இலக்கியச் சந்திப்பில் ஒரு விசரன்

2011ம் ஆண்டு மாசிமாதம் 18ம் திகதி வெள்ளிக்கிழமை மாலை பாரீஸ் நகரத்துக்கு போவதற்காக விமானநிலையத்துக்கு பயணிக்கும் போதே தொ(ல்)லைபேசியூடாக வந்த சகுனம் அபசகுனமாக இருந்தது. இருப்பினும் பிரச்சனைகள் இன்றி பாரீஸ் விமானநிலையத்தை வந்தடைந்தேன். அங்கு வந்திறங்கிய பின்பு தான் நான் வந்த விமானத்தில் மேலும் 5 பேர் இலக்கியச் சந்திப்பிற்கு வந்திருப்பது புரிந்தது. அதில் ரவூப் நானாவை தவிர்த்து ஏனையவர்கள் புதியவர்களாகவே இருந்தனர். தங்கம் அண்ணணின் புண்ணியத்தால் நண்பர் ஞானத்தின் வீட்டினை சென்றடைந்த போது நேரம் ஏறத்தாள இரவு 10 மணியிருக்கும்.

அங்கு நின்றிருந்தவர்களில் எனக்கு இருவரைத் தவிர எனையவர்கள் புதியவர்கள். ”கட்சுறா” என்று வாய்க்குள் புகாத பெயருடன் ஒருவர் அமெரிக்கக்கண்டத்தில் இருந்து வந்திருந்தார். வேறு பெயர் இல்லையா.. இப் பெயரை உச்சரிப்பது அசௌகரீயமாக இருக்கிறது என்ற போது ” உனக்கு அசொளகரீயமாக இருக்குதென்பதால் என் பெயரை நான் மாற்றுவதா” என்று அவர் பார்த்த பார்வை சொல்லிற்று. ஆனால் அவருடன் பழகிய சிலர் ஒரு மனிதப்பெயர் கொண்டு அவரை அழைத்தனர். ஆனால் என்னை அவர் அந்தப் பெயரை பாவிக்க அனுமதிகவில்லை. அவரின் ஆசையை கெடுத்த பாவம் எனக்கு வேண்டாம் என்பதால் நான் கற்சுறா என்று அழைக்க முயன்றுகொண்டிருக்கிறேன். நகைச்சுவை என்னவென்றால் இந்தச் சுறாவுக்கு இந்த விசரனை ஏறத்தாள 21 வருடங்களுக்கு முன்பே தெரிந்திருக்கிறது என்பது இந்த விசரன் அறிந்திராத விடயம்.

மறுநாள் காலை, நேரத்துடன் போட்டிபோட்டு தூங்கப் பழகிவிட்ட சோவியத் நாட்டு சர்வதிகாரி ஒருவரை கற்சுறாவின் உதவியோடு எழுப்பி, மிகவும் ருசியான இறால் சொதியுடன் பாண் சாப்பிட்டு இலக்கியச் சந்திப்பு நடைபெறும் இடத்திற்கு விரைந்தோம். எமக்கு முன்பே சிலர் இங்கு கூடியிருந்தனர். நேரம் 09.30 இருக்கும். நானும் ஓரமாய் ஒரு கதிரையை பிடித்து உட்கார்ந்து கொண்டேன். நோரம் 09.45, 10.00, 10.30ஆகிய போது சில முணுமுணுப்புக்கள் பெண்கள் பக்கத்தில இருந்து கேட்டது. எனது பொறுமையும் எல்லை கடந்து கொண்டிருந்த போது ” உள்ளுக்கு போங்கோ தொடங்குவோம்” என்று சொன்னார்கள். நிகழ்ச்சி தொடங்கிற்று.

அறிமுகம் நடைபெற்றது. ஒலிவாங்கி தன்னிஸ்டத்துக்கு இயங்கியது, அடிக்கடி இயங்க மறுத்தது. அந்த ஒலிவாங்கி அங்கிருந்த இரண்டு நாட்களும் தனது எதிர்ப்பை அடிக்கடி காட்டியபடியே இருந்தது. விழா ஏற்பாட்டாளர்கள் இதை கவனித்து வேறு ஒழுங்குகள் செய்திருந்திருக்க வேண்டும் என்பது எனது கருத்து.

‘ஒடுக்கப்பட்டோர்’ நூல் திறனாய்வு நடந்தது. ஒலிபெருக்கியின் அட்டகாசத்தால் இதை முற்றாக ரசிக்கமுடியாது போயிற்று. ”திரு நீல சதிர் (crossing blue)” நாவல் எழுதிய அரவிந்த் அப்பாத்துரை அங்கு வந்திருந்தார். ஏனோ அவரின் நாவல் பற்றிய விமரர்சனம் நிகழ்ச்சிநிரலில் குறிப்பிட்டிருந்ததைதப்போல இடம்பெறவில்லை. (இந்த நாவலை வாசித்திதேன். ஒரு வித்தியாசமான முயற்சி என்றாலும் இன்னும் யதார்த்தமாய் இருந்திருந்தால் நன்றாய் இருந்திருக்கும் என்பது எனது கருத்து)

திரு. யோகரட்ணத்தின் தீ்ண்டாமைக் கொடுமைகளும் தீ மூண்ட நாட்களும் என்னும் நூல் அறிமுகம் நடந்தது. என்னைப் பொறுத்தவரை என்னைக் கவர்ந்த நிகழ்ச்சிகளில் இதுவுமொன்று. இந் நிகழ்ச்சியில் நான் பெற்றுக்கொண்டவை என்று பின்வருவனவற்றைச் சொல்லலாம்.
 • யாழ்ப்பாண வாசிகசாலை எரித்தற்கும் புத்தூரில் ”பள்ளனுக்கு என்னத்துக்கு படிப்பு” என்று பள்ளி சென்ற சிறுவனின் புத்தகங்களை எரித்ததற்கும் தார்மீரீதியில் பாரிய வேறுபாடு இல்லை.

என்ட சிற்றறிவுக்கு இது நியாயமாக இருந்தது. ஆமா ஆமா எனறு தலையையும் ஆட்டினேன்.

தவிர நம்மினம் நம்மினத்தவர்களுக்கே சுததந்திர மறுப்பு செய்தபடியே நாம் இன்னொரு இனத்திடம் உரிமை கேட்டிருக்கிறோம். அதற்கு வலுவான சாட்சியங்களாவன:

 • எழுதுமட்டவானில்ஒரு குறிப்பிட்ட சாதியிர் ஒருரை குளத்தில் குளிக்கப்போன போது வெட்டிக் கொலை செய்தது.
 • கைதடி. பனைமரத்தில் இருந்தவரை மரத்தை வெட்டிச் சாய்த்ததன் மூலம் கொலை செய்தது.
சாதீயம் பற்றி எதையும் ஊட்டி வளர்க்காத, அது என்னவென்றே அறிவிக்காத என் பெற்றோரையும், எம்மை வளர்த்த சிங்களத் தாயையும் நினைத்து பெருமைகொள்ளும் அதே வேளை சமத்துவம் கற்பித்த எனது தாயாருக்கும், எனது கல்லூரிக்கும் ஒரு பெரிய நன்றியை தெரிவிக்கிறேன்


இதன் பின் சிங்கள நண்பர் ஒருவரின் போர்க்காலத்தில் சிங்கள இலக்கியம் என்னும் தொனியிலான நிகழ்ச்சியில் அவர் கூறிய சில கருத்துக்கள்:

 • இரண்டு இன மக்களும் இன்னும் ஒரு வளர்ந்த நிலையை அடையவில்லை.. ஒன்றாக இருந்து பேசுவதற்கு.
 • தமிழர்களின் பிரச்சனைகளைகளுக்கு குரல் பல கொடுத்தும் சிங்கள இலக்கியங்கள் உருவாக்கப்பட்டன. அவற்றை உருவாக்கியவர்கள் பல சிரமங்களை எதிர்நோக்கினர்.

எனது மட். மெதடிஸ்த மத்திய கல்லூரி நண்பரும், 7 வருட சக வகுப்புத்தோழனும், விடுதி நண்பனுமாகிய ஞானம் (எம். ஆர். ஸராலின்) ”தமிழீப் புரட்டு” என்று புத்தகத்தை வெளியிட்டார். புத்தகம் தமிழர்களுக்கு எதிரானது என்று தலைப்பைப் பார்த்து முடிவுகட்டி வீடாதீர்கள். இந்தப் புத்தகம் சர்ச்சயை கிளப்பும் என்பதில் ஒரு வித சந்தேகமும் எனக்கில்லை. (புத்தகத்தை இன்னும் வாசித்து முடிக்கவில்லை)

மதிய சாப்பாடு நன்றாக இருந்தது. Fruitsalad பரிமாறப்பட்டது. ஒருவருக்கும் தெரியாமால் 2 கப் எடுத்துச் சாப்பிட்டேன். இதன் பின்பு பாரீஸ் அறிவாலயத்திற்கு போகவேண்டியிருந்ததால் நண்பரின் மகன் ”சிற்பி”யின் உதவியுடன் போய் வந்தேன். வரும் வழியில் 4-5 பீடாவும் வாங்கிக் கொண்டேன்.

சாப்பாடும், Fruitsalad ம், பீடாவும் என்னை மயக்க நித்திரை வந்தது. ஒரு ஓரமாய் போய் குந்திக் கொண்டேன். அருகே வந்தாள் ஒரு அழகிய தேவதையொருத்தி. சிரித்து கையைக் காட்டினேன். வெட்கித் தலைகுனிந்தாள். மெதுவாய் இழுத்து மடியில் இருத்திக் கொண்டேன். அழகாய்ச் சிரித்தான் மூன்று வயது ”அன்னம்” என்றழைக்கப்படும் சிறுமி. அவளைப்போலவே அழகாய் கடந்து போனது அதன் பின்பான நேரங்கள்.

யுத்தத்தின் பின் பெண்கள் எனும் தலைப்பில் ராஜேஸ்வரி பாலசுப்பிரமணியம் உரையாற்றினார். பலரின் வாழ்வு இன்னும் விடியவில்லை என்பதும் இப்போதைக்கு அவை விடியப்போவதில்லை என்பதும் பரிந்தது.

மாலை லாச் சப்பல் கடைவீதியினூடாக நடந்து வந்த போது எனக்கு கொழும்பில் நடந்து திரிகிறேன் போலிருந்து. (நோர்வேயில இப்படி இருந்தா நல்லாயிருக்குமே.. முதலாளிமாரே யோசியுங்க)

இரவு பல மணிநேரமாகியது விவாதங்களும், கடிகளும், ஏனையவைகளும் முடிந்தோய.

ஞாயிற்றுக்கிழமை கற்சுறாவின் (இதெல்லாம் ஒரு பெயர்... தாங்க முடியடா சாமீ) ‘நாங்களல்ல நீங்கள்’ எனும் நிகழ்வை கேட்டமுடியவில்லை. இந்த நிகழ்ச்சியை அவர் ஆரம்பித்தது பேசிய முதல் வசனம் பலராலும் மறக்கமுடியாதிருந்தது. அவரின் மனத்துணிவிற்கு அது சாட்சி.

இதற்கிடையில் பாரீஸ் அறிவாலயத்திற்குப் போய்

 • ஈழத் தமிழர் புகலிட வாழ்வும் படைப்பும்
 • நிழல் வீரர்கள் (இந்திய புலனாய்வுத்துறை பற்றியது)
 • முத்துலிங்கம் அய்யாவின் வம்சவிருத்தி, வடக்கு வீதி
 • போரும் வாழ்வும்
 • ஈழம் ‌தேவதைகளும் கைவிட்ட தேசம்
 • எஸ. ராவின் சில புத்தகங்கள்
 • நான் வித்யா (திருநங்கை வித்யாவின் சுயசரிதம்)

இப்படி இன்னும் பல புத்தகங்களை வாங்கிக் கொண்டேன்.

அங்கு நின்றிருந்த முன்பின் தெரியாத ”நாகேஸ்” என்னும் நண்பர் பல புத்தகங்கள் பற்றி எனக்கு அறிவுறித்தினார். அவர் நிறையவே வாசித்திருக்கிறார் என்பது புரிந்தது. அவருக்கு எனது நன்றிகள்.

இலக்கியச் சந்திப்புக்கு அழைக்கப்பட்டு விசா கிடைக்காததனால் லிவிங் ஸ்மைல் வித்தியாவுடனான உரையாடல் Skype மூலம் நடந்தது. தெளிவில்லாத ஒலியினால் நிகழ்ச்சியினை ரசிக்க முடியவில்லை.

எனக்கு அது ஒரு பிரச்சனையாகவே இருக்கவில்லை. காரணம் வித்யாவின் சுயசரிதத்தை நான் பாரீ்ஸ் அறிவாலயத்தில் வாங்கிவந்ததில் இருந்து வாசிக்கத் தொடங்கி அன்று மாலைக்குள்ளே படித்து முடித்திருந்தேன். அப்பப்பா எத்தனை எத்தனை வலிகளையும், அவமானங்களையும் கடந்திருக்கிறார் அவர். நினைத்தாலே உடம்பு நடுங்குகிறது. நெஞ்சுரமிக்க பெண் அவர்

’பேய்’ என்றும் ஒரு நாடகம் மேடையேற்றப்பட்டது. புலி எதிர்ப்பாளர்களின் கூச்சல் என்றே நினைக்வேண்டியிருக்கிறது அதை. இன்னும் செத்தபுலியை அடித்துக்கொண்டிருக்கிறார்கள் என்றே நினைக்கத் தோன்றுகிறது. மாற்றுக்கருத்தாளர்கள் தங்களின் ”புலியெதிர்ப்பு” என்றும் தளத்திலேயே இனியும் தாளம்போட்டுக்கொண்டிருந்தால் அவர்கள் ”பாவம்” என்றே எனக்கு நினைக்கத் ‌ தோன்றுகிறது.

