u said is true.
அருமையான கட்டுரை!
ReplyDelete