நிகரற்ற அகத்தூண்டல்

 ”அகத்தூண்டல்” என்று ஒரு சொல் இன்று எனக்கு அறிமுகமாகியது. அதுவும் எனது பெருமரியாதைக்குரிய அண்ணண் எஸ்.ரா வின் இணையத்தளத்தினூடாக.

எனக்கு இரண்டு எழுத்தாளர்களை மிக மிக மிகப் பிடிக்கும். முதலாமவர் அ. முத்துலிங்கம் அய்யா, மற்றையவர் எஸ். ரா எனப்படும் எஸ். ராமகிருஷ்ணன் அண்ணண்.

1964ம் ஆண்டில் இருந்து எழுதிவரும் அ. முத்துலிங்கம் அய்யாவின் எழுத்துக்கள் எனக்கு 2006ம் ஆண்டிலேயே அறிமுகமானது என்பது நான் மிகவும் வெட்கப்படும் விடயம். கண்டதை எல்லாம் வாசித்த எனக்கு இவர் ஏன் கண்ணில்படாமல் போனார் என்று என்னிலேயே கோபம் உண்டு.

அதே காலகட்டத்திலேயே எஸ். ரா அண்ணணின் எழுத்துக்களும் ஆனந்த விகடனின் ”துணையெழுத்து” என்னும் தொடரின் மூலம் அறிமுகமாயின. அன்றிலிருந்து இன்று வரை மனிதரின் புத்தங்கள் என்றால் உலகமே மறந்து போகிறது எனக்கு.

இவர்கள் இருவரிலும் எனக்கு மிகப் பிடித்தது இவர்களின் ”இலகு தமிழ்”. தமிழை இதைவிட இலகுவாக எழுத முடியாது என்பது எனது கருத்து.

இருவரும் தங்களின் அனுபவங்களை எழுத்தால் பகிர்பவர்கள் என்றாலும், அவர்களின் மொழிநடை, மொழியாளுமை, கண்ணோட்டம் என்பன முற்றிலும் வேறுபட்டவை.

இவர்களின் எழுத்தே எனக்கும் எழுத்தார்வத்தை தூண்டியது. என்றென்றும் இவர்களின் ஏகலைவன் நான். வலையுலகத்தில் எனது முதல் பதிவு கூட அ. முத்துலிங்கம் அய்யாவைப் பற்றியது என்பதில் எனக்கு நிகரில்லாத பெருமையுண்டு.

2006ம் ஆண்டு அ. முத்துலிங்கம் அய்யாவின் ”அங்கே இப்ப என்ன நேரம்” என்னும் புத்தகத்தை ஒஸ்லோவில் ஒரு தமிழ்க் கடையில் வாங்கினேன். அப் புத்தகம் விற்பனையாகாததனால் பல முறை விலை குறைக்கப்பட்டிருந்தது. நான் அப் புத்தகத்தை தூக்கியதை கண்டதும் கடையுரிமையாளர் அதை எடுங்கோ 50 வீதம் கழிவு தாறேன் என்றார். 50குறோணர்கள் கொடுத்து அப்புத்தகத்தை எடுத்துப் போனேன்.

பதின்மக்காலங்களில் சாண்டில்யனின் கடல்புறாவில் இளையபல்லவனுடன் கடலோடி, அமீருடன் பல கடற்கலங்களை எரியூட்டி கைப்பற்றிய  பின் நான், என்னை மறந்து உலகம் மறந்து நேரம் காலம் மறந்து திட்டு வாங்கி படித்த புத்தகம் ”அங்கே இப்ப என்ன நேரம்”. வாசிக்க வாசிக்க மனம் பஞ்சாய் போனது. எழுத்தின் அழகும், மொழியாடலும், சொல் சிக்கனமும், நகைச்சுவையும் அ. முத்துலிங்கமய்யாவின் பரம ரசிகனாக்கியது என்னை. புதிய விதமானதோர் நகைச்சுவையை எனக்கு அறிவித்ததும் அவர் தான்.

”உண்மை கலந்த நாட்குறிப்புகள்” புத்தகத்தில் 100 வது பக்கத்தில் "அதுல அதுல (A thu la, A thu la)" என்றொரு சூட்சுமமான நகைச்சுவை வருகிறது. அது புரிய வேண்டுமாயின் மிக முக்கியமாக சிங்களம் தெரிந்திருக்க வேண்டும் தவிர மனித வாழ்க்கையில் நடைபெறும் ஒரு சம்பவத்திலும் அனுபவமும் இருக்க வேண்டும். இப்படி பல உதாரணங்கள் சொல்லலாம் அவரின் நகைச்சவை பற்றி.

அவரின் புத்தகங்களை பொது இடங்களில் இருந்து வாசிப்பதையும், முக்கியமாக அவை பற்றி நினைப்பதையும் தவிர்க்கத் தொடங்கியுள்ளேன். காரணம்: பொது இடத்தில் என்னைக் கடந்து போகும் பலரும் ”என்னடா இவன் விசரன் போல் தானே சிரிப்பதும், சிரிப்பபை அடக்கமுடியாமல் வெடித்துச்சிரிப்பதுமாயிருக்கிறானே” என்று நினைக்கச் சந்தர்ப்பம் இருப்பதனால் தான்.

அவரின் நகைச்சுவை தனித்துவமானது, அவரைப் போலவே.

அவரின் புத்தகங்களை 2006ம் ஆண்டில் இருந்து வாசித்து வருகிறேன். நான் தினம் எட்டிப்பார்க்கும் இணையத்தளங்களுக்குள் அவருடையதும் ஒன்று.

2006ம் ஆண்டு நான் வாழ்ந்திருந்த இடத்தில் ”நல்ல தமிழ் கேட்போம்” என்னும் நிகழ்ச்சியில் அ. முத்துலிங்கம் அய்யாவின் ”அங்கே இப்ப என்ன நேரம் பற்றி ஒரு சிறு அறிமுகம் செய்திருந்தேன். அன்று அய்யாவுக்கு ஒரு கடிதம் போடுவோம் என்று நினைத்தேன். மிக வேக வேகமாக ஒரு மின்னஞ்சல் எழுதி முடித்து அனுப்ப மூன்று வருடங்கள் எடுத்தது எனக்கு. நான் 18.10.2009ம் திகதி அனுப்பிய மின்னஞ்சலுக்கு 12 மணிநேரத்துக்குள் பதில் எழுதியிருந்தார் அய்யா. பதில் இப்படி இருந்தது.  (கடிதத்தை வாசிக்க முன் அ. முத்துலிங்கம் அய்யாவின் மகனின் பெயரும் ”சஞ்சயன்” என்பதை அறியத் தருகிறேன்)

அன்புள்ள சஞ்சயனுக்கு,
வணக்கம். அதிகாலையில் மகனிடமிருந்து கடிதமா என்று வியப்புடன் திறந்து பார்த்தேன். நீங்களும் எனக்கு மகன்தான் நோர்வேயில் இருந்து.
மிக்க மகிழ்ச்சி. என்னை நீங்கள் கண்டுபிடித்ததுபோல நானும் உங்களை கண்டுபிடித்ததில் சந்தோசம்தான். உங்களுடைய ஸ்டைல் நல்லது. அதையே தொடருங்கள். பிரின்ஸ். முள்ளுக்காவடி படித்து ரசித்தேன். யோசித்துக்கொண்டு போனால் எங்கள் எல்லோருடைய அனுபவங்களும் ஒன்றுதான். நேற்று என் வீட்டுக்கு ஒரு humming bird வந்தது. இதைப் பார்ப்பதற்காக எத்தனை வருடங்கள் காத்திருந்தேன். கனடாவிலேயே பிறந்து வளர்ந்த என் பக்கத்து வீட்டுக்காரர் இன்னமும் காணவில்லை. இது பறந்துகொண்டு ஒரே இடத்தில் நிற்கும், பின்னாலே நகரும். பின்னாலே பறக்கக்கூடிய ஒரே பறவை இதுதான். ஒரு தற்செயலாக நீங்கள் என்னைக் கண்டுபிடித்தீர்கள். உலகம் இயங்குவது தற்செயல் சங்கிலிகளால்தான். காவியாவுக்கு என் முத்தங்கள்.
அன்புடன்
அ.மு

இரு முக்கியமான விடயங்கள் இந்தக் கடிதத்தில் இருக்கிறது.
முதலாவது:
எனது மின்னஞ்சல் கிடைப்பதற்கு சில மணிநேரங்களுக்கு முன் அய்யாவின் வீட்டுக்கு ஒரு humming bird பறவை வந்து போயிருக்கிறது என்று எழுதியிருக்கிறார் அல்லவா? அந்த பறவையைப் பற்றி ” உண்மை கலந்த நாட்குறிப்புகள்” என்னும் புத்தகத்திலும் எழுதியிருக்கிறார். அவர் அந்தப் பறவையைப் பற்றி புத்தகத்தில் எழுதியது பெரிய விடயமல்ல. ஆனால் அதை அவரது உலகளாவிய ரசிகர்களுக்கு முன், நான் அதை அவர் முலமாக அறிந்து கொண்டது.

இரண்டாவது:
அய்யாவுக்கு எனது பதிவுகளில் இரண்டு பதிவுகளாவது பிடித்திருந்தது.

இவையிரண்டும், அய்யாவின் புத்தகங்களும் எனக்கு ஒரு ஏகாந்தமான அல்லது ”நிகரற்ற அகத்தூண்டல்”  தந்த சம்பவங்கள் என்றால் அது மிகையில்லை.

கனடா வந்தால் ”வீட்டுக்கு வாருங்கள், பேசுவோம்” என்னும் அய்யாவின் அழைப்பு என்னிடம் இருக்கிறது. இந்தப் பெரிய எழுத்தாளருடன் நான் எதை பேசப் போகிறேன் என்பது தான் எனக்குள்ள பெரிய பிரச்சனையாயிருக்கிறது. அய்யா வீட்டு அம்மா வைக்கும் பருப்புக்கறி பற்றி அய்யா கிலாகித்து தனது புத்தகத்தில் எழுதியிருப்பதால், அதற்காகவாவது அவர்களை சந்திக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறேன்.

......................

பி.கு: அண்ணண் எஸ்.ரா வைப்பற்றியும்  இந்தப் பதிவில் எழுதினால் நான் எழுதிய பதிவுகளில் நீண்ட பதிவு என்றும் பெயரை இந்தப் பதிவு பெற்றுவிடும். அப்படியானதொரு அசூசையான உணர்வை எனது பெருமரியாதைக்குரியவருக்கு  நான் கொடுக்கலாமா? நீங்களே சொல்லுங்கள்.


.

அவமானத்தின் சுமைகள்

சில நாட்களுக்கு முன் காலை ஒஸ்லோ நகர நிலக்கீழ் தொடருந்தில் பயணித்துக் கொண்டிருந்தேன். கையில் இருந்த ”வார்சாவில் கடவுள்” என்னும் புத்தகத்தில் முழ்கியிருந்த என்னை அருகில் இருந்து வந்த தொலைபேசிச் சம்பாசனை இவ்வுலகுக்கு மீண்டும் இழுத்து வந்தது.

அருகில் ஒரு நோர்வேஜியப் பெண் அமர்ந்திருந்தார். நடுத்தர வயதிருக்கும். அவளின் பேச்சில் பலத்த சீற்றமும், ஆற்றாமையும், ஏமாற்றமும் தெரிந்தது. கண்கள் கலங்கியிருந்தன. தனது நண்பியுடன் பேசிக்கொண்டிருந்தார். தனது குரல் தேவைக்கதிகமாக உயர்ந்து மற்றவர்களுக்கும் கேட்கிறதே என்ற சிந்தனை அவருக்கு இருந்ததாகத் தெரியவில்லை.

அவரின் சம்பாசனையின் உள்ளடக்கம் இது தான். அன்று அவர் தற்போது அமர்ந்திருக்கும் நிலக்கீழ் தொடருந்தை வந்தடைய முதல் ஒரு சாதாரண பேரூந்தில் பயணித்திருக்கிறார். நோர்வேயில் உள்ள சில பேரூந்துகளில் உட்புகுவதற்கு பல கதவுகள் உண்டு. இவர் பின்னாலிருந்த கதவுவழியாக உட்புகுந்து தனது டிக்கட்ஜ வாங்குவதற்காக சாரதியை நோக்கி முன்னேறிக் கொண்டிருந்த போது உட்புகுந்த டிக்கட் பரிசோதனையாளர் இவரிடம் டிக்கட்ஜ கேட்க இவர் தான் அதற்குத் தான் சாரதியிடம் போய்க் கொண்டிருப்பதாக சொல்லியிருக்கிறார். பரிசோதகரோ இவரை நம்பாமல் நீ என்னைக் கண்டதும் தான் நீ சாரதியிடம் போகிறாய் என்றிருக்கிறார். இவர் வாதிக்க அவர் எதிர்க்க சம்பாசனை சூடாகியிருக்கிறது. இவரை 3 - 4 பரிசோதகர்கள் சூழ்ந்துகொண்டு ஒரு திருடனைப் பார்ப்பது போல் பார்த்திருக்க பேரூந்தினுள் இருந்தவர்களின் கண்களும், கதைகளும், பரிகாசச்சிரிப்புகளும் இவரை அவமானத்தின் உச்சிக்கே கொண்டுபோயிருக்கிறது. இவர் தனது கருத்தை மாற்றாததனால் சற்று நேரத்தில் போலீஸ் வந்து இவரை கைது செய்திருக்கிறது. பரிசோதகர் 150 $ தண்டம் விதித்தித்திருந்தார்.

இதை சொல்லி முடியும் போது அவரின் கண்ணளில் இருந்து தாரை தாரையாக கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது. குரல் பேச முடியாமல் தளுதளுத்தது. அவற்றைப்பற்றியெல்லாம் அவர் கவலைப்படாமல் பேசிக்கொண்டிருந்தார். நண்பரை பேச விடாமல் இவரே பேசிக்கொண்டிருந்தார். என்னால் அவரின் மனநிலையை மிக நன்றாக புரியக்கூடியதாக இருந்தது.

நானும் இரண்டு இடங்களில் பலத்த அவமானங்களை கடந்திருக்கிறேன். அவற்றின் அசூசையையும், பிசுபிசுப்பையும் இன்றும் உணரக்கூடியதாக இருக்கிறது.

ஒரு முறை வேறொர் நாட்டில் விடுமுறைக்கு போயிருந்த போது, அதுவும் பட்டப்பகலில் ஒரு பெரிய கடைத் தொகுதிக்கு வெளியில் ஒரு இடத்தில் அமர்ந்திருந்த போது அங்கு வந்த பொலீசாரால் நேர்மையற்ற முறையில், மிகவும் கீழ்ததரமாக நடத்தப்பட்டேன். நான் அந்தத் தவறை செய்யவில்லை என எனக்காக வாதாடியவர்களின் கருத்துக்களைக் கூட அந்தப் பொலீசார் கேட்காத போலீசார் எனது கருத்தையா கேட்பார்கள்? போலீசாரின் நடவடிக்கையில் பதவியின் அதிகாரத்தன்மையும், அடாவடித்தனமும், மனிதாபிமானமற்ற செயற்பாடுமே தெரிந்தது. எனக்காக வாதாடியவர்கள் மன்னியுங்கள் என்று என்னிடம் சொல்லி தங்கள் விலாசத்தையும் போலீசாரிடம் கொடுத்துப் போனார்கள். அவர்கள் நீதிமன்றத்துக்கும் வர தயாராய் இருந்தனர்.

ஒரு கட்டடத்தின் சுவரினை நோக்கியிருக்கும் படி கட்டளையிடப்பட்டேன். அங்கு நான் நின்றிருந்த போது என்னைக் கடந்து போனவர்களின் பார்வைகளை என் முதுகைத் துளைத்து என் மனதில் படிந்துபோனது. அங்கிருந்த காற்றில் கலந்து வந்த சொற்களும், குசு குசுப்புக்களும் எனது செவிப்பறையில் படிந்து உறைந்து போயின, கன்னத்தில் வழிந்தோடிய கண்ணீர் தோலில் ஊறி இரத்தத்தில் கலந்து போனது. இன்றும் அந்த நிமிடத்தினை திரும்பிப்பார்த்தால் அந்தப் பார்வைகளும், காற்றும், என் கண்ணீரும் அப்படியே மனதிலாடுகின்றன. ஏதோவொரு அசூசையான உணர்வு என்னை கவ்விக் கொள்ளும். அவமானத்தின் நிர்வாணமும் உணர்வேன். மலத்தை உடலெங்கும் அப்பிவிட்டது போலிருக்கும் அவ்வுணர்வு.

அதன் பின் கைது செய்யப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. மேலதிகாரி ஒருவர் மட:டும் என்னை நம்பினார். ஆனால் அவரால் ஏதும் செய்ய முடியாதிருந்தது. விடுதலை செய்யப்பட்டேன்.

அடுத்து வந்த நாட்கள் கடும் மழையில் நனைந்த கோழி போல் உடலும், மனமும் எவ்வித உயிர்ப்புமின்றி இருந்தது. எவரைப் பார்த்தாலும் என்னை அந்த இடத்தில் வைத்து பார்த்தவர் போலவும், அவர்களின் கண்கள் என்னை துளைப்பது போலவும் தெரிந்தது. வெளியே போகும் ஆர்வம் குறைந்தது, விடுமுறையின் மகிழ்ச்சி கரைந்து மனம் கனத்துப் போனது.

வழக்கு வெல்லப்பட முடியாதது என்று அறிந்ததும் வழக்கை போலீசாரே வாபஸ் வாங்கினார்கள். நண்பர்களும், நெருங்கியவர்களும் என்னதான் ஆறுதலைச் சொன்னாலும் அதனால் ஏற்பட்ட வடு மட்டும் இன்று  வரை ஆறவில்லை. இனியும் ஆறப்போவதில்லை.

அவமானத்தின் ரணங்களும் அத ன் ஆழங்களும் வெளியில் தெரிவதில்லை. காலம் சிலதை செப்பனிட்டாலும் வடுக்களும் தடயங்களும் வாழ்நாள் முழுவதும் பெரும் சுமையாக சாதாரணமானவர்களின் முதுகில் ஒட்டிக்கொண்டே வந்து கொண்டிருக்கிறது. மிகச் சிலரே இச் சுமைகளை இறக்கி வைக்கிறார்கள். நான் இன்னும் அவர்களில் ஒருவனாகவில்லை என்பது எனக்கு மிக நன்றாகவே புரிகிறது.

எனக்கு அறிவிக்கப்பட்ட இன்னும் ஒரு அவமானத்தை ஜீரணித்து நிமிரவே ஆண்டுகளாகியது. இன்றும், அவை நினைவில் வந்து போகும் போது வெறுப்பும், வன்மமும், குரோதமும் எனக்குள் பெருந்தீயாய் கொழுந்து விட்டெரியும். சுயபரிதாபம் அணையுடைத்து ஓடும்போதெல்லாம்  என்னை அவமானப்படுத்தியவர்களை அதே போல் அவமான நிர்வாணமாக்கி அதே அசுத்தத்தை அவர்களுக்கு பூசிவிட விரும்பினாலும், இன்று  அதை  செயற்படுத்துவதற்கான வசதி, அதிகாரம் அனைத்துமிருந்தாலும் ஏனோ மனம் மட்டும் அதை செய்ய அனுமதிக்க மறுக்கிறது.

இந்த அவமானங்களினால் யார் நண்பன்,  யார் எதிரிகள் என்பது மட்டும் தெட்டத்தெளிவாய் புரிந்திருக்கிறது. அநத வகையில் அவமானம் எனக்கு நல்லதொரு பாடத்தை கற்றுத் தந்திருக்கிறது என்பேன் நான்.