இறுதியாக மே 18 பின்னரான இலங்கை-புகலிட அரசியல் என்ற உரையாடல் நடைபெற்றது. இங்கும் ஒலிபெருக்கி தனது எதிர்ப்பை காட்டிக்கொண்டிருந்தது. தவிர அவர்கள் பேசியது எதுவும் என்னையும் அங்கிருந்த வேறு பலரையும் கவரவில்லை.

அய்யாமாரே, அம்மாமாரே இலக்கியச் சந்திப்பில் ஊறிப்போயிருக்கும் அரசியல் வெடுக்கு சற்றே குறைக்கப்பட்டு இலக்கிய நறுமணத்தை சற்று அதிகமாக பரவவிடுங்கள் என்பதே எனது வேண்டுகோள். நல்ல நாடகங்கள், கவிதை, நூல் அறிமுகங்கள், ஆய்வுகள், கருத்துள்ள விவாதங்கள் போன்றவற்றை கனடாவில் நடக்கவிருக்கும் அடுத்த இலக்கியச் சந்திப்பில் எதிர்பார்க்கிறேன்.

இன்னும், இனியும் நினைவில் நிற்பவை

 • நண்பர் பாபுவின் மீன்பொரியல்
 • விஐியின் இரால் சொதி
 • எஸ்.எம்.எம். பசீர் வீட்டு வட்டிலப்பம்
 • அழகாய் சிரித்து ஏகாந்தம் தந்த அன்னம் என்னும் தேவதை
 • ஒரு guide மாதிரி வழிநடத்திய சிற்பி (வயது 10),
 • எனது மடியில் தூங்கிப் போன குவேனி
 • பாரீஸ் அறிவாலயம்
 • நண்பர்கள் (பெயர் கேக்கப்படாது .. மறந்துட்டேன் .. ஹி ஹி)
 • லாச் சப்பல் பீடா
 • நோர்வேக்கு குடிபெயர்வதாய்ச் சொன்ன நண்பர்
 • ஒரு கிளாஸ் அப்பசுலுட்


குறை நிறை இருப்பினும் ”இலக்கியச் சந்திப்பு”, ”இலக்கியச் சந்திப்புத்” தான்.இன்‌றைய நாளும் நல்ல‌தே!.

அனுபவத்தின் ஞானக்கண்

சில நாட்களுக்கு முன்பு ஒரு நாள் நண்பர் ஒருவர் வீட்டில் சந்தித்தேன் அவரை. வயதில் என்னில் முத்தவர். வயது 60 ஐ நெருங்கிக்கொண்டோ அல்லது கடந்துகொண்டோ இருக்கலாம். அவருடன் இரு நாட்கள் பழகக்கிடைத்தது. அவரின் தன்மைகள் எல்லாம் என்னைக் கவர்ந்தது என்றேனேயானால் அது பொய். ஆனால் அவருடனான சந்திப்பின் பிழிவு, இச் சந்திப்பை மறக்க முடியாததாக்கியிருக்கிறது.

அவர் தன்னை அறிமுகப்படுத்திக்கொண்ட விதமும், பேச்சும் எனக்கு ஈர்ப்பைத் தருவதைத் தவிர்த்த பெருத்த எரிச்சலையே தந்தது. எனினும் அடுத்தநாள் ஏற்பட்ட சந்திப்பும், அதைச் சுற்றியிருந்த சுழலும், மனிதர்களும், உரையாடல்களும் நான் இலங்கைத் தமிழ் இலக்கிய உலகிலும், அரசியலிலும் உலாவரும் ஒரு முக்கியமானவரை சந்தித்திருக்கிறேன் என்னும் உணர்வைத் தந்திருந்த போது, அவரின் வாழ்வு பற்றிய கண்ணோட்டமும், கருத்துக்களும் அவருடன் இலகுவாக உரையாடலாம் என்றுணர்த்தின.

பெருமனிதர்களை சந்திக்கும் போது என்னிடம் வந்தமரும் சம்பிரதாயங்கள், முகஸ்துதிகள், ஒரு வித இடைவெளியுடன் நடைபெறும் உரையாடல்கள் போல் அல்லாது மிக இலகுவாக அவருடன் உரையாட முடிந்தது. வயதில் மூத்தவர் என்றாலும் எமது குசும்புத்தனமான நகைச்சுவைகளுக்கு சற்றும் குறையாத நகைகைச்சுவையுடன் எம்முடன் உரையாடிக் கொண்டிருந்தார்.

தனது வாழ்வின் பக்கங்களை எல்லாம் ஆற்றில் மிதக்கும் இலையின்  பயணத்தைப்போன்ற அமைதியாகவும், வேகமாகவும், தடைகளை கடக்கும் திருப்பங்களுடாகவும் சொல்லிக்கொண்டிருந்தார். நாமும் அவருடன் பயணித்துக்கொண்டிருந்தோம்.

பல தசாப்த்தங்களைக் கடந்திருந்த அவரின் மேற்கத்திய நாட்டு வாழ்வு அவரில் பெரும் ஆளுமை செலுத்திக்கொண்டிருந்ததை அவரின் மொழி, சொற்றாடல், கருத்துக்கள், வாழ்வை அவர் பார்க்கும் முறை என்பவற்றினூடாக அறியக்கூடியதாக இருந்தது. இருப்பினும் கிராமத்து வாசம் எதிர்பார்க்காத அளவு மிகுந்த ஆதிக்கத்தை அவரிடம் செலுத்திக்கொண்டிருந்தையும் மறுப்பதற்கில்லை.

துடிப்பான இளைமைக்காலம், எழுத்தினூடாக வந்து காதல், வாழ்க்கைப் போராட்டம், சமூக சிந்தனை, எழுத்துலகம், விடுதலைப்போராட்டத்தின் தாக்கமும் வரிந்து கொண்ட பாதையும் அத்துடன் இன்றைய முதுமையின் ஆரம்பப் படிகள் வரையிலான அ‌னைத்து வாழ்வியல் சிக்கல்களையும் அவர் பேசிக்கொண்டிருந்த போது அவரும் எனது வயதை, அதையொத்த சிக்கல்களுடன் கடந்திருக்கிறார் என்பதை அறிந்து கொண்டேன். அதேவேளை நான் இன்னும் வாழாத வாழ்க்கையை, அவர் வாழ்ந்திருந்த கதையை அவர் கடந்து போனபோது கண்கள் கட்டப்பட்ட நிலையில் திசையற்று அலையும் என்னைப் போன்றவர்களை கைபிடித்து அழைத்துப் போனது போல் இருந்தது.

அவரின் பழுத்த இலக்கிய அனுபவமும், அரசியல் அனுபவமும் வாழ்வனுபவமும் இருந்ததால் தொடர்ந்து பேசிக்கொண்டேயிருந்தார். நாமும் கேட்டுக்கொண்டே இருந்தோம். பிரபலங்களின் பலவீனங்களையும் கொண்டிருந்தார் அவர். அது புரிந்திருந்ததால் அவரின் உரையாடல்களை வடிகட்டியே காதுக்குள் விட்டுக்கொண்டிருந்தேன். இவ்வளவு பெரிய மனிதரிடம் சற்று செருக்கும், தற்பெருமையும், மிகைப்படுத்தலும் இருப்பதில் எனக்கு ஏற்பில்லை என்றாலும் யாதார்த்த உலகில் இவரைப் போன்றவர்களிடம் உள்ள பலவீனம் அது தான் என்பது புரிந்திருப்பதால் அதை தவிர்த்தே அவருடனான உரையாடலை அனுபவித்துக்கொண்டிருந்தேன். நடுநிசி கடந்து அதிகாலை நெருங்கிக் கொண்டிருந்தது நாம் தூங்க முயன்ற போது. மிக மகிழ்ச்சியான பின்மாலைப் பொழுது அது.

மறுநாள் காலையுணவு மேசையிலும் உரையாடல் தொடந்தது. அவரை வழியனுப்ப புகையிரதநிலையம் வரை அவருடன் நடந்து போனேன். ஏறத்தாள 30 நிமிடங்கள் அவருடன் தனிமையில் உரையாடக் கிடைத்த போது அவரின் வாழ்வினைப் பற்றி பகிரப்படாத சில பல விடயங்களை பகிர்ந்துகொண்டார். மெளனமாய் அவரருகில் அவரின் பயணப்பொதியுடன் நடந்து கொண்டிருந்தேன். படிகளில் எனது கையைப்பிடித்தவாறே ஏறினார். புகையிரதம் வரும் நேரம் நெருங்கும் வரை பேசிக்கொண்டிருந்தோம்.

ஒரு கேள்வி கேட்டார். என்னால் பதில் சொல்ல முடியவில்லை. சற்ற நேரம் மௌனமாய் நின்றிருந்தேன். முதுகைத் தடவி விட்டார். ஆறுதலாயிருந்தது  எனக்கு. கேள்விகளால் எனது மெளனத்தை நிரப்பாமல் புரிதலினூடான அவரது செய்கையால் மனிதனின் உணர்வுகளை அவர் புரிந்து கொண்டது மனதுக்கு ஆறுதலாயும், அதே வேளை அவரது பெருந்தன்மையையம் உணர்த்தியது.

புகையிரதத்தில் ஏற்றி அவரருகில் பயணப்பொதியையும் வைத்து, சென்று வாருங்கள் என்ற போது தம்பி! தொடர்பிலிருங்கள். முருகனைக் கும்பிடுங்கள் என்றார். அவரின் வேண்டுகோளில் ஒன்றை நிறைவேற்றுவதாகச் சொன்னேன். சிரித்தார்.

புகையிரதம் கடந்து போன பின் வீடு நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அவர் அந்தக் கேள்வியைக் என்னிடம் கேட்க நான் என்ன பிடி கொடுத்தேன் என்று சிந்தனையோடிக்கொண்டிருந்தது. பதில் கிடைக்கவேயில்லை. சிலவேளை அவரின் வாழ்வனுபவம் அவருக்கு அதை உணர்த்தியிருக்கக்கூடுமோ?


இன்றைய நாளும் நல்லதே..

தொலைந்தும் தொலையாதவர்கள்

இதயத்திற்கு வாழ்வு என்பது மிகவும் இலகுவாக இருக்கிறது.  அது தனது துடிப்பை நிறுத்தும் வரை ஓயாது துடித்துக்கொண்டிருக்கிறது. என்னும் தொனியில் தனது 4000 பக்கங்களுக்கும் அதிகமான, மிகப் பிரபலமான ”எனது போராட்டம்” என்னும் சுயசரிதத்தை ஆரம்பித்திருப்பார் நோர்வேஜிய எழுத்தாளரான Karl Ove Knausgård.

நேற்றிரவு கணணி திருத்துவதற்காக அழைக்கப்பட்டேன். குளிர் அதிகமாயில்லை, - 9  பாகை மட்டுமே. வீடு தேடிப்போய் அறிமுகமான போது அவரின் பெயர் ”யேலேனா” என்று சொல்லியபடியே மிக மென்மையாய் கையைப்பிடித்துக் குலுக்கினார். சஞ்சயன் என்பதை உச்சரித்துப் பார்த்தார். ஒரு அழகிய ரஸ்ய நாட்டு நடுவயதுப் பெண்ணிண் வாயில் நுளைய மறுத்தது ”மகாபாரதத் தூதனின்” பெயர்.

அவரின் கணணிணைத் திருத்திக் கொண்டே பேசிக்கொண்டிருந்தோம். சற்று நேரத்தில் இருவரும் ஒரே அலைவரிசையில் இருப்பவர்கள் என்பது இருவருக்கும் புரிந்தது. பேச்சு ஆரம்பத்தில் வெளிநாட்டவரும் நோர்வேஜியர்களும் என்னும் பகுதிக்குள் புகுந்து மீண்டு, தொழில், இயற்கை, வாசிப்பு என்று வந்த போது நான் ஒரு சில ருஸ்ய நாவல்கள் வாசித்திருக்கிறேன் என்றேன். மிகவும் ஆச்சரியப்பட்டார். அன்னா கரீனினா கட்டாயம் வாசி என்றார். அப் புத்தகத்தை வாசிக்கத் தொடங்கியுள்ளேன் என்ற போது அன்னா கரீினாவை படைத்தன் இலக்கிய உலகின் உச்சத்தை தொட்டுவிட்டார் லியொ டால்ஸ்டாய் என்றும் கூறினார்.  தமிழ் மொழியில் பல ருஸ்ய மொழிபெயர்ப்புக்கள் உள்ளன என்ற போதும் ஆச்சயப்பட்டார்.

அவர் அருகில் உள்ள வயோதிபமடத்தில் பகுதிநேரத் தொழில் புரிவதாகக் கூறி, அவரே அதற்கான காரணத்தையும் விளக்கினார். அவருக்கும், ஒரு ஈராக்கியருக்கும் பிறந்தவொரு குழந்தை இருக்கிறதாம். அக் குழந்தை ADHD என்னும் ஒரு வித நோய் உண்டு என்றும், அதனால் அவன் மிகுந்த சிரபப்படுவதாகவும் சொல்லி பெரு மூச்சுசொன்றை உதிர்த்தார். அதனாலேயே தான் பகுதிநேர வெலை செய்வதாகவும், மிகுதி நேரங்கள் குழந்தை சம்பந்தமான காரியங்களுக்கு செலவளிகிறது என்றார்.