அவமானப்படுத்தப்படுத்தப்பட்ட திரௌபதைகும் அவளை அவமானப்படுத்திய துரியோதனனுக்கும் நடந்த கதை எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. அந்தக் கதையில் எனது பெயர் கொண்ட ஒருவனும் இருக்கிறான் என்பதில் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி.

அவமானம் போதிக்கப்பட்டவர்களுக்கு இது சமர்ப்பணம்.


இன்றைய நாள் மிக மிக நல்லது..

தெய்வமும் பக்தாத் பேரழகியும்

காலை 9 மணி நெருங்கிக் கொண்டிருந்தது நான் தூக்கம் கலைந்து எழும்பியபோது. தூக்கம் வராமல் ஏதோதோ அரைத்தூக்க நினைவில் ஓடிக்கொண்டிருந்தது இரவு முழுவதும். நிம்மதியான தூக்கம் என்று சொல்ல முடியாது. அதனால் மனதும் உடம்பும் களைத்துப்போயிருந்தது. காலை. 9 மணி நிலக்கீழ் தொடரூந்தை பிடிப்பதற்காக குளிரைக் கடந்து  அவசர அவசரமாய் நடந்து கொண்டிருந்‌தேன். வானம் நீலமாய் இருக்க சூரியன் இளஞ்சூட்டை பரப்பிக்கொண்டிருந்தது.

நான் குடியிருக்கும் தொடர்மாடியை கடந்து எதிரே இருந்த வாகனத்தரிப்பிடத்தையும் கடந்து நடக்கும் போது  எனக்கு முன்னால் ஒரு தாயும் ஒரு 4 - 5 வயதுப் பெண்குழந்தையும் நடந்து கொண்டிருந்தனர். அந்தக் குழந்தை குளிருக்கேற்ற உடை உடுத்திருந்தாள். முதுகில் ஒரு கரடிப்பொம்மை பை ஆடியபடி தொங்கிக் கொண்டிருந்தது. அவளைக் கடந்த போது திரும்பிப் பார்த்தேன். சிவந்திருந்தத கன்னங்களுடன் கண்ணசை் சுருக்கி என்னைப் பார்த்தாள். புன்னகைத்து அவளை நோக்கி ”ஹாய்” என்பது போல கையை அசைத்தேன். அவளின் பிஞ்சுக்கரங்களும் மெதுவாய் அசைந்தது.

அவ‌ர்களைக் கடந்த போய் நிலக்கீழ் தொடரூந்துக்காய்  காத்திருந்தேன். சற்று நேரத்தில் அவர்களும் தொடருந்து நிலையத்தை நோக்கி மெதுவாய் நடந்து வருவது தெரிந்தது. படிகளின் அருகில் வந்த போது தாயின் கையை விட்டு விட்டு ஒவ்வொரு படியாய் பாய்வதும் பெருமையாய் தாயைப் பார்த்து ஏதோ சொல்வதும் மீண்டும் ஒரு படி பாய்வதுமாய் வந்து சேர்ந்து சற்று நேரத்தில் தொடருந்து வந்தது. ஏறி யன்னலோரமாக உட்கார்ந்த போது எனக்கு முன்னால் இருந்த இருக்கயைில் ஏறி உட்கார்ந்து கொண்டாள் அவளின் தாயுடன்.

ஊதா நிற குளிர்கால ஜக்கட் தலையில் ஊதா நிறத்திலான பஞ்சுத் தொப்பி, ஊதா நிற சப்பாத்து என மிக அழகாய் இருந்தாள். தாயின் உடையியும் நிறமும்  அவர்கள் ஈரான், ஈராக் அல்லது கூர்டிஸ்தான் மக்களாயிருக்கலாம் என ஊகிக்க வைத்தது என்னை. எனவே அக் குழந்தை எனக்கு பக்தாத் பேரழகியை விட அழகாய்த் தெரிந்தாள்.

அவளையே பார்ப்பதைக் கண்டதும் தாயின் கையுக்குள் தலையை சரித்து என்னை மெதுவாயப் பார்த்தாள். நான் புன்னகைத்து கையை அசைத்தேன். தயக்கத்துடன் கையை அசைத்தாள். சற்று நேரத்தில் என்னை மறந்து தாயுடன் ஏதேதோ பேசிக்கொண்டிருந்தாள். எனக்கு அவளை பார்க்காமல் இருக்க முடியவில்லை. அப்படியானதோர் தூய்மையான, ஆர்ப்பாட்டமற்ற, குழந்தைததனமான அழகு குடியிருந்தது அவளின் முகத்தில்.

சற்று நேரத்தில் தொடரூந்தில் இருந்து அவள் இறங்கிய போதும் கைகை அசைத்தேன். தற்போது தயக்கமின்றி அழகாய் சிரித்து கையை அசைத்துப் போனாள். மனம் அவளின் பின்னேயே போனது. அந்தக் குழந்தையின்  புன்னகையில் நனைந்திருந்த மனது மிகவும் ஏகாந்தமாய் இருந்தது. மனதிலும்  உடம்பிலும் இருந்த களைப்பு மறைந்து போயிருந்தது.

குழந்தையும் தெய்வமும் ஒன்று என்பது உண்மைதான்.


.

நாலுகால் மனிதமும் இரண்டுகால் மிருகமும்

இன்று காலை இனிமையாகவே விடிந்தது. நேற்றிருந்த சுகயீனங்கள் இன்றிருக்கவில்லை. சனிக்கிழமை எனவே இந்தக் கிழமை முழுவதும் பின்போடப்பட்ட வேலைகள் நிறையவே இருந்தன. உடுப்புத்தோய்த்தல், கணணி திருத்தவேலைகள் இரண்டு,  சப்பாத்துக்கடை, நண்பரின் வீட்டுக்குப்போதல் என்றிருந்தன அவை.

முதலில் கணணி திருத்தவேலைக்குப் போனேன். குளிர் -4 என்றிருந்தது.  வாகனத்தை நிறுத்தி வீட்டின் முன் கேட் கதவில் கையை வைக்கிறேன். வொவ் வொவ் என்று குரைத்தபடியே நாக்கை தொங்கப்போட்டபடியே பாய்ந்து வந்து கொண்டிருந்தது ஒரு அல்ஷேசன் நாய். என் இதயம் வாய்க்குள் பாய்ந்து வந்த மாதிரி இருந்தது எனக்கு. கேட்டில் இருந்த கையை எடுத்து பின்னால் வைத்துக் கொண்டேன்.. ஒரு தற்பாதுகாப்புக்காக.

இரு தரம் குலைத்த பின் கேட்டிற்கு முன்னால் நந்தி மாதிரி குந்திக் கொண்டது. என் இதயம் வாயில் இருந்து மெதுவாக நெஞ்சுக்குள் திரும்பிப் போனது.

சற்று நேரம் மௌனத்தில் கடந்து போனது. பின்பு, நாயைப் பார்த்து ”ஹாய்” என்றேன். நம்மூர் நாய் என்றால்  ”உர் உர்” என்று தனது அதிருப்த்தியை  காட்டியிருக்கும். ஆனால் இதுவோ எழுந்து நாக்கை தொங்கப்போட்டபடி வாலை ஆட்டியது. அதனால் எனது பயம் சற்று நீங்கியதால் எனது முச்சும் இதயமும் சாதாரணமாக இயங்கத் தொடங்கியிருந்தது.


இருப்பினும் எனக்கும் நாய்களுக்கும் ஒத்து வருவதில்லை என்னும் ஞாபகம் வர கேட்டை திறக்கும் எண்ணத்தை கைவிட்டேன். மீண்டும் நான் அதனுடன் நட்பை பேணுகிறேன் என்பதை வலிறுத்த ”ஹாய்” என்று குரலில் தேன் குழைத்து அழைத்தேன். நாய் ”கேட்டில் (gate)” காலை வைத்து கம்பிக்குள்ளால் முகத்தை நீட்டி என்னை நக்க முயற்சித்தது. அதன் தலை முழுவதும் கம்பியினூடாக வெளியேவரவில்லை என்பதை உறுதிப்படுத்திய பின் உயிரைக் கையில் பிடித்தபடி மெதுவாய் கையை நீட்டினேன். நாய் கையை நக்கி நட்பை உறுதி செய்தது.

நாய்கள் பயந்தால் வாலை கால்களுக்கிடையில் சுருட்டிவைக்கும் என அறிந்திருந்ததால் அதன் வாலைப் பார்த்தேன். அது நிமிர்ந்து மேல் நோக்கியபடி ஆடிக்கொண்டிருந்தது.  அதாவது அது எனக்குப் பயப்படவில்லை என்று அர்த்தம். நம்பள பார்த்து யார்தான் பயப்படுகிறார்கள்? நம்ம வீட்டுக்கு அருகாமையில் ஒரு குட்டி குட்டி குட்டி நாய் இருக்கிறது. அது ரொம்ப ரொம்ப  சின்ன நாய். அது ஒரு கிலோ தேறாது. உயரம் 15 சென்டிமீட்டர், நீளம் 20 சென்டி மீற்றர் இருக்கும்... சோகம் என்னான்னா அந்த நாய் கூட நம்மள கண்டா ஊறுமுது... குலைகிறது. அந்த நாய் கூட என்னைப் பார்த்து பயப்படவில்லை என்றால் பார்த்துக்கொள்ளுங்கள்)

நாயின் உரிமையானர் எனது நிலையைக் கண்டு, நாய் கடிக்காது வாருங்கள் என்றார். சில வேளைகளில் கடித்தால் க‌டி வாங்குவது நானல்லவா.. எனவே தயங்கித் தயங்கி நின்றேன். அவரும் விடுவதாயில்லை. வாருங்கள் அது கடிக்கவே கடிக்காது என்று உத்தரவாதம் தந்து கொண்டிருந்தார்.  என் வாழ்வுக்கு உத்தரவாமில்லாமல் போகிறது என்று நினைத்தபடியே உட்புகுந்தேன். என்ன அதிசயம்... நாய் என்னை சுற்றிச் சுற்றி வந்து, மணந்து, மணந்து பார்த்தது. (காலையில் தான் குளித்திருந்தேன்). பின்பு திருப்திப்பட்டது போல எனது கண்களை உற்றுப் பார்த்தது. நானும் உற்றுப்பார்த்தேன். அதில் நட்பின் ஒளி தெரிந்தது எனக்கு. பின்பு, அது எனக்கு வழிகாட்டியபடியே நடந்து போய் வாசல் நின்றுகொண்டது.

உரிமையாளர் வந்து உள்ளே அழைத்துப் போக முதல் நாய் உள்ளே புகுந்தது. ”கீரூ” எங்கே போகிறாய்? என்றார். ”கீரூ” நின்று அவரை நிமிர்ந்த பார்த்தது. அவர்கள் இருவரும் பரஸ்பரம் கண்களால் எதோ பேசிக் கொண்டார்கள். சரி உள்ளே போ என்றார் உரிமையாளர். ”கீரூ” வாலையாட்டியபடியே உள்ளே போனது.

அவரின் கணணி மாடியில் இருந்ததால் நாம் மாடிக்கு போனோம்.  படியில் ஏறிக் கொண்டிருக்கிறேன் என்னைத் தாண்டி ”கீரூ” மேலேறிக் கொண்டிருந்தது. ”கீரூ” வை ”கீழே போ” என்றார் உரிமையாளர். அது கீழ்ப்படிய மறுத்து என்னை சுற்றி சுற்றி வந்தது. கையை நக்கியது. எனது காலுடன் தன் உடம்பை தேய்த்தபடி நின்றது. (நல்ல வேளை காலைத் தூக்கவில்லை ”கீரூ”. உரிமையாளர் இவன் இப்படித்தான்  பதிய மனிதர்களுடன் மிகவும் இலகுவாக ஒட்டிக் கொள்வான் என்றார்.

பின்பு ”கீரூ” அருகில் படுத்துக்கொண்டது. நானும் கணணணி திருத்துவதில் கவனம் செலுத்த உரிமையாளர் தான் வெளியில் செல்வதாகச் சொல்லிப் புறப்பட்டார். ”கீரூ” தூங்கிப்போயிருந்தது.


திடீர் என யாரோ எனது முழங்கைபக்கமாக தள்ளுவது போலிருந்ததால் திரும்பிப் பார்த்தேன். கீரு தனது முகத்தை எனது கையை நோக்கி கொண்டுவந்து கொண்டிருந்தது. அதன் கழுத்தை தடவிவிட்டேன். ”கீரூ” கண்கள் சொருக நான் தடவியதை  அனுபவித்துக்கொண்டிருந்து. தடவியதை நிறுத்தினேன் எனது கையில் தனது முகத்தை கொண்டுவந்து தேய்த்தது. மீண்டும் தடவியபடியே ”என்னய்யா முகத்தை தடவவா” என்று தமிழில் கேட்டேன். ஒரு மாதிரியாகப் பார்த்தது.  உடனே நோர்வேஜிய மொழிக்கு மாறி மீண்டும் அதேயே கேட்டேன். பதிலுக்கு கண்ணை சொருகியபடியே என் தடவலை அனுபவித்துக்கொண்டிருந்தது.

சற்று நேரத்தின் பின் எனக்கு முன்னால் வந்து குந்திக்கொண்டு வாலை ஆட்டிற்று. ”என்ன பிரச்சனை” என்றேன் நோர்‌வேஜிய மொழியில். என்னை பார்த்தது... பார்த்தது.... பார்த்துக்கொண்டே இருந்தது. என் வாழ்வில் என்னை அத்தனை ஆழமாய் எந்த நாயும் பார்த்ததில்லை. அதன் மண்நிற பளிங்கு நிற கண்கள் ஒரு வித ஒளியைக் கொண்டிருந்தன. அவற்றில் ஒரு வித ஆழமான வசீகரமும், நட்பும் அளவில்லாத அமைதியும் தெரிந்தன. நானும் பார்த்துக் கொண்டிருந்தேன். எனக்கு அது எதையோ போதிக்கிறது போல உணர்ந்தேன். நிமிடங்கள் மெளனமாய் எம்மை கடந்து கொண்டிருந்தன. கடந்து போன அந்த நிமிடங்களில் நான் நாய்களின் இனத்துடன் நட்பாகிப்போனேன். மனதுக்குள் அமைதி குடிவந்திருந்தது. பயங்கள் அகன்றிருந்தன. ”கீரூ”சற்று நேரத்தில் என்னருகே வந்து கையை நக்கிற்று. முகத்தை தடிவிக்கொடுத்தேன். மீண்டும் கையை நக்கிவிட்டு அருகில் நின்றிருந்தது.

பின்பு வெளியில் போவதும், என்னிடம் வருவதும், அது வந்ததும் நான் அதன் தாடையை தடவுவதுமாய் நேரம் போய்க் கொண்டிருந்தது. ஆரம்பத்தில் அருவருப்பாய் இருந்த நாயின் வாசனை இப்போ மறைந்து போயிருந்தது.

உரிமையாளர் வந்தார். ”கீரூ” வை வெளியே அழைத்தார். போக மறுத்து காலடியில் படுத்துக் கொண்டது. அவரும் அதை அனுமதித்தார். வேலை முடிந்து புறப்பட்டேன். எனது பையை முகர்ந்து பார்த்தது, காலைமுகர்ந்தது கையை நக்கிற்று. நானும் குனிந்து நிதானமாய் அதன் கண்களுடன் எனது கண்களை கலக்க விட்டேன். கூர்மையான அதன் கண்கள் என்னை ஊடுருவிப்போய் எனக்குள் எதையே தேடியது போலவும், அது தேடியது கிடைத்தது போலவும் இருந்தது ”கீரூ வின் கண்களில். ”கீரூ”வின் தாடையையும் அதன் தலையையும் தடவி விடை பெற்றேன். முன் கேட் மட்டும் என்னுடனேயே வந்தது. மீண்டும் அதன் தலையை நீவி நோர்வேஜிய மொழியில் ” சென்று வருகிறேன்” என்றேன். மீண்டும் கையை நக்கிற்று. வாகனத்தில் ஏறி இருந்து ”கீரூ வைப் பார்த்தேன். என்னைப் பார்த்துக்கொண்டிருந்தது. வீடு வரும் வழியில் என் கையை மணந்த பார்த்தேன். ”கீரூ வின் வாசனை அங்கிருந்தது ஏனோ மனதுக்கு இதமாய் இருந்தது.

நாய் வளர்க்கும் மனதிர்களிடம் எனக்கு பெருமரியாதை எற்பட்டிருக்கிறது. அவர்களின் நாய்கள் கடிப்பதில்லை ஆனால் அவர்கள் கடிக்கும் கடியோ... விஷக்கடி....  இனி நானும் திருப்பிக்கடிக்கலாம் எனக் கொள்க. :-)


இன்றைய நாளும் நல்லதே!


.

முன்னேறும் உலகத்தில் முன்னேறாத மனிதர்கள்

நேற்று வலைமேய்ந்து கொண்டிருக்கும் போது கண்ணில் பட்ட செய்தியொன்றை படித்ததனால் மனம் சற்று தேவைக்கும் அதிகமாகவே கனத்துப்போனது.

ஆப்கானிஸ்தானில் உள்ள நோர்வேஜிய யுத்தவைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு நோயாளியின் கதை. வலியின் உச்சம்.

மனிதர் வறுமையை ஒழிப்பதற்காய் ஈரானில் இருவருடங்கள் தொழில்புரிந்து நாடுதிரும்பிய பின் தனக்கு என்று நிட்சயிக்கப்பட்ட பெண்ணை திருமணம் முடிக்க தீர்மானித்து, திருமண நாளும் குறிக்கப்பட்டு, திருமணநாள் அன்று மணமகன் கோலத்தில் திருமணநிகழ்வுக்கு பயணிக்கும் போது அவர் பயணித்த வாகனம் கண்ணிவெடியில் ‌சிக்கிக்கொள்கிறது. பாரதூரமாய் காயமடைந்தாலும் உடனடியாக வைத்திய உதவி கிடைக்காமல் பல மணிநேரங்களின் பின் நோர்வேஜிய யுத்த வைத்தியசாலைக்கு எடுத்துவரப்படுகிறார்.

அங்கு சிகிச்சை முடியும் போது மனிதரின் இடது கால், வலது பாதம், இடது கை என்பன அகற்றப்பட்டிருக்கிறது. மேலும் பாரிய காயங்களுடன் உயிர் தப்புகிறார். இவர் உயிர் தப்பியது வைத்திய ஆச்சர்யங்களில் ஒன்று என அவருக்கு  தெரிவித்திருக்கிறார்கள் வைத்தியமளித்த அதிகாரிகள்

சற்று சிந்தித்துப் பார்த்தால் அவருக்கு மட்டுமான சோகமில்லை இது. அவரைச் சுற்றியிருந்த அனைவரையும் இந்தச் சம்பவம் தூக்கியடித்திருக்கும். அந்தப் மணப்பெண் தொடக்கம் இவருடன் சம்பந்தப்பட்ட எத்தனையோ மனிதர்களை அந்த ஒரு சம்பவம் தாக்கியிருக்கிறது. வாழ்க்கை முழுவதும் மீள முடியாத சோகத்தை கொடுத்திருக்கிறது.

வாழ்வின் கனவுகள் தலைகீழாக மாறுவதற்கு ஒரு சிறு கணம் காணும் என்பதை மீண்டும் மீண்டும் வாழ்வு எமக்கு அறிவித்துக்கொண்டேயிருக்கிறது.

இதே போல் எம்மூரிலும், ஏனைய இடங்களிலும் எத்தனை எத்தனை மனிதர்களின் கனவுகள் கலைந்திருக்கும். அங்கவீனமானவர்கள், பெற்றோரை இழந்த குழந்தைகள் இப்படி எத்தனையோ ஆயிரம் ஆயிரம் பேர் இருட்டில் நடப்பது போல அலைந்து திரிந்துகொண்டிருக்கிறார்கள்.

சற்று ஆழமாகச் சிந்தித்துப்பார்த்தால் மனச்சாட்சி வெளியில் குந்தியிருந்து என்னைப் பார்த்து சிரிப்பது போலிருக்கிறது எனக்கு. எத்தனை எத்தனை வசதிகளுடன் வாழ்கிறோம். ஒரு 10 நிமிட பசியை பொறுக்க முடிகிறதா எம்மால்? எத்தனை எத்தனை விதமான உடைகள், கருவிகள், வாகனங்கள், விழாக்கள், பயணங்கள்... எனக்கு நாம் எதையோ மறந்துவிட்டது போலிக்கிறது.

எனது வேலைத்தளத்தில் சென்ற வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் முன்னாள் செயளாரான ”கோபி அண்ணணின்” நெருங்கிய முண்ணணி ஆலோசகர் ”யான் ஏகர்லான்ட்” என்பவர் சொற்பொழிவு ஆற்றினார்.

அவரின் சொற்பொழிவு உலகம் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்னும் தொனியிலேயே இருந்தது. அவரின் ஆதாரங்கள் 1900 ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரை நடந்த சம்பங்களை அடிப்படையாகக் கொண்டு ஆய்வு ரீதியிலும் தர்க்க ரீதியிலும் அமைந்திருந்தன.

யுத்தத்தினால் இறப்பவர்களின் தொகை கணிசமாக குறைந்திருக்கிறது
போர்களின் எண்ணிக்கை குறைந்திருக்கிறது
சர்வதிகாரிகள் குறைந்திருக்கிறார்கள்
ஐனநாயக நாடுகள் அதிகரித்திருக்கின்றன என்றெல்லாம் ஆதாரபூர்வமாக தர்க்கித்தார்.

யுத்தத்தை விட உலகில் முக்கிய பல பிரச்சனைகள் இருக்கிறது என்றார்.

யுத்த்தால் இறப்பவர்களை விட போதைப்பொறுட்களின் வியாபாரத்தால் இறப்பவர்களின் தொகை கணிசமாக இருக்கிறது.

கடந்த 15 - 20 ஆண்டுகளில் ஏற்பட்டிருக்கும் இயற்கை அழிவுகள் மிகுந்த அபாயத்தை மனிதவர்க்கத்துக்கு ஏற்படுத்துகிறது என்றார்.

அதிகரித்து வரும் மனிதர்களின் எண்ணிக்கை எதிர்வரும் 30 ஆண்டுகளுக்கு மிகவும் முக்கிய பிரச்சனையாக உருவெடுக்கும் என்பதும் அவரின் கருத்தாய் இருந்தது.

ஆனால் அவர் உரையின் இறுதியில் உலகம் கடந்த காலத்தை விட தற்போது முன்னேறியிருக்கிறது என்பதற்கான ஆதரங்களைத் தந்து தனது உரையை முடித்தக் கொண்டார்.

அவரின் உரை என்க்கு அன்று மகிழ்ச்சியைத் தந்தது. ஓடிப்போய் அவரைச்சந்தித்து உங்கள் உரை சிறப்பாக இருந்தது என்றேன். அதன் பிரதி கிடைக்குமா என்ற போது அனுப்பிவைப்பதாகச் சொன்னார்.

ஆனால் நேற்று பத்திரிகையில் வாசித்த செய்தியும் அது ஏற்படுத்திய சிந்தனையோட்டங்களுக்கும் பின் உலகம் முன்னேறிக்கொண்டிருக்கிறது என்பததை ஏற்றுக்கொள்ள முடியாதிருக்கிறது. எனக்கேதோ மனிதத்தை இழந்து நாம் உலகத்தை முன்னேற்றுகிறோம் போலிருக்கிறது. காய்ந்து வறண்ட பூமிக்கும், மனிதநேயமற்ற முன்னேற்றங்களும் இடையில் வித்தியாசமில்லை. புரிந்ததா நட்பே?


இன்றைய நாளும் நல்லதே.

மது வெள்ளத்தில் கனவின் வள்ளங்கள்

எனது அம்மாவுக்கு வயது 80ஐ நெருங்குகிறது. நினைத்த இடத்தில் தூங்கும் கலை கைவந்திருக்கிறது அவருக்கு. விமானநிலையத்தில் எனக்காக காத்திருக்கும் நேரத்தில் இருந்து என்னை வழி அனுப்ப விமானநிலையத்துக்கு வரும் வாகனம் வரை எதிலும், எங்கும், எப்படியும் தூங்கிவிடுகிறார். ஒரு முறை என்னுடன் ஆஸ்பத்திரிக்கு வந்தார். அங்கு காத்திருந்த நேரத்திரலும் நிம்மதியாக தூங்கியெழுந்தார். அவர் நடக்கும் போதும் தூங்குகிறாரா என்ற சந்தேகம் எனக்கிருக்கிறது.

எனது பதின்மக்காலங்களில் கூட அம்மா பகலில் ஒரு குட்டித்தூக்கம் போடுவார். அது 10 அல்லது 20 நிமிடங்களாகவே இருக்கும். ஆனால்  ஆழ்ந்த தூக்கம் அது. அதன் பின் மீண்டும் வேகமாக ஓடித்திரிவார்.

இப்போதெல்லாம் எனக்கு பனிக்காலத்தில் தூக்கம் நினைத்தவுடன் வருவதில்லை. கண்கள் மூடப்பட்டிருந்தாலும் மனமும், மூளையும் இயங்கியபடியே இருக்கும். அவையும் கண்ணைப்போல் உறங்கு நிலைக்கு செல்ல தேவைக்கு அதிகமாக நேரத்தை எடுத்துக் கொள்ளுகின்றன. முன்பெல்லாம் படுத்தவுடன் கண்ணும், மனமும், மூளையும் நித்திரையாகிவிடும்.  இப்போதெல்லாம் அப்படியில்லை. பல நாட்கள் இரவு முழுவதும் தூக்கத்துடன் சண்டைபிடித்தபடியே தூங்க முயற்சித்து, தோற்று பின் அடுத்த நாள் முழுவதும் தூக்கக்களைபை சுமந்து திரிந்திருக்கிறேன்.

எனக்கு, நான் ஆழ்ந்த நித்திரையில் இருந்தால் தான் கனவு வரும் என்றில்லை. கண்முடியிருக்கும். மனம் விழித்திருக்கும். தொடர்பில்லாத பல பல கனவுகள் கனவுத்திரையில் திரையிடப்பட்டிருக்கும்.

நேற்றிரவு  ஒரு கனவு கண்டேன். நண்பர் ஓருவர் ஒரு முழு Hennessy (cognac) போத்தல் தருகிறார். நான் அண்ணாந்து அதை வாய்க்குள் கவிழ்க்கிறேன். வாயால் வெளியில் வழிந்து நாம் நின்றிருந்த”கார்பெட்” நிலம் நனைகிறது. நான் ஓடிப்போய் துடைக்க துணி எடுத்து வருகிறேன். அப்பொழுது அது பெரு வெள்ளமாய் ஊற்றெடுக்கிறது. பின்பு ஒரு கால்பந்தாட்ட பந்தயம் பார்த்துக் கொண்டிருக்கிறேன். அருகில் உட்கார்ந்திருந்தவரைப் பார்க்கிறேன். அவரை அடையாளம் தெரிகிறது. எனக்கு அறிமுகமானவர் அவர். (இவர் நன்றாக சோம பானம் அருந்தி மிக்க மகிழ்ச்சியாய் காலத்தைக் கடத்துபவர். அதே வேளை கால்பந்திலும் மிகவும் வல்லவர். அவரும் நானும் ஒரே அணியில் கால்பந்து விளையாடியிருக்கிறோம் ஏறத்தாள 15 ஆண்டுகளுக்கு முன்பு)

இந்தக் கனவின் ஊடாகவே இன்றைய காலை விடிந்தது. பல வருடங்களின் பின் ஒரு கனவு என்னை பலமாக பாதித்திருக்கிறது என்னுமளவுக்கு இந் நேரம் வரை அக் கனவைப்பற்றி நான் சிந்தித்துக்கொண்டிருக்கிறேன், எழுதிக்கொண்டிருக்கிறேன். ஏன் இந்தக் கனவு வந்தது? அதுவும் இன்று வரை சோமபானம் அருந்தப்பழகாத எனக்கு? கால்பந்துக்கும் சோமபானத்துக்கும் என்ன தொடர்பு? கால்பந்திலும், சோமபானத்திலும் வல்லுனரான அந் நபர் கனவில் வருவதற்கான காரணம் என்ன?

முன்பெல்லாம் எத்தனையோ விசித்திரமான கனவுகள் கண்டிருக்கிறேன் ஆனால் அவை இந்தளவுக்கு மனதை பாதித்தில்லை. அதற்கான காரணங்களை நான் தேடியதுமில்லை.

ஒரு நாள் நான் பறக்கும் சக்தியை பெற்றுவிட்டது போல் கனவு கண்டேன். ஒரு மரத்தில் இருந்து இன்னொரு மரத்துக்கும், மரத்தில் இருந்து மலையுச்சிக்கும் நான் பறந்து கொண்டிருந்தேன். காடுகள், மலைகள், ஆறுகள், ஊர்கள், மனிதர்கள் எல்லாவற்றையும் கடந்து பறந்துகொண்டிருந்தேன். கீழே இருந்து பலர் என்னைப் பார்த்து சிரித்தார்கள். அந்த அனுபவம் ஏகாந்தமாய் இருந்தது, கனவு கலையும் வரை.

சில நாட்களில் ஏதோ ஓரு இடத்திற்குப் போவது போல கனவு வரும். அடுத்து வரும் நாட்களில் நான் கடந்து போகும் ஒரு இடம் கனவில் கண்ட இடம் போல் இருக்கும். அவ்விடத்தின் அமைப்பு, வீதிகள், கட்டங்கள், மனிதர்கள், ஏன் மணம் கூட கனவில் வந்தது போல இருக்கும். அப்படிப்பட்ட தருணங்கள் ஒரு வித மர்மமான உணர்வினையும், பயத்தையும் மனதுக்குள் ஏற்படுத்தியிருக்கிறது எனக்கு.

எனது அப்பாவுக்கும் எனக்கும் அதிகமாய் ஒத்துவருவதில்லை. (பார்க்க அப்பா). அவர் இறந்து ஏறத்தாள 30 ஆண்டுகளாகின்றன. சில மாதங்களுக்கு முன் ஒரு நாள் அவருடன் கதைத்துக் கொண்டிருப்பதாகக் கனவு கண்டேன். நீண்டதொரு கனவு அது. அட்சயா (மகள்) அவரின் மடியில் குந்தியிருந்தியிருக்க நான் அருகில் உட்கார்ந்திருந்தேன். ஏதேதோ பேசிக்கொண்டிருந்தோம். அவரின் அருகாமை ஒரு பாதுகாப்பைத் தருவது போலிருந்தது. அந்த கனவுக்கு முன் அப்பாவின் முகம் மறந்துவிட்டிருந்தது எனக்கு. ஆனால் அந்தக் கனவில் மனிதர் அப்படியே இருந்தார். அதே மொட்டை, அதே நரை, அதே முகச்சுருக்கங்கள், அதே சுருட்டு வாசனை. நானும் அவரும் மட்டும் நண்பர்கள் போல் பேசிக்கொண்டிருந்தது மட்டும் வித்தியாசமாய் இருந்தது. அன்றிலிருந்து அப்பாவின் முகம் ஓரளவு ஞாபகத்தில் நிற்கிறது. ஆனால் அவர் கனவில் வருவதை நிறுத்திவிட்டார். என்னுடன் ஒரு நாள் மட்டும் நட்பாய் இருக்கலாம் என்று நினைத்தாரோ என்னவோ?

சில கனவுகள் மட்டும் திரும்பத் திரும்ப வருகின்றன. இப்பவும் பல்கலைகழக நுளைவுப்பரீட்சை நெருங்கி வருகிறது, படிக்க வேண்டும், என்னால் படித்து முடிக்க முடியாதிருக்கிறது, இதுவே கடைசித் தடவை பரீட்சை எழுதும் வருடம், அதன் பின் வாழ்க்கை என்னவாகும்... இப்படி பயமுறுத்தும் ஒரு கனவு பல வருடங்களாக அடிக்கடி வந்து போகிறது. இந்தக்கனவில் இருந்து முழித்துக் கொள்ளும் போது மனம் ஆறுதலடையும்.

அந்த பறக்கும் கனவை மட்டும் 3-4 தடவைகள் கண்டிருப்பதாகவே தோன்றுகிறது. ஏன் என்று கேட்காதீர்கள். என்னிடம் பதில் இல்லை. ஒரு வேளை அதற்கு ஏதும் உள்ளர்த்தங்கள் இருக்குமோ? கனவுகளை மொழிபெயர்த்துப் பார்க்கம் கதைகளில், சம்பிரதாயங்களில் நம்பிக்கையற்றவன் நான்.  எனவே இந்தக் கனவுகளைப் பற்றி நான பெரிதாய் அலட்டிக் கொள்ளவில்லை.

கனவு மெய்பட வேண்டும் என்னும் வரிகள் ஏனோ மனதுக்கு பிடித்துப்போயிருக்கின்றன. அந்த பறக்கும் கனவு மட்டும் மெய்ப்பட்டால்.......

உங்களுக்கு மேலால் மொட்டை‌யான, கறுப்பான, அழகான, இளைஞன் ஒருவன் பறந்து போனால் எனது கனவு மெய்ப்பட்டுவிட்டது என்று கொள்ளுங்கள்.


இன்றைய நாளும் நல்லதே...

சுனாமில சுவி்ம் பண்ணுவோமுள

இன்று தமிழவன் எழுதிய ”வார்ஸாவில் கடவுள்” வாசித்துக்கொண்டிருந்தேன். அதில் ”கும்மாங்குத்து” என்பவர் ரஸ்யாவினூடாக ஐரோப்பாவுக்கு வர முயற்சிப்பார். முதல் நாள் அவருடன் பயணப்பட்ட இலங்கைத் தமிழர் ஒருவர் ஆற்றைக் கடக்கும் போது  குளிர்நீரில் மு‌ழ்கி இறந்து விடுவார். மறுமுறை அவருடன் பயணித்த சோமாலிய நாட்டு இளைஞன் ஒருவரும் மின்சா‌ரம் தாக்கி இறந்து விடுவார். அதன் பின் ”கும்மாங்குத்து” போலந்து நாட்டிற்கு வந்து சேர்ந்து, போலந்து நாட்டுப் பெண்ணை திருமணம் முடித்து 2 குழந்தைகளுக்கு தகப்பனாக இருப்பதாக கதை நகர்கிறது.

நேற்று மாலை அன்பர் ஒருவர் தொலைபேசியில் அழைத்தார். அவர் நண்பருமல்ல, நண்பரல்லாதவருமல்ல.  ஏற்கனவே நாம் அறிமுகமாகியிருந்‌தோம். அவரின் வீட்டிற்கு முன்பு ஒரு தரம் சென்று கணணி திருத்திக் கொடுத்திருந்தேன். அப்போது அவர்கள் வீட்டில்  6 - 7 இளைஞர்கள் குடியிருந்தார்கள். அங்கு தங்கியிருந்த சில மணிநேரங்களின் போது எனக்கு அவர்களுடைய கதைகளின் சுருக்கம் சொல்லப்பட்டது.  எல்லோரும் மிகவும் சிரப்பட்டு, சொத்துக்களை  விற்று, வட்டிக்கு பணம் பெற்று பல கனவுகளுடன் நோர்வேக்கு வந்திருந்தார்கள். அனைவரினதும் அகதி விண்ணப்பங்கள் 3 த‌டவைகளுக்கு மேலாக நிராகரிக்கப்பட்டு அவர்களை நாட்டை  நாட்டைவிட்டு வெளியேறும்படி அவர்களுக்கு நோர்வே அரசு கட்டளையிட்டிருந்தது. அவர்கள் ஒளிந்து வாழ்ந்து களவாக வேலை செய்துகொண்டிருந்தனர்.

நேற்று அங்கு போன போது மூவர் மட்டுமே அங்கிருந்தனர். சில வாரங்களுக்கு முன் ஒருவரை போலீஸ் பிடித்து இலங்கைக்கு திருப்பியனுப்பியிருந்தது. மற்றவர்கள் இருவரை அவர்கள் தொழில்புரிந்த இடத்தில் வைத்து கைது செய்து அனுப்பியதாம் என்றார். அவர்கள் வேலை செய்தது எவருக்கும் தெரிய சந்தர்ப்பமில்லையே என்றேன். ஆம், அவர்கள் களவாகவே வேலை செய்தனர் என்றும். ஆனால் அவர்களின் முதலாளியின் தொழில் போட்டியாளர்களால் (தமிழர்) காட்டிக்கொடுக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகப்படுவதாகவும் சொன்னார். சகலமும் புரிந்தது. நாம் தமிழரல்லவா?

அவர்களின் போட்டி அந்த இருவரின் வாழ்க்கைக்கும் ‌இழப்பைக் கொடுத்திருக்கிறது.  அவ்விருவரும் இலங்கையில் இருந்து தொலைபேசியில் அழைத்து தங்கள் சம்பளத்தை அனுப்புமாறு கேட்டுள்ளதாகவும் சொன்னார்.  கேட்கவே பரிதாபமாய் இருந்தது. எவ்வளவு இன்னல்களின் மத்தியில் வந்து சேர்ந்திருப்பார்கள். அவர்களுக்கும், அவர்களின் குடும்பத்தினருக்கும் எத்தனை எத்தனை கனவுகள் இருந்திருக்கும். சிலவேளைகளில் அவை இனியும் கனவுகளாகவே இருக்கவும் கூடும்...

இந்த இருவருக்கும் முன்பு பிடிபட்டு அனுப்பப்பட்டவரின் கதை சற்று வித்தியாசமானது. அவர் இங்கிருந்த காலங்களில் கற்பனையில் விசா தயாரித்து எக்கச்சக்கமாய் பணம் பார்த்தவராம். வாய்ச்சொல்லில் வீரனாயிருந்ததாலும் சிலர் அவரை கண்மூடித்தனமாய் நம்பியதாலும் இவரின் காட்டில் மழை பெய்திருக்க இவர் தற்போது சீரும்சிறப்புமாய் ஊரில் வாழ்கிறாராம். அத்துடன் நான் உங்கள் சமயத்தில் சேர்கிறேன் எனக்கு அவசர பண உதவி தேவையாய் இருக்கிறது  என்று மதத்தில் மதம் கொண்டவர்களுக்கே காதில் பூசுற்றியவராம். அதிலும் சில பத்தாயிர குறோணர்கள் பார்த்தாராம்.

இவன் போனது ஊருக்கு நிம்பதி என்றார் அவர். அவரால் நிம்மதியிழந்தவர்கள் என்ன சொல்வார்கள் என யோசனையோடியது எனக்கு.