தற்போது தனது மாஜிக் கணவன் குழந்தையை பார்த்தக் கொள்வதாயும், தான் மிகுந்த களைப்படைந்திருப்பதாயும், அண்மைக் காலம் வரை ஒரு நோர்வெஜியருடன் தான் சேர்ந்து வாழ்ந்து, காலாச்சாரப் பிரச்சனைகளின் காரணமாக தற்போது பிரிந்து வாழ்வதாயும் சொல்லி முடித்து, உன்னை எனது பிரச்சனைகளை சொல்லி சங்கடப்படுத்துகிறேன் என்ற போது இல்லை என்னால் புரிந்து கொள்ள முடியும் என்றேன். நன்றி சொல்லி தேனீருடன் வந்தமர்ந்தார் மீண்டும்.

தனது தாயும் சகோதரன் ஒருவரும் ருஸ்யாவில் வாழ்கிறார்கள் என்றும், விதி தன்னை இந்த நாட்டில் கொண்டுவந்து விட்டிருக்கிறது என்றும், தான் நம்பிய ஆண்கள் இருவரும் தன்னை ஒரு போகப்பொருளாக பார்த்தார்களே அன்றி தான் விரும்பிய அருகாமையை, பாதுகாப்பை தராமலும் தனது சுய கொளரவத்தை மதியாமலும் நடந்ததனால் தான் தற்போது தனியே வாழ்கிறார் என்றார். அவரின் கதைகளில் அவர் ஆண்களில் மட்டும் குறை கூறுவது போலிருந்ததனால் மிகவும் அவதானமாய் நீங்கள் உங்கள்  ஆண்களை மட்டும் குறை கூறுவதை விட்டு சுயவிமர்சனம் செய்த கொள்வதும் அவசியம் தானே என்றேன். என்னைப் பார்த்துப் புன்னகைத்தார்.

நீ நினைப்பது போல நான் என்னை சுய விமர்சனம் செய்யாமலில்லை. ஆனால் எனது நம்பிக்கைகள் உதிரத்தொடங்கிய நாட்களில் இருந்து நான் அவர்களைப் பிரிந்து வரும் வரையில் தன்னை பல தடவைகள் சுய விமர்சனம் செய்துகொண்டு பழக்கவழக்கங்களை, எதிர்பார்ப்புக்களை மாற்றிக் கொண்டு சேர்ந்து வாழ முயற்சித்து அவை செயலற்றுப் போனதாலேயே பிரியநேரிட்டது என்பது அவரின் கருத்தாக இருந்தது.

மனிதர்கள் தங்கள் நம்பகத்தன்மையை மெது மெதுவாய்  இழந்து கொண்டிருக்கிறார்கள். தங்களின் நாட்டில் உள்ளது போன்ற உறவுகளின் பெறுமதியை நோர்வேயில் காணமுடியாதிருப்பது வருத்தத்தைத் தருகிறது என்றபோது ஏன் நீங்கள் உங்கள் நாட்டவர் ஒருவரை திருமணம் புரியலாமே என்ற போது தான் நோர்வேக்கு வந்து 13 வருடங்கள் ஆகின்றன. தனது பழக்கவழக்கங்கள், நடை உடை பாவனைகள், சிந்திக்கும் விதம் எல்லாம் நோர்வேஜியர்களைப் போலுள்ளதால் இந் நிலையில் தன்னுடன் வாழப்போகும் தனது ஊர் கணவனுக்கு அவை சகிக்கத் தக்கதாக இருக்காது என்றும், அதே வேளை தன்னால் 100 வீதம் ஒரு நேர்வேஜிய மனிதராக மாறமுடியாது எனவும் அதை தனது ருஸ்ய விழுமியங்கள் தடுக்கின்றன என்றும், நான் இப்போது "No mans land" என்னும் இருநாடுகளுக்கு இடையில் உள்ள இரு நாடுகளும் சொந்தம் கொண்டாடாத நிலப்பகுதியில் உள்ளவர்களின் மனநிலையில் உள்ளேன் என்ற போது என் மனதில் அப்பாடா  நான் மட்டும் இப்படியான கலாச்சார சிக்கல்களில் இல்லை பலரும் அதை கடந்து வர முயன்று கொண்டிருக்கிறார்கள் என்பதும் புரிந்தது.

உன்னைப் போலத்தான் நானும் பல விடயங்களில் இன்னும் குழம்பிய குட்டையாய் இருக்கிறேன். நான் தற்போது எனது ஊருக்கும் அன்னியன், அதே வேளை நோர்வேயிலும் அன்னியன் எனவே நான் யார்? எனது அடையாளங்கள் எவை? நான் எங்கு போய்க் கொண்டிருக்கிறேன்? எனது தாய்நாட்டு விழுமியங்களை இழந்து இந் நாட்டு விழுமியங்களுடன் வாழ்கிறேனா என்பவை பற்றி பெருத்த குளப்பத்தில் இருக்கிறேன் என்றேன். நாங்கள் ஒரே படகில் பயணிக்கிறோம் என்றார் ஆங்கிலத்தில். எனது தலை அதை அமோதித்தது.

நீ கூறிய விடயங்களே மாற்றங்களை அனுமதிக்கும் எல்லா வெளிநாட்டவர்களுக்கும் பெரிய சவாலாக இருக்கிறது. காலாச்சார மாற்றங்களை அனுமதிக்காமல் பல ஆண்டுகளாக இங்கு வாழும் மனிதர்கள் இப்படியான சிக்கல்களை உணரமாட்டார்கள், ஆனால் அவர்களின் வாழ்வும் இலகுவாய் இல்லை என்றார். ஒரே குடும்பத்தில் இப்படியான இருவர் இணையும் போது எற்படும் சிக்கலை சிந்தித்துப் பார்த்தேன்.. தலை சுற்றத் தொடங்கியது.

தான் களைத்திருப்பதால் நிம்மதியானதொரு வாழ்க்கையை நோக்கி கனவு காண்பதாய்ச் சொன்ன போது கனவுகளே நிஜத்துக்கு வழிகாட்டிகள் என்றேன். அவர் புன்னகையில் வேதனைகளின் வலி தெரிந்தது. வாழ்வு என்பது என்றும் மாறிக்கொண்டே இருக்கும், எனவே உங்கள் வாழ்விலும் மாற்றங்கள் வரும் என்றபோது மாற்றம் ஒன்றே மாறாதது என்று சொன்னார்.

அவரின் கணணிதிருத்தி வீடு திரும்பும் போது மனதுக்குள் நான் யார் என்னும் கேள்விக்கு விடைதேட முயற்சித்த போது எதிரே தெரிந்த வீதி சமிஞ்சைவிளக்கு மஞ்சலில் இருந்து சிவப்புக்கு மாறிக்கொண்டிருந்தது.இன்றைய நாளும் நல்லதே.

துபாயில் நடிகர் வடிவேலுவும் ஒரு விசரனும் (உண்மைக் கதை)

முற்றிலும் உண்மைக்கதை என்பதால் பதிவு சற்று நீண்டுவிட்டது. பொறுத்தருளுங்கள்.

எனக்கு என்றும் மத்திய கிழக்கு நாட்டாரின் மனிதநேயத்தில் பெருத்த சந்தேகம் இருந்ததுண்டு. ஏனோ அவர்களின் உடம்புப்பேச்சுஉம்(அது தான் பொடி லாங்வேஜ்), கற புற என்ற அரபி பாசையும், ஆணவம்மிகுந்த பார்வையும், மனிதர்களை மதிக்காத தன்மையும், ஒரு சிறு புன்னகையைக் கூட சக மனிதனுக்கு வழங்காத கஞ்சத் தன்மையும் இவர்களிடத்தில் ஈர்ப்பை ஏற்பத்தியதில்லை. இனிமேல் ஏற்படுத்தும் என்ற நம்பிக்கையும் எனக்கில்லை.
2009ம் ஆண்டு கார்த்திகை மாதத்தில் ஒர் நாள் சிட்னி செல்லும் விமானத்தை காலநிலையின் சதி காரணமாக தவறவிட்டு விட்டு துபாய் விமான நிலையத்தில் உட்கார்ந்திருக்கிறேன்…. சுற்றிலும் மனிதர்கள் முக்காடு போட்ட மியான்மார், பிலிப்பைன், இந்தோனேசிய பெண்களும், கடும் பச்சை நிறத்தில் தொப்பியும் சட்டையும் போட்ட நைஜிரிய பெண்களும், பல விதமான உடுப்பு போட்ட இந்தியர்களும், இவர்களையெல்லாம் தங்கள் ஆணவப்பார்வையால் ஏளனமாய் பார்க்கும் அரேபியர்களும், வெள்ளைகளும் என திருவிழா போல இருக்கிறது விமான நிலையம். ஒடித்திரியும் குழந்தைகள் மட்டும் இவர்களை சட்டை செய்யாமல் துய்மையான தமது உலகில் உலாவந்து கொண்டிருக்கிறார்கள், எப்போதும் போல.

ஏறத்தாள 2 மணிநேரத்தின் பின் புதிய போர்டிங் கார்ட், தங்க ஹோட்டல் எல்லாம் தந்து அனுப்பினாள்.

எனக்கு சப்பாத்து வாங்க வேண்டியிருந்ததால் மிலேனியும் ஹோட்டலில் இருந்து பஸ்ஸில் சிட்டி சென்டருக்கு போனேன். 2 சப்பாத்து கடையில் பார்த்து ஒன்றில் காலுக்கு இதமான ஒன்றை வாங்கிய பின் பார்த்தால் நேரம் எக்கச்சக்கமாய் மிச்சம் இருந்தது. சரி ஊர் சுத்துவோம் என நினைத்து நகரத்துக்கு போகும் ஷட்டில் பஸ்ஸில் ஏறக் கொண்டேன். பஸ் புறப்புட்டதும் எங்கே இறங்குவது என்ற பிரச்சனை மண்டையை குடைந்த போது சாரதிக்கு பின் இருக்கை காலியாக இருந்ததனால் அதில் மெதுவாய் அமர்ந்து கண்ணை சாரதியின் பக்கத்திற்கு திருப்பிய போது சாரதிக்கு பக்கத்தில் தமிழ்த் தினசரிப் பத்திரிகை ஒன்று கிடந்தது. பிறகு என்ன…

நீங்கள் தமிழோ என்றேன்?
இல்ல சார், மட்றாஸ்,
நீங்கள் சிலோனா? என்றார் இந்தியத் தமிழில் அந்த சாரதி…. அப்பாடா என்றிருந்தது மனதுக்கு. ஊர், பெயர், தொழில், வருமானம் (12000 இந்திய ரூபாய்), குடும்ப நிலை எல்லாம் கதைத்தபடியே வாகனமோட்டிக் கொண்டிருந்தார் செல்லத்துரை என்னும் புதிய நண்பர். திடீர் என பின்னால் இருந்த ஒரு பெண் தான் இவ்விடத்தில் இறங்கவேணும் உடனே நிப்பாட்டு என்றார். அவரை கடுமையாய் பார்த்த சொல்த்துரை
”நோ ஸ்டொப் …ஹியர், வெயிட் வன் மினிட், ஐ ஸடொப்”
என்றார். ஆயினும் அந்த பெண் ஸ்டொப், ஸ்டொப் என்று கத்திக்கொண்டேயிருந்தாள்

யக்கா, நான் ஸ்டொப் பண்ணினா பொலீஸ் 5000 தினா பைன் அடிப்பான்;… உங்க ஊட்டுக்காரரா அத கட்டுவாரு என்று தமிழில் திட்டி முடிக்கவும் அவர் சொன்ன வன் மினிட் முடிந்து ஒரு பஸ் தரிப்பிடம் வந்த போது செல்லதுரையை செல்லமாக தனது பாசையில் திட்டியபடி இறங்கிப் போனாள் அந்தப் பெண்.

பார்தீங்களா சார்… அவுகளா பொலீஸ் பைன் அடிச்சா கட்டுவாங்க? நாம தான் கட்டணும். அந்தம்மா புரியாம திட்டிகுனுபோது என்றார். எனக்கு பாவமாயும் இருந்தது அத்துடன் அவர் எனக்கு எதையோ போதிப்பது போலவும் இருந்தது.

எங்க சார் போவணும்
தமிழ் புத்தகம் வாங்கனும் என்றேன்
என்ன புஸ்தகம்? சினிமா புஸ்தகமா என்றார் அப்பாவியாக
இல்ல என்று இழுத்தேன்
பேப்பரா? ஏன்றார்
இல்ல வேற புத்தகம் என்றேன்
நான் உங்கள தேரா துபாய்ல நம்ம ஏரியால எறக்கி உடவா என்றார்
தலையை ஆட்டினேன்
சார் ஒம்போது மணிபோல மிஸ்கோல் தாங்க நான் வந்து உங்கள ஹோட்டல்ல இறக்கிவுடுறன் என்றார்
எதையோ போசித்துக் கொண்டிருந்து போது கொழும்பு மெயின் வீதி மாதிரியான சனநெருக்கடியான இடத்தில் இறக்கிவிட்டார். வீதியின் பெயர்ப்பலகை Al Sabkha Rd என்று காட்டிக் கொண்டிருந்தது. அந்த சந்தில போனா தமிழ் கட ரொம்ப இருக்கு சார் என்று கைகாட்டி இடம் காட்டிவிட்டுப் போனார்.

இவருக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்? ஏன் இவ்வளவு உபசாரமாக நடந்து கொண்டார்? தமிழன் என்பதாலா? இருவரும்சொந்த ஊரில் இல்லை என்பதால் மொழியும், இனமும் எம்மை நெருங்கிப்பழக வைக்கிறதோ என்னவோ… ஒஸ்லோவிலோ, லண்டனிலோ யாராவது ஒருத்தன் இப்படி உதவி செய்வானா? மற்றவர்கள் ஏன்? நானே இப்படி செய்ய செய்ய ஆயிரம் தரம் யோசிப்பேன்.