எனக்குத் தெரிந்த இன்னொருவர் இங்கு வீசா பிரச்சனை என்றதும் ஊருக்குப் போனார். போய் ஒரு மாதத்திற்கிடையில் சட்டக்கல்வி பயிலத் தொடங்கியிருக்கிறார். இறுதியாய் அவருடன் பேசிய போது மிக்க மகிழ்ச்சியுடன் இருந்தார். அவருக்கு கலியாணம் பேசியிருந்ததும் அதற்குக் காரணமாயிருக்கலாம்.

எனக்குத் தெரிந்த இன்னொருவருக்கு நாட்டைவிட்டு வெளியேறு என்று உத்தரவு வந்திருக்கிறது. புதிதாய் திருமணமானவர். சிறு குழந்தையுமுண்டு. மனிதர் மிகவும் வலிநிறைந்த காலத்தை கடந்து கொண்டிருக்கிறார். இரவில் நிம்மதியாக உறங்கமாட்டார் என்பதை நான் நன்கு அறிவேன். நிம்மதியான உறக்கமின்றி மனச்சஞ்சலத்துடன் நானும் பல நாட்களை கடந்திருக்கிறேன். ஆயினும் எனது நாட்களை விட அவரின் இரவுகள் பயங்கரமானதாயிருக்கும்.

பல மனிதர்கள். பலவிதமான தலையெழுத்துக்கள். வாழ்வு ஒவ்வொருவரையும் ஏதோ ஒரு விதத்தில் ‌புறட்டிப்போடுகிறது. என்னையும் இப்படித்தான் பலமுறைகள் வாழ்வு புறட்டிப்போட்டிருக்கின்றது. அவற்றில் இருந்து ஏதோ ஒரு சிறு அதிஸ்டம் என்னை ஒவ்வொரு முறையும் மீட்டுத் தந்திருக்கிறது. அதே போல் இந்தக்கதையில் வந்தவர்களுக்கும் ஒரு அதிஸ்டம் கிடைக்காமலா போகும்?

இன்றைய நாள் நல்லதா?


.

பனியில் உருகும் நினைவுகள்


இன்று காலை பனி கொட்டி ஊரையே மூடிவிட்டிருந்த போது நண்பர் ஒருவரை சந்திப்பதற்காக அவரின் இருப்பிடத்திற்குப் போனேன். அவர் வரும் வரை எனது வாகனத்தில் உட்கார்ந்திருந்தேன். அருகிலேயே ஒரு கடையிருந்தது. கடைக்குள் போவோரையும் வருவோரையும் பார்த்திருந்தேன். வெளியில் ஒரு நாய் கட்டப்பட்டிருந்தது. அந்த  நாயும் எல்லா நோர்வே நாய்களைப் போல மிகவும் அன்பாகவும், பண்பாகவும் அதனருகால் கடந்து செல்பவர்களைப் பார்த்து வாலை ஆட்டியபடியே நின்றிருந்தது.

கடைக்குள் இருந்து ஒரு 4 -5 வயது மதிக்கத்தக்க பெண்குழந்தை ஒன்று தனது பாட்டியுடன் வெளியில் வந்து கொண்டிருந்தாள். அவள் கையில் ஐஸ்கிறீம் இருக்க ஐஸ்கி‌றீமின் பேப்பரை உரிப்பதில் அவளின் முழுக்கவனமும் இருந்தது. தாய்க்குத் தெரியாமல் பாட்டியை ஐஸ்கிறீம் வாங்கித்தர வற்புருத்தி வாங்கியிருப்பாள் என நினைத்துக் கொண்டேன்.

ஐஸ்கிறீமை உரித்து வாயில் வைத்தபடியே இழுத்தால் பனியில் சறுக்கிப்போகும் ஒரு வித விளையாட்டுப் பொருளில் குந்தியிருக்க பாட்டி அவளை இழுத்துப் போனார். இவளோ ஐஸ்கிறீமில் உலகை மறந்திருந்தாள்.

எனக்கும் சில வருடங்களுக்கு முன் இப்படியான பனியில் சறுக்கும் இனிமையான சந்தர்ப்பங்கள் கிடைத்திருக்கின்றன. அப்போதெல்லாம் உணராத ஒருவித எகாந்தம் இன்று அதைப்பற்றி நினைக்கும் போது மனதைப் அள்ளிப்போகிறது.

முதலில் மூத்த மகளின் 1 - 4 வயது வரையான பனிக்காலங்களில் அவளின் பனிச்சறுக்கு உபகரணத்தை இழுத்துத் திரிந்திருக்கிறேன். ஆரம்பத்தில் அவளால் அதில் தனியே குந்தியிருக்க முடியாது. எனவே நாம் வாழ்ந்திருந்த இடத்தில் குன்று போன்ற இடத்திற்கு சென்று அங்கிருந்தபடியே கீழ்நோக்கிப் போகும் பாதையால் வழுக்கிக் கொண்டு போவோம். நான் குந்தியிருக்க அவள் எனது கால்களுக்கிடையில் பாதுகாப்பாய் இருப்பாள். வேகம் அதிகரிக்க அதிகரிக்க அவளின் மகிழ்ச்சியும் அதிகரிக்கும். கீச்சிடடுக் கத்துவாள். நானும் சேர்ந்து கத்துவேன். சிவந்து குளிர்ந்து போயிருக்கும் அவளின் அழிகிய கன்னங்கள். மீண்டும் மேலே வரும் போது மெதுவாய் கைபிடித்து நடப்பாள். நடந்து களைத்ததும் ஏறி உட்கார்ந்து கொள்வாள். நானும் அவளை கவனமாக மேல்நோக்கி இழுத்து வருவேன். மீண்டும் குன்றின் உச்சிக்குப் போவோம். மீண்டும் சறுக்கி குழந்தையின் உல்லாச உலகில் அவளுடன் உலாவருவேன்.

சில ஆண்டுகளின் பின் சிறிய மகளும் இந்த விளையாட்டில் இணைந்துகொண்டாள். அவளுக்கும் அவளின் அக்காவுக்கும் 4 வயது வித்தியாசம். நான் குறிப்பிட்ட  பனிச்சறுக்கு உபகரணத்தில் ஒரு பெரிவரும் ஒரு சிறிய குழந்தையும் மட்டுமே உட்கார முடியும். எனவே எங்களுக்கு இடப்பிரச்சனை வந்தது. அதையும் தனது சாதூர்யத்தால் தீர்த்தாள் மூத்தவள். நானும் இளையவளும் குந்தியிருக்க எம்மை தள்ளி வேகம் கொடுத்த பின் அவள் எமக்குப் பின்னால் இருந்த சிறிய இடத்தில் ஏறி நின்று எனது கழுத்தைக் கட்டிக் கொள்வாள்.

அதை விட மிக இனிமையான, இதமான, வாஞ்சை நிறைந்த கணங்கள் என் வாழ்வில் கிடைத்ததில்லை. நின்றபடியே என் கழுத்தில் முகம் பதித்து ஆனந்தத்தில் வெளிப்படும் மூத்தவளின் மகிழ்ச்சியொலியும், கீச்சிடும் சின்னவளின் ஒலியும், உலகையும் என்னைம் மறந்த எனதொலியும்,  நாம் சறுக்கிச்சென்ற வழிஎங்கும் வழிந்தோட, அவர்கள் இருவரையும் மீண்டும் மீண்டும் சலிக்காத விக்கிரமாதித்தன் போல் நான் குன்றின் உச்சிக்கு இழுத்து வருவேன். சின்னவளை தனது கால்களுக்குள் இருத்தி பாதுகாப்பாக வைத்திருந்த படியே எனக்கு கட்டளையிட்டுக்கொண்டிருப்பாள் முத்தவள். 

அது ஒரு கனாக்காலம். இன்றும் என் மனதை தடவிப்போகும் நினைவுகளிவை. எனது வாழ்வின் இனிமையான காலங்கள் அவை.

இன்று காலை அக் குழந்தையை கண்ட போது மீண்டும் எனது குழந்தைகளை அதேபோல் இழுக்கும் ஆசை வந்து போனது.

அவர்கள் இருவரும் வளர்ந்து விட்டார்கள். எனது ஆசையைச் சொன்னால் ஆளையாள் கண்ணைச்சுருக்கி பார்த்தபடியே புன்னகைப்பார்கள். அதனர்த்தம் அப்பா குழந்தைத்தனமாக கதைக்கிறார் என்பதாயிருக்குமோ?

இருக்கலாம் ...


இன்றைய நாளும் நல்லதே

தழுவிப் போகும் தடயங்கள்


சில நாட்களுக்கு முன் தான் எஸ். ராமகிருஷ்ணன் எழுதிய ”யாமம்” வாசித்து முடித்திருந்தேன். அப் புத்தகத்தின் முன்னுரையில் எஸ். ரா ”எல்லா நகரங்களும் ஏதோ சில கதைகளைச் சுமந்து கொண்டிருக்கின்றன” என்கிறார். அவ்  வசனங்கள் இன்றும் என் காதுகளில் ஒலிப்பது போலிருக்கிறது எனக்கு. அப் புத்தகமும் ஒரு ஊரில் வாழும் சிலரின் கதையை சொல்லியபடியே நகர்கிறது. எவரும் தவறவிடக்கூடாத புத்தகம் அது.

எனது வாழ்க்கையும் பல ஊர்களினூடாக திசையின்றி அலையும் காற்றைப் போல் அலைந்து திரிந்திருக்கின்றது. இப்பவும் அப்படித்தான்.  நான் கடந்து வந்த சில ஊர்கள் பல இனிமையான கதைகளை தந்தும், சில வலி நிறைந்த கதைகளைத் சொல்லியும் என்னை அடுத்த ஊரை நோக்கித் உந்தித் தள்ளியபடியே இருக்கின்றன. நானும் நாடோடி போல் ஊரூராய் அலைந்து திரிகிறேன். முற்பிறப்பில் நாடோடியாக வாழ்திருந்தேனோ என்னவோ?

பிறந்தது  கொழும்பில். பின்பு ஏறாவூர், அக்கரைப்பற்று, பிபிலை, கொழும்பு, பதுளை, மட்டக்களப்பு, மீண்டும் ஏறாவூர், இந்தியா என ஒன்பது இடங்கள், என்னைச் சற்று செதுக்கிய பின் முன்னோக்கித் தள்ளியிருந்தன எனது 21 வயதுக்குள். வெளிநாடே வாழ்க்கையென விதிக்கப்பட்ட பின்பும் நாடோடிவாழ்க்கை என்னைத் தொடர்ந்து கொண்டே இருக்கிறது. இனியும் தொடரும் என்றே நினைக்கிறேன்.

எனக்குள் இருக்கும் சில ஊர்களின் கதைகளையே பதிய நினைத்திருக்கிறேன் இன்று.

முதலில் அக்கரைப்பற்று: 1970 - 1972 களில் பெற்றோரின் தொழில் நிமித்தம் அங்கு வாழ நேர்ந்தது. இயற்கையுடனான அறிமுகம் முதன் முதலில் கிடைத்ததும் இங்கு தான். எனக்கிருந்த நட்பு, அங்கிருந்த ஒரு ஊமை நண்பன் என்று தான் நினைவில் இருக்கிறது. அவனின் தலைமயிரும் மிகவும் ஐதாக ஒரு வித செம்பட்டை நிறத்தில் இருந்தது. நாம் எப்படி பேசிக் கொண்டோம் என்று நினைவில் இல்லை. ஆனால் முக்கைச் சொறிந்தால் அவனுக்கு கெட்ட கோபம் வந்தது. நான் மூக்கை சொறிந்த பின்பும் நாம் நட்பாயிருந்தோம். அவனின் உருவம் அழிந்தும் அழியாததுமான ஒரு ஓவியமாயிருக்கிறது இன்றும், மனதில். நட்பின் நெருக்கத்தையும், சுவையையும் நான் அறிந்தது இங்கு தான்.

கடற்கரையும், சிப்பிகளும், ஆர்பாரிக்கும் இந்து சமுத்துரத்து அலைகளும், ராவணண் மீசையும், அப்பாவின் மீன்பிடியும் என பலவிதமான நினைவுகளைத் தந்து  வழியனுப்பியது அக்கரைப்பற்று.  இன்றுவரை மீண்டும் அம்மண்ணை தரிசிக்கும் பாக்கியம் கிடைக்கவில்லை. எனக்கு கதை சொன்ன ஊர்களில் இந்த அக்கரைப்பற்றும் முக்கியமானது.

கொழும்பு: எனது 7வது வயதில் பெற்றோர் தொழில்புரிந்த பிபிலயில் தமிழ்ப் பாடசாலை இல்லாததால் அம்மாவின் அண்ணணிடம் தங்கியிருந்து படித்தேன். பெற்றோரை பிரிந்திருந்ததால் எப்போதும் சுயஇரக்கம் நிழலைப்போல் என்னுடனேயே இருந்து. தனிமையுடன் உரையாடப் பழகியதும், தனிமையை ரசிக்கப் பழகியதும் இந் நாட்களில் தான். கொழும்பின் சில இடங்கள் இன்றும் ஞாபகத்தில் இருக்கின்றன. மாமா முகத்துவாரத்தில் இருந்தார். அவரின் வீட்டின் இலக்கம் 604, மாடி வீடு, வாசலில் மல்லிகை மரம் இருந்தது. ஞாயிறு தோறும் மாமா குடும்பத்தினருடன் தேவாலயத்திற்குப் போவேன். போகும் வழியில் ஒரு மீன் மார்க்கட் இருந்தது, அதைக் கடக்கும் போதெல்லாம் மீனின் வாசனை என்னைக் கடந்து போனது. அந்த வழியில் ஒரு மாதா தேவாலயமும் இருந்தது.

அங்கு வாழ்ந்திருந்த நாட்களில் சுயஇரக்கம் பெருக்கெடுதது ஓடும் போது கண்ணை மூடி, அம்மா பிபிலையில் இருந்து என்னைப் பார்க்க வந்துகொண்டிருப்பதாக கற்பனை செய்வேன். காலை 08.00 மணிக்கு இப்ப பஸ் ஏறுவா, 12 மணிக்கு கண்டியில் நிற்கிறா, மாலை 5 மணிக்கு வீட்டு கேட்டில் ஏறி ஆதை முன் பின் ஆட்டியபடியே அம்மா வருகிறாவா என  155 நம்பர் பஸ் ஐ பார்த்திருப்பேன். சில நாட்களில் அம்மா நான் கற்பனை செய்தது போல வந்திறங்கியதும் உண்டு. என்னை புடம் போட்ட இடங்களில் கொழும்பும் முக்கியமானது.
 
அடுத்தது பதுளை: காலம் 1974 -75. குடும்பத்தைப் பிரிந்து குடும்ப நண்பர்து ஒருவரின வீட்டில் தங்கியிருந்தேன். மாமா என்று தான் அவரின் பெயர் ஞாபகமிருக்கிறது. அவரின் அன்டி ஒரு சிங்களவர். அன்பானவர்.  எள்ளையும் எட்டாய் பிரி என்று அறிவித்தவர் அந்த அன்டி தான். அன்டியின் நண்பியின் கணவர் கொலைசெய்யப்பட நண்பியையும் குழந்தையையும் தன்னுடன் வைத்திருந்தார் பல காலம். அது அப்போ நட்பு என்பது எனக்குப் புரியாத காலம். அடிக்கடி சண்டைபிடித்தார்கள். அழுதார்கள். மாமா விலக்குப் பிடித்தார். ஆனால் அடுத்த நாள் அவர்கள் சேர்ந்து சிரித்தார்கள். அன்று எனக்கு எரிச்சலாயிருந்தது அவர்கள் சண்டை. ஆனால் இன்று வாழ்க்கை புரியும் போது அவர்களைப் பரியக்கூடியகத்தான் இருக்கிறது.

இந்த பதுளையில் தான் முதலில் பீடி குடித்தேன். வயதுக்கு மீறிய நட்பு கிடைத்திருந்தது. பாடசாலைக்கு கட் அடித்தேன். வண்டில் ஓட்டப் பழகினேன். பதுளை சரஸ்வதி மாகாவித்தியால நண்பர்கள் சிலர் இன்றும் நண்பர்களாய் இருக்கிறார்கள்.  பசியின் கொடுமையை அறிந்தது இங்கு தான். அங்கு வாழ்ந்திருந்த இரண்டாம்  ஆண்டு வேறு ஒரு வீட்டில் வாழ நேர்ந்தது. அந்தப் பெண் ஒரு மருத்துவத் தாதி. என்னுடன் சேர்த்து அந்த வீட்டில் 5 குழந்தைகள். கணவர் இறந்து விட்டார். இங்கு  விளையாடுவதற்கு ஆட்கள் இருந்தார்கள். ஆனால் காலை, மதியம் இரவு மூன்று நேரங்களிலும் பசி கூடவே இருந்தது. அம்மா பணத்தை  அவர்களிடம் கொடுத்தாலும் எனது சாப்பாட்டின் அளவு எப்பவும் குறைவாகவே இருந்தது. எதிர்காலத்தில் பாடசாலை விடுதியில் வாழ்ந்திருந்த காலங்களில் பசியுடன் வாழ இந்த பதுளைப் பசியே என்னைப் பழக்கியது.

புதுளைக்குப் பின்னா காலம் என் வாழ்க்கையின் முக்கிய காலம். மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியில் சேர்க்கப்பட்டேன். விடுதி வாழ்க்கை. கற்றதும் பெற்றதும் அங்குதான். என் பாடசாலை என்மனதில் இவ்வளவு இடத்தைப் பிடிக்கும் என்பதை நான் கனவிலும் நினைத்துப்பார்த்தில்லை. எனது புனிதப்பூமி அது. என்‌றென்றும். இன்றும் மிக நெருங்கிய தொடர்பிருக்கிறது எமக்கிடையில்.

அடுத்தது ஏறாவூர், உலகிலேயே அழகான இடம். எங்கள் ராஜ்யம் அது. பதின்மவயதும், தோழமையும், வியர்வை கலந்த ஊரின் புழுதியும் உடலில் சுகமாய் படிந்திருந்த காலம் அது.  மூன்றின மக்களும் தோழமையின் சுற்றுவட்டத்தில் இருந்தனர். மொழியோ, மதமோ, இனமோ நட்பில் கலப்படமாகாதிருந்தது வாழ்வு எனக்குத் ‌தந்த மிகப்பெரிய பரிசு.

ஏறாவூருக்கு அருகாமையில் இருந்த செங்கலடி எனக்கு பதின்மவயதின் ரகசியங்கள் பல சொல்லித் தந்த இடம். பல பல புதிய நட்புகள் கிடைத்ததும் இங்கு தான். முதன் முதலில் நட்பொன்று தொலைந்ததும் இங்கு தான். தொலைந்த நட்பு இன்றும் மீளவில்லை. மீளமுடியாத இடத்திற்கு அனுப்பிவிட்டார்கள்.

காற்றில் அடித்துச் செல்லப்படும் சருகிற்கு சமமான மனதுடன் அந்தக் காலங்கள் மறைந்துபோயின. ஏறத்தாள 27 வருடங்களுக்கு முன்னான காலம் அது. எனினும் இன்றும் அந்நாட்களின் நினைவுகள் பிரியமுடன் நெஞ்சைத் தடவிப்போகின்றன. மனதினுள் பேராசை ஒன்றிருக்கிறது. தோழமைகள் எல்லோருடனும் செங்கலடிச்சந்தியில் ஒன்றாய் குந்தியிருந்து ஒரே ஒரு மாலைப்பொழுதையாவது கழிக்கவேண்டும் என்று. இது நடக்காது என்றும் கூறமுடியாது, நடக்கும் என்றும் கூறமுடியாது.

ஊரின் கதைகள் பின்பொருநாள் தொடரலாம்.


இன்றைய நாளும் நல்லதே.


.

ஊரின் அடையாளம்

ஏறத்தாள 19 - 20 வருடங்களுக்கு முன்னும் நான் ஒஸ்லோவில் வாழ்ந்திருந்தேன். அக் காலத்தில் எனக்கு இரண்டு பொழுதுபோக்குகளே இருந்தன. ஒன்று கால்பந்தாடுவது மற்றையது புகைப்படமெடுப்பது. வடக்கு நோர்வேயில் 1988ம் ஆண்டு மொழிக்கல்வி கற்கையில் புகைப்படக் கலையையும் கற்றேன். 1990 களில் ஒஸ்லோ புகைப்படக்கலைஞர் சங்க அங்கத்தவனாகவும் இருந்‌தேன்.

அந்த நாட்களில் ஒஸ்லோவின் முக்கிய வீதியான ”கார்ல் யுஹான்ஸ் காதா” இன் ஆரம்பத்தில் ஒரு கமரா கடை இருந்தது. அது ஒன்று தான் ஒஸ்லோவிலேயே இருந்த பெரிய கடை. எத்தனையோ மணிநேரங்களையும், தேவைக்கு அதிகமான பணத்தையும் அந்தக் கடையில் செலவழித்திருக்கிறேன். பல ஆண்டுகளின் பின் நான் மீண்டும் ஒஸ்லோவுக்கு குடி வந்த போது அக் கடை காணாமல் போயிருந்தது.

இன்று புறநகர்ப் பகுதியொன்றினூடாக நடந்து கொண்டிருந்தேன். திடீர் என ஒரு கமரா கடை கண்ணில்பட்டது. முன்பு இருந்த கடையைப் போல் பெரிய கடையாகவும் புகைப்படக்கலைக்குத் தேவையான சகல பொருட்களையும் கொண்டிருந்தது அக்கடை. நேரக் குறைவினால் உட்புக முடியவில்லை. இடத்தை மனத்தில் குறித்துக் கொண்டேன்.

இன்று 1990களில் என்னை ஆட்கிரமித்திருந்த புகைப்படக் கலையைப் பற்றிய பழைய நினைவுகள் மனதை நிறைத்திருந்தன. ஒவ்வொரு கிழமையும் நடக்கும் கருத்தரங்குகள், பயிட்சிவகுப்புக்கள், கறுப்பு வெள்ளை வேர்க்சொப்கள், போட்டிகள், உரையாடல்கள், சுற்றுலாக்கள் என எத்தனையோ விதமான நிகழ்வுகள்.

ஒரு முறை ”ஓஸ்லோவின் அடையாளம்” என்னும் தலைப்பில் ஒரு புகைப்படக் கண்காட்சிக்கு வேறு இரண்டு நண்பர்களுடன் படம் எடுக்கவேண்டியதாயிற்று. நாம் எதை படம் எடுத்தாலும் எதுவும் திருப்தியாய் வரவில்லை. அந்த நேரத்தில் தான் அந்தப் வயதான பெண்மணி என்னைக் கவர்ந்தார். அவரை ஓஸ்லோவில் காணாதவர்கள் இருக்கவே முடியாது. மிகவும் வயதானவர். ராமாயணத்தில் வரும் கூனியின் முதுகை விட இவரது முதுகு கூனியது. கையில் எப்போதும் 5க்கும் அதிகமாக பிளாஸ்டிக் பைகளுடன் நடந்து திரிவார். தனக்குத் தானே உரத்துப் பேசிக்கொண்டு ‌மிக மிக மெதுவாய் ஒஸ்லோவின் மையப்பகுதியை வலம் வருவார். வீதியில், குப்பைகளில் உள்ள பழைய போத்தல்களை சேகரித்துத் திரிவார். பிச்சையும் கேட்பார். அவரின் பெயர் ”ஓகோத்” என்று பின்பு அறியக்கிடைத்தது. அவர் தினமும் தேவாலயத்திற்குச் சென்று நேராகவே யேசுவின் சிலைக்கருகில் நின்று பிரார்த்தனை செய்த பின்பே வீடு திரும்புவார். அவரின் நடுங்கிய குரல் இன்றும் ஞாபகத்தில் இருக்கிறது.

இவரே ஒஸ்லோவின் அடையாளம் என எனக்குத் தோன்றுவதாக நண்பர்களிடம் சொல்லிய போது அவரை அவர்களுக்கு தெரிந்திருந்ததால் அவர்களுக்கும் எனது தெரிவில் ஆட்சேபனை இருக்கவில்லை. அடுத்த வந்த நாட்களில் அவருடன் கதைத்து எமது எண்ணத்தைச் சொன்னோம். சிரித்தபடியே ஓம் என்றார். பல இடங்களில் அவரின் பின்னால் திரிந்து படம் எடுத்தோம். வீதியில், கடையில், தேவாலயத்தில் என்று படம் பிடித்தோம். அவ்வருடக் கண்காட்சியில் எமக்கு பாராட்டுக்கள் கிடைத்தன. அத்தோடு நாடு தளுவிய பத்திரிகை ஒன்று எம்மை அந்த மூதாட்டியைப் பற்றி ஒரு கட்டுரை எழுதக் கேட்டு அதை நாம் தயாரித்துக் குடுத்தபோது நடுப்பக்கத்தில் பிரசுரித்திருந்தது.

அக் கட்டுரைக்காக அவரைப் பேட்டி கண்டபோது அவர் கூறிய கதை எம்மை மிகவும் மனவேதனைப்பட வைத்தது. இரண்டாம் உலகமாகா யுத்தத்தின் போது சுவீடனில் வேலைக்காரியாக பணிபுரிந்திருக்கிறார். அக்காலத்தில் மிகுந்த மனஅழுத்தத்தினால் பாதிக்கப்பட்டிருந்திருக்கிறார். பிற்காலத்தில் ஒஸ்லோவில் ஒரு மனநல மருத்துவமனையில் Lobotomy என்றும் மூளைச் சத்திரசிகிச்சை மூலம் அவரின் நினைவுகளை அழிக்க முனைந்திருக்கிறார்கள். இச்சத்திர சிகிச்சை பிற்காலத்தில் தடைசெய்யப்பட்டது. தவிர இச் சத்திர சிகிச்சைக்கு உட்பட்டவர்களுக்கு நோர்வே அரசு பிற்காலத்தில் நட்டஈடும் வழங்கியது. இவர் தனது 74ம் வயதில் ஒஸ்லோவில் இறந்தார் என இன்று இணையத்தில் வாசித்தேன்.

இன்று அவரைப் பற்றி இணையத்தில் தேடினேன். ”ஓஸ்லோவின் அடையாளங்கள்” என்று 2008ம் ஆண்டு வெளியிடப் பட்ட புத்தகத்தில் அவரைப்பற்றி எழுதியிருந்தார்கள். பிரபல ஒஸ்லோ மக்கள், அறிவாளிகள், கலைஞர்கள் ஆகியோர் மத்தியில் இவரையும் மதித்து அவரும் ”ஓஸ்லோவின் அடையாளம்” என்று எழுதிய எழுத்தாளரின் மனிதநேயம் பற்றி நான் சொல்லித்தான் தெரியவேண்டுமா என்ன?

1990 இல் நாங்கள் அவரை ஓஸ்லோவின் அடையாளம் என்றோம். 2008 இல் ஒரு ஓஸ்லோவின் அடையாளங்கள் என்னும் புத்தகத்தில் பலரில் ஒருவராய் அவர் ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறார். எனக்கு பெருமையாயிருக்கிறது.

இன்றைய நாளும் நல்லதே.


.

நாம் நாமம் வைத்த கதை

பாடசாலை நாட்களில் நண்பர்களை பெயர் சொல்லி அழைப்பதை விட செல்லமாக பட்டப்பெயர்கள் வைத்தே அழைப்பது வழக்கமல்லவா. அப் பெயர்கள் நகைச்சுவைக்காக வைக்கப்பட்டாலும் அவற்றின் பின்னால் ஏதோவொரு கதையிருக்கும். காலப்போக்கில் இந்தப் பெயர்களே நிலைத்தும் நிஜப் பெயர்கள் மறந்தும் போய் விடுகின்றன.

இன்று எனது நினைவில் நிற்கும் பட்டப்பெயர்களினூடா ஒரு சிறு பயணம் செய்ய நினைத்திருக்கிறேன்.
டக்:
இந்த புண்ணியவானுடன் நானும் படித்தேன். இவனிடம் எதைக் கேட்டாலும் ”டக்” எண்டு வாறன், ”டக்” என்ற செய்வம்” என்று கனக்க ”டக்” போடுவதால் கிடைக்கப்பட்ட பெயர் இது. இதில் உள்ள இன்னுமொரு நகைச்சுவை என்னவென்றால் இவனுக்கு ”டக்” என்று பெயர் சூட்டியது நாங்களல்ல, எங்கள் பாடசாலையின் அதிபர் தான்.  இவனின் பெயர் ”டக்”  ஆன பின் ஆங்கிலத்தில் கரைத்துக் குடித்த ஒரு அறிவாளி ஒருத்தன் அதை ”தாரா" (duck) என மொழியெர்த்ததால் இந்த ”டக்” பிற்காலத்தில் ”தாரா” என்றும் அழைக்கப்பட்டான்.


(”டக்” என்றால் விரைவாக என்று பொறுள்படும்)

டப்பி:
இந்த பெரியவருடனும் நான் படித்தேன். நன்றாக கிறிக்கட் விளையாடுவான் பையன். ஆனால் இவரின் பட்டப்பெயருக்கான காரணம் மறந்து விட்டது


நண்டு அல்லது முனிவன்: 
இவ(னு)ரும் எம்முடன் படித்தவ(ன)ர். நண்டு என்று ஏன் பெயர் வந்தது என்று மறந்து விட்டது ஆனால் ”முனிவன்” என்பது சைட் அடிக்காமல் படிப்பே தொழில் என்றிருந்ததாலும், அகத்திய முனிவரின் உயரத்துக்கும் இவனின் உயரத்துக்கும் சம்பந்தமிருப்பதாலும் இவன் முனிவன் என்று அழைக்கப்பட்டான்.

ஊத்தை: நம்மட பெயருங்கோ... ஏதோ.. என்ட சுத்தம் தெரிந்த ஒரு பன்னி வைத்த பெயர்.. (நாசமா போவான்)


இந்தப் பட்டப்பெயரை எழுதுவது அழகல்ல. : நோய் அல்லது பலவீனம் ஒன்றை அடிப்படையாக வைத்து வைக்கப் பட்டது. எவ்வளவு பெரிய வலியை தினம் தினம் இவனுக்கு கொடுத்திருக்கிறோம் என்பதை நினைத்தால் வெட்கமாய் இருக்கிறது. மன்னித்துக்கொள் நட்பே.


வேடன்: 
1983 இனக்கலவரத்தில் காணாமல் போன நண்பனின் பெயர். காரணம் மறந்துவிட்டது. வேடன் என்பது அவனது ”வேணன்” என்னும் அழகிய பெயரின் திரிபு என்று தான் ஞாபகமிருக்கிறது. இவனுக்கும் இன்னொருவனுக்கும் வார்த்தைக் கைகலப்பு வரும் போது காது வெந்துவிடும் அளவுக்கு புதிய புதிய xxx சொற்களை உருவாக்குவார்கள். 


கிழவி: 
காரணம் மறந்து விட்டது. இன்றும் தொடர்பில் உள்ள ஒருவர்(ன்).


பூனை: 
அமைதியாய் தன்து காரியத்தை கவனிக்கும் (அப்)பாவி.  விவசாய வகுப்பில் வகுப்பில் நாம் ”ஒட்டு முறைகள்” பற்றி படித்த போது தனது வீட்டு பப்பாசி மரத்தில் ரோஜா செடியை ஒட்டி ஒரு விவசாய புரட்ச்சி செய்து, தோற்றவன். அதை அவனின் தகப்பனாரே எமக்கு அறிவித்தார். அதன் பின் நடந்தது ஒரு சோகக் கதை...


குண்டன்: காரண இடுகுறிப் பெயர்


முக்கு தோண்டி: காரண இடுகுறிப் பெயர்


நசுக்கி (1): நசுக்கிடாமல் தன்ட வேலையை செய்பவன்


நசுக்கி (2): மெதுவாக குசு விடுபவன்

மூஞ்சூறு:
எடுத்ததற்கெல்லாம் கோபப்படுபவன். சிரிக்காமலே இருந்ததால் வந்த பெயர் இது. 


கரடி: 

எனது அக்கா ஒருவர் யாழ்ப்பாணத்தில் ஆசிரியராக இருந்த பாடசாலையில் ஒரு ஆசிரியரை கரடி என்றழைத்திருக்கிறார்கள். அவரைப் போல நடை உடை பாவனைகளில் எனது அக்காவும் இருந்ததால் அக்கா சின்னக்கரடி என்று அழைக்கப்பட்டார்.

இப்படி உங்களுக்கும் பல பட்டப்பெயர்கள் தெரிந்திருக்கும். பின்னூட்டத்தில் மறக்காமல் பதிவிடுங்கள்.

50 % கழிவில் ஒரு பெண்ணும் எனது அனுபவமும்

எச்சரிக்கை: பதிவு, தலைப்பைப் போல் கிளர்ச்சியூட்டக்கூடியது அல்ல.

--------------------------------------------------

லண்டனில் நான் நின்றிருந்த போது எனக்கு சில உடைகள் வாங்க வேண்டியிருந்தது. ஆனால் கடைக்குப் போவது என்றால் நமக்கு இரத்தக்கொதிப்பு தானாகவே ஏறும். குழந்தைகளுடன் கடைக்குப் போனாலும் இளையவளுடன் கோப்பி சொப்பிலும், ஐஸ்கிறீம் கடையிலும், கணணி, ‌அலைபேசி கடைகளில் காலத்தை கடத்திவிடுவேன். ஆனால் இம்முறை நான் தனியே போகவேண்டும் என்று விதிக்கப்பட்டிருந்தது. தவிர எனக்கு இதை வாங்கு, அதை வாங்கு என்று அறிவுரை சொல்லவும் எவருமில்லை. என்னை நினைக்க எனக்கே பாவமாய் இருந்தது.

பஸ் எடுத்து, பின்பு டிராம்ப் வண்டி எடுத்து ஒரு பிரபல்யமான கடைத்தொகுதியில் இறங்கிக் கொண்டேன். நிமிர்ந்த போது கண்ணின் முன் இருந்த விளம்பரத்தில் அரைகுறை ஆடையில் என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தாள் ஒருத்தி. அவளின் கையில் 50 வீத கழிவு என்று இருந்தது. ஆனால் கழிவு அவளுக்கா அல்லது அவள் போட்டிருந்த உடைக்கா என்பது  விளக்கமில்லாமலிருந்தது.

மெதுவாய் நடந்து கடைத் தொகுதிக்குள் புகுந்தேன் 5 நிமிடங்கள் நடந்திருப்பேன் திருவிழாவில் தொலைந்த குழந்தையின் மனநிலை குடிவந்திருந்தது எனக்கு. எங்கும் மனிதர்கள், எதிலும் 30 - 50 வீதக் கழிவு, ஓளிரும் நத்தார் சோடனைகள், அலரும் ஒலிபெருக்கி என்றிருந்த போது நான் என்னைத் தொலைத்திருந்தேன். அதைவிட அந்த கடைத் தொகுதியை எப்படி சுற்றினாலும் உலகத்தை சுற்றுவது போல் அதை இடத்துக்குகே வந்து சேர்ந்தேன்.

நிலமை கட்டுக்கடங்காமல் போய்க் கொண்டிருந்தது. ஒரு ஒதுக்குப்புறத்தில் போய் நின்று கொண்டு என்ன செய்யலாம் என்று யோசித்தேன். வீட்டுக்குப் போகலாம் என்றது மனது. சீச்சீ.. இந்த சவாலை நீ வென்றே ஆக வேண்டும் என்று உள்ளிருந்து கத்தியது எனது மற்றொரு மனது. நிமிர்ந்து பார்த்தேன். Nike நிறுவனத்தாரின் Just Do It விளம்பரம் கண்ணில் பட மனம் ஒரு தீர்மானத்துக்கு வந்த போது பக்கத்தில் இருந்த கடையின் பெயர் New look என்றிருந்தது. சகுனம் நன்றாயிருக்கிறது போல என்று நினைத்துக் கொண்டேன்

சேட் வாங்க வேண்டும் என்பதால் Marks & Spencer கடைக்குள் புகுந்தேன். முருகா.. அது கடையா? விளையாட்டு மைதானம் மாதிரியல்லவா இருந்தது . பலத்த முயற்சியின் பின் ஒரு விதமாக சேட் இருந்த பகுதியை தேடிப்பிடித்தேன். 50 வீத கழிவின் பின் சேட்களின் விலை 30 பவுண்களாக இருந்தது. என்னை விற்றாலும் இந்தளவு பணம் வராதே என்று நினைத்துக் கொண்டே கடையை விட்டு வெளியேறும் வழியைத் தேடி, ஏறக்குறைய 20 நிமிடங்களின் பின், விற்பனையாளர் ஒருவரின் உதவியுடன் கடையை விட்டு வெளியேறிய போது நான் ஒரு நடைபாதையில் நின்றிருந்தேன்.

அருகில் ஒருவர் ஏதையோ கூவிக் கூவி விற்றுக்கொண்டிருக்க அவரைச் சுற்றி ஒரு கூட்டம் நின்றிருந்தது. ஏதும் லேகிய வியாபாரமோ என்று எட்டிப் பார்த்தேன். அங்கு ஒருவர் கையை அங்கும் இங்கும் ஆட்டியபடியே ஒரு சமயத்தை விற்றுக் கொண்டிருந்தார். அருகிலேயே இன்னொரு மதத்தினர் கூடாரமடித்து தங்கள் சமயத்தை பரப்பிக் கொண்டிருந்தனர். கீரைக்கடைக்கும் எதிர்க்கடை வேண்டுமல்லவா.

இருவர் கட்டிப்பிடித்தபடியே என்னைக் கடந்து போயினர். மெதுவாய் இருட்டு இந்தத் தெருவை விழுங்கிக்கொண்டிருந்தது. என்னை நோக்கி ஒருவர் சிரித்தபடியே வந்து  உங்களுக்கு ‌உதவி செய்யப்போகிறேன் என்றார்.  எனக்கா என்றேன் ஆச்சர்யத்தில். ஆம் குறைந்த வட்டியில் கடன் தருகிறேன் என்றார். நான் வெளிநாட்டவன் இருப்பினும் உங்கள் நாட்டின் பெருந்தன்மையை மதிக்கிறேன், விபரத்தைக் கூறுங்கள் என்றேன். நீங்கள் வெளிநாடா.. மன்னியுங்கள் கடன் தர முடியாது என்றார். ”இத முன்னமே சொல்லியிருக்கலாமுள” என நான் எனக்குள்ளேயே சொல்லிய படியே நகர்ந்து கொண்டேன்.