ஏவரைப் பார்த்தாலும் தமிழ், சிங்கள முகங்களைப் போல இருந்தது. (இந்தியர்கள்)
சற்று நேரம் நடந்து பார்த்தேன். கொழும்பு வெள்ளவத்தை கடைகள் மாதிரியே இருந்தது. இந்தியாவிள் எல்லா மொழிகளையும் கேட்க முடிந்தது. நம்மூர் தமிழ் காதில் விழவேயில்லை நான் அங்கிருந்த 4 மணி நேரமும்.

முதலில் ஆர்வத்தை ஏற்படுத்தியது ”தமிழ்நாடு முடிதிருத்துமிடம்” என்னும் சலூன் தான். ஊரில் உள்ளது போல சிவப்பு நிறத்திலான மொத்தமான பிளாஸ்டிக் தோல் கதிரை. அதன் இரண்டு கைபிடிகளுக்கும் குறுக்கே வைக்கப்புட்டிருந்த பலகையில் ஒரு சிறுவன். அவன் முகத்தில் திட்டு திட்டாய் வெட்டப்பட்ட சுருட்டை மயிர்கள். அவனுக்குப் பக்கத்தில் அவனின் தந்தை. களைத்ததாலோ அல்லது தான் வளர்த்த முடி போய் விட்டதே என்ற துக்கத்திலோ காணப்பட்ட அவனது முகம் எனக்கு என எனது அப்பாவையும், அந்தக் காலத்தில் முடிவெட்டிய நாட்களையும் ஞாபகமூட்டின. அந்த காலத்தில மயிர் இருந்தது சுதந்திரம் இல்ல இப்ப சுதந்திரம் இருக்கிறது ஆனால் மயிர் இல்ல.. இதைத் தான் விதி என்பதோ?


உள்ளே போனேன்
காட்டப்பட்ட கதிரையில் அமர்ந்தேன்
தம்பி நீங்கள் தமிழா என்றென்
ஆமா சார்… நீங்கள் தமிழா சார்? என்றார் ஆச்சரியமாக (விளங்கிவிட்டது… இவரும் எனது ப்ரௌன்(?) நிறத்தைப் பார்த்து நான் ஆபிரிக்கன் என்று நினைத்து விட்டார் என்று…ஒஸ்லோவில் என்னை கடந்து போகும் சோமாலிய நாட்டவர்கள் ”சலாம்மலைக்கும்” சொல்வார்கள். நானும் அலைக்கும்மசலாம் என்பேன் நெஞ்சில் கைவைத்தபடியே (ஏறாவூரில் வளர்ந்துவிட்டு இதையாவது சொல்லாட்டி எப்படி?)

(விமானத்தில் இருந்து எழுதுகிறேன் விமானத்தில் உள்ள டிவீ திரை நாம் இலங்கைக்கு மேலாக பறந்து கொண்டிருக்கிறோம் என காட்டுகிறது…. ஆகா என்ன டைமிங்…சரி சரி கதைக்கு வருவோம்)

ஏன் பார்த்தா அப்படி தெரியலையா என்றேன்
இல்ல சார் மொட்டையாயும், கறுப்பாயும் இருந்தீங்களா அதுதான் என்றார்
நக்கலடிக்கிறாரோ என எனது புலனாய்வுத்துறை ஆராயத்தொடங்கியதால் கண்ணாடியில் அவரின் முகத்தைப் பார்த்தேன்..
அப்பாவியாய் வெள்ளை உடுப்பில் என்னைப் பார்த்து நட்பாய் சிரித்தார்.
என்ன சார் செய்யட்டும் என்றார்… (என்ட தலையில் என்ன வெட்ட இருக்கு என்ற நக்கல் தான் அது..)
சேவ் எடுத்து விடுங்களன் என்றேன்
எடுக்கலாமே என்றார்
வெள்ளைத் துவாயை இரண்டு மூன்று தரம் உதறினார். கழுத்தைச் சுற்றி கட்டி விட்டார்.
மேல சுவரில் ஒரு டீவியில் வடிவேலு களவெடுத்த ஒரு சைக்கிலை யாருக்கோ வித்துவிட்டு எஸ்கேப் ஆகிக் கொண்டிருந்தூர். கடையில் இருந்த ஏல்லோரும் வஞ்சகமின்றி மனதால் சிரித்தார்கள்.. நானும் தான். எனக்கும் வடிவேலின் இப்படியான அப்பாவித்தனமான அல்லது அடாவடித்தனமான இம்சைகள் பிடிக்கும்.
வெள்ளைத் துவாயால் என்னை சுற்றி கட்டினார்
முதுப்பக்கத்தில் இருந்து ஒரு சிறிய பலகையை மேலே இழுத்து எனது தலையை சாயவைத்தார்.
சாய்ந்தபடியே கண்ணாடியில் பார்த்தேன் என்னை. இப்படி சேவ் எடுப்பதில் உள்ள சுகம் அனுபவித்தவர்களுக்கு மட்டுமே புரியும். வீட்டில் சர் புர் என்று 30 செக்கனில் எடுக்கும் சேவ் எல்லாம் ஒரு சேவ்..வா?
குளிர் தண்ணிய ஸ்பிரே பண்ணிய என்னை இந்த உலகத்திற்கு கொண்டுவந்தார்
முழு முகத்தையும் இரு கைகளாலும் அமத்தி தேய்த்து விட்டார். மீசைப் பகுதியை விரலால் தேய்த்து விட்டார்.
இடக்கிடை மேல பார்த்தபடி வடிவேலின் லொள்ளுகளை பார்த்தபடியே இருந்தார்.
ஏதோ ஒரு கறீம் தடிவி கட்டையான மொத்தமான கைபிடி கொண்ட பிரஸ் ஒன்றை தண்ணியில் நனைத்து முகத்தில் இருந்த கறீமில் தடவ அது நுரைக்கத் தொடங்கியது.

உங்கட சலூனா என்றேன்
இல்ல சார்
கன நாளாக வேலை செய்யுறீங்களா என்றேன்
புரியல சார் என்றார்
ரொம்ப நாளா வேலை செய்யுறீங்களா என்றேன்
ஆமா சார். மூணு வருசம் என்றார்
10 -12 மணி நேரம் வேலை செய்வதாய் சொன்னார்.
12 மணிநேரம் நின்ற நிலையிலேயே வேலை...நினைத்துப் பார்க்கவே கால் நோந்தது எனக்கு. எப்படித் தான் சமாளிக்கிறாரோ?

இப்ப எனது முகத்தை கிறுஸ்மஸ்தாத்தாவின் தாடி மாதிரி வெள்ளை நுரை முகத்தை மூடியிருந்தது
ஒரு சதுரமான பழைய தமிழ் பேப்பர்துண்டு ஒன்றை எடுத்து வைத்தார் மேசையில். சவரக்கத்தில் இருந்த பழைய பளேட்ஜ களட்டி எறிந்தார். புதிய பிளேட் ஒன்றை எடுத்து மடித்து அதை இரண்டாக உடைத்து ஒரு பாதியை சவரக்கத்தியில் போட்டார். திரும்பி மேலே பார்த்தார் வடிவேலு பாருக்கோ ஆப்பு வைத்துக்கொண்டிருந்தார். வடிவேலுவை பார்த்தபடியே எனது களுத்தில் கத்தியை வைத்தார்

சரி எல்லாம் முடிந்தது என்று நினைத்தேன்….ஆனால் கத்தி அசையவில்லை. வடிவேலுவின் விளையாட்டை ரசித்த பின்னரே தனது விளையாட்டை ஆரம்பத்தார். (தொழில்ல சுத்தமான ஆள் போல)

இரண்டு வளிப்பு வளிப்பார்…. பேப்பரில் துடைப்பார்
பிறகு இரண்டு வளிப்பு வளிப்பார்…. பேப்பரில் துடைப்பார்
இப்படியே தாடையை சேவ் எடுத்தார்
பெருவிரலால் சொக்கையை மேலே அமத்தி இழுத்தபடியே சேவ் பண்ணினார்

வாங்கு ஒன்றில் இருந்தவர்களில் ஒருவர் தனது மகனுடனான பிரச்சனையை சலூனே கேட்கிறது என்பதைப் பற்றி சற்றும் யோசிக்காமல் நண்பரிடம் பகிர்ந்து கொண்டிருந்தார். (மகன் உதவாக்கரையாம், குளப்படியாம்.. (நம்மளப் போல உலகத்தில பலபேர் இருக்கிறார்கள் என்று அறியக்கிடைத்தது ஆறுதலாயிருந்தது)

திடீர் என வடிவேலு டீவியில் இருந்து மறைய, சிக்னல் வரல என்ற படியே வேறு ஒரு தமிழ் டீவிசனல் ஒன்றை மாற்றினார்.

இப்ப எனது வாய்க்கும் நாடிக்கும் இடையிலான பகுதியை வழித்துக் கொண்டிருந்தார். நான் வாயை கொஞ்சம் உயர்த்திப் பிடித்தேன்.
இல்ல சார்.. நீங்க விடுங்க நான் வளிக்கிறன் என்றார். (அனுபவசாலி போல)

பின்னால் இருந்த பெரியவர் இப்போது மகனின் கதையை விட்டு விட்டு டீவியில் போகும் நாடகத்தின் நடிக்கும் வில்லியின் பூர்விகத்தை நண்பருக்கு சொல்லிக் கொண்டிருந்தார். எனக்கு ஆச்சரியமாக இருந்தது (ஏன் என்றால் அவருக்கு வயது 60 இருக்கும்). வில்லியை மிகவும் அன்னியோன்யமாக புரிந்து வைத்திருந்தார்…மனைவி பக்கத்தில் இல்லத ஊரில் வில்லியை புரிந்து வைத்திருப்பதில் ஏதும் தப்பு இருக்கிறதா? முடிவை உங்களிடமே விட்டு விடுகிறேன்..

எனது முகம் முழுக்க வளிக்கப்பட்டிருந்தது.
மீண்டும் தண்ணீர் ஸ்பிரே பண்ணி, கிறீம் புசி, கிறிஸ்மஸ்தாத்தாவாக்கி வழிக்கத்தெடங்கினார்.
சார் எங்க வேல செய்யுராப்புல என்றார்
நான் நோர்வே, விமானம், காலநிலை, டுபாய் என்று சுருக்கமாக சொன்ன போது
உங்க ஊர் எங்க சார் இருக்கு என்றார்
எனக்கு வெறுத்துவிட்டது…
நோர்வேயை தெரியவில்லை என்றது ஏதோ போலிருந்தது.
சமாளித்தபடியே, சுவீடனுக்கு பக்கத்தில் என்றேன்
இப்ப புரியுது சார் என்றார் (எனக்கு சுவீடன்காரர்களில் எரிச்சல் வந்தது)
என்ன வேலை, குடும்பம், பெற்றோர் எல்லாம் விசாரித்தார்.
திடீர் என்று ஆமா சார்
உங்க ஊர்ல சண்ட முடிஞ்சிறிச்சாமே என்றார்
”ம்” போட்டேன்
பிரபாகரன் செத்துடார்ம்ல என்றார்
இதற்கும் டிப்ளமடிக்காக ”ம்” என்றேன்
இனி யார் சார் தமிழ காப்பாத்த போறாங்க என்றார்
என்ன சொல்லுறீங்க என்றேன் (பயந்து போய்)
இனி யார் சார் தமிழ காப்பாத்த போறாங்க.. என்றார்…அப்பாவியாக
”ஏன் உங்கட கறுப்பு கண்ணாடிக் கிழவன்” காப்பாத்த மாட்டாரோ என சத்தமாக கேக்க வேணும் போல இருந்தது என்றாலும் அடக்கிக் கொண்டு இதற்கும் ம் என்றேன் .
பின்னால் இருந்த பெரியவர் இப்ப வில்லியின் கெட்டித்தனங்களை புகழ்ந்து கொண்டிருந்தார்.

முழுவதும் வளித்த பின்
தண்ணி ஸ்பிரே பண்ணி
மெல்லிய டீசூபேப்பரால் ஒத்தியேடுத்தார்
ஆப்டர்சேவ் போவா சார் என்றார்
பல்லை இறுகக் கடித்தபடியே ஆப்டர்சேவ் போட அனுமதித்தேன்..
சற்றே அதிகமாய் எரிந்தது
கிறீம் போட்டார்
பௌடர் போடவா சார் என்ற போது
வேணாம், வேணாம் என்று தடுத்தேன்
போத்தியிருந்த வெள்ளை துவாயை களட்டி விட்டார்
எவ்வளவு ஜயா? ஏன்றேன்
1அவர் கேட்ட பணத்தைக் கொடுத்து ஏர்கொண்டிசன் சலூனில் இருந்து வெளியே வந்த போது துபாயின் வெக்கை முகத்திலத்தது.
திடீர் என்று இளைய மகளின் ஞாபகம் வந்தது… இப்ப அவரை முத்தமிட்டால் அப்பா குத்துது என்ற சொல்ல மாட்டார். ஆசை தீர கொஞ்சித் தள்ளளலாம்.

என்னைத் தாண்டி இரு இளைஞர்கள் கைகோர்த்து போனார்கள்…பிறகு அவர்கள் தோளில் கை போட்டுக் கொண்டு மறைந்து போனார்கள்…. மேற்குலத்தில் இதன் அர்த்தம் வேறு.. எனினும் நட்பின் நெருக்கத்தை தோளில் கைபோட்டு நடப்பதை விட வேறு எப்படி காட்டலாம்? திடீர் என எல்லா பால்ய ஸ்னேகமும் ஞாபகத்தில் வந்து போனது.

பசி வயிற்றைக் கிள்ள பக்கத்தில் இருந்த ஹோட்டலில் புகுந்தேன். அவர்களின் பேசிய மொழி மலையாளம் போலிருந்தது. பரோட்டாவும், ஆட்டு பொரியலும், ஏதொ ஒரு குழம்பும் வந்தது.
வாழ்க்கையில் இவ்வளவு எலும்பிருந்த ஆட்டை நான் கண்டதில்லை (இந்த ஆடு முற்பிறப்பில் வாழை மீனாக இருந்திருக்குமோ?) சாப்பிட்ட பின் கைகளுவும் இடத்திற்கு போனேன். எனக்குப் பக்கததில் கைகழுவ வந்தவர்
வந்ததும் பைப்பை திறந்தார்
காறித் துப்பினார்
கையில் தண்ணியெடுத்து வாயில் விட்டு
சத்தமாய் கொப்பளித்து, தொண்டை கழுவி
உலகிலேயே உயரமான நீர்விழ்ச்சி தனது வாயில் தான் இருக்கிறது என்பது போல
குனியாமலே நின்ற படியே கொப்பளித்த நீரை துப்பினார்
அது எனது கையையும் (அ)சுத்தப்படுத்தியது
பயந்து போய் அவரைப் பாhர்த்துக் கொண்டிருந்தேன்
மனிதர் தனது கருமத்தில் கண்ணாயிருந்தார்
மீண்டும் கொப்பளித்து துப்பினார்
பிறகு நின்ற படியே
மூக்கையும் சீறி சுத்தப்படுத்தினார் (சாப்பாடு நல்லா உறைப்பாக இருந்ததா என்று கேட்ட ஆசையாய் இருந்தது.. என்றாலும் அடக்கிக் கொண்டேன்
அந்த கலாச்சார அதிர்ச்சியில் இருந்து மீள சற்று நேரமெடுத்தது.
நான் எவ்வளவு தூரம் மாறிவிட்டேன் என்பதை இந்த நிகழ்ச்சி உணர்த்திச் சென்றது… ஊரில் வாழ்ந்திருந்தால் இது பற்றி சிந்தித்திருப்பேனா?

தேரா துபாய் அலைந்து திரிந்தேன். எங்கும் இந்தியர்களே தெரிந்தார்கள் அதுவும் 99 வீதம் ஆண்கள். ஒரு இளம் ஆபிரிக்க பெண் இறுக்கமான உடையணிந்து காதலனுடன் கடந்து போன போது அவளைப் பார்த்துக் கொண்டேயிருந்த இளசுகள், பெரிசுகள், பழசுகளை என்னால் புரிந்து கொள்ள முடிந்தது.

ஒரு எலக்றோனிக் கடையில் போய் ”ஐபொட் நனோ” இருக்கா என்றேன். ஓம் என்று காட்டினார்கள் 5வது ஜெனரேசன் நனோ 8 ஜிபி உடையது 40 டொலருக்கு தருவதாக சொன்னான்.
(ஆப்பிள் சி. ஈ. ஓ இந்த விலையைக் கேட்டால் தற்கொலை செய்து கொண்டிருப்பார்)

பார்த்தால் எல்லாம் ஒரிஜினல மாதிரியே இருந்தது. ஆனால் விலை மட்டும் அது ஓரிஜினல் இல்லை என்றது. வேண்டாம் என்று போது பேரம் பேசவும் தயாராக இருந்தார்கள்.

இரண்டு சேட்கள் வாங்கிய பின் நண்பர் செல்லதுரைக்கு போன் பண்ணினேன். சார் நான் இறக்கிஉட்ட இடத்தில நில்லுங்க இப்ப வந்திர்றன் என்றார். சொன்ன மாதிரியே வந்தார்.
தனக்கு பக்கத்தில் இருத்திக் கொண்டார்.

என்ன சார், புஸ்தகம் கிடைத்ததா, சாப்பிட்டீங்களா? என்றார்.
புத்தகம் வாங்கவில்லை ஆனால் சாப்பிட்டேன் என்றேன்.
சார் உங்களுக்கு துபாய் காட்டுறன் என்று சொல்லி ஊர் சுற்றிக் காட்டினார்.
ஓரு துறைமுகத்தை காட்டினார். அங்கிருந்து தான் ஈரானுக்கு சாமான் ஏற்றுகிறார்கள் என்றார். அருகிலேயே அழகான சிறிய கப்பல்கள் அங்கும் இங்கும் போய்க் கொண்டிருந்தது அழகாயிருந்தது.
தனது பூர்வீகம் விளக்கினார். தனது குடும்பத்தினர் திருநெல்வேலியில் இருப்பதாயும் இரண்டு வருடங்களுக்கு ஒரு தடவை ஊருக்கு போவதாயும், கிழமைக்கு 6 நாட்கள் பல மணிநேரம் வேலை செய்வதாயும், இரவு 12 மணியின் பின்பே சமைத்து உண்பதாயும் சொன்னார்.
என்னைப் பற்றியும் விசாரித்தார், சொன்னேன்.
ஏன் சார் அங்க வேலை எடுக்க முடியுமா என்றார். மிக மிக சிரமம் என்றேன்
வேதனையில் புன்னகைத்தார் போலிருந்தது எனக்கு.
தனது பஸ்ஸில் வரும் எல்லோரும் இலசமாக வருவதாயும் எனினும் ஒருவர் கூட ஒரு டீ குடிக்க கூட காசு தரமாட்டார்கள் என்றார். மனதுக்குள் ஏதோ நெருடிச் சென்றது

இந்த மனிதர் என்னை மிகவும் சிந்திக்க வைத்தார். நான் அனுபவித்தறியாத புதியதோர் வாழ்வின் வலி பற்றி அவர் கற்றுத்தருவது போலிருந்தது. மனம் கனத்துப் போயிருந்ததனால் வாய் அதிகமாய் பேசவில்லை.

எனது ஹோட்டலில் இறக்கிவிட்ட போது என்னாலான அன்பளிப்பை வழங்கிய போது கைபிடித்து தடுத்தார். மிகவும் வற்புருத்தி கொடுத்தேன். டுபாய் வந்தால் போன் பண்ணுங்க சார் என்றார்.

மேற்குலக வாழ்வோட்டத்தில் எதுவும் பணத்தை அடிப்படையாக வைத்தே கணீக்கப்படுகிறது மட்டுமல்ல அப்படியே செயல்படவும் செய்கிறது. நாமும் அதை சுயவிமர்சனமின்றி ஏற்றுக் கொள்கிறோம், ஏற்றுக் கொண்டுவிட்டோம். நட்பு, மனிதநேயம், அன்பு எல்லாவற்றிகும் வெக்கப்படாமல் விலை குத்துகிறோம். தினம் தினம் பழகும் உறவுகளுக்கே நேரம் ஓதுக்காமல் இயந்திரமாய் சுழன்று திரிகின்றோம்.

ஆனால் வறுமையிலும் முன் பின்பறியாத எனக்கு நண்பனாய் வந்து போன இந்த மனிதர் நான் தொலைத்திருக்கும் எதையோ ஒன்றை உணர்த்திவிட்டுப் விட்டுப் போயிருக்கிறார்.
மறக்க முடியாதவர்களில் ஒருவராய் மனதுக்குள் குடிவந்திருக்கிறார் நண்பர் செல்லத்துரை.

தலையங்கத்தை பார்த்து நீங்கள் ஏமார்ந்திருந்தால் என்னைக் குற்றம் சுமத்தார்தீர்கள். நான் பொய் சொல்லவில்லையே.....
(தேடி வந்து அடிக்கப்படாது..... ஆமா)


.

அப்பாவின் (T)ரங்குப் பெட்டியின் இரகசியங்கள்

எனது அப்பா இலங்கை போலீசில் வேலைசெய்தவர். அவரின் போலீஸ் இலக்கம் 1124. இந்த இலக்கத் தகடு எப்பொழுதும் அவரின் ஒரு தோளில் இலக்கமும் மறு தோளில் சில நட்சத்திரங்களும் மினுங்கிக் கொண்டே இருக்கும். அவ்வப்போது அதை ஒரு பழந்துணி தந்து அவற்றை மினுக்கச் சொல்லுவார். என் மனதுக்கு அது பெருமையாய் இருக்கும்.

எனக்கு ஞாபகம் இருந்த காலத்தில் இருந்து அவரிடம் ஒரு ரங்குப்பெட்டி இருந்தது. மிகவும் பாரமானது. இரும்பிலானது. அதன் உடல் அமைப்பில் சில மடிப்புக்கள் இருந்தன. அதைத் தூக்க இருபுறமும் மடித்துவிடக்கூடிய கைபிடிகள் இருந்தன. அப்பாவின் பல ரகசியபொருட்கள் அதனுள் இருப்பதாக எனது கற்பனையோடிக்கொண்ருந்தது. அது போலீஸ் வேலையில் அப்பா சேர்ந்த போது கொடுக்கப்பட்டதாக அப்பா சொன்னதாக ஞாபகம் இருக்கிறது.

அப்பாவும் அதை தொட விடமாட்டார். நானும் அவர் சற்று சந்தோசபானம் அருந்தி மித மிஞ்சிய சந்தோசத்தில் இருந்த போதும் கேட்டுப்பார்த்திருக்கிறேன். மனிதர் அந்த விடயத்தில் மட்டும் ரொம்பவே நிதானமாய் இருந்தார்.

1981 இல் அப்பா பூலோகம் வெறுத்து மேல்லோகம் போனபோது அந்தப் பெட்டியை நான் எனது உரிமை என்று அம்மாவுடன் சண்டைபிடித்து பெற்றுக் கொண்டேன்.வீட்டுக்கு மூத்தவன் என்பதால் அம்மாவும் எதிர்த்துப் பேசவில்லை.

பல வருடக் கனவு அன்றொருநாள் நிறைவேறியது.  பெட்டியை மெதுவாய் திறந்தேன். அலாவுதீன் அற்புத விளக்கை தேய்த்துவிட்டு நின்றபோது எப்படி அவனின் மனது இருந்திருக்குமோ அப்படி இருந்தது மனம்.  அப்பா மேலே இருந்து பார்த்துக்கொண்டிருப்பாரோ என்று பயமாயும் இருந்து.

மெதுவாய்த் திறந்தேன். முதலில் தெரிந்தது எண்ணையூறிப்போன பச்சை சாம்பல் நிறமான தேவாரப்புத்தகம். அதில் என்ன இருக்கப்போகிறது ஒரு 16 வயதேயான எனக்கு. அடுத்து அப்பாவின் போலீஸ் உடுப்புகள், சாரன் என சில உடுப்புகளும். அப்பாவின் பாடசாலை பரிசுக்கிண்ணங்களும், சான்றிதழ்களும் இருந்தன. இன்னும் தோண்டிப்பார்த்த போது அவர் அந்தக்காலத்தில் கால்ப்பந்து விளையாடிய பூட்ஸ், கோடுபோட்ட ஸ்டொக்கிங்ஸ், ஓட்டப்போட்டிகளின் போது பயன்படுத்தப்படும் stopwatch என்று பல ”ஆட்டோகிராப்” சமாச்சாரங்கள் இருந்தன. இவற்றுடன் மூன்று முக்கியமான பொருடகளும் அதனுள் இருந்தது. முதலாவது அப்பாவின் போலீஸ் தொப்பி, மற்றயது போலீசார் மழைக்காலங்களில் பயன்படுத்தும் ரெயின்கோர்ட்.  இவற்றுடன் இரண்டு தோட்டாக்களும் இருந்தன. அந்த தொப்பியும், ரெயின் கோர்ட்டும் இது நடந்து சில காலங்களின் பின் என்னை ஒரு போலீசாக ஏறாவூர், செங்கலடிப் பகுதியில் நடமாடவைக்கும் என்று நான் அன்று அறிந்திருக்கவில்லை.

ரங்குப்பெட்டியை ஆராய்து அடுத்தடுத்த நாட்களில் அப்பாவின் சேட்களை ஒரு டெயிலரிடம் கொண்டுபோனேன். அவரும் எனது அளவுக்கு உள்ளால் ஒரு தையல் போட்டு சேட்களை அளவில் சிறிதாக்கினார். தம்பி ”கொலர்” மாத்த எலாது என்றார். வீடு வந்து உடைமாற்றி வெளிக்கிடும் போது அம்மா ஒரு விதமாய் முறாய்த்தார். பின்பு ”மூத்தவன்” என்பதாலோ என்னவோ ஒன்றும் சொல்லவில்லை. அன்று மாலை Eravur United மைதானத்தில் பூட்ஸ்போட்டு விளையாடினேன். பந்துக்கும் அப்பாவின் சப்பாத்துக்கும் ஒத்தேவரவில்லை. அன்றுடன் அப்பாவின் சப்பாத்து தனது கால்ப்பந்து விளையாட்டை நிறுத்திக்கொண்டது.

பின்பு வந்த காலங்களில் எனது தொழில்நுட்ப ஆராய்ச்சியின் காரணமாக அப்பாவின் stopwatch அசைய மறுத்தது. ஒன்றுக்கும் உதவாத மணிக்கூடு என்று பட்டம் சூட்டி அதை ஒரு மூலையில் போட்டேன். அம்மா கேட்டால் கையைக்காட்ட இருக்கவே இருக்கிறாள் 4 வயதுத் தங்கை என்பதால் அது பற்றிய கவலை அற்றுப்போனது. அம்மாவும் கேட்கவில்லை. அதனால் நான் ஒரு பொய் குறைவாகச்சொன்னேன் எனது வாழ்க்கையில்.