நீர் முட்டி என்னை உடனே வெளியேற்று என்று கத்திற்று. கழிப்பறை தேடிப்போனேன். ஒரு இடம் பிடித்து ஒழுங்களை செய்து கண்ணை முட எத்தனிக்கிறேன் அருகில் வந்து தன் வேலையை தொடங்கினார் ஒருவர். எனக்கு தனியே இருக்காவிட்டாவிட்டால் ஒன்றும் வராது. அவர் போகும் வரை காத்திருந்தேன். விரும்பியபடிய புறப்பட்டார் அவர், மிக விரைவாய். மீண்டும் கண்ணை முடி நீரை ‌வெளியே அழைத்து வந்த போது இன்னொருவர் ”சிப்” களட்டும் சத்தம் கேட்டது. இப்படியே பலர் வந்து போக என்னால் பொறுக்க முடியாமல் வந்ததை அடக்கிக் கொண்டு கதவு வைத்த கழிவறைக்காக காத்திருந்‌தேன்.  ஒருவர் வெளியே வர, மூக்கை மூடிய படியே உள்ளே புகுந்து வேலையை முடித்துக் கொண்டு வெளியே வந்தேன்.

அருகில் ஒரு Mac கணணிக்கடை இருந்தது.  நாய் எதையோ கண்டால் காலைத் தூக்குமல்லவா அதே போல் எனது கால்களும் என்னையறியாமலே அக் கடைக்குள் என்னை அழைத்துச் சென்றது. விற்பனையாளர் ஒருவர் ஒரு பாவனையாளனின் காதில் பூ சுற்றிக் கொண்டிருக்க சிறிய சிறுமி ஒருத்தி நுனிக்காலில் நின்றபடி கண்ணுக்குத் தென்படாத கணணியில் விரலை அடித்தபடியே வியையாடிக் கொண்டிருந்தாள். கடையே அவளால் அழகாகியது.

கடையை விட்டு வெளியேறினேன். ஒரு நாய் ஒரு ஸ்லீபிங் பாக் இனுள் உட்கார்ந்திருந்தபடியே தூங்க் கொண்டிருக்க உரிமையாளரும் அருகில் குந்தியிருந்தார். அவர்களை கடந்து அப்பால் செல்லும் போது கிளர்ச்சியூட்டக் கூடிய வகையான உடைகள் அணிந்தபடியே ஒரு பெண் சிலை ஒன் றை கண்ணாடிக்குள் நிறுத்தியிருந்தனர். கடக்கண்ணால் பார்த்தபடியே கடந்து போனேன்.ஆனால் அவளால் என்னை கிளர்ச்சியடைவைக்க முடியவில்லை.

ஒரு கடையின் ஓரத்தில் ஒருவர் ஒரு மாதிரியாக நெளிந்தபடி நின்றிந்ததை அவதானித்தேன். உன்னிப்பாக பார்த்த போது இடுப்புக்கு கீழேயும் இரண்டு பின்னந் தொடைகளுக்கு மேலேயும் இருக்கும் பள்ளத்தாக்கில் கையை விட்டு தன்னை மறந்து சொறிந்து கொண்டிருந்தார். அவரவர் பிரச்சனை அவரவருக்கு.

கண்முன்னே Poison, BOSS, Forbidden Planet, Shu Shop  என கடைகளின் பெயர்கள் தெரிந்தன. ரூம் போட்டு போசிப்பாங்களோ கடைக்கு பேர் வைக்கமுதல்? Poison என்னும் கடைக்கருகில் Oxygen என்றும் கடை இருந்தது வியப்பாக இருந்தது. Poison கடைக்குள் போய் வருபவரின் உயிரைக் காப்பாற்ற Oxygen வைத்திருக்கிறார்களோ என்னவோ?

அவற்றிற்கருகில் ஒரு PUP இருந்தது. அது என்னைப் போன்றவர்களின் PUP என்பதற்கு ”The Ship Of fools” Pup என்னும் அதன் பெயரே சாட்சியாக இருந்தது.

இப்படியே நடந்து ஒரு கடைக்குள் புகுந்து 2 சேட்களை பார்த்து எடுத்துக் கொண்டு பணம் செலுத்த பெண்களின் உடைகள் இருந்த பகுதியை கடந்த போது அருகில் மிக இரகசியமான குரலில் ஒரு பெண்ணின் குரல்
”இங்காருங்கோ! நான் 30 சைஸ் எடுக்கட்டோ என்று கேட்டது. மெதுவாய் எட்டிப் பார்த்தேன். அருகில் மறுபக்கத்தில் ஒரு தமிழ் சோடி நின்றிருந்தது. கல்யாணமாகி 10 - 15 வருடங்கள் இருக்கக்கூடிய வயதாயிருந்தது அவர்களுக்கு. அந்தப் பெண்ணின் கேள்விக்கு ஒரு பெரிய நக்கல் சிரிப்பு பதிலாக் கிடைக்க அப் பெண் ”என்ன சிரிக்கிறீங்கள்” என்றார் அப்பாவியாய். உமக்கு 38 ல எடும் இல்லாட்டி வண் சைஸ் இடுப்புள்ள காற்சட்டை எடும் என்றார் கணவர்.  அப் பெண்ணின் கண்களுக்கு எரிக்கும் சக்தி இல்லாமல் போனதால் என்னுயிரும் கடையும் தப்பியது.அவர் வீட்டில் தப்பியிருக்கமாட்டார்.

பசியெடுத்தது. ஒரு கோப்பியும், சொக்லேட் கேக்உம் சாப்பிட்டேன். இருப்பினும் உட்சாகம் திரும்பவில்லை. நடந்து கால் வலித்தது. மெதுவாய் வீடு நோக்கித் திரும்பினேன். ஒரு கடையை கடந்தபோது 75 வீத கழிவில் வாசனைத் திரவியம் விற்பனை செய்யப்பட்டுக்கொண்டிருந்தது. புகுந்து பார்‌த்தேன். வாசனை மனதை கொள்ளை கொண்டு போயிற்று. ”யாமம்” என்னும் வாசனைத்திரவியத்தை அடிப்படையாகக் கொண்ட எஸ். ராமகிருஷ்ணனின் ”யாமம்” நாவல் நினைவிலாடியது.  75வீத கழிவின் பின் 15 பவுண்கள் என்றார்கள். வாங்கி வைத்துக் கொண்டேன்.

புத்தகக் கடைக்குள் புகுந்தேன். சிறிது காலமாக மூத்தமகளுக்கு புகைப்படக்கலையில் ஆர்வம் வந்திருப்பதால் அது பற்றிய ஒரு புத்தகம் வாங்கிக் கொண்டேன். அக் கடையில் மருந்துக்கு கூட ஒரு தமிழ்ப் புத்தகம் இருக்கவில்லை. எனக்கு Euro Million Lottery விழுந்தால் ஒரு தமிழ்ப்புத்தக்கடையை இங்கு திறப்பேன் என எனக்குள் நானே சொல்லிக் கொண்டேன். கடையின் கல்லாவில் நான் இருப்பது போல கற்பனையோடியது. எனக்குள் சிரித்தபடியே மெதுவாய் ட்ராம்ப்வண்டி எடுத்து பஸ் எடுத்து வீடு வந்தேன்.

என்னைக் கண்டதும் இளையவள் கையில் இருந்த பையைப் பறித்து நான் வாங்கிய shirtஐப் பார்த்தாள். அவளின் வாயில் இருந்து வார்த்தைகள் இப்படி சற்றுக் கோபத்துடன் வந்தது..

இதுவெல்லாம் ஒரு நிறமா? ஏன் பேப்பிள் நிறத்தில் வாங்கவில்லை?


அவள் எது சொன்னாலும் உண்மையாகத் தான் இருக்கும்.


பி.கு: அந்த கடைத்தொகுதி  இருந்த ஊரில் வசிக்கும் நண்பர் இதை வாசித்தால், நான் அவர் வீட்டுக்கு வரவில்லை என்றெல்லாம் கோவிக்கக் கூடாது.... ஆமா.


.

விடையற்ற வினாக்கள்

அதிக நாட்களின் பின்  நேற்று மிகவும் ஆறுதலான தூக்கம் என்னை ஆட்கொண்டதை காலை எழும்பிய போது உணரக்கூடியதாக இருந்தது. மனமும் உடம்பும் உட்சாகமாக இருக்க வேலைக்கு ஓடினேன். வேலையில் மூழ்கியிருந்த போது அலைபேசி அழைக்க, அதை எடுத்த போது ”வணக்கம் அண்ணே, என்னைத் தெரிகிறதா” என்றார் மறுமுனையில் இருந்தவர் ”அய்யா இது டெலிபோன் உங்களை தெரியாது.. ஆனால் நீங்கள் கதைப்பது கேட்கிறது” என்றேன். அண்ணே முந்தாநாள்  உங்ககிட்ட பேசினேனே” என்றார். அவரின் தமிழ் ”தமிழ்நாட்டுத் தமிழாக” இருந்ததாலும், அதிசயமாக இரண்டு நாட்களுக்கு முன் நடந்த சம்பவத்தை எனது ஞாபகசக்தி ‌ஞாபகத்தில் வைத்திருந்ததாலும்.. 
”ஓம் ஓம்  நாகபட்டினம் தம்பி தானே” என்றேன். ”ஆமா அண்ணே” என்றார் சந்தோசமான குரலில்.  இவர் தான் நான் இரு நாட்களுக்கு முன் எழுதிய விளையும் பனியில் அலையும் வாழ்வு என்னும் பதிவின் கதாநாயகன்.

அன்று ‌நான் சொன்னது போல் எனது நண்பரின் கடைக்கு வந்து அங்கிருந்து என்னைத் தொடர்புகொண்டிருந்தார். அவரின் குரலில் ஒரு வித ஆறுதல் இருந்தது. அவருக்கு தற்காலிகமாக நோர்வேயில் தங்கியிருந்து அகதிகள் அந்தஸ்தத்து கோரும் வசதி கிடைத்திருக்கிறது. அதுவும் ஓஸ்லோவில் உள்ள ஒரு அகதிகள் முகாமில் தங்க வைத்திருந்தார்கள். அவர் மிகவும் மகிழ்ச்சியாக இருந்தார். அடையள அட்டையும் கிடைத்திருப்பதாகச் சொன்னார்.

நண்பரின் கடையில் ஒரு சிம் கார்ட் வாங்கிக்கொள்ளச் சொன்னேன். வேலை தேடுகிறார் என்றார்.  ”தம்பி, நோர்வேயில வரி செலுத்தும் அட்டை இருந்தால் மட்டுமே வேலை எடுக்கலாம்” என்றேன். அப்படியா என்றார். காற்றுப் போன டயர் மாதிரி இருந்தது அவரின் குரல். ஆனால் நீங்கள் நின்றிருப்பது வெளிநாட்டவர் செறிந்து வாழும் பகுதி. அங்குள்ள கடைகளில் சில வேளைகளில் வேலை கிடைக்கலாம் எனவே கேட்டுப் பாருங்கள் என்றேன்.  நானும் வலை வீசிப் பார்க்கிறேன் ஆனால் என்னை நம்பி இருக்காதீர்கள் என்றேன். ”சரிங்கண்ணா” என்றும் நீங்க செய்த உதவிக்கு ரொம்ப நன்றின்ணா” என்று சொல்லியும் சொல்லி தொலைபேசியை வைத்தார்.

அவரின் அலைபேசி அழைப்பு மனதுக்கு இதமாக இருந்தது. அவருக்கு நான்  செய்தது அவ்வளவு பெரிய உதவியல்ல. சாதாரணமாக யாரும் செய்திருக்கக் கூடியதே. இருப்பினும் மறக்காமல் அழைத்து நன்றி சொல்லிய அவரின் செயல் அவரின் மனதை படம்பிடித்துக்  காட்டுகிறதோ? இருக்கலாம். குப்பையான உலகத்தில் குண்டுமணிகளும் உண்டு.

அவருடனான தொடர்பின் பின் வேலையில் மூழ்கியிருந்தேன். மதியம் போல் ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது. அனுப்பியவரின் பெயர் புதிதாக இருந்தது. ஏதும் வைரஸ் என்னுடன் விளையாடுகிறதோ என்று சந்தேகம் வர அதையும் பரிசோதித்துப் பார்த்துக் கொண்டேன். அது பரச்சனையற்ற ஒரு மின்னஞ்சலாக இருந்ததால் அதை வாசிக்கலானேன்.

நோர்வேஜிய மொழியில் மின்னஞ்சல் இப்படி இருந்தது.

சஞ்சயன்!

உனக்கு புது வருட வாழ்த்துக்கள். நீ நலமாய் இருப்பாய் என நம்புகிறோம். நீ திருத்தித் தந்த கணணி மிகவும் சிறப்பாக வேலை செய்கிறது. நீ இங்கு வந்து கணணி திருத்தும் போது ஒரு வேலைக்காக நேர்முகப்பரீட்சைக்கு சென்று வந்ததாகக் கூறினாய். வேலை கிடைத்துவிட்டதா? எனது மனைவியும் உனக்கு தன் அன்பைத் தெரிவிக்கச் சொன்னார்.

இவ்வண்ணம்
பேத்தர்


எனக்கு இவரை ஞாபகத்தில் இருக்குமா? அப்படி இருந்தால் அது உலக அதிசயமல்லவா? எனவே அவருக்கு பதில் எழுதினேன்.


பேத்தர் தம்பதிகளுக்கு!

உங்கள் மின்னஞ்சலுக்கு நன்றி. உண்மையில் உங்களை யார் என்று அடையாளம் காண்பது சிரமாக உள்ளது. தயவு செய்து எனது ஞாபக சக்தியை மன்னித்துவிடுங்கள். நீங்கள் யார்? எங்கு வாழ்கிறீர்கள் என்பதை அறியத்தந்தால் சிலவேளைகளில் எனது அதீத ஞாபகசக்தி உங்களை ஞாபகத்தில் வைத்திருக்கலாம்.

நான் நேர்முகப்பரீட்சைக்கு சென்ற வேலை கிடைத்துள்ளது. நான் தற்போது நோர்வே வெளிநாட்டமைச்சகத்தில் கணணிப்பிரிவில் தொழில்புரிகிறேன்.

உங்கள் அன்பிற்கு மிக்க நன்றி. உங்கள் துணைவியாருக்கு எனது அன்பையும், நன்றியையும் தெரிவியுங்கள்


இவ்வண்ணம்
சஞ்சயன்


அவரிடம் இருந்து உடனேயே பதில் வந்தது. அவர்கள் யார் என்று ஞாபகத்திலும் இருந்தது. அவர்கள் மிகவும் வயதானவர்கள். அவருக்கு காது கேட்காது. அவரின் மனைவிக்கு ஞாபகசக்தி மிக மிகக் குறைவு. இவர்களைப் பற்றி நான்கு மாதங்களுக்கு முன் ”மறதியும் மறையாத மனிதமும்” என்னும் பதிவிட்டிருந்தேன்.


இத்தனை மாதங்களின் பின்ன்னான பின் ஏன் என்னை அவருக்கு ஞாபகம் வரவேண்டும்? அப்படி வந்தாலும் மின்னஞ்சலில் அன்பாய் விசாரிக்க வேண்டடிய அவசியமென்ன? நான் அவர்களின் உயிரைக் காப்பாற்றிய வைத்தியன் என்றாலாவது பறவாயில்லை என்னை மதிக்கிறார்கள் எனலாம். நானோ அவர்களின் கணணியை திருத்தியவன். அதுவும் இலவசமாக அல்ல. அப்படியிருக்க இந்த விசரனை பேத்தரும் அவர் மனைவியும் நினைவில் வைத்திருக்க வேண்டிய அவசியமென்ன?

நான் முன்பொருநாள் எழுதியது போல் ”சில கேள்விகளுக்கு விடை தேடக்கூடாது”. பேத்தர் பற்றிய கேள்வியும், அந்த நாகபட்டிண தம்பி பற்றிய கேள்வியும் விடை தேடக்கூடாத கேள்விகளே.

இன்றைய நாளை ஏகாந்தமாக்கிய அந்த நாகபட்டின தம்பிக்கும், பேத்தர் தம்பதிகளுக்கும் எனது நெகிழ்ச்சியான நன்றிகள்.


பி.கு: நாகபட்டின தம்பின் பெயர் மறந்துவிட்டது.. தம்பி மன்னித்துவிடு இந்தப் பாவியை.


.

டேய்! கண்டியை எப்படா ஆங்கிலேயர் கைப்பற்றினார்கள்?

எங்கள் தமிழாசானுக்கு இன்று பிறந்த நாள். முகப் புத்தகத்தில் எத்தனை  எத்தனை வாழ்த்துக்குள்  உங்களுக்கு. பெருமையில் கனக்கிறது நெஞ்சு. அத்தனையும் மட்டக்களப்பு மெதடிஸ்த மத்திய கல்லூரியின் வாரிசுகள் என்பதில் பெருமை இன்னும் கனக்கிறது. இன்று போல் என்றும் மகிழ்வுடன் வாழ வாழ்த்தி  உங்களைப் பற்றிய எனது பதிவு ஒன்றை  உங்கள் கால்களில் சமர்ப்பிக்கிறேன். (இது பழைய பதிவு என்றாலும் அது என்றென்றும் உங்களுடையதே).
வாழ்க எங்கள் சர்மா சேர்.


இது ஒரு மீள் பதிவு. எனவே இடுக்கையை சொடுக்குங்கள்

டேய்! கண்டியை எப்படா ஆங்கிலேயர் கைப்பற்றினார்கள்?

 

.

 

விளையும் பனியில் அலையும் வாழ்வு

இன்று காலை சற்று நேரம் என்னையும் மீறி தூங்கிந்தேன். அவசர அவசரமாக  வெளியில் இறங்கும் போது  இரவு பனி விளைந்திருப்பது தெரிந்தது. நேற்றைய வானிலையறிக்கையில் இன்னும்  2 நாட்களுக்குள் 40 - 50 செ.மீ பனி கொட்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது ஞாபகத்தில் வந்தது.

நிலக்கீழ் தொடரூந்தில் நின்றே பயணிக்க முடிந்தது. பலரும் தங்கள் தங்கள் அலைபேசிகளை நோண்டிக்கொண்டிருந்தார்கள். நானும் என் பங்குக்கு நோண்டிப் பார்த்தேன். தொடரூந்தில் இருந்து இறங்கி வேலைக்கு நடக்கலானேன். அவசத்தில் காலையுணவை உண்ணமால் வந்திருந்ததால் ஒரு கடைக்குள் புகுந்து ஒரு ”பண்” வாங்கிக் கொண்டு வேலைக்குள் புகுந்து கொண்டேன்.

சுடு தண்ணி எடுத்து அதனுள் கோப்பி கலந்து அதன் வாசனையை நுகர்ந்த படியே ”பண்” சாப்பிட்டேன். இணையத்தில் சிறியதொரு உலா வந்தேன். ஆற்றைக் கடக்க முற்பட்ட ஒரு நரியின் கால்கள் எதிர்பாராத விதமாக குளிர் நீர் ஐஸ்கட்டியாக மாறிய போது விறைத்துப் போனதால் அது நடமாடமுடியாமல் அவ்விடத்திலேயே நின்றிருப்பதை படம் எடுத்துப் போட்டிருந்தார்கள். நரியும் படத்தில் பல்லைக் காட்டியபடியே போஸ்  கொடுத்தக் கொண்டிருந்தது. மனித நரிகளைப் போல் இந்த நரியும் பிழைக்கத் தெரிந்த நரி போல என நினைத்துக் கொண்டேன்.

பின்பு வேலையில் கவனத்தை செலுத்த முயன்ற போது கண்கள் இருண்டன, தலை சுற்றியது, வயிற்றைப் பிசைந்துது, வியர்த்து மிகுந்த அசௌகரீயம் உணர்ந்தேன். இந்நிலை தொடந்து இரு மணிநேரமாக தொடர்ந்ததால் மேலதிகாரிக்கு மின்னஞ்சலில் ”சுகயீனம், வீடு போகிறேன்” என்று எழுதிவிட்டு வீடு நோக்கி புறப்பட்டேன். வெளியில் பனி தன்பாட்டிற்கு கொட்டிக் கொண்டிருந்தது. ஏறக்குறைய முழங்கால் வர மறைக்கும் ஜக்கட்ஐயும், நெற்றியையும், காதுகளையும் மூடும் தொப்பியையும் போட்டுக் கொண்டேன். மப்ளரை எடுத்து கழுத்தில் இருந்து மூக்கு வரை சுற்றிக் கட்டிக் கொண்டேன். எனது கண்கள் மட்டுமே வெளியில் தெரிந்தன. ஏறக்குறைய ஒரு முகமுடிக் கொள்ளைக்காரனைப் போலிருந்தேன் நான்.

ஒஸ்லோ மாநகரின் முக்கிய வீதியினூடாக மெதுவாய் நடந்து போய்க் கொண்டிருந்தேன். சிந்தனை எனது சோர்விற்கான காரணத்தை துப்பறிந்து கொண்டிருந்தது. திடீர் என ”நீங்க தமிழா” என்று ஒரு குரல் கேட்ட சிந்தனை கலைந்து நிமிர்ந்து பார்த்தேன். கண் முன்னே இரண்டு பயணப்பொதிகளுடன் ஒருவர் நின்றிருந்தார்.  என்னை அவர் தமிழர் என்று எப்படி அறிந்து கொண்டார் என ஆச்சர்யமாக இருந்தது. எனது கண்களைப் பார்த்து மதிப்பிட்டாரா அல்லது முகமுடி கொள்ளைக்காரன் போலிருந்ததால் நிட்சயமாய் இவன் தமிழன் தான் என்று முடிவு செய்தாரா எனப் புரியவில்லை.

ஆம் தம்பி, நான் சுத்தத் தமிழனே தான் என்ற படி அவரை அவதானித்தேன். 30 க்கு உட்பட்ட வயது, களைத்த முகம், மிரட்ச்சியான கண்கள், பனிக்காலத்திற்கு ஒவ்வாத சப்பாத்துக்கள் என நின்றிருந்தார்.

அண்ணண் இங்கு ஒரு போலீஸ் ஸ்டேசன் இருக்கிறதாமே, அதற்கு வழி சொல்லுங்கள் என்றார்.  ஏன் ஏதும் பிரச்சனையா? என்ற போது தான் இந்தியாவில் இருந்து வந்து கொண்டிருப்பதாகவும், தனது ஏஜன்ட் தன்னை இவ்விடத்திற்கு போய் அகதி அந்தஸ்து கோரும்படி சொன்னதாகவும் சொன்னார்.

எனக்குத் தெரிந்து அவ்விடத்தில் போலீஸ் நிலயம் இல்லை. அருகில் ஒரு நண்பர் ஒருவர் தொழில் புரிவதால் அவருக்கு அலைபேசி எடுத்து உடனே வருமாறு கேட்ட போது தயங்காமல் உடனேயே வந்தார். அவருக்கு அந்த போலீஸ் நிலையம் தெரிந்திருந்தது. நண்பருக்கு நன்றி சொல்லிப் புறப்பட்ட போபோது தம்பி சாப்பிட்டீர்களா என்று கேட்டேன். இல்லை என்று தலையாட்டினார். சரி வாருங்கள் சாப்பிடுவோம் என்று சொல்லி தெரிந்த தமிழ் உணவகத்திற்கு அழைத்துப் போனேன்.

என்ன சாப்பிடுகீறர்கள் என்றேன். மௌனமாய் நின்றிருந்தார். கடையில் கொத்துரொட்டி (கொத்து பரோட்டா) இருந்தது. அதனுடன் ஒரு டீயும் சாப்பிட்டார்.  முகத்தில் சிறிது தெம்பு தெரிந்தது.

தம்பி எந்த ஊர் என்று கேட்டேன்.  மெளனமாய் நின்றிருந்தார். இந்தியாவா என்றேன். ஆம் என்றார். அப்ப சென்னையா என்றேன் (நமக்கு தெரிந்தது அது மட்டும் தானே) இல்லண்ணே நானு நாகபட்டினம் என்றார்.

எங்களுக்குள் இருந்த இறுக்கமும் இடைவெளியும் குறைந்து சரளமாக உரையாடிக் கொணடிருந்தோம்.

வீசா கொடுப்பாங்களா என்றார். இல்லை என்று தான் அறிகிறேன் என்று தெரிந்தததை சொன்னேன். தான் 5 லட்சம் இந்திய ரூபாய் கொடுத்து வந்ததாகச் சொன்னார். அந்தக் காசில் அங்கு ஏதும் தொழில் செய்திருக்கலாமே என்று எனது மனதில் தோன்றியதைச் சொன்ன போது ஆமா அண்ணே, முட்டாள் வேலை பார்த்திருக்கிறேனோ என யோசிப்பதாகச் சொன்னார்.  ஆயினும் தனக்கு ஊரில் பல பிரச்சனைகள் இருப்பதால் இங்கு வாழ முடியாதிருப்பதாகவும் அதனாலேயே புறப்பட்டதாகவும் சொன்னார்.

பின்பு அவரே  தொடர்ந்தார். ஊரில் நடந்ததொரு கொலைக்கு சுற்றவாளியான தன்னை குற்றவாளியாக்கியுள்ளார்கள் என்றும் அதனால் தான் இரண்டு ஆண்டுகள் மறைந்து வாழ்ந்ததாகவும், ஊராரும் அதையே நம்புவதாலும், போலீஸ் கெடுபிடிகள் அதிகம் என்பதாலும் தப்பி வந்ததாகச் சொன்னார்:

அவரின் கதை  உண்மையா பொய்யா என என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. உண்மையாக இருந்தால் என நினைத்து அவருக்காக நான் பரிதாபப்பட்டேன். வாழ்க்கை என்றால் இப்படித்தான் என்று ஒரு பழைய தத்துவத்தையும் எடுத்துப் போட்டேன். ஆம் என்பது போல தலையாட்டினார். சற்று நேரம் இருவரும் மெளனத்துடன் பேசிக்கொண்டிருந்தொம்.

சிம் கார்ட் வேணும் அண்ணே என்றார். அருகில் நண்பரின் கடை இருந்ததால் அங்கு அழைத்துப்போனேன். நோர்வே அடையாள அட்டை இன்றி ”சிம்” எடுக்க முடியாது என்றார் அவர். உங்களுக்கு ஏதும் உதவி தேவையின் இந்தக் கடைக்கு வந்து என்னுடன் தொடர்பு கொள்ளுங்கள் என்றேன். தலையாட்டினார்.

போலீஸ் நிலயம் வரை அவரை அழைத்து வந்தேன். வரும் வழியில் மெளனமாக பின்னாலேயே நடந்து வந்தார்.  கையில் பணம் ஏதும் இருக்கிறதா என்ற போது மெளனமாய் நின்றிருந்தார். சிறிது பணம் கொடுத்த போது மறுத்தார். வற்புருத்தித் திணித்தேன். கண்களால் நன்றி சொன்னார்.

போலீஸ் நிலயத்திற்குள் நான் காட்டிய கதவைத் திறந்து உள்ளே போவதைக்

கண்டேன். என் மனம் 23 வருடங்களுக்கு முன்னான நினைவுகளுக்குள் முழ்கிப்போயிருந்தது. நானும் இன்று போல பனி கொட்டிக் கொண்டிருக்கும் ஒரு தைமாதம் 7ம் திகதி  இப்படி ஒரு கதவைத் தள்ளிக் கொண்டு தான் போலீசுக்குள் புகுந்தேன்.  இன்று தை 5ம் திகதி. அந்தத் தம்பியும் ஒரு கதவைத் தள்ளிக் கொண்டுநோர்வேக்குள் புகுந்திருக்கிறார்.

எனக்கு இங்கு என்று விதிக்கப்பட்டிருக்கிறது. அவருக்கு எப்படி விதிக்கப்படுமோ?

இன்றைய நாள் முழுவதும் மனம் அவரையே சுற்றி சுற்றி வந்தது.


இன்றைய நாளும் நல்லதே


.

Wine நிபுணரும் ஆட்டுக்குழம்பும்

இன்று மாலை ஒருவர் தொலைபேசியில் அவசர அவசரமாய் அழைத்தார். தனது உயிர் பிரியப்போவதற்கு முதல் என்னிடம் பெரும் இரகசியத்தை சொல்ல வேண்டும் என்பது போல் தனது பிரச்சனையை சொல்வதிலும் பெரும் அவசரம் காட்டினார். இதனால் அவரின் பிரச்சனை என்னவென்றே எனக்கு விளங்கவில்லை. அய்யா மெதுவாய் உங்கள் பிரச்சனையை சொல்லுங்கள் எனக்கு கேட்க நேரமிருக்கிறது  என்றேன். எனக்கு நேரமில்லையே என்றார்.. மிகுந்த அவதியுடன். பின்பு ஏதோ புரிந்தவர் போல முன்பை விட சற்று வேகம் குறைத்து தனது பிரச்சனையை விளக்கினார்.

அவரின் கணணி திடீரென அவரது ஆவணங்கள் எல்லாவற்றையும் அழித்து விட்டது என்பதே அவரின் பிரச்சனையாக இருந்தது.

 ”எப்படி நடந்தது” என்றேன்
அவரது கணணிக்குள் வைரஸ் பூந்திருப்பதாக  பெரிய சிவப்பு எழுத்தில் காட்டியதாம். அதன் பின் அவர் ஒரு தரம் ”ஓகே”பட்டனை அமத்தியதும் இது நடந்தது என்றார்.  என்னத்துக்கு ”ஓகே” பட்டனை அமத்தினீர்கள்.. அது என்னத்தை செய்வதற்கு ”ஓகே” கேட்டது என்று கேட்டேன். தெரியாது என்றார்.
மாலை 7 மணி போல் வருகிறேன் என்றேன். இல்லை இல்லை இது தலைபோகிற வேலை உடனே வா என்றார். சரி என்று சொன்னேன்

பனிக்குளிரில் நடந்து போய் கதவைத் தட்டியதும், கதவைத் திறந்தபடியே இன்று நீ கடவுளுக்குச் சமமானவன் என்றார். சிரித்தேன். வீட்டுக்குள் போகு முன்பே வாசலில் வைன் பொத்தல்கள் அடுக்கியிருக்கக் கண்டேன். வா எனது காரியாலயத்திற்கு என்று என்னை அழைத்துப்போனார். அது ஓரு காரியாலயம் எவ்வளவு குப்பையாய் இருக்கக் கூடாதோ அந்தளவு குப்பையாய் இருந்தது அது. காரியாலத்தினுள்ளும் வைன் போத்தல்கள் நிரம்பி வழிந்தன. ஆகா.. ஒரு பெருங்குடிகாரனிடம் அகப்பட்டிருக்கிறேன் போல் என்று நினைத்துக் கொண்டேன். ஆனால் மனிதர் மிகவும் நிதானமாகவே இருந்தார்.

கணணியைப் பார்த்தேன் .. மிகவும் பழைய கணணி. 6 ஆண்டுகளாக பாவிக்கிறார் என்றார். கணணியுலகத்தில் 6 ஆண்டுகள் என்பது கற்றாலத்துக்குச் சமம் என்றும், உன் கணணியை திருத்துவதை விட நீ புதிய கணணி வாங்குவது சிறந்தது என்றேன். அப்படியா சங்கதி.. ஆனால் அதிலும் ஒரு சிக்கல் இருக்கிறதே என்றார். என்ன என்ற போது கணணி வாங்குவது பற்றி தனக்கு ஒன்றும் தெரியாது என்றும், தவிர அதை வாங்கியபின் தேவையான மென் பொருட்களை எப்படி போடுவது என்றும் தெரியாது என்றார். நான் அதற்கு உதவுகிறேன் என்ற பின் கடைக்குப் போய் புதிய கணணி வாங்கிவந்தோம்.

தான் ஒரு ”வைன் ருசிப்பாளர்” என்று தனது தொழிலின் பெயரை சொன்னார். இது பற்றி கேள்விப்பட்டிருந்தாலும் இப்படியானதோர் தொழில் செய்பவரை இன்று தான் சந்திக்கிறேன் என்றேன். தன்னால் பல விதமான சுவைகளை ஞாபகத்தில் வைத்திருக்க முடியும் என்றார். எனக்கு ஞாபகசக்தியே இல்லை என்றேன் நான். விழுந்து விழுந்து சிரித்தார்.

வீட்டுக்கு திரும்பினோம். வீடு முழுவதும் வைன் சம்பந்தமான பொருட்கள், படங்கள், கலைப் பொருட்கள், புத்தகங்கள் என எங்கும் எதிலும் வைன் ஆக இருந்தது. அவர் வீட்டு பைப்ஐ திறந்தால் வைன் வந்திருக்குமோ என்னமோ?

என்ன உணவுக்கு என்ன வைன், அது எவ்வாறு பாதுகாக்கப்பட வேண்டும், எப்படி பரிமாறவேண்டும் என்றெல்லாம் புத்தகங்கள் இருந்தன. எப்படி குடிக்க வேண்டும் என்றும் புத்தகம்  இருக்கா என கேட்கத்  தோன்றியது எனக்கு.. ஆனால் அவலை அடக்கிக் கொண்டேன்.

கணணியை இயக்கிக் கொண்டே பேசிக் கொண்டிருந்தோம். அவர் ஒரு கட்டடக்கலை நிபுணராம். ஆனால் கடந்த 30 வருடங்களாக வைன் சுவைப்பவராகவும், ஆலோசனையாளராகவும், விரிவுரையாளராகவும், இறக்குமதியாளராகவும் தொழில் புரிகிறாராம். தனது தொழில் மிகுந்த மனத்திருப்தியைத் தருவதால் தான் இதை தொடர்ந்து செய்து வருவதாகச் சொன்னார். அவரிடம் இருக்கும் பண்டகசாலையில் 40 000 வைன் போத்தல்கள் இருப்பதாகவும் அதில் 40 வருட பழைய வைன் போத்தல்களும் இருக்கின்றன என்றும் சொன்னார். தன்னோடு இந்த வியாபாரம் அழிந்து விடலாம் என்னும் சந்தேகம் அவரிடம் இருந்தது. அதற்கான காரணம் இது ஒரு தனி மனிதனின் அறிவில் தங்கியிருக்கும் தொழிலாக இருக்கிறது என்றார். தனக்கு மட்டுமே இத் தொழிலின் பல இரகசியங்களும், நுட்பங்களும், தொடர்புகளும் உண்டு என்றும் தனது வாரிசுகள் இத் தொழிலில் ஆர்வம் காட்டாமல் இருப்பது வேதனையைத் தருகிறது என்றும் சொன்னார்.

நான் வைன் பற்றி எதுவும் தெரியாத ஞானசூன்யம் என்றேன். அதற்கு அவர் எனது கணணி அறிவு அதிலும் மிகவும் குறைந்தது என்றார். என்னை வைன் சுவைக்கும் படி அறிவுறுத்தினார். ‌போதைக்காக வைன் அருந்துவதில்லை என்றும் அதை ரசிக்கவும், ருசிக்கவும் தெரிந்திருக்க வேண்டும் என்பது அவரின் கருத்தாக இருந்தது.

கணணிக்கு ஒரு  ரகசியச்சொல் (பாஸ்வேர்ட்) தேவை என்றேன். தன்னிடம் பல வருடங்களாக ஒரே ரகசியச்சொல் மட்டுமே இருக்கிறது என்றும் அதையே இதற்கும் இடச் சொன்னார். அதை பதிந்து கொடுத்தேன். தனது இரகசியச் சொல்லின் அர்த்தம் என்ன என்று தெரியுமா என்றார். தெரியாது என்றேன். அது வைன் உற்பத்திசெய்யும் ஒரு நாட்டில் பெருமளவில் வைன் விளையும் ஒரு மாநிலத்தின் பெயர் அது என்றும் விளக்கம் தந்தார். மனிதர் எப்போதும் ”வைன்” உடனேயே வாழ்கிறார் போலிருந்தது எனக்கு.

கணணிக்குத் தேவையான மென்பொருட்களை உட்புகுத்தி முடிந்ததும் அவருக்கு அது பற்றி விளக்கினேன். புரிந்து கொண்டேன் என்றார். ஆனால் அதை என்னால் நம்பமுடியாதிருக்கிறது என்றேன். பெரிதாய் சிரித்து, தேவையென்றால் நீ இருக்கிறாய் தானே என்றார்.

சிரித்தபடியே விடைபெற்றேன். வரும் வழியில் அவரிடம் அறிவுரை கேட்டு அதன் படி ஒரு வைன் போத்தல் வாங்கி குடிக்கவேணும் என்னும் ஆசை வந்தது. ஆனால் அவரிடம் நான் இது பற்றிக் கேட்டால், என்ன உணவை உண்ணப்போகிறாய் இந்த ”வைன்” உடன் என்பார். நான் சோற்றுடன் ஆட்டுக்கறியும், கத்திரிக்காய் பொரியலும், பருப்பும், கரட் சம்பலும் என்றால் அவர் அதற்கு தன்னிடம் வைன் இல்லை என்றும் ஆனால் கள்ளு இருக்கு என்று சொல்லக்கூடுமோ?

இன்றைய நாளும் நல்லதே.


.

உயிரை மீட்டுத் தந்த ஐபோன்

சில நாட்களுக்கு முன் நடந்த நம்பவம் இது.  அதைத் தொடங்க வேண்டுமானால்  அது நடப்பதற்கு முன்தின சம்பவத்தில் இருந்து தொடங்குவதே சரியானது என நினைக்கிறேன். காரணம் அதற்கும் இன்றைய பதிவுக்கும் இத்துணூண்டு தொடர்புண்டு.

நேற்று முன்தினம் லண்டனில் ”மன்மதன் அம்பு” பார்ப்பதாக பேசிக் கொண்டோம். ஆனால் நேரம் வசதியாக அமையாததால் மாலை டுட்டிங் என்னுமிடத்தில் உள்ள ”சாம்ராட்” என்னும்  உணவகத்தில் தண்டூரி சிக்கன் சாப்பிடுவதாக முடிவு செய்யப்பட்டது. தண்டுரி சிக்கன் ஆர்டர் கொடுக்கும் போது பரிமாறுபவர்
”நார்மல் ஹாட்” ,  ”ஹாட்” ,  ”எக்ஸ்ரா ஹாட்”
என கேட்ட போது நானும் எனது இமேஜ்ஐ மெயின்டெயின் பண்ணுவதற்காக ”எக்ஸ்ரா ஹாட்”  என்றதன் பலா பலனை நேற்று காலை ”அதற்கு” குந்திய போது அனுபவித்தேன்..

மக்கா... யாரோ அங்கனக்க நெருப்பு வைத்த மாதிரி இருந்திச்சி. கண்ணுலயும் புகை வந்துதுப்பா...  சத்தியமா.

நேற்று மாலை மன்மதன் அம்பு பார்க்க போனோம்... ஹவுஸ் புல் என்றார்கள். உடனேயே இன்றைக்கு டிக்கட் எடுத்துக் கொண்டு வீடு வந்தோம்.

இன்று மதியம் தான் சொப்பிங் போகவேண்டும் என்றாள் முத்தவள். சின்னவளுக்கு அந்த ஆசையெல்லாம் கிடையாது. அவளுக்கு அப்பாவின் கைபிடித்து திரியவும், மடியில் இருந்து ஜஸ்கிறீம் தின்பதுவுமே உலகம். பெரியவளின் ஆசையை தீர்த்தபடியே  மன்மதனின் அம்பையும் பார்க்கப் போனோம். படம் முடிந்து பஸ்ஸில் ஏறும் வரை  உலகம் அழகாய் இருந்தது.