ஏறத்தாள 1985களில் ஒரு நாள் மழைபெய்து கொண்டிருந்த போது அப்பாவின் ரெயின் கோர்ட்ஐ மாட்டிக்கொண்டு சைக்கிலில் நண்பனின் வீட்டுக்கு போனபோது நண்பன் நான் அருகில் போய் ”டேய்” என்னும் வரை பேயைய் பார்ப்பது போல நின்றிருந்தான். தன்னிடம் போலீஸ் வருகிறது என்று நினைத்து பயந்தானாம் என்றான் கேட்டபோது. இப்படிதான் ஆரம்பித்தது நான் போலீஸ் ஆன கதை.

நண்பனின் வீடு ஒரு ஒழுங்கைக்குள் இருந்தது. ஒழுங்கையின் ஆரம்பம் ஒரு முக்கியமான வீதியில் இருந்தது. ஒழுங்கையும் அந்த வீதியும் சந்திக்கும் இடத்தில் ஒரு மரம் இருந்தது. அந்த வீதியால் தான் காட்டுப்பகுதியில் இருந்து மங்களும், அனுமதியில்லாத விறகுகளும் இரவு நேரங்களில் கொண்டுவரப்படும்.

அது ஒரு மழைநாள் ஒழுங்கையின் ஆரம்பத்தில் இருந்த மரத்தின் கீழ் நின்றபடி பேசிக்கொண்டிருந்தோம். நான் அப்பாவின் ரெயின்கோர்ட் போலீஸ் தொப்பி போட்டபடி நின்றிருந்தேன். நண்பன் குடையுடன் சைக்கிலில் நின்றபடி என்னுடன் பேசிக்கொண்டிருந்தான். எமக்கருகிருல் இருந்த தெருவிளக்கு மிகவும் மங்கலாய் இருக்க அதைச் சுற்றி ஈசல்கள் பறந்து கொண்டிருந்தன.

அப்போது சற்று தூரத்தே இரு சைக்கில்கள் விறகுடன் மிக மெதுவாய் வந்து கொண்டிருந்தன. திடீர் என ”டேய் போலீஸ்டா” என்று ஒரு குரல் கேட்க, நான் நிமிர்ந்து பார்க்க அந்த இரு சைக்கில்களும் ஒரு U turn போட்டு வேகமெடுத்தன. நான் எனக்குப் பின்னால் திரும்பிப் பார்த்தேன். செங்கலடிச் சந்திவரை இருட்டாய் இருந்தது. திடீர் என மூளைக்குள் ஒரு ஔி தோன்ற மிகவும் அதட்டலான குரலில் ”டேய்” என்றேன் அந்த இரு சைக்கில் மனிதர்களும் திரும்பி திரும்பி பார்த்தபடி இருட்டில் மிக வேகமாய் கரைந்து போனார்கள்.

நண்பனும் நானும் சிரித்து ஓயவே சற்று நேரமாயிற்று. அடுத்து வந்த மழைக்காலம் செங்கலடிச்சந்தியில் ஒரு போலீஸ் தொப்பிபோட்ட போலீஸ்காரன் பெரும் அட்டகாசம் பண்ணிக்கொண்டிருந்தான். வண்டில்களில் லாம்பு இல்லாமல் வந்தால் அதட்டினேன், சைக்கிலில் ”லைட்” இலாமல் வந்தால் வெருட்டினேன். சிறுவர்களின் தலையில் குட்டி அனுப்பினோம்...

எனது நண்பனுக்கும் எனக்கும் மட்டுமே இந்த ரகசியம் தொரிந்ததாக நாம் எண்ணிக்கொண்டிருந்த ஒரு நாள், அம்மா தம்பி அந்த அப்பாட ரெயின் கோர்ட் எங்கடா என்ற போது எடுத்த நீட்டினேன். குசினிப்பக்கம் போனவர் அடுப்பில் இருந்த கொள்ளிக்கட்டையால் அதை சுட்டு ஓட்டையாக்கினார். உருகியக ரப்பர் மனம் மூக்கினுள் நுளைந்த போது உங்கட கூத்துகளப் பற்றி ”அன்டி” (நண்பனின் தாயார்) சொன்னவ என்றார். அத்துடன் அப்பாவின் ரங்குப்பெட்டியை பரிசோதித்தார். அப்பாவின் தொப்பியும் பறிபோனது. உள்ளே இருந்த தோட்டாக்களையும் கண்டபோது அம்மா ஆடியே போய்விட்டார். டேய் ஆர்டா இது தந்தது என்று பெரிய விசாரணையே நடாத்தினார். அப்பாவிடம் இருந்ததாக சொன்னதை அவர் ஏற்கவில்லை. நான் ஏதோ ஒரு விடுதலை இயக்கத்தில் இருக்கிறேன் என்று கடும் விசாரனை நடாத்தினார்.

அதன் பின் அந்த தோட்டாக்களை அம்மாவின் நேரடி பார்வையில் தோட்டத்தினுள் ஆழமான கிடங்கு கிண்டி புதைக்கவேண்டியேற்பட்டது.

இதன் பின்பு சிலகாலம் அம்மாவின் கெடுபிடிகள் அதிகமாகி நான் தேவைக்கு அதிகமாக சூடாகி எல்லா வீடுகளிலும் நடப்பது போல எங்கள் வீட்டிலும் நடந்தது.  ஏனைய அம்மாமாரைப் போல் எனது அம்மாவும் நடந்தவற்றை சில நாட்களில் மறந்து போனார். நானும் போலீஸ் தொழிலை உதறிவிட்டு ஊரில் இருந்த அழகிகளை கண்காணிக்கும் தொழிற் கல்வியில் தேர்ச்சிபெறலானேன்.

அப்பாவின் ரங்குப்பெட்டி இன்னமும் அம்மாவிடம் இருக்கிறது. அது எனக்கு என்று கிழவியை வெருட்டி வைத்திருக்கிறேன். அவரும் ”சரியடா.. அது உனக்குத் தான் என்றிருக்கிறார்”

அந்த மழைக்காலங்களும் அழகானவையே.எனது அப்பாவுக்கும், செங்கலடிச்சந்தியில் உதவி பொலீஸ் அத்தியச்சகராக எனக்கு உதவி புரிந்த திருவாளர் ராஜன் அவர்களுக்கும் இது சமர்ப்பணம்.

(கனடாவில் இலங்கை போலீஸ் ரெயின்கோர்ட உடனும், போலீஸ் தொப்பியுடன் ஒருவர் நின்றிருந்தால் அவர் என்னிடம் உதவி பொலீஸ் அத்தியச்சகராக இருந்தவராக இருக்கலாம். எனவே தயங்கமல் ‌போட்டுத் தாக்குங்கள்).

சாமீ.. எனக்கொரு உண்மை தெரிஞ்சாகனும்!

இன்று தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ”குழந்தைப் போராளி” என்றும் என்னும் புத்தகம் வாசித்துக் கொண்டிருந்தேன். அக் கதையின் நாயகி தனது ஒன்பது வயதுக்குள் பல வேதனைகளைக் கடக்கிறாள்.  என்னை ஆச்சர்ப்படுத்திய விடயம் அவரின் ஞாபக சக்தி. உண்மைக்கதை என்பதால் கற்பனைகள் மிகுதியாக இருக்கமாட்டாது என்றே நம்புகிறேன். இருப்பினும் கதைக்கு கற்பனை தவிர்க்கமுடியாததாகிறது.

அ.முத்துலிங்கம் அய்யாவின் ”உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தின் முன்னுரையில், கதையில் உண்மையும் கற்பனையும் பற்றி எழுதியிருப்பார். உண்மையில் நடந்ததொன்றை அப்படியே நினைவில் நிறுத்தி, எழுத்தில் கொணர்வது என்பது மிக மிகக் கடினமான காரியம். ஆனால் அந்த ”நினைவை” வாசகனுக்கு பரிமாறும் போது கற்பனையையும், உண்மையையும் கலந்து ருசிசேர்த்து பரிமாறுவதிலேயே எழுத்தாளனின் திறமை அடங்கியிருக்கிறது என்னும் தொனியில் இருந்தது அ.முத்துலிங்கம் அய்யாவின் கருத்து.

கடந்த சில காலங்களாக நானும் நினைவுகளில் முத்துக்குளித்து எழுதத் தொடங்கியிருக்கிறேன். ஏன் எழுதுகிறேன் என்ற கேள்விக்கு எனக்குள் தெளிவான பதில் இல்லை. ஆனால் மனதுக்கு ஆறுதலாயிருக்கிறது.  வெம்மையயும், வெறுமையாயும் கடந்து போகும் பல மணிநேரங்களை மனதுக்கு இதமாக மாற்றிப்போகிறது எழுத்து. இப்பொதெல்லாம் ஏதும் எழுதாவிட்டால் ஒரு வித பதட்டம் வரத்தொடங்கியிருக்கிறது. ஏன் என்ற கேள்விக்கு பதில் இல்லை. ஆனால் யாரோ  எழுத்து என்பது ஒரு பிசாசுமாதிரி அது உன்னைப்பிடித்தால் விடாது என்றது உண்மை என்பது மட்டும் நன்றாகப் புரிகிறது. எனக்கு எனது அனுபவங்களை எழுதுவதை விட வேறு எதிலும் ஆர்வம் இன்றுவரை வந்தததில்லை. எனவே எனது கதைகளில் உண்மையின் பங்கு அதிகமாகவே உண்டு.

நினைவுகளில் மூழ்கி முத்தெடுக்கும் போது சில நினைவுகள் மிகவும் இதமாக மனதை மயிலிறகால் தடவிப்போகும். சில சம்பவங்களின் நினைவுகளோ ”காய்ந்த புண்ணின் கறுப்புநிறத் தோலை  நகத்தினால் மெதுவாய் அகற்றும் போது போது திடீர் என வலித்து ரத்தம் கசிவது” போல ஒரு அசூசையான உணர்விணைத் தந்து போகும். ஒரு சில சம்பவங்களோ நினைத்துப்பார்க்கக் கூட முடியாத அளவிற்கு மனதினுள் ஒரு வித அச்சத்தை விதைக்கக்கூடயவை. சம்பவங்களால் ஆனதே வாழ்க்கை என்பதை உறுதிப்படுத்துகின்றன எனது நினைவுகள்.

அண்மையில் ஒரு நேர்வேயின் பழம் பெரும் அரசியல்வாதியொருவரின் கணணி திருத்தும் போது அவர் எழுத்தாளராக இருப்பது அறிந்து பேசிக்கொண்டிருந்த போது அவரிடம் ”அய்யா,  உங்களுக்கு தெரிந்த எல்லா அரசியல் ரகசியங்களையும் எழுதியிருக்கிறீர்களா? என்ற போது, மனிதர் என்னை ஊடுருவிப் பார்த்த பின் மெளனம் சாதித்தார். எனக்கு அதன் அர்த்தம் புரிந்ததால் மௌனமாய் இருந்தேன். மெதுவாய் தோளில் கைவைத்து புன்னகைத்தார். அவர் கண்களின் மொழி புரிந்தது எனக்கு.

எனக்கு அவர் அளவுக்கு அனுபவம் இல்லை. ஆனால் எல்லா உண்மைகளையும் எழுத்தில் கொணர முடியாது என்பது புரியும் அளவுக்கு அனுபவம் இருக்கிறது.

உண்மைகள் என்பது எப்போதும் இனிப்பாக இருக்கவேண்டும் என்று இல்லை. அது கசப்பாகவும் இருக்கும், இருக்கவும் வேண்டும். ஆதலால் உண்மையுடன் கைகோர்த்து வாழ பலத்த மனோதிடம் அவசியமாகிறது. மனிதனின் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளவும், சுயவிமர்சனத்துக்கும் நாம் கசப்பான உண்மைகளை ஜீரணித்து அதனுடன் கைகோர்த்து வாழவேண்டியிருக்கிறதல்லவா?

எனது எழுத்தில் அதிக உண்மையும் அதே வேளை மிகைப்படுத்தப்படாத, கதையை நகர்த்த தேவையான, கதையின் கருத்தை மாற்றியமைக்காத சில கற்பனைகளும் உண்டு.

உதாரணமாய் அண்மையில் நான் எழுதிய ”எலிசபெத் மகாராணியின் குவாட்டரும் எனது கட்டிங்'உம்” என்னும் ஆக்கத்தை வாசித்த அன்பர் ஒருவர் நீஙகள் இப்படி குடித்துவிட்டு வெறியில் ஆட்களுடன் மோதி விழுந்து கிடப்பீர்கள் என்று நான் நம்பவில்லை என்று அன்பாய் சூடாகி என்னை ரொம்பவும் சூடாக்கினார்.

குடிப்பழக்கம் இல்லாத நான் இப்போது குடிக்கத் தொடங்கியிருக்கிறேன். அத்துடன் குடித்துவிட்டு தட்டுத் தடுமாறி விழுந்து எழும்பி நடக்கின்றேன் என்பது அவரது வாதம்.

அந்தக் கதையில் உள்ள இறுதி இரண்டு பந்திகளும் கற்பனையே. ஆனாலும் அதில் ஓரு வித உண்மையும் இருக்கிறது. அதாவது ஒருவன் மது அருந்தினால் நான் அங்கு குறிப்பிட்டிருந்தவை நடக்கலாம். நான் மிக மிக சொற்பமான அளவு மது அருந்தியிருந்தேன்.

எனக்கு அந்தக் கதையை நகைச்சுவையாய் முடிக்க அவசியமாயிற்று என்பதால் நான் சற்று கற்பனை கலந்தேன் அவ்வளவே. அத்துடன் 3 -4 மேசைக்கரண்டி அளவு மது அருந்தினால் மனிதன் நிலை தடுமாறி தலைகீழாக நடப்பான் என்றோ, அல்லது  அதனால் அவன் நான் கற்பு நெறி தவறியது போல் மிகைப்படுத்திக் கதைக்கவேண்டிய அவசியம் இருப்பதாகவோ எனக்குப் புரிவில்லை.

இந்த பதிவை இரண்டு நாட்களாக எழுதிக்கொண்டிருக்கிறேன். இன்று காலை நிலக்கீழ் தொடரூந்தில் பயணித்த போது சுஜாதாவின் ” கடவுள்களின் பள்ளத்தாக்கு” என்னும் கட்டுரைத் தொகுதி வாசித்துக் கொண்டிருந்தேன். அதில் ”நகைச்சுவை பற்றி ஒரு சீரியசான கட்டுரை” என்னும் கட்டுரையை இவ்வாறு முடிக்கிறார் சுஜாதா.

புத்திசாலித்தனமான நகைச்சுவை:
வாழ்வின் அபத்தங்களை நன்றாக கவனித்து மிகையில்லாமல் அல்லது சற்றே மிகை சேர்த்து புண்படாமல் சொல்வது.  இது தான் எல்லாவற்றிலும் மிக உயர்ந்த நகைச்சுவை.இன்றைய நாளும் நல்லதே..
.

விளைந்த பனியும் நிறைந்த மனமும்

நேற்று மாலை வேலை முடிந்து வீடு திரும்பிக்கொண்டிருந்தேன். வானில் இருந்து பூக்களை தூவுவதைப் போல் பனி மெது மெதுவாய் கொட்டத் தொடங்கியிருந்தது. பனியின் அழகு மனதுக்கு இதத்தைத் தரும். ஆனால் அது வழுக்கும், விழுந்தெழும்ப வேண்டும், கால் புதைய புதைய நடக்கவேண்டும், கால்கள் நனைந்து குளிரும் என்று பல சிக்கல்களும்  உண்டு.

வீட்டைநெருங்கும் போது பனி மழை்துளிகளுடன் கலந்து ஒரு வித கலவையாய் கீழிறங்கிக்கொண்டிருந்தது. இப்படியான பனி மிகுந்த  சிரமத்தைத் தரும். வாகனம் ஓடும் போது இப்படியான பனி வாகனத்தை வழுக்கி இழுத்துப்போகச் செய்யும்.

நான் பாதையை கடப்பதற்கு எத்தனித் போது ஒரு காரில் ஒரு வெளிநாட்டவர் எதிரில் வந்தார். நான் அவருக்கு இடம் விட்டு நின்றேன். அவரோ எனக்கு இடம் தர காரை நிறுத்த எத்தனித்தார். அவர் பிரேக் அடிக்க எத்தனித்த போது வாகனம் துப்பாக்கித்தோட்டா என்னை நோக்கி வருவது போல வழுக்கியபடியே என்னை நோக்கி வந்தது. அவரோ பிறேக்ஐ அமத்தியபடியே காரைத் திருப்ப முயற்சிக்க அது நியூட்டனின் விதியை மீற மாட்டேன் என்பது போல என்னை நோக்கி நேரேயே  வந்தது. சற்று பின்வாங்கினேன். எனக்கு 1 மீற்றருக்கு முன்னால் கார் நின்றது. எனக்கும் சாரதிக்கும் என்ன பேசுவது என்றே தெரியவில்லை. நிறுத்தியதற்கு நன்றி என்று சொல்லி மெதுவாய் பாதையைக் கடந்து கொண்டேன்.

அந்த சாரதி பனியில் கார் ஓடி பழக்கமில்லாதவர் என்பது மட்டும் நன்றாகப் புரிந்தது. பனியில் வாகனம் ஓடிப் பழகியவர்கள் திடீர் என பிறேக்ஐ அமத்திப் பிடிக்கமாட்டார்கள். விட்டு விட்டுத் தான் பிடிப்பார்கள். அப்போது வாகனம் மிகுந்த கட்டுப்பாட்டுக்குள் இருக்கும்.

‌வீட்டுக்குள் புகுந்த பின் இன்று காலை வரை வெளியே செல்லவேண்டிய அவசியம் ஏற்படவில்லை. காலை ஐன்னலால் வெளியே எட்டிப்பார்த்தேன். பனிவிளை பூமி என்று யாரோ சொன்னதில் தவறேயில்லை என்பது போல தாராளமமாய் விளைந்திருந்தது பனி.

பனிக்குள் புதைந்தாலும் கால் நனையாத சப்பாத்தை மாட்டிக்கொண்டு வேலைக்குப் புறப்பட்டேன். ஏறத்தாள 20 - 30 சென்டிமீற்றர் பனி கொட்டிக்கிடந்து வழி எங்கும்.  பனியை வழித்து பாதையை சுத்திகரிக்கும் இயந்திரங்கள் மஞ்சல் நிற மின்னும் ஓளியுடன் ஆங்காங்கே பனியை வழித்துக்கொண்டிருக்க மெதுவாய் நிலக்கீழ் தொடரூந்து நிலையத்துக்கு நடக்கத் தொடங்கினேன்.

எதிரில் ஒரு சிறுமி பனியில் புதைந்தவாறே தாயின் அழைப்பை மறுதலித்துக்கொண்டிருக்க தாயோ கெஞ்சிக்கொண்டிருந்தார். எனக்குள் புன்னகைத்தபடியே அவர்களைக் கடந்த போது இலையுதிர்காலத்துக் காற்றில் தனது உடைகளைத் தொலைத்து நிர்வாணமாய் நின்றிருந்த  மரங்கள் எல்லாம் புத்தம் புதிய பனியுடை போர்த்தி மிக அழகாய்த் தெரிந்தன். கறுப்பாய் நீரும், பனியும், கழிவுகளும் கலந்திருந்த பாதைகள் எல்லாம் பனியால் மூடப்பட்டு அழகாய் இருக்க எனது மனமும், உடலும் சுற்றாடலைப் போல் உட்சாகமாகிப்போனது. தூரத்தே சிறுவர்கள் சிலர் பனி உறுண்டைகளை எறிந்து விளையாடிக்கொண்டிருந்தார்கள்.

காலுக்குள் மிதிபட்ட பனி உட்சாகத்தை தரும் பனியின் வகையைச்சேர்ந்ததாக இருந்தது. வடநோர்வேயில் வாழும் ”சாமிஸ்க்”  இன மக்களின் மொழியில் பனியின் தன்மையை வர்ணிக்க 100க்கும் அதிகமான சொற்கள் இருக்கின்றனவாம். வாழ்வின் அரைவாசிக்காலத்தை இந்நாட்டில் கடந்த பின்பு எனக்கும் பனியின் வகைகள் பல உண்டு என்பது புரிய ஆரம்பித்திருக்கிறது. இவற்றில்  மிகவும் பிரபல்யமான பனியை "Pudder" என்கிறார்கள் நோ்வேஜிய மொழியில். அதை ஆங்கிலத்துக்கு மொழிபெயர்த்தால் "Powder" என்று பொருள்படும். எனது காலுக்குள் மிதிபட்ட பனியும் "Powder" வகையைச் சேர்ந்துதே.

மதியம் போல் சற்று மனச்சோர்வுடன் வேலைக்கு அருகே உள்ள ஆற்றோரமாக நடந்த போது முகில்களற்ற வானமும் சூடற்ற சூரியனும் பனியின் அழகை  இன்னும் அழகாகாகக் காட்டிக்கொண்டிருந்தது. நாய்குட்டியொன்று எஜமானின் பந்தை மீண்டும் மீண்டும் பனிக்குள் பாய்ந்து போய் எடுத்து வந்தது. எஜமானனும் அதை பாராட்டிக்கொண்டிருந்தார். சிறப்பான பனிக்காலத்து உடையுடன் வயோதிபதம்பதிகள் என்னைக்கடந்து போயினர். குழந்தையை தள்ளுவண்டியில் வைத்தபடியே பேசிக்கொண்டே நடந்தனர் சில தாய்மார். சிறுவர்கள் பனிச்சறுக்கில் தங்களை மறந்திருந்தனர்.


இப்படி என்னைச் சுற்றியிருந்த உலகம் அழகான பனி விளைந்ததால் மகிழ்ச்சியாய் இருந்து மட்டுமல்லாமல் ஒரு விசரனையும் உட்சாகப்படுத்தியிருந்தது.

மனிதர்களின் மனநிலையை உணர்ந்து இயற்கை செயற்படுகிறதோ என்னவோ என்று எண்ணியபடியே வேலைக்குள் புகுந்து கொண்டேன்.

இன்றைய நாளும் நல்லதே..

முதுமையின் பேராசை
ஆண்டு 2030ஐ நெருங்குகையில்
ஏறாவூர் - மட்டக்களப்பு அருகில்
கடல் கண்ணுக்கு தெரியுமிடமொன்றில்

ஒரு ஆர்ப்பாட்டமில்லாத சிறு தென்னந்தோட்டம்
ஆங்காங்கே மா, பாலா என மரங்கள்
இவற்றின் நடுவே
திண்னையுடன் கூடிய ஓலையால் வேயப்பட்ட சிறு வீடு
வீட்டினுள் ஒரு சிறு மேசையும், சில கதிரைகளும்
மேசையில் நிறையப் புத்தகங்களும், ஓரு கூஜா குளிர் நீரும்,
கண்ணுக்குத் தெரியுமிடங்களில் என் இளவரசிகளின் படங்களும்

சுவற்றில் பல்லிகளும்

படுத்தெழும்ப ஒரு கயித்துக்கட்டில்
குசினிப்பக்கத்தில் சில சட்டி பானைகள்
திண்ணையில் ஒரு சாய்மனைக்கதிரை
அதனருகில் வெத்திலையும், பாக்கும். சுண்ணாம்பு, ‌புகையிலை தவிர்த்து

வெளியில் ஒரு கப்பியுடன் ஒரு கிணறு
அதனருகில் உடுப்புக்காய ஒரு கொடி
அதற்கங்கால் ஒரு கக்கூஸ்
அருகிலேயே குப்பை எரிக்க, தாட்க ஒரு கிடங்கு

கிணற்றருகில் வாழைகள்
வாசலில் மல்லிகை, மற்றும் பல பூக்கள்
கால் புதைந்து நடக்க மண்
நட்பாய் பேசி நடக்க, சேர்ந்து வாழ இரண்டு நாலுகால் நண்பர்கள்
அடிக்கடி ஓடிமறையும் அணில்கள்
கேட்டு மகிழ பறவைகளின் ஒலிகள்

கடந்து போகும் போது நெஞ்சிலே கைவைக்க
சற்று தூரத்தே ஒரு மரத்தடிக்கோயில்
மாலையில் குந்தியிருந்து போழுதைப்போக்க ஒரு மைதானம்
அவ்வப்போது போய் வர ஆஸ்பத்திரி, சலூன்
வந்து போக மனிதக்குணம் கொண்ட மனிதர்களும், நட்புகளும்
இரைமீட்க நீண்ட இரவுகள்
தேவைப்படின் சற்று சோமபானம்

இப்படியாய் இருக்கவேண்டும் என் முதுமை

அய்யய்யோ
மறந்து விட்டேன் முக்கியமானவற்றை


உலகை என்னுடன் இணைக்க
ஒரு மடிக்கணணி, இணையஇணைப்பு, ஒரு கைத்தொலைபேசி

மிக முக்கியமாய்
என்னைத் தேடி வராத வெள்ளை வான்.

இப்படியோரு பேராசையிருக்கிறது எனக்கு.இன்றைய நாளும் நல்லதே


.

போதைக்கும் போதிக்கும் கவிதைகள்

இன்றும் ஏனைய நாட்களைப் போல் நிலக்கீழ் தொடரூந்தில் இருந்து இறங்கி ”ட்ராம்ப்” தரிப்பிடத்தை நோக்கி எனது கால்கள் அனிச்சையாக நடந்து கொண்டிருந்தன. நிலக்கீழ் தொடரூந்து நிலயத்தால் வெளியே வந்ததும் அருகில் படிக்கட்டுகளும் படிக்கட்டுகளுக்கு அருகில் பேருந்து தரிப்பிடமும் அதற்கருகில் ”ட்ராம்ப்” தரிப்பிடமும் உண்டு.

இந்தப் படிக்கட்டிலும், அதனருகிலும் போதைவஸ்துக்களுக்கு அடிடையான மக்கள் பலர் எப்போதும் கூடியிருப்பர். எனவே எப்போதும் அந்த இடத்தை பலரும் தவிர்க்கவே விரும்புவர். நானும் அப்படித்தான். அந்த அடம் என்றால் ஒரு வித அசூயை உணர்வேன்.

எத்தனையோ மனிதர்களின் வாழ்வு இந்த இடத்தில் பாழாகிக்கொண்டிருக்கிறது. பல வெளிநாட்டவர்களும், வயது குறைந்தவர்களும் இவர்களுக்குள் அடக்கம்.

இன்று அந்த இடத்தைக் கடந்த போது பலர் ஒரு இடத்தில் கூடி ஏதோ ஒன்றை பார்த்துக் கொண்டிருப்பது தெரிந்தது. யாரும் ”ஓவர்டோஸ்” எடுத்து மயங்கி விழுந்திருப்பார்களோ என நினைத்தேன். ஆனால் சுற்றியிருந்தவர்களின் புன்னகையும், பாராட்டு வார்த்தைகளும் என்னை அங்கு கொண்டுபோயிற்று.