டபிள் டெக்கர் பஸ்ஸில் ஏறியதும் சின்னவள் ”வா மேலே போவாம் என்றாள். மேலே போய் முன்னிருக்கையில் குந்தியதும் பெரியவள் அப்பா எனது ”ஐபோனை” காணவி்லை என்று ஒரு போடு போட்டாள். தனது பை, ஜக்கட் எல்லாம் கிண்டினாள். ஐபோன் எங்கோ போயிருந்தது. சரி நான் வந்த இடத்திற்குப் போய் பார்க்கிறேன் என்று சொல்லி இறங்கிக் கொண்டேன். அவர்களை வீடு போகும் படி பணித்தேன்.

மகளின் இலக்கத்திற்கு தொலைபேசினேன். ரிங் போனது ஆனால் பதில் இல்லை. தியட்டருக்குள் போய் விசாரித்தேன். கையைவிரித்தார்கள். நாம் நடந்த பாதையெங்கும் நடந்து திரிந்தேன். எதுவும் கிடைக்கவில்லை. வீதிசுத்திகரிப்பவர் வந்தார். கேட்டேன். அவரும் கையை விரிக்க மீண்டும் மகளின் இலக்கத்தை தட்டினேன். யாரோ எடுத்தார்கள். ஹலோ என்றதும் கட் செய்தார்கள்.  சரி .. இனி கிடைக்காது என்று சாத்தான் மனம் சொன்னது.

மீண்டும் இலக்கத்தை தட்டினேன். மீண்டும் கட் செய்ய மனம் கெலித்துப் போனது.  10 நிமிடம் பொறுத்தேன். மீண்டும் இலக்கத்தை தட்டிய போது எடுத்தார்கள். ஹலோ, எனது மகளின் போன் இது என்ற போது.. ”ப்ளீஸ் ஸ்டாப்,  ஸ்டாப்.. நோ இங்கிலீஸ், வெயிட்” என்றது ஒரு ஆண்குரல். சற்று நேரத்தில் ஒரு பெண் வந்தார் கதைத்தார். எங்கள் போன் அது.. கிடைக்குமா என்றேன். அவரின் பதில் இப்படியிருந்தது ” நிட்சயமாக, அது உங்கள் போன் தானே” என்றார்.

எங்கு வரவேண்டும், எவ்வாறு வரவேண்டும் என கேட்டுக் கொண்டேன்.  மகளுக்கும் ஒரு ”சிட்டுவேஷன் ரிப்போர்ட்” கொடுத்தேன். துள்ளிக் குதித்தாள்.

பஸ் தரிப்பிடம் நோக்கி நடந்து கொண்டிருந்தேன். அந்தப் பெண் சொன்ன  இலக்கத்தை சுமந்து கொண்டு ஒரு பஸ் வந்தது.  பஸ் தரிபிடத்துக்கு 100 மீற்றர் இருந்தது. எதற்கும் கை காட்டுவோம் என கை காட்டினேன். என்ன ஆச்சர்யம்.. என்னருகே  பஸ்ஐ நிறுத்தி கெதியல் ஏறு என்னும் விதத்தில் கைகாட்டினார் சாரதி. ஏறி தலையை சாய்த்து நன்றி சொன்னேன். அழகாய்ச் சிரித்து கண் சிமிட்டினார். பஸ் போய்க் கொண்டிருந்தது. அப் பெண் சொன்ன தரிப்பிடம் வரவேயில்லை.  மீண்டும் சாத்தான் மனம் அவள் உன்னை ஏமாற்றுகிறாள் என்றது. எதற்கும் சாரதியிடம் கேட்போம் என அவரை அணுகிக் கேட்டேன்.

அவர் பார்த்த பார்வை.. அடப் பாவி மக்கா...........!  என்பது போல இருந்தது. இந்த இடத்திற்கு நீ மறுபக்கத்தில் இருந்து பஸ் எடுக்க வேண்டுமே என்றார். அடுத்து வந்த தரிப்பில் நிறுத்தி எப்படி போக வேண்டும் என்றும் விளக்கினார். நன்றி சொல்லிப் புறப்பட்டேன். மறு பக்கம் நின்று பஸ் வர அதற்குள் ஏறி சாரதியிடம் நான் இறங்க வேண்டிய இடத்தைத் சொல்லி எனக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொண்ட பின் சாரதிக்கருகில் இருந்த ஒரு இருக்கையில் இருந்து கொண்டேன்.

சின்ன மகள் தொலைபேசி எடுத்தாள். என்னய்யா என்ற போது.. அப்பா அவர்கள் டேஞ்சரஸ் பீப்பிள் ஆக இருக்கலாம் என்றும், நீங்க ஒரு கத்தி கொண்டு போங்கோ என்றும் அறிவுரை வந்தது. பெரியவள் தொலைபேசியை வாங்கி ”கவனம் அப்பா” என்றாள்.  சரி சரி என்று சொன்னேன். மனதுக்குள் இதுவரை இல்லாத பயம் ஒன்று குடிவந்திருந்தது. மனம் அது பற்றியே சிந்தித்தது. அது தான் எனது கடைசிப் பஸ்பயணமோ என்று கூட யோசித்தேன்.

ஐபோனை எடுத்து, அதனூடாக என்னை அழைத்து எனது போனையும், பணப்பையையும் கொள்ளையடிக்கும் கும்பலோ என யோசனையோடியது. அப்படி இருக்காது என்று மனம் சொன்னாலும் ஒரு வித பயம் குடிவந்திருந்தது.

மனிதர்களை நம்பாத என்னில் எனக்கு எரிச்சல் வந்தது. இதற்கான காரணம் என்ன என்று யோசித்தாலும் மனம் அதில் ஈடுபாட்டைக் காட்டவில்லை. அவர்கள் என்னை பிடித்து அடித்து பணத்தைப் பறித்தால் என்ன செய்வது என யோசித்தேன். நம்மால என்ன திருப்பி அடிக்கவா முடியும்? வடிவேலு அண்ணண்  மாதிரி தடார் என்று காலில் விழுவோம் என்று நினைத்துக் கொண்டிருக்கும் போது தான் எனது பாஸ்போட் எனது ஜக்கட் பொக்கட்டினுள் இருப்பது ஞாபகம் வர அதை எடுத்து காற்சட்டைக்கும் சேட்டுக்கும் இடையில் பெல்ட் கட்டும் இடத்தில் ஒளித்து வைத்தேன். கையில் தேவைக்கு அதிகமான அளவு பணம் இருந்தது. அதில் 15 பவுண்களை மட்டும் பணப்பையில் வைத்தேன். மிகுதியை சொக்ஸ்ஐ களட்டி அதற்குள் வைத்துக் கொண்டேன். லைசன்ஜ மற்ற சொக்ஸ்சுக்குள் வைத்துக் கொண்டேன்.

அவர்கள் சொன்ன  இடம் வரவில்லை ஆனால் பஸ் இறுதியாக நிற்கும் இடம் வந்தது. சாரதியிடம் போனேன். என்னைக் கண்டதும் தலையில் அடித்தபடியே.. மன்னித்துக்கொள் உன்னை மறந்து விட்டேன் என்றார். பின்பு, மீண்டும் அந்த இடத்தால் தான் போகவிருப்பதாகவும் என்னை காத்திருக்கும் படியும் சொன்னார். காத்திருந்தேன். இம்முறை மறக்காமல் இறக்கிவிட்டார். நன்றி சொல்லி இறங்கிக் கொண்டேன். சுற்றாடல் இருளின் இருட்டில் சற்று அசௌகரீயத்தை தந்தது. இருவர் கையில் பியர் கானுடன் கடந்து போயினர். பயம் கூடிக்கொண்டிருந்தது. தொலைபேசி எடுத்தேன். பதில் இல்லை மறு முனையில். வீதியில் போகும் வாகனங்களைத் தவிர சுற்றாடல் முழுவதும் பெரும் அமைதியில் மூழ்கிக் கிடந்தது. மீண்டும் தொலைபேசி எடுத்தேன் ”கட்” பண்ணுப்பட்டது தொடர்பு. எனது உள்மனத்தில் நம்பிக்கை இருந்தாலும் சுற்றாடல் அவநம்பிக்கையை தந்தது.

மீண்டும் தொலைபேசி எடுத்தேன். அதே பெண் கதைத்தார். எங்கே நிற்கிறாய்? என்றார். தனது விலாசம் சொல்லி அங்கு வரச் சொன்னார். சரி என்று இணைப்பை துண்டித்தேன். நடந்து கொண்டிருந்த போது ஒரு கடை திறந்திருப்பது கண்ணில் பட, மகளின் ”கவனம் அப்பா” ஞாபகத்தில் வர மீண்டும் தொலைபேசி எடுத்து குறிப்பிட்டு கடையில் நிற்பதாகச் சொன்னேன். 5 நிமிடத்தில் வருவதாகச் சொன்னார்கள். கடையில் ஒரு பூஞ்செண்டும், இனிப்பும், ஒரு ”நன்றி” சொல்லும் கார்ட் ஒன்றும் வாங்கி அதில் ”நீ நேர்மையானவன். எங்கள் ஜபோனை தந்ததற்கு நன்றி என்றும், நோர்வேக்கு வந்தால் நீ என்னுடன் தொடர்பு கொள் எனவும் எழுதி வைத்துக் கொண்டேன்.

கடைவாசலில் நின்றிருந்தேன். ஒருவர் வந்தார். ஐபோனைக் காட்டினார். தலையாட்டினேன். நீட்டினார். வாங்கிக் கொண்டு கையைக் குலுக்கி நன்றி, மிக்க நன்றி என்றேன். அவர் போலந்துநாட்டவர் என்றதும் நான் உங்கள் நாட்டில் ”கிடான்ஸ்க்” என்னும் ஊரில் தொழில் புரிந்திருக்கிறேன் என்றேன். அதற்கருகில் உள்ள ”சோபொட்” மிக அழகிய கடற்கரை என்றதும் மனிதர் உசாராகிவிட்டார். சற்று நேரம் சம்பாசித்தோம். எனது ஆங்கிலத்தை அவரும், அவரின் ஆங்கிலத்தை நானும் புரிந்து கொண்டோம். கையில் இருந்த பூஞ்செண்டையும், இனிப்பையும், கார்ட்ஜயும் கொடுத்தேன். தனக்கா என்றார் ஆச்சரியர்யமாய். ஆம் என்றேன். கையை குலுக்கி நான் என்ன சின்னப்பிள்ளையா இனிப்பு சாப்பிட என்று கேட்டார்.

சரி, பெரிய பிள்ளைக்கு என்ன வேணும் என்று கேட்டேன். ஒருபெரிய விஸ்கி போத்தலைக் காட்டினார். கடைக்காரரிடம் இவருக்கு தேவையானதைக் கொடுங்கள் என்றேன். என்னை ஒரு மாதிரியாகப் பார்த்தபடி அவர் கேட்டதைக் கொடுத்தார் கடைக்காரர். நண்பர் நன்றி என்றார். சிரித்தேன். வெளியில் வந்தோம். கைகுலுக்கி பிரிந்த போது ”சியர்ஸ் மை ப்ரெண்ட்” என்று போத்தலைக் தூக்கிக் காட்டினார். நான் ஜபோனைத் தூக்கிக் காட்டியபடியே சியர்ஸ் மை ப்ரென்ட் என்றேன். இருட்டில் கரைந்து போனார் மனச்சாட்சியுடைய அந்த மனிதர்.தொலை‌பேசியில் உனது ஐபோன் கிடைத்துவிட்டது என்றேன் மகளிடம். ”யெஸ்” என்று ஒரு சத்தம் கேட்டத, மறு பக்கத்தில்.

பஸ்ஸில் இருந்தபடியே யோசித்தக் கொண்டிருந்தேன். ஐபோனைத் துலைத்து மீளப் பெற்றவர்கள் குறைவாகவே இருப்பார்கள். அதுவும் இந்தப் பெரிய லண்டனில் ஜபோன் மீளக்கிடைப்பது மிகவும் அரிது. ஆனால் எனக்குக் கிடைத்திருக்கிறது. மனம் ஏனோ காற்றில் பறந்து கொண்டிருந்தது. ஜபோனைக் குடுத்து மகளின் முகத்தைப்பார்க்க ஆவலாயிருந்தது மனம்.

வீட்டுக்குப் போனேன். என்னைக் கண்டதும் ஜபோனைக் கேட்கவே இல்லை மூத்தவள். கேட்காமலே முத்தம் தந்தாள்.  அணைத்துக் கொண்டாள். மடியில் உட்கார்ந்து தன்னை மறந்து விளையாடிக் கொண்டிருந்தாள். நான் உயிர்த்திருந்தேன். பதின்மவயதுக்குள் தொலைத்துவிட்டிருந்த அவளை மீண்டும் பெற்றுத் தந்திருந்தது அவளின் ஐபோன்.

பொருட்கள் தொலைவதும் நல்லவை நடப்பதற்காகவோ? இருக்கலாம்.

இன்றைய நாளும் நல்லதே...

நட்பின் நீளமும் வாழ்வின் அகலமும்

1990களில் ஓஸ்லோவில் வாழ்ந்திருந்த காலங்களில் விளையாட்டின் மூலமாக அறிமுகமாகிவரே அந்த நண்பன். உயரமான மிடுக்கான தோற்றம். அழகான மீசை. எப்போதும் வாயிலே எஞ்சியிருக்கும் புன்னகை இவைகளே இன்றும் எனக்குள் இருக்கும் அவரின் ஞாபகங்களாக இருக்கின்றன. பழகியது மிக குறுகிய காலங்களே என்றாலும் இன்றும் அவரின் நினைவுகள் துளித்துளியாய் வாழ்க்கையை ஈரமாக்கிக்கொண்டேயிருக்கின்றன.

விளையாட்டில் படு கில்லாடி. கலபலப்பான பேச்சு. நிதானம் என என்னிடம் இல்லாத எல்லாம் அவரிடம் இருந்தன. கால்பந்து விளையாட்டில் மட்டுமே சந்தித்த நாம் பின்பு வீடு சென்று சந்திக்குமளவுக்கு நட்பு முன்னேறியது. நன்றாகச் சமைப்பார். உபசரிப்புக்கும் பஞ்சமில்லை.

தனியே இன்னொரு நண்பருடன் வாழ்ந்திருந்தார். திடீர் என் திருமணப் பேச்சுக்கள் நடந்தன. எனது நண்பரின் மனைவியின் சகோதரியாரை திருமணம் செய்ய நிட்சயிக்கப்பட்டது. திருமணமும் சிறப்பாய் நடந்தது. என்னை புகைப்படம் எடுக்க அழைத்திருந்தார். திருமணத்தின் பின் ஒரு பூங்காவில் சில படங்கள் எடுத்துக் கொண்டோம். அல்பம் மிகச் சிறப்பாய் உள்ளது என பாராட்டினார் பின் வந்த நாட்களில்.

அவரின் திருமணத்தின் பின்னான சில காலத்தில் எனது திருமணத்திலும் கலந்து கொண்டார், புது மாப்பிள்ளைத் தோற்றத்துடன். அதன் பின் விழாக்களில் சந்தித்துக் கொண்டோம். காலம் மெதுவாய் உருண்டு கொண்டிருந்தது.

ஒரு நாள் மாலை வெளியில் பனியின்  காரணமாக உள்ளரங்கில் கால் பந்து விளையாடினோம். அவரும் வந்திருந்தார். மகிழ்ச்சியாய் விளையாடி ஓய்ந்து நிலக்கீழ் சுரங்க ரயிலில் பேசியபடியே பயணித்தோம். எப்படி புது மாப்பிள்ளை வாழ்க்கை போகிறது என்று சொல்லிக் கண்ணடித்தார். உங்ளுக்குத்  தெரியாததா என்றேன். சேர்ந்து சிரித்தோம்.  அந் நாட்களில் நான் வேலை தேடிக் கொண்டிருந்தேன். அதற்கும் சில ஆலோசனைகளைத் தந்தபடியே பிரிந்து போனார்.

அடுத்த நாள் காலை நண்பர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக அறிந்து,  அங்கு போனதும் மாரடைப்பு காரணம் என அறியக் கிடைத்தது. தேறி வருகிறார் என்றார்கள். பார்க்க முடியவில்லை. வெளியில் பனி கொட்டிக் கொண்டிருந்தது.

மறுநாள் காலை தட்டி எழுப்பப்பட்டேன். நண்பர் இறந்து விட்டார் என்னும் செய்தி கிடைத்தது. பல வருடங்களின் பின் மரணத்துடனான நெருக்கம் அடுத்து வந்த சில நாட்களாக என்னை ஆட்டிப்படைத்தது. எனக்கு இப்படி நடந்தால் என்று கற்பனை ஓடியது. தேவையற்ற பயங்கள் வந்து போயின.

இறுதியாய் அவரைப் பிரிந்த போது ஒலித்த அவரது மனைவியின் கதரல் தாங்க முடியாததாய் இருந்தது. அங்கிருந்த நண்பர்களின் கண்களில் இருந்து கண்ணீர் வழிந்தோடிக் கொண்டிருந்தது.

நண்பர் மறைந்திருக்கலாம் நட்பும் அதன் ஈரமும் மறையவில்லை என்பதை 17 வருடங்களின் பின்பும் நண்பர்கள் கூடுமிடத்தில் அவரைப் பற்றிய பேச்சு வந்து போவது உறுதிப்படுத்திக் கொண்டே இருக்கிறது.

அதன் பின்னான சில வருடங்களின் பின் இலங்கையில் நின்றிருந்த போது பல் வலி தாங்கமுடியாமல் ஒரு பல் வைத்தியரிடம் சென்றிருந்தேன். வாயை அகலப்பிரித்து அதற்குள் குடைந்து கொண்டே என்னுடன் பேசிக் கொண்டிருந்தார். அங்குமிங்கும் அலைந்த பேச்சு இறுதியில் நோர்வே வந்து, பின்பு ஓஸ்லோவாகிய போது தனது தம்பி அங்கு வாழ்ந்திருந்தார், தெரியுமா என்றார். மேலும் விசா‌ரித்த போது அவர் மறைந்த நண்பனின் அண்ணராயிருந்தார்.

உலக வாழ்வின் செயற்பாடுகளில் எது எப்போ எப்படி நடக்கும் என்பது எமக்குத் தெரிவதில்லை. ஆனால் நடந்து முடிந்த பின் திரும்பிப் பார்க்கும் போது ஏதோ ஒரு வித தொடர்பு எமக்கும் அச் செயலுக்கும் இருப்பதாகவே எனக்குப் படுகிறது. நண்பனின் அண்ணணுடனான சந்திப்புப்பும் அப்படியானதே.

சிலர் மறைந்தாலும் மனதில் வாழ்வார்கள். இன்னும் சிலர் வாழ்ந்திருப்பார்கள் மனமோ அவர்களை மறந்து போகும். விசித்திரம் தான் இது.

எனக்கும் மரணம் வரும், அதன் பின்பும் 17 வருடங்கள் கடந்து போகும். அப்போது எங்காவது ஞாபகத்தில் இருப்பேனா? எங்காவது ஒரு மனதில்? ஏன் இருகக் கூடாது?

இன்றைய நாளும் நல்லதே

உங்களுக்கு எனது புத்தாண்டு வாழ்த்துக்கள்.

பின்னூட்டம் இட்டால் மகிழ்ச்சியடைவேன்
நன்றி.


.
.