நானும் எட்டிப் பார்த்தேன். எப்போதும் இல்லாதவாறு அந்தச் சுவர் அலங்கரிக்கப்பட்டிருந்தது. அந்த அலங்காரம் குழந்தைகளால் செய்யப்பட்டிருந்ததை அவதானிக்க முடிந்தது. குழந்தைக‌ளின் கைவண்ணத்தில் பூக்களும், வண்ணாத்திப்பூச்சிகளும் அழகழகான வண்ணத்தில் வரையப்பட்டும், உருவங்கள் அழகழகாக கத்தரிக்கப்பட்டும் அங்கு ஒட்டப்பட்ருந்தது. இடையிடையே வாழ்வினை போதிக்கும் கவிதைகளும் காணப்பட்டன. அங்கு பார்வைக்கு வைக்கப்பட்ட கவிதைகள் ‌நோர்வேயின் பிரபல கவிஞராக கருத்படும் Hans Børli என்பவரின் கவிதைகளாகவே இருந்தன.

Hans Børli இன் கவிதைகள் மிகவும் ஆழ்ந்த கருத்துக்களுடையவை. என்னிடம் ‌ அவர் எழுதிய ஒரு புத்தகம் உண்டு. எனக்குள் மொழி பெயர்ப்பு ஆசை வந்திருந்த நாட்களில் அதில் இருந்து சில கவிதைகளை மொழிபெயர்க்க முயற்சித்த போது எனக்கு அந்த தகுதி இல்லை என்பதை மிக விரைவிலேயே கண்டு கொண்டேன். என்னால் அக் கவிதைகளை மொழிபெயர்க்க முடியவில்லையே என்பதை விட இன்றும் அக் கவிதைகள் உண்மையான அர்த்தத்துடன் நோர்வேஐிய மொழியிலேயே இருப்பது என்க்கு மகிழ்ச்சியாக இருக்கிறது.

காலையில் அவரின் கவிதைகளை வாசிக்க முடியவில்லை. மாலை அதை வாசிப்போம் என்று போனேன். அங்கு அவரின் அழகான கவிதைகள் இருக்கவில்லை மாறாக இருண்ட உலகத்தின் மனிதர்கள் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தார்கள்.இந்த பதிவில் உள்ள படம் Marie K Kvisberg என்னும் சிறுமியினால் வரையப்பட்டது..
.

எலிசபெத் மகாராணியின் குவாட்டரும் எனது கட்டிங்'உம்

இன்று லண்டன் கட்வீக் விமான நிலையத்தில் நின்றிருந்த போது எனது விமானத்துக்கு சற்று நேரம் இருந்ததால் அங்கிருந்த கடைகளை கண்களால் மேய்ந்தபடியே நடந்து கொண்டிருந்தேன்.

முதலில் electronic பொருட்கள் இருந்த கடையை வலம் வந்து பின்பு வாசனைத்திரவியங்கள் இருந்த கடையைப் பார்த்த போது தான் நண்பர் தனக்கு ஒரு மதுபான போத்தல் வாங்கி வர உத்தரவிட்டிருந்தது ஞர்பகத்தில் வந்தது.

எனவே அருகில் இருந்த மதுபான விற்பனைநிலையத்துக்குள் புகுந்து நண்பருக்கான சந்தோஷபானத்தை சீதையை தேடிய அனுமான் போல் தேடியலைந்து கொண்டிருந்தேன். அப்போது "Sir" என்று ஒரு குரல் எனக்கு பின்னால் கேட்க  ”நம்மளை யார் இவ்வளவு மரியாதைக் கூப்பிடப்போகிறார்கள்”  என்பதால் அதை கவனிக்காது நடக்க முற்பட்டேன். அப்போதும் "Sir, "Sir" என்ற குரல் கேட்டதால் திரும்பிப் பார்த்தேன். சத்தியமாக அவர் என்னைத்தான் கூப்பிடுகிறார் என்பது புரிந்தது.

தனது அழகில் நம்பிக்கையில்லாததால் முகத்தில் பலத்த ஒப்பனைகளுடன் என்னை நோக்கி வந்து ஏதும் உதவி தேவையா என்றார் ஒரு 55 - 60 வயது மதிக்கத் தக்க பெண் . ஆம் நான் ஒரு குடிவகையை தேடிக் கொண்டிருக்கிறேன் என்றேன். அதன் பெயர் XO என்ற போது அவர் ” எங்களிடம் அந்த "Cognac" இருக்கிறது, ஆனால் நான் விட சிறப்பான "Cognac" உங்களுக்கு காட்டுகிறேன் என்று எனது பதிலை எதிர்பார்க்காமல் திரும்பி நடந்தார். என்னடா இது புது சிக்கல் என்று நினைத்தபடியே பின்னாலேயே போனேன். ஒரு அழகான போத்தல் ஒன்றை கையில் எடுத்து அதை மிக மிக ஒயிலாக பிடித்தபடி அவரது கறுப்பாக பூச்சியரித்திருந்த பற்கள் தெரிய என்னைப் பார்த்துச் சிரித்தார். 

மேலே தொடருமுன் ஒரு நான் ஒரு உண்மையை சொல்ல வேண்டும். நான் பார்த்தால் குடிகாரன் மாதிரி இருப்பேனே அன்றி உண்மையில் இந்தக் கலை பற்றி அறிவற்ற ஒரு பெரு மடையனே. ஏறக்குறை 45ஐ 365 ஆல் பெருக்கி வரும் நாட்கள் எனது வாழ்வில் வீணாகிவிட்டிருக்கிறது என்கிறார் எனது நண்பர். அது உண்மையாய் இருக்குமோ என்னும் பயம் எனக்கு வந்திருக்கிறது என்பதையும் மறைப்பதற்கில்லை.

அவர் அந்த போத்தலை கையில் பிடித்தபடியே மூச்சு விடாமல் இப்படி சொல்ல ஆரம்பித்தார்.
இந்த குடிவகை HINE என்னும் உலகப்புகழ் பெற்ற தயாரிப்பாளர்களினால் தயாரிக்கப்படுகிறது. இங்கிலாந்து அரசிக்கும் அவரது அரச குடும்பத்துக்கும் "Cognac" வழங்கும் உரிமம் இவர்களிடம் மட்டுமே உள்ளது. HINE குடும்பத்தின் 6 வது பரம்பரை இத் தொழிலை செய்து வருகிறது. Thomas Hine தனது தந்தையின் பணிப்பின் பெயரில் 1791ம் ஆண்டு பிரான்ஸ் நாட்டுக்கு "Cognac" தயாரிக்கும் கலையைக் கற்பதற்காக பயணமானார். மீண்டும் இங்கிலாந்துக்கு வருகை தந்த பின் பிரபல்யமான "Cognac" வியாபாரியின் மகள் எலிசபெத் என்பவரை திருமணம் முடித்து தனது 4 குழந்தைகளுடனும் இந்த வியாபாரத்தை ஆரம்பித்தார்.

இந்த இடத்தில் அவர் மூச்சு விடுவதை மறந்துவிட்டாரோ என நான் பயந்திருந்த போது ஒரு முறை மூச்சை உள்‌ளே பெரிதாய் இழுத்து தனது சுவாசப்பைகளை நிரப்பி மீண்டும் எனக்கு ஒரு பெரிய ”லெக்சர்”  அடித்தார்.

என்னிடம் அவரிடம் கேட்பதற்கு ஒரே ஒரு கேள்வி தான் இருந்தது. அவர் ஒரு வசனத்தை முடித்து அடுத்த வசனத்தை தொடங்க முதல் நான் எனது கேள்வியை ஆரம்பிக்க யோசிப்பேன். ஆனால் அவர் அதற்கிடையில் அடுத்த வசனத்தின் நடுப்பகுதியில் நிற்பார். அவருக்கு எப்படி எனது கேள்வியை அறிவிப்பது என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது அவர் மனனம் செய்திருந்தவை தீர்ந்து போனதால் சற்று மௌனமாகினார்.

உடனே நான் அதன் விலை என்ன என்றேன். பல ஆண்டுகள் பழமையன இதன் ருசிக்கு இந்த விலை அதிகமில்லை என்று நான் கேட்காத கேள்விக்கு பதிலளிக்கத் தொடங்கினார். மீண்டும் தயவு செய்து விலையைச் சொல்லுங்கள் என்றேன். தொண்டையை கனைத்தபடியே 130 £ என்றார். எனக்கு "Cognac குடிக்காமலே தலை சுற்றத் தொடங்கியது.

எனது நண்பர் சிக்கனமானவர். அவர் என்னிடம் இந்தப் பெண் சொன்ன விலையின் 20 வீத விலையையே அதிகபட்ச விலையாக குறிப்பிட்டிருந்தார். எனவே எனது பிரச்சனையை அவரிடம் குறிப்பிட்டேன். அவர் என்னை பார்த்த பார்வை..  ”டேய் கஸ்மாலம்! இது கசிப்பு போல் 100 மில்லி, 300 மில்லி என்று விற்கும் பொருள் அல்ல”.... என்பதைப் போல் இருந்தது.

அவர் என்னை விடுவதாய் இல்லை. இங்கிலாந்து அரசி குடிக்கும் பானம் நீங்களும் அருந்திப் பாருங்கள் என்றபடியே ஒரு சிறு கிண்ணத்தில் தீர்த்தம் போல் "Hine Cognac" ஊற்றித் தந்தார். இந்த இடத்தில் எனது ”தன்மானம்” (யாரப்பா உனக்கு அது இருக்கா என்று கேட்பது?) நான் குடிப்பதில்லை என்று அவரிடம் சொல்ல இடமளிக்கவில்லை. குடிக்காமலும் இருக்கமுடியவில்லை. நாம என்ன இங்கிலாந்து அரசிக்கு குறைந்தவனா என்னும் ராங்கியும் சேர்ந்து கொள்ள.. மடக் என்று வாய்க்குள் ஊற்றிக் கொண்டேன். அய்யோ! நீங்கள் அதை மணந்து பார்க்கவில்லையா? என்றார் அவர். அப்போ தான் எனக்கு எனது நண்பர்களில் சிலர் கிளாஸ்ஐ வட்டமாக ஆட்டயபடியே மணந்து பார்ப்பது ஞாபகத்தில் வந்தது. இதற்கிடையில் அவர் இன்னுமொரு சிறிய கிண்ணத்தில் ஊற்றி என்னை நோக்கி நீட்டினார். இம் முறை நான் கோயிலில் நிற்பதாக நினைத்தபடியே மூன்று முறை சுற்றி மூன்று முறை மணந்து பார்த்தேன். அப்போது இப் பெண் இதன் சுவை மிக ஆழமானது என்று ஆரம்பித்து இதைக் குடிக்கும் போது உங்கள் தொண்டை எரியாது என்றும் சொன்னார். நானும் மடக் என்று அதையும் ஊற்றிக் கொண்டேன். அவர் சொன்னது போல் தொண்டை எரியவில்லை.

தற்போது எமக்கருகில் இன்னும் இருவர் வர அப் பெண்
”இந்த குடிவகை HINE என்னும் உலகப்புகழ் பெற்ற தயாரிப்பாளர்களினால் தயாரிக்கப்படுகிறது. இங்கிலாந்து அரசிக்கும் அவரது அரச குடும்பத்துக்கும் "Cognac" வழங்கும் உரிமம் இவர்களிடம் மட்டுமே உள்ளது”
என்று தனது மனனத் திறமையை தொடங்கினார். அவர்கள் அவரின் பிளந்த வாயை பார்த்தபடியே இருந்தனர்.

எனக்கு ”ஜிவ்” என்று ஏதோ மண்டைக்குள் ஏறிக் கொண்டிருந்தது. சற்றே ”உசார்” வந்திருந்து. (அந்தப் பெண் மிக மிக அழகாகத் தெரிந்தார். அவரின் குரல் தேன் போல் இனித்தது, உதடு  சீச்சீ... அப்படி  நான் கற்பனை பண்ணவில்லை .... ).

இவளின் 130 £ பெருளை நான் எனது நண்பனுக்கு வாங்கிப் போனால் அவன் சொந்த வீட்டிலேயே அகதியாகிவிடும் நிலை இருப்பதால்  மெதுவாய் நகர்ந்து 18 £ க்கு ஒரு XO வாங்க்கிக் கொண்டேன். இதை நண்பனின் வீட்டில் இருக்கும் ஒருவருக்கு தெரியாமல்  நண்பரிடம் ஒப்படைப்பது எப்படி என்ற கவலையும் தற்போது என்னுடன் சேர்ந்து கொண்டது.

பணம் செலுத்தி வெளியில் வந்தேன். இப்போது அந்தப் பெண்ணைச் சுற்றி புதிதாய் பலர் நின்றிருந்தனர். அவர்  ஏதோ சொல்லிக்கொண்டிருந்தார்.

கடையை விட்டு வெளியேறினேன். இங்கிலாந்து அரசின் குடிபானம் என்னை ஒரு பேரரசனின் மனநிலைக்கு கொண்டுபோயிருந்தது. உலகம் பஞ்சாய் இருந்தது. நெஞ்சை நிமிர்த்தி காற்றில் நடந்தேன். கிழவிகள் குமரிகளாய் தெரிந்தார்கள். எல்லோரையும் பார்த்து நான் மட்டும் சிரித்தேன். எனக்கு முன்னால் வந்த இருவர் என்னில் மோதினார்கள். அவர்கள் ”மன்னியுங்கள்” என்று சொல்வார்கள் என்று நினைத்தேன். ஆனால் அவர்கள் மன்னியுங்கள் என்று சொல்லாமல் என்னை முறைத்துப் பார்த்தபடி‌யே போனார்கள்.

நான் இங்கிலாந்து அரசிக்கு சமமாக குடித்தது அவர்களுக்கு பொறாமையைத் தூண்டியிருக்கலாம் என்று நினைத்துக்கொண்டேன்.


இன்றைய நாளும் நல்லதே.


HINE 'குடி'மக்களுக்கு இது சமர்ப்பணம்.
.